நாடக மேடை நினைவுகள்/ஆறாம் பாகம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நாடக மேடை
நினைவுகள்


 

ஆறாம் பாகம்

1929ஆம் வருஷம் கடைசியில், நான் சுகுண விலாச சபை ஸ்தாபித்தது முதல் செய்யாத காரியம் ஒன்றைச் செய்தேன். அதாவது நான் மதுரை டிராமாடிக் கிளப்பில் நாடகமாடினேன்! இதற்குக் காரணம், நான் சற்று விவரமாய்த் தெரிவிக்க வேண்டியவனாயிருக்கிறேன். நான் முன்பே எனது நண்பர்களுக்குத் தெரிவித்தபடி, எனது அத்யந்த நண்பரான கே. நாகரத்தினம் ஐயர், உத்யோக சம்பந்தமாக மதுரைக்கு மாற்றப்பட்டார். அதன்பேரில் அவர் எங்கள் சபை நாடகங்களில் சென்னையில் நடிப்பது கஷ்டமாயிற்று; அவர் நடிக்கமாலிருக்கவே நானும் நடிப்பது அசாத்தியமாயிற்று. இதைப்பற்றி நான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் நாகரத்தினம் ஐயரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது; அதில் மதுரையில் இருக்கும் டிராமாடிக் கிளப்பார், தன்னையும் என்னையும் அவர்கள் கிளப் நடத்தும் நாடகங்களிரண்டில் ஆடும்படியாகக் கேட்கிறதாகவும், போய் வர என் ரெயில் செலவெல்லாம் அவர்கள் கொடுப்பார்களென்றும், இதற்கு எப்படியாவது நான் சம்மதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இதைப் பார்த்தவுடன் இன்ன பதில் அனுப்புவதென்று தெரியாமல் திகைத்தேன். ஒருபுறம் எனது அத்யந்த நண்பருடன் மறுபடியும் நாடக மேடையில் ஆட வேண்டுமென்னும் விருப்பம் மற்றொரு புறம் சுகுண விலாச சபையைத் தவிர மற்ற சபை யொன்றில் எப்படி நான் ஆடுவது? முன் பின் தெரியாத மற்ற ஆக்டர்களுடன் எப்படி நான் ஆடுவது? இது எங்கள் சபைக்கு விரோதமாமா? என்று பலவாறு கலக்கப்பட்டவனாய், என் சந்தேகங்களை யெல்லாம் எனது அத்யந்த நண்பருக்குத் தெரிவித்தேன். அதன் பேரில் அவர் “இன்னும் நீங்கள் எத்தனை வருடம் நாடக மேடையில் ஆடப் போகிறீர்கள்? நீங்கள் நாடக மேடையை விட்டு நீங்கினால் நானும் அதைவிட்டு நீங்கப் போகிறேன்; ஆகையால் என் பொருட்டாவது இதற்குச் சம்மதிக்க வேண்டும் என்று பதில் எழுதினார். இந்தக் கடைசி நியாயத்திற்குப் பதில் சொல்ல முடியாதவனாய், நான் அப்படியே ஆகட்டும் என்று சம்மதித்தேன். அதன்படி மதுரைக்குப் போய் ஆடுவதற்கு முன்பாக, எங்கள் சபையின் நிர்வாக சபையாருக்கு இதையெல்லாம் தெரிவித்து, மதுரை டிராமாடிக் கிளப்பில் நானும் எனது அத்யந்த நண்பரான நாகரத்தினம் ஐயரும் ஆட, உத்தரவைப் பெற்றே பிறகு மதுரைக்குப் போனேன். நான் இதற்கு உத்தரவைக் கேட்டபொழுது, நிர்வாக சபையார் உத்தரவைக் கொடுத்தபோதிலும், அரை மனத்துடனேயே கொடுத்தார்கள் என்பதை நான் அறிவேன். அவர்களிடம் நான் அங்கு சென்று நடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்த காரணத்தை ஸ்பஷ்டமாய் ஒன்றும் ஒளியாது தெரிவித்தேன். “எனக்கோ வயதாகிறது. நான் இன்னும் சில வருடங்கள்தான் நாடக மேடையில் ஆட முடியும் நான் நாடக மேடையை விட்டு நீங்கினால், தானும் அதன் பிறகு ஆடப் போகிறதில்லை என்று நாகரத்தினம் ஐயர் சொல்லுகிறார். ஆகவே அவர் இன்னும் எத்தனை முறை ஆட முடியுமோ அதற்கு நான் உதவ வேண்டியது என் கடமையாகும்; அன்றியும் இதனால், நமது சபைக்கு ஒன்றும் கெடுதியில்லை. சென்னையில் நாங்கள் வேறு சபையில் ஆடினால் தவறாகும்; வெளியூரில் ஆடினால் அதனால் குற்றமில்லை; அன்றியும் நமது சபையார், வெளியூர்களில் போய் ஆடுகிற வழக்கத்தை விட்டுவிட்டிருக்கின்றனர். ஆகவே வெளியூர்களில் நாங்கள் ஆடுவதனால் நமது சபைக்கு நஷ்டமில்லை. மேலும் தமிழ் நாடக மேடையை முன்னுக்குக் கொண்டு வர வேண்டுமென்பது நமது சபையின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றல்லவா? ஆகவே, நமது சபையைப் போன்ற மற்ற சபைகளுக்கு நம்மாலானதை உதவி செய்ய வேண்டியது நமது கடமைதானே” என்று அவர்களுக்குச் சமாதானம் சொன்னேன். என்ன சொல்லியும் அவர்களில் அநேகர் திருப்தி அடையவில்லை; உண்மையைக் கூறுமிடத்து, எனக்கும் கடைசி வரையில், இவ்வாறு நாம் மற்றொரு சபையில் நடிப்பது நியாயமா, தவறா என்கிற சங்கை பாதித்துக் கொண்டிருந்தது. தமிழ்ச் சங்கங்களிருந்த மதுரை மாநகர்மீதும், அங்கு திருக்கோயில் கொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் மீதும் எனக்குள்ள ப்ரீதியை முன்பே - இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். ஆகவே கடைசியாக, நாம் இப்படிச் செய்வது நமது சுய நன்மைக்காக ஒன்றுமில்லை, தமிழ் நாடக மேடைக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைக்காகவும்தானே இப்படி செய்கிறோம்; ஆகவே மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாரம், என்று அவர்கள் தலையில் இதைச் சுமத்தி, மதுரைக்குப் புறப்பட்டு நாடக தினத்திற்கு நான் ஐந்து நாள் முன்பாகப் போய்ச் சேர்ந்தேன். மதுரை டிராமாடிக் கிளப்பார், இங்கு “காலவ ரிஷி", “இரண்டு நண்பர்கள்” என்னும் இரண்டு நாடகங்களையும் ஆட வேண்டுமென்று நாகரத்தினம் ஐயருடன் கலந்து பேசித் தீர்மானித்தார்கள்; அதற்கு நானும் சரிதான் என்று சம்மதித்தேன்.

மதுரைக்குப் போய்ச் சேருமளவும், புதிய ஆக்டர்களுடன் சேர்ந்து நடிக்கிறோமே, அவர்கள் எல்லாம் சரியாக நடிப்பார்களா? நம்முடன் ஒத்து உழைப்பார்களா? நாடகங்கள் சரியாக நடிக்கப்பட்டு ஜனங்களை சந்தோஷிக்கச் செய்யுமா? நாடகமாடுவதில் நானும் எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயரும் இதுவரையில் எடுத்திருந்த சிறிது பெயர் கெடாமலிருக்குமா? நாடகங்களுக்குச் சரியாகப் பணம் வசூலாகுமா?’ என்கிற பல சந்தேகங்கள் என் மனத்தைப் பாதித்தன. முக்கியமாக அவற்றுள் கடைசியாக எழுதிய சந்தேகம்தான் என்னை மிகவும் வாட்டியது; இந் நாடகங்களினால் மதுரை டிராமாடிக் கிளப்பாருக்கு, நஷ்டம் நேரிட்டால், ஏதோ கொஞ்சம் பெயர் பெற்ற ஆக்டர்களென்று இவர்களை வரவழைத்தோமே, இவர்களால் நமக்கு நஷ்டம் நேரிட்டதே என்று அவர்களும் வருத்தப்படக் கூடாது; சென்னை யிலுள்ள எனது நண்பர்களும் இங்கிருந்து அவ்வளவு தூரம் போய் ஆக்டு செய்தார்களே என்ன பிரயோஜனம் என்றும் ஏளனம் செய்யக்கூடாது என்பதுதான் ஜகதீசனுக்கு என் முக்கியப் பிரார்த்தனையாயிருந்தது. மதுரை ஸ்டேஷனுக்கு நான் போய் இறங்கியவுடன், மா. சுப்பிரமணிய ஐயரை முன்னிட்டு என்னை வரவேற்ற புதிய நண்பர்களின் பிரீதியானது அந்தச் சந்தேகங்களில் கால்பங்கை நிவர்த்தி செய்தது; அன்று சாயங்காலம், டிராமாடிக் கிளப்பார் இருப்பிடமாகிய விக்டோரியா எட்வர்ட் ஹாலுக்குப் (Victoria Edward Hall) போய் நான் மற்ற ஆக்டர்களைச் சந்தித்த பொழுது, இன்னும் கால்பங்கு தீர்ந்தது; இவ்விடத்தில் நாங்கள் ஆடிய முதல் நாடகமாகிய “காலவ ரிஷி” நாடகத்திற்கு ஆரம்பத்தில் தெய்வ ஸ்தோத்திரம் செய்த வுடன், மற்றுமுள்ள அரைப் பங்கு சந்தேகமும் அறவே நீங்கியது.

நான்கு நாள் முன்னதாகப் போய்ச் சேர்ந்தபடியால், அந்த நான்கு தினமும், எனது புதிய நண்பர்களுடன் இரண்டு நாடகங்களுக்கும் ஒத்திகை நடத்தினேன். எனது புதிய நண்பர்களாகிய இந்த டிராமாடிக் கிளப் ஆக்டர்கள் மிகவும் உற்சாகத்துடன் ஒத்திகைகளுக்கு வந்து கற்று வந்தனர். நன்றாய் நடிக்க வேண்டுமென்னும் அவர்களுக்கிருந்த ஊக்கமானது, அவர்களுக்கு நன்றாய்க் கற்பிக்க வேண்டுமென்னும் உற்சாகத்தை எனக்குத் தந்தது. சுகுண விலாச சபை ஆரம்பித்தபொழுது என்ன உற்சாகத்துடன் ஒத்திகைகள் நடத்தினேனோ அத்தனை உற்சாகத்துடன் இங்கும் நடத்தினேன் என்றே சொல்ல வேண்டும் இந்த ஒத்திகைகளை நடத்திய இடமாகிய விக்டோரியா எட்வர்ட் ஹால் மேல் மாடியானது, மிகவும் விசாலமானதாயிருந்த போதிலும், ஒரு கஷ்டம் மாத்திரமிருந்தது. இக் கட்டடத்தின் கீழே சாயங்காலங்களில் ஒரு சினிமா நடந்தேறி வருகிறது; சினிமா ஆரம்பமாகு முன்னும், இடைக்காலங்களிலும் அதைப் பார்க்க வரும் பாமர ஜனங்கள், பெருங் கூச்சலிடு கின்றனர்; இதனால் நிம்மதியாக ஒத்திகை நடத்துவது கஷ்டமாயிருந்தது; தற்காலத்திலும் இக்கஷ்டம் இருக்கின்றது.

அக்காலம் இந்த கிளப்பில் கண்டக்டராயிருந்த ஸ்ரீமான் தாதாச்சாரியார் அவர்கள் அனுமதியின் பேரில், நான் அவருக்குப் பதிலாக ஒத்திகைகள் நடத்தினேன். முன் பின் தெரியாத புதிய ஆக்டர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதென்றால், முதலில் கொஞ்சம் சங்கோசமாயிருந்தபோதிலும், அவர்களுக்கு என்னிடமிருந்த பிரீதியானது, அதை சீக்கிரத்தில் ஒழித்து விட்டது. இரண்டொரு நாளுக்குள், என் பழைய நண்பர்களுடன் நான் குலாவுவது போல் அவர்களுடன் குலாவ ஆரம்பித்தேன். ஒத்திகைகளை யெல்லாம் முடித்த பொழுது, என் மனத்தில் திருப்தி அடைந்தபோதிலும் நாடகங்கள் எப்படியிருக்குமோ என்னும் பயம் மாத்திரம் என்னை விட்டகலவில்லை.

இவ்வருஷம் டிசம்பர் 18ஆம் தேதி இரவு 9-30 மணிக்கு மதுரை பெரிய தகரக் கொட்டகையில், “காலவ ரிஷி” என்னும் எனது நாடகம் ஆடப்பட்டது. இந்நாடகமானது, வேறொரு சபையில் நான் முதல் முதல் நடித்த நாடகமான படியாலும், இதன் பிறகு இச்சபையின் அங்கத்தினராகச் சேர்ந்து பல நாடகங்களை நான் இதுவரையில் நடித்திருக்கிற படியாலும், இந்த நாடகங்களைப் பற்றியும், இச்சபையின் ஆக்டர்களைப்பற்றியும், என் அபிப்பிராயத்தைச் சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன்.

நாடக ஆரம்பம் இரவு 9½ மணிக்கு என்று பிரசுரிக்கப் பட்டிருந்தபோதிலும், ஏறக்குறைய 9 மணிக்கெல்லாம், நாடகக் கொட்டகையில் ஏராளமான ஜனங்கள் வந்து சேர்ந்தனர். என் வழக்கப்படி நான் அவர்களை நேரிற் பார்க்காமற் போனபோதிலும், அவர்களுடைய ஆரவாரத் தால் இதை நான் உணர்ந்தேன். இந் நாடகத்தில், அர்ஜுனனாக வரும் நான், கடைசி இரண்டு காட்சிகளில்தான் ஆக்ட் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். நான் மேடையின்மீது தோன்றிய பத்து அல்லது பதினைந்து நிமிஷங்களுக்கெல்லாம் நாடகமானது முற்றுப் பெறும்! ஆயினும் என் வழக்கத்தின்படி சாயங்காலம் ஐந்து மணிக்கெல்லாம் கொட்டகைக்குப் போய், வேடம் பூண்டேன். அன்று முதல் இன்று வரையில் மதுரையில் நான் இந்த கிளப்பில் நடிக்கும் பொழுதெல்லாம், எனக்கு வர்ணம் தீட்டியவர், இங்கு எனக்குப் புதிய நண்பராய் வாய்த்த பி.கிருஷ்ண சாமி சாஸ்திரியார், பி. ஏ., பி.எல்., அவர்களே. இவர் என்னைப்போல் ஏறக்குறைய வயோதிகராயிருந்த போதிலும், இச்சபைக்கு இவ் வருடம் காரியதரிசியாயிருந்த போதிலும், சாயங்காலம் ஆக்டர்கள் எல்லாம் வருவதன் முன்பே கொட்டகைக்குப் போய்ச் சேர்ந்து, சுமார் 5 மணி முதல் 9 மணி வரையில் தான் ஒருவராக எல்லா ஆக்டர்களுக்கும் வண்ணம் தீட்டுவார். தன்னிலும் வயோதிகனான என்னை யௌவனமுடைய “ஆணில் அழகனான அர்ஜுனனாக”த் தோன்றும்படியாக, இவர் எடுத்துக் கொண்ட கஷ்டம் கொஞ்சமல்ல; அன்று முதல் இன்று வரை சுமார் பத்து நாடகங்களுக்கு இவ்வாறு எனக்கு மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டு, வண்ணம் தீட்டிய சாஸ்திரியார் அவர்களுக்கு, இதன் மூலமாக என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துவது தவிர, வேறு கைம்மாறு செய்ய வகையறியேன். எனது நண்பர் நாகரத்தினம் ஐயர் மாத்திரம், ரங்கவடிவேலுவைப்போல் தானாக வேஷம் பூணக் கற்றுக்கெண்டிருக்கின்றனர். நாற்பத்தாறு வருடங்களாகத் தமிழ் நாடக மேடையில் ஆடி வந்தும், முகத்தில் வர்ணம் தீட்டிக்கொள்ள வகையறியாது, கல் பிள்ளையாரைப்போல் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்கள் எனக்கு வேஷம் பூணுவதில் எல்லா வேலையையும் செய்யும்படி செய்கிறதை நினைக்கும் பொழுது, எனக்கு மிகவும் வெட்கமாய்த்தானிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் எனக்கு இயற்கையாயுள்ள சோம்பேறித்தனம்தான் என்று நினைக்கிறேன்.

எல்லா ஆக்டர்களும் சித்தமானவுடன், மணிப்பிரகாரம் நாடகத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று, ஒன்பது மணிக்கெல்லாம் விநாயகர் துதி ஆரம்பிக்க வேண்டுமென்று என் புதிய நண்பர்களிடம் தெரிவித்தேன். அப்பொழுது அவர்கள் பிள்ளையார் பாட்டு என்று எங்கள் கிளப்பில் வழக்கமில்லை; ராஜராஜேஸ்வரியான அம்பிகை தோத்திரத்தைத்தான் நாங்கள் ஆரம்பப் பாட்டாக பாடுவது வழக்கம் என்று தெரிவித்தனர். அதன் பேரில் எனது நண்பர் நாகரத்தினம் ஐயரை ஒரு புறமாக வரவழைத்து, இவர்களுக்கு வழக்கமில்லாமற் போனாற் போகிறது; நமது வழக்கப்படி, பிள்ளையார் பாட்டை நமது மனத்திற்குள்ளாவது பாடிவிட்டு ஆரம்பிப்போம் என்று சொல்லி அவ்வாறே செய்தோம். இச் சபையின் அங்கத்தினனாகச் சேர்ந்த பிறகு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் பொறுத்துத் தான் இவர்களைப் பிள்ளையார் பாடல் ஒன்று பாடும் வழக்கத்திற்குக் கொண்டு வந்தேன்.

மேற்சொன்னபடி ஸ்தோத்திரப் பாடல்களானதும், நான் எனது நாடக ஆடையை அணிய அரங்கத்தின் பின்புறம் செல்ல, முதற் காட்சியில் நர்த்தனம் செய்ய வேண்டியிருந்த கே. நாகரத்தினம் ஐயர் என்னிடம் வந்து, இங்கு புதிதா யிருக்கிறபடியால், நான் நர்த்தனம் செய்யும் பொழுது நீங்கள் பக்கப் படுதா (Side Wing) அருகிலிருந்தால் எனக்குத் தைரியமும் உற்சாகமும் கொடுக்கும் என்று கேட்டுக் கொள்ள, அவ்வாறே அங்கு போய் உட்கார்ந்தேன். உடனே நாடக ஆரம்பத்திற்காக, மணியடித்து டிராப் படுதாவைத் தூக்கினவுடன், முதல் பாட்டைப் பாட வேண்டிய இந்திரன் வேடம் புனைந்த ஆக்டர், அபஸ்வரமாகப் பாட ஆரம்பித்தார்! இதென்னடா ஆரம்பத்திலேயே இப்படியிருக்கிறது என்று கொஞ்சம் பயமுற்றேன். “முதல் கோணல் முற்றும் கோணல்” என்னும் பழமொழி யொன்றிருப்பினும், என் விஷயத்தில் முதலில் ஏதாவது கெடுதியிருந்தால்தான் பிறகு எல்லாம் சரியாக முடிகிற தென்பதை எண்ணினவனாய், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாரம் என்று பொறுத்திருந்தேன். உடனே அக்காட்சியில் என அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், நர்த்தனம் செய்யத் தொடங்கியது முதல், வந்திருந்த ஜனங்களெல்லாம் கரகோஷம் செய்து சந்தோஷிக்க ஆரம்பித்தனர். பிறகு சுபத்திரையாக வந்த கே.நாகரத்தினம் ஐயரும், இன்னும் மற்ற ஆக்டர்களும் மிகவும் நன்றாய் நடித்தனர் என்பது என் அபிப்பிராயம். இருந்தும் கடைசிக் காட்சிக்கு முன் காட்சியில் நான் அரங்கத்தில் பிரவேசிக்க வேண்டிய சமயம் வந்தபொழுது, என் உடலில் ஒரு விதமான பயம் தோன்றியது! “எட்டு வருஷத்து எருமைக் கடா!” என்று ஒரு பழமொழி உண்டு. அப்படிப்பட்ட கடாவின் வயது ஐந்து கொண்டதாகி, சுமார் நாற்பது வருஷம் அரங்கத்தில் ஆடிய பிறகும், நமக்கு இந்த அரங்கப் பீதியா என்று நகைத்தவனாய், மனத்தைத் தைரியம் செய்து கொண்டு, இப்படிப்பட்ட சமயங்களில் அதைப் போக்க நான் கைகண்ட ஒளஷதமாய் வைத்திருக்கும், “பிராணாயாமம்" (Deep breathing) என்பதை ஐந்தாறு முறை அப்யசித்து, அரங்கத்திற்குள் பிரவேசிக்க வேண்டியவனாயினேன். இதற்கு முக்கியக் காரணம், இத்தனை வருடங்களாகியும், ஏதாவது புதிய நாடகத்தில் முதன் முறை ஆடுவதென் றாலும் அல்லது புதிய ஆக்டர்களுடன் ஆடுவதென்றாலும், எப்படியிருக்குமோ என்னும் பீதி, என்னைவிட்டு இன்னும் அகலாதிருப்பதே.

நான் மேடையில் தோன்றியதும் நிசப்தமாய் எல் லோரும் - என்னைக் கவனிக்கிறார்கள் என்பதைக் கண்டவனாய், என்னாலியன்ற அளவு முயன்று நன்றாய் நடித்துச் சபையோரை சந்தோஷிப்பிக்கப் பார்த்தேன். நான் அன்று நடித்த அர்ஜுனன் பாகம் மிகவும் சிறியது. அதை, சரியாக நடிக்காது ரசாபாசம் செய்வது சுலபம்; அதில் பெயர் எடுப்பது கஷ்டம். இந்நாடகத்தில் அர்ஜுனன் தோன்றும் இரண்டு காட்சிகளில் முதற் காட்சியாகிய இதில், சுபத்திரை தன்னை வஞ்சித்துத் தன்னிடமிருந்து வரம் பெற்றாள் என்பதை அறிந்த அர்ஜுனன், தன் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்து “சுபத்திரை!” என்று கூறுமிடம், இதை நடிக்கும் ஆக்டர்களுக்கு ஒரு கட்டம். இந்த கட்டத்தில் தவறுவானாயின் அந்த ஆக்டர் ஒழிந்தவனே இந்நாடகத்தில்; பல ஆக்டர்கள், இந்த ஒரு பதத்தைச் சரியாக ஆக்டு செய்யத் தெரியாது ரசாபாசஞ் செய்ததைப் பன்முறை நான் பார்த்திருக்கிறேன். இந்தக் கட்டம் வந்த பொழுது, கொட்டகையிலிருந்த ஜனங்களெல்லாம் ஒரே கரகோஷம் செய்தபொழுது, இந்தக் கட்டத்தில் நாம் தவறவில்லை என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். இந்த ஒரு வார்த்தையைக் கூறுமிடத்து, ஸ்ரீ கிருஷ்ணனுடன் போர் புரிய வேண்டுமே என்ற பயமுமிருக்க வேண்டும்; அப்படிச் செய்தவள் தன் ஆருயிர்க் காதலியாகிய கண்ணன் தங்கை என்னும் பரிவும் இருக்க வேண்டும்! இம் மூன்று ரசங்களையும் ஒருங்கே முகத்திலும், வாய்ச் சொல்லிலும் காட்டுவதுதான் கடினம். இதை இந்த அர்ஜுனன் வேடம் பூணும் எனது இளைய நண்பர்கள் கவனிப்பார்களாக.

இனி அன்றைத் தினம் என்னுடன் அரங்கத்தின்மீது நடித்த எனது புதிய நண்பர்களைப் பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். “காலவ ரிஷி” என்னும் நாடகத்திற்குத் தெலுங்கில் “சித்திரசேனோ பாக்கியானம்” என்று பெயர். இதன் கதாநாயகன், சித்திரசேனனே. அன்று இச் சித்திரசேனன் வேடம் பூண்டவர் எனது புதிய நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர் என்பவர். இதற்கு முன்பாக நான் மதுரைக்கு வந்திருந்தபொழுது, இவர் என்னைக் கண்டு என்னுடன் சம்பாஷித்திருப்பதாக இவர் எனக்குத் தெரிவித்திருக்கிறார்; ஆயினும் அது நான் எவ்வளவு யோசித்துப் பார்த்தபோதிலும் என் நினைவிற்குக் கொஞ்சமேனும் வரவில்லை. நான் இம்முறை மதுரைக்கு வந்தபொழுது, ரெயில் வண்டியை விட்டிறங்கியது முதல், ஒருவருக்கொருவர் பரிச்சயமாகி, விரைவில் சிநேகிர்களாகி விட்டோம். மதுரையில் எனக்குக் கிடைத்துள்ள ஆப்த மித்திரர்களில் இவர் ஒரு முக்கியமானவர் என்றே நான் கூற வேண்டும். இவ்வளவு வெகு சீக்கிரம் நாங்கள் நண்பர்களாகி விட்டதற்குக் காரணம், எனக்கிருப்பது போல் இவருக்கு முள்ள “தமிழ் நாடகப் பைத்தியமே!” இவர் மதுரையில் பிரபலமான வக்கீலாயிருந்த, காலஞ் சென்ற மாது ஐயர் அவர்கள் இரண்டாவது குமாரர்; என்னைப்போல் இள வயது முதல் தமிழ் நாடக மேடையின் மீதுள்ள பிரீதியால், அதில் தன் காலத்தைப் பெரும்பாலும் கழித்தவர். இந்த மதுரை டிராமாடிக் கிளப்பைச் சேருமுன், இரண்டொரு நாடக சபைகளில் நடித்திருக்கிறார் எனப் பிறகு அறிந்தேன். இவரிடம் நான் கண்ட ஒரு முக்கியமான குணம் என்ன வென்றால், நாடகமேடையில் ஒருவன் என்னென்ன கற்கக் கூடுமோ அவ்வளவையும் கற்க வேண்டும் என்னும் ஊக்கமே. யாராவது ஒரு ஆக்டரிடமிருந்து ஏதாவது கற்கவேண்டுமென்றிருந்தால் ஐம்பதல்ல, நூறு மைலாவது, தன் மோட்டார் வண்டியிற் போய்க் கற்று வருவார். என்னிடமிருந்து இவர் கற்க வேண்டியது அதிகமில்லாவிட்டாலும், என்னைச் சந்திக்கும் போதெல்லாம் (இதன் பிறகு இதுவரையில் மதுரைக்கு ஏழெட்டு தரம் போயிருக்கிறேன்; அச் சமயங்களிலெல்லாம், ஒரு நாளாவது இவர் என்னைப் பாராத நாளில்லை), ஏதாவது என்னிடமிருந்து அறிய விரும்புவார். இப்படிப்பட்ட “சிஷ்யர்கள்” எனக்கு அதிகமாயிராதது ஒரு விதத்தில் நலமாம்; இல்லாவிட்டால், எனக்கு உண்ணுவதற்கும் உறங்குவதற்கும்கூட அவகாசமிராமல் போம்!

இவர், கம்பீரமான உருவத்தையும் தோற்றத்தையும் உடையவர்; கண்கள் விசாலமாயும் சற்றுப் பெருத்தும் இருக்கும்; இதனால் இவருக்கு ஒரு கஷ்டமுண்டு; “திருடனை ராஜ முழி முழிக்கச் சொன்னால் என்ன செய்வான்?” என்பதற்கு நேர் விரோதமாக, ராஜ விழியை யுடைய இவருக்கு, திருடனைப் போல் விழிப்பது கடினமாயிருக்கிறது. ஆக்டர்களுக்கிருக்க வேண்டிய முக்கியமான குணம் இவரிடம் ஒன்றுண்டு. ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதென்றால், ஏறக்குறைய ஒரு முறைக்கு மேல் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை; எவ்வளவு கஷ்டமான பாகமாயிருந்த போதிலும், இரண்டாம் முறைக்குமேல் சொல்லவேண்டிய நிமித்தியதில்லை. சங்கீதத்தில், முக்கியமாக இந்துஸ்தானி சங்கீதத்தில் நல்ல ராக ஞானமுடையவர்; ஹார்மோனியம், தபேலா முதலிய பக்கவாத்தியங்களையும் வாசிக்கும் திறமுடையவர். இவர் இன்று சித்திரசேனனாக மிகவும் நன்றாய் நடித்தார் என்பது என் தீர்மானம். ஆயினும் மதுரைவாசிகள் இவரை அதிகமாக சிலாகிக்கவில்லை என்பது என் அபிப்பிராயம்; “உள்ளூர் மாடு உள்ளூரில் விலை போகாது” என்னும் காரணத்தினாலோ? நான் அறியேன். இவரிடம் இன்னொரு அரிய குணம் என்னவென்றால், இவர் இச்சபையில் சாதாரணமாக முக்கிய “ராஜபார்ட்” ஆக்டு செய்து வந்தபோதிலும், எந்த அற்ப வேஷத்தைக் கொடுத்தபோதிலும், எடுத்துக்கொண்டு, அதற்கிசைய வேஷம் தரித்து நடித்து வருவார்! இதைப்பற்றிப் பிறகு நான் எழுத வேண்டி வரும்.

அன்று கதா நாயகியாகிய, சித்திரசேனன் மனைவியரில் மூத்தவளாகிய சந்தியாவளி வேடம் பூண்டவர், எனது புதிய நண்பர்களில் ஒருவராகிய சோமநாத ஐயரே. நான் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தவுடன் இவரைப்பற்றிதான் முதலில் நான் விசாரித்தேன். “இரண்டு நண்பர்கள்” நாடகத்தில், என்னுடன் சத்யவதியாக, யார் நடிக்கப் போகிறதென எனது நண்பர் நாகரத்தினத்தைக் கேட்ட போது, இவர்தான் என்று சோமநாத ஐயரைத் தெரிவித்தார். “சத்யவதி” நான் சிருஷ்டித்த ஸ்திரீ பாத்திரங்களில் ஒரு முக்கியமானதாம்; அந்தப் பாகத்தை நடிப்பது சுலபமல்ல; அன்றியும் என்னுடன் நடிப்பவர்கள் சரியாக இல்லா விட்டால், என்னால் சரியாக நடிக்க முடியாது என்பதை, இந்த நாடக மேடை நினைவுகள் வாசித்து வரும் எனது நண்பர்கள் இது வரையில் நன்றாய் அறிந்திருப்பார்கள். ஆகவே இவரைப்பற்றி நான் முதலில் விசாரிக்க வேண்டிய தாயிற்று. இவர் உருவத்தில் என்னைவிடக் கொஞ்சம் பருமனாயிருந்தபோதிலும், முகத்தில் ஸ்திரீகளுக்குரிய களையையுடையவர்; நன்றாகப் பாடும் சக்தி வாய்ந்தவர்; அன்றியும் ஏதாவது சொல்லிக் கொடுத்தால் உடனே அதை கிரஹித்துக் கொள்ளம் சக்தி வாய்ந்தவர்; சுப்பிரமணிய ஐயரிடம் இருப்பதுபோல் இவரிடமும், நாடகக் கலையை நன்றாய்க் கற்க வேண்டுமென்னும் அவாவுண்டு, ஆகவே இவருக்கு நான் ஒத்திகை செய்வது சுலபமாயிருந்தது. இவர் ‘காலவ ரிஷி’யில் சந்தியாவளியாக நன்றாய்ப் பாடி நடித்தார் என்பது என் அபிப்பிராயம்.

இந் நாடகத்தில், ஸ்ரீ கிருஷ்ணனுடைய பாகம் ஒரு முக்கியமானதென்பதை அதை வாசித்த எனது நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். சாதாரணமாகவே ஸ்ரீ கிருஷ்ணன் வேஷம் பூணுதல் எளிதல்ல அதிலும் நான் எழுதியபடி ஆக்ட் செய்வது, இன்னும் கொஞ்சம் கஷ்டம். இந்த வேடத்தை எனது புதிய நண்பர்களில் ஒருவராகிய பஞ்நாத ஐயர் பி.ஏ., பி.எல்., எடுத்துக் கொண்டு நன்றாய் நடித்தார். இவருக்கு இம்முறை அப் பாத்திரத்தை, என் அபிப்பிராயப்படி நடிக்கும் விதம் கற்பிக்க எனக்கு அவகாசமில்லாமற் போயிற்று. பிறகு இச் சபையார் எனது “சுபத்திரார்ஜுனா” என்னும் நாடகத்தை ஆடிய சமயம், இவருக்கு எனக்குத் தெரிந்தவரை ஸ்ரீ கிருஷ்ணனுடைய பாத்திரத்தை இவ்வாறு நடிக்க வேண்டுமென்று நான் கற்பிக்க, மிகவும் நன்றாக நடித்தார் என்பது, என்னுடைய அபிப்பிராயம் மாத்திர மன்று, எல்லோருடைய அபிப்பிராயமுமாம். ஸ்ரீ கிருஷ்ண பாத்திரத்தை அநேகர், அநேக சபைகளில் நடிக்க நான் பார்த்திருக்கிறேன். அநேக நாடகக் கம்பெனிகளிலும் பார்த்திருக்கிறேன்; ஆயினும் எனது நண்பராகிய அ. பஞ்சநாத ஐயரைப்போல் அக் கஷ்டமான பாத்திரத்தை மிகவும் பொருத்தமாக நடித்ததை, நான் பார்த்ததில்லை யென்றே சொல்ல வேண்டும். இந்த வேடத்திற்குத் தக்க உருவமும் குரலும், சங்கீத ஞானமும் நடிக்கும் திறமும் எல்லாம் இவரிடம் இயற்கையாய் அமைந்திருக்கின்றன.

இன்று இந் நாடகத்தில் நாரதராக வந்தது டாக்டர் பி.சி. சீதாராம் அய்யர்; இவருக்கு இவ்வேடம் பலவிதத்திலும் பொருந்தியதாயிருந்தது. நாரதர் உருவம் சற்றுக் குறுகிய தாயிருக்க வேண்டுமென்று எப்பொழுதும் நான் எண்ணினவன்; இதற்கிசைந்தபடி எனது புதிய நண்பராகிய சீதாராம அய்யர் என்னைவிட சற்றுக் குட்டையானவர். இவர் சங்கீதத்தில் நல்ல ஞானமுடையவர். தனியாகக் கச்சேரி பண்ணும்படியான சக்தியும் உடையவர்; ஆயினும் இவர் நாடக மேடைமீது வரும்பொழுது, இவரது பாட்டுகள் இவரது சங்கீதத் திறமைக்கேற்றபடி அவ்வளவு சோபிப்பதில்லை என்பது எனது அபிப்பிராயம்; எனது மதுரை நண்பர்களில் பலரும் இப்படியே அபிப்பிராயப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், இவர் நாடக மேடையில் பாடும் பொழுது, சங்கீதத்தின்மீதே மனத்தைச் செலுத்தி பாட்டிற்குத் தக்கபடி நடிக்க வேண்டும் என்பதை அவ்வளவாகக் கவனிப்பதில்லை யென்பதாயிருக்கலா மென என் புத்திக்குப் படுகிறது; இதை என் நண்பராகிய இவர் கொஞ்சம் கவனிப்பாராயின், நாடக மேடையில் நல்ல பெயர் பெறுவார் என்பது என் அபிப்பிராயம்.

இந் நாடகத்தில் ஹாஸ்ய பாகத்திற்காக நான் எழுதி வைத்த ‘மண்டு’, ‘கமண்டு’ என்னும் இரு பாத்திரங்களும் சற்றுக் குண்டாக இருக்க வேண்டுமென்பது என் எண்ணம்; அதற்கிசைந்தபடி இச் சபையாரால் இந் நாடகத்தை நடத்தியபொழுது, இந்த இரண்டு பாத்திரங்களுக்கும் மெலிவடைந்தவர்களாயிராத் இருவர் கிடைத்தது எனக்கே திருப்தியையும் நகைப்பையும் தந்தது.

ரத்னாவளி வேடம், வக்கீலாகிய வெங்கடாச்சாரியார் * எடுத்துக் கொண்டார். இவர் இந்நாடகத்திற்கு வருவதற்காக, நாச்சியார் கோயிலிலிருந்து வந்து சேர்ந்தார். இவர் கர்நாடக சதுர் ஆடுவதில் வல்லமை வாய்ந்தவர். ‘ரத்னாவளி’ பாத்திரத்தில் யாரும் பெயர் எடுப்பது கடினம் என்பதைப்பற்றி முன்பே நான் எழுதியிருக்கிறேன்.

இன்று மேனகை வேடம் பூண்டவர் கணபதி சுப்பிரமணிய ஐயர்; சிவபெருமானது திருக்குமாரர்கள் இருவருடைய பெயரையும் ஒன்றாகச் சேர்த்துத் தன் பெயராகவுடைய இவர், ஸ்திரீ வேஷத்திற்கு மிகவும் பொருத்தமான உருவமுடையவர்; ஆயினும் உரக்கப் பேசம் சக்தியும் பாடும் சக்தியும் இல்லாமையால், இவர் இன்று அவ்வளவாக சோபிக்கவில்லை என்பது என் அபிப்பிராயம். மேற்குறித்த குறைகளையும் நீக்கி உரக்கப் பேசச் செய்து, சங்கீதமும் கொஞ்சம் கற்பாராயின் இவர் நாடக மேடையில் நல்ல பெயர் எடுக்கக்கூடும்.

இந் நாடகம் சிறியதாயிருந்தபடியால், ஏறக்குறைய இரவு ஒன்றரை மணிக்கெல்லாம் முடிந்து விட்டது. நாடகம் முடிந்தவுடன் என் வழக்கம்போல், என் வேஷத்தைக் களைந்து விட்டு, சற்று நேரம் சிரமபரிகாரமாக மேடையின் மீது உட்கார்ந்து, என் புதிய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, நாடகம் எப்படியிருந்தது என்று வந்திருந்தவர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள் என்ற கேட்க, அவர்களில் சிலர், “எல்லாம் நன்றாய்த்தான் இருந்தது, ஆயினும், உங்களுடைய பாகம் என்ன அவ்வளவு சிறியதா யிருந்ததே” என்று கேட்டனர். “அதற்கு நான் என்ன செய்வது? இதற்கெல்லாம் வட்டியுடன், நாளைய நன்றை ஆட்டமாகிய “இரண்டு நண்பர்களில்” முதல் முதல் கடைசிவரை ஆக்டு செய்து தீர்த்து விடுகிறேன்” என்று வேடிக்கையாய்ப் பதில் உரைத்தது எனக்கு ஞாபகமிருக்கிறது.

இனி இவ்வருஷம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இங்கு நடந்த, “இரண்டு நண்பர்களை”ப்பற்றி எழுதுகிறேன். இந் நாடகம் மேடையில் ஆடுவதற்கு அதிகக் கஷ்டமானது என்பதை எனது நண்பர்கள் முன்பே அறிந்திருக்கிறார்கள் என நம்புகிறேன். அப்படியிருந்தும் இதை இச் சபையார், ஆதி முதல் அந்தம் வரை, ஏராளமாய் வந்திருந்த சபையோர் மெச்சும்படியாக நடித்தது, மிகவும் மெச்சத்தக்கதே. தேசாபிமானியாகிய ஹைகோர்ட் வக்கீல் வைத்தியநாத ஐயர் பி.ஏ., பி.எல்., அவர்கள் இதைப்பற்றி மறுநாள் - என்னிடம் மிகவும் புகழ்ந்து பேசியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது; நான் நடித்ததைப்பற்றியும் ஏதோ சிலாகித்துக் கூறினார். முதல் நாடகத்தில் நமக்கு அதிக பாகம் ஒன்றுமில்லையே, இதில் எப்படியாவது சபையோரைச் சந்தோஷிக்கச் செய்ய வேண்டுமென்று, நான் என்னால் இயன்ற அளவு பிரயத்தனப்பட்டேன். கடைசிக்காட்சிகளில் நான் பைத்தியக்காரனாக நடித்தது, எனக்கே கொஞ்சம் திருப்தியைத் தந்தது. சென்னையில் சுகுண விலாச சபையில் கடைசியாக இரண்டொரு முறை நடித்ததைவிட, இச்சமயம் நன்றாக நடித்தேன் என்பது என் அபிப்பிராயம். ஆயினும் வந்திருந்தவர்களுடைய மனத்தையெல்லாம் கவர்ந்தவர் என் அத்யந்த நண்பரான கே. நாகரகத்தினம் ஐயரே. இவர் மனோரமாவாக நடித்தது, மிகுந்த திருப்திகரமாயிருந்ததென எல்லோரும் ஒப்புக்கொண்டனர். இவர் தற்காலம் நடித்து வரும் பாத்திரங்களில் இது ஒரு முக்கியமானதென்பதற்குச் சந்தேகமில்லை. என்னுடன் சத்யவதியாக நடித்த சோமநாத ஐயர், நான் அவருக்குக் கற்பித்தபடி ஒன்றும் தவறாமல் நன்றாக நடித்தார். இவர் தேகாப்பியாசஞ் செய்து, சற்றுப் பருமனாயிருக்கும் தன் உருவத்தை மாத்திரம் கொஞ்சம் சரிப்படுத்திக் கொள்வாராயின், தென் இந்திய நாடக மேடையில் இவர் நற்பெயரெடுக்கலாம் என்பதற்கு ஐயமின்று. சுகுமாரனாக இன்று நடித்த மா. சுப்பிமணிய ஐயர், ஒத்திகைகளில் நடித்ததைவிட மிகவும் நன்றாய் நடித்தார். இதற்குக் காரணம் என்னவென்று பிறகு நான் வினவிய பொழுது; “உங்களுடன் நடிப்பதென்றால் எனக்கு ஒருவிதமான “குஷி” பிறந்து விட்டது. அதனால் தான் அப்படி நடித்தேன்” என்று விடை பகர்ந்தார். இதில் கொஞ்சம் முகஸ்துதியிருந்த போதிலும், கொஞ்சம் வாஸ்தவமுமிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது; நாடக முழுவதிலும், ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் என்னுடன் நடிக்கவேண்டி வந்த இவர், நன்றாய் நடிக்கும் போதெல்லாம் சபையோர் அறியாதபடி, “குட் குட்” (நல்லது நல்லது) என்று இவரை நான் உற்சாகப்படுத்திக் கொண்டு வந்தேன். நாடக மேடையில் நெடுநாள் பழகிய ஆக்டர்கள், மற்றவர்களை இவ்வாறு உற்சாகப்படுத்துவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்நாடகத்தில் கடைசிக் காட்சிகளில் நான் பித்தம் பிடித்தவனாக நடித்த காட்சிகளில், எனக்குப் பிற்காலம் இந்தப் பாத்திரத்தை நீங்கள் நடிக்க வேண்டி வரும். ஆகவே, பைத்தியக்காரனாக நடிப்பதை, சற்றுக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூற, அவரும் மிகவும் கவனத்துடன் அதைப் பார்த்து வந்தார். நான் நாடக மேடையில் நடித்த பல பாத்திரங்களில் பெரும்பாலான வற்றை நன்றாய் நடிக்கக் கூடியவர்கள், என் அபிப்பிராயத்தில், இரண்டு மூன்று பெயர்கள் தானிருக்கின்றனர், அவர்களில் இவர் ஒருவராம்; இந் நாடகமாடிய பிறகு, பல நாள் இவருக்கு நான் கடிதம் எழுதும் போதெல்லாம் “என் பிரியமுள்ள சுகுமாரனுக்கு” என்றே இவருக்கு எழுதுவது வழக்கமாயிருந்தது.

ஒரு சிறு பாகமாயிருந்த போதிலும், நடிப்பதற்குக் கஷ்டமான நித்யானந்தன் பாகத்தை, ரங்க அய்யங்கார் என்பவர் நன்றாக நடித்தார். எனது பழைய நண்பராகிய எஸ். ராஜகணபதி முதலியாருக்குப் பிறகு இவர்தான் இப் பாத்திரத்தை வெகு விமரிசையாக நடித்தார் என்பது என் அபிப்பிராயம்; என்ன காரணத்தினாலோ, இவர் இதே நாடகத்தை மறுமுறை இச் சபையார் ஆடியபோது, இவர் இவ் வேஷத்தில் நன்றாய்ச் சோபிக்கவில்லை.

இந் நாடகத்தில் இன்னொரு கஷ்டமான வேடம், குரு நாதன் என்பதாம். இவன் ஒருவிதமான பித்துப் பிடித்தவன். இதை டாக்டர் நாராயண ஐயர், எல்.எம்.எஸ்., பி.எஸ்.சி. என்பவருக்குக் கொடுத்திருந்தது. இவர் இதை நன்றாய் நடிக்கமாட்டார் என்று அவரது மதுரை நேசர்கள் கூறினார்களாம். அதன்மீது பயந்தவராய், இதைப்பற்றி கே. நாகரத்தினம் ஐயரிடம் நான் மதுரை போய்ச் சேருமுன் தெரிவிக்க, அவர் நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம், என்று ஆறுதல் கூறினாராம்; இதையெல்லாம் எனது அத்யந்த நண்பர், நான் மதுரைக்குப் போய்ச் சேர்ந்ததும் என்னிடம் கூறி, “நீங்கள் அவரைச் சரிப்படுத்திவிடுவீர்கள் என்று நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். ஆகவே எப்படியாவது அவரை நன்றாய் நடிக்கச் செய்வது உங்கள் பாரம்” என்று என்னிடம் கூறினார். அதன் பேரில், இவரை காலைகளில், தனியாக நான் இறங்கியிருந்த நாகரத்தினம் ஐயர் வீட்டிற்கு வரச்சொல்லி, இப் பாத்திரத்தை நடிக்கும் விதத்தைச் சொல்லிக் கொடுத்தேன். நாடக தினம் “இவர் இவ்வளவு நன்றாக நடிக்க எங்ஙனம் கற்றார்?” என்று முன்பு இவரால் இப் பாத்திரம் சரியாக ஆட முடியாது என்று கூறினவர்கள் சொன்னதே, நான் எடுத்துக் கொண்ட கொஞ்சம் சிரமத்திற்குத் தக்க பரிசாகும். இதற்குப் பிறகு இந்த நாராயண ஐயர் மதுரைவாசிகளுள் எனது நெருங்கிய நண்பர்களுள் ஒருவரானார்.

இந்த நாடகத்தில் மிகவும் சிறிதான ஒரு பாகம், “ஜீமுத வாஹனன்” என்னும் மிருகங்களைப் பயிற்றுவிக்கும் ஒருவனுடையதே. இப் பாத்திரத்தை ஹைகோர்ட் வக்கீல் எம். ஈஸ்ர அய்யருக்குக் கொடுத்திருந்தது. இந்தப் பாகத்தில் பேச வேண்டிய வார்த்தைகள் பத்து வரிக்கு அதிகமிராது. ஆயினும் அவைகளைத் தக்கபடி பேசி இப் பாத்திரத்தை வெகு விமரிசையாய் நடித்தார். இதைப்பற்றி நான் இங்கு குறிப்பிடுவதற்கு ஒரு காரணமுண்டு. இவர் உருவத்தில், ஸ்ரீமீனாட்சியம்மன் திருக்கலியாணத்தில், வைகையாற்றை உண்ட சிவ பக்தனுக்குச் சமானமாயிருப்பார்; தேக காந்தியிலும் சிவப்புக்கு நேர் விரோதமான வர்ணமுடையவர். இவரை வெளியிற் பார்ப்பவர்கள், இவராவது மேடையின் பேரில் ஏறுவதாவது என்று சாதாரணமாய் நினைப்பார்கள். அவ்வண்ணமிருந்தும், இவர் ஜீமுதவாஹனனாக நடித்துப் பெயர் பெற்றதற்குக் காரணம், இவரை இப் பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்ததும், அதை நன்றாய் நடிக்க வேண்டுமென்று இவருக்கிருந்த உற்சாகமுமேயாம். எனது அபிப்பிராயம், எந்த மனிதனும் நாடக மேடையில் ஏதாவது ஒரு பாத்திரத்தை நன்றாய் நடிக்கக்கூடும்; ஆனால் அதைக் கண்டெடுத்து அம் மனிதனுக்குக் கொடுப்பதுதான் கடினம். டாக்டர் சீதாராமய்யர் இந் நாடகத்தில் சூர சேனனாக நடித்தது சுமாராக இருந்தது, அ. பஞ்சநாத ஐயா பி.ஏ., பி.எல்., ஜெயதேவனாக நடித்தார்; இவர் நன்றாய்ப் பாடி நடித்தபோதிலும் இவருக்கு அப் பாத்திரம் பொருத்தமானதன்று என்பது என் அபிப்பிராயம். மற்றப் பாத்திரங்களைப்பற்றி நான் இங்கு எழுதக் கூடியது எனக்கொன்றும் ஞாபகமில்லை.

இந் நாடகம் நான் எழுதியவற்றுள் பெரிய நாடகமாகையால், இது முடிவு பெற ஏறக்குறைய மூன்று மணியாயிற்று. பிறகு எங்கள் வேஷங்கள் களைந்துவிட்டு ஆக்டர்களெல்லாம் சந்தோஷமாய் மேடையின்மீது உட்கார்ந்துகொண்டு நான்கு மணி வரையில் பேசிக் கொண்டிருந்தோம்.

இந்த இரண்டு நாடகங்களின் செலவு போக, இந்த கிளப் கட்டட பண்டுக்கு, நல்ல மொத்தம் மிகுதியாகும் என்று இந்தச் சபையின் காரியதரிசிகளில் ஒருவராகிய எஸ். வைத்தியநாத ஐயர் எனக்குத் தெரிவித்த பிறகுதான், என் மனம் பூரண உவகை பெற்றது. அதன் பேரில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் துதித்துவிட்டு, அன்று இரவு (அல்லது காலை என்று சொல்ல வேண்டுமோ?) நான் உறங்கினேன்.

மறுநாள் சாயங்காலம் இந்தச் சபையின் கண்டக்டராகிய டி.வி.எஸ். தாதாச்சாரியார் பி.ஏ., பி.எல்., ஒரு ஈவனிங் பார்டி (Evening Party) கொடுத்தார். அதில் ஏதோ எங்களிருவர்களைப் பற்றி உபசார வார்த்தைகளாகச் சொன்னபோது, நான் பதிலுக்குச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டி வந்தது. அப்பொழுது நான் பேசிய சில வார்த்தைகள் என் ஞாபகத்திலிருக்கின்றன: “நான் எங்கள் சுகுண விலாச சபையின்றி வேறு சபையில் நடித்தது, அச் சபை ஸ்தாபிக்கப்பட்ட 1891ஆம் வருஷம் முதல், இதுதான் முதன்முறை. நான் இம்முறை மதுரைக்குப் புறப்பட்ட பொழுது, பட்டணத்து நண்பர்களை யெல்லாம் விட்டு அங்குப் போகிறோமே என்னும் மன வருத்தத்துடன் வந்தேன்; ஆயினும் இங்கு எனக்கு நீங்கள் செய்த உபசரணையினால், திரும்பி நான் போகும்பொழுது, நமது மதுரை நண்பர்களாகிய, உங்களைவிட்டுப் போகிறோமே என்னும் வருத்தத்துடன் போகிறேன்” என்று என் உள்ளத்தில் அச் சமயம் வாஸ்தவமாய்ப் பட்டதைத் தெரிவித்தேன், மறுநாள் இரவு ஒரு விருந்து நடந்தது. அச்சமயம் எனது மதுரை நண்பர்கள், மறுபடி நீங்கள் எப்பொழுது வந்து ஆக்ட்டு செய்வது என்று கேட்டார்கள்; எனக்கு ஞாபகம். இருக்கிறபடி, அச்சமயம் நான் எனது அத்யந்த நண்பருடன் கலந்து யோசனை செய்து, “இனிமேல் நாங்களிருவரும் அந்நியர்களாக உங்கள் சபையில் நடிப்பது நியாயமல்ல; எங்களிருவர்களையும் உங்கள் சபை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று. சொன்னேன். உடனே, கொஞ்சமும் தாமதிக்காமல் இச் சபை காரியதரிசிகளிலொருவராகிய எஸ். வைத்தியநாத ஐயர் எங்களிருவருடைய கையொப்பங்களையும் அதன் பொருட்டு வாங்கிக் கொண்டார். இவரை இதற்கு முன்பே சென்னையில் இருந்த பொழுது தெரியும்; இவரது தந்தை யாகிய சௌந்தரராஜ ஐயர் எனது நெருங்கிய நண்பர்; ஆகவே இவரைப் பார்த்து “ஏனையா, எனக்குத்தான் சுகுண விலாச சபையில் கோமுட்டி என்று பெயர்; இந்த சபைக்கு நீங்கள் ஒரு கோமுட்டியாயிருக்கிறாற் போல் இருக்கிறதே!” என்று நகைத்துக்கொண்டு சொன்னேன். இச்சபையின் காரியங்களைத் தன் சொந்தக் காரியம்போல் அத்தனைப் பரிவுடன் இவர் பார்த்து வருகிறார் என்பது இச்சபையின் அங்கத்தினரெல்லாம் அறிந்த விஷயமே. இதன் பொருட்டு இவருக்கு “தம்முடு” (தம்பி) என்றே பெயர் வைத்தேன். இது கோமுட்டிகள் சாதாரணமாக உபயோகிக்கும் ஒரு பதம்; இச்சபையின் வரவை அதிகப்படுத்துவதிலும், செலவைக் குறைப்பதிலும் இவர் அசல் கோமுட்டியே; இவ்வாறு எழுதுவதற்காக இவர் என்மீது கோபங் கொள்ளமாட்டார் என்று உறுதியாய் நம்பியே இதை இங்கு எழுதலானேன்.

இச் சபையானது, எனது மதுரை நண்பர்கள் எனக்குத் தெரிவித்தபடி 1925ஆம் வருடம் ஸ்தாபிக்கப்பட்டதாம். ஆரம்பித்த இரண்டொரு வருடத்திற்குள் ஆக்டர்களுக்குள் ஏதோ காரணத்தினால் கலகம் பிறந்து, சில முக்கிய ஆக்டர்கள் இதை விட்டு விலகினராம்; அதன் பேரில் இச்சபையில் மிகுந்த ஊக்கமுள்ள, மேற்சொன்ன வைத்திய நாத ஐயர், டி.வி.எஸ். தாதாச்சாரியார், கிருஷ்ணசாமி சாஸ்திரிகள் முதலியோர், சென்னையிலிருந்து இங்கு வந்து சேர்ந்த, எங்கள் சபை மெம்பராகிய பி. ராமமூர்த்தி பந்துலுவின் உதவியை நாடி, எம். சுப்பிரமணிய ஐயர், பஞ்சநாத ஐயர், டாக்டர் சீதாராமய்யர், சோமநாதய்யர் முதலிய புதிய ஆக்டர்களைச் சேர்த்து, சபை அழியாதபடி ஸ்தாபித்தனராம். 1927ஆம் வருஷம் எங்கள் சுகுண விலாச சபை மதுரைக்குப் போனபோது, இச் சபையார் எங்கள் சபைக்கு விருந்தளித்ததைப்பற்றி முன்பே தெரிவித்திருக்கிறேன்; அச்சமயம், இச் சபையில் நான் ஒரு ஆக்டு செய்வேன் என்று கனவிலும் நினைத்தவனல்ல; அப்படிச் செய்வேன் என்று யாராவது சொல்லியிருந்தால், அது முடியாத காரியம் என்று பந்தயம் போட்டிருப்பேன். பின்னால் நடக்கப் போகிறதைப் பற்றி, முன்னால் பேதை மாந்தரால் என்ன உறுதியாய்க் கூற முடியும்?

இவ்வாறு நான் வேறொரு சபையில் நடித்து பிறகு மெம்பராகச் சேர்ந்ததற்கு ஒரு முக்கியக் காரணம், எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், மதுரைக்கு உத்யோக வழியில் மாற்றப்பட்டதென்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. அவர் மதுரைக்குப் போயிராவிட்டால், இந்தச் சபையில் நடிப்பதைப்பற்றிக் கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். நாகரத்தினம் ஐயர் ஒரு நாள் மதுரைக்குத் தன்னை மாற்றி விட்டார்கள் என்று எனக்குத் தெரிவித்த பொழுது, எனது அத்யந்த நண்பராகிய அவரை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்று நான் வருத்தப்பட்டது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. ஆயினும் அப்படி அவரை மதுரைக்கு மாற்றியிராவிட்டால், நான் பன்முறை மதுரைக்குப் போய் நாடகமாடவும், அங்குப் பல புதிய நண்பர்களைப் பெறவும் இல்லாமற் போயிருக்குமல்லவா? ஆகவே ஜகதீசன் நமக்கு ஏதாவது துக்கத்தை அனுப்பினால், அதுவும் ஏதோ நமது நன்மைக்காக இருக்கலாம் என்று நமது மனத்தை தைரியம் செய்துகொண்டு பொறுப்பதே நலம். எனது முதிர் வயதில் நான் கண்ட இவ்வுண்மையை எனது இளைய நண்பர்கள் முன்னமே அறிந்து எப்பொழுதும் சந்தோஷத்துடன் வாழ்வார்களாக!

இம் மதுரை சபையார், சற்றேறக்குறைய, சுகுண விலாச சபையின் கோட்பாடுகளையே பற்றி நடந்து வருகின்றனர்; சுகுண விலாச சபையின் முக்கியக் கருத்துகளில் ஒன்று, திராவிட நாடகங்களை அபிவிருத்தி செய்வதாம்; ஆகவே இத்தகைய சபைகளின் மூலமாகவும் அதை அபிவித்தி செய்வது நமது கடமையாகும் என்று என் மனத்தைத் திருப்தி செய்து கொண்டேன்.

இரண்டாவது நாடகம் இங்கு முடிந்த பிறகு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் “படியளந்த” உற்சவம் என்பதைப் பார்க்க விருப்பமுள்ளவனாய், இரண்டு மூன்று தினங்கள் இவ்விடம் தாமதிக்க வேண்டி வந்தது; இந்த இரண்டு மூன்று தினங்களும், எனது புதிய நண்பர்கள் வீட்டில் விருந்து சாப்பிடுவதற்கே எனக்குச் சரியாயிருந்தது. இடையில் ஒரு தினம், எனது நண்பர்களுடன் கள்ளழகர் எனும் சௌந்தரராஜப் பெருமாள் கோயிலுக்குப் போயிருந்தேன். அச் சமயம் அதன் தர்மகர்த்தர் என்னை மிகவும் உபசரணையுடன் வரவேற்று, கோயிலிலுள்ள விசேஷங்களையெல்லாம் காண்பித்து, ஸ்வாமி தரிசனம் செய்வித்தார். இவர் மதுரை டிராமாடிக் கிளப் அங்கத்தினருள் ஒருவர்; இவ்வாறு இவர் எனது சௌகர்யங்களை யெல்லாம் கவனித்து, ஸ்வாமி தரிசனம் செய்து வைத்ததும், இன்னும் இதைப் போன்ற பல ஸ்தலங்களில் எனது நண்பர்கள் எனக்குதவியதும், நான் ஏதோ தமிழ் நாடக மேடைக்காக உழைத்ததன் பலனே என்று நான் உறுதியாய் நம்புகிறேன். பிறகு, பிரிய மனமில்லாதவனாய் எனது புதிய நண்பர்களை விட்டுப் பிரிந்து சென்னை வந்து சேர்ந்தேன். வந்தவுடன் டிசம்பர் மாதத்திய நாடகங்களில், “தாசிப் பெண், வள்ளி” என்னும் இரண்டு நாடகங்களில், நானும் நாகரத்தினம் ஐயரும் நடித்தோம்.

31 ஆவது அத்தியாயம்

1930ஆம் வருஷத்தின் ஆரம்பத்தில் நான் புதியதாய் எழுதி அச்சிட்ட “கொடையாளி கர்ணன்” எனும் நாடகத்தை ஒத்திகை செய்து, மார்ச் மாதத்தில் இரண்டு முறை அதை ஆடினோம். இந் நாடகமானது, பல வருடங்களுக்குமுன், எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இறந்தவுடன் ஆரம்பிக்கப்பட்டது. அச்சமயம் இனி நாடக மேடையின்மீது வேறொருவருடனும் நான் நடிப்பதில்லை என்று தீர்மானித்தபடியால், இந் நாடகத்தையும், “சகதேவன் சூழ்ச்சி” என்னும் நாடகத்தையும் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது ஆரம்பித்தபோதிலும், நான் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாயிருந்த காலத்தில் அவைகளைப் பூர்த்தி செய்ய அவகாசமில்லாமற் போயிற்று; 1928ஆம் வருடம் நான் அவ் வேலையை விட்டு நீங்கின பிறகு, அவைகளிரண்டையும் பூர்த்தி செய்து, அவ் வருடத்தின் கடைசியில் அச்சிட்டேன்.

நான் சிறு வயதில் மகாபாரதத்தைப் படித்தது முதல், பரம தயாளுவான கர்ணனுடைய நற்குணங்கள் என்