நாடக மேடை நினைவுகள்/33ஆவது அத்தியாயம்
இனி 1932ஆம் வருஷத்திய நிகழ்ச்சி பற்றி எழுதுகிறேன். இவ் வருஷ ஆரம்பத்தில் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி எங்கள் சபையார் “அமலாதித்யன்” (Hamlet) நாடகத்தை ஆட வேண்டுமென்று தீர்மானித்தனர். இதற்கு முக்கியக் காரணம் எனது நண்பராகிய திவான் பஹதூர் ஜெ. வெங்கடநாராயண நாயுடுகாருவின் தூண்டுதலேயாம். இது நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான நாடகம் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். எனக்கு வயது மேலிட்டபடியால் இனி இப்படிப்பட்ட கஷ்டமான நாடகங்களில் நடிப்பதில்லையென்று தீர்மானித்திருந்தேன். ஆயினும் எனது நண்பரும் சபையின் காரியங்களில் இன்னும் மிகவும் ஊக்கமுடன் உழைத்து வரும் நாயுடுகாரு வேண்டுகோளை மறுக்கலாகாது என்று இசைந்தேன்.
ஆயினும் இந் நாடத்தில் முன்பு போல் நடிக்க முடியுமோ என்னவோ என்னும் சந்தேகம் மாத்திரம் என்னை விட்டகலவில்லை. நாடக ஆரம்பத்திற்கு முன் எனக்கு அருகிலிருந்து வர்ணம் தீட்டி வைத்த எனது பழைய நண்பராகிய தாமோதர முதலியாரிடம், “நீங்கள் அருகிலிருந்து இந் நாடகத்தைப் பார்த்து, “கடுகு இறந்து போனாலும், காரமாவது கொஞ்மிருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன். அவர் மறுநாள் என்னைப் பார்த்து, “கடுகு இன்னும் சாகவேயில்லை!” என்று பதில் உரைத்தார்.
இவ் வருஷம் மார்ச்சு மாதம் 14ஆம் தேதி எங்கள் சபையின் இங்கிலீஷ் கண்டக்டர், ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவியின் “ஜூலியஸ் சீசர்” என்னும் நாடகத்தை வைத்துக் கொண்டார்; அதில் நான் ஒரு சிறு பாகமாகிய காஸ்கா (Casca) என்பதை நடித்தேன். என்னை இந் நாடகத்தில் இதனிலும் பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளும்படி கேட்டபோதிலும் அப்படிச் செய்ய அசக்தனாயிருந்தேன். இதற்கு முக்கியக் காரணம், தற்காலம் எனக்கு வயது அதிகமாய் விட்டபடியால் புதிய பாகங்களைக் குருட்டுப் பாடம் செய்வது மிகவும் கஷ்டமா யிருக்கிறது; தமிழிலாவது அப்படிச் செய்வது அதிக கஷ்ட மாயில்லை; மற்றப் பாஷைகளில் அப்படிச் செய்வது மிகவும் சிரமமாயிருக்கிறது. நான் இதற்கு முன்பாக எங்கள் சபையில் ஆங்கிலத்தில் பாத்திரங்களைத்தான் நடித்திருக்கிறேன். அவற்றுள் நான் கொஞ்சம் பெயர் பெற்றது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் “ஒதெல்லோ” என்னும் நாடகத்தில் ஈயாகோ (lago) என்னும் பாத்திரத்தில்; நான் இப் பாத்திரத்தை இரண்டு மூன்று முறை நடித்திருக்கிறேன். ஒரு முறை நடித்தபொழுது, உலகத்தைச் சுற்றிப் பிரயாணம் செய்து வந்த (Globe trotter) ஓர் ஆங்கிலச் சீமான், அச் சமயம் அகஸ்மாத்தாய் சென்னைக்கு வந்திருந்தவர், விக்டோரியா பப்ளிக் ஹாலில் நானிதை நடித்ததைப் பார்த்து, “இந்த ஆக்டர் இங்கிலாந்தில் இருப்பானாயின் நல்ல பணம் சம்பாதிக்கக்கூடும்” என்று தெரிவித்ததாக எனது நண்பர்கள் எனக்குக் கூறினர். சீமைக்குப் போக வேண்டுமென்று மாத்திரம் எனக்கு அநேக வருஷங்களாக ஆவல் உண்டு. ஆயினும் அங்கு போய் நடித்துப் பெயர் பெற வேண்டு மென்றல்ல (அது அசாத்தியம் என்பது நிச்சயம்); அங்கு போய்ச் சிறந்த ஆக்டர்கள் நடிப்பதைக் கண்டு, இக்கலையில் இன்னும் தேர்ச்சியடைய வேண்டுமென்றே. இதை வாசிக்கும் என் இளைய நண்பர்கள் என்னைப் பார்த்து நகைகக்கூடும். அப்படிச் செய்பவர்களுக்கு அடியில் வரும் கதையைத் தெரிவிக்க விரும்புகிறேன். இத்தாலி (Italy) தேசத்தில், மைகெல் ஆங்கிலோ (Michael Angelo) என்னும் உலகம் புகழ்கிற சில்ப சாஸ்திரி ஒருவர் இருந்தார்; அவர் தனது எண்பத்தோராம் வயதில், (அதற்கு மேற்பட்ட வயதிலோ எனக்கு நன்றாய் ஞாபகமில்லை) ஒரு நாள் ரோம் (Rome) நகரத்திலுள்ள பழைய கட்டடமான கொலிசியம் (Coliseium) என்பதைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாராம். இதைக் கண்ட வாலிபன் ஒருவன், “ஓய்! கிழவனாரே! இங்கு என்ன செய்கிறீர்?” என்று வினவ, அதற்கு அவர், “அப்பா, நான் சிற்ப சாஸ்திரம் கற்கிறேன்” என்று விடை பகர்ந்தனராம். நான் இன்னும் அந்த வயதுக்கு வரப் பல வருடங்கள் கழிய வேண்டும்.
நான் இதுவரையில் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களுள் இந் நாடக மேடை நினைவுகளில் குறிப்பிடாத நாடகங்கள் இரண்டாம் - அவை: “சந்திரஹரி", “காளப்பன் கள்ளத்தனம்” என்பவை.
முதலில் கூறிய “சந்திரஹரி” என்பது ஆங்கிலத்தில் பர்லெஸ்க் (Burlesque) என்னும் நாடகப் பிரிவினைச் சேர்ந்ததாம். இதை 1923ஆம் வருஷம் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இறந்ததும், அத்துயரத்தைச் சற்று மறந்திருக்கும் வண்ணம் என் மனத்திற்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டி, எழுதி முடித்தேன். அவ்வருஷம் டிசம்பர் மாதம் அச்சிட்டேன். இம்மாதிரியான நாடகம் தமிழிலும் கிடையாது, சம்ஸ்கிருதத்திலும் கிடையாது. பர்லெஸ்க் என்பது ஏதாவது ஒரு பிரபலமான கதையை எடுத்துக் கொண்டு, அதிலுள்ள சந்தர்ப்பங்களுக்கு முற்றிலும் மாறாக, வேறு சந்தர்ப்பங்களை நகைப்புண்டாக்கும்படி கற்பனை செய்து கதையைப் பூர்த்தி செய்வதாம். மேல்நாட்டார் இம் மாதிரியான நாடகங்களும் கதைகளும் பல இயற்றி இருக்கின்றனர். தமிழ் நாடக மேடைக்கு அதைப் போன்ற ஓர் உதாரணம் இருக்க வேண்டுமென்று கருதினவனாய் இச் சந்திரஹரியை எழுதினேன். இதற்கு முதல் நூல் ஹரிச்சந்திரன் கதையாகும்; அம் மன்னன் சத்யவிரதன், என்ன இடுக்கண் நேர்ந்தபோதிலும் சத்தியம் தவறாதவன்; இந் நாடகத்தின் கதாநாயகனான சந்திரஹரி, மறவ நாட்டு மன்னன்; என்ன கஷ்டம் நேரிடுவதாயினும் நிஜத்தைப் பேசாதவன்! இதை வாசிக்கும் நண்பர்கள் சற்று ஆலோ சித்துப் பார்ப்பார்களாயின், எப்பொழுதும் சத்தியமே பேசுவதைவிட, எப்பொழுதும் அசத்தியமே பேசுவது மிகவும் கடினம் என்பதைக் கண்டறிவார்கள். கதையின் மாறுதலுக்கிணங்க, பெயர்களையும் தலைகீழாக மாற்றி யுள்ளேன்; ஹரிச்சந்திரன் என்கிற பெயரை மாற்றி சந்திரஹரி என்றாக்கினேன்; சந்திரமதி என்பதை மாற்றி மதிசந்திரை என்று பெயர் வைத்தேன்; விஸ்வாமித்திரன் என்பது இவ்வண்ணமே மித்ராவசு என்றாகிறது; வசிஷ்டர், சிஷ்ட வாசியாகிறார்; மற்றப் பெயர்களுமிப்படியே. இதனால் ஹரிச்சந்திரன் கதையை ஹேளனம் செய்தபடியன்று; அக் கதையானது நமது இந்திய தேசத்திற்கே அள்ளக் குறையாத ஒரு பெறும் நிதியாம்; “பர்லெஸ்க்” என்கிற நாடகப் பிரிவின் படி இதை இவ்வாறு எழுதியதேயொழிய வேறன்று.
இந் நாடகத்தை எழுதுவதில் நான் அதிக சிரமப்பட்டேன். இதை எனது நண்பர்கள் வாசித்துப் பார்ப்பார்களாயின், அக் கஷ்டம் அவர்களுக்குப் புலப்படும். இந் நாடகம் மற்றவர்களால் இதுவரை இரண்டொரு முறை ஆடப்பட்ட போதிலும், எங்கள் சபையாரால் இதுவரையில் ஆடப்படவில்லை.
“காளப்பன் கள்ளத்தனம்” என்னும் மற்றொரு நாடகம், 1931ஆம் வருஷம் எழுதி அச்சிடப்பட்டது என்றால், அவ் வருஷம் நான் மங்களூருக்குப் போயிருந்த பொழுது, அங்கே ஆங்கிலத்தில் ஒரு சபையார் இக் கதையை நடித்ததைக் கண்டேன். இதைத் தமிழில் எழுதினால் மிகவும் நன்றாயிருக்குமென என் மனத்திற்பட, சென்னைக்கு வந்தவுடன், அக் கதையைத் தமிழில் மொழி பெயர்த்து நாடகமாக எழுதினேன். இதன் மூல நாடகம், மாலியர் என்னும் பிரான்சு தேசத்து நாடகக் கவியால் பிரெஞ்சு பாஷையில் எழுதப்பட்டது. இங்கிலாந்து தேசத்தில் எப்படி ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி கொண்டாடப்படுகிறாரோ, அப்படியே பிரான்சு தேசத்தில் மாலியர் கொண்டாடப்படுகிறார். இவர் எழுதியுள்ள பல (Farces) பிரஹசனங்கள் லோகப் பிரசித்தி பெற்றவை. இவரது பிரஹசனங்களை ஆடப் பார்க்கும் பொழுதுதான் அவைகளின் சுவை நன்றாய் நமது மனத்தில் உதிக்கும்; படிக்கும்பொழுது அதன் ருசி முற்றிலும் விளங்குவதில்லை; என் அனுபவமும் அபிப்பிராயமும் அப்படியே. இந் நாடகமாவது இதுவரையில் நானறிந்த வரையில் ஒருவராலும் ஆடப்படவில்லை.
இவ் வருஷம் ஈஸ்டர் (Easter) விடுமுறையில் எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயரும் நானும் மறுபடியும் மதுரை டிராமாடிக் கிளப்பாரால், மதுரைக்கு வரவழைக்கப் பட்டோம். அங்கு “சத்ருஜித்", “லீலாவதி-சுலோசனா” என்னும் இரண்டு நாடகங்களில் இருவரும் முக்கியப் பாகங்களை எடுத்துக்கொண்டு நடித்தோம். முதலிற்கண்ட “சத்ருஜித்” நாடகம் நான் இதற்கு முன் 34 வருடங்களுக்கு முன் சென்னையில் ஆடியது. யாது காரணத்தினாலோ எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு அதில் ஆட மறுபடியும் இச்சை கொள்ளவில்லை. அக் காரணம் பற்றி அந் நாடகத்தை மறுபடியும் ஆடும்படி எங்கள் சபையில் நான் பிரேரேபிக்கவில்லை. மதுரை டிராமாடிக் கிளப்பார், இதை ஆட வேண்டுமென்று தீர்மானித்தபொழுது, இதை ஒரு புதிய நாடகமாகப் பாவித்து நான் கற்க வேண்டியவனா யினேன். முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன் இதில் நடித்தது எனக்குக் கொஞ்சமும் ஞாபகமில்லாமற் போயிற்று. நான் சிரமப்பட்டு சத்ருஜித் பாத்திரத்தைக் கற்க வேண்டி வந்ததன்றி, இதற்காகச் சேலத்துக்குப் போய் எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயருக்கு, “சதீமணி” பாத்திரத்தைக் கற்பிக்க வேண்டி வந்தது. இந்த நாடகம் ஒரு பெரிய நாடகம். அன்றியும் நடிப்பதும் கஷ்டம். ஆகவே, நாடக தினத்திற்குப் பதினைந்து தினத்திற்கு முன்பாக மதுரைக்குப் போய், ஒத்திகைகள் நடத்த வேண்டி வந்தது. ஆயினும் நான் எடுத்துக்கொண்ட சிரமத்திற்குப் பரிகாரமாக எனது மதுரை நண்பர்கள் மிகவும் நன்றாய் நடித்து, கிளப்புக்குப் பெயரும், எனக்கு மகிழ்ச்சியும் கொடுத்தனர். முக்கியமாக எனது நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர் கஜவதனனாக; மிகவும் நன்றாய் நடித்தார். அன்றியும் விலாசினி வேடம் பூண்ட மதுரை அட்வகேட்டும், டிராமாடிக் கிளப்பில் ஓர் அங்கத்தினருமாகிய, நாராயணசாமி சாஸ்திரியார் பி.ஏ., பி.எல்., அவர்களின் மைத்துனியாகிய, சுமார் ஒன்பது வயதுடைய ஒரு சிறு பெண் மிகவும் நன்றாய் நடித்து, சபையோரை மகிழச் செய்தது; இச் சிறு பெண் சில இடங்களில் நடித்தது, தேர்ந்த பெரிய ஆக்டர்களும் அவ்வளவு அழகாய் நடித்திருக்க மாட்டார்கள் என்று என்னை நினைக்கச் செய்தது; இவ்வளவு புத்தி சாதுர்யமான பெண் இன்னும் இரண்டொரு வருடத்தில் பெரியவளாகிக் கலியாணமாகி, நாடக மேடையை வெளியிலிருந்துதானே பார்க்க வேண்டும் என்று, நாடகம் முடிந்ததும் வியசனப்பட்டேன். இக்குழந்தைக்கு மீனாட்சி சுந்தரேஸ்வராள், பூர்ணாயுசும் சகல ஐஸ்வர்யத்துடன், இவளது கலை ஞானத்தை மெச்சும்படியான தக்க கணவனையும் கொடுப்பார்களாக என்று பிரார்த்திக்கிறேன்.
இச் சந்தர்ப்பத்தில் நமது தென் இந்திய நாடக மேடை மீது ஸ்திரீகள் நடிப்பதைப்பற்றி என் அபிப்பிராயத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இதைப்பற்றி எனது அபிப்பிராயம் என்னவென்று பல நண்பர்கள் பன்முறை கேட்டிருக்கிறபடியால், சற்று விவரமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன் சென்னை சர்வகலாசாலையார் (University) உத்தரவின்படி, பச்சையப்பன் கல்லூரியில், “நாடகத் தமிழ்” என்பதைப் பற்றி மூன்று நாள் உபன்யாசம் செய்தேன்; இதைப் புஸ்தகமாக அச்சிட்டிருக்கிறேன். இது சம்பந்தமாகப் பூர்வகாலத்தில் தமிழ் நாடகங்களிலிருந்த ஸ்திதியைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டி வந்தது. அந்த ஆராய்ச்சியை யெல்லாம் இங்கு நான் எழுதுவது மிகையாகும். ஆயினும் அந்த ஆராய்ச்சியில் நாடக மேடைக்கும் ஸ்திரீகளுக்கும் உண்டாயிருந்த சம்பந்தத்தை மாத்திரம் இங்குச் சுருக்கி எழுதுகிறேன்.
இன்றைக்குச் சுமார் 1800 வருடங்களுக்குமுன் தென் இந்தியாவில், தமிழ் நாடகங்கள் ஆடப்பட்டன என்பற்குச் சந்தேகமில்லை. அன்றியும் அவற்றுள் பெரும்பாலும் ஸ்திரீகள் நடித்தனர் என்பதும், சிலப்பதிகாரம் முதலிய நூல்களினால் விளங்குகிறது. அக் காலத்தில் நாடகங்களில் ஆடிய ஸ்திரீகள் விலைமாதராயிருந்தனரென்பதும் நன்கு விளங்குகிறது. தமிழ் நாட்டில் அரச குல ஸ்திரீகளும் உயர்குல ஸ்திரீகளும், வடப்பிரதேசத்திலிருந்தது போல் நாட்டியம் அல்லது நாடகமாடக் கற்றனர் என்பது கொஞ்சமேனும் விளங்கவில்லை. தமிழ் நாடகமானது க்ஷணதிசையை அடைந்ததற்கு ஒரு முக்கியக் காரணம் இதுவாயிருக்கலாமென்று தோன்றுகிறது; பிறகு சரித்திர காலத்துக்கு வருங்கால “ராஜராஜேஸ்வரி” நாடகம் முதலியன ஆடியவர்கள் பெரும்பாலும் ஆண் மக்கள் என்று அறிகிறோம். அக்காலத்தில் சில கோயில்களில் தாசிகள் திருவிழாவின் போது நாடகங்களாடியதாக அறிகிறோம் (இவ்வழக்கம் சில கோயில்களில் இன்னும் உண்டு). தற்காலத்து நிலையைக் கருதுங்கால் சுமார் 50 வருடங்களுக்கு முன் தென் இந்தியாவில் நாடகமாடினவர்கள் பெரும்பாலும் ஆண் மக்களாகவே இருந்தனர். ஏகதேசமாக டம்பாச்சாரி விலாசம் முதலிய சில நாடகங்களில், கணிகையர் வேடம் பூண்டு நடித்ததுமுண்டு. ஸ்திரீகளாக நாடகம் நடித்தது முதல் முதல், நானறிந்தவரை பாலாமணி கம்பெனியில்தான். மேற்குறித்தபடி நாடக மேடை ஏறிய ஸ்திரீகளெல்லாம் பெரும்பாலும் கணிகையராக யிருந்தபடியால், நாடகம் பார்ப்பதற்கே அக் காலம் உயர்குல ஸ்திரீகள் போவது இழிவாகக் கருதப்பட்டது. அப்படி யிருக்கவே, ஸ்திரீகள் நாடக மேடை ஏறுவதென்பது கனவிலும் கருதப்படாத விஷயமாயிருந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன், தமிழ் நாடக மேடையின் நிலையைக் கருதுங்கால், ஒருவாறு அதனை, எலிசபெத் (Elizabeth) ராணியின் காலத்தில் இங்கிலாந்தில் நாடக மேடையிருந்த ஸ்திதிக்கு ஒப்பிடலாம் - இரண்டிலும் ஏறக்குறைய எல்லா ஸ்திரீ பாகங்களும், அழகிய ஆண் பிள்ளைகளால் எடுத்துக் கொள்ளப்பட்டன. தற்காலம் தமிழ் நாடக மேடையிருக்கும் ஸ்திதியை இரண்டாவது சார்லெஸ் (Charles II) காலத்தில் இங்கிலாந்திலிருந்த நாடக மேடையுடன் ஒப்பிடலாம் - இரண்டிலும் மேடையின்மீது தோன்றும் ஸ்திரீகளில் பெரும்பாலார் விலைமாதர்களாகவே இருக்கின்றனர். சென்ற இரண்டொரு வருடங்களாகத்தான் குல ஸ்திரீகள் தங்கள் கணவருடனோ அல்லது நெருங்கிய பந்துக்களுடனோ நாடக மேடை ஏற ஆரம்பித்திருக்கின்றனர். இதைப்பற்றி என் அபிப்பிராயம் என்னவென்றால், மேற்கத்திய நாகரிகமானது இங்குப் பரவப் பரவ, கற்றிந்த குல ஸ்திரீகளும் விரைவில் தமிழ் நாடக மேடைமீது ஆட ஆரம்பிப்பார்கள் என்பது நிச்சயம். ஆயினும் ஐரோப்பிய ஸ்திரீகளைப்போல் கல்வி கற்று ஆண் மக்களுடன் சமானமாகக் குலவும் வழக்கம் நமது நாட்டில் பரவும் வரையில்; நமது குல ஸ்திரீகள் நாடக மேடையேறுவது அவ்வளவு உசிதமல்லவென்பது என் அபிப்பிராயம்.
இவ் விஷயத்தைப்பற்றிக் கருதுங்கால், சிலர், நமது நாடக மேடையில் ஸ்திரீகளின் பாகம், ஸ்திரீகளே எடுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய, ஆண் மக்கள் எவ்வளவு அழகு வாய்ந்தவராயினும், ஸ்திரீ வேஷம் பூண எவ்வளவு பொருத்தமுள்ளவர்களாயிருந்தபோதிலும், ஸ்திரீ வேடம் புனைவது தகுதியல்ல என்று எண்ணுகிறார்கள். அவ்வாறு அவர்கள் எண்ணுவது அவ்வளவு உசிதமல்ல வென்பது என் கொள்கை. கள்ளனைப்போல் ஓர் உயர் குலத்தான் வேஷம் பூண்டு நடிக்கிறான் என்றால், எல்லோரும் பாக்கப் போகிறார்கள், சந்தோஷமடைகிறார்கள்; இதைவிட்டு ஒரு கள்ளனையே அப்பாத்திரமாக நடிக்கச் செய்தால் மேலாகுமோ? எனது நண்பர் பி.வி. ராமானுஜ செட்டியார், பிரதாபருத்ரீயம் என்னும் நாடகத்தில் அசல் வண்ணானைப் போல் நடிக்கிறது எல்லோராலும் புகழப்படுகிறது; அதைவிட்டு வாஸ்தவமான வண்ணானையே அப்பாத்திரத்தை நடிக்கும்படி செய்தால் என்ன பெருமையாகும்? அம்மாதிரியாக அசல் ஒரு பெண்மணியைப்போல் ஓர் ஆடவன் வேடம் பூண்டு நடிப்பதும் சிலாகிக்கத் தக்கதாம் என்பது என் கொள்கை. வேடம் தரித்து நடிக்க வேண்டிய நாடகக் கலையில், ஆடவன் ஸ்திரீ வேஷம் பூணுவது மெச்சத்தக்கதாம் என்பது என் அபிப்பிராயம்.