நாடக மேடை நினைவுகள்/28ஆவது அத்தியாயம்
இனி 1927ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.
அவற்றுள் முக்கியமாகக் குறிக்க வேண்டியது எங்கள் சபையார் சென்னையைவிட்டு, மறுபடியும் வெளியூர்களுக்குப் போய் நாடகங்கள் நடத்தியதேயாம். 1922ஆம் வருஷம் கடைசியாக திருநெல்வேலி, திருவனந்தபுரம் போயிருந்ததைப்பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன். மறு வருடம் ரங்கூனுக்குப் போகலாமா என்கிற பேச்சு வந்து, அது தடைப்பட்டது. அவ்வருஷம் எனதுயிர் நண்பர் என்னையும், எங்கள் சபையையும் இவ்வுலகையும் விட்டுச் சென்றதும், இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அதன் பிறகு மூன்று நான்கு வருடங்களாக, வெளியூர்ப் பிரயாணம் என்கிற பேச்சே ஆரம்பிக்கப்படவில்லை. இவ் வருஷம் எனது நண்பர் எஸ். சத்தியமூர்த்தி ஐயர், தமிழ்க் கண்டக்டராகப் பொதுக் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் இவ் வருஷம் நமது சபை எங்காவது வெளியூருக்குப் போக வேண்டும் என்று பிரேரேபித்து தன் ஜனன பூமியாகிய புதுக்கோட்டைக்கும், மதுரைக்கும் போனால் நலமா சொன்னார். எனக்கு மாத்திரம் இந்தப் பிரயாணத்தினால் சபைக்கு லாபம் கிடைப்பது கஷ்டம் என்று மனத்தில் தோன்றியது. ஆயினும் முன்பு போல டி.சி. வடிவேலு நாயகர் கன்டிராக்டராக சபைக்கு 1,000 ரூபாய் கொடுக்க இசைந்திருக்கின்றார் என்று சத்தியமூர்த்தி ஐயர் கூறவே, நாம் இதைத் தடுப்பானேன், சபைக்கு ரூபாய் 1,000 வருவதற்குத் தடங்கலாக இருப்பானேன் என்று சும்மா இருந்துவிட்டேன். அதன் பேரில் சபையார், புதுக்கோட்டையில் நான்கு நாடகங்களும், மதுரையில் ஐந்து நாடகங்களும் ஆட வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அப்பொழுது புதுக்கோட்டைக்கு நேராக ரெயில் இல்லாதபடியால், தஞ்சாவூர் வழியாக, பஸ் ஏறிச் சென்றோம்.
புதுக்கோட்டையில் ஆடிய நான்கு நாடகங்களில் முதன் மூன்றாகிய, மனோஹரன், காலவ ரிஷி, லீலாவதிசுலோசனா நாடகங்களில் நானும், எனது புதிய நண்பர் கே. நாகரத்தினம் ஐயரும் ஆடினோம். அவர் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தபடியால் மூன்றாவது நாடகமானதும் சென்னைக்குத் திரும்பி வரவேண்டிய திருந்தது. கடைசி நாடகமாக ஹரிச்சந்திர நாடகத்தை வைத்துக்கொண்டோம். இதில் எனது நண்பர் டாக்டர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியும், வடிவேலு நாயகரும் முக்கியப் பாகங்கள் எடுத்துக் கொண்டனர். பல காரணங்களால் இந்த நாடகங்களுக்கு எங்கள் கண்டக்டராகிய சத்தியமூர்த்தி ஐயர் எண்ணியபடி அவ்வளவு பணம் வசூலாகவில்லை. மதுரைக்குப் போனால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று ஆக்டர்களைத் தேற்றினார். இவ்விடம், கே. நாகராஜ ஐயர், வி. சா. கெ. ச. சோமசுந்தரம் செட்டியார், திவான்பஹதூர் முத்தையா செட்டியார் அவர்கள், எங்கள் சபையோருக்கு விருந்தளித்தனர்; அன்றியும் எங்கள் சபைக்கு ஒரு வந்தனோபசாரப் பத்திரமும் கொடுக்கப்பட்டது. இவ்விடம் மேற்சொன்ன நான்கு நாடகங்களையும் முடித்துக் கொண்டு, பஸ் மூலமாகத் திருச்சிராப்பள்ளிக்குப் போய் அங்கிருந்து ரெயிலேரி மதுரையை அடைந்தோம். அன்று காலை புதுக்கோட்டையை விட்டுப் புறப்படும் பொழுது எனக்கு உடம்பு சொஸ்தமில்லாதிருந்தது. அதற்கு முக்கியக் காரணம், அதற்கு முந்திய தினம் நான் மழையில் நனைந்ததே என்று நினைக்கிறேன். புதுக்கோட்டைக்கு வரும்பொழுதே எனது இடது காலில் ஒருவிதமான சிரங்கு இருந்தது; மழை நீரில் அப் புண்ணுடன் நடந்து வரவே, மறுநாட் காலை எனக்கும் கொஞ்சம் ஜ்வரம் போலிருந் தது. அதைக் கவனியாது, மற்றவர்களுடன் பஸ் ஏறிப் புறப்பட்டேன். சாயங்காலம் மதுரையில் ரெயிலிலிருந்து இறங்கும்பொழுது எனக்கு ஜ்வரம் ஆரம்பித்து விட்டது. என்னடா இது, யாழ்ப்பாணத்துக் கதை மறுபடியும் ஆகாதிருக்க வேண்டுமே யென்று, மீனாட்சி அம்மனைப் பிரார்த்தித்துக்கொண்டு இறங்கினேன். ரெயில் ஸ்டேஷனில், எங்களை வரவேற்பதற்காக எனது பழைய நண்பராகிய பி. ராமமூர்த்தி பந்துலு, மாணிக்கவாசகம் பிள்ளை முதலியோர் வந்திருந்தனர். எனக்கு உடம்பு அசௌக்கியமாயிருப்பதைத் தெரிவிக்கவே, எனது நண்பர்கள் என்னை உடனே, எங்களுக்கு ஏற்படுத்திய ஜாகையாகிய மதுரை கலாசாலை ஹாஸ்டலுக்குக் கொண்டுபோய் விட்டனர். அன்று சயங்காலம், பிறகு எனக்கு நண்பர்களான, மதுரை டிராமாடிக் கிளப் அங்கத்தினர் பலரை அதன் கண்டக்டராயிருந்த ராமமூர்த்தி பந்துலு அவர்கள் இன்னாரின்னாரென எனக்குத் தெரிவித்தார். அச்சமயம் பார்த்ததாக அவர்களுள் டாக்டர் சீதாராமன் என்பவர் ஒருவரை மாத்திரம் ஞாபகமிருக்கிறது. மற்றவர்களெல்லாம் எனக்கு ஞாபகமில்லாதது அப்பொழுது எனக் கிருந்த தேகஸ்திதி பற்றியிருக்கலாம். பிறகு உங்களுடன் சாவகாசமாய்ப் பேசுகிறேன் என்று அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு, ஏதோ கொஞ்சம் கஞ்சி சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமை; ஏதாவது புதிய ஊருக்குப் போனால் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்யாதிருப்பதில்லை நான்; ஆயினும் அன்று எனக்கு இருந்த தேக ஸ்திதியில் துவாதசாந்தஸ்தலம் என்று சொல்லப்படும் முக்கிய க்ஷேத்திரமாகிய மதுரைக்கு வந்தும் என் துர் அதிர்ஷ்டத்தால் அன்று நான் மீனாட்சி சுந்தரேஸ்வரர்களைத் தெரிசனம் செய்யக் கொடுத்து வைக்காமற் போயிற்று. நான் போவதற் கில்லாவிட்டாலும் எனது நண்பர் வடிவேலு நாயகரை அழைத்து, மற்ற எல்லா ஆக்டர்களையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போய் வரும்படி சொல்லி அனுப்பினேன். அவர்கள் போய்வந்து எனக்குக் குங்குமப் பிரசாதம் கொண்டு வந்து கொடுத்தனர். அதை அணிந்து, மானச பூஜையாக, எனது ஒன்பதாம் வயது முதல் செய்து வரும் வெள்ளிக்கிழமை பூஜையைச் செய்து முடித்து உறங்கினேன்.
மறுநாள் அதிகாலையில் விழித்ததும், எனக்கு ஜ்வரம் அதிகமாயிருப்பதைக் கண்டேன். உடனே வடிவேலு நாயக்கரை அழைத்து என் தேக ஸ்திதியைக் கூறி, “இன்று மனோஹரன் நாடகத்தை மாற்றி வேறு ஏதாவது நான் ஆடாத வேறொன்றை வைத்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டேன். அவர் முகம் வாடி, “என்ன வாத்தியார், நோட்டீசுகளைக்கூட அனுப்பி விட்டேனே, ஆரம்பத் திலேயே தடங்கலானால் நான் என்ன செய்வது?” என்று துக்கப்பட்டார். அவர் புதுக்கோட்டையிலேயே நஷ்டப்பட்டதை அறிந்த நான், இங்கும் அவருக்கு நஷ்டம் வராத படி எப்படியாவது செய்யவேண்டுமென்று தீர்மானித்து, “என்னால் ஒன்றும் தடையில்லை. ஒரு வைத்தியர் யாரையாவது அழைத்துக் கொண்டு வா; அவர் இன்றிரவு என்னை மேடையின் பேரில் நடிக்கும்படியான சக்தி எனக்குக் கொடுப்பாராயின் நான் நடிக்க ஆட்சேபணையில்லை” என்று கூறினேன். அவர் உடனே “ஓடோடியும் போய்” ஒரு வைத்தியரை அழைத்து வந்தார். அவர் முழுப் பெயர் எனக்கு ஞாபகமில்லை. அவரை ‘மணி’ என்று மற்றவர்கள் அழைத்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அந்த ‘மணி’ வைத்தியர் என்னைப் பரிசோதித்துப் பார்த்து, “இது ஒன்றும் கெட்ட ஜ்வரமல்ல; இதற்கு ஒரு பஸ்பம் அனுப்புகிறேன்; அதை உட்கொள்ளுங்கள், நீங்கள் இன்றிரவு நாடகமாடலாம்” என்று சொன்னார். அப் பொழுதுதான் என் மனம் கொஞ்சம் திருப்தி அடைந்தது; வடிவேலு நாயக்கர் முகமும் கொஞ்சம் மலர்ந்தது. அவர் கொடுத்த பஸ்பம், ஆங்கில வைத்திய மருந்தல்ல, ஹிந்துக்களுடைய ஆயுர்வேதத்திலடங்கிய ஏதோ ஒரு பஸ்பம். அது உடனே வெகு சீக்கிரத்தில் என் ஜ்வரத்தை இறக்கியது மன்றி, எனக்குக் கொஞ்சம் ஊக்கத்தையும் தந்தது. இதை இங்குச் சற்று விவரமாய் நான் எழுதுவதற்கு முக்கியக் காரணமுண்டு. இங்கிலீஷ் வைத்தியர்கள் யாராவது என்னை வந்து பார்த்திருப்பார்களாயின், கட்டாயமாகக் கொயினா மருந்து கொடுத்திருப்பார்களென்பது நிச்சயம். அந்தக் கொயினா ஜ்வரத்தைக் கண்டித்த போதிலும், எனக்கு மிகுந்த பலஹீனத்தை யுண்டுபண்ணியிருக்கும்; நான் அன்றிரவு நாடக மேடையில் நடித்திருக்க முடியா தென்று உறுதியாய் நம்புகிறேன். அவ்வாறு பலஹீனத்தை உண்டுபண்ணாது, ஜ்வரத்தைத் தணித்தது மன்றி எனக்கு ஊக்கத்தையும் கொடுத்தது போன்ற அநேகம் மருந்துகள், நம்து பூர்வீக வைத்திய சாஸ்திரங்களில் இருக்கின்றன. ஆயினும் அவற்றைச் சரியாகப் படிப்பாரும், சரியாக ஆதரிப்பாரும், அப்படிப்பட்ட மருந்துகளைச் சரியான முறைப்படி செய்வாருமின்றி, நமது ஆயுர்வேதம் க்ஷணதசையை அடைந்திருக்கின்றது என்பது என் தீர்மானமான எண்ணம். இதை எனது இந்திய நண்பர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை என எண்ணி எழுதலானேன். அந்த ஒளஷதத்தைக் கொடுத்து, என்னை அன்று நாடக மேடையின் பேரில் ஏறச் செய்த “மணி” வைத்தியருக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் என்னிடம் இந்த சிகிச்சைக்காகப் பணம் வாங்க மாட்டேன் என்று மறுத்தபடியால், அவருக்கு நான் பதிப்பித்துள்ள அவர் விரும்பிய சில நாடகங்களை காணிக்கையாக என் வந்தனத்துடன் பிறகு அனுப்பினேன். இங்கு நான் எழுதியதை ஒருக்கால் அவர் பார்க்கும்படி நேரிடின், அவர் அன்று எனக்குச் செய்த பேருபகாரத்தை இன்றளவும் நான் மறக்கவில்லை என்று சிறிது மகிழ்வாராக!
அன்றிரவு வைத்தியர் கட்டளைப்படி வெறும் மிளகு ரசம் சாதம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, வேடம் பூண்டு மேடை ஏறினேன். “மனோஹரன்” நாடகமாடுவது கடினம் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் நன்றாயறிவார்கள் என்று நினைக்கிறேன். எனது இடது கால் சற்று வீங்கி, என் மேஜோடைப் போடுவதற்குக் கஷ்டமாயிருந்தது; ஜ்வரம் விட்டபோதிலும் பலஹீனம் அதிகமாயிருந்தது. மனத்தில் உற்சாகமிகுந்த போதிலும், தேகத்தில் வலுவில்லை. அப்படியிருந்தும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால், ஒருவிதமாக அந் நாடகத்தை ஆடி முடித்தேன்.
ஆயினும் நான் அன்றைத் தினம் நடித்தது எனக்குத் திருப்திகரமாயில்லை என்று நான் இங்கு எழுதாமலே எனது நண்பர்கள் அறிந்து கொள்ளக்கூடும். நாடகம் முடிந்ததும் வேஷத்துடனே எங்கள் ஜாகைக்குப் போய் வெந்நீர் கொண்டு வரச் சொல்லி, என் முகத்தை யெல்லாம் கழுவிக்கொண்டு இவ்வளவாவது பரமேஸ்வரன் கருணை கூர்ந்தாரே என்று அவரைத் துதித்துவிட்டு உறங்கினேன். இவ்விடம் இரண்டாவது நாடகம் செவ்வாய்க்கிழமை போட்டிருந்தபடியால், இடையில் எனக்கு இரண்டு நாள் சாவகாசமிருந்தது; இதற்குள் என் உடம்பும் சுவஸ்தமாய் விட்டது ஸ்வாமியின் கிருபையால். அந்த இரண்டாவது நாடகம் “காலவ ரிஷி”யானபடியால், எனக்கு ஒரு கஷ்டமுமில்லை; நான் முன்பே என் நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறபடி, நாடகத்தின் முடிவில் சுமார் 10 நிமிஷத்திற்குத்தான் எனக்கு வேலையிருக்கிறது. அந் நாடகத்தில் ஆட நாடகக் கொட்டகைக்குப் போகுமுன், கோயிலுக்குப் போய் மீனாட்சி சுந்தரேஸ்வரர்களைத் தரிசித்துவிட்டுப் பிறகு போனேன்.
இங்கு நான் ஆடிய மூன்றாவது நாடகம், “லீலாவதிசுலோசனா” இதற்காக நான் வீட்டை விட்டுப் புறப்படும் பொழுது, எனது மதுரை நண்பர்களில் ஒருவர், “மிஸ்டர் சம்பந்தம், முதல் நாடகத்தில்தான் உங்களுக்கு உடம்பு சௌக்கியமாகவில்லை; இரண்டாவது நாடகத்தில் உங்களுக்கு அதிகப் பாகமில்லை; இதிலாவது உங்களுடைய பழைய ஆக்டிங்கை நாங்கள் பார்க்கும்படி செய்ய வேண்டுமென்று கேட்டது எனக்கு ஞாபகமிருக்கிறது. இந் நாடகத்தில் நான் என் பழைய வழக்கப்படி நடித்து, எனது மித்திரர்களைச் சந்தோஷப்படுத்தினேன்” என்று நினைக்கிறேன்.
மேற்சொன்ன முதல் மூன்று நாடகங்களும் முடிந்தவுடன் எனது நண்பர் கே. நாகரத்தினம் சென்னைக்குத் திரும்பிவிட்டார். ஸ்திரீ வேடம் பூண்டு நடித்தவர்களுள், இவர் இங்கு நற்பெயரெடுத்தாரென்பது என் அபிப்பிராயம். எனது மதுரை நண்பர்களில் பலரும் அங்ஙனமே கூறினர். நான்காவது ஐந்தாவது நாடகங்கள் நந்தனார் சரித்திரமும் ஹரிச்சந்திர விலாசமுமாம். இதில் எனக்குப் பாகமில்லா விட்டாலும் எங்கள் கண்டக்டராகிய சத்தியமூர்த்தி ஐயர் கேட்டபடி, நந்தன் சரித்திரத்தில் ஒரு பறையனாகவும் ஹரிச்சந்திர விலாசத்தில் பூதமாகவும் வந்தேன். இந்தச் சிறு விஷயத்தை இங்கு எனது நண்பர்களுக்குத் தெரிவித்ததற்கு ஒரு காரணமுண்டு. அநேக ஆக்டர்கள் ஒரு முறை ஏதாவது முக்கியப் பாகத்தை நடித்த பிறகு சிறு பாத்திரங்கள் எடுத்துக் கொள்வதில்லை யென்று தீர்மானித்து விடுகின்றனர். அவ்வாறு சிறு பாகங்களை எடுத்துக்கொள்வது தங்கள் கௌரவத்திற்குக் குறைவு என்று நினைக்கின்றனர். அன்றியும் அரசன் வேஷம், ஸ்ரீராமர் வேஷம், சுப்பிரமணியர் வேஷம் முதலிய பெரிய வேஷங்களைத் தரித்தபின், பறையனாகவும் தோட்டியாகவும் வருவதா என்று சங்கோசப்படுகின்றனர். இவ்வாறு எண்ணுவது முற்றிலும் தவறு. ஒரு நாடக சபையைச் சேர்ந்தால், எந்த வேஷத்தை எடுத்துக்கொள்ள வேண்டி வந்தபோதிலும், சந்தோஷமாய் எடுத்துக் கொள்வதே முறைமை என்று எனது இளைய நண்பர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்பது என் கடன் என்றெண்ணி, பல வருடங்களாக எங்கள் சபையில் கதா நாயகனாக நடித்து வந்த நான், சிறு அற்ப பாகங்களைக் கொடுத்த போதிலும், வேண்டாம் என்று மறுக்காது ஆடி வருகிறேன். இக் காரணம் பற்றியே நந்தனார் சரித்திரத்தில் ஒரு பறையனாகவும், ஹரிச்சந்திர விலாசத்தில் பூதமாகவும் வந்தேன். பறையனாக வேடம் தரிப்பது ஒரு விதத்தில் சுலபமென்றெண்ணலாம். பூதமாய் வருவதற்காக முகத்தில் கருப்பு, வெண்மை , சிகப்பு முதலிய வர்ணங்களை அலங்கோலமாய்ப் பூசிக்கொண்டு, கோரைப் பற்கள் இரண்டு வைத்துக்கொண்டு, விகாரமான உடை தரித்து வரவேண்டும். அதையும் மனங் கூசாது உற்சாகத்துடன் பூண்டேன். இந்தப் பூதமாக வந்தபொழுது நான் மேடையின் பேரில் பேச வேண்டிய வார்த்தை ஒன்றுதான் - பூ என்று உரக்கக் கூவ வேண்டியதே! அதையும் செய்தேன். நாடகங்களில் சிறு பாகங்களை எடுத்துக் கொள்வதைப்பற்றிச் சில வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு சங்கதி ஞாபகத்திற்கு வருகிறது. அப்பொழுது காலவ ரிஷி ஆடப்பட்டது. அச்சமயம் வேறு ஆக்டர்களில்லாதபடியாலோ, அல்லது எங்கள் கண்டக்டர் என்னை எடுத்துக் கொள்ளும்படி கேட்டபடியாலோ, ஏதோ காரணத்தினால் திடீரென்று, இந் நாடகத்தில் சுபத்திரையின் அரண்மனை வேலைக்காரர்களில் ஒரு வனாக வரும்படி நேரிட்டது; அதில் நான் பேசவேண்டிய வரிகள் இரண்டே! அதற்காகத் தக்கபடி நான் வேஷம் பூண்டு, அந்த இரண்டடிகளையும் மேடையின்மீது நடித்த பொழுது சபையோர்கள் எனக்கு மனமுவந்து அளித்த கரகோஷம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. அன்றியும் சென்ற வருஷம் எங்கள் சபையில் ‘லீலாவதிசுலோசனா’ நாடகமாடியபொழுது, முக்கியமான பாகங்களெல்லாம் எனது இளைய நண்பர்களுக்குக் கொடுக்கப்பட்டது (இது தவறு என்று கூறவில்லை ; இது மிகவும் நியாயமாம்). எங்கள் சபை தமிழ் கண்டக்டர் எனக்கு இரண்டு மூன்று வரிகள் பேசும்படியான வேஷமாகிய தந்தவக்கிரன் வேஷம் கொடுத்தார்! மிகவும் சந்தோஷத் துடன் ஏற்றுக்கொண்டு, நான் எழுதிய நாடகமாகிய இந்நாடகத்தில், சற்றேறக்குறைய 50 முறை நான் கதாநாயகனாக நடித்த இந் நாடகத்தில், மிகவும் சிறு பாகமாகிய இப் பாத்திரத்தைப் பூண்டேன். அந்தப் பாத்திரத்தின் பெயருக்கேற்றபடி, வக்கிரதந்தங்களை வைத்துக்கொண்டு, நான் நாடக மேடையில் வந்தபொழுது, எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் உட்பட, சபையோரெல்லாம் சந்தோஷித்துக் கரகோஷம் செய்தது மறக்கற்பாலதன்று. இனியாவது நாடக சபைகளின் அங்கத்தினர் பெரிய பாகம் சிறிய பாகம் என்று கவனிக்காது, எதைக் கொடுத்தபோதிலும் ஒப்புக்கொண்டு அதற்குத் தக்கபடி வேடம் பூண்டு நடிப்பார்களாக! இச் சந்தர்ப்பத்தில் ஒரு சிறந்த ஆங்கிலக் கவி எழுதிய இரண்டு வரிகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. “ஏதேயாயினும் உன் பாகத்தினை ஏற்றபடி நடிப்பாயாக; பீடும் பெருமையும் அதனால் பெருகும்” என்பது அவ்வடிகளின் தாத்பர்யமாகும். மேலும் நாடகமாடுவதையே ஜீவனமாக உடையவர்கள், இதைப் பற்றிச் சண்டையிடச் சிறிது காரணமுண்டு; ஏனெனில், பெரிய பாகங்களை நடித்தால் தான் அவர்களுக்கு வரும்படி அதிகமாய் வரும். வருவாய் ஒன்றுமின்றி, நம்முடைய மன சந்துஷ்டிக்காகவும் நமது சபைக்காகவும், மேடையின்பேரில் நடிக்கும் ஆமெடூர்களா கிய நமக்கு எந்தப் பாகம் கொடுத்தாலென்ன? அதை நன்றாக நடிப்பதில்தான் நமக்குச் சந்தோஷமும் பெருமையும் என்பதை இதை வாசிக்கும் எனது சிறிய நண்பர்கள் கவனிப்பார்களாக.
எங்கள் சபை மதுரையிலிருந்தபோது எனது நண்பர்கள் வைகுண்டம் அய்யர் அவர்கள், ராமமூர்த்தி பந்துலு அவர்கள், டாக்டர் கோபால்சாமி ஐயங்கார் அவர்கள் முதலியோர் எங்களுக்கு விருந்தளித்தனர். பிறகு நான் அங்கத்தினனாகச் சேர்ந்த மதுரை டிராமாடிக் கிளப்பாரும் ஒரு நாள் சாயங்காலம் எங்களுக்கு டீ பார்ட்டி கொடுத்தனர்.
இங்கிருந்தபொழுது ஒரு நாள் சாயங்காலம் மேற்படி கிளப்பார் வேண்டுகோளின்படி, விக்டோரியா எட்வர்ட் ஹாலில் நாடக மேடையைப்பற்றி ஒரு உபன்யாசம் செய்தேன். அச்சமயம் நான் பேசியதில் ஒன்று மாத்திரம் மிகவும் நன்றாய் ஞாபகமிருக்கிறது. அச் சமயம் மதுரையில் இரண்டு நாடக சபைகளிருப்பதாகவும் அவைகளுக்குள் அவ்வளவாக ஒற்றுமை இல்லை யென்பதையும் அறிந்த வனாய், அந்த இரண்டு சபையாரும் ஒருங்கு சேர்ந்து ஒரே சபையாய் ஏகோபித்து உழைப்பார்களானால், மிகவும் நலமாயிருக்குமென்று கேட்டுக் கொண்டேன். இதன் பலன் என்னவென்றால், இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்து நான் மதுரைக்கு மறுபடியும் போனபோது, இரண்டாயிருந்த சபைகள் மூன்றாக மாறின; “ஒட்டக் கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்றதுபோல் நமது வேண்டுகோளுக்கிணங்கி இரண்டாயிருந்தது மூன்றா யினாற் போலிருக்கிறது என்று பிறகு சும்மாயிருந்து விட்டேன்.
இவ் வருஷம் எங்கள் சபை இரண்டு மூன்று புதிய நாடகங்களை நடித்தது. அவைகளைப் பற்றிச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். முதலாவது “போஜ சரித்திரம்” ஆடப்பட்டது. இதன் ஆசிரியர் காலஞ்சென்ற எனது நண்பராகிய டி.எஸ். நாராயண சாஸ்திரியார். அவர் இந் நாடகத்தைத் தான் ஸ்தாபித்த வித்வன் மனோரஞ்சித சபையாரைக் கொண்டு இதற்கு முன் ஆடி வைத்தார். மறுபடி அவர் எங்கள் சபையை வந்து சேர்ந்த பிறகு பன்முறை எங்கள் சபை இதை ஆட வேண்டுமென்று பிரயத்தனப்பட்டார். ஏதோ காரணத்தினால் பலிக்காமற் போயிற்று. அவர் காலமான பிறகு பல கண்டக்டர்கள்; இதை ஆட முடியாது என்று கைவிட்ட இந்நாடகத்தை, இவ் வருஷத்திய தமிழ் கண்டக -ராகிய எஸ். சத்யமூர்த்தி ஐயர் எடுத்துக்கொண்டு, நடத்தி வைத்தார். என்னுடைய அபிப்பிராயத்தில் நாடகம் என்னவோ நல்ல நாடகம்தான்; ஆயினும் மிகவும் பெரிதானது. எங்கள் சபை நடித்தபோது இதில் பாதியை நீக்கி ஆடினார்கள். நாராயண சாஸ்திரி யாரின் குமாரர்களுள் ஒருவரான டி.வி. சுப்பிரமணிய ஐயர் என்பவர் கதாநாயகனாக நடித்தார். அவரது மற்றொரு குமாரன் காளிதாசன் வேடம் பூண்டு மிகவும் அழகாய்ப் பாடினார்.
இதன் பிறகு எனது நண்பர் சத்தியமூர்த்தி ஐயர், எனது பழைய நாடகங்களிலொன்றாகிய “இரண்டு நண்பர்கள்” என்பதை எடுத்துக் கொண்டார். இந் நாடகமானது இதற்கு முன்பாகச் சுமார் இருபது வருடங்களாக ஆடாமலிருக்கிறது. நாடகத்தைப் பற்றி எனது நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, இக் கதாநாயகியாகிய “மனோரமா” வேடம் பூண்ட போதெல்லாம் இது “காமெடி” - அதாவது சந்தோஷகரமாய் முடியும் நாடகமாக ஆடப்பட்டது. அதை நான் அச்சிட்ட பொழுது “டிராஜெடி” - அதாவது துக்ககரமாய் முடியும் நாடகமாக எழுதினேன். அதன்பேரில் ரங்கவடிவேலு அதில் தனக்கு ஆட இஷ்டமில்லையென்று அதை வெறுத்தார்; இதுதான் பிறகு சுமார் இருபது வருடங்கள் வரை இது ஆடப்படாமலிருந்ததற்குக் காரணம். “இது நல்ல நாடகமாயிருக்கிறதே. இவ்வருஷம் இதை நான் எடுத்துக் கொள்ளலாமென்றிருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?” என்று சத்தியமூர்த்தி ஐயர் என்னைக் கேட்டபோது, எனது புதிய நண்பராகிய கே. நாகரத்தினம் ஐயரை நான் கேட்க, அவர் இந் நாடகத்தை அச்சிட்டபடியே சோககரமான முடிவுடன் ஆடத் தனக்குச் சம்மதம் என்று கூற, அப்படியே ஆட நானும் இசைந்தேன். இவ்வருஷம் டிசம்பர் மாசம் இதை நாங்கள் மறுபடியும் ஆடினோம். நாகரத்தினம் ஐயர் மனோரமாவாக நடித்தது மிகவும் நன்றாயிருந்ததெனப் பலரும் மெச்சினர். இவர் தற்காலம் நடித்து வரும் முக்கிய நாடகப் பாத்திரங்களில் இந்த “மனோரமா” ஒன்றாகும். இதன் பிறகு சத்தியமூர்த்தி ஐயர், எனது பழைய நண்பராகிய அ. கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய “மீராபாய்” என்னும் நாடகத்தை எடுத்துக்கொண்டார். இந் நாடக மானது கவர்ன்மெண்ட் செக்ரடேரியேட் பார்ட்டியாரால் பன்முறை இதற்கு முன்பாக ஆடப்பட்டது. இதில் நான் “அக்பர்” சக்ரவர்த்தியாக நடித்தேன். நான் இவ் வேடம் பூண்டபோது இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனித்தேன்; முதலாவது, அக்பர் சக்ரவர்த்திக்கு ஒரு கன்னத்தில் ஒரு மருள் இருந்ததென அவரது ஜீவிய சரித்திரங்களால் அறிந்து, அவ் வேடம் பூணும்பொழுது அதைக் கவனித்து அப்படியே வேடம் பூண்டேன்; இரண்டாவது, அக்பர் சக்ரவர்த்தி பெரும்பாலும் சிம்மாசனத்தின் பேரில் உட்காராது, அங்கே சர்வேஸ்வரன் இருப்பதாக மதித்து, அதன் படியொன்றில் உட்கார்ந்த வழக்கமுண்டு என்பதை அறிந்து அதன்படி செய்தேன். இதற்கு முன்பாக அக்பர் வேடம் பூண்டவர்கள் இதைக் கவனிக்கவில்லை என்று பலர் கூறக் கேட்டுள்ளேன். இதை நான் எழுதியது நான் ஏதோ புதிதாய்க் கண்டுபிடித்து விட்டேன் என்று பெருமை பாராட்டவல்ல. இனி இவ் வேடம் பூணுபவர்கள் இவை இரண்டையும் கைப்பற்றி நடிப்பார்களாக என்று வேண்டும் பொருட்டே. கல்பிதமான நாடகங்களில் எப்படி வேடம் தரித்தாலும் ஒருவாறு பாதகமில்லை. சரித்திர சம்பந்தமாக நாடகங்கள் ஆடுவதென்றால், இவற்றை யெல்லாம் கவனித்தே ஆட வேண்டுமென்று எனது இளைய நண்பர்களுக்கு வற்புறுத்தும் பொருட்டே இதை எழுதலானேன்.
இவ்வருஷம் நாங்கள் புதிதாக நடத்திய இன்னொரு சிறு கதை, தசராக் கொண்டாட்டத்தில் முதல் நாளில் ஆடப்பட்டது. பூர்வ காலத்தில் (அதாவது கோவிந்தசாமி ராவ் மனமோஹன நாடக கம்பெனி நடத்திய காலத்தில்) சூத்திரதார் வருகிறது, விதூஷகன் வருகிறது, “வரமளித்துப் போகிறது", மோஹினிராஜன் மோஹினிராணி வருகிறது முதலியவற்றையெல்லாம் வைத்து மார்க்கண்டேய நாடகத்தில் சில காட்சிகளை, அக்காலத்திய நாடகக் கம்பெனியார் ஆடிய ஆபாசங்களுடன், வேடிக்கைக்காக. நடித்துக் காட்டினோம். இதில் நான் விதூஷகனாக நடித்தேன். அதற்காக முதல் காட்சியில் தலையில் வேப்பிலை கட்டிக்கொண்டு வந்தபொழுது, சபையோரெல்லாம் கொல்லென நகைத்ததை நினைத்துக் கொண்டால், இப்பொழுதும் எனக்குச் சிரிப்பு வருகிறது. இங்கு நானும், சூத்திரதாரராக வந்த எனது நண்பர் ராகவாச்சாரி யாரும் பேசியதை ஒரு சிறு காட்சியாக எழுதி, “விடுதிப் புஷ்பங்கள்” என்று பெயரிட்டு நான் அச்சிடக் கோரியிருக்கும் புஸ்தகத்தில் பதியலாம் என்று எண்ணியிருக்கிறேன்.
இவ் வருஷம் எங்கள் சபையார் நடத்திய தெலுங்கு நாடகங்களில், நான் எழுதிய “காலவ ரிஷி”யின் தெலுங்கு மொழி பெயர்ப்பு ஒன்றாகும். என் அனுமதி பெற்று எனது நண்பர் டி. வெங்கடரமண ஐயர் அவர்கள் இதைத் தெலுங்கில் மொழி பெயர்த்தார். அவர் தெலுங்கில் எழுதியதென்னவோ நன்றாகத்தானிருந்தது. ஆயினும் இதைத் தெலுங்கில் ஆடியபொழுது தமிழ் காலவ ரிஷியைப்போல் அவ்வளவு நன்றாக நாடகம் சோபிக்கவில்லை என்று பலர் கூறினர். என்னுடைய அபிப்பிராய மும் அப்படியே. இந்த எனது காலவ ரிஷி நாடகத்தை எனது நண்பர்களிலொருவர் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அது அச்சிடப்பட்டதோ என்னவோ எனக்கு ஞாபகமில்லை. காலவ ரிஷியைத் தெலுங்கில் மொழி பெயர்த்த எனது நண்பர் வெங்கடரமண ஐயர் எனது “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தையும் தெலுங்கில் மொழி பெயர்த்திருக்கின்றனர். எனது நாடகங்களை மொழி பெயர்ப்பதென்றால் எனது அனுமதியை முதலில் பெற வேண்டும் என்பதை அவ்வாறு செய்ய விரும்புவோர் கவனிப்பார்களாக.
இவ் வருஷம் சபை தொடங்கியது முதல் எண்ணூறு நாடகங்களாடி முடித்தோம். இதைச் சந்தோஷத்துடன் எங்கள் வருடாந்தர அறிக்கையில் குறித்தோம். அன்றியும் இவ் வருஷம் நாங்கள் ஆரம்பித்த புதிய வழக்கங்கள் இரண்டு; ஒன்று, “காளிதாஸன் தினம்” என்று ஒரு நாளைக் குறிப்பிட்டு, அத்தினம் சம்ஸ்கிருத்தில் அவரது நாடகங்களிலிருந்து இரண்டொரு காட்சிகள் நடத்தி, அம் மகாநாடகக் கவியைப்பற்றி ஒரு பிரசங்கம் செய்வித் தோம். ஷேக்ஸ்பியர் தினம் என்று எப்படிக் கொண்டாடினோமோ, அப்படியே இதையும் கொண்டாடினோம்; அன்றியும் இதேமாதிரியாக “கிருஷ்ணமாச்சார்லு தினம்” என்று ஆந்திர நாடகப் பிதாமகனாகிய அவரையும் கொண்டாடினோம். இத் தினங்களை மற்ற சபையாரும் கொண்டாடும்படியாக இதன் மூலமாக நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ் வருஷம் நான் புதிய நாடகம் ஒன்றும் எழுதவில்லை . ஆயினும் பல வருஷங்களுக்கு முன் நான் எழுதி முடித்து அச்சிட்டிருந்த ‘மகபதி’ என்னும் நாடகத்தை ஆட வேண்டுமென்று பிரயத்தனப்பட்டேன். இந்த மகபதி எனும் நாடகம் ஷேக்ஸ்பியர் மகாகவி ஆங்கிலத்தில் எழுதிய ‘மாக்பெத்’ என்னும் நாடகத்தின் தமிழ் அமைப்பாம்; இதை 1909ஆம்’ வருஷம் சென்னையில் மொழிபெயர்க்க ஆரம்பித்து, அவ்வருஷம் நான் கோடை விடுமுறையில் கொடைக்கானலுக்குப் போயிருந்தபொழுது அவ்விடம் பூர்த்தி செய்தேன். உடனே சீக்கிரத்தில் அச்சு வாகனத்தின் மீதும் ஏற்றினேன். ஆயினும் இம் மகபதி நாடகம் நாளது வரையில் ஆடப்படவில்லை . நான் எழுதி முடித்து ஆடப்படாத இரண்டு மூன்று நாடகங்களுக்குள் இது ஒன்றாகும். இது ஆடப்படாததற்கு அநேகர் காரணங்களுண்டு. முதற் காரணம் எனதுயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு இதில் கதாநாயகியாக ஆடப் பிரியப்படாத தேயாம். இது ஷேக்ஸ்பியர் எழுதிய மிகுந்த சோகரசம் அமைந்த நாடகங்களில் ஒன்றாகும்; அன்றியும் கதா நாயகியாகிய மகபதியின் மனைவி அவர் வர்ணித்துள்ள துர்க் குணங்களமைந்த மாதர்களில் ஒரு முக்கியமானவள். எனதுயிர் நண்பர் துர்க்குணமுள்ள எந்த ஸ்திரீ பாத்திரத்தை யும் நாடக மேடையில் நடிப்பதற்கு இஷ்டப்பட்டிலர்; ஆகவே, மகபதியின் மனைவியாக நடிப்பதற்கு அவர் இசையவில்லை. ஆகவே கதாநாயகனான மகபதியின் வேடம் நான் பூணுவதற்கில்லாமல் போயிற்று; அன்றியும் அக்கஷ்டமான பாத்திரத்தை நடிக்கக்கூடிய இரண்டொரு ஆக்டர்களை நான் கேட்டபொழுது, நீங்கள் முதன் முறை நாடக மேடையின்மீது நடித்துக் காட்டுங்கள்; பிறகு நாங்கள் ஆடுவதைப் பற்றி யோசிக்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். மேற்சொன்ன காரணங்களினால், எனதுயிர் நண்பர் ஜீவாந்தராயிருந்தவரையில், இந்நாடகமானது ஆடப்படவில்லை. அதன் பிறகு இவ்வருடம் (1927) ‘கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது’ என்று பெரியார் கூறியபடி, காலஞ்சென்ற எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுவுக்குப் பதிலாக பரமேஸ்வரன் தன் கருணையினாலெனக்குதவிய எனது புதிய நண்பராகிய கே. நாகரத்தினம் ஐயரை, இந்நாடகத்தில் நடிப்பதற்கு, ரங்கவடிவேலுக்கு இருந்தமாதிரி உனக்கேதாவது ஆட்சேபணை உண்டா என்று கேட்டபொழுது, தனக்கு அப்படிப்பட்ட ஆட்சேபணை, ஒன்றுமில்லை எனத் தெரிவிக்க, இந் நாடகத்தை எடுத்துக்கொண்டு ஒத்திகைகள் நடத்த ஆரம்பித்து, என் வழக்கப்படி இந்நாடகத்தைப் பற்றி ஆங்கிலத்திலுள்ள விமரிசைகள் எல்லாம் படித்து, நாகரத்தினம் ஐயருக்கு மகபதியின் மனைவியின் பாகத்தைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த சில தினங்களுக் கெல்லாம், திடீரென்று அவரைச் சென்னையிலிருந்து மதுரையம்பதிக்கு மாற்றிவிட்டார்கள் துரைத்தனத்தார். அதன்பேரில் ஆடுவதற்காக ஒத்திகைகள் ஆரம்பிக்கப் பட்ட இந்நாடகம் தடையுற்றது; நாளது வரையில் ஆடச் சாத்தியமில்லாமலிருக்கிறது. “எண்ணித் துணிவது ஏழை மனிதன் செயல்; முடித்து வைப்பது முக்கண்ணன் செயல்” என்றபடி இந்நாடகத்தை நாங்கள் ஆடும் படி அவர் எப்பொழுது திருவுளம் இசைவாரோ அறிகிலேன். நான் நாடக மேடையை விட்டகலுமுன் ஒரு முறையாவது இதை ஆடும்படியான பாக்கியம் எனக்குக் கொடுப்பாரெனப் பிரார்த்திப்பது தவிர, வேறொன்றும் செய்ய வகை அறியேன்.
இம் மகபதி நாடகத்தின் ஒத்திகைகள் ஆரம்பிக்குமுன், எங்கள் சபையின் கௌரவ அங்கத்தினராயிருந்த ஆர்தர் டேவிஸ் என்பவரைக் கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகமாகிய மாக்பெத் என்பதை, ரெசிடேஷனாகக் (Recitation) கொடுக்கச் செய்தேன். எனது நண்பராகிய இந்த ஆர்தர் டேவிஸ் என்பவரைப் பற்றி இங்குச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். அவர், சில வருடங்களுக்கு முன்பாக ஹைகோர்ட் ஜட்ஜாயிருந்த சர் டேவிஸ் என்பவரின் குமாரர். ஹைகோர்ட்டில் டெபுடி ரிஜிஸ்டராராயிருந்து பிறகு சட்ட கலாசாலையில் பிரின்சிபாலாக இருந்து, 55 வயதானவுடன் பென்ஷன் பெற்றுக்கொண்டு சீமைக்குப் போய்விட்டார். இவர் சென்னையிலிருந்த சுமார் 30 வருடங்களும், ஷேக்ஸ்பியர் நாடகங்களை எந்த சபையாராவது ஆட வேண்டுமென்றால், அவர்களுக்குத் தன்னாலியன்ற உதவி செய்து வந்தார். அவர்களுக்கு நாடகத்தை முதலில் படித்துக் காட்டி, பிறகு அதிலுள்ள பாத்திரங்களையெல்லாம் இப்படி நடிக்க வேண்டுமன்று மிகவும் பிரயாசை எடுத்துக்கொண்டு சொல்லிக் கொடுத்து வந்தார். இம்மாதிரியாக எங்கள் சபைக்கும், ஹாம்லெட், மர்சென்ட் ஆப் வெனிஸ் முதலிய நாடகங்களைப் படித்துக் காட்டியிருக்கிறார். இந்த மாக்பெத் என்னும் நாடகத்தையும் வெகு விமரிசையாகப் படித்துக் காட்டினார். இவரைப் பற்றிய ஒரு விசேஷம் என்னவென்றால், மற்றவர்களுக்கு இவர் மேற்சொன்னபடியே ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கற்பித்த - போதிலும், இவர் தானாக நாடக மேடையில் எப்பொழுதும் ஏறியதில்லை. இவர் தமிழ் அவ்வளவாகத் தெரியாதவராய் இருந்த போதிலும், எங்கள் சபையின் தமிழ் நாடகங்களுக்கும் அப்போதைக்கப்போது வந்து ஏதாவது சொல்லிக் கொடுத்துக்கொண்டு வந்தார். இவர் எங்கள் சபைக்குச் செய்து வந்த உதவிக்கெல்லாம் இதன் மூலமாக, அவருக்கு என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன். இவரிடம் இருந்த ஒரு முக்கியமான குணத்தைப் பற்றி இங்கு எழுத விரும்புகிறேன். நான் அறிந்த பல ஆங்கிலேயர்கள் தாங்கள் ராஜாங்கம் செலுத்தும் ஆங்கில ஜாதியாரைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் இந்தியர்கள், ஆளப்பட்டவர்கள்; என்னும் வித்தியாசம் பாராட்டுவதைப் பன்முறை பார்த்திருக்கிறேன். அக் குற்றம் இவரிடம் ஒரு சிறிதும் இல்லை . இந்த நற்குணத்தை மற்ற ஆங்கிலேயர்களும் மேற்கொண்டு நடப்பார்களாயின்; இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உள்ள விவாதங்கள் ஏறக்குறைய எல்லாம் நீங்கி, இரு ஜாதியாரும் ஒருமைப்பட்டு வாழ மார்க்கமுண்டாகும் என்று எண்ணுகிறேன்.
இவ் வருஷம் எங்கள் சபைக்கும், சவுத் இண்டியன் அத்லெடிக் அசோசியேஷனுக்கும், பிரசிடெண்டாகவிருந்த சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் இவ்விரண்டு. சபைகளையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டுமென்று பிரயத்தனப்பட்டுப் பார்த்தார்; அப்பிரயத்தனம் சில காரணங்களால் பயன் பெறாமற் போயிற்று. இவ் வருடம், எங்கள் சபையின் அங்கத்தினருள் ஒருவராயிருந்த திவான் பகதூர் சர். பி. ராஜகோபாலாச்சாரி யார் அவர்கள் காலமானது குறிக்கத்தக்கதாம். இவர் வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்தது முதல் எங்கள் சபையைச் சேர்ந்திருந்தார். எங்கள் சடை தமிழ் நாடகங்கள் ஆடும் போதெல்லாம், இவரும் இவரது மனைவியாரும் தவறாமல் வருவது வழக்கம். இவர் எங்கள் சபையைப் பற்றி ஒரு முறை கூறிய ஒரு சமாச்சாரம் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஒருமுறை எங்கள் சபையின் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்து வியவஹாரங்களை நடத்தும் முறையைக் கண்டனர். சில நாட்களுக்கெல்லாம் சென்னையிலுள்ள பிரபல கிளப் ஒன்றின் பொதுக்கூட்டத்திற்கும் போயிருந்தார். அங்கு நடப்பதையும் பார்த்து, அதற்கு வந்திருந்த ஒருவரிடம், “நான் என் ஆயுளில் பல பொதுக்கூட்டங் களுக்குப் போயிருக்கிறேன்; ஆயினும் சுகுண விலாச சபையில் நடப்பது போல் விமரிசையாக வேறெங்கும் நடக்கக் கண்டேனில்லை” என்று கூறினாராம். இதை எனது நண்பர்களில் ஒருவர் உடனே எனக்குத் தெரிவித்தார். அன்றியும் இவர் பென்ஷன் வாங்கிக் கொண்ட பிறகு அநேக சபைகளிலிருந்து நீங்கிய போதிலும் சுகுண விலாச சபையை விட்டு மாத்திரம் நீங்கவில்லை, தன் ஆயுள் பரியந்தம்.
இவ் வருஷத்திய வருடாந்தரப் பொதுக்கூட்டத்தில் எங்கள் சபையார் என்னை சபைக்கு டிராமாடிக் டைரெக்டராக நியமித்தனர். இதைப் பற்றிச் சில விஷயங்கள் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். சபை ஆரம்பமானது முதல், எங்கள் சபையின் இரண்டாம் ஆண்டுக் கொண்டாட்டம் வரையிலும், (ஒரு வருடம் தவிர), அதன் பிறகு இரண்டு மூன்று வருடங்களும், நான் தமிழ் நாடகங்களுக்குக் கண்டக்டராயிருந்து நடத்தி வந்தேன் என்பது இதை வாசித்து வரும் எனது நண்பர்கள் அறிந்த விஷயமே. இச் சமயங்களிலெல்லாம், எங்கள் சபையின் ஆக்டர்கள் அனைவருக்கும் திருப்திகரமாய் நடந்துகொண்டு வந்தேன் என்று சொல்வது தவறாகும். என்னிடமிருந்த பிடிவாதம், முன் கோபம், பொறுமையின்மை முதலிய துர்க்குணங் களைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன். இவை ஒருபுறம் இருக்கட்டும்; ஒரு சபையின் கண்டக்டராயிருப்பவன் அச் சபையிலுள்ள எல்லா ஆக்டர்களையும் திருப்தி செய்வது அசாத்தியம் என்பது என்னுடைய கொள்கை. இதற்கு முக்கியக் காரணம், ஒவ்வொரு சபையிலும், ஆக்டர் என்று மேடையின் பேரில் ஏறும் ஒவ்வொருவனும், ஒவ்வொரு நாடகத்திலும் தனக்கு முக்கியமான பாகம் வேண்டுமென்று இச்சிப்பதுதான் என்று நான் எண்ணுகிறேன். ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும்தான் பாகம் அதிகமாயிருக்கும்; அன்றியும் சில பாத்திரங்கள்தான் முக்கியமான வையாயிருக்கும். அப்படியிருக்க, ஒவ்வொரு நாடகத்திலும், எல்லா ஆக்டர்களுக்கும் கதாநாயகன் பாகமும், கதாநாயகி பாகமும் அல்லது மற்ற முக்கியப் பாத்திரங்களில் ஒன்றும் கொடுப்பதென்றால், யாருக்கும் சாத்தியமான காரியமல்ல. அதுவும் நான் கண்டக்டராயிருந்த வருஷங்களெல்லாம் எனதுயிர் நண்பருக்காகவும் எனக்காகவும் நான் பல நாடகங்களை எழுதி வந்தபொழுது, அவைகளில் முக்கியப் பாத்திரங்களை நாங்களிருவரும் எடுத்துக்கொண்டு வந்தபடியால், மற்ற ஆக்டர்களுக்கு முக்கியப் பாகங்கள் கிடைப்பது இன்னும் கஷ்டமாயிருந்தது; இதனுடன் நாங்களிருவரும் மற்றவர்களுடன் ஆக்டு செய்யாததால் அநேகருக்கு மன வருத்தம் இருந்தது; அப்படியிருந்தது தவறென்று நான் கூறவில்லை . அது மிகவும் சகஜம்தான். இதைப்பற்றி நான் எடுத்துக் கூற விரும்புவ தென்னவென்றால், மற்ற ஆக்டர் கள் நாங்களிருவரும் அவர்களுடன் ஆக்டு செய்யாததற்குக் காரணத்தை அறிந்திருப்பார்களாயின், எங்கள் மீது அவ்வளவு வருத்தப்பட மாட்டார்கள் என்பதேயாம். ஆக்டர்களுக்குண்டான இக்குறையைத் தீர்க்கும் பொருட்டு, எங்கள் சபையின் கமிட்டியாரும் பொதுக் கூட்டத்தாரும் அநேக யுக்திகள் செய்து பார்த்தனர். அவற்றுள் ஒன்று என்னவென்றால், இன்னின்ன நாடகங்கள் போட வேண்டும் என்பதையும், அவற்றுள் ஒவ்வொன்றிலும் இன்னின்ன பாத்திரங்கள் இன்னின்னாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க, ஒரு ஸ்பெஷல் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது; இதைக் கொஞ்ச காலம் பார்த்து, இதனாலும் அக் குறை தீராதபடியால், தமிழ், தெலுங்கு முதலிய ஒவ்வொரு பாஷைக்கும் ஒவ்வொரு கமிட்டி ஏற்படுத்திப் பார்த்தார்கள். 1916ஆம் வருஷம் நான் கண்டக்டர் வேலையிலிருந்து நீங்கினபிறகு, மற்ற கண்டக்டர்கள் வந்த பிறகும் இக்குறை தீராதபடியால், ஒரு வருஷம் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரை டிராமாடிக் டைரெக்டராக நியமித்தனர். 1921ஆம் வருஷம் நான் சபையின் டிரமாடிக் டைரெக்டராக நியமிக்கப்பட்டேன். இப் பிரயத்தனங்கள் எவையாலும் மேற்சொன்ன குறை தீர்ந்தபாடில்லை யென்றே நான் கூற வேண்டும். இக்குறைகளைத் தீர்க்க எங்கள் சபையார் நாளது வரையில் என்னென்னவோ சூழ்ச்சிகள் செய்து பார்க்கிறார்கள்; எதனாலும் பயனடையவில்லை. வியாதியொன்றிருக்க அதை அறியாது, ஔஷதங்கள் கொடுத்து என்ன பயனடையக்கூடும்? இதற்கு என் அபிப்பிராயப்படி எது தகுந்த சிகிச்சை என்பதைப் பற்றிப் பிறகு ஒரு சமயம் எழுதலாமென்றிருக்கிறேன்.