நவகாளி யாத்திரை/இந்துஸ்தானி விழா

விக்கிமூலம் இலிருந்து
இந்துஸ்தானி விழா

மாம்பலம் பிரக்தியாதி அடைந்திருப்பதற்கு ஏற்கெனவே மூன்றுவித காரணங்கள் உண்டு.

முதலாவது, ராஜாஜியின் வாசஸ்தலம் அங்கே அமைந்திருப்பது.

இரண்டாவது, ராமகிருஷ்ண வித்யாலயம் நடைபெறுவது.

மூன்றாவது, அடியேனுடைய குடியிருப்பு!

இப்போது நாலாவது காரணமாக மகாத்மாஜியின் விஜயத்தினால் மாம்பலத்தின் மகிமை பன்மடங்கு பெருகிப் பாரெங்கும் பரவிவிட்டது. காந்திஜி வந்தது முதல் தியாகராய நகரின் தோற்றமே அடியோடு மாறிப்

போய்விட்டது. அந்த நகரின் வீதிகள், சாலைகள் எல்லாம் பாதாள உலகத்தில் அமுங்கிப் போனது போலவும், அதன் மீது புதிய நகரம் ஒன்று நிர்மாணமாகிவிட்டது போலவும் தோன்றுகிறது.

தியாகராய நகரின் தென்கிழக்குப் பிரதேசத்துக்கு 'ஹிந்துஸ்தானி நகரம்' என்று நாமம் சூட்டியிருக்கிறார்கள்.

தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபையைச் சுற்றியுள்ள மைதானங்கள், வெட்டவெளிகள், காலிமனைகள் ஆகிய எல்லா இடங்களையும் பந்தல் போட்டு மறைத்து விட்டிருக்கிறார்கள்.

மேற்படி ஹிந்தி பிரசார சபைக்கும் அதைச் சேர்ந்த ஹிந்துஸ்தானி நகரத்துக்கும் போகும் முக்கிய வீதிகளின் பிரவேச வாசல்களில் 'பஜாஜ் கேட்', 'கஸ்தூரிபா கேட்' என்ற பெயர்களில் மண்டபங்கள் வேறு அமைத்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் மாம்பலத்தின் தோற்றத்தையும், பெயரையும் மாற்றி நம்மையெல்லாம் திகைத்துத் திக்குமுக்காடச் செய்து வருகிறவர்கள் வேறு யாருமில்லை; தட்சிண பாரத ஹிந்துஸ்தானி பிரசார சபையினர்தான்! தங்களுடைய வெள்ளிவிழாக் கொண்டாட்டத்துக்காகவும், மகாத்மாஜியின் சென்னை விஜயத்துக்காகவுமே இம்மாதிரியெல்லாம் செய்திருக்கின்றனர்.

சாதாரண நாட்களிலேயே மாம்பலத்தில் புகுந்து ஒரு குறிப்பிட்ட இடம் போய்ச் சேருவதென்றால் பிரம்மப்பிரயத்தனமாகிவிடும். இப்போதோ சொல்ல வேண்டியதே இல்லை. ஆனால், நல்ல வேளையாக பொதுமக்கள் இத்தனை சிக்கல்களையும் மீறி மகாத்மாஜியின் பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்கு இயற்கையாகவே ஆண்டவன் ஒரு வசதியை அளித்திருக்கிறார்.

வெளியூர்வாசிகளோ, யாராயிருந்தாலும் ரயிலை விட்டு இறங்கியதும் பிரார்த்தனை நடக்கும் இடத்துக்கு எப்படிப் போவது என்று திண்டாடித் தெருவில் நிற்க வேண்டிய அவசியமே கிடையாது. ரயிலை விட்டு இறங்கினதும் அவர்கள் பாட்டுக்குக் கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு நின்ற இடத்திலேயே நின்றால் போதும். பின்னால் அலைமோதிக் கொண்டு வரும் ஜன சமுத்திரமானது அவர்களை அப்படியே முன்னால் தள்ளிக் கொண்டு தன்னால் போய்ச் சேர்த்துவிடும். அப்புறம் கண்களைத் திறந்து பார்த்தார்களானால் தாங்கள் மகாத்மாஜி பிரார்த்தனை நடத்தும் இடத்தில் இருப்பதைக் காண்பார்கள்.

மகாத்மாஜியின் விஜயத்தினால் மாம்பலம் சில தினங்களாகத் தேர்த் திருவிழா பட்டபாடாயிருந்து கொண்டிருந்தது. காப்பி ஒட்டல்களில் கொடுக்கப்படும் காப்பியிலிருந்தே மாம்பலத்தில் கூடும் அன்றாடக் கூட்டத்தின் கணக்கைச் சுலபமாக அறிந்துகொண்டு விடலாம்.

காப்பி கறுப்பு வர்ணமா? சரி, ஐம்பதினாயிரம் பேர்! கொஞ்சம் தண்ணிர் கலந்த வெண்மை நிறமா? எழுபத்தைந்தாயிரம் பேர் நீர் நிறைந்த வெறும் திரவ பதார்த்தமா? சரி, லட்சம் பேர் இப்படியே கணக்கிட்டு விடலாம்.

தினசரி பகல் ஒரு மணிக்கெல்லாம், ஜனங்கள் வேங்கடநாராயண ரோடு, தணிகாசலம் செட்டி ரோடு, போக் ரோடு, தியாகராஜா ரோடு ஆகிய எல்லா ரோடுகளின் வழியாகவும் பிரார்த்தனை ஸ்தலத்தை நோக்கித் திரள் திரளாகவும், கும்பல் கும்பலாகவும் போகும் காட்சியானது ஏதோ ஜன வெள்ளம் பெருகும் நதியானது உடைப்பு எடுத்துச் சாலைகளின் இரு கரையும் புரண்டு ஓடுவதைப்போலத் தோன்றுகிறது.

முதல் நாள் பிரார்த்தனைக்குச் சுமார் பதினைந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். பிரார்த்தனைக்கு வரும் கூட்டம் நாளடைவில் பதினைந்தாயிரத்திலிருந்து லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று கணக்கிலடங்காமல் போய்விடவே, பிரார்த்தனையைப் போக் ரோடு மைதானத்திலிருந்து விஜயராகவாச்சாரி ரோடுக்கருகிலுள்ள மாபெரும் வெட்டவெளிக்கு மாற்றும்படி ஆகிவிட்டது.

புதன்கிழமை மாலை பிரார்த்தனைக்குச் சுமார் ஒரு லட்சம் பேர் கூடியிருந்தார்கள். அவ்வளவு ஜனங்களும் மூன்று மணியிலிருந்தே மகாத்மாஜியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து 'வருவார் வருவார்' என்று வழிமேல் விழி வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆயிற்று, மணி நாலு ஆகிவிட்டது. நேரம் ஆக ஆகக் கூட்டத்தின் ஆரவாரம் வர வர அதிகமாகிக் கொண்டே போயிற்று. இந்தச் சமயம் பார்த்து ராஜாஜி மேடை மீது ஏறி வந்தார். ஒலி பெருக்கியின் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு, "எல்லோரும் நிச்சப்தமாயிருக்க வேண்டும். எழுந்து நிற்கக் கூடாது. மகாத்மாஜி வந்துவிட்டால் உங்களுக்கெல்லாம் உங்களை அறியாமலேயே பயித்தியம் பிடித்துவிடும். அப்போது அந்த வெறியை அடக்கிக் கட்டுப்பாடாகவும், அமைதியாகவும், ஒழுங்காகவும் இருக்க வேண்டும். எங்கே? இப்போது காந்திஜி வருவதற்கு முன்பாக ஒரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்து காட்டுங்கள் பார்க்கலாம்" என்றார். அவ்வளவுதான்; தெற்குப் பக்கம் உள்பட எல்லாத் திசைகளிலும் ஒரே நிச்சப்தம் குடிகொண்டது. (தெற்குப் பக்கத்தில்தான் ஸ்திரீகள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்!) அங்கங்கே சில தொண்டர்கள் ஹரிஜன நிதிக்காக ஜனங்களிடையே நின்று தகர உண்டியைக் குலுக்கிய சப்தம் தவிர வேறு பேச்சு மூச்சுக் கிடையாது. அப்போது ராஜாஜி மறுபடியும், 'மைக்' முன்னால் வந்து, "வாலண்டியர்கள் உண்டியைப் பலமாகக் குலுக்க வேண்டாம். அப்படிக் குலுக்கினால் உண்டியின் அடிப்பாகம் திறந்து கொள்ளும்" என்றார். அவ்வளவுதான்! உடனே ஒரு லட்சம் பேரும் தங்கள் மெளனத்தைக் கலைத்துக் கொண்டு குபிரென்று சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்குள் மணி ஐந்து ஆகிவிடவே, பிரார்த்தனையின்போது செய்ய வேண்டிய பஜனைக்குப் பயிற்சி நடத்தும் பொருட்டு மகாத்மாவின் பேரன் கனு காந்தியும், பஜாஜின் மகன் ராமகிருஷ்ண பஜாஜும் மேடைக்கு வந்து சேர்ந்தார்கள்.

பிரார்த்தனை என்றால், கனு காந்தி பாடுவதைப் பிரார்த்தனைக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பின்னால் கோஷ்டியாகப் பாட வேண்டியது. இதற்காக திரு. கனுகாந்தி மேடைக்கு அரை மணி முன்னதாகவே வந்து எப்படிப் பாட வேண்டும், எவ்வாறு தாளம் போட வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார். பஜனையின்போது மத்தளம் வாசிக்கிறார்கள். மத்தள வாத்தியத்துடன் சேர்ந்து எல்லோரும் கை தட்டுகிறார்கள்; பின்னர், 'ராஜா ராம் ராம் ராம், சீதாராம் ராம் ராம்' என்று பஜனை ஆரம்பமாகிறது. கனு காந்தி தாளம் போட்டுக் கொண்டே பாட, பின்னோடு சபையிலுள்ள ஆண் பெண் அனைவரும் கோஷ்டியாகச் சேர்ந்து பாடுகிறார்கள். இந்த அதிசயத்தை ஒரு நிமிஷ நேரம் கண்களை மூடியவாறே கவனித்துக் கொண்டிருந்தேன்.

திடுதிப்பென்று ஏதோ பெருத்த மழை வந்து விட்டதைப் போல் பிரமை ஏற்பட்டது. ஜனங்களின் கைத்தாளமே அவ்வாறு சரத்கால மாரியைப் போல் 'சடசட'வென்று கேட்டது.

மணி ஐந்தரை; அதோ மகாத்மாஜி வந்துவிட்டார். அவ்வளவு பேரும் மகாத்மாஜியின் தெய்வீகத் தோற்றத்தைக் கண்டு மந்திரசக்தியால் கட்டுண்டவர்கள் போல் மெய்ம்மறந்து போய்விட்டார்கள். மகாத்மாஜி நின்றபடியே இரண்டு நிமிஷ நேரம் எல்லோருக்கும் தரிசனம் தந்தார். தியானம், பிரார்த்தனை எல்லாம் முடிந்ததும் காந்திஜி ராம நாமத்தின் மகிமையைப் பற்றி சவிஸ்தாரமாகவும் சாங் கோபாங்கமாகவும் எடுத்துக் கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று சரியாக மூன்று மணிக்கு த.பா.ஹி.பி. சபையின் வெள்ளி விழா ஆரம்பமாயிற்று. மேற்படி வைபவத்துக்காக மாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்தி பிரசாரகர்கள் வந்திருந்தார்கள். ஹிந்தியை பரப்புவதற்கு இடைவிடாது சேவை செய்து வரும் முக்கிய பிரசாரகர்களுக்கு மகாத்மாஜி தம்முடைய கையாலேயே நீலக் கதர்ச் சால்வைகளை வழங்கினார். பின்னர், சுமார் நாற்பத்தைந்து நிமிட நேரம் ஹிந்துஸ்தானி பாஷையின் அவசியத்தைப் பற்றிப் பேசினார்.

"மனிதனுக்குப் பிராணவாயு எவ்வளவு அத்தியாவசியமோ, அதைப்போல இந்திய மக்களுக்கு ஹிந்துஸ்தானி பாஷையும் அவசியமாகும். ஹிந்துஸ்தானி கற்பதை ஒரு முக்கிய தர்மமாகக் கருத வேண்டும். ஹிந்துஸ்தானி மிகவும் சுலபமான பாஷை. புத்திசாலிகளான தென்னிந்தியர்களுக்கு ஹிந்தி கற்பது ஒரு பிரமாதமான காரியமல்ல" என்றார். காந்திஜி இப்படிக் கூறியதும் சபையில் உட்கார்ந்து கொண்டிருந்த நான் என்னை நானே ஒரு தடவை பெருமிதத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டேன். காரணம், ஒரு தென்னிந்தியன் ஆனபடியால் மகாத்மாஜி கூறியது எனக்கும் பொருந்துமல்லவா?

வெள்ளி விழாவுக்கு அடுத்தபடியாக நடந்த வைபவங்களில் முக்கியமாகப் பட்டமளிப்பு விழாவைத்தான் குறிப்பிட வேண்டும். அன்றைய விழாவுக்குத் தமிழ், கேரளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நாலு பாஷைப் பிராந்தியங்களிலிருந்து 'விசாரத்' பரீட்சையில் தேறியவர்களெல்லாம் பட்டம் பெறுவதற்காகப் பந்தலில் பிரசன்னமாயிருந்தார்கள். இவர்களில் பாதிபேருக்கு மேல் பெண்மணிகளாகவே காணப்பட்டனர்.

விழா ஆரம்பமாவதற்கு ஐந்து நிமிஷம் முன்னதாக, காந்திஜி, ராஜாஜி இன்னும் பட்டமளிப்பு விழாவில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீலக் கதர்ச் சால்வையை மேலே போர்த்திக்கொண்டு பந்தலுக்குள் பிரவேசித்தார்கள். ராஜாஜி, தக்கர்பாபா, சுசீலா நய்யார், பியாரிலால், திரு. சத்தியநாராயணா, கோபால் ரெட்டி முதலியோர் மேடை மீது பிரசன்னமாயிருந்தார்கள்.

ராஜாஜி, பட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து மகாத்மாஜியின் கையில் கொடுக்க, சத்திய நாராயண்ஜி பரீட்சையில் தேறியவர்களின் பெயரை வரிசையாகச் சொல்லி அழைக்க, காந்திஜி அவர்களுக்கெல்லாம் பட்டத்தை வழங்கிக்கொண்டு வந்தார்.

இடையே ஒரு பெண்மணி இடுப்பில் கைக்குழந்தையுடன் வந்து மகாத்மாஜியிடமிருந்து பட்டத்தைப் பெற்றுச் சென்றார். அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு ராஜாஜி எப்போதோ தம்முடைய பிரசங்கத்தில் குறிப்பிட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது:

"ஸ்திரீகள் பி.ஏ. பட்டம் பெறுவதைக் காட்டிலும் ஒரு குழந்தைக்குத் தாயார் என்ற பட்டம் பெறுவதுதான் முக்கியம்" என்று கூறியிருக்கிறார். ஹிந்தியில் 'விசாரத்' பட்டம் என்பது ஆங்கிலத்தில் பி. ஏ. பட்டம் பெறுவதற்குச் சமானம் என்று கூறப்படுகிறது.

எனவே, இந்தப் பெண்மணி ராஜாஜிக்கு முன்பாக இடுப்பில் கைக்குழந்தையுடன் வந்தபோது, "நான் ஏற்கனவே தாயார் பட்டம் பெற்றிருக்கிறேன்; இதோ இப்போது பி. ஏ. பட்டமும் பெற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்" என்று ராஜாஜிக்குப் பதில் கூறுவதைப்போல் இருந்தது.

காந்திஜி எல்லோருக்கும் பட்டம் வழங்கி முடிந்ததும் ராஜகுமாரி அமிர்தகெளரி தமது பட்டமளிப்பு விழாப் பிரசங்கத்தைப் படித்து முடித்தார்.

பட்டமளிப்பு விழாவைத் தவிர, மகாத்மாஜி மாதர்கள் மாநாட்டில் பேசினார்; ஊழியர்கள் மகாநாட்டில் பேசினார்; எழுத்தாளர்கள் மகாநாட்டில் பேசினார்; மாணவர்கள் மகாநாட்டில் பேசினார்; தினசரி மாலை வேளைப் பிரார்த்தனைகளின்போது பேசினார். அவர் சென்னையில் தங்கியிருந்தபோது தமக்கிருந்த இடைவிடாத அலுவல்களுக்கிடையே இன்னும் பல காரியங்களையும் கவனித்திருக்கிறார். பார்லிமெண்டு தூது கோஷ்டிக்குப் பேட்டியளித்திருக்கிறார். சென்னை கவர்னரைக் கண்டு எண்பது நிமிஷ நேரம் பேசியிருக்கிறார். மகாகனம் சீனிவாச சாஸ்திரி அவர்களை ஜெனரல் ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். பல அரசியல் பிரமுகர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் பேட்டியளித்திருக்கிறார். மகாத்மாஜியின் இத்தனை அலுவல்களுக்கும் ஒருவிதமான குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொண்ட

பெருமை தொண்டர் படையைச் சேர்ந்ததாகும். அதிலும் முக்கியமாகப் பெண் தொண்டர்கள் எடுத்துக் கொண்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த அரிய சேவையில் பெரிய மனிதர்கள் வீட்டுப் பெண்மணிகள் பலர் ஈடுபட்டு மஞ்சள் உடை தரித்து விழாவை மங்களகரமாக நிறைவேற்றி வைத்ததற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது.