நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/நாச்சியார் திருமொழி/6வது திருமொழி
Appearance
6ம் திருமொழி வாரணமாயிரம் மாயவன் தன் கைத்தலம் பற்றக் கனாக் கண்டமை கலி விருத்தம் வாரண மாயிரம் சூழவ லம்செய்து* நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்* பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்* தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான். 1 நாளை வதுவை மணமென்று நாளிட்டு* பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்* கோளரி மாதவன் கோவிந்த னென்பான்*ஓர் காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ!நான். 2 இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்* வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து* மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை* அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான். 3 நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கி* பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி* பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை* காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான். 4 கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி* சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள* மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு*எங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீ!நான். 5 மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத* முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்* மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து*என்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ!நான். 6 வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்* பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து* காய்சின மாகளிறு அன்னானென் கைப்பற்றி* தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீ!நான். 7 இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்* நம்மையு டையவன் நாராய ணன்நம்பி* செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி* அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ!நான். 8 வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு* எரிமுகம் பாரித்து என்னைமுன்னே நிறுத்தி* அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து* பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான். 9 குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து* மங்கல வீதி வலம்செய்து மணநீர்* அங்கவ னோடும் உடன்சென்றங்கு ஆனைமேல்* மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான். 10 ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை* வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்* தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்* வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. 11 ஆண்டாள் திருவடிகளே சரணம்