நாடக மேடை நினைவுகள்/ஆறாம் அத்தியாயம்
ஒத்திகைகள் எல்லாம் சரியாக நடந்தேறியது என்று நிர்வாக சபையார் தீர்மானித்த பிறகு, பகிரங்கமான ஒத்திகை நடத்த வேண்டுமென்று தீர்மானித்தோம். முன்பு புஷ்பவல்லி நாடகத்திற்கு பகிரங்க ஒத்திகை நடத்திய இடம் போதாதென்று எனது நண்பர்கள் கூறவே, என் தந்தையிடம் இச் சமாச்சாரத்தைக் கூறி, சுமார் 200 பெயர் இருக்கக் கூடிய இடம் ஒன்று வேண்டுமென்று கேட்டேன். அதற்கு அவர் இசைந்து, நாங்கள் அப்பொழுது குடியிருந்த ஆச்சாரப்பன் வீதி 54ஆம் நம்பருடைய வீட்டிற்குப் பக்கத்து வீடாகிய 53 கதவிலக்க முள்ள வீட்டை, என்னை அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்து அங்கு மாடியிலுள்ள ஹால் போதுமா என்று கேட்க, அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். அந்த வீடு எனது நெருங்கிய பந்துவாகிய திருமணம் அண்ணாமலை முதலியாருடையது. அவர் என் தந்தையின் வேண்டுகோளுக் கிசைந்து, நாங்கள் அங்கு பகிரங்க ஒத்திகை நடத்த ஏற்றுக் கொண்டார். என் தகப்பனார் இந்த ஒத்திகையைத் தான் கட்டாயமாய்க் காண வேண்டுமென்று வற்புறுத்தினார். முன்பு புஷ்பவல்லி ஒத்திகை நடத்திய பொழுது அவர் வரலாகாதென்று நான் மறுத்திருந்தேன். அதற்குக் காரணம் அவர் வந்தால் நானும் எனது சிறு வயதுடைய நண்பர்களும் வெட்கப்படுவோம் என்பதே. இம்முறை அதெல்லாம் உதவாது என்று அவர் பலவந்தப்படுத்தவே நான் இசைந்தேன். அதன்பேரில் என் தகப்பனார் தானாகக் கடிதங்கள் எழுதி தனது நண்பர்களுக்கெல்லாம் இந்த நாடகத்தின் பகிரங்க ஒத்திகைக்கு வரும்படி டிக்கட்டுகளை அனுப்பினார். அன்றியும் தானாகக் கிட்ட இருந்து நாங்கள் நாடகமாடுவதற்கு ஹாலில், நாடகமேடை சித்தம் செய்து கொடுத்தார். ஒத்திகைக்கு முந்தியதினம், இவ்வாறு எங்களுக்காக மிகுந்த அலைச்சல்படவே வயோதிகரான அவருக்கு (அப்பொழுது அவருக்கு வயது 62) ஜ்வரம் வந்துவிட்டது. அதன் பேரில் இந்த ஒத்திகையும் தான் பார்ப்பதற்கில்லையென்று விசனப்பட, “பெரிதன்று, விக்டோரியா ஹாலில் நாடகம் போடும் பொழுது நீங்கள் பார்க்கலாம்” என்று சொல்லி நான் தேற்றியும், அக்கவலை நீங்கினவர் அன்று. மறுநாள், அதாவது ஒத்திகை தினம் காலை, கொஞ்சம் ஜ்வரம் நீங்கவே, “நான் இரவு வருகிறேன்,” என்று மெல்லக் கூறினார். அதற்கு நான் ஆட்சேபித்து, “இரவில் தூக்கம் இல்லாதபடி விழித்தால் உங்கள் உடம்பிற்கு உதவாது; மறுபடி ஜ்வரம் வந்தாலும் வரும், வேண்டாம்” என்று சொல்லி, ஒருவேளை என்னையறியாதபடி எங்கு வந்து விடுகிறாரோ என்று, அவருக்கு நாங்கள் கொடுத்திருந்த டிக்கட்டை என் பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு, சாயங் காலம் ஒத்திகை நடக்கும் வீட்டிற்கு வேஷம் போட்டுக் கொள்ளச் சென்றேன்.
இந்த ஒத்திகைக்கு பெஞ்சுகளாலாகிய மேடை ஒன்று நிர்மாணித்தோம். அன்றியும் இரண்டு மூன்று திரைகளும் கிடைத்தன; மிகவும் பழமையான திரைகள். அதில் காட்டுத்திரை ஒன்று மாத்திரம் எனக்கு மிகவும் நன்றாய் ஞாபகம் இருக்கிறது; அக்காட்டுத் திரையின் முக்கால் பாகத்தில் ஒரு பெரும்புலி எழுதப்பட்டிருந்தது! ஆகவே நாங்கள் காட்டு சீனில் வேட்டையாடியபொழுது இந்தப் பெரும் புலியின் பக்கத்தில் நின்று கொண்டு தான் வேட்டையாடினோம்!
நாடகம் பார்ப்பதற்காக ஸ்திரீகளுக்கும் பிரத்தியேகமாக இடம் ஹாலின் பின்னால் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கத்தினருடைய பந்துக்களாகிய ஸ்திரீகளுக்குச் சுமார் 50. டிக்கட்டுகள் வரையில் கொடுத்திருந்தோம். ஆயினும் ஸ்திரீகள் கோஷாக்களாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்து, ஒரு பச்சை வர்ணமுடைய கொசுவலையை எதிரில் கட்டி வைத்தோம்!.
முன்சொன்ன ஜமீன்தாருடைய உடுப்புகளில் சிலவற்றை இப்பொழுதும் உபயோகித்த போதிலும், இந்த ஒத்திகைக் கென்று இரண்டு புதிய உடைகள் தைத்தோம், சாடின் (Satin) பட்டில் தைத்துச் சரிகைக் கோண்டு வைக்கப்பட்டிருந்தது. அதைவிட நூறுமடங்கு விலையுள்ள உடைகளைப் பின் வந்த நாடகங்களில் நான் தரித்திருக்கிறேன்; இருந்தும் முதல் முதல் அந்த உடையைத் தரித்த பொழுது எனக்குண்டான உவகை, பிறகு நூற்றிலொரு பங்குகூடப் பெற்றிலேன்! எந்த அனுபவமும் முதல் முதல் கிடைப்பதற்குச் சமானமாகாது, சந்தோஷத்திலும் சரி-துக்கத்திலும் சரி.
அன்றைத்தினம் ஒத்திகையின் நாடகப் பாத்திரங்களைப் பற்றி எனது நண்பர்கள் கொஞ்சம் அறிய விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். முக்கியமான கதாநாயகன் வேடம் பூண்டது, ரங்கசாமி ஐயங்கார். இவர் என்னைவிடச் சிறு வயதுடையவர். சாரீரம் மிகவும் சுத்தமானது. இவருடைய பாட்டைப் போன்றது ஆண் மக்களுள் பிற்காலம் ஒன்றிரண்டு பெயரிடம்தான் கேட்டிருக்கிறேன். நடிப்பதில், முதலில் சங்கோசம் அதிகமாக உடையவராயினும், நாளடைவில் மிகவும் தேர்ச்சி பெற்றார். அக்காலத்தில் முக்கியமாக நாடகங்களில் கானத்துக்கே அதிக உன்னதப் பதவி கொடுத்திருந்ததால், இவருக்குக் கதாநாயகன் வேஷம் கொடுக்கப்பட்டது. ஆயினும் இவர் ஒத்திகை நடத்துங்கால் ஒரு விஷயத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். கதாநாயகனான இவர் கதாநாயகி வேடம் பூண்ட ஜெயராம் நாயகரை முத்தமிட வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அந்தப் பாகம் ஒத்திகை நடத்தும் பொழுதெல்லாம், முகத்தைச் சுளித்துக் கொண்டு மிகவும் சங்கோசப்படுவார், உடம்பெல்லாம் நடுங்கிப்போய்! சரியாக எப்படி முத்தமிடுவது என்பதை நான் அவருக்குப் பன்முறை கற்பிக்க வேண்டியிருந்தது! இவ்விஷயமாகப் பன்முறை அவரை நாங்கள் எல்லாம் ஏளனம் செய்வோம். இன்னொரு விஷயம் இவரைப் பற்றி எனது நண்பர்கள் அறிய வேண்டும். இவர் தகப்பனார் வயதான லௌகீகப் பிராம்மணர். நாடகமாடுவ தென்றால் அவருக்குக் கொஞ்சமேனும் பிடிக்காது; ஆகவே இரண்டு மூன்று வருடங்கள் வரையில் ரங்கசாமி ஐயங்கார் நாடகமாடுவதை அவர் தந்தை அறியாதபடி மறைத்து வைக்க வேண்டியிருந்தது! ஏழு எட்டு மணிக்கெல்லாம் அவர் தந்தை சாப்பிட்டுப் படுத்துக்கொண்ட பின், தனது தாயாருடைய அனுமதி பெற்றுத் தெருக் கதவை மெல்லத் திறந்து கொண்டு நாடகமாட வந்து விடுவார். நாடகம் முடிந்தவுடன் வீட்டிற்குத் திரும்பிப் போகும் பொழுதும் தனது தாயாரிடம் முன்பே சொல்லிவைத்து, மெல்ல தெருக் கதவைத் தட்டி அவர்களைத் திறக்கச் செய்து தந்தை அறியாதபடி வீட்டிற்குள் நுழையந்து சந்தடி செய்யாமல் தன் அறைக்குப் போய் படுத்துக் கொள்வார். அக் காலத்தில் நாடகமாடுவ தென்றால் அவ்வளவு நிகருஷ்டமாக எண்ணப் பட்டது. இப்பொழுதும் அம்மாதிரியான எண்ணம் இந்நாட்டை விட்டு முற்றிலும் அகலவில்லை யென்றே நான் எண்ணுகிறேன்.
நான் கதாநாயகனுடைய நண்பனாகிய சத்யவந்தன் என்பான் வேடம் தரித்தேன். கதாநாயகனுடைய தந்தையாகிய அரசனுடைய வேஷம் கோதண்டபாணி நாயகர் தரித்தார். இவர் ஜெயராம் நாயகருடைய மூத்த தமயன். எங்களுள் எல்லோரைப் பார்க்கிலும் இவர்தான் அக்காலத்தில் வயதில் முதிர்ந்தவர். அச்சமயம் இவருக்கு ஏறக்குறைய நாற்பது வயதிருக்குமென நினைக்கிறேன். அதற்கு முன் இவர் நாடகமேடையே ஏறியவர் அன்று. இருந்தும், நாடகமாட வேண்டுமென்று விருப்பங்கொண்டவராய் ஜெயந்தன் எனும் அரச பாத்திரமாகத் தோன்றினார். இதைத் தவிர இவர் வேறு நாடகங்களில் ஆடியதாக எனக்கு ஞாபகமில்லை இவர் அக்காலம் சென்னை ஹைகோர்ட்டில் ஏதோ வேலை யாயிருந்தார்.
இவருடைய நண்பராகிய நரதாச்சார்லு என்பவர் இவர் மனைவியாகிய ராஜபத்னி வேஷம் தரித்தார். இவர் தெலுங்கு சப்தரத்னாகரம் என்னும் நூல் இயற்றிய சீதாராமாசார்லுவின் புதல்வர். மெல்லிய சாரீரத்துடன் பாடுவார். ஸ்திரீவேஷத்திற்கு லாயக்கானவர்; ஆகியும் உரத்த சப்தத்துடன் பேச முடியாதவர். இவர் சபையில் பிறகு இரண்டொரு வேஷங்கள் தான் தரித்தார். இவர் சுமாராக வீணை வாசிப்பார். சுந்தரி நாடகத்தில் முதற் காட்சியில் இவர் வீணை வாசிக்கும்படியான சந்தர்ப்பத்தை இவருக்காக ஏற்படுத்தினேன்.முக்கியமான இரண்டு ஸ்திரீ பாத்திரங்களை, ஜெயராம நாயகரும், சுப்பிரமணிய ஐயரும் எடுத்துக் கொண்டனர். என்னுடன் அக்காலத்தில் நடித்தவர்களுள் அநேகர் அல்ப ஆயுசுடையவர்களாய் மறித்தது போல் அல்லாமல், பரமேஸ்வரனுடைய கிருபையினால் இன்னும் இவர்களிரு வரும் உயிருடனிருக்கிறார்கள். இவர்களிருவர்களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுத வேண்டியிருக்கிறது.
இவ்விருவர்களுள் ஜெயராம் நாயகர், கதாநாயகியாகிய சுந்தரி வேஷம் தரித்தார். நான் முதல் முதல் எழுதிய நாடகமாகிய “புஷ்பவல்லி” என்னும் நாடகத்திலும் புஷ்பவல்லி என்னும் கதாநாயகி வேஷம் பூண்டனர். அன்றியும் 1895ஆம் வருஷம் வரையில் எங்கள் சபையில், அயன் ஸ்திரீபார்ட் என்று சொல்லும்படியான, முக்கிய ஸ்திரீ வேஷம் தரித்தவர் இவரே. எனது மூன்றாவது நாடகமாகிய “லீலாவதி - சுலோசனா அல்லது இரண்டு சகோதரிகள்” என்னும் நாடகத்தில் இவர் லீலாவதியாக நடித்தனர். அந்த நாடகம் இவருக்கென்றே நான் எழுதியது. (இந்தக் கதையை பிறகு சவிஸ்தாரமாகக் கூறலாமென்றிருக்கிறேன்.) இவர், எனது நாடகங்களுக்குள், ‘யயாதி’ என்னும் நாடகத்தில் சர்மிஷ்டையாகவும், ‘சாரங்கதரன்’ என்னும் நாடகத்தில் சித்ராங்கியாகவும் நடித்துள்ளார். இவருக்கு சபையின் முதல் நான்கைந்து வருஷங்கள்வரையில் சபையின் ஹீரோயின் என்று பெயர் - அதாவது சபையின் நாடகங்களில் முக்கிய ஸ்திரீ வேடம் பூணுபவர் என்று பொருள்படும்.
இவர் அக்காலத்தில் மிகவும் ஒல்லியா யிருந்தார். என்னைப் பார்க்கிலும் ஒரு வருடம் வயதில் குறைந்தவராயிருந்த போதிலும் அரும்பைப் போல முகத்தில் மீசையுண்டு. இவருக்கு முக்கியமான கஷ்டமென்ன வென்றால். ஸ்திரீ வேஷம் தரிக்கும் ஒவ்வொரு சமயமும் இதை எடுத்துவிட வேண்டுமென்பதே! முதலில் இதை எடுத்துவிடுவது இவரது தந்தைக்குத் தெரியாமலிருந்தது. பிறகு இவர் தந்தை இதற்கு ஆட்சேபணை செய்ததே இவர் ஸ்திரீ வேஷம் பூணுவதை விட்டதற்கு ஒரு முக்கியமான காரணமாம். குரல் ஸ்திரீயின் குரலைப்போல் மெல்லியதாயிருந்தது. ஆயினும் சங்கீதத்தில் இவர் அவ்வளவாகப் பெயர். எடுக்கவில்லை . இவர் ஸ்திரீ வேஷம் தரிப்பதில் முக்கியமாகப் பெயர் பெற்றது இவரது நடையுடை பாவனைகளின் சிறப்பைக் கொண்டே. கறுப்பு நிறமுடையவராயிருந்த போதிலும் முகத்தில் மிகவும் அங்கலட்சண முடையவராயிருந்தார். ஸ்திரீகள் எப்படிப் பார்க்கின்றனர், எப்படி நடக்கின்றனர், எப்படிப் பேசுகின்றனர், எப்படி உடுக்கின்றனர் என்பதை யெல்லாம் மிகவும் நன்றாய்க் கவனித்து, அப்படியே அரங்கத்தில் நடிக்கும் வல்லமை வாய்ந்தவர். இதனால்தான் இவருக்கு அப்போது முக்கிய ஸ்திரீ வேஷம் கொடுக்கப்பட்டது. எங்கள் சபையில் 1895ஆம் வருஷத்திற்கு மேல்தான் இவர் ஆண் வேஷம் தரிக்க ஆரம்பித்தார். தற்காலம் என்னைப் போல் வயதாகி, உடம்பு கொஞ்சம் பெருத்திருந்த போதிலும், இன்னும் ஸ்திரீவேடம் தரிப்பவர்களுக்கு நடைபாவனைகளில் ஏதாவது சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றால், ஊக்கத்துடன் சொல்லிக் கொடுப்பார். சுகுணவிலாச சபையின் முதல் அங்கத்தினராகிய இவர், இன்னும் ஜீவந்தராயிருப்பது சபை செய்த புண்ணியமென்றே கருதுகின்றேன்.
அக்காலத்தில் இரண்டாவது ஸ்திரீ வேஷம் தரித்தவர், அ.சுப்பிரமணிய அய்யர் என்பவர். சில விஷயங்களில் ஜெயராம் நாயகருக்கு நேர் விரோதமான குணங்களையுடையவர் இவர். அவர் கருப்பாயிருந்தார்; இவர் மிகவும் சிவப்பாயிருப்பார். அவருக்கு சங்கீதத்தில் அதிகப் பயிற்சி இல்லை ; இவர் இனிய குரலுடன் நன்றாய்ப் பாடுவார். அவர் நடிப்பதில் மிகவும் நிபுணர்; இவர் இவ்விஷயத்தில் நாம் எவ்வளவு சொல்லிக் கொடுக்கிறோமோ அவ்வளவுதான் மேடையில் நடிப்பார். மிகுந்த அடக்கமான சுபாவமுடையவர். பேசுவதும் மெல்லிய குரலுடன் பேசுவார். இவர் புஷ்பவல்லி என்னும் நாடகத்தில் முதலில் புஷ்பவல்லியின் தோழியாகவும், பிறகு மந்திரி குமாரனான புத்திசேனன் மனைவியாகிய பானுமதியாகவும் வேடம் பூண்டனர். ‘சுந்தரி’ என்னும் நாடகத்தில் சத்யவந்தன் மனைவியாகிய சாகரிகை வேடம் பூண்டனர். எனது மூன்றாவது நாடகமாகிய லீலாவதிசுலோசனாவில் இவர்தான் முதல் முதல் சுலோசனையாக நடித்தவர். இவருக்கென்றே இந்த நாடகப் பாத்திரத்தை நான் எழுதினேன் என்று ஒரு விதத்தில் கூற வேண்டும். இவர் இரண்டு முறை அரங்கத்தில் என் மனைவியின் வேடம் தரித்ததனால், எனது நண்பர்கள் இவரை எனது மனைவி என்று ஏளனம் செய்வார்கள். இவர் கடைசியாக ஸ்திரீவேடம் தரித்தது சுகுண விலாச சபை பெங்களூருக்குப் போயிருந்த சமயத்தில் மனோஹரன் என்னும் நாடகத்தில் விஜயாளாக. அதன் பிறகு இவர் உத்யோக விஷயமாக வெளியூருக்கு மாற்றப்பட்டபடியால் சபையில் வேடம் தரிப்பதற்கு அனுகூலப்படாமற்போயிற்று. இவர் அக்காலம் மந்திரி குமாரன் மனைவியாகிய பானுமதியின் வேடத்தில் ஆகிரி ராகத்தில் பாடிய ஒரு பாட்டு இன்னும் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. கேட்பவர் உள்ளம் உருகும்படியாக அப்பாட்டைப் பாடுவார். அதைக் கேட்பவர்கள் ஏதாவது கூட்டங்களில் சங்கீதம் கேட்க வேண்டுமென்றால் இவரை அப்பாட்டைத்தான் பாடச் சொல்வார்கள். ஆகிரி ராகமானது நடு நிசியல் பாட வேண்டிய ராகம். நாடகம் ஆடும் பொழுது இவர் அப்பாட்டைப் பாடவேண்டிய காலமும் சுமார் பனிரெண்டு மணியாகும். நடு நிசியில் இவர் அப்பாட்டை நிசப்தமாயிருக்கும்பொழுது பாடுவது மிகவும் மன உருக்கமாயிருக்கும்.
இவர் இப்பொழுது வயோதிகராய் கவர்வுன்மென்ட் உத்தியோகத்திலிருந்து பென்ஷன் வாங்கிக் கொண்டு பட்டணம் வந்து சேர்ந்து, தம்புச்செட்டி வீதியில் வசித்துக் கொண்டிருக்கிறார். ஏதோ கிரஹசாரத்தினால் பாரிச வாய்வினால் பீடிக்கப்பட்டு சில வருஷங்களாகப் படுத்த படுக்கையாய் இருக்கிறார். இளமையும் யௌவனமும் நிலையாமைக்கு இவரே எனக்குப் பிரத்தியட்சப் பிரமாணமாயிருக்கிறார். இவரது தேக சௌக்கிய விசாரணை செய்வதற்காக எப்பொழுதாவது நான் போகும் போதெல்லாம், இவர் என்னுடன் நாடகமேடையில் நடித்ததெல்லாம் எனக்கு நினைவு வந்து மிக்க துக்கம் விளைக்கும். இது காரணம் பற்றியே நான் இவரை அடிக்கடி பார்ப்பதற்கில்லாமற் போகிறது. இவர் தற்காலம் பேரன் பேத்தியை எடுத்த “தாத்தா"வாகி விட்டார். இவருடைய குமாரனாகிய துரைசாமி ஐயர், ‘இரண்டு நண்பர்கள்’ என்னும் எனது நாடகமொன்றில், என் காதலியாகிய சத்யவதியாக என்னுடன் சில வருடங்களுக்கு முன் நடித்தார்: அச்சிறுவன் முக ஜாடையும் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன் சாகரிகையாக என்னுடன் அரங்கத்தில் நடித்த சுப்பிரமணிய ஐயருடைய முக ஜாடையும் ஒன்றாய் இருந்தது! அச்சமயம் சுப்பிரமணியருடன் நான் நடிக்கின்றேனோ என க்ஷண நேரம் பிரமித்தேன்! காலம் ஓடுகின்றது என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி எனக்கு வேண்டியதில்லை.
இனி அந்தப் பகிரங்க ஒத்திகையைப்பற்றி எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் கூறுகிறேன்.
ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பம் என்று டிக்கட்டுகளில் விளம்பரம் செய்திருந்தோம். எட்டுமணிக்கெல்லாம் ஜனங்கள் வர ஆரம்பித்து விட்டனர். அதற்குள்ளாக என் வேஷத்தை நான் பூண்டு, ஏதோ சில்லரை விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று எங்கள் சபை காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார், நாங்கள் வேஷம் தரித்துக் கொண்டிருந்த அறைக்குள் பெருமூச்சு வாங்க ஓடி வந்து ஒரு நாற்காலியில் விழுந்தார். நான் என்னவென்று கலவரத்துடன் கேட்க அவர், “நான் தப்பு செய்துவிட்டேன். சம்பந்தம்! என்னை மன்னித்துவிடு! யாரோ ஒருவர், ஒரு சால்வையைப் போர்த்துக் கொண்டு வந்தார். அவர் கையில் டிக்கட் இல்லை. டிக்கட்டில்லாமல் ஒருவரையும் உள்ளே விடமாட்டேன் என்று உறுதியாய்க் கூறினேன். அதன்மேல், அவர் என் டிக்கட், என் பிள்ளையிடம் இருக்கிறதெனச் சொன்னார். நான், நீங்கள் யாரென்று கேட்க தன் பெயரைச் சொன்னார். அப்பொழுதுதான் அவர் உன் தகப்பனார் என்று தெரிந்தது. சம்பந்தம்! நான் என்ன செய்வது! ‘என்று வாய்குளறச் சொன்னார். அதன் மீது நான் அவர் செய்தது தவறல்லவென்றும் அதுதான் நியாயமென்றும் சொல்லித் தேற்றி, என் சாவியைக் கொடுத்து என் ஜேபியிலிருந்த டிக்கட்டைக் கொண்டு வரும்படி சொல்ல, “வேண்டாம்! வேண்டாம்! அவர் இன்னாரென்று தெரிந்தவுடன், உள்ளே டிக்கட்டு இல்லாமலே விட்டு விட்டேன்” என்று பதில் உரைத்தார். அப்படிச் செய்ததுதான் தவறு என்று அவரைக் கடிந்து கொண்டேன்.
பிறகு, எட்டரை மணியாகியும் கதாநாயகன் வேஷம் தரிக்க வேண்டிய ரங்கசாமி ஐயங்கார் வந்து சேரவில்லை! நாடகம் ஆரம்பிக்க இன்னும் அரை மணிதான் இருக்கிறதே என்று நாங்ககளெல்லோரும் கலவரப்பட்டுக் கொண்டிருந்தோம். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் கஷ்டத்தினின்றும் கரையேற அன்று முதல் இன்றுவரை, எனக்கு ஒரு மார்க்கம்தான் தெரியும். அதாவது மௌனமாய் தெய்வத்தைக் குறித்துப் பிரார்த்திப்பதே; ஒரு மூலைக்குச் சென்று ஒருவருமறியாதபடி, நான் அவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் இடையிலேயே, ரங்கசாமி ஐயங்கார் வந்து விட்டார் என்கிற கூச்சல் கிளம்பியது. உலகத்தில் தெய்வம் ஒன்று உண்டென்றும் அதற்குப் பிரார்த்தனை செய்வதனால், தமது மனோபீஷ்டம் தவறாக இல்லாவிட்டால் நிறைவேறு மென்றும் மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, நான் நம்புகிறேன். இதில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு இங்கிலாண்டு தேசத்திய மஹாகவி டெனிசன் (Tennyson) என்பவர் “கடவுளை வணங்குவதில், கனவிலுங் கைகூடாவென எண்ணும் அநேக விஷயங்கள் கைகூடுகின்றன” என்று எழுதியிருப்பதைக் கவனப்படுத்துகிறேன்.
அதன்மேல், அவரை ஏன் இவ்வளவு நேரம் சென்று வந்தாய் என்று நான் கடிந்து கொள்ள, தன் தகப்பனாரைத் தூங்கப்படுத்தி விட்டு வரவேண்டியதாயிற்று என்று பதில் உரைத்தார்! பிறகு அவசரமாய் அவருக்கு வேஷமெல்லாம் போட்டு, சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் நாடகத்தை ஆரம்பித்துவிட்டோம். அன்று முதல் இருபத்தைந்து வருஷம் பேரிலில்லா விட்டாலும் வாஸ்தவமாக, சுகுண விலாச சபையின் தமிழ் நாடகங்களுக்கெல்லாம் கண்டக்டராக இருந்து நூற்றுக்கணக்கான நாடகங்களை நடத்தி வந்தேன்; அவைகளிலெல்லாம், ஒன்றிலாவது குறித்த மணி தவறி ஆரம்பித்ததாக ஞாபகமில்லை . இது, பாதி ஈசன் அருளினால் என்றும், பாதி எனது நண்பர்கள் என்னிடங்கொண்ட அன்பினால் என்றும் உறுதியாய் நம்புகிறேன்.
நாடகம் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணி வரையில் நடத்தினோம். ஐந்து மணி நேரம் ஆகியும், எங்களுக்குக் கஷ்டமாகத் தோன்றவில்லை! வந்தவர்களும் ஒருவரும் தங்கள் ஆசனங்களை விட்டு எழுந்திருக்கவில்லை. மொத்தத்தில் நாடகம் நன்றாகவே நடிக்கப்பட்டதென்று நான் நினைக்கிறேன். நாடகம் நடிக்கும் பொழுது என் தகப்பனார் அரங்கத்தின் எதிரில் உட்கார்ந்திருக்கிறார் என நான் அறிந்தும், கடைசிவரையில் நான் அவரைப் பார்த்தவனன்று. அவர் எங்கே எப்படி உட்கார்ந்திருந்தார் என்பதையும் கவனித்தவன் அன்று. இதை நான் இங்கு குறிப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. அது, மேடையின் மீதேறி நாடகங்களில் நடிக்க விரும்பும் எனது சிறிய நண்பர்களுக்கெல்லாம் மிகவும் உபயோகப்படும் என்று நான் உறுதியாய் நம்புகிறபடியால் அதைப்பற்றி விவரமாய்க் கூற விரும்புகிறேன்.
அன்று முதல் இன்று வரை, நான் கணக்கிட்டபடி சுமார் ஐந்நூற்றுச் சில்லரை நாடகங்களில் நடித்திருக்கிறேன். இவற்றுள் ஒன்றிலாகிலும் அரங்கத்தின் எதிரில் யார் எங்கே இருக்கிறார்கள் என்றுகூடக் கவனித்தவனன்று. அப்படிக் கவனியாததற்கு இரண்டு முக்கியக் காரணங்களிருக்கின்றன; முதலாவது, அப்படிக் கவனிப்பேனாயின், அந்த க்ஷணம், நான் பூண்டிருக்கும் வேஷதாரியாயில்லாமல், வெறும் சம்பந்தம் ஆகி விடுகிறேனல்லவா? ஒருவன் அமலாதித்யனாக அரங்கத்திலிருக்கும்பொழுது, அவனது சொந்த தந்தையோ, தாரமோ, நண்பனோ, அரங்கத்தின் எதிரில் யார் உட்கார்ந்திருக்கிறது என்று கவனிப்பானோ? அவனது எண்ண மெல்லாம் அரங்கத்தின் மீதிருக்கும். அவனது நாடகத் தந்தையோ, சிற்றப்பனோ, காதலியாகிய அபலையோ தாயாராகிய கௌரிமணியோ, நண்பனான ஹரிஹரனோ எங்கிருக்கிறார்கள் என்றல்லவோ கவனிக்க வேண்டும்? மற்றொரு காரணமும் முக்கியமானதே; மேடையில் நடிக்கும் ஒரு நாடக பாத்திரம் அரங்கத்தில் யார் யார் வந்திருக்கிறார்கள் அவர்கள் தன்னைப்பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் தான் நடிப்பது நன்றாயிருக்கிறது என்று நினைக்கிறார்களா, அல்லது நன்றாக இல்லையென்று எண்ணுகிறார்களா என்று கவனிக்கத் தொடங்கினால், உடனே அவனுக்கு, அரங்கப் பீதி அல்லது பயம் உண்டாகும். புதிதாய் அரங்கத்தின்மீது ஏறும் எனது இளமையுடைய நண்பர்கள் அநேகர். “சார்! நான் போனவுடன், என் சிநேகிதன் (அல்லது தகப்பனார், தாயார்) அரங்கத்தின் பேரில் எதிரில் உட்கார்ந்ததைப் பார்த்து விட்டேன். உடனே எனக்குப் பயமாகி விட்டது. கை கால் உதற ஆரம்பித்துவிட்டது. என் பாடத்தை மறந்துவிட்டேன்” என்று எத்தனையோ முறை எனக்குக் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் கூறும் பதில் என்னவென்றால், “உங்களை யார் அவர்களையெல்லாம் பார்க்கச்சொன்னது? அப்படிப் பாராதிருந்தால் இந்தப் பயம் வந்திராதே ‘என்பதுதான். இப்படிக் கூறுவதனால்; நாடகம் பார்க்க வந்திருக்கும் ஜனங்களுக்கு, நடர்கள் தங்கள் பின் பாகத்தைக் காட்டவேண்டும் என்பது என் எண்ணமல்ல. சம்ஸ்கிருத நாடக சாஸ்திரங்களில் அரங்கத்தில் முதுகைக் காட்டக் கூடாதென்று ஒரு நிபந்தனையுண்டு. அது மிகவும் நல்ல நிபந்தனையே. ஜனங்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு பேசினால், நீங்கள் பேசுவது அவர்களுக்கு எப்படித் தெளிவாகக் கேட்கும்? ஆகவே நாடகத்தில் தேர்ச்சியடைய வேண்டுமென்று விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு நான் கூறுவதென்னவென்றால், அரங்கத்தின் மீதிருக்கும் மற்ற நாடகப் பாத்திரங்களைப் பார்த்துப் பேசவேண்டிய சந்தர்ப்பங்கள் தவிர மற்ற சந்தர்ப்பங்களிலெல்லாம், எதிரிலிருக்கும் ஜனங்கள்புறம் திரும்பிப் பேச வேண்டி வரும் சமயங்களிலெல்லாம், அவர்கள் தலையளவுக்கு இரண்டு முழம் உயரமாகப் பார்த்துப் பேசுங்கள் என்பதே. இதனால் உங்கள் வார்த்தையும் அவர்களுக்கு நன்றாய்க் கேட்கும்; உங்களுக்கும் அரங்கப் பீதி உண்டாகாது.
அன்றிரவு நாடகம் முடிந்தவுடன் எனக்கு மிகவும் இளைப்பாயிருந்தபடியால் நேராக என் வீட்டிற்குப் போய்ப் படுத்து விட்டேன். மறுநாள் காலை எழுந்தவுடன் என் பிதாவைக் கண்டேன். அவர் தான் முந்தியநாள் இரவு பார்த்தது மிகவும் நன்றாயிருந்ததெனக் கூறி, பிறகு, “உன் தாயார் இதைப் பார்ப்பதற்கில்லாமற் போயிற்றே” என்று கூறி கொஞ்சம் விசனப்பட்டார். அதற்கு நான், “அவர்கள் நமது கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும், அவர்களிருக்குமிட மிருந்து இவைகளையெல்லாம் பார்த்து சந்தோஷிக்கிறார்களென்றே நான் நம்புகிறேன்” என்று பதில் உரைத்தேன். அந்த எண்ணம் இதுவரையில் எனக்குக் கொஞ்சமேனும் மாறவில்லை. இவ்வெண்ணம் இன்னொரு விதத்தில் எனக்கு மிகவும் உபயோகப்படுகிறது; என் மனத்தில் ஏதாவது தவறான எண்ணங்கள் புகும்பொழுதெல்லாம், அவர்கள் இதை அறிவார்களே என்று அஞ்சினவனாய், என் மனத்தைத் திருப்பிக்கொள்கிறேன்.என் தகப்பனார் தான் பார்த்த நாடகத்தைப்பற்றி மிகவும் சந்தோஷப்பட்டார் என்பதற்கு முக்கிய நிதர்சனம் என்ன வென்றால், அவர் மறுநாளே எங்கள் சபை அங்கத்தினர்க்கு, மறுஞாயிற்றுக் கிழமை தினம் ஒரு டீ பார்ட்டி (Tea Party) கொடுத்தார் என்பதே. அந்த பார்ட்டிக்கு, அன்றைத் தினம் வந்திருந்த எனது நண்பர்களையும் வரவழைத்தார். இவ்வாறாக சென்னையிலுள்ள தமிழ் அபிமானிகளாகிய பல கனவான்களுக்குச் சபையின் பெருமையைப் பரவச் செய்தார். இதன் மூலமாக சபையின் அங்கத்தினரும் அதிகமாயினர். ஆகவே சுகுண விலாச சபை, சிறு குழவியாயிருந்த பொழுது, அதை அன்புடன் ஆதரித்து வளர்த்தவர்களுக்குள், என் தந்தையை முக்கியமானவர் என்று கூற வேண்டும் என எண்ணுகிறேன்.
மேற்சொன்னபடி இரண்டு நாடகங்களுக்குப் பகிரங்க ஒத்திகை நடத்தி, பார்த்தவர்களுடைய சம்மதத்தைப் பெற்ற நாங்கள், கூடிய சீக்கிரத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் அந்நாடகங்கள் நடத்த வேண்டுமென்று தீர்மானித்தோம்.
அக்காலத்தில் சபையின் அங்கத்தினர் பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்களாயிருந்தபடியால், எங்களது படிப்புக்கு விக்னம் வராதபடி, பரீட்சைக்குப் போகும் ஒவ்வொருவரும் பரீட்சை காலத்துக்கு மூன்று மாதம் முன்பாகசபையின் கூட்டங்களுக்கு வரக்கூடாது என்று ஒரு சட்டம் ஏற்படுத்திக் கொண்டோம் என்று முன்பே தெரிவித்திருக்கிறேன். அந்தச் சட்டத்தின்படி மறுபடி மூன்று மாத காலம் நான் சபைக்குப் போகாதிருந்தேன். இதற்குள்ளாக விக்டோரியா ஹாலில் மேற்சொன்ன இரண்டு நாடகங்களையும் ஆடுவதற்கு ஏற்பாடுகள் செய்தோம்.
அவ்வாறு செய்வதில் எங்களுக்கு ஏற்பட்ட முதல் கஷ்டம் என்னவென்றால், நாடகங்களுக்கு வேண்டிய திரைகள் எல்லாம் இல்லாமையே. இலவசமாகத் திரைகள் வாடகைக்கு இப்பொழுது கிடைப்பது போல் அப்பொழுது கிடையாது. அன்றியும் அப்படிக் கிடைப்பதாயினும் எங்களுக்கு வேண்டிய திரைகள் அகப்படுவது கஷ்டமாயிருந்தது. ஆகவே எப்படியாவது, எங்களுக்கு வேண்டிய திரைகளைப் புதிதாய்ச் செய்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தோம். இதற்குக் கையில் காசில்லை; என்ன செய்வது என்று யோசித்து ஒரு யுக்தி செய்தோம். அச்சமயம் ராமநாதபுரம் சேதுபதி அவர்கள் சென்னைக்கு வந்திருந்தார். அவரை சபைக்கு ஒரு பேட்ரன் (Patron) ஆகக்கோரி, அவர் தயாள குணத்தின் மூலமாக ஏதாவது பொருள் சம்பாதிக்கலாம் என்று தீர்மானித்தோம். பாஸ்கர சேதுபதி அவர்களுடைய தகப்பனார், என் தகப்பனாருக்கு நன்றாய்த் தெரியும் என்று அறிந்த நான், இவ்விஷயத்தைப்பற்றி, என் தந்தையிடம் சாப்பாட்டின் பேரில், மெல்லத் தெரிவித்தேன். அவரும் இதற்கிசைந்தார். சேதுபதி அவர்களுக்கு எழுதி ஒருநாள் நாங்கள் அவரைப் பார்ப்பதற்காக குறித்துக் கொடுத்தார். அன்றைத்தினம், சபையின் நிர்வாக சபையாரை அழைத்துக்கொண்டு போய் சேதுபதியவர்களிடம் என் தகப்பனார் விட்டார். அதன் பேரில் சேதுபதி அவர்களுக்கு ஒரு வந்தனோபசாரப் பத்திரிகையை நான் படித்தேன். அதன் பிறகு கொஞ்சநேரம், அவர் எங்கள் சபையைப்பற்றி விசாரித்தார். அப்பொழுது பேசியதில் எனக்கு ஒன்று தான் நன்றாய் ஞாபகமிருக்கிறது. நீங்கள் எப்பொழுது நாடகங்கள் நடத்தப் போகிறீர்கள். என்று அவர் கேட்டதற்கு, நான் மார்ச்சு மாதம் என்று பதில் உரைக்க அச்சமயம், நானும் ராமநாதபுரம் மார்ச்சாய் (March) விடுவேன் என்று அவர் நகைத்துக்கொண்டே சொன்னார். பிறகு நாங்கள் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். பிறகு சில தினங்கள், பயிரானது மேகத்தை எதிர்பார்ப்பது போல் அவரிடமிருந்து ஏதாவது கிடைக்குமாவென எதிர்பார்த்து வந்தோம். கூடிய சீக்கிரத்திலேயே அச்சீமான் ரூபாய் 300 எங்களுக்குக் கொடையாக அனுப்பினார். பின்வாங்காது கொடுப்பதையே தன் பிருதாகக் கொண்டிருந்த சீமான் எங்களுக்கு அப்பொழுது செய்த உதவி, மிகவும் பாராட்டத் தக்கதாம்; “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறியதன் உண்மையை அன்றே கண்டேன்.
இந்தத் தொகை எங்களுக்குக் கிடைத்தபொழுது நாங்கள் கொண்ட உவகை கொஞ்சம் அல்ல. உடனே இதைக் கொண்டு ஏழு திரைகள் எழுதி வைத்தோம். அக்காலத்தில் “மதிராஸ் டி-ரமாடிக் சொசைடி” என்று சொல்லப்பட்ட ஆங்கிலேயர்களுடைய நாடக சபையில் சீன்கள் எழுதிக் கொண்டிருந்த, டுவார்ட் என்னும் பரங்கிக்காரனைக் கொண்டு அவைகளை எழுதி வைத்தோம். எங்கள் சபையின் காரியதரிசியின் வீட்டு மேல்மாடியில்தான் அவைகள் எழுதப்பட்டன. இன்னின்ன படுதாக்கள் இருக்க வேண்டுமென்று நாங்களே தீர்மானித்து, டிராப் படுதா, தர்பார் படுதா, அரண்மனை உட்புறப் படுதா, தோட்டப் படுதா, காட்டுப் படுதா, தெருப் படுதா, ஜெயில் படுதா என்று மேற்கண்ட இரண்டு நாடகங்களுக்கும் அதி அவசியமான படுதாக்கள் எழுதி வைத்தோம். அன்றாடம் எவ்வளவு வேலையாகி வருகிறதென்று மிக்க ஆவலுடன் போய்ப் பார்த்து வருவோம். மனிதனுடைய ஞாபக சக்தியென்பது ஒரு விதத்தில் ஆச்சரியகரமானதே! நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட படுதாக்களைப் பற்றி எல்லா விஷயமும் நன்றாய் எனக்கு ஞாபமிருக்கிறது; நான்கு தினத்திற்கு முன் படித்த புஸ்தககத்தின் பெயரும் சில சமயங்களில் இப்பொழுது மறந்துவிடுகிறேன்! எங்கள் டிராப் படுதாவில், கற்றறிந்த வர்களுடைய நாடகசபை என்று காண்பிப்பதற்காக, கலா சங்கத்தின் இருப்பிடமாகிய செனெட் ஹவுஸை (Senate House) எழுதி, தமிழ் நாடகத்தை ஒரு மாதுருவமாக உருவகப்படுத்தி வரைந்து, ‘நற்குணத்தின் பலன் நற்குணமே’ என்று பொருள் படும்படியான ஒரு ஆங்கிலப் பழமொழியை எங்கள் பிருதாக வரைந்துவைத்தோம். இந்தப் படுதா அநேக வருஷம் எங்கள் சபையின் முதல் படுதாவா உபயோகிக்கப்பட்டு, நாளாவர்த்தியில் மிகவும் பழமையடைந்து கிழிந்து போய்விட்டது; மற்றப் படுதாக்களும் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு வருஷங்கள் உழைத்து ஜீரணமாகிப் போயின.
சேதுபதி அவர்கள் அளித்த முன்னூறு ரூபாயும் இதற்குச் சரியாகப் போகவே, நாடக உடுப்புகளுக்கு என்ன செய்வது என்று ஆலோசிக்க ஆரம்பித்தோம். இதிலும் கருணைக் கடவுள் எங்களுக்கு வழி காண்பித்தார். தஞ்சாவூர் அரண் மனையைச் சார்ந்த, சரபோஜி மகாராஜாவின் வம்சத்திலுதித்த ஒருவர், பிரின்ஸ் பாட்சா ராம் சாயப் என்பவர் சென்னைக்கு வந்தார். வெங்கடகிருஷ்ண நாயுடு என்னும் எங்கள் சபை நிர்வாகக் கூட்டத்தின் அங்கத்தினர் (இவரைப் பற்றி முன்பே எனது நண்பர்களுக்குக் கொஞ்சம் கூறியிருக்கிறேன்) இவருக்கு சிநேகமானார். பாட்சாராம் சாயப் தஞ்சைக்குத் திரும்பிப் போன போது, வெங்கடகிருஷ்ண நாயுடுவையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அந்தச் சமயம் பார்த்து, எங்கள் நிர்வாக சபையார், சபைக்கு ஏதாவது பொருள் உதவி செய்ய வேண்டுமென்று ஒரு நிருபம் அவருக்கு அனுப்பினார்கள். சில தினங்கள் ஒன்றும் பதில் வரவில்லை.
ஒரு நாள் நான் ஏதோ படித்துக்கொண்டிருந்த பொழுது திடீரென்று, எனது நண்பரிடமிருந்து பாட்சாராம் சாயப் ரூபாய் 200 கொடையளித்ததாகக் காகிதம் வந்தது. அதை கண்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டவனாய், அன்று சாயங்காலம் எனது மற்ற நண்பர்களைச் சந்தித்தபொழுது, இதைக் குதூகலத்துடன் அறிவித்தேன். அவர்களும் சந்தோஷப்பட்டார்கள். உடனே இந்த ரூபாயைக் கொண்டு எங்களுக்கு வேண்டிய உடுப்புகளைத் தைத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தோம். பணத்துடன் நாயுடு தஞ்சாவூரிலிருந்து வந்தவுடன், காலம் போக்காமல் உடனே வேண்டிய வெல்வெட்டுகள் வாங்கி, அக்காலத்தில் நாடகங்களுக்கு உபயோகிக்கப்பட்ட சம்கி (Chamki) உடுப்புகளைத் தைத்தோம். இந்த உடுப்புகளைப் பற்றி எனது நண்பர்கள் கொஞ்சம் அறியவேண்டியது அவசியம். அக்காலத்தில் இன்ன நாடகத்தில் இன்ன வேஷதாரிக்கு, காலக்கிரமப்படி, இப்படிபட்ட உடுப்பு இருக்க வேண்டுமென்று நிர்ணயம் கிடையாது. (இப்பொழுதும் பெரும்பாலும் கிடையாதென்றே சொல்லவேண்டும்!) ராஜா உடுப்பு, மந்திரி உடுப்பு, ராஜகுமாரன் உடுப்பு, மந்திரிகுமாரன் உடுப்பு, கொத்தவால் உடுப்பு என்று இம்மாதிரி தான் தைப்பது வழக்கம்; அந்த வழக்கத்தின்படியே நாங்களும் தைத்தோம். இந்த சம்கி உடுப்புகளெல்லாம் வெங்கிட கிருஷ்ண நாயுடுவின் தகப்பனார் வீட்டில், தறிபோட்டுத் தைக்கப்பட்டன. அந்த நாயுடுவின் தந்தை வயோதிகத்தினால் கண்பார்வை ஏறக்குறைய அறவே அற்றவராயினும் அதை வேலையாட்களுக்குக் காட்டிக் கொடுக்காமல், வாக்கு சாதுர்யத்தினால் அவர்களிடமிருந்து நன்றாய் வேலை வாங்கிவிடுவார்! இந்த உடுப்புகளைப் பற்றி முதல் முதல் ஒரு குட்டிக்கலகம் பிறந்தது எங்கள் சபையில்; ஆண் வேஷதாரிகளுக்கு மாத்திரம் இவைகளையெல்லாம் தைத்துக் கொள்கிறீர்களே, எங்களுக்கு ஒன்றுமில்லையா என்று ஸ்திரீ வேஷதாரிகள் முறையிட்டனர்! அதன் மீது அவர்களுக்காக ரவிக்கை பேட்டுகளும், டோபாக்களும் தயார் செய்தோம். புடவைகள் வாங்க எங்கள் கையில் பணமில்லை. சபை ஆரம்பித்து சுமார் பன்னிரண்டு வருஷங்கள் ஸ்திரி வேஷதாரிகள் அவரவர்கள் வீட்டிலிருந்தே அவர்கள் வீட்டு ஸ்திரீகளினுடைய புடவைகளைக் கொண்டு உபயோகிப்பது வழக்கம்! மேல் வரைந்துள்ளதில் “டோபா” எனும் பதம் சில நண்பர்களுக்கு அர்த்தமாகாதிருக்கலாம். நாடகமாடும் பொழுது வேஷதாரிகள் தலைமயிருக்குப் பதிலாக அணிவதற்கு டோபாவென்று பெயர். ஆண் வேடம் பூணுபவர்கள் தங்கள் தலைமயிரையே சாதாரணமாகக் கட்டிக்கொள்வார்கள். ஸ்திரீ வேஷம் பூண்பவர்களுக்கு பிரத்யேகமாக ஏற்பாடு செய்யவேண்டுமல்லவா? இந்தத் தலைமயிருக்கு டோபா என்று பெயர். அக்காலத்தில் “பாதி டோபா” தான் பெரும்பாலும் நாடக மேடையில் உபயோகிக்கப்பட்டு வந்தது. சில வருடங்களுக்குப் பிறகுதான், இப்பொழுது வழக்கத்திலிருக்கும் முழு டோபாவானது உபயோகிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது.
பிறகு, விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்களை நடத்து முன் சென்னையிலுள்ள பெரிய மனிதர்களைக் கண்டு அவர்களுடைய ஆதரணையைப் பெற வேண்டுமென்று தீர்மானித்தோம். அத் தீர்மானத்தின் பிரகாரம் என் தகப்பனாரிடமிருந்து ஒரு காகிதம் வாங்கிக் கொண்டு ராஜா சர் சவலை ராமசாமி முதலியாரைப் போய்க் கண்டேன்; அக்காலத்தில் சென்னையிலிருந்த ஸ்ரீமான்களில் இவர் ஒரு முக்கியமானவர். மிகுந்த தர்ம சீலர்; சென்னபட்டணத்தில் முதல் முதல் பிரயாணிகள் வந்து தங்குவதற்காக சத்திரம் கட்டி வைத்தவர்; தர்மம் செய்வதில் தனது கூர்மையான புத்தியைக் கொண்டு மிகவும் சாதுர்யமாய்ச் செய்வார். அதற்கு உதாரணமாக மேற்குறித்த சத்திரத்தையே கூறலாம். இரண்டு ரெயில் ஸ்டேஷன்களுக்கும் மத்தியில், பிரயாணிகளுக்கு மிகவும் அனுகூலமாயிருக்கும்படி இடம் சம்பாதித்துக் கட்டிய அச் சத்திரம், இன்னும் தினம் எத்தனை நூற்றுக்கணக்கான ஜனங்களுக்கு சவுகரியத்தைத் தருகிறதென்பது பட்டணவாசிகளாகிய என் நண்பர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியதில்லை. இவர் பிரசவ ஆஸ்பத்திரிகள், அம்மை குத்துகிற இடங்கள், மாடுகள் குதிரைகள் தண்ணீர் குடிப்பதற்காகத் தண்ணீர்த் தொட்டிகள் முதலிய ஜனங்களுக்குப் பல சௌகர்யத்தை உண்டுபண்ணும்படியான தர்மங்களைச் செய்துள்ளார். அக்காலத்தில் சென்னையில் தர்ம விஷயமாக ஏதாவது கைங்கர்யம் எடுத்துகொன்டால் இவரது பெயர் அதன் ஜாபிதாவில் முதலில் வராமலிராது! என் தகப்பனாருடைய கடிதத்தை இவரிடம் கொடுத்தனுப்ப, உடனே என்னைப் பரிவுடன் வரவழைத்து, தன் பக்கலில் உட்கார வைத்துக் கொண்டு, எங்கள் சபையைப்பற்றிப் பத்து நிமிஷத்தில், தான் அறியவேண்டிய விஷயங்களை யெல்லாம், சில கேள்வி களால் அறிந்து கொண்டார். யூனிவர்சிடி பட்டம் பெறா விட்டாலும், இவ்விஷயத்தில் இவர் புத்தி சாதுர்யம் மிகவும் மெச்சத் தக்கதே. பிறகு என் வேண்டுகோளுக்கிரங்கி எங்கள் சபையின் பிரசிடெண்ட்டாயிருக்க ஒப்புக் கொண்டதுமன்றி, எனக்கு சபை நடத்த வேண்டிய விஷயங்களில் சில புத்திமதிகளையும் கூறினார். அவைகள் அனைத்தையும் இங்கு நான் கூற வேண்டிய அவசியமில்லை . எனது சிறிய நண்பர்களுக்கு மிகவும் உபயோகப்படும் என்று தோன்றும் ஒன்றை மாத்திரம் இங்கெடுத்துக் கூறுகிறேன். இவர் எழும்பூரிலுள்ள இவரது மாளிகைக்குப் போகுமுன், ஆச்சாரப்பன் வீதியில் எங்கள் வீட்டிற்கு நூறு அடிக்குள்ளதாக இருக்கும் ஒரு வீட்டில் வசித்திருந்தார்; எனது தந்தையாரிடம் இவருக்கு அதிக மதிப்புண்டு. அது பற்றி அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருகிற வழக்கமுண்டு. அப்போது நான் முன்கோபமுடையவன் என்று கவனித்திருக்கக் கூடுமென்று நினைக் கிறேன். அது காரணம் பற்றியோ, அல்லது மொத்தத்தில் இப் புத்திமதியை எனக்கும் கூறவேண்டுமென்றோ “அப்பன், ஒன்று முக்கியமாக ஞாபகம் வைத்துக்கொள். கழுதையா யிருந்தாலும் நாம் காலைப் பிடிக்கவேண்டிய சமயம் ஒன்று வந்தாலும் வரும். ஆகவே, ஒருவரையும் பகைத்துக் கொள்ளாதே!” என்றார். எனது பத்தொன்பதாம் ஆண்டிலிருந்தபடியால், எனக்கு அப்பொழுது அப்புத்திமதியின் நுட்பம் தெரியாமற் போயிற்று. பிறகு அதைக் கவனியாது நடந்து பல தடவைகளில் துன்பம் அனுபவித்து, பிறகுதான் அப்புத்திமதியின் பெருமையையும் . உபயோகத்தையும் அறிந்தேன்! இன்னும் அப்புத்திமதி என் மனத்தில் நன்றாய் வேர் ஊன்றவில்லை என்றே நான் எண்ண வேண்டியதாயிருக்கிறது. சில சமயங்களில் அதை மறந்து நடந்து, அதற்காகப் பிறகு பிராயச்சித்தம் செய்கிறேன்! அவர் அன்று எனக்குக் கூறிய இப்புத்தியை, எனது இளைய நண்பர்கள் நன்றாய் ஆராய்ந்தறிந்து, அதன்படி நடந்து வருவார்களாயின் அதனால் பெரும் நன்மையைப் பெறுவார்களென்று உறுதியாய் நம்பி இதை இங்கு வரையலானேன்.
ராஜாசர் சவலை ராமசாமி முதலியார், தான் பிரசிடென்டாக ஒப்புக்கொண்ட பிறகு, ராவ்பஹதூர் ரங்கநாத முதலியாரை வைஸ் பிரசிடென்டாக ஒப்புக்கொள்ளும்படி கேட்கிறது தானே என்று சொன்னார். அதைச் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டு, என் தந்தையிடம் தெரிவித்து, அவருக்கும் ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு அவரைப் போய்க் கண்டேன். இவர் இன்னாரென்று எனது இளைஞரான நண்பர் அறியாதிருக்கலாம். ஏனெனில் இவர் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னமே காலமாய் விட்டார். அக்காலம் தென் இந்தியாவில் கற்றறிந்தவர்களுக்குள் இவர் முதலாக மதிக்கப்பட்டவர். சென்னை கலாசாலையில் கணிதப் புலவராக நியமிக்கப்பட்ட போதிலும், ஆங்கில பாஷை, தர்க்க சாஸ்திரம், சரித்திரம் முதலிய பல சாஸ்திரங்களிலும் பெரிய நிபுணர். தமிழிலும் நன்றாகக் கற்றுணர்ந்தவர். கச்சிக்கலம்பகம் என்னும் அரிய நூலை இயற்றியுள்ளார். இவருக்கு அக்காலம், பிரின்ஸ் ஆப் கிரேட்யூயேட்ஸ் (Prince of Graduates) என்று பெயர். அபாரமான ஞாபக சக்தியுடையவர். ஏதாவதொன்றை இரண்டு முறை படித்தால் அப்படியே ஒப்புவிக்கும் திறமை வாய்ந்தவரென்று சொல்லுவார்கள். இவர் என்னை என் சிறுவயது முதல் அறிவார். என் தகப்பனார் முதன் முறை என்னை இவர் முன் அழைத்துக்கொண்டு போனபோது, என்னை நீதிமஞ்சரியிலுள்ள ‘கற்கைநன்றே கற்கைநன்றே, பிச்சைபுகினும் கற்கை நன்றே, கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதராகும்மே’ என்பதை ஒப்பிக்கச்சொன்னார். அப்படியே நான் ஒப்பித்தபொழுது, “தம்பி, இது எப்பொழுதும் ஞாபகம் இருக்கட்டும் என்று சொன்னது, இப்பொழுது என் மனத்தை விட்டகலவில்லை; நேற்றுதான் இவர் அதை எனக்குக்கூறியது போலிருக்கிறது. இவரும், என் தகப்பனாருடைய காதகிதத்தைப் படித்துப் பார்த்து, எங்கள் சபையின் வைஸ் பிரசிடென்டாக ஒப்புக் கொண்டார்.இதன் பேரில், சபையை ஆதரிக்கத் தக்கவர்கள் என்று எங்களுக்குத் தோன்றிய பெரிய மனிதர்களை எல்லாம் பார்த்து வந்தோம். அவர்களுள் இரண்டு பெயர்களுடன் நடந்த விருத்தாந்தத்தை மாத்திரம் இங்கு எடுத்து எழுதுகிறேன். காரிய தரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரும் நானுமாக காலஞ்சென்ற ராமசாமி ராஜு என்பவரைப் பார்க்கப் போனோம். இவர் சீமைக்குப் போய் பாரிஸ்டர் பரீட்சையில் தேறி வந்தவர். சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் வல்லவர். தமிழில் இதற்குச்சில வருஷங்களுக்கு முன்னமே “பிரதாப சந்திர விலாசம்” என்னும் நாடகத்தை எழுதி அச்சிட்டவர். ஆகவே ‘எங்கள் சபையை இவர் ஆதரிக்கத் தக்கவர் என்றெண்ணி ; இவரிடம் சென்றோம். இவரது பங்களாவின் கதவு சாத்தப்பட்டிருந்ததால், அரைமணி சாவகாசம் வெளியில் உட்கார்ந்திருந்தோம். காலை எட்டு மணிக்குமேல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். உடனே நாங்கள் வணங்கி, எங்களை இன்னாரென்றும் இன்ன காரியத்திற்காக வந்திருக்கின்றோம் என்றும் தெரிவித்துக்கொண்டோம். அதன்பேரில் கோர்ட்டில் சாட்சியை கிராஸ் (Cross) கேள்விகள் கேட்பது போல் எங்களைக் கேட்கத் தொடங்கினார். அவற்றிற் கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டே வந்தேன். என்ன நாடகங்கள் போடப் போகிறீர்கள் என்று கேட்க, நான் எனது இரண்டு நாடகங்களின் பெயரையும் சொன்னேன். யார் அவைகளை எழுதியது? என்று அவர் கேட்க, நான்தான் எழுதினேன் என்று பதில் உரைத்தேன். உடனே கண்கள் மலர, என்னை விழித்துப் பார்த்தார்! அப்பொழுது எனக்கு வயது 19; உருவத்தில் அவ்வளவு வயதுடையவனாகக்கூட நான் தோற்றவில்லை என்று என் அக்காலத்து நண்பர்கள் பல தடவைகளிற் கூறியதுண்டு. ஆகவே இந்தச் சின்னப் பையனாவது நாடகமெழுதுவதாவது என்று ஆச்சரியப்பட்டார் போலும். பிறகு சுந்தரியென்னும் நாடகத்தின் கதையைக் கேட்க, சுருக்கிச் சொன்னேன். அதனுடன் விடாமல், இந்த நாடகத்தில் பாட்டுகள் உண்டோவென்று கேட்டார். உண்டுடென்று சொல்ல தாயுமான முதலியார் கட்டியிருக்கிறார் என்று கூற, அதில் ஏதாவதொன்றைப் பாடு என்று கேட்டார்! உடனே, என் யௌவனக் கொழுப்பி னாலும், சபையின் காரியத்தை எப்படியாவது ஈடேற்ற வேண்டுமென்னும் ஊக்கத்தினாலும் சுந்தரி நாடகத்தில் சத்தியவந்தன் பாட வேண்டிய பாட்டுகளிலொன்றை, பக்க வாத்தியம் ஒன்றுமின்றிப் பாடினேன்! இவன் என்ன விடாக் கண்டனாயிருக்கிறான் என்ற எண்ணத்தினாலோ, அல்லது தனது கிராஸ் பரிட்சைக்கெல்லாம் சரியாகப் பதில் உரைத்தேன் என்கிற உவகையினாலோ, பிறகு தானும் சபையை ஆதரிப்பவர்களில் ஒருவராக இருக்க ஒப்புக் கொண்டார்.
பிறகு திவான்பஹதூர் பாக்கம் ராஜரத்தின முதலியார் வீட்டிற்குப் போனோம். அப்பொழுது அவர் எங்கள் குடும்பத்திற்குச் சம்பந்தியாகவில்லை. அவர் ஆரம்ப முதல் இம்மாதிரி யான நாடகச் சபைகளினால் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று கூறி ஆட்சேபிக்க ஆரம்பித்தார். முதலில் சாந்தமாகவே, பெரியவராயிற்றே என்று மிகவும் மரியாதையுடன் எனக்குத் தோன்றிய நியாயங்களை யெல்லாம் எடுத்துக் கூறிப் பார்த்தேன். அதனால் அவர் ஒன்றும் சளையாமற் போகவே, எனக்குக் கோபம் பிறந்து விட்டது. பிறகு ஏட்டிக்குப் போட்டியாய் அவர் கூறுவதற்கெல்லாம் பதில் உரைக்க ஆரம்பித்தேன். என் பக்கத்திலிருந்த முத்துக்குமாரசாமி செட்டியார் மெல்ல சைகை செய்தும், பல தடவைகளில் என் ஆத்திரம் அடங்காது பேச ஆரம்பித்து விட்டேன். கடைசியாக முதலியார் அவர்கள், இம்மாதிரியாக நாடகங்கள் ஆடுவதில் தேசத்திற்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டார். அதற்கு நான் “அதற்குப் பதில் ஷேக்ஸ்பியர் மகாகவியைக் கேட்டுப் பாருங்கள்” என்று பதில் பகர்ந்தேன். அதெல்லாம் சீமைக்கு; நம்முடைய தேசத்தில் அம்மாதிரி யார் இருக்கிறார்கள்? என்று கேட்க, “இப்பொழுதில்லாவிட்டாலும், இனி ஒரு காலம் அப்படிப்பட்ட நாடக ஆசிரியர் நமது தேசத்திலும் பிறப்பார்” என்று பதில் உரைத்தேன். நான் என்ன கூறியும் அவர் மனம் அப்பொழுது மாறவில்லை . ஒரே பிடிவாதமாய் எங்கள் சபையை ஆதரிப்பவர்களுள் ஒருவராக இசைய மாட்டேன் என்று மறுத்து விட்டார். பிறகு நாங்களிருவரும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்பிப் போகும் பொழுது செட்டியார், “என்ன அப்பா சம்பந்தம்! பெரியவராகிய அவரிடம் அப்படிப் பேசலாமா?” என்று என்னை மிகவும் கடிந்து கொண்டார். நான் பேசியதில் என்ன தவறு இருந்தது சொல்லுங்கள், என்று நான் அவரைக் கேட்டபொழுது ஒரு குற்றத்தையும் எடுத்துக் காட்ட அவரால் முடியாமற் போன போதிலும், “நீ பேசிய மாதிரி தப்பிதம்” என்று கூறினார். இப்பொழுது இதைப்பற்றி நான் சாவகாசமாய் யோசித்துப் பார்க்குமிடத்து செட்டியார் கூறியது வாஸ்தவம் என்று எனக்குத் தோன்றுகிறது. அக்காலத்தில் என்னிடமிருந்த பல துர்க்குணங்களில் இது ஒன்றாம். ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி நான் கொண்ட அபிப்பிராயங்கள் மிகவும் சரியானவையாயிருந்த போதிலும், அவற்றை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் விஷயத்தில் சாந்தமாய் அவைகளைக் கூறி மற்றவர்களை என் வசம் திருப்பும்படியான சக்தியே என்னிடம் அக்காலம் இல்லை. இது பெரிய தவறு என்பதை அப்பொழுது அறிந்திலன்; பட்ட பின்தான் புத்தி வரும் என்பதற்கிசைய, இதனால் பல துயரங்கள் அனுபவித்த பிறகுதான் இந்தப் புத்தி எனக்கு வந்தது. இதைப்பற்றி என் தந்தையும் பல தடவைகளில் எனக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார். “சம்பந்தம் சொல்லுவது சரிதான், ஆயினும் அதையேன் அவ்வளவு முரட்டுதனமாய்ச் சொல்கிறான்?” என்று எனது தமயனிடம் அவர் ஒரு முறை கூறியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.
இதே முதலியார் அவர்கள், அக்காலம் எங்கள் வேண்டு கோளுக்கிசையா விட்டாலும், பிறகு 1895ஆம் வருஷம் நாங்கள் “மனோஹரன்” என்னும் நாடகத்தை முதல் முறை விக்டோரியா ஹாலில் ஆடியபொழுது, அதைப் பார்க்க வந்து, ஆரம்பம் முதல் நாடக முடிவுவரையில் ஏறக்குறைய ஐந்து மணி நேரம் அதைப் பார்த்து, பிறகு மறுநாள் தான் கண்டதை மிகவும் புகழ்ந்து, அந்நாடகத்தைப் பற்றி ஐந்து பக்கங்களுக்குமேல் சிறப்பாக எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அக்கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது. நாடகமே கூடாதென்று பழித்தவர் மனத்தைத் தெய்வா தீனத்தால் அவ்வளவு திருப்பினோமே என்று சந்தோஷப் பட்டு, அக்கடிதத்தை மிகவும் அருமையாகப் பாதுகாத்து வருகிறேன். அதற்கப்புறம் பல தடவைகளில் எனது நாடகங் களைப் பார்த்து முதலியார் அவர்கள் சந்தோஷித்திருக்கிறார். முதலில் இதை வெறுத்ததற்காக இவர் மீது நான் குற்றங் கூறவில்லை. சென்னையில் அநேகம் கற்றறிந்த பெரிய மனிதர்கள் மனமும் இவருடையது போல்தானிருந்தது. சுகுண விலாச சபையின் நாடகங்களைப் பார்ப்பதற்குமுன் நாடகம் என்பதையே வெறுத்திருந்தவர்கள், அதை ஒரு முறை பார்த்தபின் மனம் மாறியிருக்கிறார்கள். இதையே எனது சிறு முயற்சிக்கு ஈசன் அளித்த பெரும் பரிசாக எண்ணுகிறேன்.
பிறகு சென்னை ராஜதானியில் எங்கள் சபையை ஆதரிப் பதற்கிசைந்த பெரிய மனிதர்களின் பெயரை யெல்லாம் அச்சிட்டு ஒரு பிரசுரம் வெளிப்படுத்தினோம். இதற்கு முக்கியக் காரணம் நாடகமாடுவது ஓர் இழிதொழிலாக மற்றவர்கள் எண்ணக்கூடாது என்று வற்புறுத்தும் பொருட்டே.
மேற்கண்ட ஏற்பாடுகளெல்லாம் செய்த பிறகு விக்டோரியா பப்ளிக் ஹாலில் இரண்டு நாடகங்கள் ஆடுவதற்கு வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்கினோம். முதலில் இரண்டு நாடகங்களுக்காக ஹால் குத்தகைத் தொகையைச் சேகரிக்க வேண்டியது அவசியமாயிற்று. அக்காலத்தில் தினம் ஒன்றுக்கு வாடகை ரூபாய் 50 கொடுக்க வேண்டியதாயிருந்தது. இப்போது ரூபாய் 30க்குக் கிடைப்பது போல் அக்காலம் கிடையாது. எங்கள் சபையிலோ பணம் இல்லை. முன்னிருந்ததைவிட நாளடைவில் சில அங்கத்தினர் அதிகமாய்ச் சேர்ந்த போதிலும், அதற்கேற்றபடி செலவும் அதிகமாக ஆரம் பித்தது. இதன் பொருட்டு, எங்கள் பிரசிடென்டாகிய ராஜாசர் சவலை ராமசாமி முதலியாருக்கு எழுதி, அவரிடமிருந்து ரூபாய் 50 நன்கொடையாகப் பெற்று, அதை முதல் நாடகத்துக்காகக் கட்டி விட்டோம். புதுச்சேரியில் அக்காலத்தில் தனவந்தராயிருந்த கூனிச்சம்பெட் லட்சுமண சாமி செட்டியாருக்கு நான் எழுதி அவரிடமிருந்து ரூபாய் 50 பெற்றுக் கொடுக்க, அதை இரண்டாவது நாடகத்திற்கு வாடகையாகக் கட்டினோம். இதை வாசிக்கும் எனது நண்பர்களிற் சிலருக்கு, ஒரு நாடகம் ஆடுவதென்றால் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றன என்பதே தெரியாதிருக்கலாம் என்றெண்ணி எங்கள் நாடகங்களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுதுகிறேன்.
ஒரு நாடகமாடுவதென்றால் ஒரு கலியாணம் செய்வதற்குச் சமானமாகும்; முதலில் கலியாணங்களிற் போல் பத்திரிகைகள் அச்சிட்டு அனுப்ப வேண்டும்; பந்தல்காரர் களுக்கு ஏற்பாடு பண்ண வேண்டும்; மேளக்காரனுக்குச் சொல்ல வேண்டும்; சமையல்காரனை அமர்த்த வேண்டும்; புஷ்பக்காரனுக்குத் திட்டம் செய்ய வேண்டும்; புடவைகள் முதலியன சேகரிக்க வேண்டும்; விளக்குகளுக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்; கலியாணத்திற்கு ஒரு வாத்தியார் வேண்டியிருந்தால், நாடகம் நடத்தவும் ஒரு வாத்தியார் வேண்டியிருக்கின்றது!
சுந்தரி, புஷ்பவல்லி இரண்டு நாடகங்களுக்கும் சுவற்றில் ஒட்டும்படியான நோட்டீசுகள், ஒன்றாய் அச்சடித்தோம். அத்தனை பெரிய சுவர் நோட்டீசுகள் அது வரையில் இந்திய நாடகக் கம்பெனிக்காக ஒருவரும் அச்சிட்டதில்லை. கோவிந்தசாமி ராவ் நாடகக்கம்பெனி, சுப்பராயாசாரி கம்பெனி முதலியவர்களெல்லாம் சிறுசிறு நோட்டீஸ்களாகத்தான் அச்சிடுவார்கள். நாங்கள் பஞ்ச வர்ணத்தில் பெரிய நோட்டீசுகளாக அச்சிட்டு சென்னையில் ஒரு முக்கிய தெரு பாக்கியில்லாமல் ஒட்டி வைத்தோம். சரியாக, முக்கியமான இடங்களெல்லாம் விடாமல் ஒட்டி இருக்கிறார்களாவென்று, இராக்காலங்களில் சில அங்கத்தினரை அனுப்பி, பரிசோதிக்கச் செய்தோம். யார் இவ்வளவு பெரிய நோட்டீசுகள் ஒட்டினது என்று சென்னைவாசிகள் கேட்கும்படி செய்தோம்.
இதன்றி, 25000 கைநோட்டீசுகள் அச்சிட்டு ஒரு பென்ஷன் சிப்பாயைப் பிடித்து அவனுக்கு ஏறு குதிரை ஒன்று வாடகைக்கு ஏற்படுத்தி, அதன் மீது அவனை ஏற்றி, சேணத்தின் இரு புறத்திலும் இரண்டு பைகளில் நோட்டீசு களை நிரப்பி கையில் ஒரு ப்யூகிளை (bugle) கொடுத்து அனுப்பினோம். அவன் சந்துக்கு சந்து நின்று, ப்யூகிளை ஊதி, ஜனங்கள் சேர்ந்தவுடன் தன்னிடமிருக்கும் கைநோட்டீ களை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு போனான்! இம்மாதிரியாகப் பட்டணமெல்லாம் எங்கள் ஆட்ட நோட்டீசுகளைப் பரவச் செய்தோம்.
இதுவுமன்றி சென்னையிலுள்ள பெரிய மனிதர்களுக் கெல்லாம், பிரத்யேகமாக அறிக்கைப் பத்திரிகை அச்சிட்டு அனுப்பினோம். அக்காலத்தில் சபைக்கு குமாஸ்தா முதலிய சிப்பந்தியென்பதே கிடையாது; பத்திரிகைகளை யெல்லாம் அடித்து கவர்களுக்குள் போட்டு மேல் விலாசம் எழுதுவது முதலிய வேலைகளை யெல்லாம் நிர்வாக சபையாராகிய நாங்கள் ஐவருமே செய்தோம் - சம்பளமில்லாமல்.விக்டோரியா பப்ளிக் ஹாலினுடைய இரண்டு கேட்டுகளிலும், சிறு பந்தல்கள் போட்டு கம்பங்களுக்கெல்லாம் தழைகளைக் கட்டி, கொடிகள் நாட்டி அலங்கரித்தோம். ஆட்ட தினம் சாயங்காலம் 4 மணி முதல் 9 மணி வரை வாசிக்கும்படியாக பாண்டுக்காரர்களுக்கு ஏற்பாடு செய்தோம். (சபையானது பிரபலமடைந்த பிறகு இவைகளை யெல்லாம் பெரும்பாலும் நிறுத்திவிட்டோம்.) ஆட்டம் சரியாக 9-மணிக்கு ஆரம்பிக்க வேண்டுமென்று தீர்மானித்து, ஆக்டர்கள் அவரவர்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வருவதென்றால் நேரமாகுமென்றெண்ணி, நாடக தினம் ஆக்டர்களுக்கெல்லாம் ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் சத்திரத்தில், ஒரு பிராம்மணனிடம் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து சாயங்காலம் 4 மணிக்கெல்லாம் எல்லோருக்கும் சாப்பாட்டை முடித்தோம். உடனே ஆக்டர்களை யெல்லாம் டவுன் ஹாலுக்கு நேராக அழைத்துக் கொண்டு போனேன். போனதும் எல்லா ஆக்டர்களுக்கும் முதலில் ஸ்திரீ வேஷதாரிகளுக்கும், பிறகு ஆண் வேஷதாரிகளுக்குமாக, எல்லோருக்கும் க்ஷவர கல்யாணமாயிற்று! பிறகு முகங்களையெல்லாம் கழுவிக் கொண்டு, ஒவ்வொருவராக அப்பு வென்பவனெதிரில் போய் உட்கார்ந்தோம். இந்த அப்பு என்பவனைப் பற்றி முன்பே கொஞ்சம் எனது நண்பர்களுக்குக் குறித்திருக்கிறேன். இவன் எங்கள் சபை ஆரம்ப முதல், தான் இருந்த நாள்வரை, மனப்பூர்வமாக சபையின் நன்மைக்காக மிகவும் பாடுபட்டு உழைத்த தொழிலாளியானது பற்றி, இவனைக் குறித்து எனது நண்பர்களுக்குச் சற்று விவரமாய்க் கூற விரும்புகிறேன். ஆக்டர்களுக்கு வர்ணம் தீட்டுவதில் காலஞ்சென்ற சுப்பராயாச்சாரியிடம் தேர்ந்த மனிதன் இவன். நாடக தினம் காலையில், ஒரு கட்டை வண்டி பேசி, எங்கள் திரைகள், உடுப்புகள் முதலியவை களையெல்லாம், அதன் மீது ஏற்றிக்கொண்டு விக்டோரியா ஹாலுக்குப் போவான். அவைகளை இரண்டு ஆட்களைக் கொண்டு நாடகமாடும் மேல்மாடிக்குக் கொண்டு போவதன் முன் நான் அங்கு போய்ச் சேர்வேன். பிறகு அவனை அழைத்து இன்னின்ன திரை இன்னின்ன இடத்தில் கட்ட வேண்டும் என்று குறிப்பிடுவேன். நான் சொன்னபடி கொஞ்சமேனும் தவறில்லாமல் பன்னிரண்டு மணிக்குள்ளாகக் கட்டி முடிப்பான். (தற்காலம் இதே வேலையை முடிக்க, 5 ஆட்கள் தேவையாயிருக்கிறது.)
பிறகு வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து எங்கள் உடுப்புகளை யெல்லாம் கிரமமாக எடுத்து வைத்து, முகத்திற்கு வேண்டிய வர்ணங்களை யெல்லாம் சித்தம் செய்வான். அக்காலத்தில் இப்பொழுது இருக்கும் கிரீஸ் பெயின்ட் (Grease Paint) முதலிய சவுகர்யங்களே கிடையாது. அரிதாரம், செந்தூரம், கரிப்பொடி முதலியனதான் உபயோகிக்கப் பட்டன. அரிதாரம் முகத்தைக் கெடுக்குமென்று, முதலில் விளக்கெண்ணெயைத் தொட்டு நன்றாய்ப் பூசி விடுவான். பிறகு அரிதாரத்தை வஸ்திரகாயம் செய்து ஒரு துணியில் கட்டி, மெல்ல அதை முகத்தில் சமமாகத் தட்டி கையினால் ஒழுங்காகத் தேய்த்து விடுவான். பிறகு செந்தூரத்தைக் குழைத்து, கன்னங்களுக்கும், உதடுகளுக்கும் தீட்டி விடுவான். புருவத்திற்கு, கரிப்பொடியைக் குழைத்து ஈர்க்கினால் கோடுகள் கிழிப்பான். எல்லாம் முடிந்ததும் அபிரேக்கை வஸ்திரகாயம் செய்து, ஒரு முடிச்சாகக் கட்டி அதனால் முகம் முழுவதும் தட்டிவிடுவான்! இதுதான் அக்காலத்தில் வேஷம் தீட்டும் விதம். இப்பொழுது எல்லாம் மாறி விட்டபடியால், எனது நண்பர்கள் இப் பூர்வீக வழக்கம் அறிந்திருப்பது நலமென்றெண்ணி, இதை விரிவாகவுரைத்தேன்.
மேலே விவரித்தபடி ‘சுந்தரி’ நாடகத்திலுள்ள எல்லா ஆக்டர்களுக்கும் முகத்தில் வர்ணம் பூசியபின், அப்பு ஒருவனாக, பெண் வேடம் பூண்டவர்களுக்கெல்லாம் தலையில் டோபா கட்டி தலைவாரிப் பின்னல் போட்டான்; ஆண் வேடம் பூண்டவர்களுள் வேண்டியவர்களுக்குத் தலைமயிரைச் சுருட்டி விட்டான். இந்த வேலையைத் தற்காலத்தில் ஒரு நாடகத்தில் நான்கு கிரீன் ரூம் டைரக்டர்களும், ஒன்றிரண்டு உதவி செய்பவர்களுமாகச் செய்கிறார்கள். அக்காலத்தில் அவன் ஒருவனே செய்து முடிப்பான். தற்காலத்திலுள்ள விமரிசையும் ஒழுங்குமில்லா விட்டாலும் அவன் ஒருவனாக அத்தனைத் துரிதமாகச் செய்து முடித்தது மிகவும் மெச்சத்தக்கதே. ஸ்திரீ வேஷதாரிகளெல்லாம் நான் முன்பு குறித்தபடி, அவரவர்கள் வீட்டிலிருந்து புடவைகள் கொண்டு வந்து கட்டிக் கொண்டார்கள். சற்றேறக்குறைய எட்டு மணிக்கெல்லாம் எல்லா ஆக்டர்களும் தயாராகி விட்டோம். உடனே எங்கள் கண்டக்டராயிருந்த திருமலைப் பிள்ளை வந்து எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று விசாரித்து விட்டு என் கையிலிருந்து சீனிக் அரேன்ஜ்மென்ட்ஸ் காகிதம்அதாவது இன்னின்ன காட்சியில் இன்னின்ன படுதா விடவேண்டும், மேடையின் பேரில் இன்னின்ன நாற்காலிகள், படுக்கைகள் முதலியன வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட காகிதத்தை வாங்கிக்கொண்டார். இவர் எங்கள் ஒத்திகைதோறும் வந்திருந்து எங்களுக்குச் சொல்லிக்கொடுத்ததன்றி நாடகத் தினங்களில் செய்த உதவியைப்பற்றி எனது சிறிய நண்பர் அறிய வேண்டியது அதி அவசியம். நாடக தினத்திற்கு இரண்டு மூன்று நாள் முன்பே மேற்சொன்ன ஜாபிதாவை நான் தயார் செய்துவிடுவேன். நாடக தினம் பகல் வந்து, ஒவ்வொரு காட்சிக்கும் படுதா முதலியன விட்டு, வைக்க வேண்டிய சாமான்களை வைக்க வேண்டிய இடங்களில் வைத்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். ஏதாவது ஒன்று குறைவாயிருந்தாலும் விடமாட்டார்; இராத்திரிக்கு வைத்துக் கொள்ளுவோம் என்று யாராவது சொன்னால், ஒரே பிடிவாதமாக அது உதவாது என்று கூறி அதைக் கொண்டுவரச் சொல்லி வைத்துப் பார்த்த பிறகுதான் திருப்தி அடைவார். சுருக்கிச் சொல்லுமிடத்து நாடகத்தில் வசனத்திற்கும் பாட்டிற்கும் ஒத்திகை போட்டுப் பார்ப்பது போல, காட்சிகளுக்கும் ஒத்திகை போட்டுப் பார்ப்பார். அவர் கற்பித்த இந்த வழக்கத்தைப் பிற்காலம் எனது நண்பனாகிய ரங்கவடிவேலு முதலியார் அனுசரித்து வந்தார். எனது தௌர்பாக்கியத்தால் சில வருஷங்களுக்கு முன் நான் அவரை இழந்த பிறகு புதிய நாடகங்கள் ஏதாவது போடும்போதெல்லாம் நானும் அனுசரித்து வருகிறேன்.
பிறகு நாடகம் நடக்கும்பொழுது ஒரு பக்கமாய் நின்று ஒவ்வொரு காட்சி ஆனவுடன் பிறகு வரவேண்டிய காட்சிக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துவருவார். தன்மேற்சட்டையை கழற்றி விட்டு, ஷர்ட்டின் கைளைத் திருப்பிவிட்டு, வேலைக்காரர்களுடன் வேலைக்காரனாய், பூந் தொட்டிகளை எடுத்து வைப்பது முதலிய வேலைகளையும் தளராமல் செய்துவருவார். மேலே திரைகளாவது திரைக் கயிறுகளாவது ஏதாவது சிக்கி கொண்டால், உடனே, ஏணியின்மீது ஏறி பரணுக்குப்போய் அதைச் சரிப்படுத்துவார். தற்காலத்தில் கண்டக்டர் என்று பெயர் வைத்துக் கொண்டு, நாடகம் நடிக்குங்கால் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டு, பேசிக் கொண்டிருக்கும் சிலரை நான் பார்த்திருக்கிறேன்; அப்படிப் பட்டவர்களுக்கு, கண்டக்டர்கள் செய்ய வேண்டிய வேலைக்கு உதாரணமாக, திருமலைப்பிள்ளை அவர்களையே கூறுவேன். மேற்கூறியவை அன்றி நாடகம் நடக்கும் பொழுது அப்போதைக்கப்போது ஆக்டர்களை உற்சாகப் படுத்திக் கொண்டே வருவார்.
திருமலைப் பிள்ளை , எல்லாம் சரியாக இருக்கிறதா வென்று பார்த்துவிட்டு மேடைக்குப்போனவுடன், எங்களுக்குப் பாட்டு கற்பித்த வயோதிகரான தாயுமான முதலியார் மெல்லப் படியேறி மெத்தைக்கு வந்து எங்களுக்கெல்லாம் பிள்ளையார் கோயில் விபூதி கொடுத்தார். அதை நாங்களெல்லாம் சந்தோஷமாய் வாங்கி அணிந்துகொண்டு, சரியாக எட்டேமுக்கால் மணிக்கு, அதாவது நாடக ஆரம்பத்திற்குக் குறிக்கப்பட்ட மணிக்கு 15 நிமிஷம் முன்னதாகவே, தாயுமான முதலியார் எங்களுக்கு எழுதிக்கொடுத்த வினாயகர் துதி, சரஸ்வதி துதி பாட்டுகளை எல்லா ஆக்டர்களுமாகப் பாடினோம். பிறகு சரியாக ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பித்தோம்.
சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பித்து நாடகம் முடிவுபெற 2 மணியாயிற்று. அக்காலத்தில் இரவு இரண்டு மணிக்கெல்லாம் நாடகம் முடிய வேண்டுமென்று போலீஸ் நிர்ப்பந்தம் கிடையாது; அன்றியும் அக்காலத்தில் சாயங்கால் நாடகங் களின் அனுகூலத்தை ஜனங்கள் அறிந்திலர். ஆகவே வந்திருந்த ஜனங்களெல்லாம் 5% மணிசாவகாசம் எழுந்திருந்து போகாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். நாடகத்தைப்பற்றி நிஷ்பட்சபாதமாய்க் கூறுமிடத்து அவ்வளவு நன்றாய் ஜனங்களை ரமிக்கச் செய்யவில்லை என்றே நான் எண்ணுகிறேன். நாடகக் கதாநாயகன் வேஷம் தரித்த ரங்கசாமி ஐயங்கார் பாடல்கள் நன்றாய் இருந்ததெனக் கூறினர்; ஆயினும் அவர் நடித்தது அவ்வளவு உசிதமாயில்லை யென்றே பெரும்பாலும் கூறினார்கள். நாடகக் கதாநாயகி யாகிய ஜெயராம் நாயக்கரைப்பற்றி இதற்கு முற்றிலும் மாறுபாடாக எண்ணப்பட்டது; அதாவது நடித்தது நன்றாயிருந்ததென்றும் பாட்டு நன்றாயில்லை யென்றும்; என்னுடன் நடித்த சுப்ரமணிய ஐயரைப் பற்றிப் பார்க்க வந்தவர்கள் ஸ்திரீ வேஷம் நன்றாயிருந்தது, பாட்டு சுமார், நடித்தது போதாது என்று கூறினார்கள். விதூஷகன் வேஷம் தரித்த துரைசாமி ஐயங்காரைப் பற்றி அப்பாத்திரத்திற்கு ஏற்றபடி நன்றாயிருந்ததென்றே கூறினார்கள். மற்ற நடர்களைப்பற்றி ஒன்றும் விசேஷமாகக் கூறவில்லை ஆயினும், அன்றைத்தின நாடகத்தில் ஜனங்களின் மனத்தையெல்லாம் பூர்ணமாய் சந்தோஷிக்கச் செய்து அவர்களது கரகோஷத்தைப் பெற்றவர், ஒரே காட்சியில் குறத்தியாக வந்த முனுசாமி ஐயர் என்பவரே! இதை நாடக மேடையில் பிரசித்தி பெற விரும்பும் எனது சிறிய நண்பர்கள் நன்றாய்க் கவனிப்பார்களாக. சம்கி உடுப்புகளைத் தரித்துக் கொண்டு ராஜாவாகவும் ராஜகுமாரனாகவும் வந்த வேஷதாரி களை விட, விலையுயர்ந்த சரிகைப் புடவைகள் கட்டிக் கொண்டு கதாநாயகியாகவும் ராஜகுமாரியாகவும் வந்தவர்களைவிட, கிழிந்த கறுப்புப் புடவைக் கட்டிக் கொண்டு, முகத்தில் கறுப்பாகத் தோற்றக் கரியைப் பூசிக்கொண்டு, ஆபரணங்களுக்குப் பதிலாக, வெண்மணி கருமணிகளைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, அலங்கோலமாய் வந்த இந்தக் குறத்தி வேஷதாரியே, நாடகத்தைப் பார்க்க வந்தவர்களுடைய மனத்தைத் திருப்தி செய்தனர்! காரணம், அரங்கத்தில் வேஷம் தரித்து நடிக்கும் பொழுது மேற்கொண்ட நாடகப் பாத்திரத்தின் குணத்திற்குப் பொருத்தமான வேஷம் தரித்து நடிப்பதே முக்கியம் என்பதாம். என்னைப்பற்றி, எனக்குப் பாடல் நன்றாய் பாடத் தெரியவில்லை என்று உண்மையை எடுத்துரைத்தனர்; பாட்டே பாடத் தெரியாது என்று கூறியிருப்பார்களாயின் அது முற்றிலும் உண்மையாயிருக்கும். நான் நடித்ததைப் பற்றி மறுநாள் ஒரு செட்டியார் எனது நண்பராகிய சுப்பிரமணிய ஐயரிடம் கூறியதே சரியெனத் தோற்றுகிறது. அது, “நீ மொண மொண வென்று ஒருவருக்கும் கேட்காதபடி பேசுவதற்கு, வாயாடி அகமுடையாளைப் பிடித்ததுதான் சரி” என்று செட்டியார் தன்னிடம் சொன்னார் என்பதேயாம். அவர் என்னை வாயாடி என்று அழைத்ததற்கு நியாயமுண்டு; ஒரு காட்சியில், தனிமொழியாக நான்கு பக்கங்கள் வசனம் பேசினேன்! “என்னடா இவன் வள வளவென்று சும்மா பேசிக் கொண்டே போகிறான்” என்றொருவர் சொன்னார். ‘சாலிலோக்வி’ (soliloquy) என்னும் தனி மொழியானது எவ்வளவு நல்லதாயிருந்த போதிலும் நாடக மேடையில் அதிக நீளமுள்ளதாயிருந்தால் சோபிக்காது என்பதை, சில வருஷங்களுக்குப் பின்தான் தெரிந்து கொண்டேன். பிறகுதான் தனி மொழிகளைக் குறுக்கிச் சொல்லும் சூட்சுமம் அறிந்து கொண்டேன்.
சுப்பிரமணிய ஐயர் வசனமானது ஜனங்களுக்கு நன்றாய்க் கேட்கவில்லையென்று முன்பே குறிப்பித்தேன். இக்குறை இவரைப்பற்றி மாத்திரமன்று, மஹிஷத்தினுடைய சாரீரத்தைப் பெற்ற என்னைப் போன்ற இரண்டு மூன்று நாடகப் பாத்திரங்கள் தவிர மற்றவர்கள் பேசிய எல்லாம் முற்றிலும் சரியாகக் கேட்கவில்லை என்று ஏறக்குறைய எல்லோரும் கூறினார்கள். இது மிகவும் வாஸ்தவமான குறை என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். சாதாரணமாக மேடை மீதேறும் நடர்களில் பெரும்பாலர், தாங்கள் பேசும் வசனம், ஹாலில் வந்திருக்கும் எல்லோருக்கும் கேட்கிறதா என்று கவனிக்கிறதில்லை . இது பெரும் தவறாகும். ஒரு நடன் எவ்வளவு நன்றாய் நடித்த போதிலும், அவன் பேசுவது நன்றாய்க் கேட்காவிட்டால், அதில் என்ன பிரயோசனம்? அதைவிட ஊமையைப் போல் அபிநயம் பிடிக்கலாம். இக்குறையை எனது நண்பர்கள் நன்றாய்க் கவனித்து அகற்றுவார்களாக. முதலில் தங்களாலியன்ற அளவு உரக்கப்பேசக் கற்றுக்கொள்ளவேண்டும். இக்குணம் அநேக விஷயங்களில் அவர்களுக்குப் பிரயோசனத்தைத் தரும். பிறகு சபைகளில் பேசும்பொழுதும், மிகவும் உபயோகமாகும். எப்பொழுதும், உரக்கப் பேசக் கற்றுக்கொண்டு அப்யாசப்படுத்தினால், நமது சுவாசாசயங்கள் (Lungs) மிகவும் பலப்படும். சிறு வயது முதல் நான் உரக்கப்படிக்கவும் பேசவும் அப்யாசஞ் செய்தபடியால், எனக்கு இப்பொழுது 59 வயதாகியும் நான் பேசுவது கேட்கவில்லை என்கிற ஆட்சேபணை இன்றளவும், எந்த நாடக மேடையிலும் கிடையாது.
மேற்கண்ட குறையை நான் எடுத்துக் கூறிய போதிலும் நாங்கள் நாடகமாடிய விக்டோரியா பப்ளிக் ஹாலிலுள்ள குறையையும் எடுத்துக் கூறவேண்டியவனாயிருக்கிறேன். இந்த ஹாலானது, நாடகங்கள் ஆடுவதற்கேற்றபடியிருக்க வேண்டுமென்று கட்டப்பட்டதன்று. சாதாரண ஜனக் கூட்டங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டது. இந்த ஹாலில் பேசினால் கேட்கும்படியான சக்தி குறைந்தபடி யென்று எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். நான் இந்த 40 வருடங்களாகத் தென் இந்தியாவிலுள்ள அநேக நாடக மேடைகளிலிருந்து நடித்திருக்கிறேன். அவைகள் எல்லா வற்றைப் பார்க்கிலும் பேசுவதைக் கேட்கும் திறத்தில், விக்டோரியா பப்ளிக் ஹாலே மிகவும் கீழ்ப்பட்டதென்பது, என்னுடைய சொந்த அனுபோகம். இந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் முதல் முதல் நாடகமேடை போட்டவர்கள் சென்னை டிரமாடிக் சொசைடியாரே. அவர்களும் ஒன்றிரண்டு வருஷங் கள் பார்த்து இக் குறையை நிவர்த்திக்க முடியாதவர்களாய், இதை விட்டு மியூசியம் (Museum) தியேடருக்குப் போய்விட்டார்கள். சுகுண விலாச சபையாரும் தங்களாலி யன்றளவு இக்குறையைத் தீர்க்கப் பிரயத்தனப்பட்டார்கள். ஹாலுக்கு மேலே கம்பிகள் கட்டினால் அவைகளின் மூலமாகப் பேசுவது நன்றாய்க் கேட்கும் என்று சிலர் சொல்ல அதையும் செய்து பார்த்தோம். அரங்கத்தின்மீது உயரத்தில் ஜமக்காளத்தைப் பரப்பினால் இக்குறை நீங்கும் என்று சிலர் சொல்ல, அதையும் பார்த்தோம். ஒன்றிலும் பயன்படவில்லை. கடைசியாக எனது தீர்மானம் என்ன வென்றால், இந்த ஹாலில் நடிக்கும்பொழுது சுயமாக பலத்த சாரீரம் இல்லாதவர்கள் பேசும் பொழுதெல்லாம், கூடிய வரையில் அரங்கத்தின் முன்பாகத்தில் வந்து நின்று பேசவேண்டு மென்பதே.
இந்த எங்கள் முதல் நாடகத்தில் நடந்த ஒரு ஹாஸ்யமால் விஷயம் எனக்கு ஞாபகமிருக்கிறது. இரண்டாவது காட்சியில் ராஜகுமாரனும், மந்திரி குமாரனான நானும் காட்டில் வேட்டையாடும் பொழுது ஒரு பன்றி, மேடையின் மீது காட்டில் ஓடுவது போல் ஓடவேண்டியிருக்கிறது. அதற்காக யுக்தி செய்து, அட்டையில் பன்றியைப்போல் வெட்டி அதற்குத்தக்கபடி வர்ணம் பூசிக்கயிற்றினால் ஒரு பக்கமிருந்து மற்றொரு பக்கம் ஓடுவது போல் செய்து வைத்தோம். மத்தியானம் அது சரியாக ஓடுகிறதாவென்று ஒத்திகை செய்து பார்த்தோம். சரியாக இருந்தது. இராத்திரி நாடகம் நடக்கும் பொழுது சரியாகவே வேண்டியபடி ஒரு பக்கமிருந்து மற்றொரு பக்கம் ஓடியது. பிறகு நாங்களிருவரும் மேடையின் மீதிருந்து வேறு விஷயம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இந்தப் பன்றியானது மேடையின் பேரில் பின்பக்கம் வர ஆரம்பித்தது! அதற்குக் காரணம் என்னவென்று பிறகு விசாரித்த பொழுது, யாரோ தெரியாமல் அதைக் கட்டியிருந்த கயிற்றைப் பின் புறமாக இழுத்துவிட்டதாகத் தெரிய வந்தது. அது அப்பன்றியின் தவறல்ல. ஆயினும் அசந்தர்ப்பமாய் அது அங்கு வருவதை - அதுவும் பின்புறமாக நடந்து வருவதைக் கண்டவுடன் எனக்கு மிகவும் கோபம் வந்தது. நான் வேறு ஒன்றும் செய்வதற்கில்லாமல் என் கையிலிருந்த வில்லால் அதை அடித்து மேடையினின்றும் அகற்றினேன்! இரண்டு மூன்று தினங்கள் கழித்து, எனது நண்பரும் என்னுடன் துரைத்தனக் கலாசாலையில் நான்கு வருடங்கள் ஒன்றாய்ப் படித்தவருமாகிய காலஞ்சென்ற ராமராய நிம்கார் என்பவர் (பிறகு அவர் மந்திரியாகி, பானகல் ராஜா என்கிற பட்டப்பெயர் பெற்றார்), எங்கள் முதல் நாடகத்தைக் குறித்து என்னுடன் பேசியபொழுது, “நீ ஆக்டு செய்தது எல்லாம் நன்றாகத் தானிருந்தது. ஆயினும் பன்றி வேட்டையில், பன்றியை ஈட்டியால் குத்த வேண்டியது நம்முடைய வேட்டை சாஸ்திரமேயொழிய, வில்லால் அதை அடிக்கக் கூடாது” என்று கூறினார். பிறகு நான் நடந்த வாஸ்தவத்தைக் கூற, இருவருமாகப் பெருஞ்சிரிப்புச் சிரித்தோம். இதை நான் தெரிவியாதிருந்தால், “கருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு கருடி” என்பது உண்மையாயிருக்கும்.
மேற்சொன்னபடி சனிக்கிழமை இரவு சுந்தரி நாடகம் முடிந்தவுடன் ஆக்டர்களெல்லாம் வேஷங்களைக் கலைத்து விட்டு வீட்டிற்குப் போய் விட்டோம். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் எல்லோரும் சந்தித்துக் கொஞ்ச நேரம் முந்திய நாள் இரவு நாடகத்தைப் பற்றிப் பேசிவிட்டு, உடனே மறு நாடகமாகிய புஷ்பவல்லியின் ஒத்திகையை ஆரம்பித்தோம். முதல் நாடகத்தில் எங்களுக்குக்குறையாகத் தோன்றியவைகளை யெல்லாம் இந்த நாடகத்தில் சீர்திருத்த முயன்றோம்.
மறு சனிக்கிழமை இரவு சரியாக ஒன்பது மணிக்கு ‘புஷ்பவல்லி’ என்னும் நாடகத்தை ஆரம்பித்தோம். இந்த நாடகக் கதாநாயகனான ராஜகுமாரனாக நடித்தவர் சி.பி. சீதாராம நாயுடு என்பவர். அவர் அப்பொழுது வைத்தியக் கலாசாலையில் மாணாக்கனாகப்படித்துக் கொண்டிருந்தார்; பாட்டு சுமாராக இருக்கும்; ஆயினும் உருவத்தில் மிகுந்த அழகு வாய்ந்தவர். இவரது சுய பாஷை தெலுங்கு; இருந்தும் தமிழ் நன்றாகப் பேசுவார்; குரல் மாத்திரம் திடமானதல்ல. ஆகவே விக்டோரியா ஹாலில், இவர் பேசினது கடைசி வரைக்கும் கேட்கவில்லையென்கிற குறை இருந்தது. என்னுடைய அபிப்பிராயம் இவர் ஸ்திரீ வேஷத்திற்கு லாயக்கானவரே யொழிய ஆண்வேஷத்திற்கு ஏற்றவர் அல்ல என்பது. அப்படியே எங்கள் மூன்றாவது நாடமாகிய லீலாவதி - சுலோசனாவில் இவருக்கு ஸ்திரீ வேஷம் கொடுத்தேன்; இதன் பிறகு மீசை கொஞ்சம் நீளமாய் வளர்ந்து போக, வீட்டில் அதை எடுத்து விடுவதற்கு ஆட்சேபணை செய்கிறார்கள் என்று சொல்லி, இவர் ஸ்திரீ வேஷம் தரிக்க ஆட்சேபித்துவிட்டார். கதாநாயகியாக இந்நாடகத்தில் நடித்தவர் சுகுண விலாச சபையின் முதல் மெம்பராகிய ஜெயராம நாயகரே. இவர் முந்திய நாடகத்தில் நடித்ததைவிட, இந் நாடகத்தில் மிகவும் சாதுர்யமாக நடித்தார் என்பது என்னுடைய அபிப்பிராயம்; எங்கள் சபையில் நான் முன்பே குறித்தபடி பாட்டு நன்றாய்ப் பாடக் கூடியவராகிய எம்.வை. ரங்கசாமி ஐயங்கார், மந்திரி வேடம் பூண்டார். நான் மந்திரிகுமாரனான புத்திசேனன் வேடம் பூண்டேன். அ. சுப்பிரமணிய அய்யர், மந்திரிகுமாரன் மனைவியாகிய பானுமதி வேடம் தரித்தனர். இவரது பாட்டுகள் மிகவும் நன்றாயிருந்தன வென்று நாடகத்திற்கு வந்திருந்தவர்கள் கொண்டாடினார்கள். எம். துரைசாமி ஐயங்கார், விதூஷகன் வேடம் பூண்டார். இவர் நாடகம் பார்க்க வந்தவர்களை மிகவும் நகைக்கச் செய்தார். மற்ற ஆக்டர்களைப் பற்றி நான் ஒன்றும் விசேஷமாகக் கூறுவதற்கில்லை. இந்நாடகம் சுந்தரியைவிட, கொஞ்சம் சிறிதானபடியால், அதைவிட சீக்கிரம் முடிந்தது; அதாவது ஏறக்குறைய இரண்டு மணிக்கெல்லாம் முற்றுப் பெற்றது. நாடகம் முடிந்தவுடன், சீமைக்குப் போய் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஒருவரும், ஒரு டாக்டரும் ஆங்கிலேய பாஷையில் சபையின் இந்த இரண்டு நாடகங்களைப் பற்றிப் புகழ்ந்து சில வார்த்தைகள் கூறினர். அது ஆக்டர்களாகிய எங்களுக்கெல்லாம் மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. எங்களைப் புகழ்ந்தார்களே என்று யோசித்தோமே யொழிய, அப்புகழ்ச்சிக்குத் தக்க பாத்திரமானோமா என்று நாங்கள் கருதவில்லை.
இவ்விருவரில் ஒருவர் (அவர் பெயர் எனக்கு ஞாபகமில்லை) நாடகம் நடக்கும்பொழுது, இடையில் அரங்கத்திற்கு வந்து என்னைச் சந்தித்து “கிரீன் ரூம்” எங்கே என்று கேட்டார். அக்காலத்தில் அச்சொற்றொடரின் அர்த்தம் எனக்குத் தெரியாதிருந்தது! ஆகவே இங்கே கிரீன் ரூம் என்பது கிடையாது என்று பதில் உரைத்தேன். அவர், என்ன மூடனாயிருக்கிறான் இவன் என்றே என்னைப்பற்றி எண்ணியிருக்க வேண்டும். வாஸ்தவத்தில், கிரீன் ரூம் என்றால் ஆக்டர்கள் வேஷம் தரிக்கும் இடம் என்பதைப் பிறகுதான் தெரிந்து கொண்டேன். ஸம்ஸ்கிருதத்தில் இதற்கு நேபத்யம் என்று பெயர்.
என் அபிப்பிராயம் முதல் நாடகத்தைவிட, இந்நாடகத்தில் நாங்கள் எல்லோரும் நன்றாய் நடித்தோம் என்பது; இரண்டு நாடகங்களையும் பார்த்தவர்களில் பெரும்பாலர் அப்படியே அபிப்பிராயப்பட்டதாக அறிந்தேன்.
நாடகம் முடிந்தவுடன், ஆக்டர்களில் பெரும்பாலர், நாடக மேடையிலேயே, கொஞ்சநேரம் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்து அப்படியே தூங்கிவிட்டோம். மறுநாள் காலைதான் வீட்டிற்குப் போனோம். மறுநாள் சாயங்காலம், அதாவது ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம், ஆக்டர்கள், மெம்பர்கள் எல்லோரும் சபையின் ஸ்தலத்தில், ஒருங்கு சேர்ந்தோம். இரண்டாவது நாடகத்தில், நாங்களெல்லாம் நன்றாக நடித்தோ மென்கிற சந்தோஷத்தாலே, மிகவும் குதூஹலத்துடன் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டோம்! அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எங்கள் கண்டக்டராகிய திருமலைப்பிள்ளை அவர்கள் வந்து சேர்ந்தார். அவரும் நாங்கள் இந்த இரண்டாவது நாடகத்தில் சரியாக நடித்ததாகக் கூறிச் சந்தோஷப்பட்டார். அதன்பேரில், நாங்களெல்லோரும் சேர்ந்து, அப்படி “உங்கள் மனத்தைத் திருப்தி செய்ததற்காக, எங்களுக்கெல்லாம் ஏதாவது மிட்டாய் வாங்கிக் கொடுக்க வேண்டும்!” என்று நிர்ப்பந்தித்தோம். அவரும் சந்தோஷமாய் உடன்பட்டு உடனே இரண்டு ரூபாய்க்குப் பகோடா வாங்கி வரச் சொல்லி எங்கள் எல்லோருக்கும் வழங்கினார்.பிறகு நடந்த நாடகங்களில் இன்னின்ன குறையிருந்தது, இன்னின்ன விஷயங்கள் நன்றாயிருந்தது என்று எல்லோரு மாகக் கலந்து பேசினோம். அன்று முதல் சற்றேறக்குறைய இருபத்தைந்து வருஷங்கள் வரை, நாடகம் முடிந்த மறுதினம் இம்மாதிரியான கூட்டங்கள் நடத்தி வந்தோம். இவைகளுக்குப் “பகோடா மீட்டிங்” என்று பெயர் வழங்கலாயிற்று. சில வருடங்களாக இடையில் இவ்வழக்கம் இல்லாதிருந்தபோதிலும் மறுபடியும் இவ்வழக்கத்தை விடாது தொடரவேண்டுமென்று கொஞ்ச காலமாகப் பிரயத்தனப்படுகிறோம். இப்படி ஒரு நாடகத்தில் நடித்த ஆக்டர்களெல்லாம் மறுதினம் ஒருங்குகூடி, அந்நாடகத்தைப் பற்றிப் பேசுவது அதி அவசியம். அதனால் மிகவும் நலமுண்டு என்று என்னுடைய தீர்மானமான எண்ணம். இவ்வாறு ஒருங்கு சேர்ந்து ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்ள வேண்டுமென்பதல்ல என் கோரிக்கை. முக்கியமாகக் குறைகளை எடுத்துப்பேசி அவைகளைத் தீர்க்க வேண்டிய மார்க்கம் தேடுவதுதான் இப்படிப்பட்ட கூட்டத் தினாலுண்டாகும் பெரும் நன்மையாம். அன்றியும் நாடகம் நடக்கும்பொழுது ஒரு ஆக்டருக்கும் மற்றொரு ஆக்டருக்கும் மாச்சரியம் உண்டாகக்கூடும். ஒருவன் தன் வசனத்தை மறந்து மற்றொருவனுக்குக் கஷ்டமுண்டாக்கியிருக்கலாம். பாட்டிற்கு ஸ்ருதி எடுத்துக் கொடுக்க வேண்டியவன் தப்பான ஸ்ருதியை எடுத்துக் கொடுத்திருக்கலாம்; ஒருவன் அரங்கத்தில் வரவேண்டிய காலப்படி வராமல், மற்ற ஆக்டர்களுக்குக் கஷ்டம் கொடுத்திருக்கலாம் இவ்வாறு ஒரு நாடகத்தில் ஆக்டருக்கும் ஆக்டருக்கும், மனவருத்தமுண்டாக்கத்தக்க அநேக சிறு விஷயங்கள் நடந்திருக்கலாம். இவைகளை யெல்லாம் மனத்தில் அடக்கி வைத்துப் புகைய விடாது, வெளிப்படையாய் எடுத்துப் பேசி மனத்திலிருப்பதை வெளியிட்டால், இம்மாதிரியான சிறு மாச்சரியங்களெல்லாம் மனத்தில் நிற்கா. ஏதாவது தப்பு நடந்திருந்த போதிலும், ஒருவரையொருவர் மன்னித்துக் கொள்ள இது மிகுந்த அனுகூலமான சமயமாம். சென்னை ராஜதானியில் இப்பொழுது அநேக இடங்களில் கற்றறிந்தவர்கள் நாடக சபைகளை ஏற்படுத்தி யிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த “பகோடாமீட்டிங்”கை நாடகத்தின் மறுதினம் மறவாது வைக்கும்படியாக இதனால் நான் விண்ணப்பம் செய்து கொள்ளுகிறேன். இதனால் இன்னொரு பெரிய அனுகூலமுண்டு. அதென்னவெனில், நமது முன்னோர்கள் கூறும் மூன்று வைராக்கியங்களாகிய, புராண வைராக்கியம், ஸ்மாசன வைராக்கியம், பிரசவ வைராக்கியம் என்பவைகளோடு, நாடக வைராக்கியம் என்பதையும் சேர்த்து நான்காவது வைராக்கியம் என்பதாகச் சொல்ல வேண்டும். ஒரு நாடகத்தை எழுதி, ஆக்டர்களைத் தயார் செய்து, ஒத்திகைகள் நடத்தி மேடையேற்றுவதென்றால், அக்கஷ்டத்தை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். அன்றியும்; ஒரு வேஷம் தரித்து நாடகமாடுவதென்றால் அதன் கஷ்டமும் நடித்த நடனுக்குத் தான் தெரியும். “பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம். பிள்ளை பெறாப் பேதையறிவாளோ?” என்றார் தாயுமானவர். வெளியில் ஹாலில் ஒன்பது மணிக்கு வந்து வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு வேடிக்கையாய் மூன்று அல்லது நான்கு மணி அவகாசம், பாட்டைக் கேட்டு, நடிப்பதைப் பார்த்துச் சந்தோஷித்துப் போகுபவர்களுக்கு, மேடையின் பேரில் நடிக்கும் ஆக்டர்கள் படும் கஷ்டம் என்ன தெரியும்? ஒரு நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, அந்நாடகப் பாத்திரத்தின் வசனத்தை யெல்லாம் எழுதிக்கொண்டு குருட்டுப் பாடம் செய்து, அதற்குத் தக்க பாட்டுகளைத் தேர்ந்தெடுத்து பாட்டுகளைக் கட்டிக் கொடுக்கச் செய்து சிரமப்பட்டு அவைகளைப் பழகி, ஒத்திகைகளுக்கெல்லாம் தவறாமல் காலப்படி போய், ஒத்திகைள் நடத்தும் கண்டக்டர்கள் கூறும் குறைகளை யெல்லாம் பொறுத்து, அவர்கள் வசைகளை யெல்லாம் சகித்து, நாடக தினம் ஆரம்பத்திற்கு மூன்று நான்கு மணி நேரம் முன்னதாக ஹாலுக்குப் போய் க்ஷவரம் செய்து கொண்டு (ஸ்நாநமில்லாமல்), ஒரு மணிசாவகாசத்திற்குமேல் கஷ்டப்பட்டு முகத்தில் வர்ணம் முதலியவற்றைப் பூசிக் கொண்டு, வேஷத்திற்குத் தக்கபடி ஆடை முதலியவற்றை அணிந்து, (சில சமயங்களில் சில ஆக்டர்கள் அனுமார் முதலிய குரங்கு வேஷம் தரிக்க வேண்டுமென்பதை இதைப் படிக்கும் எனது நண்பர்கள் கவனிப்பார்களாக) நாம் நடிப்பதும் பாடுவதும் வந்திருக்கும் ஜனங்களுக்குத் திருப்திகரமா யிருக்கிறதோ இல்லையோ என்னும் சந்தேகத்துடன், நாலு மணி சாவகாசம் மேடையில் நடித்து, நாடகத்தை முடிக்கும் ஒவ்வொரு ஆக்டருக்கும், நாடகம் முடிந்தவுடன் தன் தலையிலிருந்த பெரும்பாரம் நீங்கியது போலத்தான் தோன்றும் என்பதற்குச் சிறிதேனும் சந்தேகமில்லை. கடைசியாக ஒரு முக்கியமான கஷ்டம் ஒன்றைச் சொல்ல மறந்தேன். வேஷம் போட்டுக் கொள்வதற்கு ஒரு மணி சாவகாசமானால் அதை ஒழிப்பதற்கு அரைமணி சாவகாசமாகும்! சில சமயங்களில் கிருஷ்ணவேஷம் புத்தர் வேஷம் முதலிய வேஷம் தரிப்பவர்கள், ஏறக்குறைய உடல் முழுவதும் வர்ணம் தீட்டிக்கொள்ள வேண்டியிருந்தால், அந்த வர்ணமானது மறுநாள் காலை எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஸ்நாநம் செய்தால்தான் போகும்!
களைத்து அலுத்துப் போயிருக்கும் பொழுது வேஷத்தை அழிக்க வேண்டிய சமயத்தில் எத்தனையோ ஆக்டர்கள் “அப்பா! இனி இந்தத் தொல்லை வேண்டாம்! மறுபடியும் நான் அரங்கத்தின் பேரில் ஏறுகிறேனா பார்” என்று சொல்லியதைப் பன்முறை கேட்டிருக்கிறேன். எனக்கும் அவ்வண்ணம் பன்முறை தோன்றியிருக்கிறது. ஆயினும் மற்ற வைராக்கியங்களைப்போல் இந்த வைராக்கியமும் இரண்டு மூன்று நாட்களுக்குள் மறைந்து போம். இப்படி மறப்பதற்கு மிகவும் அநுகுணமான விஷயங்களில் இந்த “பகோடா மீடிங்” ஒன்றாம்! பட்ட கஷ்டங்களையெல்லாம் மறந்து, வேடிக்கையாகப் பேசி, பகோடா சாப்பிட்டு விட்டு, சந்தோஷமடைந்த பின், “உம் -அப்புறம் - பிறகு என்ன நாடகம் எடுத்துக்கொள்வோம்!” என்று மெல்லப் பேச ஆரம்பிப்பது வழக்கம்! அவ்வாறு எங்கள் முதல் பகோடா மீடிங்கிலும் கடைசியில் வீட்டிற்குப் புறப்படுமுன் யாரோ ஒருவர் “பிறகு என்ன நாடகம் போடுவது?” என்கிற கேள்வி கேட்டார்.
மேற்சொன்ன இரண்டு நாடகங்களுள் “சுந்தரி” என்பது எங்கள் சுகுண விலாச சபையில் மறுபடியும் முழு நாடகமாக ஆடப்படவேயில்லை. “புஷ்பவல்லி”யும் அப்படியே. இதில் இரண்டு காட்சிகள் மாத்திரம் சபையின் நவராத்திரி கொண்டாட் டத்தில் ஒருமுறை பிறகு ஆடப்பட்டதென்பது என் ஞாபகம். ஆயினும் இவ்விரண்டு நாடகங்களும் பெங்களூரில் 1896ஆம் வருஷம் ஸ்தாபிக்கப்பட்ட சுகுண விலாச சபையின் கிளைச் சபையிலும், இன்னும் இதர சபைகளிலும் சில முறை ஆடப்பட்டிருக்கின்றன. இருந்தும், நான் எழுதிய நாடகங்களுள் இவ்விரண்டும் மிகுந்த குறைவான தரம் ஆடப்பட்டன வென்றே சொல்ல வேண்டும். இவ் விரண்டு நாடகங்களையும் அநேக வருஷங்கள் பொறுத்தே அச்சிட்டேன். “சுந்தரி” ஒன்பது வருஷங்களுக்கு முன் இரண்டாம் பதிப்பு ஏற்றது. “புஷ்பவல்லி”யை இரண்டாம் முறை போன வருடந்தான் அச்சிட்டேன். இவை இரண்டும் அவ்வளவாகச் சிறந்த நாடகங்களாக இல்லாவிட்டாலும், முப்பத்தொன்பது வருடங்களுக்கு முன் எழுதிய இந் நாடகங்களை, மறுபடி அச்சிடுவதற்காக நான் படிக்கவேண்டி வந்தபொழுது, இவைகள் எனக்கொருவிதமான சந்தோஷத்தைத் தந்தனவென்றே கூறவேண்டும். நாடகம் எழுதுவதில் பிறகு நான் கொஞ்சம் தேர்ச்சி பெற்றவனாகிய போதிலும், முப்பத்தொன்பது வருடங்களுக்கு முன் இவ்விரண்டு நாடகங்களையும் எப்படி எழுதினேனோ, அப்படியே ஒருவார்த்தையையும் மாற்றாமல் அச்சிட்டேன். இவ்விரண்டு நாடகங்களையும் விட்டுப் பிரியுமுன் அவைகளைப் பற்றி இன்னொரு வார்த்தை கூற விரும்புகிறேன். அதாவது புதிதாய் ஏற்படுத்தப்படும் நாடக சபைகளும், பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்களும், முதல் முதல் ஏதாவது நாடகம் ஆட எடுத்துக்கொள்ள விரும்பினால், இவைகளில் ஒன்றை எடுத்துக்கொள்வது சௌகர்யமாயிருக்கும் என்பதேயாம். இவ்விரண்டு நாடகங்களையும் அதிகக் கஷ்டமில்லாமல் ஆடலாம்.