நாடக மேடை நினைவுகள்/29ஆவது அத்தியாயம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

29ஆவது அத்தியாயம்

று வருஷமாகிய 1928ஆம் ஆண்டில் என்னைப் பற்றிய வரையில், நடந்த சம்பவங்களுள் ஒரு முக்கியமானதென்ன வென்றால், இவ்வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி, எனக்கு ஐம்பத்தைந்து வயது பூர்த்தியாகி, அவ்வயதுக்கு மேல் கவர்ன்மென்ட் உத்தியோகத்தில் சாதாரணமாக ஒரு வரும் இருக்கக்கூடாது என்கிற சட்டத்தின்படி, நான் ஸ்மால் காஸ் கோர்ட்டு ஜட்ஜ் வேலையிலிருந்து விலக வேண்டி வந்ததேயாம். ஆக மொத்தம் சுமார் 4 வருடங்கள்தான் நான் ஜட்ஜ் வேலையிலிருந்தேன்; இதனிடையில் சில காலம் ஸ்மால் காஸ் கோர்ட்டு சீப் ஜட்ஜாகவும் சென்னை சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட் ஆகவும் வேலை பார்த் தேன். நாடக மேடை நினைவுகளைப் பற்றி எழுதப் புகுந்தவன், இதை இங்கு எழுதுவானேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் இங்கொரு கேள்வி கேட்கலாம். அதற்குப் பதில் அடியில் வருமாறு: நான் ஜட்ஜ் வேலையிலிருந்து விலகியவுடன் எனது நண்பர்களிற் பலரும் வர்த்தமானப் பத்திரிகைகளின் ரிபோர்ட்டர்கள் சிலரும், இனிமேல் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று என்னைக் கேட்டார்கள். அப்பொழுது அவர்களுக்கெல்லாம், இனிமேல் நான் வக்கீலாக வேலை பார்க்கப் போகிறதில்லை; இனி ஈசன் எனக்களித்திருக்கும் ஓய்வுக் காலத்தை யெல்லாம் தமிழ் நாடகங்கள் எழுதுவதில் - அதிலும் தற்காலத்திய நாகரிகத்தைப் பற்றிய சோஷல் நாடகங்கள் எழுதுவதில் - கழிக்கப் போகிறேன் என்று விடை கூறினேன். நான் இருபத்தைந்து வருடங்கள் வக்கீலாக இருந்த பொழுது மனிதர்களுடைய குணாதிசயங்களைப் பற்றியும் நடவடிக்கைகளைப் பற்றியும் பல விஷயங்கள் அறிய ஹேதுவாயிருந்த போதிலும், ஜட்ஜாக இருந்த நான்கு வருடங்களில் இதற்குமுன் நான் அறியாத பல விஷயங்களைக் கற்றேன் என்றே நான் சொல்ல வேண்டும். இவையெல்லாம் தமிழ் நாடகங்கள் எழுது வதற்கு எனக்கு மிகவும் பயன்பட்டன என்பதற்குத் தடையில்லை. ஒரு நாடகாசிரியன் கற்க வேண்டிய சமாச்சாரங்கள் இந்த வேலையில்தான் உண்டு, இந்த வேலையில் இல்லையென்று சொல்ல இடமே கிடையாது. அன்றியும் இவ்வுண்மை நாடக மேடையில் ஆட விரும்புபவனுக்கு மிகவும் பொருத்தமானது என்பதற்கு ஐயமில்லை.

இனி மேற்சொன்ன தீர்மானத்தின்படி, நான் எழுதிய நாடகங்களைப் பற்றிச் சற்று விவரமாய் எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.

இவ்வருஷம் நான் ஆரம்பித்து எழுதி முடித்து, உடனே எங்கள் சபை ஆடிய நாடகம் “தாசிப்பெண்” என்பதாம். இந் நாடகத்தின் கதை என் மனத்தினால் நிர்மாணம் செய்யப்பட்டதேயாம். முக்கியப் பாத்திரங்களெல்லாம் என் மனோ சிருஷ்டியேயன்றி, நான் அறிந்த ஒருவரையும் குறிப்பிட்டதன்று. சில சிறு நாடகப் பாத்திரங்கள் மாத்திரம், எனது நண்பர்களுட் சிலருடைய குணாதிசயங்களை முன்னிட்டு எழுதியதாம். அப்படிச் செய்யும் பொழுதெல்லாம், அவர்களுடைய உத்தரவைப் பெற்றே அவ்வாறு செய்வது என் வழக்கம். உதாரணமாக, இத் தாசிப்பெண் என்னும் நாடகத்தில் வரும் “டப்பூஸ் நாயுடு” என்னும் பாத்திரமானது, காபி, தேத்தண்ணீர், சோடா முதலிய பானங்களை அபரிமிதமாய்ச் சாப்பிடும் எங்கள் சபையின் அங்கத்தினர் ஒருவரை முன்னிட்டு எழுதியதாகும்; இவ்வாறு செய்யப் போகிறேன் உங்கள் உத்தரவைப் பெற்றே பிறகு எழுதியுள்ளேன். இந்நாடகத்தை எழுதி முடிப்பதற்கு இரண்டு மூன்று மாதங்கள் பிடித்தன. என் வழக்கப்படி, நாடகக் கதையின் கோர்வையை முன்பு தீர்மானித்து, பிறகு காட்சிகளாகப் பிரித்துக் குறிப்பிட்டுக்கொண்டு எழுதி வரும் தருவாயில், ஏதாவது ஒரு கட்டம் வந்துவிடும், அதற்கப் புறம் எப்படி எழுதுவது என்று யோசிக்க வேண்டியவனாய் சரியான மார்க்கம் என் புத்திக்குத் தோன்றும் வரையில், ஒரு நாளோ இரண்டு நாளோ, ஒரு வாரமோ பிடித்தாலும், அது வரையில் ஒரு வார்த்தையும் எழுத மாட்டேன். இப்படிப்பட்ட இடைக்காலங்களில், சும்மா இருக்கப் பொறுக்காமல், எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடைய ஆங்கில நாடிகைகளை (சிறு நாடகம்) அவரது உத்தரவைப் பெற்று தமிழில் மொழி பெயர்த்து வந்தேன். இவ்வாறு ஒரு வருஷத்திற்குள்ளர்க “மனைவியால் மீண்டவன்”, “விச்சுவின் மனைவி”, “நோக்கத்தின் குறிப்பு”, “விபரீதமான முடிவு”, “இடைச்சுவர் இரு புறமும்”, “இரண்டு ஆத்மாக்கள்”, “என்ன நேர்ந்திடினும்”, “சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து”, “சுல்தான் பேட்டை சப்-அசிஸ்டென்ட் மாஜிஸ்ட்ரேட்”ஆகிய ஒன்பது நாடகங்களையும் மொழிபெயர்த்தேன். இவைகளைப் பற்றிப் பிறகு கொஞ்சம் எழுத வேண்டி வரும்.

இவைகளையெல்லாம் எழுதும் பொழுது ஈசன் அருளிய என் வாழ்நாட்களை நான் எவ்வாறு கழித்து வருகிறேன் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறிய விரும்புவார்களென்று எண்ணினவனாய், அதை எழுதுகிறேன். 1928ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல், இதுவரையில், நான் சென்னையிலிருக்கும் போதெல்லாம் என் நாட்களைக் கழிக்கும் விதம் இதாகும்.

அதிகாலையில் எழுந்திருப்பது என்பது என் ஜன்மத்தில் கிடையாது; கும்பகர்ணனை ஸ்ரீராமபிரான் கொல்வதற்குள் அவரிடமிருந்து அவன், தனக்குப் பிரதிநிதியாக ஒவ்வொரு யுகத்திலும் ஒருவனிருக்கும்படி வரம் வேண்டியிருக்க வேண்டும்; அவ்வரத்தின்படி கலியுகத்தில் என்னை அக் கும்பகர்ணனுக்குப் பிரதிநிதியாகப் பகவான் ஏற்படுத்தினார் போலும். பால்யத்தில் பரீட்சைகளுக்குப் போகும் போதும் காலையில் எழுந்திருந்து படித்தவனன்று நான். காலையில் சாதாரணமாக ஏழு மணிக்குத்தான் எழுந்திருப்பது என் வழக்கம். எழுந்தவுடன் நான் வழிபடு கடவுளாகிய என் தாய் தந்தையாரைத் தொழுதுவிட்டு, தேகப்பயிற்சி சிறிது செய்து, என் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு எட்டு மணிக்கு என் மேஜையருகில் உட்காருவேன்; கால்மணி சாவகாசம் ஏதாவது சம்ஸ்கிருதம் படித்துவிட்டு பதினோரு மணிவரையில் தமிழ் நாடகங்கள் எழுதுவதில் காலம் கழிப்பேன். பதினோரு மணிக்கு 15 நிமிஷம் முன்பாக சன்பாத் (Sun bath) எடுத்துக்கொண்டு பிறகு 15 நிமிஷம் ஷாம்பு (shampoo) எடுத்துக் கொண்டு, ஸ்நாநம் செய்து பகல் பூஜையை முடித்து, உணவுகொள்ள, சரியாகப் பன்னிரண்டாகும். அதன் பேரில் கால் மணி சாவகாசம் ஏதாவது வர்த்தமானப் பத்திரிகை வாசித்து விட்டு, எனது நாடக சம்பந்தமாக அவற்றை ஆட விரும்பும் சபைகளுக்கு ஏதாவது காகிதங்கள் எழுத வேண்டியிருந்தால் அவற்றை எழுதி விட்டு, இரண்டு மணி வரையில் நான் அச்சிட வேண்டிய நாடகங்களை அச்சாபீசுக்கு அனுப்பப் பிழைகள் திருத்துவேன். இரண்டு மணிக்கு வண்டியேறி, என் நாடகங்களை அச்சிடும் இரண்டு அச்சாபீசுகளுக்கும் போய் புரூப்புகளை (proof) கொடுத்துவிட்டு, ஏதாவது சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டு, சுகுண விலாச சபைக்குப் போய்ச் சேர்வேன். அங்கு சபைக் காரியங்களை ஏதாவது பார்ப்பதிலோ அல்லது ஒன்றும் இல்லாவிட்டால், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பதிலோ, சாயங்காலம் வரையில் போக்கி, வெயில் சற்று தாழ்ந்தவுடன் பீபில்ஸ் பார்க்கில் அரைமணி சாவகாசம் உலாவுவேன். இச்சமயம்தான் ஏதாவது புதிய நாடகங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருந்தால் யோசிப்பேன். திரும்பி வந்ததும் எனது சபை நண்பர்களுடன் பேசியாவது சீட்டாடியாவது (பணமில்லாமல்! - ஏனெனில் எங்கள் சபையில் துட்டு வைத்து சீட்டாடக் கூடாது என்று ஒரு நிபந்தனை ஆரம்ப முதல் உண்டு) எட்டுமணி வரையில் காலம் கழிப்பேன். பிறகு வீட்டிற்குத் திரும்பி பதினைந்து நிமிஷம் தேகப் பயிற்சி செய்த பிறகு கைகால்களை சுத்தி செய்து ராத்திரி பூஜையை முடித்து, சாதாரணமாக ஒன்பது மணிக்கெல்லாம் நித்திரைக்குப் போவேன். மேற்கூறியதனால், பொழுது போவது கஷ்டமாயிருக்கிறதெனும் கஷ்டம் எனக்கில்லை என்பதை என் நண்பர்கள் அறியலாம். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரத்துடன் இன்னும் ஐந்தாறு மணிகள் இருப்பினும், அவைகளிலும் செய்ய ஏதாவது வேலை எனக்குக் கிடைக்குமென நம்புகிறேன். செய்வதற்கொன்று மில்லையே என்கிற கவலை எனக்கு எப்பொழுதும் கிடையாது; நாம் செய்ய வேண்டுமெனத் தீர்மானித்திருக்கும் காரியங்களையெல்லாம் கடவுள் கிருபையால், நமக்கிருக்கும் ஆயுளுக்குள் செய்து முடிப்போமோ என்னும் கவலைதான் உண்டு. எனது நண்பர்களில் அநேகர், இப்பொழுது எப்படி உன் காலத்தைக் கழிக்கிறாய் என்று கேட்டதனால் இதைப்பற்றி இங்கு, சற்று விரிவாய் எழுதலானேன். அன்றியும் இன்னொரு காரணமுண்டு. அநேகர் தங்கள் வேலையிலிருந்து பென்ஷன் (Pension) வாங்கிக் கொண்ட பிறகு தாங்கள் செய்வதற்கொன்றுமின்றி, காலத்தைப் போக்க வகையறி யாராய்க் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் நாடகமெழுதுகிறது என்கிறதை ஒரு வேலையாக வைத்துக் கொண்டிருப்பது போல், அவர்களும் தங்கள் மனதுக்கிசைந்த யாதொரு வேலையை மேற்கொள்வார்களானால், அவர்களுக்கு அதனால் பெரும் பலன் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் ஹாபி (Hobby) என்று ஒரு பதம் உண்டு . இதற்குச் சரியான தமிழ்ப் பதம் எனக்குக் கிடைக்கவில்லை ; ஒருவன் மனத்திற்கிசைந்த தொழில் என்று அதற்கு ஒருவாறு அர்த்தம் செய்யலாம். ஒவ்வொரு மனிதனும், தன் சிறு வயதிலேயே, தன் ஜீவனாதாரமான தொழிலைத் தவிர, வேறு ஏதாவது ஒரு வினோதமான வேலையைக் கற்று வருவானாயின், அவன் வயோதிகத்தில் அது மிகவும் பயன்படும் என்பதற்குத் தடையில்லை. நான் அறிந்தவர்களுள் அநேகர் பென்ஷன் வாங்கிக் கொண்டபிறகு, வேறொன்றும் செய்வதற் கிளப்புக்குப் போய்ச் சீட்டாடிக் காலம் கழித்துத் தமது ஆயுளைக் குறுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் நாடகங்கள் எழுதுதலாகிய என் ஹாபி (Hobby) என் பொழுதைப் போக்குவதற்கு அனுகுணமாயிருப்பது மன்றி, எனக்கு வருவாயையும் தருகிறது; தமிழ் பாஷைக்கு நான் செலுத்த வேண்டிய கடமையையும் செலுத்த மார்க்கமாகிறது.

இவ் வருஷம் நான் எழுதி முடித்த “தாசிப் பெண்” என்னும் நாடகம், இவ்வருடமே எங்கள் சபையில் ஆடப்பட்டது. அதில் தற்காலம் எனது அத்யந்த நண்பராயிருக்கும் கே. நாகரத்தினம் ஐயர், தாசிப் பெண்ணாக ரூபாவதி வேடம் பூண்டனர்; நான் சுப்பிரமணிய ஐயர் வேடம் பூண்டேன். இந்நாடகத்தில் தாசிப் பெண்ணாகிய ரூபாவதி பாடும் இரண்டு பாட்டுகள் தவிர வேறு சங்கீதமே கிடையாது. ஆயினும் இந் நாடகம் மிகவும் நன்றாயிருந்ததென மெச்சப்பட்டதுமன்றி, நல்ல வரும்படியும் வந்தது எங்கள் சபைக்கு. முதன் முறை ஆடியபொழுது சுமார் 400 ரூபாய் வரும்படி வந்தது. இதை நான் முக்கியமாக எடுத்து எழுதுவதற்குக் காரணம், அநேகர் புராணக் கதைகளாயிருந்தால்தான் வசூலாகும், சங்கீதம் அதிகமாயிருந்தால் தான் வசூலாகும் என்று நினைக்கிறார்களே, அது முற்றிலும் தவறு என்று நிரூபிப்பதற்கேயாம். இதை மறுமுறை எங்கள் சபையில் போட வேண்டுமென்று பிரேரேபிக்கப்பட்ட பொழுது, மேற் சொன்னபடி எண்ணங் கொண்ட எனது நண்பர்களில் ஒருவர், இந்நாடகத்தில் வசூலாகாதென்று போட்டி போட்டார்; அம்முறை டிசம்பர் மாதத்தில் நாங்கள் இதை ஆடியபொழுது, புராணக் கதையாயும், சங்கீதம் நிரம்பியுள்ளதுமான நந்தனார் சரித்திரத்தைவிட, இந் நாடகத்திற்கு வரும்படி அதிகமாய் வந்ததைக் கண்டு, மௌனமாய் இருந்துவிட்டார்.

இந் நாடகமானது, எங்கள் சபை இதை ஆடுமுன், நான் தற்காலம் வெளியூர் அங்கத்தினனாக (Mofussil member) இருக்கும் மதுரை டிராமாடிக் கிளப்பாரால் இவ் வருஷம் ஆடப்பட்டது. இந்நாடகத்தை, என் சொந்தக் கற்பனையில் நான் எழுதியவற்றுள், ஒரு முக்கியமானதாகக் கொள்கிறேன். இவ்வருடம் எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய நாடிகைகள் பலவற்றை மொழிபெயர்த்ததாக முன்பே தெரிவித்திருக்கிறேன். இந்த நாடிகைகளையெல்லாம் நான் மொழி பெயர்த்தபொழுது, எனக்குச் சந்தேகமாயிருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பிட்டு, பிறகு அவற்றை எனது நண்பரிடம் கொண்டு போய், அவரது அபிப்பிராயத்தைக் கேட்டு, திருத்தின பிறகுதான், அவைகளை ஒவ்வொன்றாக அச்சிட்டேன். இப் புத்தகங்களுள் ஒன்றில் முகவுரையில் நான் எழுதிய படி, சில சமயங்களில், ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் ஆங்கில நாடகங்களை மொழி பெயர்ப்பதைவிட, இவரது நாடிகைகளை மொழி பெயர்ப்பது அதிக, கஷ்டத்தைத் தந்தது! இம் மொழி பெயர்ப்புகளுள் சில எங்கள் சபையாராலும் ஆடப்பட்டிருக்கின்றன; பள்ளிக் கூடத்தில் வாசிக்கும் சிறுவர்கள் சங்கங்களின் வருடாந்தரக் கொண்டாட்டங்களில், தமிழில் ஏதாவது சிறு நாடிகைகள் ஆட வேண்டுமென்று விரும்பினால், இவைகள் உபயோகப்படும் என்று நினைக்கிறேன். எனது நண்பர் எழுதியுள்ள “தாமுவை வழிக்குக் கொண்டு வந்தது", (Domestication of Damoo) “ஆடி ஆகும் வரையில் பொறுங்கள்” (Wait for the stroke) எனும் இரண்டை மாத்திரம் இன்னும் நான் மொழி பெயர்க்கவில்லை. காலம் வாய்த்தால் அவைகளையும் மொழிபெயர்த்து என் பால்ய நண்பருக்கு நான் செலுத்த வேண்டிய பெருங்கடனைக் கொஞ்சம் தீர்க்கலாமென்றிருக்கிறேன்.

இவ் வருஷம் ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி எங்கள் சபையின் ஆதரவிலும் முன்னிலையிலும், குப்பி நாடகக் கம்பெனியார், வால்டாக்ஸ் ரோடு நாடக சாலையில், “ராஜபக்தி” என்னும் நாடகத்தைக் கன்னட பாஷையில் நடத்தினார்கள். இதற்காக எங்கள் சபையார் அக் கம்பெனியாருக்கு 150 ரூபாய் பெரும்படியான ஒரு வெள்ளிக் கோப்பையைப் பரிசாக அளித்தனர். இந் நாடகத்தைத்தான் பிறகு என் இளைய நண்பர் வி.சி. கோபாலரத்தினம் ஐயங்கார் தமிழில் மொழி பெயர்த்தனர்.

அன்றியும் இவ் வருஷம் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி ராயல் தியேட்டரில், எங்கள் சபையில் பல வருடங்களாக அங்கத்தினராயிருந்து, தெலுங்குப் பாஷையில் பன்முறை நாடகங்களில் நடித்து வந்த எள். வெங்கடாசல ஐயரடைய, “ராதா மாத மந்திரம்” என்னும் தர்ம கைங்கர்யத்திற்காக எனது “மனோஹரன்” நாடகம் ஆடப்பட்டது. அதன் பொருட்டு எனது தேக கஷ்டத்தையும் பாராமல், அந்நாடகத்தில் நான் மனோஹரனாக நடித்தேன். என் இள வயதில் இருந்த உற்சாகத்துடன் இப்பாத்திரத்தை நான் நடிப்பதற்கு ஏலாமற் போனபோதிலும், எனது பழைய நண்பருக்காக உழைப்பதற்குப் போதுமான தேக வலியை இன்னும் நமக்கு ஈசன் அருளியிருக்கிறாரே என்று சந்தோஷப்பட்டேன். செலவு போக இதில் வந்த லாபமாகிய ரூபாய் 383-4-0 அவருக்கு மேற்சொன்ன தர்ம கைங்கர்யத்திற்காகக் கொடுத்தோம். இந்த வெங்கடாசல சாஸ்திரியார், (இவருக்கு ஏர்ரையா என்று எங்கள் சபையில் பெயர் வழங்குகிறது) என்னைவிட வயதில் பல ஆண்டுகள் மூத்தவராயினும், இன்னும் எங்கள் சபைக்கு நன்றி மறவாமல், எப்பொழுது வேண்டிய போதிலும், நாடகப் பாத்திரங்களைத் தரித்து வருகிறார்.

இவ்வருஷம் எங்கள் சபையில் “நாடகமாடுபவர்க்கு உபயோகமான சில குறிப்புகள்” என்கிற விஷயத்தைப் பற்றி ஒரு உபன்யாசம் செய்தேன். இந் நாடக மேடை நினைவுகள் முடிந்தவுடன் அவகாசமிருக்குமாயின் அவைகளைப் பற்றி எழுதலாமென்றிருக்கிறேன். இவ்வருஷம் ஜார்ஜ் டவுனில், ஆர்ட்னென்ஸ் லைன்ஸ் (Ordnance lines) என்னும் இடத்தில் எங்கள் சபையின் நாடகசாலையும் இருப்பிடமும் கட்டுவதற்காக இடம் கிடைக்குமா என்று வெகு பிரயத்தனப்பட்டுப் பார்த்தோம்; பிரயோஜனம் இல்லாமற் போயிற்று; “வருந்தி அழைத்தாலும் வாராதவரா, பொருந்துவன போமினென்றாற் போகா!” ஈசன் கருணையினால் இப்பிரயத்தனம் எப்பொழுது கைகூடுமோ அறியேன்.

அன்றியும் இவ்வருஷம் எங்கள் சபையின் “சுவிநேர் புஸ்தகம்” (ஞாபகார்த்த புஸ்தகம்) ஒன்று பதிப்பித்தோம். அதில் எங்கள் சபை, சென்ற முப்பத்தேழு வருஷங்களாக நடத்திய விஷயங்களை வெளியிட்டது மன்றி, எங்கள் சபையின் முக்கிய அங்கத்தினர் ஆக்டர்கள் முதலியோருடைய உருவப் படங்களையும் அச்சிட்டோம். இப் புஸ்தகத்திற்கு எங்கள் சபையின் சுருக்கமான சரித்திர மொன்றை முகவுரையாக எழுதியுள்ளேன். இப் புஸ்தகம் கானரா அச்சு இயந்திர சாலையில் கே.எ. ஹெப்பார் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது.