நாடக மேடை நினைவுகள்/மூன்றாம் அத்தியாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மூன்றாம் அத்தியாயம்

சுகுண விலாச சபையை மேற்சொன்னபடி 1891 ஆம் வருடம் ஜூலை மாதம் முதல் தேதி ஸ்தாபித்தவுடன் நாங்கள் காலத்தை வீணாகக் கழிக்கவில்லை. உடனே ஒரு வாரத்திற்கெல்லாம் நிர்வாக சபைக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அதில் சபைக்கு அங்கத்தினரைச் சேர்ப்பதற்காக ஒரு பிரசுரம் அச்சிட்டு வெளியிட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. அத்தீர்மானத்தின்படி ஒரு விளம்பரத்தை ஆங்கிலேய பாஷையில் நான் எழுதினேன். அதுதான் நான் எழுதியவற்றுள் முதல் முதல் அச்சிடப்பட்ட விஷயமாகும். அச்சிடப்பட்டு வெளிவந்த அந்த விளம்பரத்தை நான் பார்த்தபொழுது எனக்கு ஒருவித மகிழ்ச்சியுண்டாயது. அதில் சுகுண விலாச சபை சென்னையில் ஏற்படுத்தப்பட்ட காரணமும், அக்காலத்தில் நமது தேசத்தில் நடத்தப்பட்ட நாடகங்களிலுள்ள குறைகளும், அக் குறைகளைத் தீர்க்க மேற்படி சபையார் மேற்கொண்ட மார்க்கங்களும், தெரிவிக்கப்பட்டிருந்தன. சாதாரணமாக அச் சபையைச் சார்ந்த பழைய காகிதங்களை யெல்லாம் நான் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வந்தும், இந்த விளம்பரத்தின் பிரதியொன்று, இப்பொழுது நான் எங்கெங்கு தேடிப் பார்த்தும் எனக்கு அகப்படவில்லை. இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எவர்களுக்காவது நாற்பது வருடங்களுக்கு முன் பிரசுரிக்கப்பட்ட அக்காகிதம் ஒன்று கிடைக்குமாயின், அதை என் விலாசத்திற்கு அனுப்புவார்களாயின் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவனாயிருப்பேன். மேற்கண்டபடி அச்சிடப்பட்ட விளம்பரங்கள் சிலவற்றை நான் அக்காலம் வாசித்துக் கொண்டிருந்த ராஜதானி கலாசாலைக்குக் கொண்டு போனேன். ஆயினும் நானாக என்னுடன் வாசிக்கும் என் வயதுடைய சிறிய நண்பர்களுக்குக் கொடுக்க வெட்கப்பட்டவனாய், மத்தியான போஜனத்திற்காக ஒரு மணி சாவகாசம் விட்டபொழுது, அக் காலாசாலை சேவகன் ஒருவனிடம் கொடுத்து கலாசாலை மாணவர்களுக்குக் கொடுக்கச் செய்தேன். இச் சமாச்சாரத்தை இங்கு முக்கியமாகக் குறிப்பிட்ட காரணம், இப்போதிருப்பதுபோல் அல்லாது, அக்காலம், ஒரு நாடகச் சபையைச் சேர்ந்திருப்பதென்றால், கௌவரமாக மதிக்கப்படாது, ஏதோ கொஞ்சம் இழிவான தொழிலைச் செய்வதுபோல் பெரும்பாலும் மதிக்கப்பட்டது என்பதை எனது நண்பர்கள் அறியும் பொருட்டே.

இந்த விளம்பரத்துடன் சுகுண விலாச சபையில் அங்கத்தினராகச் சேர விரும்புவோர்களெல்லாம், கையொப்பமிட்டு அனுப்பும்படியாக ஒரு துண்டுக் காகிதத்தையும் சேர்த்திருந்தோம். அதில் கையொப்பமிட்டு எத்தனை பெயர் அங்கத்தினராகச் சேர்கிறார்கள் என்று ஒரு மாதம் வரையில் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தோம். நிர்வாக சபையிலிருந்த எனது நண்பர்கள் அநேகம் பெயர் சேர்வார்கள் என்று மிகவும் உற்சாகத்துடன் பேசினார்கள். எனக்கு மாத்திரம் சந்தேகமாக வேயிருந்தது. நான் எண்ணியபடியே, ஒரு மாதத்தில் பத்துப் பன்னிரெண்டு பெயர்தான் சேர்ந்தனர். ஆயினும் இது எனது நண்பர்களுடைய உற்சாகத்தைக் குறைத்தபோதிலும், எனது உற்சாகத்தைக் குறைக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம், நான் அதிகமாய் ஆசைப்படாததே என்று நம்புகிறேன். இக்குணமானது, உலக வாழ்க்கையில் அநேக விஷயங்களில் எனக்கு அந்நாள் முதல் இந்நாள்வரை மிகவும் உபயோகப்பட்டு வருகிறது. இக்குணத்தை எனது வாலிப நண்பர்கள் ஒரு நற்குணமாகக் கொண்டு, அதன்படி நடந்துவருவார்களாயின், அது அவர்களுக்குப் பெரும் நன்மையைப் பயக்கும் என்று உறுதியாய் நம்பி இதை இங்கு எழுதலானேன். எந்தக் காரியத்தை மேற்கொண்டாலும் அதில் அதிகப் பலனை அடைவோம், பெரும் ஜெயத்தைப் பெறுவோம் என்று கருதாது, “சிறுகக்கட்டி பெருக வாழ்” என்னும் பழமொழியினைப் பற்றுக்கோடாகக் கொண்டு, சிறிது பலன் கிடைத்த போதிலும் சந்துஷ்டியடைந்து, எடுத்துக் கொண்ட முயற்சியை மாத்திரம் கைவிடாமல் அதை நிறைவேற்ற கஷ்டப்பட வேண்டியது மாந்தர் கடன்; பலனை அளிப்பது பரமனது அருள் என்று நம்பினவராய் நடந்து வந்தால் எவர்களுக்கும் இன்பம் அதிகமாகவும், துக்கம் குறைவாகவும் கிடைக்குமென்பது என் ஆயுட்காலத்தில் நான் அறிந்த ஓர் உண்மையாம். இதனால் நான் அடைந்த பலனை, இதனை வாசிக்கும் எனது நண்பர்களும் பெறுவார்களென்று இதை இங்கு எழுதலானேன்.
சபை ஸ்தாபித்து ஒரு மாதம் ஆனபிறகு, என்ன நாடகத்தை நாங்கள் நடத்துவது என்கிற முக்கியமான கேள்வி பிறந்தது. அக்காலத்தில் அச்சிடப்பட்டிருந்த தமிழ் நாடகங்கள் மிகச் சில. அவைகளைக் கைவிரலில் நாம் எண்ணிவிடலாம். அவைகள் ஏறக்குறைய எல்லாம் புராண இதிகாசக் கதைகளாயிருந்தன. அவை அரிச்சந்திர நாடகம், மார்க்கண்டேயர் நாடகம், இரணியவிலாசம், சிறுத்தொண்டர் நாடகம் முதலியவைகளாம். இவைகளெல்லாம் எங்களுக்குப் பிடிக்கவில்லை. அன்றியும் நிர்வாக சபையார் இவ்விஷயத்தைப் பற்றி ஆலோசித்தபொழுது, மற்றவர்கள் ஆடும் நாடகங்கள் நாம் ஆடக்கூடாது, புதிதான தமிழ் நாடகங்களே நாம் ஆடவேண்டுமென்று நான் வற்புறுத்தினேன். நான் இதன் சார்பாக எடுத்துக் கூறிய நியாயங்களை எனது நண்பர்கள் ஒப்புக்கொண்டனர். அதன் மீது சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் தனக்குத் தெரிந்த தமிழ் வித்வான்களுக்குக் கடிதம் எழுதி அவர்களைக் கொண்டு ஏதாவது நூதன தமிழ் நாடகம் எழுதிக் கொடுக்க முடியுமா என்று விசாரிப்பதாகச் சொன்னார். என்னையும் அப்படியே விசாரிக்கும்படி சொன்னார்கள். அதன்பேரில், அதுவரையில் அச்சிடப்பட்டிருந்த சில தமிழ் நாடகங்களைப் படித்து அவற்றின்மீது வெறுப்புக்கொண்டிருந்த நான், என்னுடைய ராசாங்க கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த எனது பால்ய நண்பராகிய ராமராயநிம்கார் என்பவருடன் இதைப்பற்றிக் கலந்து பேசினேன்; இவர்தான் பிற்கால “பானகல் ராஜா” என்கிற பட்டம் பெற்ற பெரியோர். பல்லாரி சரச வினோத சபையாருடைய ‘சிரகாரி’ என்னும் நாடகத்தை நான் பார்த்தது போல் இவரும் பார்த்தவர். தெலுங்கு பாஷையில் அக்காலத்திலேயே மிகுந்த தேர்ச்சியுடையவராய் இருந்தார்; எனக்குத் தெலுங்கு பாஷையில் இப்பொழுதிருக்கும் சிறிது பயிற்சியும் அப்பொழுது இல்லாதிருந்ததால், இவரை, நாங்களிருவரும் கண்ட மேற்குறித்த தெலுங்கு நாடகத்தை, ஆங்கிலேய பாஷையில் எழுதித்தரும்படி வேண்டினேன். அச்சமயம் எனது நோக்கம் என்னவென்றால் அதைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமென்பதே. என் வேண்டுகோளுக் கிணங்கி எனது நண்பர் அந்நாடகத்தை வெகு அழகாக ஆங்கில பாஷையில், எனக்காகக் கஷ்டப்பட்டு எழுதிக் கொடுத்தார்.

இந்த நோட்டுப் புஸ்தகம் இன்னும் என்னிடம் இருக்கிறது. இதைத் தமிழில் கூடிய சீக்கிரத்தில் மொழி பெயர்க்க வேண்டுமென்று உத்தேசித்திருந்தேன். நான் அப்பொழுது படித்துக் கொண்டிருந்த பி.ஏ. பரிட்சை தேறினவுடன் அங்ஙனம் செய்யலாமென்று தீர்மானித்து வைத்தேன். சபையின் நிர்வாக சபைக் கூட்டமொன்றில் ஒருநாள், சபையைச் சார்ந்தவர் பெரும்பாலும் மாணவர்களாயிருப்பதனால், அவர்களுடைய கல்விப் பயிற்சி கெடாமலிருக்கும் பொருட்டும் அவர்களுடைய தாய் தகப்பன்மார் சபையின்மீது குறை கூறாமலிருக்கும் பொருட்டும், பரீட்சைக்குப் போகும் ஒவ்வொரு அங்கத்தினரும் பரீட்சைக்கு மூன்று மாத காலம் முதல் சபைக்கு வரலாகாதென்று ஒரு சட்டத்தை நான் பிரேரேபித்து நிர்வாக சபையார் அதை ஒப்புக்கொள்ளும்படிச் செய்தேன். அவர்கள் அச்சட்டத்தை ஒப்புக்கொண்டதும், நான் இனி மூன்று மாத காலம் வரை சபைக்கு அச் சட்டத்தின்படி வர முடியாதென்று தெரிவித்து சபைக்குப் போகாமல் நின்று விட்டேன். பிறகு அவ்வருஷத் தின் கடைசியில் ஏற்படுத்தியிருந்த பி.ஏ. பரீட்சையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தேறின பிறகே மறுபடி சபையின் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன். இந்த மூன்று மாதத்திற்கிடையில், ஒருவன் ஆயுளில் ஒருவனுக்கு எல்லாவற்றைப் பார்க்கிலும் என்ன பெருங் கஷ்டம் சம்பவிக்குமோ அப்படிப்பட்டது எனக்குச் சம்பவித்தது. என்னை ஈன்ற, நான் வழிபட்டு வந்த தெய்வமாகிய என் மாதா திடீரென்று பரமனது பாதம் போய்ச் சேர்ந்தனர். இப்பெருந் துர்ப்பாக்கியத்தினால் என் மனத்திற்குண்டான வருத்தத்தை வகுத்துரைக்க நான் வார்த்தையற்றவனாயிருக்கிறேன்; அப்படி ஒருக்கால் வல்லவனாயினும், அதை, எனது நாடக மேடை நினைவுகளைப் பற்றி எழுதப்புகுந்த நான், இங்கு வரைவது ஒழுங்கன்று. அக்காலத்தில் எனது தாய் தந்தையர் அனுமதியின்றி நான் ஒன்றும் செய்வது வழக்கமில்லை. நான் சுகுண விலாச சபையைச் சேர்ந்த பொழுது அவர்களுக்குத் தெரிவித்தே சேர்ந்தேன். என் தகப்பனார் “உனது படிப்பானது இதனால் கெடாதென்று எனக்கு நன்றாய்த் தெரியும், ஆகவே சேரலாம்" என்று கூறி விடையளித்தனர்; என் தாயார் மாத்திரம் சற்றே வெறுப்புடையவர்களாய் “வேஷமா நீ போட்டுக் கொள்கிறது!” என்று கூறினார்கள். அவர்கள் தெருக்கூத்துகளைத்தவிர வேறு நாடகங்களைப் பார்த்தவர்களல்ல. ஆகவே அம்மாதிரி இருக்கக் கூடாதென்று கூறினர் போலும். ஒருக்கால் அவர்கள் ஜீவந்தராயிருந்து நான் நாடக மேடையில் வேஷம் தரித்து ஆடுவதை ஆட்சேபணை செய்திருந்தால், என் வாழ்க்கை யானது எந்த விதத்தில், எப்படி மாறியிருக்கும்? நான் தமிழ் நாடகங்களை எழுதுவதை விட்டு வேறேதாவது செய்திருப்பேனா? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் யாரால் கூற முடியும்? என்னால் கூறமுடியாது; என்னைப் படைத்த பரமனுக்குத்தான் தெரியும்!

துக்க சாகரத்தில், இனி ஏது பிழைப்பது என்று அமிழ்ந்திருந்த என்னைக் கைகொடுத்துக் கரையேற்றிய கடவுளின் கருணையானது, அத்துக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவும் வழி கற்பித்தது; அதாவது என் மனத்தை ஏதாவது படிக்கும் வேலையிலோ, எழுதும் வேலையிலோ, செலுத்தும்படி உந்தியது. இப்பொழுதும், ஏதாவது பெருந் துயரங்கள் எனக்குச் சம்பவிக்கும்பொழுது, இம் மார்க்கத்தையே பற்றுக் கோடாகக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறேன். இதன்படி அச்சமயம், முன்னமே ஆரம்பித்து, என் பரீட்சையின் பொருட்டு எழுதுவது தடைப்பட்டிருந்த சகுந்தலை நாடக மொழிபெயர்ப்பை, மறுபடியும் தொடங்கினேன். அன்றியும் ஷேக்ஸ்பியர் மஹாகவியின் நாடகங் களைப் படிக்க ஆரம்பித்தேன்.

மேற்சொன்ன பெரும் துயரம் இக்காரணங்களினால் கொஞ்சம் குறைய, மறுபடியும் சபைக்குப் போக ஆரம்பித்தேன். சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் என்பவர், சபையின் கூட்டங்களுக்கு வந்து போய்க் கொண்டிருந்தால் உனக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருக்குமே என்று சொல்லியனுப்பினார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்கி ஒரு ஞாயிற்றுக்கிழமை சபையின் கூட்டத்திற்குப் போனேன். அங்கு நான் அன்றைத்தினம் கண்டது என் மனத்திற்கு மிகுந்த ஆச்சரியத்தையும் கொஞ்சம் வெறுப்பையும் விளைத்தது.

சுகுண விலாச சபையை ஸ்தாபித்த பின் ஒத்திகைகள் நடத்த எங்களுக்கு ஓர் இடம் அதிக அவசியமாகத் தேவையாயிருந்தது. ஜனங்கள் குடியிருக்கும் வீடுகளில் நாடக ஒத்திகைகள் நடத்துவது உசிதமல்லவெனத் தீர்மானித்தோம். அதன்பேரில் தம்புசெட்டித் தெருவில் விஜயநகரம் மகாராஜா அவர்கள் நடத்தி வந்த பெண்கள் பள்ளிக்கூடக் கட்டிடம் இதற்கு சௌகர்யமாக இருக்குமென்று சபையின் காரியதரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியார் எனக்குத் தெரிவித்தார். அச்சமயம் அப்பள்ளிக்கூடத்தின் மேல் விசாரணைத் தலைவராக என் தகப்பனார் இருந்தார். ஆகவே அவரது உத்தரவைப் பெற என்னைக் கேட்டுக்கொண்டார்கள் ஒருநாள். முன்பே, என் தகப்பனாருடைய உத்தரவைப் பெற்றே இச்சபையைச் சேர்ந்தேன் என்று தெரிவித்திருக்கிறேன். ஆகவே அன்றிரவு நாங்கள் எல்லோரும் வீட்டில் சாப்பிட்டானவுடன் இவ்விஷயத்தைப்பற்றி என் தகப்பனாரிடம் தெரிவித்தேன்; வாரத்தில் இரண்டுநாள், வியாழக்கிழமை சாயங்காலம் ஆறுமணி முதல் எட்டு மணி வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி முதல் எட்டுமணி வரைக்கும் வேண்டுமென்று தெரிவித்தேன்; அன்றியும் வாடகை ஒன்றும் எங்களால் கொடுக்க முடியாதென்பதையும் அவருக்குத் தெரிவித்தேன். அதற்கு அவர் ஒரு ஆட்சேபணையும் சொல்லாமல் ஆகட்டும் என்று இசைந்தார். இது சபையின் நிர்வாக சபையாருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதுமுதல் சபையின் கூட்டங்கள் இங்கு நடந்து வந்தன.