நவகாளி யாத்திரை/மதுரையில் மகாத்மா
பிப்ரவரி முதல் தேதி வெள்ளிக்கிழமை இரவு 'ஸ்பெஷல்' ரயில் எழும்பூர் ஸ்டேஷனை விட்டுப் புறப்படுமுன் அது 'ஸ்பெஷல்' ரயில்தானா என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு எஞ்சின் பக்கம் போனேன்.
என்னைப் பார்த்து, "யார் நீ?" என்று கேட்டார் ஒரு ரயில்வே அதிகாரி.
"நான் யார் என்பது மிக்க ரகசியம்; நான் மகாத்மாஜியுடன் அவருடைய 'ஸ்பெஷல்' ரயிலில் போகப்போகிறேன் என்பதும் மிக மிக ரகசியம்; ஆகையால், இந்த ரயில் எங்கே போகிறது என்பதை மட்டும் சொல்ல வேணும்" என்று கேட்டுக் கொண்டேன்.
ரயில்வே அதிகாரியும் பதிலுக்கு, "இந்த ரயில் மகாத்மா காந்திக்காகப் போகும் 'ஸ்பெஷல்' என்பது ரொம்ப ரகசியம். இது பத்து மணிக்குப் புறப்படப் போகிறது என்பது அதைவிடப் பரம ரகசியம். ஆகையால், நான் இந்த ரகசியங்களையெல்லாம் உமக்குச் சொல்ல முடியாது" என்றார்!
எனவே, அந்த ரகசிய வண்டியில் நான் யாருக்கும் தெரியாமல் ஏறி, 'கப் சிப்' என்று ஒரு மூலையில் போய் ரகசியமாக உட்கார்ந்து கொண்டேன். ஆனால், என்ன அதிசயம்! எனக்கு முன்பாகவே இன்னும் பல பத்திரிகை நிருபர்களும் வேறு பலரும் ரொம்ப ரொம்ப ரகசியமாக வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
ரயிலும் ஊதாமல் கொள்ளாமல் மெளன ரகசியத்துடன் புறப்பட்டு, கிண்டி 'லெவல் கிராஸிங்' பக்கத்தில் போய் மிக மிக ரகசியமாக நின்றது. நாங்கள் இவ்வளவு ரகசியமாகப் போகும் விஷயத்தை மகாத்மாஜியும், ராஜாஜியும் எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு, அங்கே வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். போனால் போகிறது என்று சொல்லி அவர்களையும் ரயிலில் ஏற்றிக் கொண்டோம்.
ரயில் சென்னைக்கு இருபத்தைந்து மைல் தூரத்திலுள்ள காட்டுப்பாக்கத்தில் போய் நின்றதும், நாங்கள் படுத்துத் தூங்குவதற்கு ஆயத்தமானோம். ஆனாலும் ஒருவராவது நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. காரணம்; இவ்வளவு ரகசியமாக நாங்கள் போயிருந்துங்கூட காட்டுப்பாக்கம் ஸ்டேஷன் கொசுக்கள் எங்களை எப்படியோ கண்டுபிடித்து விட்டன!
விடியற்காலம் மணி நாலு அடித்தவுடன் காந்திஜி சரியாகத் துரங்குகிறாரா என்று கவனிப்பதற்காக அவர் ஏறியிருந்த வண்டியினருகில் போய்ப் பார்த்தேன். காந்திஜி உட்கார்ந்தவாறே நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்குச் சமீபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ராஜாஜி என்னைக் கண்டதும், "இங்கே எங்கே வந்தாய்?" என்று கேட்டார்.
"மகாத்மாஜி செளகரியமாகத் தூங்குகிறாரா என்று பார்த்துவிட்டுப் போக வந்தேன். அவர் நிம்மதியாகத் தூங்குகிறார். தாங்கள்தான் கண் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்..." என்று பதில் கூறினேன்.
ராஜாஜி சிரித்துக் கொண்டே, "காந்திஜி தூங்கவில்லை. மணி நாலு ஆகிவிட்டதல்லவா? அதனால் கண்களை மூடிய வண்ணம் காலைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்!" என்றார்.
"ஓகோ என்று சொல்லிவிட்டுத் திரும்பும்போது அங்கே வந்த ஹரிஜன சேவா சங்கக் காரியதரிசி திரு. எல்.என். கோபாலசாமி, "இன்னும் அரை மணி நேரத்தில் வண்டி புறப்படப் போகிறது. ஸ்நானம் செய்கிறவர்கள் செய்யலாம். பிளாட்பாரத்தில் வெந்நீர் தயார்!" என்றார்.
அவ்வளவுதான்; வண்டியிலிருந்த எல்லோரும் அங்கே தயாராயிருந்த வெந்நீரில் ஸ்நானம் செய்து முடித்தோம். பின்னர் வண்டி விழுப்புரம் போய்ச் சேருவதற்கும், கிழக்கே சூரியன் உதயமாவதற்கும், எஸ்.ஐ.ஆர். ஓட்டல் சிப்பந்திகள் எங்களுக்கு இட்லி காப்பி கொண்டு வந்து வைப்பதற்கும் சரியாக இருந்தது. விழுப்புரத்துக்கு அடுத்தபடியாக வண்டி உளுந்தூர்ப் பேட்டை, விருத்தாசலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம், பொன்மலை, திருச்சி, கொடைக்கானல் முதலிய பல ஸ்டேஷன்களில் நின்றது. முக்கால்வாசி ஊர்களில் வண்டியை ஸ்டேஷனை அடுத்த 'லெவல் கிராஸிங்' அருகில் உள்ள மைதானங்களில் நிறுத்தினார்கள். அங்கங்கே கூடியிருந்த ஜனங்களுக்கு மகாத்மாஜி இரண்டு நிமிஷ நேரம் பிரசங்கம் செய்தார். இரண்டு நிமிஷ நேரம் ராம நாம பஜனை நடத்தினார். ஐந்து நிமிட நேரம் ஹரிஜன நிதிக்குப் பணம் வசூல் செய்தார்.
ஏற்கெனவே குறிப்பிட்ட இடங்களைத் தவிர, ரயிலை அதிகப்படியாகச் சில இடங்களிலும் நிறுத்தும்படி ஆயிற்று. சாத்துக்குடல் என்ற கிராமத்தில் ரயில் நிற்காது என்று தெரிந்தும்கூட அந்த ஊரைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹரிஜனங்கள் மகாத்மாஜியின் படத்தை விமானத்தில் வைத்து உற்சவ விக்ரகம்போல் ஜோடித்துக் கோவில் குடையைப் பிடித்துக் கொண்டு வந்திருந்தார்கள். (அப்போது அவர்களுக்கிருந்த உற்சாகத்தில் மகாத்மாஜி தலைமீது சுரீரென்று அடித்த வெயிலைக்கூட யாரும் கவனிக்கவில்லை!) மகாத்மாஜி அந்தக் காட்சியைக் கண்டதும் வண்டியை நிறுத்தச் சொல்லி அங்கே ஒரு நிமிஷ நேரம் ரயில் வண்டியின் ஓரத்தில் இணைத்திருந்த பிளாட்பாரத்தில் வந்து நின்று தரிசனம் தந்தார்.
ரயில் ஓடும்போது, பாதைக்கு இருபுறங்களிலும் வழிநெடுக ஜனங்கள் வரிசை வரிசையாக நின்று காண்டிருந்தார்கள். கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். பனை மரங்கள், புளிய மரங்கள், கைகாட்டி மரங்கள், தந்திக் கம்பங்கள் மீதெல்லாம் ஏறி நின்று மகாத்மாஜியின் தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். மேலே வெயிலென்றும், கீழே வெள்ளமென்றும் பாராமல் கால் கடுக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
காந்திஜி வண்டிக்கும், பத்திரிகை நிருபர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த எங்கள் வண்டிக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டத்தினரில் சிலர் மகாத்மாவுக்காகக் கொண்டு வந்த சாத்துக்குடி, ஆரஞ்சு முதலிய பழங்களை எல்லாம் எங்களிடம் கொடுத்துவிட்டுப் போனார்கள். வேறு சிலர் காந்திஜிக்கு அன்புக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் பொருட்டுக் கொண்டுவந்திருந்த கதர்நூல் சிட்டங்களை வண்டி நகரும் அவசரத்தில் என்னிடம் கொடுத்துவிட்டு, "இதைக் காந்திஜியிடம் சேர்த்துவிட வேண்டும் " என்று கேட்டுக் கொண்டனர்.
நானும், "ஆகட்டும் " என்று அவர்களுக்குப் பதில் கூறிவிட்டுப் பின்னால் சரடு திரிப்பதற்கு உதவும் என்று வாங்கி வைத்துக் கொண்டேன்.
கொடைக்கானல் தாண்டியதும் வண்டி எந்த இடத்தில் நிற்கப் போகிறது, மகாத்மாஜி எங்கே இறங்கி எப்படிப் போகப் போகிறார் என்று நாங்களெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த சமயம் 'காந்தி ஸ்பெஷல்' மதுரைக்கு எட்டு மைல் தூரத்திலுள்ள சமயநல்லூர் என்ற ஒரு சிறு கிராமத்தில் நின்றது. மகாத்மாஜி, ராஜாஜி, சுசீலா நய்யார், பியாரிலால் முதலியவர்கள் வண்டியிலிருந்து கீழே இறங்கினார்கள்.
அங்கே மகாத்மாஜியை எதிர்கொண்டழைக்க மதுரை திரு. ஏ. வைத்தியநாதய்யர், திரு. சுப்பராமன் ஆகியவர்கள் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
சமயநல்லூருக்கு அடுத்தபடியாக ரயில் வேளாங்குடியில் போய் நின்றது. வேளாங்குடி ஸ்டேஷனில் எங்களையும், காந்திஜி கோஷ்டியையும் அழைத்துச் செல்லத் தயாராய் நின்ற மோட்டார் வண்டிகளில் ஏறிக் கொண்டோம். அவ்வளவுதான்! வேளாங்குடியில் ஆரம்பித்த கூட்டம் மதுரைக்குப் போய்ச் சேரும்வரை சாலையின் இருபுறங்களிலும் காந்தி மகான் தரிசனத்துக்காக 'ஜே ஜே' என்று மொய்த்துக் கொண்டிருந்தது. முன்னால் சென்ற நாங்கள் அவர்களுக்கெல்லாம், "காந்திஜி பின்னால் வந்து கொண்டிருக்கிறார்" என்று பதில் சொல்வதற்குள் எங்கள் நா வறண்டு தொண்டை கூடக் கம்மிப் போய்விட்டது.
கடைசியில் அனைவரும் பிரார்த்தனை மைதானத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே கண்ட காட்சியைப் பற்றி நான் என்னத்தைச் சொல்ல!
மைதானத்தில் வெகு தூரத்துக்கு வெகு தூரம்வரை கட்டியிருந்த அழகிய மின்சார விளக்குத் தோரணங்கள் பட்டப் பகல்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
மேடை மீது ஏறி நின்று சுற்றிலும் கவனித்தேன். நாலாபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை, இன்னும் அப்பால், அதற்கும் அப்பால் அடிவானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும் இடம் வரை ஒரே ஜன சமுத்திரமாயிருப்பதைக் கண்டு என் தலை சுழன்றது. மயக்கம் போட்டுக் கீழே விழுவதற்கு இட வசதி இல்லையாகையால் பேசாமல் இருந்துவிட்டேன்.
இத்தகைய பிரம்மாண்டமான ஜன சமுத்திரத்தில் கண்டிப்பாய் மதுரை நகரம் அமிழ்ந்துவிடத்தான் போகிறது என்று நினைத்தபோது, எனக்கு அந்தப் பழைய பரமசிவனைக் காட்டிலும் பன்மடங்கு பயம் ஏற்பட்டுவிட்டது.
இமாசலத்தின் மீது நடந்த பார்வதி பரமேசுவரன் திருமணத்துக்கு அகில உலகத்தினின்றும் வந்து குழுமிய ஜனக் கூட்டத்தைக் கண்டதும் பரமசிவன் எங்கே இமயமலை பாதாளத்துக்குள் அமுங்கிப் பூமி நிலைகவிழ்ந்து விடுமோ என்று அஞ்சி அகத்திய முனிவரை அழைத்துத் தென்னகத்தே பொதிகை மலைக்குப் போகச் சொன்னார் அல்லவா?
பரமசிவன் கல்யாணத்தின்போது இமயமலைக்கு ஏற்படவிருந்த அதே மாதிரியான பேராபத்து மகாத்மாஜியின் விஜயத்தின் போது மதுரை மாநகரத்துக்கும் ஏற்படவிருந்தது. மகாத்மாஜியைத் தரிசிப்பதற்காகப் பிரார்த்தனை மைதானத்தில் கூடியிருந்த லட்சக் கணக்கான மக்களைக் கண்டதும் நான் உடனே பொதிகை மலையிலிருக்கும் அகத்திய முனிவரை அழைத்து வடக்கே போகச் சொல்லலாமா என்று
இது என்ன கூத்து! மகாத்மாஜி தமது மேல் துண்டை மேடை மீது விரித்துப் படுத்துக் கொண்டிருந்தார்.
"பாபுஜி! கூட்டம் அசாத்தியமாக இருக்கிறது; எழுந்திருங்கள். இல்லாவிட்டால் ஆபத்தாய் முடியும்" என்று நண்பர்கள் சொல்லிப் பார்த்தார்கள்.
மகாத்மா கண் விழித்து, "ஜனங்கள் எல்லோரும் அமைதியாகக் கலைந்த பிறகுதான் நான் எழுந்து வருவேன்" என்று கூறி, மறுபடியும் படுத்துக் கொண்டார்.
அப்புறம் தொண்டர்கள் சிலர் மூங்கில் வாரைகளைக் கொண்டு வந்து நீளவாட்டில் பிடித்துக் கூட்டத்தினரை விலக்கிக்கொண்டே மேடைவரை சென்று, "இதோ வழி போட்டுவிட்டோம். மகாத்மாஜி எழுந்து கீழே இறங்கி வரலாம்" என்று சொன்னார்கள்.
காந்திஜி எழுந்து பார்த்துவிட்டு, "இது பலாத்காரத்தினால் போடப்பட்ட வழி; ஆகையால் நான் வர முடியாது. ஜனங்கள் தாங்களாகவே சாந்தமாகக் கலைந்து மைதானம் காலியானால் ஒழிய நான் எழுந்திருக்க முடியாது" என்று கண்டிப்பாகச் சொல்லி சத்தியாக்கிரகம் செய்தார்.
ஜனங்களோ, மகாத்மாஜி எழுந்து போகும் வரை தாங்கள் மைதானத்தை விட்டு நகருவதில்லை என்று பிடிவாதம் பிடித்து அங்கேயே இருந்தார்கள். இப்படி மகாத்மாஜிக்கும், கூட்டத்துக்கும் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டமானது கடைசியாக ஒன்பது மணிக்குத்தான் முடிவுற்றது.
பிரார்த்தனைக் கூட்டத்தையும் அதன் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மேடை மண்டபத்தையும் கவனித்தபோது, அந்தக் காட்சி மாபெரும் சமுத்திரத்துக்கு மத்தியில் உள்ள சிறு தீவைப் போல் காணப்பட்டது.
மேடையின் நாலா பக்கங்களிலும் உட்கார்ந்திருந்த ஜனங்களால் மகாத்மாஜியைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. எனவே காந்திஜி, எல்லோரும் தம்மைக் காண வேண்டுமென்பதற்காக மேடை விளிம்புகளில் இருந்த கம்பங்களைப் பிடித்துக் கொண்டே எட்டுத் திசைகளுக்கும் சென்று அங்கங்கே சிறிது நேரம் நின்று தரிசனம் தந்தார்.
ஒவ்வொரு திசையிலும் அவர் வந்து நிற்கும்போது அந்தப் பக்கத்தில் உள்ள ஜனங்கள் அமைதி யாயிருந்தார்கள். மற்றப் பக்கங்களிலிருந்து மட்டும் சப்தம் வந்து கொண்டேயிருந்தது. மகாத்மாஜி, "நான்
ஆனால், மகாத்மாஜியை மற்றெல்லா விஷயங்களிலும் பின்பற்றும் பொது ஜனங்கள் அவர் போகுமிடங்களையும் பின்பற்றத்தான் செய்தனர்!
மறுநாள் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை; காலை ஆறு மணியிலிருந்தே மதுரைவாசிகளும், வெளியூர் வாசிகளும் மகாத்மாஜி தங்கியிருந்த சிவகங்கை பங்களா வாசலை முற்றுகையிட்டு விட்டார்கள். தெருவெல்லாம் வண்டி போக முடியாதபடி கூடியிருந்தார்கள். கோயிலுக்கு வெளியே மாசி வீதிகளையும் ஆக்கிரமித்திருந்தார்கள்! கோயிலுக்குள்ளே போனால் அங்கேயும் ஜனநாயகம்தான்!
மகாத்மாஜி சரியாக எட்டு மணிக்கு ஆலயத்துக்குள் பிரவேசித்தார். அந்த சுபயோக சுப வேளையில் ஆலாட்ச மணிகள் கணகணவென்று ஒலித்தன. யானைகள் பிளிறின. மேள வாத்தியங்களும், 'ஜே' கோஷங்களும் முழங்கின.
கண்கண்ட தெய்வமான காந்தி மகான் பொற்றாமரைக் குளத்தை வலமாக வந்து, முறையே விநாயகர், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், நடராஜர், சுப்பிரமணியர் முதலிய தெய்வங்களைத் தரிசனம் செய்து தமது பெயரால் அபிஷேக அர்ச்சனைகளும் செய்தார். பின்னர் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் தரிசனம் அளித்துவிட்டு, கீழே கல் தரையில் செதுக்கப்பட்டிருக்கும் திருமலை நாயக்கரின் சிலையைத் தம்முடைய பாதங்களால் புனிதப்படுத்தினார். (யாத்திரிகர்களின் பாததூளி படவேண்டும் என்பதற்காகவே திருமலை நாயக்கரைக் கீழே தரையிலுள்ள கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்களாம். ஆனால் இன்றைய தினந்தான் அந்தச் சிலை உண்மையாகவே புனிதம் அடைந்திருக்க வேண்டும்.)
இவையெல்லாம் முடிந்ததும் மகாத்மாஜியைக் கல்யாண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேதான் மீனாட்சி அம்மனுக்குச் சொந்தமான ஏராளமான திருஆபரணங்கள் இருந்தன.
"மகாத்மாஜியை அங்கே ஏன் அழைத்துப் போகிறீர்கள்? அவர் பாட்டுக்கு எல்லா நகைகளையும் ஹரிஜன நிதிக்குக் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டாலும் கேட்பார்" என்று கோவில் நிர்வாகிகளிடம் எச்சரித்துப் பார்த்தேன். அவர்கள் கேட்கவில்லை. நல்ல வேளையாக மகாத்மாவும் மீனாட்சி அம்மனின் நகைகளைக் கேட்கவில்லை.
ஏராளமான தங்க நகைகளுக்கும், நவரத்தின ஆபரணங்களுக்கும் இடையே நடு நாயகமாய் விளங்கிய ஒரு பதக்கம் என் கண்ணைக் கவர்ந்தது.
"அது என்ன?" என்று விசாரித்தேன்.
"நீலநாயகம்!" என்று பதில் வந்தது.
"நீல நாயகம்!” என்ற மேற்படி அற்புத அழகுவாய்ந்த பதக்கத்தை நளச் சக்கரவர்த்தி அரசாண்ட காலத்தில் மீனாட்சி அம்மனுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டாராம்.
நளச் சக்கரவர்த்தி அளித்த மேற்படி பதக்கத்தை ஒரு தடவை ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்தி மதுரைக்கு வந்திருந்தபோது பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனாராம். உடனே அந்தப் பதக்கத்தை அவர் தமது தாயார் விக்டோரியா மகாராணிக்குக் காட்ட வேண்டுமென்று சொல்லிக் கையோடு எடுத்துக் கொண்டு போனாராம். எடுத்துக் கொண்டு போனவர், என்ன ஆச்சரியம், பத்திரமாகத் திருப்பியும் அனுப்பி விட்டாராம். மீனாட்சி அம்மனுடைய சொத்து விஷயத்தில் எல்லோருமே ஜாக்கிரதையாக இருப்பார்கள் போலிருக்கிறது!
மதுரை யாத்திரை முடிந்து, பழநி போய்ச் சேரும்போது மணி ஐந்தரை ஆகிவிட்டது. பழநிக்குப் போகும் மார்க்கத்தில் திண்டுக்கல்லில் பிரமாதமான கூட்டம் கூடி மகாத்மாஜியை வரவேற்றது. திண்டுக்கல் தாண்டியதும் ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்றபோது வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டிருந்த எனக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டது.
சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் ரயில் நிற்கப் போகிறதென்றால் மேற்படி இடத்தை நெருங்கும்போது அங்கு ஒரே கூச்சலும் கோஷமுமாக இருப்பதுதான் வழக்கம்.
ஒட்டன்சத்திரத்தில் இந்த அனுபவத்துக்கு முற்றிலும் மாறாகப் பரிபூரண அமைதி நிலவியது. இவ்வளவுக்கும் கூட்டம் சாதாரணக் கூட்டமாயில்லை. பதினைந்தாயிரம் பேர் கொண்ட மிகப்பெரிய கூட்டம்தான்.
மகாத்மாஜி, "இம்மாதிரி ஒழுங்கான கூட்டத்தை என்னுடைய மதுரைப் பயணத்தில் நான் இரண்டொரு இடங்களில்தான் கண்டேன். இதைப்போல் நாற்பது கோடி மக்களும், ஒற்றுமையாகவும், சாந்தமாகவும் இருந்தால் மறுநாளே நமக்குச் சுதந்திரம் கிட்டிவிடும்" என்று கூறினார்.
பழநியில், பிரார்த்தனை மைதானத்தில் லட்சம் பேருக்கு மேல் கூடியிருந்தார்கள். அங்கே நிச்சப்தமாக இருந்து மகாத்மாவின் பிரசங்கத்தை அமைதியாகக் கேட்டுவிட்டுப் பிறகு மலையடிவாரத்துக்குப் போனார்கள். காரணம், அங்கே மகாத்மாஜி வரப் போகிறார், மலைமீது ஏறிப் பழநியாண்டவனைத் தரிசிக்கப் போகிறார், அப்போது காந்தி மகானைத் தரிசிக்கலாம் என்ற ஆசைதான்!
ஆனால், மகாத்மாஜியோ பழநிக் கோயிலுக்குப் போவதே சந்தேகமாயிருந்தது. எங்கே மதுரையைப் போல் பழநிக் கோயிலுக்குள்ளும் ஜனக்கூட்டம் கூடி ஆண்டவன் தரிசனத்துக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினால் முதலில் கோயிலுக்குப் போவதற்கே மறுத்துவிட்டார். கடைசியாகத் தக்கர் பாபா முன்கூட்டியே கோயிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, "தாங்கள் வரலாம்; கூட்டம் அதிகமில்லை; இருக்கிறவர்களும் ஒழுங்காக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்" என்று மகாத்மாஜிக்கு உறுதி கூறியதின் பேரிலேயே மகாத்மாஜி ஒப்புக் கொண்டார். பிறகு சரியாக எட்டு மணிக்கு மகாத்மாஜியும், ராஜாஜியும் பல்லக்கில் ஏறி மலைமீதுள்ள ஆண்டவன் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்கள்.
நானும் பத்திரிகை நிருபர்கள் சிலரும் படிக்கட்டுகளில் ஏறி மலை உச்சியை அடைந்தோம்.
எஸ்.ஐ.ஆர். பிளாட்பாரம் படிக்கட்டுகளைத் தவிர அதுவரை எனக்குச் சேர்ந்தாற் போல் அத்தனை படிக்கட்டுகள் ஏறிப் பழக்கம் கிடையாது. எனவே, மலையுச்சியை அடைவதற்குள் என் கால்கள் கீரைத் தண்டுபோல் துவள ஆரம்பித்துவிட்டன.
"குறுக்கிலும் நெடுக்கிலும் மூலை வாட்டில் நடந்து போனால் காலை வலிக்காது" என்று மலை மீது ஏறிவந்த திரு. காமராஜ் யோசனை கூறினார்.
அவருடைய யோசனைக்கிணங்க குறுக்கிலும் நெடுக்கிலும் மூலை வாட்டாக நடந்து பார்த்தேன்; என்ன ஆச்சரியம்! காலைத் துளிக்கூட வலிக்கவில்லை. முழங்கால் முட்டியைத்தான் வலித்தது! மலையுச்சியை அடைந்ததும் அங்கே கிடைத்த குளிர்ந்த கோடைக்கானல் தண்ணீரைப் பருகிச் சிரம பரிகாரம் செய்துகொண்டு கோயில் கர்ப்பக் கிருகத்துக்குள் பிரவேசித்தோம். சிறிது நேரத்துக்கெல்லாம் மகாத்மாஜி, ராஜாஜி, தக்கர்பாபா மூவரும் வந்து சேர்ந்தார்கள். ஆண்டவனுக்கு
ஒருவிதமாகப் பழநியாண்டவன் தரிசனம் முடிந்ததும் அனைவரும் கீழே இறங்கத் தொடங்கினோம். நான் மட்டும் மெதுவாகக் காந்திஜி ஏறி வந்த பல்லக்கின் பக்கமாகப் போய் நின்றேன். என்னைக் கண்ட ராஜாஜி, "பல்லக்கருகில் உனக்கென்ன வேலை! இதில் மகாத்மாஜி ஏறிச் செல்லப் போகிறார்!" என்றார்.
"பல்லக்கில் ஏறிக்கொள்வதற்காக நான் வரவில்லை. காந்திஜி ஏறிச் செல்லும் இந்தப் பல்லக்கைச் சுமக்கும் பாக்கியம் எனக்கு ஒரு வேளை கிட்டுமா என்று பார்ப்பதற்காகவே வந்தேன்!" என்று மழுப்பிவிட்டு அப்பால் நகர்ந்துவிட்டேன்.
பழநி யாத்திரை 'ஸ்பெஷல்' சென்னைக்குத் திரும்பும்போது தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் பெரும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது.
வரும் போது 'ஸ்பெஷ'லில் கடைசி வண்டியில் உட்கார்ந்துகொண்டிருந்த திருச்செங்கோடு திரு. ராமதுரை ரயில் கார்டுக்குப் பதிலாக, அவருடைய வேலையைத் தாமே செய்து கொண்டிருந்தார். அதாவது, சிவப்புக் கொடி, பச்சைக்கொடி காட்டுவதற்குப் பதிலாக மூவர்ணக் கதர்க் கொடியையே காட்டி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். ரயில் கார்டு திரு. வாசுதேவராவுக்கு இதனால் பாதி வேலை குறைந்து போயிற்று. ஆனாலும் திரு. வாசுதேவ ராவ், யாத்திரை முழுக்க எடுத்துக்கொண்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. அடிக்கொரு தடவை ஒவ்வொரு வண்டியாக வந்து பார்த்துக் கொண்டே, "சாப்பிட்டீர்களா? தண்ணீர் வேண்டுமா? டிபன் வந்ததா?" என்று கேட்டு உபசரித்துக் கொண்டிருந்தார்.
சென்னைக்குத் திரும்பும் போது மகாத்மாஜி அங்கங்கே என்ன பேசினார் என்பது பற்றி நான் மெளனம் சாதிக்க விரும்புகிறேன். ஏனெனில், மகாத்மாஜி பழநியிலிருந்து சென்னைக்குத் திரும்பிய தினம் மெளன தினம் ஆகையால் அவர் ஒன்றுமே பேசவில்லை.
வரும் வழியில் ஆங்காங்கு கூடியிருந்த மாபெரும் ஜனக் கூட்டங்களைப்பற்றியும், மகாத்மாவுக்கு அவர்கள் அளித்த குதூகல வரவேற்புக்களைப் பற்றியுங் கூட மெளனம் சாதிக்க விரும்புகிறேன். ஏனெனில் எவ்வளவுதான் சொன்னாலும் அந்தக் குதூகல வரவேற்புக்களின் பெருமையில் நூற்றில் ஒரு பங்குகூடச் சொன்னதாகாது. அதைவிட மெளனம் சாதிப்பதே மேல் அல்லவா?
காந்தி மகானின் மதுரை - பழநி யாத்திரையின்போது சுமார் 30 லட்சம் தமிழ் மக்கள் அவரைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார்கள். ஹரிஜன நிதிக்காக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்தனர். மதுரையில் நடந்த பிரார்த்தனையின்போதும், மற்ற இடங்களிலும் அவருக்கு அளித்த கதர்ச் சிட்டங்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்துக்குக் குறைவில்லை.
மதுரைப் பிரார்த்தனை மைதானத்தில் கூடியிருந்த திரளான ஜனங்களைக் கண்டு மகாத்மா மலைத்துப் போனதோடு, அங்கே மலைபோல் குவிக்கப்பட்டிருந்த நூல் சிட்டங்களைக் கண்டு நிச்சயம் திகைத்துப் போயிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் தமிழக யாத்திரையானது மகாத்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும். "மதுரையில் கூடிய மாபெரும் கூட்டத்தைப்போல் மகாத்மாஜியே இதுவரை பார்த்தது இல்லை" என்று உடன் வந்த திரு. கமலநயன் பஜாஜ் கூறினார். இப்படிக் காந்தி மகானே கண்டு வியக்கத்தக்க முறையில் அவரை வரவேற்று வழியனுப்பிய தமிழ் மக்கள் அந்த நிகழ்ச்சியை என்றென்றும் எண்ணிப் பெருமிதம் கொள்ளலாம்.