நாடக மேடை நினைவுகள்/நான்காம் அத்தியாயம்
முன்னமே தெரிவித்தபடி என் பரீட்சை யெல்லாம் முடிந்த பிறகு ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நான்கு மணிக்கு இவ்விடம் போனேன். அப்பொழுது அக்கட்டிடத் தின் மாடியில் ஓர் அறையில் ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த பொழுது ஒருபுறம் எனக்கு விந்தையாகவும் வினோதமாகவும் இருந்த போதிலும், மற்றொருபுறம் வருத்தமாயிருந்தது. ஒரு புறம் ஒருவர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்; மற்றொருபுறம் ஒருவர் மிருதங்கம் வாசித்துக்கொண்டிருந்தார்; இரண்டு பெயர் இரண்டு தம்புருகளை மீட்டிக்கொண்டிருந்தனர்; ஒத்திகை போட்டுக் கொண்டிருந்த நாடகமாகிய, அப்பாவு பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட “இந்திரசபா எனும் நாடகத்தில் அயன் ராஜபார்ட் எனும் சந்தனுமகராஜாவாக நடித்த வரதராஜலு நாயகர் என்பவர் கையில் ஒரு தாளமும் அவரது சிநேகிதர் ஒருவர் கையில் ஒரு தாளமும் வைத்துக்கொண்டு, காது செவிடு படும்படியாகத் தாளம்போட்டுக் கொண்டிருந்தனர்; எல்லாம் பாட்டுமயமாயிருந்தது! நான்கு ஐந்து பாட்டிற்கு இடையில் சில வார்த்தைகள் தப்பிப் பிழைத்து வந்தனவோ என்னவோ, எனக்குச் சந்தேகமாயிருந்தது. வரதராஜலு நாயகர் அவர்கள் ஒரு பாட்டில் ஒரு அடி பாடினவுடன் பின் பாட்டாக நான்கு ஐந்து பெயர் அதே அடியை உரக்கப் பாடுவார்கள்! இதையெல்லாம் வாய் திறவாது கேட்டுக்கொண்டிருந்த போதிலும், என் மனத்தில் மாத்திரம் கொஞ்சம் வெறுப்புத் தட்டியது. ஷேக்ஸ்பியர் மகாகவியின் சில நாடகங்களைப் படித்திருந்த எனக்கு இந்த இந்திரசபா எனும் நாடகமானது கொஞ்சமேனும் ருசிக்கவேயில்லை. சில ஆங்கிலேய நாடகங்களைப் பார்த்த எனக்கு இவர்கள் நடிக்கும் விதம் எள்ளளவேனும் பிடிக்கவில்லை. இந்த இந்திரசபா நாடகமானது, தற்காலத்தில் கோவலன் நாடகம் கொஞ்சம் பிரபலமாகி வாரத்திற்கொரு முறையாவது நடிக்கப்படுவது போல், அக்காலத்தில் பிரபலமாயிருந்து மாதத்திற்கொரு முறையாவது நடிக்கப்பட்டு வந்தது. ஒரே நாடகமானது, கடல் இந்திர சபா, மலை இந்திர சபா, கமல இந்திர சபா, அக்கினி இந்திர சபா எனும் இப்படிப்பட்ட வேறு வேறு பெயர்களுடன் ஆடப்பட்டு வந்தது. இக்கதையிலுள்ள ஆபாசங்களில் ஒன்றை மாத்திரம் இங்கே எடுத்துக் கூறுகிறேன். இந்நாடகத்தில் கதாநாயகன் சந்திரவம்சத்தரசனாகிய சந்தனு ; இவன் வேட்டையாடி விட்டுக் கானகத்தில் உறங்குங்கால் ஊர்வசியெனும் அப்சரக் கன்னிகை இவனைக் கண்டு மோகம் கொள்கிறாளாம். இச்சந்தர்ப்பத்தில் சந்தனு எனும் பதத்தை சந்தனம் என்று மாற்றி, ஊர்வசி கானகத்தில் வந்தவுடன் சந்தன வாடை வீசுகிறதாகத் தெரிவிக்கிறாள். சந்தனு ஊர்வசியால் எழுப்பப் பட்டவுடன், திடீரென்று உண்டான மின்னலைக் கண்டு கண் பொட்டையானவன், பின் தாங்கி கண்களை நிமிட்டிக்கொள்வதுபோல் அபிநயிப்பார்! இது அக்காலத்தில் வயிற்றை வளர்க்க நாடகங்கள் ஆடி வரும் எல்லாக் கம்பெனிகளிலும் சாதாரண வழக்கம் என்பதைப் பிறகுதான் அறிந்தேன். ஒத்திகை ஒருவாறு எட்டுமணிக் கெல்லாம் முடிந்தவுடன், அங்கிருந்த புதிய அங்கத்தினர்க்கெல்லாம், முத்துக்குமாரசாமி செட்டியார், ஜெயராம் நாயகர் முதலியவர்களால் தெரிவிக்கப்பட்டேன்.
அன்றிரவு நான் வீட்டிற்குப் போனவுடன் மேற்குறித்த ஆபாசங்களை யெல்லாம் எப்படித் தவிர்ப்பது என்று யோசித்தேன். மறுநாள் நிர்வாக சபையின் அங்கத்தினராகிய எனது நண்பர்களைச் சாயங்காலம் சந்தித்தேன். அவர்களுடன் எனது நியாயங்களை யெல்லாம் எடுத்துக்கூறி, பின்பாட்டை விட்டுவிட வேண்டுமென்று அவர்களும் ஒப்புக்கொள்ளும் படி செய்தேன். பின்பாட்டென்பது பழைய காலத்து வழக்கமாயினும் தற்காலத்திய நாகரிகத்திற்கு அது பொருந்திய தல்லவென்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஆயினும் நாடகமாடும் பொழுது பக்க வாத்தியத்துடன், தாளமும் இருக்க வேண்டியது அதி அவசியம் என்று அவர்கள் கூறினார்கள். அதன்மீது அவர்கள் அறியாதபடி இதற்கு ஒரு யுக்தி செய்ய வேண்டுமென்று தீர்மானித்தேன். ஒன்றிரண்டு ஒத்திகைகள் பொறுத்துக் கொண்டிருந்தேன். பிறகு ஒரு நாள் ஒத்திகை முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்குப் போன பிறகு மெல்ல, அங்கு வைத்திருந்த இரண்டு ஜதை தாளங்களையும் வீட்டிற்குத் திருடிக்கொண்டு போய்விட்டேன்! எனது சுயலாபத்தை நாடவில்லை என்பதுதான் இதற்குச் சாக்காகும். இல்லாவிட்டால் இது என்னை இந்தியன் பீனல்கோட் (Indian Penal Code) குற்றத்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும்! மறு ஒத்திகைக்கு வழக்கத்தைப் போல் சென்று மற்றவர்களுடன் உட்கார்ந்திருந்தேன். சங்கீதம் ஆரம்பிப்பதற்காகப் பக்கவாத்தியங்கள் சித்தமானவுடன், தாளங்களைக் காணோம் என்று எல்லோரும் தேட ஆரம்பித்தார்கள். கோழித் திருடி கூடக்குலாவினாள் என்பது போல், நானும் அவர்களுடன் தேடினேன்! என் வீட்டில் ஒளித்து வைத்திருந்த தாளங்கள் அங்கே எப்படி அகப்படும்? கொஞ்ச நேரம் தேடி அகப்படாமற் போகவே, “இனி என்ன செய்வது, பிறகு பார்த்துக் கொள்வோம், இப்பொழுது ஒத்திகை தாளங்கள் இல்லாமல் ஆரம்பிப்போம்” என்று கூறினேன். வேறுவழியில்லாமல் அதற்குடன்பட்டு, நாடகப் பாத்திரங்களெல்லாம் ஒத்திகை ஆரம்பித்தார்கள். அன்று ஒத்திகை முடிந்தவுடன் ஒவ்வொரு அங்கத்தினருடனும் மெல்லப் பேசி, தாளம் இல்லாவிட்டால் தவறு ஒன்றுமில்லை யென்றும், தாளத்துடன் பாடுவதைவிட தாளம் போடாமலே பாடுவது அழகாயிருக்கிற தென்றும், தாளத்தைத் தட்டிக் கொண்டு பாடுவது தற்கால நாகரிக நாடகங்களுக்குப் பொருத்தமாக இல்லையென்றும் ரூபித்துக் காட்டினேன். வரதராஜுலு நாயகர் தவிர மற்றவர்களெல்லாம் மெல்லமெல்ல என் வழிக்கு வந்தனர். அவர் மாத்திரம் எனக்கு ஞாபகமிருக்கிறபடி கடைசிவரையில் எனது எண்ணம் சரியானதென்று ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு பாடும் பொழுது தாளங்கள் தட்டுவதை அறவே விட்டபிறகே, நான் செய்த களவினைக் கூறி அத்தாளங்களை வீட்டிலிருந்து கொண்டு வந்து சொந்தக்காரரிடம் அவைகளை ஒப்புவித்தேன். இந்தத் தாளங்கள் விஷயமாக வரதராஜுலு நாயகருக்குக் கோபம் பிறந்து “இந்திர சபா என்னும் நாடகத்தில் நான் நடிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டார். அதன்மீது நிர்வாக சபைக் கூட்டத்தில் முதல் முதல் சபையார் ஆட என்ன நாடகம் எடுத்துக் கொள்வது எனும் கேள்வி பிறந்தது. அச்சமயம் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் தனக்குத் தெரிந்த சில பழைய தமிழ் வித்வான்களைக் கொண்டு எழுதி வைத்த ஒன்றிரண்டு தமிழ் நாடகங்களைப் படித்துக் காட்டினார். அதில் அக்காலத்திய குஜிலிகடை நாடகங்களி லிருந்த ஆபாசங்களெல்லாம் இருந்தன. அதை எழுதிய வித்வான்கள் மீது குற்றங் கூற வந்தவனன்று நான். அவர்கள் பழைய வழக்கப்படி யெழுதியிருந்தார்கள். அதற்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். அரசன் சபைக்கு வந்தவுடன், மந்திரியைப் பார்த்து, “மாதம் மும்மாரி பெய்கிறதா? பிராமணர்கள் யாகங்களைச் செய்கிறார்களா? க்ஷத்திரியர்கள் சரியாகச் சண்டை போடுகிறார்களா? வைசியர் சரிவர வியாபாரம் செய்கிறார்களா? சூத்திரர்கள் வேலை செய்கிறார்களா?” என்று கேட்க, ஒவ்வொரு கேள்விக்கும் மந்திரி “ஆமாம்” என்று விடை கொடுப்பதாக எழுதியிருந்தது. இதைக் கேட்டவுடன் எனக்கு நகைப்பு வந்து, “இந்த ராஜா என்ன, மழை பெய்கிறதும் பெய்யாததும் அறியாதவராய் அந்தப்புரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறவரா?” என்று கேட்டேன். இம்மாதிரியாக அதில் உள்ள குற்றங்களை எடுத்துக்கூறி ஏளனம் செய்யவே, எனது நண்பர்களுக்குக் கோபம் பிறந்து, “எல்லாவற்றிற்கும் ஏதாவது குறை கூறுகின்றாயே, குற்றமில்லாதபடி நீதான் எழுது” என்று என் மீது திரும்பினார்கள். இது தென்னாலிராமனுடைய கதைகளில் ஒன்றைப் போலிருந்தது. தென்னாலிராமனிடம் ஒருவன் ஒருநாள் “அப்பா, உன் தந்தைக்கு நாளை சிரார்த்தம்” என்று கூறினானாம். அதற்கு அவன் “ஆனால் அந்த சிரார்த்தத்தை நீதான் செய்ய வேண்டும்” என்று கூறினானாம். “ஏனடா, அப்பா! உனது தந்தையின் சிரார்த்தத்தை நான் ஏன் செய்ய வேண்டும்?"என்று கேட்க, “நீ தானே எனக்கு ஞாபகப்படுத்தினாய், அக்காரணத்தினால் நீதான் செய்ய வேண்டும்” என்று பதில் உரைத்தனனாம்! அம்மாதிரியாக மற்றவர்கள் எழுதிய நாடகத்திலுள்ள குறைகளை எடுத்துக் கூற, குற்றமில்லாத நாடகமாய் எழுதும்படி நான் கேட்கப்பட்டேன். அதன்மீது இளங்கன்று பயமறியாது என்றபடி, கஷ்டத்தை அறியாதவனாய் “ஆகட்டும்” என்று வீம்பாய் ஒப்புக்கொண்டேன். அக்காலத்தில் என்னிடம் அறியாமை எவ்வளவு குடிகொண்டிருந்ததோ, அவ்வளவு வீம்பும் இருந்தது.
அன்றிரவு வீட்டிற்குப் போனவுடன், என்னடா இப்படி அகப்பட்டுக் கொண்டோமே என்று கவலைப்படலானேன். “எண்ணித் துணிக கருமம், துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு” என்னும் தெய்வப் புலமைத் திருவள்ளுவருடைய திவ்ய வாக்கு ஞாபகம் வந்தது. அதுவரையில் ஒரு தமிழ் நாடகத்தையும் பார்த்திராத நான், எப்படி தமிழில் நூதனமாக நாடகம் - எழுதுவது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க எனக்கு ஒரு யுக்தி தோன்றியது. அன்றிரவு வழக்கப்படி என் தகப்பனாருடன் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது நிர்வாக சபையில் நடந்ததை யெல்லாம் கூறி, “இந்த சங்கடத்திற்கு என்ன செய்வது நான்” என்று கேட்டேன். அப்பொழுது என் தந்தை, “நீ ஏதாவது தமிழ் நாடகத்தை இதுவரையில் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். நான் இல்லை என்று பதில் சொல்ல, கொஞ்சம் நகைத்து, சற்று ஆலோசித்து “நாளை சனிக்கிழமை, கோவிந்தசாமி ராவ் நாடகக் கம்பெனியின் ஆட்டத்திற்கு உன்னை அழைத்துப் போகிறேன். இருப்பதற்குள் அவ்விடம்தான் தமிழ் நாடகங்கள் சுமாராக நடிக்கப்படுகின்றன. அதைப் பார்த்து நீ கற்றுக் கொள்” என்று கூறினார். சொன்னபடியே அடுத்த சனிக்கிழமை தனது வயதின் சிரமத்தையும் பாராமல், என் வேண்டுகோளுக்கிரங்கி, தானே அழைத்துச் சென்றார். கோவிந்தசாமி ராவ் நாடகக் கம்பெனி “மனமோஹன நாடக சபா” என்கிற பெயருடையதாயிருந்தது. இக்கம்பெனியின் நாடகங்கள் சென்னை செங்காங்கடை நாடகக் கொட்டகையில் அக்காலம் நடத்தப்பட்டு வந்தன. தற்காலம் இந்த இடத்தில் ஒரு சினிமா நடைபெற்று வருகிறது. அக்காலத்தில் தட்டோடு வேய்ந்த கூரைக் கொட்டகையாயிருந்தது. ஒன்பது மணிக்கு நாடகம் ஆரம்பம் என்று என் தந்தையைத் துரிதப்படுத்தினேன். அவர் அக்காலத்திய நாடகக் கம்பெனிகள் குறிப்பிட்டபடி ஆரம்பியாத வழக்கம் அறிந்தவராய், “அவசரமொன்றுமில்லை, சற்றுப் பொறுத்துப் போகலாம்” என்று கூறியும், நான் நிர்ப்பந்திக்க, எனக்கு புத்தி புகட்ட வேண்டி, “சரி ஆனால் உன்பாடு” என்று பதில் உரைத்து, ஒன்பது மணிக்கு முன்பாக நாடகக் கொட்டகைக்கு என்னை அழைத்துச் சென்றார். போனவுடன், எனக்குப் புத்தி வந்தது. என் தகப்பனார் கூறியது சரியென்று அப்பொழுதுதான் பட்டது. நாடகக் கொட்டகையில் அப்பொழுது தான் ஜனங்கள் வர ஆரம்பித்துக் கொண்டிருந்தனர். விளக்குகள் கூட முற்றிலும் ஏற்றப்படவில்லை.
சற்றேறக்குறைய முக்கால் மணி சாவகாசம் மொட்டு மொட்டு என்று உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஒன்பதே முக்கால் மணிக்கு நாடகம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்குள்ளாக ஜனங்கள் கொட்டகையில் நிரம்பினார்கள். அது வரையில் ஏன் நாடகம் குறித்தபடி ஆரம்பிக்கவில்லை என்று ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து என் தகப்பனார் புன்சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்தார். என் தந்தை எனக்குப் புத்தி வரும்படி செய்த மார்க்கங்களில் இது ஒன்றாகும். தான் கூறுவதற்குக் குறுக்காக நான் என் அறியாமையினால் ஏதாவது ஆட்சேபணை செய்து பிடிவாதம் பிடித்தால், என்னிஷ்டப்படி போகவிட்டு, அதனால் படும் கஷ்டத்தை அனுபவிக்கச் செய்து நான் புத்தியறியும்படி செய்வார்.
அன்றைத் தினம் நாடகம் “ஸ்திரீசாகசம்” என்பது; இது புராதனமான தமிழ்க்கதை யொன்றை ஒட்டியது. ஒன்பதே முக்கால் மணிக்கு ஆரம்பம் செய்யப்பட்டது என்று முன்பு கூறியதனால், நாடகமே ஆரம்பிக்கப்பட்டது என்று நினைத்து விடாதீர்கள். ஒன்பதே முக்காலுக்கு அரங்கத்தின் முன்பு விடப்பட்டிருந்த திரை தூக்கப்பட்டது! உடனே நாடகம் ஆரம்பம் ஆகும் என்று சந்தோஷப்பட்டேன். ஆயினும் அச்சந்தோஷம் அதிக நாழிகை நிலைக்கவில்லை. முன்திரை தூக்கப்பட்டவுடன், மேடையின் உள்ளே சங்கீதம் கேட்டது. பிறகு சுமார் கால்மணிசாவகாசம், விநாயகர் துதி, கலைவாணி துதி, கம்பெனியாரின் இஷ்ட தேவதைகள் துதி முதலியன பாடப்பட்டன. நாடகக் கதையைப் பார்க்க ஆவல் கொண்டிருந்த எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. கடைசியில் சுமார் பத்து மணிக்கு கோவிந்தசாமி ராவ் அரங்கத்தின்மீது வந்தார். இப்பொழுதாவது நாடகமானது ஆரம்பிக்கப்பட்டதே என்று குதூஹலம் கொண்ட என் மனமானது சடுதியில் தணிவையடைந்தது. அவர் கையில் தாளங்கள் வைத்துக் கொண்டு “ராமமஹீ” என்கிற பாட்டைப் பாட ஆரம்பித்தார். அப்பாட்டு முடிந்தவுடன் ஒரு வேஷதாரி, அலங்கோலமாய் ஆடை அணிந்து தலையில் வேப்பிலை யைக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்தவனாய், ஆடிக்கொண்டு அரங்கத்தில் பிரவேசித்தான். இவன் யார் என்று என் தந்தையைக் கேட்க, இவன்தான் விதூஷக வேஷதாரி என்று அவர் எனக்குத் தெரிவித்தார். பிறகு அவனுக்கும் சூத்திரதாரனாக வந்த கோவிந்தசாமி ராவுக்கும் தர்க்கம் நடந்தது. அதில் கோவிந்தசாமி ராவ் சுமார் கால்மணி சாவகாசம், நாடகக்கதை இன்னதென்று சவிஸ்தாரமாகத் தெரிவித்தார்! இதனால் நடக்கப்போகிற நாடகக்கதை இன்னதென்று நான் நன்றாயறிந்த போதிலும், இதெல்லாம் நாடகத்திற்கு அத்தனைப் பொருத்தமாக எனக்குத் தோன்ற வில்லை. இனி அங்கு நான் கண்ட நாடகத்தைப் பற்றியும் அந்நாடகக் கம்பெனியின் தலைவராக இருந்த கோவிந்தசாமி ராவைப் பற்றியும் சற்று சவிஸ்தாரமாக வரைய விரும்புகிறேன்.அக் காலத்தில் என் ஞாபக சக்தியானது கூர்மையாகவேயிருந்ததென நான் சொல்ல வேண்டும். ஏறக்குறைய இரண்டு மூன்றுமுறை ஏதாவது ஒன்றைப் படிப்பேனாயின் அதைப் பிறகு அப்படியே ஒப்பித்துவிடுவேன். அன்றைத்தினம் நடந்த நாடகத்தை மிகவும் கவனமாய்க் கவனித்து வந்தேன். வசன பாகமெல்லாம் என் மனத்தில் அப்படியே படிந்து விட்டது. சங்கீதப் பயிற்சி கொஞ்சமும் அக்காலத்தில் இல்லாதவனாயிருந்தபடியால், நான் கேட்ட சங்கீதத்தை சரியாக அனுபவிக்க அசக்தனாயிருந்தேன். நான் கேட்ட பாட்டுகள் ஒன்றும் என் மனத்தில் நிலைக்கவில்லை.
நான் அன்றைத்தினம் கண்ட ‘ஸ்திரீ சாகசம்’ என்னும் கதையையே, ‘புஷ்பவல்லி’ என்னும் நாடகமாக எழுதி பிறகு வெளியிட்டிருக்கிறபடியால், அக்கதையைப் பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியதில்லை என நம்புகிறேன். அக்காலத்தில் இக் கம்பெனியார் நாடகங்கள் நடத்தும் விதத்தைத் தெரிவித்தால் இதை வாசிப்பவர்களுக்கு வினோதமாயிருக்கும். இன்றிரவு இன்ன நாடகம் என்று கோவிந்தசாமி ராவ் தீர்மானித்துப் பத்திரிகைகளில் பிரசுரம் செய்துவிட்டு, தனது நடர்களை யெல்லாம் ஒருங்கு சேர்த்து, நாடகக் கதையை அவர்களுக்குச் சொல்லிவிடுவார். கதை சொல்லி முடிந்ததும் கதையில் இன்னின்ன பாத்திரம் இன்னின்னார் நடிக்கவேண்டியது என்று பகிர்ந்து கொடுத்து விடுவார். அதன்பேரில் வேஷதாரிகளெல்லாம் நாடகத்தில் பேச வேண்டிய வசனங்களைத் தங்கள் புத்திக்கேற்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதே! தற்காலத்தில் பெரும்பாலும் இருப்பதுபோல நாடகத்தில் வசனம் அச்சிடப் பட்டாவது எழுதப்பட்டாவது கிடைத்திலது! வசனம் வரையில் ஒவ்வொரு வேஷதாரியும் நாடக ஆசிரியனாகவே இருந்தான்! இவ்வாறு சமயோசிதமாய் அவர்கள் காட்சிக்குக் காட்சி பேசவேண்டி வந்தபோதிலும், அவர்களில் பெரும்பாலார் தஞ்சாவூரிலிருந்த தமிழ் நன்றாகப் பேசும் வன்மை வாய்ந்தவர்களாயிருந்தபடியால், மொத்தத்தில் நாடகமானது கேட்கத் தக்கதாகவேயிருந்தது. வசனத்திற்கு ஒத்திகை மேற்கூறிய அளவுதான்; ஆயினும் பாட்டுகளுக்கு மாத்திரம் ஒத்திகை நடத்தி வந்தார்கள். இன்னின்ன காட்சியில் இன்னின்ன பாட்டுகள் பாட வேண்டுமென்று கோவிந்தசாமி கோவிந்தசாமி ராவ் தீர்மானிப்பார். சில சந்தர்ப்பங்களில் பொதுவாயிருக்கப்பட்ட, வசந்தருதுவின் வர்ணனை, தோட்ட சிருங்காரம், விரகதாபம், மன்மத தூஷணை முதலிய இடங்களிலெல்லாம் பழைய பாட்டுகளை உபயோகிப்பார்கள். மற்ற இடங்களில் தானே, புதிய பாட்டுகள் வர்ணமெட்டுகளுடன் அமைத்துக் கொடுப்பார். இப்பாட்டுகளை மாத்திரம், வேஷதாரிகள் பக்க வாத்தியக்காரர்களுடன் ஒத்திகையில் பழகி வருவார்கள்.
இனி அன்றிரவு நான் கண்ட நபர்களைப் பற்றிச் சிறிது விஸ்தாரமாகக் கூற விரும்புகிறேன். முதலில் அக்கம்பெனியை ஸ்தாபித்தவரும் கம்பெனியின் தலைவருமாயிருந்த கோவிந்த சாமி ராவை எடுத்துக் கொள்கிறேன். இவரை இறந்துபட்ட தமிழ் நாடகங்களை மறுபடியும் உயிர்ப்பித்தவர்களுள் முதன்மையானவராகக் கொள்ள வேண்டும். இவர் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி, மஹாராஷ்டிரம் முதலிய பல பாஷைகளில் வல்லவர். அப்பாஷைகளிளெல்லாம் நன்றாய்ப் பேசக்கூடிய சாமர்த்தியம் வாய்ந்தவர். இவர் முதலில் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருந்தவர். சுமார் நூறு ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தனராம். (அக்காலத்தில் நூறு ரூபாய் என்பது தற்காலத்தில் முன்னூறு ரூபாய் வரும்படிக்குச் சமானமெனலாம்.) பூனா தேசத்திலிருந்து, சாங்கிலி கம்பெனியென்று பெயர் கொண்ட மஹாராஷ்ர நாடகக் கம்பெனியொன்று இதற்கு சில வருஷங்களுக்கு முன்பாக, தஞ்சாவூருக்கு வந்ததாம்; அக்கம்பெனியின் நாடகங்களைப் பார்த்து நாடகமாடுவதில் மிகுந்த விருப்பமுடையவராய், அதைப் போன்ற தமிழ் நாடகக் கம்பெனியொன்று ஸ்தாபிக்க வேண்டுமெனத் தீர்மானித்து தஞ்சாவூரிலும் சுற்றுப்பக்கத்திலுமுள்ள தனக்குத் தெரிந்த நாடகமாடுவதில் விருப்பமுடையவர்களும் சங்கீதப் பயிற்சி யுடையவர்களுமான சில சிறுவர்களைத் தனக்குத் துணையாகக் கொண்டு, மேற்சொன்ன “மனமோஹன நாடக கம்பெனி” என்பதை உண்டுபண்ணினார். உடனே, இதற்காகத் தனது காலமெல்லாம் செலவழிக்க வேண்டுமென்று கருதினவராய் தானிருந்த கவர்ன்மெண்ட் உத்தியோகத்தை ராஜினாமா கொடுத்துவிட்டார்! நாடகமாட வேண்டுமென்று அவருக்கு அவ்வளவு. ஊக்கம் இருத்தது போலும்! பிறகு தன் கம்பெனியைச் சேர்ந்த சிறுவர்களுக்கெல்லாம் தமிழ் பாஷையில் சில நாடகங்களைக் கற்பித்து, ஏற்கனவே சங்கீதப் பயிற்சி உடைத்தாயிருந்தபடியால், அவர்களுக் கெல்லாம் நாடகங்களுக்கு வேண்டிய பாட்டுகள், ராமாயண பாரத கீர்த்தனை முதலிய பழைய புஸ்தகங்களிலிருந்து எடுத்தும், இல்லாதவிடத்து மேற்குறித்தபடி நூதனமான பாட்டுகளைத் தானாக வர்ணமெட்டுக்களுடன் எழுதிக் கொடுத்தும், சங்கீதப் பயிற்சியுண்டாக்கினார். தனது சொத்திலிருந்து செலவழித்து சாங்கிலி கம்பெனியாரைப் போல் நாடக உடுப்புகளும், திரைகளும் தயார் செய்தார்.
பிறகு, தான் குடியிருந்த தஞ்சாவூரில் முதல் முதல் சில நாடகங்களை ஆடி, அங்குள்ள ஜனங்களையெல்லாம் சந்தோஷிக்கச் செய்து, அவர்களெல்லாம் நன்றாயிருக்கிற தெனப் புகழவே, பிறகு தன் நாடகக் கம்பெனியைச் சென்னைக்கு அழைத்து வந்து செங்கான்கடைக் கொட்டகையில் நாடகங்களைத் தமிழில் நடத்த ஆரம்பித்தார். முதலில் அன்று இவரைப் பார்த்த பொழுது இவருக்கு நான் உத்தேசிக்கிறபடி சுமார் முப்பத்தைந்து முப்பத்தாறு வயதிருக்கும். கொஞ்சம் ஸ்தூல தேகமுடையவராயிருந்தார். பழைய காலத்தில் மஹாராஷ்டிரர்கள் தலைக்கணிந்து கொண்டிருந்த சரிகைக் குச்சுவிட்ட, சிகப்புப் பாகையொன்றை இவர் சாதாரணமாக அணிவார். மஹாராஷ்டிரராயிருந்தாலும், தமிழ் சுத்தமாகப் பேசுவார். நல்ல கம்பீரமான குரல் உடையவர். இவருக்குக் கொஞ்சம் வாத நோய் உண்டு போலும். “ஸ்திரீசாகசம்” என்னும் நாடகத்தில் அரசனுடைய மந்திரியாக நடித்தார். (இது மேற்குறித்த சூத்திரதாரனாக வந்தது அன்றி) மந்திரி வேஷத்திற்கு, ஒருவிதத்தில் பொருத்த மாயிருந்த, தன் சுய உடையுடனே வந்து விட்டார். இவர் முகத்தில் வர்ணம் பூசுவது சாதாரணமாகக் கிடையாது. அதற்கேற்ப மந்திரி, குரு முதலிய வேஷங்களையே தனக்கு ஏற்படுத்திக் கொள்வார். இப்படிப்பட வேஷங்களை இவர் தரிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு; கதாநாயகனாகவும் இன்னும் பெரிய வேஷதாரியாகவும் வருவது இவருக்குக் கடினமன்று. ஆயினும் நாடகக் கதையின் கோர்வை எங்காவது விட்டுப் போனாலும், ஏதாவது நாடகப் பாத்திரம் வராமற் போனாலும் அல்லது அரங்கத்தின்மீது வருவதற்கு ஆலஸ்ய மானாலும், மந்திரி முதலிய வேஷந் தரித்து கதையின் கோர்வையைப் பூர்த்தி செய்துவிடுவார். எந்த வேஷம் தரித்தாலும், தரித்த வேஷத்திற்குத் தக்கபடி வசனங்களை உபயோகித்து, நன்றாய் நடிக்கும் குணம் இவரிடம் அதிகமாயுண்டு. அக்காலத்தில் தமிழ் நாடகங்களில் நடித்த நடர்களில் இவரை ஒரு முக்கியமானவர் என்று கூறல் வேண்டும். இவர் பாரதக் கதையினின்றும் ராமாயணக் கதையினின்றும் அநேக பாகங்களை நாடகங்களாகத் தன் சபையைக் கொண்டு நடிக்கச் செய்தவர். எனக்கு ஞாபகம் இருக்கின்றவரையில், துரௌபதி துகில் உரிவு, கர்ணவதம், பாண்டவர் அஞ்ஞாதவாசம், அபிமன்யு வதம், சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம் தாராசசாங்கம், சித்ராங்கி விலாசம், ராமதாஸ் சரித்திரம், சிறுத்தொண்டர் புராணம் முதலியன இவரால் நடத்தப்பட்ட நாடகங்களில் பிரபல மானவை. கோவிந்தசாமி ராவ் தரித்த முக்கிய வேஷங்கள் தாராசசாங்கத்தில் பிரஹஸ்பதியும், ராமதாஸ் சரித்திரத்தில் நவாபும், பாதுகா பட்டாபிஷேகத்தில் பரதனுமாம். கோவிந்த சாமி ராவ் நவாபாகவோ அல்லது பரதனாகவோ வருகிறார் என்று நோட்டீசுகள் கிளம்பினால் அன்றிரவு நாடகக் கொட்டகை, ஆரம்பத்திற்கு ஒரு மணி முன்பாக நிறைந்து விடும்; கடைசி வகுப்புகளில் டிக்கட்டுகள் கிடைக்காமற் போகும். அப்பாத்திரங்களாக நடிப்பதில் அவ்வளவு பிரசித்தி பெற்றவர். இப்பாத்திரங்களாக நடிக்கும் பொழுது, கொட்டகையில் இருப்பவர்கள் எல்லோரும் கண்ணீர் விடும்படியாக வசனங்களை உருக்கமாக மொழிந்து கல்மன முடையோரையும் கரையும்படி சோகத்துடன் பாடுவார். ஆதிகாலத்தில் தமிழ் நாடகத்திற்கு இவர் ஓர் அணிகலனாக இருந்தாரென்றே நான் உறுதியாய்க் கூறக்கூடும். இவரிடம் நாம் எல்லோரும் போற்றத்தக்க ஓர் அரிய குணம் இருந்தது. அதாவது மற்றக் கம்பெனிகளிலிருந்தது போலல்லாமல், தனது கம்பெனியைச் சேர்ந்த சிறுவர்களை தன்னாலியன்ற அளவு சன்மார்க்கத்தில் இருக்கச் செய்வதில் முயன்று வந்தார். இவ்வளவு நற்குணமிருந்தும், சரஸ்வதியிருக்குமிடத்தில் சாதாரணமாக லட்சுமி தங்குவதில்லை என்கிற பழமொழியின் படி, இவர் நாடகங்களை நடத்துவதனால் பெரும் ஊதியம் ஒன்றும் பெற்றிலர். முதலில் சில வருஷங்கள் கொஞ்சம் தனம் சம்பாதித்த போதிலும், பிறகு அதெல்லாம் செலவாகி, கடனாளியானார். இவரால் தேர்ச்சி செய்யப்பட்ட இவருடைய மாணவர்களும் இவரைவிட்டுப் பிரிந்து வேறு வேறு கம்பெனிகள் ஸ்தாபித்தனர். கடைசியில் இவரது வயோதிகக் காலத்தில் பாலாமணி கம்பெனியில் சூத்திரதாரனாகவும் வேஷதாரியாகவும் நடிக்கும் கதிக்கு வந்து சேர்ந்தார். பாபம்! இவர் க்ஷணதசைக்கு வந்த காலத்தில் தான் எனக்கு நேராகப் பரிச்சயமானார். நான் எழுதிய நாடகங்களில் ஒன்றாகிய லீலாவதி சுலோசனா என்பதை, இவரது மாணாக்கராகிய சுந்தர ராவ் கம்பெனி நடத்திய பொழுது இவர்தான் சூத்திரதாரனாக இருந்து நடத்தினார். பாலாமணி கம்பெனியும் அந்த நாடகத்தை முதல் முதலில் நடத்தியபொழுது இவர் சூத்திரதாரனாக நடத்தினார். இதைப் பற்றிய விவரங்களை அவைகளைச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் பிறகு சொல்லுகிறேன். இவ்விடத்தில் தமிழ் நாடகத்திற்கு இவர் பூர்வ காலத்தில் மிகவும் பாடுபட்டவர் என்பதை எண்ணினவனாய், அவர் மடிந்து இப்பொழுது எங்கிருந்த போதிலும் அவரது ஆன்மா நற்கதியிலிருக்குமாக எனக் கோரி, இப்பகுதியை முடிக்கிறேன்.