நாடக மேடை நினைவுகள்/23 ஆவது அத்தியாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

23 ஆவது அத்தியாயம்


னி, 1917ஆம் ஆண்டில் எங்கள் சபையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதுகிறேன்.

இவ்வருஷத்தில் சென்னைக்கு வெளியில் நாங்கள் ஆடிய நாடகங்கள் உட்பட, 53 நாடகங்களாடினோம். இதுதான் நாளது வரையில் எங்கள் சபையார் ஒரு வருஷத்தில் ஆடிய அதிக மொத்தமான நாடகங்கள். இவ்வருஷம் எங்கள் சபையின் நானூறாவது நாடகமாக ஆந்திர நாடகப் பிதாமகர் கிருஷ்ணமாச்சார்லு எழுதிய ‘பிரஹ்லாதா’ என்னும் நாடகத்தை நடத்தினோம். நான் இவ் வருஷம் புதிதாய் எழுதிய நாடகம் “ஊர்வசியின் சாபம்” என்பதாம். இக் கதை மஹாபாரதத்தினின்றும் எடுக்கப் பட்டது; ஊர்வசியானவள் அர்ஜுனன் தனக்கு இணங்கா ததற்காக அவனைப் பேடியாகும்படிச் சபித்த கதையாம். இதை நான் நாடக ரூபமாக அமைத்ததற்கு முக்கிய காரணம் பின் வருமாறு: எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு நாட்டியஞ் செய்யக் கற்றுக் கொண்ட பிறகு, அடிக்கடி அவரை, சந்தர்ப்பமில்லா இடங்களில்கூட நடிக்கும்படிப் 

பலர் வேண்டினர். ‘காலவ ரிஷி’ நாடகத்தில் தவிர, மற்ற நாடகங்களின் இடையில் அவர் நடிக்க வேண்டிய சந்தர்ப்பம் வேறொன்றுமில்லாதிருந்தது. இதை நிவர்த்திக்கும் பொருட்டு, அவர் நாடகத்தின் ஒரு பாகமாகவே நடிக்க வேண்டிய ஒரு கதையை நாடகமாக எழுத வேண்டுமெனத் தீர்மானித்து, இந்த ஊர்வசியின் சாபம் எனும் நாடகத்தை எழுதலானேன். இதில் ஒரு முக்கியக் காட்சி, இந்திரன் சபையில் ஊர்வசியானவள், இந்திரன் மகனான அர்ஜுனன் மனத்தைக் கவர, தன் முழுத் திறமையும் கொண்டு நடிக் கிறாள். இது எனதுயிர் நண்பர் தனது நர்த்தனக் கலையை, நன்கெடுத்துக் காட்ட மிகவும் சௌகரியமாயிருந்தது. இந்த ஒரு காட்சியை மாத்திரம் சில காலத்திற்கு முன் எழுதியிருந்தேன். அதனுடன், அர்ஜுனன் தவம் புரியும் காட்சியையும், பிறகு ஊர்வசியை வெறுக்கும் காட்சி முதலானது சேர்த்து ஒரு நாடகமாக எழுதி முடித்தேன். அதை முடித்தபோது ஒரு நாள் ஆடக்கூடிய நாடகத்திற்கு மிகவும் சிறிதாயிருந்தபடியாலும், இதில் ஹாஸ்ய ரசம் இல்லாதிருந்த படியாலும், அதற்காகத் துரியோதனன் அர்ஜுனன் தவத்தைக் கெடுக்க விரும்பி, தன் சாரணர்களை அனுப்பியதாக, மூன்று இடைக் காட்சிகளைச் சேர்த்து நாடகத்தைப் பூர்த்தி செய்தேன்.

எனதுயிர் நண்பர் ஊர்வசியாக நடித்தபடியால், இந்நாடகத்தில் நான் அர்ஜுனன் வேடம் பூண்டேன். இந் நாடகம் எங்கள் சபையோரால் இவ் வருஷம் ஜூலை மாதம் 29ஆம் தேதி நடிக்கப்பட்டது. மிகவும் நன்றாயிருக்கிற தென எங்கள் சபை அங்கத்தினரே மெச்சி, இரண்டு மூன்று வாரத்திற்குள் மறுபடியும் ஆடவேண்டுமென்று நிர்ப்பந்தித்தனர். இதற்கு முக்கியக் காரணம், ரங்கவடிவேலு தன் நர்த்தனத்தில் புதிதாய்க் கற்றுக் கொண்ட சில அபிநயங்களும் அர்ஜுனனுக்கு, பரமசிவன்- பார்வதி சமேதராய்க் காட்சி கொடுக்கும் காட்சியுமே என்று நம்புகிறேன். அர்ஜுனனை மல்யுத்தத்தில் தோற்கடித்த பிறகு, பார்வதியின் வேண்டுகோளுக்கிரங்கி, பரமசிவன் காட்சி கொடுத்த பொழுது; பிரமா, விஷ்ணு , சுப்பிரமணியர், விநாயகர், தேவேந்திரன் முதலியோரும் தங்கள் வாஹனங்களின் மீதூர்ந்து, ஆகாயத்தில் அவனுக்குக் காட்சி கொடுத்துத் தங்கள் தங்கள் ஆயுதங்களையும் அவனுக்கு அளித்ததாகப்

பாரதக் கதையிருப்பதால், இக் காட்சியில் அத் தேவர்களெல்லாம் பரமேஸ்வரனைப் புடை சூழ்ந்திருப்பது போல் காட்சியை நிர்மாணிக்கச் செய்து, அதற்குரிய தேவதுந்துபி கோஷம் முதலியனவும் தக்கபடி ஏற்பாடு செய்தது, வந்திருந்தவர்களுடைய மனத்தையெல்லாம் கவர்ந்ததென் பதற்குத் தடையில்லை. ரங்கவடிவேலுவின் நடனத்தைப் பார்ப்பதற்கும், இக்காட்சியைக் காணவுமே பலர் இந் நாடகத்திற்கு வந்தனர் என்று கூற வேண்டும். இந் நாடகம் பிறகு பன்முறை சென்னையிலும், வெளியூர்களிலும் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது.

இந் நாடகம் நடிப்பதற்குக் கொஞ்சம் கஷ்டமான தனால் இதர சபைகள் இதை அதிகமாக ஆடுவதில்லை . ஊர்வசி வேடம் பூண்டு நர்த்தனஞ் செய்யத்தக்க ஆட்களையுடைய சபைகள்தான் இதை எடுத்துக் கொள்ளக்கூடும்.

இந் நாடகத்திற்காக நான் எழுதிய மூன்று இடைக் காட்சிகள், நான் எழுதியிருக்கும் ஹாஸ்யரசம் பொருந்திய காட்சிகளுள் சிறந்தனவென்று நான் நினைக்கிறேன். இவைகள் தனியாகப் பன்முறை ஆடப்பட்டிருக்கின்றன.

இவ் வருஷம், எங்கள் சபையில் சம்ஸ்கிருத நாடகப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதற்குக் காலஞ்சென்ற டி. எஸ். நாராயண சாஸ்திரியாரைக் கண்டக்டராக ஏற்படுத்தினோம்; இவர் சம்ஸ்கிருதத்தில் மிகுந்த பாண்டித்யமுடையவர்; சம்ஸ்கிருதத்தில் “மத்தியம வியா யோகம்” என்னும் நாடகத்தை எழுதியவர்; தமிழிலும் கற்றவர். “போஜ சரித்திரம்” என்னும் நாடகத்தை எழுதினார். இப்போஜ சரித்திர நாடகமானது, அவரது காலத்தில் எங்கள் சபையில் ஆடப்படாது, அவர் காலமான பிறகு ஆடப் பட்டது, ஒரு பெருங்குறையென நான் மதிக்கிறேன். இவர் நடுவயதிலேயே காலகதியடைந்தது எங்கள் சபையின் சம்ஸ்கிருதப் பிரிவு செய்த தௌர்ப்பாக்கியமாகும்.

எங்கள் சபையானது இவ் வருஷம் வெளியூருக்கு இரண்டு முறை சென்றது; முதன் முறை பெங்களூருக்கும் இரண்டாம் முறை மாயவரத்திற்கும்; பெங்களூரில் 6 நாடகங்களும், மாயவரத்தில் 7 நாடகங்களும் ஆடினோம். இம் முறை பெங்களூருக்குப் போனது எங்கள் 

சபை அவ்வூருக்கு மூன்றாம் முறை சென்றதாகும். பெங்களூருக்குப் போகலாகம் என்கிற விஷயம் பிரேரேபிக்கப் பட்டவுடன், நான் , “அதில் பிரயோஜனமில்லை; சபைக்கு நஷ்டம் ஏற்படும்” என்று ஆட்சேபித்தேன். “சூடுண்ட பூனை அடுப்பங்கரை ஏறாது” என்னும் பழமொழிக்கிலக்காக, இரண்டு முறை அங்குப் போய் வந்த அனுபவத்தைக் கொண்டு, வேண்டாம் என்று தடுத்தேன். அதன் பேரில், அங்கு போக வேண்டுமென்று விரும்பிய எங்கள் சபையின் ஆக்டர்களிற் சிலர், என்னுடன் பேசுவதில் பிரயோஜன மில்லை யென்று கண்டவராய், எனதுயிர் நண்பர் ரங்க வடிவேலுவிடம் போய் அவர் மனத்தைக் கலைத்தனர். அதன்பேரில் எனது நண்பர் என்னிடம் வந்து, “எப்படியாவது சபை இவ்வருஷம் பெங்களூருக்குப் போக வேண்டும். நீங்கள் ஆட்சேபம் செய்யக் கூடாது” என்று தன்னாலியன்ற அளவு வாதித்துப் பார்த்தனர்; அவர் வாதித்தது ஒன்றும் பலிக்காமற் போகவே, கடைசியில், “எனக்குப் போகவேண்டுமென்று மிகவும் இஷ்டமாயிருக்கிறது. அதற்காக நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று கேட்டார். அவர் கூறிய வேறு நியாயங்களுக்கெல்லாம் பதில் கூறி வந்தேன்; இந்தக் கடைசி நியாயத்திற்கு நான் என்ன பதில் சொல்வது? மனோகரன் விஜயாளுக்குக் கூறியபடி, “என்னை வெல்வதற்கு இந்தப் பாணம் ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறாயே!” என்று கூறி, “நிர்வாக சபையில் இதைப்பற்றி அபிப்பிராயம் தேர்ந்தெடுக்கப் படும் பொழுது நான் இதற்கு மாறாக என் வோட் கொடுக்கவில்லை. ஆயினும் என் மனத்திலிருப்பதை மாத்திரம் கூறி விடுவேன்” என்று சொன்னேன். அதன் படியே நிர்வாக சபைக் கூட்டத்தில் இந்தப் பிரஸ்தாபம் வந்தபோது, பெங்களூருக்குப் போவதனால் எங்கள் சபைக்கு நஷ்டம்தான் கிடைக்கும் என்பதற்கு என் நியாயங்களை யெல்லாம் எடுத்துக் கூறி, கடைசியில், “இந்தப் பாரம் உங்கள் தலைமீது” என்று ஸ்பஷ்டமாய்ச் சொன்னேன். மற்றவர்களெல்லாம், “அம்மாதிரி ஒன்றும் நேரிடாது; நாம் பயப்பட வேண்டியதில்லை” என்று கூறினவர்களாய்ப் பெங்களூருக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அப்படியே அங்கு போனதனால் சபைக்குச் சுமார் 800 ரூபாய்க்குமேல் நஷ்டம் உண்டாச் 

சுது. நான் சொன்னபடியே நடந்ததெனச் சந்தோஷப்பட வில்லை. நான் எண்ணியபடி நேராது, சபைக்கு லாபம் வந்திருக்குமாயின், அதிக சந்தோஷப்பட்டிருப்பேன். நான் முக்கியமாக வருத்தப்பட்டதெல்லாம், என் அனுபவத்தைக் கொண்டு நான் சபையின் நன்மைக்காகக் கூறியதை சபை யோர் கவனியாது, பிறகு கஷ்டப்பட்டார்களே என்பது தான்.

இந்த பெங்களூர்ப் பிரயாணத்தில் ஆரம்பமுதல் எல்லாம் விக்கினமாகவே யிருந்தது. தமிழில் அங்கு நாடகங்களாட வேண்டுமென்று ஆரம்பித்தவுடன், தமிழரின் தாயாதிகளான தெலுங்கர், நாங்களும் அங்கு ஒரு நாடகமாட வேண்டுமென்று ஆரம்பித்தனர்! நம்முடைய கடமையை நாம் செய்துவிட்டோம்; இனி அவர்கள் பாடென்று நான் சும்மா இருந்துவிட்டேன். நான் எண்ணியபடியே, அங்கு நாங்கள் ஆடிய ‘பிரஹ்லாதா” என்னும் தெலுங்கு நாடகத்திற்குப் பல்லாரியிலிருந்து தெலுங்கில் பிரபல ஆக்டராகிய எனது நண்பர் ராகவாச்சார்லு வந்து ஆடியும், செலவு அதிகமும் வசூல் கொஞ்சமுமாய் முடிந்தது! தமிழ் நாடகங்களுக்கும், நான் நினைத்தபடியே சரியான வசூலாக வில்லை. பணம் வசூலாகாமற் போனால் போகிறது, ஜனங்களாவது வந்து பார்க்கவேண்டுமே, அதுவும் இல்லை. ‘பட்டபின்தான் ஒரு ஜாதியார்க்குத் தெரியும்’ என்று ஒரு பழமொழியுண்டு. அதன்படி பெங்களூரில் இம்மாதிரி கஷ்டப்பட்ட பின்தான், சம்பந்தம் கூறியது சரியென அவர் களுக்குத் தோன்றியது. இங்கு நடந்த நாடகங்களில், ஒன்றைப் பற்றி நான் சில விஷயங்கள் இங்கு எழுத விரும்புகிறேன். அதாவது, “அமலாதித்யன்” என்னும் நாடகத்தைப்பற்றி.

பெங்களூரில் என்னென்ன நாடகங்கள் ஆடுவது என்கிற பேச்சு வந்த பொழுது, “அமலாதித்யன்” நாடகத்தையும் அங்கு ஆடவேண்டுமென்று சிலர் பிரேரேபித்தார்கள்; அது அவ்விடத்தில் ரமிக்காது, அவ்விடத்திலுள்ள வர்களெல்லாம் புராணக் கதைகள் முதலியன விரும்புவார்களே யொழிய, ஷேக்ஸ்பியர் நாடகங்களின் மொழி பெயர்ப்பு அங்கு ருசிக்காது என்று என் எண்ணத்தைக் கூறி ஆட்சேபித்தேன். அதன்மீது அவ்விடத்திய கன்னட நாடக சபையார்கள் சிலருக்கு எங்கள் சபையார் எழுதிக் 

கேட்க, அவர்கள் ‘அமலாதித்யன்’ கட்டாயமாய்ப் போட வேண்டும். இவ்விடத்திலிருப்பவர்கள் அதைத்தான் பார்க்க மிகவும் விரும்புகிறார்கள் என்று பதில் எழுதியனுப்பினார்கள். அதன்பேரில் மறுபடியும் இவ்விஷயம் எங்கள் நிர்வாக சபையில் தீர்மானத்திற்கு வந்ததன் பேரில் எனது நண்பர்கள், அக்கடிதத்தைக் காட்டி, “பார்த்தாயா, நீ கூறியது தவறு. அங்குள்ளவர்களெல்லாம் இந்நாடகத்தைத் தான் முக்கியமாகப் பார்க்க விரும்புகிறார்கள் என்று பதில் வந்திருக்கிறது. ஆகவே அதை முக்கியமாகப் பெங்களூரில் ஆடவேண்டும்” என்று கூறினார்கள். “இதை முற்றிலும் நம்பாதீர்கள்; இதற்கு அர்த்தமென்ன வென்றால், இக் கடிதம் உங்களுக் கெழுதியிருக்கும் கற்றவர்களாகிய இவர்களுடைய அபிப்பிராயம் அந் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்றிருக்கலாம். இதைப் பெங்களூர் ஜனங் களின் பொது அபிப்பிராயமாக நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று ஆட்சேபித்தேன். என் ஆட்சே பணை யானது செவிடன் காதில் ஊதிய சங்கநாதமாயிற்று. பிறகு அமலாதித்யன் நாடகமும் பெங்களூரில் ஆட வேண்டு மென்று தீர்மானிக்கப்பட்டது. இந்நாடகம் நடத்தப்பட்ட பொழுது, நான் எண்ணியபடியே பெங்களூரில் ஆங்கிலம் கற்றறிந்த சிலர் தவிர, மற்றப் பொது ஜனங்கள் அதிகமாக வரவில்லை. பிறகுதான் என்னை ஆட்சேபித்த எனது நண்பர்கள், நான் எண்ணியது சரியென ஒப்புக்கொண் டனர். பிறகு இவ்வாறு எழுதியனுப்பிய பெங்களூர் சபை அங்கத்தினருடன் நான் கலந்து பேசி, ‘ஏன் இப்படி எழுதியனுப்பினீர்கள்?’ என்று மெல்ல விசாரித்தபொழுது, அவர்கள் பல்லாரி ராகவாச்சார்லுவிடமிருந்து இந்த அமலாத்த்யன் பாத்திரத்தை நான் மிகவும் நன்றாக ஆடுவதற்காகக் கேள்விப்பட்டதாயும், ஆகவே, அவர்கள் அதைப் பார்க்க வேண்டுமென்று மிகவும் விரும்பினதாயும், அதற்காக அவ்வாறு எங்கள் சபைக்கு எழுதியனுப்பிய தாகவும் ஒப்புக்கொண்டனர்.

இங்கு நடத்திய இந்நாடகத்தில் இன்னொரு விசேஷ மென்னவென்றால், நான் நாடகமாட ஆரம்பித்தது முதல் செய்திராத பெரும். பிழையொன்றை இழைத்தேன்! ஈதாகும் அது:- ஐயங்கார் அன்றைத் தினம் வழக்கப்படி, இந் நாடகத்தில், நாடகத்துள் நாடகமாடிய காட்சியில், 

ராஜவேஷதாரியாக வரவேண்டியிருந்தது. நாடக ஆரம்ப முதல், “இந்த மூரி சித்தப்பாக்களுக்கு (பெங்களூர் ஜனங்களுக்கு அவர் வைத்த பெயராகும் இது) நாம் இவ்வளவு கஷ்டப்படுவானேன்? இந்த ரசிகர்களுக்கு எப்படியாடினாலும் ஒன்றுதான்!’ என்று ஏளனம் செய்து கொண்டிருந்தவர், வேண்டுமென்று அலங்கோலமாய் வேடம் தரித்தார். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், சில கிராமாந்தரங்களில், சில ஏழைகள், இரண்டு மூன்று குரல்களுக்கு, அரிச்சந்திரன், சந்திரமதி முதலிய வேஷங்கள் தரித்து, அவைகளை ஆடவைத்து, வயிறு வளர்ப்பதைப் பார்த்திருக்கக்கூடும். அந்த அரிச்சந்திரன் குரங்கை ஒரு நாய் மீது ஏற்றி, ஊர்வலம் வருவான் குரங்காட்டி. அந்த அரிச்சந்திரன் குரங்கைப்போலவே வேஷம் தரித்துக் கொண்டார் துரைசாமி ஐயங்கார்! இந்த சமாச்சாரம் இவர் வரவேண்டிய காட்சி ஆரம்பமாவதற்குச் சற்று முன்புதான் எனக்குத் தெரிந்தது. “என்ன துரைசாமி! இது என்ன இப்படி வேஷம் தரித்துக் கொண்டாயே!” என்று நான் கேட்டதற்கு, “ஆமாம், உனக்கொன்றும் தெரியாது. நீ இவ்வளவு கஷ்டப்பட்டு ஆக்டு செய்தாயே, என்ன பிரயோஜனம்? இந்த மூரி சித்தப்பாக்கள் ஏதாவது சந்தோஷப்பட்டார்களா? நான் மேடையின்மீது வந்தவுடன் எவ்வளவு சந்தோஷப்படப் போகிறார்கள் பார்!” என்று சொன்னார். நான் என்ன செய்வது? அந்த அலங் கோலத்தைக் களைந்து தக்கபடி வேடம் பூணச்செய்ய அவகாசமில்லை! சரி, ஆகிறது ஆகிறதென்று சொல்லி விட்டு, அக்காட்சியில் ஆட அரங்கத்திற்கு நான் போய்விட்டேன். இக்காட்சி சோககரமான இந்நாடகத்தில் மிகவும் முக்கியமான ஒரு காட்சி. இதில் தன் சிற்றப்பன் தன் தந்தையைக் கொன்றதாகச் சந்தேகப்படும் அமலாதித்யன், அதன் உண்மையை அறியும்பொருட்டு, தன் தந்தையின் அருவத்தின் மூலமாய்த் தெரிந்தபடி, அவர் கொல்லப்பட்ட விதத்தைப்போல் ஒரு நாடகம் தனது சிற்றப்பன் எதிரில் ஆடிக்காட்டி, அவன் முகக்குறிப்பைக் கொண்டு அறிகிறான். இது அமலாதித்யன் வேடம் பூணும் ஒவ்வொருவனும் மிகவும் ஜாக்கிரதையாக நடிக்க வேண்டிய காட்சி. இக்காட்சியில் நான் செய்த ஆபாசத்தை இனிக் கூறுகிறேன். அமலாதித்யன் சிற்றப்பன் எதிரில் 

மேற்சொன்ன நாடகம் நடிக்கப்படும் வரையில், சரியாக நடித்து வந்தேன்; அந்த நாடகம் ஆரம்பமானதும், எனது நண்பர் துரைசாமி ஐயங்கார், மேற்சொன்னபடி வேஷம் தரித்து அரங்கத்தினுள்ளிருக்கும் சிறு அரங்கத்தில் குரங்குகள் குதிப்பதுபோல் குதித்துத் தோன்றியவுடன், எல்லோரும் நகைக்க ஆரம்பித்தனர். எனக்கும் நகைப்பு வந்துவிட்டது. என்ன அடக்கியும் முடியாமற் போயிற்று. போதாக்குறைக்கு அவர் ஆடிய ஆட்டத்தில், அவர் தலை மீது அணிந்திருந்த கிரீடமானது கீழே விழுந்து விட்டது! உடனே நாடகசாலையெங்கும் ஒரே நகைப்பின் ஆரவாரம் உண்டாச்சுது! நானும் விலாப்புடை நோகச் சிரிக்க ஆரம்பித்து விட்டேன். நான் அமலாதித்யன் என்பதை மறந்து என் சிரிப்பை அடக்க முடியாதபடி அரங்கத்தின்மீது புரண்டேன் என்றே சொல்ல வேண்டும். அக்காட்சி முழுதும் ஆபாசமானது என்று நான் என் நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. இத்தகைய தவறு இதற்கு முன்பு நான் செய்ததில்லை; பிறகும் செய்ததில்லையென்று நிச்சயமாகக் கூறக்கூடும். கற்றறிந்த சிலர் தவிர, நாடகம் பார்க்க வந்திருந்த பாமர ஜனங்களில் பெரும்பாலார், இப்படித்தான் இக் காட்சியில் நடிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டார்களோ என்னவோ! உலகெங்கும் பிரசித்திபெற்ற ஹாம்லெட் என்னும் நாடகத்தில் தான் சிருஷ்டித்த கதாநாயகன் வேடம் பூண்ட ஒருவன், அந்நாடகத்தின் முக்கியமான காட்சியில், இவ்வாறு ஆபாசம் செய்தான் என்று மேலுலகத்திலிருக்கும் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி என்னை வாழ்த்தியிருக்க மாட்டார் என்பது நிச்சயம். ஆயினும், நான் அப்படி ஆபாசம் செய்ததற்குக் காரணத்தையறிவாராயின், என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன்!

பெங்களூரிலிருந்து பட்டணம் திரும்பி வந்து, ஒரு வாரத்திற்கெல்லாம் மாயவரம் புறப்பட்டுப் போனோம். இவ்விடத்தில் ஏழு தமிழ் நாடகங்கள் ஆடினோம். தெலுங்கு நாடகம் இங்கும் ஆட வேண்டுமென்று தெலுங்குப் பிரிவினர் அம்மட்டும் கூறாதிருந்தனர். மாயவரம் சிறிய ஊராயிருந்தபோதிலும் முதல் நாடகம் முதல் சுமாராக ஜனங்கள் வந்தனர். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், முதலில் நாங்கள் தீர்மானித்தபடி நடத்திய ஆறு 

நாடகங்களிலும், முதல் நாடகத்தைவிட இரண்டாவது நாடகத்திலும், இரண்டாவது நாடகத்தைவிட மூன்றாவது நாடகத்திலும் இவ்வாறு படிப்படியாக ஜனங்கள் அதிகமாய் வர ஆரம்பித்தனர். இதை நான் மாயவரவாசிகள் எங்கள் சபைக்குச் செய்த நன் மதிப்பாகக் கொள்கிறேன். இந்த ஆறு நாடகங்களிலும் எங்கள் செலவு போக சபைக்குக் கொஞ்சம் லாபமே கிடைத்தது. இந்த ஆறு நாடகங்களைப் பற்றி எனது நண்பர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டிய முக்கியமான விஷயம் எனக்கு ஒன்றும் ஞாபகமில்லை. கடைசியாக, ஏழாவது நாடகமாக வைத்துக்கொண்ட நந்தனார் நாடகத்தைப் பற்றி மாத்திரம் கொஞ்சம் எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.

இந்த நந்தனார் நாடகத்தில் ஒரு முக்கிய வேடம் பூண்ட எனது நண்பர்களிலொருவர் (அவர் பெயரை இங்கு எழுத எனக்கிஷ்டமில்லை) “அந்த நாடகத்திற்குத்தான் அதிக வரும்படி வரும்” என்று கொஞ்சம் வீம்பு பேசிக்கொண்டிருந்தார். முதன் முறை இங்கு இந் நாடகம் ஆடிய பொழுது, மற்ற நாடகங்களைவிட இதற்குக் குறைவாக ஜனங்கள் வந்தனர். அதன்பேரில் சிலர் அவரை ஏளனம் செய்ய, அம்முறை ஜனங்கள் வராததற்கு ஏதோ போக்குகள் சொல்லி, மறுமுறை மாத்திரம் ஆடுவதானால், சுற்றுப்பக்கங்களிலுள்ள எல்லா மிராசுதாரர்களும் தான் ஆடுவதைப் பார்க்கக் கட்டாயமாய் வருவார்கள்; இந் நாடகம் இவ்வளவு நன்றாய் நடிக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரியாமற் போயிற்று; இப்பொழுது அவர்களில் சிலர் ஒரு முறை இதைப் பார்த்திருப்பதால், இரண்டாம் முறை எல்லோரையும் அழைத்துக்கொண்டு வருவார்கள்” என்று கூறினார். அதன் பேரில் எங்கள் நிர்வாக சபைக் கூட்டத்தில், இன்னொரு நாடகமிங்கு ஆடலாமா என்ற பேச்சு வந்தபொழுது, நந்தனாரை மறுபடியும் ஆடவேண்டும் என்று வற்புறுத்தினார். எனக்கு மாத்திரம் மிகவும் சந்தேகமாயிருந்தது; இருந்தபோதிலும், இதற்கு ஆட்சேபித்தால் இந் நாடகத்தில் இவனுக்கு முக்கியமான பாத்திரம் ஒன்றுமில்லையென்று ஆட்சேபிக் கிறான் என்று எங்கு மற்றவர்கள் எண்ணிக் கொள்ளுகிறார் களோ என்று பயந்தவனாய் ஆட்சேபியாது விட்டேன். எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு மாத்திரம் மற்றவர்கள் 

தவறாக எண்ணிக்கொள்ளுவார்களே என்று அஞ்சாது, தன் மனத்தில் தோன்றிய ஆட்சேபணையை வெளியிட்டார். அவர் செய்ததுதான் நியாயம், நான் செய்தது தவறு என்று நான் ஸ்பஷ்டமாய் ஒப்புக்கொள்ள வேண்டியவனே; எப்படிப்பட்ட விஷயத்திலும், நமது மனத்திற்கு எது நியாயமென்று தோன்றுகிறதோ, அதை மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களே என்று அஞ்சாது, வெளியிட வேண்டியதுதான் கிரமம் என்னும் புத்தி அப்பொழுது எனக்கில்லாமற் போயிற்று. முடிவில் எங்கள் நிர்வாக சபையார், பிரேரேபித்தவர் இவ்வளவு சொல்கிறாரே என்று அவர் வார்த்தையை நம்பி இந் நாடகத்தை மறுமுறை இவ்விடம் நடத்த வேண்டுமென்று தீர்மானம் செய்தனர். அதற்காக உடனே வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தோம். அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களுக்கெல்லாம் அவர் வேண்டியபடி நாடகப் பத்திரிகைகள் அனுப்பி னோம். நாடகத்தை சாயங்காலத்தில் வைத்துக்கொண்டால் அதிக ஜனங்கள் வருவார்கள் என்று அவர் கூறியபடி சாயங்காலத்திலேயே வைத்துக்கொண்டோம். இவை அனைத்தும் செய்தும், அன்று சாயந்திரம் 5 மணிக்குச் சிறிது முன் பிள்ளையார் பாட்டை, எங்கள் வழக்கப்படி பாடி முடிந்தவுடன், என் வழக்கத்திற்கு விரோதமாக, டிராப் படுதாவை கொஞ்சம் நீக்கிப் பார்க்க, நாடக சாலையில் நாடகத்தைப் பார்க்க இரண்டு பெயர் உட்கார்ந்திருந்தனர்! இதை மற்ற ஆக்டர்களும் அறிந்தவர்களாய், எங்கள் சபையின் சட்டத்திற்கு விரோதமானாற் போகிறது, எப்படியாவது ஜனங்கள் வந்தாற் போதுமென்று சொல்லி, குறித்த மணிக்கு அரை மணி பொறுத்து நாடகத்தை ஆரம்பித்தும் அதிகம் பயன்படவில்லை. சிலர்தான் நாடகம் பார்க்க வந்தனர். எங்கள் சபையின் நாடகங்களுக்குள் ஒரு சிறந்ததான இந் நாடகத்திற்கு, இம்மாதிரியாக மிகவும் குறைந்த வசூலானது இதுவரையில் எப்பொழுதுமில்லை; அதன் பிறகும் நாளதுவரையில் இல்லை. தெலுங்கு தேசமாகிய நெல்லூரில் இந்நாடகத்திற்கு வசூலானதைவிட, இன்று குறைவாயிருந்தது. மயூர்நாதர், தற்புகழ்ச்சியாக வீம்பு பேசிய எனது நண்பருக்கு புத்தி வர வேண்டும் என்று இவ்வாறு செய்து வைத்தனர் போலும். அந்நாள் முதல் இந்நாள் வரை அந் நண்பர் தான் ஆடும் நாடகங்களைப் 


பற்றி அதிகமாய்ப் புகழ்ந்து பேசியதை நான் கேட்ட தில்லை. நான் இதை, நாம் ஆடும் நாடகத்தைப்பற்றி நாமே புகழ்ந்து பேசிக்கொள்ளக் கூடாது என்னும் புத்திமதியாகக் கொண்டேன்.

மேற் சொன்னபடி இரண்டாம் முறை நந்தனார் சரித்திரத்தை இவ்விடம் ஆடியதனால், அதுவரையில் வந்த கொஞ்ச லாபமும் போய்விட்டது. மாயவரத்தில் நடந்த நாடகங்களினால், நாங்கள் எடுத்துக் கொண்ட சிரமத்திற்கு லாபமாய் முடிந்தது. ஆயினும் மாயவரத்திலும் நாங்கள் போய் வந்த பிறகு எங்கள் சபையைப் போன்ற சபையொன்று ஸ்தாபிக்கப்பட்டது ஒரு லாபமாகக் கொள்ள வேண்டும்.

இவ் வருஷம் எனது தமயனார் ப. ஆறுமுக முதலியாரின் உருவப்படம் எங்கள் சபையில் திறந்து வைக்கப்பட்டது. அன்றியும் இவ்வருஷம் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர் வெங்கடாசல ஐயர் எழுதிய “விதி லேக வயித்தியுடு” என்னும் தெலுங்கு நாடகத்தை ஆடினர். இது “மாலியர்” என்னும் பிரஞ்சு நாடகாசிரியர் எழுதிய ஒரு நாடகத்தின் மொழி பெயர்ப்பாகும்.

இனி எங்கள் சபையில் 1918ஆம் வருஷம் நடந்த நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதுகிறேன்.

இவ் வருஷ ஆரம்பத்தில் எங்கள் சபையில் கன்னடப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, இது முதல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கன்னடம் ஆகிய ஐந்து பிரிவுகளும் நாடகங்களாடத் தலைப்பட்டன. இவ்வருஷம் எங்கள் சபையின் இரண்டு முக்கிய ஆக்டர் களாகிய டி.எஸ். நாராயண சாஸ்திரியார் பி. ஏ. பி. எல்., எம். துரைசாமி ஐயங்கார் இருவரும் காலகதியடைந்தனர்; இச் சம்பவத்தினால் என்னுடைய அன்யோன்ய நண்பர் களில் இருவரை நான் இழந்தேன். முன் கூறிய நாராயண சாஸ்திரியார் சம்ஸ்கிருத பாஷையில் மிகவும் பாண்டித்ய முடையவர். “சங்கரருடைய காலம்” என்னும் அரிய பெரிய கிரந்தத்தை ஆரம்பித்து அதை முடிக்காமலே தேக வியோகமானது, அப் பாஷாபிமானிகளெல்லாம் துக்கப்பட வேண்டிய விஷயமே. இவருக்கு நாடகங்கள் எழுது 

வதிலும், நாடகங்களாடுவதிலும் மிகவும் பிரீதி. இவர் எழுதியுள்ள இரண்டு நாடகங்களைப்பற்றி. முன்பே நான் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். சுகுண விலாச சபை ஸ்தாபித்த நான்கைந்து வருடங்களுக் கெல்லாம் எங்கள் சபையைச் சேர்ந்த போதிலும், ஏதோ காரணத்தினால், எங்களை விட்டு விலகி, “வித்வன் மனோரஞ்சனி” என்னும் நாடகச் சபையை ஸ்தாபித்தார். சில வருஷங்கள் அச் சபையானது நாடகங்களை நடத்திய போதிலும்; அது சீக்கிரத்தில் நசித்து விட்டது. அதை மறுபடியும் இரண்டொரு சமயம் உத்தாரணம் பண்ணிப் பார்த்தார். ஆயினும் அது பயன்படாமற் போச்சுது. இவர் நாடக மேடையின்மீது தரித்த வேடங்களுக்குள் எல்லாம் ‘பிரதாபருத்ரீயம்’ என்னும் தெலுங்கு நாடகத்தில், யௌகந்தரராகத் தோன்றியதுதான் மிகவும் நன்றாயிருந்த தென்பது என் அபிப்பிராயம்.

இவ்வருஷம் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் எங்கள் சபையார் 22 நாடகங்கள் ஆடியது கவனிக்கத்தக்க விஷயம். இத்தனை நாடகங்களை தினம் ஒன்றாக ஆடியது சிலாகிக்கத் தக்கதாயிருந்தபோதிலும், ஆக்டர்களுக்கு அது மிகவும் சிரமத்தைத் தந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. இவற்றுள் பெரும்பாலும் தமிழ் நாடகங்களாயிருந்தபடியால், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுக்கும், எனக்கும் மிகவும் கஷ்டமாகத்தானிருந்தது. இவைகளெல்லாம் இரவில் 9 மணிக்குமேல் ஆடவேண்டிய நாடகங்களாயிருந் ததால், இவற்றை ஆடுவதே அசாத்தியமாயிருந்திருக்கும்; சாயங் காலத்தில் ஐந்து மணிக்கு ஆரம்பித்து 9 மணிக் குள்ளாக முடித்தபடியால், அவ்வளவு கஷ்டமில்லாம லிருந்தது.

இவ்வருஷம், சென்ற நான்கு வருடங்களாக உலக முழுவதையும் கலக்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய யுத்தமானது தெய்வகடாட்சத்தினால் முற்றுப்பெற்றபடியால், எங்கள் சபையில் நவம்பர் மாதம் 17 ஆம் தேதி ஏறக்குறைய 1000 பெயர்ருக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினோம். சபையில் அன்று சாயங்காலம் ஒரு பொதுக் கூட்டம் கூடி மகிழ்ச்சி கொண்டாடினோம்.

எங்கள் சபையோர் இவ்வருஷம் நடத்திய நாடகங்களில் குறிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரே 


சகுந்தலா நாடகமானது, சம்ஸ்கிருதத்திலும், தெலுங்கிலும், கன்னடத்திலும், தமிழிலும் நடத்தப்பட்டதேயாம். ஐயாயிரம் மைலுக்கப்பாலிருந்த ‘கட்டெ’ எனும் ஜர்மன் நாடகாசிரியராலும் இதற்கிணையில்லை எனப் புகழப்பட்ட காளிதாச மஹா நாடகக் கவி எழுதிய ‘சகுந்தலா’ என்னும் நாடகமானது, இவ்வாறு எல்லாப் பாஷைகளிலும் ஆடும்படியான மதிப்பைப் பெற்றது ஓர் ஆச்சரியமன்று. தமிழில் ஆடப்பட்ட சகுந்தலா நாடகம், எனது நண்பர் திவான்பஹாதூர் எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்களால் அச்சிடப்பட்டது. ஹரிச்சந்திர நாடகத்திற் போலல்லாமல், இவர் இந்நாடகத்தில், காளிதாசன் எழுதியபடியே அமைத்திருக்கிறார். இதில் எனதுயிர் நண்பர் சகுந்தலை யாகவும், நான் துஷ்யந்தனாகவும் நடித்தோம். நான் துஷ்யந்தனாக நடித்தபோது பல்லவி, அனுபல்லவி களடங்கிய பாட்டுகளைப் பாடாமற் போனபோதிலும், பல விருத்தங்களைப் பாடினேன். இதற்குக் காரணம் எனக்குத்தாள ஞானம் பூஜ்யம் என்பதை முன்பே அறிவித்திருக்கிறேன்.

1919ஆம் வருஷத்தில் முக்கியமாகக் குறிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாயில்லை. இவ்வருஷம் தமிழிலும் தெலுங்கிலும் சிறந்த நாடகங்களுக்குப் பொற்பதக்கம் அளித்ததுபோல், கன்னட பாஷையில் நாடகங்கள் வர வழைக்கப்பட்டு, பூனாவிலிருக்கும் பெர்கூசன் கலாசாலை என். கே. ஹம்பிஹோலி என்பவருக்கு “கஜார்” என்னும் அவர் அனுப்பிய நாடகத்திற்காகப் பொற்பதக்கம் அளிக்கப்பட்டது. சம்ஸ்கிருத பாஷையில் ஒரே நாடகம் வந்தது. அது பொற்பதக்கம் பெறும்படியான அவ்வளவு நன்றாக இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இவ் வருடமும் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் விக்டோரியா ஹால் மாடி எங்களுக்குக் கிடைக்காதபடியால், கீழேயே ஒரு சிறிய அரங்கத்தை ஏற்படுத்தி அதில் பத்து நாடகங்கள் ஆடினோம்.

இவ்வருஷம் எங்கள் சபையில் தமிழில் புதிதாய் ஆடிய நாடகம் பி. எஸ். துரைசாமி ஐயங்கார் எழுதிய “வள்ளித் திருமணம்” எனும் நாடகமாகும். அந்நாடகத்தில் அதன் ஆசிரியராகிய பி.எஸ். துரைசாமி ஐயங்காரே, சுப்பிர 


மணியராக நடிக்கும்படி ஏற்பாடாயிருந்தது. நாடகத் தினம் மத்தியானம் இரண்டு மணிக்கு அவர் 104 டிகிரி ஜுரமாயிருக்கிறது; இன்று ஆடச் சொன்னால் ஆடுகிறேன். வேறு ஏற்பாடு செய்ய முடியுமானால் நலமாயிருக்கும்” என்று சொன்னார். அதன்மீது அவரை அந்தத் திசையில் ஆடச்சொல்வது குரூரமாகுமென எண்ணி, உடனே எனது நண்பர் ச. ராகவாச்சாரியாருக்கு டெலிபோன் செய்து அவரை எடுத்துக்கொள்ளும்படி செய்தேன். அவரும் ஒப்புக்கொண்டு இரண்டு மூன்று மணிக்குள் அந்தப் பாத்திரத்தின் பாகத்தைப் படித்து மேடையின்மீது நடித்து எங்கள் சபையின் பெயரைக் காப்பாற்றினார். இவருடைய அபாரமான ஞாபக சக்தி மிகவும் மெச்சத்தக்கது.

மறு வருஷமாகிய 1920ஆம் ஆண்டு எங்கள் சபையின் சரிதையில் ஒரு முக்கியமான வருஷமாகும். அதற்கு அநேகக் காரணங்கள் உண்டு. முதலாவது இவ்வருடம் எங்கள் சபையின் 500ஆவது நாடகம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடத்தப்பட்டது. அன்று, சென்னை கவர்னர் லார்டு வில்லிங்டன் அவர்களும் அவரது மனைவியார் லேடி வில்லிங்டனும் விஜயம் செய்தனர். அவர்களெதிரில் மனோஹரன் நாடகத்திலிருந்து தமிழில் சில காட்சிகளும், ராமராஜு எனும் தெலுங்கு நாடகத்திலிருந்து சில காட்சிகளும், ஆங்கிலத்தில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய சர்ஜன் ஜெனரல்ஸ் பிரிஸ்கிரிப்ஷன் எனும் சிறு நாடகமும் நடத்தப்பட்டன. அச்சமயம் இன்னின்ன பாஷையில் இத்தனை நாடகங்கள் நடத்தப்பட்டன, இன்னின்ன தர்மங்கள் சபையோரால் செய்யப்பட்டன, சபையின் அங்கத்தினர் இத்தனை பெயர், சபை இன்னின்ன ஊர்களுக்குப் போய் நாடகமாடியிருக்கிறது, இன்னின்ன மஹாராஜாக்கள் கவர்னர்கள் முன்னிலையில் நாடகமாடியிருக்கிறது முதலிய குறிப்புகளடங்கிய ஒரு சிறு பத்திரிகை வந்தவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்டது.

இவ் வருஷம் எங்கள் சபையானது, லிடரெரி அண்டு சைன்டிபிக் சொஸைடீஸ் ஆக்டின்படி ரெஜிஸ்டர் செய்யப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டு, பிறகு அவ்வாறே ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம், கட்டட பண்டைப் பாதுகாப்பதற்கும், சபை 


யானது நாடக சாலையையும் இருப்பிடத்தையும் நிர் மாணிப்பதற்கு நிலம் முதலிய விக்கிரயம் வாங்குதவற்கும், இப்படிச் செய்தல் அதிஅவசியமெனக் கருதப்பட்டதேயாம்.

இவ் வருஷமானது எங்கள் சபைக்கு ஒரு முக்கியமான வருஷம் என்று நான் முன்னே கூறியதற்கு மற்றாரு காரணம், இவ்வாண்டில் எங்கள் சபையானது சேலம், கோயமுத்தூர் இரண்டு இடங்களுக்கும் போய் நாடகங்களாடி நற்பெயர் பெற்றதாம். ஆக்டர்களெல்லாம் மே மாதம் 27ஆம் தேதி புறப்பட்டுப் போய் ஜூன் மாதம் 23ஆம் தேதி சென்னை வந்து சேர்ந்தோம். முன் வருஷம் பெங்களூருக்குப் போய் நஷ்டமடைந்தபடியால், இம் முறை அப்படிப்பட்ட கஷ்டம் நேராதிருக்க வேண்டு மென்று, சபையின் பொதுக் கூட்டத்தில் நாடகத்தின் வரும்படியைக் கண்டிராக்டாக விட வேண்டுமென்று ஆலோசிக்கப்பட்டு, எங்கள் அங்கத்தினரின் ஒருவராகிய டி.சி. வடிவேலு நாயகர் என்பவர், எல்லாச் செலவும் போக, சபைக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகக் கூற, அது ஒப்புக் கொள்ளப்பட்டது. இவ்வாறு எங்கள் சபை கண்டிராக்டாக நாடகமாடுவது உசிதமாக எனக்குத் தோன்றாவிட்டாலும், வடிவேலு நாயக்கர் எங்கள் சபையின் அங்கத்தினராயிருந் படியாலும், அவர்மீது எனக்கு எங்கள் சபையின் ஆக்டர்களின் சௌகர்யங்களையெல்லாம் சரியாகக் கவனிப்பார் என்று பூர்ண நம்பிக்கையிருந்தபடியாலும், ஏதாவது லாபம் கிடைத்தால் அவருக்குத்தானே சேரப்போகிறது என்கிற எண்ணத்தினாலும் இதற்கு நான் இசைந்தேன். இவ்வருஷம் தமிழ் கண்டக்டராயிருந்த எனது நண்பர் ச. ராகவாச்சாரியார், வெளியூர்களுக்கு வருவது முடியாமையாயிருந்தபடியால், நிர்வாக சபையார் என்னை இவ்வெளியூர் நாடகங்களுக்குக் “கண்டக்டர் இன்சார்ஜ்” ஆக நியமித்தனர்.

எங்கள் சபையானது வெளியூர்களுக்குப் போய் நாடக மாடியதில், சேலம் கோயமுத்தூரில் ஆடிய நாடகங்கள்தான் எங்கள் சபைக்கு மிகுந்த கீர்த்தியையும், சந்தோஷத்தையும் கொடுத்தபடியால், இதைப்பற்றிச் சற்று விரிவாக எழுதப் போகிறேன். முதலில், மற்ற ஊர்களுக்குப் போகும் போதெல்லாம், எப்படி முடியுமோ சபைக்கு லாபம் 

வருமோ நஷ்டம் வருமோ என்றிருந்த சந்தேகம், இம்முறை இல்லாதிருந்தது. சென்னையை விட்டுப் புறப்படு முன்னமே எங்கள் சபையின் இரும்புப் பெட்டியில் ரூபாய் 1000 வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே, பணத்தைப்பற்றி எங்களுக்குக் கவலையென்பதில்லாமற் போயிற்று. சேலம் கோயமுத்தூர் நாடகங்களைப் பற்றி நான் நினைக்கும் போதெல்லாம், இன்னும் என் மனத்தில் சந்துஷ்டியுண்டா வதற்கு இரண்டாவது காரணம், எனது நண்பர் வடிவேலு நாயக்கர் இந்த இரண்டு ஊர்களிலும் எங்களுக்கு வேண்டிய சௌகர்யங்களை யெல்லாம் மிகவும் சிரத்தையோடும் விமரிசையோடும் செய்ததே. இவர் வெளியூர்களில் கன்னையா கம்பெனி நாடகங்களாடும்போது பன்முறை சென்று பழக்கப்பட்டிருந்தபடியால், முன்னதாக விளம்பரம் செய்வதிலும், துண்டுப் பத்திரிகைகள் முதலியன அக்கம்பக்கங்களில் பிரசுரம் செய்வதிலும், இன்னும் நாடகங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளனைத்தும் செய்வதிலும் மிகவும் பாண்டித்ய மடைந்திருந்தார். அது எங்களுக்கு மிகவும் உபயோகப்பட்டது. இம்முறை இவ்விரண்டு ஊர்களிலும், நாங்கள் போய்ச் சேர்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாடகாபிமானிகள் ஒருவரும் பாக்கியில்லாதபடி எங்கள் சபை வருவதைப்பற்றியும் இன்னின்ன நாடகங்கள் போடப்போகிறார்கள் என்பதைப் பற்றியும் அறியும்படி, எங்கு பார்த்தாலும், சுவரில் ஒட்டும் பெரிய நோட்டீஸ்களை ஒட்டி ஏற்பாடு செய்தனர். அன்றியும் கைத்துண்டு நோட்டீஸ்கள் ஏராளமாக அச்சிட்டு வீட்டுக்கு வீடு கொடுக்கும்படி ஏற்பாடு செய்தனர். அன்றியும் நாடகத் தினத்தில் அக்கம் பக்கங்களிலுள்ள கிராமாந்தரங்களிலெல்லாம், மோட்டார் பஸ் மூலமாக நோட்டீஸ்கள் பரவச் செய்தனர். இதன் பலனாக, நாங்கள் இவ்விரண்டு ஊர்களிலும் நடத்திய நாடகங்களுக்கு ஏறக்குறைய ஒவ்வொரு தினமும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலாயிற்று என்பதற்குச் சந்தேகமில்லை. கொழும்பு, யாழ்ப்பாணத்தில் கூட இம்மாதிரியான வரும்படி வந்ததில்லை. அவ்விடங்களிலெல்லாம் முக்கியமாக சனிக்கிழமை நாடகங்களுக்குத்தான் அதிக வரும்படி வரும். மற்ற செவ்வாய் வியாழன் நாடகங்களுக்குக் கொஞ்சம் குறைவாக வரும். சேலம் கோயமுத்தூர் நாடகங்களில், தினம் 


அதிக வரும்படி வந்தது எனக்கும் சந்தோ, நத்தைத் தந்தது; எங்கள் சபையோருக்கும் சந்தோஷத்தைத் தந்திருக்க வேண்டும். இவ்விரண்டு ஊர்களிலும் செலவைக் கருதாது எங்கள் சௌகர்யத்தையே கருதி, ஏராளமாகச் செலவு செய்தும், எங்களுக்கெல்லம் இரண்டாவது வகுப்பு ரெயில் செலவு கொட்டகைச் செலவு முதலியன அதிகமாக ஆகியும் எங்கள் சபைக்கு 1000 ரூபாய் கொடுத்தும், எல்லாச் செலவும் போக, நிகரமாக 3500 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்ததாக அவரே என்னிடம் ஒப்புக்கொண்டிருக் கிறார். அவர் எங்களுக்காக எடுத்துக் கொண்ட கஷ்டத்திற் காக இன்னும் அவருக்கு அதிக லாபம் கிடைத்திருக்கலாகாதா என்று எண்ணினோமேயொழிய, இவ்வளவு லாபம் கிடைத்ததே என்று எங்கள் ஆக்டர்களில் ஒருவரும் பொறாமைப்படவில்லை.

இனி சேலத்தில் நிகழ்ந்த வரலாறுகளை எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் எனது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துகிறேன். எனது ஆக்டர்களுடன் சேலத்திற்கு அதிகாலையில் போய்ச் சேர்ந்தது, ரெயில் ஸ்டேஷனிலிருந்து, நாங்களெல்லாம் எங்கள் விடுதியாகிய சேலம் காலேஜ் ஹாஸ்டலுக்குப் போய்ச் சேர்ந்தது, சென்னையில் சாதாரணமாகக் கிடைப்பதைவிட, அங்கு நாங்கள் காலையில் சாப்பிட்ட பட்சணம் நன்றாயிருந்தது. நாங்கள் போய்ச் சேர்ந்த தினம் மழை பெய்தது; மழை நின்றவுடன், நானும் எனதாருயிர் நண்பரும் அவ்வூரிலிருக்கும், கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்குப் போனது, நாங்கள் எங்களை ஒருவரும் இங்கு கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று எண்ணியிருக்க, அக்கோயில் அதிகாரிகள் எங்களை சுகுண விலாச சபையைச் சேர்தந்தவர்களென்று எப்படியோ கண்டறிந்து எங்களுக்கு மரியாதை செய்தது, ஒருநாள் இரவு நாடகமானவுடன், நாங்களெல்லாம் உட்கார்ந்து நிலாச் சாப்பாடு சாப்பிட்டது, பனைமரத்தொட்டி என்னும் ஊருக்குப் போனது, இம்மாதிரியான எத்தனையோ விஷயங்கள் நேற்று நடந்ததுபோல் என் நினைவிற்கு வருகின்றன! அன்றியும் இவ்வூரிலுள்ள பெரிய மனிதர் களெல்லாம் எங்கள் சபையோரை மிகவும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். கொழும்புவிலும் யாழ்ப்பாணத்திலும் எப்படி எங்கள்மீது அன்பு பாராட்டினரோ அப்படி 

இவ்விடமும் பாராட்டினார்கள். இவ்வூரிலுள்ள கற்றறிந்த பெரிய மனிதர்கள் மாத்திரம் அல்ல, எங்கள் நாடகங்களைக் கண்டு களித்த சாதாரண ஜனங்களும் எங்கள் ஆக்டர்கள் மீது பிரியத்தைக் காட்டினர். இதற்கு ஓர் உதாரணத்தைப் பிறகு எழுதுகிறேன்.

இது நடந்து இப்போது 14 வருடங்களாகிறது. இருந்தும், இவ்வருஷம் இரண்டு முறை (முதன்முறை மதுவிலக்குக் பிரசார சம்பந்தமாக சென்னை பப்ளிசிடி கமிட்டி அக்கிராசனாதிபதியாகவும், இரண்டாம் முறை கோஆபரேடிவ் சொசைட்டிகளின் டிபுடி ரிஜிஸ்டிராராகவும் எனதுயிர் நண்பர் கே. நாகரத்தின ஐயர் அவர்களைப் பார்ப் பதற்கும்) நான் போயிருந்தபொழுது, எங்கள் சபையின் நாடகங்களைப் பார்த்த பல பெரிய மனிதர்கள், ‘மறுபடியும் எப்பொழுது உங்கள் சபையுடன் வரப் போகிறீர்கள்’ என்று கேட்டனர்; நானும் முதன்முமுறை சபையுடன் வந்தபோது பார்த்துச் சந்தோஷித்த கோயில் முதலிய இடங்களுக்கெல்லாம் மறுபடியும் போய்ப் பார்த்துச் சந்தோஷப்பட்டேன். ஆயினும் அம்முறை பார்த்தபொழுது என் பக்கலிலிருந்து அவைகளையெல்லாம் அனுபவித்த எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு என்னுடன் இல்லையே என்னும் துக்கம் அதிகமாயிருந்தது.

இருந்தபோதிலும், அவருக்குப் பதிலாக நாகரத்தினம் ஐயராகிய மற்றொரு நண்பனையாவது பரமேஸ்வரன் தன் கருணையினால் என் பக்கலிலிருக்கும் படி அருளினரே என்று கொஞ்சம் என் மனத்தைத் தேற்றிக்கொண்டேன்.

இந்த சேலம் பிரயாணத்தில், எங்களுக்குக் கஷ்டங்கள் நேரிடாமற் போகவில்லை . அநேக விஷயங்களில் ஆரம்பத்தில் ஏதாவது கஷ்டம் நேரிட்டால்தான், பிறகு அவை முடிவில் சுகமாய் முடிவது என்னளவில் அனுபவம் என்பதை, இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். இந்த சேலம் கோயமுத்தூர் பிராயணத்திலும் அங்ஙனமே நேர்ந்தது. இப்பிராயணத்தைப் பற்றி எங்கள் நிர்வாக சபையில் தீர்மானமாவுடன் தெலுங்குப் பிரிவினர்கள் தாங்களும் இவ்விடங்களில் நாடகங்கள் ஆட வேண்டும் என்று வாதிக்க ஆரம்பித்தனர். இவ்விடங்களில் தமிழ் நாடகங்கள்தான் சபைக்கு லாபம் 

உண்டாக்கும், தெலுங்கு பிரயோஜனமில்லை என்று நான் எவ்வளவு வற்புறுத்தியும் கேளாமற் போயினர். சரி, ஆனால் உங்களிஷ்டம் என்று விட்டு விட்டேன். ஆயினும் வெளியூர் நடவடிக்கைகளைப் பற்றி அதிக அனுபோக முடைய வடிவேலு நாயக்கர் தான் கண்டிராக்டராக ஒப்புக் கொண்டது தமிழ் நாடகங்களுக்கேயென்றும், தெலுங்கு நாடகங்களின் பொறுப்பை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்றும் கண்டிப்பாய்ச் சொல்லி விட்டார். அதன் பேரில் சபையின் செலவிலேயே இரண்டு தெலுங்கு நாடகங்கள் கோயமுத்தூரில் மாத்திரம் ஆட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பத்திலேயே இந்த ஆட்சேபணை வந்தது ஒருவிதத்தில் எனக்குச் சந்தோஷத் தையே தந்தது. ஏனெனில் என் கோட்பாட்டின் பிரகாரம், இந்தப் பிரயாணம் மிகவும் சந்தோஷகரமாய் முடிவு பெறுமெனத் தீர்மானித்தேன். இந்த இரண்டு தெலுங்கு நாடகங்களைப்பற்றிக் கோயமுத்தூர் சமாச்சாரம் வரும் பொழுது எழுதுகிறேன்.

சேலத்திற்கு ரெயிலேறிப் புறப்படும் சாயங்காலம் இன்னொரு கஷ்டம் நேரிட்டது. அங்கு ஆடத் தீர்மானித்த முதல் நாடகமாகிய ‘மனோஹரன்’ எனும் நாடகத்தில் முக்கிய ஸ்திரீ பாகமாகிய பத்மாவதி வேடம் தரிக்க வேண்டிய பத்மநாபராவ், ரெயில் ஸ்டேஷனுக்கு வந்து தான் எங்களுடன் சேலத்திற்கு வர முடியாதென்று தெரிவித் தார். அவர்மீது குற்றமில்லை. அவரும் அறியாதபடி ஏதோ அசந்தர்ப்பம் நேரிட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகத் தெரிந்திருந்தாலும் வேறு யாரையாவது ஏற்பாடு செய்யலாம். இப்போழுது என்ன செய்வது என்று யோசித்தவனாய், ஸ்வாமி இருக்கிறார் பார்த்துக்கொள்வோம் என்று புறப்பட்டுப் போனேன். சேலம் போய்ச் சேர்ந்ததும் எனக்கு ஒரு யோசனை பிறந்தது. எம். தேசிகாச்சாரியார் என்னும் வேறொரு ஆக்டரை, அன்று சாயங்கால ரயிலில் கட்டாயமாய்ப் புறப்பட்டு வரும்படி தந்தி அனுப்பினேன். தெய்வாதீனமாய் அவர் அப்படியே புறப்பட்டு நாடகத் தினம் காலை வந்து சேர்ந்தார். அவருக்கு ஒருமுறை பத்மாவதியின் பாகத்தைப் படித்துக் காட்டி உங்களாலானது பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் வெகு சிரத்தையோடு, வேறொன்றையும் கவனிக்காமல், 

அந்தப் பாகத்தைக் குருட்டுப்பாடம் செய்து அன்றிரவு மிகவும் நன்றாக நடித்தார். அவ்வாறு சமயத்திற்குக் கைகொடுக்கும் ஆக்டர்கள் பலர் எனக்கு உதவியாக இருந்தபடியால், அக்காலங்களிளெல்லாம் நான் எடுத்த காரியத்தை விடாமல் பூர்த்தி செய்யும்படியான சக்தி இறைவன் அருளால் எனக்கு இருந்தது. தற்காலத்தில் அநேக சபைகளில் ஒரு நாடகத்தில் ஒரு முக்கிய ஆக்டருக்கு ஏதாவது அசந்தர்ப்பம் நேரிட்டால், அந்நாடகத்தையே விட்டுவிடும்படி நேரிட்டிருக்கிறதைப் பன்முறை பார்த்திருக்கிறேன். கூடுமானவரையில், சந்தர்ப்பங்கள் வாய்க்கும் பொழுது, எந்தப் பாத்திரத்தையும், க்ஷணத்தில் எடுத்துக் கொள்ளும்படியான ஆக்டர்களை உடைத்தாயிருப்பது ஒரு சபை செய்த பாக்கியமெனவே கருத வேண்டும்.

நாங்கள் சேலத்தில் நாடகம் ஆடிய நாடக சாலைக்கு அப்பொழுது சேலம் எலெக்ட்ரிக் தியேடர் என்று பெயர் இருந்தது. இந் நாடகசாலை எங்களுக்கு மிகவும் சௌகர்யமாக, நாங்கள் இறங்கியிருந்த பெரிய கட்டிடத்திற்கு எதிரிலேயே இருந்தது. எங்கள் வழக்கப்படி நாடகத் தினம் சாயங்காலம் 5 மணிக்கெல்லாம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, நாடக சாலைக்குப் போய் வேஷம் தரித்துக்கொண்டோம். நாடகம் ஆரம்பமாவதற்கு அரைமணிக்கு முன்பாகவே நாடக சாலை நிரம்பிப்போன விஷயம் அங்கு வந்தவர்களின் கூச்சலினால் அறிந்து சந்தோஷப்பட்டேன். எனக்கு முக்கியமாகவிருந்த சந்தோஷம் என்னவென்றால், நம்மை நம்பி வடிவேலு நாயகர், அதிகப் பணம் செலவழித்திருக்கிறார். ஒருவேளை வசூல் அதிகமாயாகாது அவருக்கு நஷ்டம் வந்தால் என்ன செய்வது என்கிற என் சந்தேகம் நிவர்த்தியானதேயாம். இந்தச் சந்தோஷத்துடன் நாடகத்தை ஆரம்பம் செய்ததும், எனது வார்த்தைகளில் சிலவற்றை நான் பேசியதும், நாடக சாலைகளிலிருந்த விளக்குகள் எல்லாம் ஒரே விசையாக அவிந்துபோய்விட்டன! இரண்டு மூன்று நிமிஷங்கள் நாடகசாலை முழுவதும் ஒரே இருட்டாக விருந்தது. அம்மட்டும் நாடகம் பார்க்க வந்த ஏராளமான ஸ்திரீ புருஷர்கள், பயமின்றித் தங்கள் இடங்களிலேயே பேசாதிருந்தனர். ஏதாவது கொஞ்சம் காபராவாகியிருந்த போதிலும் கஷ்டமாய் முடிந்திருக்கும். உடனே வெளியிலிருந்து ஒரு வாஷிங்டன் விளக்கை மேடையின் மீது 

கொண்டு வந்து வைக்கும்படி ஏற்பாடு செய்தார் வடிவேலு நாயக்கர். இதென்னடா, ஆரம்பத்திலேயே இந்த அசகுனம் என்று என் பக்கலிலிருந்த சில ஆக்டர்கள் வருத்தப் பட்டனர். ஸ்வாமியிருக்கிறார் இதற்கெல்லாம், பயப்படாதீர்கள் என்று சொல்லி, தேற்றிக் கொண்டே யிருக்கும் பொழுது தெய்வாதீனத்தால் எலெக்டிரிக் விளக்குகளெல்லாம் மறுபடி எரிய ஆரம்பித்தன. ஈஸ்வரன் கருணையென்று நினைத்து நாடகத்தை நடத்திக் கொண்டு போனோம். இதை முக்கியமாக இங்கு எழுதியதற்கு ஒரு காரணமுண்டு. மின்சார விளக்குகளை உடைய நாடக சாலைகளிலெல்லாம் இம்மாதிரியான இக்கட்டுகள் அடிக்கடி சம்பவிக்கலாம். வாஷிங்டன் லைட் முதலிய விளக்குகளை உடைய சாலைகளில், ஒன்று திடீரென்று அணைந்து போனாலும் மற்றவை எல்லாம் எரியும். இந்த எலெக்டிரிக் விளக்குகளுள்ள நாடக சாலைகளில், ஒன்று போனால் எல்லாம் அடியோடு அவிந்து போகும். ஆகவே, நாடகத்திற்கு இடைஞ்சல் இல்லாதபடியும், அத் தருணங்களில் ஜனங்கள் பயப்படாமலிருக்கும்படியும், எலெக்டிரிக் விளக்குகளுள்ள நாடக சாலையில் ஆடும்பொழுதெல்லாம் கையோடு இரண்டு வாஷிங்டன் விளக்குகள் வைத்திருப்பது அதி அவசியம் என்று நாடகமாட விரும்பும் எனது இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே இதை எழுதலானேன். மேற்சொன்ன சம்பவம் நேர்ந்த பிறகு எங்கள் சபை எங்கு நாடகமாடினாலும், இரண்டொரு வாஷிங்டன் விளக்குகள் கையிருப்பாக இல்லாமல் ஆடுவதில்லை சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடும்பொழுதும் இம்மாதிரி யான கஷ்டம் நேர்ந்திருக்கிறது. வெளியூர்களில் கேட் பானேன்? ஆகவே மேற்சொன்னபடி முன் ஜாக்கிரதையாக இருப்பது அதி அவசியமாகும்.

இவ்விடத்தில் நாங்கள் ஆடிய முதல் மூன்று நாடகங்களாகிய மனோஹரன், சாரங்கதரன், லீலாவதி சுலோசனா நாடகங்களுக்கு நல்ல வசூலாயிற்று; நாடகங்கள் நன்றா யிருந்தனவென்று சேலம் நாடகாபிமானிகள் புகழ்ந்தனர். இந்த மூன்று நாடகங்களிலும் மிக்க நல்ல பெயர் எடுத்தவர் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுவே. இவ்வாறு நான் கூறியது அவரிடத்திலிருந்த என் சிநேக வாஞ்சையா லன்று; இது வாஸ்தவம் என்று ஒரு சிறு விஷயத்தைக் 


கொண்டு நிரூபிக்க விரும்புகிறேன். நான்காவது நாடக மாகிய நந்தனார் நாடகத்திற்கு விளம்பரங்கள் அச்சிட வேண்டி வந்தபொழுது, வடிவேலு நாயகர் என்னிடம் வந்து, “ரங்கவடிவேலுவுக்கு நந்தனார் நாடகத்தில் ஒரு பாகமுமில்லை. அவர் பெயர் நோடீஸ்களில் இருந்தால் தான் வசூலதிகமாக ஆகும் என்று எல்லோரும் இங்கு சொல்கிறார்கள். எப்படியாவது அவரை நந்தனார் நாடகத்தில் ஏதாவது பாத்திரமாக வரச் சொல்லுங்கள்” என்று வற்புறுத்தினர். இதென்னடா தர்மசங்கடம் என்று, ரங்கவடிவேலுவுடன் கலந்து பேசி, ரங்கவடிவேலுவை நர்த்தனம் செய்ய ஏற்பாடு செய்து, அதற்காகக் கதையைக் கொஞ்சம் மாற்றி, வேதியர் வீட்டில் அவர் பெண் ருதுவானதற்காக ஏதோ கச்சேரி வைப்பதாக ஏற்பாடு செய்து, அதில் நடனமாதாக ஆடுவதாக ரங்கவடிவேலுவின் பெயரை நோட்டீசுகளில் அச்சிடும்படி உத்தரவு கொடுத்தேன். வடிவேலு நாயகரும் குதூஹலத்துடன் உடன்பட்டு அவ்வாறே அச்சிட்டார்.

மேற்சொன்ன நந்தனார் நாடகத்தில் முடிவில் சேலம் நகரவாசிகளில் இரண்டு மூன்று பெயர், எங்கள் சபையைப் பற்றிப் புகழ்ந்து பேசிவிட்டு இன்னும் இரண்டொரு நாடகங்கள் அங்கு ஆட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். நான் அவர்களுக்குத் திரும்பி வந்தனம் அளித்தபொழுது அதைப்பற்றி யோசிக்கிறோம் என்று சொன்னேன். மறுநாள் காலை, எல்லா விஷயங்களிலும் யோசித்துப் பார்த்தபொழுது இங்கு நடந்த நான்கு நாடகங் களும் இரவு நாடகங்களானபடியால் ஆக்டர்களெல்லாம் மிகவும் களைப்புற்றிருக்கிறார்கள். ஆகவே ஆடமுடியா தென்று எங்கள் கமிட்டியாருக்குச் சொன்னேன்; ஆயினும் மற்ற ஆக்டர்களெல்லாம் இன்னொரு நாடகமாவது போட வேண்டுமென்று உத்தேசம் கொண்டனர். அதன் பேரில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு என்னிடம் வந்து அதற் கெப்படியாவது இசைய வேண்டுமென்று வற்புறுத்தினார். அதன் மீது திருஉளச்சீட்டுப் போட்டுப் பார்ப்போம். அதன்படி நடப்போம், என்று சொல்லி சமாதானம் செய்து, அங்ஙனமே செய்து பார்த்ததில், “வேண்டாம்” என்று வந்தது! அதன்பேரில் வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டது. பிறகு நாங்கள் மறுநாள் புறப்பட்டுக் கோயமுத் 


தூருக்குப் போக ரெயிலேறும் பொழுது, அந்த கலாட்டாவில் பலர் ஸ்டேஷனுக்கு வந்து எங்கள் வழியை மறித்து இன்னொரு நாடகம் போடுவதாகச் சொல்லிவிட்டு, போடாமல் போவது நியாயமா? என்று பகிரங்கமாகக் கேட்டனர்! அவர்களையெல்லாம் சமாதானப்படுத்துவது எனக்குப் பெருங்கஷ்டமாயிற்று! என்ன நியாயங்கள் கூறியும் அவர்கள் திருப்தியடையவில்லை; எங்கள் மீது குறை கூறி வருத்தத்துடனேதான் திரும்பிப் போயினர். அவர்கள் அவ்வளவு அன்போடு கேட்கிறார்களே, அவர்கள் வேண்டு கோளுக்கிசையாது போகிறோமேயென்று நான் மிக வருத்தப்பட்டேன். ஆயினும் ஆராய்ந்து ஒரு காரியத்தைத் தீர்மானித்த பிறகு, அதனின்றும் மாறலாகாது என்கிற என் கோட்பாட்டின்படி நடக்க வேண்டியதாயிற்று; அநேக ஊர்களுக்கு எங்கள் சபை போயிருந்தபொழுது அங்குள்ள பெரிய மனிதர்கள், இன்னும் இரண்டொரு நாடகம் போடலாகாதா என்று கேட்டிருக்கின்றனர்; ஆயினும் இந்த ஊர் ஒன்றில்தான் பேர் ஊர் தெரியாத பொதுஜனங்கள் இப்படி எங்களை வற்புறுத்தியது; ஆகவே எங்கள் ஆக்டர்களெல்லாம், சேலத்தை விட்டுப் புறப்பட்டபொழுது, பிரிய மனம் இன்றியே பிரிந்தோம் என்று கூறுவது அதிகமாகாது.

இவ்வூரிலுள்ள பெரிய மனிதர்கள், எங்கள் சபைக்கு ஒரு நாள் விருந்து நடத்தியதுடன் எங்களுக்கு வந்தனோபசாரப் பத்திரம் ஒன்றும் அளித்தனர். அது இன்னும் எங்கள் சபையில் தமிழ் ஒத்திகை அறையில் மாட்டப்பட்டிருக்கிறது.

சேலத்தை விட்டுக் கோயமுத்தூருக்குப் போனபோது, சேலத்தில் எல்லாம் மிகவும் சந்தோஷமாய் முடிந்ததே, இங்கு எப்படியிருக்குமோ என்னும் சந்தேகத்துடன்தான் போய்ச் சேர்ந்தோம். ஆயினும் இப் பயம் இங்கு எங்கள் முதல் நாடகமாகிய ‘லீலாவதி சுலோசனா’ ஆரம்பிப்பதற்கு ஒரு மணிக்கு முன்னதாகவே, அறவே நீங்கியது.

இந்த முதல் நாடகத்திற்கு முந்திய தினம் - வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். என் வழக்கப்படி, எங்கள் ஆக்டர்களை யெல்லாம், கோயமுத்தூருக்கு அருகிலுள்ள மேலைச் சிதம்பரம் என்று சொல்லப்பட்ட பேரூர் என்னும் கிராமத்திற்கு ஸ்வாமி தரிசனத்திற்காக அழைத்துச் சென்றேன். அங்கு நான் ஓர் ஆபத்தினின்றும் ஈசன் 

கருணையினால் தப்பினேன் என்று நம்புகிறேன். கோயிலுக்குப் போகுமுன் கை கால்களைக் கழுவிக்கொண்டு அநுஷ்டானம் செய்வதற்காக அங்கருகிலுள்ள ஒரு சிற்றாறுக்கு எல்லோரும் போனோம். அவ்விடம் ஒரு பாறையில் பக்கப்படி வழியாக இறங்கி, அற்பசங்கைக்காக உட்கார்ந்தேன். நான் எழுந்திருக்கும் பொழுது திரும்பிப் பார்க்க என் காலுக்கு ஓர் அடிக்குள்ளாக ஒரு பெரிய நல்லபாம்பு இருக்கக் கண்டேன்! தெய்வாதீனத்தால் அதன் வாயில் ஒரு தவளையைப் பற்றிக்கொண்டிருந்தது. இல்லாவிடில் அதனால் நான் கடிக்கப்பட்டிருப்பேன் என்று நிச்சயமாய் நம்புகிறேன். உடனே நான் எனது நண்பர்களைக் கூவியழைக்க அவர்கள் ஓடி வந்தனர்; நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அத் தவளையைக் கவ்விக்கொண்டே, அப் படிக்கட்டிலுள்ள ஒரு பொந்தில் அது நுழைந்தது. குறைந்த பட்சம் ஆறடி யிருக்கும் அதன் நீளம். எனது நண்பர்களெல்லாம் இப் பாம்பு உன்னைக் கடித்து நீ இறந்திருந்தால் என்னாவது என்று கலங்கினார்; அம்மட்டும் அந்த ஹானி நேரிடாமல் தப்பினாயே என்று சந்தோஷப்படாதவர் ஒருவருமில்லை.

என் நண்பர்களுக்கு என்மீதில் உண்மையிலுள்ள அன்பு அப்பொழுதுதான் எனக்கு முற்றிலும் வெளியாயது. “கேட்டினு முண்டோர் உறுதி, கிளைஞரை நீட்டியளப்ப தோர் கோல்” என்னும் தெய்வப் புலமை திருவள்ளுவர் குறள் எனக்கு நினைவிற்கு வந்தது. உடனே பேரூர் அம்பலம் சென்றபொழுது, பாம்பணிநாதன் பாதத்தினைப் பணிந்து, எங்கள் சபைக்காக இன்னும் சில வருடங்கள் உழைக்க வேண்டி என்னைக் காத்த அவரது பெருங் கருணையைத் துதித்தேன்.


நான்காம் பாகம் முற்றிற்று