நாடக மேடை நினைவுகள்/32 ஆவது அத்தியாயம்
இனி 1931ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.
இவ் வருஷம் அக்டோபர் மாதம் நான் மதுரைக்குப் போயிருந்தேன்; எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், சேலத்திலிருந்து அங்கு வந்து சேர்ந்தார். அக்டோபர் மாதம் 3ஆம் தேதியிலும் 5ஆம் தேதியிலும் இரண்டு நண்பர்கள்", “சுபத்திரார்ஜுனா” என்னும் இரண்டு நாடகங்களிலும் நாங்கள் நடித்தோம். மதுரை டிராமாடிக் கிளப்பில் நாங்களிருவரும் நடித்தது இது நான்காம் முறையாகும். இரண்டு நண்பர்கள் நாடகத்தில் சற்றேறக் குறைய இரண்டு வருடங்களுக்கு முன் ஆடிய ஆக்டர்களே நடித்தோம்; ஆயினும் இம்முறை நான் சுந்தராதித்யனாக நடித்தது எனக்குத் திருப்திகரமாயில்லை ; இதற்கு முக்கியக் காரணம், எனது உடம்பில் ஒருவித சிரங்கும் கட்டியும் கண்டு அவற்றால் நான் பீடிக்கப்பட்டிருந்ததேயென நம்புகிறேன். வருகிறேன் என்று ஒப்புக்கொண்டபின், வராமற் போவது தவறென எண்ணி, நான் மதுரைக்குப் போய் நடித்தேனே யொழிய, என் தேக சௌகர்யத்தை மாத்திரம் கருதியிருப்பேனாயின், நான் போயிருக்க மாட்டேன். தினம் எனது நண்பர் டாக்டர் சீதாராம ஐயரிடம் போய் என் கட்டிகளுக்கெல்லாம் சிகிச்சை செய்து கொண்டு, பிறகே இவ்விரண்டு நாடகங்களிலும் நடிக்க வேண்டிய வனாயிருந்தேன். எப்படியாவது வாக்குத் தவறாதபடி இவ்விரண்டு நாடகங்களிலும் நடித்தாக வேண்டும் என்பதே என் பெருங்கவலையாயிருந்தது. இந்த ஸ்திதியில், மிகவும் கஷ்ட பாகமான சுந்தராதித்யன் பாத்திரத்தில் நான் நன்றாய் நடிக்காதது ஓர் ஆச்சரியமன்று. தேக சிரமம் அதிகமில்லாமல் நடிக்கக்கூடிய அர்ஜுனன் பாத்திரத்தை, ஏறக்குறைய திருப்திகரமாகவே நடித்து முடித்தேன். இதனால் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்பும் விஷயமென்னவென்றால், நாடக மேடையில் பெயர் பெற விரும்பும் இளைய ஆக்டர்கள், கூடுமானவரை நல்ல தேக ஸ்திதியிலிருக்கும்போதுதான் நடிக்க வேண்டு மென்பதே; நாடகமாடுவதையே ஜீவனோபாயமாக உடையவர்களைவிட, ஆமெடூர் (Amateur) ஆக்டர்களாகிய நாம், இந்த சௌகர்யமுடையவர்களாயிருக்கிறோம் அவர்கள் தங்கள் பிழைப்பின் பொருட்டு, தேகம் என்ன அசௌக்கியமாயிருந்தபோதிலும் ஆக்டு செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். நமக்கு அந்தக் கட்டாயம் கிடையாது; ஆகவே, முக்கியமான பாத்திரங்களை - அதிலும் கஷ்டமான பாத்திரங்களை - நல்ல தேக ஸ்திதியிலிருக்கும்போதுதான் நாம் நடிக்க வேண்டும்.
இம் முறை நடித்த சுபத்திரார்ஜுனா நாடகமானது சபையோரால் மிகவும் சிலாகிக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணனாக நடித்த எனது மதுரை நண்பர் பஞ்சநாத ஐயர், மிகவும் விமரிசையாக நடித்தார்; இப் பாகத்தில் இவருக்கு இணையில்லையென்பது என் தீர்மானமான அபிப்பிராயம். மதுபானப் பிரியராகிய பலராமர் பாத்திரமானது, மிகவும் ஒழுங்காய் எனது நண்பர் மா. சுப்பிரமணிய அய்யரால் நடிக்கப்பட்டது. எனது நண்பர் டாக்டர் நாராயண ஐயர் மேற்கொண்ட “லம்போதரன்” பாகம் சிறிதாயினும், அதை மிகவும் நன்றாய் நடித்து சபையோரைக் களிக்கச் செய்தார்; ஆயினும் லம்போதரன் என்னும் பெயருக்கிசைய இவருக்கு தொப்பை மாத்திரம் இல்லாமற் போச்சுது! மதுரையில் இம்முறை நடத்திய இரண்டு நாடகங்களும், இதற்கு முன் இரண்டு முறை நடத்திய நாடகங்களும் மதுரை மாசி வீதி நாடகக் கொட்டகையில் நடத்தப்பட்டன. இவ் வருஷம் எங்கள் சுகுண விலாச சபை, முதல் ஐந்தாறு மாதம் கொஞ்சம் நித்திரை போயிற்றென்றே சொல்ல வேண்டும். கடைசியில்தான் கொஞ்சம் விழித்துக் கொண்டது. டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நான் தமிழில் எழுதிய “சகுந்தலை” நாடகமானது ஆடப்பட்டது. இந் நாடகமானது 1929ஆம் வருடத்தில் என்னால் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்டது. இதைப்பற்றி எனது நண்பர்களுக்குச் சில சமாச்சாரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது நாடக மேடை நினைவுகளை ஆதி முதல் வாசித்துகொண்டு வரும் நண்பர்கள், நான் 1891ஆம் வருஷம் இந் நாடகத்தை, மானியர் வில்லியம்ஸ் (Monier Williams) என்பவர் காளிதாசரியற்றிய சம்ஸ்கிருத நாடகத்தை ஆங்கிலத்தில் மொழியெர்த்ததை, தமிழில் மொழி பெயர்க்க யத்தனித்தேன் என்பதைக் - கவனித்திருக்க கூடும். அச்சமயம் முதல் நான்கு அங்கங்களை மொழி பெயர்த்ததாக எனக்கு ஞாபகம்; ஏதோ சில காரணங்களால் அதைப் பூர்த்தி செய்யாது விட்டேன். அச் சமயம் சம்ஸ்கிருதத்தில் எனக்கு ஒரு எழுத்தும் தெரியாது. பிறகு நான் வக்கீலான பின், சுமார் 1904ஆம் வருடம், ஹிந்து சியலாஜிகல் ஹைஸ்கூலில் சம்ஸ்கிருத உபாத்தியாயராயிருந்த காலஞ் சென்ற அப்பாசாமி சாஸ்திரியாரை எனது சம்ஸ்கிருத உபாத்தியாயராக ஏற்படுத்தி, காலையில் தினம் கொஞ்சம் கொஞ்சமாக சம்ஸ்கிருத பாஷையைக் கற்க ஆரம்பித்தேன். என் வீட்டிலிருந்த சிறு குழந்தைகள் நகைக்கும்படி, சம்ஸ்கிருத எழுத்துகளை, பலகையில் எழுதிக் கற்க ஆரம்பித்தேன்! என் சம்ஸ்கிருத வாத்தியார், எனக்கு முதல் நாள் சொன்ன ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தின் தாத்பர்யம் இப்பொழுதும் என் நினைவில் இருக்கிறது. அதாவது, காரியசாதன விஷயத்தில் மனிதர்கள் மூவகைப்படுவார்கள் அதமர்கள், ஒரு காரியத்தை ஆரம்பித்தவுடன், அதன் கஷ்டங்களைக் கண்டு பயந்தவர்களாய், முதலிலேயே கைவிடுவார்கள்; மத்திமர்கள், கொஞ்சதூரம் பிரயத்தனப் பட்டு, பிறகு அதை முடிக்க அசக்தர்களாய்க் கைவிடுவார்கள்; எவ்வளவு கஷ்டங்கள் நேரிட்டபோதிலும், அவைகளை ஒரு பொருட்டாகப் பாராட்டாமல், அவைகளை வென்று அக் காரியம் சித்திபெறும் வரையில், கைவிடாது நிர்வகிப்பவனே உத்தம புருஷனாவான் என்பதே. இதையே என் குருவின் போதனையாக் கொண்டு, பதினெட்டு வருடம், தினம் கொஞ்சம் கொஞ்சமாக, கஷ்டமான சம்ஸ்கிருத பாஷையைக் கற்றேன். பால பாடங்கள் ஒன்றிரண்டான பின், ஸ்ரீமத் ராமாயணத்தை எடுத்துக் கொண்டு முற்றிலும் படித்தேன்; அன்றியும் அதிலும் பெரிய கிரந்தமான வியாசபாரதத்தையும் இரண்டு பர்வங்கள் தவிர மற்றெல்லாவற்றையும் படித்தேன். பழைய காலத்து சாஸ்திரியாராகிய என் சம்ஸ்கிருத உபாத்தியாயர், ஆதியோடந்தமாக அக்கிரந்தத்தைப் படிக்கலாகாது என்னும் கொள்கை கொண்டிருந்தவர். அன்றியும் ஹிதோபதேசம், ரகுவம்சம், பர்த்ருஹரி சதகங்கள் முதலிய கிரந்தங்களையும் அவரிடம் படித்தேன்; நான் நாடகங்கள் எழுதுவதற்கு உபயோகமாகும்படி சகுந்தலை, நிக்ரமோவசி, மாளவிகாக்னி மித்ரம், வேணி சம்ஹாரம், மிருச்சகடிகம், உத்தரராம சரித்திரம், பிரபோத சந்திரோதயம், சங்கல்ப சூர்யோதயம் முதலிய நாடகங்களையும் அவரிடம் கற்றேன். மேகசந்தேசம், கிராடார்ஜுனியம் முதலிய காவியங்களையும் வாசித்தேன். அவராகத் தனக்கு வயது முதிர்ந்தபடியால் இனி உங்கள் வீட்டிற்கு வந்து பாடம் சொல்ல முடியாது என்று சொல்லுகிற வரையில் நான் அவரைக் கைவிடவில்லை ; அவர் காலகதியான பிறகும், தினம் கால்மணி சாவகாசமாவது ஏதாவது காலையில் சம்ஸ்கிருதம் படித்து வருகிறேன்
இப்பொழுதும். தற்காலம் நான் சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யமுடையவன் என்று சொல்லிக்கொள்ள அசக்தனாயிருந்தபோதிலும், சம்ஸ்கிருதம் கொஞ்சம் அறிவேன் என்றாவது சொல்லிக் கொள்ளக்கூடும். இவ்வாறு நான் கொஞ்சம் கற்றதனாலும் அடைந்த பலன் மாத்திரம் அதிகம். கிரீக் (Greek) பாஷையறியாத ஆங்கிலக் கவி கீட்ஸ் (Keats) என்பவர் முதன் முறை, கிரீக் பாஷையில் றோமர் ஆதிகவியொருவர் இயற்றிய சிறந்த கிரந்தமாகிய இலியட் (lliad) என்பதை சாப்மான் (Chapman) என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததைப் படித்த பிறகு, அதனால் தனக்குண்டான மனக்கிளர்ச்சியை, ஒரு கவியினால் மிகவும் அழகாய் விவரித்திருக்கின்றார். அதைப்போன்ற மனக்கிளர்ச்சியை, சம்ஸ்கிருதம் கற்று, அதிலுள்ள இதிகாச, புராண, நாடகக், காவியங்களில் சிலவற்றைப் படித்த பிறகு, நான் கொஞ்சம் அடைந்தேன் என்றே நான் சொல்ல வேண்டும். அன்றியும் ஒரு உபன்யாசத்தில் நான் கூறியபடி, சம்ஸ்கிருதம் படித்ததனால், தமிழில் எனக்குள்ள சிறு பாண்டித்யமும், அன்பும் அதிகமாய்ற்று என்றே நான் நிச்சயமாய்க் கூறக்கூடும். இவ்வாறு சம்ஸ்கிருத்தைக் கற்றுப் பயனடையும்படி என்னைத் தூண்டியவர், எனது பால்ய நண்பரான வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்காரே. நான் இவ் வயதில், எனது கோபத்தை ஏறக்குறைய எல்லாவிதத்திலும் அடக்கிய போதிலும், தமிழை தூஷிக்கும் சம்ஸ்கிருத வித்வான்களைக் கண்டாலும் அல்லது சம்ஸ்கிருதத்தைத் தூஷிக்கும் தமிழ் வித்வான்களைக் கண்டாலும் அக் கோபமானது அதிகமாக மூள்கிறது. நமது தேசத்திலுள்ள மற்றச் சச்சரவுகளுடன், இந்த “வடகலை", “தென்கலை” சச்சரவும் நம்மைப் பாழாக்க வேண்டுமா! இச் சச்சரவுகளெல்லாம் நீங்கி நமது தேசம் ஒருமைப்பட்டாலொழிய, நாம் முன்னேற்றமடைவது என்பது கனவிலும் கனவாம். இவ்விரண்டு பாஷைகளையும் பற்றி என் அபிப்பிராயம் என்ன வென்றால், இவ் விரண்டையும் ஒருவன் தன் தாய் தந்தையரைப் போல் போற்ற வேண்டுமென்பதே; ஒருவனுக்குத் தாய் உயர்ந்தவளா, தந்தை உயர்ந்தவனா என்று வாதாடுவதில் என்ன பிரயோஜனம்? இவ்விரு பாஷைகளில் ஒன்றைத் துவேஷிப்பவன், தன் தாய் தகப்பனார்களில் ஒருவரைத் துவேஷிக்கும் பாவத்திற்குள்ளாவான் என்பது என் அபிப்பிராயம்.
மேற்சொன்னபடி நான் சம்ஸ்கிருதம் கொஞ்சம் கற்றதற்குக் கைம்மாறாக அப்பாஷையிலுள்ள சில முக்கிய நாடகங்களை, தமிழ் உலகம் அறியும்பொருட்டு மொழி பெயர்த்து அச்சிட வேண்டுமென்று தீர்மானித்தே, சாகுந்தலம், விக்ரமோர்வசியம், மாளவிகாக்னிமித்ரம் என்னும் மூன்று சம்ஸ்கிருத நாடகங்களையும் என் சக்திக்கு இசைந்தவாறு மொழி பெயர்த் தேன். இவைகளை நான் அச்சிட்டபொழுது, முக்கியமாக இவைகள் தமிழ் நாடக சபைகளுக்கு உபயோகப்பட வேண்டும் என்னும் எண்ணமுடையவனாயிருந்தது பற்றி, அந் நாடகங்களில் சில காட்சிகளைக் குறுக்கி, சில வர்ணனை சுலோகங்களை (அவைகள் நாம் படிப்பதற்கு மிகவும் அழகாயும் ருசியாயுமிருந்தபோதிலும் நடிப்பபதற்கு அவசியமானவை அல்லவென்று) மொழி பெயர்க்காது விட்டுள்ளேன். இதற்காக சம்ஸ்கிருத அபிமானிகள் என்னை மன்னிப் பார்களாக.
பரமேஸ்வரன் எனக்கு ஆயுள் இன்னும் கொஞ்சம் கொடுப்பாராயின், உத்தரராம சரித்திரம், மாலதி மாதவம், மிருச்சகடிகம் முதலிய நாடகங்களையும், தமிழ் நாடக மேடைக் காக, மொழி பெயர்த்து அச்சிடலா மென்றிருக்கிறேன்.
இச் சந்தர்ப்பத்தில், நான் சம்ஸ்கிருத நாடகங்களில் எங்கள் சபையில் நடித்தது எனக்கு நினைவிற்கு வருகிறது. நான் ஏதோ கொஞ்சம் சம்ஸ்கிருதம் கற்று வருகிறேன் என்று அறிந்த காலஞ்சென்ற எனது நண்பரும், சம்ஸ்கிருத பாஷையில் மிகவும் அபிமானமும் பாண்டித்ய முடையவ ராகிய டி.எல். நாராயண சாஸ்திரியார், பி.ஏ., பி.எல்., தான் சம்ஸ்கிருத கண்டக்டரான பிறகு, என்னையும் சம்ஸ்கிருதத்தில் நடிக்கும்படி வற்புறுத்தி, வேணி சம்ஹார நாடகத்தில் எனக்கு சார்வாகன் என்னும் பாத்திரத்தை முதல் முதல் கொடுத்தார். “அரைத் துட்டில் கலியாணமாம், அதில் கொஞ்சம் வாண வேடிக்கையாம் என்னும் பழமொழிக்கிசைய, அந்தச் சிறு பாகத்தில், என்னை ஒரு ஸ்லோகமும் பாடும் படி செய்தார்! ஆயினும், இந்தப் பாகத்தை நடிப்பதில் நான் ஒரு கஷ்டப்பட்டேன்! (அக் கஷ்டம் இன்னும் என்னைவிட்டு அகலவில்லை) அதாவது சம்ஸ்கிருத பதங்களைச் சரியாக உச்சரிக்கக் கூடாமையே!
சம்ஸ்கிருதத்திலிருப்பது போல், ஒற்றெழுத்துகள் தமிழில் இல்லை. தமிழ் க என்னும் ஒரு அட்சரத்திற்கு சம்ஸ்கிருதத்தில் நான்கு இருக்கின்றன. அப்படியே த, ப, ச முதலிய எழுத்துகளுக்கும்; கேவலம் தமிழ் மாத்திரம் கற்றவன், இவ்வெழுத்துப் பேதங்களை சரியாக உச்சரிப்பது கொஞ்சம் கடினம். பிறந்தது முதல் தமிழில் பழகியபடி யால், இக் கஷ்டம் எனக்கும் இருந்தது. அன்றியும் ஒரு உபாத்தியாயரை வைத்துக்கொண்டு நான் சம்ஸ்கிருதம் கற்க ஆரம்பித்தபொழுது, முதலில் அவர் ஒரு புஸ்தகத்தை வைத்துக்கொண்டு படித்து அர்த்தம் சொல்லிக்கொண்டே போவார். நான் மற்றொரு புஸ்தகத்தை வைத்துக்கொண்டு அர்த்தம் தெரிந்து கொண்டே போவேன். இதனால் சம்ஸ்கிருத பதங்களை சரியாக உச்சரிக்கும் திறம் எனக்கு இல்லாமற் போயிற்று. நான் சம்ஸ்கிருத நாடகங்களில் நடிக்கவேண்டிப் பிரயத்தனபட்டபோது, இக் குறை வெளியாயிற்று. “செய்வன திருத்தச் செய்ய வேண்டும்” என்று கருதினவனாய், இக்குறையைக் கூடுமானவரையில் நீக்க வேண்டி, நானாக உரக்கப் படிக்க ஆரம்பித்தேன்; அப்படிப் படிக்கும்போது என் உச்சரிப்பில் ஏதாவது குற்றம் வந்தால் அதை என் உபாத்தியாயர் சரிப்படுத்திக்கொண்டு வருவார்; நாளடையில் இக் குற்றம் பெரிதும் நீங்கிய போதிலும், இப்பொழுதும் சம்ஸ்கிருதத்தில் ஏதாவது நடிப்பதென்றால், எங்கு தவறாக உச்சரிக்கின்றேனோ என்கிற பயம் இன்னும் முற்றிலும் நீங்கவில்லை. இக் குற்றத்தை நீக்கிக்கொள்ளும் பொருட்டும், அன்றியும் சம்ஸ்கிருத பாஷையில் எனக்குள்ள ஆர்வத்தினாலும், எங்கள் சபையில் சம்ஸ்கிருத நாடகங்கள் ஏதாவது ஆடும்பொழுதெல்லாம், சம்ஸ்கிருத கண்டர்கடர்களை நானாகக் கேட்டு, ஏதாவது சிறு பாகங்களை எடுத்துக் கொண்டு நடித்து வருகிறேன், இன்றளவும். இது போன்ற காரணத்தினால், எங்கள் சபையில் தெலுங்கு கன்னட நாடகங்கள் ஆடும்போதும், தெலுங்கு கன்னட கண்டக்டர்கள் ஏதாவது சிறு பாகங்கள் கொடுத்தால் அவைகளையும் எடுத்துக்கொண்டு, மேடையின்மீது ஆடி வருகிறேன்.
இவ் வருஷத்தின் கடைசியில் டிசம்பர் மாதத்திய நாடகங்களில், எனது அத்யந்த நண்பராகிய நாகரத்தினம் ஐயரும் நானும் “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில் முக்கியப் பாகங்களை எடுத்துக் கொண்டு நடித்தோம்.