நவகாளி யாத்திரை/மூங்கில் பாலம்

விக்கிமூலம் இலிருந்து

மூங்கில் பாலம்

குடியானவருடைய வீட்டிலிருந்து கிளம்பி, தர்மாபூருக்குச் செல்வதற்குள் வழியில் சுமார் ஏழெட்டு மூங்கில் பாலங்களைக் கடக்க வேண்டியிருந்தது. நவகாளி ஜில்லாவில் வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்கள் குறுக்கும் நெடுக்கும் காணப்படுகின்றன. அந்த வாய்க்கால்களைக் கடந்து செல்வதற்காக மூங்கில்களினால் பாலம் அமைத்திருக்கிறார்கள். இந்தப் பாலங்களில் நடந்து செல்வதென்றால் அதற்குத் தனிப்பட்ட திறமையும், தனிப்பட்ட பயிற்சியும் வேண்டியிருக்கின்றன.

இதைக் கேள்விப்பட்டிருந்த காந்திஜி, ஸ்ரீராம்பூரில் ஒரு மாத காலம் முகாம் போட்டிருந்த சமயம் தினந்தோறும் ஒரு மூங்கில் பாலத்தின் மீது நடந்து நடந்து பயிற்சி பெற்றுக் கொண்டார். கைக்கோலை ஊன்றிக்கொண்டும் கைக்கோல் இல்லாமலும் நடப்பதற்குப் பழக்கம் செய்துகொண்டார். அந்தச் சமயத்தில் பண்டித ஜவஹரும் இன்னும் சிலரும் மகாத்மாவிடம் அரசியல் சம்பந்தமாக சில அந்தரங்க ஆலோசனைகளைக் கேட்பதற்காக ஸ்ரீராம்பூருக்கு வந்திருந்தார்கள். காந்திஜி அப்போது மூங்கில் பாலத்தில் நடந்து செல்லும் வித்தையை அவர்களுக்கு நேரில் செய்து காட்டினார். நேருஜி அதைப் பார்த்துவிட்டு, ”பூ! இவ்வளவுதானா?” என்பதைப் போல் சிரித்தார்.

காந்திஜி, ஜவஹரைப் பார்த்து, ”தாங்கள் நினைக்கிறபடி இந்தப் பாலத்தில் நடப்பது அத்தனை சுலபமல்ல; நடந்து பார்த்தால்தான் இதிலுள்ள கஷ்டம் தெரியும்” என்றார்.

உடனே பண்டித நேரு, "இதோ பாருங்கள்" என்று கச்சத்தை வரிந்து கட்டினார். கைச்சட்டை விளிம்புகளை மடக்கி விட்டுக்கொண்டார். சற்றுப் பின்னால் சென்று வேகமாக ஓடிவந்து சட்டென்று ஒரு கந்து பாய்ந்து அந்த வாய்க்காலை ஒரே தாண்டாகத் தாண்டிக் காட்டினார்!

இதைப் பார்த்த மகாத்மாஜி மூக்கின் மேல் விரலை வைத்து, 'ஹரேரே!' என்று ஆச்சரியப்பட்டுப் போனார். நேருஜியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, "இதுபோல் ஒவ்வொரு வாய்க்காலையும் கடப்பதற்கு நான் பின்னுக்குப் போய் ஓடிவந்து தாண்டிக்கொண்டிருக்க முடியாதே" என்றார். நேருஜியும் மற்றவர்களும் அதைக் கேட்டுச் சிரித்துவிட்டனர்.

"நவகாளி என்னும் இலங்கைத் தீவிலே சமரஸம் என்னும் சீதையை அடைவதற்காக ராமன் அணை கட்டியது போல் காந்திஜியும் மூங்கில் பாலம் அமைத்துக் கடந்து செல்கிறார். ஜவஹரோ அந்தப் பாலத்தை ஹநுமானைப் போல் ஒரே தாவாகத் தாவிவிட்டார். ரொம்பவும் பொருத்தமாய்த்தான் இருக்கிறது!" என்று எண்ணிக் கொண்டேன்.