நாடக மேடை நினைவுகள்/25ஆவது அத்தியாயம்

விக்கிமூலம் இலிருந்து



25ஆவது அத்தியாயம்

னி 1923ஆம் ஆண்டில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன். நான் எந்த வருஷத்தை மறந்தாலும் இந்த வருஷத்தை மறக்க முடியாது. இவ்வருஷம் இருபத்தெட்டு வருடங்களாக என்னுடன் நாடக மேடையில் நடித்த எனதுயிர் நண்பர், என் பூர்வ பாபவசத்தால் என்னை விட்டு விண்ணுலகம் சென்றனர். இதைப்பற்றி நான் எழுதும்பொழுது ஆங்கிலத்தில் ஒரு கவி எழுதிய இரண்டடிகள் ஞாபகம் வருகின்றன. அவைகளின் தமிழ் அமைப்பு “நகைத்தையேல் உலகம் நகைத்திடும் உன்னுடன்; அழுதையேல், நீ தான் அழவேண்டும் தனியே!” என்பதாம். இவ்வுண்மையைக் கருதினவனாய், நினைக்குந்தோறும் அதி துக்கத்தை விளைக்கும் இவ் விஷயத்தைப்பற்றி மேல் ஒன்றும் எழுதாது விடுத்தேன்.

எனதுயிர் நண்பர் மடிந்ததைக் கேட்டு எங்கள் சபையில் மனமுருகாத அங்கத்தினர் ஒருவருமில்லை. அவரை மேடைமீது ஒருமுறை பார்த்தவர்களுள் கூட ஒருவராவது அவர் இறந்ததைப் பற்றி விசனப்படாதவர் இல்லையென்றே கூற வேண்டும். அவர் மடிந்த பிறகு மறுபடி சபைக்குப் போவதா என்றிருந்தேன். ஆயினும் போக வேண்டியதாயிற்று; புருஷனைப் பறிகொடுத்த கைம்பெண், தன் தாயார் வீட்டிற்குப் போகும் மனத்துடன் போய்ச் சேர்ந்தேன்! இனி நாடக மேடை ஏறுவதில்லை என்று உறுதியாய்த் தீர்மானித்தேன். அத் தீர்மானத்தினின்றும் மாற வேண்டி வந்த கதையைப் பிறகு எழுதுகிறேன்.

அவரது பிரேதத்தைச் சம்ஸ்காரம் செய்த தினம் எங்கள் சபை மூடப்பட்டது. சில தினங்களுக்குள் ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்பட்டுச் சபையோர்கள் அவர் இறந்ததனால் சபைக்கு நேரிட்ட துக்கத்தைத் தெரிவித்தனர். அன்று அவர் 28 வருஷ காலமாக சபையில் முக்கிய வேஷம் தரித்து நடித்ததைப் பற்றியும், சபையில் பொக்கிஷதாரராகவும் ஸ்டேஜ் டைரக்டராகவும், காரியதரிசியாகவும், கண்டக்டராகவும்; கடைசியில் வைஸ்பிரசிடெண்டுகளில் ஒருவராக வும் இருந்ததைப் பற்றியும் எனது பால்ய நண்பர் வி.வி சேஷகிரி ஐயர் முதலியோர் பேசினர். அச்சமயம் நான் வாயற்றுப்போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்ததுதான் எனக்கு இப்பொழுது ஞாபகமிருக்கிறது. சபையோர் இவர் ஞாபகச்சின்னமாக இவரது உருவப் படமொன்றைச் சபையில் வைக்க வேண்டுமென்று தீர்மானித்ததுடன், இவரது ஞாபகார்த்தமாக ஏதாவது செய்ய ஒரு பண்டு ஏற்படுத்த வேண்டுமென்றும் தீர்மானித்தனர். அப்பண்டிற்கு அநேகர் பணம் அனுப்பினர். கொழும்பு முதலிய தூர தேசத்திலிருந்தும் சிலர் பணம் அனுப்பினர். இந்தப் பண்டில் தற்காலம் சுமார் 1,000 ரூபாய் சேர்ந்திருக்கிறது. எங்கள் சபையார் இதை எப்படி உபயோகிப்பது என்று இன்னும் தீர்மானம் செய்யவில்லை.

இவர் உயிர் துறந்ததைக் கேட்ட எனது நண்பர் டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரியார் “ரங்கவடிவேலுவுடன் சபையின் லட்சுமியும் போய்விட்டாள்” என்று தனது பிரிவாற்றாமையைக் கூறினார். அவ் வாக்குப் பலித்தது போல் இவ்வருஷம் முதல் எங்கள் சபை கொஞ்சம் க்ஷீணித்துக் கொண்டே வருகிறதென நான் கூற வேண்டும். இவ் வாக்கியம் ‘எங்கள் சபையில் இருக்கும் சில இளைய அங்கத்தினருக்கும் திருப்திகரமாயில்லாதிருக்கலாம்.

இவ்வருஷம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டமும் கொண்டாடவில்லை; எங்கள் சபையின் வருஷாந்தர மஹோற்சவமும் கொண்டாடப்படவில்லை; வெளியூருக்கும் எங்கள் சபை போகவில்லை.

இவ்வருஷத்தின் ஆரம்பத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று தினங்களில் சாயங்காலம், விக்டோரியா ஹால் மேல் மாடியில், ஆங்கிலேயர் ஏற்படுத்தும் பேன்சி பேட் (Fancy Fete) மாதிரி சபையின் கட்டட பண்டிற்காக ஏற்படுத்தினேன். அதன் மூலமாகச் செலவு போக ரூபாய் 485-11-9 கட்டட பண்டிற்குச் சேர்ந்தேன். இதில் எனது நண்பரும் நானும் வேடங்கள் தரித்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.

எனதாருயிர் நண்பர் மரித்தபொழுது, இனி நாம் நாடக மேடையேறுவதில்லை; நாடகங்களும் எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன். அச் சமயம் யாராவது இத் தீர்மானத்தினின்றும் நீ மாறப் போகிறாய் என்று என்னிடம் கூறியிருப்பார்களாயின், அவர்களுக்குப் பித்தம் பிடித்திருக்கிறதெனச் சொல்லியிருப்பேன்; இருந்தும் ஒரு வருஷத்திற்குள்ளாக அத் தீர்மானத்தினின்றும் தவறினேன்! கேவலம் மனிதனுடைய மனோதிடமும் தீர்மானங்களும் இத்தகைத்தே! இது நாம் பெருமை பாராட்ட வேண்டியதற்கு நேர்விரோதமான விஷயமாயிருந்தபோதிலும், என்னுடைய நாடக மேடை அனுபவங்கள் யாவற்றையும் ஒன்றுவிடாமலும், ஒளியாமலும் எழுத நிச்சயித்திருக்கிறபடியால், இதையும் இங்கு எழுதுகிறேன்.

எனதாருயிர் நண்பர் ஞாபகம் கொஞ்ச நேரமாவது வராமலிருக்கும்படி, இடைவிடாது புஸ்தகங்களைப் படித்துப் பார்த்தேன். எனது சிநேகிதர்களுடன் சீட்டு, பில்லியர்ட்ஸ் முதலியன ஆடிப் பார்த்தேன்; கடற்கரைக்குச் சென்று உலாவிப் பார்த்தேன். என் மனத்திற்குத் தோன்றிய யுக்திகளை யெல்லாம் செய்து பார்த்தேன். எதிலும் கொஞ்சமேனும் பயன்படாமற் போயிற்று. உடம்பின் வெளியில் தைத்த முள்ளை எப்படியாவது பிடுங்கி எறியலாம்; இருதயத்தில் தைத்த முள்ளை எப்படிப் பிடுங்கி எறிவது? சாரங்கதரனைப் பற்றிச் சுமந்திரன் கூறியதாக நான் எழுதியது போல, நான் எங்குச் சென்றாலும் யாரைப் பார்த்தாலும் அவரது ஞாபகமே எனக்கு வந்து கொண்டிருந்தது. என் தகப்பனார் மடிந்தகாலை அத்துயரத்தை மறந்திருக்க வேண்டி மனோஹரன் நாடகத்தை எழுதிப் பூர்த்தி செய்தது போல, இச்சமயம் ஏதாவது எழுதலாமா என்று யோசனை பிறந்தது. அதன்மீது மஹா பாரதத்திலிருந்து பீஷ்மரது சரித்திரத்தை நாடக ரூபமாக எழுதலாமா என்று யோசித்து அதைத் தொடங்கினேன். இவ்வருஷம். இச் சந்தர்ப்பத்தில் என் சிறு வயதில் நான் கேட்ட ஒரு சிறுகதை ஞாபகம் வருகிறது. தீராத வியாதியால் பீடிக்கப்பட்ட ஓர் அரசன், தன் குடும்ப வைத்தியர் கொடுத்த மாத்திரைகளினால் ஒன்றும் குணமாகவில்லை என்று அவர்மீது கடிந்துகொள்ள, அந்த வைத்தியர் யுக்தி செய்து, குரங்கை நினைத்துக் கொள்ளாமல் இந்த மாத்திரையைப் புசித்தால் உங்களுக்கு உடம்பு சௌக்கியமாகும் என்று சொன்னாராம்; அதன் பிறகு அந்த அரசன் அம் மாத்திரையைப் புசிக்கக் கையிலெடுக்கும் போதெல்லாம், வைத்தியர் குரங்கை நினைத்துக் கொள்ளக்கூடாதென்று சொன்னாரல்லவா என்று ஞாபகம் வந்ததாம்! அம் மாதிரியாக இந்த பீஷ்ம சரித்திரத்தை நாடகமாக எழுத ஆரம்பிக்க உட்காரும் போதெல்லாம், எனதுயிர் நண்பர் ஞாபகம் வராமலிருக்கும்படி இதை எழுதத் தீர்மானித்தோமல்லவா என்கிற ஞாபகம் வரத் தலைப்பட்டது! அதன்பேரில் அவரைப்பற்றி மறக்க முயல்வதையும் விட்டேன்! அந் நாடகத்தில் முதல் அங்கம் முதற் காட்சி என்று ஆரம்பித்து சில வரிகள் எழுதி அப்படியே விட்டிருக்கும் காகிதம் என்னிடம் இன்னுமிருக்கிறது. இதை நான் எழுதி முடிப்பேனோ என்னவோ ஈசனுக்குத்தான் தெரியும். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் யாருக்காவது ஜோஸ்யம் தெரிந்தால், எனக்குத் தெரிவித்தால் நலமாயிருக்கும்.

பிறகு கொஞ்சகாலம் பொறுத்து கர்ணவதத்தை நாடகமாக எழுத ஆரம்பித்தேன். அதுவரையில் முப்பத்திரண்டு வருடங்களாக நாடகங்கள் எழுதிய கையானது சும்மா இருக்க முடியவில்லை! இதுதான் இனிமேல் நாடகங்கள் எழுதுவதில்லை என்று நான் தீர்மானித்த தீர்மானத்தின் முடிவாகும்! இனி நாடக மேடையேறுவதில்லை என்ற தீர்மானத்தின் முடிவைக் கூறுகிறேன்.

இவ் வருஷத்தின் ஆரம்பத்தில் சபையின் பொதுக் கூட்டத்தில் எனது நண்பராகிய துரைசாமி ஐயங்கார் தமிழ் கண்டக்டராக நியமிக்கப்பட்டார். அவர் ஏதோ காரணத்தினால், கிருஸ்த்துமஸ் விடுமுறையில் வழக்கப்படி பத்துப் பதினைந்து நாடகங்கள் ஆடவேண்டுமென்று தீர்மானித்து, ஹாலுக்குப் பணம் கட்டியபின், தமிழ் கண்டக்டர் வேலையை ராஜிநாமா கொடுத்தார். திடீரென்று அச் சமயம் வேறொருவரும் அந்த வேலையை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றார்கள். அச்சமயம் இத்தனை வருஷங்களாகப் பாடுபட்ட சபைக்கு நான் கைகொடுக்க வேண்டிய தாயிற்று. அதன்பேரில் நான் மறுபடியும் தமிழ் கண்டக்டராக இருக்க ஒப்புக்கொண்டேன். கண்டக்டராகத்தானே இருக்க ஒப்புக்கொண்டோம்; நாம் மேடைமீது நடிக்கப் போகிறதில்லையே என்று என் மனத்தைத் தேற்றிக் கொண்டேன். தமிழ் நாடகங்களுக்கெல்லாம் ஒத்திகை நடத்தினேன். அச்சமயம் அவற்றுள் முதல் தமிழ் நாடகமாகிய “பொன் விலங்குகள்” என்னும் எனது நாடகத்திற்கு ஒத்திகை நடத்திக் கொண்டு வந்தபொழுது, “பங்கஜவல்லி நாடகப் பாத்திரத்திற்கு, இந்தப் சந்தர்ப்பத்தில் ரங்கவடிவேலு இப்படி நடிப்பார்” என்று சொல்ல ஆரம்பித்தவன், என் பூர்வ ஞாபகமெல்லாம் வரவே வாய் குளறிக் கண்ணீர் ததும்ப, ஒத்திகையை நிறுத்த வேண்டியவனானேன். பிறகு என் மனத்தைத் தேற்றிக் கொண்டு ஒருவாறு ஒத்திகையை முடித்தேன். இச்சமயம் எங்கள் சபை ஆடிய மற்றொரு நாடகம் எனது நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் இயற்றிய சபலை என்னும் நாடகம். இதில் நான் எப்பொழுதும் சுவர்ணகிரி ஜமீந்தார் வேஷம் தரிப்பது வழக்கம். இம்முறை அங்ஙனம் செய்ய முடியாதென்று அப் பாத்திரத்தை வேறொரு ஆக்டருக்குக் கொடுத்திருந்தேன். அவர் நாடக தினம் சமீபித்த பிறகு, ஏதோ காரணத்தினால் தன்னால் அதை ஆட முடியாதென்று திருப்பிக் கொடுத்துவிட்டார். வேறொரு ஆக்டரை நாடக தினத்துக்குள் தயார் செய்வது அசாத்தியமாயிருந்தது. அந்நாடகத்தையாவது விட வேண்டும், அல்லது நானாவது அந்த வேடம் தரிக்க வேண்டும் என்னும் தர்மசங்கடத்தில் நின்றேன்! இதுவரையில் நான் உழைத்து வந்த சபையின் நலத்தைக் கருதினவனாய், என் மனத்தை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு அந்தப் பாத்திரத்தை நான் மேடையின் பேரில் நடித்தேன். இப் பாத்திரம் ஒரே காட்சியில் வருவதாயினும் இதை நடிப்பது சுலபமல்ல; அந்த வேஷம் புனையும்பொழுது எனது மற்ற சிநேகிதர்கள் மத்தியில் ஏதோ பராக்காயிருந்துவிட்டேன்; பிறகு நான் வர வேண்டிய காட்சி ஆரம்பித்தவுடன் பக்கப் படுதாவின் அருகிலிருந்து மேடைக்கு நான் வரவேண்டிய காலத்தை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்த பொழுது, என் இருதயத்திலிருந்த மாறாத வடு, “உதிரம் சொரிய ஆரம்பித்தது!” எனது உடம்பு நடுங்கியது, கால்கள் தள்ளாடின. பிறகு கண்மூடி, ஈசனைத் தியானித்தவனாய், மனத்தை தேற்றிக்கொண்டு, கண்ணீரை அடக்கி, இனி கால் வைப்பதில்லை என்று தீர்மானித்த அரங்கத்தின்மீது காலை வைத்து, என் பாகத்தை நடிக்க ஆரம்பித்தேன். நான் வாயைத் திறந்து முதலில் பேச வேண்டிய வார்த்தைகளைப் பேசுமுன் ஹாலில் வந்திருந்த ஏறக்குறைய அனைவரும் பெருங் கரகோஷம் செய்தனர். இனி சம்பந்தம் நாடக மேடை ஏறப் போகிறதில்லை என்று நினைத்திருந்த எனது நண்பர்கள், மறுபடியும் தெய்வாதீனத்தால் நாடக மேடை ஏறிவிட்டானே என்னும் சந்தோஷத்தினால், அவ்வாறு செய்தனர் என்று முகஸ்துதியால் என் ஆன்மாவை நானே திருப்தி செய்து கொண்டு அன்று நடித்தேன். என்ன காரணத்தினாலோ அன்று அவ்வேடத்தில் நான் நடித்தது போல் அப்பாத்திரத்தை அதற்கு முன்னும் நான் அவ்வளவு உருக்கமாக நடித்தததில்லை; பிறகும் நடித்ததில்லை. எனது பாகத்தை முடித்துக்கொண்டு அரங்கத்தை விட்டு நான் திரும்பிப் போகும்போதும், எங்கள் சபை அங்கத்தினரும் மற்றவரும் பெருங் கரகோஷம் செய்தனர். அம்மாதிரியான கரகோஷம் எங்கள் சபை அங்கத்தினரிடமிருந்து இதற்கு முன்பும் நான் பெற்றதில்லை; பிறகும் பெற்றதில்லை. அப்பொழுது என் மனத்தில் தோன்றிய எண்ணத்தை வெளிப்படையாய் இங்கு எழுதுகிறேன். “நம்முடைய இத்தனை நண்பர்கள், நாம் நடிப்பதை இன்னும் ஏதோ பார்க்க வேண்டுமென்று விரும்புகிறார்கள் போலிருக்கிறதே! நம்முடைய சுய இச்சையைக் கருதிச் சும்மா இருப்பதா? அல்லது நமக்கு எவ்வளவு மன வருத்தமிருப்பினும் இவர்கள் மனத்தைத் திருப்தி செய்வதா?” என்னும் கேள்வியேயாம்.

மறுதினம் சாயங்காலம் எங்கள் சபையோர் எனது பழைய நாடகமாகிய “லீலாவதி-சுலோசனா"வை நடத்தினார்கள். அதைப்பற்றிப் பிறகு எனது நண்பராகிய சுந்தரவரத அய்யங்கார், “எவ்வரி மான்ஸ் ரெவ்யு’ என்னும் பத்திரிகையில் ஆங்கிலத்தில் எழுதியதை இங்குத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன். இதுவரையில் இந் நாடகத்தில் சாதாரணமாக நடித்து வந்த இரண்டு முக்கிய ஆக்டர்கள், இன்று இல்லாமையானது குறிக்கப்பட்டது; அவர்களுள் ஒருவர் மீண்டும் திரும்பி வராத இடத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்! மற்றொருவர், தன் கடமைப்படி, அரங்கத்தின் மீதிருந்தார். ஆயினும் ஆக்டர்கள் ஆடும் இடத்திலில்லை; பக்கப் படுதாவின் பக்கத்தில், கண்டக்டராகத் தன் ஆயுளை எந்த வேலைக்காக அர்ப்பணம் செய்தாரோ, அந்த வேலையைப் பார்த்துக்கொண்டு!” இம்முறை நான் கண்டக்டராகப் புஸ்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, ஆக்டர்கள் மறந்து போகும் இடத்தில் அவர்கள் பாகங்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது, இதற்கு முன்பாக திருநெல்வேலியில் இந்நாடகம் ஆடினபொழுது அனுபவித்த துயரத்தைவிட, நூறு பங்கு துயரம் அதிகமாய் அனுபவித்தேன்; திருநெல்வேலியில் மறுபடி எனதுயிர் நண்பரை இவ்வுலகில் சீக்கிரம் காண்பேன் என்னும் ஆறுதல் இருந்தது; இம்முறை அந்த ஆறுதலும், ஆசையும் அடியுடன் அற்றவனாயிருந்தேன்!

இம்முறை டிசம்பர் விடுமுறைக் காலத்தில் எங்கள் சபை எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு ஆடிய பாத்திரங்களுள்ள நாடகங்கள் ஆடுவதில் நேர்ந்த முக்கியமான கஷ்ட மென்னவென்றால், அப் பாத்திரங்களை எடுத்துக்கொள்ள மற்ற ஆக்டர்கள் பெரும்பாலும் அஞ்சினர் - அவர் நன்றாய் நடித்த பாகங்களை நாம் அவரைப்போல் நடிக்காவிட்டால், சபையோர் எல்லாம் அப்படியில்லை என்று குறை கூறுவார்களே யென்று; நாடகங்களைப் பார்க்க வந்த சபையோர்களும் அப்படியே சொல்லித் தீர்த்தனர். முன்பு கூறிய எனது நண்பர் சுந்தரவரத ஐயங்கார் மேற்சொன்ன பத்திரிகையில் “காலவ ரிஷி” என்னும் நாடகத்தைப் பற்றி எழுதியபொழுது அடியில் வருமாறு வரைந்தனர்: ‘இம் முறை சுபத்திரை வேடம் பூண்ட எம். ராமகிருஷ்ண ஐயர், தௌர்ப்பாக்கியத்தால் சிறு வயதிலேயே மரணமடைந்த சி. ரங்கவடிவேலு மிகவும் விமரிசையாய் இப் பாத்திரத்தை நடித்தபடி, தானும் முயன்று பார்க்க வேண்டியதாயிற்று; அன்று சபையில் வந்திருந்தவர்களுள் ஒருவராவது அவர் நடிப்பதற்கில்லாமல் போயிற்றே என்று வருந்தாமல் இல்லை!” என்று எழுதினர்.

1924ஆம் வருஷம் நடந்த எங்கள் சபையின் நிகழ்ச்சிகளுள், சில துக்ககரமானவை, சில சந்தோஷகரமானவை. இவ்வருஷம் எங்கள் சபையின் பேட்ரன் ஆக இருந்த சர். சுப்பிரமணிய ஐயர் காலமானார். அன்றியும் எனது பழைய நண்பரான டி.வி. கோபாலசாமி முதலியாரும் காலமாயினார். பிறகு எனது நாடகமாகிய “பொன் விலங்குகள்” என்பது நடிக்கப்படும் பொழுதெல்லாம், இவர் ‘பிஸ்தாக் கொட்டைச் சாமி"யாராக நடித்ததைப் பார்த்தவர்கள், அவரைப்பற்றி நினையாத சமயம் கிடையாது. சாரங்கதர நாடகத்தில், இவர் மதுரகவியாக நடித்ததும் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்தது. இவர் நடுவயதிலேயே மரித்ததனால் எங்கள் சபை ஒரு ஹாஸ்யப் பாத்திரம் ஆடும் ஆக்டரையும் நான் எனது அத்யந்த நண்பர்களுள் ஒருவரையும் இழந்தோம்.

இவ் வருஷம் ஏப்ரல் மாதம் சென்னை கவர்ன்மென்டார் என்னை ஸ்மால் காஸ் கோர்ட் ஜட்ஜாக நியமித்தனர். எனது நண்பராகிய சர். சி. பி. ராமசாமி ஐயர் என்னை அழைத்து, இவ்வேலையை ஒப்புக் கொள்ளும்படி கேட்ட பொழுது, நான் அதற்கிசைந்ததற்கு முக்கியக் காரணம்; வக்கீலாக வேலை பார்த்துக் கொண்டிருந்தால், எந்நேரமும் என்னுடன் ஜுனியர் வக்கீலாகப் பல வருஷங்கள் கோர்ட்டில் பழகிய எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவின் ஞாபகத்தை மறக்க முடியாது; ஜட்ஜாகப் போனால், கொஞ்சம் மறந்திருக்க முடியுமென்பதேயாம். நான் இந்த வேலையை ஒப்புக்கொண்டபொழுது, அனேக நண்பர்கள், இனி நான் நாடக மேடையில் தோன்ற மாட்டேன் என்று உறுதியாய் நம்பினார்கள்; என்னிடம் தங்களுடைய அந்த அபிப்பிராயத்தையும் தெரிவித்தார்கள். அவர்களுக்கு நான் அடியிற் கண்டபடி பதில் சொன்னேன்: “இதற்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அப்படி ஏதாவது சம்பந்தமிருந்து இவ்விரண்டிலொன்றை நான் விட வேண்டியிருந்தால், நான் நாடக மேடையை விடமாட்டேன் என்று உறுதியாய் நம்புங்கள்” என்று கூறினேன். பிறகு ஒரு சமயம் என்னை சென்னையிலிருந்து வெளியூருக்கு டிஸ்டிரிக்ட் ஜட்ஜாக மாற்றுவதாக ஒரு வதந்தி பிறந்தபோது, ஒரு முக்கிய கவர்ன்மெண்ட உத்யோகஸ்தரிடம், அப்படிச் செய்வதனால், எனது ராஜிநாமாவைப் பெற்றுக்கொள்ள வேண்டி வரும் என்று தெரிவித்தது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. எனக்கு இந்த ஜட்ஜ் வேலை கிடைத்தபொழுது, என்னைப் பற்றிப் பத்திரிகைகளிலும் கூட்டங்களிலும், ஏதோ கொஞ்சம் புகழ்ந்து பேசியவர்களெல்லாம், நான் ஒரு நாடக ஆசிரியன் என்பதைப் பற்றிக் குறிப்பிடாதவர் இல்லை. இதுவே எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது.

எங்கள் சபையார் இவ்வருஷம் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி எனக்கு ஒரு உபசார விருந்து செய்தனர். அன்று நடந்த மற்ற விஷயங்களைப் பற்றி எனக்கு இங்கு எழுத இஷ்டமில்லை. அப்பொழுது நடந்த ஒரு வேடிக்கையான சமாச்சாரத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன். விருந்தின் ஆரம்பத்தில், விக்டோரியா ஹாலில் வரவழைக்கப்பட்டவர்களெல்லாம் உட்கார்ந்த பிறகு, எங்கள் சபையின் வழக்கப்படி, ஸ்டேஜுக்குள்ளாக, விநாயகர் துதியை எனது ஆக்டர் நண்பர்கள் ஆரம்பித்தனர். உடனே ஹாலில் உட்கார்ந்திருந்த நான், ஸ்டேஜுக்கு உள்ளே விரைந்து சென்று கண்ணை மூடிக்கொண்டு, என் வழக்கம்போல் எனது நண்பர்களுடன் விநாயகர் துதி, சரஸ்வதி துதி பாடல்களைப் பாடினேன். பாடி முடிந்தவுடன், என் அருகிலிருந்த நண்பர்கள் சிரித்தபொழுதுதான், என்னைக் கௌரவப்படுத்த வேண்டி அந்தச் சபை கூட்டப்பட்டது என்பது எனக்கு ஞாபகம் வந்தது! வயது சென்ற ஒரு கோமுட்டிக்குக் கலியாண சடங்கிற்காக வாத்தியம் வாசிக்க ஆரம்பித்த பொழுது, அவன் “எனக்கா கலியாணம்?” என்று கேட்டதாக ஒரு வேடிக்கைக் கதையுண்டு; அக் கதையை நினைத்து நகைத்துக் கொண்டு வெட்கத்துடன் மறுபடி ஹாலில் போய், எனக்கு ஏற்படுத்தியிருந்த ஸ்தானத்தில் உட்கார்ந்தேன்! “பழக்கம் பொல்லாதது; பாறைமேற் கோழிசீர்க்கும்” என்னும் பழமொழிப்படி, அனேக வருடங்களாக அப் பாட்டுகளை எனது நண்பர்களுடன் கூடிச் சேர்ந்து பாடி வந்தபடியால், இப்பொழுதும் அப் பாட்டுகள் மேடையின் மீதோ அல்லது ஒத்திகை அறையிலோ ஆரம்பிக்கப்பட்டால், என்னையுமறியாத படி என்ன வேலையிலிருந்த போதிலும் அதை நிறுத்திவிட்டுப் பாடுமிடத்திற்கே போய் மற்றவர்களுடன் அப் பாட்டுகளைப் பாடுகிறேன். இதே மாதிரியாக எங்கள் சபையில் இந்த நாற்பத்தைந்து வருடங்களாகத் தமிழ் நாடகங்கள் ஆடும் பொழுதெல்லாம் நாடகம் முடிந்தவுடன் இராமலிங்க ஸ்வாமி பாடலில் “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்னும் திவ்யமான பாடலைப் பாடி மங்களம் பாடுவது வழக்கம்; இந்தப் பாட்டை யாராவது தெருவில் பாடும் பிச்சைக்காரன் பாடிக் கொண்டு போனாலும், உடனே எழுந்திருந்து கைகூப்பி வணங்குகிற வழக்கம் எனக்குச் சுபாவமாய்விட்டது.

மேற்சொன்ன உபசார விருந்தின் முடிவில் நான் என்னைக் கௌரவப்படுத்திய சபையோருக்கு வந்தனமளிக்க வேண்டிய சமயம் வந்தபொழுது, “நீங்கள் எனக்குச் செய்த உபசாரத்தால் என் மனம் சந்தோஷமடைந்திருக்கிறது. ஆயினும், என் மனம் பூரணமாகத் திருப்தி அடையவில்லை; என் மனத்தில் ஒரு குறையிருக்கிறது; அக்குறை தீர்ந்தால்தான் எனக்குப் பூரண உவகையுண்டாகும். அது என்னவெனில், எனக்கு ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜ் வேலையானதுபோல், எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு ஹைகோர்ட்டு ஜட்ஜ் வேலையாகி, அவருக்கு நாம் எல்லோரும் இதுபோன்ற விருந்து செய்ய வேண்டுமென்பதே” என்று கூறினேன் என் வேண்டுகோளுக்கிணங்கி, ஈசன் அருளியது போல் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவருக்கு அப்படியே ஹைகோர்ட் ஜட்ஜ் வேலையாச்சுது! நான் கோரியபடியே, அவருக்கு எங்கள் சபையார் இவ்வருஷம் ஜூலை மாதம் 26ஆம் தேதி உபசார விருந்தளித்தனர்.

எங்களிருவருடைய நட்பைப்பற்றி, இதை வாசிக்கும் நண்பர்களுடைய அனுமதியின் மீது, ஒரு விந்தையான சமாச்சாரத்தை இங்கெழுத விரும்புகிறேன். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் 1882ஆம் வருஷம், முதல் முறை பச்சையப்பன் கலாசாலையின் கீழ்ப்பிரிவாகிய கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் சந்தித்தோம். அது முதல் மிகுந்த அன்யோன்ய ஸ்நேகிதர்களாகி, தெய்வ கடாட்சத்தால் ஐம்பது வருஷத்துக்கு மேல் கழித்தோம். இதைக் கொண்டாட வேண்டி, எங்கள் சபை ஆக்டர்களுக்குள் முக்கியமானவர்களையெல்லாம் வரவழைத்து, எனது பால்ய நண்பர் இதை நான் எழுதிய வருஷமாகிய 1932ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான் பிறந்த தேதியில் எனக்கு ஒரு சிறந்த விருந்தளித்தார். நாங்களிருவரும் மேற்சொன்னபடி பள்ளிக்கூடத்தில் ஒன்றாய்ப் படித்தோம். பிறகு லா காலேஜில் ஒன்றாய்ப் படித்தோம். லா பரீட்சையில் ஒன்றாய்த் தேறினோம். ஒரே வருஷத்தில் வக்கீல்களானோம். பிறகு ஒரே வருஷத்தில் மேற்சொன்னபடி ஜட்ஜுகளானோம்! இதைவிட இன்னும் விசேஷமான சமாச்சாரம் என்னவெனில், நாங்களிருவரும் ஒரே வருஷத்தில் ஜட்ஜ் வேலையினின்று விலகினோம்! 1928ஆம் வருஷம் எனக்கு 55 வயது பூர்த்தியானபடியால், கவர்ன்மெண்ட் சட்டப்படி விலகினேன். அவர் அதே வருடம் தனக்கு ஹைகோர்ட்டு ஜட்ஜ் வேலை இனி வேண்டாமென ராஜினாமா கொடுத்துவிட்டார்! அன்றியும் நாடக மேடையிலும் ஏறக்குறைய 45 வருடமாக ஒன்றாய் உழைத்து வருகிறோம். இவ்வாறு இவரது இணைபிரியா நட்பை இந்த 50 வருட காலமாக நான் பெற்றது என் முன்னோர்கள் செய்த பூஜா பலனேயென்று உறுதியாய் நம்புகிறேன். இவரை எனது நண்பனாகவும் குருவாகவும் ஆத்ம பந்துவாகவும் அடைந்து நான் பெற்ற பலனை என்னால் எடுத்துரைக்க இயலாது. அதைப்பற்றி நான் நினைக்கும்பொழுது மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருவாசகத்தில்,

“தந்ததுன்றன்னை கொண்ட தென்றன்னைச் சங்கராவார்
வார்கொலோ சதுரர்
அந்தமொன்றில்லா வானந்தம் பெற்றேனியாது நீபெற்ற
தென்றென் பால்?

என்று திருவாய் மலர்ந்தருளியது எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

ஈசன் தன் கருணையினால் இவ்வுலகில் எனக்களித்த நண்பர்களுள் இவரை முதலாகவும், காலஞ்சென்ற ரங்கவடிவேலுவை இரண்டாவதாகவும், தற்காலம் என்னுடன் நாடக மேடையில் நடித்து வரும் கே. நாகரத்தினம் ஐயரை மூன்றாவதாகவும் மதிக்கிறேன்.

இனி இக் கிளைக் கதையை விட்டு மூலக் கதைக்குப் போகிறேன். இந்த 1924ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி எனது தமிழ் ஆசிரியராகக் கொள்ளும் ம-ள-ள-ஸ்ரீ, மஹாமஹோபாத்யாயர் வே. சாமிநாத ஐயர் அவர்கள் எங்கள் சபையில், “நாடகத் தமிழ்” என்பதைப் பற்றி ஒரு உபன்யாசம் செய்தார். இவர் அன்று எடுத்துக் கூறிய விஷயங்களை ஆதாரமாகக் கொண்டே சில வருடங்களுக்குப் பிறகு, சென்னை சர்வகலா சங்கத்தார் ஆதரவின்கீழ், நாடகத் தமிழைப்பற்றி மூன்று உபன்யாசங்கள் பச்சையப்பன் கலாசாலையில் நான் செய்தேன். இது அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இனி இவ் வருடம், நாடக மேடையின்மீது மறுபடியும் கதாநாயகன் வேடம் பூணுவதில்லை என்று தீர்மானித்த நான், அத்தீர்மானத்தினின்றும் வழுவி, மறுபடியும் முக்கிய வேடம் பூண்ட கதையை எழுதுகிறேன்.

இவ்வருஷம் நவம்பர் மாதம் 23ஆம் தேதி அதிவிருஷ்டியினால் தென் இந்தியாவின் சில பிரதேசங்களில் ஜனங்கள் அடைந்த மிகுந்த கஷ்டத்தை நிவாரணம் செய்வதற்காக ஏற்படுத்திய பண்டிற்காக எங்கள் சபையில் ஒரு நாடகம் நடத்தி, அதன் வரும்படியை அந்த பண்டிற்குக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தோம். அதற்காக ஒரு தெலுங்கு நாடகம் நடத்த வேண்டுமென்றும், அதன் பொருட்டு பல்லாரியிலிருந்து எனது நண்பராகிய ராகவாச்சார்லு அவர்களை வரவழைக்க வேண்டுமென்றும் ஏற்பாடு செய்தோம். அந்நாடகத்தைச் சென்னை கவர்னர் அவர்கள் ஆதரவிலும் முன்னிலையிலும் நடத்த வேண்டுமென்று அவரைக் கேட்க அவரும் இசைந்தார். இவ்வாறு எல்லா ஏற்பாடுகளும் செய்தான பிறகு, திடீரென்று எட்டுப் பத்துத் தினங்களுக்கு முன்பாக பல்லாரியிலிருந்து ராகவாச்சார்லு அவர்கள்தான் அந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி சென்னைக்கு வந்து நாடகமாட ஏதோ அசந்தர்ப்பத்தினால் முடியாதென்று தெரிவித்தார். அந்த சமாச்சாரத்தைக் கேட்டவுடன் எங்கள் சபையின் அங்கத்தினர் மிகவும் மனங்கலங்கினர்; அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லையென்றே நான் சொல்ல வேண்டும். ராகவாச்சார்லுவின் மீது நான் குற்றங் கூறவில்லை. ஏதோ மிகுந்த அசந்தர்ப்பமாயிருந்தபடியால் தான் வருவதற்கில்லையென்று தெரிவித்திருக்கிறார்; ஆயினும் அவர் ஒருவர் வர முடியாதபடியால், நம்முடைய சபை ஏற்றுக்கொண்ட தர்ம கைங்கர்யத்தையே கைவிடவேண்டி யிருக்கிறதல்லவா என்று துக்கித்தேன். எனதாருயிர் நண்பர் உயிருடனிருந்தால், மறுநாளே வேண்டினும் ஏதாவது தமிழ் நாடகம் ஆடியிருக்கக் கூடுமல்லவா என்று வருத்தப்பட்டேன். “கிட்டாதாயின் வெட்டென மற” எனும் ஔவையாரின் வாக்கியம் ஞாபகம் வர, போனது போகட்டும், இப்பொழுது நமது சபையைக் கரையேற்றுவதெப்படி என்று பலவாறு யோசித்து, ஒரு வழியும் காணாதவனாய்க் கடைசியில் ஈசனைப் பிரார்த்தித்து, நீர் விட்டவழியாகிறது என்று உறங்கினேன். காலையில் எழுந்தவுடன், எனதாருயிர் நண்பர் போனவுடன், வேறொருவருடனும் நாடக மேடையில் நான் நடிப்பதில்லை என்ற தீர்மானித்தினின்றும் மாறித்தான் ஆகவேண்டும்; இவ்வாறு நாம் செய்வது என் சுய நன்மையைக் கருதிச் செய்யவில்லை; சபையின் பொது நன்மைக்காகத்தானே செய்கிறோம்; எனதுயிர் நண்பர், தானிருக்குமிடத்திலிருந்து இதைத் தவறாக எண்ணமாட்டார் என்று என் மனத்தில் தோன்றியது; உடனே இதுதான் ஜகதீசன் நமக்குக் காட்டிய வழி என்று உறுதியாய் நம்பினவனாய், அன்று சாயங்காலம் எங்கள் சபையின் நிர்வாக சபைக் கூட்டத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். அக்கூட்டத்தில் ராகவாச்சார்லு அவர்கள் வர முடியாதென்று தெரிவித்த விஷயத்தைக் காரியதரிசிகள் தெரிவிக்க, அப்படியாயின், வேறு தக்க நாடகம் நடிக்க நம்மால் ஏலாதென்று 23ஆம் தேதி நாடகத்தை நிறுத்தத்தான் வேண்டுமென்று தீர்மானிக்க ஆரம்பித்தார்கள்; அதன்பேரில் என் நாக் குழற காலையில் நான் செய்த தீர்மானத்தைத் தெரிவித்தேன். அதன்பேரில் அங்கிருந்த எனது நண்பர்களெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டனரென்றே நான் உண்மையை எழுத வேண்டியவனாயிருக்கிறேன். அதன்பேரில் தமிழில் என்ன நாடகம் ஆடலாம் என்கிற பேச்சு வந்தவுடன், நமக்குப் பணம் அதிகமாய் வருகிற நாடகமாயிருக்க வேண்டும்; அன்றியும் கவர்னர் வரப்போகிறபடியால் அவர் எளிதில் அறியக்கூடிய நாடகமாயுமிருக்க வேண்டும், என்று கூறி, ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் பிரசித்தி பெற்ற நாடகமாகிய “ஹாம்லெட்” என்னும் நாடகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பாகிய “அமலாதித்யன்” என்பதை நடத்தலாமென்று தெரிவித்தேன். அதை எனது நண்பர்கள் குதூஹலத்துடன் ஒப்புக்கொண்டு, “அது சரிதான். இந்த நாடகத்தில் யார் அபலை வேஷம் போட்டுக்கொள்வது?"என்று கேட்டனர். இந்த அபலை வேஷத்தில் எனதுயிர் நண்பர் மிகவும் சிறந்த பெயர் பெற்றிருந்ததைப்பற்றி முன்பே நான் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். ஆகவே காலையில் நான் இந் நாடகத்தை ஆட வேண்டுமென்கிற தீர்மானத்திற்கு வந்தவுடன், இதைப்பற்றி யோசித்து வைத்திருந்தேன். எங்கள் சபையில் ஸ்திரீ வேடம் தரிக்கும் ஒவ்வொரு ஆக்டரைப் பற்றியும் யோசித்துப் பார்த்து, இக்கஷ்டமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளத் தக்கவர்கள் யார் என்று ஆலோசித்து, கே. நாகரத்தினம் ஐயர்தான் இருப்பவர்களுக்குள் இதற்கு ஏற்றவர் என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தேன். இவர் இதுவரையில் எங்கள் சபையில் ஸ்திரீ வேடம் பூண்டு நடித்தபொழுது, எல்லாப் புதிய ஆக்டர்களையும் கவனிப்பது போல் இவரையும் கவனித்திருந்தேன். ஸ்திரீ வேஷத்திற்குக் தக்க மிகுந்த ரூபலாவண்யமுடையவர்; சங்கீதத்திலும் நல்ல பயிற்சியுடையவர்; ராகமும் தாளமும் தவறாதபடி மனமுருகப் பாடுவார்; ஆக்டு செய்வதில் மாத்திரம் கொஞ்சம் போதாமலிருந்தது அச்சமயம்; அன்றியும் உரக்கப் பேசமாட்டார்; கடைசியிற் கண்ட இவ்விரண்டு குற்றங்களையும் நாம் சரிப்படுத்தி விடலாமென்கிற முடிவுக்கு வந்தேன். ஆகவே நிர்வாக சபை நண்பர்கள் யாருக்கு அபலை வேஷம் கொடுக்கப் போகிறாய் என்று என்னைக் கேட்டபோது ‘கே. நாகரத்தினம் ஐயருக்குக் கொடுக்கலா மென்றிருக்கிறேன், அவர் ஒப்புக்கொண்டால் என்று தெரிவித்தேன். அதன்பேரில் அப்பொழுது எங்கள் நிர்வாக சபையில் ஓர் அங்கத்தினராக இருந்த அவர் ‘அந்தப் பாத்திரத்தை எப்படி ஆக்டு செய்வது என்று நீங்கள் சொல்லிக் கொடுப்பதானால் எனக்கு ஆட்சேபணையில்லை’ யென்று ஒப்புக்கொண்டார். அதன்பேரில் எங்கள் நிர்வாக சபையார், 23ஆம் தேதி, அந்த நாடகத்தைப் போட வேண்டுமென்று தீர்மானித்து, கவர்னர் அவர்களுக்கும் தெரிவித்து எல்லா ஏற்பாடுகளும் செய்தனர். அந்நாடகத்தில் மற்ற ஆக்டர்களெல்லாம் பழைய ஆக்டர்கள். அவர்களுக்கு நான் புதிதாய் ஒன்றும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை யென்று தீர்மானித்து இடையிலிருந்த நான்கைந்து நாட்களும், கே. நாகரத்தினம் ஐயருக்கு அந்த அபலை வேடமாட ஒத்திகை செய்து வைத்தேன். முதலில் இதை, ரங்கவடிவேலுவைப் போல் அவ்வளவு விமரிசையாய் ஆக்டு செய்வாரோ என்னவோ என்று எனக்குச் சந்தேகமிருந்தபோதிலும், இரண்டு மூன்று ஒத்திகைகளுக்குப் பிறகு, சுமாராக நடிப்பார் என்கிற தீர்மானத்திற்கு வந்தேன். ஆனால் 23ஆம் தேதி இந்த நாடகமானது மேடையின் பேரில் நடிக்கப்பட்டபொழுது அதிக விமரிசையாய் நடித்து என்னையே ஆச்சரியப்படும்படி செய்தார் என்று நான் கூற வேண்டும். கவர்னர் அவர்கள் உட்பட வந்திருந்தவர்களெல்லாம், இவர் அபலையாக, பைத்தியக்காரிக் காட்சியில் நடித்ததை மிகவும் மெச்சினர். நான் சொல்லிக் கொடுத்ததைவிட மேலாகவும், ரங்கவடிவேலுவைவிட அதிக விமரிசையாகவும் இக்காட்சியில் நடித்தார். இதற்குமுன் எனதுயிர் நண்பர் இந்த அபலை வேடம் தரித்துப் பன்முறை நடித்ததைப் பார்த்திருந்த பல நண்பர்கள், இந்த வேடத்தில் ரங்கவடிவேலுவைவிட நாகரத்தினம் மிகவும் நன்றாக நடிக்கிறார் என்று பன்முறை கூறக் கேட்டிருக்கிறேன். என்னுடைய அபிப்பிராயமும் அதுவே. என்னுடன் ரங்கவடிவேலு இருபத்தெட்டு வருடங்களாக நடித்த வேடங்களிலெல்லாம், நாகரத்தினமய்யர் இந்த அபலை வேடத்தில் அவரைவிட மேலாக நடித்திருக்கிறார் என்று கூறுவது மிகையாகாது. அவர் இதற்குப் பிறகு இந்த எட்டு வருடங்களாக, ரங்கவடிவேலு நடித்த நாடகப் பாத்திரங்களுக்குள் பத்துப் பன்னிரண்டு, என்னுடன் ஆக்டு செய்திருக்கிறார் இதுவரையில்.

இந்த அமலாதித்யன் நாடக முடிவில் மாட்சிமை தங்கிய சென்னை கவர்னர் அவர்கள் நாடக மேடைக்குள் வந்து நாகரத்தினம் ஐயரையும் என்னையும் மிகவும் நன்றாக நடித்ததற்காகச் சற்றுப் புகழ்ந்து கொண்டாடினார். அவர் போன பிறகு, எங்கள் சபை பிரசிடென்டாகிய சேஷகிரி ஐயர் அவர்கள் ‘சம்பந்தம்! அம்மட்டும் இந்த நாடகத்தை சரியாக ஆடி முடித்தாயே! சந்தோஷம். எங்கு இடையில், ரங்கவடிவேலுவை நினைத்துக் கொண்டு, உன் பாகத்தைச் சரியாக ஆடாது விடுகிறாயோ என்று பயந்து கொண்டே இருந்தேன்’ என்று தெரிவித்தார்.

மேற்சொன்ன அமலாதித்ய நாடகத்தின் செலவு போக, ரூபாய் 300, அதிவிருஷ்டி நஷ்ட பண்டிற்கு அனுப்பினோம். இந்நாடகம் ஆடின மறுமாசம் எங்கள் சபையின் வழக்கப்படி டிசம்பர் மாதத்தில் பத்துப் பதினைந்து நாடகங்கள் ஆட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

அந் நாடகங்களுக்குள் மூன்று நாடகங்களில் நான் முக்கியமான பாத்திரங்களை எடுத்துக் கொள்ளத் தீர்மானித்தேன்; அதாவது, ரத்னாவளியிலும், லீலாவதி-சுலோசனாவிலும், மனோகரனிலும். இந் நாடகங்களில் என்னுடன் நடிக்க வேண்டிய முக்கிய ஸ்திரீ பாகங்களை அச்சமயம் எங்கள் சபையில் ஸ்திரீ வேடங்களில் நன்றாய் நடிக்க வல்லமை வாய்ந்திருந்த, மூன்று முக்கிய ஆக்டர்களுக்குக் கொடுத்தேன். அதாவது ரத்னாவளியில் வாசவதத்தை வேடத்தை எனது நண்பர் ஈ. கிருஷ்ண ஐயர் பி.ஏ., பி.எல்.க்கும், விஜயன் வேடத்தை சாமிநாத ஐயருக்கும், சுலோசனை வேடத்தை கே. நாகரத்தின ஐயருக்கும்; இவ்வாறு நான் பகிர்ந்து கொடுத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இனி நாடக மேடையில் முக்கியமான பாத்திரங்களைப் பூணுவதில்லை என்கிற தீர்மானத்தினின்றும், குரங்கானது கிருத்திகை விரதம் அனுஷ்டித்ததுபோல், கொஞ்சம் கொஞ்சமாக மாறி மறுபடியும் ஆடும்படியாக ஆகிவிட்டது; இவர்கள் மூவரில் யார் என் மனத்திற்குத் திருப்திகரமாய் மேடையின் மீது நடிக்கிறார்கள் எனக் கண்டறிந்து, அவர்களுடனேயே இனி நடிக்க வேண்டும் என்பதேயாம். இப்பரீட்சையில் தேறினவர், இது முதல் தற்காலம் வரை என்னுடன் முக்கிய ஸ்திரீ வேடம் பூண்டு நடித்து வரும் எனது பிரிய நண்பர் கே. நாகரத்தினம் ஐயரே. இவர் சுலோசனையாக நடித்தது மிகவும் நன்றாயிருந்ததென சபையோரெல்லாம் புகழ்ந்தனர். எனக்கும் அப்படித் தானிருந்ததெனத் தோன்றியது; மற்ற இருவரும் நன்றாய் நடிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை; ஆயினும் இவர் நடித்தது மற்றிருவர் நடித்ததைவிட நன்றாயிருந்ததெனச் சொல்ல வேண்டியவனாயிருக்கிறேன்.

இவ்வருடம் “நமது நாடகங்களை அபிவிருத்தி செய்வது எப்படி” என்கிற விஷயத்தைப் பற்றி எங்கள் சபையில் நான் ஒரு உபன்யாசம் செய்தேன். அச்சமயம் எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் அக்கிராசனம் வகித்தார்.