நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீ T. ராகவாச்சார்லு

விக்கிமூலம் இலிருந்து

ஸ்ரீ T. ராகவாச்சார்லு

இவரை நான் முதல் முதல் பார்த்தது ஒரு விபரீதமான சம்பவம். பல்லாரி சுமனோகர சபா என்னும் நாடக சபா விக்டோரியா பப்ளிக் ஹாலில் (Fall of Vijayanagar) விஜய நகர் சாம்ராஜ்ய வீழ்ச்சி என்னும் நாடகத்தை நடத்தப் போவதாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது எப்படி யிருக்கிறது என்று நான் பார்க்கப் போயிருந்தேன். 9 மணிக்கு நாடகம் ஆரம்பமானபோது நான் உட்பட ஹாலில் முழுவதிலும் ஏழு பெயர்கள் தான் உட்கார்ந்திருந்தோம்! இருந்தும் சபையோர் நாடகத்தை சரியாகவே ஆதியோடந்தமாய் நடத்தினர். அதில் கதா நாயகன் வேடம்பூண்டார் ஸ்ரீராகவாச்சார்லு, இது என்ன இது தெலுங்கு நாடகத்திற்கு சாதாரணமாக ஜனங்கள் அதிகமாய் வருவார்களே என்று நான் விஜாரித்த போது உண்மை வெளியாகியது. இதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பாக ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்லு அவர்களின் சரச வினோதனி சபா நாடகங்கள் நடத்தியபோது திரளான ஜனங்கள் வந்திருந்தார்களே, இதற்கு மாத்திரம் ஏன் வர வில்லை என்று வினவியபோது இந்த சுமனோகர சபையோருக்கும் கிருஷ்ணமாச்சார்லு சபையோருக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்ததாம். அதன் பேரில் சென்னையில் உள்ள தெலுங்கர்கள் அநேகர், முக்கியமாக கோமுட்டிகள் இந்த சபை நாடகத்தை பார்க்கக் கூடாது இதை பாய்காட் (BoyCott) செய்ய வேண்டுமென்று தீர்மானித்து எல்லோரும் கட்டுப்பாடாய் நின்று விட்டார்களாம். இந்த உண்மையை அறிந்தபின் சுமனோகர சபா நடிகர்களிடம் போய் நீங்கள் இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை, நாடகம் நன்றாயிருந்தது. முக்கியமாக ராகவாச்சார்லு நடித்தது மிகவும் நன்றாயிருந்தது. ஆகவே உங்கள் தைர்யத்தை கைவிடாதீர்கள்.. உங்கள் நாடக சபையின் ஏற்பாட்டின்படி நாடகங்களை நடத்துங்கள் என்று சொல்லி முக்கியமாக ராகவாச்சார்லுவை உற்சாகப்படுத்தினேன். நான் சொன்ன ஜோஸ்யத்தின்படி அதே விக்டோரியா பப்ளிக் ஹாலில் அதே நாடகத்தில் ராகவாச்சார்லு நடித்தபோது பெரும் திரளான ஜனங்கள் வந்து குவிந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

ராகவாச்சார்லு அவர்கள் மிகச் சிறந்த நடிகர், நடிப்புக் கலையில் மிகவும் தேர்ந்தவர். ஆனால் சங்கீதத்தில் என்னை போலத்தான். தெலுங்கில் பத்யங்கள் மாத்திரம் நன்றாய் பாடுவார். வேறொன்றும் பாட மாட்டார். கீதங்கள் பாடி நான் கேட்டதில்லை. பிறகு பன்முறை ராகவாச்சார்லு சென்னையில் நடித்திருக்கிறார். அவர் நடித்த முக்கிய பாத்திரங்கள் பாதுகா பட்டாபிஷேகத்தில் தசரதன், விஜய நகர வீழ்ச்சியில் ருஷ்டம், ஹிரண்யகசிபு, கடோத்கஜன் முதலியவைகளாம், அவர் பலவிதமான வேடங்களை பூண்டிருக் கின்றனர். எந்த வேஷத்தை கொடுத்தாலும் ஏற்றுக் கொண்டு நன்றாய் நடிப்பார். இது ராஜபார்ட் இது சேவகன் பார்ட் என்கிற வித்தியாசம் இவருக்குக் கிடையாது. எந்த வேடம் பூண்டாலும் அந்த நாடகக் கதையை நன்றாய் படித்து எவ்வாறு நடித்தால் சபையின் மனதைக் கவர முடியும் என்று யோசித்து அதற்குத் தக்கவாறு கஷ்டமெடுத்துக் கொண்டு நடிப்பார். இவர் எங்கள் சுகுண விலாச சபையில் அங்கத்தினராக சேர்ந்து ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். எங்கள் சபை பட்டணத்தை விட்டு வெளியில் போய் வேறு ஊர்களில் தெலுங்கு நாடகங்கள் நடத்தியபோதெல்லாம் இவரை அழைத்துக் கொண்டு போவோம். எங்கள் சபையின் தெலுங்கு பிரிவை முன்னுக்குக் கொண்டு வந்தவர்களுள் இவர் முக்கியமானவர் இவர் தமிழ் நாடகங்களிலும் இரண்டொரு முறை நடித்துள்ளார். அதில் ஒன்றைபற்றிய விசேஷ சம்பவத்தை நான் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு வருடம் 'ரஜபுத்ர வீரன்' என்னும் எனது தமிழ் நாடகத்தை நடத்தினோம், அதற்காக எங்கள் சபை தலைவராயிருந்த T. V. சேஷகிரி ஐயர் அவர்கள் தனது சகாக்களாகிய சில ஹைகோர்ட் ஆங்கில ஜட்ஜுகளையும் வரும்படி கேட்டிருந்தது எனக்குத் தெரியும். ஆகவே அந் நாடகம் மிகவும் நன்றாய் இருக்க வேண்டுமென்று கஷ்டப்பட்டு ஒத்திகை முதலானவைகளை செய்து வைத்தேன், நாடக தினம் வந்தது. அத்தினம் 6 மணிக்கு நாடக ஆரம்பம். 3 மணிக்கு ரஜபுத்ர வீரனுக்கு எதிரியாயிருந்த ஒரு மகம்மதிய அரசன் பாத்திரத்தை எடுத்துக் கொண்டவர் தனக்கு மிகவும் காயலாயிருக்கிற தென்றும் சாயங்காலம் நடிக்க முடியாதென்றும் சொல்லியனுப்பினார்! அதைக் கேட்டு நான் பிரமித்து திகைத்துக் கொண்டிருக்கையில், தெய்வாதீனத்தால் ஏதோ வேலையாக அத்தினம் பட்டணத்திற்கு வந்திருந்த எனது நண்பர் ராகவாச்சார்லு என்னை பார்க்க விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு வந்தார். சுருக்கி சொல்லுமிடத்து எனக்கு நேரிட்ட கஷ்டத்தை அவரிடம் தெரிவித்த போது உடனே "சம்பந்தம் ஒன்றும் பயப்பட வேண்டாம். அந்த நவாப்பின் பாத்திரத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று சொல்லி அப் பாத்திரத்தின் வசனங்களை நான் தமிழில் சொல்ல அவர் தெலுங்கில் எழுதிக்கொண்டு, ஒரு அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு 4 மணிக்கு என்னிடம் வந்து என் பாகத்தை ஒப்புவிக்கிறேன், சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் என்று குருட்டு பாடமாக என் எதிரில் நடித்துக்காட்டினார் என் உள்ளம் பூரித்தது. நாடகத்தில் அவர் நன்றாய் நடித்ததுமன்றி தானாக ஒரு முக்கியமான நடிப்பை நானும் சபையில் வந்த எல்லோரும் ஆச்சரியப் படும்படியாக நடித்தார். அது கீழ் வருமாறு நான் வேடம்பூண்ட ரஜபுத்ரவீரன் மகமத்திய சைனியங்களால் கொல்லப்பட்டபோது இந்த சுத்த வீரனை மிக்க கௌரவமாக தகனம் செய்யவேண்டு மென்று கூறி ஈட்டிகளாலும் கத்திகளாலும் ஒரு பாடையைக் கட்டச் சொல்லி அதில் என்னை வளர்த்தி மகம்மதிய வீரர்களை கொண்டே எடுக்கச் செய்தார். அச் சமயம் என்னை தூக்கிய போது தான் மேலே அணிந்திருந்த மிகுந்த விலை யுயர்ந்த சரிகை சால்வை யொன்றை என் உடல்மீது தன் கையால் போர்த்திவிட்டு என் சவத்திற்கு பின்பாக தலை குனிந்த வண்ணம் நடந்து வந்தார். இது அவ்வளவும் அவர் நூதனமாக செய்த நடிப்பாகும். அவர் கரமானது சால்வையை போர்த்தியபோது என் உடலின் மேல்பட உடல் முழுவதும் புளகாங்கிதமானேன்! "காலத்தினாற் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தினும் மாணப் பெரிது" என்ற தெய்வப் புலமை திருவள்ளுவர் வாக்கின்படி இவர் எனக்கு செய்த உதவிக்கும் மரியாதைக்கும் நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? நண்பன் என்றால் அப்படி இருக்க வேண்டும்! நடிகன் என்றால் இப்படி இருக்க வேண்டும்! இன்னும் ஒரு சிறு கதையைக் கூறி இவரைப் பற்றி நான் எழுதியதை முடிக்கிறேன், ஒரு முறை பல வருடங்களுக்கு முன்பாக ரேடியோவில் ஏதோ பேசப் போயிருந்தபோது என் பேச்சு வருவதற்கு கொஞ்சம் கால தாமதமாக நான் பக்கத் தறையில் உட்கார்ந்திருந்தேன். அச்சமயம் ரேடியோ உத்தியோகஸ்தர் "மிஸ்டர் சம்பந்தம், கொஞ்சம் பொறுங்கள், சீக்கிரம் உங்களை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறேன்" என்று சொல்லி விட்டுப் போனார். இதைக் கேட்டதும் என் எதிரில் உட்கார்ந்திருந்த ஒரு சீமான் "நீங்களா சம்பந்தம்?" என்று என்னை கேட்க நான் 'ஆம்' என்று சொல்லி எதற்காக கேட்கின்றீர் என்று நான் வினவியபோது "நான் ஆந்திர தேசத்தார், பல்லாரியில் ராகவாச்சார்லு அவர்கள் உங்களைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதுமுதல் உங்களை பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்தேன். இன்று என் எண்ணம் நிறைவேறிற்று." என்று ஆங்கிலத்தில் சொன்னார். அவர் என்ன சொன்னார் என்று நான் கேட்டபோது பின்வருமாறு கூறினார். இதை நான் இங்கு டம்பமாக எழுதவில்லை. ராகவாச்சார்லு அவர்கள் என்னைப் பற்றி கூறிய புகழுக்கு நான் அருகனோ இல்லையோ நான் சொல்வதற்கில்லை. அவர் வார்த்தைகளை இங்கு எழுதியதற்கு முக்கிய காரணம் காலஞ் சென்ற ராகவாச்சார்லு அவர்கள் என் மீது கொண்ட பிரியத்தை மற்றவர்கள் அறியும் பொருட்டேயாம். இக்கூற்று அவர் என் அருகிலிருந்த ஆந்திர தேசத்தவர்க்கு சொல்லியதாகும். "நீங்கள் நாடகத்துறையில் மிகவும் அருமையானதை கேட்க வேண்டுமென்றிருந்தால் மிஸ்டர் சம்பந்தம் நடிப்பதை கேளுங்கள். அவர் கிழக்கிலும் மேற்கிலும் நடிக்கும் சிறந்த நடிகர்களுடைய நடிப்புத் திறமையெல்லாம் நன்றாய் உருவாக்கி உங்களை கேட்கச் செய்வார்" என்பதாம்.

நடிகர்களுள் ஒருவருக்கொருவர் மிகவும் பொறாமை கொண்டவர்களாய் இருப்பார்கள் என்பது ஒரு சாதாரண பேச்சாகும். இருந்தும் பொறாமை என்பது சிறிதும் இல்லாது என்னைப் பற்றி எனது காலஞ் சென்ற நண்பர் புகழ்ந்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன், எனது கண்களில் நீர் ததும்ப இதை இப்போது எழுதுகிறேனே இது தான்!