நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/ஊமைப் பேச்சு

விக்கிமூலம் இலிருந்து

71. ஊமைப் பேச்சு

ப்போதுதான் விடிந்திருந்தது. முதல்நாள் இரவெல்லாம் மழை பெய்து முடிந்த ஈரமும், குளுமையுமாக இந்த உலகம் மிகவும் அழகாயிருந்தது. பன்னீ ர் மரத்து இலைகளிலிருந்து முத்து உதிர்வது போல நீர்த்துளிகள் இவ்வளவு நேரத்துக்கொரு முறைதான் கீழே உதிர்வது என்று திட்டமிட்டுக் காலப் பிரமாணம் தவறாமல் வாசிக்கப்படும் தாளத்தைப் போல வீழ்ந்து கொண்டிருந்தன. எப்படி எப்படி அழகாயிருக்கிறது என்று பிரித்துப் பிரித்துச் சொல்ல முடியாதவாறு அப்படி அப்படி இருப்பதே அழகுகளாய் அந்தக் காலை வேளையில் இந்த உலகம் ரொம்பவும் அனுபவிக்கத்தக்கதாயிருந்தது. சுந்தரராஜன் ‘அவுட்ஹவுஸி’ன் மாடியிலிருந்து பங்களாவின் தோட்டத்திற்குள் இறங்கிய போது சிறிது நேரம் சிந்தனை செய்து ஏதாவது ஒருபுதிய கவிதை எழுத வேண்டுமென்ற ஆர்வத்தோடு வந்திருந்தான். ஆனால் அப்போது அவன் கண் விழித்துப் பார்த்த உலகமே தயாராக யாரோ எழுதி வைத்திருந்த கவிதையைப் போலக் காண்பவர்களை மயக்கிக் கொண்டிருந்தது. ஒரு கவிதையைப் பார்த்து இன்னொரு கவிஞன் அப்படிகவிதை இயற்றினால் ‘ஈயடிச்சான் காப்பி’ என்றல்லவா கேவலமாகச் சொல்ல வேண்டியிருக்கும்? இயற்கையில் மயக்கும் தன்மை வாய்ந்தவையாயிருக்கும் மழை, சூரியன், சந்திரன் எல்லாமே தயாராக எழுதி வைக்கப்பட்டிருக்கும் கவிதைகள்தாம். அவற்றைப் பார்த்துப் புனைய முடியாமல் நாம் தவிக்கும் தவிப்புத்தான் நமது ஆற்றாமை என்ற துணுக்கமான சிந்தனைகள் முந்தும் மனத்தோடு சுந்தரராஜன் தோட்டத்தில் பிரவேசிக்கவும், நீதிபதி தண்டபாணியின் மகள் எண்ணெய் நீராடி அவிழ்ந்து, நெகிழ்ந்து, தொங்கும் கூந்தலோடு பூக்களைப் பறிப்பதற்காக எதிரே வரவும் சரியாயிருந்தது. அந்தக் கோலத்தில் அவள் கவர்ச்சி நிறைந்து தோன்றினாள். சுந்தரராஜனுக்கு அவளைக் கண் நிறையப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருந்தது. அதேசமயத்தில் அப்படிப் பார்த்தால் யார் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று வெட்கமாகவும், பயமாகவும் வேறு இருந்தது. மழை மணக்கும் அந்த ஈர வைகறையில் பூக்குடலையோடு ஒரு பெண் வளைகளும், மெட்டியும் ஒலிக்கும்படி துவள துவள நடந்து வந்தால் எத்தனை அழகாயிருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்துதான் பாருங்களேன்! -

அழகாயிருப்பதைப் புரிந்து அங்கீகரித்துக் கொண்டு தைரியமாக நிமிர்ந்து பார்க்கவும்.துணிச்சல் வேண்டும்.சுந்தரராஜன் இளம் பருவத்துக் கவி. ஆனால் அப்படி ஒன்றும் பெரிய தைரியசாலி இல்லை.

அவன் அங்கு வந்து தங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அவனுடைய சூரியன் அந்தப் பெண்ணின் முகத்திலிருந்துதான் உதிக்கிறது. ஆனால் ஒரு நாளாவது அவன் அந்த செளந்தரியம் உதயமாகும் போது தைரியமாக நிமிர்ந்து பார்த்ததே இல்லை. தைரியமில்லாத ஆண்பிள்ளை கவியாயிருந்தாலும் அவனை மன்னிப்பதற்கில்லை நான்.

கவி எழுதுவதும், அதனால் தான் ஒரு கவியாயிருப்பதாக நினைத்துக் கொள்வதும் சுந்தரராஜனுக்குப் பொழுதுபோக்கு. நிஜமான உத்தியோகம் என்னவோ, நீதிபதி தண்டபாணிக்கு அந்தரங்கக் காரியதரிசி.

ஜஸ்டிஸ் தண்டபாணி அவர்களிடம் அடிக்கடி முன் கோபப்படுவதைத் தவிர வேறு எந்தவிதமான அந்தரங்கமும் இல்லையென்றாலும் அவருடைய கெளரவத்துக்கும் செல்வாக்கிற்கும் ஒர் அந்தரங்கக் காரியதரிசி தேவையாயிருந்தது மட்டும் உண்மைதான். ‘இந்த உலகத்தில் கவியெழுதியே பிழைப்பு நடத்திவிட முடியாது’ என்பது உறுதியாகவும், அனுபவ பூர்வமாகவும் தெரிந்துவிட்டபின் பத்திரிகையில் விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து நீதிபதியின் காரியதரிசியாக வந்து சேர்ந்தான் சுந்தரராஜன். நீதிபதியின் வறட்சியான காரியங்களை அவரிடம் சம்பளம் வாங்குவதற்குக் கவியெழுதுகிற சம்பளமில்லாத காரியத்தையும் சேர்த்துச் செய்து கொண்டிருந்தான் அவன்.

இப்பொழுதும் அவன் கவியெழுத வேண்டுமென்று தினசரி விடிந்ததும் தூண்டுகிற முதல் ஞாபகத்தைப் போல் நீதிபதி தண்டபாணியின் மகள் பூக்குடலையோடு அவன் கண்களில் தெரிந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குத்தான் ஏதேனும் கவியெழுதினால் தேவலை என்பதுபோலத் தோன்றும். அவனுக்குக் கவியெழுதும் ஞாபகம் வரும்போதெல்லாம் அவளைப் பார்க்க வேண்டுமென்றும் தோன்றும். ஆனால் தேடிக் கொண்டு போய் அவளை நேருக்கு நேர் பார்ப்பதற்கு மட்டும் துணிச்சல் இருக்காது. விடிந்ததும் விடியாததுமாக அவளே பூக்குடலையோடு தேடிக் கொண்டு வரும்போது நேருக்கு நேர் ஏறெடுத்துப் பார்க்கத் துணிவின்றி ஓரக்கண்ணால் ஏனோதானோ என்று பார்த்துத் திருப்திப் பட்டுக் கொள்வான். இந்தக் குறைந்த திருப்தியில் ஏதோ ஒரு மகிழ்ச்சி இருந்தது. சில அனுபவங்கள் முற்றி நிறைந்துவிடாமல் அரைகுறையாகவே இருக்கிறவரை அழகாயிருக்கும். அந்த அரைகுறைத் தன்மையிலேயே அவை முழுத் திருப்தியை அளித்துக் கொண்டிருக்கும். சுந்தரராஜனுடைய அனுபவமும் அப்படித்தான் இருந்தது. குறைவுள்ளதாயிருந்து கொண்டே நிறைவுள்ளதாயுமிருந்தது அந்த அனுபவம். தர்க்கரீதியாக இரண்டு நேர்மாறான குண்ங்கள் ஒரு நிலையில் சேர்ந்து தங்குவது சாத்தியமில்லையே என்று யாராவது விபரம் தெரிந்தவர்கள் நினைக்கலாம். நன்றாக நிமிர்ந்து பார்க்க முடியாமல் குறைவாகப் பார்த்ததனால் தான் சுந்தரராஜனுக்கு நிறைவான மகிழ்ச்சி இருந்தது என்பதில் மட்டும் சந்தேகமில்லை. அந்தப் பார்வையில் அவன் கண்கள் நெருங்கி அடைய முடியாமல் ஏதோ விடுபட்டுப் போய் மீதமிருந்தது. அப்படி ஏதோ விடுபட்டுப்போய் மீதமிருந்ததனால்தான் அவன் மனத்தினுள் குறுகுறுப்பானதொரு மகிழ்ச்சி அந்த மீதத்தைத் தேடி நிறைந்து கொண்டிருந்தது.

மேற்கண்ட குழப்பமான வாக்கியங்களில் சுந்தரராஜனுடைய மனநிலையை நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன். தெளிவாகச் சொல்லப் பட்டிராவிட்டால் அதற்கும் நான் பொறுப்பாளி இல்லை. ஏனென்றால் அது சுந்தரராஜனுடைய மனத்தைப் பொறுத்த விஷயம். அதற்கு நான் எப்படிப் பொறுப்பாளியாக முடியும்?

தண்டபாணியின் மகள் நீராடி நீலச் சேலையுடுத்தி மலர் கொய்ய வரும் மற்றோர் மலராக அலர்ந்த நிலையில் நாலைந்து முறை அவளைப் பார்த்தபின் அரைகுறையாய் மலர்ந்த பூவைப்போல் சுந்தரராஜனுக்குள் கவிதை மலர்ந்தது. முற்றிலும் மலராமல் ஏதோ ஒரு இதழ் அடி முடியின்றி அந்தரமாக மலர்ந்தது. இப்படி அரைகுறையாய் மலர்கிற மலர்ச்சிக்கு என்றுமே மணம் அதிகம்.

“பெண்ணென்று பேர் சொல்லி
முகிலினிடை மின்னொன்று வந்ததென...”........

இதற்குமேல் கவிதை வரவில்லை.ஆனால் வருவதற்கு மீதமிருந்தது என்பதென்னவோ நிச்சயம். சுந்தரராஜனுடைய இளமையும், அதைவிடவும் இளமையான அவன் நினைப்புகளும், அவனுடைய கண்களில் பார்வையில் தென்பட்டவை எவையோ, அவற்றை அவன் இளமை மயமாகக் கண்டதுவும், சேர்த்துதான் கவிதைகளாகப் பிறந்து கொண்டிருந்தன என்று சொல்ல வேண்டும். கவிதை என்கிற வார்த்தை மட்டுமன்று; அந்த வார்த்தைக்குப் பொருள் பிறக்கக் காரணமான அனுபவமுமே இளமை மயமானதுதான். அனுபவத்தில் இளமையும் உற்சாகமும் சிறிதுகூட இல்லாமல் கவிதையில் அவை வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் பயனில்லை. சுந்தரராஜனுக்கு அனுபவத்தில் இளமை, உற்சாகம் எல்லாம் இருந்தன. ஆனால் தைரியம் மட்டும் இல்லை. தைரியமில்லாதவர்கள் உலகத்தில் வாழக்கூடாதென்று யாரும் சட்டம் இயற்றி வைக்கவில்லை. அதே சமயத்தில் தைரியமில்லாதவர்கள் காதலிக்கக்கூட தகுதி இல்லை என்று பல பேருடைய அனுபவம் சொல்கிறது. இந்த உலகத்தில் ஒருவிதமான சாதனைக்கும் தைரியமில்லாதவர்கள் காதலையாவது சாதிக்கலாம் என்று இன்றைய இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம்! காதலைச் சாதித்துக் கொள்வதற்குத்தான் நடைமுறையில் அதிகமாக தைரியம் வேண்டுமென்பதை அனுபவரீதியாகப் புரிந்து கொள்ளுகிற வரை அவர்கள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கப்போகிறார்கள்.அப்படி வெகுளித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிற பல்லாயிரம் அப்பாவிகளில் சுந்தரராஜனும் ஒருவன் என்று அவனை அலட்சியாக விட்டு விடுவதற்கில்லை. அவன் இதில் அடங்காத தனி ரகத்தைச் சேர்ந்தவன். அவன் கவியாயிருந்தான், தைரியசாலியாயில்லை. பலரைக் கவர்கிற ஒரு குணமும், எவரையுமே கவரமுடியாத ஒரு பலவீனமும் சேர்ந்து வாழ்கிறவனைப் பாராட்டாமலும் இருக்கமுடியாது; தூற்றாமலும் இருக்க முடியாது. சுந்தரராஜனைப் பாராட்டுவதற்கோ, தூற்றுவதற்கோ ஜஸ்டிஸ் தண்டபாணியின் மகளுக்குத் தைரியமில்லையானாலும் அவன் அவுட்ஹவுஸிலிருந்து படியிறங்கும் போது தன்னைப் பார்க்கிறான் - பார்க்க வேண்டும் - அப்படி அவன் பார்ப்பதனால்தான் பெருமைப்படுவதற்கு ஏதோ இருக்கிறது - என்பதை ஜஸ்டிஸ் தண்டபாணியின் மகள் விரும்பினாள். அவற்றுக்காக இரகசியமாய்ப் பெருமைப்பட்டுக் கொள்ளவும் செய்தாள். ஒரு பெண் மனம் நெகிழ்கிறாள் என்பதை அறிவிக்க இதைவிட அதிகமான அடையாளங்கள் எவையும் தேவையில்லை. சுந்தரராஜன் ஜஸ்டிஸ் தண்டபாணியின் அந்தரங்கக் காரியதரிசியாக வேலை ஏற்றுக் கொண்டு அந்தப் பங்களாவின் அவுட்ஹவுசில் குடியேறிய பதினைந்தாவது நாளோ, பதினாறாவது நாளோ, அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.

வழக்கம்போல் அவன் அவுட்ஹவுஸ் மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்தபோது பூக்குடலையுடன் தோட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த தண்டபாணியின் மகள் விறுவிறுவென்று நடந்து வந்து ஒரு கொத்துப் பிச்சிப் பூக்களையும் அவற்றினிடையே நாலாக மடிக்கப்பட்ட ஒரு கடிதத்தையும் அவன் கையில் திணித்துவிட்டு நடந்தாள். மகிழ்ச்சிகரமான இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, அவள் எவற்றைத் தன்னிடம் தந்தாள்; அப்படித் தந்தவற்றைத் தான் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் உணர்ந்து சமாளித்துக் கொள்ள சுந்தரராஜனுக்குச் சிறிது நேரமாயிற்று.

ஈரமும் அதிகாலையின் புதுமையும் கூடி மயக்கும் நறுமணத்தோடு கூடிய பிச்சிப்பூக்களையும், அவற்றைக் காட்டிலும் அதிகமாக மணந்து மயக்கும் அந்தக் கடிதத்தையும் சுமந்து கொண்டு சுந்தரராஜன் திரும்பி மாடிப்படி ஏறியபோது மிகவும் வேகமாக ஏறினான். வேகம் என்றால் அந்தப் பதத்துக்கு இங்கே ஆவல் என்று அர்த்தம் அந்தக் கடிதத்தில் அவனைக் கொன்றிருந்தாள் அவள்.

“நானும்தான் பதினைந்து நாட்களாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன், உங்களுக்குப் பேசத் தெரியுமா? அல்லது நீங்கள் ஓர் ஊமையா?”

இந்த இரண்டே இரண்டு வாக்கியங்கள்தான் அந்தக் கடிதத்தில் இருந்தன. இவற்றைப் படித்ததும் அவனுக்கு ரோஷமாயிருந்தது, சந்தோஷமாகவும் இருந்தது. தன்னுடைய சுபாவமான கூச்சத்தையும், பயத்தையும், கேலி செய்வதுபோல் இப்படி எழுதிவிட்டாளே என்ற ரோஷம் ஒரு புறம் துணிந்து தனக்கு எழுதினாளே என்ற மகிழ்ச்சி ஒருபுறம். இந்த இரண்டு உணர்ச்சிகளுக்கு அப்பால் மொத்தமாக அவன் மனத்தில் நிறைத்திருந்தது என்னவோ பயம்தான். ஜஸ்டிஸ் தண்டபாணி அவர்களின் முன்கோபத்தைப்பற்றி அவன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். இரண்டு காரணங்களுக்காக அவன் அவரை நினைத்துப் பயப்பட வேண்டியிருந்தது. முதல் காரணம் அவர் தன்னுடைய எஜமானராகவும் ஜஸ்டிஸ் ஆகவும் முன்கோபக்காரராகவும் இருக்கிறாரே என்பது. இரண்டாவது காரணம் தன்னால் காதலிக்கப்படுகிற பெண் அன்னாருடைய மகளாயிருக்கிறாளே என்பது. தங்கள் மகள் எந்த ஆண்பிள்ளையைக் காதலிக்கிறாளோ அந்த ஆண் பிள்ளையைத் தாங்கள் கட்டாயம் கோபித்துக்கொண்டு விரட்டியடிக்க வேண்டுமென்பது தந்தையர்களின் பொதுநோக்கமாயிருப்பதைப் பல காதல் கதைகளிலும், திரைப்படங்களிலும் பார்த்துப் பார்த்துப் புரிந்து கொண்டிருந்தான் சுந்தரராஜன். அது அவனைப் பயமுறுத்துவதாக இருந்தது.

அவள் அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுத்த விநாடியிலிருந்து அவனுக்கு நிம்மதி பறிபோய்விட்டது. பயமும், பதற்றமும் விநாடிக்கு விநாடி அவனைத் தவிக்கச் செய்தன. ஜஸ்டிஸ் தண்டபாணி தன்னை நிமிர்ந்து பார்க்கும் ஒவ்வொரு வேளையும், ‘என்னடா பயலே! என் மகள் கைகளிலிருந்து காதல் கடிதமா வாங்குகிறாய்? இரு! இரு! உன்னைக் கவனிக்கிற விதமாகக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று கடுங்கோபத்துடன் கர்ஜனை செய்து குமுறப் போவதுபோல் தனக்குத்தானே பயங்கரமாகக் கற்பனை செய்துகொண்டே அவர் முகத்தைப் பயத்தோடு பார்ப்பான் சுந்தரராஜன். இரண்டு விநாடி நடுநடுங்கிக் கொண்டே அவர் முகத்தைப் பார்த்த பின்பு தான் நினைத்துப் பயந்ததுபோல் ஒன்றுமில்லை என்பது உறுதியாகத் தெரிந்த பிற்பாடு நிம்மதியாக மூச்சு வரும் அவனுக்கு.

இப்படிப் பதற்றத்திலேயே ஒரு வாரத்துக்கும் மேலாக வீணே கழிந்துவிட்டது. இதற்கு நடுவில் அந்தப் பெண்ணரசி இன்னொரு கடிதத்தையும் அவன் கையில் சேர்த்துவிட்டாள். அதிலும் அவள் அவனைச் சாடியிருந்தாள்.

‘சந்தேகமில்லாமல் நீங்கள் ஓர் ஊமைதான்! ஊமை மட்டுமில்லை. குருடாகவும் இருப்பீர்கள் போலிருக்கிறது. செவிடோ என்றுகூட எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. என்னுடைய முதல் கடிதத்துக்கு ஒருவாரமாகப் பதில் இல்லை. அதனால் நீங்கள் ஓர் ஊமை. நான் அவுட்ஹவுஸின் மாடிப்படிக்கு நேர் கீழே தோட்டத்தில் பூப்பறிக்க வரும்போது நீங்கள் படியிறங்கி வந்தாலும் என்னை ஏறிட்டு நிமிர்ந்து பார்க்கக் கூசுகிறீர்கள். அதனால் நீங்கள் ஒரு குருடர், பூப்பறிக்கும்போது என் கைகளின் வளையல்கள் கலீர் கலீரென ஒலித்தும் உங்கள் செவிகள் அவற்றைக் கேட்கத் தவிப்பதாகத் தோன்றவில்லை. அதனால் நீங்கள் ஒரு செவிடராகவும் இருக்கலாம். உங்களை என்ன சொல்லுவதென்று எனக்குத் தெரியவில்லை!’

இந்தக் கடிதம் கைக்குக் கிடைத்தபோது நிச்சயமாக உடனே அவளுக்கு ஒரு பதில் எழுதிவிட வேண்டும் என்று தன் மனத்தைத் திடப்படுத்தியிருந்தான் சுந்தரராஜன். ஆனால் நேரமாக நேரமாக-நேரமாகத் தைரியத்தையும் மீறிக் கொண்டு பயம் பெருகி அவளுக்குப் பதில் எழுதும் எண்ணத்தை அடியோடு அமுக்கிவிட்டது. ‘கோழைகள் காதலிக்கக்கூடத் தகுதியற்றவர்கள்’ ‘பிளாட்டினம்’ மொழியை (பொன்மொழியை விடத் தரத்தில் உயர்ந்தது) நாளுக்கு நாள் நிரூபித்துக் கொண்டிருந்தான் சுந்தரராஜன். கோழைகள் துணிந்து செய்கிற காரியத்திலும் முடிவாக விளைகிற விளைவு அவர்களுடைய கோழைத்தனத்தை நிரூபிப்பதாகவே வந்து சேரும். சுந்தரராஜனும் இதற்கு விதிவிலக்கு இல்லைதானே? சுந்தரராஜன் இப்படியே நாளொரு பயமும் பொழுதொரு நடுக்கமுமாகத் தயங்கித் தயங்கிக் கடைசியில் துணிந்து அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தில் அவளைப் பார்த்ததும் தான் இயற்றிய நளினமான காதல் கவிதையையும் எழுதியிருந்தான். எல்லாவற்றையும் அற்புதமாகவும், அழகாகவும், எழுதிவிட்டுக் கடைசியாக மிகமிகப் பைத்தியக்காரத்தனமான ஒரு வாக்கியத்தையும் சேர்த்து எழுதி வைத்தான்.

“எனக்கு என்னவோ ரொம்பவும் பயமாயிருக்கிறது. இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் ஞாபகமாகக் கிழித்து எறிந்துவிடு கைத்தவறுதலாக எங்கேயாவது யார் கண்களிலேனும் தென்படும்படி வைத்துவிடாதே.”

அடுத்த நாள் காலையில் அவள் பூப்பறிக்க வரும்போது தைரியமாகக் கொண்டு போய் அதை அவளிடம் கொடுத்துவிடவேண்டுமென்று தீர்மானமும் செய்த பின்னர் முதல்நாள் இரவு படுத்துக் கொள்வதற்கு முன் அறைக் கதவுகளைப் பத்திரமாகத் தாழிட்டுக் கொண்டு இந்தக் கடிதத்தை எழுதியிருந்தான் சுந்தரராஜன். ஆனால் அவனுடைய தைரியம் என்னவோ அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டிருந்த வரைதான் இருந்தது. மறுநாள் காலை விடிந்ததுமே முதல்நாள் செய்த தீர்மானத்தையும் எழுதிய கடிதத்தையும் எண்ணி உடம்பு நடுங்கியது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு நடுங்கும் கால்களால் ஒவ்வொரு படியாக இறங்கிச் சென்று குனிந்த தலை நிமிராமல் அந்தக் கடிதத்தை அவள் கைகளில் போட்டுவிட்டு ஏதோ கொலைக் குற்றம் செய்தவன் ஓடி வருவதுபோல் திரும்பிப் படியேறி அறைக்குள் போய்க் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு விட்டான்.

அத்தனை பயத்திலும் அவன் மனம் மெல்லிய கற்பனைகளில் ஈடுபடத் தவறவில்லை. தன் கடிதத்தையும் அதில் தான் அவளைப் பற்றிய எழுதியிருக்கிற கவிதையையும் படித்துவிட்டு அவள் எத்தனை பூரிப்பு அடைவாள் என்று கற்பனை செய்து மகிழத் தொடங்கியிருந்தது.

“பெண்ணென்று பேர் சொல்லி முகிலினிடை
மின்னொன்று வந்ததுபோல்”

அடடா! எத்தனை அழகாகப் பாடியிருக்கிறேன்? இதைப் படித்தவுடன் அவனுடைய மனத்தில் என்னென்ன உணர்ச்சிகள் எழும்? என்னைப் பற்றி எவ்வளவு பெருமையாக நினைப்பாள்? என்றெல்லாம் சுகமான நினைப்புக்கள் சுந்தரராஜனுடைய மனத்தில் சுழன்று கொண்டிருந்தன.

அரைமணி நேரங்கழித்து அவனுடைய அறைக்கதவு தடதடவென்று இடிக்கப்பட்டது. பயந்து நடுங்கிக் கொண்டேகதவை திறந்தான் சுந்தரராஜன். அந்தப் பெண் முதல்தடவையாக தைரியமாக மாடிப்படி ஏறி வந்து அவன் அறை வாயிலில் நின்றாள். அந்த அதிர்ச்சியை உடனடியாகச் சமாளிக்கத் தெரியாமல் ஹி..ஹி.. என்று அசட்டுச் சிரிப்புடன் எதை எதையோ பேச நினைத்தும் ஒன்றும் பேச வராமல் மென்று விழுங்கினான் சுந்தரராஜன். அவள் அவன் முகத்தை நன்றாகவும் அலட்சியமாகவும் நிமிர்ந்து பார்த்தாள்.அந்தப் பார்வை நிர்ப்பயமாகவும் துணிச்சலாகவும் இருந்தது.

“மிஸ்டர் உங்களுக்கு அநேக நமஸ்காரம். கோழைகள்கூடக் கவிதை எழுதலாம். ஆனால் காதல் செய்வதற்குத் தைரியசாலியால்தான் முடியும் தைரியமே ஒரு பெரிய கவிதை. அது உங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தைரியமில்லாத ஆண்பிள்ளையை அவன் கவிதை எழுதுகிறான் என்பதற்காக மட்டும் காதலிப்பதற்கில்லை. நான் உங்களுக்கு இரண்டு கடிதம் எழுதினேன். பயந்து நடுங்கிக் கொண்டே அதைப்படித்தவுடன் கிழித்து எறிந்துவிடும்படி எந்தக் கடிதத்திலும் நான் எழுதவில்லை. நீங்களோ ரொம்ப நாளைக்குப் பிறகு பயந்து கொண்டே ஒரு கடிதம் எழுதிவிட்டுக் கடைசியில் அப்படி எழுதியது ஒரு கொலைக் குற்றம் போலப் பாவித்துக் கிழித்துவிடும்படி சொல்லுகிறீர்கள். உங்களுக்கு யார்மேல் பிரியமாயிருக்கிறதோ அவளை நிமிர்ந்து பார்க்கவே கூசுகிறீர்கள். நீங்கள் கவியெழுதுவதனால் உங்களை ஆண்பிள்ளை என்று நான் ஒப்புக்கொள்ள முடியாது. உங்களுடைய தைரியத்தையும் ஆண்மையையும் வைத்துத்தான் உங்களை ஆண்பிள்ளையாகக் கணிக்கமுடியும். உங்களுக்குத் தைரியமாயிருந்தால் என்னைப் பார்ப்பதற்கே பயப்படாதீர்கள். சிரிப்பதற்கு நடுங்காதீர்கள். நீங்கள் கவியாயிருக்க வேண்டாம்; ஆண்பிள்ளையாயிருங்கள்; தைரியசாலியாயிருங்கள். அப்படி இருக்க முடியாவிட்டால் எனக்குக் கடிதம் எழுதாதீர்கள்; என்னைப் பார்க்காதீர்கள்; பயந்து உதறாதீர்கள்.”

மனத்திலிருந்ததைக் குமுறக் குமுறப் பேசிவிட்டுச் சற்றுமுன் அவன் கொடுத்திருந்த கடிதத்தை அவனுடைய முகத்தைப் பார்த்துக் கசக்கி எறிந்தாள் அவள். அடுத்த நிமிஷம் வந்தது போலவே தைரியமாகப் படியிறங்கிப் போய்விட்டாள் ஜஸ்டிஸ் தண்டபாணியின் மகள்.

சுந்தரராஜன் ஊமையானான். அவனுடைய கவிதைத்தன்மையும் ஊமையாய்ப் போயிற்று. மனிதனாயிருந்து காதலிக்க முடியவில்லையே என்பதற்காக அவன் ரொம்பவும் வருந்தினான்.

(தாமரை, ஆகஸ்ட், 1962)