நவகாளி யாத்திரை/தீக்குச்சிச் சம்பவம்

விக்கிமூலம் இலிருந்து

தீக்குச்சிச் சம்பவம்

போகும் வழியில் என்னை அறியாமல் என் உள்ளத்தில் பீதி குடிகொண்டது. சில மாதங்களுக்கு முன்னால் அந்தப் பிரதேசத்தில் நடந்த பயங்கரப் படுகொலைகளும், மிருகப் பிராயமான நாச வேலைகளும் ஞாபகத்திற்கு வந்தன. தூரத்தில் அங்கங்கே எரிந்து சாம்பலான கொள்ளிக் கட்டைகளுடன் காட்சியளித்த சில குடிசைகள் வேறு மேற்படி சம்பவங்களுக்கெல்லாம் சாட்சியம் கூறின. மனித சஞ்சாரம் அவ்வளவாகக் காணப்படவில்லை. வெகு நேரம் கழித்து, வெகு தூரம் சென்றதும் எதிரே ஓர் ஆஜானுபாகுவான முரட்டு மனிதன் தென்பட்டான். அவன் கையிலே அரிவாள் ஒன்று இருந்தது. அவனைக் கண்டதும் என்னுடைய இருதயம் 'படக்படக்' கென்று அடித்துக் கொண்டது. அவன் என்னை நெருங்கி வர வர வேகம் அதிகமாயிற்று. அவன் என் எதிரிலே வந்து யமனைப்போல் நின்று கொண்டான்.

"நீ ஹிந்துவா? முஸ்லிமா?" என்று அவன் வங்காளி பாஷையில் கேட்டான். நடுங்கிய குரலில் நான் அந்த ஆசாமிக்குப் பதில் கூறினேன்.

"நான் ஒரு இந்தியன்; காந்திஜியைப் பார்க்கச் செல்லுகிறேன்" என்று சொல்லிக் கையில் பிடித்திருந்த 'கல்கி' பத்திரிகையின் அட்டையின் மேல் வரைந்திருந்த காந்திஜியின் படத்தை அவனுக்குக் காண்பித்து என்னுடைய பாஷைக்கு சமிக்ஞை தெரிவித்தேன். அந்தப் படத்தைக் கண்டதும் மேற்படி வங்காளி முஸ்லிமின் முகத்தில் பளிச்சென ஓர் ஒளி மின்னியது.

"உன்னிடம் நெருப்புக் குச்சி இருக்கிறதா?" என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய சட்டைப் பையிலிருந்த பீடித்துண்டு ஒன்றைக் கையிலே எடுத்துப் பிடித்துக் கொண்டான்.

நல்ல வேளையாக அப்போது என் கைவசம் ஒரு டஜன் தீப்பெட்டிகள் இருந்தன. சென்னையில் அப்போது ஏற்பட்டிருந்த தீப்பெட்டிப் பஞ்சம் காரணமாக அவற்றை வாங்கி 'ஸ்டாக்' வைத்திருந்தேன். அவற்றிலிருந்து சட்டென்று முழுப் பெட்டியாக ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தேன். அதற்குப் பிறகுதான் அவன் என்னை மேலே போக வழி விட்டான்.

'அப்பாடா!' என்று பெருமூச்சுடன் ஆண்டவனுக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு அந்த இடத்தினின்றும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அவன் ஒரு சாதாரண முஸ்லிம் குடியானவன்தான் என்றும், அரிவாளுடன் வயலுக்குப் போகும் வழியில் என்னைச் சந்தித்த இடத்தில் எதேச்சையாக அவன்பாட்டுக்கு "ஹிந்துவா, முஸ்லிமா?" என்று கேள்வி போட்டிருக்கிறான் என்றும், வீணான பீதி காரணமாக நானே அவனைக் கண்டு மிரண்டு போயிருக்கிறேன் என்றும் அப்புறம்தான் ஊகித்துத் தெரிந்துகொண்டேன்.