நற்றிணை 1/188
188. நன்மையும் தீமையும்!
- பாடியவர் : ........
- திணை : குறிஞ்சி.
- துறை : பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
[(து–வி.) பகற் பொழுதிற் கூடிச் செல்லும் ஒழுக்கத்தினனாகத் தலைவன் விளங்குகின்றான். அவனிடத்தே, தலைவியை மணந்து பிரியாதுறையும் இல்வாழ்வினைப் பற்றிய நினைவை எழச் செய்யக் கருதினளாய தோழி, இவ்வாறு சொல்லுகின்றாள்.]
படுநீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடுமடல் ஈன்ற கூர்வாய்க் குவிமுகை
ஒள்ளிழை மகளிர் இலங்குவளைத் தொடூஉம்
மெல்விரல் மோசை போலக் காந்தள்
வள்ளிதழ் தோயும் வான்தோய் வெற்ப
5
'நன்றி விளைவும் தீதோடு வரும்'என
அன்றுநற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத்
தேம்முதிர் சிலம்பில் தடைஇய
வேய்மருள் பணைத்தோள் அழியலள் மன்னே.
மலையின் நீர்வளமுடைய பக்கத்தே வாழைமரங்கள் முளைத்து வளர்ந்திருக்கும்; வாழையின் வளைவான மடலிடையே நின்றும் கூரிய முனையையுடைய குவிந்த முகையானது தோன்றும். ஒள்ளிய கலன்களை அணிபவர் பெண்கள்; அவர்களின் கைவளைகளைத் தொட்டபடியிருக்கும் மெல்விரலினிடத்தே விரலணிகள் அணிசெய்தபடி விளங்கும்; அவ் விரலணியைப் போலத் தோற்றுமாறு வாழையின் முகையானது வளவிய காந்தளின் மலரிதழிடத்தே சென்று தோய்ந்தபடியிருக்கும். வானைச்சென்று தடவுவது போல விளங்கும் அத்தகைய மலைக்கு உரியவனாகிய தலைவனே! ஒருவருக்குச் செய்யும் உபகாரத்தினாலே வந்தடையும் பயனானது பிரிந்து வருந்துவதனாலே நலனழியும். இங்ஙனமாகிய தீமையோடு வந்து முடியும் என்பதனை நின்னை முதற்புணர்ச்சியிற் கூடிய அன்றைப்பொழுதே நன்றாக இவள் அறிந்தனளாதல் வேண்டும். அங்ஙனம் அறிந்திருந்தனளாயின், குன்றிடத்துத் தேன் முதிர்ந்த பக்கமலையிடத்தே முளைத்தெழுந்துள்ள மூங்கிலையொத்த பருத்த இவள் தோள்களின் அழகெல்லாம் அழியப் பெற்றவளாக, இந்நாளிலே இவளும் இங்ஙனம் ஆகாள்காண்!
கருத்து : இவளை விரைய மணந்து கொண்டனையாய் இல்லறம் நிகழ்த்துதற்கு ஆவனவற்றை மேற்கொள்க' என்பதாம்.சொற்பொருள் : படுநீர் – ஆழமான நீர்; சிலம்பு – பக்கமலை. கலித்த – முளைத்தெழுந்த; தோன்றிய. மோசை – ஒருவகை விரலணி. தேம் – தேன்; தேன் முதிர்தலாவது. தேனடைகளுட் பலநாளிருந்து முதிர்ச்சி பெறுதல். தடை இய – முளைத்து வளர்ந்த. வேய் – மூங்கில்.
விளக்கம் : "சான்றோனைப் போல நின்னை என்றும் பிரியேன் எனக் கூறித் தெளிவித்துக் கூடியின்புற்ற நீ, இது காலை இவளை மணத்தலைக் கருதாயாய், இவள் நின்னைப் பிரிந்து வருந்தும் வருத்தத்தாலே அழிதலையும் நினையாயாய், இன்ப நாட்டமே மிகுதியாகப் பெற்றுள்ள பொய்ம்மையாளன் ஆயினை போலும்?" எனத் தலைவனைப் பழித்து உரைக்கின்றாள் தோழி. "நினக்குத் தன் நலனை அளித்து இன்புறுத்திய இவளுக்கு, அதனால் நலனழிவு வந்துற்றதாகலின் 'நன்றி விளைவும் தீதொடு வரும்போலும்?' என்று கேட்டாளாய் மனம் வருந்துகின்றாள். படுநீர்—பள்ளமான நீர் நிலைகளும் ஆம்; அப்போது பள்ளமான நீர்நிலைகளையுடைய சிலம்பு எனக் கொள்ளுக. வாழைப்பூக் காந்தளைத் தொட்ட படியிருத்தல் தோள்வளையைத் தொடும் மாதரது கைகளிடத்தே விளங்கும் மோசைபோலத் தோற்றும் என்றதனாலே, இவ் விரலணி வாழைப்பூவின் வடிவம் பொருந்திய மேற்புறத்தை உடையதென்பதும் அறியப்படும். மோசை போலத் தோன்றுவதன்றி அதுவே மோசையாகாமை போல, நீயும் அன்புடையானாகத் தோன்றுகின்றனை யன்றி, அன்பினை உடையாயல்லை என்றனளுமாம். 'அழியலள்' என்றது, அன்றே நின் இத் தன்மையினை ஆய்ந்தறித்திருப்பின், நின்னைத் தழுவியிராள். இதுகாலைப் பிரிவால் வருத்தமுற்று அழிதலும் இவட்கு நேர்ந்திராது என்பதாம். இவ்வாறு கூறிப் பகற்குறி மறுத்தனள் என்க. இதனால் வரைவு வேட்டலும் ஆயிற்று.