உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/196

விக்கிமூலம் இலிருந்து

196. மதியமே தேய்க!

பாடியவர் : வெள்ளைக்குடி நாகனார்.
திணை : நெய்தல்.
துறை : நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள், திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.
[(து–வி.) தலைவனோ நெடுந்தொலைவிடத்தே உள்ள நாட்டிற்குப் பொருள் தேடி வருதலின் பொருட்டாகப் பிரிந்து சென்றிருந்தனன். அவனது பிரிவினைப் பொறுக்க மாட்டாதாளாகத் தலைமகள் பெரிதும் வருந்தி வாடியிருந்தனள். திங்களின் வரவால் அவ்வருத்தம் மேலும் மிகுதியாகின்றது. அப்போது அவள் தன்னுள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

பளிங்குசெறிந் தன்ன பல்கதிர் இடைஇடைப்
பால்முகந் தன்ன பசுவெண் நிலவின்
மால்பிடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற்கரந்து உரையும் உலகம் இன்மையின் 5
எற்கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற்கவின் இழந்தவென் தோள்போற் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறிகரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே?

பளிங்குகள் பலவும் ஒன்றாகச் செறிந்து விளங்கினாற் போலத் தோற்றும் பலவாய கதிர்களின் இடையிடையே, பாலை முகந்துவைத்தாற் போல விளங்கும் பசுமையான வெண்ணில வொளியையும் உடையையாய்! மலைக்குறவர் தேனிறாலைப் பெறுவதற்காக இட்டிருக்கும் ஏணியாலும் இடரப்பட்டு அறியாயாய் விளங்கும். எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே! நீதானும் நிறைவும் நேர்மையும் உடையை ஆவாய். ஆதலினாலே, நினக்கு மறைந்து வாழ்கின்றவொரு உலகமொன்றும் இவ்விடத்தே இல்லையாகும். ஆகவே, என்னைவிட்டுப் பிரிந்து எனக்கு மறைவுற்றவராக வாழும் காதலர் தங்கியுள்ள இடம் இதுவென எனக்குக் காட்டாயோ! (திங்கள் காட்டாதிருப்ப, அவளது வெறுப்பு மிகுதியாகின்றது; மேலும் கூறுகின்றாள்.) நல்லழகினை இழந்துபோய்ச் சாம்பிய என் தோள்களைப் போல, நீயும் இனிச்சிறுகச்சிறுக அழிந்தனையாய்க், 'கண்டறிந்த ஒன்றைக் காணோம்' எனப் பொய்த்தலால் உண்டாகிய பொய்க்கரியின் பழியினாலே அழிவுறும் அந்நிலைதான் இனி நினக்கும் உண்டாகுமோ?

கருத்து : ‘அவரை எனக்குக் காட்டாயாகிய நீயும் சிறுகச்சிறுக நின் நலனழிந்து கெடுவாய்' என்பதாம்.

சொற்பொருள் : பளிங்கு – கண்ணாடித் துண்டுகள். பசு நிலவு - பசிய தண்ணிய நிலவு. மால்பு – தேனெடுப்பார் பயன்படுத்துகின்ற நெடிய நூல் ஏணி, இதனால், நிலவு மேற்கு மலையைச் சார்ந்து மறையும் வரை விழித்திருந்தாளாய்த் தலைவி துன்பத்தில் உழன்றனள் என்பதும் விளங்கும். மால் + பிடர் = 'மால்பிடர்' எனக் கொண்டால் மேகத்தின் முதுகுப்புறம் என்று கொள்ளலாம். சால்பு – தகுதிப்பாடு; செம்மை – செவ்விய நேர்மை; குன்றிடை மறையுங் காலத்துக் தோன்றும் செவ்விதான செம்மைத் தன்மையுமாம். செரீஇ-குறைவுற்று. அறிகரி - அறிந்த ஒன்று; அறிகரி பொய்த்தல் – தானறிந்த உண்மையை மறைத்துப் பொய்ச் சான்று கூறுதல். இதனை, 'அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை' என்னும் குறுந்தொகை (குறு 184:11) யாலும் அறியலாம்.

விளக்கம் : உலகிடம் யாங்கணும் அறிவோய் ஆதலின் அவருள்ள இடத்தையும் அறிவை; அழிந்திருந்தும் எனக்கு அவரைக் காட்டித் தராயாய்ப் பொய்த்தலின் நீதான் சிறுசிறுகத் தேய்வுற்றனையாய் அழிவுற்றுக் செடுக என்கின்றனள் 'எற் கரந்து உறைவோர்' என்றமையின், தலைவன் நெட்டிடைக் கழிந்தோனாதலும் விளங்கும்; நெட்டிடையாவது நெடுந்தொலை இடைப்பட்டுக் கிடக்கின்றவொரு நாடு. இனித் தலைவனைப் பற்றிய செய்திகளைத் தூதுமூலங் கூடத் தலைவி பெற்றிவளாதலின், 'எற்சரந்து உறைவோர்' என்றனள் எனினும் பொருந்துவதாகும். அவரைப் பிரிந்துறையும் என்னைக் காய்ந்து வருத்துவதுபோல, என்னைக் கரந்து வாழும அவருள்ளவிடத்து அவரையும் இவ்வாறே வருத்துக; வருத்தின், அவர் என்னை நினைந்தாராய் என்பால் மீள்வர் என்றதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/196&oldid=1731875" இலிருந்து மீள்விக்கப்பட்டது