நல்ல தோழிதான்/மெத்தப் படித்தவர்
மெத்தப் படித்தவர்
புத்தகங்கள்தான் சுந்தரமூர்த்தியின் உலகம். எப்போதும் அவர் புத்தகமும் கையுமாகத்தான் காணப்படுவார். எல்லா அறைகளிலும், மேஜை மீதும், படுக்கிற கட்டிலில்கூட, பல வகையான புத்தகங்கள் இருக்கும். நினைத்தபோது எடுத்துப் படிப்பதற்கு வசதியாக,
சாப்பிடுகிறபோது கூட சுந்தரமூர்த்தி இடது கையில் புத்தகத்தைப் பிடித்தபடிதான் சாப்பிடுவார். படிப்பது அவருக்குப் பொழுதுபோகு இல்லை. அது அவருடைய வேலை என்றுகூடச் சொல்ல முடியாது. அதுதான் அவரது வாழ்க்கை; அது அவரது உயிர்மூச்சு.
நண்பர்கள் வந்தால் அவர்களோடு அவர் உற்சாகமாகப் பேசி மகிழ்வார். பெரும்பாலும் பேச்சு புத்தகங்களைப் பற்றியும், பத்திரிகைகளைப் பற்றியுமே இருக்கும், நாட்டுநடப்பு, சமூகப் பிரச்சனைகள், அரசியல்கட்சி விவகாரங்கள் முதலியன பற்றியும் அவர் காரசாரமாகக் கருத்துக்கள் கூறுவார்.
உலகத்தில் உள்ள எந்த விஷயம் குறித்தும் சுந்தரமூர்த்தி ஓங்கி அடித்துப் பேசுவார். வானத்தின் கீழ் நிலவுகிற சகல விஷயங்கள் பற்றியும் அவர் தீவிரமான கருத்துக்கள் தெரிவிக்கத் தயங்க மாட்டார். பிரமுகர்கள், தலைவர்கள், முக்கியமானவர்கள் பேசுகிற பேச்சுக்கள், எழுதுகிற எழுத்துக்களை, எல்லாம் படித்துவிட்டு, அவற்றை அங்கீகரித்தோ அல்லது மறுத்தோ, பத்திரிகைகளுக்குக் கடிதங்கள் எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.
சுந்தமூர்த்தி ஒரு இன்டலெக்சுவல் - நல்ல அறிவாளி-சரியான அறிவுஜீவி என்று அவரை அறிந்திருப்பவர் குறிப்பிடுவது வழக்கம். அதில் அவருக்கும் பெருமைதான்.
“சுந்தரமா? அவனுக்கு என்ன தெரியும்? சும்மா புத்தகங்களை வச்சுப் படிச்சுக்கிட்டிருக்கத் தெரியும், மற்றபடி அவன் ஒரு இழவுக்கும் லாயக்கில்லை!”
இது சுந்தரமூர்த்தியின் உறவினர்களுடைய அபிப்பிராயம்.
அவர் மனைவி மீனாட்சிகூட அவருடைய படிப்பையும், சகல பிரச்னைகள் சம்மந்தமான கருத்து உலுப்புதல்களையும் பெரிதாக மதிப்பதில்லை.
"கடைக்குப் போயி நல்ல சாமானாப் பார்த்து வாங்கி வரத் துப்பில்லை. எப்பத் தேங்கா வாங்கி வந்தாலும் அழுகலாகத்தான் இருக்கும். காயைக் கொட்டிப் பார்த்து நல்ல தேங்காயா எடுக்கத் தெரியாது. கடைக்காரன் கொடுத்ததை வாங்கிக்கிட்டு வந்து நிற்பாக, காய்கறிகளையும் பார்த்து வாங்க சாமர்த்தியம் போதாது. சொத்தை கொள்ளை வாடல் வதங்கல்களை எல்லாம் கடைக்காரங்க இவக தலையிலே கட்டிடுவாங்க. வி லையும் அவன் கேட்டதைக் குறைக்காமல் கொடுத்துடுவாக, பேரம் பேசத் தேரியாது...”
இப்படி எவ்வளவோ அடுக்குவாள் அவள்.
சிலசமயம் சில்லறையைச் சரியாக எண்ணிப் பார்த்து வாங்காமல், கடைக்காரன் கொடுப்பதை அப்படியே வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு விடுவார் சுந்தரமூர்த்தி. வீட்டில் வந்து கணக்குப் பார்க்கையில் காசுகள் குறையும் செல்லாத நாணயங்கள் கிழிந்த நோட்டுகள் இருக்கும். அதற்காக அவர் மனைவி சண்டை பிடிப்பாள்.
ஏதாவது சாமான் வாங்க, அல்லது ஏதோ முக்கிய விஷயமாக, அவர் கிளம்பிப் போவார். வழியில், ரொம்பவும் வேண்டியவர் எவராவது எதிர்ப்பட்டு விடுவார். அவரோடு அந்த இடத்திலேயே நின்று, புத்தகங்கள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் பற்றி ஆர்வமாகப் பேசத் தொடங்கி விடுவார். நேரம் போவதே தெரியாது. பிறகு வீட்டுக்குத் திரும்புவார்.
மனைவி விசாரிக்கும்போதோ அல்லது வெகுநேரம் கழித்துத் தானாகவோ, அடடா, மறந்தே போனேனே? என்று அந்த முக்கிய காரியம் அவருக்கு நினைப்பு வரும். வருத்தமும் மனசில் எழும். என்ன செய்வது! அவருக்கு மறதி அதிகம்.
அன்றும் வழக்கம்போல் சுந்தரமூர்த்தி ஒரு பெரிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.
“என்னய்யா, எப்படி இருக்கிறீர்?” என்று கேட்டபடி, அவருக்கு வேண்டியவர் ஒருவர் வந்து சேர்ந்தார்.
நமசிவாயம் என்று பெயர். கொஞ்சம் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர், அபூர்வமாக என்றைக்காவது ஒருநாள் வருவர். வந்தால், மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்.
அவர் சுந்தரமூர்த்தி கருத்துக்களை மறுத்துப் பேசுவதில் உற்சாகம் காண்பவர். தீவிரமாக விவாதிப்பார். அன்றும் அப்படித்தான் நடந்தது.
நமசிவாயம் வந்ததும் சொன்னார்:
“உங்களிடம் போன வருசம் நான் ஐநூறு ரூபாய் அவசரத்துக்கு வாங்கிப் போனேன், கடனாகவே இருக்கட்டும். உரிய வட்டி சேர்த்துத் தந்துவிடுவதாகச் சொன்னேன் அல்லவா? இன்றைக்கு உங்க பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாம்னு வந்திருக்கேன், கொஞ்சம் பணம் கிடைச்சுது, கடனைத் திருப்பித் தந்துவிடனுமில்லையா? வட்டி என்ன ஆச்சுன்னு கணக்குப் பார்ப்போம். நோட்டிலே எழுதி வச்சிருப்பீகளே? அதை எடுங்க!”
“இருமய்யா, வீட்டிலே அவன் மார்க்கெட்டுக்குப் போயிருக்கிறா. வரட்டும். கணக்கு வழக்கு எல்லாம் அவள் டிபார்ட்மெண்டுதான். குறிச்சு வச்ச நோட்டு அவகிட்டேதான் இருக்கும்” என்று சுந்தரமூர்த்தி சொன்னார்.
பிறகு, நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைச் செயல்கள் பற்றிக் காரசாரமாகப் பேசலானார்.
நமசிவாயமும் கருத்துத் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளின் போக்குகள், சினிமா, பத்திரிகை மற்றும் மக்களின் தன்மைகள் பற்றி எல்லாம் இரண்டு பேரும் உற்சாகமாகப் பேசினார்கள்.
இடையில், மனைவி வீட்டுக்கு வந்து அடுப்படி வேலையில் ஈடுபட்டு விட்டதுகூட சுந்தரமூர்த்திக்குத் தெரியாது. மரபுக் கவிதை செத்துவிட்டது என்று அவர் ஓங்கி அடித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
மரபுக் கவிதை சாகவில்லை; அது சாகவும் சாகாது என்று நமசிவாயம் தீவிரமாக மறுத்துப் பேசினார்.
இப்படி யதார்த்த இலக்கியம் பற்றியும், புதுக்கவிதையின் தேக்க நிலை குறித்தும் இருவரும் சூடாக விவாதித்து முடித்தார்கள்.மணி ஓடியிருந்தது.
நமசிவாயம், “அட, நான் வந்து ரொம்ப நேரமாயிட்டுதே! கீழ ரதவீதியிலே ஒருவரைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தேன். நான் வர்றேன்’ என்று கூறி அவசரமாக விடை பெற்றுச் சென்றார்.
தமது விவாதத் திறமையையும், தம்முடைய கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னதையும் எண்ணி மகிழ்ந்து போனார் சுந்தரமூர்த்தி. சட்டென அவர் மூளையில் ஒரு அதிர்வு ஏற்பட்டது.
நமசிவாயம் எதுக்காகவோ வந்தேன்னு சொன்னாரே ஆங், கடன் பணத்தை வட்டியோடு திருப்பித் தர வந்தேன்னார்... அடடா, பணத்தை அவர் கொடுக்கவே இல்லையே...
அவர் உள்ளத்தில் ஒரு உளைச்சல்...
‘அடடா, பண விஷயம் மறந்தே போச்சே, இனிமே அவர் எப்ப வருவாரோ, அல்லது வராமலே போயிடுவாரோ?
உண்மையாகவே அவர் வருத்தப்பட்டார். பணம் இனி திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற வருத்தத்துக்கு மேலாக ஒரு உறுத்தல் அவருக்கு.
—இது தெரிந்ததும் மீனாட்சி பிடிபிடின்னு பிடிச்சு சரியான கொடை கொடுப்பா. அவளுக்கு ரொம்பக் கோபம் வரத்தான் செய்யும்.
நீண்ட பெருமூச்செறிந்தார் சுந்தரமூர்த்தி