நாடக மேடை நினைவுகள்/26ஆவது அத்தியாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

26ஆவது அத்தியாயம்

னி 1925ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.

இவ்வருஷம் எங்கள் சபையின் வைஸ் பிரஸிடெண்டுகளில் ஒருவராயிருந்த சி.பி. ராமஸ்வாமி ஐயருக்கு நைட் பட்டம் வந்ததற்காக, ஒரு விருந்து கொடுத்தோம். பிப்ரவரி மாதம் 20ஆம் தேதியிலும், ஏப்ரல் மாதம் 26ஆம் தேதியிலும், சபையின் அங்கத்தினரைக் கொண்டே இரண்டு சங்கீதக் கச்சேரிகள் ஏற்பாடு செய்து பார்த்தோம். அவை அத்தனை நன்றாக இல்லை என்பது என் எண்ணம். சபையோர்களுக்கு இது அவ்வளறாக ருசிக்காதபடியால் இவ் வழக்கத்தை விட்டோம்.

“தமிழ் நாடகமும் திருக்குறளும்'"என்ற விஷயத்தைப் பற்றி தமிழ் வித்துவான் எஸ். குப்புசாமி முதலியாரைக் கொண்டு ஒரு உபன்யாசம் செய்வித்தோம். இத்தகைய உபன்யாசங்கள் அங்கத்தினர் மனத்தை அவ்வளவாகக் கவரவில்லை என்பது என் தீர்மானம்.

இவ் வருஷம் சபாபதி மூன்றாம் பாகம் அல்லது “ஒரு ஒத்திகை” என்னும் சிறு நாடகத்தை, கோர்ட்டு விடுமுறைக் காலத்தில் எழுதி முடித்தேன். இச் சிறு நாடகத்தில், எனது நண்பர்களுக்கு நகைப்பை உண்டாக்கத்தக்க ஒரு விஷயமுண்டு; அதாவது இதன் நாடகப் பாத்திரங்களுக்குள், என்னையே ஒரு நாடகப் பாத்திரமாகச் சேர்த்து எழுதியுள்ளேன். இந்நூலை வாசித்திருக்கும் எனது நண்பர்கள், அந்நாடகப் பாத்திரங்களின் குறிப்பில் “சம்பந்த முதலியார்! ஒரு நாடகாசிரியர்” என்பதைப் பார்த்து நகைத்திருக்கலாம்! இது இவ்வருஷத்திய தசராவின் முதல் நாளில் நடிக்கப்பட்ட பொழுது, நான் சாதாரணமாக அணியும் தலைக் குட்டை, கோட்டு முதலியன அணிவித்து, ஒரு ஆக்டரை எனது நண்பர் வெங்கடாசல ஐயர், என்னைப்போலிருக்கும்படி முகத்தில் வர்ணம் முதலியன தீட்டி, மேடையின் மீது ஏற்றுவித்தார். இதைக் கண்டு சபையோர்களெல்லாம் மிகவும் சிரித்தபொழுது, அவர்களுள் ஒருவனாக உட்கார்ந்து நானும் சிரித்தேன். ஒரு நாடகாசிரியர் தன்னையே ஒரு நாடகப் பாத்திரமாக வைத்து ஒரு நாடகமெழுதியதாக இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. அப்படியின்றி இதை வாசிக்கும் நண்பர்கள், அப்படிப்பட்ட உதாரணத்தை எனக்கெடுத்துக் கூறுவார்களாயின், என் அபிப்பிராயத்தைத் திருத்திக் கொள்ளத் தடையில்லை.

இவ்வருஷம் நடந்த மற்றொரு நிகழ்ச்சி என்னவெனில், ஸ்ரீ கிருஷ்ண விநோத சபையின் தலைவராகிய கன்னையா, எங்கள் சபையின் ஆதரவின்கீழ், ஒரு நாள் தனது “தசாவதாரம்” என்னும் நாடகத்தை நடத்தினார். இந் நாடகத்தைப் பற்றியும், கன்னையாவைப் பற்றியும் நாடகக் கம்பெனிகளைப் பற்றி என்னுடைய அபிப்பிராயத்தை எழுதும் பொழுது எழுதலாமென்றிருக்கிறேன்.

இவ் வருட ஆரம்பத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியைப் பற்றி எழுத மறந்தேன்; அதாவது இவ் வருஷம் ஜனவரி மாதம் 31ஆம் தேதி, நேப்பியர் பார்க்கில், எங்கள் நாடக சாலையும் இருப்பிடமும் கட்ட அஸ்திவாரக் கல் எங்கள் சபையின் பிரசிடெண்டாகிய டி.வி. சேஷகிரி ஐயர் அவர்களால் போடப்பட்டதேயாம். இந்த வைபவமானது எல்லாம் மங்களமாய் முடிந்தபோதிலும், என் மனத்தில் மாத்திரம் என்னையுமறியாதபடி ஏதோ குறையாயிருந்தது. அக் கல்லானது சரியாக அமைக்கப்பட்ட பிறகு, எல்லோரும் தங்களிருப்பிடம் போகப் புறப்பட்டபொழுது, நானும் அதைப் பார்த்து விட்டுத் திரும்புங்கால், “இக் கட்டடம் முடிந்த பிறகு எத்தனை வருடங்களாவது பொறுத்து ஒரு நாள், ‘நெடு நிலை மாடம் கால்சாய்ந்துற்றுக் கழுதை மேய்பாழாயினுமாகும்’ என்கிற வாக்கியபடி, இது பாழாகி, இக் கல் பெயர்க்கப்பட்டு, அதனுள் நாம் இன்று வைத்த நவரத்தினங்கள், பொன் முதலிய நாணயங்கள் யார் கண்ணுக்காவது புலப்படுமல்லவா!” என்கிற யோசனையானது எக்காரணத்தினாலோ பிறந்தது அச்சமயம். சில வருடங்களுக்குள் அதைப் பெயர்த்து எடுத்துப் பார்க்கும் அபாக்கியம், எனக்கே கிட்டுமென நான் கனவிலும் நினைத்தவனன்று! இது நடந்த மூன்று வருடங்களுக்கெல்லாம், நேப்பியர் பார்க் நிலம் கட்டிடத்திற்குத் தக்கதன்று என்று நாங்கள் கண்டறிந்து, கவர்ன்மெண்டாருக்கு அதை மறுபடியும் திருப்பிக் கொடுக்க நேரிட்ட பொழுது, இரண்டொரு கொல்லர்களுடன் போய் அக் கல்லைப் பெயர்த்து எடுத்து, அதனுள் வைத்த பொருள்களையும், காகிதங்கள் முதலியவற்றையும், வாடிய மனத்துடன் எங்கள் சபைக்குக் கொண்டு வந்து சேர்த்தேன்! அப்பொழுது ஸ்காட்லண்டு தேசத்துக் கவியொருவர் எழுதிய இரண்டடிகள் என் நினைவிற்கு வந்தன. அதை இங்குத் தமிழில் ஒருவாறு மொழி பெயர்த்து எழுதுகிறேன். “மனிதர்களும் மற்றும் அற்பப் பிராணிகளும் மண்மீது செய்யும் பிரயத்தனங்கள் எத்தனை முறை மாறி அழிகின்றன!” என்பதேயாம்.