உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல தோழிதான்/சிறு குறும்பு

விக்கிமூலம் இலிருந்து

சிறுகுறும்பு



"உமக்குப் பார்க்கும் கண்களும் ரசிக்கும் மனமும் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்" என்றது சிதம்பரத்தின் மனக்குறளி.

"பார்வை என்பது எல்லோருக்கும் இயல்பாக அமைந்த ஒரு திறன். ஆனால், பார்ப்பது என்பது தனிப்பட்ட கலை!" என்றும் அது குறிப்பிட்டது.

சிதம்பரம் அப்போது ஒடும் ரயிலின் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் தூங்காமல் உட்கார்ந்திருந்தான். கூட்டம் நிறைந்த சூழ்நிலைதான்.

அவன் வண்டி வண்டியாகத் தேடி, ஒரு பெட்டியைத் தேர்ந்து, உள்ளே புகுந்து, இடம் பிடித்து, ஜன்னல் ஒரத்து மூலையில் சுகமாகச் சாய்ந்திருந்த போது, அந்தச் சூழல் வறண்டதாகத்தான் இருந்தது. பிறகு ஒரு பிரயாணி, தன் மனைவி, குழந்தை, பெட்டி கள் சகிதம் வந்து சேர்ந்தான்.

"இவனுடைய சகோதரியோ என்று எண்ணத் துண்டும் முகத்தோற்றம் இவளுக்கு இருக்கிறது" என்று சிதம்பரம் நினைத்தான். "இவர்கள் இங்கே வந்து சேர்ந்ததனால் அதிகமான இடைஞ்சல் எதுவும் ஏற்பட்டு விடவில்லை!" என்று விமர்சித்தது அவன் மனம்.

பட்டாடையும் பளபளப்பும் பெற்றிருந்த அந்த இளம்பெண் வறண்ட இடத்துக்குக் குளுமையும்,  கலரும், கவர்ச்சியும் சேர்த்தாள். அதனால் அவனுக்குச் சிறிது மகிழ்ச்சிகூட.

இதை எண்ணி அவன் மகிழ்வுற்றிருந்த வேளையில் வந்து சேர்ந்தது ஒரு கும்பல். தெற்குக் கடைசி ஊர் ஒன்றிலிருந்து திருப்பதிக்கு வந்து விட்டு, மறுபடியும் சொந்த ஊருக்குப் பிரயாணமாகும் பெரிய குடும்பம் அது. குடும்பத் தலைவன், தலைவி, மாமியார், அம்மா, குழந்தைகள், பெரிய பெரிய பெட்டிகள், படுக்கைகள், மூட்டை முடிச்சுக்கள் எல்லாமாகச் சேர்ந்த இடம் முழு வதையும் அடைத்துக் கொண்டு நெருக்கடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டியது அக்கூட்டம்.

சிறிதுநேரம் வரைதான். பிறகு, மணி ஆக ஆக, வண்டி ஒட ஒட. இரவு நேரப் பயணிகள் எப்படி எப்படியோ விழுத்து கிடந்து, தூங்குவதில் உற்சாகம் காட்டுவது இயல்பு எனும் பொது விதி அங்கும் ஆட்சி புரியலாயிற்று.

அகலமில்லாத பெஞ்சுகளில், கிடைத்த இடத்தில், ஒடுங்கியும் கோணியும் படுத்துக் கிடந்தும், திரும்பியும் ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். அப்படித் துங்குகிறவர்கள் திரும்புகிற போதும், மீண்டும் மறுபக்கம் பார்த்துப் புரண்டு தூங்குகிற போதும் பெண்களின் பல விதத் தூக்க நிலைத் தோற்றங்களைக் கண்டு ரசிக்கக் கூடிய வாய்ப்பு விழித்துக் கொண்டிருக்கும் பிரயாணியான சிதம்பரத்துக்குக் கிட்டியது.

அதனால்தான் அவன் மனம் பார்வை விஷயமாக எண்ண அலை வீச நேர்ந்தது.

மனைவி என்னும் ஒருத்தியோடு தனி அறையில் தூங்கும் பழக்கமுடைய ஆண் கண்டு களிப்பதைவிட அதிகப்படியான அழகுக் காட்சிகளை, இன்டரஸ்டிங் போஸ்களை, ஆன்- இன்டன்ஷனல் வெளிச்சங்களை,  அதாவது வேண்டுமென்றே செய்யப்படாத தன்னினைவற்றுத் தானே நிகழ்ந்துவிடுகிற திரை நீக்கங்களை, விதம் விதமான பெண்களிடம் பார்த்து இன்புறும் பாக்கியம் இரவு நேர ரயிலில் தூங்காது விழித்திருக்கும் வீணனுக்கு வந்து சேர்கிறதே என்று அவன் எண்ணிக் கொண்டான்.

அவன் பார்வை எதிர் பெஞ்சு மீது படிந்தது. கண்களை பிடித்திழுத்து அங்கேயே நின்று விடும்படி செய்யும் தோற்றம்தான்.

நீலப்பட்டு உடுத்திய உருவம். எடுப்பான பருவத் திரட்சிகளையும் பிடிப்புக்களையும், நெளிவு வளைவுகளையும் பெற்றிருந்த பெண். மினுமினுக்கும் வெண்மை என்றும் சொல்ல முடியாத, மஞ்சள் என்றும் கொள்ள முடியாத, ஆயினும் தாழம்பூ நிறம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என் நினைக்க வைக்கும் நிறத்தைக் கொண்டிருந்த யுவதி படுத்துக் கிடந்த ஒடுங்கல் தோற்றம் அவனைக் கிறக்கியது. அவள் திரும்பிப்படுத்த கோலமும், முன்புற அழகு காட்டிய நிலையும், ஆழ்துயில் பயின்ற எழில் முகத்து அமைதிக் கொலுவும் காணுந்தோறும் காணுந்தோறும், மீண்டும் மீண்டும் காணவேண்டும் எனும் ஆசையைத் துண்டும் அற்புத இனிமைகளாகத் திகழ்ந்தன.

சிதம்பரம் மற்றவர்களையும் கவனித்தான்.

அந்தக் குடும்பத்தின் இளம்பெண் அழகியுமல்ல, அலங்காரியுமல்ல; குரூபியுமல்ல; கோரமும் இல்லை. கண்டு சகிக்கக்கூடிய சராசரிப் பெண். தூங்கும் நிலையில் அவளிடம் ஒரு வசீகரம் சூழ்ந்திருந்தது. சிதம்பரம் இருந்த பெஞ்சில்தான் அவள் தூங்கிக் கிடந்தாள்.

எதிர்ப்பெஞ்சில் துயில் புரிந்த அழகி, தலைமாட்டில் கணவனும், கால்பக்கம் எவளோ ஒருத்தியும் இருக்க,  கால்களை மடக்கி, தானே ஒடுங்கிக் கோணிக் கிடக்க நேர்ந்தது. இந்தப் பெஞ்சில், சிதம்பரத்தின் அருகில், துங்கியவளுக்கு நல்ல வசதி.

அவள் தலைமாட்டில், சாளரத்தை ஒட்டி, அவன் ஒடுங்கியிருந்தான். பெஞ்சில் இடம் பிடித்து அமர்ந்திருந்த மற்றர்வர்கள் கீழே பலகைப் பரப்பிலும், மேலே கட்டைகளிலும் படுக்கப் போய்விட்டார்கள். எனவே, அந்தப் பெண் கால்களை நீட்டிச் சுகமாகப் படுத்துத் தூங்க முடிந்தது. வாயினால் ஊதி ஊதி, உள்ளே காற்றைப் புகச் செய்து பருமனாக்கிக் கொள்ளக்கூடிய ரப்பர் தலையணை வேறு வைத்திருந்தாள் அவள். ஓடும் வண்டியின் அசைவு காரணமாக அவளது உணர்வற்ற உடல் நகர்ந்து மெதுமெதுவாக அவனைத் தொட நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் தலை அவனைத் தொட்டுவிட்டது. தடித்த சடைப் பின்னல் தலையை அழுத்தியிருக்கும் போலும், அவள் விழிக்காமலே, அதை எடுத்துப் பின்னால் தலைக்கு மேல் வீசினாள். அப்படி வீசிய வேகத்தில் அது நெளிந்து வந்து சிதம்பரத்தின் மடிமீது. விழுந்தது. மினுமினுக்கும் கருநாகம் போன்ற குழற் பின்னல் அது.

அதைத் தொட வேண்டும் என்ற ஆசை சிதம்பரத்துக்கு எழுந்தது. அவ்வாறு தொட்டால் அவள் விழித்து விடுவாளோ என்ற பயமும் சந்தேகமும் கூடவே தோன்றின. துங்கும் பெண்ணின் கூந்தலைத் தொடுவதனால் அவள் உணர்வு விழிப்பு பெறப்போவதில்லை என்று துணிந்தான் அவன்.

பெண்ணின் கூந்தல் அழகு, அதன் மென்மை, இனிமை முதலியன பற்றியும், அதை விரும்புவதாலும், பிடித்து இழுப்பதாலும் ஏற்படக் கூடிய மகிழ்ச்சி பற்றியும் அவன் எங்கேங்கோ எவ்வளவு எவ்வளவோ படித்திருந்தான். அதுவரை அப்படியொரு சுகானுபவம் அவனுக்கு ஏற்பட்டதில்லை. இப்போது அதை அனுபவித்து உணர்ந்தால் என்ன? அவன் மனக்குறளி துண்டியது.

நெஞ்சில் சிறு பதைப்புடன், அவன், நெடுகிலும் பார்வை எறிந்தான். எல்லோரும் அயர்ந்து துயிலில் ஆழ்ந்து கிடந்தனர்.

ஆயினும் அவன் சிறிது தயங்கினான். பிறகு துணிந்து விரல்களைத் தன் மடிமீது கிடந்து சடைப் பின்னல் மீது வைத்தான். லேசாகத் தொட்டு, யாரும் கவனிக்கவில்லை என்று நிச்சயம் செய்துகொண்ட பிறகு அன்பாக, விருதுவாகத் தடவினான். பின்னலின் நுனியிலிருந்து, அகலமான மேல் பகுதிவரை மெதுவாக வருடினான். அவனுக்கு ஏதோ ஏமாந்து விட்டது போன்ற உணர்வே ஏற்பட்டது.

துங்கிக் கிடக்கும் எவளோ ஒருத்தியின் துவண்டு கிடக்கிற கூந்தலைத் தொடுவதிலோ தடவிக் கொடுப்பதிலோ எவ்விதமான இன்பமும் இல்லை என்ற ஞானோதயம் அவனுக்கு உண்டாயிற்று. உணர்வற்ற அந்த 'மயிர்க்' கற்றை'யை எடுத்துத் தூங்கும் தலையருகே தலையணை மீது போட்டான்.

நெளிந்து துவளும் பின்னல் பார்வைக்கு இனிய அழகுக் காட்சியாகத்தான் விழுந்து கிடந்தது.

அவன் அந்தப் பின்னலையும், அது அணி செய்ததலையையும், அமைதியாய், உறங்கிய முகத்தையும் பார்த்தபடியே இருந்தான். அவனது மனம் அமைதியாய் இல்லை. அது குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

விழித்த நிலையில் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் கண்களோடு, முகத்தோடு, பெண் பார்த்துக் கொண்டிருக்க, அவளுடைய கூந்தலை விரல்களால் நீவுவதிலும், பின்னலைப் பிடித்து இழுப்பதிலும், சேட்டைகள் செய்வதிலும்-அதனால் அவள் காட்டுகிற ஆனந்தம், உளக் கிளர்ச்சி, உணர்வுச் சலனம்  காரணமாக தடவுகிறவனுக்கு இன்ப உணர்வும் மகிழ்ச்சியும் ஏற்படக்கூடும். அவ்வாறு இனிய சிறு விளையாட்டுக்கு உள்ளாகிறவள் உமது காதலுக்கு உரியவளாகவும், உம்மிடம் ஆசை காட்டுகிறகளாகவும், பிணங்கியும் இணங்கியும் விளையாடும் இனியையாகவும் இருந்தால், இந்தத் தடவல், நீவல். வருடல் வகையறாக்களின் சுவையும் ரசனையும் அதிகரிக்கும்.

இந்த விதமாக ரகசியம் பேசியது சிதம்பரத்தின் உள்ளம்.

நேரமோ நள்ளிரவு. இடம், குறுகலான அறை போன்ற ரயில் பெட்டி. சுற்றிலும் ஆட்கள் உண்டு என்றாலும் அவர்களோ தூக்கத்தால் உணர்விழந்து விட்ட கட்டைகள் எதிரே வசியப்போஸ் காட்டிக் கிடக்கும் பளபளப் பட்டாடை மினு:மினு மங்கை, அருகிலே மிக நெருக்கத்தில் - போதிய கவர்ச்சி உடைய இளம் பெண்ணின் தூக்கநிலை.

மூடியிருக்கும் அவள் கண்களும், மூடுண்ட நிலையில் தென்பட்ட கை விரல்களும், ஒத்த வளைகளை அணிந்த தந்தநிறக் கையும் அதிகக் கவர்ச்சியுடன் விளங்கின.

இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டிருந்த இளைஞனின் மனம் இஷ்டம்போல் கனவுகளையும் நினைவுகளையும் சிருஷ்டித்துக் களித்தது. எதிர் பெஞ்சில் தூங்கிக் கிடந்த இளம் பெண்ணின் மாம்பழக் கன்னங்களைத் தடவிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை அவன் உள்ளம் விதைத்தது.

மனம் ஒரு குரங்கு என்றால், சிறு குறும்புகள் செய்வது அதன் இயல்பாகத்தானே அமையும்,

ஆனாலும், சிதம்பரம் துணியவில்லை. அவன் தூங்கவும் இல்லை.

வண்டி ஒடிக் கொண்டே இருந்தது.