நவகாளி யாத்திரை/திரு. சாரியார் கவலை

விக்கிமூலம் இலிருந்து

திரு. சாரியார் கவலை

முதல் நாள் இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. போதாக்குறைக்கு நண்பர் சாரியார் வேறு மூச்சுக்கொரு தடவை வந்து என்னைக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஏன் ஸார், அங்கெல்லாம். ரொம்பக் குளிரும் என்று சொல்கிறார்களே, என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

"குளிருமா? அப்படியானால் இதோ இந்தக் கம்பளிக் கோட்டைப் போட்டுக் கொள்வேன்" என்று பதில் கூறினேன் நான்.

சற்று நேரம் கழித்து, சாரியார் இன்னொரு தடவை வந்து எட்டிப் பார்த்தார்.

"ஸார், தங்களுக்கு வங்காளி பாஷை தெரியாதே, என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

"பரவாயில்லை; மகாத்மாஜிக்கும் வங்காளி பாஷை தெரியாதாம். ஆகையால் கவலையில்லை" என்றேன்.

சிறிது நேரம் கழித்து, சாரியார் மீண்டும் என் அறைக்குள் பிரவேசித்தார்.

"ஏன் ஸார், அங்கெல்லாம் அடிக்கடி பசிக்குமாமே, அதற்கு என்ன செய்வீர்?" என்று கேட்டார்.

"அங்கு மட்டுமென்ன? எனக்கு எங்குமே அடிக்கடி பசி எடுக்கும். ஆகையால் அடிக்கடி பசி எடுத்தால் அடிக்கடி சாப்பிட்டு விடுகிறேன்" என்று சமாதானம் கூறி அனுப்பினேன்.

திரு. சாரியார், பாவம், நான் தனியாகப் போகிறேனே என்ற கவலையில் அடிக்கடி இம் மாதிரி ஏதாவது கேள்விகள் கேட்டுக் கேட்டுத் தாமாகவே அலுத்துப் போய்க் கடைசியாக, "ஏதோ ஸார், தனியாகப் போகிறீர்கள்; போய் வாருங்கள்; வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்று எச்சரித்துவிட்டுப் படுக்கப் போய்விட்டார்.

மறுநாள் நான் கிளம்பியபோது, அவர் மனைவியார் என் வழிப்பிரயாணத்துக்காகச் சாப்பாடு கட்டிக் கொடுத்ததுடன் சில தினங்கள் வைத்துச் சாப்பிடக் கூடிய ஆகாரமான பொரி உருண்டைகளும் செய்து தந்தார்.

நான் வாயுள்ள பிள்ளையாகையால் அந்த அம்மாள் கொடுத்தனுப்பிய சாப்பாடு, பொரி உருண்டை முதலியவற்றை மறுநாளே தீர்த்துக் கட்டிவிட்டேன்.

பின்னர், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தி பாஷையை வைத்துக்கொண்டு ரயில் ஏறி, கப்பல் ஏறி, மூங்கில் படகு ஏறி, மோட்டார் ஏறி, மாட்டு வண்டி ஏறிக் கடைசியில் ஒருவிதமாக வங்காளி நண்பர் சொன்ன ஸோணாய்முரி என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அந்தக் கிராமத்திலிருந்து மகாத்மாஜி இருக்குமிடத்துக்குப் பத்து மைல் தூரம் என்றும், அந்த இடத்துக்கு வண்டிப்பாதை கிடையாதென்றும், நடைபாதைதான் உண்டு என்றும் தெரிந்துகொண்டேன். எனவே, தன்னந்தனியாக நவகாளி ஜில்லாவில் தோப்புகளும் துரவுகளும் நிறைந்த பயங்கரச் சூழ்நிலையில் களிமண் வரப்புக்களால் அமைந்த கொடி வழியைப் பின்பற்றி மகாத்மா இருக்கும் திக்கு நோக்கி ஏகாந்தமாகப் பிரயாணம் செய்யும்படி ஆயிற்று.