நாடக மேடை நினைவுகள்/22ஆவது அத்தியாயம்
1913ஆம் வருஷம் எங்கள் சபையின் வர்த்தமானத்தில் குறிக்க வேண்டியது எனக்கு ஞாபகமிருக்கிற வரையில், இரண்டு விஷயங்களே; ஒன்று சீமையிலிருந்து வந்த ராயல் கமிஷனுக்கு ஆனரபில் பி.எஸ். சிவஸ்வாமி ஐயர் தன் வீட்டில் ஒரு விருந்தளித்தபொழுது, அவரது வேண்டு கோளின்படி, அச்சமயம் எங்கள் சபையார் “இந்திய தேசத்தின் சரித்திரம்” பல தோற்றக் காட்சிகளாகக் காட்டியது; மற்றொன்று-காலஞ்சென்ற வி. கிருஷ்ணசாமி ஐயருடைய உருவப்படத்தை, சென்னை கவர்னர் லார்ட் பென்ட் லென்ட் திறந்து வைத்தது.
இவ் வருஷம் நான் இரண்டு சிறு நாடகங்களைப் புதிதாய் எழுதினேன். ஒன்று, ‘கோனேரி அரசகுமாரன்’ என்பது; மற்றொன்று, ‘சிறுத்தொண்டர் சரித்திரம்.’ கோனேரி அரசகுமாரன் என்பது, ஷேக்ஸ்பியர் மகாகவி ஆங்கிலத்தில் எழுதிய ‘நான்காம் ஹென்றி’ என்னும் நாடகத்திலிருந்து ஒரு சிறு பாகத்தை எடுத்து, ஹாஸ்ய ரூபமாக எழுதியதாம். சிறுத்தொண்டரின் கதை யாவருக்கும் தெரிந்ததே. ஒரு நாள் நானிருக்கும் ஆச்சாரப்பன் வீதியில் ஏதோ சிறுவர்களுடைய நாடக சபையொன்று, என்னைத் தங்கள் வருஷாந்தரக் கொண்டாட்டத்திற்கு அக்கிராசனம் வகிக்கும்படியாகக் கேட்டுக்கொண்டது. அப்பொழுது அப்பிள்ளைகள், இக் கதையை ஒருவாறு நடித்தனர்; கதை நன்றாயிருக்கிறதென என் மனத்தில் தோன்றியது; அதன் பேரில் மறுநாள் இதை நான் நாடக ரூபமாக எழுத ஆரம்பித்து, இதன் முக்கியமான இரண்டு காட்சிகளையும் இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். உடனே எங்கள் சபையின் தசராக் கொண்டாட்டம் வரவே, அதன் முதல் நாள் நான் முன்னே சொன்ன “கோனேரி அரசகுமாரன்” நாடகத்தை ஆடி, இந்தச் சிறுத்தொண்டர் சரித்திரத்தை ஸ்திரீகளுக்கென்று ஏற்படுத்திய தினம் ஆடினோம்.
இச்சிறுத்தொண்டர் நாடகமானது நான் எழுதிய பல நாடகங்களுள் மிகச் சிறியதாயினும், அதன்மீது எனக்கு மிகவும் பிரியம் உண்டு. இதுவே ஒரு சிறிய நாடகம். இதிலும், சிறுத்தொண்டர் இரண்டு காட்சிகளில்தான் வருகிறார். இருந்தும், பெரிய நாடகப் பாத்திரங்களாகிய அமலாதித்யன், மனோஹரன், ஸ்ரீதத்தன், சுந்தராதித்யன் முதலியவற்றை நடிப்பதைவிட, இச் சிறுத்தொண்டர் நாடகம் நடிப்பதில் எனக்குச் சந்தோஷமதிகமாயுண்டு. என்னிடத்தில் வேறெந்த நற்குணமில்லாவிட்டாலும் பக்தி என்பது மாத்திரம் கொஞ்சம் இருக்கிறதென எண்ணுகிறேன். ஆகவே பக்தி ரசமமைந்த இச்சிறு நாடகத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது போலும்.
மேற்சொன்னபடி தசராவில் ஸ்திரீகள் தினத்தன்று இதை முதன் முதல் நடித்தபொழுது, எங்கள் சபையின் சட்டங்களின் பிரகாரம், அங்கத்தினராயிருந்தபோதிலும், ஆண் மக்கள் இந்நாடகத்தைப் பார்க்க முடியாமலிருந்தது. ஐகோர்ட்டு ஜட்ஜ் ஹானர்பில் சதாசிவ ஐயர் மாத்திரம் எங்கள் உத்தரவைப் பெற்று, விக்டோரியா பப்ளிக் ஹாலில், அரங்கத்தின் மீதிருந்து பார்த்தார். நான் இந்தச் சிறுநாடகத்தை முடித்துத் திரும்பியவுடன், பக்கப்படுதாவிலிருந்து பார்த்துக் கொண்டு ஆசீர்வாதம் செய்து மிகவும் புகழ்ந்தார்! இதை நான் இங்குத் தற்புகழ்ச்சியாக எடுத்து எழுதவில்லை. அச்சீமானது பேரன் எனது நண்பர்கள் அறியும் பொருட்டே இங்கு எழுதினேன். புகழ்ந்தது மன்றி, “இதென்ன சம்பந்தம்? இப்படிப்பட்ட பக்தி ரசமமைந்த நாடகத்தை ஆண் மக்களாகிய அங்கத்தினர் பார்க்க இடமில்லாமற் போயிற்றே. இதை மறுதினம் நாங்களெல்லாம் பார்க்க ஆடவேண்டு” மென்று கூறி, காரியதரிசிகளிடம் பேசி, மறுநாள் வேறு ஏதோ நாடகம் வைத்திருந்ததை மாற்றி இதையே போடச் செய்தார்!
மறுநாள் எனது நண்பர்களெல்லாம் இதைப் பார்த்த பொழுது, மிகவும் நன்றாயிருக்கிறது, இதைக் கொஞ்சம் பெரியதாக எழுதி, அங்கத்தினர் மாத்திரமின்றி, அயலாரும் பார்க்கும்படியாக, பிரவேசக் கட்டணமுடைய நாடகமாக ஆட வேண்டுமென்று வற்புறுத்தினர். பிறகு அதனுடன் ஒரு ஹாஸ்ய ரசமமைந்த இடைக்காட்சியும், இன்னும் இரண்டு சிறு காட்சிகளும் சேர்த்து எழுதி அச்சிட்டேன். இதில் வெண்காட்டு நங்கையாக நடித்த எனதுயிர் நண்பர், சாதாரணமாக விலையுயர்ந்த சரிகைச் சேலைகளையும் ரவையிழைத்த நகைகளையுமே அணிய விரும்புபவர்; குரநாட்டுச் சேலையொன்றை அணிந்து, தன் கூந்தலைச் சொருகிக் கொண்டையாகப் போட்டுக் கொண்டு தோன்றியது, எனக்கு இப்பொழுதும் பிரத்யட்சமாகப் பார்ப்பதுபோல் என் மனத்தின்கண் தோன்றுகிறது. இதை இங்கெடுத்து எழுதியதற்கு இன்னொரு முக்கியக்காரணமுண்டு. அதாவது அந்நாடகப் பாத்திரம் எப்படி உடை தரிக்க வேண்டுமென்பதை என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே. சில சபைகளில் இப்பாத்திரத்தைப் பூணும் ஆக்டர், விலையுயர்ந்த சம்கி புடைவையைக் கட்டிக் கொண்டு, ரவைசெட் நகைகளெல்லாம் அணிந்து கொண்டு, பிச்சாடாவாவது பின்னலாவது போட்டுக் கொண்டு தோன்றுவதைப் பார்த்திருக்கிறேன். அது முற்றிலும் தவறாகும். வெண்காட்டு நங்கை தெற்கத்திய ஸ்திரீ; தன் பொருளையெல்லாம் அடியார்க்கு அமுதளிப்பதில் செலவிட்ட ஒரு பக்தருடைய மனைவி. அதற்கேற்றபடி நடையுடை பாவனைகள் இருக்க வேண்டும் என்பது திண்ணம். அன்றியும் முக்கியமாக சேலை தரிப்பதிலும் ‘சென்னப் பட்டணத்து’ பாஷன்போல் தரிக்காமல், தெற்கத்திய மாது சிரோமணிகள் தரிப்பது போல் தரிக்க வேண்டும்.
1914ஆம் வருஷம், சுகுண விலாச சபை மிகவும் விருத்தியடைந்த வருஷங்களிலொன்று. இவ் வருஷத்தில் எங்கள் சபை திருச்சிராப்பள்ளி, கும்பகோணம் என்னும் இரண்டு இடங்களுக்குப் போய் நாடகங்கள் ஆடியது. திருச்சிராப்பள்ளியில் 5 நாடகங்கள் தமிழில் ஆடினோம். இவ்விடத்தில் எங்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் எல்லாம் தற்காலம் அசிஸ்டென்ட் டிராபிக் இன்ஸ்பெக்டரா யிருக்கும் எப்.ஜி. நடேச ஐயர் செய்தார். ஆயினும் நாங்கள் ஆடிய நாடகங்களுக்கு ஜனக்கூட்டம் அதிகமில்லை. இவ்வூரில் ஒரு பக்கமாக இருந்த ரெயில்வே இன்ஸ்டிட்யூட் நாடக சபையில் நாங்கள் ஆடியது ஒரு வேளை ஒரு காரணமாயிருக்கலாம். ஆயினும் அது ஒரு முக்கியக் காரணமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இவ்விடத்தில் நாங்கள் நடத்திய மூன்றாவது நாடகமாகிய காலவ ரிஷி நாடகத்தின் ஆரம்பத்தில் நேரிட்ட ஒரு சமாச்சாரம் இப்பொழுதும் நினைத்துக் கொண்டால் எனக்கு நகைப்பைத் தருகிறது. இரவு 9 மணிக்கோ 9½ மணிக்கோ நாங்கள் குறிப்பிட்டபடி நாடகத்தை ஆரம்பம் செய்தோம். டிராப் படுதா மேலே போனவுடன், ஹாலில் பார்க்க, சரியாகப் பன்னிரண்டு பெயர்தான் உட்கார்ந்திருந்தார்கள்!
இதை நான் கவனித்தவனன்று; நான் இந்திரன் வேடம் பூண்டு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தேன். என் அருகில் நின்று கொண்டிருந்த சித்திரசேனன் வேடம் பூண்ட எனது நண்பர் டாக்டர் டி. சீனிவாச ராகவாச்சாரி இதைக் கவனித்து, ஆடிக்கொண்டிருந்த அப்சர ஸ்திரீகளுடைய நடனத்திற்குத் தாளம் தட்டிக் கொண்டிருக்க வேண்டியவர், என் பக்கமாகத் திரும்பி, சபையோர் அறியாதபடி “என்ன வாத்தியார்! ஹாலில் வந்திருப்பவர்களைவிட, மேடையின்மீது நாம் அதிகப் பெயர்கள் இருக்கிறோமே!” என்று சொல்லி நகைத்துவிட்டார்! அவர் கூறியதென்னமோ வாஸ்தவம்தான். ஏனெனில், இந்திரன் கொலுவில் திக்பாலர்கள், ரிஷிகள் முதலியோரை யெல்லாம் கணக்கிட்டால் நாங்கள் 15 பெயர் இருந்தோம். “ஸ்! நமக்கென்ன இதனால்? நம்முடைய கடமை நாடகத்தை நன்றாய் நடத்தவேண்டியது. ஹாலில் ஜனங்கள் வந்திருக்கிறார்களா இல்லையா என்று நாம் கவனிக்கக்கூடாது” என்று கோபித்து மொழிந்ததை, இன்றும் எப்பொழுதாவது நாங்கள் வேடிக்கையாகச் சாப்பிட்டு விட்டுக் காலங்கழிக்கும் சமயங்களில், என்னைப் போல முகத்தைச் சுளித்து, அவ்வார்த்தைகளைக் கூறிக் காட்டுவார்.
கடைசி இரண்டு நாடகங்களுக்கும் ‘காலவரிஷி’யைவிட ஜனங்கள் அதிகமாக வந்தனர். இருந்தும் திருச்சிராப்பள்ளி வரையில், வரவு செலவுக் கணக்குப் பார்த்த பொழுது, சபைக்குக் கொஞ்சம் நஷ்டத்திலேயேயிருந்தது. ஆகவே, இவ்விடத்தைவிட்டு கும்பகோணத்திற்குப் புறப்பட்ட பொழுது, திருச்சிராப்பள்ளியிலே இப்படியிருந்ததே, இதைவிடச் சின்ன ஊராகிய கும்பகோணத்தில் எப்படியிருக்கப் போகிறது என்னும் மனவருத்தத்துடன்தான் புறப்பட்டோம்.
போஜனத்துக்குமேல் மத்தியான ரெயிலில் புறப்பட்டு சாயங்காலம் கும்பகோணம் வந்து சேர்ந்தோம். ஸ்டேஷனி லிருந்து எங்கள் விடுதிக்குப் போகும் வழியில், நாடகக் கொட்டகை வாயிலில் அச்சமயம் கும்பகோணம் சப் ஜட்ஜாயிருந்த எனது பழைய நண்பர் பாலசுப்பிரமணிய ஐயரைக் கண்டோம்; அவர் அச்சமயம், நாங்கள் முன்னதாகவே திருச்சிராப்பள்ளியிலிருந்து இவ்விடம் அனுப்பிய படுதாக்கள் முதலியவற்றை ஆட்கள் இறக்குவதை மேல்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் புன்சிரிப்புடன் எங்களுக்கெல்லாம் நல்வரவு கூறியதை நான் ஒரு நற்சகுனமாகக் கொண்டேன். இந்த பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் மயிலாப்பூரில் எங்கள் சபை “விரும்பிய விதமே” என்னும் நாடகம் போட்டது முதல் எனக்கு அத்யந்த நண்பராயிருந்தவர். எங்கள் சபையின் பாக்கியத்தால் இச்சமயம் இவர் இவ்விடம் சப் ஜட்ஜாயிருக்கும்படி நேர்ந்தது. இவர் நாங்கள் கும்பகோணத்திற்கு வந்தது முதல் அதைவிட்டுப் பட்டணம் புறப்பட்ட வரையில், கோர்ட் வேளை தவிர, மற்றக் காலமெல்லாம் எங்களுடனேயே கழித்தார் என்று கூறுவது மிகையாகாது.
ஊரில் பெரிய உத்தியோகஸ்தராகிய இவர் எங்கள் சபை விஷயமாக இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளவே, ஊரிலுள்ள மற்றவர்களெல்லாம் எங்கள் சபையை மிகவும் மதிக்க ஆரம்பித்தனர். இதன் பலன் என்னவென்றால், இவ்விடம் எங்கள் முதல் நாடகமாகிய “மனோஹரன்” ஆரம்பிப்பதற்கு ஒன்றரை மணி சாவகாசத்திற்கு முன்பாக, கொட்டகையில் நாங்கள் விற்பதற்காக அச்சிட்டிருந்த டிக்கட்டுகளெல்லாம் ஆய்விட்டன! அதன் பேரில் எங்கள் சபை காரியதரிசியாக இருந்த எனது தமயனார் ஆறுமுக முதலியார், டிக்கட்டுகளில்லாமல், கையில் ரூபாயை வாங்கிக் கொண்டு கொட்டகையில் காலி இடங்களில் எத்தனை பெயரை நிற்கவிட முடியுமோ, அத்தனை பெயரை உள்ளே விட்டார்! கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அதுகூட முடியாமல், கொட்டகை நிரம்பிவிட்டபடியால் அதையும் நிறுத்த வேண்டி வந்தது. இதை யெல்லாம் அறிந்த எங்களுக்குத் திருச்சிராப்பள்ளியில் பட்ட வருத்தமெல்லாம் பறந்து போய் அதிக சந்தோஷம் உண்டாச்சுது. இவ்வாறு குதூஹலத்துடனிருந்த நாங்கள், மிகவும் நன்றாய் நடித்தோம் என்று நான் கூறவே வேண்டியதில்லை. ஆயினும் ஒரு சமாச்சாரம், மேற்சொன்னபடி கொட்டகையில் நிற்க இடமில்லாமல் ஜனங்கள் நிறைந்திருந்த போதிலும், நாங்கள் எல்லாம் மிகவும் நன்றாய் நடித்த போதிலும், நாடக ஆரம்ப முதல் கடைசி வரையில் ஒரு கரகோஷமாவது என் செவியிற்படவில்லை! இதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்த நான், நாடகம் முடிந்தவுடன், ஆக்டர்களுடன் அருகாமையிலிருந்த எங்கள் விடுதிக்குத் திரும்பிப் போகும் பொழுது, எங்கள் பந்தோபஸ்துக்காக நான்கு கான்ஸ்டபிள்களோடு எங்களோடு வந்த டெபுடி சூபரின்டென்டென்ட் ஆப் போலீஸ் அவர்களை, நாடகக் கொட்டகை முழுதும் நிரம்பியிருந்த ஜனங்களெல்லாம் சும்மாயிருந்தார்களே, என்ன காரணம் என்று மெல்லக் கேட்க, அவர் “யாருக்காக சும்மா இருந்தார்கள்? எவனாவது கைதட்டிக் கேலி செய்திருந்தால், உடனே அப்படியே அவனை ஸ்டேஷனுக்கு இழுத்துக்கொண்டு போய் விடும்படி, அங்கங்கே கான்ஸ்டபிள்களை நிறுத்திவைத்தேன்!” என்று பதில் உரைத்தார். அப்பொழுதுதான் எனக்குக் காரணம் வெளியாயது. இவ்வூர் வழக்கம் என்ன வென்றால், நாடகத்தில் ஏதாவது நன்றாகயில்லாவிட்டால் கைதட்டிக் கேலி செய்வதாம்! கரகோஷம் செய்வது, நன்றாயிருக்கிறதென உற்சாகப்படுத்துவது என்பதை அறிந்திலர் அச்சமயம்! சில வருஷங்களுக்குப் பிறகு இதெல்லாம் மாறிவிட்டது.
இரவில் போலீஸ் பந்தோபஸ்துடன் நாங்கள் வீட்டிற்குச் செல்வதைக் கண்ட ஜனங்கள், இதனின்றும் இன்னொரு தவறான ஊகை கொண்டனர். எனதுயிர் நண்பர் ரங்கவடி வேலு முதலிய ஆக்டர்கள் அணிந்திருந்த நகைகளெல்லாம் மிகவும் விலையுயர்ந்தன, இந்நகைகளின் பந்தோபஸ்துக் காக போலீஸ் கான்ஸ்டபிள்கள் கூடப்போகிறார்கள் என்று பேசத் தொடங்கினர். என்னுடன் இதைப்பற்றிப் பேசிய இரண்டொருவருக்கு அந்நகைகளெல்லாம், வெள்ளைக் கற்களாலும் பித்தளையினாலும் ஆனவை என்று நான் கூறியபோதிலும், இப்படிச் சொன்னால்தான் அவற்றை யாரும் களவாடமாட்டார்கள் என்னும் காரணத்தினால் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று மறுத்தனர்! இந்தத் தர்ம சங்கடத்திற்கு நான் என்ன செய்வது? உலக வழக்க மீதாகும்! பணக்காரன் பித்தளையை அணிந்திருந்தால் அது பொன்னாக மதிக்கப்படுகிறது; ஏழை வாஸ்தவமாகப் பொன்னை அணிந்திருந்தாலும் அது பித்தளை என மதிக்கப்படுகிறது!
எங்கள் முதல் நாடகமானது இந்தச் சிறு ஊரில் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணினதென்றே சொல்லவேண்டும்; பாலசுப்பிரமணிய ஐயர் எனக்குத் தெரிவித்தபடி, ஊரில் எங்கே போனாலும் சுகுண விலாச சபை பேச்சாகவிருந்தது எனக்கு முக்கியமாக திருப்தியைத் தந்தது. கற்றறிந்தவர்கள் எங்கள் சபையின் நாடகத்தைப் புகழ்ந்ததன்று; சாதாரண ஜனங்கள், அதாவது கடைசி வகுப்பு டிக்கட்டு வாங்கிக் கொண்டு வந்து பார்த்த ஜனங்கள்கூடச் சந்தோஷப்பட்டனர் என்பதேயாம். இதை நான் அறிந்த விதத்தை இங்கு எழுதுகிறேன். எந்த ஊருக்குச் சென்றாலும் நாடகமானவுடன் மறுநாள் எங்கள் சபை ஸ்டேஜ் அசிஸ்டெண்டாகிய கேசு (கேசவ முதலியார்) அந்த ஊரிலுள்ள பிரபலமான காப்பி ஹோட்டல்களுக்கெல்லாம் மெல்லப் போய்ச் சுற்றிவிட்டு வருவான். அங்கு ஜனங்கள் சபையைப்பற்றி ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் அதை யெல்லாம் எனக்குத் தெரிவிப்பான்; இந்தப் “பரதேசித் தபால்” மூலமாகச் சாதாரண ஜனங்களின் அபிப்பிராயத்தை நான் அறிவது வழக்கம். இதன்படி கேசு மறுநாள் எனக்குத் தெரிவித்ததாவது: “காபி ஹோட்டல்களில் சபைப் பேச்சு தவிர வேறு பேச்சு கிடையாது! இரண்டாவது நாடகத்திற்கும் நீங்கள் அதிக டிக்கட்டுகள் அச்சடிக்க வேண்டியதுதான். நாயினா கண்ணுவைப் பற்றியும் (நாயினாகண்ணு என்பது ரங்கவடி வேலுவின் வீட்டுச் செல்லப் பெயர்) பத்மநாபராவைப் பற்றியும் பேசாத பெயர்களில்லை” என்பதேயாம். என்னுடைய ஆக்டிங்கைப்பற்றிப் புகழ்ந்ததாகவும், ஆயினும் இவர் ஏன் பாடுகிறதில்லை என்று அநேகம் பெயர் கேட்டதாயும் தெரிவித்தான். அன்றியும், சில சாப்பாட்டு ஹோட்டல்களில், இனி சுகுண விலாச சபை நாடக தினங்களில் இரவில் ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு போட்டாய்விட வேண்டியது என்று ஏற்பாடு செய்துகொண்ட தாகவும் தெரிவித்தான்.
இவ்வூரில் நாங்கள் நடத்திய இரண்டாவது நாடகம் லீலாவதி- சுலோசனா; அதற்காக அ. கிருஷ்ணசாமி ஐயரை, சென்னையிலிருந்து லீலாவதி வேஷத்திற்காக வரவழைத்தோம். டிக்கட்டுகள் அதிகமாக அச்சிட்டு, எல்லா ஏற்பாடுகள் செய்தும், நாடக ஆரம்பத்திற்கு அரைமணி முன்னதாக, டிக்கட்டுகள் போதாமற்போயின; கொட்டகையிலும் நிற்க இடமில்லாமற் போயிற்று. இந்நாடகத்தில் கிருஷ்ணசாமி ஐயருடைய பாட்டும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவின் ஆக்டும் மிகவும் கொண்டாடப்பட்டன.
இங்கு நடத்திய கடைசி நாடகம் “சாரங்கதரன்.” நாடக தினத்தின் காலையிலேயே சிலர் முப்பது நாற்பது டிக்கட்டுகள் வாங்க ஆரம்பித்தனர். இதற்குக் காரணம் என்னவென்று பிறகுதான் அறிந்தேன். முதல் இரண்டு நாடகங்களுக்குக் டிக்கட்டுகள் ஆய்விட்ட படியால் காலையிலே இவைகளை வாங்கி, பிறகு சாயங்காலம் அவைகளை ஒன்றுக்கு இரண்டு விலையாக விற்று லாபம் சம்பாதித்தார்களாம்! சாயங்காலம் எங்கள் வழக்கம்போல் ரங்கவடிவேலும் நானும் 5½ மணிக்கு நாடகக் கொட்டகைக்குப் போக, டிக்கட்டு ஆபீசுக்கு எதிரில் வழக்கம்போல் மேளம் வாசிக்கும் வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களை உறையில் போட்டுக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணம் என்னவென்று என் தமயனார் ஆறுமுக முதலியாரை வினவ, அவர் “டிக்கட்டுகளெல்லாம் விற்றாயது; இனி மேளம் வாசித்துக் கொண்டிருந்தால் வந்து கேட்பவர்களுக்கு யார் பதில் சொல்வது? அதற்காக மேளத்தை நிறுத்திவிட்டேன்” என்று விடை பகர்ந்தனர்.
இந்த சந்தோஷ சமாச்சாரத்தைக் கேள்விப்பட்ட என்னாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, அன்றைத்தினம் நடித்தது போல் ‘சித்ராங்கி’யாக, முன்னும் நடித்ததில்லை; பிறகும் நடிக்கவில்லை. ‘ராத்திரியெல்லாம் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கிறதே’ என்று வந்திருந்த ஒரு மாது சிரோமணி கூறினார்களாம். எனது நண்பர் பாலசுப்பிரமணிய ஐயர் நாடகம் முடிந்தவுடன், உள்ளே வந்து ‘என்ன முதலியார், நாடகமெல்லாம் முடிந்துவிட்டதே!’ என்று முகவாட்டத்துடன் கூறியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.
இவ்வூரிலுள்ள பெரிய மனிதர்களெல்லாம் எங்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்தனர். அதில் எங்கள் சபைக்குப் பரிசாக சித்திர வேலை செய்யப்பட்ட ஒரு ஷீல்ட் கொடுத்தார்கள். இதை இன்றும் சபையின் தமிழ் ஒத்திகை அறையில் காணலாம். இத்தனைக் குதூஹலத்துடன் எங்கள் சபையை ஆதரித்த கும்பகோணவாசிகளுக்கு, நாங்கள் மறுநாள் பிரதி விருந்து கொடுத்தோம். அப்போது ‘சபாபதி’ நாடகத்தை ஆடினோம். அது ஆடி முடிவதற்குள் நேரமாகி விட்டபடியால், நாங்கள் புறப்பட எண்ணியிருந்த ரெயில் போய்விட்டது. அதன்பேரில் இவ்வூரில் இன்னொரு நாள் தங்கி வரவேண்டியதாயிற்று. இதற்காக நாங்கள் ஒருவரும் துக்கப்படவில்லை. காலஞ்சென்ற பாலகிருஷ்ண உடையார் தன் விடுதியில் எங்களுக்கு அன்றைத்தினம் விருந்து அளித்தார். அன்று சாயங்காலம் எங்கள் நண்பர்களிடமெல்லாமிருந்து விடைபெற்றுக் கொண்டு ரெயிலேறிப் பட்டணம் போகப் புறப்பட்டோம். பாலசுப்பிரமணிய ஐயர், கடைசி வரையில் எங்களுடனிருந்து ரெயில் ஸ்டேஷனுக்கு வந்து எங்களைப் பிரயாணப்படுத்தினார். இவர் எங்கள் சபைக்குச் செய்த பேருதவி என்றும் மறக்கற்பாலதன்று! மற்றவர்கள் மறந்தாலும் என்னால் மறக்க முடியாது.
கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு வரும்பொழுது, ஒரு தேசத்தின் மீது படையெடுத்து, வென்று திரும்பும் வெற்றியினால் எவ்வளவு மனோசந்துஷ்டியிருக்குமோ, அவ்வளவு மனோ சந்துஷ்டியுடையவனாயிருந்தேன் சர்வேஸ்வரன் கிருபையால்.
இந்த இரண்டு ஊர்களுக்கும் எங்கள் சபை சென்று நாடகமாடியதற்கு இன்னொரு பலன் கிடைத்தது. பெங்களூருக்குப் போய்வந்த பிறகு எப்படி அவ்விடம் ஒரு நாடக சபை ஏற்படுத்தப்பட்டதோ, கொழும்புக்குப் போய் வந்த பிறகு கொழும்பில் சுபோத விலாச சபையென்னும் நாடக சபை எப்படி அங்கு ஸ்தாபிக்கப்பட்டதோ, அம்மாதிரியாகவே, திருச்சிராப்பள்ளியில் “ரசிக ரஞ்சனி சபை” என்றும், கும்பகோணத்தில் “வாணி விலாச சபை” யென்றும் ஸ்தாபிக்கப்பட்டன. இவ்விரண்டு சபைகளும் நாளது வரையில் வளர்ந்து வருகின்றன.
இந்த 1914ஆம் வருஷம் ஐரோப்பிய மஹாயுத்தம் ஆரம் பித்த விஷயம் எல்லோரும் அறிந்ததே. அதன் பொருட்டுச் சென்னையில் வார் ரிலீப் பண்டு ஏற்படுத்திய பொழுது, அதற்காக எங்கள் சபையார் ரூபாய் 1000 நன்கொடையாகக் கொடுத்தனர். அன்றியும் பெல்ஜியம் தேசத்து உதவி பண்டுக்காக, தசராக் கொண்டாட்டத்தில், பத்து நாளும் யாசகம் செய்து, சுமார் ரூபாய் 250 அனுப்பினோம்.
மேலும் இவ்வருஷத்தின் கடைசியில் “தென் இந்தியா ஆர்ட்ஸ் (கலைகள்) எக்சிபிஷன்” ஒன்று சபையில் நடத்தினோம். அதற்கு மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்கள் ஒரு தினம் வந்திருந்தார்; மிகவும் நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்து பேசினார்.
இவ் வருஷத்தின் கடைசியில் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் மொத்தமாக நாற்பது நாட்களுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் மேல் மாடியை வாடகைக்கு வாங்கிக்கொண்டு தமிழிலும் தெலுங்கிலும் அநேக நாடகங்கள் நடத்தினோம். அதன் மூலமாக செலவு போக, லாபத்தில் ரூ.1500, கட்டட பண்டுக்குச் சேர்த்தோம்.
இவ்வருஷம் நான் புதியதாக, “ரஜபுத்ர வீரன்” என்னும் ஒரு சிறு நாடகத்தை எழுதினேன். இதை எழுதும்படி நேரிட்ட காரணம் வருமாறு: கணம் பி.ஆர்.சுந்தர ஐயர் காலமான பிறகு, அவருக்குப் பதிலாக ஹைகோர்ட் ஜட்ஜாகிய டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள் எங்கள் சபைக்கு பிரசிடென்ட் ஆனார். சேஷகிரி ஐயர் அவர்கள் தசராக் கொண்டாட்டத்தின் கடைசி நாள் செலவையெல்லாம் ஒப்புக்கொண்டு, இவ்வருஷ முதல் தன் மரணகாலம் வரையில், அதை நடத்தி வந்தார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அத்தினம்தான் அவர் பிறந்த தினம். இக் கொண்டாட்டத்திற்காக, தன்னுடைய சினேகிதர்களாகிய ஐகோர்ட் ஜட்ஜுக்களை யெல்லாம் வரவழைக்கப் போகிறதாகக் கூறி, என்னை அவர்களுக்காக ஒரு புதிய நாடகம் நடத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நான் உடனே யோசித்து, பட்டணமெங்கும் ஐரோப்பாவில் நடக்கும் பெரும் யுத்தத்தைப்பற்றியே பேச்சாயிருப்பதால், யுத்த வீரர்களைப்பற்றிய கதையாயிருக்க வேண்டும் என்று தீர்மானித்து, டாட் என்பவர் ராஜஸ்தானத்துச் சரிதையில் எழுதியிருக்கும் சில சந்தர்ப்பங்களை ஒருங்கு சேர்த்து, ‘ரஜபுத்ரவீரன்’ என்னும் இந்நாடகத்தை விரைவில் எழுதி முடித்தேன். ஆயினும் இது உண்மையில் நடந்த சரித்திரமன்று. இந்நாடகத்தில் நேரிட்டதாயினும், ஏக காலத்தில் ஒன்றாய் இவைகள் சம்பவித்தவைகள் அல்ல; கதாநாயகனான ரணவீர்சிங் என் மனத்தால் நிர்மாணிக்கப் பட்ட பாத்திரமே. இந்நாடகத்தின் கடைசிக் காட்சியை நாடக தினத்தின் காலைதான் எழுதி முடித்தேன். ஆயினும் எனது ஆக்டர்களெல்லாம் நன்றாகப் படித்துத் தங்கள் பாத்திரங்களை மிகவும் அருமையாக நடித்தனர். நான் ரணவீர்சிங்காகவும், ரங்கவடிவேலு என் மனைவியாகிய சந்திராபாயாகவும் நடித்தோம். ஆயினும் வயோதிகத்தினால் கண் குருடாகிய ஜனாவாலாபாய் என்னும் ரணவீர்சிங்கின் தாயார் வேடம் பூண்ட எனது நண்பர் பத்மநாபராவ் ஆக்டு செய்ததுதான் எல்லோருடைய மனத்தையும் கவர்ந்தது. அன்றைத்தினம் வந்திருந்த பல ஹைகோர்ட்டு ஜட்ஜுகளும், நாடகத்தை மிகவும் புகழ்ந்ததாக சேஷகிரி ஐயர் எனக்குத் தெரிவித்தார். அக்காலம் “நியூ இந்தியா” என்னும் தினப் பத்திரிகையைப் பிரசுரம் செய்து வந்த பெசண்ட் அம்மை, இந்நாடகத்தைப் பார்த்து, மறுநாள் இதைப் பற்றிப் புகழ்ந்து பேசியதுமன்றி, இந்திய தேசத்தில் தற்காலம் மழுங்கிப் போயிருக்கும் ஜனங்களின் வீர உற்சாகத்தை அபிவிருத்தி செய்ய, இந்நாடகமானது இந்தியா தேச முழுவதும் ஆங்காங்கு ஆடவேண்டுமென்று எழுதினார்கள். இந்நாடகத்தில் ஒரு காட்சி, முக்கியமாக மிகவும் ரசமாயிருந்ததென எல்லோரும் புகழ்ந்தனர்; அது ரஜபுத்ர வீரர்களுடைய பத்தினிகளெல்லாம் மஞ்சள் வஸ்திரம் தரித்து, அக்னியை வலம் வந்து அதில் பாய்ந்து மரித்த ‘ஜோஹர்’ என்னும் சடங்குக் காட்சியேயாம். ராணாவின் மனைவி, சிதையை மூட்டக் கடைசியில் கற்பூரத் தட்டையேந்தி முன்பு செல்ல, பிறகு எல்லா ரஜபுத்ர ஸ்திரீகளும் வர, அவர்கள் பின்னால், சிறுமிகளும், குழந்தைகளும் மஞ்சள் வஸ்திரமணிந்து சென்றனர். இந்தக் காட்சியை மத்யானம் நான் ஒத்திகை செய்த பொழுது, நான் எழுதிய பொழுது தோன்றாத ஒரு யோசனை எனக்குத் தோன்றியது. அதன்படி அக்குழந்தைகள் இரண்டின் கையில், அவர்கள் அருமையாய் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு மரப்பொம்மைகளை, அவைகளுக்கும் மஞ்சள் வஸ்திரம் தரித்து, தீயில் மூழ்கக் கொண்டு போகச் செய்தேன். நாடகமானது அன்று சாயங்காலம் நடிக்கப்பட்டபொழுது, இவ்வாறு சிறு குழந்தைகள் தங்கள் பொம்மைகளையும் கையிலேந்தித் தீப் புக அரங்கத்தைக் கடந்து சென்றதைக் கண்டபொழுது, தன் அருமைக் குழந்தை அதன் பொம்மையையும் கையிற் கொண்டு தீப் புகப் போனதைக் கண்ட தகப்பன் மனம் எவ்வாறு பதறியிருக்கும் என்று நினைத்தேன்; உடனே என்னையுமறியாதபடி எனக்குக் கண்ணீர் ஆறாகப் பெருகியது! நாடகத்தில் ஏதோ நான் நடித்ததாக இதை வந்தவர்கள் எண்ணினர். இதை நான் இங்கு எடுத்து எழுதியதற்கு ஒரு முக்கிய காரணம், இந்தக் காட்சியை ஆக்டு செய்யும் ஆக்டர்களும் அல்லது இம்மாதிரியான சோககரமான காட்சிகளை நடிக்கும் ஆக்டர்களும், நடிக்க வேண்டிய கதையின் சந்தர்ப்பத்தை மனத்தில் நன்றாய்க் கொள்வார்களானால், கண்ணீர் அவர்களுக்குத் தானாகப் பெருகும்; அழ வேண்டிய சந்தர்ப்பங்களில், கண்ணுக்குக் கற்பூரத்தூள் முதலியன போட்டுக் கொள்ள வேண்டிய தில்லை; அல்லது இன்னும் சில ஆக்டர்கள் செய்கிறபடி, ஸ்பிரிட் கம் தடவிக்கொள்ள வேண்டியதில்லை!
நாடக மேடை நினைவுகள் இதை முதன் முறை நடித்தபொழுது பல்லாரி ராகவாச்சார்லு என்னும் சிறந்த தெலுங்கு ஆக்டர் மஹம்மதிய அரசனாகிய பஹதூர்ஷா வேடந் தரித்தார். அவர் நான் தமிழில் எழுதிய வார்த்தைகளையெல்லாம் ஹிந்துஸ்தானியில் மொழி பெயர்த்துப் பேசினார். இவர் கடைசி காட்சியில் மிகுந்த புத்தி சாதுர்யமாய் நடித்த ஒரு விஷயத்தை, நாடகத்தை நான் அச்சிட்டபொழுது, அதையும் சேர்த்து அச்சிட்டேன். கதாநாயகனான ரணவீர்சிங், மகம்மதிய வீரர்களால் கொல்லப்பட்ட பிறகு, இவனது வீரத்தை யறிந்த பஹ்தூர்ஷா, தன் வீரர்களைக் கொண்டு மடிந்த ரஜபுத்ர வீரனது சவத்தை எடுக்கச் சொல்லி, அதைத் தானே பின்தொடருகிற தருவாயில், தான் மேலே அணிந்திருந்த விலையுயர்ந்த போர்வையை அச்சவத்திற்குப் பெருமையாக அதன் மீது போர்த்தியதாக நடித்துக் காட்டினார் எனது நண்பராகிய ராகவாச்சார்லு. இது மிகவும் நன்றாயிருக்கிறதென, அவரது அனுமதியைப் பெற்று அச்சிடுங்கால் இதையும் சேர்த்து எழுதினேன். புத்தி சாதுர்யமுடைய சிறந்த ஆக்டர்கள், கிரந்த கர்த்தாக்களுக்கும் பல அருமையான விஷயங்களைக் கற்பிக்கின்றனர்!
1915ஆம் வருஷமும் எங்கள் சபையின் சரித்திரத்தில் ஒரு முக்கியமானதெனக் கூற வேண்டும். இவ்வருஷத்தில் மாத்திரம் 363 புதிய அங்கத்தினர் சபையைச் சேர்ந்தனர். இதுவரையில் இத்தனை பெயர் ஒரே வருஷத்தில் சபையைச் சேர்ந்ததில்லை. இனிமேலும் அப்படி நடப்பது மிகவும் கடினம் என்றே எண்ணுகிறேன்.
இவ் வருஷம், முன்பே இருந்த தமிழ் தெலுங்குப் பிரிவுகளுடன் எங்கள் சபைக்கு ஒரு இங்கிலீஷ் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு என் நண்பரான கே.ஆர். சீதாராம ஐயரைக் கண்டக்டராக ஏற்படுத்தினார்கள். இவர் என்னுடன் கலாசாலையில் படித்தவர். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். ஆங்கிலத்தில் ரெசிடேஷன் ஒப்புவிப்பதில் மிகவும் நிபுணர். ஆங்கிலத்தில் நாடகம் நடிப்பதிலும் மிகவும் கெட்டிக்காரர். இவரது ஆங்கில உச்சரிப்பு இங்கிலீஷ்காரர்களும் மெச்சும்படியாக அவ்வளவு சுத்தமாயிருக்கும். ஷேக்ஸ்பியர் நாடகங்களில், ஒதெல்லோ நாடகப் பாத்திரத்தையாடுவதில் பெரும் கீர்த்தி பெற்றார். எம். சுந்தரேச ஐயரைவிட, இதில் சில பாகங்களில் அதிக விமரிசையாய் நடித்தார். தமிழ் நாடகங்களிலும் சிலவற்றுள் நடித்தார். எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதியுள்ள எட்டு ஒன்பது சிறு ஆங்கில நாடகங்களிலெல்லாம் முக்கியமான பாத்திரங்களை இவர்தான் நடித்தார். அவைகளெல்லாம் இவருக்கென்றே எழுதப்பட்டனபோல், அவைகளிலெல்லாம் அவ்வளவு சாதுர்யமாக நடித்தார். எனது பால்ய நண்பர்களிலொருவ ராகிய இவரைப்பற்றி எழுத வேண்டியபோதும், இறந்த காலத்தில் எழுத வேண்டியதாயிருக்கிறது; நிகழ் காலத்தில் எழுதுவதற்கில்லாதது என் துர்ப்பாக்கியங்களிலொன்றாம்.
இவ்வருஷம் எங்கள் சபையின் முன்னூறாவது நாடகம் நடத்தப்பட்டது. இதற்காக “சவுத் இந்தியன் ஆத்லெடிக் அசோசியேஷன்” மைதானத்தில் ஒரு பெரிய கொட்டகை போட்டு, அதில் “காதலர் கண்கள்” நாடகத்தையும், “நன்றி மறவா வறிஞர்கள்” என்னும் ஒரு ஹாஸ்யத்தையும் நடத்தினோம். இதற்கு கவர்னர் லார்ட் பென்ட்லென்ட் விஜயஞ் செய்தார். இந்நாடகத்தின் வரும்படி ரூபாய் 302-13-5, “சென்னை ஆஸ்பத்திரி கப்பல்” பண்டுக்கு நன்கொடையாகக் கொடுத்தோம். இதன்றி பத்து மாதங்களுக்கு, மாதம் 100 ரூபாய் விகிதம் அந்தக் கப்பல் செலவுக்காக அனுப்பினோம். ஐரோப்பிய யுத்தத்திற்கு இந்தியாவிலிருந்து பல பெரிய ராஜாக்கள் முதலியோர் செய்த உதவியுடன், எங்கள் சபையும் ஸ்ரீராமர் சேது பந்தனம் செய்ததற்கு, அணிப்பிள்ளைகளும் உதவியது போல், தன்னாலியன்றளவு உதவி செய்தது.
அன்றியும் ஹைகோர்ட்டு பிரதம ஜட்ஜ் சர் ஜான் வாலிஸ் மனைவியார் சேப்பாக்கத்தில் ஏற்படுத்திய கொண்டாட்டத்திற்காக, இவ்வருஷம் “சபாபதி”யின் பாகமொன்றை, ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினேன். இதை “சபாபதி நான்காம் பாகம்” என்று இப்பொழுதுதான் அச்சடித்து வெளிப்படுத்தியிருக்கிறேன். ஒரு சிறு நாடகமாயிருந்தபோதிலும், ஆங்கிலமும் தமிழும் கலந்திருந்தபோதிலும், இதைப் பார்த்தவர்கள் இது நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்தார்கள். அதற்கு அத்தாட்சியாக, இந்நாடகமானது அச்சிடப்பட்டு முன்னரே, அநேகம் தடவைகளில் என் ஏட்டுப் பிரதியைக் கொண்டு, அநேக சபையார்களும் சங்கத்தார்களும் இதை ஆடியதை எடுத்துக் கூறுவேன்.
அன்றியும், இவ்வருஷம் சென்னை கவர்னர் அவர்கள் பார்க்கும்படி பாங்க் வெடிங் ஹாலில் யுத்த பண்டுக்காக ஏற்படுத்திய வினோதக் காட்சியில், என்னுடைய ‘சபாபதி’ நாடகத்தின் ஒரு பாகமும், “பிரமேளா” எனும் தெலுங்கு நாடகத்திலிருந்து ஒரு காட்சியும் ஆடப்பட்டது.
இவ்வருஷம் எங்கள் சபை திருநெல்வேலிக்குப் போய் எட்டு நாடகங்கள் அங்கே நடத்தியது. இவ்வூருக்குப் போனபோது, பாளையங்கோட்டை பாலத்தருகிலுள்ள எட்டையாபுரம் ராஜா அவர்களுடைய பங்களாவில் தங்கியிருந்தோம். இங்கிருந்து நாடகத் தினங்களிலெல்லாம் இரண்டு மைல் கடந்து திருநெல்வேலி - டவுனுக்கு வரவேண்டியிருந்தது. இருந்தும் எட்டையாபுரம் ஜமீன்தார் அவர்களுடைய சிறிய தகப்பனார் (பிறகு இவர் பட்டத்துக்கு வந்தார்), எங்களுடன் இருந்து எங்களுடைய சௌகர்யங்களை யெல்லாம் மிகவும் கவனித்து வந்தார். இவர், எங்கள் சபையின் நாடகங்களில் அவ்வளவு அபிமானமுடையவராயிருந்தார். எங்கள் சபையின் அங்கத்தினராகவும் சேர்ந்தார். நாங்கள் ஒத்திகை செய்யும் பொழுதெல்லாம் எங்களுடனேயேயிருப்பார். சாப்பிடுகிற வேளை தூங்குகிற வேளை தவிர, மற்றக் காலமெல்லாம் எங்களுடனேயே கழிப்பார். ‘மனோஹரன்’ நாடகக் கதையைப்பற்றி எந்நேரமும் நான் லஜ்ஜைப்படும்படி, என் முன்னிலையிலேயே அதிகமாகப் புகழ்ந்து பேசுவார்; அந்நாடகத்தில் அவருக்கு அவ்வளவு பிரீதி.
இவ்விடத்தில் முதல் மூன்று நாடகங்கள் செம்மையாக நடந்தன. கூட்டமும் அதிகமாக வந்தது. நான்காவது நாடகம் ‘லீலாவதி சுலோசனா’ வைத்துக்கொண்டோம். மறுநாள் நாடகம் என்றிருக்க, முந்திய தினம் நாங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்த பொழுது, திடீரென கோடைக் காலத்தில் இடி விழுந்தாற் போல், சென்னையிலிருந்து, எனது ஆருயிர் நண்பர் ரங்கவடி வேலுவுக்கு அவர் தங்கை மரணாவஸ்தையிலிருப்பதாகத் தந்தி வந்தது! இன்னது செய்வதென்று தோன்றாதவனாய்த் திகைத்துப் போனேன். ஆயினும் யாவும் அவன் பாரம் என்று, பரமேஸ்வரன் பேரில் பாரத்தைச் சுமத்தி என் மனத்தை ஒருவாறு தேற்றிக் கொண்டு, நாம் செய்ய வேண்டிய கடமையை முதலில் செய்வோம். பிறகு மற்ற விஷயங்களைப்பற்றி யோசிப்போம் என்று தீர்மானித்தவனாய், உடனே ரங்கவடிவேலுவைப் பிரயாணப்படுத்தி சென்னைக்கு அனுப்பிவிட்டு, எங்கள் பங்களாவிற்கு வந்து சேர்ந்து, எனது ஆக்டர்களையெல்லாம் வரவழைத்து, நாங்கள் இரண்டு பெயரும் ஆக்டு செய்யாவிட்டாலும், அதன் பொருட்டு நாடகம் நின்று விடலாகாதென்று சொல்லி, என் பாகத்தை டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரிக்குக் கொடுத்து, ரங்கவடிவேலுவின் பாகத்தை எம். ராமகிருஷ்ண ஐயருக்குக் கொடுத்து அவர்களைப் படிக்கச் செய்தேன். அவர்களும் தங்களாலியன்ற அளவு செய்வதாக ஒப்புக்கொண்டு, கஷ்டப்பட்டு தங்கள் பாடங்களைப் படித்து, மறுநாள் நடித்தார்கள். இதைப்பற்றி நான் சற்று விவரமாய் இங்கு எழுதியதற்கு அநேகம் காரணங்களுண்டு; முதலாவது, என் அனுபவத்தில் அநேக சபைகளில், ஒரு நாடகம் நடத்துவதாக விளம்பரம் செய்த பிறகு, “ஒரு ஆக்டர் வரவில்லை, அரை ஆக்டர் வரவில்லை” என்று போக்கைச் சொல்லி, நாடகத்தை நிறுத்தியிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். அப்படிச் செய்தல் தவறு என்பது என் துணிபு. எந்த ஆக்டர் வர அசந்தர்ப்பப்பட்டாலும் ஒருமுறை தீர்மானித்தபின், அந்நாடகத்தை ஆடியே தீருவது ஒழுங்காகும். லீலாவதி சுலோசனா ஒரு பெரிய நாடகம்; அதில் ஸ்ரீதத்தன் வேடமும், சுலோசனையின் வேடமும் மிகவும் முக்கியமானவை என்பதை அந்நாடகத்தை வாசித்தவர்களும் படித்தவர்களும் நன்றாய் அறிவார்கள்; அப்படியிருக்க 24 மணி நேரத்திற்குள்ளாக, அவ்விரண்டு ஆக்டர்களைத் தயார் செய்யச் சாத்தியமானபோது, மற்ற நாடகங்களிலும் யாராவது ஆக்டர்கள் வராமற் போனால், மற்றவர்களைக் கொண்டு கண்டக்டர்கள் ஏன் நடத்தக் கூடாது? இரண்டாவது, எனது நண்பர்களாகிய ஸ்ரீனிவாச ராகவாச்சாரியும் எம். ராமகிருஷ்ண ஐயரும், அவ்வளவு குறுகிய காலத்தில் அவ்விரண்டு பாத்திரங்களையும் படித்து நடிக்கச் செய்ததற்கு முக்கியமான அநுகூலமாயிருந்தது, அவர்களிருவரும் - நானும் ரங்கவடிவேலும் அப்பாத்திரங்களைப் பன்முறை மேடையின்மீது நடித்த போதெல்லாம், அருகிலிருந்து எங்களை அவர்கள் கவனித்து வந்ததேயாம் என்பதற்குத் தடையில்லை. இவ்வாறு அவ்விருவர்களும் கவனித்து வந்ததன் பயனாகத் திடீரென்று அப்பாத்திரங்களை அவர்கள் நடிக்க வேண்டி வந்தபொழுது, தைரியமாய் அப்பாத்திரங்களை அவர்கள் எளிதிற் கற்று நடிக்கச் செய்தது. இதனால் இதை வாசிக்கும் - நாடக மேடையில் பெயர் பெறவேண்டும் என்று விரும்பும் எனது இளைய நண்பர்கள் அறிய வேண்டியதென்னவென்றால், மற்றவர்கள் நடிக்கும்பொழுது, நாம் அவர்களைக் கவனிப்பதனால் மிகவும் லாபமுண்டென்பதேயாம். மூன்றாவது, நாம் நடிப்பதற்கில்லையென்று அன்றைத்தினம் நாடகத்தை நான் எளிதில் நிறுத்தியிருக்கக்கூடும். எப்படியாவது நாடகம் தடைபடலாகாது என்று நான் வற்புறுத்தியிராவிட்டால், நாடகம் நடந்திராது வாஸ்தவமே. ஆயினும் அப்படி என் சுய நன்மையைப் பாராட்டி நான் நிறுத்தியிருந்தால் என்னவாயிருக்கும்? சபைக்குப் பெயர் நஷ்டமும் பண நஷ்டமும் உண்டாயிருக்கும். அன்றைத்தினம் ஆயிரம் ரூபாய்க்குமேல் வசூலானது வந்திராது; அன்றியும் அக்கம் பக்கத்திலிருந்து அநேக ஜனங்கள் வந்திருந்தவர்களெல்லாம், அன்று நாடகமில்லை யென்று அறிந்து திரும்பிப் போயிருப்பார்களானால், மற்றொரு நாள் நாடகம் என்று பிரசுரம் செய்தால், அன்றைத்தினம் போல் இன்றும் நிறுத்திவிடுகிறார்களோ என்னவோ என்று மனஞ்சலித்து வராமலிருந்தாலுமிருப்பார்கள்; எங்கள் சபையின் நற்பெயரும் கெட்டிருக்கும். சுகுண விலாச சபையார் ஒரு முறை நாடகம் என்று பிரசுரம் செய்தபின், என்ன இடையூறுகள் வந்தபோதிலும், என்ன மழை இடியாயிருந்தபோதிலும், எப்படியும் ஆடித்தான் தீர்ப்பார்கள் என்கிற பெயர் நிலைத்திராது. ஆகவே இவ்விஷயத்தை நாடகக் கம்பெனித் தலைவர்களும் நாடக சபை கண்டக்டர்களும் சற்றே கவனிப்பார்களாக.
அன்றையத் தினம் நாடக ஆரம்பத்திற்குமுன், வேஷம் தரிக்கும் இடத்தில் எந்நேரமும் எனக்கு ரங்கவடிவேலுவின் ஞாபகமே வந்துகொண்டிருந்தபடியால், ஜனங்கள் உட்காருமிடத்திற் போயிருந்தால், கொஞ்சம் இந்த வருத்தத்தை மறந்திருக்க முடியுமென்று எண்ணினவனாய் அங்குப் போனேன். வெளியிற் போனவுடன் எனக்கு மற்றொரு சங்கடம் நேர்ந்தது. அங்கு நாடகத்தைப் பார்க்க வருபவர்களுக்கெல்லாம், இவர் இன்று நாடகமாடவில்லையா என்று கேட்க ஆரம்பித்தனர். உலையிலிருந்து எரியில் வீழ்வது போல் இதென்ன பெருங் கஷ்டமாய் முடிந்ததென வெண்ணி, திரும்பி நாட மேடைக்குள்ளே போய்ச் சேர்ந்தேன். அன்றைத்தினம் அ. கிருஷ்ணசாமி ஐயர் லீலாவதியாக நன்றாய் நடித்த போதிலும், அநேகர் எனதுயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு சுலோசனையாக நடிக்க வில்லையே யென்று குறை கூறியதாகக் கேள்விப்பட்டேன். புதிதாய் நாடகப் பாத்திரங்கள் எடுத்துக்கொண்ட ஸ்ரீனிவாசராக வாச்சாரிக்கும், எம். ராமகிருஷ்ண ஐயருக்கும், அவர்கள் பாகத்தைச் புராம்ட் செய்வதில் கவனத்தைச் செலுத்தினவனாய், ரங்கவடிவேலு இல்லாத குறையை மறந்திருந்தேன். நாடகம் பூர்த்தியானவுடன், எப்படியாவது சபையின் பெயர் கெடாமல், மற்றவர்களைக் கொண்டு நாடகத்தைப் பூர்த்தி செய்து வைத்தோமேயென்று சந்தோஷப்பட்டேன். இருந்தபோதிலும் இதைத்தான் ஒருவாறு முடித்தோம், இன்னும் நடத்தவேண்டிய இரண்டு மூன்று நாடகங்களுக்கு ரங்கவடிவேலு இல்லாமல் என் செய்வது என்னும் திகில் என் மனத்தில் குடிகொண்டது.
மறுநாள் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய “பீஷ்மர் ஜனனம்” என்னும் நாடகத்தை நடத்தினோம். இதில் ரங்கவடிவேலுவுக்குப் பாத்திரம் ஒன்றுமில்லாத படியால், கஷ்டமில்லாமற் போயிற்று. ஆயினும் இந்நாடகத்திற்கு ஜனங்களே வரவில்லை. முப்பது நாற்பது ரூபாய்தான் வசூலாயது! ரங்கவடிவேலு இல்லாத குறையின் அளவை அப்பொழுதுதான் எங்கள் சபையோரும் நானும் அறிந்தோம். இன்றைத்தினம் நாடக ஆரம்பத்தில், திருச்சிராப் பள்ளியில் காலவ ரிஷி நாடகமாடும் ஆக்டர்களெல்லாம் தளர்ந்த மனமுடையவர்களாய், நான் என்ன சொல்லியும் கேளாமல், ஒன்று பாதியாக நாடகத்தை ஆடி முடித்தனர். போதாக்குறைக்கு அன்று இரவு நெல்வேலியப்பர் கோயிலில் ஐந்தாம் நாள் ரிஷபவாகன உற்சவம்; கோயில் அதிகாரிகளில் சிலர் எங்களுக்குத் தெரிந்தவர்களாயிருந்த படியால் ஓரிடத்தில் சுவாமியை நிறுத்தி வைத்து, தரிசனத்திற்காக எங்களை யெல்லாம் வரும்படி சொல்லியனுப்பினர். இதைக் கேட்டவுடன் சாதாரணமாக மூன்றரை நான்கு மணி நேரம் பிடிக்கும் நாடகத்தை 2 மணி நேரத்திற்குள் முடித்துவிட்டார்கள்; எனக்கு நகைப்பையும் வருத்தத்தையும் உண்டு பண்ணின ஒரு சமாச்சாரத்தை இங்கெழுதுகிறேன். தாசராஜனுடைய மகளாகிய பரிமளகந்தியை சந்தனு மணக்கும் காட்சியானது, சாதாரணமாகக் குறைந்த பட்சம் பத்து நிமிஷமாகும். இதை தாசராஜனாக வேஷம் பூண்ட எம். துரைசாமி ஐயங்கார் ஒரு நிமிஷத்தில் முடித்துவிட்டார் ஓ! காட்சி ஆரம்பித்தவுடன், தாசராஜன் ஒரு சேவகனைப் பார்த்து, “அடே பூமாலையைக் கொண்டுவாடா” என்று கட்டளையிட்டு, அதை வாங்கித் தன் மகள் கையில் கொடுத்துச் சந்தனு கழுத்திற் போடச் செய்து, காட்சியை முடித்துவிட்டார்! படுதா இறங்கியவுடன் “இது, என்ன துரைசாமி, இப்படிச் செய்தாயே!” என்று கேட்க, “எல்லாம் இவ்வளவு போதும் வந்திருக்கும் ஜனங்களுக்கு” என்று பதில் கூறினார். அதைக் கேட்டபோது, எனக்கு நகைப்பு அதிகமாயிருந்ததோ துக்கம் அதிகமாயிருந்ததோ சொல்ல அசக்தனாயிருந்தேன்! உடனே ஆக்டர்களெல்லாம் வேஷங்களைக் களைந்துவிட்டு, மாட வீதிக்குப்போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம். அப்பொழுது என் வழக்கப்படி நெல்வேலியப்பரை ஸ்தோத்திரஞ் செய்துவிட்டு, முடிவில், “என் அப்பா, எங்கள் சபையின் பெயர் இவ்வாறு கெடாவண்ணம் கடாட்சித்தருள வேண்டும் எப்படியாவது” என்று பிரார்த்தித்தேன்.
மறுநாள் காலையில் நான் துயில் நீத்து எழுந்தவுடன் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு சென்னையிலிருந்து மறுபடியும் திருநெல்வேலிக்கு வருவதாகத் தந்தி வந்தது. இதற்கு முன்பாக ரங்கவடிவேலு இல்லாத்தால் நேர்ந்த கஷ்டங்களையெல்லாம் எடுத்து எழுதி என் தமயனார் ஆறுமுக முதலியாருக்கு, எப்படியாவது ரங்கவடிவேலுவின் சகோதரிக்குச் சஞ்சயனம் முடிந்ததும், மறுபடி திருநெல்வேலிக்கு வரும்படியாகப் பிரயத்தனம் செய்து பாருங்கள் என்று ஒரு நிருபம் அனுப்பியிருந்தேன். அதன்மீது அவர், தன் மாமனாராகிய திவான்பஹதூர் ராஜரத்தின முதலியார் மூலமாக, ரங்கவடிவேலுவின் நெருங்கின பந்துக்களுக்குச் சொல்லி, நடந்தது நடந்து விட்டது அதற்காக வருத்தப் பட்டுக்கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்? ரங்கவடி வேலு போகாததால் ஒரு சபையின் காரியங் கெட்டுப்போய் விடலாகாது. இதில் தவறொன்மில்லை, சஞ்சயனம் ஆனவுடன் ரங்கவடிவேலு மறுபடி திருநெல்வேலிக்குப் போகலாம் என்று சொன்னாராம். அதன்மீது தனது பந்துக்களும் ஒப்புக்கொள்ள, ரங்கவடிவேலு மறுநாள் நெல்வேலிக்குப் போவதாகத் தந்தி கொடுத்தார்.
இங்ஙனம் நேர்ந்தது தெய்வாதீனம், தெய்வ கடாட்சம் என்று நினைக்கிறேன்; நெல்வேலியப்பர் என் பிரார்த்தனைக் கிணங்கி இவ்வாறு செய்தார் என்று நான் உறுதியாய் நம்புகிறேன். இதை வாசிக்கும் நண்பர்களில், யாராவது நாஸ்திகர்களாயிருந்தால் அவர்கள் இதைப்பற்றி “என்ன மூட புத்தியுடையவனாயிருக்கிறான் இவன்” என்று நகைக்கலாம். அப்படிச் செய்வார்களாயின், அவர்கள் மீது நான் குறை கூறமாட்டேன். ஆயினும், என் தீர்மானத்தை நான் விடமாட்டேன்! ஜகதீசனைக் குறித்துப் பிரார்த்திக்கும் விஷயத்தில், டெனிசன் என்னும் பெயர்பெற்ற ஆங்கிலக் கவி, இவ்வுலகமானது கனவிலும் கருதாத பல விஷயங்கள் பிரார்த்தனையினால் முடிவு பெறுகின்றன என்று எழுதியிருக்கிறார். அதை உறுதியாய் நம்புவோர்களில் நான் ஒருவன்.
ரங்கவடிவேலு திருநெல்வேலி வந்து சேருமுன் மற்றொரு நாடகம் நடத்தினோம். அதாவது ‘நற்குல தெய்வம்’ என்பதேயாம். இதற்கும் வரும்படி மிகவும் குறைவாகவிருந்தது. “ரங்கவடிவேலு இல்லாத குறைதானோ இப்படி ஜனங்கள் வராதது?” என்று சந்தேகித்த சிலருடைய சந்தேகமும் இந்த இரண்டாவது நாடகத்தினால் அறவே நீங்கியது.
எனதுயிர் நண்பர் வந்து சேர்ந்த பின், “வேதாள உலகம்” என்னும் நாடகத்தை வைத்துக் கொண்டோம். அதற்கு ஜனங்கள் அதிகமாய் வந்திருந்தனர். பண வசூலும் அதிகமாயிருந்தது; நாடகமும் நன்றாய் இருந்ததெனப் புகழ்ந்தனர். சிலர் இந்நாடகத்தை மறுபடியும் இவ்விடம் ஆடவேண்டுமென்றும் கேட்டனர். ஆயினும் இதைவிட “லீலாவதி-சுலோசனா” நாடகத்தில் ரங்கவடிவேலு சுலோசனையாக நடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று, அதிக நாடக அபிமானிகள் விரும்புகின்றனர் என்பதைக் கேட்டறிந்தவர்களாய், எங்கள் நிர்வாக சபைக் கமிட்டியார் அதையே மறு சனிக்கிழமை போட வேண்டுமென்று தீர்மானித்தனர். இதனிடையில், பதினொரு நாடகங்களுக்கு ஏழு நாடகங்கள் நடத்திய எங்கள் ஆக்டர்களுக்குச் சிரமபரிஹாரமாகவும், ரங்கவடிவேலு தன் துயரத்தைச் சற்று மறந்திருக்கக் கூடுமென்றும் யோசித்து எங்கள் சபை ஆக்டர்களை யெல்லாம், குற்றாலத்திற்கு அழைத்துக் கொண்டு போக ஏற்பாடு செய்தேன். அவ்வாறே திருக்குற்றாலம் சென்று, அங்கு நீர் விழும் அருவியில் எல்லோரும் பன்முறை ஸ்நானம் செய்து, கோயிலுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்து, அங்கு மலைக்காட்சிகளை யெல்லாம் சுற்றிப்பார்த்து இரண்டு தினம் கழித்தோம். நாடக தினம் சாயங்காலம்தான் திருநெல்வேலி வந்து சேர்ந்தோம். அன்றிரவு, ஒரு வாரத்துக்கு முன் தான் ஆடிய நாடகமாயிருந்தபோதிலும், மறுபடியும் நாடகக் கொட்டகை நிரம்ப ஜனங்கள் வந்திருந்தனர்; சற்றேறக்குறைய 800 ரூபாய் வசூலாயது. வந்திருந்தவர்களெல்லாம் நாடகத்தை மிகவும் மெச்சினர்.
மறுநாள் திருநெல்வேலி வாசிகள் எங்கள் சபையாருக்கு ஒரு விருந்தளித்தனர். பிறகு சென்னபட்டணம் வந்து சேர்ந்தோம். இம்முறை திருநெல்வேலியில் நாடகமாடினதன் வரும்படியில் செலவுபோக நிகரம் ரூபாய் 673-3-7. எங்கள் கட்டட பண்டுக்குச் சேர்த்தோம். இதன்றி நாங்கள் இங்கு நாடகம் நடத்தியதன் பலனாக எங்கள் சபையைப் போன்ற ஒரு சபை இங்கும் சீக்கிரம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு எங்கள் சபையின் பெயரை ஒட்டி சற்குண விலாச சபை என்றே பெயர் வைத்தனர். இதன் முக்கிய ஆக்டர் ஸ்ரீமான் சுப்பராயலு நாயுடுவின் விடாமுயற்சியினாலும் ஊக்கத்தினாலும், அச்சபை இன்றளவும் வளர்ந்தோங்கி வருகிறது; இச் சபையார் பெரும்பாலும் நான் எழுதிய நாடகங்களையே ஆடி வருகின்றனர்.
இவ்வருஷம் எங்கள் சபையானது மொத்தத்தில் 50 நாடகங்கள் ஆடியது; இதற்கு முந்தியும் இத்தனை நாடகங்கள் ஒரே வருஷத்தில் ஆடியதில்லை; இதற்குப் பிந்தி ஒரு வருஷந்தான் இந்த எண் மீறப்பட்டது. தமிழில் மாத்திரம் 31 நாடகங்கள் ஆடினோம். இதை வாசிக்கும் எமது சபை அங்கத்தினருட் சிலர், தற்காலம் இரண்டு மூன்று நாடகங்கள் கொடுப்பதே கஷ்டமாயிருக்கிறதே யென்று, கொஞ்சம் பொறாமை கொள்ளக்கூடும். டிசம்பர் மாத விடுமுறையில், எங்களுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் மேல் மாடி கிடைக்காதபடியால், நாங்களிருக்கும் கீழ் ஹாலிலேயே, ஒரு அரங்கம் ஏற்படுத்தி, அதில் 10 நாடகங்கள் ஆடினோம். இந்தச் சிறிய அரங்கத்தில் முக்கோடி ஏகாதசியன்று “காதலர் கண்கள்” என்னும் நாடகத்தை நடத்தினோம். இதைப்பற்றிய சிறு கதையொன்றுண்டு. முக்கோடி ஏகாதசியன்று என்ன நாடகம் போடுவது என்று எங்கள் நிர்வாக சபையில் பேச்சு வந்தபொழுது, எனது நண்பர் சத்யமூர்த்தி ஐயர் அவர்கள் “எந்த நாடகமாவது சம்பந்தம் போடட்டும். சாரங்கதரா நாடகம் மாத்திரம் வேண்டாம்” என்று சொன்னார். “அப்படியே ஆகட்டும்” என்று தலையசைத்து, சாரங்கதர நாடகத்தைவிடச் சிருங்கார ரசமதிகமாயுள்ள “காதலர் கண்கள்” என்னும் நாடகத்தைப் போட்டேன்! அக்காலம் எனக்கு நாற்பத்திரண்டு வயதாகியும் பால்யக் குறும்பு என்னை முற்றிலும் விட்டகலவில்லை போலும்!
எங்கள் சபையின் அங்கத்தினரெல்லாம் வந்தாலே இடம் போதாத இச்சிறிய அரங்கசாலையில், எப்படி நமக்குப் பணம் வசூலாகும் என்று பலர் சந்தேகித்தனர்; ஆயினும், இங்கு நடத்திய நாடகங்களில் செலவுபோக ரூபாய் 500 கட்டிட பண்டுக்குச் சேர்த்தோம். நாடகங்கள் எங்கு ஆடினாலும் என்ன, ஜனங்களை ஆகர்ஷிக்கும் சக்தி ஆக்டர்களிடம் இருக்கையில், எங்கும் வந்து சேர்வார்கள்; பழுத்த பழங்கள் நிறைந்திருக்கும் மரத்திற்குப் பட்சிகள் தாமாகப் போய்ச் சேருகின்றன.
1916ஆம் வருஷம் எங்கள் சபையின் சரித்திரத்தில் ஒரு முக்கியமான வருஷமாம். ஏனெனில், இவ்வருஷம் சபை ஆரம்பித்து 25 வருஷங்கள் பூர்த்தியானபடியால், சபையின் “சில்வர் ஜூபிலி” கொண்டாட்டம் நடைபெற்றது. இக்கொண்டாட்டத்தை இந்தியன் ஆத்லடிக் அசோசியேஷன் மைதானத்தில் ஒரு பெருங்கொட்டகையில் நடத்தினோம். மாட்சிமை தங்கிய சென்னைக் கவர்னர் அக்கிராசனாதிபதியாக விஜயம் செய்தார். சென்னையிலுள்ள சீமான்களையும் சீமாட்டிகளையும் வரவழைத்தோம். சபையின் “முற்கால நிலை, தற்கால நிலை, பிற்கால நிலை” என்பதைப் பற்றி ஒரு வியாசம் எழுதி, அதை நான் வாசித்தேன். பிறகு, தெலுங்கு இங்கிலீஷ் தமிழ் நாடகங்களில், சில காட்சிகளை ஆடினோம்.
இவ்வருஷம் எங்கள் சபையின் பிரசிடெண்டாகவிருந்த டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள் ஐகோர்ட்டு ஜட்ஜாக நியமிக்கப்பட்டபடியால் அவருக்குச் சபையில் ஒரு விருந்தளித்தோம். அவர் அதற்காக சபையோருக்கு வந்தனம் அளித்த பொழுது கூறிய ஒரு வேடிக்கையான சமாச்சாரத்தை இங்கெடுத்தெழுத விரும்புகிறேன். “யாருக்காவது ஹைகோர்ட்டு ஜட்ஜாக வேண்டுமென்று விருப்பமிருந்தால், அவர்களை சுகுண விலாச சபையைச் சேரும்படி நான் கேட்பேன். காலஞ்சென்ற பி. கிருஷ்ணசாமி ஐயர் சபையின் அங்கத்தினரானார்; உடனே ஹைகோர்ட்டு ஜட்ஜானார். பிறகு பி.ஆர். சுந்தர ஐயர், சபையைச் சேர்ந்தார்; உடனே ஹைகோர்ட் ஜட்ஜானார். குமாரசாமி சாஸ்திரியாரும் கே. ஸ்ரீனிவாச ஐயங்காரும் அப்படியே! அவருக்குப் பிறகு நான் வந்தேன்; எனக்கும் இப்பதவி கிடைத்தது! ஆகவே உங்களுள் யாருக்காவது உயர்ந்த உத்யோகம் வேண்டுமென்றால், சுகுண விலாச சபையைச் சேருங்கள்!” என்று வேடிக்கையாய்க் கூறினார். அவர் கூறியது ஒருவிதத்தில் உண்மையே; பிறகு ஹைகோர்ட்டு ஜட்ஜுகளாகிய, கனம் சி.கிருஷ்ணன், வெங்கடசுப்பராவ், ராமேசம், மாசிலாமணிப் பிள்ளை முதலியோரும் ஒருக்கால் சுகுணவிலாச சபையின் அங்கத்தினராயிருந்தவர்களே!
இவ்வருஷம் மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தியின் பிறப்பு நாள் கொண்டாட்டத்தில், கௌரவப் பட்டம் அளிக்கும்பொழுது, எனக்கு ராவ் சாஹிப் என்கிற பட்டம் கொடுக்கப்பட்டது. இது போன்ற பட்டங்களைப் பெற அநேகர் பெரும் பிரயத்தனப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் நான் இதன்பொருட்டு ஒரு பிரயத்தனமும் எடுத்துக் கொள்ளவில்லையென்பதை நம்பும்படி என் நண்பர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். கெஜட்டில் இந்த விளம்பரம் வந்தபொழுது நான் கொழும்பில் நாடகமாடிக் கொண்டிருந்தேன். இதில் எனக்கு அதிகத் திருப்தியைத் தந்தது என்னவெனில், எனது பந்துக்களுக்கும் நண்பர்களுக்கும் இது சந்தோஷத்தைத் தந்ததேயாம். அன்றியும் இதை எங்கள் சபைக்குச் செய்த ஒரு கௌரவமாகக் கொண்டேன். எனக்கு இப்பட்டம் கொடுத்தைப்பற்றி, மதராஸ் டைம்ஸ் என்னும் அக்காலம் பிரசுரிக்கப்பட்டுவந்த தினசரிப் பத்திரிகையில் அதன் பத்திராதிபராகிய கிளின்பார்லோ என்பவர், நான் தமிழ் நாடகத்திற்காக எடுத்துக்கொண்ட சிரமத்தைப்பற்றி ஏதோ (நான் எண்ணுகிறபடி அதிகமாய்) புகழ்ந்து பேசி, எனக்குப் பட்டம் கொடுத்தது, தமிழ் நாடகத்திற்கே ஒரு கௌரவமாகும் என்று கூறி, கடைசியில் “தற்காலம் இங்கிலாந்தில் வருஷா வருஷம் கௌரவப் பட்டங்கள் கொடுக்கும்பொழுதெல்லாம், சிறந்த நாடகமாடுபவர்களுக்கும், ‘சர்’ என்கிற பட்டம் கொடுப்பது வழக்கமாயிருக்கிறது. இந்தியா தேசத்திலும் இவ்வாறு வழக்கம் ஆரம்பித்தது சிலாகிக்கக்தக்கதே” என்று எழுதியுள்ளார். அவர் ஆங்கிலத்தில் எழுதியதை நான் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். இவர் மாத்திரமன்று; இதைப் பற்றி எழுதிய ஒவ்வொரு பத்திராதிபரும் நான் சுகுண விலாச சபைக்காக உழைத்ததைப்பற்றிப் புகழ்ந்தெழுதினார்கள். இப்பட்டத்தின் சன்னதை எனக்குச் சென்னைக் கலெக்டர் அவர்கள் தர்பாரில் கொடுத்தபொழுது, சுகுண விலாச சபைக்காகவும் தமிழ் நாடகத்திற்காகவும் நான் உழைத்ததைப்பற்றி எடுத்துப் பேசியதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் நாடக சம்பந்தமாக ஒருவருக்குப் பட்டப் பெயர் கொடுத்தது இதுதான் முதன்முறை என்று எண்ணுகிறேன்.
இவ்வருஷம் சபையின் 25ஆம் ஆண்டு நிறைவேறிய கொண்டாட்டத்திற்கேற்றபடி 52 நாடகங்கள் ஆடினோம். இதில் இரண்டு நாடகங்கள், எங்கள் சபைக்காகப் பல வருஷங்களாக உழைத்து வந்த அ. கிருஷ்ணசாமி ஐயர் உதவிக்காக ஆடி, அவற்றின் வரும்படியாகிய ரூபா 863-12-0 அவருக்குக் கொடுத்தோம். மேற்கண்ட 52 நாடகங்களுள், 22 வெளியூர்களில் ஆடப்பட்டன. அவற்றைப் பற்றி சற்று விவரமாய் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.
ஈஸ்டர் விடுமுறையாகிய ஆறு நாட்களில் நெல்லூருக்குப் போனோம். தெலுங்கு கண்டக்டராகிய டி. வெங்கடரமண ஐயர் சபையின் தெலுங்குப் பிரிவு இவ்வருஷம் தெலுங்குப் பிரதேசமாகிய நெல்லூருக்கும் போக வேண்டுமென்று ஏற்பாடு செய்தார். நான் ஒருவேளை இதற்கு ஏதாவது ஆட்சேபணை செய்வேன் என்று நினைத்தாரோ என்னவோ; அவர் என்னை இதைப்பற்றிக் கேட்டபொழுது, சுகமாய்ப் போய் வாருங்கள் என்று விடை கொடுத்தேன். அதன் பேரில் நெல்லூரில் நான்கு நாடகங்கள் கொடுக்க வேண்டுமென்று சபையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்மீது நெல்லூர்வாசிகளுக்குச் சபை அங்கு வருவதைப்பற்றி எழுதிய பொழுது அவர்களில் அநேகர் ரங்கவடிவேலுவையும் என்னையும் பார்க்க வேண்டுமென்று விருப்பமிருப்பதாகவும், அதன் பொருட்டுத் தமிழ் நாடகம் ஒன்றும் அங்கு ஆடவேண்டுமென்றும் தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட காகிதங்கள் சிலவற்றை நான் நேரில் பார்த்தேன். எங்கள் நிர்வாக சபையார், இதை யோசித்து, தமிழ் நாடகமொன்றும் இருக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். ஆகவே முடிவில், நான்கு தெலுங்கு நாடகங்களும், ஒரு தமிழ் நாடகமும் ஆடவேண்டுமென்று நிச்சயிக்கப்பட்டது. எனக்கு மாத்திரம் ஆரம்பமுதல் இப்பிரயாணத்தினால் சபைக்கு நஷ்டம் நேரிடுமென்றே தோன்றியது. ஆயினும் அதை வெளியிடுவேனாயின், சபையின் தெலுங்குப் பிரிவின்மீது ஏதோ விருப்பமில்லாதபடியால் இவன் இப்படிச் சொல்கிறான் என்று நினைக்கிறார்களோ என்று, சும்மா... இருந்துவிட்டேன். நெல்லூருக்குப் போவதைப் பற்றிச் சபையில் முதலில் பேச்சு வந்தபொழுதே, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு “நாமும் போய் ஒரு தமிழ் நாடகமாடலாமே” என்று கேட்டார். அதற்கு நான் “நாமாக இதில் தலை நுழைத் துக்கொள்வது அழகல்ல. அன்றியும், இப்பிரயாணத்தினால் சபைக்கு நஷ்டம் வரும் என்று எனக்குள் ஏதோ சொல்கிறது. வேண்டாம், இதைப்பற்றிப் பிரஸ்தாபம்கூடச் செய்யாதே” என்று தடுத்தேன். அதன்பேரில் அவரும் சும்மா இருந்துவிட்டார். பிறகு அகஸ்மாத்தாக மேற்சொன்னபடி ஒரு தமிழ் நாடகமும் போட வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டபொழுது, என்னுயிர் நண்பருக்கு மிகவும் சந்தோஷம்; எனக்கு மாத்திரம், இதனால் தெலுங்குப் பிரிவினர்க்கு மனஸ்தாபம் உண்டாகி எப்படி முடியுமோ என்று நிம்மதி இல்லாமலிருந்தது.
நெல்லூரில், எங்கள் சபை பிரசிடென்ட் சேஷகிரி ஐயர் அவர்கள் தமயனார் பங்களாவில் தங்கினோம். அவ்வூரில் லட்சுமிநரசா ரெட்டியார் டவுன் ஹாலில் நாடகங்கள் நடத்தினோம். முதல் நாடகம் “வரூதினி” என்பது. இது எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலுவால் தெலுங்கில் எழுதப்பட்டது; மனு சரித்திரக் கதையிலிருந்து எடுக்கப்பட்டது. சென்னையில் எங்கள் சபையார் இதைப் பன்முறை ஆடியிருக்கின்றனர்.
சென்னையில் இதை ஆடும்பொழுதெல்லாம் நல்ல வசூலாவது வழக்கம். இதில் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் மிகவும் நன்றாக வரூதினியாக நடிப்பார். கதாநாயகனாக நாடகாசிரியனாகிய ராமமூர்த்தி பந்துலு நடிப்பது வழக்கம்; அவர் மதுரைக்குப் போய் விட்டபடியால், அவருக்குப் பதிலாக எனது நண்பர் டாக்டர் டி. ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார் நெல்லூரில் நடித்தார். இது நெல்லூர் வாசிகளுக்குப் பிடிக்கவில்லை போலும். முதலில் நாடகம் பார்க்க வந்த ஜனங்கள் மிகவும் குறைவாயிருந்தது; இரண்டாவது வந்தவர்களில் அநேகர் என்னிடம் நன்றாயில்லை யென்று தெரிவித்தார்கள். இதற்குக் காரணம் என்னவென்று நான் விசாரித்ததில், ஸ்ரீனிவாச ராகவாச்சாரி ஆக்டு செய்வது நன்றாயிருந்த போதிலும், அவரது தெலுங்கு உச்சரிப்பு சரியாக இல்லை என்று பலர் கூறினர். என்னிடம் இவர்கள் கூறுவது வாஸ்தவம் என்று நான் ஒருவிதத்தில் ஒப்புக் கொள்ளவேண்டியவனாயிருந்தேன். சென்னையிலும் தெலுங்கு நாடகங்களில், தமிழர்கள் ஏதாவது பாத்திரங்களை எடுத்துக்கொண்டு நடிக்கும்போதெல்லாம். அவர்கள் ஆக்டு செய்வது எவ்வளவு நன்றாயிருந்தபோதிலும், தெலுங்கு பாஷை பேசுவது சரியாயில்லை என்று தெலுங்கு அபிமானிகள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
இவ்வூரில் இரண்டாவது நாடகமாக தெலுங்கில் “நந்தனார்” ஆடப்பட்டது. இதற்காக வேண்டி எம். துரைசாமி ஐயங்காரை, வேதியர் வேஷத்திற்காக வரவழைத்தோம். தெலுங்கில் “நந்தனார்” சென்னையில் ஆடும் பொழுதெல்லாம், ஜனக்கூட்டம் அதிகமாய் வருவது வழக்கம். ஆகவே இங்கும் அப்படி இருக்குமென எண்ணி தெலுங்கு கண்டக்டராகிய வெங்கட்ரமண ஐயர், இதைத் தேர்ந்தெடுத்தார். இங்கு நாடகமாடிய பொழுது எனக்கு ஞாபகமிருக்கிறபடி சுமார் 50 ரூபாய்தான் வசூலாயது! இதைக் கண்ட துரைசாமி ஐயங்கார் தான் பட்டணத்திலிருந்து வந்துபோகக் கொடுத்த ரெயில் சார்ஜுகூட ஆகாது போலிருக்கிறதே என்று துக்கப்பட்டார். அன்று டிக்கட்டுகள் வாங்க வந்த ஒரு தெலுங்கு மனிதர், நாடக விளம்பரத்தை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு அதில் “நந்தனார் சரித்திரமு” என்று அச்சிட்டிருப்பதைக் கண்டு “நந்தனார் ஏமிரா? நந்தனார்!” என்று நான் கேட்கும் படியாகக் கூறினார். பிறகு நான் விசாரித்ததில் சுத்த தெலுங்கில் நந்துடு என்று இருக்க வேண்டும் என்றும், நந்தனார் என்பது தமிழுக்குரிய தொடர் என்றும் சொன்னார்கள். ஆந்திர தேசத்தில் தங்கள் தேச பாஷையின்மீது அவ்வளவு அபிமானமுண்டு அத் தேசத்தாருக்கு; இது நான் தவறு என்று சொல்லமாட்டேன்.
இவ்விடம் மூன்றாவது நாடகம் “விஜயநகர ராஜ்யத்தின் அழிவு” என்பதை வைத்துக் கொண்டார் எங்கள் தெலுங்கு கண்டக்டர். இது கோலாசலம் ஸ்ரீனிவாசராவ் என்பவரால் எழுதப்பட்ட ஒரு மிகச் சிறந்த நாடகம். எனது நண்பர் பல்லாரி ராகவாச்சார்லு இதில் “பதான் ருஷ்தம்” என்னும் வேடம் தரிக்கும் போதெல்லாம், சென்னையில் தெலுங்கர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் வந்து பார்ப்பார்கள். தற்காலம் ஆந்திர நாடகங்கள் ஆடுவதில் இவரைவிடக் கீர்த்தி பெற்றவர்கள் இல்லை என்னும்படி அவ்வளவு பிரசித்தி வாய்ந்தவர். இவருக்கு இணையான தெலுங்கு ஆக்டரை நான் கண்டதேயில்லை. இனி என் ஆயுளில் காணப்போகிறதுமில்லையென்றே நினைக்கிறேன். எந்த வேஷம் தரித்தாலும், அந்தப் பாத்திரத்திற்கேற்றபடி சரியாக வேஷம் பூண்டு, அதை இப்படி நடிக்க வேண்டுமென்று முன்னதாகவே தீர்க்காலோசனை செய்து, மிகவும் விமரிசையாக நடிப்பார். இவர் ஆடும் அநேக நாடகங்களில் இந்த ருஷ்தம் என்னும் பாத்திரமானது ஒரு மிகச் சிறந்ததென்பது என்னுடைய கொள்கை மாத்திரமல்ல, எல்லாத் தெலுங்கர்களுடைய கொள்கையுமாம். அன்றியும் இவர் தெலுங்கு நாட்டில் பிறந்து வளர்ந்து, “ஆந்திர நாடகப் பிதாமகன்” என்னும் பட்டப் பெயர் பெற்ற காலஞ்சென்ற கிருஷ்ணமாச்சாரியார் அவர்களுடைய நெருங்கிய பந்து. இப்படிப்பட்டவர் வந்து தெலுங்கர்கள் அதிகமாக வருவார்கள் என்று எங்கள் கண்டக்டர் நம்பியிருந்தார். இந்த நாடகத்திற்கும் முதல் தெலுங்கு நாகடத்தைவிடக் குறைவாக ஜனங்கள் வந்தார்கள்! ஜனங்கள் வராமற் போனாற் போகிறது; நாடகமாடியது நன்றாயிருந்ததென ஒருவனாவது சொல்ல வேண்டுமே! அதுவும் இல்லை. நாடக ஆரம்ப முதல் கடைசிவரை ஒரு கரகோஷமாவது கிடையாது! பாதி நாடகம் ஆடினபிறகு, எனது நண்பர் ராகவாச்சார்லு உள்ளே வேஷம் தரிக்கும் அறையில் நானிருக்குமிடம் வந்து ஆங்கிலத்தில் “சம்பந்தம், இனி இந்த ஊரில் நான் நாடகமே ஆடமாட்டேன்! ஒரு ரசிகனாவது கிடையாதா? எல்லாம் முண்டங்களாயிருக் கின்றனரே! இதற்காக என்னைப் பல்லாரியிலிருந்து ஏன் வரவழைத்தீர்கள்?” என்று கோபத்துடனும் வருத்தத்துடனும் கூறினார். பிறகு நான் அவரைச் சமாதனப்படுத்தி, “அவர்கள் சந்தோஷிக்காமற் போனாற் போகிறது; நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷிக்கிறோம், நீ வா” என்று சொல்லி அவரை மிகுதி பாகத்தையும் ஆக்டு செய்யும்படி செய்தேன். பிறகு, ஸ்ரீனிவாச ராகவாச்சாரி, துரைசாமி ஐயங்கார் முதலியோர்க்குத்தான், இவர்கள் தமிழர்கள் - தெலுங்கு சரியாக உச்சரிக்க முடியவில்லை என்று கூறினார்கள். ராகவாச்சார்லு தெலுங்கராயிற்றே, இவரிடம் என்ன குறை என்று விசாரித்ததன் பேரில் இன்னொரு விஷயம் வெளியாயிற்று. இவ்வூரில் இதற்கு முன்பாகவே ஒரு தெலுங்கு நாடக சபையிருந்ததாம். அதன் அங்கத்தினரில் சிலர், எங்கள் சபையின் தெலுங்கு நாடகங்களுக்கு அவ்வூரார் யாரும் போகக்கூடாது என்று கட்டுப்பாடு செய்ததாகக் கேள்விப்பட்டேன். “அரச மரத்தைப் பிடித்த சனி, அதன் கீழிருந்த பிள்ளையாரையும் பிடித்தது" என்பதற்கிலக்காக, எங்கள் சபை தெலுங்குப் பிரிவைப் பிடித்த சனி, ராகவாச்சார்லுவையும் பிடித்தது.
நான்காவது நாடகம் ‘புத்திமதி’ என்பதை வைத்துக் கொண்டோம். இது சிறுத்தொண்டர் கதையைப் போன்றதாம்; இந்நாடகமானது சாயங்காலத்தில் ஆடப்பட்டது. “நல்ல நாளிலேயே நாழிப்பால், கன்று செத்தால்?"என்னும் பழமொழிக்கிணங்க, இரவு நாடகத்திற்கே ஜனக்கூட்டம் வரவில்லையென்றால், சாயங்கால நாடகத்திற்கு என்ன வரப்போகிறது?
இவ்விடம் நாங்கள் கடைசியாக ஆடிய நாடகம் “லீலாவதிசுலோசனா” எனும் எனது தமிழ் நாடகம். தெலுங்கு நாடகங்களின் கதியே இப்படியிருந்ததே, தமிழ் நாடகத்திற்கு யார் வரப் போகிறார்களென்று நான் வாஸ்தவமாய்ப் பயந்திருந்தேன். ஆயினும் இந்நாடகத்திற்கு ஏராளமான ஜனங்கள் வந்திருந்தனர். அன்றியும் ஆரம்பமுதல் கடைசி வரை நாடகம் நன்றாயிருக்கிறதெனப் புகழ்ந்தனர்! தெலுங்கு நாடகங்கள் எல்லாவற்றையும் விட, இந்தத் தெலுங்கு தேசத்தில் தமிழ் நாடகத்திற்கு வசூல் அதிகமாக வந்தது! நெல்லூரில் ஒரு தமிழ் நாடகமாடலாமா என்கிற கேள்வி, எங்கள் நிர்வாக சபை முன்பாக வந்தபொழுது, தெலுங்கு அங்கத்தினர் அதற்கு ஆட்சேபணை செய்தனர். அப்படி ஆட்சேபணை செய்தவர்களுக்குப் புத்திமதியாக எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு செய்து வைத்தார்போலும்!
இங்கு, நெல்லூர் புரொக்ரெசிவ் யூனியன் என்னும் சபையார், எங்கள் சபைக்கு ஒரு விருந்தளித்தனர். மறுநாள் புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தோம். இந்த நெல்லூர்ப் பிரயாணத்தில், எங்கள் சபைக்குண்டான நஷ்டம் ரூபாய் 535-1-3. இதன் பிறகு எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர், எந்த ஊருக்கும் தாங்களாகப் போக வேண்டுமென்று பிரயத்தனப்படவில்லை. எங்கள் சபை நெல்லூர்ப் பிரயாணம் போய் வந்ததில், நான் அறிந்து கொண்ட இரண்டு புத்திமதிகள் என்னவென்றால்; ஒன்று, எந்த நாடகத்தையாவது ஆட வேண்டுமென்றால், கூடுமானவரையில் நாடக மெழுதப்பட்டுள்ள பாஷையையே தாய் பாஷையாக உடையவர்களைக் கொண்டே அதை நடத்த வேண்டுமென்பது; இரண்டாவது, ஏதாவது ஒரு விஷயம் ஒருவரால் பிரேரேபிக்கப்பட்டால், அதற்கு நியாயமின்றி, பொறாமையினால் ஏதாவது நாம் ஆட்சேபணை செய்தால், அதன் பலனை நாம் அனுபவிக்க வேண்டுமென்பதாம்.
பிறகு இவ்வருஷம் கோடைக்கால விடுமுறையில் மறுபடியும் இலங்கைக்குப் போகவேண்டுமென்று தீர்மானித்தோம். இரண்டாம் முறை இலங்கைக்கு நாங்கள் போய்த்திரும்பும் பொழுது, அங்குள்ள எமது நண்பர்கள் மறுமுறை எப்பொழுது இங்கு வருவீர்கள் என்று கேட்டதற்கு இரண்டு வருஷம் கழித்து வருகிறோம் என்று சொல்லியிருந்தோம். அதன்படியே அங்கு போகத் தீர்மானித்து, வாரிக் மேஜர் என்பவருக்கு, முன் மாதிரியே அவர் ஏற்பாடுகளை யெல்லாம் ஒப்புக்கொள்ள முடியுமா என்று எழுத, அவர் “அப்படியே ஆகட்டும். மிகவும் சந்தோஷம்” என்று ஒப்புக்கொண்டு தந்தி கொடுத்தார். அதன்பேரில் மனத்தில் ஒரு கவலையுமில்லாமல் ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தோம். இம்முறை இலங்கைக்குப் போகும் வழியில் மதுரையில் தங்கி, அங்கு நான்கு நாடகங்கள் ஆட வேண்டுமென்று முதலில் தீர்மானித்தோம். ஏதோ சில காரணங்களால் யாழ்ப்பாணம் போக முடியாமற் போயிற்று. அதற்குப் பதிலாகத் திரும்பி வரும்பொழுது கும்பகோணத்தில் சில நாடகங்கள் ஆடினோம். இதுதான் எங்கள் சபை எடுத்துக் கொண்ட வெளியூர்ப் பிரயாணங்களில் மிகவும் நீடித்தது. சென்னையிலிருந்து புறப்பட்டுத் திரும்பி வர சுமார் 45 நாட்கள் பிடித்தன. இப்பிரயாணத்தில் மொத்தத்தில் 17 நாடகங்கள் ஆடினோம். தற்காலத்தில் வெளியூருக்குப் போய் இரண்டொரு நாடகங்கள் ஆடுவதென்றால் பிரமாதமென்று நினைக்கும் எனது இளைய நண்பர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களாக. உற்சாகமிருந்தால் எதையும் முடித்து வைக்கும் என்பது என் கருத்து.
மதுரையில் ஆடிய நான்கு நாடகங்களுக்கும் ஜனங்கள் ஏராளமாய் வந்திருந்தனர். நான்காவது நாடகத்தின் முடிவில், ஹானரபில் கே. ராம ஐயங்கார், மதுரைவாசிகள் சார்பாக அவ்விடம் நாடகங்களாடினதற்காகச் சபையைப் புகழ்ந்து வந்தனம் அளித்தனர். எனது நண்பர்கள் கே. வைகுண்டம் ஐயரும், பி. ராமமூர்த்தி பந்துலுவும் சபையோருக்கு விருந்து அளித்தனர். எட்டையபுர ஜமீன்தார் அவர்கள் தன்னுடைய பெரிய வீடு ஒன்றை நாங்கள் தங்கியிருப்பதற்காகக் கொடுத்தார். இவ்விடத்தில் நாடகங்கள் ஆடினதில் எனக்கு இரண்டு மூன்று சமாச்சாரங்கள்தான் நன்றாய் ஞாபகமிருக்கின்றன. கடைசி நாடகமாகிய லீலாவதி - சுலோசனா நடத்திய தினம் மறுநாள், மதுரையை விட்டுப் போக வேண்டியிருக்குமே, ஆகவே, இன்று போய் மீனாட்சி சுந்தரேஸ்வராளைத் தரிசித்து விடைபெற்றுப் போக வேண்டுமென்று யோசனை பிறந்தது. இதன்பேரில் சாயங்காலம் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, நாடகக் கொட்டகைக்கு ஆக்டர்களெல்லாம் புறப்பட, நான் மாத்திரம், ‘நீங்கள் போங்கள் நான் கோயிலுக்குப் போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, கோயிலுக்குப் போனேன். கோயிலில் தரிசனம் செய்து கொண்டு திரும்புவதற்குள் கொஞ்சம் இருண்டுவிட்டது. அதன் பேரில், கொட்டகைக்குப் போக வழி தெரியாதவனாய், ஏறக்குறைய ஒரு மணி நேரம் தெருத் தெருவாய் சுற்றிக்கொண்டிருந்தேன்! எந்தெந்தத் தெருக்களில் அலைந்தேனோ மீனாட்சிக்குத்தான் தெரியும்! நாழியாய் விட்டதே, நம்மைக் காணோமென்று கொட்டகையில் தேடுவார்களே, காலம் பொறுத்துச் சென்றால் வேஷம் தரிக்க நாழிகையாகுமே, என்ன செய்வது என்று மிகக் கலங்கினேன். சென்னையில் நான் பிறந்து வளர்ந்து இத்தனை வருஷம் பழகிய போதிலும், இன்றைக்கும் சில தெருக்கள் தவிர மற்றத் தெருக்களில் கொண்டு போய்விட்டால், இராக்காலத்தில் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு, ஏதாவது தெரிந்த தெரு வருகிற வரையில் போய், பிறகு தான் வீட்டுக்குப் போக முடியும்! இதை நான் ஒரு பெருமையாகச் சொல்லவில்லை; இது பெரும் தப்பிதம்; இது நான் வெட்கப்படவேண்டிய விஷயமேயொழிய வேறன்று; சென்னையிலே இப்படியிருக்க, புது ஊராகிய மதுரையில் நான் வழி அறிவது அசாத்தியமாயிருந்தது. புது ஊரில், நாடகக் கொட்டகைக்கு வழியெப்படியென்று கேட்பதென்றால் மிகவும் வெட்கமாயிருந்தது. எங்கு சுற்றி வந்தாலும் கோயிலுக்குக் கொண்டு போய் விட்டது! இதென்னடா கஷ்டம் என்று நான் கலங்கிக் கொண்டிருக்கையில், தெய்வா தீனத்தால், யாரோ ஒரு பெரிய மனிதர் (அவர் இன்னாரென்று எனக்கு இன்றளவும் தெரியாது) ஒரு மோட்டார் வண்டியில் வந்து, என்னைப் பார்த்து அதை நிறுத்தி, “எங்கே நடந்து போகிறீர்கள்?” என்று கேட்டார். அதன் பேரில், எனது வெட்கத்தையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி, அவரிடம் நாடகக் கொட்டகைக்குப் போக வழி தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கிறேன் என்று உண்மையை உரைத்தேன். அதன் பேரில் அவர் நகைத்து, ‘வாருங்கள் என்னுடன்’ என்று சொல்லி, என்னைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு என்னை நாங்கள் நாடகமாடிய மீனாட்சி நாடக சாலைக்குக் கொண்டுபோய்விட்டார். போகிறவழியில், என்னுடன் அவர் பேசிய வார்த்தைகளால், அவர் என்னை நாடகமாடும் பொழுது, ஒவ்வொரு தினமும் மேடையின்மீது பார்த்தவர் என்பதை அறிந்தேன். அவர் என்னை நன்றாயறிந்தவராய்த் தோன்றியபோது, ‘நீங்கள் யார்?’ என்று அவரை நான் கேட்க வெட்கப்பட்டேன். நாடக சாலையண்டை நான் இறங்குவதன்முன் அவருக்கு நான் அவர் செய்த உதவிக்காக வந்தனம் அளிக்க, இதை ஒரு பொருட்டாக வந்தனம் அளிக்க வேண்டுமா என்று சிரித்துவிட்டு, இராத்திரி உங்களை மேடையின்பேரில் காண்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். மறுபடி நான் மதுரைக்குப் பன்முறை போனபோதிலும், அவரை என் துர்அதிர்ஷ்டத்தால் மறுபடி சந்திக்க நேரிடாமலிருக்கிறது.
இவ்விடத்தில் இரண்டாவது நினைவு என்னவென்றால், “லீலாவதி-சுலோசனா” நாடகத்தில் நான் ஸ்ரீதத்தனாகக் “கைவளை” காட்சியின் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டு வரும்பொழுது, ஸ்ரீதத்தன் தகப்பனார் அவனை மணம் செய்து கொள்ளும்படியாகச் சொல்லும் பொழுது, மூர்ச்சையாக வேண்டியிருக்கிறது; இக்காட்சியை எனது நண்பர் ஸ்ரீநிவாசராகவாச்சாரியுடன் பன்முறை ஆடியிருக்கிறேன்; நான் மூர்ச்சையாகும் போதெல்லாம் என் பக்கலில் பின்னால் நின்று கொண்டிருந்து, தன் கரங்களில் என்னைத் தாங்கிக் கொள்வார்; அன்றைத்தினமும் அவர் பின்னால் இருக்கிறாரென நினைத்து மூர்ச்சையானதுபோல் நடிக்க, அவர் ஏதோ காரணத்தினால் வேறொரு இடத்தில் நின்று கொண்டு ஏதோ வேறு கவனமாய் இருக்க, ‘படால்’ என்று கீழே விழுந்தேன். விழுந்த வேகத்தில் காலிலும் தோளிலும் இரண்டு இடங்களில் நன்றாய் காயம்பட்டு, ரத்தம் பெருக ஆரம்பித்தது. நான் எனது சந்யாசிச் சட்டையின் கீழாகப் பனியனும், காலுக்கு சாக்ஸும் போட்டுக் கொண்டிருந்தபடியால், ரத்தம் பெருகியது அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. நான் விழுந்தபொழுது, அங்கு மேடையின் பேரில் வைத்திருந்த தோட்டச் சட்டம் ஒன்றில், என் தலை படாமல், ஒரு மயிரிழை தவறியது. உடம்பில் பட்ட காயம் தலையில் பட்டிருந்தால் பெரும் ஆபத்தாய் முடிந்திருக்குமென்று எண்ணுகிறேன். இந்த ஆபத்தினின்றும் மீனாட்சி சுந்தரேஸ்வராள் காப்பாற்றினார்கள் என்னை, என்று சந்தோஷப்பட்டேன். உடனே எனது நண்பர் ஓடிவந்து தான் செய்த தப்பிதத்தை அறிந்தவராய், என்னைக் கை கொடுத்துத் தூக்கும் பொழுது, ‘வாத்தியார் என்னை மன்னிக்க வேண்டும்’ என்று வேண்டினார் மெல்லிய குரலுடன். நானும் அதே குரலில் ஹாலில் வந்திருப்பவர்கள் அறியாதபடி, ‘அது போனாற் போகிறது. உன் பாடத்தைப் பார்’ என்று சொல்லிவிட்டு, மறு காட்சியில் நான் ராஜ குமாரன் உடையில் வரவேண்டியிருந்தபடியால், என் சந்யாசி உடையைக் கழற்றும் பொழுதுதான், எனக்குப் பட்ட காயங்களைப் பார்த்தேன். உடனே அந்தக் காயங்களைக் கட்டிக்கொண்டு, பிறகு மற்றக் காட்சிகளை நடத்தினேன்.
இவ்விடத்தில் நடந்தவற்றுள் மூன்றாவதாக ஞாபகமிருக்கும் விஷயம், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவின் நர்த்தனமானது, மதுரை நாடகப் பிரியர்களுக்கு விளைத்த உற்சாகமே. மூன்றாவது நாடகமாகிய “காலவ ரிஷி”யில் ஊர்வசியாக அவர் நர்த்தனம் செய்த பொழுது அதைப் பார்த்தவர்கள் பெருமகிழ்ச்சி யடைந்தார்கள் என்று சொல்வது அதிகமாகாது. நர்த்தனம் முடிந்தவுடன், “இன்னும் கொஞ்சம் நர்த்தனம் செய்யவேண்டும்” என்று கரகோஷம் செய்து தெரிவித்தனர். அதன்பேரில், தனக்கு மிகவும் இளைப்பாயிருப்பதாகவும் தன்னால் இனி முடியாதென்றும் எனது நண்பர் எனக்குத் தெரிவிக்க, நான் அவரை மன்னிக்கும்படி வெளியில் உள்ளவர்களுக்குச் சொல்லி அனுப்பினேன். அதன்பேரில் வருகிற கடைசி நாடகத்திலாவது மறுபடியும் ரங்கவடிவேலு நாட்டியத்தைப் பார்க்க வேண்டுமென்று சொல்லியனுப்பினார்கள். அன்றியும் இதைப்பற்றிக் கேள்விப்பட்ட சிலர், மறுநாள் என்னிடம் வந்து, “எப்படியாவது லீலாவதி - சுலோசனா நாடகத்தில் ரங்கவடிவேலுவை, நர்த்தனம் செய்யச் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். “இந்த நாடகத்தில் நர்த்தனம் செய்வதற்கு இடமில்லையே”யென்று நான் கூறியும், கேளாதவர்களாய் வற்புறுத்தவே, “இந்நாடகம் முடிந்ததும் பிரத்யேகமாக நர்த்தனம் செய்யச் சொல்லுகிறேன்”என்று அவர்களுக்குச் சமாதானம் சொல்லி, அங்ஙனமே நாடகம் முடிந்ததும், இரவு இரண்டு மணிக்குமேல் ஆனபோதிலும் ரங்கவடிவேலுவை நாட்டியம் ஆடச் செய்தேன்.
மதுரையில் எனது நண்பர் நர்த்தனம் செய்ததைப் பார்த்த சிலர் இத்தனை வருடங்களாகியும், அதைப்பற்றிச் சிலாகித்துப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். எனதுயிர் நண்பர் நாட்டியமானது ஜனங்களின் மனத்தை இவ்வளவு கவர்ந்ததற்குக் காரணம் என்னவென்று யோசிக்குமிடத்து, இதுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கடினமான நாட்டிய வித்தையை ஒருவன் கற்ற போதிலும், அதை ஆடி, பார்ப்பவர்களின் மனத்தைச் சந்தோஷிப்பிப்பதற்கு அதற்கு ஏற்றதான உருவம் இருக்கவேண்டும். அதிக ஸ்தூல தேகமும் உதவாது; அதிக மெல்லிய தேகமும் உதவாது; அதிக ஸ்தூல தேகமுடையவர்கள் ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்பொழுது, ஆப்பிரிக்கா தேசத்திலுள்ள ஹிப்பப்டோமஸ் ஆடுவதுபோல் என் மனத்திற்குப் பட்டுள்ளது. மிகவும் மெலிந்த எலும்புகளெல்லாம் வெளியில் தெரிந்து கொண்டிருப்பவர்கள் ஆடுவதைப் பார்க்கும் பொழுது, எலும்புக்கூடு நர்த்தனம் செய்வதுபோல் தோன்றுகிறது. அன்றியும் ஆடுபவர் மிகவும் குட்டையாயு மிருக்கலாகாது; நெட்டையாயுமிருக்காலாது. மிகவும் குட்டையாயிருப்பவர்கள் ஆடுவதை யானைக் குட்டி ஆடுவதற்குச் சமானமாகச் சொல்லலாம். மிகவும் நெட்டையாயிருப்பவர்கள் ஆடுவதை ஒட்டகம் ஆடுவதற்கு ஒப்பிடலாம். இக் குறைகளெல்லாமின்றி, சரியான உயரமுடையவர்கள் இந்நாட்டிய சாஸ்திரத்தைப் பயின்றபோதிலும், அவர்களுக்கு ஜகன பாகம் கொஞ்சம் பெருத்திருக்கவேண்டும்; இது ஸ்திரீகளுக்குரிய கலை; பெண்டிருக்கு சுபாவத்தில் ஜகனமானது பெருத்திருக்கு மென்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவ்வங்கப் பூர்த்தியில்லாத சிலர் ஆடிவரும்போது பின்புறம் திரும்புங்கால் சப்பையாகத் தோன்றுவதை நான் பார்த்திருக்கிறேன். இதற்காகச் சிலர் நர்த்தனம் செய்யும்பொழுது சிறு குல்டு துணிகளை வைத்துக் கட்டிக்கொண்டு ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன்! மேற்கூறிய குறைகளெல்லாமின்றி, நர்த்தனஞ்செய்வதற்குத் தக்க உருவம் எனதுயிர் நண்பரிடம் சுபாவமாகப் பொருந்தி யிருந்தமையாற்றான், அவரது நர்த்தனம் சென்னை ராஜதானியில் நாங்கள் போயிருந்த இடங்களிலெல்லாம் சிலாகிக்கப்பட்டதென்று நான் நம்புகிறேன். அன்றியும் இவ்வரிய கலையில் பெயர் பெற வேண்டுமென்று விரும்புவோர் கவனிக்கவேண்டியது இன்னொன்றுண்டு. அதாவது நர்த்தனம் செய்யுங்கால் பாதவின்யாசங்கள் மிகவும் மிருதுவாயும் அழகாயுமிருக்க வேண்டும். பாரசீக நாடகத்தில் பேய்கள் கூத்து ஆடுவது போல் அரங்கத்தில் “தும்தும்"என்று துமுக்கலாகாது. இக்குறைகளை யெல்லாம் நான் எடுத்துக் கூறியதன் முக்கியக் காரணம், நாளுக்கு நாள் க்ஷிணித்து வரும் இக்கலையைக் கற்க விரும்பும் எனது இளைய நண்பர்கள், மேற்சொன்ன குற்றங்களையெல்லாம் களைந்து, இவ்வரிய சாஸ்திரத்தை ஆதரிப்பார்கள் என்பதேயாம்.
மதுரையில் எங்கள் நாடகங்களை முடித்துக்கொண்டு புறப்படும்பொழுது, மறுபடியும் இவ்வூருக்கு வந்து நாம் நாடகமாடக் கொடுத்து வைத்திருக்கிறோமோ என்னவோ என்னும் கவலையுடன் நான் புறப்பட்டேன். அக் கவலையை நீக்கி, மறுபடியும் இந்த மதுரை மாநகரிலேயே எங்கள் சபையாருடன் நாடகங்கள் ஆடும்படியும், அன்றியும், இந்நகரத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மதுரை டிராமாடிக் கிளப்புக்காக, பன்முறை இவ்விடம் வந்து நாடகமாடும்படியான பாக்கியம், எனக்களித்த, நான் வழிபடுதெய்வங்களாகிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்களுக்கு, நான் அவர்கள் பாதங்களைத் தினம் மறவாது துதித்தலன்றி, வேறென்ன கைம்மாறு செய்யக்கூடும்?
நாங்கள் மதுரையை விட்டுப் புறப்படக் குறித்த தினத்திற்கு முந்தியநாள் இலங்காத் தீவில், நாங்கள் போகவேண்டிய ரெயில் பாதையானது பெரும் மழையினால் உடைந்து சேதப்பட்டதாகவும், ரெயில் அம் மார்க்கத்தில் வழக்கம் போல் போக இன்னும் சில தினம் பிடிக்குமென்றும் பத்திரிகைகள் மூலமாகக் கண்டோம்! இந்த தெய்வாதீனத்தால் நேரிட்ட கஷ்டத்திற்கு என்ன செய்வதென்று யோசித்து, எப்படியும் எடுத்துக்கொண்ட பிரயாணத்தைக் கைவிடலாகாதென்று தீர்மானித்து, மண்டபத்தில் அப்பாதை செப்பனிடப்படுகிற வரையில் தங்கிப் பிறகு இலங்கைக்குப் போகவேண்டுமென்று தீர்மானித்தோம். இவ்வாறு சமுத்திர மணல் தவிர வேறெதுவும் கிடைக்காத இச்சிற்றூரில் நான்கு நாள் தங்க வேண்டியிருந்தது. நான்காவது தினம் ரெயில் பாதை செப்பனிடப்பட்டு ரெயில் வழக்கம்போல் போகிறதெனச் சேதி வரவே, உடனே புறப்பட்டு தனுஷ்கோடிவரையில் புதிதாய் ஏற்படுத்தப்பட்ட ரெயில் மார்க்கமாகப் போய் அங்கிருந்து சிறிய ஸ்டீமர் ஏறி, இரண்டு அல்லது இரண்டரை மணி சாவகாசத்திற்குள்ளாகத் தலைமன்னார் என்னும் இலங்கைத் தீவிலுள்ள ரெயில்வே ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தோம்.
கொழும்பு ஸ்டேஷன் போய்ச் சேர்ந்ததும், முகத்தில் நகையுடன் எங்களை வரவேற்ற எங்கள் பழைய நண்பர்களின் நல்வார்த்தைகளால், வழியில் நாங்கள் பட்ட கஷ்டங்களையெல்லாம் க்ஷணத்தில் மறந்தோம்.
இம்முறை, எங்களுடன் முதலிரண்டு முறை வருவதற்குத் தடைப்பட்ட எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் வந்தார். இம்முறை இங்கு எட்டு நாடகங்கள் நடத்தினோம். அவற்றுள் ஒன்று, யாழ்ப்பாணத்து ஸ்திரீகள் சங்கத்தின் சார்பாகக் கொடுத்து அதன் வரும்படியை அச்சங்கத்தாருக்குக் கொடுத்தோம். இம்முறை தினம் யாராவது ஒருவர் வீட்டில் விருந்து நடந்ததென்றே சொல்ல வேண்டும். டாக்டர் ஜான்ராக்வுட் என்பவரும், கொழும்பில் பெரிய அட்வகேட்டாயிருந்த ஜெயவர்த்தன் என்பவரும், திருநாவுக்கரசு அம்மாளும், மூத்த தம்பி என்பவரும் எங்கள் சபைக்குப் பெரும் விருந்தளித்தனர். அன்றியும் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் தினம் காலை மாலைகளில் எங்காவது சிற்றுண்டிக்கோ அல்லது போசனத்திற்கோ அழைக்கப்பட்டோம். ஆயினும், ஒரு முறை பட்டது போதுமென்று இம்முறை மிகவும் ஜாக்கிரதையாக இருந்து, நோயில் விழாதபடி என் உடம்பைக் காப்பாற்றிக் கொண்டேன்.
இங்கு நடந்த நாடக தினங்களில், ஏறக்குறைய தினம் மழை பெய்தபோதிலும், நல்ல வசூலாயிற்று. முன்தினம் போலவே வாரிக் மேஜர் என்பவர் எங்கள் சௌகரியத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.
இவ்விடத்தில் நடந்த நாடகங்களைப்பற்றி இங்கு எழுதத்தக்க விசேஷங்கள் ஒன்றும் எனக்கு ஞாபகம் வரவில்லை. எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயருடைய சங்கீதம் மிகவும் மெச்சப்பட்டது. ஆயினும் ஆக்டிங் விஷயத்தில் ரங்கவடிவேலுக்கிருந்த புகழ் கொஞ்சமேனும் குன்றவில்லை.
இங்கு நானிருந்தபொழுதுதான், எனக்கு சக்ரவர்த்தியின் பிறந்த தினம் கொடுக்கும் கௌரவ பட்ட ஜாபிதாவில், “ராவ்சாஹெப்” என்கிற பட்டம் கொடுத்ததாக, சென்னையிலிருந்து வந்த தந்தி மூலமாகத் தெரிந்தது. இதை நான் ஒரு பொருட்டாகப் பாராட்டாவிட்டாலும், இந்த சமாச்சாரம் எங்கள் சபையின் அங்கத்தினர் மூலமாகக் கொழும்பிலுள்ள நாடாகாபிமானிகளுக்கெல்லாம் தெரிந்துவிட்டது. அதன் பேரில், இங்கு நாங்கள் நடத்திய “சபாபதி” என்னும் நாடகத்தில் ஒரு காட்சியில், எனது நண்பர் ராகவாச்சாரியார், நாடகத்தின் நடுவில் கதையோடு ஒட்டி ஏதோ கூறுவது போல், இதை வெளியிட்டார். உடனே ஹாலில் வந்திருந்தவர்களெல்லாம் இரண்டு நிமிஷம் வரையில் இடைவிடாது கரகோஷம் செய்தனர். அப்பொழுதுதான் சிங்களவாசிகளின் மனத்தை எனது நாடகங்களினால் நான் திருப்தி செய்ததன் திறத்தைக் கண்டேன். ஆயினும் இதை எங்கள் சபைக்கு அவர்கள் செய்த கௌரவமென்றே கொண்டேன்.
இங்கு நாடகங்களை முடித்துக் கொண்டு, சில காரணங்களால் யாழ்ப்பாணம் போக வேண்டுமென்றிருந்த ஏற்பாடு முடியாமற்போகவே, அதற்குப் பதிலாகச் சென்னைக்குத் திரும்பிப் போகும்போது கும்பகோணத்தில் தங்கி 5 நாடகங்கள் ஆட வேண்டுமென்று தீர்மானித்தோம். அதன்மீது எங்கள் சிங்கள நண்பர்களிடமிருந்து பிரிய மனமில்லாதவராய், விடைபெற்று, வந்த வழியாகவே இந்தியாவுக்குத் திரும்பினோம். மறுபடியும் நான் இலங்கைத் தீவிற்குப் போவேனோ என்னவோ சந்தேகம். இம்முறை போய் பதினைந்து வருடங்களாய் விட்டன; எனக்கும் வயதாகிவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில், நான் இங்கெழுதுவதன் மூலமாக, எங்கள் சபைக்கும் முக்கியமாக எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுக்கும் எனக்கும், எமது இலங்கை நேசர்கள் செய்த பேருதவிக்கும், அவர்கள் பாராட்டிய பேரன்பிற்கும், கைம்மாறாக என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். இங்கெழுதப்பட்டது எமது இலங்கை நேசர்களின் நேத்திரத்திற்படுமாயின், இதையே எனது கைம்மாறாகக் கொள்வார்களாக! நான் நடமாடும் சிற்றுலகில், சுய நன்மையைப் பாராட்டும் மனிதர்களின் செய்கைகள் என் மனத்தில் புண்படுத்தும் போதெல்லாம், எனது இலங்கை நண்பர்களை நினைத்து, சுய நன்மையைப் பாராட்டாத ஜனங்கள் சிலரேனும் இவ்வுலகில் இருக்கின்றனர் என்றெண்ணிச் சந்தோஷித்து, என் மனத்தைத் தேற்றிக் கொள்ளுவது தற்காலம் எனக்கு வழக்கமாய் விட்டது.
இனி, கும்பகோணத்தில் இரண்டாம் முறை நாங்கள் நாடகமாடிய கதையை எழுதுகிறேன். இம்முறை நாங்கள் நாடகமாடியது பழைய இடத்திலன்று; புதிதாகக் கட்டப்பட்ட வேறொரு நாடக சாலையில். இது பழைய நாடக சாலையைப் போல் இவ்வூரின் மத்தியில் இல்லாது ஒரு புறமாகக் கட்டப்பட்டது. இக்காரணத்தினாலோ வேறெக் காரணத்தினாலோ முதன்முறை இங்கு நாடகமாடியபோது வந்த ஜனக்கூட்டம் இம்முறை வரவில்லை. போதாக்குறைக்கு முன்பு எங்கள் சௌகர்யங்களை எல்லாம் மிகவும் சிரத்தையுடன் கவனித்த பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் இவ்வூரில் இல்லை இப்பொழுது. ஆயினும் இங்கு நாடகமாடியதால் எங்கள் சபைக்கு நஷ்டம் நேரிடவில்லை. வரவுக்கும் செலவிற்கும் சரியாய்ப் போய்விட்டது. இவ்விடம், எங்கள் சபையைப்போல ஸ்தாபிக்கப்பட்ட வாணி விலாச சபையாரும், லட்சுமிவராஹ ஐயங்கார் அவர்களும், அநந்தாச்சாரியார் அவர்களும், எங்களுக்கு நல்ல விருந்தளித்தனர். ஐந்து நாடகங்களை இங்கு முடித்துக்கொண்டு சென்னைக்குப் போய்ச் சேர்ந்தோம். இதுதான் எங்கள் சபை வெளியூர்களில் நெடுநாள் கழித்த பிரயாணம். சென்னையை விட்டு ஏறக்குறைய 45 நாட்கள் வெளியூரிலிருந்தோம்; 17 நாடகங்கள் ஆடினோம்; பெரும்பாலும் அவைகளெல்லாம் இரவு நாடகங்களாயிருந்த படியால் மிகவும் சிரமமாயிருந்தது. இருந்தபோதிலும் எனக்கும் மற்ற ஆக்டர்களுக்கும் தேகத்தில் ஒரு குறையுமின்றி, இந்நாடகங்களை யெல்லாம் பூர்த்தி செய்து கொண்டு, பரமேஸ்வரன் அருளால் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். இதில் ஒரு சிறிய வேடிக்கை. 45 நாட்கள் கண்டக்டராகவும், நாடகங்களில் கதாநாயகனாகவும் இரவு பகலாகக் கஷ்டப்பட்டு, நாடகங்களையெல்லாம் முடித்துக் கொண்டு, திரும்பி வந்தவுடன், சென்னையிலிருந்து சபையின் காரியதரிசி எழுதிய கடிதம் ஒன்றிற்கு ஏன் உடனே பதில் எழுதவில்லை என்று ஓர் அங்கத்தினருடைய பிரேரேபணையினால், என் மீது குற்றங் கூறினர் சிலர்! அந்த மெம்பரின் பெயரை இங்கு எழுத எனக்கு இஷ்டமில்லை. அவர் மீது குற்றமில்லை. “பெற்ற வட்கே தெரியும் அந்த வருத்தம், பிள்ளை பெறாப் பேதை அறிவார்களோ?” இந்தச் சந்தர்ப்பத்தில் தாயுமான ஸ்வாமிகள் பேதை என்னும் பதத்தை உபயோகித்துள்ளது கவனிக்கத்தக்கது. சபையின் வெளிப் பிரயாணத்தில் செலவு போக, லாபம் 2638-8-6 கிடைத்தது. இதனின்றும் நெல்லூர்ப் பிரயாணத்தில் நான் முன்பு கூறியபடி நேர்ந்த நஷ்டமாகிய 535-13-3 கழித்து, மிகுதி நிகர லாபம் 2102-9-3 எங்கள் சபையின் கட்டட பண்டுக்குச் சேர்த்தோம்.
இவ் வருஷம் டிசம்பர் விடுமுறையில், 45 நாட்களுக்கு விக்டோரியா பப்ளிக் ஹால் மேல்மாடியை வாடகைக்கு அமர்த்தி, சாயங்காலங்களில் நாடகமாடி வந்தோம். பல தினங்களில் ஜனங்கள் உட்கார இடமில்லாமல், டிக்கட்டுகள் விற்பதை நிறுத்த வேண்டியிருந்தது. இந்நாடகங்களினால் செலவு போக 3088 ரூபாய் லாபம் கிடைத்தது. அதில் ரூபாய் 3000 கட்டட பண்டுக்குச் சேர்த்தோம். ஆகவே, பல விதத்திலும் எங்கள் சபை ஸ்தாபித்து 25 ஆண்டுகள் பூர்த்தியாகிய இவ்வருஷம், சபையானது மிகவும் உன்னத ஸ்திதியை அடைந்தது என்றே கூற வேண்டும்.
இவ்வருஷம் இந் நாடக மேடை நினைவுகளில் நான் குறிக்க வேண்டிய, என்னைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதாவது சபை ஆரம்பித்தது முதல் இந்த இருபத் தைந்து வருடங்களும் (ஒரு வருஷம் தவிர) சபையின் தமிழ் நாடகங்களைச் சூத்திரதாரனாகப் பார்த்து வந்த நான், இவ்வருஷம் அவ்வேலையினின்றும் விலகிக் கொண்டேன். சபையின் ஆரம்பத்தில் வி. திருமலைப் பிள்ளை அவர்கள் கண்டக்டராகவிருந்தபோதிலும், அவர் வேலையெல்லாம் நான் பார்த்து வந்தேன் என்பது எங்கள் சபையோர் அனைவரும் அறிந்த விஷயமே. இந்த இருபத்தைந்து வருஷங்களில் கடைசி சில வருஷங்களில், வருஷாந்திரம் எங்கள் சபையில் கண்டக்டர் வேலைக்கொருவரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில், எனக்குப் போட்டியாகச் சிலர் நின்றனர். அச்சமயங்களிலெல்லாம் சபையின் பொதுஜனக் கூட்டமானது என்னையே தேர்ந்தெடுத்தது. அச்சமயங்களிளெல்லாம் எனது நண்பர்களிற் பலர், “சம்பந்தம், நீ ஏன் இவ்வாறு வருஷா வருஷம் கஷ்டப்படுகிறாய்? உனக்கோ வயதாகி வருகிறது. இச்சுமையை இளையவர்கள் தோள் மேல் சுமத்திவிட்டு ஆயுமென்றிருக்கிறதுதானே?” என்று என் நலத்தைக் கோரிக் கூறியிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கெல்லாம் “நான் இன்னும் சபைக்குக் கண்டக்டராகச் சில வருஷங்கள் உழைக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். இத்தனை வருஷம் உழைப்பது என்று ஒரு நிச்சயம் வைத்திருக்கிறேன். அதுவரையில் கண்டக்டர் வேலைக்கு வருஷா வருஷம் நின்றுதான் தீருவேன். அதற்குள்ளாக, சபையின் பொது ஜனக் கூட்டத்தார், தாங்களாக என்னை விலக்கி விட்டால் நலமாயிற்று” என்று பதில் கூறியுள்ளேன். என்னை நீக்கி மற்றவர்களைக் கண்டக்டராக நியமிக்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டு, முனிசிபல் எலக்ஷனிலும் சட்டசபை எலக்ஷனிலும் வோட் சம்பாதிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் என்று பெயர் பெற்ற எனது நண்பர்களிற் சிலர், அங்கத்தினருடைய வீடு வீடாய்ப் போய்ப் பிரயத்தனப்பட்டனர், அச்சமயங்களிலெல்லாம் நான் கண்டக்டர் வேலைக்கு நிற்கப் போகிறேன் என்பதை அறிவித்ததன்றி, ஒருவரையும் தங்கள் வோட் எனக்குக் கொடுக்கும்படி நான் கேட்டவனன்று. இதற்குச் சில முக்கியக் காரணங்களுண்டு. முதலாவது, இம்மாதிரியான தேர்ந்தெடுத்தல்களிலெல்லாம் அவர்களாகப் பார்த்து என்னை நியமிக்க வேண்டுமே யொழிய, நாம் போய் அவர்களைப் பலவந்திக்க, அதனால் அவர்கள் வோட் கொடுப்பார்களானால், அதில் என்ன மகிமை? அப்படிச் செய்வது தவறு என்பது என்னுடைய கோட்பாடுகளி லொன்று. இரண்டாவது, நான் எந்த மனிதனையும், எனக்காக ஒன்றைக் கொடு என்று யாசிக்கக்கூடாது என்கிற நியமமுடையேன்; இக்காரணம் பற்றியே, அநேக வருஷங்களில் என்னுடைய நண்பர்கள் என்னை, முனிசிபல் கார்ப்பரேஷன், லெஜிஸ்லேடிவ் கவுன்சில் முதலிய சபைகளுக்கு நிற்கும்படிக் கேட்டும், நான் வேண்டாமென்று மறுத்திருக்கிறேன். எனக்கேதாவது வேண்டியிருந்தால், என்னைப் படைத்த ஈசனை வேண்டுவேனே யொழிய அவர் படைத்த மக்களை யாசியேன். மூன்றாவது காரணம், இவ் விஷயங்களிலெல்லாம் ஈசன் விதித்தபடியாகின்றது, நம்முடைய பிரயத்தனத்தில் ஒன்றும் பயனில்லையென்பது என் தீர்மானமான எண்ணம்.
நான் முன்னால் தீர்மானித்தபடி, சபை ஆரம்பித்து இருபத்தைந்து வருஷங்கள் வரை கண்டக்டராகச் சபைக்கு உழைத்தேன். அந்த இருபத்தைந்து வருடங்களும் கழிந்தவுடன், ‘நாம் உழைத்தது போதும். இனி மற்றவர்கள் உழைக்க வேண்டியது நியாயம், அவர்களும் இவ்வேலையில் பயிற்சியடைய வேண்டியது; அப்பொழுது தான் அவர்களுக்கும் இதன் கஷ்ட நஷ்டங்களும், அருமை பெருமையும் தெரியும்’ என்று தீர்மானித்து, இவ்வேலை மறு வருஷத் தேர்ந்தெடுத்தல் வந்தபோது, நிற்காமல் விலகிக் கொண்டேன். இனிமேல் இந்த வேலைக்கு நான் நிற்கப் போகிறதில்லை யென்பதை எனது நண்பர்களுக்கும் தெரிவித்து, நான் கண்டக்டராக நடத்திய கடைசி நாடகம் முடிந்ததும், மேடையின் பேரில் அவர்களையெல்லாம் ஒருங்கு சேர்த்து, ‘இத்தனை வருடங்களாக நான் கண்டக்டராக இருந்தபோதெல்லாம் உங்களில் அநேகரைக் கஷ்டப்படுத்தியிருக்கக்கூடும். தெரிந்தும் தெரியாமலும் உங்களுக்கு அபராதமிழைத்திருக்கக்கூடும்; அவற்றை யெல்லாம் மன்னியுங்கள்"என்று பிரார்த்தித்து, இத்தனை வருடங்களாக என்னுடன் ஒத்து உழைத்து, சபையின் கீர்த்தியைக் காப்பாற்றியதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த வந்தனத்தையளித்து, அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். என்னுடன் இதுகாறும் உழைத்த ஆக்டர்களும் நான் கூறியதை அங்கீகரித்து, சபையின் முதல் அங்கத்தினராகிய ஜெயராம் நாயகர் மூலமாக, எனக்கு மரியாதை செய்தனர். ஆயினும் அச்சமயம் எனது நண்பர்களுக்கு நான் வாக்களித்தபடி நான் இந்த வேலையினின்றும் விலகியபோதிலும், இன்றுவரை, சபையின் ஆக்டர்களுக்காவது, கண்டக்டர்களுக்காவது, என்னாற் செய்யக்கூடிய உதவி ஏதாவது இருந்தால் அதைச் செய்து வருகிறேன்.
மேற்சொன்னபடி நான் விலகிவிட்ட பிறகு துரைசாமி ஐயங்கார், கண்டக்டராகச் சபையோரால் நியமிக்கப்பட்டார், இவ்வருஷம்.
இவ் வருஷம் நான் புதிதாய் எழுதிய நாடகம் ‘விஜய ரங்கம்’ என்பதாம். இதைப்பற்றி நான் சற்று விவரமாய் எழுத வேண்டியது அவசியம். இருபத்தைந்தாம் ஆண்டு பூர்த்திக் கொண்டாட்டத்தின் சம்பந்தமாக எங்கள் சபையார், தமிழிலும் தெலுங்கிலும் புதிதாய் எழுதப்படுகிற சிறந்த ஜனசமூக நாடகங்களுக்குத் தங்கப் பதக்கங்கள் அளிப்பதாக விளம்பரம் செய்தனர். இப் பரீட்சைக்கு நாடகங்கள் அனுப்புவோர் தங்கள் சொந்தப் பெயரை வெளியிடக் கூடாதென்றும், மாறு பெயர் வைத்தனுப்ப வேண்டுமென்றும் நிர்ணயஞ் செய்திருந்தனர். நாடகக் கர்த்தா தன் சுயமான பெயரை வெளியிட்டால், பரிசோதகர்கள், அவன் மீதுள்ள பட்சபாதத்தினால் அவனுக்கு ஒருவேளை பரிசளிக்கக்கூடுமென்று, இந்தக் கட்டுப்பாடு செய்தனர். யாரைக் குறித்து இந்த நிபந்தனை முக்கியமாக ஏற்படுத்தப் பட்டதென்று இதை வாசிக்கும் என் நண்பர்கள் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம். இப் பரீட்சையில் “டெஸ்டி காடோ”என்கிற பெயரை வைத்து இந்த “விஜயரங்கம்"என்னும் நாடகத்தை எழுதியனுப்பினேன். டெஸ்டிகாடோ, என்கிற பதத்திற்கு, “பிதுரார்ஜிதத்தி லிருந்து விலக்கப் பட்டடவன்” என்று ஒருவாறு பொருள் கூறலாம். இம் மாறுபெயர் சர் வால்டர் ஸ்காட் என்னும் பிரபல இங்கிலீஷ் ஆசிரியர் எழுதிய ‘ஐவான் ஹோ’ என்னும் கதையில், கதாநாயகனான ‘ஐவான் ஹோ’ பூண்ட மாறுபெயராம். சிறு வயதில், இக்கதையைப் பன்முறை படித்து நான் மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். ஆகவே, இப்பெயரையே என் மாறுபெயராக வைத்து என் புதிய நாடகத்தை அனுப்பினேன். இதை எழுதச் சற்றேறக்குறைய எனக்கு நான்கு ஐந்து மாதங்கள் பிடித்தன. கடைசியில் எப்படி நாடகத்தை முடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்துவிட்டு, நாடகத்தை அனுப்ப வேண்டிய காலத்திற்கு ஒருவாரம் வரையில், காலஹரணம் செய்து கொண்டிருந்து விட்டேன். பிறகு ஏழு நாட்களுக்குள் நாடகத்தைப் பூர்த்தி செய்து, (என் வழக்கப்படி பென்சிலினால் எழுதிய காட்சிகளையெல்லாம்) இங்கியில் எழுதி அனுப்ப வேண்டுமேயென்று அவசரப்பட்டு, ஒரு வகையாக முடித்து நானாக இங்கியில் பிரதி செய்து அனுப்பினேன். இந்த அற்ப விஷயத்தை ஒரு பொருட்டாக இங்கு எடுத்தெழுதியதற்கு ஒரு காரணமுண்டு. நான் அச்சிடும் புஸ்தகங்களிலெல்லாம் ஒரு பிரதி, கொழும்பில் வசிக்கும் கற்றறிந்த மாது சிரோமணியாகிய திருநாவுக்கரசு அம்மாளுக்கு அனுப்பும் வழக்கப்படி, இப் புஸ்தகம் அச்சிட்டவுடன் ஒன்றையனுப்ப, அவர்கள் நாடகத்திலுள்ள சாராம்சங்களை எடுத்துக் கூறி, கடைசியில், “நீர் நாடகத்தைக் கடைசியில் முடித்தது எனக்கு அவ்வளவு திருப்திகரமாயில்லை . ராஜேஸ்வரியும் ரங்கநாதமும் ... கடைசியில் சந்திக்கும் காட்சி ஏதோ நீர் அவசரப்பட்டு எழுதியது போல் எனக்குத் தோன்றுகிறது”என்று, நான், ‘யார், இதை அறியப் போகிறார்கள்?’ என்று இருந்த மர்மத்தை வெளியிட்டனர். ஆகவே, கிரந்த கர்த்தாக்கள் “நம்முடைய மனத்திலிருப்பது மற்றவர்களுக்கு என்ன தெரியப் போகிறது?” என்று இறுமாந்திருக்கலாகாது! என்பதை யறிந்தேன். ஆகவே, கிரந்த கர்த்தாக்கள் இதைச் சற்றுக் கவனிப்பார்களாக; அவசரப்பட்டு எதையும் எழுதாதிருப்பார்களாக. இந்தச் சந்தர்ப்பத்தில் என்னிடமுள்ள ஒரு கெட்ட குணத்தை எழுதுகிறேனிங்கு. நான் எழுதும் புஸ்தகங்களில் என்ன குற்றங்களை நானே கண்டாலும், அல்லது பிறர் எனக்கு எடுத்துக் காட்டினாலும் அவற்றையெல்லாம், அப்புஸ்தகம் அச்சிடுமுன் மாற்றி விடுவேன்; ஒரு முறை அச்சிட்டபின், “அச்சாசிரியர் பிழை”எனக் கூறப்பட்ட எழுத்துப் பிழைகள் தவிர, மற்றவைகளை மாற்றுவதில்லை என்னும் ஒரு மூடப் பிடிவாதம் என்னிடம் உண்டு இன்றளவும். இது என்னை விட்டு முற்றிலும் அகல வில்லை என்று நினைக்கிறேன். ஆகவே இந்த “விஜயரங்கம்” என்னும் நாடகத்தில் கடைசிக் காட்சியின் முன் காட்சியைச் சற்று மாற்றி எழுதினால் நன்றாயிருக்கும் என்று எனக்குப் புத்தியில் நன்றாய்ப் பட்டபோதிலும், அங்ஙனம் செய்யாதிருக்கிறேன்.
இந்தப் பரீட்சைக்கு 15 தமிழ் நாடகங்கள் அனுப்பப்பட்டன. இவைகளுள் எது சிறந்ததெனத் தேர்ந்தெடுக்க, ம-ள-ள-ஸ்ரீ செல்வகேசவராய முதலியார் அவர்கள், எம்.ஏ., திவான்பஹதூர் பவாநந்தம் பிள்ளை அவர்கள், பி.ஆர். கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் மூவரும் கமிட்டியாக ஏற்படுத்தப்பட்டனர். இவர்கள் இப்பதினைந்து நாடகங் களையும் பரிசோதித்துப் பார்த்து, “விஜயரங்கம்” என்னும் எனது நாடகத்திற்குத்தான் பொற்பதக்கமளிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அவர்களுடைய தீர்மானம் கைக் கெட்டியபிறகே, எங்கள் நிர்வாக சபையார், ஒவ்வொரு மாறு பெயரும் இன்னாருடையது என்று சீல் வைத்து அனுப்பப் பட்டவைகளைப் பிரித்துப் பார்த்து, ‘விஜயரங்கம்’ என்னும் நாடகம் என்னால் அனுப்பப்பட்டது என்று கண்டனர்.
இந்த விஜயரங்கம் என்னும் நாடகத்தைப்பற்றி எனது நண்பர்களுக்குச் சில விஷயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இது நான் எழுதியுள்ள நாடகங்களுக்குள் ஒரு சிறந்த நாடகம் என்பது என் கருத்து. இதைத் தற்புகழ்ச்சியாக எனது நண்பர்கள் எண்ணலாகாது. ஒரு கிரந்த கர்த்தா எழுதியுள்ள புஸ்தகங்களில் அவன் மனத்திற்கே பிடித்ததாகச் சில எப்படியும் இருந்துதான் தீர வேண்டும். நான் எழுதியுள்ள நாடகங்களில் என் மனத்திற்கே அதிகத் திருப்தியைச் சில கொடுத்திருக்கின்றன. அவற்றுள் “விஜயரங்கம்” ஒன்றாகும். நான் எழுதியுள்ள நாடகங்களுள் பலவற்றை நான் இரண்டாம் முறைகூடப் படிப்பதில்லை. இந்த விஜயரங்கத்தைப் பன்முறை நான் படித்தும், இப்பொழுது எனக்கு அவகாசமிருக்கும்பொழுதெல்லாம் மற்றொரு முறை படிக்க என் மனம் நாடுகின்றது.
இந்த நாடகத்தின் கதையை நான் மனத்தில் கோர்த்த பொழுது, இந்நாடகத்தின் கதாநாயகனுக்கும், இந்நாடகத்திற்கும், என் தகப்பனாருடைய பெயரை வைக்கவேண்டு மென்று தீர்மானித்து அப்பெயரை வைத்தேன். இப்படி வைத்ததற்குக் காரணம், என் தகப்பனார் மீது எனக்கு இந்நாளளவும் இருக்கும் பேரன்பே; இது நான் சாமளவும் குறையாதிருக்க வேண்டுமென்பது என் பிரார்த்தனை. என் தகப்பனாருடைய ஜீவிய சரித்திரத்திற்கும் இக்கதைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. சிலர் இந்நாடகத்தில் என் அனுபவத்தைப் பெரும்பாலும் எழுதியிருப்பதாக எண்ணுகிறார்கள்; என்னிடம் நேராகவும் சொல்லியிருக்கிறார்கள்; அது தவறாகும். ஏதோ ஒன்றிரண்டு சிறு சந்தர்ப்பங்களை என் அனுபவத்தினின்றும் இதில் எழுதியிருக்கலாம். அவற்றுள் ஒன்று எனக்கு முக்கியமாக ஞாபகமிருக்கிறது. என்னுடைய பிள்ளை வரதன் ஏழெட்டு வயதுக் குழந்தையாயிருக்கும்பொழுது, ஏதோ துஷ்டத்தனம் செய்தான் என்று அவன் கன்னத்தில் ஒரு முறை நான் ‘பளீர்’ என்று அடிக்க, அவன் அப்படியே துடித்துப் போனான். கன்னத்தில் அடித்தால் இவ்வளவு நோயுண்டாகிறதா என்று சந்தேகித்தவனாய், நான் என் வீட்டின் மேல் மாடிக்குச் சென்று, ஒருவருமில்லாத சமயம் பார்த்து என் கன்னத்தில் நானே ‘பளீர்’ என்று அடித்துக்கொண்டு பார்த்தேன். உடனே எனக்குண்டான நோயினால், கன்னத்தில் அடிப்பதனால் இவ்வளவு கஷ்டமுண்டாகிறதென அறிந்தேன்! நான் கன்னத்தில் அடிபட்டதில்லை. சுயமாக இதை அனுபவித்த பிறகு, சிறு பிள்ளைகளைக் கன்னத்தில் அடிக்கக்கூடா தென்பதை அறிந்தேன்! இந்த அனுபவத்தை, கதாநாய கனான விஜயரங்கம் சுயமாக அறிந்ததாக எழுதியுள்ளேன். இம்மாதிரியான இரண்டொரு சந்தர்ப்பங்கள் என்னையுமறியாதபடி இக்கதையில் வந்திருக்கலாம். என்னுடைய சொந்த அனுபவங்களையெல்லாம் இக்கதையில் எழுதியிருக்கிறேன் என்று எண்ணுவது முற்றிலும் தவறாகும். அப்படி வாஸ்தவமாயிருந்தால், நான் அப்படிச் செய்திருக்கிறேன் என்று இங்கு எழுதத் தடையில்லை. விஜயரங்கத்தினிடத்தில், வெட்கப்படத்தக்க குணம் ஒன்றும் கிடையாது. ஆயினும் எனது நண்பர்களுட்சிலர், இவ்வாறு ஏன் எண்ணவேண்டும் என்று யோசித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த வரையில், கதாநாயகனான விஜயரங்கத்தை ஒரு நாடக ஆசிரியனாக நான் வர்ணித்ததும், இந்நாடகத்தில் சில காட்சிகள் நாடக மேடையிலே நடக்கிறதாக நான் எழுதியுள்ளதும், மற்றவர்களை இவ்வாறு எண்ணும்படி செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறதெனக்கு. அன்றியும் உலகத்தைப் பற்றிய என்னுடைய சில அபிப்பிராயங்களை, கதாநாயகன் அபிப்பிராயங்களாக நான் எழுதியிருப்பது அவ்வாறு எனது நண்பர்களுட் சிலர் சந்தேகிக்கும்படி இடங்கொடுத்திருக்கலாம். மேற்கூறிய சில ஒற்றுமைகள் நீங்க, இந்நாடகத்தை முழுவதும், என்ன மனத்தால் நிர்மாணிக்கப்பட்டது என்பதை எனது நண்பர்கள் நம்பும்படிக் கேட்பேன்.
இந் நாடகத்தில் சில காட்சிகள் - முக்கியமாக, விஜயரங்கம் திருமெஞ்ஞான முதலியார் வீட்டில் வேலையாளாக இருந்து நீங்கும் காட்சியும், விஜயரங்கம் ராஜேஸ்வரியுடன் சம்பாஷிக்கும் காட்சியும், விஜயரங்கம் தன் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியும் - நான் எழுதியவற்றுள் மிகச் சிறந்தன என்பது என் அபிப்பிராயம். இந்நாடகத்தை வாசித்த எனது நண்பர்கள் பலருடைய அபிப்பிராயமும் அதுவே. இந்நாடகத்தைப் பற்றி நான் பெற்ற நன்மதிப்புக் கடிதங்களைப்போல் மற்றெந்த நாடகத்திற்கும் பெற்றேனில்லை.
இந்நாடகமானது மறு வருஷம் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. அப்போது எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு, மங்கையர்க்கரசியாக நடித்தார். நான் விஜயரங்கம் பிள்ளையாக நடித்தேன். சத்யமூர்த்தி ஐயர் ரங்கநாதம் ஆகவும், சுந்தரவரத ஐயங்கார் ராஜேஸ்வரியாகவும் நடித்தார்கள். புதிய நாடகமாயிருந்தபடியாலும் பொற்பதக்க மளிக்கப்பட்ட நாடகமானதனாலும், எங்கள் சபையின் அங்கத்தினர் ஏறக்குறைய எல்லோரும் வந்திருந்தனர். அன்றியும் வெளியார் வந்ததனால் பண வசூலும் அதிகமாயிருந்தது.
இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்தபடியால் வந்தவர்களுக்கெல்லாம் விக்டோரியா பப்ளிக் ஹாலில் இடம் இல்லாமற் போக, நாடக மேடையின் மீது பிடிக்கக்கூடிய வரையில் எங்கள் சபையின் அங்கத்தினருக்கு இடங்கொடுக்கும்படி நேர்ந்தது. நாடகமானது நன்றாய் நடிக்கப்பட்டது என்பது வந்தவர்களுடைய அபிப்பிராயம்; என்னுடைய அபிப்பிராயமும் அப்படியே.
இந்நாடகத்தில் நன்றாய் நடித்தவர்களுள் முதல் பரிசு கொடுப்பதென்றால், விஜயரங்கம் பிள்ளையின் குமாரனாகிய சாமிநாதனாக நடித்த வி.வி. ராமதுரைக்குத்தான் அதைக் கொடுப்பேன். ராமதுரை எனது பால்ய நண்பராசிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடைய பிள்ளை; சாமிநாதன் வேஷத்திற்குச் சிறு பிள்ளையாகவும் இருக்கவேண்டும், நன்றாய் நடிக்கும் திறமை வாய்ந்தவனாயுமிருக்க வேண்டுமே என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் போது, ஒரு நாள் எனது நண்பர் குமாரனாகிய ராமதுரையைச் சந்தித்தேன். உடனே இப்பிள்ளை சாமிநாதன் வேடத்திற்குத் தக்கவனாயிருப்பான் என்று என் மனத்தில் உதிக்க, ராமதுரையை இந்த வேஷம் “நீ எடுத்துக்கொள்கிறாயா?” என்று கேட்க, ராமதுரையும் ஒப்புக்கொள்ள, அதன்மீது வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் அனுமதியைப் பெற்று, ராமதுரைக்கு ஒத்திகை நடத்தி வந்தேன். நான் சொன்ன சூட்சுமமான விஷயங்களையெல்லாம் மிகவும் எளிதில் கிரஹித்து, நாடக தினம் எல்லோரும் (அவரது தகப்பனார் உட்பட) மெச்சும்படியாக மிகவும் நன்றாய் நடித்தான். அக்காலம் சிறுவனாய் நடித்த ராமதுரை, இப்பொழுது பெரியவனாகி, வக்கீலாகி, தகப்பனாருமாகிவிட்டான். காலம் எவ்வளவு விரைந்து செல்கிறது! இந்நாடகத்தைப் பிறகு எங்கள் சபையில் நடத்தியபோதெல்லாம் எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயருடைய குழந்தை ‘மணி’ நன்றாய் நடித்தான். ஏறக்குறைய ராமதுரையைப் போலவே நடித்தான் என்று நான் சொல்ல வேண்டும். இந்த “சாமிநாதன்” பாகம் இந்நாடகத்தில் ஒரு முக்கியமானது. இதைச் சரியாக நடிக்காவிட்டால் நாடகமே நன்றாயிராது என்பது என் துணிபு. ஆகவே, இதை நடிப்பதற்கு ராமதுரை, மணி ஆகிய இரண்டு பால ஆக்டர்கள் கிடைத்தது நான் செய்த அதிர்ஷ்டமே.
ராமதுரைக்குப் பிறகு நன்றாய் நடித்த ஆக்டர், ஒரு சிறு நாய்க்குட்டியே! இந்நாடகத்தை வாசித்தவர்கள் இதில் ஒரு சிறு நாய்க்குட்டி வருகிறது என்பதை நன்றாய் அறிவார்கள். இதற்காக, எனது நண்பர் துரைசாமி ஐயங்காரிடமிருந்து ஒரு சிறிய நாய்க் குட்டியை வரவழைத்து, அதை எங்கள சபையில் இரண்டு வாரம் வைத்திருந்து ராமதுரையின் கையினால் அதற்குப் பால் குடிக்கச் செய்து அதை “ஒத்திகை” செய்து பழக்கி வந்தேன்! அவன் கூப்பிடாமலே அவனைப் பின்தொடரச் செய்தேன். நாடக தினத்தில் அது அப்படியே செய்ய, சபையில் வந்திருந்தவர்கள் அதிகக் கரகோஷம் செய்தனர். இந் நாடகத்தைப் பிறகு நடிக்கும் போதெல்லாம் இதற்காக ஒரு சரியான நாய்க்குட்டியை வாங்கிப் பழக்க வேண்டி வந்தது.
எனதுயிர் நண்பர் ஆயுட் காலத்தில் மிகவும் அருமையாய் நடித்த வேடங்களில், இந்நாடகத்தின் கதாநாயகியாகிய மங்கையர்க்கரசியின் வேடம் ஒரு முக்கியமானதாம். இவருக்குப் பிறகு எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், இந்த வேடத்தை ஏறக்குறைய அவரைப் போலவே மிகவும் விமரிசையாகப் பன்முறை நடித்திருக்கின்றனர்.
இந்நாடகத்தில் எனது நண்பராகிய டி. சுந்தரவரத ஐயங்கார், நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான “ராஜேஸ்வரி” யாக மிகவும் நன்றாய் நடித்துச் சபையோரைத் திர்ப்தி செய்தனர்.
இவர் யாழ்ப்பாணத்து ஸ்திரீயைப்போல் ஆடை ஆபரணங்கள் அணிந்து தோன்றியது எல்லோராலும் மெச்சப் பட்டது. இவருக்குப் பாடும் சக்தியில்லாவிட்டாலும், இப்படிப்பட்ட ஸ்திரீ பாகங்களை நடிப்பதில் மிகவும் சமர்த்தர் என்றே நான் கூற வேண்டும். இவர் இதன்பிறகு மிகவும் சில தடவைகளில்தான் ஸ்திரீ வேடம் பூண்டு எங்கள் சபையில் நடித்திருக்கின்றனர். தற்காலம் இவர் ஸ்திரீ வேடம் பூணாதது எங்கள் சபையின் துர்ப்பாக்கியமென்றே சொல்ல வேண்டும்.
இந்நாடகம் முதன்முறை நடத்தப்பட்டபொழுது, எனது பால்ய நண்பர்களுள் ஒருவராகிய கே. ஆர். சீதாராமய்யர் திருமெஞ்ஞான முதலியாராக நடித்தார். அவரது இளங் குமாரத்தியாக அப்பொழுது சுமார் 9 வயதுடையவளாயிருந்த என் குமாரத்தி, சி.சௌ. தர்மாம்பாள் நடித்தாள். இதுதான் எங்கள் சபை தோன்றி முதன் முறை எங்கள் நாடக மேடையின் பேரில் பெண்பால் ஆடியது. இதைக் கொண்டாட வேண்டுமென்று கூறி, எங்கள் சபை பிரசி
டென்டாகிய ஆனரபில் டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள், ஒரு பெரிய புஷ்பச் செண்டை வரவழைத்து ஹானரபிள் ஜஸ்டிஸ் சி. கிருஷ்ணன் மூலமாக, என் பெண்ணுக்குக் கொடுக்கச் செய்தார். பிறகு சில தடவைகளில் இந்நாடகம் எங்களால் ஆடப்பட்டபொழுது என் பெண் பெரியவளாகி விடவே, எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் சகோதரியின் பெண் பத்மா இந்த வேடம் தரித்திருக்கிறது.
இந்த நாடகத்தில் தோன்றிய மற்றொரு பாத்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுத விரும்புகிறேன்; அதாவது ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டியாரின் பாகம். இதைக் காலஞ் சென்ற எனது நண்பர் சோமசுந்தரம் பிள்ளை பி.ஏ., பி.எல். அவர்கள் தத்ரூபமாய் நடித்தார். சுபாவத்திலேயே இவரது தலை மொட்டையாயிருக்கும்; நிறம் கருப்பாயிருக்கும்; ஆகவே உருவம் நாட்டுக்கோட்டைச் செடடியார் வேடத்திற்கு மிகவும் தகுதியாயிருந்தது; அன்றியும் இவர் பல நாள் நாட்டுக்கோட்டைச் செட்டிகளுடன் பழகியதால், அவர்களைப் போலவே பேசுவார். இதையறிந்த நான், இவருக்கென்றே நாட்டுக்கோட்டைச் செட்டியார் பாத்திரம் எழுதினேன் இந்த நாடகத்தில். இவர் அன்று இப்பாத்திரத்தில் நடித்தது எல்லோருக்கும் இடைவிடா நகைப்பைத் தந்தது. இதற்கப்பாலும் இந்நாடகத்தில் இவ்வேடம் தரித்தவர்களுக்குள் தற்காலம் மதுரையில் இருக்கும் டாக்டர் வரதராஜ ஐயரே சிறந்தவர் என்று கூற வேண்டும்.
இந் நாடகமானது எனது நாடகங்களுக்குள் நடிப்பதற்குக் கஷ்டமானது; இது காரணம் பற்றியே நாடகக் கம்பெனிகளும், இதர சபைகளும் இதை அதிகமாய் ஆடியதில்லை.
இந்த 1919ஆம் ஆண்டில், எங்கள் சபை தசராக் கொண்டாட்டத்தில் ஒரு விசேஷமென்னவென்றால், சி.பி. ராமசாமி ஐயர் அவர்கள் நடத்தி வரும், “ஸ்திரீகள் தினம்.” விக்டோரியா பப்ளிக் ஹாலில் வரும் ஸ்திரீகளுக்கெல்லாம் இடமிராதென்று சவுத் இந்தியன் அத்லெடிக் அசோசி யேஷன் மைதானத்தில் ஒரு பெருங் கொட்டகையில் வைத்துக் கொண்டோம். சுமார் 1000 ஸ்திரீகளுக்குக் குறைவில்லாமல் வந்திருந்தனர்.
இவ் வருஷம் நிகழ்ந்த இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி என்னவென்றால், எங்கள் சபையின் கட்டட பண்டுக்காகப் பொருள் சேர்க்கும் பொருட்டு, நாடகசாலையும் இருப்பிடமும் கட்ட மற்ற ஏற்பாடுகள் செய்யும் பொருட்டும் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. அதற்கு என்னைக் காரியதரிசியாக நியமித்தார்கள். உடனே எங்கள் சபை அங்கத்தினர்க்கெல்லாம் எழுதிப் பொருள் சேகரிக்க ஆரம்பித்தேன். இவ்வருஷம் எங்கள் சபையின் அங்கத் தினர் சுமார் 8000 ரூபாய் வரைக்கும் கையொப்பமிட்டனர். அதில் பெரும்பாலும் வசூலிக்கப்பட்டது. இவ்வருஷத்தின் கடைசியில் எங்கள் கட்டட பண்டுத் தொகை 19628-4-6 ஆகியது. நான் இதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருள் சேர்த்த கதையை, பிறகு ஒரு சமயம் எழுதலா மென்றிருக்கிறேன்.