நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/10வது திருமொழி
Appearance
10ம் திருமொழி கார்க்கோடல் பூக்காள் மால் செய்வகையோடு மாற்றம் இயம்பல் கலிநிலைத்துறை கார்க்கோடல் பூக்காள்! கார்க்கடல் வண்ணனென் மேல்*உம்மைப் போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான்?* ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது* அணிதுழாய்த் தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்கவல்லேன் அந்தோ! 1 மேற்றோன்றிப் பூக்காள்! மேலுல கங்களின் மீதுபோய்* மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்* மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்போலச் சுடாது*எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துகொள் கிற்றிரே. 2 கோவை மணாட்டி! நீயுன் கொழுங்கனி கொண்டு*எம்மை ஆவி தொலைவியேல் வாயழகர் தம்மை யஞ்சுதும்* பாவி யேன்தோன்றிப் பாம்பணை யார்க்கும்தம் பாம்புபோல்* நாவு மிரண்டுள வாய்த்து நாணிலி யேனுக்கே. 3 முல்லைப் பிராட்டி!நீயுன் முறுவல்கள் கொண்டு*எம்மை அல்லல் விளைவியே லாழிநங்காய்!உன்ன டைக்கலம்* கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால்* நானும் பிறந்தமை பொய்யன்றே. 4 பாடும் குயில்காள்! ஈதென்ன பாடல்?* நல்வேங்கட நாடர் நமக்கொரு வாழ்வுதந்தால்வந்து பாடுமின்* ஆடும் கருளக் கொடியுடை யார்வந்து அருள்செய்து* கூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே. 5 கணமா மயில்காள்! கண்ணபிரான்திருக் கோலம்போன்று* அணிமா நடம்பயின் றாடுகின்றீர்க்கடி வீழ்கின்றேன்* பணமா டரவணைப் பற்பலகாலமும் பள்ளிகொள்* மணவாளர் நம்மை வைத்தபரிசிது காண்மினே. 6 நடமாடித் தோகை விரிக்கின்றமாமயில் காள்!*உம்மை நடமாட்டங் காணப் பாவியேன்நானோர் முதலிலேன்* குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து*எம்மை உடைமாடு கொண்டா னுங்களுக்கினியொன்று போதுமே? 7 மழையே! மழையே! மண்புறம் பூசியுள் ளாய்நின்ற* மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற* அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத் தழுவநின்று* என்னைத் ததர்த்திக்கொண்டூற்றவும் வல்லையே? 8 கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்குறுத்து* உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு* என்னையும் உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்கு*என் நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே. 9 நல்லஎன் தோழி! நாகணைமிசை நம்பரர்* செல்வர் பெரியர் சிறுமானிடவர்நாம் செய்வதென்* வில்லி புதுவை விட்டுசித்தர்தங்கள் தேவரை* வல்ல பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே. 10 ஆண்டாள் திருவடிகளே சரணம்