நவகாளி யாத்திரை/ரொட்டி பேரம்!

விக்கிமூலம் இலிருந்து
ரொட்டி பேரம்!

தர்மாபூர் கிராமத்து ஜனங்கள் மகாத்மாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம் தோப்புக்கு வெளியே வந்து காத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது காலை மணி எட்டுகூட அடிக்கவில்லை. காந்திஜி தாம் செல்ல வேண்டிய வழியை விட்டுவிட்டு அருகிலிருந்த ஒரு சிறு ரொட்டிக் கடையின் சமீபம் சென்றார். அந்தக் கடைக்காரர் காந்தி மகாத்மாவைக் கண்டு பயபக்தியுடன் எழுந்து நின்றார். அந்தக் கடையிலிருந்த ஒரு முழு ரொட்டியை மகாத்மாஜி கையிலெடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார்.

"ஐயோ, மகாத்மாவுக்கு நல்ல பசி போலிருக்கிறது! அதனாலேதான் ரொட்டியை எடுத்துச் சாப்பிடப் போகிறார்" என்று கூறினார்கள் சுற்றியிருந்தவர்கள்.

காந்தி மகான் அந்த ரொட்டிக் கடைக்காரரைப் பார்த்து, "இந்த ரொட்டி என்ன விலை?" என்று கேட்டார்.

அந்தக் கடைக்காரர் பசியோடு வந்திருக்கும் மகாத்மாவுக்கு அதைப் பரிசாக வழங்க விரும்பினார். அதனால் விலை கூற மறுத்துவிட்டார்.

மகாத்மாஜி, "விலையைச் சொல்லும்" என்று அழுத்தமாகக் கேட்கவே, கடைக்காரர் தயங்கிக் கொண்டே, “ஓர் அணா" என்று பதில் கூறினார்.

"எல்லோருக்கும் ஓர் அணாவுக்குத்தான் விற்கிறீரா அல்லது எனக்கு மட்டும் குறைத்துச் சொல்கிறீரா?" என்று கேட்டார் மகாத்மா.

"எல்லோருக்கும் விற்கும் விலைதான்" என்று பதில் கூறினார் கடைக்காரர்.

மகாத்மா ரொட்டியைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். "இது ரொம்பச் சின்ன ரொட்டி; ஆகையால், இதற்கு அரையனாதான் கொடுக்கலாம். தாங்கள் அதிக லாபம் வைத்து விற்கிறீர்கள். கிராமத்து ஜனங்கள் இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்குச் சக்தியற்றவர்கள்" என்று கூறி, ரொட்டியைக் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தார்.

பாவம்! ரொட்டிக் கடைக்காரருக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாய்ப் போயிருக்க வேண்டும்.

கிராமத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் வியாபாரம் நடக்கிறதா என்பதைச் சோதிப்பதற்காகவே மகாத்மா மேற்படி ரொட்டியை விலை கேட்டிருக்க வேண்டும் என்பது அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ஊர்ஜிதமாயிற்று. அன்றைய மாலைப் பிரசங்கத்தில் பொதுவாக கிராமவாசிகளுக்கு உபயோகமான விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசினார். கிராமத்தைச் சுகாதார ரீதியாக வைத்துக் கொள்வதெப்படி, தெருக்களைக் கூட்டிச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் விதம், நீர்த்தேக்கங்களைப் பாழாக்காமல் குடிதண்ணீராக உபயோகிக்கும் முறை முதலியவற்றை விரிவாக எடுத்துச் சொன்னார். காலையில் தாம் ஒரு கடையில் ரொட்டி விலை விசாரித்ததைப் பற்றிப் பிரஸ்தாபித்து, வியாபாரிகள் அதிக லாபம் வைக்காமல் உணவுப் பொருளை ஏழை மக்களுக்கு நியாயமான விலைக்குக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

பிறகு தம்முடைய சாதன வாழ்க்கையைக் குறித்துச் சிறிது நேரம் பேசினார். "இம்மாதிரி வாழ்க்கை நடத்த ஒரு சிலரால்தான் முடியும். ஆகையால், என்னை யாரும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் நான் மகாத்மாஜியை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கண் மூடித்தனமாகப் பின்பற்றத்தான் செய்தேன். அதாவது, காந்திஜி பிரார்த்தனை வேளைகளில் கண்களை மூடித் தியானம் செய்தபோது நானும் அவரைப் பின்பற்றிக் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தேன்! இது கண்மூடித்தனமே அல்லவா?