நல்ல கதைகள்/தூக்கம் தந்த பரிசு!

விக்கிமூலம் இலிருந்து
2. தூக்கம் தந்த பரிசு!

'கண கண' வென்று சங்கீத இசை பாடி கடிகாரம் தன் கடமையைச் செய்தது.

மடாரென்று அதன் மண்டையிலே ஒரு மரண அடி. அடித்துக் கொண்டிருந்த கடிகாரத்தின் தொண்டை அடைத்துக் கொண்டது.

மரண அடி தந்த இடது கைக்குச் சொந்தக்காரன் மணி. புரண்டு படுத்துக் கொண்டான். போர்வையை நன்றாக இழுத்து முகத்தைப் போர்த்தி, மீண்டும் உடலை குறுக்கிக் கொண்டுதூங்க ஆரம்பித்தான்.

மணியின் தந்தை மனோகரன் வந்தார்.

மணி, மணி என்று அழைத்தார்.

'ம்' என்று முனகினான் மணி.

நேரமாகிவிட்டது எழுந்திரு!

'இன்னும் கொஞ்ச நேரம்பா' என்றவாறு கெஞ்சினான் மணி.

'நான் வெளியே அவசரமாகப் போகிறேன், வர அதிக நேரமாகுமே! என்ன செய்யப் போறே?'

"நான் பார்த்துக்குறேன்பா..." போர்வைக் குள்ளேயிருந்து முகத்தைக் காட்டாமலேயே பதில் சொன்னான் மணி.

வெளியிலே கார் புறப்படும் ஒலி கேட்டது. தாய் ஏதோ தன் தந்தையிடம் பேசுவதும் அவனுக்கு இலேசாகக் கேட்டது.

மீண்டும் புரண்டு படுத்தான் மணி.

நன்றாகத் தூக்கம் வருவது போல் இருந்தது. அப்படியே படுத்து இருப்பது மிகவும் இன்பமாகவும் இருந்தது மணிக்கு.

இப்படித் தூங்குகிறானே, 'நேரம் ஆகிவிட்டதே' என்று மேஜை மேல் இருந்த கடிகாரத்திற்கு 'பக் பக்' என்றது. பாவம், அது 'டக்டக்' என்ற சத்தத்துடன் எழுப்பத் துடித்தது.

அப்பாவுக்கே பயப்படாதவன். அலாரத்திற்குப் பயப்படுவானா? எப்படியோ போகட்டும் என்று பெரியமுள் வேகமாகப் போகத் தொடங்கியது. போர்வைக்குள்ளிருந்து குறட்டை ஒலி, ராகம் போல வந்து கொண்டிருந்தது.

தரையே அதிர்வது போல ஒரு பெண் அந்த அறைக்குள் வந்தாள். காலையில் அந்த அறைக்குள் நுழைபவள் 'பர்வதம்' என்ற வேலைக்காரியாகத்தான் இருப்பாள்.

'பர்வதம்' என்றால் மலையல்லவா! அவள் உடலும் அப்படித் தான். யானை அடியெடுத்து வைப்பது போலத்தான் நடப்பாள்.

பர்வதம் அந்த அறையைக் கூட்டத் தொடங்கினாள். வெண்கலக் கடையிலே யானை புகுந்தது போல ஒரே சத்தம்.

அலாரத்தை விடக் கடுமையாக இருந்தது அவள் எழுப்பிய சத்தம். திடுக்கிட்டு விழித்தான் மணி.

'போகப் போறியா இல்லையா' ? வெறி கொண்டவன் போல மணி கத்தினான்.

'சோம்பேறி' என்ற நல்ல வார்த்தையை 'சோமாறி' என்று கூறி அவனை மனத்துக்குள்ளே வைது விட்டுப் நகர்ந்தாள் பர்வதம்.

மீண்டும் புரண்டு படுத்தான் மணி. 'ஏழு மணியாகிவிட்டது' எழுந்திரு மணி என்று எழுப்ப நினைப்பது
போல சுவர்க் கடிகாரம் ஏழு சத்தம் போட்டு ஒய்ந்தது. அது அவனது காதில் விழுந்தாலும் கருத்தில் பதிய வில்லை.

மணியின் அன்னை அருகில் வந்து நின்றாள். முகம் போர்த்தித் தூங்குவது தவறு என்று பல முறை கூறியும் கேளாத மகனை எழுப்பினாள்.

'முகத்தை மூடிக் கொண்டு தூங்குவது தவறு'. அது களைப்பைக் கொடுத்து, சோம்பலை வளர்த்து, சுகாதரத்தையே கெடுத்துவிடும். எழுந்திரு மணி என்றாள்.

இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேம்மா! சரியா எட்டு மணிக்கு எழுந்தால் போதும். தயவுபண்ணும்மா கொஞ்சுவது போல அம்மாவிடம் கெஞ்சினான்.

தாயின் மனம் இளகிவிட்டது. தலையை ஆட்டினாள். எட்டு மணிக்கு வருகிறேன் என்று சமையலறைப் பக்கம் திரும்பியதாய், மீண்டும் மணியிடம் வந்தாள்.

நிம்மதியாகத் தூங்கலாம் என்று புரண்டு பார்த்தான் மணி. அசதியாக இருந்ததே யொழிய, தூக்கமே வரவில்லை. அப்படியே போர்த்திய படியே படுத்திருந்தான்.

பத்து மணிக்கு அவனுக்கு ஒரு வேலை இருந்தது. அதாவது, ஒரு அலுவலகத்தில் நேர்முக தேர்வு (இன்டர்வியூ) இருந்தது.

பத்து மணிக்கு இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கின்றது அம்மா! அதைத்தானே கூறவந்தீர்கள்! என்று அம்மாவுக்கு முந்திக் கொண்டான் மணி.

'வேலைக்குப் போகிறவனுக்கு நேரம் தெரியாதா' என்று தாயும் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டாள்.

'எழுந்திரப்பா, எட்டு மணி ஆகி விட்டது, என்பது போல சுவர்க் கடிகாரம் அடித்து ஒலித்தது. சொகு சான தூக்கம் இப்படி கலைக்கப்பட்டு விட்டதே என்று கடுப்புடன் எழுந்தான் மணி. எப்பொழுதும் அவன் காலை ஒன்பது மணிக்கு எழுந்துதான் பழக்கம்'.

ஆறு மணியிலிருந்து இப்படித் தூக்கம் கலைந்து விட்டதால், அவனுக்கு ஏகப்பட்ட கோபம். அதே வேகத்துடன், எழுந்து, காலைக் கடன்களை முடித்து விட்டுக் குளியலறைப் பக்கம் போனான்.

அங்கே ஒரு பெரும் அதிர்ச்சி அவனுக்காகக் காத்திருந்தது.

'குழாய் சுத்தம் செய்யும் வேலை இருப்பதால், காலை எட்டு மணி வரைதான் தண்ணீர் வரும். அதற்கு முன்னால் தேவையான நீரைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று மாநகராட்சி கொடுத்திருந்த பத்திரிக்கை அறிவிப்பின்படி, குழாயில் தண்ணீர் வரவில்லை.

'படித்திருந்தும், அந்த அறிவிப்பை மறந்து போய் விட்டேனே. என்று தன் மண்டையில் ஒரு தட்டு தட்டிக் கொண்டான் மணி.

இதற்குள் எட்டரை மணி ஆயிற்று. எப்படியும் குளித்தாக வேண்டும்! என்ன செய்வது? ஓடினான் கிணற்றை நோக்கி.

'வீட்டு வேலைகளை முடித்து விட்டு வேலைக்காரி போய் விட்டாள். வேலைக்காரனோ காய்கறி வாங்கப் போய்விட்டான்' என்று தாய் சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள்.

'சரி நானே இழுத்துத் தொலைக்கிறேன்' என்று முணுமுணுத்தவாறே, முதல் முறையாக வாளியை கிணற்றில் இறக்கித் தண்ணீர் மொண்டு இழுக்கத் தொடங்கினான்.

கைகள் எரிச்சல் கொள்ளத் தொடங்கின. என்றாலும் கஷ்டப்பட்டுக் கொண்டே, 'குளித்தேன், என்ற பெயருக்காகக் குளித்தான்.'

தன் அறைக்கு வந்து வேறு உடைகளை மாட்டிக் கொண்டு தயாராகிய பொழுது, மணி எட்டே முக்கால் ஆகிவிட்டது.

'அம்மா நேரமாகிவிட்டது. எனக்கு சாப்பாடு வேண்டாம். காபி மட்டும் போதும்' என்று கத்தினான் மணி.

'காபி ஆறிப் போனதால், வேலைக்காரி பர்வதம் குடித்து விட்டுப் போய்விட்டாள். சமையல் முடிய இன்னும் 10 நிமிடம் ஆகும். கொஞ்சம் பொறு' என்றாள் தாய்.

'காபியும் கிடையாதா? சரியம்மா! நான் போய் ஒட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று தனக்கு சமாதானம் கிடைப்பது போல சொல்லிக் கொண்டே, கார் இருக்கும் இடத்திற்கு ஓடினான்.

கார் இல்லை. பகீரென்றது மணிக்கு.

'காரைத்தான் அப்பா காலையிலே எடுத்துக் கொண்டு போவதாகச் சொன்னாரே' என்பது அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது.

நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. நேர்முகத் தேர்வுக்கான முழுக்கால் சட்டைபோட்டு, முழுக்கை சட்டையை உள்ளே திணித்துக் கொண்டு, 'டை' கட்டிக் கொண்டான். கண்ணாடி முன்னால் நின்று கொண்டு அழகு பார்க்கக்கூட அவனுக்கு நேரமும் இல்லை. அமைதியான மனமும் இல்லை.

கார் இல்லையே என்ன செய்வது?

வேலைக்காரன் வேதாரண்யம் காய்கறிகளைச் சுமந்தவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தான்.

'ஓடிவா சீக்கிரம், என்று கத்தினான் மணி, வழக்கம் போல மெதுவாக, சாவகாசமாக வந்து கொண்டிருந்தான் வேலைக்காரன்.

மணி முன்னால் ஓடி, அவன் முன்னே போய் நின்று 'வாடகைக்கார்' கொண்டுவா என்றான்.

வேதாரண்யத்திற்கு ஒன்றும் புரியவில்லை. இரவில் இரண்டு மணி வரை சினிமா பார்த்துவிட்டு, காலை எட்டு மணிவரை தூங்கிவிட்டு, இப்பொழுது என்ன அவசரம்?

உடனே இன்டர்வியூவுக்குப் போகனும். சரியாக பத்து மணிக்கு நான் அங்கே இருக்கனும். சீக்கிரம் போய்வா...'

நம்ப நாட்டில் பத்துன்னா பதினோரு மணிக்குத் தான் இருக்கும். பதட்டப்படாம போகலாம் தம்பி!

'போப்பா இது வெள்ளைக்காரன், கம்பெனி... நல்ல உத்தியோகம். நிச்சயம், எனக்குத்தான் கிடைக்கும். சீக்கிரம் போய் 'டாக்சி' கொண்டு வாயேன்' என்று அவசரப்படுத்தினான் மணி.

வேலைக்குப் போகிற குழந்தை! விடியற் காலமே எழுந்திருக்கக் கூடாதா? இன்னும் ஒன்னுமே சாப்பிடலியே!

'பரிதாபமா, இல்லை பரிகாசமா! வேலையைப் பாருப்பா. . . மணி மனங்குமுறிக் கொண்டிருந்தான்.'

நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. அங்குமிங்கும் நடை போட்டு அலைந்து கொண்டிருந்த மணியை நோக்கி வேதாரண்யம் வந்தான்.

ஏன்பா! ஏன் தனியே வர்ரே?

'பெட்ரோல் விலை ஏறிப் போச்சாம், மீட்டர் கட்டணத்தை உயர்த்தனும்னு டாக்சி முதலாளியெல்லாம் போராட்டம் நடத்தப் போறதுக்கு முன்னாலே, ஒரு அடையாள வேலை நிறுத்தம் செய்யனும்னு முடிவு செய்தாங்களாம், அதனால் சாலையில் ஒரு வண்டி கூட ஓடவே இல்லை!'

ஐயையே! அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினான் மணி.

நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது.

வேதாரண்யா! அவன் குரல் கெஞ்சலில் வந்து நின்றது. 'போய் என் சைக்கிளை எடுத்துகிட்டு வா! சீக்கிரமா போயிடுறேன், என்று சொல்லிவிட்டு வேதாரண்யத்திற்கு முன்னே ஓடினான் மணி.

புழுதியடைந்து கிடந்த அந்த சைக்கிளின் இரண்டு சக்கரங்களும் ஏழையின் கன்னங்கள் போல் ஒட்டிக் கொண்டு கிடந்தன.

பகீரென்றது மணிக்கு. 'பஞ்சராக கிடக்கிறதே! சைக்கிளும் சதி செய்து விட்டதே' எப்படி நான் போய் சேருவேன்? மணி ஒப்பாரி வைக்காமல் புலம்பினான்.

நாதசுவரத்துக்கு ஒத்து ஊதுவது போல வேதாரண்யமும் ஒத்து ஊதினான்.

'அரசு பேருந்துதான் கடைசிப் புகலிடம் என்று யோசனை கூறினான் வேதாரண்யம்'.

அவசரம் அவசரமாக சான்றிதழ்களை அள்ளிக் கொண்டு. 'பேருந்து' நிற்குமிடத்துக்குப் பறந்தான் மணி.

அன்றைக்கு அறுபத்துமூவர் திரு விழாவாம். பட்டணத்து மக்களில் பாதிக்கூட்டம் அங்குதான் இருந்தது.

மலையிலே தெரியும் ஒற்றையடிப் பாதையைப் போல வரிசை நீண்டு நின்றது.

எச்சிலை விழங்கினான் மணி. கண்கள் மூடி மூடித்திறந்தன. 'எப்படி பஸ்ஸுக்குள் ஏறப் போகிறாய்' என்று மனம் கேட்டு அவனை பயமுறுத்தியது.

பஸ் வந்து ஓர் பயங்கர உறுமலுடன் நின்றது. எறும்புபோல வரிசையாய் நின்ற மக்கள், இப்பொழுது தேனீக்கள் போல் 'ஏறுமிடத்தில்' பஸ் வாசலில் மொய்த்துக் கொண்டு நின்றனர்.

ஆறறிவு படைத்த மக்கள் அனைவரும், பட்டிக்குள்ளே ஆடுகள் நுழைவது போல, முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

பஸ்ஸுக்குரிய கட்டணம் ஒரு கையிலும், சான்றிதழ் உள்ள பையை மற்றொரு கையிலும் பிடித்திருக்க, மணியும் ஏற முயன்றான்.

அவன் பஸ்ஸுக்குள் ஏறவில்லை. கூட்டத்தின் இடையிலே வசமாக சிக்கிக் கொண்ட அவன் கூட்டத்தால் வாசலுக்குள் நுழைக்கப் பட்டு, திணிக்கப்பட்டான்.

உடல் நசுங்கி, உடை கசங்கி, மூச்சுத் திணறி, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க உள்ளே எப்படியோ வந்து விட்டான்.

உள்ளே வந்து நிற்கவாவது இடம், கிடைத்ததே என்று மகிழ்ச்சி. இருந்தாலும், உடையைப் பார்த்த பொழுது, கீழே உட்கார்ந்து ஒரு முறை அழ வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு.

பஸ்ஸிலே உட்கார்ந்து பத்துபேர் முன்னால் அழ முடியுமா?

பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு, உட்கார இடங்கிடைக்காமல், மேலே உள்ள கம்பியைப் பிடித்துக் கொண்டு, வெளவால் போல் தொங்கியவாறு பயணம் செய்தான்.

நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது.

'பத்து மணிக்குள்ளே இந்த பேருந்து போய் சேர்ந்துவிட வேண்டும்' என்று பெயர் தெரிந்த அத்தனையையும் கடவுளிடமும் வேண்டிக் கொண்டான்.

இரவு சினிமாவுக்குப் போகாமல் இருந்திருந்தால், காலையிலே சீக்கிரம் எழுந்திருந்தால், இப்படி ஒரு துன்பம் வந்திருக்காதே! அழகாக அப்பாவின் காரிலேயே போயிருக்கலாமே, என்று அவன் மனம் தானே பேசிக் கொண்டது.

அவனுடைய நல்ல காலம். சரியாகப் பத்து மணிக்குபோய் அவன் இறங்குமிடத்தில் பஸ் நின்றது மணியும் இறங்கினான்.

உள்ளே போவதற்குரிய வழி தெரியாமல் அந்தக் கம்பெனியின் சரியான வழியைக் கண்டு பிடிக்க முயற்சிப்பதற்குள், கால் மணி நேரம் கடந்துவிட்டது.

தன் முடியைத் திருத்திக் கொண்டு உடையை சரிபார்த்துக் கொண்டு, உரிய இடத்தை அடைவதற்குள் பத்தரை மணி ஆயிற்று.

முகத்தில் முத்து முத்தாய் வியர்வை கொப்பளிக்க உள்ளே நுழைந்தான். அலுவலக சிப்பந்தி அவனைத் தடுத்தான்.

“பத்து மணிக்குள்ளே வந்தவர்களுக்கு மட்டும்தான் உள்ளே போக அனுமதி உண்டு.”

என்று சிப்பந்தி ஏளனமாக சிரித்துக் கொண்டே சொன்னான்.

மணிக்கு வயிறு பற்றி எரிந்தது.

கெஞ்சிப் பார்த்தான் மணி. கெஞ்சியதுதான் மிஞ்சியது.

"கம்பெனி சட்டத்தை மீற முடியாது" என்று அந்த சிப்பந்தி கோபமாகக் கூறிய பொழுதுதான் மணிக்கு புத்தியில் உறைத்தது. மனப்புழுக்கத்துடன் திரும்பினான் வீடு நோக்கி.

இது வரை ஒன்றும் சாப்பிடவில்லை யாதலால், பக்கத்திலே உள்ள வெற்றிலை பாக்குக் கடைக்குச் சென்று குளிர்ந்த பானம் ஏதாவது அருந்தலாம் என்று நடந்தான் மணி.

வயிறு குளிர்ந்தது, வாய் நனைந்தது குளிர் பானத்தால். அடுத்து, பானத்திற்குரிய பணம் தரவேண்டுமே?

முழுக்கால் சட்டையின் பின் பக்கப் பாக்கெட்டில் கையை விட்டான். பணப்பை (மணிப்பர்சு) அங்கே இல்லையே! கூட்டத்தில் எவனோ கொண்டு போய் விட்டானே!

கையிலே காசு இல்லாது கலங்கினான் மணி. தன்னிடம் காசு இல்லையென்று கூறி, களவுபோன தன் கதையைக் கூறினான். கடைக்காரனோ நம்பவே இல்லை. நம்புவானா அவன்?

கையிலே இருந்த மோதிரத்தை அவனிடம் கழற்றிக் கொடுத்து, நாளை வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று நடந்தான்.

மனதில் ஒரே குழப்பம். சிந்தனை செய்யக்கூட அவன் மனம் தயாராக இல்லை.

நடந்தே வீட்டுக்குப் போகலாம் என்பது தான் அவன் முடிவு. காலை வெயில் சுளீரென்று முகத்தில் அடித்தது. பசித்துக்கிடக்கும் வயிறு துடித்தது. கம்பெனியில் தனக்குரிய வாய்ப்பை இழந்த நிலை வேறு அவனை வாட்டியது.

அவனால் நடக்க முடியவில்லை. எதிரில் இருந்த பூங்கா ஒன்றைப் பார்த்தான். சிறிது நேரம் படுத்து, ஓய்வு எடுத்துக் கொண்டால், பிறகு வீட்டிற்கு எப்படியும் போய் விடலாம் என்று நினைத்தான்.

ஒரு படர்ந்த பெரிய மரத்தின் நிழலில் இருந்த ஒரு நீண்ட பெஞ்சில் தன் சான்றிதழ்கள் உள்ள பையை தலைக்குத் தலையணையாக வைத்துக்கொண்டு, காலை நீட்டிப்படுத்தான். களைத்த கால்களுக்கு இதமாக இருந்தது. குளிர்ந்த காற்றும் சுகமாக வீசியது.

மணி, அப்படியே தூங்கிப் போய் விட்டான். எவ்வளவு நேரம் தூங்கினானோ அவனுக்கே தெரியாது

'எழுந்திருடா தடிப்பயலே! தூங்குவது போல பாசாங்கா செய்கிறாய்! தோலை உரித்துவிடுவேன். உண்மையைச் சொல்' என்று போலீஸ்காரரின் கைத்தடி, மணியின் முதுகில் விழவும் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து நின்றான் மணி.

என்ன பேசுவது என்றே தெரியாமல் நின்ற மணியின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியவாறு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார் போலீஸ்காரர்.

'ஐயா வெளியில் போயிருக்கிறார். உள்ளே இரு' என்று ஒரு அறைக்குள்ளே அனுப்பி வைத்தார் தலைமைக் காவலர். மணிக்கு இன்னும் ஒன்றுமே புரியவில்லை.

தன் சட்டைப் பைக்குள் அந்த சங்கிலி எப்படி வந்தது? தன் சட்டைப் பைக்குள் அந்த சங்கிலி இருக்கிறது என்று போலீசுக்கு எப்படித் தெரியும்?

மணி யோசித்து யோசித்துப் பார்த்தான். எதுவுமே அவன் நினைவுக்கு வரவில்லை. அந்தப் பலகையில் படுக்கிற வரைதான் நினைவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு எதுவுமே புரியவில்லை.

திருடன் ஒருவன் ஒரு குழந்தையின் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிவர, அவனைப் போலீஸ்காரர்கள் துரத்த, அவன் பூங்காவிற்குள் நுழைந்து, மணியின் பைக்குள் போட்டு விட்டு ஓடியது தூங்கிய மணிக்கு எப்படித் தெரியும்!

தன்னைப் பற்றியும் தன் முகவரியைப் பற்றியும் கூறக்கூட அந்த காவலர்கள் விடவில்லை.

பசி அவனைத் தின்று கொண்டிருந்தது.

மாலை நான்கு மணியாயிற்று. இதற்குள் பலமுறை ஏதாவது சாப்பிட்டிருப்பான் மணி. இவ்வளவு நேரம் ஒரு அறைக்குள்ளே இருந்ததும் இன்று தான்.

சுவற்றில் சாய்ந்தான் தன்நிலையைப்பற்றி யோசித்தவாறு, கண்கள் மூடிய நிலையில் உட்கார்ந்திருந்தான் மணி.

'டக் டக்' என்ற சத்தம் கேட்டு விழித்தான் மணி. எதிரே இன்ஸ்பெக்டர் நின்று கொண்டிருந்தார்.

டேய் மணி! 'நீயாடா?' நீ எங்கேடா இங்கே வந்தே!

தலைமைக் காவலர் அவனைப் பற்றிய குற்றச் சாட்டைக் கூறினார். மணியின் கண்களோ கண்ணிரை உகுத்துக் கொண்டிருந்தன.

இன்ஸ்பெக்டர். அவர் அழைத்துக் கொண்டு, மணியின் வீட்டுக்குப் போனார். மணியின் தந்தையும் இன்ஸ்பெக்டரும் நெருங்கிய நண்பர்களாயிற்றே!

மணியின் தந்தை மனோகரன், காலையிலிருந்து எல்லா நிகழ்ச்சியையும் கூறும் படி கேட்டார். மணியும் திக்கித் திக்கிக் கூறினான். இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டே கேட்டார்.

இத்தனைக்கும் காரணம் மணியின் சோம்பல்தான். ஒரு காரியம் என்றால் ஒருவன் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். அசட்டையாக இருப்பதும், அலட்சியப் படுத்துவதும், அகம்பாவமாக தன்னால் எதுவும் முடியும் என்று நினைப்பதும் தான் எல்லாத் துன்பத்திற்கும் காரணம்.

எவன் ஒருவன் காலையில் விழிக்கிறானோ, அவனே காரியங்கள் அனைத்தையும் நினைத்து, அவைகளுக்காகத் திட்டமிட்டு நடப்பான். அதிக நேரம் தூங்குபவன், அவசரத்துடன் எழுந்து அலங்கோலமாக காரியங்கள் செய்வதால்தான் அவதிக்கு உள்ளாகிறான். 'சோம்பல் உள்ளவர் தேம்பித் திரிவார்' என்பது பழமொழி. மணிக்கு வந்த தண்டனையைப் பார்த்தீர்களா?

தன் தவறை மணி உணர்ந்தான். இது போல் இனி தூங்கமாட்டேன் என்று தந்தையிடம் உறுதி கூறினான். தனக்கு உதவி செய்த இன்ஸ்பெக்டருக்கு நன்றி கூறினான்.

விருந்து வைத்தார் மனோகரன். இன்ஸ்பெக்டருக்கு மட்டுமல்ல, மணிக்கும்தான். காலையிலிருந்து அவன் பட்டினியல்லவா!

பசித்துப் புசி என்பதற்கிணங்க, ருசித்துப் புசித்தான் மணி புத்தி வந்த புது மனிதனாக தந்தையைப் பார்த்து புன்னகை புரிந்தான்.

வேலை போனாலும் பரவாயில்லை, சோம்பல் மூளை போயிற்றே என்று மனம் மகிழ்ந்தார் மனோகரன். ஆமாம் என்பது போல சுவர்க் கடிகாரம் ஆறு முறை அடித்து ஆமோதித்தது.