நல்ல கதைகள்/பணம் பந்த பரிசு!

விக்கிமூலம் இலிருந்து

1. பணம் தந்த பரிசு

கண்ணனுடைய கண்கள் மூடியவாறு இருந்தது, அவனது மனம், ஆனந்த நினைவுகளில் உல்லாச ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது.

அவன் அரைத் தூக்கத்தில் இருப்பது போல் அமர்ந்திருந்தான். அவனது நெற்றியில் சுருக்கம் விழுந்து விரிந்தது, எதையோ அவன் ஆழ்ந்து யோசிப்பதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

“இன்று மாலை வரவேண்டியதுதான். வீட்டிற்குப் போக வேண்டும். போனதும், அந்த மூலைக்குள்ளே கையைவிட்டு ‘அதை’ எடுத்துக் கொண்டு அப்படியே புறப்பட்டு...”

அணைகடந்து ஓடுகின்ற புது வெள்ளம் போல, அவனது ஆசை பாடிக் கொண்டிருந்தது. கற்பனை அதற்கு இதமாக தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

வகுப்பில் உட்கார்ந்திருக்கிறோமே. ஆசிரியர் அருமையாகப் பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கிறாரே என்ற எண்ணம் அவனுக்கு எழவில்லை.

வகுப்பின் கடைசியிலே, ஒரு மூலையில்தான் கண்ணன் எப்பொழுதும் உட்கார்ந்திருப்பான். 'மாப்பிள்ளை பெஞ்சு' என்று அதற்குப் பெயர். கண்ணனுக்கு அந்த இடம்தான் எப்பொழுதும் பிடிக்கும்.

மூலையில் உட்கார்ந்திருக்கும் அவனது மூளை, வேறு எதையாவது தான் யோசித்துக் கொண்டிருக்கும். பாடமோ, ஆசிரியர் போடும்

 சத்தமோ அவன் காதுவரை கூட போகாது. அவ்வளவு தூரம் காதுகளைப் பழக்கி வைத்திருந்தான்.

கண்ணனது பெஞ்சைத் தடதடவென தட்டும் சத்தம். கலகலவென மாணவர்கள் சிரிப்பொலி.

திடுக்கிட்டு விழித்தான் கண்ணன். திரு திருவென தன் ஆந்தைக் கண்களை அகல அகல விரித்தான். ஆசிரியர் அருகில் நிற்பதைப் பார்த்ததும் திகைத்தான்.

கண்ணா! "எந்த உலகத்தில் இருக்கிறாய்? இந்திரலோகமா அல்லது சந்திர லோகமா" என்று ஆசிரியர் கேட்டார்.

எமலோகமா இருக்கும் சார்!

மாணவர்களிலே ஒரு வாயாடி மாணிக்கம் அப்படிக் கூற, இடி சத்தம் போல எல்லா மாணவர்களும் ஏககாலத்தில் வாய்விட்டுச் சிரித்தனர்.

‘வெளியே வா! உன்னைப் பேசிக்கிறேன்’ என்பது போல, மாணிக்கத்தை வெறித்துப் பார்த்தான் கண்ணன்.

ஆசிரியர் அதட்டும் குரலைக் கேட்டு வகுப்பறை அமைதியானது.

'தேர்வில்தான் தேறவில்லை, மதிப்பெண்களோ மிகவும் குறைவு. சுறுசுறுப்பாக உட்கார்ந்து நான் சொல்வதையாவது கேட்கக் கூடாதா? படிக்க வந்தவனுக்கு பகற் கனவு எதற்கு?’

மடித்துக் கிடந்த புத்தகத்தை எடுத்து விரித்து வைத்து ஆசிரியர் பேசத் தொடங்கினார்.

“மாணவர்களே! தண்டில் வளையாதது தடியில் வளையுமா? என்பது போல, ஐந்து வயதில் கற்பதற்கு விரும்பாத மனம், இருபத்தி ஐந்து வயதில் என்ன செய்யும்?"

போனகாலம் திரும்பி வராது! இந்தக் காலம் தான் உங்களுக்கு கவலையே இல்லாத காலம், வீட்டுப் பிரச்சினையோ, வெளி விவகாரங்களோ வராத காலம்.

கற்க வேண்டியதைக் கற்று, நிற்க வேண்டிய நியாய, நீதியான வழியில் நின்று, வாழ வேண்டிய புகழ் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தால்தான், உங்களுக்கும் பெருமை. உங்களைப் பெற்றெடுத்துப் பெரும் சிரமத்துடன் காக்கின்ற உங்கள் அன்பு பெற்றோர்களுக்கும் பெருமை."

வகுப்பு முடிந்ததற்கான மணி நீண்டு ஒலித்து ஓய்ந்தது. ஆசிரியர் கண்ணனைப் பார்த்து சிரித்தவாறு வெளியே சென்றார். மாணவர்கள் ஆசிரியர் கூறிய அறிவுரையைப் பற்றியே பேசினர். தாமும் அவ்வாறு வாழப் போவதாக உறுதி எடுத்தனர்.

ஆசிரியர் கூறிய எதுவும் கண்ணன் மூளையில் ஏறவே இல்லை. வீட்டின் மூலையிலேதான் அவனது நினைவு மொய்த்துக் கொண்டேயிருந்தது.

மற்ற மாணவர்கள் கிளம்புவதற்கு முன்னரே, தனது புத்தகங்களை தாறுமாறாக அள்ளிப் பையிலே போட்டுக் கொண்டு, வகுப்பறையை விட்டு, வில்லிருந்து அம்பு புறப்படுவது போல் வெளியே வந்தான்.

நடையிலே வேகம். நினைவிலே தாகம். வாயிலே விசில் எழுப்பிய சினிமாப் பாடலின் ராகம். வழியெல்லாம் எப்படித்தான் நடந்தானோ, வழக்கத்திற்கு விரோதமாக கண்ணன் சீக்கிரமே வீட்டை வந்தடைந்தான்.

வீடு என்றதும், பெரிய மாடி வீடு என்று நினைத்து விடாதீர்கள். சென்னை நகரிலே, இருநூறு ரூபாய்க்கு எவ்வளவு பெரிய வீடு வாடகைக்குக் கிடைக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

ஒரு பெரிய வீட்டில், பல குடும்பங்கள் குடியிருக்கும் ஒரு பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

கண்ணன் மிகக் கவனமாக, பால் குடிக்கப் போகும் பூனை போல, மிகவும் நிதானமாக, காலடி வைத்து வீட்டின் உள்ளே நுழைந்தான்.

கண்ணீர் வழிய, கால்களை நீட்டி சுவற்றில் சாய்ந்தவாறு அவனது தாய் அமர்ந்திருந்தாள்.

என்னம்மா! ஏன் இப்படி அழுகிறீர்கள்? என்ன நடந்தது? என்று கண்ணன் பதறினானா? இல்லையே!

அலட்சியமாகத் தன் அன்னையைப் பார்த்தபடியே வீட்டிற்குள் நுழைந்தான். சமயலறை பக்கம் போவதற்காக அடியெடுத்து வைக்க முயன்றான். ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினான் கண்ணன்.

கண்ணனின் தாய் குபீரென்று பாய்ந்து அவனிடம் ஓடி வந்தாள். அவன் புத்தகப் பையைத் திறந்து புத்தகங்களை எடுத்தாள். விரித்தாள்.

எல்லாப் புத்தகங்களையும் விரித்துப் பார்த்தாகி விட்டது. அவள் எதிர்பார்த்த பொருள் அங்கு இல்லை. பெரிய ஏமாற்றம் எரிச்சலை உண்டு பண்ணியது.

கண்ணா!... கவலையில் மெல்லிய குரலில் தாயின் அழைப்பு.

ம்...! கண்ணனின் திமிரான குரலின் பிரிதி பலிப்பு.

பெருங்காய டப்பாவிலே போட்டிருந்த 5 ரூபாயைக் காணவில்லை, எடுத்தாயா நீ?

நான் ஏன் எடுக்கிறேன்? நீ பணம் எங்கே வைக்கிறாய் என்று எனக்கு எப்படி தெரியும் ? வேறு வேலை இல்லையா உனக்கு?

வைப்பது என் வேலை. திருடிக் கொள்வது உன் வேலை. எனக்குத் தெரியும் எங்கே அந்த பணம்?

“என்னம்மா கேலி செய்கிறாயா? கண்ட இடத்தில் பணத்தைப் போட்டு விட்டு, கடைசியில் என்னையே கள்ளன்னு சொல்றே" என்று ஆங்காரத்துடன் பதில் சொன்னான் கண்ணன்.

கட்டிட மேஸ்திரி நேற்றுக் கொடுத்த ரூபாயை நான் டப்பாவில் போட்டது உண்மைதான். காலையில் பார்த்தால் காணாமல் போய் விட்டதே! இந்த வீட்டில் நம் இரண்டு பேரைத் தவிர, வேறு யார் இருக்கிறாங்க?

அழுகையிலும் குழப்பத்திலும் தடுமாறிப் பேசினாள் தாய்.

"காலமெல்லாம் கஞ்சியைக் குடித்து விட்டு, நெஞ்சொடிய சிற்றாள் வேலை செய்து பிழைக்கிறேன். தகப்பன் இல்லாத உன்னையும் படிக்க வைக்கிறேன். என் கஷ்டத்தைப் பாருப்பா!

என் கண்ணுல்லே பணத்தை கொடுத்துடு. அது இருந்தாதான் அரிசி வாங்கி சமைக்க முடியும்..." கொஞ்சினாள் தாய்.

அரிசி வாங்கினாலும் சரி, நீ அரண்மனையையே வாங்கினாலும் சரி, எனக்கென்ன? நான் அந்த பணத்தை எடுக்கவே இல்லை.

அப்போ, நீ எடுக்கவே இல்லையா?

எடுக்கலே!, சத்தியமா எடுக்கலே!, சத்தியமா எடுக்கலே!, என் ஆணையா எடுக்கலே!, உன் ஆணையா எடுக்கலே!

தாயின் தலைமீது திடீரென்று அடித்து சத்தியம் செய்தான் கண்ணன்.

அடிப்பட்ட வேகம் தாங்காமல், அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

தன் மகன் முரட்டுத்தனமாக அடித்தது பற்றிக்கூட, அவள் கவலைப்படவில்லை. திருட்டுத் தனத்தோடு வாழ்கிறானே, என்று அவள் மிகவும் வேதனையுடன் அழுதாள்.

தகப்பன் இல்லாத பிள்ளை என்று, தான் கொடுத்த செல்லத்தால் தான், அவன் கள்ளனாக வளர காரணமாயிற்றோ! அவள் குழம்பினாள். மேலும் வேதனை அடைந்தாள்.

கண்ணன் ஒரு முறை தாயைப் பார்த்தான். மறு வினாடி, சமயலறையில் உள்ள அந்த ‘மூலையை’ திருட்டுத்தனமாகப் பார்த்தான்.

கண்ணன் முகத்தையே அவள் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தாலும், காலையில் நடந்த நிகழ்ச்சி அவள் மனத்திரையில் நிழற்படமாக ஓடிக் கொண்டிருந்தது.

வீட்டின் வாசலில் அரிசி விற்பவன் வந்து நின்றான். கையில் முறத்துடன் கண்ணணின் தாய் வந்து ஒரு படி அரிசி கேட்டு வாங்கிக் கொண்டு பணம் எடுக்க வீட்டிற்குள் சென்றாள்!

பெருங்காய டப்பாவை எடுத்துப் பார்த்தாள். பேரிடி அவளுக்காகக் காத்திருந்தது. மனம் பகீரென்றது அவளுக்கு. படபடப்புடன் அங்குமிங்கும் ஓடினாள். பணத்தைத் தேடினாள், பதறினாள், அழுதாள், அலறினாள்.

என்ன செய்து என்ன பயன்? போன ரூபாய் திரும்புமா?

அரிசி வியாபாரியோ அவசரமாகப் போக வேண்டும் என்று குரல் கொடுத்தான். ஒரு படி அரிசி விற்க இவ்வளவு நேரமானால் நான் உருப்பட்ட மாதிரிதான் என்று பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசிய வாறு மீண்டும் அவளை அழைத்தான்.

வேகமாக வந்த கண்ணனின் தாய், வியாபாரியை நோக்கி பணம் காணாமல் போனதை விம்மலுடன் கூறினாள்.

வேடிக்கை காட்டுறியா, இல்ல நாடகம் ஆடுறியா? என்னம்மா! வீட்டுக்குள்ளே அரிசி போனதாலே அப்படியே, விட்டுட்டுப் போயிடுவேன்னு பார்க்குறியா?

பணம் இல்லேன்னா பட்டினி கிடக்குறது பச்சையா ஏன் பொய் சொல்லி பசப்பனும்? கொண்டா அரிசியை!

கொண்டு வந்தாள் அரிசியை. முரட்டுத் தனமாக முறத்தை வாங்கிய அவன், கூடைக்குள்ளே கொட்டிக் கொண்டான். அவளை ஏளனமாகவும் எரிச்சலாகவும் பார்த்துவிட்டுப் போய்விட்டான்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் கண்ணனின் தாய் கமலத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். வேறு, அவளுக்கு மானமே போய் விட்டது போல் இருந்தது.

ஏழை சொல்கிற உண்மையை நம்பக் கூட யாரும் இந்த உலகத்தில் தயாராக இல்லையே!

தலை குனிந்தவாறு வீட்டிற்குள் சென்று அழத் தொடங்கினாள். மாலை வரை அழுதுகொண்டேயிருந்தாள். வேலைக்கும் போக வில்லை. சாப்பிடவும் மனம் இல்லை.

'எல்லாம் என் தலை விதி' என்று அந்தப் பழியைத் தன் தலைமீது தாங்கிக் கொள்வதுபோல, தலையிலே கை வைத்தவாறு கமலம் உட்கார்ந்திருந்தாள்.

அம்மா! எனக்குப் பசிக்குது! கண்ணன் கொஞ்சலாக கேட்டான்.

சமயலறைப் பக்கம் போ என்று கையை நீட்டினாள் கமலம்.

என்னதான் இருந்தாலும், தன் மகனை வெறுக்க ஒரு தாய் துணிவாளா! மத்தியானம் தனக்கு இருந்த உணவை, தன் மகனுக்காக வைத்துவிட்டுப் பட்டினிகிடக்கின்றாளே!

இதனால் தானே, கைமாறு கருதாது கடமையாற்றும் தாயை எல்லோரும் தெய்வம் என்கிறோம்.

விறுவிறு என்று உள்ளே போய், சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கினான் கண்ணன், வாயும் கையும் எவ்வளவு வேகமாக வேலை செய்கின்றன!

சாப்பாட்டுக் காரியத்தை சமர்த்தாக முடித்துக் கொண்டு வெளியே வந்தான். தாயின் வேதனையோ, தன் வீட்டுத் தரித்திர நிலையோ அவனுக்குப் புரியவும் இல்லை. தெரியவும் இல்லை.

தாய்க்கும் உதவி செய்கிறேன் என்று கடைக்குச் சாமான்கள், காய்கறி வாங்கப் போகும் கண்ணன், முதலில் பைசா பைசாவாக மீதி பிடித்தான். பிறகு சாமான்களை குறைத்து வாங்கி, ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என மீதிப் பிடித்தான்.

அதற்காகப் பொய் சொன்னான், அஞ்சாமல் அம்மாவை அதட்டினான். மீறினால் அடிக்கக்கூட முயன்றான். பிறகு, ரூபாயைத் திருடவே தொடங்கி விட்டான்.

திருடிய பணத்தை வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போகாமல் தெரு ஓரங்களில் காசு வைத்து கோலி விளையாடச் சென்றான்.

பள்ளிக்கூடம் போனாலும், மெளனசாமியார் போல உட்கார்ந்திருப்பான். பாடமும் ஏறாது. படிப்பிலும் ஒரு ஆர்வமும் இராது.

இவ்வாறு அம்மாவின் உழைப்பை ஏமாற்றிப் பெற்று, ஏய்த்து இன்பங்கண்டான் கண்ணன். தாயை ஏமாற்றினான் முதலில். இப்பொழுது தன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

சட்டையை மீண்டும் போட்டுக் கொண்டான். தாயோ அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. அங்கிருந்து போனால் தானே தானும் ஏதாவது செய்யலாம்.

மெதுவாக, சமயலறை மூலைப் பக்கம் ஓரக் கண்ணால் பார்த்தான்.

தாயோ அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. தானும் வெளியே போகப்போவதில்லை.

அங்கேயே இருந்தால் தாய் சந்தேகப் படுவாளே! எப்படி நேரத்தைப் போக்குவது?

புத்தகத்தைப் படிப்பதுபோல பாசாங்கு செய்ய வேண்டும்.

அறிவு தருவதற்கு உதவாவிட்டாலும் அந்தப்புத்தகம் அவசரத்துக்கு உதவியது.

புத்தகம் விரிந்தாலும், கண்கள் அதன் மேல் படியவில்லை, சமையலறை மூலையையே பார்த்தன.

கோழிக் குஞ்சுக்காக வட்டமிடும் கருடனின் பார்வையைப் போல, புத்தகத்தால் முகத்தை மறைத்துக் கொண்டு மூலையைப் பார்த்தான் கண்ணன்.

நேரம் ஆனதே தவிர, கமலம் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை, தன் மகன் படிக்க புத்தகம் வைத்திருப்பதைக் கண்டாள், ஒருபுறம் வருத்தம் இருந்தாலும், மறுபுறம் மகிழ்ச்சி அடையத் தொடங்கினாள்.

சூரியன் மறைந்தான். இருள் வீட்டை சூழ்ந்து கொண்டது.

மண்ணெண்ணெய் விளக்கினை ஏற்ற கமலம் எழுந்திருக்க முயன்றாள். காலையிலிருந்து பட்டினி கிடந்த உடம்பல்லவா! கால்கள் தள்ளாட எழுந்தாள்.

கமலம்..., கமலம்...

வாசலில் இருந்த அடுத்த வீட்டுப் பெண் ஒருத்திக் கூப்பிடும் குரல் கேட்டது. அவசரம் அவசரமாக வெளியே புறப்பட்டு போனாள்.

'இதோ வந்து விட்டேன்' என்று தாய் வெளியே புறப்பட்டதும், 'இதுதான் சரியான சமயம்' என்று நினைத்துக் கண்ணன் எழுந்தான்.

வாசலைப் பார்த்துக் கொண்டே மூலையை நோக்கிப் போகும் பொழுது திடீரென ஓர் சத்தம்.

வாசல் தடுக்கிடவே, கீழே தொப்பென்று விழுந்தாள் கமலம்.

'முன்னே பார்த்துப் போகாமல் என்னையே என்னப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?' அதனால்தான் விழுந்தாய்!

தாயின் மீது சிறிதுகூட அனுதாபம் கொள்ளாமல் கேலியாகவும், கிண்டலாகவும், கண்ணன் பேசினான். பெற்ற தாயைத்தான் அவன் மதிப்பதே கிடையாதே!

'சனியன் தொலைந்தது என்று தாய் வெளியே போய்விட்டதை அறிந்து, அந்த மூலையை நெருங்கி விட்டான்.

'5 ரூபாய் அதில்தான் இருக்கிறது. பத்திரமாக இருக்கும்' என்று சந்தோஷமாக ஒரு முறை கூறிக் கொண்டான். பணத்தை எடுத்துக் கொண்டு பறந்துவிட வேண்டியது தான் என்று வேகமாய் மூலைக்குள் கையை விட்டான்.

சுரீர் என்றது கை விரல்களில்.

விட்டவேகத்தில் கையை வெடுக்கென இழுத்துக் கொண்டான்.

'விண் விண் ணென்று வலி தெறிக்கத் தொடங்கியது, 'விஷம்' அல்லவா அவன் விரல்களிலிருந்து ஏறிக் கொண்டிருக்கிறது.

'ஐயோ அம்மா' என்று அலறினான் கண்ணன்.

மகன் அலறலைக் கேட்டு கமலம் ஓடிவந்தாள். அவளுக்கிருந்த பசி மயக்கம் எல்லாம் பறந்தோடிப் போனது போல ஒடி வந்தாள்.

'கையிலே ஏதோ கடித்து விட்டது. கடுக்கிறது என்று கத்தினான். மூலையைக் காட்டினான்.

விளக்கைப் பொருத்தி எடுத்துக் கொண்டு ஒடிப்போய் பார்த்தாள் கமலம்.

ஐந்து ரூபாய் நோட்டின் மேல் படுத்திருந்த 'கருந்தேள்' ஒன்று மெதுவாக நடந்து போகத் தொடங்கியது.

அடுத்த வீட்டுக்காரர்கள் உதவியுடன் அந்தத் தேளை அடித்துக் கொன்று விட்டு, பணத்தை எடுத்தாள் தாய்.

பொய் சொன்ன வாய் புலம்பிக் கொண்டிருந்ததையும், களவு செய்த கண்ணனின் கை கருத்தேள் கொட்டித் துடித்துக் கொண்டிருந்ததையும் கமலம் கண்டாள்!

என்னைக் கேட்டால் தந்திருப்பேனே! ஏண்டா இப்படி செய்தாய்? என்று அந்த நிலையிலும், தன் மகனை அன்புருகக் கேட்டாள். அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

விஷம் ஏறிக் கொண்டே இருந்தது. வீறிட்டலறினான் கண்ணன்.

'கருந்தேளாச்சே! மருத்துவமனைக்குப் போனால்தான் நல்லது' என்று மற்றவர்கள் கூறினார்கள்,

சின்னக் குழந்தை ஓடுவதுபோல, கமலம் பதறிக் கொண்டே வெளியே ஓடினாள்.

தன்னுடைய தவறுகள் தெரிந்திருந்தும், தன்னைத் தண்டிக்காமல் எவ்வளவு அன்பு தன்மீது வைத்திருக்கிறாள் தாய் என்பது அப்பொழுது தான் கண்ணனுக்குப் புரிந்தது.

சைக்கிள் ரிக்‌ஷா கொண்டு வருவதற்காகத்தான் தன் தாய் சாலைக்கு ஓடியிருக்கிறாள் என்று அங்கே உள்ளவர்கள் பேசிக் கொண்டதையும் கண்ணன் கேட்டான்.

விஷம் ஏறிக் கொண்டேயிருந்தது. இனி, "தாய்க்கு நல்ல மகனாக வாழ வேண்டும். உதவிசெய்ய வேண்டும். பள்ளிக் கூடம் ஒழுங்காகப் போக வேண்டும்" என்று அழுதுகொண்டே பிற்கால வாழ்க்கையைப் பற்றி முதல் முறையாக நினைத்தான் கண்ணன்.

'ஐயோ என்ன நடந்தது?’ என்று எல்லோரும் சத்தமாகக் கேட்டதைத் திரும்பிப் பார்த்தான் கண்ணன்.

இரத்த வெள்ளத்திலே அவனது தாயைத் தூக்கி வந்து கொண்டிருந்தனர் சிலர்.

ரிக்‌ஷாவுக்காக, கமலம் கவலையுடன் ஒடிக் கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால், கால் எலும்பு முறிந்து விட்டது.

தனக்காகத் தன் தாய், தன் கால்களையே முறித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த கண்ணன், அவள் கால்களில் விழுந்து, தலையை மோதிக் கொண்டு, திருந்திட்டேம்மா! திருந்திட்டேம்மா! இனிமேல் திருடவே மாட்டேன், பொய்சொல்லவே மாட்டேன்' என்று அழுதான்.

அந்த வேதனையிலும், 'இது போதுமடா என் கண்ணே' என்று ஆதரவாக அணைத்துக் கொண்டாள் கமலம்.

ஒருவருக்காக வந்த ரிக்‌ஷா, இருவரையும் ஏற்றிக் கொண்டு போனது.

கண்ணனின் கண்கள் குற்ற உணர்வால் கண்ணீரைப் பெருக்கியது தாய் கமலத்தின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

ஆனந்தக் கண்ணீர்தான். ஆமாம்! பணம் தந்த பரிசல்லவா! தன் மகன் திருந்திவிட்டதல்லவா அவள் பெற்ற பெரிய பரிசு!