நாடக மேடை நினைவுகள்/31 ஆவது அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து

31 ஆவது அத்தியாயம்

1930ஆம் வருஷத்தின் ஆரம்பத்தில் நான் புதியதாய் எழுதி அச்சிட்ட “கொடையாளி கர்ணன்” எனும் நாடகத்தை ஒத்திகை செய்து, மார்ச் மாதத்தில் இரண்டு முறை அதை ஆடினோம். இந் நாடகமானது, பல வருடங்களுக்குமுன், எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இறந்தவுடன் ஆரம்பிக்கப்பட்டது. அச்சமயம் இனி நாடக மேடையின்மீது வேறொருவருடனும் நான் நடிப்பதில்லை என்று தீர்மானித்தபடியால், இந் நாடகத்தையும், “சகதேவன் சூழ்ச்சி” என்னும் நாடகத்தையும் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது ஆரம்பித்தபோதிலும், நான் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாயிருந்த காலத்தில் அவைகளைப் பூர்த்தி செய்ய அவகாசமில்லாமற் போயிற்று; 1928ஆம் வருடம் நான் அவ் வேலையை விட்டு நீங்கின பிறகு, அவைகளிரண்டையும் பூர்த்தி செய்து, அவ் வருடத்தின் கடைசியில் அச்சிட்டேன்.

நான் சிறு வயதில் மகாபாரதத்தைப் படித்தது முதல், பரம தயாளுவான கர்ணனுடைய நற்குணங்கள் என் மனத்தைக் கவர்ந்தன. ஆகவே நான் ஒரு சிறிய நாடக ஆசிரியனானபிறகு, இந்தப் பாரத வீரனைப்பற்றி ஒரு நாடகம் எழுத வேண்டும் என்னும் அபேட்சை அதிகமிருந்தது. அந்த அபேட்சையை நிறைவேற்ற இத்தனைக் காலம் பிடித்தது. இந் நாடகத்தில் கர்ணனுடைய ஜீவிய சரித்திரத் தில் சில முக்கியமான அம்சங்களை விட்டுவிட்டதாக, எனது நண்பர்களில் சிலர் குறை கூறியுள்ளார். அவர்களுக்கு என் பதில் அடியில் வருமாறாம்: கர்ணன் மடிந்தவுடன் கர்ணனைக் கொன்றோமே என்று அர்ஜுனன் கர்வப்பட்ட தாகவும், அதை அடக்க ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியானவர், “அர்ஜுனா, கர்ணனைக் கொன்றது நீ மாத்திரமல்ல; வேதியர் ஒருவர், பரசுராமர், தேவேந்திரன், குந்தி, சல்லியன், நான், நீ ஆகிய ஏழு பெயர்!” என்றனர் என்பதை; என் கதையின் அஸ்திவாரமாக எடுத்துக்கொண்டு, அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கர்ணனது தயாளத்துவமே அவனது மரணத்திற்கு உடந்தையாயிருந்தது என்பதை நிரூபிக்க - இந்தச் சந்தர்ப்பங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு ஒரு நாடகமாக்கி எழுதினேன்; ஆகவே, மற்றும் சில விஷயங்கள் கர்ணனுடைய சரிதையில் குறிக்கத் தக்கனவாயினும், அவைகள் இந் நாடகத்தில் எழுதாது விடுத்தேன்.

இந் நாடகத்தை எங்கள் சபையார் நடித்தபொழுது, காலஞ் சென்ற கன்னையா. எங்களுக்குச் செய்த உதவியை, நான் எழுதாமல் விடுவது, செய்ந்நன்றி மறந்த குற்றத்திற்குள்ளாக்கும் என்னை; ஆகவே அதைப்பற்றி இங்கு எழுதுகிறேன்.

இச்சமயம் அவர் தன் “பகவத் கீதை” நாடகத்திற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்; அப்பொழுது, நான் கர்ணனைப் பற்றி எழுதிய இந் நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட, அக் கதையின் விவரங்களைக் கேட்டறிந்து, தன்னால் இதற்கு என்ன உதவி செய்யக்கூடும் என்று கேட்டனுப்பினார். அப்பொழுது, எங்கள் சபையார் இந் நாடகத்திற்காக, கர்ணார்ஜுன யுத்தத்தின்போது உபயோகப்பட இரண்டு ரதங்கள் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து, அதற்காக ரூபாய் 200 எடுத்து வைத்திருந்தார்கள். இந்த இரண்டு ரதங்கள் உங்கள் மூலமாகச் செய்து கொடுக்க வேண்டுமென்று நாங்கள் கேட்க, இந்த இருநூறு ரூபாயையும் வாங்கிக் கொண்டு, அதற்கு மேல் அதற்கு இருமடங்கு, தன் கையை விட்டுச் செலவழித்து எங்கள் சபைக்கு இரண்டு ரதங்களைச் செய்து கொடுத்தார். அவற்றுள் அர்ஜுனனது ரதமானது, கர்ணன் நாகாஸ்திரப் பிரயோகம் செய்யும்போது, தேர்த்தட்டு, ஸ்ரீ கிருஷ்ணன் சூழ்ச்சியினால் இறங்கும்படி, தந்திரமான விசையையுடையதாய்ச் செய்யப்பட்டது; இவையன்றி யுத்தத்திற்கு வேண்டிய அம்புகளும், நாகாஸ்திரமும் முதற் காட்சிக்கு வேண்டிய பசுவும் அதன் கன்றும் எல்லாம் செய்து கொடுத்தார். இவைகளெல்லாம் அன்றி, நான் கர்ணனாக அணிய வேண்டிய கவச குண்டலங்களை, பொன் கில்டு உடையதாய்ச் செய்து கொடுத்தார். அன்றியும் நாங்கள் இந் நாடகத்திற்குக் கடைசி ஒத்திகை செய்த பொழுது, அருகிலிருந்து, இவைகளை யெல்லாம் எப்படி உப யோகிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். இத் தகைய உதவி புரிந்த இத்தயாள குணமுடையவர்க்கு, எங்கள் சபையும் நானும் செய்யக்கூடிய கைம்மாறு என்னுளது? சாதாரணமாக ஆமெடூர் (amateur) சபைகளிலுள்ளவர்களே ஒருவருக்கொருவர் உதவிபுரிவதைக் காண்பது, கார்த்திகைப் பிறையைக் காண்பது போலாம்; நாடகமாடுவதைத் தன் ஜீவனோபாயமாகக் கொண்ட இவர், எங்கள் சபையின்மீது கொஞ்சமும் மாச்சரியமின்றி, இவ்வாறு உதவி செய்தது மிகவும் மெச்சத் தக்கதாம்.

இந் நாடகமாடிய இரண்டு முறையும், எனது அன்னையாக அதாவது குந்திதேவியாக, என் பழைய நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் நடித்தார். என்னைப் போல் இவருக்கு வயது அதிகமாக ஆகியும் இவர் மிகவும் நன்றாய் நடித்துப் பாடினார் என்பது வந்திருந்தவர்கள் எல்லோருடைய அபிப்பிராயம். வயதானபடியால் பாடும் பொழுது கொஞ்சம் சிரமப்பட்டுப் பாடினாலும், குரலில் பழைய இனிமை இன்னும் போகவில்லை. “கடுகு இறந்தாலும் காரம் போகாதல்லவா?”

இக் “கொடையாளி கர்ணன்” என்னும் நாடகம், இரண்டு வருடங்களுக்கு முன் நான் அச்சிட்டதாயிருந்த போதிலும், இதர சபைகளால் பதினேழு பதினெட்டு முறை ஆடப்பட்டிருக்கிறது; இதில் ஒரு ஸ்திரீ பாத்திரம் இருக்கிற படியால், ஸ்திரீ ஆக்டர்கள் அதிகமாயுடைத்தாயிராத சபைகளில் இதை எளிதில் ஆடலாம்.

இக் கர்ணனது நாடகத்தை எழுதி முடித்தவுடன், “சகதேவன் சூழ்ச்சி” என்கிற ஒரு சிறு நாடகத்தையும் எழுதினேன். இந் நாடகத்தில் ஒரு விசேஷமென்ன வென்றால், இதில் ஸ்திரீ பாத்திரமே கிடையாது! பள்ளிக்கூடங்களில் வாசிக்கும் மாணவர்கள் இதை எளிதில் ஆடலாம் என்பது என் கருத்து. மஹாபாரதத்தில் சகதேவன், பீமன், அர்ஜுனன் முதலிய பாத்திரங்களுக்கு முன்பாக அவ்வளவாகப் பிரகாசிப்பதில்லை ; ஆயினும் அவன் சிறந்த புத்திசாலி, மிகவும் பக்திமான் என்கிறதை விளக்க, அவன் தன் சூழ்ச்சியினால், ஸ்ரீகிருஷ்ணபகவானுடைய சூதை யறிந்து, அவரைத் தன் பக்தி வலையால் பிணைத்து, அவரிடமிருந்து தங்கள் ஐவரை மாத்திரம் பாரத யுத்தத்தில் எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று வரம் பெறுகிறான். இதையே இந் நாடகக் கதையாக வைத்து எழுதி உள்ளேன்.

இவ்வருஷம் ஜூலை மாதம் 19ஆம் தேதி எங்கள் சபையார் எனது “சுபத்திரார்ஜுனா” என்னும் நாடகத்தை மறுமுறை ஆடினார்கள். இதற்கு முக்கியக் காரணம் முதன் முறை இது எங்கள் சபையோரால் ஆடப்பட்டபோது, நானும் நாகரத்தின ஐயரும் மதுரையிலிருந்தபடியால், நாங்கள் முக்கியப் பாத்திரங்களை எடுத்துக் கொள்ள ஏலாமற் போனதே; எங்கள் சபையார் நாங்களிருவரும் இந் நாடகத்தில் அர்ஜுனனாகவும் சுபத்திரையாகவும் நடிப்பதைக் காண வேண்டுமென்று இந் நாடகத்தை மறுபடியும் வைத்துக் கொண்டார்கள். நாங்கள் ஆடியபோது முதன் முறை யாதோ காரணத்தினால் ஆடாமல் விட்டுப் போன கடைசிக் காட்சிகள் இரண்டு மூன்றையும் சேர்த்து நாங்கள் இம்முறை ஆடினோம்.

மேற்சொன்ன நாடகங்களன்றி இவ்வருடம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி, எனது “கள்வர் தலைவன்” என்னும் நாடகமானது, எங்கள் சபையின் தொள்ளாயிரத்து நாடகமாக ஆடப்பட்டது. இந்நாடகமானது இதற்கு முன் எங்கள் சபையோரால் 32 வருடங்களுக்கு முன்தான் ஆடப்பட்டது. நாடக மேடை நினைவுகள் இதை மறுபடி ஆடாததற்குக் காரணம், நான் முன்பே இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். இதை இவ்வருஷம் எனது நண்பர் எஸ். சத்யமூர்த்தி ஐயர் ஆட் ஹாக் (ad hoc) கண்டக்டராயிருந்து நடத்தலாமா என்று என்னைக் கேட்டனர். “அதற்கு ஒரு ஆட்சேபணையு மில்லை; இதை இதர சபைகள் பன்முறை நடித்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் ஒரு கெடுதியும் சம்பவிக்கவில்லை; என்னை மாத்திரம் அதில் ஆடும்படி கேளாதீர்” என்று சொல்லி அதற்குக் காரணத்தையும் அவருக்குத் தெரிவித்தேன். அதன் பேரில் அவர் இந் நாடகத்தை எடுத்துக் கொண்டு ஆக்டர்களைத் தயார் செய்து ஆடி வைத்தார்.

1930ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் (Easter) விடுமுறையில், இரண்டாம் முறை நாங்களிருவரும் மதுரையில், மதுரை டிராமாடிக் கிளப் அங்கத்தினராக இரண்டு நாடகங்களை நடத்தினோம். இதற்குள்ளாக எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயர் மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார். ஆகவே நாங்களிருவரும் அங்குப் போக வேண்டியதாயிருந்தது; இதற்காகத்தான் அவருக்கு விடுமுறைக் காலமாகிய ஈஸ்டர் சமயத்தில் நாடகங்களை நடத்த வேண்டி வந்தது. என்னை நான்கு ஐந்து தினங்களுக்கு முன்பாக மதுரைக்கு வரும்படி எனது மதுரை நண்பர்கள் கேட்டுக் கொண்டபடி, முன்னதாகவே நான் போய் இங்கு நடத்த வேண்டிய “மனோஹரன்", “லீலாவதி சுலோசனா” இரண்டு நாடகங்களுக்கும் ஒத்திகை பார்த்து வந்தேன். முதல் நாடக தினத்திற்கு ஒரு நாள் முன்பாக எனது நண்பர் நாகரத்தினம் வந்து சேர்ந்தார். இந்த இரண்டு நாடகங்களும் மிகவும் விமரிசையாக நடத்தப்பட்டன என்பது என் அபிப்பிராயம். முதல் இரண்டு நாடகங்களைவிட, இவ்விரண்டு நாடகங்களுக்கு வசூல் அதிகமாயிருந்தது. இந்த இரண்டு நாடகங்களிலும் நான் இரண்டொரு சமாச்சாரங்கள் தவிர இங்குக் குறிக்கத்தக்க விஷயங்கள் ஒன்றும் அதிகமாயில்லை. நாகரத்தினம் ஐயர் விஜயாளாக நடித்தது மிகவும் கொண்டாடப்பட்டது. இரண்டாவது நாடகத்தில் எனது மதுரை நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர் அவ்வூர் பட்டிக்காட்டானைப் போல, சாரங்கன் பாத்திரத்தில் வேடம் புனைந்தது மிகவும் மெச்சப்பட்டது. அன்றியும் சாரங்கனை ஸ்ரீதத்தன் அடித்துத் தள்ளும் காட்சியில், என் கையில் வைத்திருந்த யோக தண்டத்தினால், வாஸ்தவத்தில் நன்றாய்ப் புடைத்து விட்டேன், அவரது உடம்பில் தழும்பேறும்படியாக! இதைப் பற்றிப் பேச்சு வரும் போதெல்லாம் சுப்பிரமணிய ஐயர், என்னை ஏளனம் செய்வதை இன்னும் விட்டிலர்.

நானும் நாகரத்தின ஐயரும் அடிக்கடி வந்து நாடகமாடுவதென்றால் நன்றாயிராது; நீங்களாக ஏதாவது நாடகங்களை ஆடுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டதன் பேரில், மதுரை டிராமாடிக் கிளப்பார் எனது “சுபத்தி ரார்ஜுனா” நாடகத்தை எடுத்துக் கொண்டனர். ஆயினும் நான் அதில் ஆடாவிட்டாலும், ஆக்டர்களுக்கு ஒத்திகை செய்து வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதற்கிசைந்து நான் மதுரைக்கு “மது விலக்குப் பிரசார” சம்பந்தமாகப் போக வேண்டிய சமயத்தில், அந்த நாடகத்தை வைத்துக் கொள்ளச் செய்து, அந்தச் சமயத்தில் இந் நாடகத்தில் ஒத்திகைகளை நடத்தி, அருகிலிருந்து இந் நாடகத்தை அவர்களைக் கொண்டு நடிக்கச் செய்தேன். இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் மதுவிலக்குச் சங்கம் ஒன்றைச் சேர்ந்திருப்பதை முன்பே தெரிவித் துள்ளேன். 1929ஆம் வருஷம் கவர்ன்மென்ட் மந்திரிகளில் ஒருவராயிருந்த எனது நண்பர் எஸ். முத்தையா முதலியார் அவர்கள், துரைத்தனத்தாரும் மது விலக்குப் பிரசாரம் நடத்த வேண்டுமென்று சட்ட சபையில் அங்கத்தினரை ஆமோதிக்கச்செய்து, அதற்காகக் கொஞ்சம் ரூபாயைப் பிரத்யேகமாக எடுத்து வைத்து, சென்னை ராஜதானியில் ஒவ்வொரு ஜில்லாவிலும் மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டிகளை ஏற்படுத்தி, இக் கமிட்டிகளுக்கெல்லாம் மேல் பார்வையாக சென்னையில் ஒரு சென்டிரல் (Central) கமிட்டி ஏற்படுத்தி, அதன் கிளையாக பப்ளிசிடி (Publicity) கமிட்டி என்று ஒன்றை ஏற்படுத்தினார். அப்பப்ளிசிடி கமிடிக்கு என்னை அக்கிராசனாதிபதியாக ஏற்படுத்தினார். இது விஷயமாக நான் சில ஜில்லாக்களைப் பார்த்து வர வேண்டி வந்தது. இக் காரியமாக இவ்வருஷம் ஜூன் மாசம் கும்பகோணத்திற்கும் மதுரைக்கும் போக வேண்டி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் மதுரையில் “சுபத்திரார்ஜுனா" நாடகத்தை நடத்தினேன். மேற்கண்ட மது விலக்குப் பிரசார விஷயத்தைப் பற்றி இவ்வளவு விவரமாய் எழுதியதற்கு இன்னொரு முக்கியக் காரணம் உண்டு. அதாவது இந்த மது விலக்குப் பிரசார கமிட்டியாரின் தூண்டுதலினால் நான் இவ்வருஷம் (1930) “உண்மையான சகோதரன்” என்ற நாடகத்தை எழுதி முடித்தேன். மது விலக்கு விஷயமாக எங்கள் கமிட்டியார் பல விஷயங்களை யோசித்து வந்த பொழுது, அதிலிருந்த எனது நண்பர்களில் அநேகர், “மதுவினால் உண்டாகும் தீமைகளைப் பற்றி நீங்கள் ஒரு நாடகம் எழுதி, அதை ஜில்லாக்கள் தோறும் ஆடி வைத்தால், நாம் எடுத்துக் கொண்ட காரியத்திற்கு மிகவும் அனுகுணமாயிருக்கும்” என்று வற்புறுத்தினர். அதன் பேரில் “உண்மையான சகோதரன்” என்னும் நாடகத்தின் கதையை யோசித்து, அதன் சாராம்சத்தை அவர்களுக்குத் தெரிவிக்க, அவர்கள் மிகவும் குதூஹலத்துடன் அதை எப்படியாவது கூடிய சீக்கிரத்தில் நாடகமாய் எழுதி முடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். அதன் பேரில் இவ் வருஷம் நான் பெங்களூருக்குப் போயிருந்தபொழுது, பெரும்பாலும் அதை எழுதி முடித்தேன். உடனே அச்சிட்டு, எங்கள் கமிட்டியார் அனுமதியின்மீது ஜில்லா கமிட்டிகள் ஒவ்வொன்றிற்கும் சில புஸ்தகங்களை அனுப்பினேன். அதன்பேரில் இவ்வருஷத்திற்குள்ளாக பத்துப் பன்னிரண்டு முறை ஜில்லாப் பிரசார கமிட்டிகளால் இந்நாடகம் ஆடப்பட்டது. நான் எழுதிய நாடகங்களில், சுகுண விலாச சபையார் ஆடு முன்பாக மற்றவர்கள் ஆடிய நாடகம் இது ஒன்றாகும். சாதாரணமாக ஏதாவது நாடகமொன்றை நான் எழுதினால், அதை எங்கள் சபையில் நடித்து, ஏதாவது சீர்திருத்த வேண்டியிருந்தால் அப்படிச் செய்த பிறகே, மற்றச் சபைகளுக்கு அதை ஆட நான் உத்தரவு கொடுப்பது வழக்கம். இவ்வழக்கத்தினின்றும் இந்நாடகத்தில் நான் மாற வேண்டி வந்தது. நான் எழுதிய நாடகங்களுள், தின வர்த்தமானப் பத்திரிகைகளால் மிகவும் கொண்டாடப்பட்ட நாடகங்களில் இது ஒன்றாகும். இந்த நாடகம் எழுதும் போது எனக்கு ஒரு வேடிக்கையான கஷ்டம் நேர்ந்தது. கதையை எழுதுவதில் கஷ்டப்பட வில்லை அதிகமாக; கதாநாயகனுக்குப் பெயர் கொடுப்பதில் தான் அதிகக் கஷ்டப்பட்டேன்! இதுவோ, தற்காலத்திய ஜனசமூக (Social) நாடகம். ஆகவே கதாநாயகன் தற்காலத்தில் மனிதனாய் இருக்க வேண்டி வந்தது; ஆகவே, அவனை பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ, சூத்திரனோவாக ஆக்கவேண்டி வந்தது. சாதாரணமாக சூத்திர ஜாதியில் தான் மதுபானம் செய்யும் கொடிய பழக்கம் அதிகமாகயிருக்கிற தென்பதைக் கவனித்தவனாய், அவனை ஒரு சூத்திரனாக சிருஷ்டித்தேன். (மற்ற ஜாதியார் குடிப்பதில்லை என்று நான் சொல்ல வரவில்லை, எல்லா ஜாதியிலும் குடியர்களிருப்பதைப் பல வருங்களாக அறிந்துள்ளேன்; ஆயினும் சூத்திரர்களில்தான் இக் கெட்டபழக்கம் அதிகமாயுண்டு என்பது என் அனுபவத் தீர்மானம்) சூத்திரனாக்கிய பிறகு, அவனை முதலியாராக்குவதா? நாயுடுவாக்குவதா? பிள்ளையாக்குவதா? இன்னும் மற்றெந்தப் பிரிவினனாகச் செய்வது? என்னும் சங்கை பிறந்தது. எந்தப் பிரிவினனாக்கினாலும் அப் பிரிவினர் என்மீது குறை கூறுவார்கள். இந்தத் தர்ம சங்கடத்தினின்றும் தப்புவதற்கு மார்க்கமில்லை என்று யோசித்து கதாநாயகனை நாயுடுவாக்கினேன்; பலராம நாயுடு என்றும் பெயர் கொடுத்தேன். பலராமன் என்று பெயர் கொடுத்ததற்குக் காரணம், பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய தமயனாகிய பலராமர், மதுபானத்தில் மிகுந்த பிரீதியுள்ளவர் என்பதைக் கவனிக்கத்தக்கது. கதாநாயகனுடைய தம்பிக்கு கிருஷ்ணசாமி என்னும் பெயரையே கொடுத்துள்ளேன். அன்றியும் மற்ற வர்ணத்தாரும் பிரிவினரும் மனஸ்தாபமடையாதபடி, கதாநாயகனுடன் மதுபானம் செய்யும் நண்பர்களில், ஒருவனை ஐயராகவும், ஒருவனை முதலியாராகவும், ஒருவனைப் பிள்ளையாகவும் ஆக்கினேன். இவ்வளவு முயற்சியெடுத்துக் கொண்டும் நான் கோரிய எண்ணம் ஈடேறாமல் போயிற்று! நாடகம் எழுதி முடித்தவுடன், அச்சிடுவதற்கு முன்பாக, நான் ஒரு அங்கத்தினனாய்ச் சேர்ந்திருக்கும் ஹிந்து குட் டெம்பிளார்ஸ் லீக் (Hindu Good Templars’ League) என்னும் மதுவிலக்குச் சபையில், அதைப் படித்துக் காட்டினேன்; அதைக் கேட்ட நண்பர்களெல்லாம் மிகவும் நன்றாயிருக்கிற தென மெச்சினர். அவர்களுள் ஒருவர் மாத்திரம் (அவர் ஒரு நாயுடு என்பதை நான் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது அவசியமில்லை), என்னை ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், “எல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது பிரதர் (Brother) ஒன்று மாத்திரம்தான் எனக்குப் பிடிக்கவில்லை! இந் நாடகத்தின் ஹூரோவை நாயுடுவாக எழுதியதை மாற்றி வேறு ஜாதியானாக எழுதக் கூடாதா?” என்று ரகசியமாகக் கேட்டார். அதற்கு நான் “அப்படிச் செய்வதற்கு ஆட்சேபணை இல்லை; ஆனால் ஒரு கஷ்டம்தானிருக்கிறது. அதற்கு ஏதாவது வழி சொல்லுவீரானால, உடனே மாற்றி விடுகிறேன்; நாயுடு என்பதை மாற்றி ஐயராக்கினால், ஐயர்கள் கோபித்துக் கொள்வார்கள்; ஐயங்கார் ஆக்கினால், அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் முதலியாராக்கினால், எங்களவர்கள் கோபித்துக் கொள்வார்கள்; பிள்ளையாக்கினால், பிள்ளைமார் கோபித்துக் கொள்வார்கள்; எந்த ஜாதியானாக எழுதிய போதிலும், அச் சாதியார் உங்கள் நியாயப்பிரகாரம் மன வருத்தமடைவார்கள்! ஆகவே இதற்கு ஒரு வழி நீங்களே சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதன்மீது இந்த ஆட்சேபணைக்குத் தக்க பதிலுரைக்க வகையில்லாதவராய், அவர் வேறு வழியில்லை என்று ஒப்புக்கொண்டனர். இதை நான் அந்நாடகத்தின் முகவுரையில், என்மீது எச் சாதியாரும் கோபியாதபடி எழுதியுள்ளேன். இந்த ஜாதிபேதக் கலகமானது நமது நாட்டை விட்டு எப்பொழுது அகலுமோ அறியேன். நாடகமெழுதுவதிலும் இக் கலகம் பிறந்தால், பிறகு எதில்தான் இது நுழையாது? இந்த விஷம் நமது தேசத்தைவிட்டு எப்பொழுது போகுமோ, அப்பொழுது தான் நமது தேசம் ஐக்கியப்பட்டு, நாம் முன்னுக்கு வருவோம். அப்பொழுதுதான் நமக்குச் சுயராஜ்யம் கிடைத்தாலும் நிலைக்கும் என்பது என் துணிபு; இதை விஸ்தரித்து “பிராம்மணனும் சூத்திரனும்” என்கிற பெயரையுடைய ஒரு நூதன நாடகத்தைச் சென்ற இரண்டு வருடகாலமாக எழுதி வருகிறேன். அது இன்னும் பூர்த்தியாக வில்லை. இறைவன் இன்னருளால் அதைச் சீக்கிரம் பூர்த்தி செய்து அச்சிடலாமென்றிருக்கிறேன். அந்நாடகம் அச்சிட்டு வெளியானவுடன், இருதிறத்தாரும் என்னை வைவார்கள் என்பது திண்ணம். ஆயினும், ஒரு நூலாசிரியன், எவ்வளவு அற்பனாயிருந்தபோதிலும் பட்சபாதமன்றி, ஒருவருக்கும் பயப்படாது எழுத வேண்டியது அவன் கடமை எனக் கருதியவனாய், இருதிறத்தாரிடமுள்ள குற்றங்களை அஞ்சாது எடுத்துக் காட்டி, அவர்கள் ஐக்கியப்பட்டாலொழிய நமது நாடு முன்னுக்கு வர மார்க்கமில்லை என்பதை அந் நாடகத்தின் மூலமாக, தமிழ் உலகத்திற்குத் தெரிவிக்கலா மென்றிருக்கிறேன். எல்லாம் வல்ல ஈசன் அப் பிரயத்தனத்திற்குத் தன் இன் அருள் பாவிப்பாராக! (இதை எழுதியது பல வருடங்களுக்கு முன் என்பதை இதை வாசிப்பவர்கள் கவனிப்பார்களாக.)

இவ் வருஷம் செப்டம்பர் மாதம், எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயரும் நானும், மதுரை டிராமாடிக் கிளப்பார் வேண்டுகோளின்படி மறுபடியும் மதுரைக்குப் போய், “ஊர்வசியின் சாபம்", “வள்ளி மணம்” ஆகிய இரண்டு நாடகங்களையும் நடத்தினோம்.

இச் சமயம் மதுரையில் நாங்களிருவரும் ஆடியது மூன்றாம் முறையாகும். இங்கு “ஊர்வசியின் சாபம்” நடத்தியபொழுது நான் அனுபவித்த ஒரு வேடிக்கையான கஷ்டத்தை எழுத விரும்புகிறேன். இந் நாடகத்தைப் படித்தவர்கள், இதன் முதற் காட்சியில் அர்ஜுனன் மௌனமாய்த் தவஞ் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நன்கு அறிவார்கள். சாதாரணமாக இக்காட்சி இருபத்தைந்து அல்லது முப்பது நிமிஷம் பிடிக்கும்; அதுவரையில், இரு கைகளையும் தலைமேற் கூப்பிக்கொண்டு, விழித்த கண்ணினனாய், பஞ்சாக்கினி மத்தியில் தவமிருப்பதுபோல் இருந்து வழக்கப்பட்டிருக்கிறேன். இம்முறை இந்நாடகம் மதுரையில் நடிக்கப்பட்டபொழுது, சரியாக ஒன்றேகால் மணிநேரம் அங்ஙனம் அசையாமல் இருக்க வேண்டி வந்தது! ரம்பை, மேனகை, திலோத்தமை, ஊர்வசி ஆகிய அப்சர ஸ்திரீகள், தனியாகவும் ஒன்றாகவும் கூடி கானம் செய்தது மன்றி, ரம்பை வேஷம் பூண்ட எனது மதுரை நண்பர் கணபதி சுப்ரமணிய ஐயர், நர்த்தனம் வேறு செய்தார். இதெல்லாம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும், சபையோர்க்கு சந்தோஷத்தைத் தந்தபோதிலும், அர்ஜுன வேஷதாரியாகிய எனக்கு, சிரமத்தைத் தந்தது; இந்த ஒன்றேகால் மணி நேரம் கைகளை உயர்த்தி அஞ்சலி ஹஸ்தனாய் இருந்தபடியால், காட்சியின் முடிவில் என் கை விரல்கள் விரைத்துப் போயின! அவைகளை என், நண்பர் ஒருவரைக் கொண்டு உருவச் செய்த பிறகே என் சுவா தீனத்திற்கு வந்தன! ஆயினும் இக் கஷ்டத்தை அறிந்த சபையோர் இக் காட்சியின் முடிவில், ஆடிப் பாடிய அப்சரஸ் ஸ்திரீகளுக்கு ஒரு மடங்கு கர கோஷம் என்றால், “சும்மா இருக்கும் சன்யாசிக்கு இரட்டைப் படி” என்பது போல், சும்மா இருந்த அர்ஜுன சன்யாசிக்கு, இரு மடங்கு கர கோஷம் அளித்தனர். இந்நாடகத்தின் இடைக் காட்சிகளில், எனது மதுரை நண்பர்கள் பஞ்சநாத ஐயரும் டாக்டர் சீதாராம அய்யரும் மிகவும் விமரிசையாக நடித்தனர் என்பது எனது அபிப்பிராயம் மாத்திரம் அன்று, சபையோருடைய அபிப்பிராயமும் அப்படியே.

இங்கு நடத்திய “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில், சுப்பிரமணியராக வந்த நான், அதிகமாகப் பாடாத குறையினை, வள்ளியாக வந்த எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயர்; தான் வேண்டிய மட்டும் பாடி, சபையோரை மறக்கச் செய்துவிட்டார். இந் நாடகத்தில் வள்ளியாக அவர் நடித்தது மிகவும் நன்றாயிருந்ததென, அன்று இந்த நாடகத்தைப் பார்க்க வந்திருந்த இதர சபை அங்கத்தினர் உட்பட எல்லலோரும் ஒப்புக்கொண்டனர்.

இந் நாடகத்தின் இடைக் காட்சியொன்றில், எனது மதுரை நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர், மதுரையில் சுண்டல் விற்கும் ஒருவனைப்போல், அச்சம் அப்படியே வேஷம் தரித்து வந்ததை இப்பொழுதும் நினைத்துக் கொண்டாலும் எனக்கு நகைப்பு வருகிறது. இந்த வேடத்திற்கு அசலாகிய அச் சுண்டல் விற்பவனை இதற்கு முன் நான் பார்த்ததில்லை ; பிறகு ஒரு சமயம் நான் மதுரைக்குப் போனபோது அகஸ்மாத்தாய் வடக்குச் சித்திரை வீதியில் அவனைக் கண்டபொழுது, ஆச்சரியத்துடன் திடுக்கிட்டு இரண்டு நிமிஷம் அவன் அருகில் நின்று கவனித்தேன். அப்பொழுதுதான் எனது நண்பர் அவனைப் போல் வேஷம் தரித்ததைக் கண்டு, சபையோர் கரகோஷம் செய்ததன் அர்த்தத்தைக் கண்டேன்! எனது பழைய நண்பர் காலஞ்சென்ற வேதம் வெங்கடாசல ஐயருக்குப் பிறகு, மதுரை நண்பர் சுப்பிரமணியரைப்போல், எந்த வேடம் தரித்தாலும் அதற்குத் தக்கபடி சிரமம் எடுத்துக் கொள்பவரைக் கண்டேனில்லை, நான்.

இந்த வள்ளி மணம் நாடகம் முடிந்த மறுநாள் நடந்த ஒரு விருத்தாந்தத்தை இங்கு எழுத விரும்புகிறேன். இந் நாடகத்தில் “முருகன்” என்கிற பெயருக்குத் தக்கபடி எனது நண்பர் கிருஷ்ணசாமி சாஸ்திரிகள், அப்பொழுது ஐம்பத்தெட்டு வயதாயிருக்கும் என்னை, பதினாறு வயதுடைய வாலிபனைப் போல் வேஷம் போட்டு வைத்தார். இந்த சூட்சுமம் அறியாத, இதற்கு முன் என்னைப் பார்த்திராத வக்கீல் ஒருவர், எனக்கு இன்ன வயது என்பதைக் கேட்டபோது அதை நம்பாதவராய், என்னைக் காண வேண்டுமென்று இச்சை கொண்டு, நாடகத்தின் மறுநாள், நான் அச் சமயம் தங்கியிருந்த எனது மதுரை நண்பர் டாக்டர் நாராயண ஐயர் வீட்டிற்கு அவரைக் காண வேண்டுமென்னும் ஒரு வியாஜ்யத்தை வைத்துக்கொண்டு வந்து சேர்ந்து, என்னை நேரில் பார்த்தார். அப்பொழுதுதான், என் வயதைப்பற்றி அவருக்கு மற்றவர்கள் சொன்னது உண்மையென வெளியாயிற்றாம். இதையெல்லாம், பிறகு நாங்களிருவரும் கலந்து வார்த்தை யாடிய பொழுது, அவரே எனக்குச் சொன்னார். நாடக மேடையில் க்ரீன் ரூம் (Green Room) உத்தியோகஸ்தர்களின் திறத்தை அவர் அப்பொழுதுதான் முதல் முதல் கண்டார்!

இவ் வருஷம் எங்கள் சபையார், எனது நண்பர் வி.சி. கோபாலரத்தினம் ஐயங்கார் எழுதிய “ராஜ பக்தி” என்னும் நாடகத்தை நவம்பர் மாதம் 16ஆம் தேதி, சென்னை ராயல் தியேட்டரில் நடித்தனர். மஹாராஷ்டிரா பாஷையிலும், கன்னட பாஷையிலும் எழுதியிருந்த இந் நாடகத்தை, மிகவும் கஷ்டப்பட்டு தமிழில் எனது நண்பர் மொழி பெயர்த்து, மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டு ஒத்திகைகள் நடத்தி, இதை நடத்தி வைத்தார். தானே காதநாயகனான “விக்ராந்தன்” வேடம் பூண்டு வெகு விமரிசையாக நடித்தார்; இப் பாத்திரத்தைச் சற்று வேறு விதமாய் நடிக்க வேண்டுமென்று என் அபிப்பிராயமாயிருந்த போதிலும், அவர் சபையோரையெல்லாம் சந்தோஷிக்கச் செய்தனர் என்பதற்கு ஐயமின்று. இந் நாடகம் முதன் முறை நடித்த போது எங்கள் சபைக்கு ஆயிரத்துச் சில்லரை ரூபாய்க்கு மேல் வசூலாயிற்று. இதை டிசம்பர் மாதம் நாடங்களில் ஒன்றாக மறுபடியும் முக்கோடி ஏகாதசியன்று ஆடினோம். அப்பொழுதும் ஏராளமாய் ஜனங்கள் வந்தனர்.

இவ்வருடத்தின் கடைசியில் கிறிஸ்ட்மஸ் (Christmas) விடுமுறையில் எனது நண்பர் நாகரத்தினம் ஐயர் சேலத்திலிருந்து சென்னைக்கு வர, நாங்களிருவரும் இரண்டு மூன்று நாடகங்களில் இங்கு நடித்தோம்.

இவ் வருஷத்திய நிகழ்ச்சிகளில் இன்னும் ஒன்றைத் தான் குறிக்க வேண்டியிருக்கிறது. எங்கள் சபையின் வழக்கப்படி ஏப்ரல் மாதம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கொண்டாட்ட தினம் சாயங்காலம் ஆரம்பத்திற்கு ஐந்து நிமிஷம் முன்னாகத் தான், அன்று ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியைப்பற்றி உபன்யாசம் செய்ய இசைந்தவர், தான் அவ்விதம் செய்ய ஏதோ காரணத்தினால் முடியாமையை எங்களுக்குச் சொல்லியனுப்பினார். “செல்லுஞ் செல்லாததற்குச் செட்டியாரைப் பிடி” என்பது போல், எனது பால்ய நண்பர் வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்கார் அந்த உபன்யாசம் செய்வதற்கு என்னைப் பிடித்தார். நான் சபையின் பெயர் கெடாதபடி அதற்கிசைந்து, ஷேக்ஸ்பியர் நடனாக நடித்ததைப்பற்றி, ஒரு சிறு உபன்யாசம் செய்ய வேண்டி வந்தது. சமயம் வந்தபொழுது சபைக்குக் கைகொடுக்க வேண்டிவனாய் இன்னும் வாழ்ந்து வருகிறேன், இறைவன் அருளால்.