நாடக மேடை நினைவுகள்/24ஆவது அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து

24ஆவது அத்தியாயம்

னி 1922ஆம் ஆண்டின் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.

இவ்வருஷம் எங்கள் சபையில் நூதனமாய் நடத்திய நாடகங்களில் குறிப்பிடத்தக்கன இரண்டாம்; முதலாவது, எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்த “வேணி சம்ஹாரம்” என்பது. இதில் எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு, பானுமதியாய் வேஷம் பூண, நான் துரியோதனனாக நடித்தேன். நான் சம்ஸ்கிருதத்தில் அநேக நாடகங்களைப் படித்திருக்கிறேன்; அவற்றுளெல்லாம் எனக்கு மிகவும் அதிருப்தியைத் தந்தது இந்த வேணி சம்ஹார நாடகமே. இது காரணம் பற்றியே என்னைப் பலர் இதை மொழிபெயர்க்கும்படியாகக் கேட்டும், நான் அவ்வாறு செய்யாது விட்டேன். இந் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, பிறகு ஒரு முறையோ இரண்டு முறையோதான் எங்கள் சபையில் ஆடப்பட்டது.

மற்றொரு நாடகம், “பிரதாப ருத்ரீயம்” என்னும் தெலுங்கு நாடகம். இதில் எனது ஆருயிர் நண்பர் ரங்கவடிவேலு நடனமாடும் மாதாக ஆடினார். நான் இந்நாடகத்தில் ஒரு மகம்மதிய சிப்பாயாகவும், பிறகு, டில்லி சுல்தான் மந்திரிகளில் ஒருவனாகவும் நடித்தேன். இந்தப் பிரதாபருத்ரீயம் என்னும் நாடகம் பிறகு பன்முறை எங்கள் சபையோரால் நடிக்கப்பட்டது; அப்படி நடிக்கப்படும் போதெல்லாம், நான் மேற்சொன்ன இரண்டு வேடங்களையும் தரித்திருக்கிறேன். முக்கியமான வேஷங்களைத் தரிப்பதில் எனக்கு ஒருவிதமான சந்தோஷமிருக்க, இப்படிப்பட்ட சில்லரை வேடங்கள் தரிப்பதிலும் மற்றொரு விதமான சந்தோஷமுண்டு. இந்நாடகத்தில், ச. ராகவாச் சாரியார், மந்திரி யௌகந்தரராக நடித்தது மிகவும் மெச்சத் தக்கதென்று முன்பே குறித்திருக்கிறேன். ஆயினும் இவரைவிடச் சபையோரின் மனத்தையெல்லாம் கவர்ந்தவர் இதில் வண்ணானாக நடித்த பி.வி. ராமானுஜம் செட்டியாரே. இந்த வண்ணான் வேடம் நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான வேஷமாம். இந்த வேஷத்தில் செட்டியார் தத்ரூபமாய் நடித்து ஆந்திர தேசத்தாரும் புகழும்படிப் பெயர் பெற்றிருக்கிறார். செட்டியார் அவர்கள், தெலுங்கு நாடகங்களில் ஹாஸ்ய பாகங்களை ஆடுவதில், தமிழில் எப்படி எம். துரைசாமி ஐயங்கார் பெயர் பெற்றிருந்தனரோ, அப்படியே பெயர் பெற்றிருக்கிறார்.

இவ்வருஷம் கோடைக்கால விடுமுறையில் எங்கள் சபை திருநெல்வேலி, திருவனந்தபுரம் என்னும் இரண்டு ஊர்களுக்குப் போய் நாடகங்கள் ஆடித் திரும்பி வந்தது. சென்னையை விட்டு மே மாதம் 29ஆம் தேதி புறப்பட்டு, திருநெல்வேலியில் ஆறு நாடகங்களை நடத்தி, பிறகு திருவனந்தபுரம் போய் அங்கு 10 நாடகங்கள் ஆடிப் பிறகு ஜுன் மாதம் 8ஆம் தேதி திரும்பி வந்தோம். இதுதான் எனதாருயிர் நண்பர் கடைசி முறை வெளியூர் என்னுடன் போய் வந்த பிரயாணமாகையால், இதைப்பற்றிச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன்.

திருவனந்தபுரத்திற்குப் போகவேண்டுமென்று யார் முதலில் பிரேரேபணை செய்தார்களோ எனக்கு ஞாபகமில்லை. நான் செய்யவில்லை யென்பது நிச்சயம். ஏனெனில், இந்த வார்த்தை முதலில் எங்கள் நிர்வாக சபையார் முன்னிலையில் வந்தபோது, அவ்வளவு தூரம் செலவு செய்துகொண்டு போய் வருவதென்றால் சபைக்குக் கட்டி வருமா என்று நான் சந்தேகப்பட்டது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. அன்றியும் என்ன காரணத்தினாலோ, இதுவரையில், வெளியூருக்குச் சபை போவதென்றால் மிகவும் குதூகலத்துடன் ஆமோதித்த எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, தனக்கு அங்கு போவது இஷ்டமில்லை யென்று எனக்குத் தெரிவித்தார். அவரது அபிப்பிராயம் இப்படியிருந்தபோதிலும், நிர்வாக சபையில் ஒருமுறை அங்கு போவது தீர்மானிக்கப்பட்ட பிறகு நாம் சபையுடன் போய்த்தான் தீரவேண்டுமென்று நான் அவரை வற்புறுத்தினேன். அதன் பேரில் என் வார்த்தைக்கிணங்கி ஒப்புக் கொண்டார். திருவனந்தபுரம் போகும் போது வழியில் திருநெல்வேலியிலும் சில நாடகங்கள் ஆடவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இச்சமயம் எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் தமிழ் கண்டக்டராயிருந்தார். அவர்தான் இவ்விரண்டு இடங்களுக்கும் வருவது அசாத்தியம், ஒருக்கால் தான் சில நாடகங்களுக்கு மாத்திரம் வந்து ஆக்டு செய்ய முடியும், வேறு யாரையாவது இந்தப் பிரயாணத்திற்குக் கண்டக்டர் இன்சார்ஜாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன்பேரில் சில ஆக்டர்கள் ரகசியமாய் எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயரைக் கண்டக்டராக நியமிக்க வேண்டுமென்று பேசிக் கொண்டார்களாம். இதனை எப்டியோ அறிந்த எனதுயிர் நண்பர் என்னிடம் வந்து, “இப்படி இவர்களெல்லாம் தீர்மானித்திருக்கிறார்களாம், அவர்கள் போய்வரட்டும்; நாம் போகாது நின்று விடலாம்” என்று சொன்னார். அதன் பேரில் அவருக்கு நான் சமாதானம் சொல்லி, ‘அவர்கள் அப்படிச் செய்தபோதிலும், நாம் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டும். இந்தப் பிரயாணத்தில் வெளியூர்களில் ஏறக்குறைய ஒரு மாதத்தில் 15 நாடகங்களை ஆடுவதென்றால் மிகவும் சிரமமான காரியம்; எனக்கோ வயதாகிறது; இனி இக்கஷ்டம் என்னால் சுமக்க முடியாதென்று நானே வேண்டாம் என்று சொல்லலாமென்றிருந்தேன். மற்றவர்களுக்கும் வேறு கண்டக்டரை நியமித்துக்கொள்ள அபிப்பிராயம் இருந்தால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. “வியாதிக்காரன் விரும்பிய ஔஷதமும் பாலே, வைத்தியன் கொடுத்த ஔஷதமும் பாலே” என்கிற பழமொழிப்படி, நான் விரும்பியதும் அவர்கள் விரும்பியதும் ஒன்றேயாயது மிகவும் நலமாயிற்று. எனக்கென்னவோ, இப் பிரயாணம் சபைக்கு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொண்டு வருமென்று மனத்திற்படுகிறது. ஆகவே, இதனால் வரும் “நற்பெயரோ கெட்ட பெயரோ அவர்கள் பொறுப்பாக இருக்கட்டும். வெளியூர்களுக்குப் போய் நாடகங்கள் ஆடி, கீர்த்தியும் லாபமும் பெற்று வருவதன் கஷ்டம் மற்றவர்களுக்கும் தெரிந்தால்தானே நல்லது” என்று நியாயங்கள் எடுத்துக் கூறி, அவர் மனத்தைத் திருப்பினேன். கடைசியில் உங்களுக்காக நான் ஒப்புக் கொள்கிறேன்; இதனால் பல கஷ்டங்கள் வருமென்று எனக்குத் தோன்றுகிறது என்று சொன்னார். அவர் வாக்கு எவ்வளவு தூரம் பலித்தது என்பதை இனி நான் எழுதப் போகிறதைப் படிப்பவர்கள் அறிவார்கள்.

சென்னையிலிருந்து சபை புறப்படுவதற்கு இரண்டு நாள் முன்பாக, திடீரென்று என் கழுத்தும் முகமும் வீங்கி ஜுரமுண்டாயிற்று. இதென்ன விபரீதம் என்றெண்ணி, உடனே என் குடும்ப வைத்தியரை வரவழைத்து எப்படியாவது என்னை சுவஸ்தப்படுத்தி இரண்டு தினங்களுக்குள், திருநெல்வேலி போகும்படிச் செய்ய வேண்டும் என்று வேண்டினேன். அவர் சந்தேகப்பட்டு, மேஜர் எல்விஸ் துரையை வரவழைத்து, அவருடன் கலந்து பேசிப் பிறகுதான் எனக்குப் பதில் உரைக்கக்கூடுமென்றார். அவர் என் வியாதி, தீராத மிகவும் அபாயகரமான வியாதியாகிய பிளட் பாய்சனிங் (blood poisoning) ஆக இருக்கலாமோ என்று சந்தேகப்பட்டதாகப் பிறகுதான் என்னிடம் தெரிவித்தார். என்ன செலவானாலும் பெரிதல்ல; அந்தப் பெரிய ஆங்கில வைத்தியரை வரவழையுங்கள் என்று சொன்னேன். அதன்பேரில் மேஜர் எல்விஸ் வந்து பார்த்து, இது அப்படிப்பட்ட அபாயகரமான வியாதியல்ல, மம்ப்ஸ் (Mumps) என்னும் வியாதி; இது நாலாநாள் சொஸ்தமாகும், சற்றும் பயப்பட வேண்டாம்; இது கொஞ்சம் தொத்துவியாதியானபடியால், நாலாவது தினம்தான் பட்டணம் விட்டுப் போகலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். அப்போது எனக்கு 104 டிகிரி ஜுரம் இருந்தது. உடனே என் தேகஸ்திதியை எழுதி டாக்டர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்கிற விவரத்தை சபைக்குத் தெரிவித்தேன். உடனே சில அங்கத்தினர்கள் அன்றிரவு என்னை வந்து பார்த்தார்கள். அவர்களில் சிலர் நான் ஏதோ சாக்குச் சொல்லுகிறேன் என்று சந்தேகித்தனர் போலும். பிறகு உண்மையில் நான் மிகவும் அசௌக்கியமாயிருப்பதைக் கண்டறிந்தவர்களாய் என்ன செய்வது என்று என்னைக் கேட்டதற்கு, ‘என்னால் சபைக்குத் தடங்கல் ஒன்றும் வேண்டாம். உங்களுக்கு எது யுக்தமாயிருக்கிறதோ அப்படியே செய்யுங்கள்’ என்று சொன்னேன். அதன் பேரில் சத்தியமூர்த்தி ஐயர், முதல் நாடகமாக வைத்துக்கொண்ட லீலாவதி-சுலோசனாவை மாற்றி, ‘நீ வராத மார்க்கண்டேயர் நாடகம் வைத்துக் கொள்கிறோம்’ என்றார். ‘அப்படியே செய்யுங்கள்’ என்று பகர்ந்தேன். மறுநாள் நானும் ரங்கவடிவேலுவும் தவிர மற்றவர்களெல்லாம் புறப்பட்டுப் போயினர். அச்சமயம் ரங்கவடிவேலு திருக்கழுக்குன்றம் போயிருந்தார் ஏதோ காரணத்தினால். அங்கிருந்து செங்கல்பட்டுக்கு வந்து ரெயிலில் சபையோருடன் கலந்துகொண்டு திருநெல்வேலிக்குப் போகும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கு வருத்தப்படப் போகிறாரோ என்று என் தேகஸ்திதியைப் பற்றி நான் அவருக்கு எழுதவில்லை . ஆகவே, தானும் திருநெல்வேலிக்குப் புறப்பட்டுப் போக, செங்கல்பட்டில் வந்து சபையோர் இருந்த ரிசர்வெட் காம்பார்ட்மெண்டில் ஏறின பிறகுதான், அவருக்கு என் தேகஸ்திதியும் நான் அந்த வண்டியில் இல்லாததும் தெரிந்தது. “இதைக் கேட்டவுடன், நான் இடி விழுந்தவன் போல் ஆனேன்! இன்னது செய்வது என்று தெரியாது திகைத்து நின்றேன்” என்று பிறகு அவர் எனக்குக் கூறிய வார்த்தைகளை இங்கு எழுதுகிறேன். பிறகு, ஏற்றிய தன் சாமான்களையெல்லாம் இறக்கி, மற்றவர்களை யெல்லாம் வழியனுப்பி விட்டு, தான் உடனே சென்னைக்கு வந்து அன்றிரவு என்னைக் கண்டார். கண்டதும் என் தேக ஸ்திதியைப் பார்த்துத் துக்கித்தார். “இதற்குத் தமிழில் புட்டாளம்மை என்று சொல்லுவார்கள். இரண்டு மூன்று நாட்களுக்குள் இது இறங்கிவிடும்; பிறகு நாம் திருநெல்வேலி போய்ச் சேரலாம்” என்று அவருக்குத் தைரியம் சொன்னேன். அப்படியே மூன்றாம் நாள் அம்மை இறங்கவே வைத்தியர் அனுமதி பெற்று, ஒரு பெட்டி நிரம்ப நான் சாப்பிட வேண்டிய மருந்து முதலியவைகளுடனும் ரங்கவடிவேலுடனும் புறப்பட்டுப் போனேன், திருநெல்வேலிக்கு. மூன்று நாட்களாக மெல்லின்ஸ்பூட் தவிர வேறு ஆகாரம் இல்லாமையால், மிகுந்த பலஹீனமான ஸ்திதியிலிருந்தேன். ரெயிலிலும் இந்த ஆகாரம்தான். ஸ்டேஷனிலிருந்து புறப்படும் பொழுது என்னைக் கண்ட சில சிநேகிதர்கள், “என்ன சம்பந்தம், இந்த ஸ்திதியிலா, நீ திருநெல்வேலிக்குப் போய் நாடகம் ஆடப்போகிறாய்!” என்று கேட்டார்கள். ‘ஸ்வாமியிருக்கிறார் என்னைக் காப்பாற்ற’ என்று நான் அவர்களுக்குத் தைரியம் சொல்ல வேண்டியதாயிற்று. இப்பொழுதாவது ரயில் கொஞ்சம் சீக்கிரமாகப் போகிறது. அப்பொழுது சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகச் சரியாக 24 மணிநேரம் பிடித்தது. என்னுடைய சுயநன்மையை மாத்திரம் நான் கவனித்திருப்பேனாயின், நான் அப்பிரயாணம் செய்தே இருக்க மாட்டேன். ஆயினும், எங்கள் சபைக்கு என்னால் ஒரு கஷ்டமும் நேரிடக் கூடாதென்றும், எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு நான் - நின்றுவிட்டால், ரங்கவடிவேலு தானும் போவதற்கில்லையேயென்று வருத்தப்படுவாரென்றும் கருதினவனாகி, என் தேக சிரமத்தைப் பாராமல் நான் பிரயாணம் செய்தேன். மறுநாள் சாயங்காலம் திருநெல்வேலி ஸ்டேஷனில் போய் நான் இறங்கிய பொழுது, எனக்கு முன்பாக அங்கு போய்ச் சேர்ந்தவர்களுள் டி. வெங்கடரமணய்யாவும், டி.எல். ராஜகோபால ஐயரும் மாத்திரம் ஸ்டேஷ்னுக்கு வந்திருந்தனர். மற்றவர்களெல்லாம் சௌக்கியமாக இருக்கிறார்களா என்று நான் வினவிய பொழுது, அவர்களுள் ஒருவர், ஸ்டேஷனுக்கு வந்து என்னை வரவேற்க விரும்பிய மற்ற ஆக்டர்களை அப்படிச் செய்யவேண்டியதில்லை யென்று தடுத்ததாக இரகசியமாகத் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் எனக்குக் கோபம் வரவில்லை. கொஞ்சம் துக்கம்தான் வந்தது. அதுவும் என் பொருட்டல்ல - “அந்தோ! இவ்வுலகில் யார் தப்புச் செய்தாலும் அதற்குத் தக்க பிராயச்சித்தம் அனுபவிக்க வேண்டி வருமே. இதையறியாதிருக்கின்றனர் அநேகரே” என்றே எனக்குத் துயரம் தட்டியது. இம்மாதிரியான சந்தர்ப்பங்களிலெல்லாம், ஒரு மனிதனுடைய கடமையென்னவென்றால், தன்மீது ஏதாவது தவறிருக்கிறதா என்று ஆய்ந்து பார்க்க வேண்டியது முதலில்; பிறகு தன் மீது தவறில்லை என்று கண்டறிந்தால், அத் தவறு இழைத்தவர்மீது கோபங்கொள்ளாது, அவர் பொருட்டுத் துக்கப்படுவதே நற்குணமெனும் உண்மையை என்னுடைய பால்யத்தில் அறியாது 50ஆவது வயதில் கண்டேன்! இவ்வாறு என் மனத்தைக் கோபத்தினின்றும் திருப்பி, நல்வழிக்குக் கொண்டு வந்தது எனக்கு மிகவும் நன்மை அளித்திருக்கிறது; அந்நன்மையை இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களும் பெறுவார்களாக என விரும்பியே இதை இங்கு எழுதலானேன். இச்சந்தர்ப்பத்தில் தெய்வப் புலமை வாய்ந்த பொய்யாமொழிப் புலவராகிய திருவள்ளுவர் எழுதிய குறள் எனக்கு நினைவிற்கு வருகிறது. “இன்னாசெய்தாரை யொறுத்தல், அவர் நாண நன்னயஞ் செய்து விடல்” என்பதன் உண்மையை என் சிறு வயதிலேயே அறியாமற் போனது என் குற்றமாம். இக் குறளினடியில் பரிமேலழகர், “விடல்” என்கிற பதத்திற்கு மிகவும் அருமையாய் அர்த்தம் எழுதியிருக்கிறார். தமிழ்ப் பாஷையில் விருப்பமுள்ள இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அவ்வுரையைப் பார்த்து அறிந்து கொள்வார்களாக.

ஸ்டேஷனிலிருந்து அருகாமையிலிருந்த எட்டயபுரம் ஜமீன்தாருடையதான எங்கள் விடுதிக்குப் போனவுடன், சந்தோஷமாகக் கலந்து பேசி, அவர்களையெல்லாம் சீக்கிரம் வேடம் பூணுவதற்காக நாடக சாலைக்குப் போகும் படி தூண்டினேன். அப்பொழுது அவர்களுட் சிலர் ஏதோ ரகசியமாய்ப் பேசிக்கொண்டு, நீங்களிருவரும் (நானும் ரங்கவடிவேலுவும்) நாடகசாலைக்கு இன்று கொஞ்சம் வந்து போக வேண்டும் என்று வற்புறுத்தினர். எனக்கு அசௌக்கியமான உடம்புடன் பிரயாணம் செய்ததனால் மிகவும் இளைப்பாயிருக்கிறதெனச் சொல்லியும் அவர்கள் பலவந்திக்கவே, இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறதென, அவர்களுள் ஒருவரை ஒரு பக்கமாக அழைத்துக்கொண்டு போய் என்ன சமாச்சாரம் என்று மெல்ல விசாரிக்க, அவர் கீழ்வருமாறு தெரிவித்தார்: “இந்த ஊர் இரண்டு கட்சியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது, பிராமணாள் கட்சியென்றும் பிராமணர் அல்லாதார் கட்சியென்றும். இரண்டாவது கட்சியார், நீங்களெல்லாம் (என்னையும், எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவையும் குறிப்பிட்டு) வருகிறீர்களென்று, கோயிலிலிருந்து யானை, வாத்தியம் முதலிய மரியாதைகளுடன் உங்களையெல்லாம் ஸ்டேஷனிலிருந்து ஊர்வலமாக அழைத்துப் போகவேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார்கள். கடைசி நிமிஷத்தில் நீங்கள் இருவரும் வரவில்லையென்று கண்டறிந்து அந்த ஏற்பாடுகளையெல்லாம் ரத்து செய்து விட்டனர். இப்பொழுதும், அநேகர் நீங்கள் ஏதோ சபையின்மீது மனஸ்தாபப்பட்டு இவ்வூருக்கே வரவில்லை யென்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். “அவர்கள் வராவிட்டால் நாங்கள் நாடகம் பார்ப்பதற்கு வரமாட்டோம்” என்று கட்டுப்பாடாயிருக்கிறார்களாம். ஆகவே, நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பது இந் நகரவாசிகளுக்குத் தெரிய வேண்டும். அதற்காகத்தான் உங்களை இன்றிரவு எப்படியாவது கஷ்டத்தைப் பாராமல் கொஞ்ச நேரமாவது நாடக சாலைக்கு வந்து போகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறோம்” என்று தெரிவித்தார். இதென்ன தர்மசங்கடமாயிருக்கிறது! நானாவது சபையின்மீது மனஸ் தாபப்படுவதாவது என்று எண்ணினவனாய், அப்படிப்பட்ட எண்ணத்தை நீக்க வேண்டியது என் கடமை என்று கருதி, என் தேக அசௌக்கியத்தையும் பாராமல், முற்றிலும் வாடாத முக வீக்கத்துடன், ஒரு சால்வையைப் போர்த்துக் கொண்டு நாடகசாலைக்குப் போய்ச் சேர்ந்தேன். என் நண்பருடன் காற்று அதிகமாய்ப் படாதபடி வேஷம் தரிக்கும் இடத்தில் நான் உட்கார்ந்திருக்க, “அது உதவாது, வெளியில் வந்து உட்கார வேண்டும்” என்று எனது நண்பர்கள் பலவந்திக்க, நாடக ஆரம்பத்திற்குச் சில நிமிஷங்களுக்கு முன், நானும் ரங்கவடிவேலுவும், ஹாலில் வந்து உட்கார்ந்திருந்து, அங்கு நாங்கள் கண்ட எங்கள் பழைய நண்பர்கள் சிலருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் பிறகே எங்கள் ஜாகைக்குப் போனோம்.

நாங்கள் ஆடுவதற்கில்லாதபடியால், எங்கள் சபை சாதாரணமாக வைத்துக் கொள்ளும் முதல் நாடகமாகிய லீலாவதி-சுலோசனாவை மாற்றி, அன்று மார்க்கண்டேயர் நாடகம் வைத்துக் கொண்டார்கள். இந்த மார்க்கண்டேயர் நாடகத்திற்கு மிகவும் குறைந்த வரும்படி வந்தது. ஜனங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைவிட ஜனங்களில்லா நாற்காலிகள் அதிகமாயிருந்தன.

இதற்கு இரண்டாம் நாள் லீலாவதி-சுலோசனா நாடகத்தில் எனதுயிர் நண்பரும் நானும் ஆடினோம். இந் நாடகத்திற்கு, மார்க்கண்டேயர் நாடகத்திற்கு வந்ததைவிட மூன்று நான்கு பங்கு அதிகமாக ஜனங்கள் வந்தனர். இங்கு நடத்திய மற்ற நாடகங்கள் வள்ளி, சாரங்கதரன், நந்தனார், மனோஹரன். இந் நாடகங்களில், எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு ஆடிய நாடகங்களின் வரும்படியையும், அவர் ஆடாத நாடகங்களின் வரும்படியையும் ஒத்துப் பார்க்குமிடத்து அவர் ஒருவரால் எங்கள் சபைக்கு மிகவும் அதிக வரும்படி வந்தது என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். இதனால் எங்கள் சபையின் சில ஆக்டர்களுக்கு அவர் மீது கொஞ்சம் பொறாமை யுண்டாயிற்று என்று திருநெல்வேலியில் நேரிட்ட சில வியவஹாரங்களினால் ஊகிக்க வேண்டியவனாயிருக்கிறேன். அவைகளை இங்கு எழுதுவதனால், என்னுடைய சில நண்பர்களுக்கு வருத்தமுண்டாகுமேயொழிய இதைப் படிக்கும் எனது நண்பர்களுக்கு ஒரு பிரயோஜனமும் உண்டாகாதென நம்பி, அவைகளை இங்கு வரையாதொழித்தேன். இம்முறை திருநெல்வேலிக்குப் போயிருந்த பொழுது ஒருநாள் நாங்கள் எல்லோரும் திருச்செந்தூருக்குப் போய், சுப்பிரமணிய ஸ்வாமி தரிசனம் செய்து சந்தோஷமடைந்தது மிகவும் நன்றாய் என் மனத்தில் படிந்திருக்கிறது. அன்றியும் இவ்வூரிலிருந்தபொழுது எமது நண்பர்களாகிய கோமதிநாயகம் பிள்ளையவர்கள், கலியாணசுந்தரம் பிள்ளையவர்கள் பி.ஏ., பி.எல்., சாது கணபதி பந்துலு அவர்கள் பி.ஏ.,பி.எல்., சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் பி.ஏ., பி.எல்., ஆகியவர்கள் எங்களுக்கு விருந்தளித்ததை நன்றியறிதலுடன் இங்கு எழுதுகிறேன்.

இச்சமயம் திருவாங்கூர் மஹாராஜாவுக்கு என் நண்பர் மகா-ள-ள-ஸ்ரீ திவான்பஹதூர் டி. ராகவையா என்பவர் மந்திரியாக இருந்தார். இவர் அநேக வருஷங்களாக எங்கள் சபையின் அங்கத்தினராக இருந்தவர்; எங்கள் காரியதரிசிகளிலொருவராகிய டி. வெங்கடரமணய்யாவுக்கு பந்து; எனக்கு மிகவும் தெரிந்த நண்பர். இவருக்கு நாங்கள் முதலில் எழுதியபொழுது சபைக்கு வேண்டிய உதவியைச் செய்வதாக இவர் எங்களுக்குக் கூறிய உறுதிமொழியே, எங்கள் சபை இவ்வூருக்குப் போய் நாடகமாட வேண்டுமென்று எங்களை உந்தியது.

திருவனந்தபுரத்தில் நாங்கள் ஆட வேண்டிய நாடக சாலைக்குப் பக்கத்திலேயே எங்களுக்கு இருப்பிடம் கிடைத்தது; இது எங்களுக்கு மிகவும் சௌகர்யமாயிருந்தது. இவ்வூரில் நாங்கள் ஆடிய நாடகங்கள் மொத்தம் பத்தாம்; ஒன்பது மேற்குறித்த நாடகசாலையிலும், ஒன்று மகாராஜாவின் அரண்மனையிலும். இங்கு முதல் நாடகமாக “லீலாவதி-சுலோசனா” என்பதை எங்கள் வழக்கம்போல் ஆடினோம். அதற்கு நாங்கள் எண்ணிய அளவு அதிக வசூலாகாவிட்டாலும் நல்ல வசூலே ஆயிற்று. இரண்டாவது நாடகமாகிய மார்க்கண்டேயர் நாடகத்திற்கு மிகவும் குறைந்த வசூலாயிற்று. மூன்றாவது நாடகமாகிய, “மிருச்ச கடி” என்பதற்கு அதுகூட இல்லை . இந்த மிருச்சகடி சம்ஸ்கிருதத்திலாடப்பட்டது. சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முன்பே, சம்ஸ்கிருதத்தில் இவ்விடம் நாடகம் வைத்துக் கொண்டால், ஜனங்கள் அதிகமாக வருவது சாத்தியமல்லவே என்று நான் சந்தேகப்பட்டேன். ஆயினும் சம்ஸ்கிருத நாடகத்தை ஆட வேண்டுமென்று இச்சை கொண்ட சிலர், திருவனந்தபுரத்தில் எல்லோருக்கும் சம்ஸ்கிருதம் நன்றாய்த் தெரியும். ஆகவே, சென்னையை விட அங்கு அதிக ஜனங்கள் வருவார்கள் என்று கூறினார் கள். அவர்கள் கூறியது தவறாயிற்று; நான் எண்ணியதுதான் சரியாயிற்று என்று நிரூபிப்பதற்காக இதை நான் எழுதவில்லை. இப்படிப்பட்ட விஷயங்களிலெல்லாம் அனுபவம் இல்லாதவர்கள், அனுபவம் உள்ளவர்களுடைய அபிப்பிராயத்திற்குக் கொஞ்சம் கௌரவம் கொடுக்க வேண்டுமென்று என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே இதை எழுதலானேன்.

இதற்கடுத்த நாடகமாக ஹரிச்சந்திர நாடகம் ஆடப்பட்டது. இதற்கு வரும்படி மிகவும் குறைவாக வந்தது. இந்த நாடகத்தின் வரும்படியைப் பற்றி இவ்வளவு முக்கியமாக நான் குறிக்கவேண்டிய காரணம், இதை வாசிக்கும் எனது நண்பர்கள் சீக்கிரம் அறிவார்கள். இதற்கடுத்த நாடகம் “காலவ ரிஷி.” இந்நாடகத்திற்குச் சுமாராக வசூலாயிற்று. இங்கு குறிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், முதல் நாடகமாகிய, “லீலாவதி-சுலோசனா"வில் ஆடிய பிறகு எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு இதில்தான் ஆடினார். அதன்மீது எங்கள் நண்பர்களில் சிலர், ரங்கவடிவேலு ஆடினால்தான் வசூல் அதிகமாக ஆகிறார் போலிருக்கிறது என்று பேசத் தலைப்பட்டனர். இது மற்றவர்களுக்குத் திருப்திகரமாயில்லையென்று நான் நினைக்க வேண்டியவனாயிருக்கிறேன். அவ்வாறு நான் எண்ணியது சரியோ தப்போ என்று பின் வருவதைப் படித்து இதை வாசிக்கும் எனது நண்பர்கள் தீர்மானிக்கலாம். இதற்கப்புறம் நடத்திய நாடகங்கள் பீஷ்மப் பிரதிக்ஞையும் நந்தனாருமாம். இவைகளிரண்டிலும் எனதுயிர் நண்பர் ஒரு பாத்திரமும் எடுத்துக் கொள்ளவில்லை. பீஷ்மப் பிரதிக்ஞைக்கு இங்கு நடத்திய நாடகங்களுளெல்லாம் மிகவும் குறைந்த வசூலாயிற்று. எனக்கு ஞாபகமிருக்கிறபடி நாற்பது ரூபாயோ நாற்பத்திரண்டு ரூபாயோ வந்தது. அன்றியும், இந்நாடகத்தில் ஒருவரும் சரியாகத் தங்கள் பாடங்களைப் படிக்காதது மிகவும் ஆபாசமாயிருந்தது. எனதுயிர் நண்பர் ஜ்வரத்தினால் நாடகசாலைக்கு வராதிருக்கவே, நான் நாடகம் ஆரம்பமானவுடன் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு, அவரைக் கவனிக்க, எங்களிருப்பிடம் போய்ச் சேர்ந்தேன். நாடகம் முடிந்தவுடன், அந்நாடகாசிரியராகிய எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் என்னிடம் வந்து, தன்னுடைய நாடகமானது மிகவும் ஆபாசமாய் நடிக்கப்பட்டதென்று கண்ணீருடன் குறை கூறினார். இதை நான் இங்கு முக்கியமாகக் குறித்ததற்குக் காரணம் நாடகாசிரியர்கள், தங்கள் நாடகங்களை மற்றவர்கள் ஆட உத்தரவு கொடுக்கும் போது, அந்நாடகங்களைச் சரியாக நடத்தும்படி வற்புறுத்த வேண்டுமென்பதை என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே.

அடுத்த நாடகமாகிய நந்தன் சரித்திரத்திற்கும் வரும்படி குறைவாக வந்தது. இது சென்னையில் எப்பொழுது ஆடிய போதிலும் நல்ல வசூலைக் கொடுக்கும்படியான நாடகம். ஆகவே இதிலாவது சபைக்கு லாபம் கிடைக்குமென எண்ணியிருந்த எங்கள் கோரிக்கை கைகூடாமற் போயிற்று. இதன்பேரில் எங்கள் சபையின் நிர்வாக சபையாரில் சிலர், (அவர்கள் பெயரை இங்கு எழுதுவதற்கு எனக்கிஷ்டமில்லை) அரண்மனையில் மகாராஜாவின் கட்டளைப்படி ஆடவேண்டிய ஒரு நாடகத்தை சீக்கிரம் முடித்துக் கொண்டு, இங்கு ஆடத் தீர்மானிக்கப்பட்டிருந்த கடைசி இரண்டு நாடகங்களையும் விட்டுவிட்டு சென்னைக்குத் திரும்பிப் போக வேண்டும் என்று பிரேரேபித்தார்கள். இதையறிந்த எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, அடங்காக் கோபமும் துயரமும் கொண்டவராய், “இவர்கள் வேண்டுமென்றே, என்மீதுள்ள பொறாமையினால் சொல்லுகிறார்கள். நான் இந்த நிர்வாக சபைக் கூட்டத்திற்கு வரமாட்டேன்!” என்று என்னிடம் கூறிவிட்டு, விலகிவிட்டார். அதன்பேரில் நான் ‘அவர்கள் அவ்வாறு பிரேரேபித்தால் பிரேரேபிக்கட்டும். நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிப் பார்ப்போம்; நம்முடைய கடமையை நாம் செய்வோம்; பிறகு அவர்கள் அப்படித் தீர்மானித்தால் அவர்கள் பாடு” என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் ஒரே பிடிவாதமாய், “நான் வர மாட்டேன், நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் தொண்டையைக் கிழித்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஒன்றும் உங்கள் பேச்சைக் கேட்கப் போகிறதில்லை! போய் வாருங்கள்” என்று மனங்கசிந்து கூறினார். இதில் முக்கியமாக அவருக்குக் கோபத்தையும் துக்கத்தையும் விளைவித்தது என்னவென்றால், இப்படி விட்டுவிட வேண்டுமென்று யோசிக்கப்பட்ட இரண்டு நாடகங்கள் மனோஹரனும் வள்ளி மணமுமாம். இதில் இரண்டிலும் எங்களிருவருக்கும் முக்கியமான பாத்திரங்களிருந்தன. நான் உடனே இவ்வாறு யோசித்தேன். நான் இக்கடைசி இரண்டு நாடகங்களையும் இங்கு ஆட வேண்டுமென்பது எனது நண்பனது நன்மைக்காகவா? அல்லது எனது நன்மைக்காகவா? அல்லது இவ்விரண்டுமன்றி எங்கள் சபையின் நன்மைக்காகவா? முந்தியதாயிருந்தால் நான் மற்றவர்கள் சொல்லுகிறதை ஒப்புக்கொள்ள வேண்டும். பிந்தியதாயிருந்தால் என்னாலியன்ற அளவு அந்நாடகங்களைப் போடும்படி முயல வேண்டும். இந்த யோசனையில், அவ்விரண்டு நாடகங்களும் எப்படியும் சபைக்குப் பெயரையும் பணத்தையும் கொண்டு வரும் என்ற தீர்மானத்திற்கு வந்து, நிர்வாக சபையின் கடைசி இரண்டு ஆட்டங்களையும் நிறுத்தி விடுவதுதான் உசிதம் என்று பிரேரேபிக்கப்பட்டது. ஏறக்குறைய எல்லோரும் அதை ஆமோதித்தனர். அதன் பேரில் அவ்வாறு செய்யலாகாது, அந்த இரண்டு ஆட்டங்களுக்கும் நல்ல வசூலாகுமென்று எனக்குத் தோன்றுகிறதெனக் கூறியபோது, எதிர்க் கட்சியைச் சேர்ந்த எனது நண்பர்களில் ஒருவர், “ஆமாம்! முப்பது முப்பத்தைந்து ரூபாய் வரப்போகிறது ஒவ்வொரு ஆட்டத்திற்கும், அதற்காக எங்களையெல்லாம் இன்னும் நான்கைந்து நாட்கள் இங்கு இருக்கும்படிச் சொல்லுகிறாயா?” என்றார். அதன்மீது எனது நியாயங்களையெல்லாம் எடுத்துக் கூறி முடிவில் இவ்வாறு கூறினேன். “மற்ற நியாயங்களெல்லாம் இருக்கட்டும். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள். நாமோ அமெச்சூர்ஸ் வேடிக்கைக்காக நாடகமாடுபவர்கள். நாம் இந்த ஊரில் இன்னின்ன நாடங்கள் ஆடுவது என்று தீர்மானித்து விளம்பரம் செய்தபின், கடைசி இரண்டாட்டங்களையும் விட்டுவிட்டு ஊருக்குத் திரும்புவோமாயின், இவர்களுக்குப் பணம் வசூலாகவில்லை, பணம்தான் இவர்களுடைய முக்கியக் கருத்துப் போலும் என்று நம்மைப் பார்த்து நான்கு பெயர் நகைக்க இடமுண்டாகும். இது நம்முடைய சபையின் நற்பெருக்கு ஹீனமாகும். எனக்கென்னவோ இவ்விரண்டு நாடகங்களிலும் நல்ல வசூலாகுமென்று தோன்றுகிறது. அதற்குக் காரணத்தைக் கூறுகிறேன். நீங்கள் நான் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொண்டால், உங்கள் இஷ்டம், என் கடமையை நான் கழிக்கிறேன். நான் இங்கு வந்தது முதல், முதல் நாடகமானவுடன், ‘இன்னும் மற்ற எந்தெந்த நாடகங்களில் ரங்கவடிவேலு நடிக்கப் போகிறார்?’ என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். ஆகவே, அவர் முக்கியப் பாத்திரமாக நடிக்கும் இவ்விரண்டு நாடகங்களுக்கும் ஏராளமான கூட்டம் வரும் என்று எனக்குள் ஏதோ சொல்கிறது. இப்பொழுது இம்மாதிரி ஏற்படுத்தப்பட்ட நாடகங்களை விடுவீர்களாயின், இன்னொருமுறை சென்னையிலிருந்து வெளியூருக்குப் போகவேண்டுமென்று பிரேரேபணை செய்வீர்களாகில், மற்ற ஆக்டர்கள் இம்மாதிரியாக நாம் வரும் நாடகங்களையும் விட்டு விட்டாலும் விடுவார்களல்லவா? ஆகவே நாம் கஷ்டம் எடுத்துக் கொண்டு வெளியூருக்கு இச்சபையுடன் போவதில் என்ன பிரயோசனம்? என்று யோசிக்கமாட்டார்களாவென்று ஆக்டர்களாகிய நீங்களே யோசித்துப் பாருங்கள். என் மனத்திலிருப்பதைப் பகிரங்கமாகச் சொன்னேன். பிறகு உங்களிஷ்டம். நான் கூறியது உங்களுக்கு சம்மதியானால் ஒப்புக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எனக்கு விரோதமாகத் தீர்மானியுங்கள்” என்று கூறி முடித்தேன். அதன்பேரில், கடைசி இரண்டாட்டங்களையும் எப்படியாவது விட்டுவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த சிலர் தவிர, மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக என் பக்கம் திரும்பினார்கள். அப்படியிருந்தும், ஒரு தட்டினால் என்பட்சம் தீர்மானிக்கப்பட்டு, கடைசி இரண்டு ஆட்டங்களையும் ஆடிவிட்டுத் தான் பட்டணம் திரும்பிப் போக வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இதுவும் தெய்வத்தின் கருணை யென்று எண்ணினவனாய், இச் சமாச்சாரத்தை எனதுயிர் நண்பரிடம் போய்ச் சொல்லி அவரைச் சமாதானப் படுத்தினேன்.

பிறகு மறுநாள் ஜூலை மாதம் முதல் தேதி மஹாராஜாவின் அரண்மனையில் அவர் எதிரில், “காலவ ரிஷி” என்னும் நாடகத்தை ஆடினோம். அதைப்பற்றி விவரமாய்ப் பிறகு எழுதுகிறேன். முதலில் எங்கள் கடைசி இரண்டு நாடகங்கள் ஆடிய கோர்வையை முடிக்கிறேன்.

கடைசி இரண்டு நாடகங்களில் “மனோஹரன்” நாடகம் ஜூலை மாதம் மூன்றாம் தேதி வைக்கப்பட்டது. இதற்கு முந்திய நாள் எங்கள் சபையில் ஹார்மோனியம் வாசிக்கும் மாதவ ராவ் என்பவர் எங்களிடம் வந்து, இவ்வூரில் ஒருவர் இந்தக் கடைசி இரண்டாட்டங்களுக்கும் கண்டிராக்டாக 750 ரூபாய் கொடுக்கிறேன் என்கிறார்; ஒப்புக்கொள்கிறீர்களா என்றார். அதைக் கேட்டவுடன் மிகவும் சந்தோஷத்துடன் எனதுயிர் நண்பர் உடனே ஒப்புக்கொள்ளலாம் என்றார். நான் மாத்திரம் அதற்கு ஆட்சேபித்தேன். எங்கள் சபையின் காரியதரிசி உட்பட அநேகர், இதை ஒப்பக்கொள்ளலாமே, இதைவிட இவ்விரண்டாட்டங்களுக்கு அதிகமாகவா வரப்போகிறது என்று என்னிடம் வந்து வற்புறுத்தினர். நான் மாத்திரம் ஒரே பிடிவாதமாய் ஒப்பவில்லை. அதன்பேரில் மற்றவர்களெல்லாம், எனதுயிர் நண்பர் உட்பட, மெஜாரிடி ஆக இவ்வாறு தீர்மானிக்கப் போகிறார்களென்று பயந்தவனாய் சில வருடங்களுக்கு முன், சபையின் பொதுக்கூட்டத்தார் உத்தரவின்றி, சபை ஆட்டங்களைக் கண்டிராக்டாக விடக் கூடாதென்று தீர்மானிக்கப்பட்டதை எடுத்துக் கூறி மறுக்கவே, அவர்கள் அதன்பேரில் ஒன்றும் செய்வதற்கில்லாமல் போயிற்று. ஆயினும் என்னுயிர் நண்பர் உட்பட, எல்லோரும் “இந்தப் பிடிவாதத்திற்கென்ன செய்வது?” என்று என்னைக் கடிந்து மொழிந்தனர். ரங்கவடிவேலு என்னிடம் தனியாய் “இதென்ன இது! எப்படியிருக்குமோ? மழைகிழை வந்தால் என்னாகும்? ஒருவேளை இவ்விரண்டு நாடகங்களுக்கும் 750 ரூபாய் வசூலாகாவிட்டால் என்ன செய்வது? அப்பொழுது எல்லோரும் நம்மைப் பரிகாசம் செய்ய மாட்டார்களா? எனக்காகவாவது உங்கள் பிடிவாதத்தை விடுங்கள்” என்று மன்றாடினார். “உனக்காகத்தான் இவ்வாறு பிடிவாதம் பிடிக்கிறேன், இதனுண்மையைப் பிறகு நீயறிவாய்!” என்று நான் பதில் சொல்ல, அவர் என்மீது கோபித்துக் கொண்டு இரண்டு மூன்று மணிநேரம் என்னுடன் பேசவும் இல்லை! எது எப்படி ஆனாலும், என் தீர்மானத்தினின்றும் மாறுவதில்லை “கிண்டாய நம” என்று உட்கார்ந்தேன். நாடக தினம் எனதுயிர் நண்பர் எண்ணியபடி காலை முதல் பெரும் மழை தொடங்கி, கொட்டு கொட்டென்று கொட்டியது. அன்று ஒரு பகலுக்குள்ளாக, பிறகு நான் வர்த்தமானப் பத்திரிகைகள் மூலமாக அறிந்தபடி 91/2 அங்குலம் மழை பெய்தது! அந்த நகரவாசிகள் அநேகர் இம்மாதிரியான மழை இதுவரையில் பெய்ததில்லை என்று கூறினர். இந்த மழையின் கொடுமையை அறிய வேண்டுமென்றால், இப்படிக் கணக்கிட்டுப் பார்க்கலாம். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் கொஞ்ச நாளைக்கு முன்பாக நாகப்பட்டணத்தில் பெரும் மழை பொழிந்து, அதிக பொருட்சேதமும், ஆடு மாடு முதலிய கால்நடைச் சேதமும் நேரிட்டதாகப் பத்திரிகைகளில் படித்திருக்கலாம்; அப் பெரும் மழையிலும், 24 மணிக்கு 15 அங்குல மழை பெய்தததாம்; இந் நாடக தினம் திருவனந்தபுரத்தில் 12 மணிக்குள்ளாக 91/2 அங்குலம் மழை பெய்திருக்கிறது! என் ஜன்மத்தில் இம்மாதிரியான பெரும் மழை சென்னையில் பெய்ததில்லை. இவ்வாறு பெருமழை பெய்யவே என்னுடைய நண்பர்களெல்லாம் 750 ரூபாய்க்கு இரண்டு நாடகங்களையும் கண்டிராக்டாக விடாமற் போனோமே! இப்பொழுது இந்த லாபமும் போய்விட்டதே என்று வருத்தப்பட்டு என்னை நிந்திக்க ஆரம்பித்தனர். எனதாருயிர் நண்பர் வாய் திறந்து மற்றவர்களைப்போல் கூறாவிட்டாலும், என்னை உற்றுப் பார்க்கும் போதெல்லாம், தன் மனத்தில் என்னைக் கடிந்து கொண்டாரென்று நினைக்கிறேன். இந்தக் கடைசி இரண்டு நாடகங்களும் வேண்டாம் என்று கூறியவர்கள் எனக்குப் பின்னால், “என்னவோ அதிகமாக வசூலாகி விடுமென்று சம்பந்தம் சொன்னானே. இப்பொழுது என்ன சொல்லப் போகிறான், பார்ப்போம்!” என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன். இவற்றுளெல்லாம் என் மனத்தில் அதிகமாக உறுத்தியது, எனதுயிர் நண்பனின் முகவாட்டமே; அதன்மீது மனம் தாளாதவனாய் நான் அதுவரையில் செய்திராத காரியமொன்றைச் செய்தேன். அந்நாள் வரையில் நான் எழுதிய நாடகமோ, அல்லது நாங்கள் ஆடும் நாடகமோ ஆடும் தினம் வந்தால், ‘இன்று நாடகம் சரியாக ஆடப்பட வேண்டும், ஒன்றும் குறைவாக இருக்கலாகாது, எல்லோருடைய மனத்தையும் திருப்தி செய்யவேண்டும்” என்று பரமேஸ்வரனைக் குறித்துப் பிரார்த்திப்பது வழக்கம்; ஆயினும் பணம் வசூல் அதிகமாக ஆகவேண்டுமென்று பிரார்த்திப்பதில்லை. அவ்வாறு செய்யக்கூடாது என்னும் கோட்பாடு உடையவனாகிருந்தேன் (இப்பொழுதும் அதை உடையவனாயிருக்கிறேன்). அன்றைத் தினம் அதனின்றும் தவறினேன். அன்று போஜனமானவுடன் வழக்கம்போல், என் பாகத்தை ஒருமுறை படித்துவிட்டு, “எப்படியாவது இன்று நல்ல வசூலாக வேண்டும், ஏராளமான ஜனங்கள் வரவேண்டும்” என்று பரமேஸ்வரன் கருணையைப் பிரார்த்தித்தேன். பிறகு நமது பிரார்த்தனை ஈடேறுமோ என்னவோ என்னும் ஏக்கத்துடன் நாங்கள் குடியிருந்த வீட்டின் மேல் மாடியில் உலாவிக் கொண்டிருந்தபொழுது, கீழே இருக்கும் எனது நண்பர்களில் ஒருவர் யாரோ ஒரு கிழவன் உங்களைப் பார்க்க விரும்புகிறான் என்று தெரிவித்தார். வரச்சொல் என்று நான் விடை கொடுக்க,"ஒரு வயோதிகன் மேல் மாடிக்கு வர, அவனை என்ன வேண்டும் என்று நான் வினவ, உங்கள் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது” என்று அவன் கூறினான். நான் இருந்த மனோஸ்திதியில் “யார் உன்னைப் பார்க்க வேண்டாம் என்றது?” என்று கடுகடுத்து மொழிந்தேன். அதன் பேரில் அவன் “என் கையில் காசில்லை . ஓர் அரை ரூபாய் டிக்கட்டு கொடுத்தீர்களானால், உங்களுக்கும் புண்ணியம் உண்டு” என்று விடைபகர்ந்தான். அதன்மீது மனமிரங்கியவனாய், எங்கள் காரியதரிசியிடம் சொல்லி, அவனுக்கு என் கணக்கில் அரை ரூபாய் டிக்கட்டு ஒன்று வாங்கிக் கொடுத்தேன். இதை ஒரு பெரிய விஷயமாக இங்கு எழுதுகிறானே என்று இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் என்னை ஏளனம் செய்யாமலிருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதை இங்கு எழுதியதற்கு இரண்டு முக்கியக் காரணங்களுண்டு. முதலாவது, இதைச் செய்தவுடன், அந்த வயோதிகனுடைய முகத்தில் தோன்றிய சந்தோஷம், என்னுடைய இருதயத்தில் இருந்த பெரும் பாரம் ஒன்றை நீக்கியது போல் எனக்கு உவகையைத் தந்தது. என்னுடைய குணாகுணங்களைப் பற்றி நிஷ்பட்சபாதமாய் நான் ஆராய்ந்து பார்க்குங்கால், என்னிடம் சுயநன்மையை நாடும் தீய குணம் பெரும்பாலும் குடிகொண்டிருந்தது (இன்னும் குடிகொண்டிருக்கிறது) என்றே நான் சொல்லவேண்டும். அங்ஙனமிருக்க, மேற்சொன்னபடி, பிரதி பிரயோஜனம் ஒன்றையும் நாடாது மற்றவர்களுக்கு நான் ஏதேனும் சிறிது உதவி செய்யும் பொழுதெல்லாம், என் இருதயத்தில் அதுவரையில் இல்லாத ஒரு குளிர்ச்சி உண்டாகி சந்தோஷப்பட்டிருக்கிறேன். என்னைப் போன்ற சுய நன்மையை நாடும் சிலர்; இதைப் படிப்பவர்களுள் இருந்தாலும் இருக்கலாம்; அவர்களுக்கு இந்த எனது அனுபவம் சிறிது பலனைத் தரக்கூடும் என்று எண்ணியவனாய் இதை எழுதலானேன். இரண்டாவது காரணம், அந்த வயோதிகன் போனவுடன் பெய்துகொண்டிருந்த மழை இன்னும் அதிகமாகப் பெய்ய ஆரம்பித்த போதிலும், என் மனத்தில் இன்றிரவு நாடகத்திற்கு நல்ல பணம் வசூலாகுமென்று திடீரென்று தோன்றியது. நான் செய்த அல்ப காரியத்திற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று, எனது நண்பர்கள் என்னைக் கேட்கலாம்; இந்த இரண்டிற்கும் முடி போடுவது வெறும் பைத்தியம் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்களிற் சிலர் நகைக்கலாம். அப்படி நகைப்பவர்கள் மீது நான் குறை கூறமாட்டேன். அவர்கள், இவ்வாறு இவ்விரண்டிற்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது என்று எண்ணுவதற்கு என்ன நியாயமுண்டு? என்று என்னைக் கேட்பார்களாயின், அவர்களுக்குத் தக்க பதில் உரைப்பதற்கு அசக்தனாயிருக்கிறேன். ஆயினும் இவ்விரண்டிற்கும் நான் காரணமறியாத சம்பந்தம் ஏதோ உண்டென்று உறுதியாய் நம்புகிறேன்.

அன்று சாயங்காலம் ஆறு மணிக்குக்கூட அப்படியே பெருமழை பெய்துகொண்டிருந்தது. அருகிலுள்ள நாடக சாலைக்கு நான் போய்ப் பார்த்தபொழுது, நாடகமேடையின் பக்கத்தில் ஆர்மோனியம் வைக்கும் இடத்தில் மழை ஜலம் தேக்கிடையாயிருந்தது. அதை வெளிப்படுத்த ஒரு வாய்க்கால் வெட்டி, அதன் மூலமாக அந்த ஜலத்தை ஒழித்தோம்! சுமார் 81/2 மணிக்குக் கொஞ்சம் மழை நின்றது. மழை நின்று விட்டதென்று நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த பொழுது மறுபடியும் 1/2 மணி நேரத்திற்கெல்லாம் பெரும் மழை தொடங்கியது! ஆயினும் இந்த அரைமணி நேரத்திற்குள்ளாக கடைசி வகுப்பு தவிர, மற்ற வகுப்புகளெல்லாம் ஜனங்கள் நிரம்பி விட்டனர்! அன்றைத் தினம் நாடக ஆரம்பத்திற்கு முன் எங்கள் சபை வழக்கப்படி பிள்ளையார் பட்டைப் பாடும்பொழுது என் வேண்டுகோளுக்குக் கருணை கூர்ந்தனரே பகவான் என்று ஆனந்தக் கண்ணீருடன் அப் பாட்டைப் பாடினேன். அன்று எனக்கு ஞாபகமிருக்கிறபடி 850 ரூபாய்க்குமேல் வசூலாகியது. இதையறிந்த எனதுயிர் நண்பர் அன்று நடித்தது போல் என்றும் நடிக்கவில்லை யென்றே கூறுவேன். நானும் அன்று நடித்ததுபோல், சில சமயங்களில்தான் மிகுந்த குதூஹலத்துடன் நடித்திருக்கிறேன்.

நாடகம் முடிவதற்கு ஏறக்குறைய காலை 3.30 ஆச்சுது. வந்தவர்களில் ஒருவரும் அதுவரையில் தங்கள் இடத்தை விட்டுப் பெயர்ந்திலர். நாடக முடிவில் நடந்த ஒரு சிறு வேடிக்கை எனக்கு ஞாபகமிருக்கிறது. நாடகம் முடிந்தவுடன் அநேகர் எனக்குத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமாக வேஷம் தரிக்கும் இடத்திற்கு வந்து, எங்களைக் கொண்டாடிப் பேசினர். அதில் ஒருவர், “என்ன சார், முதலியார்வாள், நாடகம் முடிந்தபிறகுதான் நீங்கள் இந் நாடகத்தில் ஒரு பாட்டும் பாடவில்லையென்று கண்டறிந்தோம்! ஏன் நீங்கள் பாடுகிறதில்லை?” என்று கேட்டார். இதை நான் ஆக்டு செய்ததற்கு, ஒரு முக்கியமான புகழாகக் கொள்கிறேன். முதன்முறை இந் நாடகத்தில் நான் நடித்தபிறகு, இவ்வேடம் ஏறக்குறைய நாற்பது முறை நான் தரித்து ஆடும்பொழுதெல்லாம் ஒரு பாட்டும் பாடியதில்லை. அப்படியிருந்தும் இந்நாடகம் நன்றாக இல்லையென்று ஒருவராவது சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. நாடகமாடுவதென்றால் பாட்டு இல்லாமல் உதவாது என்று அபிப்பிராயப்படுவோர் இதைச் சற்றுக் கவனிப்பாராக.

அன்று நாடகம் முடிந்து எங்கள் வேஷங்களைக் கலைத்தவுடன், ஏதோ கொஞ்சம் ஆகாரம் கொண்டுவிட்டு, உடனே மோட்டார் வண்டியில் எனதுயிர் நண்பரும் நானும் கன்னியாகுமரிக்குப் பிரயாணம் புறப்படும்படி நேரிட்டது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. சில தினங்களுக்கு . முன் எங்கள் சபையோர் கன்னியாகுமரிக்குப் போய் வந்தபொழுது, எனதுயிர் நண்பர் கொஞ்சம் ஜ்வரத்துடன் இருந்தார்; ஜ்வரமாயிருந்தும் மறுபடியும் தனக்குச் சமயம் வாய்க்குமோ என்னவோ எப்படியும் அவர்களுடன் போக வேண்டுமென்று நிர்ப்பந்தித்தார். அதன்பேரில், உன் உடம்பைப் பார்த்துக்கொள்; நான் உனக்கு உடம்பு சௌக்கியமானவுடன் எப்படியும் உன்னைக் கன்னியாகுமரிக்கு அழைத்துக்கொண்டு போய் அம்மன் தரிசனம் செய்து வைக்கிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேன்; கடைசி இரண்டு நாடகங்களும் ஆனவுடன் சென்னைக்குப் புறப்பட ஏற்பாடாயிருந்தபடியால், அந்த மறுநாளைத் தவிர, கன்னியாகுமரிக்கு நாங்கள் போக, எங்களுக்கு வேறு தினம் கிடைக்கவில்லை. ஆகவே, நாடகமாடிய சிரமத்தையும் கவனியாது, உடனே புறப்பட வேண்டியதாயிற்று. வழியெல்லாம் அம் மலைப் பிரதேசங்களின் தோற்றங்கள் அழகினையும் கவனியாது தூங்கிக்கொண்டே போனோம். எங்களை அழைத்துக்கொண்டு போன திருவனந்தபுரம் நண்பர், எங்களுக்கு வேண்டிய சௌகர்யங்களையெல்லாம் செய்திருந்தார். வழியில் ஓர் அழகிய குளத்தில் ஸ்நானம் செய்து கொண்டு, சுசீந்திரம் என்னும் திவ்ய ஸ்தலத்தைத் தரிசித்துக்கொண்டு, கன்னியாகுமரிக்குப் போய்ச் சேர, நடுப்பகலாய்விட்டது. அப்பொழுது கோயிலுக்குப் போனால், மத்யான பூஜையாகிக் கோயில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன! நாங்கள் சாயங்காலமே திரும்பி வருவதாக எங்கள் சபை நண்பர்களுக்குத் தெரிவித்துவிட்டு வந்தோம். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தும், அம்மன் தரிசனம் செய்யாமல் திரும்பிப் போவதா? சாயங்காலம் தரிசனம் செய்துகொண்டு, ராத்திரி போய்ச் சேர்வோம் என்று தீர்மானித்தோம். அன்று இந்திய லட்சுமியின் பாதத்திலுள்ள கன்னியாகுமரி முனையின் சமுத்திர கட்டத்தில் ஸ்நானம் செய்து போஜனம் கொண்டு, 12 மணி முதல் சாயங்காலம் ஆறு மணி வரையில் ஒரே தூக்கமாய்த் தூங்கினோம். பிறகு சாயங்காலம் கடற்கரையில் எங்கள் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கோயிலுக்குப் போய் அம்மன் தரிசனம் செய்துகொண்டு திருவனந்தபுரம் போய்ச் சேரப் புறப்பட்டோம். இந்த கன்னியாகுமரி க்ஷேத்திரமும் சமுத்திரக் கட்டமும், இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவசியம் பார்க்கவேண்டியவை; இவற்றின் அழகையும் மேன்மையையும் பற்றி ஈசுவரன் கிருபையால், எனக்குச் சந்தர்ப்பம் வாய்க்குமாயின், பிறகு எனது நண்பர்களுக்குத் தெரிவிக் கலாமென்றிருக்கிறேன். இவ்வூரைவிட்டுத் திருவனந்தபுரம் வரும்பொழுது, பாதி வழியில் எங்கள் மோட்டார் வண்டியின் டயர் (Tyre) வெடித்துப் போய்விட்டது திடீரென்று! வண்டிக்காரன் மிகுந்த புத்திசாலித்தனமாய் எவ்வளவோ அதை மராமத்து செய்து பார்த்தான்; பிரயோஜனப்படவில்லை. என்ன காரணத்தினாலோ, வேறு டயர் கொண்டுவரவில்லை! இரவு எட்டுமணியாகி விட்டது; பாதையில் ஜன சந்தடியும் அற்றுப்போய் விட்டது! என்ன செய்வது? நாங்கள் பட்ட துயரத்தைவிட எங்களை அழைத்துவந்த நண்பர், இவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறோமே என்று அதிகத் துயரப்பட்டார். பிறகு வண்டியை வண்டிக்காரன் வசம் விட்டுவிட்டு, சுமார் இரண்டு மைல் நடந்து ஒரு குக்கிராமம் போய்ச் சேர்ந்தோம். அதன் பெயரும் எனக்கு ஞாபகமில்லை. இதற்குள் ஒன்பது மணியாகிவிட்டது. எங்களுக்குப் பசி அதிகமாய்விட்டது. அந்தச் சிறு கிராமத்திலிருந்த வீடுகளெல்லாம் மூடப்பட்டிருந்தன. பிறகு அங்கு ஒரு சத்திரத்திற்குப் போய் அச்சத்திரப் பிராமணனை, கதவைத் தட்டியெழுப்பி, ஏதாவது உணவு கிடைக்குமா என்று கேட்க, அப்பிராமணன், ‘ஐயோ! இப்பொழுது வந்தீர்களே! எல்லாம் சாப்பிட்டாய் விட்டதே! கடைகளும் மூடப்பட்டனவே! வேண்டு மென்றால் சாதம் வடித்துக் கொடுக்கிறேன். வீட்டில் கொஞ்சம் மோர் இருக்கிறது சாப்பிடுங்கள்” என்று சொன்னார். அவ்வளவாவது சொன்னாரே என்று அவரை வாழ்த்திப் பிறகு மோர் சாதம் சாப்பிட்டு அன்றிரவு அந்தச் சத்திரத்தின் மேல் மாடியில் கழித்தோம். காலை எழுந்து திருவனந்தபுரம் போகும் பஸ் வண்டி வரும், அதில் போகலாமென்று தீர்மானித்தோம். நாங்கள் திரும்பி வரவில்லையேயென்று எங்கள் சபை நண்பர்களெல்லாம் வருத்தப்படுவார்களேயென்று, எண்ணமிட்டுக்கொண்டே அன்றிரவு தூங்கினேன்.

மறுநாள் காலையிலெழுந்து திருவனந்தபுரம் போகும் பஸ் ஒன்றில் ஏறி, நாங்கள் குடியிருந்த வீட்டிற்குப் போய், முன்நாள் இரவு வராததற்குக் காரணத்தை என் நண்பர் களுக்குக் கூறினோம். அன்றிரவு வள்ளித் திருமணம் என்னும் நாடகத்தை ஆடினோம். கடைசி இரண்டு நாடகங்களையும் விட்டுவிட வேண்டுமென்று பிரயத்தனம் செய்த எனது நண்பரிற் சிலர், “மனோஹரன்” நாடகத்திற்குத்தான் ரூபாய் அதிகமாக வந்தது; அதற்குக் காரணம் மனோஹரன் நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றிருப்பதாம்; இந்த வள்ளி நாடகத்திற்கு என்ன வரப்போகிறது? பார்ப்போம், என்று என் காதில் விழும்படியாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்டும், எல்லாம் ஈசுவரன் பாரம், நாம் இதற்குப் பதில் கூறுவானேன் என்று சும்மா இருந்துவிட்டேன். அன்றைத்தினம் மழை ஒன்றும் இல்லாதிருந்தது. இந்த நாடகத்திற்கு ஒரு மணிக்கு முன்பாக நான் வேஷம் போட்டுக் கொண்டிருந்த பொழுது, நாடக சபைக்குள் ஜனங்கள் சேரும் தொனியினால் அன்றைக்கும் அதிகமாக ஜனங்கள் வருகிறார்கள் என்பதை அறிந்தேன். ஆயினும், எனதாருயிர் நண்பருக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த எனது நண்பர்களில் ஒருவர் டிராப்படுதாவில் இதற்கென்று செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு துவாரத்தின் வழியாக நாடகசாலையில் வந்திருக்கும் ஜனங்களைப் பார்த்துவிட்டு, நாங்களிருவரும் (ரங்கவடிவேலுவும் நானும்) கேட்கும்படியாக, “ஒரு ஐம்பது ரூபாய் வசூலாயிராது; ஜனங்களின் கூச்சல் மாத்திரம் அதிகமாயிருக்கிறது!” என்று கூறினார். அதைக்கேட்டு, கொஞ்சம் புன்சிரிப்புடையவனாய் என் வேஷத்தின்மீது கவனமாயிருந்தேன். அதன் பேரில் ரங்கவடிவேலு என்னருகில் வந்து “என்ன! இவர் (அவர் பெயரைச் சொன்னார். அதை இங்கு எழுத என் மனம் இடங்கொடுக்கவில்லை) இப்படிச் சொல்லுகிறாரே! இன்றைக்கு நல்ல வரும்படி வருமா?” என்றார். அதற்கு “அவசரப்படாதே, நீ கேட்ட கேள்விக்குப் பதில், நாடகம் ஆரம்பமானவுடன் சொல்லுகிறேன். அதுவரையில் உன் தலையை நீட்டி ஹாலில் எத்தனை பெயர் வந்திருக்கிறர்கள் என்று எண்ண வேண்டாம்! நீ ஒன்றுக்கும் பயப்படாதே!"என்று பதில் உரைத்தேன். அன்றைத் தினம் நாடக ஆரம்பத்திற்கு முன் 750 ரூபாய்க்கு மேல் வசூலாகியது. இதைக் கேள்வியுற்ற எனதுயிர் நண்பர் என்னிடம் ஓடி வந்து சந்தோஷத்துடன், “எழுநூற்றைம்பது ரூபாய் வசூலாய் விட்டதாம்!” என்று கூறினார். அதற்கு நான், “இது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை; இப்படி வசூலாகுமென்று முன்பே எனக்குத் தெரியும்; இதிருக்கட்டும்; இந்த சந்தோஷத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நீ நன்றாய் வள்ளியின் பாகத்தை நடித்து வந்திருப்பவர்களின் மனத்தைத் திருப்தி செய்யும் விதத்தைப் பார்!” என்று சொல்லி அவரை முதற் காட்சியில் மேடையின் மீது அனுப்பினேன். அன்று எனதுயிர் நண்பர் மிகவும் குதூகலத்துடன் நடித்தனர் என்று நான் இங்கு எழுத வேண்டியதில்லை. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர் நடிக்காத இங்கு எங்கள் சபை ஆடிய நாடகங்கள் ஐந்தின் வரும்படியைச் சேர்த்தாலும், அவர் ஆடிய இக் கடைசி நாடகங்களில் ஒவ்வொன்றிலும் வந்த வரும்படிக்கு ஈடாகவில்லை! இந்நிகழ்ச்சியால் நான் அறிந்த நீதி இரண்டாம். ஒன்று, ‘கடவுளை நம்பினவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்’ என்பதும்; இரண்டாவது, மற்றவர்கள் நமக்குக் கெடுதி நினைத்தாலும் நாம் அதை ஒரு பொருட்டாகப் பாவியாது பிரதி செய்யாது, மறந்துவிட வேண்டுமென்பதுமாம். இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் இந்நீதிகளைக் கடைப்பிடித்து நடப்பார்களாயின், அவர்களுக்குப் பலன் உண்டாகும் என்று நம்பி, இதை இங்கு விவரமாய் எழுதலானேன்.

இனி, திருவாங்கூர் மகாராஜாவின் முன்னிலையில் எங்கள் சபையோர் ஆடிய நாடகத்தைப் பற்றி எழுதுகிறேன். எங்கள் சபை இவ்வூருக்கு வந்ததும் எங்கள் சபையின் அங்கத்தினரில் ஒருவரும், இவ்விடம் எங்கள் சபைக்கு மிகவும் உதவி புரிந்தவருமாகிய, திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான்ஜி (மந்திரி) யாகவிருந்த திவான் பஹதூர் ராகவையாவின் மூலமாக, மஹாராஜா அவர்களுக்கு எங்கள் சபை அவரது முன்னிலையில் ஒரு நாடகம் ஆட விரும்புவதைத் தெரிவித்தோம். அதன் பேரில், அவர்கள் எங்கள் சபையைப் பற்றி எல்லாம் விசாரித்து, தமது அரண்மனையில் ஒரு நாடகம் ஆட வேண்டுமென்று ஆக்ஞாபித்தார். அதன்மீது என்ன நாடகம் ஆடுவதென்ற கேள்வி வந்தபொழுது, நாங்கள் ஆடக்கூடிய நாடகங்களின் கதைகளின் சுருக்கங்களை யெல்லாம் திவான் மூலமாக அனுப்ப, அவர், ‘காலவ ரிஷி’ சரித்திரம் புராணக் கதையாயிருப்பதால், அந்தப்புரத்து ஸ்திரீகளும் அறியக்கூடியதாயிருப்பதால், அதை ஆடவேண்டுமென்று தெரிவித்தார். அதை ஆடுவதாக ஒப்புக்கொண்டு தக்க ஏற்பாடுகளைச் செய்து அரண்மனையிலே ஒரு மண்டபத்தில் இதற்கு வேண்டிய திரைகளையெல்லாம் அனுப்பி, அரங்கமொன்று ஏற்படுத்தினோம். இங்கு இந்நாடகம் நடத்தியது கொஞ்சம் விந்தையானதால், அதைச் சற்று விவரமாக எழுத விரும்புகிறேன்.

அரண்மனையில், ‘காலவ ரிஷி’ ஆட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பிறகு, அரண்மனையிலிருந்து இன்னின்னபடி நடக்கவேண்டும் என்று எங்களுக்குச் சில நிபந்தனைகள் சொல்லி அனுப்பப்பட்டன; 8 மணிக்கு ஆரம்பமாகி, நாடகம் 101/2 மணிக்குள்ளாக முடிய வேண்டுமென்றும், அரங்கத்தின் மீதிருக்கும் வெளிச்சங்கள் மஹாராஜா உட்கார்ந்திருக்குமிடத்தில் பிரகாசிக்கக் கூடாதென்றும், ஆக்டர்கள் மஹாராஜா உட்கார்ந்திருக்குமிடத்தை நேராகப் பார்க்கக் கூடாதென்றும், ஆக்டர்களும் பக்க வாத்தியக்காரர்களும் தவிர, மற்றொருவரும் அங்கு வரலாகாதென்றும், இம்மாதிரியான சில நிபந்தனைகள் சொல்லி அனுப்பப்பட்டன; அவைகளுக்கு ஒப்புக் கொண்டு அவ்வாறே ஏற்பாடுகள் செய்தோம். எட்டு மணிக்கெல்லாம் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே யென்று சாயங்காலம் 3 மணிக்கெல்லாம் அரண்மனைக்குப் போய் வேஷம் தரிக்க ஆரம்பித்தோம். ஆக்டர்கள் தவிர மற்றவர்கள் வரவேண்டியதில்லை என்று உத்தரவானதன் பேரில், எங்கள் சபையுடன் வந்த ஏறக்குறைய எல்லா அங்கத்தினரும் ஆக்டர்களாக மாறிவிட்டனர்! நாடகம் நடக்கும் பொழுது பக்கத்திலிருக்கும் யாரும் பார்க்கக் கூடாதென்று கேட்கப்பட்டபடியால், புராம்டர் வேண்டாமென்று தீர்மானித்து, ஆக்டர்களுடைய புஸ்தகங்களையெல்லாம் வீட்டில் கட்டிப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு வந்தோம். அன்றிரவு நாடக முழுவதும் கொஞ்சமேனும் புராம்டிங் இல்லாமலே நடந்தது! தற்காலம் சில நாடகங்கள் நடக்கும்பொழுது நான்கு பக்கம் நான்கு புராம்டர்களும், அவர்கள் மத்தியில் பாட்டுகளை ப்ராம்ட் பண்ணுவதற்குச் சிலரும், ஏற்பாடு செய்யும் ஆக்டர்களும் கண்டக்டர்களும் இதைக் கவனிப்பார்களாக.

8 மணிக்கு நாடகம் ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்லியனுப்பிய மஹாராஜா அவர்கள், 71/2 மணிக்கெல்லாம் போஜனம் முடித்தாயது; உடனே ஆரம்பிக்க முடியுமா? என்று கேட்டனுப்பினார்! நாங்கள் எல்லோரும் முன்பே ஆயத்தமாயிருந்தபடியால், ‘இன்னும் ஐந்து நிமிஷத்தில் ஆரம்பிக்கிறோம்’ என்று சொல்லியனுப்பி, பிள்ளையார் துதி, சரஸ்வதி துதியை உடனே பாடி, நாடகத்தை ஆரம்பித்தோம். இது மகாராஜா அவர்களுக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்ததென்று பிறகு கேள்விப்பட்டேன். முதல் காட்சியில் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, இந்திரன் சபையில் நர்த்தனம் செய்தது மிகவும் புகழப்பட்டதெனவும் அறிந்தேன். நர்த்தனம் செய்யும் பொழுது, சம்ஸ்கிருதத்தில் மஹாராஜாவின் மீது கட்டப்பட்ட ஒரு சுலோகத்தைப் பாடி நர்த்தனம் செய்தார். நாடக ஆரம்பத்தின் முன் எமது ஆக்டர்களெல்லாம், ஒரே ஒருவர் முன்னிலையில் நாடகமாடுவதென்றால், அது எப்படி இருக்கும் என்று கூச்சப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆயினும், இந்தச் சந்தேகம் டிராப் படுதா மேலே போனவுடன், நிவர்த்தியாகிவிட்டது. மஹாராஜா அவர்கள் ஒரு பக்கமாக உட்கார்ந்திருக்க, மற்றொரு புறம் அவரது இரண்டு மனைவியரும் பிள்ளைகள் முதலியோரும் உட்கார்ந்திருக்க, இரண்டு பக்கங்களிலும் பின்புறத்திலும், அரண்மனையிலிருந்த ஏறக்குறைய அனைவரும் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்! நாடகமானது ஒரு தடையுமின்றி, காட்சிக்குக் காட்சி இடைக்காலம் ஏதுமின்றிப் பரபரவென்று நடந்தேறியது. ஆக்டர்களனைவரும் மிகவும் நன்றாக நடித்தார்களென்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக நான்கு மணி நேரம் பிடிக்கும் இந்நாடகம் 21/2 மணி நேரத்திற்குள் முடிந்துவிட்டது! நாடகம் முடிந்ததும் நாங்கள் வழக்கப்படி சபை மங்களம் பாடி முடிந்தவுடன், மஹாராஜா அவர்கள் தன் ஆசனத்தை விட்டெழுந்து நின்று, ஆங்கிலத்தில், நாடகமானது மிகவும் நன்றாயிருந்ததென்றும் தாம் மிகவும் சந்தோஷப் பட்டதாகவும் கூறி, எங்கள் சபைக்கு வந்தனம் அளித்தனர். பிறகு திவான் அவர்கள், “மஹாராஜா அவர்கள் இம்மாதிரியாக ஒரு சபையையும் புகழ்ந்து வந்தனம் செய்ததில்லை. உங்கள் பாடு அதிர்ஷ்டம்தான்” என்று மறுநாள் என்னிடம் கூறினார். மஹாராஜாவின் மனத்தை இவ்வாறு சந்தோஷிக்கச் செய்தோமே என்று நான் மிகவும் சந்தோஷப் பட்டேன். மஹாராஜா அவர்களும், அவரது மனைவிகளும், நாடகத்தை நன்கு மதித்தனர் என்பதற்கு முக்கியமான அத்தாட்சி, மறுநாள் இன்னொரு நாள் நாடகம் ஆட முடியுமாவென்று எங்களைக் கேட்டனுப்பியதேயாம். நாங்கள் சீக்கிரம் திருவனந்தபுரத்தை விட்டுப் போகத் தீர்மானித்தபடியால், எங்களை மன்னிக்க வேண்டுமென்று சொல்லியனுப்ப வேண்டியதாயிற்று.

திருவனந்தபுரத்திலிருந்த பொழுது, மஹாராஜா அவர்கள் அரண்மனையிலேயே எங்களுக்கு ஒரு பெரும் விருந்தளித்தனர். இஃதன்றி திவான் பஹதூர் டி. ராகவையா அவர்களும் விஸ்வநாதக் கோனார் அவர்களும், வக்கீல் சங்கரசுப்பைய்யர் அவர்களும், டாக்டர் . ஆர். சங்கர சுப்பய்யர் அவர்களும் எங்கள் சபையோருக்கு விருந்தளித்தனர். இவர்களுக்கெல்லாம் என் வந்தனத்தை இதன் மூலமாகச் செலுத்துகிறேன். முக்கியமாகக் காலஞ்சென்ற திருவாங்கூர் மஹாராஜா இச்சமயம் எங்கள் சபையின் கட்டிட பண்டிற்கு ரூ.2500 அளித்து எங்கள் சபைக்குச் செய்த கௌரவத்தையும் உபகாரத்தையும் நான் என்றும் மறக்க முடியாது.

இம்முறை சென்னையை விட்டு வெளியூர்களுக்குப் போய் வந்ததனால், சபைக்கு மொத்த வரும்படியை விடச் செலவு அதிகம்; மொத்த நஷ்டம் 3,057-4-10 ஏற்பட்டது. நாங்கள் திருவனந்தபுரத்தில் கடைசி இரண்டு நாடகங்கள் ஆடாதிருந்தால், இந்த நஷ்டமானது, ஏறக்குறைய 5000 ரூபாயாயிருக்கும். இவ்வாறு சபைக்குப் பெரும் நஷ்டம் வந்ததன் பலன் என்னவென்றால், இது முதல் நான்கைந்து வருடங்கள் வரைக்கும் சபையானது வெளியே போய் நாடகமாடலாம் என்னும் பிரஸ்தாபமே இல்லாமற் போயிற்று.

இவ் வருஷம் எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த “வேணீ சம்ஹாரம்” எனும் நாடகம் முதன்முறை ஆடப்பட்டது. இதில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு பானுமதியாக நடிக்க, நான் துரியோதனனாய் நடிக்க வேண்டி வந்தது. நான் இதுவரையில் ஆடிய அநேக நாடகப் பாத்திரங்களில், மனத்தில் திருப்தியில்லாமல் நடித்த வெகு சிலவாகிய வேடங்களில் இது ஒன்றாகும். ரங்கவடிவேலு பானுமதி வேடம் பூண்டமையால், நான் இவ் வேடத்தைத் தரித்தேனே யொழிய இல்லாவிடில் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். சிறு வயதில் மஹாபாரதத்தை நான் தமிழில் படித்தது முதல், இந்தத் துரியோதனனை, நான் மிகவும் வெறுத்து வந்தேன். அப்படியிருக்க அவ்வேடத்தை நான் எவ்வாறு நன்றாய் ஆட முடியும்?

இவ் வருஷம் சில அங்கத்தினரின் பிரேரேபணையின்படிச் சபையில் சங்கீதக் கச்சேரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று யோசித்து, ஸ்ரீமான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்கள் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்தோம். இப் பிரயத்தனமானது பிறகு சரிவராது கைவிடப்பட்டது.

எங்கள் சபையின் சரித்திரத்தில் இவ்வருஷம் நடந்த நிகழ்ச்சிகளுள் முக்கியமானது, சென்னைக் கவர்ன்மெண்டார் மூலமாக எங்கள் சபைக்கு நேபியர் பார்க் என்னும் இடத்தில் 22 மனை 2,199 சதுர அடியுள்ள நிலம் எங்கள் நாடகசாலையும் இருப்பிடமும் கட்டக் கிடைத்ததேயாம். இவ்வருஷ முடிவில் கட்டட பண்டாக எங்களிடம் 66,683-14-7 இருந்தது.

1922ஆம் வருஷம் இன்னொரு புதுப் பிரயத்தனம் செய்து பார்த்தோம். “அசந்துஷ்டேத் விஜோ நஷ்ட: சந்துஷ்டஸ் சைவ பார்த்திவ:” என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் உண்டு; அதன் பொருள் “கிடைத்தது போதாது என்றிருக்கும் பிராமணனும், கிடைத்தது போதும் என்றிருக்கும் அரசனும், நஷ்டமடைவார்கள்” என்பதாம். ஆகவே, எனது பால்ய நண்பர் எப்பொழுதும் எனக்கு ஞாபகமூட்டுகிறபடி, எங்கள் சபையில் ஏதாவது புதிய பிரயத்தனம் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது, எங்களிருவருடைய கொள்கை. அதன்படி இவ்வருஷம் முக்கோடி ஏகாதசி தினம், ஒரே நாளில் இரண்டு நாடகங்கள் போட்டுப் பார்த்தோம். சாயங்காலம் 51/2 மணி முதல் “வேதாள உலகம்” என்னும் தமிழ் நாடகமும், பிறகு 8½ மணி முதல் இரவு 21/2 மணி வரையில் ‘பிரஹ்லாதன்’ என்னும் தெலுங்கு நாடகமும். இதைப்பற்றி நான் எங்கள் நிர்வாக சபையில் முதலில் - பிரேரேபித்தபொழுது, சில தெலுங்கு அங்கத்தினர் சாயங்காலம் போடும் தமிழ் நாடகத்திற்கு ஒருவரும் வரமாட்டார்கள் என்று ஆட்சேபித்தனர். இரண்டு நாடகங்களுக்கும் நல்ல வசூலாயிற்று; தமிழ் நாடகத்திற்கு 333-4-0 ரூபாயும் தெலுங்கு நாடகத்திற்கு 760-12-0 ரூபாயும்; ஆகமொத்தம் ஒரே நாளில் சபைக்கு நாடக வாயிலாக 1,094-0-0 ரூபாய் வசூலாயிற்று. இதை அறிந்தபின் சாயங்கால நாடகத்திற்கு ஒன்றும் வராது என்று சொன்னவர்கள், கம்மென்று இருந்துவிட்டார்கள்; நானும் என் கோட்பாட்டின்படி, அவர்களை ‘நீங்கள் சொன்னீர்களே, என்னவாயிற்று?’ என்று கேட்காமலிருந்து விட்டேன். இதை இங்கு எடுத்து எழுதியதற்கு முக்கியக் காரணம், நாம் எதையும் பிரயத்தனம் செய்து பார்க்க வேண்டுமென்று என் இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே. இச் சந்தர்ப்பத்தில், உலகிலெல்லாம் மிகுந்த தனவந்தன் என்று பெயர்பெற்ற ஹென்றி போர்ட் என்பவர் ஒருமுறை கூறியது ஞாபகம் வருகிறது. “எந்தப் பிரயத்தினத்திலும் தோல்வி என்பது கிடையாது; ஒரு பிரயத்தனத்தில் நாம் கோருவது கைகூடாவிட்டால், அதையே பிறகு வெற்றியடைய நமக்கு அனுபவமாகக் கொள்ள வேண்டும்” என்பதாம்.

இவ்வருஷம் எங்கள் சபையானது மிகுந்த உன்னத ஸ்திதியையடைந்தது என்று ஒருவிதத்தில் சொல்ல வேண்டும். இவ் வருஷத்திய மொத்த வரும்படி ரூ.52,607-8-7; மொத்தச் செலவு ரூ.51,364-16-3. இத் தொகைகள் பிறகு எப்பொழுதும் கிட்டியதில்லை. டிசம்பர் விடுமுறையில் நடித்த நாடகங்களில் மாத்திரம் ஏறக்குறைய 6,000 ரூபாய் வரும்படி பெற்றோம். இவ்வருஷம் எங்கள் சபை 49 நாடகங்கள் நடித்தது.