உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/அர்த்தம் பிறந்தது

விக்கிமூலம் இலிருந்து

68. அர்த்தம் பிறந்தது

தோ தொலைவில் தெரிகிறதே, அந்த நீலச் சிகரத்தின் அழகு நுனி, அதோடு இந்த மலையின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. அதற்கு அப்புறம் என்ன ஆரம்பமாகிறது என்று கேட்பதில் பயனில்லை. ஒன்று முடிந்தால், இன்னொன்று ஆரம்பமாகிக் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஒன்று முடிவதும், அந்த முடிவையே மறு புறமாகக் கொண்டு மற்றொன்று தோன்றுவதும் உள்ளங் கையைத் திருப்பிக் காட்டினால் புறங்கையாகத் தெரிவது போலத்தான்.

ஆனால் எமரால்ட் காப்பி எஸ்டேட் உரிமையாளர் புஜங்கராவைப் பொறுத்த வரை இந்தத் தத்துவத்தில் ஒரு பகுதிதான் உண்மை. மங்களூரிலிருந்து உதகமண்டலத்துக்குக் குடியேறி வாழத் தொடங்கி விட்ட இந்தப் பதினைந்து வருட வாழ்க்கையில் அவர் அநுபவித்தும், கண்டும் உணர்ந்த எத்தனையோ முடிவுகளிலிருந்து எந்த ஆரம்பமும் முளைக்கவில்லை, எந்தக் கிளையும் தோன்றிக் கிளைக்கவில்லை.

இங்கே, இதோ, இப்பொழுது இந்தப் பனிக்காலத்து மாலையில் உட்கார்ந்து கொண்டு கண் பார்வைக்கு எட்டுகிற கடைசிச் சிகரம் வரை பார்த்துக் கொண்டிருக்கிறாரே, இதே காரியத்தை எமரால்ட் எஸ்டேட்டின் பங்களா முகப்பிலிருந்து கடந்த நாலாயிரத் தெண்ணுாறு நாட்களுக்கு மேலாகத் தவறாமல் செய்து கொண்டிருக்கிறார் அவர். நாலாயிரத்தெண்ணுறு நாட்களுக்கு மேலாக அல்லது பதினைந்து ஆண்டுகளாக நடுவில் லீப் வருடங்களும் வந்திருக்கலாம் - ஆனால் அது அவருக்குத் தெரியாது. இந்த நீல மலைச் சிகரங்களுக்கு அப்பால் காலம் என்று ஒரு பொருள் நகர்ந்து ஓடியிருப்பதாகவே அவருக்குத் தெரியாது. இத்தனை ஆண்டுகளாக இந்த இடத்திலிருந்து அவர் பார்வைக்குத் தெரிந்த ஒரே முடிவு அந்தச் சிகரம்தான். அதற்கு அப்பால் அவருக்கு எதுவும் தெரிந்ததில்லை. அசோகமரத்தின் பச்சை இலை ஒன்றைப் பெரிதாக்கி நிறுத்தினாற்போல் செங்குத்தாக நிற்கிறதே அந்தச் சிகரத்தின் நுனியோடு அவருடைய பார்வையும் நினைவும் ஒருசேர ஒடுங்கி முடிந்து விடும். முடிந்து விடும் என்பது முக்கியமில்லையானாலும் அதற்கப்பால் படராதென்பது முக்கியம்.

‘குறிக்கோள் குறிக்கோள்’ என்று அடித்துக் கொள்கிறார்களே அதுதான் என்ன? ‘இதைச் செய்தே தீருவது’ என்று எதையாவது ஒன்றை உறுதியாகக் குறிக் கொள்வதுதானே குறிக்கோள்? பரம் பொருளோடு ஒன்றுவதைக் குறியாக வைத்துக் கொண்டு பத்மாசனத்தில் உட்கார்ந்து தவம் செய்யும் துறவி, இலாபத்தைக் குறியாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்யும் வியாபாரி இவர்கள் எல்லாரையும் போல எந்த ஒரு சித்தியையும் நினைக்காமல் எந்த ஒர் இலாபத்தையும் கருதாமலே அந்தச் சிகரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு ஒன்றேகால் டஜன் வருடங்களைக் கழித்திருக்கிறார் புஜங்கராவ். அந்தக் குறிக்கோளில் அவர் ஒரு நாள் கூடத் தவறியதில்லை. வெம்மையறியாத பசுமைப்பட்டாடையுடுத்தி எண்ணத் தொலையாத வண்ணப் புதுப்பூக்களினால் கண்ணைச் சிமிட்டிப் புன்னகை பூத்துக் கொண்டே உயரத்தில் வீற்றிருக்கும் கந்தர்வப் பெண்ணைப் போல் கொலுவிருக்கும் பேரரசியான நீலகிரி நங்கையின் வாழ்க்கையில் இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எத்தனை எத்தனையோ புதுமைகள், எத்தனையோ மாறுதல்கள், எத்தனையோ வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தன. நேற்று வரை உருளைக் கிழங்கு வயலாயிருந்த இடத்தில் இன்றைக்குப் பங்களாக் கட்டிடம் தெரிகிறது. மஞ்சக் கெளடர் புதிய கிழங்கு சாகுபடிக்கு முள்ளுப் போட்டுக் கொண்டிருக்கிறார். சென்ற மாதம் வரை ஸ்டேன்சுக்கும் நார்மன் துரைக்கும் சொந்தமாயிருந்த கிரீன்பீல்ட் எஸ்டேட்டை வயநாட்டு நாயர் ஒருத்தர் விலைக்கு வாங்கி விட்டார். யூகலிப்டஸ் எண்ணெயையும் தம்முடைய 'சாமர்த்தியத்தையும் சேர்த்துக் கண்ணாடிப் புட்டியில் அடைத்துப் பணம் பண்ணிக் கொண்டிருந்த மேட்டுப் பாளையத்துச் செட்டியார் ஒருவர் ரேஸ்கோர்சுக்கு எதிர்த்தாற் போல் மேட்டில் பிளஷர்லாட்ஜ்’ என்று ஒட்டல் வைத்து விட்டாராம். இனிமேல் இந்த உதகமண்டலத்தில் பிளஷர் (சந்தோஷம்) வேறு எங்கேயாவது மீதமிருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்!

ஆனால், இந்த மாறுதல்கள் எல்லாம் புஜங்கராவின் குறிக்கோளைக் கலைத்துவிடவில்லை. அவருடைய மகிழ்ச்சியை யாராலும் பறிக்க முடியாது. காரணம்? மற்றவர்கள் மகிழ்ச்சியடைய முடியாத அல்லது மகிழ்வதற்கு இதில் என்ன இருக்கிறது?’ என்று மிக விரைவில் சலித்துப் போகக் கூடிய ஒன்றைப் பார்த்து அவர் மகிழ்ந்து கொண்டிருந்தார். அது அவர் மனத்துக்குப் பழகிப் போன அநுபவம். மற்றவர்கள் சொல்கிற மாதிரிச் சொன்னால் பழகிப் போன அசட்டுத்தனம்.

அந்தக் கருநீலச் சிகரத்துக்கு முன்னாலும் பல சிறிய சிகரங்கள் இருந்தன. பின்னாலும் சில இருக்கலாம்.ஆனால் அவரைக் கவர்ந்தது அந்த ஒரே ஒரு சிகரம்தான். அது மட்டும் அவரைக் கவர்ந்ததற்கு எப்படிக் காரணம் கண்டு பிடித்துச் சொல்ல முடியாதோ அதேபோல மற்றவை ஏன் அவரைக் கவரவில்லை என்பதற்கும் காரணம் கண்டுபிடித்துச் சொல்ல முடியாது. அவருடைய எஸ்டேட் பங்களாவின் முகப்பில் அவர் வழக்கமாக உட்காரும் இடத்திலிருந்து பார்த்தால் அதுதான் பெரிதாக எதிரே தெரிந்தது. அதனால் அதுவே அவரைக் கவர்ந்திருக்கலாம் என்று நாமாக அநுமானம் செய்ய முடியும். ஆனால் புஜங்கராவ் அந்தக் காரணத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்.

அதற்குக் காரணம் என்று ஒன்றைக் கற்பிக்க முயல்வதையே ஒப்புக் கொள்ளாதவர் காரணத்தை எங்கே ஒப்புக் கொள்ளப் போகிறார்? எமரால்ட் எஸ்டேட்டின் சுற்றுப்புறத்தில் அவருக்கு எத்தனையோ நண்பர்கள் இருந்தனர். அவரைப் போலவே அவர்களும் காப்பி, தேயிலைத் தோட்டங்களின் முதலாளிகள். அவர்களில் சார்ல்வுட் என்று ஒர் ஆங்கிலேயர் இருந்தார். அவர் புஜங்கராவின் எஸ்டேட்டுக்குப் பக்கத்து எஸ்டேட்காரர். அந்த ஆங்கிலேயர் சில மாலை வேளைகளில் புஜங்கராவைச் சந்திப்பதற்கு வருவார். சார்ல்வுட் எதைப் பற்றியாவது சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்கிற போதுகளில் கூடப் புஜங்கராவின் செவிகள்தாம் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கும். அவருடைய இடுங்கிய சிறிய கண்களோ அந்தச் சிகரம் முடிகிற நுனியில் இருக்கும். ஒரு நாள் சார்ல்வுட் பொறுமையிழந்து புஜங்கராவிடம் இதைப் பற்றிக் கேட்டே விட்டார்.

"வாட் ஆர் யூ லுக்கிங் தேர்?’ என்று தொடங்கித் தாம் அவரைப் பார்க்கிற போதெல்லாம் அவர் அப்படியே இருந்து வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லிக் கேலி செய்தார் சார்ல்வுட், புஜங்கராவ் அந்தக் கேலிக்கும் பதில் சொல்லவில்லை. புன்முறுவல் பூத்தார். அப்படிப் புன்முறுவல் பூத்தபோதும் அவருடைய கண்கள் வழக்கமான இலக்கில்தான் இலயித்திருந்தன. இதனால் சற்றே கோபமடைந்துவிட்ட அந்த ஆங்கில நண்பர், அர்த்தமில்லாமல் எதையாவது பார்ப்பது சோம்பேறித் தனத்துக்கு அடையாளம்’ என்ற கருத்தைக் கடுமையான ஆங்கில வார்த்தைகளில் தொடுத்துப் பொரிந்து தள்ளினார். நண்பரின் கோபத்தைக் கண்டு மேலும் சிரித்துக் கொண்டே தமது பார்வையைத் திருப்பாமலே ஒரு கேள்விகேட்டார் புஜங்கராவ்.அ மிகவும் ஆழமான கேள்வியாயிருந்தது.

"மிஸ்டர் சார்ல்வுட் அர்த்தம் அர்த்தம் என்று சொல்கிறீர்களே, அதுதான் என்ன? அர்த்தத்தின் அர்த்தத்தை முதலில் சொல்லுங்கள்.” “இதற்குப் பதில் குழந்தைக்குக் கூடத் தெரியுமே மிஸ்டர் ராவ்! ஒரு வார்த்தையினால் குறிக்கப்படும் பொருள் அல்லது பயன் எதுவோ அதுதான் அதற்கு அர்த்தம்”

“நல்லது! இந்த உலகம் தோன்றிய முதல் ஊழியின் முதல் விநாடியான யுகாரம்பத்தில் வார்த்தைகள் மட்டுமே பிறந்தன என்றும் அர்த்தங்கள் அதற்குப் பின்பே உண்டாயின என்றும் உங்கள் பைபிளில் சொல்லியிருக்கிறார்களே. அது உங்களுக்கு நினைவிருக்கிறதோ?” என்று கேட்டார் புஜங்கராவ்.

"தாராளமாக நினைவிருக்கிறது!”

“அதைப்போல்தான் இந்தச் சிகரத்தைப் பார்க்கத் தொடங்கிப் பதினைந்து வருடங்கள் ஆகியும் இந்த நோக்கு இன்னும் அர்த்தம் பிறவாத வெற்று வார்த்தையாகவே இருந்து வருகிறது.நமக்கு அர்த்தம் தெரியாத வார்த்தையை உயர்ந்த வார்த்தையை (அதன் அர்த்தம் நமக்குத் தெளிவாகத் தெரியாத உயரத்தை' உடையதென்று அறிந்திருந்தும்) நாம் காதலிப்பது உண்டா இல்லையா? இயற்கையின் அநுபவங்களைப் பற்றி அகராதியைப் போல் யாராவது இதற்கு இது அர்த்தம் என்று எழுதி வைத்திருக்கிறார்களோ? அர்த்தம் வார்த்தையைப் பொறுத்ததல்ல. அதனால் பின்பு எப்போதோ ஏற்படுவதற்கு இருக்கிற விளைவைப் பொறுத்ததுதான்.” “இருக்கலாம்! ஆனால் மனிதர்கள். உயிரும் சதையுமாய் இருப்பவர்கள் அர்த்தம் பிறவாத காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை நான் வெறுக்கிறேன்.”

சார்ல்வுட்டின் ஆத்திரத்தைப் பார்த்துப் புஜங்கராவுக்குச் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது. ஆவல் அடங்குகிறவரை நன்றாகச் சிரித்துவிட்டு அந்த ஆங்கில நண்பருக்கு விடை கொடுத்து அனுப்பினார் அவர்.

புஜங்கராவின் வாழ்க்கையில் இதுவரை எந்த அநுபவத்துக்கும் அர்த்தம் பிறந்ததில்லை. தம்முடைய இருபத்தெட்டாவது வயதில் காப்பித் தொழில் நுணுக்கங்களைக் கற்று வருவதற்காகத் தகப்பனாரால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட போதும், ஆறடி உயரமும் நன்றாகப் பழுத்த ஆரஞ்சுப் பழத்தினும் சற்றே வெளுத்த சிவப்பு நிறமும் கொண்டு வெளிநாட்டுச் சூழ்நிலையில் வைத்துப் பார்த்தால் இவர் இந்தியர்தாமா?’ என்று சந்தேகப்படக்கூடிய தம்முடைய தோற்றத்தினால் பிரேஸிலில் ஒரு வெள்ளைக்கார யுவதியைக் கவர்ந்து காதலித்து மணம் புரிந்துகொள்ள நேர்ந்தபோதும், மணம் புரிந்துகொண்ட சில மாதங்களிலேயே அந்தப் பெண் கார்விபத்தில் மாண்ட பெருந்துயரத்தின்போதும், அந்தத் துயரத்தோடும், ஒரு பெண்ணுக்குச் சிறிது காலம் கணவனாக இருந்தோம் என்ற நினைப்போடும் தாய்நாடு திரும்பி வந்தபோதும் எப்போதும் அவருடைய வாழ்க்கையின் அர்த்தம் அவரே புரிந்துகொள்ளும்படி விளைந்ததில்லை. அவர் பிரேஸிலில் தங்கிக் கற்று வந்திருந்த காப்பிப் பயிர்த் தொழிலினாலும், மற்ற நுணுக்கங்களினாலும் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குள் எமரால்ட் எஸ்டேட்டின் வளம் பெருகி வளர்ந்திருக்கிறது என்பதுதான் ஒரே விளைவு. ஆனால் இந்த விளைவை மட்டுமே தம்முடைய வாழ்வின் அர்த்தமாகக் கொள்ள அவர் தயாராயில்லை. வேறு ஏதோ ஒர் அர்த்தம் இருக்கவேண்டும் என்றே அவருக்குத் தோன்றியது. அந்த அர்த்தம் எது என்பதுதான் அவருக்கு இன்று வரையில் புலப்படவில்லை.

காரியமாகிய விளைவுக்குப் பிறகுதான் சில காரணங்கள் அழகாகத் தோன்றும். அதேபோல் அர்த்தம் புரிந்தபின்புதான் அந்த அர்த்தத்தைப் பிறப்பித்த பதங்கள் முன்னைக்காட்டிலும் அழகாகத் தோன்றும். அவருக்கு அப்படித் தோன்றிய சமயங்களும் உண்டு.

புஜங்கராவ் தம்முடைய பதினான்காவது வயதில் மங்களூரில் ஹைஸ்கூல் படிப்புப் படித்தபோது முதன் முதலாக 'எமரால்ட்'என்கிற ஆங்கில வார்த்தையைக் கற்றுக்கொண்டார். அந்த 'வார்த்தைக்குப் பச்சை நிறமுள்ள மரகதம்’ என்று அப்போது அர்த்தம் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்தப் பதத்தின் அர்த்தம் எவ்வளவு அழகு நிறைந்தது என்பது பள்ளிக்கூடத்திலும், வகுப்பறையின் வேத புஸ்தகமான அகராதியிலும் அவருக்குப் புரியவில்லை. தன் தகப்பனார் உதகமண்டலத்தில் எஸ்டேட் வாங்கியபோதுதான் புஜங்கராவ் எமரால்ட் என்ற வார்த்தைக்கு எவ்வளவு அழகான அர்த்தம் இருக்க முடியுமென்பதை விளங்கிக்கொண்டார்.

கவர்ச்சிகரமான கருநீலம் கலந்த அந்த மலைப் பிரதேசத்துப் பசுமையில் மனத்தைக் கொள்ளை கொடுத்த வெள்ளைக்காரன் ஒருவன் அகராதியிலுள்ள வார்த்தையையும் தன் மனத்தில் இருந்த கவித்துவத்தின் ஆசையையும் சேர்த்து அந்த இடத்தில் பெயராகச் சூட்டியிருந்தான். அந்த இடத்துக்குச் சூட்டியதால் அந்தப் பெயரின் பெருமையையே அதிகப்படுத்தியிருந்தான்.

‘எமரால்ட் - மரகதப் பச்சை’.

‘கண்ணுக்கெட்டிய தூரம் வரை மேடும் பள்ளமுமாகப் பச்சைப் பட்டுடுத்தித் தன்னிச்சையாய்க் கிடந்து தூங்கும் பெண்ணழகிபோல் தெரியும் இந்த மலைப் பகுதி எல்லாம் நிஜமாகவே மரகதமாயிருந்தால் எந்த இரத்தின வியாபாரியாவது இதற்கு விலை கணிக்கமுடியுமோ?’ என்று முதல் முதலாக அந்த எஸ்டேட்டுக்கு அப்பா தன்னை அழைத்துக்கொண்டு சென்றபோது தன்னுடைய பதினேழாவது வயதில் இளைஞன் புஜங்கராவ் அந்த மலைப் பகுதியைப் பார்த்து நினைத்தான். பதினாலாவது வயதில் தான் படித்திருந்த, ‘எமரால்ட்’ என்னும் பதத்துக்கு அகராதியில் எழுத முடியாத பரந்த அர்த்தத்தை அப்போதுதான் கண்ணாரக் கண்டான். அகராதியில் ஒரு வார்த்தைக்கு இருக்கிற அர்த்தத்தைவிட அந்த வார்த்தை குறிப்பிடுவது எதுவோ அதையே அனுபவிக்கிறவன் உணர்கிற அர்த்தம் மிகவும் அதிகமானதென்று அவருக்குத் தோன்றியது.

இப்படியெல்லாம் நினைத்த மனம் கால் நூற்றாண்டுக்கு முற்பட்ட இளைஞன் புஜங்கராவினுடையதுதான். பங்களூரிலும் மைசூரிலும் பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும் படித்த காலத்து புஜங்கராவ் வேறு பிரேஸிலுக்குப் போய் இரண்டு மூன்று வருடங்கள் அங்கே தங்கிவிட்டுத் தாய் நாடு திரும்பிய புஜங்கராவ் வேறு. பிரேஸிலில் கற்ற தோட்டத்தொழில் நுணுக்கங்களால் அறிவும், முன்பின் தெரியாத வெள்ளைக்கார யுவதியின் மனத்தில் ஆசையைக் கற்பித்ததால் நேர்ந்த புதிய உறவும், இறுதியில் அந்த உறவு அழிந்த வெறும் நினைவும் கொண்டு தாய்நாடு திரும்பிய புஜங்கராவ் வேறு.

பதினேழு வயதில் பார்த்த அதே பசுமை இன்னும் இன்றும் ‘எமரால்டில்’ இருக்கத்தான் இருந்தது. ஆனால் புஜங்கராவின் மனத்தில் பசுமை குறைந்திருந்தது. இளமையில் தெரிந்தது போல அந்தப் பசுமைக்கும் அதைக் குறித்த பெயருக்கும் விசேஷமாக எந்த அர்த்தமும் அவருக்குத் தெரியவில்லை. இங்கே திரும்பிய நாளிலிருந்து அவருக்குத் தெரிகிற ஒரே காட்சி அந்தச் சிகரம்தான். அதற்கும் இன்றுவரை அர்த்தம் தெரியவில்லை. சாதாரணமாக அர்த்தமே தெரியாதபோது விசேஷமாக எப்படி அர்த்தம் தெரியப்போகிறது?

அர்த்தமில்லாமலே எதையாவது தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது சோம்பேறித்தனத்துக்கு அடையாளம் என்கிறார் சார்ல்வுட் ஆனால் அதிலிருந்தும் ஏதாவது ஓர் அர்த்தம் என்றாவது ஒருநாள் பிறக்கும். பிறக்கிற வரை அதைப் பார்த்துக்கொண்டே இருப்பேன் என்கிறார் புஜங்கராவ். பத்து நிமிஷங்களுக்கு ஒரு டீயும் மூன்று நிமிஷங்களுக்கு ஒரு சிகரெட்டுமாகக் குடித்துத் தீர்த்துக் கொண்டே சாயங்காலம் மூன்று மணியிலிருந்து இருட்டுகிற வரை ஒரே திசையில் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிற மனிதரைச் சார்ல்வுட் சோம்பேறி என்று கூறியது கூட நியாயமாகவே இருக்கலாம். ஆனால் புஜங்கராவ் அதை ஒப்புக்கொள்ளமாட்டார். காலையில் பதினோரு மணியிலிருந்து மாலை மூன்று மணி வரை நானூறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள எமரால்டு காப்பி எஸ்டேட்டின் ஆபீஸ் நிர்வாகத்தைச் சுறுசுறுப்பாக அவர் கவனிப்பதாக மற்றவர்கள் சொல்கிறார்களே; அந்த வேளையில்தான் தமக்குப் பிடித்தமில்லாத எதையோ மந்தமாகவும், மெதுவாகவும் தாம் செய்து கொண்டிருப்பதாக அவர் உணர்ந்திருக்கிறார். உண்மையில் தாம் சுறுசுறுப்பாக இருப்பதாக அவர் உணர்கிற நேரம் எது தெரியுமோ?

ஒவ்வொரு நாளும் மாலை மூன்று மணியிலிருந்து இருட்டுகிற வரை ஒரு வேலையும் செய்யாமல் பங்களாவின் முகப்பில் உட்கார்ந்துகொண்டு கண் பார்வை விலகிவிடாதபடி அந்தக் கடைசிச் சிகரத்தை அர்த்தமில்லாமல் பார்த்து அனுபவிக்கிறாரே, அதுதான் அவர் சுறுசுறுப்பான காரியத்தைச் செய்வதாய்த் தமக்குத் தாமே உணர்கிற நேரம்.

சுருள் சுருளாய் வெண் மேகங்கள் சுருட்டிக்கொண்டு படர்கின்ற சில கார் காலத்துப் பிற்பகல் வேளைகளில் வில்லிவோட் ஹவுஸ் தன் சிவப்பு வெல்வெட் உதடுகளில் சிரிப்பு அரும்பப் பொன் நிறக் கூந்தல் தோள் பட்டைகளிலே சுருள் சுருளாய்ச் சரிய அவருடைய நிகழ்காலக் கற்பனை அவளுக்கு அணிவித்துப் பார்க்க ஆசைப்பட்ட இந்திய உடையில் அந்தச் சிகரத்தின் உச்சியில் அது முடியுமிடத்தின் மேல் கால்கள் பாவாமல் வந்து நிற்பதைப் போல் அவருக்குத் தோன்றும். ஆனால் அப்படித் தோன்றுவதிலும் அர்த்தம் ஏதும் இருப்பதாக அவர் உணரவில்லை. மேகக் கற்றைகள் முடிகிற இடத்தின் கோடுகளில் தங்கத்தை உருக்கிப் பூண் பிடித்தாற்போல் கதிரொளி படர அந்தச் சிகரம் பொன் மலையாய்ப் பிரகாசிக்கிற கார் காலத்து மாலைகளில் அதை விடப் பிரகாசமான நிறத்தோடு அவருடைய காதலி அங்கே வந்து அதன் உச்சியில் சிரித்தபடி நின்றுகொண்டிருப்பாள். அதற்கும் அர்த்தமில்லை. விஷயமே கற்பனையாக இருக்கும்போது சத்தியமான அர்த்தம் எப்படி அதிலிருந்து பிறக்க முடியும்? அந்தச் சிகரத்தின் உச்சியிலிருந்து தேவலோகம் மிகவும் சமீபமோ என்று இந்த நாற்பத்தேழாவது வயதில் பதின்மூன்று வயதுப் பையனின் நினைவு அவருக்கு வருவதுண்டு. அந்த நினைவுக்கும் அர்த்தமிருக்காது. ‘எமரால்ட்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் கண்டு அதுபவித்தபோது பதினேழு வயதில் முதிர்ந்த பக்குவமான கற்பனை அவருக்கு ஒரு காலத்தில் வந்ததுபோல் இப்போது நாற்பத்தேழாவது வயதில் பதின்மூன்று வயதுப் பிள்ளைத்தனமான கற்பனை வருகிறது. பக்குவமும் முதிர்ச்சியும் இல்லாமல் குழந்தை நினைப்பாக வருகிறது. ஒன்றும் உடுத்துக்கொள்ளாமல் ஒன்றும் புனைந்து கொள்ளாமல் குழந்தை வருவதுபோல் தன் மேனியோடு வருகிறது. தன் மேனியோடு வருகிற கற்பனைக்கு அர்த்தம் இருக்க முடியாதுதான். பிரேஸிலில் இறந்துபோன லில்லி வோட் ஹவுஸ் நீலகிரியில் வந்து தோன்றுவதற்கு அர்த்தம் ஏது?

யட்சன் தன் காதலிக்கு மேகத்திடம் தூது சொல்லியனுப்பியதாகக் காளிதாசன் பாடியிருப்பதுபோல் அந்தச் சிகரத்தின் நுனியில் வந்து கூடுகிற் பரிசுத்தமான மேகங்களிடம் தேவலோகத்திலே போய்ச் சொல்லும்படி லில்லி வோட் ஹவுஸுக்கு ஏதாவது சொல்லி அனுப்பவேண்டும்போல் அவருக்குத் தோன்றும். ஆனால் மறுகணமே அப்படிச் செய்ய நினைப்பதில் அர்த்தமில்லை என்று புத்தி மேலெழுந்து அவரை அடக்கிவிடும்.

அந்தச் சிகரம் இருக்கிறதே; அது ஒவ்வொரு பருவ காலத்தில் ஒவ்வொரு விதமாக நிறம் மாறி அழகு காட்டும். கரு நீலக் கவர்ச்சி ஒரு சமயம், கரும் பசுமைக் கவர்ச்சி ஒரு சமயம். வயலட் மை ― அதாவது காப்பிங் பென்சிலை நீரில் குழப்பினாற் போன்ற நிறத்தோடு கூடிய கவர்ச்சி ஒரு சமயம், சாம்பல் நிறங்கலந்த பசுமை ஒரு சமயம். இன்னும் வார்த்தைகளால் சொல்ல முடியாத எத்தனை எத்தனையோ நிறச் சேர்க்கைகள் அந்தச் சிகரத்தின் பருவகாலத் தோற்றங்களிலிருந்து தான் நிறங்களைப் பற்றிய நினைப்பே அவருக்கு இன்னும் மறந்துவிடாமல் இருந்தது.

பளீரென்று வயலெட் மை உருகி வழிவதுபோல் அந்தச் சிகரம் காட்சியில் தென்படுகிற சில நாட்களில் எப்போதோ ஏதோ ஆங்கிலப் புத்தகத்தில் படித்திருந்த ஒரு காதல் கவிதையிலிருந்து இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும் அவருக்கு நினைவு வரும். அதில் அந்தப் பெண்ணின் இதழ்களை வருணிக்க ‘ஸில்க்கன் லிப்ஸ்’ பட்டுமயமான உதடுகள் என்ற பதங்களை அதைப் பாடிய கவி பயன்படுத்தியிருந்தான். அந்தப் பதங்களின் அர்த்தம் அவருக்கு நினைவு வருகிற விநாடிகளில் அந்தச் சிகரத்தின் உச்சியில் மிக நளினமாய் மடிந்து பனி முத்துப் புரளும் இரண்டு செம்பட்டு ரோஜாப்பூவின் இதழ்கள் தோன்றிச் சிறிது சிறிதாக வளர்ந்து அந்த இடத்தில் லில்லிவோட் ஹவுஸ் எழுந்து உருவாகிநிற்பாள்.அந்தத் தோற்றம் மறைந்தவுடன் அந்த வார்த்தைகள் அந்த நினைப்பு யாவும் அர்த்தமின்றி மறைந்துவிடும். கடைசியில் புஜங்கராவும் அவருடைய அந்தச் சிகரமும்தான் அர்த்தமில்லாத வார்த்தைகளாய் அங்கே மீதமிருப்பார்கள்.

இனிமேலும் லில்லிவோட் ஹவுஸைப் பற்றி நினைப்பதே அசட்டுத்தனமல்லவா? அவள்தான் இன்றைக்குப் பதினாறு வருடங்களுக்கு முன்பே கார் விபத்தில் மாண்டுபோய் விட்டாளே? பதினாறு வருடங்களாக ஒரே பெண்ணை நினைத்துக் கொண்டிருப்பது பெரிய காரியம்தான். அதுவும் அவள் இறந்துபோன பின்பும்? மனிதர்களிலும் இராமர்கள் இருக்கிறதைத்தானே காட்டுகிறது இது! வாழ்நாள் முழுதும் ‘பிற மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று ஒரே பெண்ணைத் தவிர வேறு யாரையும் நினைக்காததனால்தான் இராமனுக்குக் காவியப்பெருமை..அப்படி நினைத்து விட்டதுதான் இராவணனுக்குச் சிறுமை. புஜங்கராவ் எந்தக்காவியத்துக்கும் நாயகனாவதற்கு விரும்பவில்லை. பிரேஸிலில் லில்லிவோட் ஹவுஸுக்கு நாயகனாக இருந்தபோதே தாம் ஒரு நடமாடும் காவியத்துக்கு நாயகனாக இருந்ததாகத்தான் அவர் எண்ணிக் கொண்டிருந்தார். தம்முடைய வாழ்க்கையில் அவர் ஒரே ஒரு முறைதான் மிகச்சிறந்த காவியத்தை அனுபவித்திருக்கிறார். பொன் அவிழ்ந்து கொட்டுகிறாற் போன்ற நிறத்தில் கொடியுடலும், சுருண்டகேசமும், பட்டுச் செவ்விதழ்களும், முத்துப் பல்வரிசையுமாக லில்லி வோட்ஹவுஸ் என்ற பெண் அவரைக் காதலித்த சமயம்தான் அது. அவள் இருந்தவரைதான் அந்தக் காவியானுபவத்துக்கு அர்த்தமும் இருந்தது. இப்போது நினைவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுக்கு எந்த அர்த்தமும் இருந்ததாகச் சொல்ல முடியாது. அதைப் போலவே ஒரு காலத்தில் எமரால்டு என்ற வார்த்தைக்குக் காவியமயமாக அவர் கண்ட அர்த்தமும் இப்போது அவருக்கு மறந்தே போய்விட்டது. ஆனால் அந்தக் கருநீலப் பச்சை மலைவெளி இன்றும் அப்படியே மறையாமல் இருக்கிறது. ஆம்! அந்த மலைகளைத் தூரத்திலிருந்து பார்க்கும் போது அவற்றில் நிச்சயமாக ஒரு நிறம் தெரியவில்லை.கருமை, நீலம், பசுமை மூன்றும் கலந்து மொத்தத்தில் ஏதோ ஒரு நிறமாகத் தெரிகின்றன. அது கவர்ச்சியாயிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் அழகாகவும் இருக்கிறது.

புஜங்கராவைப் பொறுத்தமட்டில் என்றோ ஒரு நாள் அது கவர்ச்சியாயிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது அந்தக் கவர்ச்சியின் அர்த்தம் அவருக்குப் புரியவில்லை. வார்த்தைகளின் அர்த்தத்துக்கும் மனிதனுடைய வயதுக்கும் ஏதாவதொரு நெருங்கிய சம்பந்தமிருக்கிறதோ என்னவோ? பதினைந்து வயது வரை அகராதியில் சொல்லியிருக்கிற அர்த்தந்தான் தெரிகிறது. நாற்பது வயது வரை அனுபவங்களின் அர்த்தந்தான் தெரிகிறது. அதற்கப்புறம் எதிலுமே அர்த்தமிருப்பதாகத் தெரிவதில்லை. பூக்களின் மணத்தைப்போல் மனத்தைச் சுமந்து கொண்டிருந்த பொருள் வாடிக் கசங்கிய பின் ஒன்றுமில்லாமற் போவதுதான் வார்த்தைகளின் அர்த்தமோ என்னவோ?

புஜங்கராவின் வாழ்க்கை எத்தனையோ காரணங்களால் அர்த்தமிழந்து அல்லது அர்த்தமழிந்து போயிருக்கிறது. கடைசியில் அது நிரந்தரமாகவே அர்த்தமற்றுப் போய்விட்டது. இனி அதிலிருந்து அர்த்தம் பிறவாது. லில்லி வோட்ஹவுஸின் சாவுக்குப் பிறகு அவருடைய வாழ்வில் அவள் எந்த இடத்தை நிரப்பி அர்த்தமளித்துக் கொண்டிருந்தாளோ, அந்த இடமே அர்த்தமற்றுப் போய்விட்டது. அவர் தாய்நாடு திரும்பியு நாலைந்து ஆண்டுகளில் தகப்பனார் மூப்பினால் மரணமடைந்துவிட்டார். தகப்பனாருடைய மரணத்துக்குப் பின்பு அவருடைய தாயும் அதிக நாட்கள் இருக்கவில்லை. புஜங்கராவின் சகோதரிகளில் மூத்தவள் தெற்குக் கனராப் பகுதியில் ஏதோ ஓர் ஊரில் கணவனோடு இருந்தாள். அவள் கணவன் ஒரு தாசில்தார். இளைய சகோதரி மைசூரில் கணவனோடு இருந்தாள். அவளுடைய கணவனுக்கும் ஏதோ பெரிய உத்தியோக்ம்.

புஜங்கராவ் மட்டும் அப்படியே இருந்துவிட்டார். அவரிடமிருந்து தீபாவளி தவறாமல் இரண்டு சகோதரிகளுக்கும் முழுசாக ஆயிரம் ரூபாய்க்குச் ‘செக்’ போகும். அவர்களும் எப்போதாவது கோடைக்காலங்களில் ஊட்டிக்கு வருகிற சாக்கில் தமையனுடன் எமரால்ட் எஸ்டேட்டில் இரண்டு மூன்று வாரங்கள் தங்கள் தங்கள் கணவரோடு வந்து தங்கிவிட்டுப் போவார்கள். தமக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அவர்களுடைய தங்குதலைப் புஜங்கராவ் எண்ணிக் கொள்வார். அதற்குமேல் அதிகமான அர்த்தம் ஏதும் அவர்களுடைய வரவினால் அவருக்குப் புரிந்ததில்லை. புரிந்ததாக அவர் உணர்ந்ததும் இல்லை. அவர்கள் ஊர் திரும்பி விட்டால் வழக்கம்போல் அந்த நீலச் சிகரத்தின் நுனியோடு அவருடைய நாட்களும் நினைவுகளும் முடிந்துவிடும். எப்போதாவது மிஸ்டர் சார்ல்வுட் ‘வாட் ஆர் யூ லுக்கிங் தேர்?’ என்று கேட்டுக்கொண்டே புஜங்கராவின் பங்களாவுக்குள் நுழைந்து அவர் தருகிற தேநீரைக் குடித்துவிட்டு அவரையே சோம்பேறி என்று திட்டிய பின் விடை பெற்றுக்கொண்டு வாக்கிங் போய்விடுவது வழக்கம். வருடக் கணக்கில் ஒரே பங்களாக் காம்பவுண்டை விட்டு வெளியேறாமல் இருக்கிற மனிதனைப் பார்த்து யாருக்குத்தான் அருவருப்பு ஏற்படாது? எமரால்ட் எஸ்டேட்டின் புரொப்ரைட்டர் ஒரு பைத்தியம் என்ற தீர்மானத்தை மிஸ்டர் சார்ல்வுட் மார்டின் நீண்ட நாட்களுக்கு முன்பே செய்துகொண்டு விட்டாலும் அந்த மலைக் காட்டில் ‘குட்மார்னிங் குட்மார்னிங்’ சொல்லிக் கொள்வதற்கு அந்த ஒரு பைத்தியமாவது மீதமிருக்கிறதே என்று திருப்திப்படவும் இடமிருந்தது. மிஸ்டர் ராவ் இல்லாவிட்டால் காலையில் எழுந்தவுடன் நிலைக் கண்ணாடியில் தம்முடைய உருவத்தையே, திரும்பிப் பார்த்துத் தமக்குத் தாமே குட்மார்னிங் சொல்லிக்கொள்ளும்படி ஆகிவிடுமோ என்ற பயம் சார்ல்வுட்டுக்கு உண்டு. அதனால்தான் எப்போதாவது வாக்கிங் புறப்படுகிற சமயத்தில் ‘புஜங்கராவ் நிச்சயமாக வாக்கிங் வர மாட்டார்’ என்று தெரிந்திருந்தும் அவரை அழைக்க வருவதுபோல் ஒரு நடை தலையைக் காட்டி விட்டுப் போவார் மிஸ்டர் சார்ல்வுட் ‘வாட் ஆர் யூ லுக்கிங் தேர்?’ என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்த மூன்றாவது நிமிஷத்தில் தேநீர்க் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, ‘ஐ ஆம் டேக்கிங் லீவ் மிஸ்டர் ராவ்’ என்று புறப்பட்டுவிடுவார் துரை. அதற்கு மேல் அங்கு நிற்கப் பொறுமை இருக்காது அவருக்கு.

‘நான் ஒரே திசையை அலுக்காமல் பார்ப்பதைக் கேலி செய்கிற இந்த வெள்ளைக்காரன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஒரே கேள்வியையே அலுக்காமல் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறானே? - என்று எண்ணிச் சில சமயங்களில் புஜங்கராவ் மனத்துக்குள் சிரித்துக் கொள்வதுமுண்டு. அதுவும் அர்த்தமில்லாத சிரிப்புதான். எப்போதாவது பங்களாவின் முன் கூடத்தில் மாட்டியிருக்கிற லில்லிவோட் ஹவுஸின் புகைப்படம் - அவள் கை நிறைய மலர்க் கொத்துக்களை ஏந்திக்கொண்டு தம்முடன் நிற்கிற மணக்கோலப் படம் அவரைப் பார்த்துச் சிரிப்பது போல் ஒரு பிரமை உண்டாகும். அப்போது எதிரே உயிரோடு நின்று சிரிக்கிற ஒருவருக்குப் பதில் சிரிப்புச் சிரிப்பது போல அவரும் பதிலுக்கு அர்த்தமில்லாமல் சிரிப்பார்.அவருடைய உதடுகளில் அந்தச் சிரிப்பின் கடைசிச்சுவடு மறைவதற்குள் கண்கள் திரும்பி அந்தச் சிகரத்தை பார்க்கத் தொடங்கிவிடுவது உண்டு.

இப்படியே நாட்களும் வாரங்களும், மாதங்களும், வருடங்களும் கழிந்தன. ஒரு விதமான அர்த்தமின்றிக் கழிந்தன.

நீலகிரியின் திருவிழாப் பருவமாகிய கோடைக்காலம். சித்திரை மாதத்துப் பெளர்ணமி. எமரால்ட் எஸ்டேட் நிலா ஒளியில் பணி படர்ந்த சாம்பல் நிற நீலத்தில் குளித்து மின்னுகிறது. புஜங்கராவ் அந்தச் சிகரத்தைப் பார்த்தபடி பங்களா முகப்பில் உட்கார்ந்திருந்தார். சூடாக டீ குடிக்க வேண்டும் போலிருக்கிறது அவருக்கு. வேலைக்காரன் லீவு வாங்கிக் கொண்டு ஊருக்குப் போயிருந்தான். அவனுக்குச் சமீபத்தில்தான் கல்யாணமாகியிருந்தது. சிகரெட் பாக்கெட்டுகளை எல்லாம் தேடிச் சோதனை போட்டாயிற்று. எல்லாம் காலி, தேநீரோ, சிகரெட்டோ, எது வேண்டுமானாலும் ஐந்தாறு மைல் போகவேண்டும். அப்போது நிலா ஒளியில் அந்தச் சிகரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விடவும் அவருக்கு மனமில்லை. சிகரெட்டோ, தேநீரோ குடிக்கவும் ஆசையாயிருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பின் புஜங்கராவுக்கு விநோதமானதொரு விருப்பம் உண்டாயிற்று. பதினைந்து வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாகத் தாமே டிரைவ் செய்யக் காரை எடுத்தார் அவர் நிலா ஒளியில் சாம்பல் நீலம் பூத்துக் கிடந்த அந்த மலை வீதியில் காரைச் செலுத்தியபடி தம்முடைய இலட்சிய சிகரத்தைப் பார்த்துக் கொண்டே புறப்பட்டார் அவர். மின் விளக்குகள் புள்ளி புள்ளியாக மின்னுவதிலிருந்து அந்தச் சிகரத்தின் கீழேயும் ஓர் ஊர் இருப்பதை அவரால் அனுமானம் செய்ய முடிந்தது. அவ்வளவு மின்சார விளக்குகள் உள்ள இடத்தில் சிகரெட்டும் தேநீரும் கிடைக்கிற கடை ஒன்றாவது இருக்க வேண்டுமென்பது அவர் எண்ணம். எமரால்டு எஸ்டேட்டிலிருந்து வேறு திசையில் மிகவும் பக்கத்திலேயே ஊர்கள் இருந்தன. ஆனால் அங்கெல்லாம் போக அவருக்கு மனம் இல்லை. அவருடைய நோக்கம் இரண்டு பயன்களைக் கொண்ட ஒரே நோக்கம். கடைக்குப் போக வேண்டும். அந்தச் சிகரத்தையும் பார்த்துக்கொண்டே போக வேண்டும். நிலவைத் தன்னுடைய உச்சி நுனியில் பிடித்துச் சூட்டிக்கொண்டிருப்பதுபோலப் பரிபூரணமான அழகுடன் தெரிகிற அந்தச் சிகரத்தைப் பார்ப்பதிலிருந்து தமக்குச் சொந்தமான காலத்தில் விநாடி நேரம் கூட வீணாகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. சிவலிங்கத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிற பாம்பு மாதிரி மலை ரஸ்தா ஏறியும் இறங்கியும், வளைந்தும், நெளிந்தும் முடிவில்லாமல் போய்க்கொண்டேயிருந்தது. சிகரமும் அருகில் வருவதாயில்லை.

ஒவ்வொரு நாளும் தாம் வழக்கமாகப் பார்க்கிற இடத்திலிருந்து அந்தச் சிகரம் எவ்வளவு தொலைவிலிருக்கிறது என்று புஜங்கராவினால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஆனாலும் அவர் போகிற வழியிலிருந்து பார்வையில் அது தெரிந்துகொண்டுதான் இருந்தது. அது பார்வையிலிருந்து மறைந்திருந்தால் அந்தக் கணமே அங்கே காரை நிறுத்தி மறுபடியும் அது பார்வைக்குத் தெரிகிற வழியாகக் காரை ஓட்டிக்கொண்டு போயிருப்பார் புஜங்கராவ்.

இரண்டு கைகளும் நிறையப் பல நிற மலர்க் கொத்துக்களை ஏந்திக் கொண்டும் அந்தச் சிகரத்தின் மேலுள்ள நிலாவையே குடையாகப் பிடித்துக்கொண்டும் லில்லிவோட் ஹவுஸ் வந்து அதன் நுனியில் நின்றுகொண்டு சிரிக்கிறாள். அதே காட்சியை இன்னும் ஒரு கணம் பார்க்க வேண்டுமென்றும் அப்புறமும் முடிவற்ற பல கணங்கள் அதையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும் புஜங்கராவ் எல்லையற்றுப் பொங்கும் ஆசையோடு தவிக்கத் தொடங்கிய விநாடியில் சாலை அந்தச் சிகரம் பார்வையிலிருந்தே மறையும்படியானதொரு திருப்பத்தில் திரும்பிவிட்டது.

‘சீ! சீ! இதென்ன அர்த்தமில்லாத பாதை’ என்று சொல்லிலடங்காத வெறுப்போடு கூறிக்கொண்டே புஜங்கராவ் ஸ்டியரிங்கை ஒடித்தார். தாம் அதைச் செய்தது மட்டுமே அவருக்குத் தெரியும்.

னிக் கோயிலான நீலகிரியில் பொழுது புலர்ந்தது. சூரியன் அந்தச் சிகரத்துக்கு மேலேயும் வந்து ‘எமரால்ட்’ என்ற வார்த்தைக்கு நிதரிசனமான அர்த்தத்தை நிரூபணம் செய்து மரகதப்பச்சையை மினுக்கிக் கொண்டிருந்த போது, ‘குட் மார்னிங் மிஸ்டர் ராவ்’ என்று கூறியபடியே வழக்கமாகக் கேட்கிற அடுத்த கேள்வியின் முதற்படியாக ‘வாட் ஆர் யூ.?’ என்று தொடங்கிய சார்ல்வுட் எதிரே காலியாயிருந்த ஈஸிசேரைப் பார்த்துத் திகைத்தார். திகைப்போடு திரும்பி அந்தச் சிகரத்தைப் பார்த்தார். அது அங்கேதான் இருந்தது. எமரால்ட் எஸ்டேட் பங்களாவின் கூர்க்கா ஓடி வந்து தனக்குத் தெரிந்த அறைகுறை ஆங்கிலத்தில், முதலாளி முந்திய நாள் இரவு ஒரு மணிக்குக் காரைத் தாமே டிரைவ் செய்துகொண்டு புறப்பட்டுப் போனபோது தான் மெயின் கேட் கதவுகளைத் திறந்துவிட்டதாகச் சொல்லி, அவர் இதுவரை திரும்பவில்லை என்பதையும் கூறி அவர் சென்ற சாலையின் திசையையும் காண்பித்தான்.

சார்ல்வுட் உடனே அந்தக் கூர்க்காவையும் ஏற்றிக் கொண்டு தம்முடைய ஜீப்பில் அதே சாலையில் விரைந்தார். நீண்ட தொலைவு சென்ற பின்பு சாலை திரும்பி ஒரு பயங்கரமான பள்ளத்தாக்கை ஒட்டிக் கீழிறங்கிச் செல்கிற போது ஓர் இடத்தில் ஜீப்பை நிறுத்தி இறங்கி முகம் கோரமாகி ஆயிரம் கோணலாக வக்கரித்துக் கொள்ளும்படி போக ‘வாட் எ பிட்டி லைப்’ என்று கீழே பார்த்து உச்சூக்கொட்டினார் சார்ல்வுட் மார்ட்டின். அதற்குமேல் அவருக்குச் சொல்ல வரவில்லை. வார்த்தைகளும் கிடைக்கவில்லை. சொல்லியிருந்தாலும் அர்த்தமுள்ள சொற்களாக அப்போது அவருக்குக் கிடைத்திருக்காது.

‘இன்னதென்று அர்த்தம் தெரியாமலே சில உயர்ந்த வார்த்தைகளைக் காதலிப்பது போல் அந்தச் சிகரத்தையும் தாம் காதலிப்பதாக’ எப்போதோ ஒரு சமயம் புஜங்கராவ் கூறியது சார்ல்வுட்டுக்கு நினைவு வந்தது. புஜங்கராவ் காதலித்த அந்த அர்த்தமில்லாக் காதலுக்கு இன்று ஏதோ ஒரு வகையில் அர்த்தம் பிறந்துவிட்டதாகத் தோன்றியது.

ஆனால் அந்த அர்த்தம் பிறந்தபோது அதற்குரியவர் இறந்திருக்க வேண்டாம் என்று எண்ணி அநுதாபப் பட்டார் சார்ல்வுட்

(கல்கி, 11.1.1962)