நாடக மேடை நினைவுகள்/பதின்மூன்றாம் அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து

பதின்மூன்றாம் அத்தியாயம்

1897ஆம் வருஷத்தில் ‘பித்தம் பிடித்த வீரன்’ என்கிற நாடகத்தை எழுதினேன். இதைப் பிறகு நான் அச்சிட்ட பொழுது ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்னும் பெயருடன் வெளிப்படுத்தினேன். இதை ஏறக்குறைய ஒரு வாரத்தில் எழுதி முடித்தேன் என்று ஞாபகமிருக்கிறது. அப்படி அவசரப்பட்டு எழுதி முடித்ததற்கு ஒரு காரணமுண்டு. அச்சமயம் சென்னை ராஜதானியில் கருப்பு அல்லது க்ஷாமம் உண்டாகி எளிய ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் தௌர்ப்பாக்கியஸ்திதியை நிவர்த்திப்பதற்காக க்ஷாம நிவாரண நிதி என்னும் ஒரு பண்டு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு என் தமயனாருடைய மாமனாராகிய திவான்பஹதூர் பா. ராஜரத்தின முதலியார் ஒரு கௌரவக் காரியதரிசியாயிருந்தார். அவர் அந்தப் பண்டுக்காக ஒரு நாடகம் நடத்தி அதன் வரும்படியை அந்தப் பண்டுக்குச் சபையோர் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அப்படியே ஒப்புக்கொண்டு சீக்கிரத்தில் ஒரு நாடகமாட வேண்டுமென்று எங்கள் சபை நிர்வாக சபையாரால் தீர்மானிக்கப்பட்டது. புதிய நாடகமாயிருந்தால்தான் அதிகப்பணம் வசூலாகுமென்று கூறி, நான் புதிய நாடகம் ஒன்று எழுத ஒப்புக் கொண்டேன். அப்படி எழுதின நாடகம்தான் இந்த “முற்பகற் செய்யின் பிற்பகல் விளையும்” எனும் நாடகம்.

இந்த நாடகத்தின் கதை எனக்கே பிடிக்கவில்லை யென்றால் மற்றவர்களுக்கு எப்படியிருக்கும்? தந்தையே வெறுக்கும்படியான குமாரன் எவ்வளவு புத்திசாலியாயிருக்க வேண்டும்? இந்நாடகத்திலுள்ள பல குற்றங்களின்மத்தியில் ஒரு சிறு குணம் மாத்திரம் உண்டு. அதாவது, கதாநாயகன்பைத்தியம் பிடித்துத் திரிவதாக எழுதிய காட்சிகள் நன்றாயிருந்தன வென்பதாம். ‘இரண்டு நண்பர்கள்’ என்னும் நாடகத்தில் நான் பைத்தியக்காரனாய் நடித்தது நன்றாயிருந்தது என்று எனது நண்பர்கள் கூறவே, அத்தகைய காட்சிகள் இதில் சேர்த்து எழுதினேன். எனது நாடகங்களை யெல்லாம் மொத்தமாக வாங்க வேண்டுமென்று யாராவது என்னிடம் வந்து கேட்டால், இதைத் தவிர மற்ற நாடகங்களை வாங்குகள், என்று நான் சொல்வது வழக்கம். இதை வாசிக்கும் எனது நண்பர்களில் யாராவது, நான் எழுதிய நாடகங்களிலெல்லாம் எது கீழ்ப்பட்டது என்று அறிய வேண்டுமென்றால், இதை வாசிக்கலாம். ஒரு நாடகக் கர்த்தா முழு மனவெழுச்சியுடன் எழுதுவதை விட்டு, ஏதோ அக்கறைக்காக, ஒன்றை அவசரப்பட்டு எழுதி முடிப்பதன் கெடுதி இதுதான். ஆயினும் இந்த அனுபவமும், முடிவில் இன்னது செய்யக்கூடாது என்னும் புத்திமதியை எனக்குப் புகட்டியதல்லவா? தற்காலத்தில் இவ்வுலகிலுள்ள தனவந்தர்களுள் எல்லாம் மேம்பட்டவராகிய போர்டு (Ford) என்னும் அமெரிக்கா தேசத்தில் வாழும் சீமான், ஏதாவது ஒரு காரியத்தில் நாம் தவறினால், அதைத் தோல்வியாக நாம் கொள்ளலாகாது; அதைப் பிறகு நாம் வெற்றி பெறுவதற்கு அனுகுணமான அனுபவமாகக்கொள்ள வேண்டுமென்று ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருக்கிறார். நாடகமெழுத விரும்பும் எனது நண்பர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. ஏதாவது நாடகமொன்றை எழுதுங்கால், எழுதும் நமக்கே அது எழுதுங்கால் திருப்திகரகமாயில்லாவிட்டால், அதை எழுதி முடிக்காதிருப்பார்களாக. இந்த அனுபவத்தின் பிறகு, என்னை எழுதும்படி என் மனோ உற்சாகமானது உந்தினாலன்றி ஒன்றையும் எழுதுவதில்லை என்று தீர்மானித்து, அதன்படி இந்த முப்பத்தைந்து வருடங்களாக நடந்து வந்திருக்கிறேன். ஏதாவதொரு நாடகத்தை எழுதிக் கொண்டு வரும்பொழுது, இவ்வுற்சாகம் குன்றி, மனத்தளர்ச்சி அடைந்தால், உடனே நான் எழுதும் பென்சிலையும் காகிதத்தையும் மேஜையின்மீது வைத்துவிட்டு எழுந்து விடுவேன். பிறகு, சில மணி நேரமோ, சில தினங்களோ, மாதங்களோ, வருஷங்களோ சென்று அந்த உற்சாகம் திரும்பி வந்த பிறகுதான், நான் எழுத ஆரம்பித்ததை எழுதி முடிப்பேன். இதற்கு ஓர் உதாரணமாக, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் ஹாம்லெட் எனும் நாடகத்தின் தமிழ் அமைப்பாகிய “அமலாதித்யன்” எனும் நாடகத்தை எழுதுவதற்கு எனக்குச் சுமார் ஏழு வருடங்கள் பிடித்ததைக் கூறுவேன்.

இந்த நாடகமானது எங்கள் சபையோரால் ஒருவிதத்தில் ஒத்திகையேயின்றி நடத்தப்பட்டதென்று சொல்லலாம்; இதற்கு ஒரு முழு ஒத்திகையாவது நடத்தியதாக எனக்கு ஞாபமில்லை. ஒத்திகையேயில்லாமல் நாடகத்தை நடத்தியது சரியென்று சொல்லவில்லை; அப்படிச் செய்தது தவறுதான். நடந்த உண்மையை எழுத வேண்டுமென்று இதை வரையலானேன். இவர்கள் சபையிலேயே இம்மாதிரி நடந்ததே நாம் ஏன் அம்மாதிரி செய்யலாகாது என்று, மற்றவர்கள் இதை உதாரணமாகக் கொள்ளாதிருக்குமாறு வற்புறுத்த விரும்புகிறேன்.

இந்நாடகம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் இவ்வருஷம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி ஆடப்பட்டது. இதுதான் தர்ம கைங்கரியமாக நாங்கள் ஆடிய நாடகங்களில் முதலானது. அக்காரணம்பற்றி ஹால் நிரம்ப ஏராளமான ஜனங்கள் வந்திருந்தனர். எங்கள் செலவெல்லாம் போக ரூ.214-4-8, க்ஷாம நிவாரண நிதிக்குக் கொடுத்தோம். நாடகமானது சென்னைகார்ப்பொரேஷன் அக்கிராசனாதிபதியாகிய சர்ஜார்ஜ் மூர் (Sir George Moore) என்பவரின் முன்னிலையிலும் ஆதரவிலும் நடத்தப்பட்டது. இந்நாடகம் ஆரம்பித்த பொழுது நடந்த ஒரு விந்தையை இனி எழுதுகிறேன்.

எங்கள்சபையில், இதுவரையில், மற்ற நாடகக் கம்பெனிகளிலும் சபைகளிலும் நடப்பது போலல்லாமல், நாடகம் இத்தனை மணிக்கு ஆரம்பமாகும் என்று குறித்தபடி ஆரம்பிப்பது வழக்கம். சுகுண விலாச சபையில் குறித்த காலப்படி எதுவும் ஆரம்பிக்கப்படும் என்னும் பெயரைப் பெற்றிருந்தோம். இன்றைத் தினம் என்ன காரணம் பற்றியோ, முதல் காட்சியில் வரவேண்டியவர்களாகிய, ஸ்திரீவேடம் பூண வேண்டிய அ. கிருஷ்ணசாமி ஐயரும் சி. ரங்கவடிவேலும், ஆரம்ப காலத்திற்குப் பதினைந்து நிமிஷந்தான் இருந்த போதிலும், தலை டோபாவும் கட்டிக்கொள்ளாதிருந்தார்கள்! அவர்கள் ஸ்திரீவேஷம் முற்றிலும் பூணுவதற்குக் குறைந்த பட்சம் அரை மணி நேரமாகும் என்பதைக் கண்டேன்; ஒரு நிமிஷம் இன்னது செய்வதென்று தெரியாது திகைத்தேன்; உடனே ஒரு தீர்மானத்திற்கு வந்து, அவர்களிருவரையும் கூடிய சீக்கிரத்தில் வேஷம் தரிக்கும்படிச் சொல்லிவிட்டு, என் நண்பர்களாகிய ராஜகணபதி முதலியாரையும் துரைசாமி ஐயங்காரையும் அழைத்தது, நான் மேடையின் பேரில் போய் நாடகத்தை ஆரம்பிக்கிறேன், நீங்கள் இன்னின்ன மாதிரி கேளுங்கள், அதற்கு நான் இன்னின்னபடி பதில் உரைக்கிறேன் என்று கூறிவிட்டுப் பிள்ளையார் பாட்டு ஆனவுடன், குறித்த மணிப்பிரகாரம் திரையைத் தூர்க்கச்சொல்லிவிட்டு, அரங்கத்தின் மீது சென்று, கதையை ஒட்டிய தனிமொழி ஒன்றை ஆரம்பித்தவனாய், பிறகு மேற்சொன்ன இரண்டு ஆக்டர்களும் வர, அவர்களுடன் நாடகத்தின் கதை சம்பந்தமான சம்பாஷணை செய்து காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தேன். பிறகு கிருஷ்ணசாமி ஐயரும் ரங்கவடிவேலும் பக்கப்படுதாவண்டை வந்து நாங்கள் சித்தமாயிருப்பதாகத் தெரிவித்தவுடன், நாங்கள் மேடையை விட்டகன்றோம். உடனே அவர்கள் பிரவேசித்து, நாடகத்தில் நான் எழுதிய கதையின்படி ஆரம்பம் செய்தார்கள். அரங்கத்தின் மீது கால்மணி நேரம் வரையில் நடந்ததெல்லாம் நான் நாடகத்தில் எழுதிய பாகம் அல்ல, அந்தக்ஷணம் கற்பனை செய்தது என்பதை, நாடகம் பார்க்க வந்தவர்கள் அறிந்திலர்! அச்சமயம் இந்நாடகமானது அச்சிடாதிருந்தபடியால் இந்தக் கதை சாத்தியமாயிருந்தது; அச்சிட்டு, யாராவது படித்திருந்தால், நடந்த சூழ்ச்சி வெளியாயிருக்கும்! அக்காலத்தில் எப்படியாவது குறித்த மணிப்பிரகாரம் நாடகத்தை ஆரம்பஞ் செய்ய வேண்டுமென்று அவ்வளவு கஷ்டப்பட்டோம். இப் பொழுதும் அப்பெயர் கெடாதபடி எங்கள் சபையாரும், மற்ற சபையோர்களும் எல்லா நாடகங்களிலும் விளம்பரத்தில் குறித்த மணிப்பிரகாரம் ஆரம்பஞ் செய்வாரென வேண்டி இதை எழுதலானேன்.

இந் நாடகத்தின் இடையில் பஞ்சத்தினால் வருந்தும் ஜனங்களின் கஷ்டங்களை மௌனக்காட்சிகளாக (Tableau Vivantes) காட்டியது நன்றாயிருந்ததென்று மெச்சப்பட்டது. மேற்கூறியவைகளைவிட வேறு கவனிக்கத்தக்க விஷயங்கள் இந்நாடகத்தைப்பற்றி எனக்கொன்றும் ஞாபகமில்லை.

இந்நாடகமானது எங்கள் சபையோரால் மறுமுறை ஆடப் படவேயில்லை. அன்றியும் இதுவரையில் ஐந்து முறைதான், மற்றவர்களால் ஆடப்பட்டிருக்கிறது. இதுதான் நான் எழுதிய நாடகங்களுக்குள் மிகவும் குறைவாக ஆடப்பட்ட நாடகம். 

இந்த 1897ஆம் வருஷத்தில் தெலுங்கில் எங்கள் சபையார் அரிச்சந்திர நாடகத்தை ஆடினார்கள். பல்லாரி வக்கீல் ராகவாசார்லு அவர்கள் எங்கள் சபையில் தெலுங்கு பாஷையில் ஆடத்தொடங்குவதற்கு முன், தெலுங்கில் எங்கள் சபையார் ஆடிய நாடகங்களுக்குள் எல்லாம் இதுவே மிகச் சிறந்ததென நான் உறுதியாய்க் கூறக்கூடும். இந்நாடகமானது எங்கள் சபைக் காரியதரிசியாயிருந்த ஊ. முத்துக்குமாரசாமி செட்டியாரால் எழுதப்பட்டது. நாடக மேடையில் நாடகக் கம்பெனிகள் இக்கதையை ரசாபாசமாக நடத்துவது போலில்லாமல், தற்கால நாகரீகத்திற்கேற்றபடி ஒழுங்காய் எழுதியிருந்தார். இந்நாடகமானது மிகவும் சோபித்ததற்கு ஒரு முக்கியமான காரணம், கதாநாயகனும் கதா நாயகியும் தக்க ஆக்டர்களால் நடிக்கப்பட்டதே.

முன்பே நான் எனது நண்பர்களுக்கு எடுத்துக் கூறியுள்ள கே. சீனிவாசன் என்பவர் ஹரிச்சந்திரனாக மிகவும் நன்றாய் நடித்தார். இவர் உருவம் மிகவும் கம்பீரமானது; குரலும் கம்பீரமானது; மேடையில் நடிப்பதும் மிகவும் கம்பீரமாயிருக்கும்; இத்தகைய குணம் வாய்ந்தவர்ஹரிச்சந்திரனாக நடித்த பொழுது தக்க பெயர் பெற்றது ஆச்சரியமன்று. இவர் சங்கீதத்தில், மற்ற அரிச்சந்திரர்களைப்போல் அத்தனை பாட்டுகள் பாடா விட்டாலும், பாடியவரையில் மிகவும் ஸ்பஷ்டமாயும் திருத்தமாயும் பாடுவார். இந்நாடகத்தில் இவருக்கு சமானமாக அ. கிருஷ்ணசாமி ஐயர், சந்திரமதியாக நடித்தார். இந்நண்பர் ஆடிய பாத்திரங்களுள் சந்திரமதியானது ஒரு மிகச் சிறந்ததென்றே கூற வேண்டும். தமிழ் பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் கதாநாயகியாக நடித்துப் பெயர் பெற்றவர் இவர் ஒருவரே. இவர் தெலுங்கு பாஷையில் பேசும் பொழுது தமிழ் உச்சரிப்பு ஒன்றும் வராது; தமிழில் பேசுங்கால் தெலுங்கு சப்தம் கொஞ்சமும் கலக்காது. இவருடைய சங்கீதமானது நான் முன்பே குறித்தபடி முதல் தரமானது. எங்கள் சபையில் ஸ்திரீ வேஷம் தரிப்பவர்களுக்குள் இவருடைய சங்கீதத்தைவிட மேலானதை நான் கேட்டதில்லை. இனி கேட்கவும் போகிறதில்லையென நம்புகிறேன். நாடக மேடையில் நின்று இவர் பாடும்கால், அவருக்குள்ள ஒரு பெரும் அருமையான குணத்தை இங்கெடுத்துக் கூற விரும்புகிறேன். சாதாரணமாக நூற்றில் தொண்ணுற்றொன்பது பெயர் மேடையில் பாடும் பொழுது, வசனத்தை நிறுத்தி, சற்றுத் தாமதித்து, ஸ்ருதியுடன் தங்கள் குரல் கலக்கிறதா என்று பார்த்துக் கொண்டு, பிறகு ஆரம்பிப்பது வழக்கம். இவர் ஒருவர்தான், நான் அறிந்த வரையில், பேசிக்கொண்டேயிருக்கும் பொழுது, சற்றும் தாமதிக்காமலும் தொண்டையைக் கனைத்துக் கொள்ளாமலும், பக்கவாத்தியக்காரர்கள் ஆரம்பிக்கிறார்களா என்று கவனிக்காமலும், நடித்துக் கொண்டிருக்கும் மனோபாவத்தைக் கொஞ்சமேனும் குறைக்காமலும், உடனே சங்கீதத்தை ஆரம்பிப்பவர்; எங்கு வசனம் முடிகிறது, எங்கு சங்கீதம் ஆரம்பிக்கிறது என்று கேட்பவர் சந்தேகிக்கும்படியாக அவ்வளவு துரிதமாய் ஆரம்பிப்பார். தற்காலத்தில் பெயர் பெற்ற பாடகர்கள் என்று நாடக மேடையில் வரும் சில ஆக்டர்கள், தாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பேச்சை நிறுத்தி விட்டு, தொண்டையைக் கனைத்துக்கொண்டு, மேடையின் பேரில் இருக்கும் ஹார்மோனியம் வாசிக்கும் பக்க வாத்தியக்காரனிடம் போய் நின்றுகொண்டு, உம் என்று குரல் எழுப்பி, நடிக்க வேண்டிய பாவம் கொஞ்சமும் முகத்தில் இல்லாதவர்களாகிப் பாட ஆரம்பிப்பதைக் கண்டவர்கள், எனது நண்பராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் அக்காலங்களில் மேடையில் பாடும் திறத்தைக் கண்டிருப்பார்களாயின், அதன் அருமை அவர்களுக்கு விளங்கியிருக்கும். இவருக்கு, தற்காலம் என்னைப் போல் வயதாகியும் தேகம் தளர்ந்த போதிலும், குரலின் இனிமையும் பாடும் சக்தியும் குன்றவில்லை யென்றே நான் கூற வேண்டும். கடுகு செத்தாலும் காரம் போகாதல்லவா? (என் நண்பர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருப்பாராக!) இவர் இச் சந்திரமதி வேஷத்தைப் பன்முறை எங்கள் சபையில் பூண்டிருக்கின்றனர். அம்முறைகளிலெல்லாம், ஸ்மசானத்தில் இவர் சந்திரமதியாகப் புலம்பும் காட்சிகள் வரும்தோறும், கண்ணீர் விடாதார் ஒருவருமில்லையென்றே சொல்ல வேண்டும். இந்நாடகத்தை முதல் முறை எங்கள் சபையார் நடித்தபொழுது, வந்திருந்த ஜனங்களெல்லாம் மிகவும் நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்தபடியால், மறுவாரமே இதை மறுபடியும் ஆடினோம். எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் முதல் நாடகத்திற்கு வந்ததைவிட இரண்டாம் தரம் அதிக ஜனங்கள் வந்திருந்தனர்; இது இந்நாடகத்தை ஆடின பெருமைக்கு ஒரு அத்தாட்சியாகும். இந்நாடகமானது, கே. ஸ்ரீனிவாசன் என்பவர் எங்கள் சபையைவிட்டு நீங்கிய வரையில் பன்முறை நடிக்கப்பட்ட போதிலும், அதன் பிறகு, அவ்வளவாக நடிக்கப்படவில்லை. தமிழ் பாஷையில் நடிக்கப்பட்டதைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

இதே வருஷம் நான் தமிழில் எழுதிய “சத்ருஜித்” என்னும் நாடகம் நடிக்கப்பட்டது. இதைப்பற்றி நான் சற்று விவரமாய் எழுத வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் “குருட்டுப் பேராசை” (Blind Ambition) என்கிற மற்றொரு பெயர் கொடுத்தேன்; பேராசையால் ஒருவனுடைய கண்கள் மழுங்கிப் போகின்றன என்பது இதன் அர்த்தம்; மேலும் கதாநாயகன், அரசனாக வேண்டும் என்னும் பேராசையால், தன் சொந்த மனைவி மக்களைத் துறந்து, அரச குமாரியை மணந்து, பிறகு தன் இரு கண்களையும் இழந்து அந்தகனாகினான் என்பதையும் ஒரு விதத்தில் ருசிக்கும்படி, இப் பெயரை இந் நாடகத்திற்குத் தந்தேன்.

இந்நாடகத்தை நான் எழுதியதற்குக் காரணம் அடியிற் கண்டவாறு:

இவ் வருஷம் சென்னைக்கு, பம்பாயிலிருந்து ஒரு பாரசீக நாடகக் கம்பெனியர் வந்து, எஸ்பிளநேடில் (Esplanade) சில வருஷங்களுக்கு முன் நாடகக் கொட்டகை இருந்த இடத்தில், ஒரு பெரிய கொட்டகை போட்டு, அதில் இடைவிடாது மூன்று மாத காலம், ஹிந்துஸ்தானி பாஷையில் நாடகங்களை ஆடினார்கள். இந்த மூன்று மாதமும் ஏறக்குறைய ஒரு நாள் தவறாது ஆயிரக்கணக்கான ஜனங்கள் இவர்களது நாடகங்களைப் பார்த்து வந்தனர். அநேக தினங்களில் டிக்கட்டுகள் அகம் படாமற் போயின. சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமை களிலும் காலையிலேயே டிக்கட்டுகள் வாங்காவிட்டால், நாடகம் பார்க்க முடியாதிருந்தது. இத்தனைக்கும் இவர்கள் நாடகமாடிய பாஷை இந்துஸ்தானி; சென்னையிலுள்ள பெரும்பாலர்க்கு இப்பாஷையே அர்த்தமாகாதது; இருந்தும், அது வரையில் நாடகங்களைப் பார்க்க விருப்பமில்லாதவர்கள் உட்பட, சென்னையில் ஆண் பெண் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்ததற்குக்காரணமென்னவென்று கண்டறிய வேண்டுமென்று, நானும் இவர்களது முக்கியமான நாடகங்க்ளை யெல்லாம் போய்ப் பார்த்தேன். இதற்குக் காரணங்கள் பல உண்டெனக் கண்டறிந்தேன். இப்பாரசீக நாடகக் கம்பெனியார் சென்னையில் நாடகாபிமானிகள் மனத்தில் ஒரு பெரும் குழப்பத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணினதுமன்றி, தென் இந்திய மேடைக்கே பல சீர்திருத்தங்கள் உண்டு பண்ணினர். ஆதலின், இவர்களால் தென்னிந்திய மேடை அடைந்த சீர்திருத்தங்களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுதுகிறேன்.

முதலாவது, இவர்கள் குறித்த மணிப் பிரகாரம் நாடகங்களைத் தவறாமல் ஆரம்பிப்பார்கள். இன்னின்ன நாடகங்களுக்கு இத்தனை மணி என்று ஏற்படுத்தி அதன் பிரகாரம் முடிப்பார்கள். அன்றியும் ஒவ்வொரு நாடகத்திற்கும் இரண்டோ மூன்றோ அவகாசங்கள் (Intervals) என்று ஏற்படுத்தி அதன் பிரகாரம் கொடுக்கும் அவகாசங்களன்றி, காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் வேறு அவகாசமே கிடையாது. இவர்கள் சென்னைக்கு வருவதற்கு முன்பாக, எல்லா நாடகச் சபைகளிலும் கம்பெனிகளிலும் (எங்கள் சபை உட்பட), ஒவ்வொரு காட்சிக்கும் பிறகு அவகாசம் கொடுப்பது வழக்கம். இப்படிச் செய்வதனால் நாடகத்தை முடிக்கும் காலம் நீடிக்கும். அன்றியும் மிகுந்த ரசமான பாகங்கள் வரும்பொழுது, காட்சிக்குக் காட்சி நீடித்த அவகாசத்தைக் கொடுப்பதனால், அந்த ரசத்திற்குக் குறை உண்டாகிறது. இக்குற்றத்தைப் போக்க வழிகாட்டியவர்கள் இப்பாரசீக நாடகக் கம்பெனியாரே. இவர்கள் சென்னைக்கு வந்து போனபிறகு, இவர்களைப் பார்த்து சில நாடகக் கம்பெனியார் இதன்படி நடக்க முயன்றனர்; எனினும், இக்குறை தென் இந்திய நாடக மேடையை விட்டு இன்னும் அகலவில்லை. எங்கள் சபையிலும் சில நாடகங்களில் இவ்வாறு அதிக அவகாசமின்றி நடத்தியபோதிலும், ஏனைய நாடகங்களில் பழையபடிதான் நடந்து வருகிறது. இதைக் கவனித்து இனியாவது எங்கள் சபையோரும் ஏனையோரும் இதனைப் பரிஹரிப்பார்களாக. இதைச் செய்வது கடினமல்ல; நாடகம் எழுதும் பொழுதே, நாடகக் கர்த்தா இதன்மீது ஒரு கண்ணுடையவனாய், அரங்க மேடையில் அதிக ஏற்பாடுகள் செய்ய வேண்டிய ஒரு காட்சிக்குப் பின், வெறும் திரையுடன் நடத்த வேண்டிய காட்சியொன்று எழுதி, இவ்வாறு மாற்றிமாற்றி எழுதிக்கொண்டு போனால், இது சுலபமாய் முடியும்; அன்றியும் கண்டக்டர்கள் பெரிய நாடகங்களை ஆடுவதற்காகச் சுருக்கும் பொழுது இதைக் கவனித்துச் சுருக்கினால், நலமாயிருக்கும்.

இரண்டாவது, இப் பராசீகக் கம்பெனியார், நாடகக் காட்சி ளைத் தக்கபடி காட்டுவதில் சிறப்புற்றிருந்தனர். ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றபடி அரங்கத்தை ஏற்படுத்துவார்கள். இதற்கு முன்பாக இருந்த, சகுனிராஜன் துரியோதனராஜனிடம் அந்த ரங்கமாய்ப் பேசும் காட்சியில், ஒரு தெருப் படுதாவை விட்டு, அந்தத் தெருவின் மத்தியில், துரியோதனனுக்கும் சகுனி ராஜனுக்கும் இரண்டு பென்ட்வுட் (Bentwood) நாற்காலிகள் போட்டிருக்கும்படியான ஆபாசங்கள் எல்லாம் இவர்களிடம் கிடையா. ஒரு பூந்தோட்டமோ, அரசியின் அந்தப்புரமோ, கடுங்கானகமோ, யுத்தக்களமோ காட்டுங்கால், அவ்வவற்றிற்கேற்றபடி, ஏராளமான பொருள் செலவழித்து தக்கபடி ஏற்பாடு செய்வார்கள். இவர்களுக்குப் பிறகுதான், தென் இந்திய மேடையில் இவ்வாறு செய்ய வேண்டியது உசிதம் என்பது, நாடகக் கம்பெனிகளுக்கும் சபைகளுக்கும், மனத்தில் உதித்தது என்றே நான் சொல்ல வேண்டும். ஆயினும் இத்தனைவருஷங்களாகியும், இவ்விஷயத்தில் நூற்றுக்கு ஐந்து பாகம்தான் சீர்திருத்தப்பட்டதென்றும், இன்னும் 95 பாகம் சீர்திருத்த வேண்டுமென்பதும் என் திடமான அபிப்பிராயம். இப் பாரசீகக் கம்பெனியாரின் காட்சி ஏற்பாடுகளை (Scenic arrangements) பார்ப்பதற்கே பாதிப்பெயர்டிக்கட்டுகள் வாங்கிக்கொண்டு போனார்கள் என்று நான் சொல்ல வேண்டும். அன்றியும் இக்காட்சி ஏற்பாடுகளில், பக்கத் திரைகளும் (side wings) மேல் தொங்கட்டங்களும் (Flies) காட்சிக்காக விடப்பட்டிருக்கும். முக்கியமான திரைக்கு ஒத்திருக்க வேண்டும் என்னும் விஷயம், தென் இந்திய மேடையானது இவர்களிடமிருந்துதான் கற்றது. இதற்கு முன் அரங்கத்தின் மத்தியில் அடர்ந்த காட்டுப் படுதா விட்டிருக்கும் பக்கங்களில் மஹா ராஜாவின் தர்பாருக்குரிய இரண்டு தூண்கள் நிற்கும். மேலே வெல்வெட் (Velvet) ஜாலர்கள் விட்டிருக்கும்! அல்லது இந்திரன் கொலுவிற்காக, அரங்கத்தில் தர்பார் திரை விட்டிருக்கும். பக்கங்களில் மரங்களின் பக்கப் படுதாக்கள் இருக்கும். மேலே காட்டு ஜாலர் விட்டிருக்கும்! இப்படிப்பட்ட ஆபாசங்கள் தவறென்றும், அவற்றை நிவர்த்திக்கும் மார்க்கம் இப்படியென்றும் காட்டினவர்கள் இப்பாரசீகக் கம்பெனியாரே. இவர்களுக்குப் பிறகுதான், ஒவ்வொரு படுதாவிற்கும் ஏற்றபடி, பக்கப் படுதாக்களும் ஜாலர்களும் இருக்க வேண்டுமென்று தென் இந்திய மேடை அறிந்தது; ஆயினும் இன்னும் இதை முற்றிலும் அறியவில்லையென்றே நான் கூற வேண்டும்; ஏனெனில், இப்படிப்பட்ட ஆபாசங்கள் இன்னும் அநேக நாடக மேடைகளில் தற்காலத்திலும் காணலாம்.

மூன்றாவது, இம்மாதிரியான சீர்திருத்தம் நாடகப் பாத்திரங்களின் உடைகளிலும் இப்பாரசீகக் கம்பெனியார் செய்தனர். எந்தெந்த நாடகப் பாத்திரம் எப்படி எப்படி உடை தரிக்க வேண்டுமோ அதன்படி தரிக்கச் செய்வதில் மிகவும் கண்டிதமாயிருந்தனர். எவ்வளவு சிறந்த ஆக்டராயிருந்த போதிலும், அவன் வறிஞனாய் வரவேண்டியிருந்தால், கிழிந்த பிச்சைக்காரனுடையையே தரிப்பான்; ஸ்திரீ வேஷங்களிலும் அப்படியே. தற்காலத்தில் ஹரிச்சந்திரனாக ஸ்மாசனக் காட்சியில் வரவேண்டிய ஆக்டர்கள் விலையுயர்ந்த சம்கி (Chamki) உடுப்புகளையும், கம்பளத்திற்குப் பதிலாக சரிகைச் சால்வையும், காக்கும் மூங்கில் தடிக்குப் பதிலாக வெள்ளித்தடி யும் பூண்டு வருகின்றனரே, அம்மாதிரியான ஆபாசங்கள் அவர்களிடமில்லை . இப்பாரசீகக் கம்பெனியார் இந்தச் சீர்திருத்தம் கற்பித்தும் தென் இந்திய மேடையில், மேற்சொன்னபடியான ஆபாசங்கள் இன்னும் பரவி நிற்பது, வியசனிக்கத்தக்க விஷயம்.


இப்பாரசீகக் கம்பெனி தென் இந்தியாவுக்குக் கற்பித்த இன்னொரு விஷயம், மாறும்படியான காட்சிகளே (Transformation scenes). அரங்கத்தில் திடீரென்று ஒரு காட்சி மற்றொரு காட்சியாக மாறுவதேயாம்; ஒரு தர்பார் கானகமாகவோ, அல்லது ஒரு காடு ஒரு பூஞ்சோலையாகவோ, இப்படி ஒரு காட்சி மற்றொரு காட்சியாக க்ஷணநேரத்தில் மாறும்படியான சூட்சுமம் இவர்களிடமிருந்துதான் முதன் முதல் தென் இந்திய மேடையானது கற்றுக் கொண்டது என்று சொல்ல வேண்டும்.


இவர்களிடமிருந்து நாம் கற்றது இன்னொன்று ஆங்கிலேய பாலெட் (Ballet) என்று செல்லப்பட்ட பத்துப் பன்னிரண்டு சிறுவர்களோ சிறுமிகளோ நாடகமேடையில் நடனமாடுவதாம். கடைசியாக இவர்கள் செய்த இன்னொரு புது வழக்கம் என்னவெனில் பக்க வாத்தியக்காரர்களை (Orchestra) நாடகமேடையில் பக்கப் படுதாவின் பக்கம் வைக்காமல், அரங்கத்திற்கெதிரில் சபையோர் முன்பாக வைத்ததேயாம். நாடக மேடைக்குள்ளிருந்தால் சாதாரணமாகப் பக்க வாத்திய மானது வெளியில் நன்றாய்க் கேட்பதில்லை. இப்படி வெளியிலிருக்கும்பொழுது சபையோருக்குப் பக்க வாத்தியம் நன்றாய்க் கேட்கும்படியானதாயது. இப்புது வழக்கத்தைச் சில கம்பெனியார் கைப்பற்றியபோதிலும், சிலர் பழைய மாமூலையே அனுசரிக்கின்றனர். இவ்விரண்டு வழக்கங்களையும் விட்டு ஆர்மோனியப் பெட்டியை மேடையின்மீது அரங்கத்திலேயே இப்பொழுது பல நாடகக் கம்பெனிகளில் வைப்பது எல்லாவிதத்திலும் ஆபாசமாம். இதைப்பற்றிப் பிறகு நான் கொஞ்சம் எழுத வேண்டி வரும்.

மேற்சொன்ன சீர்திருத்தங்களை உடையவர்களாயிருந்த படியாலும், பழைய கதைகளை விட்டு சற்றேறக்குறைய புது நாடகங்களையே இவர்கள் ஆடியபடியாலும், இக்கம்பெனி யின் ஆக்டர்களெல்லாம் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு ஒத்து உழைத்தபடியாலும், ஏறக்குறைய எல்லா ஆக்டர்களும் பாட்டிலும் நடிப்பதிலும் சாமர்த்திய முடையவர்களாயிருந்த படியாலும், இவர்கள் சென்னையில் நாடகாபிமானிகளையெல்லாம் சந்தோஷிப்பித்து ஏரளமான பொருள் சம்பாதித்தது ஆச்சரியமன்று.


இக்கம்பெனியினால் ஆடப்பட்ட எல்லா நாடகங்களையும், ஒன்றும் விடாது ஒரு முறையாவது பார்த்தேன்; சிலவற்றை இரண்டு மூன்று முறை பார்த்தேன். இதனால் இவர்கள் நாடகமாடும் ஒழுங்குகளெல்லாம் என் மனத்தில் நன்றாய்க் குடிகொள்ளவே, இவர்கள் நடிக்கும் நாடகம்போல் ஒன்றை எழுத வேண்டுமென்று உந்தப்பட்வனாய் “சத்ருஜித்” அல்லது பிளைண்ட் ஆம்பிஷன் (Blind Ambition) என்னும் நாடகத்தை இவ்வருஷம் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் எழுதி முடித்தேன். இந்நாடகமானது எங்கள் சபையோரால் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ஆடப்பட்டது.

இந்நாடகத்தில் வீடு தீப்பற்றியெரியும் காட்சி, சிறைச் சாலையை உடைத்துக்கொண்டு வெளியே போகும் காட்சி, ப்ரவாகமாக ஓடும் ஆற்றில் நீந்திச் செல்லும் காட்சி, தூக்குமரக் காட்சி, மண்டபம் உடைந்து விழும் காட்சி முதலிய காட்சிகளை நிரப்பி எழுதினேன். இதற்குத் தகுந்த ஏற்பாடுகளையும் அப்புவைக் கொண்டு செய்து வைத்தேன். ஒத்திகைகளையெல்லாம் நடத்தி நாடகதினமானது ஒரு வாரமோபத்து நாளோ இருக்கும் சமயத்தில் நடந்த ஒரு விந்தையைக் கூறுகிறேன். சில தினங்களாக இந்நாடகத்தை ஒத்திகை செய்யும் பொழுது ஆக்டர்கள் ஒருவாறாக ஒத்திகை சரியாக நடத்தவில்லை. இதற்குக் காரணம் என்னவென்று நான் மெல்ல ரகசியமாய் விசாரித்த பொழுது, ஆக்டர்களில் பெரும்பாலார் என் மீது அதிருப்தியுடையவர்களாய், தாங்கள் எடுத்துக் கொண்ட பாகங்களை ஒருநாள் எல்லோரும் திருப்பிக் கொடுக்கப் போகிறதாக நிச்சயித்திருப்பதாக அறிந்தேன்! இதையறிந்தவுடன் இவர்கள் என்மீது எதற்காக வெறுப்புற்றிருக்கின்றனர் என்று அவர்களைக் கேட்டு, அக்காரணங்களை நீக்கி அவர்களைச் சமாதானம் செய்ய வேண்டியது என் கடமையன்றோ ? அப்படிச் செய்யாமல், என் யௌவனத்தின் கொழுப்பில் (அப்பொழுது எனக்குச் சரியாக வயது 24) “ஆஹா! அப்படியா செய்யத் தீர்மானித்திருக்கிறார்கள்! நானும் ஒரு கை பார்த்து விடுகிறேன்!” என்று பிடிவாதம் கொண்டவனாய், யார் யார் வேண்டாமென்று விடப் போகிறார்கள் என்று என் மனத்திற்பட்டதோ அவர்களுடைய பாத்திரங்களுக்கு வேறு ஆக்கடர்களை ரகசியமாகச் சித்தம் செய்து வைத்திருந்தேன். நாடகம் போடுவதற்குக்குறிக்கப்பட்ட நாளுக்கு ஒரு வாரமோ பத்து நாளோ முன்னதாக ஒரு தினம், இந்த ஆக்டர்களெல்லாம் ஒவ்வொருவராக என்னிடம் வந்து, ஏதோ ஒவ்வொரு சாக்கைச் சொல்லி, தங்களால் இந்த நாடகத்தில் ஆட முடியாதென்று தங்கள் பாகங்களை என்னிடம் திருப்பிக் கொடுத்தனர். ஏன் இப்படிச் செய்கிறாய் என்று ஒருவனையும் கேளாது, புன்னகையுடன் அவர்கள் பாகங்களை வாங்கிக் கொண்டு, சபையின் நோட்டீசுகள் ஒட்டும் பலகையிலிருந்த அவர்கள் பெயரை ஒவ்வொன்றாய் அடித்து, முன்பே நான் நியமித்திருந்த இதர ஆக்டர்களின் பெயரை எழுதிக் கொண்டே வந்தேன்! இவ்வாறு செய்வான் என்று அவர்கள் கொஞ்சமும் எதிர்ப்பார்த்தவர்களல்ல. ஆகவே என் செய்கையானது அவர்களுக்கு என் மீது முன்பைவிட அதிகக்கோபத்தையுண்டு பண்ணியது போலும். பிறகு இரண்டு மூன்று நாள் புதிய ஆக்டர்களுடன், ஒன்றும் நடவாதது போல், பழையபடி ஒத்திகைகளை நடத்தி வந்தேன். நாம் எல்லாம் கைவிட்டால் இவன் எப்படி நாடகத்தை நடத்துவான் என்று எண்ணியிருந்தவர்கள், தாங்கள் இன்றியே நாடகம் நடை பெறும் போலிருக்கின்றதேயென்று பயந்தவர்களாய், கடைசியாக ஒரு யுக்தி செய்து பார்த்தார்கள். நாடகத்திற்கு இன்னும் நாலைந்து நாள்தான் இருக்க, ஒரு நாள் நான் கையில் வைத்துக்கொண்டு ஒத்திகை நடத்தும், என் கையழுத்துப் புஸ்தகம் காணாமற் போயிற்று! அக்காலத்தில் இந்நாடகமானது அச்சிடப்படவில்லை; என் கையெழுத்துப் புஸ்தகம் ஒன்றுதான் இருந்தது. இதைப்பார்த்து ஆக்டர்களெல்லாம் தங்கள் தங்கள் பாகங்களை எழுதிக்கொண்டனர். என்னுடைய சொந்த பாகத்தை இதினின்றும் நான் படித்துக் கொண்டிருந்தேன். இது காணாமற் போனால் நான் ஒத்திகைகளை எப்படி நடத்துவது? நாடகதினம் நாடகத்தை எப்படி நடத்துவது? நான் செய்த தப்பிதத்திற்கு முதல் பிராயச்சித்தம் உடனே கிடைத்தது. புஸ்தகம் காணாமற் போகவே இடி விழுந்தவன் போல் ஆனேன்! யாரைக் கேட்டபோதிலும், புஸ்தகம் என்னவாயிற் றென்று தங்களுக்குத் தெரியாதென்று சொன்னார்கள். என் மீது வெருப்புக் கொண்டவர்களுள் ஒருவன்தான் இதைச் செய்திருக்க வேண்டுமென்று என் மனத்தில் திடமாய்ப் பட்டபோதிலும், நான் யாரிடம் போய் நீதான் செய்திருக்க வேண்டுமென்று கேட்பது? நான் மனத்தில் அடங்காக் கோபமும் துயரமும் கொண்டேனாயினும், வெளிக்கு அதைக் காட்டாமல், “சரிதான், அப்புஸ்தகம் காணாமற் போனாலென்ன? ஒன்றும் கெட்டுப் போகவில்லை” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டேன். அன்றிரவெல்லாம் ஏறக்குறைய நான் தூங்கவேயில்லை யென்றே சொல்ல வேண்டும்! என்னிடமுள்ள என்ன குற்றங்களினால், எனது நண்பர்கள், மேலே கூறியபடி என்னைக் கைவிடச் செய்தேனோ, அதற்கு இரண்டாவது பிராயச்சித்தம் அன்றிரவு அனுபவித்தேன். என் நாடக புஸ்தகத்தைத் திருடினவனைக் கண்டு பிடித்துப் பழி வாங்குவது.அப்புறமிருக்கட்டும். இப்பொழுது நாகடத்தை எப்படி நடத்துவது என்பதுதான் எனக்குப் பெருங் கவலையைத் தந்தது. கடைசியில் ஒன்றும் தோன்றாதவனாய், எல்லாம் வல்ல கடவுள்மீது பாரத்தைச் சுமத்தினவனாய்க் கொஞ்சம் தெளிவடைந்தவனாய், என் காலைக் கடனை முடித்து, பிறகு கடவுளைத் தொழுதுவிட்டு நான் இப்பொழுது உட்கார்ந்து கொண்டு எந்த மேஜையின் மீது இந்நாடக மேடை விளைவுகளை எழுதுகிறேனோ, அதே மேஜையின் அருகில் உட்கார்ந்து, நான் எழுதிய நாடகத்தை மறுபடியும் எழுதவாரம்பித்தேன்! அப்பொழுது எனக்கு நல்ல ஞாபகசக்தி இருந்தகாலம்; அன்றியும் பன்முறை இந்நாடகத்தை ஒத்திகை நடத்தியிருந்தபடியால், ஏறக்குறைய எல்லா வசனமும் எனக்கு ஞாபகமிருந்தது. இரண்டு மணி சாவகாசத்தில் இரண்டு மூன்று காட்சிகளை இவ்வாறு எழுதி முடித்துக்கொண்டிருந்தேன்; அப்பொழுது எதிர்ப்பட்சம் சார்ந்த என் நண்பர்களில் ஒருவர் (இவர்தான் என் கையெழுத்துப் புஸ்தகத்தை அபகரித்தவர் என்று இதை வாசிக்கும் நண்பர்கள் இனி அறிவார்கள்); மெல்ல என்னிடம் வந்து உட்கார்ந்து, “என்ன செய்கிறாய் சம்பந்தம்?” என்று கேட்டார்; எனக்கு இவர்மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தபோதிலும், அதை வெளிக்குக் காட்டாமல், “ஒன்றுமில்லை, காணாமற்போன நாடகத்தை மறுபடியும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று காட்சிகள் எழுதியாயது; மற்றவைகளையும் இன்று சாயங்காலத்திற்கு முன் எழுதி முடித்து விடுவேன்!” என்று பதில் கூறிவிட்டு எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு கொஞ்ச நேரம் ஏதோ மற்ற விஷயங்ளைப் பற்றிப் பேசிவிட்டு, இவர் சென்றனர். அன்று சாயங்காலம் நான் சபைக்குப் போகுமுன், எங்கள் சபை பில் கலெக்டர், தான் சாலை வீதியில் போய்க் கொண்டிருந்த பொழுது அகஸ்மாத்தாய் எனது நாகடக் காகிதங்கள் அவனுக்குக் காணப்பட்டதாகக் கூறி அக் காகிதங்களை என்னிடம் கொடுத்தான்! இவன் சொன்னது நம்பத்தக்கதா இல்லையா என்று சற்றும் யோசியாதவனாய், அம்மட்டும் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டவனாய், இறைவனின் அருளைப் போற்றிவிட்டு, வழக்கம் போல் ஒத்திகை நடத்தினேன். இதற்குப் பிறகு சுமார் ஆறுமாதம் பொறுத்துத் தான் . நடந்த உண்மையை அப் பில் கலெக்டரிமிருந்து அறிந்தேன். அவனை அழைத்து அந்தரங்கமாய், ‘நடந்த உண்மையைச் சொல், இதனால் உனக்கு ஒரு கெடுதியும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று நான் வாக்களித்த பின்தான், அவன் என் காகிதங்களை அபகரித்தவர் இன்னாரென்றும் அவர் மறுநாள் என்னிடம் வந்து நான் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, இனித் தங்கள் ஜபம் சாயாது என்று கண்டவராய்த் தன்னை அழைத்து, தன் பெயரை வெளியிடக் கூடாதென்று கட்டளையிட்டு, அக்காகிதங்கள் அகஸ்மாத்தாய் சாலைத் தெருவில் தனக்குக் கிடைத்ததாகச் சொல்லி என்னிடம் கொடுக்கும்படிச் செய்ததாக ஒப்புக் கொண்டான். நான் அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி அந் நண்பரை'ஏன் இப்படிச்செய்தாய்?’ என்று அவர் உயிருள்ளளவும் கேட்கவில்லை . அவர் மடிந்து போன பிறகும், இன்றளவில் இவ்விருத்தாந்தத்தை என் நண்பர்களுக்குப் பன்முறை கூறிய போதிலும், அவர் பெயரை மாத்திரம் வெளியிட்டவனன்று; ஆகவே இந் நாடக மேடை நினைவுகளிலும் அவரது பெயரை வெளியிடாததற்காக இதை வாசிக்கும் எனது நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக.

நான் சில வருஷங்கள் நியாதிபதியாயிருந்திருக்கிறேன். ஆகவே இவ்விஷயத்தில் யார் யார்மீது என்ன குற்றம் என்று தீர்மானிக்க விரும்புகிறேன். இவ்விஷயத்தைக் குறித்து நிஷ்பட்சமாக யோசிக்குமிடத்து, முதலாவது என்மீது குற்றம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில், எனது நண்பர்களுள் பலர் என்னை வெறுக்கும்படியாக என்னிடம் ஏதாவது தப்பிதம் இருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் நான் என்ன குற்றஞ் செய்திருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்க்குமிடத்து, எனது ஆக்டர்களை நான் ஒத்திகைகளில் அதிகமாகக் கஷ்டப்படுத்தியிருக்க வேண்டுமெனத் தோற்றுகிறது; அவர்கள் மீதெல்லாம் அடிக்கடி அதிகக் கோபங் கொள்வது அக்காலத்தில் எனக்கு சுபாவமாக இருந்தது; ஒத்திகைக்கு வராவிட்டால் கோபங்கொள்வேன்; நாழிகை பொறுத்து வந்தால் கோபித்துக் கொள்வேன்; பாடம் சரியாகப் படிக்காவிட்டால் கோபித்துக் கொள்வேன்; எந்தச் சிறிய பிழைக்கும் அதிகக் கோபங்கொள்வேன். அப்பிழைகளையெல்லாம் பொறுக்க வேண்டுமென்பதல்ல; பிழைகளை எடுத்துக் காட்டுவதில் சாந்தமாயும் நியாயமாயும் காட்டலாமல்லவா? அந்த நற்குணம் என்னிடம் அப்பொழுது சிறிதும் இல்லாதிருந்தது. இதனால் எனது நண்பர்கள் பலருக்கு நான் மனவருத்தம் உண்டுபண்ணியிருக்க வேண்டுமென்பது திண்ணம்; இரண்டாவது, இந்த மேற்சொன்ன குற்றத்தை நான் ஒப்புக்கொண்டபோதிலும் எனது நண்பர்கள் அதை எனக்கு வெளிப்படையாய்க் கூறி, எனக்குப் புத்திமதி கூறாது, நாகடத்தில் ஒருங்கு சேர்ந்து நாங்கள் ஆடமாட்டோம் என்று கூறியது அவர்கள் மீது குற்றமாம்; அப்படிச் செய்திருப்பார்களாயின் நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டு, அவர்கள் மன்னிப்பைக் கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன்; மூன்றாவது, எனது நண்பர்கள் அப்படி மாட்டோம் என்று தங்கள் பாகங்களை என்னிடம் கொடுத்த பொழுது, நான் அவர்களை ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும். இது என் குற்றமாம்; அவர்களாகக் காரணம் கூறாமலிருக்கும்பொழுது நாம் ஏன் அவர்களைக் கேட்க வேண்டும் என்ற மனோபாவம் எனக்கு வந்திருக்கக் கூடாது. நான்காவது, அப்படி நான் கேளாமற் போனதிலும், சபையின் நன்மையைக் கருதாது, என் நாடகக் காகிதங்களை அபகரித்தது அவர்கள் தவறாகும்.

இனி இந்த சத்ருஜித் நாடகம் முதன் முறை நடிக்கப் பட்டதைப்பற்றிக் கொஞ்சம் எழுதுகிறேன். இந்நாடகத்தில் முக்கிய ஸ்திரீ பாகங்கள் இரண்டாம். இந்திரசேனை, சதீமணி. இந்திரசேனையின் பாகம் அ. கிருஷ்ணசாமி ஐயருக்கு முதலில் கொடுத்திருந்தது. அவர் வேண்டாமென்று திருப்பிவிடவே, சாது கணபதி பந்துலு அவர்களுக்குக் கொடுத்தேன்; இவர் பாடாவிட்டாலும், தன் வசனத்தை நன்றாய் நடித்தார். இரண்டாவது ஸ்திரீ பாகமாகிய சதீமணியின் வேஷத்தில் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு மிகவும் நன்றாய் நடித்தார் என்று அனைவரும் சொல்லக் கேட்டேன். சோக பாகத்தில் இவருக்கு நன்றாய் நடிக்கும் சக்தியுண்டென்பதை இந்நாடகத்தில்தான் கண்டேன். ஹாஸ்ய பாகத்தில் ச. ராஜகணபதி முதலியார் கஜவதனனாக மிகவும் நன்றாய் நடித்தார். இந்தப் பாத்திரம் இவருக்கென்றே எழுதப்பட்டதென்பதை, கஜவ தனன் என்கிற பெயர் அப்பாத்திரத்திற்கிட்டதனாலேயே எனது நண்பர்கள் அறிவார்கள். இவருடன் கூட வரும் விசாகதத்தன், விதேகதத்தன் பாத்திரங்கள் முதலில் எம். துரைசாமி ஐயங்காருக்கும், ஷண்முகப்பிள்ளைக்கும் கொடுத்திருந்தது. அவர்கள் வேண்டாமென்று திருப்பிவிடவே, ஒன்றை குப்புசாமி முதலியார் என்பவருக்குக் கொடுத்தேன். மற்றொன்றிற்குத் தகுந்த ஆசாமி யாரும் கிடைக்காது நான் திகைத்துக் கொண்டிருக்கும் தருவாயில், நாடகமேடையில் அதிகப் பயிற்சியில்லாதிருந்த போதிலும், எனது தமயனார் ப. ஆறுமுக முதலியார், “நீ பயப்படவேண்டாம். அதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி, எனக்குக் கைகொடுத்துத் தூக்கினார். “தம்பி யுள்ளவன் படைக்கஞ்சான்” என்னும் பழமொழியொன்றுண்டு; என் அளவில் இப்படிப்பட்ட “அண்ணன் உள்ளவன் எதற்கும் அஞ்சான்” என்று மாற்ற வேண்டும் அப்பழைய மொழியை! அந்தப் பாகத்தை எடுத்துக்கொண்டு, தனக்கு ஞாபகசக்தி கொஞ்சம் குறைவாயிருந்தபோதிலும், கஷ்டப்பட்டுப் படித்து, நாடக தினத்தில் நன்றாய் நடித்தார் என்றே நான் கூற வேண்டும். இதுவரையில் தமிழ் மேடையின்மீதே ஏறியறியாத ஆங்கிலத்தில் பிரபல ஆக்டர் என்று பெயர் பெற்ற எம். சுந்தரேசையர் பி.ஏ., இந்நாடத்தில் முதற் காட்சியில் போஜேந்திரனாக நடித்தார். அன்றியும் பிற்காலம் எங்கள் சபையில் பல பாத்திரங்கள் பூண்டு, பெயர் எடுத்த ரங்கவடிவேலுவின் மைத்துனராகிய தாமோதர முதலியார் வீராந்தகனாக இந்நாடகத்தில் எங்கள் சபையில் முதல் முதல் நடித்தார். இந்தப் பாகம் முதலில் வேறொருவருக்குக் கொடுத்திருந்தது; அவர் வேண்டாம் என்று திருப்பிவிட்ட பொழுது, ரங்கவடிவேலுவின் வேண்டுகோளின்படி இதை இவருக்குக் கொடுத்தேன். இவர் பிறகு பல நாடகங்களில் நடித்துப் பெயர் பெற்றதையும், அநேகவிதத்தில் எங்கள் சபைக்கு உதவியதையும் பற்றிப் பிறகு எழுத வேண்டியவனாய் இருக்கிறேன். நந்தபாலன் வேஷம் ஜெயராம் நாயகர் வேண்டாம் என்று மறுக்கவே டி. கே. ஸ்ரீனிவாசாச்சாரி என்னும் புதிய ஆக்டருக்குக் கொடுத்தேன். இவர் இதற்கு முன் எனக்கு ஞாபமிருக்கிறபடி எங்கள் சபையில் தெலுங்கிலேயே ஆக்டு செய்தவர். ஆயினும் இரண்டு மூன்று தினங்களுக்குள் தன் பாகத்தைப் படித்து எல்லாம் கற்றுக்கொண்டு, தமிழில் நன்றாக நடித்தது மெச்சத்தக்கதே. மற்றொரு ஆக்டராகிய ரங்கமணி நாயுடு என்பவர் தனநாதன் வேஷத்தை மேற்சொன்ன காரணத்தால் கடைசி வாரத்தில் எடுத்துக்கொண்டு நடித்தார். சத்ருஜித் வேஷம் நான் பூண்டு கண் குருடான பிற்கு நடித்த காட்சிகள் நன்றாயிருந்ததெனச் சென்னார்கள் என்று நினைக்கிறேன். இந்நாடகம் நடிக்கப்பட்டபொழுது நடந்த ஒரு விருத்தாந்தம் எனக்கு முக்கியமாக ஞாபகமிருக்கிறது. கடைசி காட்சிகள் ஒன்றில் கதாநாயகனான சத்ருஜித் தூக்கிலிடப்படுகிறான். தூக்கிலிடப்பட்டு மரணா வஸ்தையிலிருக்கும் தருணத்தில், அவனது மைத்துனன் தூரத்திலிருந்து ஓர் அம்பையெய்து தூக்குக் கயிற்றை அறுக்க சத்ருஜித் பிழைக்கின்றான். இக் காட்சிக்காக தூக்கு மரம் ஒன்று சித்தம் செய்தோம். இக்காட்சியை ஆரம்பிக்குமுன், தூக்குப் பலகையைத் தட்டவேண்டி, சேவகர்கள் வேஷம் பூண்டிருந்த ஒவ்வொருவரையும் கேட்டும்,ஒவ்வொருவரும் அது செய்வது பாபம், நாங்கள் செய்யமாட்டோம் என்று மறுத்தார்கள்! இன்னது செய்வதென்று அறியாது நான் திகைத்து நிற்க, தூக்கு மரத்தை ஏற்பாடு செய்த எங்கள் வேலையாளாகிய அப்பு தான் செய்வதாக ஒப்புக்கொண்டான். காட்சி மேடையின் பேரில் நடிக்கும் பொழுது அப்படியே செய்தான். தூக்குக் கயிறு என் கழுத்தை வாஸ்தவத்தில் நெருக்காமலிருக்கவும், என் உடலின் பளுவைத் தாங்குவதற்கும், தீயில் காய்ச்சிக் கருக்கப்பட்ட பித்தளைக் கம்பிகள் இரண்டு என் தோள்களில் கட்டி மேலே கோர்த்திருந்தது. என் காலின் கீழிருந்த பலகையை அப்பு தட்டியவுடன், என் உடல் கீழே விழ, நான் மரணாவஸ்தையிருப்பதுபோல கால்களை உதறிக் கொண்டிருக்கும் பொழுது, நாடகம் பார்க்க வந்தவர்களுக்குள் வாஸ்தவத்தில் ஏதோ விபத்து நேரிட்டதென ஒரு பெரிய ஆரவாரம் உண்டாக, எங்கள் சபையில் ஓர் அங்கத்தினராயிருந்த, ஹாலில் உட்கார்ந்திருந்த டாக்டர் ராமாராவ் என்பவர் ஓடிவந்து, மேடையின் மீது குதித்தேறி, என் உடம்பை அப்படியே தாங்கிக் கொண்டார்! புஷ்பவர்மன் வேஷம் பூண்டு, அம்பினை எய்து என்னைக் காப்பாற்ற வேண்டிய எனது நண்பர் ரங்கசாமி ஐயங்கார், அம்பெய்வதை விட்டு, தானும் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டார்!

மேடையிலிருந்த எனது ஆக்டர்களெல்லாம் ஏதோ கெடுதி நேரிட்டதென என்னைச் சூழ்ந்தனர்! உடனே எங்கள் கண்டக்டர் திருமலைப்பிள்ளை டிராப் படுதாவை விட்டுவிட்டு அவரும் ஓடி வந்தார். என்னடா இதெல்லாம் என்று கண் விழித்துப் பார்த்தேன்! (அக்காட்சியில் நான் அந்தகனாக நடிக்க வேண்டியிருந்ததை, இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கவனிப்பார்களாக!) அப்பொழுது என் மார்பின்மீது ரத்தம் துளித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். இதற்குக் காரணம் என் உடலைத் தாங்குவதற்காகக் கட்டியிருந்த பித்தளைக் கம்பிகளில் ஒன்று என் காதிலணிந்திருந்த கடுக்கனில் மாட்டிக் கொண்டு இழுக்க, என் காது சிறிது அறுந்ததென்பதைக் கண்டேன். இத்தனை வருஷங்களாகியும் அந்த வடுவிற் சிறிது என் இடது காதை விட்டகலவில்லை .

இந்த சத்ருஜித் நாடகமானது எங்கள் சபையோரால் இன்னும் ஒருமுறைதான் ஆடப்பட்டது. அப்படி ஆடியது 1898 டிசம்பர் மாதம் 25ஆம் தேதி. அச்சமயம், அ. கிருஷ்ண சாமி ஐயர் இந்திரசேனையாக நடித்தார். நித்யாநந்தன் பாகம் ஆர். ஸ்ரீனிவாசராவ் என்பவரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. கிருஷ்ணசாமி ஐயர், வழக்கம்போல் மிகவும் நன்றாய் நடித்துப் பாடினார். சென்ற 34 வருஷங்களாக இந்நாடகம் எங்கள் சபையோரால் ஆடப்படாததற்கு, இதுதான் காரணம் என்று சொல்ல முடியவில்லை. நான் கண்டக்டராயிருந்த வரையில் ஆடாததற்குக் காரணம் எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு இதை ஆட மறுபடியும் பிரியப்படாததேயாம். இதர கம்பெனிகளாலும் சபைகளாலும் இது சுமார் பதினாறு தடவைதான் இதுவரையில் ஆடப்பட்டது. இதற்கு ஒரு காரணம், இந்நாடகமானது ஆடுவதற்குக் கொஞ்சம் கடினமானது என்பதாயிருக்கலாம். ஆயினும் கூடியவரை, கவர்ன்மென்ட் ஆபீசர்கள் பார்டி, சென்ற வருஷம் இதை மிகவும் விமரிசையாக நடத்தி இருக்கின்றனர். இவ்வருஷம் இதை எங்கள் சபையில் ஆட வேண்டுமென்று எங்கள் தமிழ்க் கண்டக்டர் தெரிவித்திருக்கிறார்; மதுரை டிராமாடிக் கிளப்பாரும் இதை இவ் வருஷம் ஆடினர். அச்சமயம் எனதுயிர் நண்பர் நாகரத்தினமும் நானும் முக்கிய பாகங்களை அங்குச் சென்று எடுத்துக்கொண்டோம்.

1897ஆம் வருஷம் டிசம்பர் மாசம் எங்கள் சபை மறு படியும் பெங்களூருக்குப் போய் 3 நாடகங்கள் ஆடியது. 35 அங்கத்தினர் இங்கிருந்து டிசம்பர் மாசம் 24ஆம் தேதி புறப்பட்டுப்போய், 1898ஆம் வருஷம் ஜனவரி மாசம் 2 ஆம் தேதி திரும்பி வந்தோம். இம்முறை தெலுங்கு நாடகம் ஒன்றும் ஆட வேண்டுமென்று தெலுங்கு ஆக்டர்களையும் அழைத்துக் கொண்டு போக ஏற்பாடு செய்தபடியால், 

முதன்முறை பெங்களூருக்குப் போவதற்கு வந்த ஆட்சேபணை மாதிரி ஒன்றும் வராமற் போயிற்று. என்ன காரணம் பற்றியோ ஆரம்பமுதல் இந்தத் தடவை எங்கள் சபை பெங்களூருக்குப் போவதனால் நஷ்டம் உண்டாகும் என்று என் மனத்திற் பட்டது. அதன்பேரில் இரண்டு தமிழ் நாடகங்களும் ஒரு தெலுங்கு நாடகமும் போட வேண்டுமென்று தீர்மானித்த படியால், முடிவில் ஏதாவது நஷ்டம் நேரிட்டால், அந்த நஷ்டத்தில் இரண்டு பாகம் தமிழ் கண்டக்டரும் ஒரு பாகம் தெலுங்கு கண்டக்டரும் பொறுக்க வேண்டுமென்றும் சபைக்கு ஒரு நஷ்டமும் கூடாதென்றும் தீர்மானித்தோம் (லாபம் வந்தால் சபைக்குச் சேர வேண்டியதே). என் மனத்திற் பட்டபடியே முடிவில் இம்முறை மொத்தம் சுமார் ரூபாய் 300 நஷ்டமுண்டாக அதில் நான் 200 ரூபாயும் தெலுங்கு கண்டக்டராகிய எதிராஜலு செட்டியார் 100 ரூபாயுமாக ஏற்றுக் கொண்டோம். ஆரம்பத்திலேயே இம்முறை நஷ்ட மடைவோம் என்று என் புத்தியிற்பட்டதற்கு நான் தக்க காரணம் சொல்ல அசக்தனாயிருக்கிறேன்; ஒரு காரணம்தான் எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய காரியங்களிலும், முக்கியமாக சபையின் காரியங்களிலும், அவைகளுக்கு ஏதாவது இடையூறுகள் வந்தால்தான், முடிவில் சரியாக முடிகிறது என்பது என் அனுபவமாயிருந்தது (இப்பொழுதும் இருக்கிறது). ஆகவே ஓர் ஆட்சேபனையு மில்லாமல், இம்முறை பெங்களூருக்குப் போவது தீர்மானிக்கப்படவே, எனக்கு அந்தச் சந்தேகம் உதித்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இப்பொழுதும் ஏதாவது ஒரு காரியத்தை நான் மேற்கொண்டால் அதற்கு ஆட்சேபணைகளும் இடையூறு களும் நேரிடுங்கால், அவைகள் எனக்கு நாம் மேற்கொண்ட காரியம் முடிவில் சரியாக முடியும் என்னும் உற்சாகத்தை உண்டு பண்ணுகின்றன.

என் சந்தேகத்திற்குத் தக்கபடி இம்முறை பெங்களூருக்குப் போனபோது, ஆரம்பமுதல் எல்லாம் கோணலாய்ப் போயிற்று. முதலில், முன்பு நாங்கள் ஆடிய கப்பன் (Cubbon)நாடக சாலை எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு மூலையில் ‘எல்கின் ஹால்’ என்கிற ஒரு பழைய கட்டடம் கிடைத்தது. மூன்று நாடகங்களிலும் ஒன்றிலாவது சரியாகப் பணம் வசூலாக வில்லை. ஆக்டர்களுக்குள்ளும் தெலுங்கு தமிழ் என்னும் 

விவாதத்தினாலோ, வேறு என்ன காரணத்தினாலோ ஒற்றுமை என்பதில்லாமற் போயிற்று. இங்கு ஆடிய தமிழ் நாடகங்கள் “இரண்டு நண்பர்"களும், “ரத்னாவளி” யுமாம். ரத்னாவளி நாடகத்தைப் பெங்களூரில் முதலில் ஆட வேண்டுமென்று விரைவில் எழுதி முடித்தேன். இம்முறை என்னாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு எங்களுடன் வந்தபடியால், அவர் அவ்விரண்டு நாடகங்களிலும் முக்கிய ஸ்திரீவேஷம் தரித்தார். அ. கிருஷ்ணசாமி ஐயர் மற்றொரு ஸ்கிரீ வேடம் பூண்டனர். இவ்விரண்டு நாடகங்களிலும்; தெலுங்கு நாடகத்தில் இவரும் கே. ஸ்ரீனிவாசனும் சந்திரமதியாகவும் ஹரிச்சந்திரனாகவும் நடித்தனர். எங்கள் சபையிலிருந்து முக்கிய ஆக்டர்கள் அனைவரும் நடித்தோம். நாடகங்கள் என்னமோ நன்றாய்த் தானிருந்தன என்று வந்தவர்கள் எல்லாம் கூறினர். நானும் அப்படித்தான் நினைத்தேன்; வரும்படி மாத்திரம் வரவில்லை. இதற்கு முக்கியக் காரணம் சரியான நாடக சாலையில் நாங்கள் நடத்தாதபடியினால் என்றும் கூறுவதற்கில்லை. மூன்று நாடகங்களையும் முடித்துக்கொண்டு பட்டணம் திரும்பும் பொழுது இனி பெங்களூரில் சபையுடன் கால் எடுத்து வைப்பதில்லை என்று தீர்மானித்துக்கொண்டேன். அத் தீர்மானத்தினின்றும் பிறழாது இருந்தேனாயின் சபைக்கு மிகவும் நலமாயிருந்திருக்கும். ஏனெனில் அதனின்றும் மாறி, மூன்றாம் முறை, மறுபடி பெங்களூருக்குப் போனோம். அதனால் சபைக்குப் பெரும் நஷ்டமுண்டாயிற்று. இந்தக் கதையைப் பிறகு எழுதுகிறேன்.

இங்கு நாங்கள் முதன்முறை ஆடிய நாடகமாகிய ‘ரத்னாவளி'யைப்பற்றி நான் கொஞ்சம் எழுத வேண்டும். இந்நாடகம் ஸ்ரீஹர்ஷன் என்பவரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது; நான் தமிழில் அமைத்ததற்குச் சில வருஷங்களுக்கு முன் இது இங்கிலீஷில் மொழி பெயர்க்கப் பட்டிருந்தது. நான் தமிழில் அமைத்ததற்குச் சில வருஷங் களுக்கு முன்பாக, எனது நண்பர் கா. சரவணமுத்துப்பிள்ளை பி.ஏ. என்னும் யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர், வேறொரு நாடகச் சபைக்காக இதைத் தமிழில் மொழி பெயர்த்தனர். இதை அச்சபையார் ஆடியபொழுது, நான் போய்ப் பார்த்தேன். நாடக விளம்பரத்தில், ‘பாப்ரவ்யன்’ என்று ஒரு நாடகப் பாத்திரத்தின் பெயர் போட்டிருந்தது. “இது யார் இது? 

பப்பரவாயன்?” என்று என் பக்கத்திலுட்கார்ந்து கொண்டிருந்த என் நண்பர்களிடம் ஏளனம் செய்தேன். இந்தப் பாப்ரவ்யன் பாத்திரம் நாடகத்தில் ஒரு காட்சியிலோ இரண்டு காட்சியிலோ தான் வருகிறது. நான் இந்நாடகத்தைத் தமிழில் அமைத்த பொழுது, இவனைப் பப்பரவாயனாக்கி, இவனுக்கு ஒரு தம்பி டமாரவாயனையும் கொடுத்து, இவர்களிருவரையும், ஹாஸ்யத்திற்காக நாடக ஆரம்ப முதல் கடைசி வரைக்கும் வரும்படியாகச் செய்தேன். நான் எழுதியபடி இந்நாடகத்தை எங்கள் சபையோர் பிறகு பன்முறை ஆடியிருக்கிறார்கள். அன்றியும் இதர சபைகள் இதை அநேகம் முறை ஆடியிருக் கின்றன. பால நாடகக் கம்பெனிகளில் பெரும்பாலும் இதை ஆடாதது கிடையாது. இப்படிப் பன்முறை இது நடிக்கப்படும் பொழுதெல்லாம், இந்தப் பப்பரவாயன் டமாரவாயன் பாத்திரங்கள் விடா நகைப்பையுண்டு பண்ணுகின்றன என்பதற்குச் சந்தேகமில்லை. இவ்விரண்டு பாத்திரங்களை இவ்வாறு எழுதியதுமன்றி, பழைய நாடகக் கதையிலில்லாத சில காட்சிகளையும் புதிதாய் ஏற்படுத்தி எழுதியுள்ளேன். இந்நாடகமானது ஒருமுறை பிரசிடென்ஸிகாலேஜில் (Presidency College) மாணவர்கள் ஆடியபொழுது, அங்கு வந்திருந்த சில சமஸ்கிருத வித்வான்கள், “நீங்கள் புதிதாய் எழுதிய காட்சிகள், நாடகக் கதைக்கும், நாடகப் பாத்திரங்களின் குணாதிசயங் களுக்கும் பொறுத்தமாயிருப்பதுதான் சிலாக்கியம்” என்று கூறினார்கள். அவர்கள் வார்த்தையை வெறும் முகமனாகக் கொள்ள எனக்கு நியாயமில்லை. இவ்வாறு நான் புதிதாக கை சரக்காய்ச் சேர்த்த காட்சிகளுள் ஒரு காட்சி எழுதினதற்கு ஒரு வினோதமான காரணம் உண்டு. அதை, இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியது அவசியம். நான் இது வரையில் ஆறு வருஷகாலமாக எங்கள் சபையின் தமிழ் நாடகங்களிலெல்லாம் ஆண் வேடமே பூண்டு நடித்து வந்தேன். “தமிழ் நாடகத்தில் நீ ஸ்திரீ வேஷம் தரித்ததை நாங்கள் பார்க்கவேயில்லை; ஏதாவது ஒரு நாடகத்தில் ஸ்திரீ வேஷம் நீதரிக்கவேண்டும்” என்று என் நண்பர்கள் பன்முறை கேட்டிருந்தனர். எனக்கும் இவ் விஷயத்தில் ஓர் அற்ப ஆசை இருந்தது; ஒரு முறை தமிழ் நாடகத்தில் ஸ்திரீ வேஷம் தரித்து எப்படி இருக்கிறதென்று பார்க்க வேண்டுமென்று ஏதாவது சமயம் கிடைக்குமாவென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன். ரத்னாவளி, நாடகத்தை நான் தமிழில் அமைத்துக் கொண்டு 

வரும்போது, சிறைச்சாலைக் காட்சியில், வத்சராஜன், பெண் வேடம் பூண்டு வந்து தன் காதலியை, வாசவதத்தை அறியாதபடி சந்திப்பதாக ஒரு காட்சி எழுதினேன். இது சம்ஸ்கிருத கிரந்தத்தில் கிடையாது. அக்காட்சி வரும்பொழுது, ஜெயராம் நாயகர் எனக்கு அருகிலிருந்து ஸ்திரீ வேஷம் தரிப்பித்தார். என் உருவை நான் கண்ணாடியிற் பார்த்த பொழுது இவ்வளவு அசங்கியமாயிருக்கிறோமா என்று எனக்கே நகைப்பு வந்தது. ஆகவே மேடையினமீது நான் தோன்றிய பொழுது வந்திருந்த ஜனங்கள் நகைத்தது மிகவும் பொருத்தமானதென எண்ணினேன். ஸ்திரீ வேடம் நமக்குப் பொருத்தமானது அல்ல என்று நான் நன்றாயறிந்தபோதிலும், இந்த நாடகத்தில் நான் வத்சராஜன் வேடம் பூணும்பொழு தெல்லாம், அவ்வேஷம் தரிக்க நேரிட்டது.

இந்நாடகத்தை நான் எழுதியதில் ஒரு விசேஷம் உண்டு. இதற்கு முன் நான் எழுதிய நாடகங்களிலெல்லாம் வசன நடை மிகவும் சுலபமாயும், ஸ்தரீ பாலர்கள் படித்தபோதிலும் அர்த்தமாகும்படியானதாயும் எழுதி வந்தேன். (இப்பொழுதும் இந்த ஏற்பாட்டை விடவில்லை நான்.) அதன் பேரில் சிலர், தமிழ் வித்வான்களைப்போல் கடின நடையில் எழுதத் தெரியாது போலும் என்று என்னை ஏளனம் செய்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படியும் எனக்கு எழுதத் தெரியும் என்று அவர்களுக்கு நிரூபிப்பதற்காக, எதுகை, மோனை அமைத்து, பல இடங்களில் செய்யுள் நடையைப்போலவே இருக்கும்படியாகக் கடினமான பதங்களுடன், இந்நாடகத்தில் சில காட்சிகளை எழுதினேன்; இதை வாசிப்பவர்கள் இந்நாட கத்தில் யௌகந்தராயணன் வசனங்களைப் பார்ப்பார்களாக. நாடகமானது சம்ஸ்கிருதத்தில் திருயச் காவ்யம் என்று சொல்லப்பட்டிருக்கிறது; அதாவது படிக்கத்தக்க விஷயமல்ல, பார்க்கத்தக்க விஷயம் என்பதாம்; அப்படிப் பார்க்கும் பொழுது, பார்ப்பவர்களுக்கு அர்த்தமாகாதபடி, தன் பாண் டித்யத்தைக் காட்ட, கடுந்தமிழில் எழுதுவதில் என்ன பிரயோஜனம்? ஆகவே அனைவரும் கேட்டு எளிதில் அர்த்தம் செய்து கொள்ளக்கூடிய நடையிலேயே எழுதுவது தகுதி என்பது எனது சித்தாந்தம். ஆகவே இந்நாடகத்தில் இவ்வாறு எழுதியது, என்னை ஏளனஞ் செய்தவர்களுடைய எண்ணத்தை மாற்றும் பொருட்டன்றி, வேறு காரணத்தாலன்று. 

இந்த 1897ஆம் வருஷம், சென்னை ராஜதானியில் எங்கள் சபையைப்போன்ற அநேக சபைகள் அதுவரையில் ஏற்பட்டிருந்தபடியால், அவைகளின் அங்கத்தினரையெல்லாம் ஒருங்கு சேர்த்து, ஒரு கூட்டம் கூடி, தென் இந்திய நாடக மேடையை எப்படி முன்னுக்குக் கொண்டு வருவது என்பதைப் பற்றி ஆலோசிக்க வேண்டுமென்று தீர்மானித்து, அங்ஙனமே விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு கூட்டம் கூட்டினோம்.

அதற்கு, வெளியூரிலிருந்து சபைகளின் பிரதிநிதிகள் ஒருவரும் வராவிட்டாலும், சென்னையிலுள்ள எல்லாச் சபைகளும் பிரதிநிதிகளை அனுப்பின. அக் கூட்டத்திற்கு ஆர்.எஸ். லெப்பர் என்பவர் அக்கிராசனாதிபதியாக இருந்தார். தென் இந்திய நாடக மேடையிலுள்ள பல குற்றங்களை எடுத்துப் பேசி, அவைகளைத் திருத்துவதற்கு மார்க்கங்கள் இன்னவென்று பல ஆலோசனைகள் செய்த போதிலும், அவைகளெல்லாம் இம்மாதிரியான கூட்டங்களின் பெரும் பான்மை வழக்கப்படி, ஆலோசனைகளாகவே நின்று விட்டன! நமது நாட்டை இத்தகைய குற்றம் எப்பொழுது விட்டொழியுமோ, அறிகிலேன்.