நாலடிமேல் வைப்பு/ விலையுடை அருந்தமிழ்

விக்கிமூலம் இலிருந்து

திருஞானசம்பந்தர்[தொகு]

மூன்றாம் திருமுறை[தொகு]

பதிகம்: 262, திருவாவடுதுறை[தொகு]

பதிகவரலாறு

ஞானசம்பந்தப்பெருமானின் தந்தையார் சிவபாதஇருதயர், பி்ள்ளையாரிடம் வேள்வி (யாகம்) செய்யப் பொன்வேண்டினார். அதனைக்கேட்ட பெருமான் திருவாவடுதுறை இறைவனிடம் முறையிடுகின்றார், தனக்குப் பொன் வேண்டுமென்ற உள்ளக்குறிப்புடன். ஆகவே, இது விலையுடை அருந்தமிழ் ஆனது; இது அரியதமிழ், இப்பதிகத்தைக் கேட்டதும் சிவபெருமான் பொன் -தங்கம்- தருகின்றார். எனவே, இது 'விலையுடை அருந்தமிழ்' எனப்பட்டது. இன்றும் செல்வம் வேண்டுவோர் இப்பதிகத்தினை இடைவிடாது பாராயணம் செய்வர்; அவர் வேண்டும் செல்வம் அவருக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை, அவ்வாறு பயன்பெற்றோரும் உண்டு.இனி அப்பதிகத்தினைக்காண்போம்.

நாலடிமேல்வைப்பு. பண்- காந்தார பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

பாடல்:1 (இடரினும்)[தொகு]

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே,
இதுவோஎமை ஆறுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல்:2 (வாழினும்)[தொகு]

வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல்:3 (நனவினும்)[தொகு]

நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேனம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.

பாடல்:4 (தும்மலொடருந்துயர்)[தொகு]

தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்னாக்
கைம்மல்கு வரிசிலைக் கண்யொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

பாடல்:5 (கையதுவீழினும்)[தொகு]

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கி்ல்லையேல்
அதுவோவுன தினனரு ளாவடுதுறை அரனே

பாடல்:6 (வெந்துயர்)[தொகு]

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென்னா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னரு ளாவடுதுறை அரனே.

பாடல்:7 (வெப்பொடு)[தொகு]

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்னா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னரு ளாவடுதுறை அரனே

பாடல்:8 (பேரிடர்)[தொகு]

பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சிருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னரு ளாவடுதுறை அரனே

பாடல்:9 (உண்ணினும்)[தொகு]

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்னாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னரு ளாவடுதுறை அரனே.

பாடல்:10 (பித்தொடு)[தொகு]

பித்தொடு மயங்கியோர் பிணிவருனும்
அத்தா உன்னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னரு ளாவடுதுறை அரனே.

பாடல்:11 (அலைபுனல் ஆவடுதுறை)[தொகு]

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
'விலையுடை அருந்தமிழ்' மாலைவல்லார்
வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.
திருச்சிற்றம்பலம்