நாடக மேடை நினைவுகள்/ஐந்தாம் அத்தியாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஐந்தாம் அத்தியாயம்

மேற்சொன்ன கோவிந்தசாமிராவுடைய மாணவர்களுள் சிறந்தவர்கள் நான்கு பெயர்கள் - கோனேரி ராவ், சுந்தர ராவ், குப்பண்ண ராவ், பஞ்சநாத ராவ். இந்நால்வரும் அவரால் நாடகமாடுவதில் நன்றாய்ச் தேர்ச்சி பெற்றவர்கள். அன்றிரவு ஆடிய நாடகத்தில் கோனேரி ராவ் என்பவர் ‘அயன் ராஜபார்ட்’ என்று வழங்கப்பெற்ற ராஜ குமாரன் வேஷம் தரித்தார்; சுந்தர ராவ் செட்டி மகளாக வேஷம் பூண்டார்; குப்பண்ண ராவ் ராஜ குமாரனுடைய முதன் மனைவியாகத் தோன்றினார்; பஞ்சநாத ராவ் விதூஷகனாக வேடம் கொண்டார்.

கோனேரி ராவ் சங்கீதத்தில் மிகவும் தேர்ந்தவர்; சாரீரம் மிகவும் சிறந்ததானவர்; சரீரமும் அப்படியேயிருக்கும். இதனால் இவருக்கு எப்பொழுதும் ‘அயன் ராஜபார்ட்’ என்று இப்பொழுதும் வழங்குகின்ற முக்கியமான வேஷங்கள் கொடுக்கப்பட்டன; அதாவது நாடகங்களில் பெரும்பாலும் கதாநாயகனாக வருவார்; ஆயினும் இவரது வசனமும், மேற்கொண்ட பாத்திரங்களுக்குத் தக்கபடி நடிப்பதும் என் மனத்திற்கு எப்பொழுதும் திருப்தியைத் தரவில்லை. இவர் கோவிந்தசாமி ராவினுடைய கம்பெனியை விட்டு விலகி சீக்கிரம் வேறொரு நாடக சபை ஏற்படுத்தி ஆடி வந்தார், சில வருஷங்கள். இவரை நான் சில வருஷங்களுக்குப் பிற்காலம் பார்த்தபொழுது வறுமையடைந்தவராகி நோயாளியாய், நாடக சபையில் டிக்கட்டுகள் சரிபார்க்கும் இடத்தில் உட்கார்ந்திருந்தார்! இவரது நடவடிக்கையே இவரை அந்த ஸ்திதிக்குக் கொண்டு வந்துவிட்டது போலும்.

சுந்தர ராவ் என்பவர் சாதாரணமாக அக்கம்பெனியின் நாடகங்களில் முக்கிய ஸ்திரீவேஷம் தரிப்பவர். நல்ல சாரீரமும் சங்கீத ஞானமும் வாய்ந்தவர். இவர் மேடையில் நின்று பாடும் பொழுதெல்லாம் ஜனங்கள் நிசப்தமாய்க் கேட்பார்கள். சிறிது கருமை நிறம் வாய்ந்தவராக இருந்தபோதிலும் ஸ்திரீ வேஷம் தரித்தால் பொருந்தியதாகவே யிருக்கும். இவரை நான் முதன் முதல் பார்த்தபொழுது ஒத்தை நாடியுடையவராயிருந்த போதிலும் நாளடைவில் ஸ்தூல சரீரமுடையவாராய் ஆகிவிட்டார். அவ்வளவாகியும், ஸ்திரீ வேஷம் பூணுங்கால் இவரது நடையுடை பாவனைகளெல்லாம் ஏற்றதாகவே யிருந்தன. இவரும் கொஞ்ச காலம் பொறுத்து தனியாக வேறொரு நாடகக் கம்பெனி ஏற்படுத்தினார். கோவிந்தசாமி ராவ் க்ஷணதசையை யடைந்தபிறகு, தன் மாணாக்கனாகிய இந்த சுந்தரராவ் கம்பெனியில் தானே ஒரு வேஷதாரியாக நடித்தார்! ஊழிற் பெருவலி யாவுள?

அன்றிரவு என்முன் நாடகமாடியவர்களுள் என் மனதைக் கவர்ந்தவர் குப்பண்ணராவே. இவருக்கு சற்றேறக்குறைய பாடவே தெரியாது. ஆயினும் வசனத்தில் மற்றெல்லோரை யும்விட மேம்பட்டிருந்தார். இவர் அன்று ராஜகுமாரனுடைய முதன் மனைவியாக நடித்தது இப்பொழுதும் என் மனத்தில் குடிகொண்டிருக்கிறது. இவர் துன்மார்க்கமுடைய ஸ்திரீயாக நடிப்பதில் மிகுந்த நிபுணர்.

இக்கம்பெனியில் தாரை, சித்ராங்கி முதலிய வேஷங்களை இவர்தான் தரிப்பார். ஸ்திரீகளுடைய நடவடிக்கைகளை மிகவும் நுட்பமாய் ஆராய்ந்து அதன்படி நடிக்கும் சிறந்த சக்தி வாய்ந்தவர். இவர் மேற்குறித்த இரண்டு நடர்களைப் போல் அற்பாயுசுடையவராயன்றி, அநேக வருஷம் வாழ்ந்திருந்தார். வயோதிகரான பிறகும் ஸ்திரீ வேஷம் தரித்து வந்தார். நான் பிறகு எழுதிய நாடகமாகிய லீலாவதி சுலோசனாவில் இவர் லீலாவதியாக நடித்தார். இவரை நான் கடைசி முறை பார்த்தது அந்த வேஷத்தில்தான். இவர் அந்த லீலாவதியாக நடிப்பதைப் பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் கூறவேண்டி வரும்.

அன்றைத்தினம் விதூஷகனாக வேடம் பூண்ட பஞ்சநாதராவ் அவ்வேடத்தில் தனக்கு நிகரில்லை என்று பெயர் பெற்றவர். அவரை அவரது நேயர்கள் ‘பஞ்சு’ என்றும் ‘பஞ்சண்ணா’ என்றும் அழைப்பார்கள். ஸ்தூல தேகமுடையவராயிருந்தார். அக்காலத்திய வழக்கத்தின்படி விதூஷகனாக வரும் பொழுதெல்லாம் முதலில் நர்த்தனம் செய்தே பிறகு தான் சொல்ல வேண்டிய வசனத்தை ஆரம்பிப்பார். இவர் இந்த வேஷத்தில் எப்பொழுதும் பூணும் ஆடையானது ஆங்கிலேய கிளொன் (Clown) அல்லது பப்பூன் (Buffoon) உடையேயாகும்! சராயும் சொக்காயும் அப்படியேயிருக்கும். பல வர்ணங்களுடையதாய இந்த உடுப்பிற்கு இவர் பரிகாசமாய் சோபா (Sofa) டிரஸ் என்று பெயர் வைத்தார். அதாவது சோபா முதலிய நாற்காலிகளுக்குப் போடும்படியான உடுப்பு என்று அர்த்தமாகும். தலையில் மாத்திரம் வெள்ளைக்கார பபூன்களைப் போல் கோணக் குல்லாய் அணிவதில்லை. ராமாயணக் கதையாயிருக்கட்டும், பாரதக் கதையாயிருக்கட்டும், தாராசசாங்க மாயிருக்கட்டும், என்ன நாடகமாயிருந்தபோதிலும் இவருக்கு இந்த விதூஷகன் உடுப்பு ஒன்றே; சாதாரணமாக பாத்திரங்களுக்கேற்றபடி உடைகள் அணியச் செய்த கோவிந்தசாமி ராவ் அவர்கள் இந்த ஆபாசத்தை ஏன் சீர்திருத்தாதிருந்தாரோ காரணம் அறிகிலேன். அது சாங்கிலி நாடகக் கம்பெனியாருடைய வழக்கம். இந்தப்படி விதூஷகனாக வந்த இவருக்கு இன்ன காட்சியில் தான் வரலாம், இதைத்தான் பேசலாம் என்னும் வரையறை கிடையாது. தனக்கிஷ்டமானபடி எந்தக் காட்சியிலும் நடுவில் வந்துவிடுவார். தாரையும் சந்திரனும் அந்தரங்கமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் சமயத்திலும் நடுவில் நுழைந்துவிடுவார்! அன்றியும் நாடகக் கதைக்குப் பொருத்தமானதோ இல்லையோ ஜனங்களுக்கு சிரிப்பையுண்டாக்குமென்று தோன்றினால் எதை வேண்டுமென்றாலும் பேசி விடுவார். இக்குறை அவரைப் பொறுத்ததன்று. அக்காலத்திய நாடகங்களின் வழக்கத்தைப் பொறுத்ததாகும். முக்கியமாகத் தன் ஆசிரியராகிய கோவிந்தசாமி ராவையே சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் அரங்கத்தின் மீது ஏளனம் செய்து விடுவார். உண்மையில் மிகுந்த புத்திக்கூர்மை வாய்ந்தவரென்றே கூறவேண்டும். சந்தர்ப்பத்திற்குத் தக்கப்படி திடீரென்று புத்தி சாதுர்யமாக விகடம் செய்வதில் இவர் மிகுந்த நிபுணராயிருந்தார். இவர் வேடிக்கையாய்க் கூறிய பல சமாசாரங்களை நான் எனது நாடகங்களில் சில இடங்களில் உபயோகப்படுத் தியிருக்கிறேன். இவர் நாடக மேடையில் வந்தவுடன் ஜனங்களெல்லாம் நகைக்க சித்தமாயிருப்பார்கள். இவர் ஏதாவது அசௌக்கியமாய் ஒரு தினம் வேஷம் தரிக்கா விட்டால், அன்றைக்கு காலரி (Gallery) வகுப்பில் பெரும் குழப்பமுண்டாகும். இவரும் காலகதியால் க்ஷணதசைக்குப் பிறகு வந்துவிட்டதை நினைத்து இப்பொழுதும் நான் துக்கப்படுகிறேன். கடைசியில் சில வருஷங்களுக்கு முன் நான் பார்த்தபொழுது, தனது ஹாஸ்ய வார்த்தைகளையெல்லாம் மறந்து வெறும் மரப்பாவையைப் போல அரங்கத்தின் மீது வந்து நிற்பார். நான் ஆச்சரியமும் பரிதாபமும் கொண்டனவாகி, இவர் மாறியிருப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்த பொழுது, இவருக்கு யாரோ சூன்யம் வைத்து விட்டார்கள் என்று சொன்னார்கள். இது எவ்வளவு உண்மையோ அறியேன் நான். ஆயினும் அச்சமயம் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய பிரசித்தி பெற்ற நாடகமாகிய ஹாம்லெட் என்னும் நாடகத்தில், ஹாம்லெட், தன் தந்தையின் அரண்மனை விதூஷகனான யாரிக் (Yorick) என்பவனைப் பற்றிக் கூறிய வார்த்தைகள், எனக்கு நினைவுக்கு வந்தன. “அவனை நான் நன்றாய் அறிவேன். அபாரமான விகடமுடையவன், அதிசூட்சும புத்தியுடையவன். இப்பொழுது உன் விளையாட்டுகள் எங்கே? வினோதங்கள் எங்கே? ஆடல்கள் எங்கே? பாடல்களெங்கே? சபையோரை எல்லாம் சந்தோஷத்தால் ஆரவாரிக்கச் செய்யும் உனது சாதுர்ய மொழிகள் எங்கே? உனது இளிப்பையாவது ஏளனம் செய்ய ஒன்றையாவது கூறமாட்டாயா? உன் முகவாய்க்கட்டை அடியுடன் அற்றுப் போயதா!” இவர் தன் தேகஸ்திதியை ஜாக்கிரதையாகக் கவனிக்காதபடியால் அக்கதிக்கு வந்தார் போலும்!

மேற்சொன்ன நான்கைந்து நாடகப் பாத்திரங்களில் அன்றைத் தினம் நாடகத்தில், என் மனத்தைக் கவர்ந்தவன் இன்னும் ஒருவனே. அவன் வாலிபனான மந்திரிகுமாரன் வேஷம் தரித்தான். அவன் வயது சற்றேறக்குறைய என் வயதுதான் இருக்கும். அன்றியும் அன்றிரவு நாடகத்தில் இவன் பாடவேயில்லை! இவ்விரண்டும்தான் இவன் மீது என் மனத்தை உந்தியதோ என்னவோ? இவன் வசனமானது மிகவும் சுத்தமாக இருந்தது. அன்றிரவு நாடகம் முடிவதற்குள் இந்தக் கதையையே நான் நாடகமாக எழுதி, இவன் பூண்ட மந்திரிகுமாரன் வேஷமே நான் பூணவேண்டுமென்று தீர்மானித்தேன்.

இந்நாடகத்தில் நான் கண்ட ஓர் ஆபாசம் மாத்திரம் என் மனத்தை வருத்தியது; ராஜகுமாரனுடைய முதன் மனைவி, தன் சோர நாயகனாக ஒரு குஷ்டரோகியிடம் சென்றதாக ஒரு காட்சி நடிக்கப்பட்டது. இது எனக்கு மிகவும் வெறுப்பைத் தந்தது. என்னதான் கெட்டவாளயிருந்த போதிலும் ஓர் அழகிய ராஜகுமாரி குஷ்டரோகியிடம் அணுகமாட்டாள் என்று தீர்மானித்தவனாய், நான் எழுதும்பொழுது இதை மாற்றிவிட வேண்டுமென்று தீர்மானித்தேன். எனக்கு அருவருப்பைத் தந்த போதிலும் அங்கு நாடகம் பார்க்க வந்த ஜனங்கள் இக்காட்சியைக் கண்டு சந்தோஷப்பட்டனர் என்றே நான் உரைக்க வேண்டும். இவ்விஷயத்தைப் பற்றி அன்றிரவு என் தந்தையுடன் நான் கலந்து பேசியபொழுது, நான் எண்ணியது தான் சரியென்று அவரும் ஆமோதித்தார். அன்றிரவு நாடகம் முடிந்து நாங்கள் வீட்டிற்குப் போவதற்கு சுமார் இரண்டரை மணியாச்சுது!

மறுநாள் நான் எழுந்திருந்து என் காலைக்கடன்களை முடித்தவுடன், முந்திய தினம் இரவு நான் பார்த்த கதையை நாடகமாக எழுத உட்கார்ந்தேன். கதா நாயகிக்கு, புஷ்பவல்லி என்கிற பெயரை இட்டு, நாடகத்திற்கும் அப்பெயரையே வைத்தேன். கோவிந்தசர்மி ராவ் நடத்திய நாடகத்தில் எந்தப் பாத்திரத்திற்கும் பிரத்தியேகமாகப் பெயர் கிடையாது. ராஜகுமாரன், மந்திரி குமாரன், ராஜா, மந்திரி, செட்டி, செட்டிப் பெண் என்ற அழைக்கப்பட்டார்களே யொழிய ஒவ்வொரு நாடகப் பாத்திரத்திற்கும் பிரத்யேகமான பெயர் கிடையாது! தான் ஆட விரும்பிய மந்திரிகுமாரன் பாத்திரத்திற்குப் புத்திசேனன் என்று பெயர் வைத்தேன். சாப்பிடுகிற வேளை தூங்குகிற வேளை தவிர மற்றக் காலமெல்லாம் எழுதுவதற்கே செலவழித்து மறு வியாழக்கிழமைக்குள் ஏறக்குறைய பாதி நாடகத்தை எழுதி முடித்தேன். இதை எழுதியதில் மனமோஹன நாடகக் கம்பெனி நடர்கள் உபயோகித்த வார்த்தைகளையே பெரும்பாலும் நான் உபயோகித் திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அக்காலத்தில், எனக்கு வயது பத்தொன்பதாயிருந்தபடியால் என் ஞாபக சக்தி அதிகமாயிருந்தது. நான் பார்த்த நாடகக் கதையில் ஒரு முக்கியமான வித்தியாசம் மாத்திரம் உண்டு பண்ணினேன். முன்பே நான் கூறியபடி ராஜகுமாரனது முதல் மனைவி குஷ்ட ரோகியிடம் போனதாக நடித்ததை மாற்றி அரசனது சபையிலிருந்த ஒரு கனவானிடம் களவாகப் போனதாக மாற்றினேன். அந்த வியாழக்கிழமை சாயங்காலம் சபைக்குப் போனபோது, எனது நண்பர்களை யெல்லாம் ஒருங்குசேர்த்து, என்னைச் சுற்றிலும் உட்கார வைத்துக்கொண்டு நான் எழுதியதைப் படித்துக் காட்டினேன். அவர்கள் எல்லாம் மிகவும் நன்றாயிருக்கிறதெனச் சந்தோஷப்பட்டார்கள். இதை இங்கு நான் தற்புகழ்ச்சியாக எடுத்துக் கூறவில்லை. நடந்த உண்மையெல்லாம் எனது நண்பர்களுக்கு நான் கூறவேண்டும் என்று நான் மேற்கொண்ட நியமனத்தின் படிதான் கூறுகிறேன். நான் அன்று தொடங்கி இதுவரையில் எழுதியிருக்கும் சற்றேறக்குறைய அறுபது நாடகங்களில் இது மிகவும் கீழ்ப்பட்டதென்பதே என்னுடைய உறுதியான தீர்மானம். ஆயினும் அச்சமயத்தில் எனக்கு இது மிகுந்த ஆனந்தம் விளைத்தது. முக்கியமாக என் இளைய நண்பர்களெல்லாம் இதைப் புகழ்ந்ததே இதற்கு முக்கியமான காரணமாயிருக்கலாம். அன்றியும் ஒரு தாய், பிறகு எத்தனை புத்திசாலிகளான குழந்தைகளைப் பெற்றபோதிலும், முதலிற்பெற்ற குழந்தை, புத்தியில்லாததாயிருந்தபோதிலும், அவலட்சணமுடையதாயிருந்த போதிலும் அதன்மீது ஒரு விதமான அபூர்வ ஆர்வமுடையவராயிருப்பதுபோல, இந்தப் புஷ்பவல்லி என்னும் நான் முதல் முதல் எழுதிய நாடகத்தின் மீது எனக்கு இன்னாளளவும் ஓர் அன்பு உண்டு. இந்த நாடகமானது இதுவரையில் சில முறையே சுகுண விலாச சபை முதலிய சபைகளில் நடிக்கப்பட்டது.

அன்றைத்தினம் நான் எழுதிய பாகத்தைப் படித்தவுடன் எனது நண்பர்கள், நான் சீக்கிரம் மற்ற பாகத்தையும் எழுதி முடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். இவர்கள் வேண்டுகோளுக்கிணங்கியோ அல்லது முடிக்கவேண்டு மென்னும் என்னுடைய ஆர்வத்தினாலோ உந்தப்பட்டவனாய், வெகு சீக்கிரத்தில் அந்த நாடகத்தை எழுதி முடித்தேன். நான் நாடகத்தை முடிக்கு முன்னமே, சபையின் நிர்வாக சபையில் இன்னின்னார் இன்னின்ன பாத்திரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. எனக்கு ஞாபகம் இருக்கிறபடி, கதாநாயகனான ராஜகுகுமாரன் வேஷம், முன்பு நான் கூறிய வரதராஜுலு நாயகருக்குக் கொடுக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம், அவர் கூடியவரையில் மிகவும் நன்றாய்ப் பாடுவார் என்பதேயாம்.

மந்திரி குமாரனான புத்தி சேனன் பாத்திரம் எனக்குக் கொடுத்தார்கள். கதாநாயகியாகிய புஷ்பவல்லியின் பாகம் ஜெயராம் நாயகருக்குக் கொடுக்கப்பட்டது. புத்திசேனன் மனைவியின் பாகம் சுப்பிரமணிய ஐயர் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் சுகுண விலாச சபையில் ஸ்திரீவேஷம் தரிக்கத்தக்கவர்கள் இரண்டு மூன்று பெயர்களுக்குமேல் கிடையாது. ஆகவே இவர்களிவருக்கும் இரண்டு பாத்திரங்களும் கொடுக்கப்பட்டன. எம்.வை. ரங்கசாமி ஐயங்கார் என்பவருக்கு, புத்திசேனன் தகப்பனாராகிய மந்திரி பாத்திரம் கொடுக்கப்பட்டது. தனபால செட்டி என்ற பாத்திரத்தை (புஷ்பவல்லியின் தந்தை) வெங்கட கிருஷ்ணப் பிள்ளை எடுத்துக் கொண்டார். துரைசாமி ஐயங்கார் என்பவர் விதூஷகனுடைய பாத்திரமாக நியமிக்கப்பட்டார். இந்நாடகத்தின் ஒத்திகைகள் நடத்திய விவரமும் முதல் முதல் பஹிரங்கமாக ஒத்திகை நடத்திய கதையும் இனி எழுதுகிறேன்.

புஷ்பவல்லி என்னும் நாடகத்தை நான் எழுதி முடிப்பதற்கு முன் ஒரு முக்கியமான கஷ்டம் முளைத்தது. நாடகப் பாத்திரங்கள் எல்லாம் தங்கள் தங்கள் வசனத்தை எழுதிக் கொண்டு ஒத்திகை ஆரம்பிக்கு முன், நாங்கள் என்ன பாட்டுகள் பாடுவதென்று கேட்க ஆரம்பித்தார்கள். அக்காலத்தில் பாட்டில்லாமல் நாடகம் என்றால் நூலில்லாமல் வஸ்திரமா என்னும் ஸ்திதி. ஏறக்குறைய அதற்கப்புறம் நாற்பது வருடங்களாகியும் தற்காலத்தில் பெரும்பாலும் பாட்டில்லாமல் நாடகமே கிடையாதல்லவா? ஆதிகாலத்தில் தென்னாட்டில் நாடக மென்றால் முற்றிலும் பாட்டாகவே இருந்திருக்கவேண்டு மென்பதற்கு ஐயமேயில்லை. பிறகு வசனமானது கொஞ்சம் கொஞ்சமாக இடையிடையே சேர்க்கப்பட்டது. இப்பொழுதுதான் கேவலம் வசன ரூபமான நாடகங்கள் கார்த்திகைப் பிறைபோலக் காணப்படுகின்றன.

தாங்கள் பாடப் பாட்டுகள் வேண்டுமென்று நாடகப் பாத்திரங்கள் கேட்டபொழுது எனக்குப் பெருங் கவலையுண்டாயிற்று. எனக்கும் பாட்டிற்கும் அக்காலம் கன்யா குமரிக்கும் இமய மலைக்குமுள்ள தூரம்தான் இருந்தது. (இப்பொழுதும் அந்த தூரம் அதிகமாகக் குறுகவில்லை யென்றே எண்ணுகிறேன்) சங்கீதத்தில் “டா என்றால் “டு என்று சொல்லத் தெரியாத நான், பாட்டுகள் எப்படிக் கட்டுவது? சில நண்பர்கள் எனக்குக் கூறியபடி, மற்ற நாடகங்களிலிருந்து சமயோசிதமான வர்ணமெட்டுகளை எடுத்துக் கொள்ள என் மனம் கொஞ்சமேனும் இசையவில்லை . இந்தக் கஷ்ட திசையில் எனக்கு ஒரு வழிதான் தோன்றியது. கஷ்டம் நேரிடும் போதெல்லாம் என்னைக் கைகொடுத்துக் கரையேற்றிய என் இரண்டாம் தெய்வமாகிய என் தந்தையிடம் சென்று என் குறையைக் கூறினேன். அவர் உடனே, என் உதவிக்கு வந்து, நாடகங்களுக்கேற்ற பாட்டுகள் கட்ட வல்லமை வாய்ந்த தாயுமானசுவாமி முதலியார் என்பார் தனக்குத் தெரியுமென்று சொல்லி, அவருக்கு ஒரு சீட்டு எழுதி சீக்கிரத்தில் வரவழைத்தார். இவருடன் நான் கலந்து பேசி, புஷ்பவல்லியின் கதையை அவருக்குச் சொல்லி அதற்கு ஏற்ற பாட்டுகளைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டேன். அவரும் அதற்கு இசைந்தார். சுகுண விலாசசபையின் நிர்வாக சபையார் ஒவ்வொரு நாடகத்திற்கும் பாட்டுகள் கட்ட அவருக்கு இருபத்தைந்து ரூபாய் கொடுப்பதாகத் தீர்மானித்தார்கள்.

இந்தத் தாயுமான சுவாமி முதலியாரைப் பற்றி எனது நண்பர்கள் அறிய வேண்டியது அவசியம். இவருக்கு அச்சமயம் வயது எண்பதுக்குக் குறைந்ததல்ல. மிகவும் வயோதிகராய்த் தடியொன்றை ஊன்றிக் கொண்டு நடப்பாராயினும், தேகவலிமை வாய்ந்தவர். இவர் மேற்கண்ட புஷ்பவல்லி என்னும் நாடகத்துக்குப் பாட்டுகள் எழுதி, ஒத்திகை செய்யும் போதெல்லாம் எங்களுக்கு அப்பாட்டுகளைக் கற்பிப்பார். சாரீரம் அவ்வளவு திவ்யமாயில்லா விட்டாலும், கம்பீரமாயிருக்கும்; சிறுவர்களாகிய எங்கள் குரலைவிட இவர் குரல்தான் ஒத்திகை செய்யும் பொழுது அதிகமாய்க் கேட்கும்! மூன்று நான்கு மணி நேரம் எங்களுடன் தளராது பாடுவார்! அவருக்குப் பின்னால், அவரைக் கிழவர் என்று ஏளனம் செய்தபோதிலும், அவருக்கு அவ்வயதில் அவ்வளவு சக்தி இருந்ததேயென்று இரகசியத்தில் பொறாமைப்படுவோம். அப்படி அவரை ஏளனம் செய்தவர்களில் நானும் இன்னும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர, மற்றவர்களெல்லாம் அவருடைய வயதில் பாதிக்கும் முக்காலுக்கும் வராமல் இறந்து விட்டனர்! இப்பொழுது சிலர் கூறுகிறபடி அவர் பழைய காலத்து மண்ணாலானவர். இவ்வளவு இருந்தும் அவரிடத்தில் ஒரு குறைமாத்திரம் இருந்தது. கொஞ்சம் தாகத்திற்குச் சாப்பிடுகிற வழக்கம் உண்டு. அந்தப் பதத்தின் அர்த்தம் அறியாத எனது நண்பர்களுக்கு கொஞ்சம் வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டும் நான். தாகத்திற்குச் சாப்பிடுவதென்றால் வெறும் தண்ணீ ரைக் குடிப்பதன்று; சாராயம் முதலிய லாகிரி வஸ்துகளை உபயோகிப்பதாம். ஒத்திகை முடிந்தவுடன் தினம், காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரிடமிருந்து கால் ரூபாய் கடனாக வாங்கிக்கொண்டு போய்விடுவார். முதலில் ஏதோ செலவிற்கு வாங்கிக்கொண்டு போகிறார் பாபம் என்று எண்ணியிருந்தேன். சில தினங்களுக்குப் பிறகுதான் அந்தச் செலவு சாராயக்கடையில் செய்யப்பட்டது என்பதை அறிந்தேன்! அறிந்தும் நான் என்ன செய்வது? அவரன்றி பாட்டுகள் எழுதி எங்களுக்குப் பாட்டுகள் கற்பிக்கத் தகுந்தவர்கள் ஒருவரும் அச்சமயம் கிடைக்கவில்லை . இவரைக் கொண்டுதான் மேற்கண்ட புஷ்பவல்லி என்னும் நாடகத்திற்கும், எனது இரண்டாவது நாடகமாகிய “சுந்தரி அல்லது மெய்க்காதல்” என்பதற்கும் பிறகு நான் எழுதிய “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்திற்கும் பாட்டுகள் எழுதிக்கொண்டோம். இவர் தமிழ் நன்றாய் வாசித்தவர். சொற்பிழையில்லாமல் பாட்டுகள் எழுதுவார். அன்றியும் சங்கீதத்தில் மிகவும் தேர்ந்தவர். அதற்குச் சில வருஷங்களுக்கு முன்பாகக் காசி விஸ்வநாத முதலியார் என்பவர் அச்சிட்ட டம்பாச்சாரி விலாசத்திற்கு வர்ண மெட்டுகள் எழுதுவதில் மிகவும் உபயோகமாயிருந்தவர். நான் இப்பொழுதிருக்கும் வீட்டிற்கு அருகாமையில்தான் வசித்துக் கொண்டிருந்தார். இவர் இரண்டு மூன்று வருடங்கள் சென்ற பின் காலகதியடைந்தார். அதைக் கேள்விப்பட்ட என் தந்தையாரும் நானும் துக்கப்பட்டோம். இவரை நான், சங்கீதத்திற்கேற்றபடி சாஹித்யம் தமிழிற் செய்ய, எனக்குக் கற்பித்த குருவாகப் பாவிக்கின்றேன்.

மேற்கண்டபடி பாட்டுகளெல்லாம் கட்டியான பிறகு சற்றேறக்குறைய மூன்று மாதங்கள், அந்நாடகத்திற்கு ஒத்திகை நடத்தினோம். வியாழக்கிழமைகளில் சாயங்காலம் மூன்று மணிநேரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறுமணி நேரமும் ஒத்திகை நடத்துவோம். அக்காலத்தில் நாடகர்களெல்லாம் சிறுவயதுடையவர்களா யிருந்தபடியால் சீக்கிரம் எங்கள் பாடத்தைப் படித்துவிட்டோம். அன்றியும் எங்களில் பெரும்பாலர்க்கு ஞாபக சக்தி நன்றாகவிருந்தது. பிறகு ஒரு நாள் நியமித்துப் பகிரங்கமான ஒத்திகை போடவேண்டு மென்று தீர்மானித்தோம். அதற்கு எங்களுக்குத் தெரிந்தவர்களாகிய நண்பர்களில் சில முக்கியமானவர்களை மாத்திரம் வரவழைத்தோம். இந்தப் பகிரங்க ஒத்திகையானது தம்பு செட்டித் தெருவில் ஜெயராம் நாயகருடைய வீட்டில் நடந்தது; ஏறக்குறைய 50 பெயர் வந்திருந்தனர். எங்களிடம் அப்பொழுது திரைகளே கிடையாது. அரங்கத்தை மறைக்க ஒரு தோம்புதிரை தான் கட்டினோம். உடைகளும் எங்களிடம் அப்போது ஒன்றும் கிடையாது; என் தகப்பனார் கார்டியனாக விருந்த ஒரு ஜமீன்தாரருடைய சரிகை உடுப்புகளில் சிலவற்றை நான் கொடுக்க, அவைகளைத்தான் உபயோகிக்க வேண்டியதாயிருந்தது. இரண்டு ஸ்திரீ வேஷங்களுக்கும் ஜெயராம் நாயகர் வீட்டிலிருந்து இரண்டு புடவைகளைக் கொடுத்தனர். நாற்பது வருடங்களுக்கு முன் நடந்த இந்த ஒத்திகையில் எனக்கு இரண்டு மூன்று சமாச்சாரங்கள்தான் முக்கியமாய் ஞாபகம் இருக்கிறது.

ஒன்று, ராஜாவேடம் தரித்த ஒருவர் (அவர் இன்னும் ஜீவந்தராயிருப்பதால் அவர் பெயரை வெளியிட எனக்கு இஷ்டமில்லை) நாடக ஆரம்பத்திற்குச் சில நிமிஷங்களுக்கு முன்தான் தன் வீட்டிலேயே வேஷம் போட்டுக் கொண்டு ஜட்கா வண்டியில் ஏறிக்கொண்டு வந்து சேர்ந்தார்! அவர் முகத்திற் பூசிய வர்ணமானது வியர்வையினால் ஒழுக ஆரம்பித்து மிகவும் ஆபாசமாயிருந்ததென நாங்கள் எல்லாம் நகைத்தோம் என்பதே! போதாக் குறைக்கு, ஒரு காட்சியின் கடைசியில் இவர் பாடவேண்டியிருந்தது. பாடுவதற்காக உடனே ஆரம்பிக்க வேண்டுமென்று எவ்வளவோ சொல்லியும், அன்று அதைக் கவனியாது, பக்கவாத்தியக்காரர்களைப் பார்த்து தலையை அசைக்க ஆரம்பித்தார். அதன் பேரில் திரையை இழுக்க வேண்டி நியமிக்கப்பட்டவர்; திரையை இழுக்கச் சொல்லுகிறார் என எண்ணி, திரையை இழுத்து விட்டார்; அதன் மீது அவருக்கு அடங்காக் கோபம் வந்து திரைக்குப் பின்னிருந்தே தான் பாடவேண்டிய பாட்டைப் பாடி முடித்தார்! இதைச் சொல்லிச் சொல்லி அநேகதரம் நாங்கள் நகைத்துக் கொண்டிருந்தோம். இந்த அங்கத்தினர் எங்கள் மீது மிகவும் கோபம் கொண்டு சீக்கிரத்தில் சபையைவிட்டு நீங்கி விட்டார் பாவம்! இரண்டாவது; எங்களுக்கெல்லாம் முகத்தில் வர்ணம் தீட்ட அக்காலத்தில் பெயர்போன நடராகிய சுப்பராயாச்சாரி என்பவரின் கம்பெனியில், அவருக்கு வேஷம் தீட்டும் அப்பு என்பவன் வந்ததே. இவன் அன்று முதல் ஒன்பது வருஷகாலம் ஒரு நாடகம் தவறாது எங்கள் சபைக்கு ஊழியனாய், மிகந்த சுருசுருப்புடன் உழைத்த வேலையாள். இவனைப்பற்றிச் சில விஷயங்கள் பிறகு கூறவேண்டியிருக்கும் நான்; இவன் நான் அன்று நடித்ததைப் பார்த்து சுப்பராயாச்சாரியைப் போல் நன்றாகப் பெயர் எடுப்பேன் என்று கூறினான். இதை எனக்கு முகஸ்துதியாகக் கூறியிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

அன்று ஸ்திரீவேஷம் பூண்ட ஜெயராம் நாயகருக்கும் பானுமதி வேஷம் பூண்ட அ. சுப்பிரமணிய ஐயருக்கும், ஜெயராம் நாயகருடைய வீட்டு ஸ்திரீகள், ஸ்திரீவேஷம் தரிப்பித்தனர். சுப்பிரமணிய ஐயர் ஜெயராம் நாயகருடன் சிறுவயது முதல் ஒன்றாய்ப் படித்தவர்; அவர் வீட்டில் உள்ளவர்களுக் கெல்லாம் குழந்தை வயது முதல் நன்றாய்த் தெரிந்தவர்.

அன்றைத்தினம் ஒத்திகையைப் பார்த்த எங்களுடைய நண்பர்களுள் பெரும்பாலர் ஒத்திகை மிகவும் நன்றாயிருந்ததெனப் புகழ்ந்தனர். இது சிறுவர்களாகிய எங்களுக்கு மிகவும் குதூஹலத்தைக் கொடுத்தது.

உடனே சபையின் நிர்வாகசபைக் கூட்டத்தில், நாங்கள் கூடிய சீக்கிரத்தில் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்கள் நடத்த வேண்டுமென்றும், அதற்கு முன் இன்னொரு நாடகம் தயார் செய்து கொண்டு, இரண்டு நாடகமாகப் போட வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அந்த இரண்டாவது நாடகத்தை நானே எழுதவேண்டுமுன்று எனது நண்பர்கள் வற்புறுத்தினர். நான் ஆலோசித்து, இரண்டாவது நாடகம் பழைய கதையை ஒட்டியதாக இருக்கலாகாது, புதியகதையாக இருக்கவேண்டுமெனத் தீர்மானித்தது, “சுந்தரி அல்லது மெய்க்காதல்” என்னும் நாடகத்தை எழுதத்தொடங்கி கூடிய சீக்கிரத்தில் எழுதி முடித்தேன். இந்நாடகக் கதை என்னால் கற்பிதமானதே; சில இடங்களில் நான் சிறு வயதில் என் தாயாரிடமிருந்து கேட்ட கதைகளின் சந்தர்ப்பங்களை உபயோகித்திருக்கலாம். இருந்தும் மொத்தத்தில் நாடகக் கதை நூதனமான தென்றே சொல்லவேண்டும். இந்த நாடகத்தையும் சில வருஷங்களுக்கு முன் அச்சிட்டிருக்கிறேன். ஆகவே இதைப்பற்றி எனது நண்பர்களுக்கு நான் அதிகமாய்க் கூறவேண்டியதில்லை. இதுவும் இதற்குமுன் நான் எழுதிய புஷ்பவல்லி என்னும் நாடகமும், நான் எழுதியவற்றில் மிகவும் கீழ்ப்பட்டவை என்றே கூற வேண்டும். ஆயினும் அக் காலத்தில் இதை எழுதி முடித்து எனது நண்பர்களுக்கு நான் வாசித்துக் காட்டிய பொழுது, அதை அவர்கள், மிகவும் புகழ்ந்தார்கள். உடனே நிர்வாகசபையில் இன்னின்னார் இன்னின்ன வேடம் தரிக்க வேண்டுமெனத் தீர்மானிப்பதற்குக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் நடந்த ஒரு முக்கியமான சமாச்சாரம் என் மனத்தில் இன்னும் அதிகமாய் மறக்க முடியாதபடி அழுந்தியிருக்கிறது.

‘சுந்தரி அல்லது மெய்க்காதல்’ என்னும் நாடகத்தை எழுதும் பொழுதே சபையின் அங்கத்தினருள் நாடக மேடை ஏற இச்சையுள்ளவர்களுக்குள் இன்னின்னாருக்கு இன்னின்ன பாத்திரம் கொடுத்தால் நன்றாயிருக்குமெனத் தீர்மானித்தே அவரவர்கள் திறமைக்கு ஏற்றபடி நாடகத்தை எழுதிக்கொண்டு வந்தேன். இதைப் பற்றிச் சிலர் அவ்வளவாக சிலாக்கியமான மார்க்கம் அல்லவென்று கூற இடமுண்டு. அப்படி அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு என்று நான் கூறமாட்டேன். ஆயினும் அநேக விதங்களில் யோசித்துப் பார்க்குமிடத்து, இதனால் பெரும்பலன் உண்டென்று உறுதியாய் நம்புகிறேன். அன்று ஆரம்பித்த இவ்வழக்கத்தை இன்றளவும் விட்டவனல்ல. புராண கதைகள், சரித்திர சம்பந்தமான கதைகள் இவை போன்றவைகளில் இம்மாதிரிச் செய்வது கூடாமைதான். ஆயினும் கேவலம் கற்பனைக் கதைகளடங்கிய நாடகங்களில் இம்மாதிரி செய்வது அவைகள் பிறகு நாடக மேடை ஏறுங்கால் நன்றாய் நடிக்கப்படுவதற்கு மிகவும் அதுகுணமாயிருக்கிறதென்றே உறுதியாய் நம்புகிறேன்.

ஆகவே, நிர்வாக சபையார் கூட்டத்தில் இன்னின்னாருக்கு இன்னின்ன வேஷம் கொடுக்க வேண்டுமென்று யோசித்த பொழுது, ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரைக் கூறி அதை இன்னாருக்குக் கொடுத்தால் நலமாயிருக்குமென்று சொல்லிக் கொண்டு வந்தேன். அவர்களும் சரி சரியென்று ஒப்புக் கொண்டு வந்தனர். நான் எனக்காக எழுதிய பாத்திரமாகிய சத்யவந்தன் வேடத்தை யாருக்குக் கொடுப்பது என்கிற கேள்வி வந்தபொழுது, நான் மௌனமாயிருந்தேன். அக்கூட்டத்திலிருந்த பெரும்பாலர் அதை நீ எடுத்துக்கொள்ளுகிறதுதானே என்று சொன்னார்கள். அவர்கள் பக்கமாக உட்கார்ந்திருந்த வரதராஜுலு நாயகர் என்பவர் மாத்திரம், அப்பாத்திரம் தனக்குக் கொடுக்க வேண்டுமென்று கேட்டார். அதன்மீது எனக்காக நான் எழுதிய பாத்திரம் அது என்று வெளிப்படையாய்ச் சொல்ல வெட்கப்பட்டவனாய், அப்பாத்திரம் 17 அல்லது 18 வயதுடைய சிறு பிள்ளையாயிருக்க வேண்டுமே என்று ஆட்சேபித்தேன். அதன்மீது அவர் “எனக்கென்ன வயதாகிவிட்டது என்று நினைக்கிறாய், எனக்கு வயது 28 தானே” என்றார். அந்த ஆட்சேபணை வரையில் அவர் கூறியது நியாயம்தான் என்று, இப்பொழுது அந்த 28க்கு இரட்டிப்பாக 56க்கு மேல் எனக்கு வயதானபிறகுதான் தெரிகிறது. அப்பொழுது தெரியாமற் போய் விட்டது! சுயநன்மையைக் கருதும்பொழுது, ஒருவனுடைய அறிவெல்லாம் அவனைவிட்டு அறவே அகலுகின்ற தென்பதற்கு என்னைவிட வேறு உதாரணம் வேண்டுமோ? அக்காலத்தில் இருபத்தெட்டு வயதுடைய ஒருவர் பதினெட்டு வயதுடைய ஒரு நாடகப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆட்சேபித்தவன்; என்னுடைய ஐம்பத்தொன்பதாம் வயதில் சுமார் பதினேழு பதினெட்டு வயதுடைய இளம்பிராயம் பொருந்திய நாடகப் பாத்திரங்களையே இன்னும் நடிக்க வேண்டுமென்று, அந்தரங்கமாய் இச்சைப்படுகிறேன்! நாடகமேடைகளின் கெடுதிகளுள் இது ஒரு முக்கியமானதென்பதற்கு ஐயமென்ன? இதன்பொருட்டே நமது பூர்வீகர்கள் நாடக மேடையைப் பெரும்பாலும் வெறுத்தனர் போலும்.

முடிவில் நிர்வாக சபையார் நான் கூறியதை ஒப்புக் கொண்டு எனக்கே அந்த நாடகப் பாத்திரத்தைக் கொடுத்தனர். இதனால் மேற்சொன்ன வரதராஜுலு நாயகருக்கு மிகவும் கோபம் பிறந்தது. பிறகு அவர் சபையைவிட்டுச் சீக்கிரம் நீங்கியதற்கு இது ஒரு முக்கியமான காரணமாயிருந்ததென நம்புகிறேன். பட்சபாதமின்றி இப்பொழுது இவ்விஷயத்தைப் பற்றி யோசிக்குமிடத்து, அப்பாத்திரத்தை என்னைவிட அவர் நன்றாய் நடத்தியிருப்பார் என்று சொல்வதற்குக் கொஞ்ச மேனும் ஏதுவில்லாவிட்டாலும், அம்மாதிரியான ஆட்சேபணை கூறி அவர் மனத்தைப் புண்படுத்தியது தவறென்றே எனக்குத் தோற்றுகிறது. அச்சமயம் அப்படி நான் செய்தது தவறென்று நான் ஒப்புக்கொள்வதைவிட, வேறு அவருக்கு நான் பிராயச்சித்தம் செய்ய அசக்தனாயிருக்கிறேன்.

நாடகப் பாத்திரங்களெல்லாம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பிறகு, அவரவர்கள் தங்கள் தங்கள் பாகங்களை எழுதிக் கொண்டு விரைவில் படிக்க ஆரம்பித்தார்கள். ஒரு வாரத்திற் கெல்லாம் ஒத்திகை ஆரம்பித்துவிட்டோம். இதை இவ்விடம் ஏன் எழுதுகிறேன் என்றால், தற்காலத்தில் நாடகங்களெல்லாம் அச்சிடப்பட்டு, ஒவ்வொருவனுக்கும் ஒரு புஸ்தகம் கொடுக்கப்பட்ட போதிலும் நாடக தினம் வரையில் பாடம் படிக்காதவர்கள் வெகு பெயர்கள் இருக்கின்றனர். அக் காலத்திலோ பென்சிலினால் எழுதப்பட்ட ஒரு காபியை வைத்துக்கொண்டு அத்தனை பெயரும் அவரவர் பாகங்களை அவரவர்களாக எழுதிக்கொண்டு, குருட்டுப் பாடம் செய்து ஒரு வாரத்திற்கெல் லாம் ஒத்திகை ஆரம்பித்து விட்டோம் என்பதைக் குறிக்கவே. அக்காலத்தில் எங்களுக்கிருந்த ஊக்கம் தற்காலத்தில் வெகுவாய் இல்லை யென்றே நான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

இன்னொரு விஷயம் இங்கு குறிக்க விரும்புகிறேன். அக்காலந் தொடங்கி இந்த நாற்பது வருஷங்களாக எனது நாடங்களை யெல்லாம் பென்சிலைக் கொண்டே எழுதி வருகிறேன். இது நான் கைவிடக் கூடா வழக்கமாகி விட்டது. இதற்கு முக்கியமான காரணம் நான் எழுத உட்காரு முன் எழுத வேண்டிய வசனத்தை மனனம்பண்ணி, சித்தஞ்செய்து கொண்டே, பிறகு உட்கார்ந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி மனனஞ்செய்தது எழுதி முடித்து விட்டால், மறுபடி எழுந்து அதற்கு மேல் எழுதவேண்டிய வாசகங்களை மனனம் செய்ய உலாவுவேன். இதனால் எழுத ஆரம்பிக்கும்பொழுது என்கை தடையின்றித் தாராளமாகப் போகும். இதற்குப் பென்சிலினால் எழுதுவதே அநுகுணமாயிருந்தது. அடிக்கடி பேனாவைக் கொண்டு மைக் கூட்டில் தோய்த்து எழுதுவது எனக்குத் தடையாயிருந்தது; அக்காலத்தில் பௌண்டன் பென் என்பது கிடையாது. பிறகு பௌண்டன்பென் சென்னையில் வாடிக்கைக்கு வந்த போதிலும், என் பழைய வழக்கமானது நன்றாய் வேர் ஊன்றிய என் மனத்தை, மாற்ற முடியாமற் போய்விட்டது. இப்பொழுதும் இந்த நாடக மேடை நினைவுகளைப் பென்சிலினாலேயே எழுதுகிறேன். இந்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் போர்மன் (Foreman) இப்படி பென்சிலினால் நீங்கள் எழுதுவதைப் படிப்பது கஷ்டமாயிருக்கிறது! கொஞ்சம் இங்கியினால் எழுதி விடுங்கள் என்று வற்புறுத்தியும் அவர் வேண்டுகோளுக்கிசைய அசக்தனாயிருக்கிறேன். “பழக்கம் பொல்லாது பாறை மேற் கோழி சீர்க்கும்” என்னும் பழமொழி என் மனத்திற்கு ஞாபகம் வருகிறது. என் செய்வது? நம்மில் பெரும்பாலர் வேறெதற்கும் அடிமைகளாகா விட்டாலும் இந்தப் பழக்கம் என்பதற்கு எளிதில் அடிமைகளாகி விடுகிறோம். அந்த அடிமைத் தனத்தினின்றும் நம்மை விடுத்துக் கொள்ள அசக்தர்களாகி யிருக்கிறோம்!

மேற்சொன்ன ‘சுந்தரி’ என்னும் நாடகத்திற்கு நான் ஒருமுறை கணக்கிட்டபடி ஐம்பத்திரண்டு ஒத்திகைகள் நடத்தினோம். தற்காலத்தில் ஏதாவது ஒரு நாடகத்தை எடுத்துக் கொண்டு, இரண்டு மூன்று ஒத்திகைகள் நடந்தவுடன் நாடகத்தைப் பகிரங்கமாக நடிக்கலாம் என்று நினைக்கும் எனது சிறு நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக. இந்த ஐம்பத்திரண்டு ஒத்திகைகள் பெரும்பாலும் 4 மணி நேரத்திற்குக் குறைந்தனவன்று. சில ஒத்திகைகள் ஆறு அல்லது ஏழு மணி பிடிக்கும். அவைகள் முக்கியமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தியவையாம். நல்ல வெயிற் காலத்தில் சித்திரை வைகாசி மாதங்களில் சுமார் ஒரு மணிக்கு என் வீட்டிலிருந்து என் தகரப்பெட்டி ஒன்றில் நாடகக் காகிதங்களை எடுத்துக் கொண்டு, சபை ஸ்தாபித்திருந்த தம்பு செட்டித் தெரு வீட்டிற்குப் போவேன். மற்ற நடிகர்கள் எல்லாம் சீக்கிரம் வந்து சேர்வார்கள். உடனே ஒத்திகை ஆரம்பிப்போம். ஞாயிற்றுக்கிழமை ஒத்திகைகளுக்கெல்லாம் சற்றேறக்குறைய ஒன்றும் தவறாமல், ம-ள-ள-ஸ்ரீ. வி. திருமலைப் பிள்ளையாகிய எங்கள் கண்டக்டர் வந்து சேர்வார். அவரைப்பற்றி இச்சந்தர்ப்பத்தில் சில விஷயங் களைக் கூற விரும்புகிறேன்.

அவர் ம-ள-ள-ஸ்ரீ, பசவப் பிள்ளையின் குமாரர். அப்பொழுதுதான் லாயர் பரீட்சையில் தேறி, லாயர் ஆனவர். ஆஜானுபாகுவாய், பெரிய காத்திரமுடையவர். அதற்கேற்ற படி உயரமுமுடையவர். இவர் ஜெயராம் நாயகருடைய மைத்துனர். இவர் நாடகங்களில் அக்காலத்தில் மிகவும் ஊக்கமுடையவராயிருந்தார். இவரை எங்கள் தலைவராகக் கொண்டு இவருக்கு என்ன பெயர் கொடுப்பது என்று நாங்கள் யோசித்த பொழுது அக்காலத்தில் மற்ற நாடகக் கம்பெனிகளில் வழங்கிய ‘ஸ்டேஜ் மானேஜர்’ என்னும் பெயர் எங்களுக்கு இஷ்டமில்லாதபடியால் கண்டக்டர் என்கிற பெயர் வைத்தோம். சாதாரணமாக ஆங்கிலேய பாஷையில் கண்டக்டர் என்கிற பதம், நாடக சந்தர்ப்பத்தில், பக்கவாத்தியக்காரர்களை சரியாக வாசிக்கச் செய்யும் தலைமை பெற்றவர்க்கே உபயோகப்படுவது. ஆயினும் பெரிதல்லவென்று அப்பெயரையே திருமலைப் பிள்ளை அவர்களுக்கு நிர்வாக சபையார் கொடுத்தார்கள். இவர் மற்ற நடர்கள் வருவது போல் சுமார் இரண்டு மணிக்கெல்லாம் வந்து விடுவார். இவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, நான் நாடக புஸ்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, ஒத்திகை ஆரம்பிப்பேன். நாடகப் பாத்திரர்களும் பாத்திரமில்லாத அங்கத்தினரும் அறையில் சுற்றிலும் உட்காருவார்கள். அறையின் மத்தியில் நாங்கள் ஒத்திகை நடத்துவோம். ஒரு காட்சி ஒத்திகையானவுடன், திருமலைப் பிள்ளை அவர்கள், இன்னின்னார் பாடம் சரியாகப் படிக்கவில்லை, நடித்ததில் இன்னின்ன குற்றங்கள் இருந்தன வென்று சொல்லுவார். எடுத்துக்காட்டப்பட்ட குற்றங்கள் குறைவாக இருந்தால், மறு ஒத்திகையில் பார்த்துக்கொள்வோம்; அதிகமாக இருந்தால், அக்காட்சியை முழுவதும், ‘அடியைப் பிடியடா பாரதபட்டா’ என்று முதல் முதல் மறுபடியும் நடத்திக் காட்டுவோம் அவருக்கு.

இப்படி நாங்கள் வெயிலின் கொடுமையும் பாராமல் ஐந்தாறு மணிநேரம் ஒத்திகை நடத்தும்பொழுது, நாங்கள் அருந்த என்ன சிற்றுண்டிகள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டன வென்பதை எனது நண்பர்கள் அறிய விரும்புவார்களன்றோ ? இதைப்பற்றி சபையின் சட்டங்களில் எழுதப்படாத சட்டம் ஒன்றுண்டு. அதாவது, ஒத்திகை செய்யும் ஒவ்வொரு நாடக பாத்திரமும் தனக்கு வேண்டிய மட்டும் ஒருவிதமான ஆட்சேபனையுமின்றி, எத்தனை லோடா குழாய் ஜலம் வேண்டுமென்றாலும் தாராளமாய்ச் சாப்பிடலாம் என்பதே! தற்காலம் அரைமணி நேரம் ஒரு மணி நேரம் ஒத்திகை செய்துவிட்டு, ஒரு காரம், ஒரு தித்திப்பு, கொஞ்சம் வாதுமைக் கொட்டை, ஒரு டம்ளர் காப்பி வேண்டுமென்று கேட்கும் எனது சிறிய நண்பர்கள் இதைச் சற்றுக் கவனிப்பார்களாக.

மேற்சொன்ன புஷ்பவல்லி, சுந்தரி என்னும் இரண்டு நாடகங்களுக்கும் ஒத்திகை நடத்தி, 1893 ஆம் வருடம் மார்ச்சு மாதம் விக்டோரியா பப்ளிக்ஹாலில் மேற்படி நாடகங்களை நடித்த வரையில், எங்கள் சபைக்கு மாதாந்த வரும்படி சுமார் ரூபாய் 51/2 யே! அதில் பிடில் வாசிக்கும் மனிதனுக்கு மாதச் சம்பளம் ரூபாய் 5, நாற்காலி மேஜை முதலியவற்றை தூசியில்லாமல் தட்டி விளக்கேற்றிவைத்த வேலைக்காரனுக்கு ரூபாய் 1/2 சரியாகப் போச்சுது; ஒத்திகை நடக்கும் பொழுது இருட்டிய பின் ஏற்றிய கிரோசின் (kerosine) எண்ணெய் விளக்குக்கு எண்ணெய் சில நாட்களில், காரியதரிசியாகிய முத்துக்குமார சாமி செட்டியார் வீட்டிலிருந்தும், சில நாட்களில் என் வீட்டிலிருந்தும் அனுப்பப்படும். இவ்வாறு மிகுந்த கஷ்டப்பட்டு அந்த ஒன்றரை வருடத்துக்குமேல் நாங்கள் ஒத்திகைகள் நடத்தியபோதிலும், அப்பொழுது என் மனத்தில் இருந்த சந்தோஷம் பிறகு எங்கள் சபை மாதத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வரும்படியுடைய தாயிருந்தும், நாடகப் பாத்திரங்களுக்கு வேண்டியனவெல்லாம் வழங்கும் ஸ்திதியிலிருந்தும், இப்பொழுது அதில் நூற்றில் ஒரு பங்கில்லை. இதற்குக் காரணம் எனக்கு வயதானது மாத்திரமாய் இருக்கக் கூடுமா? அப்படித்தான் என்று யாராவது எனது நன்பர்கள் எனக்கு ரூபித்தால் மிகவும் சங்தோஷமுள்ளவனாயிருப்பேன். வயதானபடியால் என் தேக சக்தி குன்றிய போதிலும், என் உற்சாகமானது, என்னையே நான் பட்சபாதமின்றி ஆராயுமிடத்து, கொஞ்மேனும் குன்றவில்லையென்றே நான் கூற வேண்டும். ஆகவே வேறு காரணங்களிருக்க வேண்டுமென்று எனக்குத் தோற்றுகிறது. இனி சுந்தரி நாடகத்திற்குப் பகிரங்க ஒத்திகை நடத்திய கதையை எனது நண்பர்களுக்குக் கூறுகிறேன்.