நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/4வது திருமொழி
Appearance
4ம் திருமொழி தெள்ளியார் பலர் கூடல் குறிப்பு கலி விருத்தம் தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்* வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்* பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட* கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே! 1 காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்* வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்* ஓட்ட ராவந்தென் கைப்பற்றி* தன்னோடும் கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே! 2 பூம கன்புகழ் வானவர் போற்றுதற் காம கன்*அணி வாணுதல் தேவகி மாம கன்*மிகு சீர்வசு தேவர்தம்* கோம கன்வரில் கூடிடு கூடலே! 3 ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட* பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து* வாய்த்த காளியன் மேல்நட மாடிய* கூத்த னார்வரில் கூடிடு கூடலே! 4 மாட மாளிகை சூழ்மது ரைப்பதி நாடி* நந்தெரு வின்நடுவே வந்திட்டு* ஓடை மாமத யானை யுதைத்தவன்* கூடு மாகில்நீ கூடிடு கூடலே! 5 அற்ற வன்மரு தம்முறி யநடை கற்ற வன்*கஞ் சனைவஞ் சனையின் செற்ற வன்*திக ழும்மது ரைப்பதி* கொற்ற வன்வரில் கூடிடு கூடலே! 6 அன்றின் னாதன செய்சிசு பாலனும்* நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்* வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ*முன் கொன்ற வன்வரில் கூடிடு கூடலே! 7 ஆவ லன்புடை யார்தம் மனத்தன்றி மேவ லன்*விரை சூழ்துவ ராபதிக் காவ லன்*கன்று மேய்த்து விளையாடும்* கோவ லன்வரில் கூடிடு கூடலே! 8 கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று* பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்* அண்ட மும்நில னும்அடி யொன்றினால்* கொண்ட வன்வரில் கூடிடு கூடலே! 9 பழகு நான்மறை யின்பொரு ளாய்*மதம் ஒழுகு வாரண முய்ய வளித்த*எம் அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்* குழக னார்வரில் கூடிடு கூடலே! 10 ஊடல் கூட லுணர்தல் புணர்தலை* நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர்* கூட லைக்குழற் கோதைமுன் கூறிய* பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. 11 ஆண்டாள் திருவடிகளே சரணம்