நல்ல தோழிதான்/ராஜப்பாவின் வெற்றி

விக்கிமூலம் இலிருந்து


ராஜப்பாவின் வெற்றி



திருநகரின் முக்கியமான புள்ளிகளில் ஒருவர் ராஜப்பா. ஊராரின் கவனிப்புக்கு உரிய, பலரது பேச்சுக்கும் பொருளாகத் திகழ்ந்த, நபர்களில் தனிச் சிறப்பு உடையவர் அவர்.

அப்படி விசேஷச் சிறப்புக்கு உரியவராகத் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டவர் அவர்.

அவருடைய ஆரம்பகாலப் பெயர் நடராஜன் என்றிருந்தது. அதைக் கூட ஸ்டைலாக நட்ராஜ் என்று அவர் ஆக்கிக் கொண்டிருந்தார். ஆதியிலேயே, அப்புறம் வீட்டாரும் உறவாரும் ஊராரும் அன்பாய், பிரியமாய், சுருக்கமாய் அழைத்து வந்த ராஜா என்பதையே தனது பெயர் எனப் புழக்கத்தில் விட்டிருந்தார், கொஞ்ச காலம்.

அதன் பிறகு, அவரது வியப்புக்கும் அபிமானத்துக்கும் இலக்காகியிருந்த நாடகச் சக்கிரவர்த்திகளும், நாடக கேசரிகளும், அப்பா என முடியும் பெயர்களைக் கொண்டிருந்ததால் கிட்டப்பா, செல்லப்பா, சுந்தரப்பா என்ற மாதிரி- அவரும் தன் பெயரை ராஜப்பா என்று திருத்திக் கொண்டார்.

அதற்கு மேலும் தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் எனும் ஆசை அவரைப் பிடித்து ஆட்டிவைக்காததால் அவருக்கு அந்தப் பெயரே நிலைத்து விட்டது. திருநகர் என்கிற சுமாரான அந்த டவுனில் ராஜப்பாவை தெரியாதவரே கிடையாது என்று உறுதியாகச் சொல்லலாம். திருநகரின் தேரோடும் திருவீதிகளில் இருமருங்கிலும் உள்ள வீடுகளில் வசித்தவர்களும், தெருவில் போய் வருகிற வேலை அல்லது பழக்கம் உடையவர்களும், ராஜப்பாவை ரொம்ப நன்றாக அறிவார்கள். பள்ளிக்கூடம், போகிறவர்களும், அலுவலகம் செல்கிறவர்களும், காலையிலும் மாலையிலும், தினசரி அவரைக் கண்டுகளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். அந்தியிலும், இரவிலும் சினிமா பார்ப்பதற்காக தியேட்டர்களின் முன்னே குழுமுகிற வழக்கத்தை உடைய நகர மைந்தரும் மகளிரும் ராஜப்பாவையும் கண்ணாறக் காண வேண்டிய ஒரு காட்சியாகக் கருதினார்கள்.

திருக்கோயிலின் திருவீதித் திருஉலா உற்சவமூர்த்திகள் தினத்துக்கு ஒரு அலங்காரமும், வேளைக்கு ஒரு கோலமும் பூண்டு, விதம் விதமான வாகனங்களின் மீது எழுத்தருளி, பக்தகோடிகளை மகிழ்விப்பது போலவே, ராஜப்பாவும் தினுசு தினுசாகத் தன்னை அலங்கரித்து கொண்டு தெருக்களில் உல்லாச பவனி வந்து திருநகர் மக்களை சந்தோஷப்படுத்தி வாழ்ந்தார்.

அவருக்கு வசதி நிறையவே இருந்தது. தாத்தா திரட்டி வைத்த சொத்து, அப்பா சம்பாத்தியம் பண்ணிச் சேர்த்த நிலபுலன்கள் ரொக்கம் எல்லாம் போக, அவரும் தலைமயிரை தியாகம் பண்ணி சொத்து சேகரிக்க இரண்டு மூன்று தடவைகள் வாய்ப்பு கிட்டியது.

அவருக்கு நெருங்கிய உறவினர் சிலருக்கு கொள்ளி வைக்க புத்திர பாக்கியம் இல்லாமல் போன காரணத்தி னாலே, ராஜப்பா கொள்ளி வைத்து மொட்டை போட்டுக் கொண்டார். பணத்தோடு பணமும்,  சொத்தோடு சொத்தும், வீடுகளும், பங்களாவும் வந்து சேர்ந்தன. இது போன்ற வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கப் பெறுகிறவர்கள் 'ஷோக்சுந்தரர்'களாகவும் 'ஜில்ஜில் மைனர்'களாகவும் நாளோட்டுவதில் ஆர்வம் காட்டுவது இயல்பு. இப்படிப்பட்ட 'பிள்ளையாண்டான்'களுக்கு நகைகள் காய்த்துத் தொங்குகிற மரங்கள் போன்ற-சொத்து பத்து உடைய சதை மூட்டைகளான அல்லது நோய் பற்றிய எலும்புக் கூடுகளான - பெரிய இடத்துப் பெண்களில் ஒருத்தி மனைவியாக வந்து சேருவதும் சம்பிரதாயம் தான்.

ராஜப்பாவுக்குப் பெண் கொடுப்பதுக்கென்று பெரிய இடங்கள் பல தேடி வந்தன.

நமக்கும் கல்யாணத்துக்கும் தோட்டம் துர!” என்று சொல்லி அனைவரையும் ஒதுக்கிவிட்டார் அவர், வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்க வேண்டியது தான் முக்கியம். ஐயாவாள் கல்யாணம் இல்லாமலே சந்தோஷமா இருக்க முடியுது. பின்னே என்னத்துக்கு கால்கட்டும், பொறுப்புகளும், பிச்சுப்பிடுங்கல்களும்!” என்று அவர் அடிக்கடி சொல்லலானார். ஆகவே, கல்யாணம் அவரை விட்டு ஒதுங்கிப் போய்விட்டது.

சைக்கிள், மோட்டார்பைக், அருமையான கார் எல்லாம் அவரிடம் இருந்தன. இவை போதாதென்று 'இரட்டைக் குதிரை சாரட்டு' ஒன்றும், ஜோரான ஜட்கா வண்டியும், கம்பீரமும் அழகும் எடுப்பும் மிடுக்கும் நிறைந்த மணியான குதிரைகளும் அவர் வைத்திருந்தார். அவற்றை எல்லாம் மெருகு குலையாத மினுமினுவெனப் பாதுகாத்து வருவதற்காக தனித்தனி ஆட்களும் ஏற்பாடு செய்திருந்தார்.  ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்றிலே உல்லாசமாக சவாரி செய்து திருநகரின் தெருக்களைச் சுற்றி வருவது ராஜப்பாவின் பொழுதுபோக்கு ஆகவும், வேலையாகவும் இருந்தது. மாலை வேளைகளில் மெதுவாக நடந்தும் ரதவீதிகளைச் சுற்றுவார். அவருடைய சித்தம் எந்த வேளையில் எந்தப் போக்கு போகும் என்று எவராலும் சொல்ல இயலாது.

ஒரு காலத்தில் தலைமுடியை நீள வளர்த்து கொண்டை போட்டு'த் திரிந்த ராஜப்பா, பிறகு நாடகக் கலை இளவரசுகளும், நாடக ராஜாக்களும் செய்து வந்தது போல் கழுத்து வரை தொங்குமபடியாக முடியை வெட்டி விட்டிருந்தார். பிறகு, அவரது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நாடக உலக அண்ணாச்சி ஒருவர் அழகான கிராப் வைத்துக் கொள்ளவும், இவரும் அவர் காட்டிய பாதையில் முன்னேறினார்.

இதெல்லாம் திருநகர் மக்களுக்கு வேடிக்கையாகவும் பேச்சுக்கு உரிய ரசமான விஷயமாகவும் அமைந்தன. அனைத்தினும் மேலாக, அவருடைய உடை அலங்காரக் கோலாகலங்கள்தான் ரொம்ப ரொம்ப கவனிப்புக்கு உரியனவாக மிளிர்ந்தன.

விதம் விதமான டிரஸ்கள் அணிந்தார் ராஜப்பா. நாடக மேடையில் பிரதான பாத்திரங்கள் எடுப்பாகவும் ஜோராகவும், பகட்டாகவும் பளபளப்பாகவம், ஸ்டைலாகவும் ஆடைகள் அணிந்து மினுக்குவது போல, அவர் வாழ்க்கை நாடகத்தில் உல்லாசமாகத் திகழும் நடிகராக நடந்து கொண்டார். மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதையோ, பிரமிப்பதை அல்லது பரிகசிப்பதையோ வியப்பதை அல்லது ரசிப்பதையோ அவர் பொருட் படுத்தவில்லை.

"அந்தக் காலத்து ராஜாக்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள் எல்லாம் தங்கள் இஷ்டம் போல், விதம்  விதமாக ஆடை அணிகள் உடுத்து உல்லாசமாக வாழ வில்லையா என்ன? இப்படி எல்லாம் டிரஸ் செய்து கொள்வது எனக்கு சந்தோஷம் தருகிறது. எனக்கு என் சந்தோஷம்தான் முக்கியம்’' என்று அவர் அடித்துச் சொன்னார், அப்புறம் அவரிடம் யார் பேசுவார்கள்?

திருநகரில் எப்போதாவது முகாமிடும் நாடகசபையின் நித்திய, நிரந்தர ஆதரவாளர் ராஜப்பா. நாடகத்தில் பெயர் பெற்ற நடிகர்கள் பலருக்கும் அவர் நண்பர். தனக்கு வேண்டிய நடிகர்களின் உபயோகத்துக்காக அவர் தனது காரை, சாரட்டை, ஜட்காவை உதவத் தயங்குவதில்லை பெயர் பெற்ற நடிகர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரிப்பவர்களின் முன்னிலையில் அவரும் இருந்தார். அவர்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டு, அவற்றைப் பெரிதுபண்ணி, வீட்டுச் சுவர்களில் மாட்டி அகமகிழ்ந்தார் அவர்.

ராஜப்பாவின் செயல்களுக்கு அடிப்படையாக ஒரு லட்சியம் இருந்தது என்பது ஒருநாள் திருநகர் மக்களுக்குப் புரிந்தது.

ராஜப்பா சினிமா நடிகர் ஆகிப் புகழ்பெற விரும்பினார்.

அவருடைய நட்புக்கும், வியப்புக்கும் இலக்காயிருந்த நாடகக்கலை மன்னர்கள் சினிமா உலகத்தில் புகுந்து, சிறிதாகவோ, பெரிதாகவோ தங்களுக்கு என்று ஒவ்வொரு இடம் பிடித்துக் கொண்டார்கள் என அறிந்தது முதல் ராஜப்பாவின் இந்த ஆசை அதிகரித்து விட்டது.

சினிமாமோகம் அவரையும் பிடித்து ஆட்டியது.

திரைப்படம் தயாரிக்கும் பிரபலமான நிறுவனங்களுக்கெல்லாம். ராஜப்பா கடிதங்கள் எழுதினார்.  வெவ்வேறு போஸ்களில் எடுக்கப்பெற்ற கவர்ச்சிகரமான போட்டோ பிரதிகளையும் இணைத்து அனுப்பினார். தனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால், அவர்கள் தயாரிக்கும் படம் பிரமாத வெற்றி பெறும் என்றும் உறுதி கூறினார்.

ஆயினும், அவருக்கு படத்தில் நடிக்கக் கூடிய சான்ஸ் எதுவும் தேடிவரவில்லை. பல கம்பெனிகள் பதிலே போடவில்லை. அவருக்கு வாய்ப்பு எதுவும் தருவதற்கில்லை என்று சிலர் வருத்தம் தெரிவித்து இருந்தார்கள்.

இதனால் எல்லாம் ராஜப்பா மனம் சோர்ந்து உட்கார்ந்துவிடவில்லை. அவர் வழக்கம் போல் சிங்காரித்துக் கொண்டு வீதிகளைச் சுற்றி வந்தார். கண்ணாடிமுன் நின்று ஆக்க்ஷன் பண்ணி: அகம் மகிழ்ந்தார். 'ஐயாவும் சினிமா ஆக்டராக ஜொலிக்காமலா போகப் போறாரு! எதுக்கும் ஒரு டைம் வரணும்' என்று தனக்குத் தானே 'நம்பிக்கை இன்ஜெக்க்ஷன்” கொடுத்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று ராஜப்பா திருநகரை விட்டுக் கிளம்பி விட்டார். சொந்தக் காரில்தான், சான்ஸ் நம்மை தேடி வராவிட்டால் நாமே சான்ஸை தேடிப் போக வேண்டியது! தான் என்று அவருடைய மனம் குரல் கொடுத்தது தான் காரணம் ஆகும்.

அவருக்குத் தெரிந்த - 'ரொம்பவும் வேண்டிய' - நாடக உலக அண்ணாச்சி ஒருவர் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு விட்டார் என்ற சேதி தெரிய வந்தது உடனடிக் காரணமாய் சேர்ந்தது.

மாநகரத்திலும் தனது தனித்துவங்களை விட்டுவிட விரும்பவில்லை ராஜப்பா. அருமையான சூழ்நிலையில் அமைந்திருந்த தனி வீடு ஒன்றை வாடகைக்கு  எடுத்துக் கொண்டார். ஒட்டல் சாப்பாடு ஒத்து வராது என்பதனால், எப்போதும் வீட்டில் சமையல் வேலை செய்து வந்த நளபாக நிபுணர் கொம்பங்குளத்துப் பிள்ளையை (கொம்பங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த பிள்ளைவாள் அவர்) உடன் அழைத்துச் சென்றார்.

கார் இருந்த போதிலும், அருமையான குதிரையும் ஜோரான வண்டியும் இருந்தால் அதன் மவுசே தனிதான் என்று எண்ணி, குதிரை வண்டியையும் மாநகருக்கு வரவழைத்திருந்தார் அவர்.

மாநகரில் சகவாசம் செய்தவாறே தனது படஉலக முற்றுகையை தீவிரமாக நடத்தி வந்தார் ராஜப்பா. பலரையும் போய் பார்த்தார். முக்கியமானவர்களை "ஃபிரண்டு புடிச்சு' வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். அவ்வப்போது தனது கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் போட்டுக் கொண்டே வந்தார்.

நடிக-படாதிபதியிடமும் அவ்வப்போது தன் ஆசையை அவர் தெரிவித்தார், 'அண்ணாச்சி, உங்க படத்திலேயே நமக்கு ஒரு சான்சு கொடுங்களேன்' என்று நேரடியாகவே கேட்டும் தீர்த்தார்.

அண்ணாச்சி தயங்கி, யோசிப்பது போல் நடித்தார். 'உங்களுக்கு என்ன வேடம் பிரதர் தர்றது? இது ரொம்பவும் சிக்கலான விஷயம்’ என்றார்.

"என்ன வேடம்னாலும் கொடுங்க. எதையும் நான் பிரமாதமாச் செய்வேன்!” என்று ராஜப்பா உற்சாகமாய் சொன்னார்.

உங்களுக்கு நடிப்பு அனுபவம் இல்லியே பிரதர். எதுக்கும் முன் அனுபவம் இருக்கணும்?' என்று உபதேசத்தில் இறங்கினார் அண்ணாச்சி.

 'ஹெஹ்ஹெஹ்ஹா!' என்று தனிப் பாணியில் சிரிப்பை உதிர்த்தார் ராஜப்பா. எனக்கு தொழில் அனுபவம் இல்லாமல் இருக்கலாம் அண்ணாச்சி. ஆனாலும் தினசரி வாழ்க்கையிலே நடிச்சு நடிச்சு... கண்ணாடி முன்னாலே நின்று மணிக்கணக்கிலே டிரெயினிங் எடுத்திருக்கேன். ரோடுகளிலே போகையிலே... அதெல்லாம் சொல்லுவானேன்? சான்சு கொடுத்துப் பாருங்க, அப்புறம் நீங்களே பிரமிச்சுப் போவீங்க நம்ம திறமைப் பார்த்து!’ என்றார்.

அண்ணாச்சி சொன்னார்: வேணாம்னா முதல் படத்திலே இப்படிச் செய்யலாம். கூட்டமா வர்ற காட்சிகளிலே கும்பலோடு கும்பலா நீங்களும் தலையைக் காட்டுங்க. ஒரு காட்சியலே ஹீரோவை வரவேற்கிற ஊர் பிரமுகர்களிலே ஒருத்தரா வாங்க. கோர்ட்டு சீனிலே சும்மா வந்து உட்கார்ந்திட்டுப் போகிற ஒரு நபராக- வக்கீலாகவோ யாராகவோ... இப்படி சில்லறை வேஷங்களிலே ஏதாவது தரலாம். நீங்க இவ்வளவு துரம் கேட்கறீங்களேன்னுதான் இது கூட....

சப்பென்று ஆகிவிட்டது ராஜப்பாவுக்கு, இப்படித் தான் 'சினிமா சான்ஸ்' கிடைக்கும் என்று அவர் கனவில் கூட எண்ணியதில்லை. சினிமாவில் நடிப்பது என்றால் ஒரு பீரோவாக - அட, அது கூட வேண்டாமய்யா! அதெல்லாம் ஸ்டார் நடிகர்களுக்கே நிரந்தரக் குத்தகை என்றே இருந்துவிட்டுப் போகட்டும்! அதுக்கு அடுத்த படி முக்கியமான ரோலில்- படத்தில் பெரும் பகுதி வந்து ஜமாய்க்கிறபடி - பலவிதமான திறமைகளையும் காட்டுகிற மாதிரியிலே- கதாநாயகனுக்கு நெருக்கடி சமயங்களில் துணைபுரிகிறவனாக, குதிரையில் ஜம்மென்று போய் வருவது, குத்துச் சண்டை, கத்தி வீச்சு இதுகளில் ஈடுபடுவது இப்படி, எத்தனையோ . வேலைத்தனங்கள் இல்லையா, அதை எல்லாம் செய்து பெயர் பெறும் சூரப்புலியாகத் திரையில் காட்சிதர வேண்டும். இதுதான் அவருடைய ஐடியா!

அந்த ஐடியா மூஞ்சியில் ஒரு 'கும்மாங் குத்து’ விட்டு நிலை குலைய செய்வதாக இருந்தது அண்ணாச்சியின் பேச்சு. அவருடைய மூஞ்சியிலேயே ஒரு அறை விட்டது போல தோன்றியது ராஜப்பாவுக்கு. அண்ணாச்சி- ரொம்ப வேண்டியவர்! அவரா இப்படிப் பேசுவது?

சினிமாவில் நடிப்பது என்றால், பகட்டாக, மிடுக்காக, கம்பீரமாக, முதன்மையாக, அழகாக, அலங்காரமாக-எப்படி எப்படி எல்லாம் தோன்ற முடியும் என்று ராஜப்பா எண்ணியிருந்தார்? ஜம்மென்று டிரஸ் பண்ணிக் கொண்டு, தெருக்களில் பவனி வந்த போது குதிரை மீதமர்ந்து டாக்-டாக்-டாக் எனக் குளம்பொலி சிதற அவர் ஜோராகத் திரிந்த போது என்னென்ன ஆசைக் கோட்டைகள் கட்டி இறுமாந்திருந்தார்!. அந்தக் கனவுகளை, நினைப்புகளை, ஆசைகளை எல்லாம் பொக்கெனப் போகும்படி பண்ணிவிட்டாரே பாவி மனுஷன்....!

பெருமூச்செறிந்தார் ராஜப்பா. தனது எண்ணத்தைச் சொன்னார்.

அண்ணாச்சி முறுவல் பூத்தார். அப்படி எல்லாம் நடக்கணுமின்னா நீங்களே சொந்தமாப் படம் புரட்யூஸ் பண்ண வேண்டியதுதான்!” என்றார்.

ஆப்படியே புடிச்சாலும் டிஸ்ட்டிரிபியூட்டர்கள் கிடைக்கணுமே? சார்வாளே டிஸ்ட்ரிபியூட் பண்ண வேண்டியதுதானே என்பீர்களோ அண்ணாச்சி? அப்படியே டிஸ்ட்ரிபியூஸ் பண்ணினாலும் அங்கங்கே தியேட்டர்கள் கிடைக்கணுமே? ஊருக்கு ஊர் தியேட்டர்களுக்குப் பணம் கொடுத்து சாரே பிக்சரை ரன்  பண்ணச் செய்ய வேண்டியதுதான்னு ஐடியா கொடுப்பீங்களோ அண்ணாச்சி? என்று 'புரட்டக்க்ஷன் மானேஜர் ஆகப் பணிபுரிந்த 'தம்பிச்சி' பேசினார்.

ராஜப்பாவுக்கு ஆத்திரம் பொங்கியது, ஆனாலும், அடக்கிக் கொண்டார்.

சீக்கிரமே அங்கிருந்து நகர்ந்தார்.

அப்படியே தியேட்டர்களிலே படத்தை காட்டினாலும், இவரே புடிச்ச படத்தைப் பார்க்க ஜனங்க வரணுமே அண்ணாச்சி? ஆளுகளுக்கும் பணம் கொடுத்துப் பார்க்க வைப்பாருன்னு சொல்லு வீகளோன்னு கேட்க நெனச்சேன். ஒரே அடியா மனுசனை டவுன் பண்ணப்படாதுன்னு இருந்துட்டேன் என்று 'தம்பிச்சி' சொன்னது ராஜப்பா காதில் விழத்தான் செய்தது.

அதைத் தொடர்ந்து அண்ணாச்சி வாய்விட்டுச் சிரித்த பலத்த ரசனைச் சிரிப்பு அவருக்கு வயிற்றெரிச்சல் உண்டாக்கியது.

மோசக்காரப் பயலுக ஏமாத்துக்காரனுக... தங்களைத் தாங்களே பெரிசா, பிரமாதமா நினைச்சுக்கிட்டுத் திரிகிறவங்க, மத்தவங்களை கேவலமா நினைக்கிற வேசகாரங்க....

இப்படி அவர் மனம் குமுறிக் குமைந்தது.

நமக்குத் தெரிந்தவர், ரொம்ப வேண்டியவர், நேருங்கிய நண்பர் என்கிற நிலையிலே இருக்கிற அண்ணாச்சியே இப்படி அபிப்பிராயப்பட்டால், மற்ற வங்க என்னதான் நினைக்கமாட்டாங்க, பேச மாட்டாங்க?

இவ்வாறு கேட்டது அவர் அறிவு. சரி. போகுது போ. நடிப்பும் வேண்டாம். பட சான்சும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார் ராஜப்பா.

என்றாலும், அவர் மிடுக்கான குதிரை பூட்டிய வண்டியில் அடிக்கடி ஸ்டுடியோ பக்கம் போய்க் கொண்டுதான் இருந்தார். பட உலக நண்பர்களை அழைத்து பார்ட்டிகள் கொடுத்துக் கொண்டு தானிருந்தார். திடீரென்று தன் போக்குகளை மாற்றிக் கொள்ளக்கூடாது என்ற நினைப்பு அவருக்கு.

ராஜப்பா 'அர்ச்சுன ரசனை' உடையவர் தானா 'கிருஷ்ணலீலைகள்' பண்ணி மகிழும் மனத்தவர்தானா என்பது பற்றி திருநகர்வாசிகள் கருத்து பரிமாறியதில்லை. அவருடைய இதர குணாதிசயங்கள் அவர்களை பிரமிக்க வைத்திருந்ததனால், அவரது மன்மதத் தனயான நாட்டங்களில் மக்கள் கவனம் செலுத்த வில்லை போலும்.

அந்த விஷயத்திலும் அவர் ரசிகராகத்தான்--அந்தக் கலையின் சுவைஞராகவே- இருந்தார் என்பது அவருடைய நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும்.

மாநகரத்தில் ராஜப்பா பழகிய வட்டாரங்களில் அவருடைய அந்த ரசஞானத்துக்கு நல்ல விருந்து கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருந்தன.

அவருடைய குதிரை வண்டி காம்பீர்யத்தையும், அலங்கார நடவடிக்கைகளையும், பார்த்து, வியந்து, ரசித்து, மகிழ்ந்து போனவர்களில் குமாரி கல்யாணியும் ஒருத்தி. அவரது கவனிப்புக்கும் அபிமானத்துக்கும் வள்ளன்மைக்கும் இலக்கானவளும் கூட.

அவளும் சினிமா மோகத்தினால் ஈர்க்கப்பட்டு, சில ஸ்டார் நடிகையர் போல் தானும் உயர்ந்து, பணமும்  புகழும் படாடோப வாழ்வும் பெற்றுவிட முடியும் என நம்பி, அந்த உலகத்திலுள் பிரவேசித்தவள் தான். ஏமாற்றம் அவளை ஆட் கொண்டது. பிறகு பிழைப்புக்காக அதில் ஒட்டிக் கொண்டிருந்தாள். கும்பலில் வருவாள்; தோழியாய் குதிப்பாள்; நாட்டியக் குழுவில் ஆட்டம் காட்டுவாள். எப்படியோ ஏதாவது சான்ஸ் கிடைத்துக் கொண்டுதானிருந்தது. அவளுக்கு.

ராஜப்பா அவள் ஒளியில் இறங்கிய விட்டிலானார். அவர் வீட்டுக்கு கல்யாணி அடிக்கடி வந்து போனாள். பரஸ்பரம் ஒருவர் மனசை ஒருவர் நன்கு புரிந்து கொண்டரர்கள்.

நீ என்னோடு இருந்து விடேன், கல்யாணி. இந்தப் பிழைப்பு உனக்கு என்னத்துக்கு? நாம திருநகருக்குப் போய் விடலாம்' என்று ராஜப்பா ஒரு நாள் அவளிடம் கூறினார்.

தான் ஒருநாளும் ஸ்டார் ஆகப்போவதில்லைஇரண்டாவது ஹீரோயின் தரத்துக்குக் கூட உயரப் போவதில்லை. என்பதை உறுதியாக உணர்ந்திருந்த "எக்ஸ்ட்ரா நடிகை' கல்யாணி அவரது கோரிக்கைக்கு இணங்கினாள்.

வாழ்க்கையில் ஒரு பற்றுதலும், பாசமும், பிடிப்பும், நிரந்தரமான குடியிருப்பும், குடித்தனப் பாங்கான ஒரு அந்தஸ்தும் தனக்கு சித்திக்குமே என்ற எண்ணம் அவள்ளுக்கு.

திருநகரைப் பிரிந்து மாநகருக்கு வந்து சேர்ந்த ஏழாவது மாதத்தில் தனது லட்சிய நோக்கில் தோல்வி உற்றவராய் தன் ஊருக்கே திரும்பினார் ராஜப்.பா. குதிரையையும் வண்டியையும் விற்று விட்டார். காரில் தான் பயணம் செய்தார். கூடவே கல்யாணியும் இருந்தாள்,  அவள் அழகி. இனியவள். சொக்கும் சுகவிருந்து, இன்ப ஊற்று. அன்புத் துணைவி. இதை ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்ந்தார் அவர்.

"என்னய்யா, உம்ம நோக்கிலே நீர் வெற்றி அடையலே போலிருக்கே?' என்று அவருடைய திருநகர் நண்பர்கள் ராஜப்பாவிடம் துக்கம் விசாரித் தார்கள்’.

அவரோ கவலை துளிகூட இல்லாதவராய் உல்லாசமாய் சிரித்தார்.

‘ஒரு வகையில் நஷ்டம், இன்னொரு விதத்தில் லாபம் என்று சொல்லலாம். பிசினஸில் பணம் நட்டமானால், அறிவுக் கொள்முதல் லாபம் ஆகும். எனது கலை ஈடுபாட்டில் என்னுடைய நடிப்பு ஆசை தோல்வியில் முடிந்தது. அது சரி, ஆனால் அந்த முயற்சி எனக்கு வேறொரு வகையில் வெற்றியாக முடிந்துள்ளது. ஈடு இணையில்லாத அருமைக் கல்யாணி எனக்கு இனிய தோழியாய், துணையாய் கிடைத்திருக்கிறாளே! அது பெரிய லாபமில்லையா? என்று மிகவும் மகிழ்ந்து போனார் அவர்.

தனிப்பட்ட முறையில் ராஜப்பாவுக்கு இன்னொரு சந்தோஷமும்கூட. குமாரி கல்யாணி முகச் சாயலில், இனிய சிரிப்பில், கன்னம் குழிதலில் அவருக்கு மிகுதியும் பிடித்திருந்த ஸ்டார் நடிகை ஒருத்தியை ஒத்திருந்தாள்.