நல்ல கதைகள்/அன்பு தந்த பரிசு!
மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் அந்தக் கிராமம் குளித்துக் கொண்டிருந்தது.
காலையிலே காட்டுக்கு மேயப் போன ஆடுகளும் மாடுகளும், கழுத்தில் மணியோசை குலுங்க அசைந்தாடி நடந்து கொண்டிருந்தன.
வேலைக்குப் போனவர்கள் வீட்டை நோக்கி வேகமாக நடை போட்டனர். பறவைகள் பறந்து மரங்களில் அமரும் சத்தம் வேறு அந்த நேரத்தை ஆரவாரப் படுத்திக் கொண்டிருந்தது.
சிங்காரமோ, அந்தக் கிராமத்தையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்.
ஊருக்குள் போகலாமா? அல்லது இப்படியே திரும்பி போய்விடலாமா? குழம்பிய மனதை அவன் முகம் தெளிவாகக் காட்டியது.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறான் அவன். அது சிங்காரத்தின் சொந்த ஊர். தாயும் தந்தையும், உற்றாரும் உறவினரும், நண்பர்களும் அன்பர்களும் வாழ்கின்ற இடம்.
ஊருக்குள் நுழைவதற்கு என்ன தயக்கம்? உள்மனத்திலே ஏதோ உறுத்தல்!
அந்த ஆற்றைக் கடந்து விட்டால் ஊர் வந்து விடும். எல்லோரையும் பார்க்கலாம், பேசலாம், பழகலாம், மகிழலாம்.
மணலிலே நடை போட்ட அவன், அந்த ஒர் இடம் வந்ததும் அப்படியே அமர்ந்து விட்டான்.
கையிலே மணலை அள்ளிப் பார்த்தான். ஆமாம்! 'இதே இடந்தான்'! இதே மணல் மேடுதான்...!
மணல் மீது புரண்டு, மனம் போல்திரிந்து, மற்ற சிறுவர்களுடன் ஒடி ஆடிய நினைவுகள் அலை அலையாக அவனது நினைவுக்குள் வந்தன.
மகிழ்ச்சி ஒருபுறம். மனவேதனை மற்றொருபுறம். அவன் மனம் பழைய நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்க்கத் தொடங்கியது.
அவன் பெற்றோருக்கு அவன் ஒரே மகன். நஞ்சை நிலம் நான்கு ஏக்கர் உண்டு. வசதியான குடும்பம்.
இவ்வளவு இருந்தால் போதாதா ஒருவனுக்கு!
தாயின் செல்லம் சிங்காரத்தைத் தறுதலையாக்கி விட்டது.
தந்தையோ அவனைக் கண்டிப்பதே இல்லை. 'தான் வைத்ததே சட்டம்' என்று தலை கொழுத்துத்தன்னோடு ஒத்த சிறுவர் கூட்டத்திற்கு அவனே தலைவன். அவன் இட்டதே சட்டம். கொண்டதே கொள்கை.
யாரும் அவனுக்கு அறிவுரை கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் கேட்டுக் கொண்டேயிருந்து விட்டு, அவர்களை ஏளனமாகப் பார்த்து, இகழ்ச்சியாகப் பேசி விட்டுப் போய்விடுவான்.
பள்ளிக் கூடம் போன நேரம் போக, அவனுக்கு அந்த ஆற்றின் மணல்மேடுதான், அவன் நடத்தும் காரியங்களுக்கு மேடையாகத் திகழ்ந்தது.
அத்தனை சிறுவர்களும் அவன் சொல்லுக்கு மறு சொல் பேசமாட்டார்கள். சொன்னதைச் செய்வார்கள். அவன் தருவதை உண்பார்கள்.
அதில் சந்திரன் என்பவன் மட்டும் விதிவிலக்காக இருந்தான். சிங்காரத்தை அவனுக்குப் பிடிக்கும். ஆனால் அவனுடைய தலைக்கனமான பேச்சும், தாறுமாறான போக்கும் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது.
தவறு செய்தால், நிச்சயம் தட்டிக் கேட்பான்.
தான் தவறுக்கு உள்ளானால், யாராவது தன்னை அடித்துவிட்டால் கூட, மீண்டும் அவரைத் திருப்பி அடிக்காத வரை அவன் உறங்கவே மாட்டான். யானை போல குணம் கொண்டவன் சிங்காரம்.
கிராமம் என்றால் விளையாட்டுகளுக்கா குறைச்சல்!
கிட்டிப்புள் ஆட்டத்தில் தொடங்கி, பம்பரமாகச் சுற்றி, கோலிக் குண்டுகளுடன் உருண் டோடி, சடுகுடுப் போட்டிக்கு வந்து சவால் விட்டு ஆடும் வரை அவர்களுக்கு சலிக்கவும் சலிக்காது.
அப்படித்தான், அன்றும் அந்த மணல் மேடையில் சடுகுடு ஆட்டம் தொடங்கியது.
வழக்கம் போல் சிங்காரம் ஒரு குழுவுக்குத் தலைவனாகவும், சந்திரன் மற்றொரு குழுவிற்குத் தலைவனாகவும் இருந்தனர்.
ஆட்டத்தில் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைக் குதிரை ஏற்றிக் கொண்டு, அந்த ஆற்று மணலில் அரை கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்பது பந்தயம்.
ஆகவே, தோற்றுப் போவதற்குத் துணிந்தாலும், ஆளைத் தூக்கிப் போவதற்கு வெட்கப்பட்ட அனைவரும், அன்றைய ஆட்டத்தில் அதிக அக்கறை காட்டினார்.
முரட்டுத்தனமும், முன் கோபியாகவும், சண்டைப் போடுவதில் சண்டைப் பிரசண்டனாகவும் விளங்கிய சிங்காரத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ!
சிங்காரம் அன்று நெருப்பாக இருந்து ஆடினான்.
எப்பொழுதும் வெற்றி பெறும் சிங்காரத்தின் குழு, அன்று சந்திரனது குழுவைச் சந்தித்து, முன்னேற முடியாமல் திணறியது.
'தோல்வியை அடைந்து விடுவோமோ' என்று சிங்காரத்தின் தோழர்கள் தொங்கிய முகத்துடன் கேட்ட பொழுது 'நானிருக்க பயமேன்' என்று அவர்களை சமாதானம் செய்தான் சிங்காரம்.
சிங்காரத்தின் குழுவில் உள்ள அனைவரும் தொடப்பட்டும், பிடிக்கப்பட்டும் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இப்பொழுது சிங்காரம் மட்டுமே தனியாக நிற்கிறான்.
ஆட்டத்தின் உச்சக்கட்டம் இது, 'சிங்காரம் ஆட்டத்தைவிட்டு வெளியேற்றபட்டால், அவனும் அவனது குழுவினரும் தோற்று விடுவார்கள்'. அப்புறம் குதிரைதூக்க வேண்டுமே!
சந்திரனையல்லவா சிங்காரம் குதிரை ஏற்ற வேண்டும்? இதை நினைக்கவே அவமானமாக இருந்தது.
ஆகவே, சிங்காரம் ஆவேசத்துடன் பாடிப் போனான். சந்திரனிடம் நன்றாக சிக்கிக் கொண்டான். நான்கு பேர்கள் நன்றாக இவனைப் பிடித்துக் கொண்டார்கள். ஒருவித வெறியுடன் எல்லோரையும் இழுத்துக் கொண்டு நடுக் கோட்டை நோக்கி வரும் பொழுது, மூச்சு நின்று போய், பாடுவதை விட்டுவிட்டான். மற்றவர்கள் பிடியை விட்டார்கள். உடனே எழுந்தான் சிங்காரம்.
“நான் கோட்டைத் தொட்டு விட்டேன். நீங்கள் எல்லோரும் 'அவுட்' என்றான்” சிங்காரம்.
இல்லையென்று மற்றவர்கள் மறுத்தார்கள். 'ஆமாம்' என்று சிங்காரம் அழுத்தமாகச் சொன்னான். அவன் அதட்டலையும், ஆவேசத்தையும் கண்டு பின் வாங்கிக் கொண்டார்கள்.
சந்திரன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் சிங்காரம். சந்திரன் உதடு கிழிந்து இரத்தம்கொட்டத் தொடங்கியது. உன்னை என்ன செய்கிறேன் பார்' என்று இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே, அடிக்கக் கையை ஓங்கினான் சந்திரன்.
மீண்டும் ஒரு குத்து விழுந்தது சந்திரன் முகத்தில், அவ்வளவுதான். திடீரென்று கீழே விழந்தான். சந்திரனின் கைகளும் கால்களும் ‘படக் படக்' என்று உதைத்துக் கொண்டு, சற்று நேரத்தில் அடங்கி விட்டன.
எல்லோரும் பயத்துடன் சந்திரனையே பார்த்துக்கொண்டு நின்றனர். அவர்களிலே தைரியசாலி ஒருவன், சந்திரன் மூக்கிலே கையை வைத்துப் பார்த்தான்.
மூச்சைக் காணோம்.
'சந்திரன் செத்துப் போயிட்டாண்டா' பேய்க் கூச்சல் போட்டான் அந்தப் பையன்.
அந்தச் சத்தம் கேட்டு அரண்டு போன அனைவரும். மூலைக்கொருவராக தங்கள் வீடுகளை நோக்கி ஓடத் தொடங்கினர்.
சிங்காரம் எங்கே போவான்? அவன் தான் கொலை செய்தவன் ஆயிற்றே!
ஊருக்குள் சென்றால், அத்தனை பேரும் தன்னை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்ற பயம் சிங்காரத்தை மிரட்டியது.
‘எங்கேயாவது ஓடிவிடு’ என்று பயந்த மனம் சிங்காரத்தை பாதுகாப்புடன் விரட்டியது.
திரும்பிப் பார்க்காமலே ஒடத் தொடங்கினான்.
புயல் காற்றிலே சிக்கிய படகு போல, நூலறுந்து திரியும் பட்டம் போல, அவன் போய்க் கொண்டேயிருந்தான்.
பட்டணம் வந்து சேர்ந்து பல நாட்களாகி விட்டன. தினமும் பசியோடு போராடினான். படுத்துக் கொள்ள இடமில்லாமல் திண்டாடினான். கிழிந்த உடைகளோடு, கேவலமான நிலையில் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தான்.
'கூலி வேலை செய்தால்தான் கால் வயிறாவது நிறையும் ' என்று ஒரு முடிவுடன் வேலை செய்ய முனைந்தான்.
ஒருநாள் மாலை, சிங்காரம் ஒருபேருந்து நிலையத்தின் முன்நின்று கொண்டிருந்தான். காலையிலிருந்து பட்டினி, கூலி ஏதாவது கிடைத்தால்தான் சாப்பிட முடியும், என்ற பசி மயக்க நினைவோடு வருவோர் போவோரையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.
அழகான கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு மாது எதிர்ப்புறமுள்ள துணிக் கடையை நோக்கிப் போகத் தொடங்கினாள், கையிலே சிறு அலங்காரப் பை ஒன்று தொடங்கிக் கொண்டிருந்தது.
வாட்ட சாட்டமான உடல் அமைப்புள்ள ஒருவன், தீடிரென்று அந்த பெண்னை நோக்கிப் பாய்ந்தான். அவள் கைப் பையை பறித்துக் கொண்டு ஓடத் தொடங்கினான்.
'திருடன் திருடன்' என்று அவள் அலறிக் கத்தினாள்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்களே ஒழிய, அவனைப் பிடிப்பதற்கு யாரும் முன்வரவே இல்லை. இதுதான் பட்டணத்துப் பண்பும் பழக்கமும்.
சிறுவன் சிங்காரம் கிராமத்து வளர்ப்பல்லவா!
அவன் உள்ளம் கொதித்தது. உடனே எதிரே ஓடி வந்து, அந்தத் திருடனின் இடுப்பைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டான். 'திருடன் திருடன்' என்று கத்தினான். திருடன் ஆத்திரமடைந்தாள் சிங்காரத்தின் பிடியிலிருந்து விடுபட ஒரு சுற்று சுற்றினான்.
சிங்காரம் ஒருபுறமும், கைப்பை ஒரு புறமும் சிதறிப் போய் விழுவதை எல்லோரும் பார்த்தனர். அப்பொழுதும் யாரும் அந்தத் திருடனைப் பிடிக்க முன்வரவே இல்லை.
திருடன் தப்பி ஓடிவிட்டான். சிங்காரம் சுருண்டு கீழே விழுந்து கிடந்தான்.
கண் மூடித் திறப்பதற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியால் கற்சிலை போல் நின்றாள். அந்தப்பெண். சிறிது நேரங்கழித்தே சுய உணர்வு பெற்றாள். ஓடிப் போய் பையை எடுத்துக் கொண்டாள், சிங்காரத்திடம் ஓடோடி வந்தாள்.
மயக்கமாகக்கிடந்த சிங்காரத்தின் முகத்தில் சோடா வாங்கி வந்து தெளித்து, அவனது மயக்கத்தைத் தெளிவித்தாள்.
மயக்கம் தெளிந்த சிங்காரம், முனகியவாறு மெதுவாக எழுந்து சுற்று முற்றும் பார்த்தான். ஒரு கூட்டமே கூடியிருந்தது.
கூட்டத்தை விலக்கி, சிங்காரத்தை தன் காரிலே ஏற்றிக் கொண்டு அந்த பெண் உடனே புறப்பட்டுவிட்டாள்.
'ஐந்து ஆயிரம் ரூபாய் என் பைக்குள் இருந்தது. உன்னால் தான் இந்தப் பணம் காப்பாற்றப்பட்டது' என்று கூறி, சிங்காரத்தின் திறமையையும், வீரத்தையும் பாராட்டினாள். தன் நன்றியைத் தெரிவித்தாள்.
உன் பெயர் என்ன? அன்புடன் கேள்வி வந்தது.
சிங்காரம்... மிக மெதுவாகவே கூறினான்.
உன் வீடு எங்கே?
எனக்கென்று வீடோ, ஆளோ இல்லை.
அப்படியென்றால்...
அநாதை...
அநாதையா? வருத்தத்துடன் அந்த பெண் கேட்டாள்.
சிங்காரத்தின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. மேலும் கேள்விகள் கேட்கவோ, விசாரிக்கவோ அவள் விரும்பவில்லை.
படிக்க ஆசையிருக்கிறதா அல்லது வேலை செய்கிறாயா என்று அந்த மாது மிகவும் அன்புடன் கேட்டாள்.
ஒரு வேளை சாப்பாட்டுக்கு நாள் முழுதும் உழைத்தாலும், முடியவில்லையே நான் படிக்க ஆசைப்பட்டாலும் எப்படி முடியும்.
உல்லாசமாக வாழ்ந்த தன் கிராமத்து வாழ்க்கையையும், செல்லமாகத் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த நாட்களையும் நினைத்த பொழுது சிங்காரத்தின் கண்கள் கண்ணீரைச் சிந்தின.
அழாதே தம்பி! எனக்கு வேண்டியவர்கள் ஒரு 'விடுதி' வைத்திருக்கிறார்கள். அங்கேயே தங்கிக் கொண்டு, அருகில் உள்ள பள்ளிக் கூடத்தில் படிக்கலாம், ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை நான் நிச்சயம் உனக்குத் துணையாக இருப்பேன்.
நன்றிப் பெருக்குடன் அந்த மாது கூறியவுடன், சிங்காரம் தலையை ஆட்டித் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.
கார் நின்றது. சிங்காரத்தை வெளியிலே நிறுத்தி வைக்காமல் தன் கூடவே அழைத்துச் சென்றதும்; விடுதி தலைவியுடன் பேசும் பொழுது இருக்கை கொடுத்து அமரச்செய்ததும், பருகுவதற்குப் பானம் கொடுத்ததும், சிங்காரத்தின் மனதில் நம்பிக்கையை ஊட்டின.
விடுதியிலே சேர்ந்து விட்டான் சிங்காரம். பள்ளிக்கும் ஒழுங்காகப் போகத் தொடங்கினான்.
மனதிலே தன் கடந்த காலத்தை நினைத்துக் கொண்டவாறே நடந்த சிங்காரம், தன் ஊருக்குள் நுழைந்ததையோ, தன் வீட்டு வாசலுக்கு வந்ததையோ மறந்து விட்டான்.
பல ஆண்டுகள் ஆனாலும், பழகிய அவனது கால்கள் வீட்டு வாசல் முன் தாமாகவே போய் நின்றன. காலில் கல் தடுக்கிவிட்ட பொழுதுதான், கற்பனை உலகத் தினின்றும் சுயநினைவுக்கு வந்தான்.
கண்கள் அந்த வீதியை ஒருமுறை சுற்றி வந்தன.
பல வீடுகள், அமைப்பில் மாறியிருந்தன. ஓடுகள் மாட்டிக் கொண்டிருந்தன. புதிய வண்ணங்களைப் பூசிக் கொண்டிருந்தன. ஆனால், அவன் வீடு மட்டும் தான் பார்த்தது போலவேதான் பழைய கோலத்தில் இருந்தது.
சூரியன் மறையத் தொடங்கி விட்டான். சுற்றிலும் இருள் வந்து கூடுவதற்குத் தயாராக இருந்தது.
தன் வீடு பூட்டியிருந்ததால் வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்துகொண்டான்.
வருவோர் போவோர் கூட, அவனையாரோ புதியவன் என்று பார்த்துக் கொண்டே சென்றனர். ஆனால் சிங்காரமோ யாரையும் தலை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
தன்னுடைய தாயையும், தந்தையையும் ஒரு முறைப் பார்த்து விட்டு, உடனே போய் விட வேண்டும் என்பதே அவனுடைய திட்டமாகும்.
தன் பின்னால் யாரோ வருவது போல் இருந்தது சிங்காரத்திற்கு, யாராயிருந்தால் நமக்கென்ன என்று இருந்தான்.
வந்தவன் சிங்காரத்தின் முகத்தைக் குனிந்து பார்த்தான். ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாய், சிங்காரத்தைத் தாக்க ஆரம்பித்து விட்டான்.
முகத்திலே பல குத்துக்கள் விழுந்தன. முடிந்தவரை தடுத்துக் கொண்டான். அடித்துக் கொண்டிருக்கும் பொழுதே வாயில் பல வகைச் சொற்களைப் பேசிக் கொண்டிருந்தான் அடித்தவன்.
பலர் ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவனோ மீண்டும் அடிக்கத் துடித்துக் கொண்டிருந்தான்.
'சந்திரன் செத்துப் போயிட்டான்னா நினைச்சே! உன்னை சித்ரவதைசெய்யாட்டி என் ஆத்மா சாந்தியடையாதுடா'!
சந்திரன் தான் தன்னை அடித்தான் என்பதையும், அவன் சாகவில்லை என்பதையும் அறிந்த சிங்காரத்தின் மனம் மிகவும் அமைதி அடைந்தது.
'இத்தனை ஆண்டுகள் மனத் துன்பத்திற்கு ஆளாகி இருந்தோமே, என்று நினைத்தவாறே நின்று கொண்டிருந்தான் சிங்காரம்.'
முகத்தில் ஆங்காங்கே இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கடைவாய்ப் பகுதியிலிருந்தும் இரத்தம் வழிந்தது.
சந்திரன் கத்தியதிலிருந்து, இங்கே அடிபட்டவன் 'சிங்காரம்' என்பதை அறிந்த அத்தனை பேரும் ஓடி வந்து அவனை ஆனந்தத்துடன் பார்த்தார்கள். சிலர் தழுவிக் கொண்டார்கள்.
எல்லோரையும் பார்த்துச் சிரித்தவாறே இருந்த சிங்காரம், திடீரென்று சந்திரனிடம் ஓடினான். அவன் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
கைப்பட்டதுமே, 'ஆ' என்று கத்தினான் சந்திரன். ஆமாம் அடித்த வேகத்தில் கை சுளுக்கிக் கொண்டு, வீங்கிப் போயிருந்தது.
‘விளக்கெண்ணெய் கொண்டு வா' என்று தனது பழைய நண்பனைக் கேட்டான் சிங்காரம்.
கொண்டு வந்ததும் வாங்கி, சந்திரன் கையில் போட்டுத் தடவி, இதமாக நீவி சுளுக்கை இழுத்து விட்டான்.
எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கோயிலுக்குப் போயிருந்த சிங்காரத்தின் தாயாரும் தந்தையும், தன் வீட்டின் முன்னால் இருந்த கும்பலைப் பார்த்து விட்டு விரைந்து வந்தனர்.
'உன் மகன் வந்துவிட்டான்' என்று கூறக் கேட்ட சிங்காரத்தின் தாய், அவனை அப்படியே ஆரத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
சந்திரன் அவனைத் தாக்கியதையும், சிங்காரம் எதிர்த்து அடிக்காமல் இருந்தையும், எல்லோரும் கதையாகக் கூறினார்கள்.
சிங்காரத்தின் தந்தை வேகமாக ஓடி வந்து 'ஏண்டா, உனக்கு மானம் வெட்கம் சூடு சொரணை ஏதுமில்லையா! அடி வாங்கிய - நீ, எதிர்த்து அடிக்கக்கூடவா உன் உடம்பில் வலுவில்லை!' என்று கோபமாகக் கேட்டார்.
'இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு'
என்ற குறளை மிகவும் அமைதியாகக் கூறினான் சிங்காரம்.
என்ன கூறுகிறாய் என்பது போல், எல்லோரும் அவனை ஏறிட்டுப் பார்த்தனர்.
தனக்குத் துன்பம் செய்கின்றவர்களுக்கும், அவர்கள் மனம் இன்பம் அடைவது போல பிரதி உதவி செய்வதுதான் மனிதப் பண்பாகும்.
தனக்குத் துன்பம் கொடுத்தவரை உடனே தண்டிப்பவர்களுக்குக் கிடைக்கும் இன்பம் ஒரு நாளைக்குத் தான் இருக்கும். அதை அமைதியாகப் பொறுத்துக் கொண்டவர்களுக்கு இன்பம் எப்பொழுதும் கிடைக்கும்' என்று மீண்டும் ஒரு குறளைச் சொன்னான்.
'ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கும்
பொன்றும் துணையும் புகழ்.'
நம்ம சிங்காரம் எப்படி மாறிட்டான்? என்று அவன் தாயார் மற்றவர்களிடம் கூறினாள்.
ஆமாம்மா! என் வேலை ஆசிரியர் வேலையாயிற்றே. அன்பாலும் அறிவாலும் ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்குகின்ற பொறுப்பு எங்களிடம் இருக்கிறதே! அதற்கு முதலில் தேவை பொறுமை.
'நான் செய்த தவறுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்துத் தண்டனை கிடைச்சிருக்கு, அந்த தண்டனையை ஏற்றுக் கொள்ள நான் ஏன் தயங்க வேண்டும்? சந்திரன் செய்தது சரி' அதனால் தான் நான் அமைதியாக இருந்தேன்.
என்னை மன்னிச்சிடு சிங்காரம்!
இரு நண்பர்களும் மீண்டும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டனர். அன்பின் மிகுதியால்.
ஆத்திரம் வரும் பொழுது அறிவு விலகிப் போய் விடுகிறது. அறிவு மீண்டும் வரும் பொழுது ஆத்திரம் வெட்கப்பட்டு ஓடியே விடுகிறது.
ஆகவே 'ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு' என்பதை மறந்து, 'அன்பு வழியே இன்ப வழி' என்று நாம் வாழ்வோம் என்றான் சிங்காரம்.
சிங்காரத்தின் பெற்றோர்கள் தலை நிமிர்ந்து, பெருமை பொங்க அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தனர்.