நாடக மேடை நினைவுகள்/ஐந்தாம் பாகம்

விக்கிமூலம் இலிருந்து




நாடக மேடை
நினைவுகள்





 

ஐந்தாம் பாகம்

கோயம்புத்தூரில் நாங்கள் நாடகங்களாடிய சாலை, மிஸ்டர் வின்சென்ட் என்பவரால் கட்டப்பட்டது. இதை விடப் பெரிய நாடக சாலைகளைப் பார்த்திருக்கிறேன்; இதைவிட அழகிய நாடக சாலைகளைப் பார்த்திருக்கிறேன்; ஆயினும் இதைப்போன்ற ஆக்டர்களுக்குச் சௌகர்யமான நாடக சாலையை நான் பார்த்ததில்லை. அரங்கத்திலிருந்து மெல்லப் பேசினாலும், ஹால் முழுவதும் ஸ்பஷ்டமாய்க் கேட்கும்படி கட்டப்பட்டது; அரங்கத்தின் பின்பாகம் வேஷம் தரிப்பதற்காக இரண்டு மூன்று பெரிய விசாலமான அறைகள் இருந்தன; அன்றியும் மற்ற நாடகசாலைகளிலில்லாத இவ்விடமிருந்த புதுமையென்னவெனில், மற்ற நாடக சாலைகளில் ஆக்டர்கள் நாடகம் ஆரம்பித்த பிறகு, ஏதாவது பாட்டுகளின் சுருதிகளை மாற்ற வேண்டியிருந்த போதிலும், அல்லது ஏதாவது பாட்டை விடவேண்டியிருந்த போதிலும், பக்க வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியனுப்ப வேண்டியிருந்தால், மேடைக்கு வெளியே ஓர் ஆள் அனுப்பி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இங்கு அக்கஷ்மில்லாது, நேபத்யத்திலிருந்து அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு அரங்கத்தின்கீழ் சுரங்கம் மாதிரி ஒரு வழியாக ஹாலில் உட்கார்ந்திருப்பவர்கள் ஒருவருமறியாத படி, சென்று அவர்ளுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் இன்னொரு பிரயோஜனமும் உண்டு. மற்ற நாடகசாலைகளிலெல்லாம், வேடம் தரித்த ஒரு ஆக்டர், தனக்கு வேலையில்லாத ஒரு காட்சியில், வெளியிற் போய் அக்காட்சி எவ்வாறு நடக்கிறதெனப் பார்க்க சாத்தியமில்லை; இந்த நாடக சபையில் இது சாத்தியமாயிருந்தது. தரித்த வேஷத்துடன் இந்தச் சுரங்க வழியாக, பக்க வாத்தியக்காரர்களிருக்குமிடம் போய் உட்கார்ந்திருந்து பார்த்துவிட்டு, ஹாலில் வந்திருப்பவர்கள் ஒருவரும் அறியாதபடி, திரும்பி வரச் சாத்தியமாயிருந்தது. இந்தக் சூழ்ச்சியை அறிந்தவுடன் எங்கள் ஆக்டர்களெல்லாம் ஒவ்வொருவராக இந்த வழியாகப் போய் உட்கார்ந்து பார்த்து களித்து வந்தார்கள்; நானும் அங்ஙனமே செய்தேன். மற்ற நாடக சாலைகளிலும் இம்மாதிரியான ஏற்பாடு இருக்குமாயின் மிகவும் சௌகர்யமாயிருக்கும். சீமை முதலிய இடங்களில் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தென் இந்தியாவில் இதை இந்த நாடக சாலையில்தான் கண்டேன். இந் நாடக சாலையை இவ்வளவு சௌகர்யமாக அமைத்த அதன் புரொப்ரைட்டர் வின்சென்ட் என்பவர் இங்கு வந்தாடும் சபைகளுக்கெல்லாம் கூடிய சௌகர்யங்களை எப்பொழுதும் செய்து வருவதாகக் கேள்விப்பட்டேன். எங்களுக்கும் அப்படியே தானாக வேண்டிய சௌகர்யங்களை யெல்லாம் மனமுவந்து செய்து வந்தார். அவர் ஒருக் கால் இதை வாசிப்பாராயின், நான் இங்கெழுதியதையே என் மனமுவந்த வந்தனமாகக் கொள்வாராக!

இவ்வூரில் எங்கள் முதல் நாடகமாகிய “லீலாவதி சுலோசனா” நாடக தினம், நாடகக் கொட்டகைக்குப் போவதற்காக எல்லா ஆக்டர்களையும் அழைத்துக் கொண்டு நான் புறப்பட்டபொழுது நடந்த ஒரு சிறு விஷயத்தை இங்குக் குறிக்க விரும்புகிறேன். எந்தக் காரியத்தை நான் ஆரம்பிப்பதாயினும் விக்னேஸ்வரரைத் தியானம் செய்துவிட்டு ஆரம்பிப்பது சிறு வயது முதல் என் வழக்கம். அப்படியே என் மனத்தில் தியானம் செய்துவிட்டு, எனது ஆக்டர்களை அழைத்துக்கொண்டு புறப்பட, நான் நாங்கள் குடியிருந்த வீட்டின் படிக்கட்டை விட்டு இறங்கியவுடன், யாரோ தெருவில் போய்க் கொண்டிருந்தவன் பலமாகத் தும்மினான். உடனே என் பின்னால் நின்று கொண்டிருந்த எனது நண்பர் ராம கிருஷ்ண ஐயர், “வாத்தியார்! எவனோ தும்முகிறான், இப்பொழுது புறப்படாதீர்கள்!” என்று தடுத்தார். இன்னும் சிலரும் அப்படியே சொன்னார்கள். உடனே திருஞான சம்பந்த ஸ்வாமிகள் கோளறு திருப்பதிகம் பாடின சந்தர்ப்பத்தை நினைத்துக்கொண்டு, ஸ்வாமியிருக்கிறார் புறப்படுங்கள் என்று சொல்லி, நிற்காது நாடக சாலைக்குச் சென்றேன். அந்த நாடக சாலையில் நாடகமானது நன்றாயிராது, ஜனங்கள் அதிகமாய் வராது, ஏதாவது கெடுதியாய் முடிந்திருந்தால், “தும்பினபொழுது புறப்பட்டதனால்தான் இங்ஙனம் நேர்ந்தது. எங்கள் வார்த்தையைக் கேளாமற் போனீரே” என்று என்னை வைதிருப்பார்கள் எனது நண்பர்கள். அன்றைத் தினம் நாடகமானது நன்றாய் ஒரு விக்கினமுமின்றி ஆடப்பட்டது; அன்றியும் நாடகம் ஆரம்பமாவதற்கு ஒரு மணிக்கு முன்பாகக் கொட்டகையில் ஒரு ரூபாய் வகுப்பினர்க்கே இடமில்லையாம். 8 அணா காலரி வகுப்பினரை நெருங்கி உட்காரச் செய்து, வெளியிலிருந்து சில பெஞ்சுகளைக் கொண்டு வந்து போட்டு ஏற்பாடு செய்தார் நாடக சாலை புரொப்ரைட்டர். நான் இதை இங்கு எழுதியதற்கு முக்கியக் காரணம் தெய்வத்தை நம்பி எக் காரியத்தையும் ஆரம்பிப்பவர்கள், இம்மாதிரியான சகுனங்களுக்கெல்லாம் பயப்பட வேண்டியதில்லை என்பதே.

இவ்வூரில் இரண்டு தெலுங்கு நாடகங்கள் ஆடப்பட்டன; இவைகளுக்காகப் பல்லாரியிலிருந்து தெலுங்கு நாடகமாடுவதில் மிகவும் பிரசித்திபெற்றிருக்கும் எனது நண்பர் ராகவாச்சார்லுவை வரவழைத்திருந்தோம். ஆயினும் அவைகளுக்குத் தமிழ் நாடகங்களுக்கு வந்த ஜனங்களில் மூன்றிலொருபங்குகூட வரவில்லை. இதனால் நான் தெலுங்கு நாடகங்களைப்பற்றி ஏதோ இழிவாகக் கூறுகிறேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் எண்ணக்கூடாது; நான் என் கண் கொண்டு பார்த்த இந்திய ஆக்டர்களுக்குள், எனது நண்பர் ராகவாச்சார்லுவுக்குச் சமானமானவர்கள் இல்லையென்று நான் உறுதியாய்க் கூறக்கூடும்; அன்றியும் அவர் ஆடும் அநேக நாடகங்களில் “ராமராஜு” அல்லது “விஜயநகர சமஸ்தானத்தின் அழிவு” என்னும் நாடகமானது ஒரு மிகச் சிறந்தது என்று எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டியது. அப்படியிருந்தும் அவர் இங்கு முக்கிய வேடம் தரித்த மேற்கண்ட நாடகத்திற்கும் நள சரித்திரத்திற்கும், ஜனங்கள் வராதது (நெல்லூரிலிருந்தது போல) ஜனங்கள் குற்றமல்ல; முக்கியமான தமிழ் நாடாகிய கோயமுத்தூரில் தெலுங்கு நாடகமாடிய எங்கள் சபையோரின் குற்றங்களே. இவ்விரண்டு தெலுங்கு நாடகங்களினால் எங்கள் பைக்கு ரூ 160-10-6 நஷ்டம் நேரிட்டது. தமிழ் நாடகங்களின் கண்டிராக்டினால் கிடைத்த ஆயிரம் ரூபாய் லாபத்தினின்றும் அந்நஷ்டத்தைக் கழிக்க வேண்டி வந்தது. “பிச்சை எடுத்ததாம் பெருமாள், அத்தைப் பிடுங்கியதாம் அனுமார்” என்னும் பழமொழியை எனது நண்பர்களிற் சிலர் எனக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நினைப்பூட்டினர்.

நாங்கள் இங்காடிய மற்றிரண்டு தமிழ் நாடகங்களாகிய மனோஹரன், காலவரிஷி என்பவற்றிற்கு முதல் நாடகத்தில் வந்தது போலவே வெகு ஜனங்கள் வந்திருந்து, நாடக சாலையில் இடம் போதாமற் போயிற்று. நாடக சாலை புரொப்ரைட்டர் வின்ஸென்ட் என்பவர், சாதாரணமாக, நாடக ஆரம்பத்திற்கு ஒரு மணிக்கு முன்தான் நாடகசாலையின் கதவுகளைத் திறக்கிற வழக்கமாம். இந்தத் தமிழ் நாடகங்களுக்கெல்லாம் இரண்டு மணி காலத்திற்கு முன்பே ஜனங்கள் வெளியில் சேர்ந்து கோஷம் செய்து கொண்டிருக்கின்றனர் என்று அறிந்தவராய், அந்த வழக்கத்தையும் மாற்றி ஏழு ஏழரை மணிக்கெல்லாம் கதவுகளைத் திறந்து விட்டார்! நந்தனார் சரித்திர நாடகத்திலும் சேலத்தில் செய்த யுக்தியின்படி, இங்கும் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவை நர்த்தனம் செய்யச் சொல்லி, அவர் பெயரை நாடக விளம்பரங்களில் அச்சடித்தோம். ஏதோ என் சிநேகிதனை நான் அதிகமாய்ப் புகழ்கிறேன் என்று எனது நண்பர்கள் எண்ணாதிருக்கும்படி இங்கு நடந்த ஒரு சிறு விருத்தாந்தத்தை எழுதுகிறேன்.

இவ்வூரில் கடைசியாட்டமாக வைத்துக்கொண்டது எனது நண்பர் டி.சி. வடிவேலு நாயகர் எழுதிய “வள்ளியின் கலியாணம்” அதில் நாடகாசிரியராகிய வடிவேலுவே வள்ளியாகவும் டாக்டர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரி, சுப்பிர மணியராகவும் நடிக்க வேண்டுமென்று ஏற்பாடாயிருந்தது. நோட்டீஸ் முதலியனவெல்லாம் அச்சிட்டுமாயது. இந் நாடகத்தை ஆடவேண்டுமென்று எங்கள் நிர்வாக சபையில் தீர்மானித்ததற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், எல்லாம் சம்பந்தத்தின் நாடகங்களாக இருக்கக் கூடாது, மற்றவர்களுடைய நாடகங்களையும் ஆட வேண்டும் என்பதுடன்; எல்லாத் தமிழ் நாடகங்களிலும் சம்பந்தமும் ரங்கவடிவேலுவும் பிரதானமான பாத்திரங்களை எடுத்துக் கொள்ளலாகாது, மற்றவர்களுக்கும் அயன்பார்ட் என்னும் பிரதான பாத்திரங்களைக் கொடுக்க வேண்டும் என்று, எனது நண்பர்களில் ஒருவர் நிர்வாக சபையின் கூட்டத்தில் பிரேரேபித்தார். அதன் பேரில் அவர் கூறுவது நியாமென்று நானும் எனது நண்பர் ரங்கவடிவேலுவும் ஒப்புக்கொண்டோம். இத்தனை விவாதத்தின் பேரில் தீர்மானிக்கப்பட்ட நாடகம் இந்த ‘வள்ளி கலியாணம்.’ நந்தனார் நாடகம் முடிந்தவுடன், மறுநாள் காலை எனது நண்பர் வடிவேலு நாயகர் என்னிடம் வந்து “வாத்தியார், ஒரு சின்ன வேண்டுகோள். இந்தக் கடைசி நாடகத்தை மாற்றிவிடலாமென்றிருக்கிறேன். இங்குள்ளவர்களெல்லாம் ரங்கவடி வேலுவும் நீங்களும் ஆடினால்தான் நல்ல வசூலாகுமென்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது; ஆகவே, அந்த வள்ளி கலியாணத்திற்குப் பதிலாக, உங்கள் ‘சாரங்கதரா’ நாடகத்தை வைத்துக்கொள்ளலாம்; அதில் நீங்களும் ரங்கவடிவேலுவும் ஆட வேண்டும்” என்று வற்புறுத்தினார். அதன் பேரில் நான் ரங்கவடிவேலுவுடன் கலந்து பேசி, “அப்பா, எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை. ஆயினும் இதை மாற்றுவதில், நாங்கள் சம்பந்தப் பட்டிருப்பதால், நாங்கள் ஒன்றும் பேசமாட்டோம். நீ மற்றக் கமிட்டி மெம்பர்களை யெல்லாம் கேட்டு, அவர்களை எல்லாம் சம்மதிக்கச் செய்தால் ஆட்சேபமில்லை” என்று சொன்னேன். அதன்பேரில் மற்றக் கமிட்டி மெம்பர்களையெல்லாம் கேட்டு அவர்களுடைய சம்மதியைப் பெற்று, கடைசி நாடகத்தை, “வள்ளியின் கலியாணத்தி” லிருந்து “சாரங்கதரா” நாடகத்திற்கு மாற்றினார். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், முற்கூறிய நாடகம் தான் இயற்றியது, அதில் தனக்கு முக்கிய ஸ்திரீ பார்ட் இருந்தது; இருந்தும் அதைவிட்டு, தனக்கு முக்கியமான பாகமில்லாத, ரங்கவடிவேலுவிற்கும் எனக்கும் முக்கிய பாகங்களுடைத்தாயிருந்த பிற்கூறிய நாடகத்தை வைக்கும்படி இவரே பிரயாசை எடுத்துக்கொண்டதேயாம். இவர் இவ்வாறு செய்தது, ஒரு விதத்தில் தன் சுய நன்மைக்காக இருந்தபோதிலும், எங்கள் சபையின் பொது நன்மைக்காகவுமிருந்தது என்பதற்கையமில்லை. அவரும், மற்றெல்லோரும் எண்ணியபடியே, “சாரங்கதரா” நாடகத்திற்கு மிகவும் அதிகமாக ஜனங்கள் வந்து, ஏராளமான பணம் வசூலாயிற்று. எட்டு எட்டரை மணிக்கெல்லாம் கடைசி வகுப்புக்கு டிக்கட்டுகள் விற்பதை நிறுத்தி ஒரு ரூபாய் டிக்கட்டுகளே விற்றதாக எனக்கு ஞாபகம். இங்கு நடத்திய எல்லா நாடகங்களையும் விட இதற்குத்தான் அதிக டிக்கட்டுகள் விற்கப்பட்டன. அன்றியும் இந்நாடகமும் ஆரம்பமுதல் கடைசி வரையில் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்டதென்பது என் அபிப்பிராயம். இந்நாடகத்திலுள்ள ஒவ்வொரு முக்கியமான கட்டத்தையும் சபையோர்கள் மிகவும் சந்தோஷத்துடன் அனுபவித்துக் கரகோஷம் செய்து ஆக்டர்களைத் திருப்தி செய்தனர். நாடகம் முடிந்தவுடன் அதைப் பார்க்க வந்த அநேக பெரிய மனிதர்கள் எங்களிடம் வந்து, நாடகத்தைப்பற்றித் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்து, எங்கள் சபை இங்கு நாடகம் நடத்துவது இதனுடன் முடிந்துவிட்டதே என்று தங்களுடைய வருத்தத்தையும் தெரிவித்தனர். எங்களுடைய ஆக்டர்களும் (நான் உள்பட) இன்னும் நாடக சபையில் ஆடுவதற்கில்லையே யென்று வருத்தப்பட்டோம்!

இவ்வூரில் நாங்களிருந்த பொழுது, அக்ரிகல்ச்சரல் காலேஜ் தலைவர்; ஸ்ரீமான் தாதலிங்க முதலியார் அவர்களும், சி. வெங்கட ராகவாச்சாரியார் அவர்களும், (பிறகு திவான் பகதூர் பட்டம் பெற்ற) சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்களும் எங்கள் சபையோருக்குச் செய்த விருந்தும் உபசரணையும் என்றும் மறக்கற்பாலதன்று. இம்முறை சேலம் கோயமுத்தூர் பிரயாணம் மாதிரியாக இனி எப்பொழுதும் வரப்போகிறதில்லை என்று இதைப்பற்றி இன்றும் புகழ்ந்து பேசுவது வழக்கம். நானும் அங்ஙனமே எண்ணுகிறேன். இதற்கு முன் செய்த பிரயாணங்களிலெல்லாம் ஏதாவது ஒரு குறை வந்து கொண்டிருந்தது. இந்தச் சேலம்- கோயமுத்தூர் பிரயாணத்தில்தான் ஆதி முதல் அந்தம் வரை ஒரு குறையுமின்றி எல்லாம் மிகவும் சந்தோஷமாய் முடிந்தது. ஆகவே, எல்லாம் சுலபமாய் முடிந்து கோயமுத்தூரை விட்டுச் சென்னைப் பட்டணம் புறப்பட்ட தினம், எப்படி முடியுமோ என்றிருந்த பாரம் நீங்கினவனாய், “காற்றின் மீது கொஞ்சம் நடந்தேன்” என்று ஒப்புக்கொள்ள வேண்டியதே.

எங்கள் சபைக்குச் சொந்தமாக, ஒரு நாடக சாலையும் இருப்பிடமும் கட்டுவற்காகத் தக்க இடம் வேண்டிப் பல வருஷங்களாகப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்ததற்கு இவ் வருஷம் சென்னை கவர்னர் லார்ட் வில்லிங்டன், அவர்கள் தன் கவுன்சில் மந்திரிகளுடன் ஆலோசித்து எங்கள் சபைக்கு எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி, நேபியர் பார்க்கில் ஒரு இடம் கொடுக்க இசைந்ததாக, சந்தோஷமான சமாச்சாரம் கிடைத்தது. இதற்காக நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனமும், பிறகு எங்கள் பிரசிடெண்டாகிய டி. வி. சேஷகிரி ஐயர் அவர்கள் அங்குக் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் போட்டதும், முடிவில் இந்த இடத்தை கவர்ன்மெண்டாருக்கே நாங்கள் திருப்பிக் கொடுத்த கதையும் பிறகு எழுத வேண்டி வரும்.

இவ் வருஷம், அநேக நாட்களாக எங்கள் சபைக்காக உழைத்து வந்த வெ. வெங்கடாசல ஐயர் அவர்களுக்கு உபகாரமாக ‘மனோஹரா’ என்னும் நாடகத்தை நடத்தி, செலவுபோக மிகுதிப் பணமாகிய ரூபாய் 446-3-0 ஐ அவருக்குதவினோம். இந்த நாடகம் நடத்தியதில் ஒரு விசேஷமுண்டு. விக்டோரியா பப்ளிக் ஹாலின் மேல் மாடியில் இந்நாடகம் நடத்தினால் எங்கள் சபையின் அங்கத்தினர்களுக்கும், வருகிற மற்றவர்களுக்கும் இடம் போதாதென்று கருதினவர்களாய் பீபில்ஸ் பார்க்கின் வடகிழக்கில் கட்டியிருக்கும் ராயல் தியேடர் என்னும் நாடக சாலையில் இதை நடத்தினோம். இதுதான் முதல் முறை எங்கள் சபை சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹாலை விட்டு, நாடகக் கம்பெனிகள் ஆடும் நாடக சாலையில் நாடகம் நடத்தியது. மேற் சொன்னபடி மற்ற நாடக சாலைகளில் நாம் ஆடுவது நமது சபையின் அந்தஸ்திற்கு ஏற்றதன்று என்று சிலர் ஆட்சேபித்தனர். வெளியூர்களுக்குப் போயிருந்த பொழுது, நாடகக் கொட்டகைகளில் நமது சபை நாடகங்களை நடத்தவில்லையா? அன்றியும், நாம் அங்குப் போய் ஆடுவதனால் அந்த நாடக சாலைக்குக் கொஞ்சம் கௌரவம் அதிகமாகுமேயொழிய, நம்முடைய அந்தஸ்து இழிபடாது என்று பதில் உரைத்து, அந்தக் கொட்டகையிலேயே ஆடினோம். நாங்கள் எண்ணியபடியே, கடைசி வகுப்பாகிய காலெரிக்குத் தவிர மற்ற வகுப்புகளுக்கெல்லாம் ஜனங்கள் ஏராளமாய் வந்தனர். எனக்கு இக்கொட்டகையில் ஆடுவதென்றால், சிறிது கூச்சமாகத்தானிருந்தது. சாதாரணமாக விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகமாடினால், கற்றறிந்தவர்கள்தான் வருவார்கள்; இவ்விடங்களிலெல்லாம் நாடகம் பார்க்க வரும் ஜனங்கள் பெரும்பாலும் பாமர ஜனங்களே; ஆகவே, எங்கள் சபையின் நாடகம் இவர்களுக்கு எப்படி ருசிக்குமோ என்று சந்தேகப்பட்டேன்; அன்றியும் இந்த மாதிரியான நாடகக் கொட்டகைகளுக்கு வரும் ஜனங்களெல்லாம், சங்கீதத்தையே முக்கியமாக விரும்புவார்கள்; நானோ ‘மனோஹரா’ நாடகத்தில் ஒரு பாட்டும் பாடுவதில்லை. ஆகவே, இந்நாடகத்தை, “காலரி ஸ்வாமிகள்” என்று ஆங்கித்தில் கூறப்பட்ட பாமர ஜனங்கள் எப்படி ஏற்பார்களோ என்று சம்சயப்பட்டேன். ஆயினும் அன்று நாடகம் நடத்திய பிறகு அந்தச் சந்தேகமெல்லாம் அறவே நீங்கியது. எவ்விதம் ஆடியபோதிலும் ஆடுபவர்களிடம் தக்க திறமையிருந்தால் சோபிக்காமற் போகாது என்பதை நேராகக் கண்டேன். இதன் பிறகு இவ்விடத்தில் பன்முறை எங்கள் சபையார் நாளது வரை நாடகங்கள் நடத்தியிருக்கின்றனர்; இந்நாடகம் நடத்தியபொழுது, இக்கொட்டகையில் ஸ்ரீமான் கன்னையா என்பவர், கொட்டகைக்காரரிடமிருந்து வாடகைக்கு வாங்கிக் கொண்டு, தமது நாடகக் கம்பெனியின் நாடகங்களை நடத்திக்கொண்டிருந்தார். எங்கள் சபையார் மேற்சொன்னபடி தர்ம கைங்கர்யமாக அக்கொட்டகையில் நாடகம் நடத்த வேண்டுமென்று கேட்டபொழுது, மிகவும் சந்தோஷத்துடன் தான் போட்டுக் கொண்டிருந்த நாடகங்களையும் நிறுத்தி, இலவசமாக எங்களுக்கு அக்கொட்டகையை விட்டார். அன்றியும் நாடக தினம், தன் கம்பெனியின் படுதாக்கள், திரைகள் எல்லாம் எது வேண்டினும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் தயாள குணத்துடன் உதவினார். இம்மாதிரி இவர் உதவியது இம்முறை மாத்திரம் அன்று இதற்கப்புறம் பன்முறை எங்கள் சபைக்குத் தனது கொட்டகையையும் படுத்தாக்கள் உடுப்புகள் முதலியவையும் கொடுத்து உதவியிருந்தார்.

சாதாரணமாக ஒரு நாடகக் கம்பெனியார், மற்ற நாடகக் கம்பெனிகள் மீதாவது, நாடக சபைகள் மீதாவது பொறாமை கொள்வதுதான் உலக வழக்கமாயிருக்கிறது; அதற்கு மாறாக, நாடகமாடுவதையே தன் ஜீவனாதாரமாகக் கொண்ட இவர், எங்கள் சபையின்மீது இவ்வளவு அன்பு பாராட்டியது மிகவும் புகழத்தக்கதே. அந்த அன்பைப் பலவிதங்களில் நிரூபித்துள்ளார். ஒரு முறை எங்கள் சபை திருநெல்வேலிக்குப் போனபோது, அதற்குச் சற்று முன்பாக அவ்வூரில் நாடகமாடிக்கொண்டிருந்த இவர், தன் கடைசி நாடகத்தின் முடிவில் அவ்வூர் ஜனங்களுக்கு வந்தனமளித்தபோது, மேடையிலிருந்து, “நீங்கள் தமிழ் நாடகங்கள் எப்படிச் சரியாக நடக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ள விருப்பமுடையவர்களானால், வருகிற வாரம் சுகுண விலாச சபையார் இங்கு வந்து நாடகங்கள் நடத்தப் போகிறார்கள். அவற்றைப் போய்ப் பார்த்து ஆனந்தியுங்கள்” என்று கூறியதாக நான் அறிந்தேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், இவர் செய்ததையும் நெல்லூரில் எங்கள் தெலுங்கு நாடகங்களைப் பார்க்கக் கூடாதென்று முயற்சி செய்த அங்குள்ள ஒரு சபையின் செய்கையையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்களாக! அன்றியும் எங்கள் சபைக்கு ஏதாவது சாமான்கள் வேண்டியிருந்தால், கொஞ்சமும் மனத்தில் அசூயை இல்லாமல் இவர் கொடுத்துதவியது நான் என்றும் மறக்கற்பாலதன்று. அப்படிப்பட்ட பல உபகாரச் செய்கைகளுள் ஒன்றை மாத்திரம் இங்கெடுத் தெழுதுகிறேன். சென்ற 1930ஆம் வருஷம் எங்கள் சபை “கொடையாளி கர்ணன்” என்னும் எனது நாடகத்தைப் போட்டபொழுது அதற்காக இரண்டு ரதங்கள் செய்ய வேண்டியிருந்தது; எங்கள் சபையின் நிர்வாக சபையார் இதற்காக ஏதோ ஒரு தொகை கொடுத்தார்கள்; அதற்கு மேல் இரு மடங்கு தன் பொருளைச் செலவழித்து அர்ஜுனனுக்கும், கர்ணனுக்கும் உபயோகப்படத்தக்க இரண்டு அழகிய ரதங்களை, தானாகத் தன் ஆட்களைக் கொண்டு செய்வித்து உதவினார்! அன்றியும் நான் கர்ணன் வேடம் பூணப் போகிறேன் என்று அறிந்தவராய்த் தானாகத் தன் செலவில் பொன் முலாம் பூசிய கவசமும், குண்டலங்களும் செய்தனுப்பினார்! நான் ஒருவரையும் ஒன்றையும் கேட்பதில்லை என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிவார்களென நம்புகிறேன். இவராக இதைச் செய்து அனுப்பியதுமன்றி, இதற்காக நான் என்ன பணம் கொடுக்க வேண்டுமென்று விசாரித்தபொழுது, “தமிழ் நாடகத்திற்காக இவ்வளவு உழைக்கும் முதலியாருக்கு, நான் இவ்வளவாவது செய்யலாகாதா’ என்று கூறி, அதன் விலையைப் பெற மாட்டேன் என்று மறுத்தார். அச் சமயம் என் மனத்தில் உதித்ததை நான் இங்கு எழுதுகிறேன். “கர்ணனுக்கப்புறம் கொடையில்லை” என்னும் பழமொழி தவறு; கர்ணனுக்கப்புறமும் கலியுகத்திலும் சில கொடையாளிகள் இருக்கின்றனர்” என்று எண்ணினேன். அந்தக் கவசத்தின் விலையைப் பற்றி நான் அதிகமாகப் பாராட்டவில்லை; அதையளித்த மனத்தையும், அதைக் கொடுத்த விதத்தையுமே அதிகமாக மதிக்கிறேன். இவரது அசூயை இல்லாத தயாள குணத்தை நினைக்கும் பொழுது, ஒரு முறை எங்கள் சபையின் நாடகத்திற்காக, சுவர்களில் ஒட்டிய பிளேகார்ட்ஸ் நாடக விளம்பரங்களை எல்லாம் கிழித்தெரியும்படிச் சில சிறுவர்களுக்குத் துட்டு கொடுத்து, அவ்வேலையைச் செய்யும்படி செய்த, மற்றொரு நாடக சபையின் காரியதரிசியின் “குணமும்” எனக்கு நினைவு வருகிறது! இதில் எது மேம்பட்டது, எது தாழ்ந்தது என்று நான் இங்கெழுத வேண்டிய நிமித்தமில்லை. சென்னை ராஜதானி முழுவதும் கன்னையா என்ற பெயர், அவர் இறந்தும், பல வருடங்கள் போற்றப்படும் என்பதற்கு ஐயமில்லை; மேற்குறித்தபடி நடந்த சபையின் பெயர், அடியுடன் நசித்துப் போயிற்று. அப்பெயரை நான் இங்கு எழுதினாலும், இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரியாததாகும். ஆகவே, “அறத்தாறு இதுவென வேண்டா"’ என்ற திருவள்ளுவர் வாக்கியத்துடன் இவ்விஷயத்தை முடிக்கிறேன்.

மறு வருஷமாகிய 1921ஆம் வருஷத்தில் ஒரு துக்ககரமான விஷயமும் பல சந்தோஷகரமான விஷயங்களும் நேர்ந்தன. துக்ககரமான சமாச்சாரத்தை முன்பு எழுதியிருக்கிறேன். இவ்வருஷம் என் பூர்வ கர்ம வசத்தால், என் அருமைத் தமயன் ஆறுமுக முதலியாரை இழந்தேன். ஒரு நாள் காலை, நான் துங்கிக்கொண்டிருந்த பொழுது என் குமாரன் என்னை அவசரமாக எழுப்பி, சிந்தாதரிபேட்டையிலிருந்து, என் தமயனார் இறந்து போனதாகக் கடிதம் வந்ததைக் காண்பித்தான்! அதற்கு முந்திய தினம் அவர் தன் வழக்கம்போல் எங்கள் சபைக்கு வர, அவருடன் நானும் இன்னும் சில நண்பர்களும் சீட்டாடியது நன்றாய் எனக்கு ஞாப்கமிருக்கிறது. அப்பொழுது அவருக்கு உடம்பு ஒன்றுமில்லை. தன் வழக்கம் போல்தான் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். 12 மணி நேரத்திற்குள்ளாக அவருக்கு மிருத்யு நேரிடுமென்று நான் கனவிலும் நினைத்தவனல்ல. அப்படியிருக்க, மறுநாள் அவர் காலமாய் விட்டார் என்ற செய்தி வந்தவுடன் என் மன நிலைமை எத்தன்மையதாயிருக்க வேண்டுமென்று என் நண்பர்கள் யோசித்துக்கொள்ளலாம். அதைப்பற்றி இங்கு எழுதி என் நண்பர்களுக்கும் கொஞ்சம் துக்கம் விளைவிக்க எனக்கு மனமில்லை. ஆங்கிலக் கவியொருவர், “நகைத்திடுவாயின் நீ - உலகம் நகைத்திடும் உன்னுடன்; அழுதிடுவாயின் நீ -அழவேண்டும் தனியே” என்று எழுதியுள்ளார்.

அவர் திடீரென்று மடிந்ததற்கு ஏதோ ரத்தக்குழாய் உடைந்தது காரணமென்று விசாரித்தறிந்தேன். அவரது புத்திரன் பதினைந்து பதினாறு வயதுடையவன்; எங்கள் குலத்தில் மிகுந்த புத்திசாலியாகப் படித்துக் கொண்டிருந்தவன் விஷ ஜ்வரத்தினால் இறந்தது முதல் அவர் பழைய ஆறுமுக முதலியாராகவே இல்லை. மேலுக்கு மாத்திரம் முன்போல் எல்லோருடனும் பேசிக்கொண்டு தன் வேலையைச் செய்து வந்தபோதிலும், அவர் இருதயமானது அப்பெரும் துக்கத்தினால் குன்றியது என்பதை நான் நன்றாய் அறிவேன். இங்ஙனம் அவரது ஏக புத்திரன் அவருக்கு முன்பாகச் சென்றமையால் நானே அவருக்கு தீக்கடனையும் நீர்க்கடனையும் செலுத்த வேண்டியதாயிற்று. எங்கள் சபையின் தசராக் கொண்டாட்டத்திற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்தான் மேற்சொன்ன விபத்து நேரிட்டபடியால், இவ் வருஷம் தசராக் கொண்டாட்டத்தில் நானும் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும், ஒரு பாகமும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் திடீரென்று மடிந்த விதத்தைக் கேட்டு மனமுருகாத சபை அங்கத்தினர் ஒருவருமில்லையென்றே நினைக்கிறேன்.

இனி, இதை மறக்க முயன்று இவ்வருஷம் நடந்த சந்தோஷகரமான சமாச்சாரங்களை எடுத்து எழுதுகிறேன்.

இவ்வருஷம் எங்கள் சபையின் அங்கத்தினர் தொகை 2000 க்கு மேற்பட்டது. டிசம்பர் மாதம் 31ஆம் தேதி 2105 அங்கத்தினர் இருந்தனர்; 1459 சென்னைவாசிகள், 308 வெளியூர்வாசிகள், 334 ஸ்திரீகள் இதில் அடங்கி இருந்தனர். இத்தொகையானது இதுவரையில் அதிகப்படவில்லை. இவ்வருஷம் முதல் குறைந்து கொண்டே வந்ததே யொழிய அதிகப்படவில்லை ; ஆறுமுக முதலியாருடன் எங்கள் சபையின் லட்சுமி ஒரு கரத்தை இழந்தனள் போலும். இரண்டாயிரம் அங்கத்தினர் சேர்ந்தவுடன், அந்த இரண்டாயிரமாவது அங்கத்தினராகச் சேர்ந்த ஏ. ஆறுமுக முதலியார் என்பவர் இவ் வருஷம் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி, சபைக்கு ஒரு சாயங்கால விருந்தளித்தார்.

இவ்வருஷம் எங்கள் சபையில் புதிதாய் ஆடப்பட்ட தமிழ் நாடகங்கள், அ. சுப்பிரமணிய பாரதியார் எழுதிய மாருதி விஜயம் என்னும் நாடகமும், திவான் பஹதூர் எஸ். பாவநந்தம் பிள்ளை அவர்கள் எழுதிய “பாதுகா பட்டாபிஷேகமுமாம்.” இவற்றுள் முந்திய நாடகமாகிய மாருதி விஜயத்தில், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு சீதையாக நடித்தபடியால், நான் ஸ்ரீராமனாக நடிக்க வேண்டி வந்தது."நடிக்க வேண்டி வந்தது” என்று யோசித்தே இங்கு வரைந்தேன். ஏனெனில், ரங்கவடிவேலு தான் சீதையாக நடிக்க வேண்டுமென்று விரும்பி, அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டிராவிட்டால், நான் ஸ்ரீராமனுடைய பாகத்தின் அருகிலும் போயிருக்க மாட்டேன் என்பது திண்ணம். இதற்கு முன்பாகப் பல வருடங்களாக ரங்கவடிவேலு உட்பட எனது பல சினேகிதர்கள, என்னை ஸ்ரீமத் ராமாயணத்தை முற்றிலுமாவது அல்லது சில முக்கியப் பாகங்களையாவது, நாடக ரூபமாக எழுத வேண்டுமென்று நிர்ப்பந்தித்தும், நான் மறுத்து வந்தேன். இதற்கு முக்கியக் காரணம், வால்மீகி எழுதிய அவர் திவ்ய சரித்திரத்தைத் தினம் படித்துத் தொழுது வருவதிலிருந்து ஸ்ரீராமருடைய பாகத்தை ஒருவராலும் சரியாக மேடையின் பேரில் ஆட முடியாதென்பது என் துணிபு என்று முன்பே எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கின்றேனென நினைக்கிறேன். இக்காரணம் பற்றி, ராமாயணத்தின் அருகிற் போகமாட்டேன் என்று மறுத்துக் கொண்டுவர, எனதுயிர் நண்பர் “நீங்கள் எழுதாவிட்டால் போகிறது. சுப்பிரமணிய பாரதியார் எழுதியிருக்கிறார் மாருதி விஜயம் என்னும் ராமாயணக் கதையை நாடக ரூபமாக, அதில் நான் சீதையாக நடிக்க விரும்புகிறேன். அதற்காக நீங்கள் ஸ்ரீராமராக நடிக்கவேண்டும்” என்று தொந்தரவு செய்ய, மனமில்லாத போதிலும் இசைந்தேன். இதில் இரண்டு காட்சிகளில்தான் எனக்குப் பாகமுண்டு; அவ்விரண்டு காட்சிகளிலும் கூட நான் நன்றாய் நடிக்கவில்லை என்பது நிச்சயம். உலகத்தவர்க்கு ஓர் உத்தம புருஷனை வர்ணிக்க வேண்டுமென்று வால்மீகி முனிவர் வர்ணித்துள்ள ஸ்ரீராமபிரானைப்போல நாம் எங்கு நடிக்கப் போகிறோம் என்னும் அச்சம் என் மனத்தில் பூரணமாய்க் குடி கொண்டிருக்க, நான் அந்தப் பாத்திரத்துக்குத் தக்கபடி நடிக்க அசக்தனாயிருந்தேன். இந் நாடகமானது மறுபடியும் எங்கள் சபையில் இதுவரையில் என்னாலும் நடிக்கப்பட வில்லை; மற்றெவராலும்கூட நடிக்கப்படவில்லை.

இவ் வருஷம் நான் புதிதாய் எழுதிய நாடகம் “வள்ளி மணம்” என்பதாம். இது எங்கள் சபையின் நாடகங்களுள் ஒரு முக்கிய நாடகமாக மதிக்கப்படுவதனாலும், இந் நாடகத்தினால் எங்கள் சபைக்கு எப்பொழுது ஆடிய போதிலும் நல்ல வரும்படி வருவதனாலும் இதைப்பற்றிச் சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன்.

இதற்குச் சில வருஷங்களுக்கு முன்பாகச் சென்னையில் இந்த வள்ளியின் கதையானது, பல நாடகக் கம்பெனிகளால் ஆடப்பட்டுப் பிரபலமாகி வந்தது. இதைப் பன்முறை பார்த்த எனது ஆருயிர் நண்பர், தனக்காக இக் கதையை நான் நாடக ரூபமாக எழுதித் தர வேண்டும் என்று வற்புறுத்தினார். இவர் சாதாரணமாக நான் ஏதாவது ஒரு நாடகத்தை எழுதி முடித்தால், அது ஆடப்பட்டவுடன், “பிறகு எனக்கு என்ன புதிய நாடகம் எழுதித் தரப் போகிறீர்கள்?” என்று என்னைக் கேட்டுக் கொண்டிருப்பார். இதற்காக நான் அவர்மீது குற்றம் கூறுவதில்லை. அவர் என்னை அப்படித் தொந்தரவு செய்து வந்ததற்காக, நான் இப்பொழுது நினைத்துப் பார்க்கும்பொழுது, பெரும் நன்றி பாராட்ட வேண்டியவனாயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஏனெனில், நான் சாதாரணமாக, சோம்பேறிக் குணமுடையவனென்றே நினைக்கிறேன். இப்படி அவர் என்னை அடிக்கடி இடைவிடாது தொந்தரவு செய்துகொண்டு வந்தபடியினால்தான் 1895ஆம் வருஷம் முதல் 1913ஆம் வருஷம் வரையில் நான் எழுதிய நாடகங்களுள் பெரும்பாலானவற்றை எழுதி முடித்தேன் என்று உறுதியாய் நம்புகிறேன்; இத் தூண்டுகோலில்லாவிடின் அவற்றுள் நான்கில் ஒரு பங்குகூட எழுதி முடித்திருக்க மாட்டேன் என்பது என் தீர்மானமான எண்ணம். 1924ஆம் வருடம் முதல் இந்த வேலையை எனது தற்கால உயிர் நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் எடுத்துக் கொண்டிருக்கிறார்! இதைப்பற்றிப் பிறகு எழுத வேண்டி வரும்.

மேற்சொன்னபடி ரங்கவடிவேலு என்னை வற்புறுத்தியபோது, ஸ்ரீ சுப்பிரமணியர் பாத்திரத்தை என்னால் ஆட முடியாது; அதைச் சரியாக ஆட என்னிடம் சக்தியில்லை; ஸ்ரீராமர் பாத்திரத்தை ஆடாததற்கு என்ன ஆட்சேபணை இருந்ததோ, அந்த ஆட்சேபணை இதற்கும் இருக்கின்றது எனத் தெரிவித்தேன். அப்போது இதற்குள்ளாக வக்கீல் பரீட்சையில் தேறி, என்னுடன் ஜுனியர் ஆக வக்கீல் வேலை பார்த்து வந்த இவர், வக்கீல்களின் நியாயப் பிரகாரம், “எப்படி ஸ்ரீராமர் வேடம் ஒருமுறை பூண்டிரோ அம்மாதிரியாகவே சுப்பிரமணியர் வேடமும் எனக்காக ஒருமுறை பூணும்” என்று வாதித்தார். இந்த வாதுக்கு வகை சொல்ல அறியாது ஒருவாறு ‘ஆகட்டும்’ என்று இசைந்தேன். அதன்பேரில், இதற்கு முன்பாக ஒருமுறை எங்கள் சபையில் ஆடப்பட்ட பி.எஸ். துரைசாமி ஐயங்கார் எழுதிய “வள்ளித் திருமணம்” என்னும் நாடகத்தை எடுத்துக்கொண்டு, அதில் முன் பாகத்தையும், கடைசிப் பாகத்தையும் அப்படியே வைத்துக்கொண்டு, அந் நாடக ஆசிரியர் அனுமதியின்மீது, இடையிலுள்ள சுப்பிரமணியர் வரும்படியான முக்கியமான மூன்று காட்சிகளை மாத்திரம் என் மனம் சென்றபடி, புதிதாய் எழுதி முடித்தேன். இவைகளை நான் எழுதியவுடன் படித்துப் பார்த்து, மிகவும் நன்றாயிருக்கிறதென மகிழ்ந்து, உடனே நாடகத்தை ஆட வேண்டுமென்று விரும்பினார். நாடகத்தின் இம் மூன்று காட்சிகளையும் எழுதி முடித்தவுடன் இன்னொரு கஷ்டம் ஆரம்பித்தது. முதலிலேயே எனதுயிர் நண்பரிடம் நான் இந் நாடகத்தில் பாட மாட்டேன் என்று சொல்லியிருந்தேன். அப்பொழுதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, நான் எழுதியானவுடன் அதெல்லாம் உதவாது, நீங்கள் எப்படியும் இந் நாடகத்தில் பாடித்தான் ஆக வேண்டும் இல்லாவிட்டால் எனக்குக் கஷ்டமாயிருக்கும்; நீங்கள் பாடாவிட்டால் தர்க்கப் பாட்டுகளாகிய சுப்பிரமணியருடன் பாட வேண்டிய என் பாட்டுகளை நான் விட்டு விட வேண்டி வரும்” என்று நிர்ப்பந்திக்க ஆரம்பித்தார். என்னால் தாளத்துடன் பாட முடியாது, பிறகு அவமானத்திற்கிடமாகும் என்று நான் எவ்வளவோ சொல்லியும் ஒரே பிடிவாதம் பிடித்தார். வேறெந்த நியாயமும் பயன்படாமற் போகவே, கடைசியில் “நீங்கள் மனம் வைத்தால் எப்படியும் சாதிப்பீர்கள். என் பொருட்டு அவ்வளவு கஷ்டம் எடுத்துக்கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார். இந்த நியாயத்திற்கு நான் என்ன பதில் உரைப்பது? உடனே பதில் ஒன்றும் சொல்லாமலிருந்து விட்டு, வீட்டுக்குப் போனதும் இவ்வளவு சொல்லும் பொழுது, நாம் முயன்றுதான் பார்ப்போமே என்று தீர்மானித்து, அவர் அறியாதபடி ஏகாந்தமாய் தினம் கஷ்டப்பட்டு நான்கு பாடல்கள் மாத்திரம் தாளத்துடன் சரியாகப் பாடக் கற்றுக் கொண்டேன். இதனுடன் நான்கைந்து விருத்தங்களையும் ராகத்துடன் பாடக் கற்றேன். பிறகு ஒரு நாள் இந் நாடகத்திற்கு ஒத்திகை செய்தபொழுது அவர் பாடியானவுடன் திடீரென்று நானும் தாளத்துடன் என் பாட்டுகளைப் பாட ஆரம்பித்தேன்! அதைக் கேட்டுவிட்டு அவர் கூறிய பதில் இன்னும் என் மனத்தில் குடிகொண்டிருக்கிறது. “திருடு! தாளம் வராது என்று சொல்லிவிட்டு, இப்பொழுது, என்னமாக வந்தது?

எல்லாம் நீங்கள் மனம் வைத்தால் செய்து முடிப்பீர்கள். இனிமேல் எப்பொழுதாவது என்னிடம் தாளத்துடன் பாட்டு வராது என்று சொல்லுங்கள்! உங்களுக்கு பைன் போடுகிறேன்!” என்று சிரித்துக்கொண்டு கூறின உருவம், என் மனத்தைவிட்டு இன்னுமகலவில்லை! எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச அய்யங்காரும் நானும் ஒருவருக்கொருவர் பைன் போட்டுக்கொள்கிற வழக்கம்போல, இவரும் நானும் ஏதாவது தப்பு செய்தால் பைன் போட்டுக் கொள்வோம். ஆயினும் இதில் ஒரு வித்தியாசம். வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் பைன் போட்டுக் கொண்டால் அதையெல்லாம் ஒரு உண்டியிற் போட்டு ஏதாவது தர்மத்திற்கு உபயோகிப்போம்; எனக்கு ரங்கவடிவேலு பைன் போட்டால் நான் அதை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும். அன்றியும், அவருக்கு நான் பைன் போட்டாலும் அவருக்கு, அதை நானே கொடுத்துவிட வேண்டும்! இதென்ன நியாயம் என்று கேட்டால், “நீங்கள் எழுதியிருக்கிறீர்களே, இரண்டு நண்பர்கள் என்னும் நாடகத்தில்! இது பெண்கள் நியாயம்!” என்று கூறுவார். என்னுடன் இப்படி வேடிக்கையாகப் பேசும்போதெல்லாம் தன்னை ஒரு பெண்ணாகவே பாவிப்பார்.

இந்த வள்ளி மணம் என்னும் ஒரு நாடகத்தில்தான் ஏதோ கொஞ்சம் தாளத்தை ஒட்டி நான் பாடியது. முதன் முதல் பகிரங்கமாக நாடக மேடையில் நின்று தாளத்துடன் எனது பாடல்களைப் பாடியபோது, எனது நண்பர்கள் எல்லாம், “ஓகோ! வாத்தியார்கூடத் தாளத்துடன் பாடக் கற்றுக்கொண்டோரே!” என்று கைகொட்டி நகைத்தனர்! இந் நாடகத்தில் முதல் முறை நான் நடித்தபொழுது, ஆரம்பித்த ஒரு வழக்கத்தை, இன்னும் அந் நாடகம் நடிக்கும்பொழுதெல்லாம் விட்டவனன்று. சுப்பிரமணியர் வேடம் பூண்டவுடன், கையில் அவரது வேலாயுதத்தை எடுக்குமுன், அதை அரங்கத்தின் கோயிலில் வைக்க வேண்டிய அவரது சிலை உருவத்தின் கையில் வைத்து, பூஜித்து, அதை நாடகத்தில் ஏந்தும்படியான சக்தி எனக்குத் தந்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தே பிறகு கையிலெடுப்பேன்.

இந்த வள்ளி நாடகமானது அடிக்கடி அனேக சபைகளிலும் கம்பெனிகளிலும் ஆடப்படுகின்றமையால், இதில் வரும் கதாநாயகனான சுப்பிரமணியர் வேடத்தைப் பற்றிச் சற்று விரிவாக எழுத விரும்புகிறேன். நான் பார்த்தபடி அநேகம் முறை, முக்கியமாக நாடகக் கம்பெனிகளில், இவ் வேஷம் தரிப்பவர்கள், சுப்பிரமணியர் தன் சுய ரூபத்துடன் முதற் காட்சியில் தோன்றும்போது, சம்கி சொக்காய்களையும், நிஜார்களையும் அணிந்து அதன் பேரில் பூட்ஸ் அல்லது ஸ்லிப்பர்ஸ் போட்டுக் கொண்டு, தலையில் ஒரு சரிகைத் தொப்பியைப் போட்டுக்கொண்டு வருகிறார்கள். இப்படி வருவதன் தவறு பாமர ஜனங்களுக்குத் தோன்றாவிட்டாலும், நல்லறிவு கொஞ்சமேனும் உடையவர்களுக்கு இது அருவருப்பை உண்டு பண்ணுகிறது என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. பூர்வகாலத்தில் ஜனங்கள் என்னென்ன உடையை அணிந்தார்கள் நமது தேசத்தில், என்று கண்டுபிடிப்பது சாலவும் கஷ்டமாயினும்; இந்தியர்கள் தெய்வங்களாக வணங்கும் சுப்பிரமணியர், ராமர் முதலியோர் இப்படி இப்படி உடைகளை அணிந்திருந்தார்கள் என்று சிறிது ஆராய்ச்சி செய்தபோதிலும் கண்டுபிடித்து விடலாம். அன்றியும் புராதனமாயுள்ள கோயில்களின் சிலையுருவங்களைக் கொண்டு சந்தேகமின்றி நிர்ணயித்து விடலாம். சங்க நூல்களில் முழங்கால் வரையில் அணியும் கால் சட்டைக்கு ஒரு பெயரே இருக்கின்றது வட்டுடையென்று; அதை அணிவதற்கு ஏதாவது அசந்தர்ப்பமாயிருந்தால் பட்டுப் பீதாம்பரங்களை அழகாக அணியலாம். இவை இரண்டில் சுப்பிரமணியர் என்றும் இளமை மாறாதவர் என்று கூறப்பட்டிருக்கிறபடியாலும், தமிழில் அவருக்கு முருகன் (முருகு - இளமை) என்கிற பெயர் இருப்பதாலும், முழங்கால் வரையில் சட்டையணிவதே தகுமென்பது என் அபிப்பிராயம். அன்றியும் தலையில் அவர் கிரீடமணிய வேண்டியது அவசியம். தற்காலத்திய சம்கி குல்லாய்களை அணிவது மிகவும் ஆபாசமாம்.

பிறகு இரண்டாவது காட்சியில் அவர் வேடுவனாய் வரும்பொழுது, மான் தோல் அல்லது புலித்தோல் அல்லது ஏதாவது விலங்கின் தோலணிந்து, கிரீடத்தை நீக்கி, வேடர் முடியுடனும், ஆபரணங்களை யெல்லாம் கழற்றிவிட்டுக் கை வில்லுடன் தோன்றுவதே நியாயமாகும். அநேக கம்பெனிகளில் சுப்பிரமணியர், முன்பிருந்த கோலத்துடனே, கையில் வில்லை மாத்திரம் எடுத்துக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். அக் கோலத்தில் அவரை சாட்சாத் சுப்பிரமணியர் என்று அறியாத வள்ளி மிகவும் புத்தியற்றவளாய் இருக்க வேண்டும்!

அன்றியும் தற்காலத் தென் இந்திய நாடக மேடையில் இந் நாடகம் நடிக்கப்படும்பொழுது சாதாரணமாக நடக்கும் மற்றொரு பெருத்த ஆபாசத்தை இங்குக் கண்டித்தெழுத விரும்புகிறேன். சுப்பிரமணியர் வேடம் பூண்டவன், அரங்கத்தில் முதலில் தோற்றும் பொழுது, “ஜெய ஜெய கோகுல பால!” அல்லது “நின்னெவரனி” முதலிய கிருதிகளைப் பாடிக்கொண்டு வருவதும் மிகவும் தவறாகும். இக் கிருதிகளைப் பற்றி நான் குற்றமாகக் கூறவில்லை. அக்கிருதிகளை எத்தனை முறை கேட்டாலும் இன்னும் பன்முறை கேட்க விரும்புகிறேன். ஆயினும் சுப்பிரமணியர் வேஷதாரி, அவைகளைப் பாடுவது தவறாகும். அப் பாட்டுகளை அந்த வேஷதாரியிடமிருந்து கேட்க ஜனங்கள் விரும்பினால், காட்சிகளுக்கு இடையிலுள்ள அவகாசத்தில், அந்த வேஷதாரியை, தனியாகத் திரையின் முன்பு வரவழைத்துப் பாடக் கேட்கட்டும். சுப்பிரமணியராக அரங்கத்தில் ஆக்டு செய்து கொண்டிருக்கும் பொழுது இத்தகைய கிருதிகளையெல்லாம் பாடுவது மிகுந்த ரசாபாசமாம் என்பது என் நிச்சயம். தற்காலத்திய நாடக மேடைகளில் நடக்கும் சங்கீத ஆபாசங்களைப் பற்றிப் பிறகு விரிவாக எழுதலாமென்றிருக்கின்றேன்.

இந்த வள்ளி மணம் என்னும் நான் எழுதிய நாடகமானது முதன் முறை நடிக்கப்பட்டபோது, சபையோரால் மிகவும் சந்தோஷத்துடன் ஏற்கப்பட்டது. நான் சீக்கிரத்தில் மற்றக் காட்சிகளையும் என் மனத்திற்கு யுக்தமென்று தோன்றியபடி எழுதி முடித்து இப் புத்தகத்தை மறுவருடம் அச்சிட்டேன். இந் நாடகமானது பன்முறை எங்கள் சபையில் ஆடப்பட்டிருக்கிறது. இது ஆடப்படும் பொழுதெல்லாம் நல்ல பணம் வசூலாகியிருக்கிறது. எங்கள் சபைக்குப் பணத்தைக் கொண்டு வந்த நாடகங்களில் இது ஒரு முக்கியமானதாம். மனோஹரன், லீலாவதி- சுலோசனா நாடகங்களுக்குப் பின்பாக இதையே கூற வேண்டும். இது ஒன்பது வருடங்களுக்கு முன்புதான் அச்சிட்ட நாடகமாயினும், இதுவரையில் 50 முறைக்கு மேல் ஆடப்பட்டிருக்கிறது. எனது இந் நாடகமானது, நாடகக் கம்பெனிகளால் ஆடப்படுவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், இக் கதையை அநேக நாடகக் கம்பெனிகளில், பாட்டுகளை மாத்திரம் கற்றுக்கொண்டு வசனம் வாய்க்கு வந்தபடி பேசிக்கொள்ளும் வழக்கமாயிருக்கலாமெனத் தோன்றுகிறது. அன்றியும் பாய்ஸ் கம்பெனிகளில், அவர்களுக்கு வேண்டிய வசனங்களை யாரையாவது கொண்டு எழுதி வைத்துக் கொள்ளுகிறார்கள். இப்படிச் செய்வதனால், நான் எழுதியபடி நடிப்பதென்று என் உத்தரவைப் பெற்று, எனக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் கட்ட வேண்டிய கஷ்டம் அவர்களுக்கு இல்லாதிருப்பதால் அவர்கள் மீது நான் குறை கூறுவதற்கில்லை.

நான் இப்பொழுது நடிக்க விரும்பும் பாத்திரங்களுள் இந்த வள்ளி மணத்தில் வரும் சுப்பிரமணியர் வேடம் ஒன்றாகும். எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவுக்கப்புறம் இந் நாடகத்தில் எனதுயிர் நண்பர் கே. நாகரத்தினம் ஐயர் வள்ளியின் வேடத்தில் மிகவும் நன்றாய் நடித்து வருகிறார்.

இவ் வருஷம் கோடைக்கால விடுமுறையில் எங்கள் சபையானது காரைக்குடிக்கும், நாகப்பட்டினத்திற்கும் போய் வந்தது. மே மாதம் 25ஆம் தேதி புறப்பட்டுப் போய், ஜுன் மாதம் 27ஆம் தேதி திரும்பி வந்தோம். இடையில் காரைக்குடியில் ஏழு நாடகங்களும் நாகப்பட்டினத்தில் நான்கு நாடகங்களும் ஆடினோம். இவ்விரண்டு இடங்களிலும் நாங்கள் ஆடிய நாடகங்கள் மிகவும் சிலாகிக்கப்பட்டனவென்றே சொல்ல வேண்டும். அன்றியும் நல்ல தொகையும் வசூலாயிற்று. இந் நாடகங்களில் வந்த மொத்த வரும்படி 9250 - 12 - 6; செலவு 5710 - 14 - 0 போக, மிகுந்த லாபம் 3539 - 14 - 6 ரூபாய், சபையின் கட்டிட பண்டுக்குச் சேர்க்கப்பட்டது. இவ்வருஷத்திய தமிழ் கண்டக்டராகிய வி. வி. தேவநாத ஐயங்கார், எங்களுடன் வருவதற்கில்லாமற் போனபடியால், நான் இந் நாடகங்களுக்குக் கண்டக்டராக நியமிக்கப் பட்டு, அவ்வூர்களில் இந் நாடகங்களை நடத்தினேன்.

செட்டி நாட்டிற்கு எங்கள் சபை போய் அங்கு காரைக்குடியில் நாடகம் ஆட வேண்டுமென்று எங்களை உற்சாகப்படுத்தியவர், நாட்டுக்கோட்டைச் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த, எனது நண்பராகிய எம். ஆர். எம். ராமசாமி செட்டியாரே. அவரும், கே. எம். ஏ. ஆர். வி. பெத்தாச்சி செட்டியாரும் காரைக்குடியில் எங்களுக்காகச் செய்த உபசாரங்களும், நாடகங்களுக்காக எங்கள் பொருட்டு எடுத்துக்கொண்ட கஷ்டமும் செப்பத்தரமல்ல. தற்போது சென்னையிலிருந்து காரைக்குடிக்கு நேராக ரெயில் போகிறது. 1921ஆம் வருஷம் அப்படிப்பட்ட சௌகர்யம் கிடையாது. நாங்கள் சென்னையிலிருந்து புறப்பட்டுத் திருச்சிராப்பள்ளி போய்ச் சேர்ந்து, அங்கிருந்து ஐம்பது மைலோ அறுபது மைலோ மோட்டார் வண்டிகளில் புதுக்கோட்டை வழியாக, காரைக்குடிக்கும் போகவேண்டி வந்தது. திருச்சிராப்பள்ளியிலிருந்து காரைக்குடிக்கு இவ்வாறு போக, ராமசாமி செட்டியார் அவர்கள், எங்களுக்கெல்லாம் பல மோட்டர் வண்டிகளை ஏற்பாடு செய்திருந்தார். காரைக்குடிக்குப் போய்ச் சேர்ந்த தினம் நேர்ந்த ஒரு சங்கடத்தை இனி தெரிவிக்கிறேன், நாங்கள் ஐந்தாறு மோட்டார் வண்டிகளில் போனபோது, எல்லா வண்டிகளும் நெருக்கமாய்ச் சென்றால், முன் வண்டியின் வேகத்தினால் கிளம்பும் புழுதி, பின்னிருக்கும் வண்டிக்குக் கஷ்டத்தை விளைக்குமென்று, ஒவ்வொரு வண்டிக்கும் இடையில் கொஞ்ச தூரம் விட்டு, ஓட்டச் சொன்னோம். நாங்கள் போன பாதை அவ்வளவு நன்றாக செப்பனிடாதபடியால், அதிவேகமாய்ப் போவதற்கில்லாமற் போயிற்று. அன்றியும் இடையில் புதுக்கோட்டையில் தங்கி, சாயங்காலம் டீ சாப்பிட்டுவிட்டுப் போக வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்படியே புதுக்கோட்டையில் ம-ள-ௗ - ஸ்ரீ பி. வி. ரகுநாத அய்யர் பி.ஏ. பி.எல்., அவர்கள் வீட்டில் தங்கிப் போனோம். இவ்விடம் அவர் வீட்டில் இல்லாதபோதிலும் அவரது வயோதிகரான தாயார் எங்களுக்கு மிகவும் உபசரணை செய்தார்கள். இங்கு சற்றுத் தாமதித்துப் போனபடியால், இருட்ட ஆரம்பித்துவிட்டது. எப்படியாவது விளக்கேற்றுமுன் காரைக்குடி போய்ச் சேர வேண்டுமென்று நான் துரிதப்பட்டவனாய், எங்கள் மோட்டார் வண்டியை முன்பு விடச் சொன்னேன். நான் இருந்த வண்டியில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் ராமசாமி செட்டியாரும் இன்னும் யாரோ ஒரு அங்கத்தினரும் இருந்தனர். எங்களுக்குப் பின்னால் வந்த வண்டி ஒன்றில் என் குமாரன் வரதராஜனும் இன்னும் சில ஆக்டர்களும் இருந்தனர். பள்ளத்தூர் போகிறவரையில் ஏறக்குறைய எல்லா வண்டிகளும் ஒருங்கு சேர்ந்து போயின. பிறகு அவ்விடமிருந்து காரைக்குடிக்குப் போக, எல்லா மோட்டார் வண்டி ஓட்டுகிறவர்களுக்கும் வழி தெரியுமென்று எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு எங்கள் வண்டியை வேகமாய் விடும்படிக் கூற, அப்படியே எங்கள் டிரைவர் வேகமாய் விட, காரைக்குடிக்குச் சுமார் ஏழு மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். என் குமாரன் ஏறிய வண்டியும் இன்னொரு வண்டியும் தவிர மற்றக் கார்களெல்லாம் வந்து சேர்ந்தன. ஏழரை மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராகி இலை போட்டிருந்தார்கள். அவர்களும் வந்தவுடன் எல்லோரும் ஒன்றாய்ச் சாப்பிடலாம் என்று சொன்னோம். எட்டாயிற்று, ஒன்பதாயிற்று, பத்தாயிற்று, பதினொன்றாயிற்று - அந்த இரண்டு கார்களும் வந்து சேரவில்லை! மற்றவர்களை எல்லாம், “நீங்கள் சாப்பிடுங்கள்; அவர்களுடன் நான் சாப்பிடுகிறேன்” என்று சொல்லியும் அனைவரும், அவர்களெல்லாம் வாராமல் சாப்பிட மாட்டோம் என்று மறுத்து விட்டார்கள். எல்லோரும் கவலையுடனும் பசியுடனும் அந்த இரண்டு கார்களின் வரவை எதிர்பார்த் திருந்தோம். போதாக்குறைக்குப் பள்ளத்தூர் வழியாக வந்த வேறு இரண்டு மோட்டார் வண்டிகளில் வந்த மனுஷ்யர்களை விசாரித்ததில், வழியில் எங்களவர்கள் ஏறியிருந்த வண்டிகளைச் சந்திக்கவில்லையென்று கூறினார்கள். எனக்கு மாத்திரம் அல்ல; எல்லோருக்குமே இதனால் கவலை அதிகமாயிற்று. ஒருபுறம், என் புதல்வன் கதி என்னவாயிற்றோ என்கிற பயம்; மற்றொருபுறம், மற்ற ஆக்டர்களுக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ என்ற வருத்தம்; பன்னிரண்டு மணிவரையில் தைரியமாய்ப் பொறுத்தேன். அதற்கு மேல் பொறுக்க முடியாமல் முக வாட்டத்துடன் உட்கார்ந்து என் கைகண்ட ஔஷதம் நாடினேன் - எல்லோரும் சவுக்கியமாய் வந்து சேர வேண்டுமென்று பிரார்த்தித்தேன்! ‘கடந்த ஞானியரும் கடப்பரோ மக்கள் மேற் காதல்’ என்றார் பெரியார் ஒருவர். அவர்களுக்கே அப்படியிருக்க, கேவலம் இல்லறத்தில் உழலும் என்போன்ற பேதையர்க்குச் சொல்வானேன்!

பிறகு பன்னிரண்டு மணிக்கு அந்த இரண்டு வண்டிகளும் சாவகாசமாய் வந்து சேர்ந்தன! என்னவென்று விசாரிக்குமளவில், என் குமாரன் ஏறி வந்த வண்டிக்கு ஏதோ தடங்கல் நேரிட, அதைச் சரிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, பாதையை விட்டுப் பள்ளத்தூரில் மோட்டார் வண்டிகள் ரிப்பேர் செய்பவன் வீட்டிற்குப் போய் அதைச் சரிப்படுத்திக்கொண்டு வர இவ்வளவு நேரமாகியதென்றும், அவ் வண்டியைத் தனியாக விட்டு வர மனமில்லாமல், மற்றொரு வண்டியையும் நிறுத்த வேண்டி வந்ததென்றும் தெரிவித்தார்கள். அதன் பிறகு அன்றிரவு ஏறக்குறைய ஒரு மணிக்கு எல்லோரும் ஆறிப்போன உணவை உண்டோம்.

மறுநாள் வெள்ளிக்கிழமை நாங்கள் எல்லோரும் அங்கு ஒரு மைலுக்கப்பாலுள்ள நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களால் கட்டப்பட்ட அழகிய கோயில் ஒன்றுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்தோம். அங்கு நாங்கள் எங்கள் வழக்கப்படி நடத்திய முதல் நாடகம் ‘லீலாவதி - சுலோசனா.’ அன்று சாயங்காலம் நாங்கள் எல்லோரும் வேஷம் தரிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெரிய கூடையில், ஏறக்குறைய ஐந்தடி நீளமுள்ள, ஓர் ஆள் தூக்க முடியாத, இரண்டு ரோஜாமாலைகள் கொட்டகைக்கு வந்து சேர்ந்தன. இதென்ன விஷயம்? யாருக்காக இவை வந்தன என்று நான் மெல்ல விசாரித்தபொழுது, எங்களை இவ்வூருக்கு வரவழைத்த செட்டியார்கள், எனதாருயிர் நண்பர் ரங்கவடி வேலுவுக்கும் எனக்கும் போடுவதற்காக, இவைகளைத் தஞ்சாவூரிலிருந்து வரவழைத்ததாகக் கேள்விப்பட்டேன். “சுண்டைக்காய் காற்பணம் சுமைக் கூலி முக்காற் பணம்" என்றபடி மாலைகளின் செலவு ஒரு பக்கம் இருக்க, அவைகளைத் தஞ்சாவூரிலிருந்து கொண்டுவர மோட்டார் கார் செலவு அதைவிட அதிகம்; ஏறக்குறைய 45 ரூபாய் இதற்காகச் செலவு செய்ததாகத் தெரிந்தது. இருந்தும், மெல்ல அச் செட்டிமார்களுள் பிரதானமானவரிடம் போய், எங்கள் சபையின் கோட்பாடுகளுக்கு இது விரோதமானது. எங்களுக்குள் எல்லா ஆக்டர்களும் சமமாயிருக்க, நாங்கள் இருவர் மாத்திரம் மாலை மரியாதை பெறுவது நியாயமல்ல வென்று கூறிப் பார்த்தேன். அவர் அதற்கிசையாது, நாங்கள் உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறோம். இதில் தவறென்னவென்று தர்க்கிக்க ஆரம்பித்தார். அதன் மீது அவர் பிடிவாதமாய்ப் பேசுகிறார் என்று கண்டவனாய், எனது கடைசி நியாயமாக அப்படி எங்களை நிர்ப்பந்திப்பதால், மேடையின்பேரில் இதை வாங்க மாட்டோம் என்று மறுப்போம் என்று சொல்ல வேண்டியதாயிற்று. அதன்பேரில், நாங்கள் இவ்வளவு செலவு செய்து கஷ்டப்பட்டுக் கொண்டு வந்த ரோஜா மாலைகளை என்ன செய்வது என்று அவர் கேட்க, “அவைகளை மிகவும் நன்றாக உபயோகப்படுத்தும் மார்க்கம் நான் சொல்லுகிறேன். அவைகளை அப்படியே கோயிலுக்குக் கொண்டுபோய், ஸ்வாமி, அம்மனுக்குப் போட்டுவிடுங்கள்!” என்று பதில் சொன்னேன். அதன்மீது அவர், நான் சொன்னது நியாயம் என ஒப்புக்கொண்டு அப்படியே செய்தார். இந்தச் சிறிய விஷயத்தைப் பற்றி இங்கு நான் இவ்வளவு விவரமாய் எழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. ஆமெடூர் சபைகளில், முக்கிய ஆக்டர்களென்றும் முக்கியமல்லாத ஆக்டர்களென்றும் பிரிப்பது தவறு. எல்லோரையும் ஒரே சமமாகப் பாவிக்க வேண்டுமென்பது ஒருபக்கமிருக்கட்டும்; இம்மாதிரி ரோஜா மாலைகளை ஆக்டர்களுக்கு (அவர்கள் எவ்வளவு சிறந்த ஆக்டர்களாயிருந்த போதிலும்) மேடையின் பேரில் போடுவது யுக்தமல்லவென்பது என் அபிப்பிராயம். சாதாரணமாக எல்லா நாடகக் கம்பெனிகளிலும் இது வழக்கமாயிருக்கிறது தற்காலம்; அயன் ராஜபார்ட், அயன் ஸ்திரீபார்ட் என்று சொல்லப்பட்ட முக்கியமான ஆக்டர்கள் மேடையின் மீது தோன்றியவுடன், அவர்கள் எந்த வேஷத்திலிருந்தபோதிலும், என்ன சந்தர்ப்பத்தில் தோன்றிய போதிலும், சபையிலிருந்து அவர்களுக்கு வேண்டியவர்கள், அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டி ரோஜா முதலிய மலர்களால் ஆகிய மாலைகளைக் கொண்டு போய் அவர்கள் பாட்டையோ, பேச்சையே நிறுத்திப் போடுகிறார்கள். இது பெரும் தவறென்று எனக்குத் தோன்றுகிறது. ஹரிச்சந்திர நாடகத்தில் மயான காண்டம் நடக்கும்; அதில் ஹரிச்சந்திரன் தோட்டியாகத் தோன்றியவுடன் ரோஜா மாலை ஒன்று சரிகைகளுடன் அவன் கழுத்தில் கொண்டுபோய்ப் போடுவது! அல்லது சந்திரமதி தன் ஒரே மகனை இழந்ததற்காக அழுதுகொண்டு வரும் பொழுது மேற்கண்டபடி ஒரு மாலையை அவள் கழுத்தில் போடுவது; இவை எவ்வளவு ரசாபாசமாக இருக்கிறதென இதைப் படிக்கும் எனது நண்பர்களே கவனிப்பார்களாக. மாலை மரியாதை யாராவது ஆக்டர்களுக்குச் செய்ய வேண்டுமென்று விரும்பினால், நாடகக் கடைசியில் செய்வதே தகுதியாம்; அல்லது அதுவரையில் காத்திருக்க முடியாத சந்தர்ப்பமாயிருந்தால், ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையில் ஆக்டர்களை டிராப் படுதாவுக்கு முன்பாக வரவழைத்து, அந்த மரியாதையைச் செய்யலாம். இதையொட்டியே காரைக்குடியில் நாடகங்கள் ஆடினபொழுது, கடைசி நாடகம் ஆனவுடன், எங்கள் சபையிலுள்ள எல்லா ஆக்டர்களையும் அரங்கத்தில் நிற்கச் செய்து, அவர்கள் மனம் கோணாதபடி எல்லோர்க்கும் மாலை மரியாதை செய்ய ஒப்புக்கொண்டேன்.

இங்கு எங்கள் சபை நாடகங்கள் நடத்தியபொழுது எனக்கு விந்தையாகத் தோன்றிய இன்னொரு விஷயத்தை எடுத்தெழுதுகிறேன். இவ்வூரில் இந்த நாடகசாலை வழக்கமென்னவென்றால், ரிசர்வ் வகுப்புக்கு, ரிசர்வ் செய்யும் பெரிய மனிதர்கள் தங்கள் தங்கள் நாற்காலிகளை அனுப்ப வேண்டியதாம்; அதன்படியே எல்லோரும் சாய்வான போல்டிங் நாற்காலிகளை அனுப்பியிருந்தனர் போலும். முதல் நாடகமாகிய, ‘லீலாவதி-சுலோசனா'வில் நான் மூன்றாவது காட்சியில் முதன் முறை மேடையில் தோன்றி, அரங்கத்தைக் கடந்து சென்றபோது ஹாலில் பார்க்க, ரிசர்வ்ட் வகுப்பிலிருந்தவர்களெல்லாம் ஏதோ படுத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தது போல் தோன்றியது! இதென்ன விஷயம் என்று பிறகு நான் விசாரித்த பொழுதுதான் மேற்சொன்ன உண்மை எனக்கு வெளியாகியது. இந்தச் சாய்வு நாற்காலிகள் அதிக இடத்தை அடைத்துக் கொள்வதுமன்றி, மேடையின் மீதிருந்து பார்ப்பவர்களுக்கு அவற்றிலுள்ளவர்கள் ஏதோ நாடகத்தைக் கவனியாது தூங்குவது போல் தோன்றுகிறபடியால், இவ்வழக்கத்தை விட்டு, நேராக உட்காரும் பெரிய நாற்காலிகளை இவ்விடத்திலுள்ள பெரிய மனிதர்கள் உபயோகிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். இங்கு வந்த பெரிய மனிதர்கள் எங்கள் சபையின் நாடகங்களை மிகவும் நன்றாய்க் கவனித்து வந்தவர்கள் என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. அதற்கிரண்டொரு உதாரணங்கள் இங்கு எழுதுகிறேன். ‘லீலாவதி-சுலோசனா’ நாடகத்தில், சுலோசனா வேடம் தரித்த ரங்கவடிவேலு, ஸ்ரீதத்தனைக் கைவளை சீனில் க்ஷணநேரம் பார்த்த பார்வையை மெச்சி, ஹாலில் உட்கார்ந்திருந்த ஒரு பெரிய மனிதர் தன்னையுமறியாதபடி “சுட்டுவிட்டாளையா கண்ணால்!” என்று உரக்கக் கூவினார். இது சபையிலுள்ளவர்களுக்கும், எனக்கும் ஆனந்தத்தை விளைவித்தது. இதை இங்கு நான் எடுத்து எழுதியதற்கு இன்னொரு காரணமுண்டு. இக்காட்சியை நடத்தும் பொழுது அநேக நாடக சபைகளும், கம்பெனிகளும் ரசாபாசமாக்குகின்றனர். சுலோசனை ஸ்ரீதத்தனை ஒரு க்ஷணநேரம்தான் தன் கடைக்கண்ணால் பார்க்கவேண்டியது. அதை விட்டு அதிக நேரம் பார்த்தால் தவறாகும். ஆந்தை விழிப்பது போல் அறுபது விநாடி விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தால், அதைவிட ரசாபாசம் வேறு கிடையாது. இது ஒரு முக்கியமான கட்டம். சபையோர்களுக்கெல்லாம் இதனால் சந்தோஷத்தை உண்டு பண்ணலாம் என்றெண்ணி, அதிக நாழிகை பார்ப்பது, கற்புடைய ஸ்திரீயாகிய சுலோசனைக்கடுக்காது. அன்றியும் இந்தக் கட்டத்தில், ஸ்ரீதத்த வேஷதாரி செய்யும் ஒரு குற்றத்தினையும் எடுத்தெழுதுகிறேன். அந்த க்ஷணத்தில் சுலோசனையின் கண்களைத் தன் கண்கள் கொண்டு சந்தித்தவன், உடனே தன் பார்வையை மீட்டுக்கொண்டு தலை குனிந்தவனாய், சற்று அசைவற்று, பிறகு ஒருமுறை சுலோசனை போன பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, பிறகு தன் நண்பனாகிய கமலாகரனிருக்குமிடம் நாட வேண்டும். நான் இந் நாடகத்தை இதுவரையில் 50 முறைக்குமேல் ஆடிய பொழுதெல்லாம் இம்மாதிரியாகத்தான் நடித்திருக்கிறேன். இதை விட்டு, பட்டிக்காட்டான் ஒருவன் மதுரை மீனாட்சி கோயில் கிழக்குக் கோபுரத்தை கண்கள் பிதுங்க வாயைத் திறந்து கொண்டு அரை நாழிகை பார்ப்பதுபோல், சுலோசனையைப் பார்த்துக்கொண்டிருப்பது பெரும் தவறாகும். இம்மாதிரிப் பல கம்பெனிகளில் ஸ்ரீதத்தனாக நடித்த ஆக்டர்கள் நடித்ததை நான் பார்த்து விசனப்பட்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு ஆக்டர் இப்படி ஏறெடுத்துப் பார்ப்பது போதாதென்று, சுலோசனை விரைந்து போனவுடன், அங்கிருந்த ஒரு நாற்காலியின் பேரில் ஏறி, அவள் போன திசையை உற்றுப் பார்ப்பதை நான் என் கண்ணாரக் கண்டிருக்கிறேன். ஸ்ரீதத்தனை நான் சிருஷ்டித்த பொழுது அவனை இவ்வளவு மடையனாக்க முடியும் என்று கனவிலும் நினைத்தவனன்று. இனியாவது ஸ்ரீதத்த வேஷதாரிகள் இம்மாதிரியாக ரசாபாசம் செய்யாதிருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

இவ்விடத்தில் நாங்கள் ஆடிய இரண்டாவது நாடகமாகிய ‘மனோஹரன்’ நாடகத்தில் நான் மனோஹரனாக நடித்த பொழுது நேர்ந்த ஒரு சங்கதியை எழுதுகிறேன். இந்நாடகத்தில் இரண்டாவது காட்சியில் மனோஹரன் வசந்தசேனை தன் தாயாரை வைததற்காகக் கோபித்து அவளை வெட்டப்போகும் தருவாயில், அவன் தந்தையாகிய புருஷோத்தமன் தடுக்க, அவன் கரத்தினின்றும் திமிறிக் கொள்ளும் பொழுது, “உமது பத்தினியின் மானத்தை நீர் காப்பாற்றாவிட்டால், என் தாயாரின் மானத்தை நான் காப்பாற்றுகிறேன்” என்று கூறி அவ் வசந்தசேனையின் சென்னியைச் சேதிக்கப் போகிறான். அவ்வார்த்தைகளை நான் கூறி நடித்தபொழுது எல்லோரும் நிசப்பதமாயிருக்க, ஒரு செட்டியார் மாத்திரம் ‘பேஷ்’ என்று உரத்த சப்தமாகக் கூறினார். நான் அரங்கத்தில் நடித்த பல தருணங்களில் ஆயிரக்கணக்கான நபர்கள் அதை மெச்சிக் கரகோஷம் செய்திருக்கின்றனர். ஆயினும் அவர் அச்சமயம் கூறிய அவ்வொரு வார்த்தையானது அவைகளெல்லாவற்றையும்விட எனக்கு அதிக உற்சாகத்தைத் தந்தது.

ஆயிரம் பேர் சாதாரண ஜனங்கள் புகழ்வதைவிட, ரசிகன் ஒருவனுடைய புகழ்ச்சியே மேலாக மதிக்கப்படும் என்பதற்கு இதை ஓர் உதாரணமாக இங்கு என் அனுபவத்தில் எழுதினேன்.

இங்கு மனோஹரா நாடகத்தை நடத்தியதில் ஒரு விசேஷம் உண்டு. நாடக தினம் காலை, இந்நாடகத்தில் முக்கிய ஸ்திரீ பாகமாகிய பத்மாவதி தேவி வேடம் தரிக்கவேண்டிய எம். தேசிகாச்சாரியார் என்பவருக்கு 105 டிகிரி ஜுரம் வந்துவிட்டது. அவருக்குப் பித்தம் அதிகப் பட்டு, வாய்க்கு வந்தபடியெல்லாம் ஸ்மரணை தப்பிப் பேச ஆரம்பித்துவிட்டார்! இந்த ஸ்திதியிலிருக்கும் ஆக்டரை இரவில் பத்மாவதி வேடம் பூணச் செய்வது எப்படி என்று மனங் கலங்கியவனாய் யோசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், சாயங்காலம் 4 மணிக்கு, பிறகு நடக்க வேண்டிய நாடகங்களில் ஆடுவதற்காக, தற்காலம் என்னுடன் ஸ்திரீ வேடம் பூண்டாடும் எனது பிரிய நண்பர் கே.நாகரத்தினம் ஐயர் அகஸ்மாத்தாய் வந்து சேர்ந்தார். வந்தவுடன் தேசிகாச்சாரியார் இருக்கும் நிலைமையை அவருக்குக் கூறி, எப்படியாவது ஆபத்தில் உதவ வேண்டுமென்று சொல்லி, அவருக்குப் பத்மாவதியின் பாகத்தை ஒருமுறை படித்துக் காண்பித்தேன். அவரும் ‘ஆகட்டும்.’ என்று இசைந்து அப்பொழுதிருந்த இரண்டொரு மணி சாவகாசத்திற்குள்ளாக அத்தனை பெரிய பாகத்தை சற்றறேக்குறைய குருட்டுப் பாடம் செய்துவிட்டு, அன்றிரவு, பத்மாவதியாக மிகவும் நன்றாய் நடித்து எங்கள் சபையின் பெயரைக் காப்பாற்றினார். இவர் இங்ஙனம் கைகொடுத்திராவிட்டால், அன்று நாடத்தை நிறுத்தியாக வேண்டியிருக்கும் அல்லது ஆபாசமாகவாவது முடிந்திருக்கும். இவரைப் பற்றிப் பிறகு நான் அதிகமாக எழுத வேண்டி வரும்.

இந்த மனோஹரா நாடகம் நடந்தபொழுது, தற்காலம் ராஜா என்கிற பட்டப் பெயரைப் பெற்று, தமிழ் பாஷையின் அபிவிருத்திக்காகவே முக்கியமாக, “அண்ணாமலை யுனிவர்சிடி” என்கிற கல்விச் சங்கத்தைச் சிதம்பரத்தில் ஏற்படுத்தி, தமிழுக்கும் தமிழர்க்கும் பல உதவிகள் செய்து வரும் வள்ளலாகிய சா.ம.ம.அ. அண்ணாமலை செட்டியார் அவர்கள் தன் ஊராகிய கானாடுகாத்தானிலிருந்து வந்திருந்தார். அவர் இவ்வாறு எங்கள் சபையை உற்சாகப்படுத்தியதுமன்றி, சபையோரெல்லாம், ஒருநாள் சாயங்காலம் தனது வீட்டிற்கு வரவழைத்துப் பெரும் விருந்து செய்து வைத்தார். செட்டிமார்கள் செய்யும் உபசாரமும் விருந்தும் இத்தன்மையது என்று அறிய விரும்பினால், அதை நேரில் அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அது செப்பத் தரமல்ல. சாயங்காலச் சிற்றுண்டியாக எங்கள் ஒவ்வொருவர் இலையிலும் படைத்திருந்த பலஹாரத்தை ஒன்பது பெயர் சாப்பிட்டு மிகுதியாயிருக்கும்! இதைவிடப் பெரிய விருந்தை நானும் எனது சபை நண்பர்களும், திருவாங்கூர் போயிருந்த பொழுது மஹாராஜாவின் அரண்மனையில்தான் ஒருமுறை சாப்பிட்டிருக்கிறோம். (அதைப் பற்றிப் பிறகு நான் அவ்வூருக்குச் சபை போயிருந்த பொழுது நடந்த சங்கதிகளை எழுதுங்கால் தெரிவிக்கிறேன்.)

எனது வள்ளி நாடகமானது இங்காடப்பட்ட பொழுது, அது நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களுள் பலருடைய குல தெய்வத்தின் கதையாகையால், அவர்களால் மிகவும் ஆதரிக்கப்பட்டது. ஆயினும் அந்நாடகம் கொஞ்சம் சிறிதாயிருந்தது. சீக்கிரம் முடிந்து விட்டது என்று சிலர் கூறினர். இதன் பொருட்டு, மறு நாடக தினம் மார்க்கண்டேயர் நாடகமாடியபொழுது ஊர்வசியின் சாபத்தினின்றும் இரண்டு மூன்று முக்கியக் காட்சிகளையும் ஆட வேண்டி வந்தது.

இவ்வூரில் நாங்கள் நடத்திய கடைசி ஆட்டத்தின் முடிவில் இவ்வூராரால் எங்கள் சபை மெச்சப்பட்டு ஒரு வந்தனோபசாரப் பத்திரம் அளிக்கப்பட்டது. இவ்வூரை விட்டு நாங்கள் நாகப்பட்டணம் போவதற்குள் கொத்த மங்கலம் கா. மா. ஆ. ரா. லா. பெத்தாச்சி செட்டியார், தேனிப்பட்டி சொக்கலிங்கச் செட்டியார், மா. ரா.மா. ராமசாமி செட்டியார் முதலியோர் எங்களுக்கு விருந்துகள் அளித்தனர்; அவர்களனைவரும் எங்கள் சபைக்காகச் செய்த உதவியின் பொருட்டும், மரியாதையின் பொருட்டும் எங்கள் சபையும் நானும் மிகவும் நன்றியறிதலுடையவர்களா யிருக்கிறோம் என்பதை இதனால் தெரிவித்துக் கொள்கிறேன்.

காரைக்குடியை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்து வண்டி மூலமாக, அறந்தாங்கி போய்ச் சேர்ந்து அங்கிருந்து மறுநாள் நாகப்பட்டணம் போய்ச் சேர்ந்தோம்.

இவ்விடத்தில் சர் அகமத் தம்பி மரக்காயர் மூத்த குமாரனான ஏ.கே.எம். மெர்ஹியதீன் மரக்காயர் எங்கள் சபைக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்து வைத்திருந்தார்.

இவ்வூரில் நாங்கள் நாடகங்களாடிய நாடகசாலை கொஞ்சம் சிறியது; ஆயினும் மற்ற விஷயங்களிலெல்லாம் சௌகரியமாகத் தானிருந்தது. இங்கு நாங்கள் நடத்திய நான்கு நாடகங்களில் முதல் நாடகமாகிய மனோஹராவில் ஒரு பெரும் விபத்து நேரிடவிருந்தது. இரும்புச் சங்கிலிக் காட்சியில், நான் அவைகளை அறுத்துக்கொண்டு, புருஷோத்தம ராஜனை வெட்ட வாளை வீசியபொழுது, வாளின் பிடி மாத்திரம் என் கையில் நிற்க, கத்தி பாகமானது பிடுங்கிக் கொண்டு, சபையோர் மத்தியில் போய் வேகமாய் விழுந்தது. அன்றைத் தினம் போலீஸ் உத்தியோகஸ்தராயிருந்த ஒரு வெள்ளைக்காரருடைய மனைவி, தமிழ் நன்றாய்ப் பேச உணர்ந்த மாது, இந்த நாடகத்தைப் பார்க்க வந்து ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள்; அவர்கள் மடியில் போய் விழுந்தது! உடனே சபையில் பெரும் ஆரவாரம் உண்டாயிற்று. நான் அதைக் கவனிப்பதா, நான் நடிக்க வேண்டியதைக் கவனிப்பதா? “ஆகிறது ஆகிறது, ஸ்வாமி இருக்கிறார், பார்த்துக் கொள்வோம்” என்று எண்ணி, நான் நடிக்க வேண்டிய பாகத்தின்மீது கவனமுடையவனாய், அருகிலிருந்த ஒரு ஆக்டரின் மரக்கத்தியைப் பிடுங்கிக் கையில் வைத்துக்கொண்டு, அக்காட்சியில் நான் நடிக்க வேண்டிய என் பாகத்தை முடித்தேன். காட்சி முடிந்த பிறகு, டிராப் படுதா விட்டவுடன், வெளியில் வந்து மேடையின் மீதிருந்து, அந்த அம்மாளை விசாரித்து, தெய்வா தீனமாய் காயமொன்றும் படவில்லை என்று கண்ட பிறகே என் அச்சம் நீங்கியது! வேகமாய் விழுந்த கத்தி தெய்வ கடாட்சத்தினால் பக்கவாட்டில் விழுந்தது; செங்குத்தாக விழுந்திருக்குமாயின், அவர்களை நன்றாய்க் காயப்படுத்தியிருக்குமென்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இது நடந்த பிறகு இந் நாடகத்தில் நான் நடிக்கும் போதெல்லாம், ஆரம்பத்திலேயே கத்தியானது பிடியை விட்டு வராமலிருக்கிறதா என்று இழுத்துப் பார்த்துக் கொள்ளுகிறது வழக்கம்.

இவ்விடத்திலும் மார்க்கண்டேயர் நாடகம் ஆடிய பொழுது, அந்நாடகம் கொஞ்சம் சிறிதாயிருந்தபடியால், ஊர்வசியின் சாபத்திலிருந்து இரண்டொரு முக்கியமான காட்சிகளைச் சேர்த்து எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் ஆடினோம். கடைசி நாடகமாகிய வள்ளி மணமும் சீக்கிரம் முடிந்துவிட்டால் வந்திருக்கும் ஜனங்களுக்கு அதிருப்தியாயிருக்குமென்றெண்ணி, நான் எழுதிய “பேயல்ல பெண்மணியே” என்னும் நாடகத்தின் இடைக் காட்சிகளைச் சேர்த்து ஆடினோம். இது ஜனங்களுக்கு ரமிக்கவில்லை. “என்னடா இது, தெருக்கூத்து போல ஆடுகிறார்களே” என்று எண்ணினர். அதற்காக நாடகத்தின் கடைசியில், தெருக்கூத்துகளிலுள்ள ஆபாசங்களை எடுத்துக்காட்டவே அக்காட்சிகள் ஆடப்பட்டன என்று சபையோர்க்குத் தெரிவிக்க வேண்டி வந்தது.

இவ்வூரில் எங்கள் நாடகங்கள் நன்றாய் ஆதரிக்கப் பட்டன. ஜனங்களும் அதிகமாய் வந்திருந்தனர். ஆகவே இவ்வூரைவிட்டுப் பட்டணம் திரும்பியபொழுது சந்தோஷமாகத்தான் திரும்பினோம். நான் இவ்வூருக்கு, பிறகு இரண்டொரு முறை போயிருந்தபோது, விசாரித்ததில், நாங்கள் ஆடிய நாடகக் கொட்டகையில் ஏதோ “சினிமா” வந்து சேர்ந்ததாகக் கேள்விப்பட்டேன். வெளியூர்களில் நான் ஆடிய நாடகக் கொட்டகைகளை, மறுபடி சாதாரண காலத்தில் போய்ப் பார்ப்பதில் எனக்கு ஒரு திருப்தி; அந்தத் திருப்தியை இங்கு அடைவதற்கில்லாமற் போயிற்று.

இவ்வருஷம் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவினர் தெலுங்கில் “ராமதாஸ்” என்னும் நாடகத்தை நடத்தினர். இந்நாடகம் எங்கள் சபைக் காரியதரிசிகளில் ஒருவராய் அச்சமயம் இருந்த எனது நண்பர் டி. வெங்கடரமணையா என்பவரால் எழுதப்பட்டது. இந்நாடகம் தெலுங்குப் பிரிவினர் எங்கள் சபையில் நடத்திய நல்ல நாடகங்களில் ஒன்றாகும். இந்நாடகத்தில் ஒரு காட்சியில் சீதாப் பிராட்டியாகவும், ஸ்ரீராமராகவும் வரும்படி, எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவையும் என்னையும் கேட்டுக் கொண்டார். அதற்கிசைந்து அவ்வாறே நடித்தோம். நாங்களிருவரும் வரும் காட்சி நாடகத்தின் கடைசியில் வருகிறது. 5½ மணிக்கு நாடகம் ஆரம்பித்தால், 8½ மணிக்கு எங்கள் காட்சி வரும். நாங்கள் ஆக்டு செய்யும் காட்சி முழுதும் 5 நிமிஷம்கூட இருக்காது. இதில் எனது நண்பருக்குப் பத்துப் பதினைந்து வரிகளும் இரண்டு பாட்டுகளும் உண்டு. எனக்குப் பத்து பதினைந்து வரிகள் இருக்கும். இதற்காக மத்தியானம் 1 மணிக்கு வேஷம் போட்டுக்கொள்ள ஆரம்பித்து, நான்கு மணி சாவகாசம் மற்றவர்களுக்குக் கஷ்டம் கொடுத்து, பிறகு வேஷம் போட்டுக் கொண்டானவுடன் மூன்று மணி நேரம் அக்காட்சி வரும் வரையில் காத்துக் கொண்டிருக்க வேண்டியது! நடிப்பது 5 நிமிஷமான போதிலும், வேஷம் போட்டுக் கொள்ளும் கஷ்டத்திற்குக் குறைவில்லை! வள்ளி மணத்தில், நான் சுப்பிரமணியர் வேடம் பூண்ட கஷ்டத்தை முன்பே வரைந்திருக்கிறேன். அதைப்போலவே சற்றேறக் குறைய இதில் ஸ்ரீராமர் வேடம் பூணுவதும் மிகவும் கஷ்டமேயாம். போதாக் குறைக்கு முகத்திலும் கைகால்களிலும் நீல வர்ணம் பூசிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நீலமேக ஸ்யாம ராம் ராமனாகத் தோன்ற வேண்டி, “அரை நாள் கூத்தாடுவதற்காக ஆறுமாசத்திய மீசையை அழித்துக் கொண்டானாம்” என்று பழமொழியுண்டு. அதுபோல, “நான்கு வரிகள் பேசுவதற்காக நான்கு மணி நேரம் வேடம் போட்டுக் கொண்டானாம்” என்று சொல்லலாம். இந்த வேஷம் போட்டுக் கொள்வது ஒரு கஷ்டமிருக்க, அதை நாடகமானவுடன் அழிப்பது மற்றொரு பெருங் கஷ்டமாம்! அதிலும் நீலவர்ணத்தைப் போக்க, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல், உடம்பெல்லாம் எண்ணெயிட்டு நன்றாகத் தேய்த்தும் பிறகு சோப் போட்டு கழுவினால் தான் அவ்வர்ணம் போகும்!

இந்த ராமதாஸ் நாடகத்தை எனதுயிர் நண்பர் அந்திமக் காலம் வரையில், எப்பொழுது எங்கள் சபை போட்ட போதிலும், மேற்சொன்னபடி அவரும் நானும், சீதையும் ராமருமாக அதில் நடித்து வந்தோம். அவருக்குப் பிற்காலம் இரண்டொரு முறை இந்நாடகம் ஆடியபொழுது கே. நாக ரத்தினம் ஐயர் என்னுடன் சீதையாக வந்திருக்கின்றனர்.

மேற்சொன்ன ராமதாஸ் நாடகமன்றி இவ்வருஷத்தில் எங்கள் சபை தெலுங்குப் பிரிவு ஆடிய, காலஞ்சென்ற கிருஷ்ணமாச்சார்லு எழுதிய, ‘பிரமேளா’ என்னும் நாடகத்திலும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் வேஷம் பூண்டு நடித்திருக்கிறோம். இவ்வாறு இரண்டு மூன்று தெலுங்கு நாடகங்களில் நாங்களிருவரும் ஒன்றாய் சேர்ந்து நடிக்கவே, ‘அடடா! தெலுங்கில்கூட இவர்களிரு வரும் ஒன்றாய்ச் சேர்ந்து நடிக்கிறார்கள்’ என்று எங்களுடைய நண்பர்கள் ஏளனம் செய்தனர். இவ்வாறு தெலுங்கில் நாங்களிருவரும் நடிப்பது வேடிக்கையாயிருந்த போதிலும், இதில் ஒரு குறையுண்டென எண்ணுகிறேன். நாங்கள் இருவரும் தமிழர்கள். இரண்டு பெயரும் எவ்வளவுதான் தெலுங்கு படிக்கத் தெரிந்தவர்களாயிருந்தபோதிலும், இருவரும் சமஸ்கிருதம் கற்றவர்களானபடியால், தெலுங்கு அட்சரங்களை உச்சரிப்பதில் கஷ்டமுடையவர்களா யில்லாதிருந்தபோதிலும், தெலுங்கில் பேசும் போது ஏதாவது குற்றங்கள் வந்துவிடும். ஆகவே, இதைப்பற்றி என் அபிப்பிராயம் என்னவென்றால், கூடுமானவரையில் அந்தந்தப் பாஷையைத் தாய் பாஷையாக உடையவர்களே அந்தந்தப் பாஷையில் நடிக்க வேண்டுமென்பதே. அப்படி ஏதாவது நடிக்க வேண்டி வந்தால் சிறுபாகங்களை எடுத்துக் கொள்ளலாமே யொழிய, பெரிய பாத்திரங்கள் எடுத்துக் கொண்டு நடிப்பது தவறேயாகும். எனது நண்பர்களில் ஒருவர் ஏறக்குறைய தெலுங்கில் நன்றாய்ப் பேசக்கூடியவர். ஒரு தெலுங்கு நாடகத்தில் ஒரு பெரிய பாகத்தை எடுத்துக் கொண்டு நடித்தபொழுது, ஏதோ ஒன்றிரண்டு எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கவில்லையென்று ஹாலில் வந்திருந்த சில ஆந்திராபிமானிகள் அவரை ஏளனம் செய்ததை என் காதாரக் கேட்டிருக்கிறேன். அப்படி ஏளனம் செய்தவர்கள் மீது நான் குறை கூறமாட்டேன். தமிழ் நாடகமொன்றில், ஒரு தெலுங்கன் அவன் எவ்வளவு தான் கெட்டிக்காரனான ஆக்டராக இருந்தபோதிலும், தமிழில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தமிழ்ப் பதங்கள் உச்சரிப்பதில் ஏதாவது பிசகு செய்வானாயின், எனக்கு வெறுப்புண்டாகுமன்றோ? நம்முடைய அனுபவத்தைப் போல், மற்றவர்களுக்கும் இருக்குமென்பது நாம் கவனிக்கற்பாலது.

இவ்வருடம் நவம்பர் மாதம் 19ஆம் தேதி மலையாளத்தில் பெருமழையினால் உண்டான சேதத்தின் கஷ்டத்தை நிவர்த்திக்கும் பொருட்டு ஏற்படுத்திய பண்டின் பொருட்டு, “லீலாவதி-சுலோசனா” நாடகத்தை நடத்தினோம். இந் நாடகத்திற்கு மாட்சிமை தங்கிய கவர்னர் லார்ட் வில்லிங்டன் அவர்களும் அவரது மனைவியும் தமது ஆதரவை அளித்தனர். இந்நாடகத்திற்கு ரூபாய் 949 வந்தது. அதில் செலவு போக மிகுதி ரூபாய் 640-12-0 அந்த பண்டுக்கு அனுப்பினோம். விக்டோரியா ஹாலில் நாங்கள் ஆடிய நாடகங்களுள் இதுதான் எங்கள் சபைக்கு அதிகத் தொகையைக் கொணர்ந்தது.

எல்லா விஷயங்களையும் யோசிக்குமிடத்து இந்த 1921ஆம் வருஷம்தான் எங்கள் சபை மிகவும் உன்னத பதவி அடைந்திருந்தது என்று கூற வேண்டும்.


24ஆவது அத்தியாயம்

னி 1922ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.

இவ்வருஷம் எங்கள் சபையில் நூதனமாய் நடத்திய நாடகங்களில் குறிப்பிடத்தக்கன இரண்டாம்; முதலாவது, எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்த “வேணி சம்ஹாரம்” என்பது. இதில் எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு, பானுமதியாய் வேஷம் பூண, நான் துரியோதனனாக நடித்தேன். நான் சம்ஸ்கிருதத்தில் அநேக நாடகங்களைப் படித்திருக்கிறேன்; அவற்றுளெல்லாம் எனக்கு மிகவும் அதிருப்தியைத் தந்தது இந்த வேணி சம்ஹார நாடகமே. இது காரணம் பற்றியே என்னைப் பலர்