நாடக மேடை நினைவுகள்/34ஆவது அத்தியாயம்
இனி 1933ஆம் வருஷம் முதல் 1937ஆம் வருஷம் முடிவு வரையில் நடந்தேறிய விஷயங்களைப் பற்றிக் கூறி இவ்வத்தியாயத்தையும் இந் நாடக மேடை நினைவு களையும் முடிக்கிறேன். கடந்த ஐந்து வருடத்திய சங்கதி களைப்பற்றி எழுதும்பொழுது, எனக்குண்டான ஒரு கஷ்டத்தை இங்கு எழுதுகிறேன். “கடலைக் கடக்கக் கஷ்டப்படவில்லையாம், ஒரு சிறு வாய்க்காலைத் தாண்ட கஷ்டப்பட்டானாம்” என்னும் பழமொழிக்கு இசைந்தபடி, சென்ற நாற்பத்திரண்டு வருடங்களுக்குமுன் நடந்த சமாச்சாரங்களெல்லாம் என் நினைவிற்குச் சுலபமாய் வந்தன. இப்பொழுது, கடந்த ஐந்து வருடங்களில் நடந்த சமாச்சாரங்களெல்லாம் என் நினைவிற்குச் சுலபமாக வரவில்லை ! அவைகளைக் குறிப்பிடப் பல காகிதங்களைப் பரிசோதித்து எழுதவேண்டியதாயிருந்தது! இதற்கு முக்கியக் காரணம், எனக்கு வயது மேலிட்டு ஞாபக சக்தி குறைந்ததேயாம் போலும். தன் முதுமையில் “மறதி என்னும் கள்ளன் கொள்ளை கொண்டனன்” என்று ஒரு தமிழ்ப் புலவர் கூறியது எனக்கு இத் தருணம் ஞாபகத்திற்கு வருகிறது.
1933ஆம் வருஷத்தின் ஆரம்பத்தில், இதுவரையில் எங்கள் சபையில் புகாத ஒரு கெட்ட விஷயம் புகுந்தது; அதாவது பிராமணர் சூத்திரர் என்னும் கட்சியே. இக் கெடுதி புகுந்ததற்குக் காரணம் இருவர். பிராமணர் சூத்திரர் என்னும் கட்சியைப்பற்றிப் பேசவும் கூடாது என்னும் கோட்பாடு உடைய நான், இதைப்பற்றி விவரித்து எழுதுவது நியாமல்ல. இக்கட்சி உண்டானதால் எங்கள் சபை, வர வர, க்ஷண திசையை அடைந்து வந்ததென்பதற்கு யாதொரு சந்தேகமு மில்லை. சென்ற இரண்டு வருடங்களாகத்தான் சபையின் உடலைவிட்டு இவ்விஷம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று கொண்டிருக்கிறதென்று எண்ணுகிறேன்; முற்றிலும் இது இடம் தெரியாது அகன்றாலொழிய எங்கள் சபை முன்பிருந்த ஸ்திதிக்கு வராதென்பது என் நிர்ணயமான அபிப்பிராயம்.
இக் காரணம் பற்றி இவ் வருஷம் சபையில் பொதுக் கூட்டம் கூடியபொழுது, நான் சபையின் நிர்வாக சபையில் ஒரு மெம்பராக நிற்கமாட்டேன் என்று மறுத்தேன். சுகுண விலாச சபை ஆரம்பமானது முதல் இதுவரையில் இவ் வருஷம்தான் நிர்வாக சபையில் அங்கத்தினனாக நான் இராமற்போனது.
நிர்வாக சபையில் அங்கத்தினனாக நிற்காமற் போன போதிலும், இவ் வருஷம் என்னை எந்த நாடகத்தில் ஆடும்படி கேட்டபோதிலும் நடித்து வந்தேன். இவ் வருஷம் நடத்திய நாடகங்களில் குறிக்கத்தக்கது, எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய ‘கீதோதயம்’ என்னும் ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய பால்ய லீலைகளைப்பற்றிய நாடகம் ஒன்றே. அதில் அவர் வேண்டுகோளுக்கிணங்கி, ஒரு சிறு பாகமாகிய “ஜோஸ்யர்” பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நடித்தேன். இந் நாடகம் நடித்த பொழுது அதைப்பற்றி விமரிசனம் எழுதிய ஒரு பத்திராதிபர், முக்கியப் பாத்திரங்களையெல்லாம் விட்டு விட்டு, நான் நடித்த சிறு பாகத்தை மிகவும் சிலாகித்துக் கூறினர். இதை என் புகழ்ச்சியாக இங்கு நான் எழுதவில்லை ; எவ்வளவு சிறிய பாகமாயிருந்தாலும், அதைத் தக்கபடி நடித்தால் எப்படியும் பெயர் எடுக்கலாம் என்பதை, இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே எழுதியுள்ளேன்.
இக் கீதோதயம் நாடகசிரியராகிய எனது நண்பரால் எனக்கு “அர்ப்பணம்” (Dedication) செய்யப்பட்டது. இதுவரையிலும், இதற்குப் பின்னும், பல நாடகாசிரியர்கள் தங்கள் நாடகங்களை எனக்கு அர்ப்பணம் செய்திருக் கிறார்கள். இருந்தபோதிலும், வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எனக்குத் தான் எழுதிய இந் நாடகத்தை அர்ப்பணம் செய்ததையே நான் மிகவும் சிலாகிக்கின்றேன். இதை இங்குக் குறிப்பிடுவது தவிர அவருக்கு நான் வேறு கைம்மாறு செய்ய அசக்தனாயிருக்கிறேன்.
“பயன் நூக்கார்ச் செய்தஉதவி நயந்தூக்கின்
நன்மை கடலினும் பெரிது.”
இவ் வருஷம் எங்கள் சபை ஆயிரத்தாவது நாடகம் நடத்தியது. ஆயினும் அதைக் கவனிப்பாரில்லாதபடி அந்த ஸ்திதிக்கு எங்கள் சபையை, பிராமணன், சூத்திரன் என்னும் பிரிவை சபைக்குட்புகச் செய்தவர்கள், கொண்டு வந்து விட்டனர். சில வருடங்களுக்கு முன் அமெரிக்க தேசத்தில் ஒரு ஆமெடூர் (Amateur) நாடக சபை அறுபதாவது நாடகம் நடத்தினதைப்பற்றி ஒரு மாதப் பத்திரிகையில் மிகவும் கொண்டாடப்பட்டது. எங்கள் சபை ஆயிரம் நாடகம் ஆடி முடித்தபோதிலும் அதைக் கவனிப்பாரில்லாமற் போயிற்று! இதனாலாவது பிராமணர் சூத்திரர் என்னும் கட்சிப் பிரிவின் கெடுதியை அனைவரும் அறிந்து, இக் கெடுதியிலும் கெடுதியை சபையைவிட்டு முற்றிலும் அகற்றுவார்களாக! அன்றியும் இக் கெடுதி நமது தேசத்தை விட்டு அகல வேண்டுமென்பது ஈசனுக்கு என் பிரார்த்தனை! இதைப்பற்றி என் அபிப்பிராயத்தை இன்னும் அதிகமாக அறிய வேண்டுமென்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் விரும்பின், நான் இவ் வருஷம் எழுதி அச்சிட்ட “பிராம்மணனும் சூத்திரனும்” என்னும் தமிழ் நாடகத்தை வாசித்து அறிந்து கொள்வார்களாக. இந்நாடகம் நான் மிகவும் முயற்சி எடுத்துக்கொண்டு எழுதிய நாடகம். இதை வாசித்த, பிராமணன் சூத்திரன் என்னும் துவேஷமில்லாத இரு ஜாதியாரும் என்னைப் புகழ்ந்திருக்கின்றனர்; அத் துவேஷமுள்ள இரு திறத்தாரும் என்னை நிந்தித்திருக்கின்றனர்; ஆயினும் அப்படி என்னை நிந்தித்தவர்களில் ஒருவராவது, நான் எழுதியதில் இது தவறு என்று ஒன்றையும் எடுத்துக் காட்டினாரில்லை. இதையே நான் எழுதிய இந்நாடகத்திற்குப் பெரும் புகழாகக் கொள்கிறேன். இந்நாடகத்தைப்பற்றி இன்னும் ஏதாவது அறிய விரும்பின், எனது நண்பர் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஐயர் இதைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் எழுதிய விமர்சனத்தைப் படிப்பார்களாக.
இந்நாடகமானது எங்கள் சபையோரால் நாளது வரையில் நடிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் இதை வாசிப்பவர்கள், நான் கூறாமலே அறிந்து கொள்ளலாம்.
இவ் வருஷம் அவ்விடத்தில் டிஸ்டிரிக்ட் முன்சீபாயிருந்த எஸ். கே. பார்த்தசாரதி ஐயங்கார் பி.ஏ., பி.எல்., அவர்கள் விருப்பத்தின்படி மன்னார்குடிக்குப் போய், அவர் எழுதிய “நளன்” என்னும் தமிழ் நாடகத்தை ஒத்திகைகள் செய்து நடத்தினேன். இந் நாடகத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இதுதான் தமிழ் நாடக மேடையில் பிரபலமான ஜீவனோபாயமாக நாடகமாடும் நடிகர்களும், (Professional actors) ஆமெடூர்களும் (Amateur) ஒருங்கு சேர்ந்து மேடையின்மீது ஒரு நாடகத்தை நடத்தியதாம். கும்பகோண வாசியாகிய, தமிழ் நாடக மேடையில் பெயர்பெற்ற நடிகரான பி.எஸ். வேலு நாயரும் சென்னைவாசியாகிய பெயர்பெற்ற அயன் ஸ்திரீ பார்ட் நடிகரான அநந்த நாராயண ஐயரும், நளனாகவும் தமயந்தியாகவும் நடித்தனர். நாடகாசிரியராகிய பார்த்தசரதி ஐயங்கார் ஒரு முக்கியப் பாகமாகிய பாஹுகனாக நடித்தார். தேசியத் தொழிலுக்காக மிகவும் பாடுபவரும், தமிழ் நாடகமாடுவதில் கீர்த்தி வாய்ந்தவருமான நடராஜப் பிள்ளை அவர்கள் வேடுவனாக நடித்தார்; நான் ஒரு ஜோஸ்யனாகவும், பிராமணனாகவும் நடித்தேன்; இதர வேடங்கள் எல்லாம் மன்னார்குடியிலிருக்கும் சில வக்கீல்கள் முதலியோர் எடுத்துக் கொண்டனர். ஒரு வாரத்திற்கு முன்பாகவே மன்னார்குடிக்குப் போய் ஒத்திகைகள் நடத்தினேன். நாடகத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக வேலு நாயரும் அநந்தநாராயண ஐயரும் வந்து சேர்ந்தனர். அன்று சாயங்காலம் நான் அவர்களை நளன் தமயந்தி பிரியும் காட்சியை நடிக்கும்படி கேட்க, அவர்கள் அவ்வாறே செய்தனர். காட்சி முடிந்ததும் “நீங்கள் நடித்தது நன்றாகத்தானிருக்கிறது; ஆயினும் இக்காட்சியை இப்படி நடித்தால் இன்னும் நன்றாயிருக்குமென எனக்குத் தோன்றுகிறது” என்று சொல்லி, அக்காட்சியை என் அபிப்பிராயப்படி நடித்துக் காட்டினேன். அதன் பேரில் அவர்களிருவரும், “மற்றக் காட்சிகளை நாளை காலை உங்களிருப்பிடம் வருகிறோம்; அங்கு உங்கள் அபிப்பிராயப்படி நடித்துக் காட்டுங்கள்” என்று கேட்டனர்; அதன்படியே மறுநாள் பார்த்தசாரதி ஐயங்கார் வீட்டின் மேல் மாடியில் நடித்துக் காட்டினேன். அவர்களிருவரும் நான் சொன்னதையெல்லாம் அன்புடன் கிரஹித்து நாடக தினம் அவ்வாறே நடித்தனர். ஸ்ரீமான் நாடராஜப் பிள்ளையும் அவ்வாறே செய்தனர். நாடகத் தினத்தில் வந்திருந்தவர்களெல்லாம் நாடகம் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்டதென்று புகழ்ந்தனர். இதையே நாடகத்தின் ஒத்திகை நடத்துவதில் எனக்குக் கொஞ்சம் திறமையுண் டெனப் பிறர் ஒப்புவதாகக் கொள்கிறேன்.
இந் நாடகத் தினம் சுமார் 900 சில்லரை ரூபாய் வசூலாயது; செலவு போக, ரூபாய் 500 சில்லரை அங்குள்ள ஒரு சமாஜத்திற்குப் பார்த்தசாரதி ஐயங்காரால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது.
1934ஆம் வருஷம் எங்கள் சபை திருவனந்தபுரம் மஹாராஜா அவர்களால் அழைக்கப்பட்டு திருவனந்தபுரம் போய், சில நாடகங்களாடிற்று; இதன் மூலமாக மஹாராஜா அவர்களும் மஹாராணி சேது பார்வதி அம்மாளும் எங்கள் சபைக்கு பேட்ரன்கள் (Patrons) ஆயினர்.
இவ்வாண்டு நான் கல்கத்தாவுக்குப் போய் “சதிசுலோசனா” என்னும் கதையைத் தமிழ் பேசும் படமாகத் தயாரித்தேன். இவ் விஷயத்தைப்பற்றியும், மறுவருஷம் பம்பாய்க்குப் போய் “மனோஹரன்” தமிழ் பேசும் படத்தில் நான் புருஷோத்தமனாக நடித்த விஷயமும், இந் நாடக மேடை நினைவுகளில் எழுதுவதற்கில்லை. ஸ்வாமியின் கருணையினால் அவ் விவரங்களையெல்லாம் “பேசும் படக்காட்சி அனுபவங்கள்” என்று வேறு புஸ்தகத்தில் அச்சிடலாமென்றிருக்கிறேன்.
இந்த சதி-சுலோசனா கதையைப் பேசும் படக் காட்சிக்குத் தயாரித்தபடி, நாடகமாக இவ்வருஷம் அச்சிட் டேன். அன்றியும் “குறமகள்", “வைகுண்ட வைத்தியர்” என்னும் இரண்டு சிறு நாடகங்களை எழுதி இவ் வருடம் வெளியிட்டேன். இவ்விரண்டும் எங்கள் சபையில் பிறகு ஆடப்பட்டன. இவ்வருடம் நான் எழுதிய பெரிய நாடகமாவது “உத்தம பத்தினி” என்பதாம். இதை நான் இதுவரையில் எழுதியுள்ள நாடகங்களில் ஒரு சிறந்ததாக மதிக்கிறேன்; இதை ஆடுவது கொஞ்சம் கஷ்டம்; நாடகக் கதை முழுவதும் இரண்டு மணி சாவகாசத்தில் நடக்கிறது; இது கிரீக் நாடகங்களை ஒட்டி இவ்வாறு எழுதியபடியாம்; அன்றியும் நடிப்பதற்கும் சரியாக இரண்டு மணிதான் பிடிக்கும். இதை எங்கள் சபையைக் கொண்டு நடத்த வேண்டுமென்று ஏற்பாடு செய்தும், எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் மறுபடியும் வெளியூருக்கு மாற்றப் பட்டபடியால், தவக்கமாயிருக்கிறது; கூடிய சீக்கிரத்தில், ஈஸ்வரன் கிருபையால், இதில் நடிக்கலாமென்று உத்தேசித்திருக்கிறேன்.
1935ஆம் வருஷம் நான் நான்கு மாதத்திற்கு மேல் பம்பாய்க்கு மனோஹரன் பேசும் படக் காட்சிக்காகப் போக வேண்டி வந்தபடியால், சபையின் காரியங்களை அதிகமாகக் கவனிக்க முடியாமற் போயிற்று.
1936ஆம் வருஷம் எங்கள் சபையானது 95,000 ரூபாய்க்கு சென்னை மவுண்ட் ரோட்டிலுள்ள “தியாகராஜ கட்டடங்கள்” என்பதை விலைக்கு வாங்கியது; அதில் ஒரு நாடக சாலை கட்ட ஏற்பாடு செய்து கொண்டு வருகிறோம்; அது எப்பொழுது முடியுமென்பது ஈசன் திருவுள்ளத்திற்குத் தான் தெரியும். இவ்வருடம் நான் “நல்லதங்காள்” என்னும் பழைய கதையைப் புதிய மாதிரியில் எழுதி அச்சிட்டேன். உத்தம ஸ்திரீயான நல்லதங்காள் தன் ஏழு மைந்தர்களையும் கிணற்றில் தூக்கிப் போட்டுக் கொல்வதற்கு ஒரு புதிய காரணத்தைக் கற்பித்துள்ளேன். இந் நாடகம் பேசும் படக்காட்சிக்குத் தக்கபடி அமைக்கப் பட்டுள்ளது. மேலும், இவ்வருஷம் நாடக மேடையில் தேர்ச்சி பெற விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு என் அனுபவத்தைக் கொண்டும், நான் படித்ததைக் கொண்டும் உபயோகப்படும்படி “நாடக மேடையில் தேர்ச்சி பெறுவதெப்படி?” என்னும் பெயர் கொண்ட ஒரு சிறு புஸ்தகத்தை வெளியிட்டேன்.
1937ஆம் ஆண்டில் “ஏமாந்த இரண்டு திருடர்கள்”, “மாறுவேட விருந்து” அல்லது சபாபதி ஐந்தாம் பாகம்; “சோம்பேறி சகுனம் பார்த்தது", “கண்டவுடன் காதல்", “காவல்காரர்களுக்குக் கட்டளை", “மன்மதன் சோலை” என்னும் ஆறு சிறு நாடகங்களை அச்சிட்டிருக்கிறேன். இவைகள் பெரும்பாலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கு உபயோகப்படுமென எண்ணுகிறேன். மேற்கண்டவற்றுள், மூன்றில் ஸ்திரீ பாத்திரமே இல்லாதபடியால் சிறுபிள்ளைகள் எளிதில் நடிக்கக் கூடுமெனக் கருதியே இவைகளை வெளியிட்டேன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கன்னடம், மலையாளம், உருது ஆகிய ஏழு பாஷைகளில் நடித்ததுடன், இவ்வருஷம் நான் ஹிந்தி பாஷை கற்க ஆரம்பித்து, தசராக் கொண்டாட்டத்தில் “ஜு மதத்தியப் பெண்” என்னும் ஹிந்தி நாடகத்தில் ரோமாபுரி அரசனாக நடித்தேன்.
என்னிடமுள்ள குறிப்புகளின்படி நான் இதுவரையில் 529 முறை நாடக மேடையின் மீது ஏறியிருக்கிறேன்; “இவற்றுள் நான் வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் பூண்டது 109 ஆம்; நான் இதுவரையில் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68; இந்நாடகங்கள், என் அனுமதியின் மீது 4070 முறை எங்கள் சபையோராலும் மற்றவர்களாலும் ஆடப்பட்டிருக்கின்றன. என் அனுமதி இல்லாது வெளியூர்களில் இவைகள் எத்தனை முறை ஆடப்பட்டனவோ, அது ஈசன் திருவுள்ளத்திற்குத்தான் வெளிச்சம்!
1930ஆம் வருஷம் எனது நண்பராகிய சுதேசமித்திரன் பத்திராதிபர், எனது நாடக மேடை நினைவுகளைத் தன் பத்திரிகைக்கு எழுதியனுப்பும்படி கேட்க, அதற்கிசைந்து அவ்வருடம் ஜூன் மாதம் முதல், வாரம் தோறும் சில வருடங்களாக எழுதி வந்தேன். மூன்று நான்கு வருடங்கள் அவைகளை யெல்லாம் ஐந்து பாகங்களாக அச்சிட்டுள்ளேன். கடைசியாக நாளது வரையிலுள்ள நாடக மேடை நினைவுகளை இந்த ஆறாம் பாகமாக அச்சிட்டிருக்கிறேன்.
1930இல் இதை எழுத ஆரம்பித்தபொழுது, இவற்றை யெல்லாம் எழுதி முடிக்க ஈசன் எனக்கு ஆயுள் அருள்வாராக என்று பிரார்த்தித்து ஆரம்பம் செய்தேன். அப் பிரார்த்தனைக்கிசைந்து, எனக்கு ஆயுளையும், வேண்டிய ஊக்கத்தையும் தேக பலத்தையும் கொடுத்த, எல்லாம் வல்ல ஈசன் கருணையைப் போற்றி, இத்துடன் என் நாடக மேடை நினைவுகளை முடிக்கிறேன்.