நாடக மேடை நினைவுகள்/21 ஆவது அத்தியாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

21 ஆவது அத்தியாயம்

1912ஆம் வருஷம், எனக்கு ஞாபகம் இருக்கிற வரையில் எங்கள் சபை இருநூறாவது நாடகமாக, நான் எழுதிய “விரும்பிய விதமே” என்னும் நாடகத்தை ஆடியதைத் தவிர, வேறு விசேஷமொன்றுமில்லை.

1913ஆம் வருஷத்தில் எங்கள் சபையில் நேரிட்ட முக்கிய சம்பவம், நாங்கள் மறுபடியும் இலங்கைக்குப் போன தேயாம். இரண்டு வருடங்களுக்கு முன் அத்தீவுக்குப் போனபொழுது, கொழும்பில் நாங்கள் நாடகமாடினதைப் பார்க்க, யாழ்ப்பாணத்திலிருந்து ஜனங்கள் வந்தனர். அவர்களில் சிலர், தங்கள் ஊருக்கு வரும்படி சபையை அழைத்தனர். அம்முறை முடியாது பிறகு ஒரு முறை இலங்கைக்கு வந்தால், யாழ்ப்பாணம் வருகிறோம் என்று சொல்லியிருந்தோம். அன்றியும் கொழும்பில் எங்கள் நாடகங்கள் எல்லாம் முடிந்தவுடன், அவ்விடத்திய நண்பர்கள், எங்களை மறுவருஷமே வரும்படியாகக் கேட்டனர்; அது சாத்தியமல்ல, இரண்டு வருடங்கள் கழித்து வரக்கூடும் என்று சொல்லியிருந்தோம். நான் அதன்படி இவ் வருஷம் இலங்கைக்குப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாள் (ஏப்ரல் மாதத்தில் என்று நினைக்கிறேன்) திடீரென்று கொழும்பு நாடகசாலை முழுதும் வாடகைக்குப் பெற்றிருந்த வாரிக் மேஜர் என்பவர், சபைக்கு வந்து என்னைக் கண்டார். இவர்தான் முந்திய முறை நாங்கள் இவருடைய நாடக சாலையைக் குடிக்கூலிக்குக் கேட்ட பொழுது, இச்சபையாருக்கு என்ன வரும்படி வரப்போகிறது, இங்குத் தமிழில் நாடகம் நடத்தினால் என்று சந்தேகித்து, 5 தினங்களின் குடிக்கூலியை முன்னதாகவே பெற்றுக் கொண்டவர். ஆயினும் இதை அவர்மீது குறையாகக் கூற வில்லை. நான் அவருடைய ஸ்தானத்தில் இருந்திருப்பேனாயின் அப்படித்தான் நானும் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். இங்கு நான் சொல்ல வந்த முக்கியமான அம்சம் என்னவென்றால், எங்கள் சபையின் நாடகங்களைப் பாராமுன் அவ்வாறு சந்தேகித்தவர், தனது நாடக அரங்கத்தில் நாங்கள் நாடகங்கள் போட்டபொழுது பார்க்க வந்த பெரும் ஜனக் கூட்டங்களைக் கண்டவராய், தானாக இவ்வருஷம் சென்னைக்கு வந்து, எங்கள் சபையைக் கொழும்புக்கு அழைத்தார்.

அவர், நீங்கள் வேறொருவருக்கும் கண்டிராக்டராக உங்கள் நாடகங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. நானே எடுத்துக் கொள்ளுகிறேன். கொழும்பு துறைமுகத்தில் நீங்கள் வந்து சேர்ந்தது முதல், மறுபடியும் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பி வருகிற வரையில் நாடகங்களுக்கு வேண்டிய உங்கள் செலவையெல்லாம் நான் கொடுத்து விடுகிறேன். அன்றியும் நாடகங்களுக்கு வரும் மொத்த வரும்படியில், நூற்றிற்கு அறுபது விகிதம் உங்களுக்குக் கொடுக்கிறேன். மிகுதி நாற்பது விகிதம், நாடக அரங்கம் குடிக் கூலிக்காகவும், மற்றுமுள்ள செலவிற்காகவும் நான் எடுத்துக் கொள்ளுகிறேன்” என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் பழம் நழுவிப் பாலில் விழுந்ததெனச் சந்தோஷமுடன் ஒப்புக்கொண்டு, எங்கள் சபையின் நிர்வாக சபையாரையும் ஒப்புக்கொள்ளச் செய்தேன். உடனே புறப்படுவதற்கு ஏற்பாடுகளெல்லாம் செய்து, இங்கிருந்து மே மாதம் 28ஆம் தேதி ஆக்டர்களும் ஆக்டர்களல்லாதாருமாக 43 பெயர் புறப்பட்டோம். ஒரு முறை போய் வந்தபடியால் இம்முறை ஏற்பாடுகள் செய்வது சுலபமாயிருந்தது. இம்முறை எப்படியாவது யாழ்ப்பாணத்திற்கும் போக வேண்டுமென்று தீர்மானித்தோம். கொழும்பில் வருகிறபடி யாழ்ப்பாணத்தில் வசூலாகுமோ என்னவோ என்று சந்தேகப்பட்டோம். அன்றியும் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கமே கிடையாது, கொட்டகையொன்று புதிதாய்ப் போட வேண்டுமென்று அறிந்தோம். இந்தக் கஷ்டங்களையெல்லாம் யோசித்து, யாழ்ப்பாணத்தார் ஒருவர், யாழ்ப்பாணத்தில் நடத்தும் நாடகங்களின் செலவை யெல்லாம் தான் மேற்கொண்டு, எங்கள் ரெயில் செலவுக்கும் சாப்பாட்டுச் செலவிற்கும் மொத்தமாக ஐந்நூறு ரூபாய் கொடுப்பதாகச் சொல்லவே, அங்கு போவதனால் நஷ்டமில்லாமற் போனால் போதும் என்று தீர்மானித்து, அப்படியே ஒப்புக்கொண்டோம்.

இம் முறையும் இலங்கைக்கு தூத்துக்குடி வரையில் ரெயில் மார்க்கமாய்ப் போய், அங்கிருந்து ஸ்டீமர் ஏறிக் கொழும்பு போய்ச் சேர்ந்தோம். கொழும்பில், லீலாவதி-சுலோசனா, விரும்பியவிதமே, மனோஹரன், ஹரிச்சந்திரன், நற்குல தெய்வம் என்னும் ஐந்து நாடகங்களை நடத்தினோம். இவைகளைப்பற்றி நான் எனது நண்பர்களுக்கு அதிகமாய் எழுத வேண்டிய நிமித்தியமில்லை. முதன்முறை நடைபெற்றதைவிட, இம்முறை நாடகங்கள் மிகவும் அழகாய் நடைபெற்றன. முதன்முறையைவிட, ஜனங்களும் அதிகமாய் வந்தனர். எங்கள் சபையின் பங்கு வரும்படியில், எங்கள் செலவெல்லாம் போக 1500 ரூபாய்க்கு மேல் மிகுந்தது. இத்தொகையை இதற்கு முந்திய வருஷம் ஸ்தாபித்த ‘கட்டட பண்டிற்கு’ச் சேர்த்தோம். இம்முறை நாங்கள் தங்கியிருப்பதற்கு வாரிக்மேஜர் என்பவர் தகுந்த வசதியெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். முதன் முறை நாங்கள் இங்குப் போனபோது எப்படிப் பரிவுடன் கொழும்புவாசிகள் எங்களுக்கு உபசரணை செய்தனர் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். இம்முறை எங்களை நன்றறிந்தமையால் அதைவிடப் பதின்மடங்கு அதிகமாய் உபசரித்தனர் என்றே நான் சொல்லவேண்டும். காலையில் எழுந்தால், பழங்களோ, திண்பண்டங்களோ ராக்வுட் குடும்பத்தார் முதலிய நண்பர்களிடமிருந்து ஓயாது வந்துகொண்டிருக்கும்; எங்களைப் பார்க்க இரவில் நாங்கள் தூங்குகிறவரையில் சிநேகிதர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். நானும் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவும், இரண்டு வேளை ஒன்றாய் சபை தங்கியிருந்த வீட்டில் போஜனம் கொண்டோம் என்பதில்லை; காலையில் ஒருவர் வீட்டில் விருந்து, சாயங்காலம் ஒருவர் வீட்டில் பலஹாரம், இராத்திரி ஒருவர் வீட்டில் விருந்து! சில நாட்களில் சாயங்காலம் டீ, இரண்டு மூன்று இடத்தில் சாப்பிட வேண்டிய தாயிற்று. இதை நான் ஏதோ அதிகப்படுத்திச் சொல்கிறே னென்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எண்ணாதிருக்கும் படி வேண்டுகிறேன். வாஸ்தவத்தில் ஒரு நாள் எங்களிருவரையும், சாயங்கால டீக்காக மூன்று இடங்களிலும், அன்றிரவு போஜனத்திற்காக இரண்டு இடங்களிலும் அழைத் திருந்தனர்! நாங்கள் என்ன செய்வது? மிகுந்த பரிவுடன் அழைத்தவர்களுக்கு, வர மாட்டோம் என்று சொல்ல வாயெழவில்லை. ஆயினும், எப்படி இத்தனை இடங்களில் அவர்கள் செய்த விருந்தைச் சாப்பிடுவது? ஏதோ உடம்பு அசௌக்கியமாயிருப்பதாகச் சொல்லி, ஒவ்வோர் இடத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டோம்! இதன் பலன் என்னவென்றால் வாஸ்தவமாகவே, நான் நோயில் விழுந்தேன்! இதன் விவரம் பிறகு எழுதுகிறேன்.

அதற்கு முன், கொழும்பில் நாங்கள் நாடகமாடிய விஷயமாக இரண்டொரு வினோத சமாச்சாரங்களை எழுதுகிறேன். இம்முறை நாங்கள் இலங்கைக்குப் போனபோது, எனது பால்ய சினேகிதரும் என்னுடன் பிரஸிடென்ஸி காலேஜில் படித்தவருமான கே.ஆர். சீதாராமய்யர் பி.ஏ.பி.எல். வந்திருந்தார். அச்சமயம் அவர் போலீஸ் உத்தியோகத்திலிருந்தார். எம். சுந்தரேச ஐயருக்குப் பிறகு இவர் ஆங்கிலத்தில் முக்கியமான பாகங்களை யெல்லாம் எங்கள் சபையில் ஆக்டு செய்து கொண்டிருந்தார். ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி எழுதிய ஒதெல்லோ முதலிய பாத்திரங்கள் ஆடுவதில் மிகவும் சமர்த்தர். கம்பீரமான ஆகிருதியையும் உடையவர். இவரை முதல் நாள் மேடையின்மீது பார்த்தது முதல், கொழும்பு நாடகப்பிரியர்கள் இவருக்கு “சாண்டோ” என்று பெயர் வைத்தார்கள்! நாடகசாலை திறக்குமுன் உள்ளே நுழைவதற்காக ஏராளமான ஜனங்கள் வெளியிற் கூடிக் கூச்சலிடுவார்கள்; அப்போது இவரை அனுப்பினால், இவர் போய், ‘கூச்சலிடக்கூடாது’ என்று இவரது கம்பீரமான குரலுடன் சொன்னால், உடனே அடங்கி விடுவார்கள். உள்ளே வந்த பிறகும், நாடகம் ஆரம்பமாவதற்கு முன், காலரியில் ஜனங்கள் வழக்கம்போல் கூச்சலிட்டுக் கொண்டிருப்பார்கள்; கூச்சல் அதிகமாய்ப்போனால் இவரை உள்ளிருந்து நான் அனுப்புவேன். இவரைக் கண்டதும் ‘கப்சிப்’ என்று அடங்கி விடுவார்கள்.

இவரது முதுகு திரும்பினால் “சாண்டோ! சாண்டோ!” என்று கத்துவார்கள்! திரும்பி அவர்களைப் பார்த்தாலோ, நிசப்தமாய்ப் போய்விடும்! இவர் இரண்டு மூன்று நாடகங்களில் மேடையின்மீது தோன்றியபொழுது, காலரியில் இருந்தவர்களெல்லாம், மிகுந்த குதூஹலத்துடன் இவரை வரவேற்றனர். 

இம்முறை கூடுமான வரையில் முதன் முறை வந்த பொழுது ஆடிய நாடகங்களை ஆடாது புதிய நாடகங்களை ஆட வேண்டுமென்று நாங்கள் தீர்மானித்தபோதிலும், கொழும்பு நேயர்கள், மனோஹரன் நாடகத்தை மாத்திரம் மறுபடியும் கட்டாயமாய் ஆட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே இதை இங்கு மூன்றாவது நாடகமாக வைத்துக்கொண்டோம். அதில் விஜயாளாக நடித்த எனதாருயிர் நண்பர் எல்லோருடைய மனத்தையும் கண்களையும் கவர்ந்தார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை . மறுநாள் சாயங்காலம் எங்களுடன் வந்திருந்த சூரிய நாராயணய்யா என்னும் ஒரு மெம்பர், தன் சிநேகிதர்கள் சிலருடன், சாயங்காலம் கொழும்பில் ஏதோ சாமான்கள் வாங்குவதற்காகக் கடைத் தெருவிற்குப் போயிருந்தனர். அச்சமயம் ஏதோ கொஞ்சம் மழை பெய்ய, ஒரு ஷாப்பருகில் அவர் சிநேகிதர்களுடன் தங்க, சிற்றுண்டி விற்கும் அந்த ஷாப்புக்காரன், அவர்களையெல்லாம் மிகவும் பரிவுடன் உள்ளே வரவழைத்து, அவர்களுக்கு வேண்டிய காபி, டீ, கேக்குகள், ஐஸ்கிரீம் முதலியனவெல்லாம் கொடுக்க, எல்லாம் சாப்பிட்டானவுடன், சூரியநாராயண ஐயர், தாங்கள் சாப்பிட்டதற்காக ரூபாய் கொடுக்க, அதை வாங்கமாட்டேன் என்று மறுத்தார் அந்த ஷாப்புக்காரர்! “ஏன் ரூபாய் வாங்கமாட்டேன் என்று சொல்லுகிறீர்” என்று வினவ, அதற்கு அவர் “நீங்கள்தானே ரங்கவடிவேலு முதலியார். நேற்று பப்ளிக் ஹாலில் நாடகமாடியது? நீங்கள் இவ்வளவு தூரம் வந்து எங்கள் மனத்தையெல்லாம் திருப்தி செய்ததற்காக நான் இவ்வளவாவது உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டாமா?” என்று பதில் உரைத்தனராம்! இதை எனது நண்பர் தற்காலம் அட்வொகேட்டாயிருக்கும் சூரியநாராயணய்யாவே, நேரில் தெரிவித்தார். இதைச் சொல்லி, “நான் என்ன செய்வது மிஸ்டர் சம்பந்தம்? நான் எவ்வளவு சொல்லியும் அந்த ஷாப்காரர் நான்தான் ரங்கவடி வேலு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். நானல்ல வென்று எவ்வளவு சொன்னபோதிலும் ஏதோ வெட்கத் தினால்தான் அவ்வாறு கூறுகின்றேன் என்று எண்ணுகிறார்! சரி, ரங்கவடிவேலுவினால் எங்களுக்கெல்லாம் காசு செலவில் லாமலே லன்ச் (சிற்றுண்டி) கிடைத்தது” என்று நகைத்தார்.

இவ்விடத்தில் ஏற்பாட்டின்படி ஐந்து நாடகங்களையும் முடித்துக் கொண்டு, மறுநாள் காலை யாழ்ப்பாணம் பிரயாணம் புறப்படவேண்டியிருக்க, அதற்கு முந்திய தினம், வழக்கம்போல் இரண்டு மூன்று விருந்துகள் சாப்பிட்டேன். நான் அன்றிரவு நித்திரைக்குப் போகும் பொழுது எனக்கொரு மாதிரியாயிருந்தது. அதைக் கவனியாது நித்திரை போனவன், இரவு இரண்டு மணிசுமாருக்கு விழித்துக்கொள்ள, உடம்பில் ஜ்வரம் இருப்பதைக் கண்டேன். அதிகமாய்ப் புசித்ததன் பலனை அனுபவிக்கிறோம். சரிதான், இந்த ஜுரத்துடன் யாழ்ப்பாணம் போய் எப்படி நாடகமாடப் போகிறோம் என்னும் பெருங்கவலை என்னுட் புகுந்தது. காலை எழுந்தவுடன் வைத்தியரிடம் மருந்து வாங்கிக் கொள்ளவும் நேரமில்லாமற் போயிற்று; உடனே ரெயில் ஏற வேண்டி வந்தது. வரவர ஜுரம் அதிகரித்து, அன்று பகலெல்லாம் ரெயிலில் ஒன்றும் புசியாது படுத்திருந்தேன். இந்தத் புத்தி முன்பேயிருந்து, முன்னாள் இரவு லங்ஙணம் போட்டிருந்தேனாயின், நலமாயிருந்திருக்கும். குதிரை களவுபோன பிறகு லாயத்தை மூடியது போல், ஜுரம் வந்த பிறகு ஜாக்கிரதையாயிருந்து என்ன பலன்? சாயங்காலம் இருட்டியவுடன் எங்கள் ரெயில் யாழ்ப்பாணம் போய்ச் சேர, ஸ்டேஷனில் யாழ்ப்பாணத்துப் பெரிய மனிதர்கள் எங்கள் சபையோரை வரவேற்க வந்திருந்தனர். நான் வண்டியைவிட்டு இறங்கியதுதான் எனக்கு ஞாபகமிருக்கிறது; நான் உடனே மூர்ச்சையானதாகப் பிறகு எனது நண்பர்கள் எனக்குத் தெரிவித்தனர். அதன்பேரில் என்னைத் தனியாக ஒரு வண்டியில் வளர்த்தி எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருக்காகப் பிரத்யேகமாய் ஏற்படுத்தியிருந்த விடுதிக்கு அனுப்பினார்களாம். அங்குப் போன பிறகுதான் எனக்கு மூர்ச்சை நன்றாய்த் தெளிந்தது; அப்பொழுது என் தேக ஸ்திதியைப் பற்றி எனக்கு ஒரு கவலையுமில்லை; நாம் இப்படி ஜ்வரத்துடன் இருந்தால் இவ்விடத்தில் நாடகங்கள் எப்படி ஆடுவது என்பதே பெருங் கவலையாயிருந்தது. உடனே எனது நண்பர்கள் அவ்விடத்திய சிறந்த வைத்தியர் ஒருவரை வரவழைத்து என்னைப் பரிசோதித்தவுடன் அவரை நான் ஒரு கேள்வி தான் கேட்டேன். “டாக்டர்! நாளைத்தினம் நான் நாடகமாட முடியுமா?” என்று. அவர் முகத்தைச் சுளித்துக்கொண்டு, “நாடகமா ஆட வேண்டும்? நான் உத்தரவு கொடுக்கும் வரையில் இந்தப் படுக்கையை விட்டு எழுந்திருக்காதே!” என்று கண்டிப்பாய்ப் பதில் உரைத்தார். இனிப் பயனில்லை என்று ஈஸ்வரனைத் தியானித்துவிட்டு உறங்கினேன். நான் உறங்குங்கால் நடந்த சமாச்சாரத்தை, மறுநாள் எனது நண்பர்களிடமிருந்து கேட்டறிந்தபடி இங்கு எழுதுகிறேன்.

சபை அங்கத்தினர் இருப்பதற்காக கண்டிராக்டரால் ஏற்படுத்தப்பட்ட வசதியானது, மிகவும் சிறியதாயும் மிகவும் அசௌகர்யமானதாயும் இருந்ததாம்; வெளிக்குப் போவதற்குக்கூடப் பிரத்யேகமான இடமில்லாதிருந்ததாம்; அதன்பேரில் எனது நண்பர்களாகிய ஆக்டர்களெல்லாம் ஒருங்குகூடி, “சம்பந்தத்திற்கோ உடம்பு மிகவும் அசௌக்கியமாயிருக்கிறது; நாம் இருப்பதற்குக்கூட வீடு சரியாயில்லை; இப்படிப்பட்ட கண்டிராக்டர் நமக்கு மற்ற சௌகர்யங்களையெல்லாம் சரியாகப் பார்ப்பான் என்பது மிகவும் சந்தேகமான விஷயம்; ஆகவே, ஆட்டங்களை நிறுத்திவிட்டு, கண்டிராக்டர் கொடுத்த தொகையை அவனுக்கு வாபஸ் செய்து விட்டு, நாளை ஒரு நாள் தங்கி, மறுநாள் நாம் திரும்பிப் போவோம்” என்று தீர்மானித்தாார்களாம். இப்படித் தீர்மானிப்பதற்கு முதன்மையாயிருந்த எனது நண்பர் சத்யமூர்த்தி ஐயர் அவர்கள், உடனே சபையின் நிர்வாக சபை மெம்பர்களுக்கு, மேற்கண்ட விஷயங்களை யெல்லாம் எழுதி, மற்றவர்களைக் கையொப்பமிடச் செய்து அனுப்பினாராம். அது சபையின் வைஸ் பிரஸிடெண்டாக இருந்த வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு வந்து சேர, அதன்பேரில் அவர், “நீங்கள் சொல்வதென்னமோ வாஸ்தவம்தான். ஆயினும், நான் அவசரப்பட்டு ஒன்றுஞ் செய்யலாகாது. சம்பந்தத்திற்கு 102 டிக்ரிக்கு மேல் ஜ்வரம் இருக்கிறது; இப்பொழுதுதான் மறுபடியும் டாக்டர் வந்து போனார். அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனது தூக்கத்தை இப்பொழுது கலைப்பது சரியல்ல. பொழுது விடிந்தவுடன் நாளை எல்லாவற்றையும் சாவகாசமாய்த் தீர்மானிப்போம்” என்று அக் காகிதத்தின் மீது பதில் எழுதித் தெரிவித்தார். (இக்காகிதம் இன்னும் எங்கள் சபையில் இருக்க வேண்டும்.)

மறுநாள் காலையில் விழித்தவுடன் நிர்வாக சபையின் சப்கமிட்டி மெம்பர்களெல்லாம் என் படுக்கையைச்சுற்றி உட்கார்ந்திருந்தனர்! நான் என்ன சமாச்சாரம் என்று விசாரிக்க, மேலே குறித்த சமாச்சாரங்களை யெல்லாம் எனக்குத் தெரிவித்தனர். அதன்மீது நானும் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து, என் அசௌக்கியத்தையும் கருதி, அப்படியே செய்யலாமென்று ஒப்புக்கொண்டேன். உடனே இரண்டொரு மணி நேரத்திற்கெல்லாம், சுகுண விலாச சபையார் இங்கே நாடகமாடப்போகிறதில்லையாம்; அவர்களுக்குத் தக்கபடி மரியாதை செய்யவில்லையென்று, அவர்கள் கோபங்கொண்டு பட்டணம் திரும்பிப் போகிறார்களாம் என்று வதந்தி பரவிவிட்டது. இவ்வதந்தி, அச்சமயம் யாழ்ப்பாணத்தில் டிஸ்டிரிக்ட் ஜட்ஜாயிருந்த மிஸ்டர் பின்டோ என்பவருக்கும் எட்டியது. இவர் என்னுடன் நான்கு வருஷம் பிரசிடென்சி காலேஜில் ஒன்றாய்ப் படித்தவர். இந்நான்கு வருஷங்களும் நாங்கள் மிகுந்த சினேகிதர்களாய் இருந்தோம். பிறகு அவர் சென்னையை விட்டுச் சிலோன் சிவில் சர்வீஸ் பரீட்சையில் தேறினவராய், இலங்கையில் உத்யோகத்தில் அமர்ந்தார். தெய்வாதீனத்தால் நாங்கள் யாழ்ப்பாணத்திற்குப் போனபோது அங்கு ஜட்ஜ் வேலையிலிருந்தார். இவரை விட்டுப் பிரிந்து 20 வருடங்களுக்கு மேலாயிற்று. இவர் என்னை மறவாதவராய், நான் யாழ்ப்பாணம் வந்திருக்கும் சமாச்சாரத்தையும் சுகுண விலாச சபையார் நாடகமாடாது திரும்பிப் போக வேண்டுமென்று தீர்மானித்ததையும் அறிந்தவராய், காலையில் கோர்ட்டுக்குப் போனவர், உடனே ஒரு மணி நேரம் கோர்ட்டு வேலையை நிறுத்தி வைத்து, தன் அறைக்குள் போய், கோர்ட்டிலுள்ள அட்வொகேட்டுகளையெல்லாம் வரவழைத்தனராம். அவர்களில் ஒருவர் எனக்குப் பிறகு, நேராகக் கூறிய சமாச்சாரத்தை இங்கு எழுதுகிறேன். அவர்களை நோக்கி, “நடந்த சமாச்சாரம் எல்லாம் நான் கேள்விப்பட்டேன். எனது நண்பர் மிஸ்டர் பி. சம்பந்தம் மிகவும் அசௌக்கியமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அக்காரணத்தினால் சுகுண விலாச சபையார், நாடகங்கள் ஆடாது நிறுத்துவதனால் நிறுத்தட்டும்; அதற்கு நாம் தடை சொல்லக்கூடாது. ஆயினும் அந்தச் சபையார், யாழ்ப்பாணத்தாராகிய நாம் அவர்களுக்குத் தக்கபடி மரியாதை செய்யவில்லையென்று கோபத்துடன் திரும்பிப் போகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு என்ன முயற்சி செய்ய வேண்டுமோ, அதைச் செய்யவேண்டியது உங்கள் கடமை. அதற்காக என்ன செலவானாலும் சரி; நான் பொறுப்பாயிருக்கிறேன்” என்று சொல்லி, ஆயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கை எழுதி அவர்களிடம் கொடுத்தாராம். அதன் பேரில் அவர்களெல்லாம், ரூபாய் ஒன்றும் வேண்டியதில்லை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி அந்தச் செக்கைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, உடனே சபையார் தங்கியிருந்த சிறு வீட்டண்டை வந்து, வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் முதலியவர்களை வரவழைத்து, “நீங்கள் ஆட்டம் ஆடாமற் போனாற் போகிறது, நீங்கள் எத்தனை தினம் இங்கு இருப்பதாக முன்பு தீர்மானித்தீர்களோ, அத்தனை நாள் இவ்வூரில் எங்கள் விருந்தினர்களாயிருந்து, பிறகுதான் போக வேண்டும். உங்களுக்குத் தக்கபடி உபசரணை செய்யவில்லையென்று சொன்னால், அது யாழ்ப்பாணவாசிகளாகிய எங்களுக்குப் பெருத்த அவமானமாகும். கண்டிராக்டர் கிடக்கட்டும்; உங்களுக்கு என்னென்ன சௌகர்யங்கள் வேண்டுமோ சொல்லுங்கள்; அவற்றையெல்லாம் நாங்கள் ஏற்பாடு செய்யக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்ற தெரிவித்தார்களாம். இவ்வாறு அவர்களெல்லாம் மிகவும் வற்புறுத்தவே, எனது நண்பர்கள் அதற்கிசைந்து, “எங்களுக்கு வேறொன்றும் வேண்டிய தில்லை; முக்கியமாக நாங்கள் தங்கியிருப்பதற்கு ஒரு சௌகர்யமான வீடு வேண்டும்” என்று சொல்ல, “இந்தப் பட்டணத்தில் காலியாயிருக்கும் வீடுகளில் உங்களுக்கு எது வேண்டுமோ பார்த்துச் சொல்லுங்கள்; அதை உங்களுக்கு ஏற்பாடு செய்கிறோம்” என்று தெரிவித்தார்களாம். அதன் பேரில் சபையார், “நீங்கள் பார்த்து ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்ல, அந்தத் தெருவிலேயே காலியாயிருந்த ஒரு பெரிய வீட்டை உடனே ஏற்பாடு செய்து, சபையார் அங்குத் தங்கியிருப்பதற்கு வேண்டிய சௌகர்யங்களை யெல்லாம் அமைத்து, வேறொன்றும் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் அந்த வீடு நிரம்ப, நாற்காலிகள், மேஜைகள், சோபாக்கள் போட்டு, பால், தயிர், நெய், பதார்த்தங்களால் நிரப்பிவிட்டார்களாம்! இதைப்பற்றி இரண்டு நாள் கழித்து எனக்கு உடம்பு கொஞ்சம் சௌக்கியமானவுடன் நான் இவ்விடம் போய்ப் பார்த்தபொழுது, கண்டதைப் பிறகு எழுதுகிறேன்.

இவைகளையெல்லாம் செய்ததுமன்றி, எனக்கு வைத்தியம் செய்து கொண்டிருந்த வைத்தியருடன், யாழ்ப்பாணத்தில் சிறந்த பெரிய வைத்தியரையும் அழைத்துக்கொண்டு, மத்தியானம் சுமார் இரண்டு மணிக்குமேல் என்னை வந்து கண்டனர். அந்த இரண்டு வைத்தியர்களும் என்னைப் பரிசோதித்துப் பார்த்து, ஜ்வரம் கொஞ்சம் குறைவதாகக் கண்டு, நாளைக்குச் சரியாகப் போய்விடும் என்று சொன்னார்கள். இதுதான் சாக்கென்று, “ஆனால் நாளை இரவு நான் நாடகம் ஆட முடியுமா?” என்று ஆவலுடன் கேட்டேன். அதற்கு எனது முதல் வைத்தியர், “எல்லாம் நாளைத் தினம் காலை வந்து பார்த்துச் சொல்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே பதில் உரைத்தார். பிறகு சாயங்காலத் திற்கெல்லாம், நான் கணக்குப் பிரகாரம் சாப்பிட்டுக்கொண்டு வந்த மருந்தினாலோ, என்ன காரணத்தினாலோ, ஜ்வரம் என்னை விட்டு, ஏறக்குறைய என் தேக உஷ்ணம் நார்மல் ஸ்திதிக்கு வரவே, அதைக் கண்ட எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, மெல்ல என்னிடம் வந்து, “நாளைத்தினம், ஒரு சிறிய நாடகம் வைத்துக்கொள்ளலாமே? லீலாவதி- சுலோசனா முதலிய பெரிய நாடகங்கள் ஆடுவதென்றால் உங்களால் முடியாது, ‘காலவ ரிஷி’ சிறிய நாடகம், அதில் உங்களுக்குக் கடைசி இரண்டு காட்சிகளில் தானே வேலையிருக்கிறது. என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்க எனது நண்பர் இவ்விடம் நாடகமாட வேண்டுமென்று மிகவும் ஆவல் கொண்டிருக்கிறார் என்று கண்டவனாய், அதற்கிசைந்து, வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், எனது தமைய னார் ஆறுமுக முதலியார் முதலியவர்களை அழைத்து, “நாளை இரவு ‘காலவ ரிஷி’ வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினேன். அவர்களும், எனக்கு உடம்பு சௌக்கிய மாகி வருவதைக் கேட்டு, சந்தோஷப்பட்டவர்களாகி, குதூகலத்துடன் “அப்படியே செய்யலாம்” என்று சொல்லி, அதற்காக உடனே ஏற்பாடு செய்யும்படி கண்டிராக்ட ருக்குத் தெரிவித்தார்கள். 

மறுநாட்காலை என் வைத்தியர் என்னிடம் வந்து பரிசோதித்துப் பார்த்து ஜ்வரம் விட்டு விட்டது; ஆயினும் மிகவும் பலனவீமாயிருக்கிறது; ஆகவே நீ நாடகம் ஆடக்கூடாது” என்றார்! அதன் பேரில், அவரிடம் நான் நாடகம் ஆடாவிட்டால், நாடகமே நின்றுவிடும். ஆகவே, எப்படியாவது எனக்குக் கொஞ்சம் உத்தரவு கொடுங்கள்; நான் என்ன மருந்து வேண்டுமென்றாலும் சாப்பிடுகிறேன் என்று மன்றாடினேன். அதன்மீது அவர் “நான் சொல்லுகிற நிபந்தனைகளுக்கெல்லாம் உட்பட்டால் உனக்கு உத்தரவு கொடுக்கிறேன்” என்றார். நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் செய்கிறேன். எனக்கு உத்தரவு மாத்திரம் கொடுத்தால் போதுமெனக் கூற, “உன் பாகம் பன்னிரண்டு மணிக்குத்தான் வருமென்கிறாயே, ஆகவே, பதினோறு மணிவரையில் இங்குதானிருக்க வேண்டும்; அது வரையில் மருந்து மணிப்பிரகாரம் சாப்பிட்டுக்கொண்டு வரவேண்டும்; பதினோரு மணிக்கு உன் படுக்கையுடன் நாடக சாலைக்குக் கொண்டு போகச் செய்ய வேண்டும்; உன் உடம்பைக் கொஞ்சமேனும் அலட்டிக் கொள்ளக் கூடாது” என்று சொன்னார். எல்லாவற்றிற்கும் அப்படியே ஆகட்டும் என்று தலை அசைத்தேன். எதற்கும் நான் சாயங்காலம் வந்து பார்த்துவிட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். வைத்தியர் இவ்வாறு உத்தரவு கொடுத்த பிறகு தான், யாழ்ப்பாணம் வந்தபிறகு முதல் முதல் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு முகத்தில் சந்தோஷக்குறி தோன்றியது! யாழ்ப்பாணத்தில் எப்படியாவது தான் நாடகம் ஆடிக் கொழும்பில் பெயரெடுத்தது போல் இங்கும் எடுக்க வேண்டுமென்று அவ்வளவு ஆசை கொண்டிருந்தார் அவர்!

அன்றைத் தினம் சாயங்காலம் எங்கள் சபையின் வழக்கம்போல் ஐந்து மணிக்கெல்லாம் ஆக்டர்களெல்லாம் சாப்பிட்டு விட்டு, வேடம் பூணுவதற்காக நாடகக் கொட்டகைக்குப் போய்விட்டனர். என்னடா கஷ்டம்! நாம் மாத்திரம் இங்கு தனியாக ஜெயிலில் அடைப்பட்டிருப்பதுபோல இருக்கி வேண்டி வந்ததே என்று மூக்கால் அழுதுகொண்டிருந்தேன். ஆறு, ஏழு, எட்டு மணிவரை பொறுத்துப் பார்த்தேன். அப்புறம் என்னால் பொறுக்க முடியாது, மெல்ல ஒரு ஆளை கண்டிராக்டர் வீட்டிற்கனுப்பி, எனக்கு நன்றாய் முழுவதும் மூடப்பட்ட ஒரு கோச்சு வண்டியைக் கொண்டுவரச் சொல்லி, அதில் ஏறிக்கொண்டு இரகசியமாய் நாடகக் கொட்டகையின் பின்பக்கமாக, எனது நண்பர்கள் வேஷம் பூணும் அறைக்குப் போய்ச் சேர்ந்தேன். நான் உள்ளே பிரவேசித்தவுடன் எனது நண்பர்களெல்லாம், நான் வந்து விட்டேனென்று சந்தோஷத்தினால் ஆரவாரித்தனர். இந்த சப்தம் வெளியிற் கேட்க, நாடகம் பார்ப்பதற்காக அங்கு உட்கார்ந்திருந்த என் வைத்தியர் “எதற்காக இக் கூச்சல்?” என்று கேட்டறிந்தவராய், உள்ளே விரைந்து வந்து என்னைப் பார்த்து மிகுந்த கோபத்துடன், “உன்னை யார் இதற்குள்ளாக வரச்சொன்னது?” என்று கேட்டார். நான் “டாக்டர், என் மீது கோபம் கொள்ளாதீர்கள்! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். பிறகு என்மீது கோபம் கொள்ளவேண்டுமென்று உங்களுக்குத் தோன்றினால் அப்படியே செய்யுங்கள். எனது நண்பர்களெல்லாம் இங்கிருக்கும் போது, என்னால் வீட்டிலடைபட்டிருக்க முடியவில்லை; இந்த ஏக்கத்துடன் அங்கு இன்னும் இரண்டு மூன்று மணி நேரம் தங்கியிருந்தேனாயின், இதனாலேயே, போன ஜ்வரம் திரும்பி வரும் போலிருந்தது; ஆகவே, மெல்ல, முற்றிலும் மூடிய வண்டியொன்றில் ஏறி வந்துவிட்டேன்! என்னை மன்னியுங்கள்!” என்று பதில் சொன்னேன்.

அவர் என்னை மறுபடியும் பரிசோதித்துப் பார்த்து, “ஜ்வரம் எல்லாம் ஒன்றும் இல்லை ; ஆயினும் மிகவும் பலஹீனமாயிருக்கிறது; உன்னுடைய நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன்; ஒருவேளை மறுபடியும் உனக்கு ஜ்வரம் வந்தால், இன்னும் இரண்டு நாடகங்களில் நீ எப்படி ஆடக்கூடும்? நாங்களும் உன் ஆட்டத்தைப் பார்க்க முடியாதே; அதற்காகத்தான் சொன்னேன்; இப்பொழுதாவது நான் சொல்லுகிறபடி கேள். இந்த சோபாவின்மீது படுத்துக்கொள். உன் பாகம் வருகிறவரையில் அதை விட்டு எழுந்திருக்காதே; உன் வைத்தியர் உத்தரவை நீ மீறலாகாது” என்று சொல்லி விட்டுப் போனார்.

அவர் வெளியே போனதும், அந்த சோபாவை சைட் படுதா பக்கமாகக் கொண்டுபோய்ப் போடச்சொல்லி, மேடையில் நடப்பதையெல்லாம் பார்க்க வேண்டி அங்கு போய்ப் படுத்துக் கொண்டேன். அப்படி நான் படுத்தபடியே, அம்பட்டன் எனக்கு முக க்ஷவரம் செய்ய, பிறகு என் நண்பர் வெங்கடாசல ஐயர் அப்படியே எனக்கு முகத்தில் வர்ணம் தீட்டி, வேஷம் போட்டு வைத்தார்! இன்னும் ஈஸ்வரன் கிருபையால், நான் வேஷம் பூணத்தக்க காலம் சில வருஷங்கள்தான் இருக்கிறதென நினைக்கிறேன்; அது முடிவு பெறும் வரையில் இப்படிப்பட்ட சம்பவம் எனக்கு நேரிடாதிருக்குமென ஈசனைப் பிரார்த்திக்கிறேன். யாழ்ப்பாணத்தில், கொழும்புவிலிருந்து போல் ஜனங்கள் ஏராளமாக வருவது அசாத்தியம் என்பது போய், நான் நாடகசாலைக்குப் போய்ச் சேருமுன்னமே கொழும்பு டவுன் ஹாலைப் பார்க்கிலும் இரண்டு பங்கு பெரிதாய் நிர்மாணிக்கப்பட்ட அக்கொட்டகை நிரம்பியிருந்தது! அன்றைத்தினம் வசூல் 1000 ரூபாய்க்கு மேலாகியது என்று கேள்விப்பட்டேன். உட்கார இடமில்லாமல் அனேகர் பணம் கொடுத்தும் நின்று கொண்டிருந்தனர். இவ்வண்ணம் ஏராளமான ஜனங்கள் நாங்கள் ஆடுவதைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அறிந்ததும் எனது நண்பர்கள் மிகவும் குதூஹலத்துடன் வெகு விமரிசையாக அந்நாடகத்தை நடித்தனர். சாதாரணமாக, இதையே ஜீவனமாகக் கொண்டு நாடகமாடும் ஆக்டர்களைத் தவிர்த்து, வினோதத்திற்காக ஆடும் அமெடூர்கள், நாடக வரும்படியைப்பற்றிக் கவனிக்க வேண்டிய நிமித்தியமில்லை. இதை நான் எனது நண்பர்களுக்குப் பன்முறை வற்புறுத்தியிருக்கிறேன். ஆயினும் எவ்வளவு கற்றறிந்தவர்களா யிருந்தபோதிலும், சபை நிறைய ஜனங்கள் கூடியிருக்கும்போது ஆக்டு செய் வது ஒருவிதம்தான்; ஜனங்களேயில்லாமல், பத்துப் பதினைந்து பெயர் உட்கார்ந்திருக்கும்பொழுது அவர்களுக்கு எதிரில் ஆக்டு செய்வது ஒருவிதம்தான். இம்மாதிரி புத்திமான்கள் வித்தியாசப்படுத்தக் கூடாது வாஸ்தவம்தான்; ஆயினும் மனித சுபாவத்தை யாரால் மாற்ற முடியும்?

நாடகமானது மிகவும் அழகாய் நடிக்கப்பட்டபோதிலும், அந்நாடக மேடையைப் போல் ஆபாசமான நாடக மேடையை நான் இதுவரையிலும் பார்த்ததுமில்லை; இனியும் பார்க்கப்போகிறது மில்லை யென்று நம்புகிறேன்! அதைச் சற்றிங்கு விவரிக்கின்றேன். இந்நாடகத்தில் முதற் காட்சி இந்திரன் சபையாகும். அதில் எனதுயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு, அப்சர ஸ்திரீயாக நாட்டியமாட வேண்டியிருந்தது. அரங்கத்தில் பரப்பப்பட்ட மாம்பலகைகள் ஒழுங்காய்க்கூட இல்லை; ஒன்றின் மேலொன்றாய் வைத்துக் கட்டப்பட்டிருந்தது! இதைக் கண்டு அவர், ‘இம்மேடை யின் மீது நான் எப்படி நடனம் செய்வது?’ என்று ஆட்சேபிக்க, அதன் மீது வைக்கோலைக் கொண்டுவந்து பரப்பி, அதன்பேரில் கோணிகளைப் பரப்பிவைத்தார் கண்டிராக்டர்! இதன்மேல் நின்று எனது நண்பர், தடுக்கிக் கீழே விழாமல், அன்றிரவு, கால்மணி சாவகாஸத்திற்கு மேல் எப்படி நர்த்தனம் செய்தனர் என்பது இன்றளவும் எனக்கு ஆச்சரியமா யிருக்கிறது. அன்றியும் அரங்கத்தில் வெளிச்சம் போதாமலிருந்தது; இன்னும் இப்படிப்பட்ட பல கஷ்டங்களிலிருந்தன; இருந்த போதிலும் நாடகமென்னவோ நன்றாய் நடிக்கப்பட்டு, வந்திருந்தவர்களுடைய மனத்தையெல்லாம் கவர்ந்ததென நான் சொல்ல வேண்டும். மற்ற பக்க உதவி எவ்வளவு ஆபாசமாயிருந்தாலும், நடிப்பவர்கள் முழுமனத்துடனும் குதூஹலத்துடனும் சரியாக நடித்ததால், அக்குறைகளையெல்லாம் மறக்கடித்து, சபையோரைக் களிக்கச் செய்யும் என்பதனுண்மையை இம்மேடையில்தான் கண்டேன்.

சுமார் பன்னிரண்டு மணிக்கு மேல் நான் நடிக்க வேண்டிய இரண்டு கடைசிக் காட்சிகள் வந்தன. முதல் முதல் ஏதாவது புதிய நாடகத்தில் ஆடுவதென்றாலும், அல்லது முதன் முதல் ஒரு புதிய ஊரில் ஆடுவதென்றாலும் எனக்குக் கொஞ்சம் பயமுண்டு என்று எனது நண்பர்களுக்கு நான் முன்பே தெரிவித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் வர வேண்டிய காட்சி வந்தவுடன், மேற்சொன்ன பயத்தினாலும், ஜ்வரம் கண்டிருந்த தேகத்தின் பலஹீனத்னாலும், என் மார்பு படபடவென்று துடிக்க ஆரம்பித்தது; அதை மெல்லச் சமாளித்துக் கொண்டு இந் நாடகத்தில் ஆடும்படியாக இவ்வளவாவது கருணை புரிந்தாரே ஈசன் என்று அவரை மனத்திற்குள் போற்றிவிட்டு, என் பாகத்தை ஆரம்பித்தேன். நான் அரங்கத்தில் தோன்றுமுன், உள்ளிருந்து, சுபத்திரை அறியும்படியாக, அர்ஜுனனாகிய என் குரலைக் காட்ட வேண்டியிருக்கிறது. என் வழக்கப்படி, "அப்படியா சமாச்சாரம்! இதை ஏன் எனக்கு முன்பே தெரிவிக்கவில்லை?” என்று அப்பொழுதிருந்த தேகஸ்திதி யில் என்னாலியன்றவளவு உரக்கக் கூச்சலிட்டேன். அந்தச் சப்தத்தைக் கேட்டவுடன் சபையிலிருந்த கூச்சல் அடங்கிவிட்டது. நான் அரங்கத்தில் தோன்றியது முதல், அந்த இரண்டு காட்சிகளிலும் நடித்தது ஏதோ எனக்குக் கனவு கண்டது போலிருக்கிறது. முதற் காட்சியில் நான் நின்று கொண்டே பேச வேண்டும்; ஆயினும் அரங்கத்தில் தோன்றிய உடன் என் கால்கள் தள்ளாட ஆரம்பித்தன! வைத்தியர் என் உடம்பின் பலஹீனத்தைப் பற்றிக் கூறியதனுண்மையை அப்பொழுதுதான் அறிந்தேன்! உடனே சுபத்திரையின் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு, கடைசி வரையில் நான் பேச வேண்டியதையெல்லாம் உட்கார்ந்து கொண்டே பேசினேன்! இது தவறுதான். ஆயினும் நிற்க தேக சக்தியில்லாதவன் வேறு என்ன செய்யக்கூடும்?

இந் நாடகத்தில் அர்ஜுனன் வேஷம் ஆடுவதில் ஒரு முக்கியமான கட்டம் உண்டு; அதாவது சுபத்திரை தன்னை வசப்படுத்த வயிற்று நோயால் வருந்துவதுபோல் பாசாங்கு செய்தாள் என்று அர்ஜுனன் அறிந்தவுடன், அவள் பக்கம் திரும்பி, “சுபத்திரை!” என்று ஒரு வார்த்தை கூறுகிறான். இந்த வார்த்தையை வெறும் கோபத்துடனும் சொல்லக் கூடாது; வெறுங் காதலுடனும் சொல்லக்கூடாது; வெறும் வருத்தத்துடனும் சொல்லக்கூடாது. சுபத்திரை தன்னை மோசம் செய்தாளே என்னும் கோபம் கொஞ்சம் இருக்க வேண்டியதுதான்; அவ்வாறு தன்னை மோசம் செய்தவள் தன்னாருயிர்க் காதலி யென்பதையும் மறக்கக்கூடாது. எப்படியிருந்தபோதிலும் இதனால் பிறகு ஸ்ரீகிருஷ்ண பகவானுடன் போர் புரிய நேரிடுமே என்னும் துக்கத்தையும் காட்ட வேண்டும். இந்த மூன்று ரசங்களையும் அந்த ஒரு பதத்தை உச்சரிப்பதில் அடக்கி நடிக்கவேண்டும். நான் இதை எழுதியபோது இந்த ரஸப்பூர்த்தியை அறிந்தவனன்று; ஏதோ அப்படி எழுத வேண்டுமென்று தோன்றி எழுதி விட்டேன். முதன் முறை இந்நாடகத்தை சென்னையில் நான் - நடித்தபொழுது, “சுபத்திரை!” என்று நான் திரும்பி அவளைப் பார்த்தபொழுது, சபையார் கரகோஷம் செய்து சந்தோஷித்தபொழுதே, அதன் மஹிமையை அறிந்தேன்! சில்பி ஒருவன் ஏதோ தன் மனம் போனபடி ஏதோ சிலையைச் செதுக்கி விடுகிறான்; மற்றவர்கள் அதைப் பார்த்து, அதிலுள்ள ஒரு விசித்திரமான வேலையைக் கண்டு சந்தோஷிக்கும் போதுதான், அவனுக்கும் அதன் அழகு தெரிகிறது! இந்த அர்ஜுன வேடம் நான் பன்முறை பூண்டு, பல நாடக மேடைகளின்மீது ஆடியிருக்கிறேன்; இது நான் முன்பே கூறியபடி சிறிய பாகம், அர்ஜுனன் அரங்கத்தில் தோன்றும் காலம் முதல் 10 நிமிஷத்திற்கெல்லாம் நாடகம் முடிந்து போகிறது. ஆயினும் இந்த ஒரு பதத்தைச் சரியாக நடிப்பதற்காக, இவ்வளவு வயதாகியும், இந்த வேடம் பூண விரும்புகிறேன்.

இதை ஒரு ‘கட்டம்’ என்று நான் கூறியதற்குக் காரணம், இவ்வேடம் பூணும் ஒவ்வொரு ஆக்டரும் இக்காட்சியில் இப்பதத்தைச் சரியாகச் சொல்லுகிறானா இல்லையா என்று பார்க்க வேண்டியிருப்பதனால்தான். இதைச் சரியாகச் சொல்லிச் சபையோரின் மனத்தைச் சந்தோஷப்படுத்தினால் ஆச்சுது; இல்லாவிட்டால், இப்பாத்திரத்தை அந்த வேஷதாரி கொலை செய்தான் என்றே கூற வேண்டும். இதைப்பற்றி நான் இவ்வளவு விரிவாக எழுதியதற்குக் காரணம், இந்நாடகமானது மிகவும் அதிகமாக ஆமெடூர் சபைகளினாலும், நாடகக் கம்பெனிகளினாலும் பன்முறை ஆடப்பட்டு, இந்த இடத்தில் அந்த வேஷதாரி ரசாபாசம் செய்ததை நான் பன்முறை கண்டு வருந்தியிருக்கிறேன்; ஆகவே, இனி மேலாவது எனது இந்த நாடகத்தில் அர்ஜுனன் வேஷந்தரிக்க விரும்புவோர் இதைக் கவனித்து இந்தக் கட்டத்தில் தக்கபடி நடிப்பார்களாக.

நாடகம் முடிந்த க்ஷணமே, என் டாக்டர் உள்ளே வந்து உடனே என்னைக் கம்பளிப் போர்வை ஒன்றைப் போர்த்துக்கொள்ளச் சொல்லி, ‘வீட்டிற்குப் போய் வேஷத்தைக் கழுவிப் படுத்துக்கொள்; இங்கே வெந்நீர் கிடையாது!’ என்று சொல்லி, நான் வந்த வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டார். என் சொந்த பந்துக்களும் எனக்காக அவ்வளவு அன்பு பாராட்டுவார்களோ என்னவோ?

நான் வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் இளைப்பாறி விட்டு, வெந்நீர் கொண்டுவரச் சொல்லி, என் முகத்திலிருந்த வர்ணத்தைக் கழுவிக் கொண்டிருந்தபொழுது, நடந்த ஒரு சிறு வேடிக்கையை இங்கு எழுதுகிறேன். நோயுடன் இருந்த எனக்கு, வேண்டிய வேலைகளைச் செய்துகொண்டு என் பக்கத்திலேயே இருக்கும்படி எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், பத்துப் பன்னிரண்டு வயதுள்ள ஒரு யாழ்ப்பாணத்துப் பையனை ஏற்பாடு செய்திருந்தார். அவன் நான் வந்தது முதல் படுத்த படுக்கையாய் ஜ்வரத்திலிருந்ததைக் கண்டவன்; நான் முகத்திலிருந்த வர்ணத்தைக் கழுவிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்ட வனாய், “எசமாங்கூட வேஷமா பொட்டுச்சி!” என்று, தன் கண் விழிமலரக் கேட்டான்! படுக்கையை விட்டு எழுந்திராத இந்த ஆசாமி எப்படி நாடகத்தில் ஆடினான் என்று ஆச்சரியப்பட்டான் என்பது திண்ணம். இவன் ஆச்சரியப்பட்டதுமன்றி, அந்நாடகத்தில் வந்திருந்தவர்களிற் பலர், (என்னை நேராக அறிந்த சிலர் தவிர) நான் ஆடவில்லை யென்று நினைத்தனர்களாம். அதற்கு ஒரு திருஷ்டாந்தம் இங்கு எழுதுகிறேன்.

அதைப்பற்றி எழுது முன், ஒரு சிறு விஷயத்தை இங்குக் குறிக்க விரும்புகிறேன். நான் எழுதி வரும் இந்த “நாடக மேடை நினைவுகள்” வாரந்தோறும் படித்து வரும் எனது சில நண்பர்கள், ‘அநேக வருடங்களுக்கு முன் நடந்த இந்தச் சமாச்சாரங்களெல்லாம் உனக்கு எப்படி ஞாபகமிருக்கிறது?’ என என்னை வினவுகிறார்கள். அவர்களுக்கு விடை கொடுக்க விரும்புகிறேன். முதலாவது, மனிதனுக்கு நாற்பது வயதுக்குமேல் ஞாபக சக்தி குறைந்து வருகிறதென்பது உன்மையாயினும், அநேக வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளெல்லாம் ஞாபகமிருக்கும்; சற்று முன்பாக நடந்தது தான் மறந்து போகிறது; இது சகஜம். இரண்டாவது, ஒரு மனிதனுடைய ஞாபகத்தில் சில விஷயங்கள் என்றும் மறக்காதபடி பதிந்து போகின்றன. எனது நாடக மேடை அனுபவங்கள் என் மனத்தில் நன்றாய் மறக்கக் கூடாதபடி பதிந்து போய்விட்டன என்பதற்கு ஐயமில்லை. மூன்றாவது காரணம் எங்கள் சுகுண விலாச சபையை ஸ்தாபித்த நாள் முதல் அதைச் சார்ந்த எல்லாக் காகிதங்களையும் பத்திரமாக அடக்கம் செய்து வைத்திருக்கிறேன். அது இப்பொழுது, அநேக விருத்தாந்தங்களின் தேதி முதலியவற்றைக் குறிப்பதற்கு மிகவும் உபயோகப்பட்டு வருகிறது. நான்காவது, இவைகளைப் பற்றி, நான் எழுதிக்கொண்டு வரும் பொழுது, இந்த விருத்தாந்தங்களையெல்லாம் இப்பொழுது நான் மறுபடியும் அனுபவிப்பது போலிருக்கின்றதெனக்கு; மறந்துபோன சில விஷயங்கள் புதிதாய் ஞாபகத்திற்கு வருகின்றன. இதற்கு ஓர் உதாரணமாக அந்த யாழ்ப்பாணத்துப் பையன் என்னைக் கேட்ட கேள்வி ஞாபகத்திலில்லை; அன்று நாடக மேடையை விட்டு வீட்டிற்குப் போன சமாச்சாரத்தை எழுதும்பொழுதுதான் புதிதாய் ஞாபகம் வந்தது!

‘காலவ ரிஷி’ ஆடிய மறுநாள் வேறொன்றும் நாடகம் வைத்துக்கொள்ளவில்லை. சாதாரணமாக வெளியூர்களில் ஒன்று விட்டொருநாள்தான் நாடகம் வைத்துக்கொள்வது எங்கள் சபை வழக்கமாகையால், மறுநாள் எங்களுக்கு விடுமுறையாயிருந்தது. சபையின் அங்கத்தினரையெல்லாம் எங்கள் யாழ்ப்பாணத்துப் புதிய நண்பர்கள் ஏதோ ஓர் இடத்திற்கு வனபோஜன விருந்துக்காக அழைத்துக்கொண்டு போய்விட்டனர். எனதுயிர் நண்பர் மாத்திரம் என்னைப் பார்த்துக் கொள்வதற்காக, என்னுடன் தங்கியிருந்தனர். அன்று காலை சுமார் 9 மணிக்கு என்னைக் காண என் பழைய சிநேகிதர் மிஸ்டர் பின்டோ வந்து சேர்ந்தார். அவரை நான் கடைசியில் பார்த்து, சுமார் 20 வருடங்களாயினவென்பதை முன்பே குறித்திருக்கிறேன். இத்தனைக் காலம் பொறுத்து, நாங்கள் இருவரும் சந்திக்கவே, எங்களுக்குப் பரஸ்பரம் உண்டான சந்தோஷம் கொஞ்சம் அல்ல; இதை இப்படிப்பட்டது என்று சொல்ல நான் அசக்தனாயிருக்கிறேன்; இதை வாசிக்கும் நண்பர்கள் யாராவது, சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் ஒருவருடன் மிகவும் அன்யோன்யமாயிருந்து, பிறகு அந்த நண்பனை விட்டுப் பிரிந்து, 20 வருடங்கள் பாராதிருந்து பிறகு அகஸ்மாத்தாய் வேறொரு தேசத்தில் அவரைப் பார்க்கும்படி நேரிடுமாயின், அப்படிப் பட்டவர்களுக்குத்தான் எங்கள் மனோசந்துஷ்டி இப்படிப்பட்ட தென்று தோன்றும்.

ஒன்பது மணிக்குப் பேச ஆரம்பித்தவர்கள், காலங்கழி வதையும் கவனியாமல், சுமார் பதினோருமணி வரையில் பேசிக்கொண்டிருந்தோம், நாங்கள் கலாசாலையை விட்டுப் பிரிந்தது முதல், ஒவ்வொருவருக்கும் நேர்ந்த விஷயங்களையெல்லாம் பற்றி! அவர் அப்பொழுது சொன்ன முக்கியமான விஷயம் ஒன்று எனக்கு இன்னும் நன்றாய் ஞாபகமிருக் கிறது. “சம்பந்தம்! நீ பூண்டிருந்த வேஷத்தில், நீ நாடக மேடைக்கு வந்த பிறகும், கொஞ்சநேரம் உன் முக ஜாடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆயினும், நீ மேடைக்கு வருமுன், ஏதோ பேசினாயே? அக்குரலைக் கேட்டவுடன், உன் பழைய ஞாபகம் வந்து, இன்னானெனக் கண்டு பிடித்து விட்டேன்! ஞாபகமிருக்கிறதா? நாம் கலாசாலையில் வாசித்த பொழுது உன் தமிழ் உபாத்தியாயர், தமிழ் வசனப் பாடங்களை யெல்லாம் உன்னைத்தான் உரக்கப் படிக்கச் சொல்வார்; அவருடைய மெல்லிய குரலும், உன்னுடைய கம்பீரமான குரலும் நான் மறக்கவில்லை; ஆகவே, உன் குரலைக் கேட்டவுடன் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன்” என்று சொல்லி நகைத்தார். பைபிளில் கிறிஸ்தவர்கள் சாதாரணமாக உச்சரிக்காத ஒரு பேர்வழி, என்ன வேடம் பூண்டாலும் பிளவையுடைய தன் காலை மாத்திரம் மறைக்க முடியாது என்று ஒரு கதை உண்டு; அம்மாதிரியாக, நான் எந்த வேஷம் பூண்டாலும் என்னை அறிந்த நண்பர்கள், என் குரலினால் என்னை எப்படியாவது கண்டுபிடித்து விடுகிறார்கள்!

அன்றைத் தினம் சாயங்காலம் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு என்னுடன் பேசிக்கொண்டிருந்பொழுது, “உங்களுக்கு உடம்புதான் கொஞ்சம் சுமாராக இருக்கிறதே; எந்நேரமும் படுக்கையிலேயே படுத்திருந்தால் நல்லதல்ல; கொஞ்சம் உலாவினால் நல்லது; நாங்கள் எல்லாம் தங்கியிருக்கும் புதிய வீடு, அருகாமையில்தானிருக்கிறது. அங்கே நடந்து போவோம் வாருங்கள்” என்று சொல்ல, அதற்கு நானிசைந்தேன்.

ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு, அங்கு மெல்ல நான் அவருடன் நடந்துபோக, வீதியில் புறப்பட்டவுடன் யாரோ இரண்டு யாழ்ப்பாணத்துவாசிகள் எங்களைப் பின் தொடர்ந்தனர்; இதை யாரோ வீதியிற் போகிறவர்கள் என்று நாங்கள் அவ்வளவாகக் கவனிக்கவில்லை; பிறகு சபை தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த பொழுது, அவர்களும் எங்களுடன் நுழையவே, இவர்கள் யாரென்று திரும்பிப் பார்க்க, அவர்களுள் ஒருவன் மெல்ல எங்கள் அருகில் வந்து, “ஐயா எங்களை மன்னிக்க வேண்டும். உங்களை ஒரு கேள்வி கேட்கலாமோ? என்று நயத்துடன் கேட்க, “சுகமாய்க் கேட்கலாம” என்று நாங்கள் பதில் உரைத்தோம். அதன்மீது அவன் “நீங்கள் சுகுண விலாச சபையைச் சார்ந்தவர்கள்தானே? நேற்றைத் தினம் இரவு நாடகத்தில், இதோ என்னுடன் வந்த எனது நண்பர், ‘சம்பந்த முதலியார் ஆடவில்லை யென்கிறார்; நான் ஆடினார்,’ என்று சொல்லுகிறேன்; எங்களில் யார் கூறுவது சரியென்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும்” என்றான். அதன்மீது நான் “நீங்கள் கூறினதுதான் சரி” என்று சொல்ல, அம்மனிதன் போகுமுன் இரண்டு மூன்று முறை என்னை உற்று உற்றுப் பார்த்து விட்டுப் போகப் புறப்பட, எனது நண்பர் சி. ரங்கவடிவேலு நகைத்து விட்டார். அதன் பேரில், “நான்தான் சம்பந்தம்” என்று சொன்னேன். அதற்கு அம்மனிதன் “மிகவும் சந்தோஷம்; நானும் அப்படித்தான் சந்தேகித்தேன்; ஆயினும், எப்படி நேராகக் கேட்பது என்று சங்கோசப்பட்டேன். மன்னிக்கவேண்டும்” என்று சொல்லி விடைபெற்றுப் போனான்.

மறுநாள், “சாரங்கதர நாடகம்” வைத்துக் கொண்டோம். சித்ராங்கியாக நடிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, வந்திருந்தவர்களின் மனத்தையெல்லாம் கவர்ந்தனர் என்று நான் இங்கு எழுத வேண்டியதில்லை. நாடக மேடைக்குக் கோணியை எடுத்துவிட்டு ஒரு ஜமக்காளம் போட்டார்கள். வெளிச்சங்களும் முதல் நாளிருந்ததைவிட நன்றாக அமைக்கப்பட்டன. கொட்டகையில் இடமில்லாதபடி நிறைந்திருந்த ஜனங்கள், ஆதி முதல் அந்தம் வரையில் நாடகத்தைப் பார்த்துச் சந்தோஷித்தனர் என்று சொல்வது அதிகமாகாது. சித்ராங்கியின் பாத்திரத்திற்குப் பிறகு, சுந்தரகன் மதுரகவி வேடங்கள் சபையோரை மிகவும் சந்தோஷிக்கச் செய்தன. நானும், முதல் நாடகத்தில் நமக்குள்ள கொஞ்சம் திறமையைக் காட்ட முடியாமற் போயிற்றே என்று? இந்நாடகத்திலாவது சுத்தமான தமிழ் பாஷைக்கு ஓர் அடைக்கல ஸ்தானமாக நிற்கும் யாழ்ப்பாணத்தில் அதைக் காட்ட வேண்டுமென்று விரும்பினவனாய், நன்றாய் நடிக்க முயன்றேன். ஆயினும், புறாவிடுகிற காட்சியில், முற்றிலும் நின்று கொண்டே பேச வேண்டியவன், பலஹீனத்தினால் நிற்க முடியாமல், ஒரு நாற்காலியை மேடை மீது போடச்சொல்லி, அதில் உட்கார்ந்து கொண்டே பேசவேண்டியதாயிற்று. அப்பொழுது இப்படி நேர்ந்ததே என்று நான் என் மனத்திற்குள் பட்ட வருத்தம் கொஞ்சம் அல்ல. இதை வாசிக்கும் எனது நண்பர்களாகிய ஆக்டர்கள், நாடக மேடையில் தாங்கள் நடிக்க வேண்டும் என்னும் எண்ணம் தங்களை விட்டு அகலும் வரையில், முக்கியமாகத் தங்கள் தேகத்தை நோய் நொடி வராதபடி காப்பாற்றிக் கொள்வார்களாக. ஒருவன் எவ்வளவுதான் கெட்டிகாரனான ஆக்டராயிருந்த போதிலும், உடம்பு அசௌக்கியமாயிருந்தால் அவனால் என்ன செய்யக்கூடும்?

உடனே மறுநாள், ராத்திரி நாடகம் வைத்துக் கொள்ள முடியாதென்று சொல்லி, சாயங்காலம் 51/2 மணிக்கு ஆரம்பித்து 81/2 மணிக்குள்ளாக முடிக்கத்தக்க சிறு நாடக மாகிய “நற்குல தெய்வம்” என்பதை வைத்துக்கொண்டோம். இது ஒரு சிறு நாடகமாகையாலும், இதில் எனக்கு அதிக பாகமில்லாத படியாலும், அதிகக் கஷ்டமில்லாமல் இதில ஆடி முடித்தேன். நாடகம் ஆனதும், எங்கள் சபை மங்களம் பாடுமுன் அரங்கத்தின் முன் வந்து நான் யாழ்ப்பாணத்துவாசிகள் எங்கள் சபைக்குச் செய்த எல்லா உதவிக்காகவும் எங்கள் சபையின் வந்தனத்தைச் செலுத்திவிட்டு, வீடு போய்ச் சேர்ந்து, யாழ்ப்பாணத்தில் அடியெடுத்து வைத்தபோது, நாம் இங்கு ஒரு நாடகமாவது ஆடப்போகிறோமா என்று திகிலடைந்த நான், மூன்று நாடகங்களை யாழ்ப்பாணர்கள் மனமகிழ முடிக்கச் செய்த ஈசன் பேரருளைப் போற்றிவிட்டு உறங்கினேன்.

மறுநாள் காலை, நாடகமாடிய இளைப்பினால் அயர்ந்து நித்திரை செய்து, கொஞ்சம் நேரம் பொறுத்துக் கண் விழித்த நான், என் படுக்கையைச் சுற்றில் யாழ்ப்பாணத்துப் பெரிய மனிதர்கள் நான்கைந்து பெயரும், வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், ரங்கவடிவேலு முதலிய சபையின் நிர்வாக சபை அங்கத்தினரும் உட்டார்ந்திருக்கக் கண்டேன். நான் அதிகமாகத் தூங்கினதற்கு அவர்கள் மன்னிப்பைக் கேட்டுவிட்டு, ‘என்ன விசேஷம்?’ என்று நான் அவர்களை வினவ, யாழ்ப்பாணவாசிகளில் ஒருவர் (அவர் முத்துக்குமரு முதலியார் என்று நினைக்கிறேன்) “நாங்கள் எல்லாம் உங்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் கொடுக்க வந்திருக்கிறோம். யாழ்ப்பாணத்துக் கலாசாலைக்காகவும் யாழ்ப்பாணத்துத் தேகப்பயிற்சி சபைக்காகவும், சுகுண விலாச சபை ஒரு நாடகம் போட்டு, அதன் வரும்படியை உதவ வேண்டுமென்று உங்கள் சபையாரைக் காலை கேட்டோம். அவர்களெல்லாம் நீங்கள் சம்மதித்தால் வேறு ஆட்சேபணையில்லையென்று சொல்லுகிறார்கள். ஆகவே, உங்களால் தானிருக்கிறது. நீங்கள் ஆம் என்றால் நிறைவேறிவிடும்; என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். அதன்பேரில், ‘இதென்னடா இது; கஷ்டமெல்லாம் தீர்ந்தது என்றிருந்தோமே, இது ஒன்று இப்பொழுது வந்து முளைத்ததே!’ என்று எண்ணினவனாய், என்றைக்கு நாடகம் போடுகிறது என்று கேட்க, இன்று சாயங்காலம் என்று பதில் உரைத்தார்கள்; அப்பொழுது ஏறக்குறைய எட்டரை அல்லது ஒன்பது மணியிருக்கும்; இன்றிரவு நாடகம் வைத்துக் கொண்டால், சாயங்காலத்திற்குள்ளாக எப்படி நாடக விளம்பரம் முதலியன வெளியாவது, ஜனங்களுக்கெல்லாம் எப்படித் தெரிவது? என்று ஆட்சேபித்துப் பார்த்தேன். (வாஸ்வத்தில் என் தேக ஸ்திதியைக் கருதினவனாய், எப்படியாவது இதனின்றும் தப்பித்துக் கொள்ள வேண்டு மென்பதே என் கருத்தாயிருந்தது.) அதற்கு அவர்கள் “அந்தச் சமாச்சாரங்களைப் பற்றி உங்களுக்குக் கவலையேன்? அதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அது எங்கள் பொறுப்பு. அவற்றைப்பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். நாடகமாடுவதாக நீங்கள் சம்மதியுங்கள்!” என்று வற்புறுத்தினார்கள். அதன்பேரில் இவ்வளவு பலவந்திக்கிறார்களே நமது நண்பர்கள் என்று சற்று இணங்கினவனாய், என்ன நாடகம் போடுவது என்று கேட்டேன். அதன் பேரில் “‘லீலாவதி - சுலோசனா’ உங்கள் சபை நாடகங்களில் ஒரு மிகச் சிறந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறோம்; அதில் உங்களுக்கு மனோஹரன் நாடகத்தைப் போல் அதிகச் சிரமமில்லையென்று கேள்விப்படுகிறோம். ஆகவே அதைப் போடச் சம்மதிக்க வேண்டும். உங்கள் சபையின் மற்ற ஆக்டர்களெல்லாம் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒருவர்தான் பாக்கி. நீங்கள் சம்மதித்தால் உடனே ஏற்பாடு செய்து விடுகிறோம்” என்று சொன்னார்கள்.

நான் மெல்ல என் தலையைத் திருப்பி ரங்கவடிவேலு வைப் பார்த்தேன். என்னுயிர் நண்பனது புன்னகையினால் தனக்கு இது மிகவும் விருப்பமென்றும், இந்நாடகத்தைப் போடலாமென்று யுத்தி சொல்லிக் கொடுத்தது தான் தானென்றும் கண்டேன். அதன்மீது இதென்னடா தர்ம சங்கட மாய் வந்திருக்கிறது என்று சற்று. யோசித்து, “நான் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். அதற்காக நீங்கள் எல்லோரும் மன்னிக்க வேண்டும்; என்னுடைய பழைய வைத்தியரை வரவழையுங்கள். அவர் என் ஹிருதயத்தைப் பரீட்சித்துப் பார்த்து, இன்றிரவு நான் அத்தனை பெரிய நாடகமொன்றில் நடிக்கலாம் என்று பயமில்லாமல் சொல்வாராயின், எனக்கு ஆட்சேபணையில்லை” என்று கூறினேன். அதன் பேரில், அவர்கள் ஒரு வைத்தியருக்கு இரண்டு வைத்தியர்களாகத் தருவிக்கிறோம் என்று சொல்லி, உடனே வண்டியனுப்பி என் பழைய வைத்தியரையும், இன்னும் அந்த ஊரில் ஹிருதய பரீட்சையில் மிகச் சிறந்தவரெனப் பெயர் பெற்ற மற்றொருவரையும், சில நிமிஷங்களுக்குள் வரவழைத்தார்கள். அவர்களிருவரும், எனது சபை அங்கத்தினராகிய டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச் சாரியும் மூவருமாகக் கூடி என் ஹிருதயத்தைப் பரிசோதித்துப் பார்த்து, கொஞ்சம்பலஹீனமாகத்தானிருக்கிறது; இருந்தபோதிலும், இன்றிரவு நாடகம் நடிக்கலாம், அபாயமொன்றுமில்லை என்று தீர்மானம் சொன்னார்கள். இப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்த்த இம் மார்க்கமும் அடைபட்டுப் போகவே, சரிதான் என்று ஒப்புக்கொண்டேன். ஆயினும், ஒரு வார்த்தை கூறினேன். “எல்லாம் சரிதான். இந்த கண்டிராக்டர், எங்கள் சபை நான்கு ஆட்டங்கள் ஆட வேண்டுமென்று ஒப்பந்தம் செய்து கொண்டார்; எனது தேகஸ்திதியைக் கருதி மூன்று நாடகங்கள் ஆடினால் போதும் என்று இசைந்தார். இப்பொழுது அந்த ஆள், இதற்கு ஒரு ஆட்சேபணையும் செய்யாமல் பாருங்கள்” என்று சொன்னேன். அதை யெல்லாம் நாங்கள் சரிப்படுத்தி விடுகிறோம், நீங்கள் இசைந்தது போதுமென்று சொல்லி விட்டு, அவர்கள் அனைவரும் நாடகத்திற்காக வேண்டிய விளம்பரங்களைச் செய்ய உடனே மிகுந்த குதூகலத்துடன் புறப்பட்டுப் போயினர். அப்பொழுது சுமார் 11 மணி ஆகிவிட்டது. இன்னும் சாயங்காலத்திற்குள்ளாக நாடகத்தைப் பற்றி இவர்கள் என்ன அச்சிட்டு விளம்பரம் செய்யக்கூடும் என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு, நான் அறிந்தபடி அவர்கள் செய்த நாடக விளம்பரம் எல்லாம், தபால் ஆபீசுக்குப் போய், பத்து மைலுக்குள் உள்ள ஊர்களுக்கெல்லாம், “இன்றிரவு சுகுண விலாச சபையார் ‘லீலாவதி-சுலோசனா’ ஆடப் போகிறார்கள்” என்று அறிவித்த தேயாம்! ஆயினும், அன்றிரவு நாடக வருமானத் தொகை 1700 ரூபாய்க்குமேல்!

நான் சந்தேகித்தபடியே இவர்கள் போய்க் கண்டிராக்டரை உத்திரவு கேட்க அம்மனிதன், சபையார் நான்காவது ஆட்டம் ஆட முடியுமானால் அப்பணம் தனக்குச் சேரவேண்டுமேயொழிய, மற்று யாருக்கும் சேரக்கூடாது என்று ஆட்சேபித்தானாம். அதன் பேரில் இவர்கள் அவனோடு பேரம் செய்து அவனுக்கு முன்னூறு ரூபாய் கொடுப்பதாயும், மிகுதிப் பணம் யாழ்ப்பாணத்துக் கலாசாலைக்கும். தேகப்பயிற்சி சங்கத்திற்கும் சேர வேண்டும் என்று தீர்மானித்தார்களாம். பிறகு ஏதாவது கோர்ட்டு வியாஜ்யமாய் முடிந்தால் என்ன செய்வதென்று, கண்டிராக்டர் கைப்பட இந்நாடகம் நடக்கலாம் என்று எழுதிக் கொடுத்தாலொழிய நான் இருந்த வீட்டை விட்டுப் புறப்படமாட்டேன் என்று பிடிவாதாய் உட்கார்ந்தேன். அதன் பேரில் சாயங்காலம் ஆறு மணிக்கு அப்படிப்பட்ட கடிதம் கிடைக்கவே, அப்புறம்தான் நாடகக் கொட்டகைக்கு நான் புறப்பட்டேன். நான் ஏதோ கொஞ்சம் கஞ்சி சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கு நாடகக் கொட்டகைக்குப் போனால், அதற்குள்ளாகக் கொட்டகை முழுவதும் ஜனங்களால் நிரம்பியிருந்தது! கொட்டகையின் வெளியே சில கிராமங்களில் ஏதாவது உத்ஸவம் நடந்தால் நூற்றுக் கணக்கான கட்டை வண்டிகள் அவிழ்த்து விடப்பட்டிருக்குமே, அப்படியிருந்தது. நாடகக் கொட்டகைக்குள்ளே அதற்குமேல் நின்று பார்ப்பதற்காக அநேகம் பேர் ரூபாய் 5 விகிதம் கொடுத்ததாக அறிந்தேன். யாழ்ப்பாணத்துவாசிகள் சபைக்கு அன்று செய்த கௌரவமானது என்றும் மறக்கற்பாலதன்று.

நாடகம் 9 மணிக்கு ஆரம்பித்தபோது, கொட்டகைக்குள் ‘எள்ளு போட்டால் கீழே விழாது’ என்னும் பழமொழிக் கிசைய, ஜனங்கள் நிறைந்திருந்தனர். நாடக ஆரம்பம் முதல் கடைசிவரை, மிகவும் கவனமாய் நாடகத்தைக் கவனித்து வந்தனர். எனது ஆக்டர்களுக்கு முன்னதாகவே, யாழ்ப்பாண வாசிகள் தமிழில் தேர்ந்தவர்கள். ஆகவே, சரியாகப் பாடம் படித்து வையுங்கள், ஏதாவது “கைசரக்குப் போட்டீர்களானால் கண்டுபிடித்து விடுவார்கள்” என்று சொல்லியிருந்தேன்; அதன்படியே அவர்களும் தங்கள் தங்கள் பாடங்களைச் சரியாகப் படித்து அன்றிரவு வெகு விமரிசையாய் நடித்தார்கள். நாடகம் முடிவதற்குக் காலை 21/2 மணியான போதிலும் ஒருவரும் கொட்டகையை விட்டு அகலவில்லை. நாடகத்தின் கடைசிக்காட்சிக்கு முன்பாக, எனது நண்பர், யாழ்ப்பாணத்து ஜட்ஜ் மிஸ்டர் பின்டோ என்பவர் (இப்பொழுது இவர் பெயரை மிஸ்டர் சிரேஷ்டா என்று மாற்றிக் கொண்டார்), மேடையின் பேரில் வந்து சபையைச் சிலாகித்துப் பேசி, யாழ்ப்பாணத்து வாசிகள் தரப்பில் எங்கள் சபைக்கு ஞாபகார்த்தமாக சுமார் 400 ரூபாய் பெறும்படியான வெள்ளித் தட்டு’ சந்தனக்கிண்ணம், பன்னீர்சொம்பு கொடுத்தார் (இவைகள் இன்னும் எங்கள் சபையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன). இன்னும் இரண்டொரு பெரிய மனிதர்களும் சபையின் நாடகங்களைப்பற்றிப் புகழ்ந்து பேசினர் என்பது என் ஞாபகம்.

யாழ்ப்பாணத்தில் எங்கள் சபையார் ஆடிய நாடகங்கள் யாழ்ப்பாணவாசிகளின் மனத்தை எவ்வாறு கவர்ந்ததென்பதற்கு, அச்சமயம், ஒரு சிங்களத்து வர்த்தமானப் பத்திரிகையில் எழுதிய ஒரு வியாசத்தினின்றும் சில பாகங்களை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். சாதாரணமாகப் பத்திரிகைகளில் ஒரு நாடகத்தைப்பற்றி, நாடகமாடுபவர்களின் நண்பர்கள் எவ்வளவு அதிகப்படுத்தி எழுதுகிறார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன். அன்றியும் சிலர் தாங்கள் நடித்ததைப்பற்றித் தாங்களே பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவதும் எனக்குத் தெரியும். ஆயினும் இப்பொழுது நான் மொழி பெயர்க்கப் போகிற விஷயங்களைஎழுதியவர் பெயரும் எனக்குத் தெரியாது. இப்பத்திரிகையும் சில நாட்கள் பொறுத்து எனக்கு அகஸ்மாத்தாய்க் கிடைத்தது; யாழ்ப்பாணத்தில் நல்லூர் என்னும் கிராமத்திலிருப்பவராகத் தன்னை இவ்வியாசத்தில் வெளியிட்டிருக்கிறார். இவர் எங்கள் சபையின் நாடகங்களைப்பற்றி எழுதிய சில பாகங்களைக் கீழே தெரிவிக்கிறேன்.

“(யாழ்ப்பாணத்து) மைதானத்தில் யாழ்ப்பாணம் முழுவதும் திரண்டுபோய்ச் சேர்ந்தது என்று வாஸ்தவமாய்க் கூற வேண்டும்.” இச்சபையின் ஆக்டர்கள் எங்கள் மனத்தைக் கவர்ந்தது மிகுந்த ஆச்சரியகரமான விஷயம். “யாழ்ப்பாணத்தார் மிஸ்டர் சம்பந்தத்தின் பெயரை மறந்து போகலாம். ஒருக்கால் அவரது குரலின் பிரதித் தொனி, மழுங்கிப் போகலாம்; அவர் உருவத்தைச் சுற்றியிருக்கும் தெய்வீகம் பொருந்திய காந்தி மறைந்து போகலாம். காலம் என்பதே அற்றுப் போகும் வரையில், அவர் தமிழ் பாஷையிலுள்ள அழகினையும் பெருமையையும் பூமியில் புதைந்து கிடந்த நிதியை வெளிப்படுத்தியது போல், அவர் வெளிப்படுத்தியது அழியாது நிற்கும்!”

பிறகு நான் நான்கு நாடகங்களிலும் நடித்ததைப்பற்றி ஏதோ புகழ்ந்து கூறியுள்ளார். அதை இங்கு எழுத எனக்கிஷ்டமில்லை. ஆயினும் அவர் எனதுயிர் நண்பனான சி. ரங்கவடிவேலுவைப்பற்றி எழுதியதை மாத்திரம் இங்கு மொழி பெயர்க்க, இதை வாசிக்கும் எனது நண்பர்களின் அனுமதியைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

“எல்லா ஆக்டர்களைவிட முதன்மை மிஸ்டர் ரங்கவடி வேலுக்குக் கொடுக்க வேண்டும். இந்நாடகங்களிலெல்லாம் இவர் முக்கியமான ஸ்திரீ பாகம் தரித்து, சபையோரின் மனத்தையெல்லாம் மிகவும் கவர்ந்தனர். இவர் ஊர்வசி வேடம் பூண்டு என்ன அழகாயும் அருமையாகவும் நடனம் செய்தார்! யவ்வன அழகிய அதரமுடையவர்! அவர் புன்னகை புரியும் போது நம்முடைய மனத்தையெல்லாம் எவ்வாறு கவருகிறார்! அழகிய சாரியணிந்து பெண் கோலத்துடன், சித்ராங்கியாகவும், சுலோசனையாகவும், சாரங்கதரனுடனும் ஸ்ரீதத்தனுடனும் அவர் பேசுங்கால் இவர் வாஸ்தவத்தில் ஸ்திரீ ஜன்மம் எடுத்தவரே என்று யார்தான் எண்ணமாட்டார்கள்! அவரது அபிநயங்களெல்லாம் எவ்வளவு பொருத்தமானதாயிருக்கின்றன! சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி தன் மனோபாவங்களைக் காட்டுகிறார்! வாஸ்தவமாய் இவர் எல்லாருடைய மதியையும் மயங்கச் செய்தார் என்பது திண்ணம்! இவரை நாடகமேடையிற் பார்த்த பிறகு, மாத்யு ஆர்னால்டு என்பவர், தன் சிறுவயதில், எடின்பரோ நாடக சாலையில் ஒரு முறை ராஷில் என்னும் நடிக சிரோன்மணியைப் பார்த்துவிட்டு, அவளை இரண்டு மாதம் வரையில் பாரிஸ் நகரத்தில் பின் தொடர்ந்தார் என்று கேள்விப்படுவது ஓர் ஆச்சரியமாகாது!”

இவர் இந்த வியாசத்தை அடியிற்கண்ட வார்த்தைகளுடன் பூர்த்தி செய்கிறார். “இவ்வழகிய நாடக சபையார், நம்முடைய மனத்தையெல்லாம் கவர்ந்துவிட்டு, நம்மைவிட்டுச் சென்னை போய்ச் சேர்ந்துவிட்டனர். போகும் போது நமக்கு நன்கொடையாக என்ன அளித்துச் சென்றனர்? இவர்கள் அரங்கத்தின்மீது ஆடியதனால் நாம் அறிந்த புத்திமதி என்ன? அவர்கள் போன பிறகு, மைதானத்தின் பக்கம் நான் போய் அவர்கள் ஆடிய நாடகக் கொட்டகையிருந்த இடத்தைப் பார்க்குங்கால், என் மனத்தின்கண் இரண்டு உருவங்கள் தோன்றுகின்றன. ஒன்று-மிகுந்த அழகுடைய முகச் சன்னங்கள் உடையதும், கருமேகம் போன்ற கேசம் நிறைந்ததும், பட்டுப் புடைவை அணிந்து பல விலையுயர்ந்த ஆபரணங்களணிந்ததாம்! - மற்றொன்று சௌம்யமாயிருந்தபோதிலும் திடசித்தத்தைக் குறிக்கின்ற முகத்தையுடையது. சி.ரங்கவடிவேலு, ப. சம்பந்தன் ஆகிய இவர்களுடைய இனிய குரலானது எனக்கு என்ன சொல்லுகிறதென்றால் “நாடக மேடையானது எல்லாவற்றையும் வெல்லும் சக்தியுடையது; யாழ்ப்பாணத்தில் உடனே ஒரு நாடக சபையை ஏற்படுத்துங்கள் என்பதேயாம்.”

பிறகு மறுநாள் காலையில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் கொழும்புக்குப் புறப்பட்டோம். சபையின் மற்ற அங்கத்தினர் அன்று யாழ்ப்பாணததில் தங்கியிருந்து மறுநாள் புறப்பட்டு வருவதாகச் சொன்னார்கள். என் உடம்பு அசௌகர்யத்தைப்பற்றி நான ஒரு நாள் முன்னதாகப் புறப்பட்டு, கொழும்பில் ஒரு நாள் தங்கி, பிறகு எல்லோருடனும் பட்டணம் போக வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டபொழுது, எங்களுடைய யாழ்ப்பாணத்துப் புதிய நண்பர்களெல்லாம் அங்கு வந்து எங்களைக் கௌரவப்படுத்தி அனுப்பினார்கள்.

அன்று சாயங்காலம் கொழும்பு வந்து சேர்ந்து, மிஸஸ் திருநாவுக்கரசு அம்மாள் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம். எங்களைத் தனது அதிதிகளாக வரவழைத்து, அந்த அம்மையார் என்னை அன்றிரவு முதலில் பார்த்த பொழுது, “மிஸ்டர் சம்பந்தத்தின் அருவத்தைப் பார்ப்பது போலிருந்தது, எனக்கு” என்று சொன்னார்கள். அவ்வளவு மெலிவடைந்து முகம் வெளுத்திருக்க வேண்டும் நான்! ஆயினும் தேக பலம் குன்றியிருந்தபோதிலும் மனத்தில் மாத்திரம் எடுத்த காரியத்தை எப்படியாவது ஈசன் கருணையினால் முடித்திட்டோமே என்னும் சந்துஷ்டி குடிகொண்டிருந்தது.

இந்தத் திருநாவுக்கரசு அம்மாள், மிஸ்டர் ராக்வுட் என்னும் பிரபல வைத்தியரின் மூத்த மகள். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மூன்று பாஷைகளிலும் மிகுந்த விற்பன்னமுடையவர்கள்; சாதாரணமாகவே கற்றறிந்த மாதர்களையுடைய இந்த இலங்கைத் தீபத்தில், இவர்கள் எல்லோராலும் மிகுந்த கல்வி செறிந்தவர்களாக மதிக்கப்பட்டவர்கள்; இவர்கள் இரண்டு நாள் தன் வீட்டில் என்னைத் தங்கச் செய்து, நோயாளியாகிய எனக்குச் செய்த உபசரணை என் மரண பர்யந்தம் மறக்கற்பாலதன்று. என் அன்னையைப் போல என்னை ஆதரித்த இவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? என் மனமார்ந்த வந்தனத்தை இங்கு நான் எழுதி வைப்பது தவிர்த்து வேறொன்றும் செய்ய அசக்தனாயிருக்கிறேன்.

இம்மாது சிரோமணி இம்முறை நான் இலங்கைக்கு வந்த பின் பரிசயமான பிறகு, நான் அப்போதைக்கப்போது அச்சிடும் புஸ்தகங்களையெல்லாம் தவறாது இவர்களுக்கு அனுப்புவது என் வழக்கம். அவற்றையெல்லாம் படித்து, அவைகளைப்பற்றி அப்போதைக்கப்போது இவர்கள் மதிப்புரை எழுதி எனக்கு அனுப்புவார்கள். எனக்கு எழுதியனுப்பும் எல்லோருடைய மதிப்புரையைவிட, இவர் மதிப்புரைக்கே நான் அதிக கௌரவம் பாராட்டுகிறேன்; ஏனெனில், மற்றவர்களைப் போலல்லாது ஏதாவது குற்றம் குறையிருந்தால் எனக்கு அவற்றை உடனே எடுத்துக்காட்டும் அபூர்வமான சிறந்த குணம், திருநாவுக்கரசு என்னும் சரியான பெயர் பெற்ற இம்மாதரசியிடம் உண்டு.

இம்முறை இலங்கைக்குச் சபை போய் வந்ததன் பலனாக, ரூபாய் 1500 கட்டட பண்டுக்குச் சேர்க்கப்பட்டது. அன்றியும் அதன் நேர்பலனாகக் கொழும்பில், சுபோத் விலாச சபையென்ற நாடக சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலும் பிறகு ஒரு நாடக சபை ஏற்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். கொழும்பு சபை பல நாடகங்கள் ஆடி இன்னும் ஜீவித்திருக்கிறதென அறிவேன்; யாழ்ப்பாணத்து சபையைப் பற்றி நான் கேள்விப்பட்டு சில வருஷங்களாயது.