நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/ஒரு பழைய கனவு
32. ஒரு பழைய கனவு
“என்ன ரவி? இப்படியே பித்தன் மாதிரி உட்கார்ந்து கொண்டிருப்பது உனக்கு நன்றாய் இருக்கிறதா? குளிக்காமல், உடை மாற்றிக் கொள்ளாமல், சாப்பிடாமல் இதென்ன காரியம் நீ செய்கிறாய்?”
ரவி பதில் சொல்லவில்லை. சிங்கள நண்பன் குணசேனா ஒன்றும் புரியாமல் பலகணிக்கு வெளியே வெறித்துப் பார்த்தான். பஞ்சுப் பொதி போன்ற வெண் மேகப் படலங்களுக்கிடையே சிவனொளி பாதத்துச் சிகரம் தொலைவில் தெரிந்து கொண்டிருந்தது. அழகிய பெரிய பச்சை நிற வெல்வெட் கம்பளம் ஒன்றை மேடு, பள்ளமான மடிப்புக்களோடு யாரோ ஒரு சோம்பேறி கடனுக்கு விரித்துப் போட்டிருப்பது போல் தூரத்து மலைகள் தெரிந்தன. அணி வகுத்து நிற்கும் பட்டாளத்து வீரர்களைப் போல ரப்பர் மரங்கள். கரும் பசுமைத் தளிர் விளங்கக் காட்சியளிக்கும் பரந்த தேயிலைத் தோட்டங்கள். அந்தச் சிகரங்களிடையே இரையெடுத்த மலைப் பாம்பு நெளிவதுபோல் பாய்ந்து கொண்டிருக்கும் மாவலி கங்கை.
பலகணிக்கு வெளியே தெரிந்த இயற்கையின் பெரிய உலகத்தை ஒரே ஒரு கணத்தில் பார்த்து முடித்து விட்டான் குணசேனா. ஆனால் கைக்கெட்டுகிற தொலைவில் உட்கார்ந்திருக்கும் நண்பன் ரவியின் உள்ளத்தை அறிய முடியவில்லை.
அன்று காலையில்தான் அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து புறப்பட்டு இரத்தினபுரி மார்க்கமாகப் பெலிஹூலோயாவிலுள்ள விருந்தினர் விடுதி (ரெஸ்ட் ஹவுஸ்)யில் வந்து தங்கியிருந்தார்கள். குணசேனாவின் அழகிய கார் வாசலில் நின்று கொண்டிருந்தது. அதில்தான் அவர்கள் இருவரும் பிரயாணம் செய்து வந்திருந்தனர். மறுநாள் காலை அவர்கள் இருவரும் நுவாரா-எலியா சென்று அங்கிருந்து கண்டிக்குப் போயாக வேண்டும். நீண்ட பிரயாணம் அலுப்பைத் தரும் என்பதற்காகப் பெலிஹூலோயாவில் அன்றிரவு தங்கி, ஓய்வு கொண்டு விட்டு மறுநாள் காலை மறுபடியும் பிரயாணத்தைத் தொடங்கக் கருதியிருந்தார்கள்.
“ரவி! இந்த மாதிரி இங்கே வந்து அடம் பிடிப்பதற்கு நீ வராமலே இருந்திருந்தால், எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் இலங்கைக்கு வந்திருக்கிறாய். பத்துப் பதினைந்து நாட்கள் உல்லாசமாக ஊர் சுற்றிப் பார்த்து விட்டுப் போயேன். உனக்கென்ன வந்து விட்டது? ஏன் இப்படி உன்மத்தம் பிடித்தவன் மாதிரி உட்கார்ந்திருக்கிறாய்?”
பதில் இல்லை! ரவி ஆடாமல் அசையாமல் அடித்து வைத்த சிலை போல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.“குளிக்கும் அறையில் வெந்நீச்சுடச்சுடஇருக்கிறது. இன்னும் சிறிது நேரமானால் ஆறிப்போகும். சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதற்காக டிரைவரை பலாங் கொடைக்கு அனுப்பவேண்டும். போ, எழுந்திருந்து போய்க் குளித்துவிட்டு வா”
நண்பன் குணசேனா சிறு குழந்தையைக் கெஞ்சுவது போல் கெஞ்சினான். ரவி பலகணிக்கு வெளியே எட்டிப் பிடிக்க முடியாத இயற்கை எழில் கொட்டிக் கிடக்கும் உலகத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
பனியும் இருளும் விழுங்கி ஏப்பமிடத் தொடங்கும் நேரம். செருப்பின் கனத்தையும் கடந்து பாதத்தில் உறைக்கும் ஊசிக்குளிர். சாலை வழியே ஒலமிட்டுச் செல்லும் லாரிகள், அந்த விடுதியின் பின் புறம் பாறையிடுக்கில் பாயும் காட்டாற்றின் ஒலி - எல்லாம் குணசேனாவுக்குத் தெரிந்தன; உறைத்தன; கேட்டன; அதே இடத்தில் அதே சூழலில் வீற்றிருந்த ரவிக்குத் தெரியவில்லை; உறைக்கவில்லை; கேட்கவில்லை. ரவியின் மனத்தில், மனத்துக்கு மையமான இடத்தில் ஒளியும் மனமும் கவர்ச்சியும் நிறைந்த மிகப் பெரிய பூ ஒன்று ஒவ்வோர் இதழாக விரிந்துகொண்டிருந்தது. விரிந்த வேகத்தில் மனத்தின் ஆழத்துக்கும் ஆழமான இடத்தில் ஒவ்வோர் இதழாக பூவின் இதழ்கள் - இதழ்களின் மணம் - அவற்றுக்கு என்ன பொருள்?
முதல் இதழ்
இந்தப் பெலிஹூலோயா விருந்தினர் விடுதிக்கு இப்போதுதான் நான் முதல் முறையாக வந்திருக்கிறேனென்று நண்பன் குணசேனா நினைத்துக் கொண்டிருக்கிறான். பாவம்! அப்பாவி நண்பன். என்னைத் தெரிந்து கொண்ட அளவுக்கு என் அந்தரங்கங்களைத் தெரிந்து கொள்ளாதவன். என் தகப்பனார் கொழும்பில் பிரின்ஸ் தெருவில் ஜவுளிக்கடை வைத்திருந்தபோது பழக்கமானவன் குணசேனா. தமிழர்களோடு அதிகம் நெருங்கிப் பழகிப் பழகி நன்றாகத் தமிழ் பேசக் கற்றுக் கொண்டு விட்டான். பிரின்ஸ் தெருவில் எங்கள் கடைக்கு அடுத்த கடை குணசேனாவின் தகப்பனாருடையது. அவன் தந்தை 'சொய்சா' வுக்கும் என் தந்தைக்கும் நெருங்கிய நட்பு இருந்தது போலவே எங்களுக்கும் நட்பிருந்தது.
இதற்கு முன்பு இந்த விருந்தினர் விடுதிக்கு எப்போது வந்திருக்கின்றேன்? எதற்காக வந்திருக்கின்றேன்? ஏன் வந்திருக்கின்றேன்? அந்த ஒரு பழைய நினைவு அல்லது பழைய கனவு இப்போது எப்படிநினைவுக்கு வந்தது? அதோ இவ்வளவு நேரமாக நான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேனே - அந்தப் பால்கனியின் வலதுபுறம் வெள்ளையடித்த சுவரில் மங்கலாகத் தெரிகிறதே ஒரு கறை அந்தக் கறை இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எத்தனையோ வெள்ளைகள் அடித்த பிறகும் இப்படி மங்கலாகத் தெரிவானேன்? அதற்குக் கீழ்ப்புறம் காப்பிங் பென்சிலால் அன்றிரவு அந்தக் கோணல் மாணலான சிங்கள எழுத்துக்களின் கிறுக்கிய 'தாரா' - என்ற பெயர்கூட இலோசாகத் தெரிகிறதே! ஊம்! இந்தப் பெயரையும், இந்தக் கறையையும் பார்க்காவிட்டால் மட்டும் நினைவு வராமல் போய்விடப் போகிறதா என்ன?
என்னவோ ஒரு அஞ்ஞானம்! வேறொன்றும் இல்லை. மனிதனுடைய சம்மதத்தின்படியா இந்த உலகத்தில் எல்லாம் நடக்கின்றன? அப்படி நடப்பதாயிருந்தால் அன்றைக்கு இந்த ரெஸ்ட் ஹவுஸில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா? இப்போது நினைத்துப் பார்த்தால் என்றோ ஒரு நாள் தன்னை மறந்த உறக்கத்தில் முன்னிரவு நேரத்தில் கண்ட ஏதோ ஒரு பழைய கனவைப் போல அது தோன்றுகிறது! என்னைப் பொறுத்த வரையில்தான் கனவாகத் தோன்றுகிறது. நீங்களோ, அருமை நண்பன் குணசேனாவோ 'கனவு’ என்று கூட அதை நம்பமாட்டீர்கள். கனவில்கூட அப்படி நடப்பது சாத்தியமில்லை என்று உங்கள் வலிமை வாய்ந்த திடமான சிந்தனைக்குத் தெரியும்.
ஆனால் இந்த உலகத்தில் நம்ப முடிந்தவைகள் எங்கும், எப்போதும், எல்லோர் முன்னிலையிலும் நடந்து கொண்டிருக்கின்றன. நம்ப முடியாதவைகளோ, எங்கேயாவது, எப்போதாவது, எவர் முன்னிலையிலாவது நடக்கின்றன. வித்தியாசம் அவ்வளவே. வேறு ஒன்றும் இல்லை.
இரண்டாவது இதழ்
நாங்கள் கொழும்பிலிருந்தபோது அப்பாவின் வியாபாரம் செழிப்பாக நடந்து வந்ததனால் மிக வசதியாக வாழ்ந்து வந்ததோம். வெள்ளவத்தையில் கடற்கரையோரத்தில் பெரிய பங்களா. வீட்டோடு இரண்டு பெரிய கார்கள். கடை, வியாபார உபயோகங்களுக்காக அப்பா ஒரு காரைப் பயன்படுத்திக் கொண்டார். மற்றொரு காரை நானும், வீட்டிலுள்ள எல்லோரும் பொதுவாக உபயோகித்துக் கொண்டோம்.
அப்போது எனக்கு இருபத்தி நான்கு வயது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறை நாட்களில் காரை எடுத்துக் கொண்டு இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் மலைப் பகுதிகளில் சுற்றுவது எனக்கு விருப்பமான பொழுது போக்கு அவசியத்தை உத்தேசித்துப் பத்தொன்பதாவது வயதிலேயே நன்றாகக் கார் ஒட்டக் கற்றுக்கொண்டிருந்தேன்.
அந்த வருடம் டிசம்பர் மாதக் கடைசியிலேயே கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பமாகி விட்டது. இரண்டு மூன்று நாட்கள் நிம்மதியாக மலைப்பகுதிகளில் சுற்றிவிட்டு வரலாமென்று காரில் புறப்பட்டேன். கொழும்பிலிருந்து புறப்படும் பொழுது காலை பதினொரு மணி. வழக்கத்தைவிட அன்று வெய்யில் அதிகமாக இருந்தது. ஏற்றமும் இறக்கமுமாக வளைந்து நெளிந்து செல்லும் மலை ரோடுகளில் கார் சென்று கொண்டிருந்தது.வெள்ளைக்காரர்களின் மூளையும், தமிழர்களின் உழைப்புமாகச் சேர்ந்து இந்த மலைகளைத் தேங்காய் துருவுகிறது போலத்துருவி ஒரே தார் ரோடுகளாக அமைத்திருக்கும்போது மலைப் பிரயாணத்திலுள்ள சுகத்துக்கும் கேட்க வேண்டுமா?
அவிசாவெளியில் மலைமேல் படிப்படியாக ஏற்றப் பாதையை அடைந்த கார், உலப்பனை வருகிறவரை ஒரு தொல்லையில்லை. உலப்பனையைக் கடந்ததும் மழை சோனா மாரியாகப் பிடித்துக்கொண்டது. ரோட்டில் இரு புறமும் மேடுகளிலிருந்து காட்டாறு போல் நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாதாரணமாகவே வழவழவென்று கண்ணாடி பதித்தது போலிருக்கும் அந்த ரோடுகளில் சற்று அதிகமான வேகத்தில் சென்றால் காரின் டயர் வழுக்கும். மழை வேறு பெய்யவே நான் அஞ்சினேன். போதாக் குறைக்கு மாலை நேரம் முடிந்து இருள் பரவத் தொடங்கியது. எத்தனை முறை வந்து பழகியவர்களாக இருந்தாலும் இலங்கை மலைகளில் ரோடுகளை நினைவாக அடையாளம் வைத்துக்கொள்வது என்பது மட்டும் முடியாத காரியம். திரும்பின இடமெல்லாம் ரோடுகளாக இருந்தால் எதைத்தான் நினைவு வைத்துக் கொள்வதற்கு முடியும்?
மழை நிற்கிறவரை கிளம்பவேண்டாம் என்று உலப்பனையைக் கடந்து சிறிது தூரம் வந்ததும் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டேன். மழை ஒசை, இருட்டு - காரைச் சுற்றிலும், எங்கே என்ன இருக்கிறதென்றே தெரியவில்லை. காருக்குள் மேலே இருக்கும் விளக்கு முன்விளக்குள்-எல்லாம் அணைத்து இருளில் உட்கார்ந்திருந்தேன். சுற்றும் முற்றும் பார்த்தபோது பத்துப் பதினைந்து கெஜ தூரம் முன்னால் பாதையோரத்தில் விளக்கொளி தெரிந்தது.அங்கே ஏதாவது குடிசை இருக்கவேண்டும் என்று அனுமானித்தேன். மழை பெய்து கொண்டிருந்தால் என்ன? இருளில் காருக்குள் எவ்வளவு நேரம்தான் பொறுமையாக உட்கார்ந்திருக்கமுடியும். காரைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டேன். நனைந்தாலும் பரவாயில்லை என்று கீழே இறங்கி ஒளி வந்த இடத்தை நோக்கி நடந்தேன்.
"கஜ்ஜிக் கொட்டை' (முந்திரிப் பருப்பு)யும், செவ்விள நீரும் விற்கும் சிறிய கடை அது. குடிசை முகப்பில் தட்டு நிறையச் சுட்ட முந்திரிப்பருப்பு குவித்திருந்தது. இன்னொருபுறம் கொத்துக் கொத்தாகத் தங்கக் கட்டிகளே காய்த்துப் பழுத்ததுபோல் செம்பொன் நிறத்தில் செவ்விளநீர்க் குலைகள். பக்கத்தில் அவற்றைச் சீவிக் கொடுக்கப் பயன்படும் ஒரு அரிவாள். முந்திரிப் பருப்பைப் பொட்டலம் கட்டும் காகிதங்கள். அவற்றின் இடையே ஒரு சின்ன முக்காலியில் பதினேழு, பதினெட்டு வயது மதிக்கத் தக்க ஒரு சிங்கள யுவதி. கரும்புகையைக் கக்கிக்கொண்டு எரியும் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு.
காரை விட்டு இறங்கி நனைந்துகொண்டே சென்றவன், அந்த இடத்தில் அப்படி ஒரு அற்புதமான காட்சியை எதிர்பார்க்கவே இல்லை. 'இவள் முந்திரிக்கொட்டை விற்கும் சிங்களப் பெண்ணா? அல்லது எங்கிருந்தாவது வழி தவறி வந்துவிட்ட வானுலகத்து மோகினியா? - என்று ஒரு கணம் மலைத்துப் போனேன். நனைந்துகொண்டே அந்தக் கீற்றுக் கொட்டகை வாசலில் நின்ற என்னைப் பார்த்து விட்டாள்.
"ஆ, முதலாளி! (இப்படி அழைப்பது ஒரு மரியாதை வழக்கம்) இப்படி உள்ளே வாருங்கள்’- இனிய குரலில் சிங்களத்தில் பேசினாள் அவள் சிவப்பு நிற வெல்வெட் பெட்டிக்குள் மறைந்திருக்கும் முத்துச்சரம்போல் அவள் செவ்விதழ்களுக்கிடையே நகை மலர்ந்தது. அதே குடிசைக் குள்ளிருந்து வேறு ஒரு வயதான கிழவி எட்டிப் பார்த்து விட்டு, "யார் வந்திருக்கிறார்கள்?’ என்று அந்த யுவதியிடம் கேட்டாள். அவள் பதில் கூறினாள். நான் கொட்டகைக்குள் நுழைந்தேன். அவள் உள்ளே போய் உட்காருவதற்கு இன்னொரு சிறிய முக்காலியைக் கொண்டு வந்து போட்டாள்; உட்கார்ந்தேன். அத்தனை ஆண்டுகளாக இலங்கையில் வசித்ததின் பயனாகச் சுமாராகச் சிங்களம் பேசவும், மற்றவர்கள் பேசினால் புரிந்து கொள்ளவும் தெரிந்திருந்தது. "உன் பெயர் என்ன?” - என்று சிங்களத்தில் அந்த யுவதியைக் கேட்டேன். "தாரா' - என்று சொல்லிவிட்டுக் கன்னத்தில் குழி விழச் சிரித்தாள் அப்பப்பா! ஆளைக் கொள்ளையடிக்கிற மோகனச் சிரிப்பு!
உலகத்தில் எந்தெந்தப் பெண்களிடமோ அழகு இருப்பதாகச் சொல்கிறார்கள். இங்கே இந்தக் கண்காணாத மலைப் பெண்ணுக்குக் கடவுள் இவ்வளவு அழகை வழங்கியிருக்கிறானே! கரந்தும், சரிந்தும், வளைந்தும், நெளிந்தும், குழைந்தும், குவிந்தும், உயர்ந்த ஊனுடல் ஒன்று என் முன் அந்தக் குடிசையில் நிற்கவில்லை. ஆண் பிள்ளைகளின் உள்ளங்களைச் சூறையாட ஆசை கொண்ட மாயச்சிற்பி ஒருவன் செம்பொற்சிலை ஒன்று செய்து கொல்லிப் பாவையாக உலாவ விட்டிருக்கிறான். அந்தச் சிலை உயிர் பெற்று உணர்வுபெற்றுத் 'தாரா' என்ற பெயரும் பெற்று இங்கே முந்திரிப் பருப்பு விற்றுக் கொண்டிருக்கிறது.
"இதோ! இதை எடுத்துக் கொள்ளுங்கள்!” - உட்கார்ந்தவன் நிமிர்ந்து பார்த்தேன். ஒரு காகிதத்தில் வறுத்த முந்திரிப் பருப்பும், மற்றொரு கையில் கிளாஸ் நிறைய ஆவி பறக்கும் தேநீருமாக அருகில் நின்றாள் அவள். அவளுடைய நாசிக்குக் கீழே, முகவாய்க்கு மேலே இரத்தச் சிவப்பில் இரண்டு மாதுளை மொட்டுக்கள் சிரித்தன. அவை? உதடுகள்! அவளுடைய அதரச் செம்மலர்கள் அப்படியே சிரித்தன.
“மழைக்கு ஒதுங்கியவனுக்காக வீண் சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். பக்கத்தில் காரை நிறுத்தி விட்டு வந்திருக்கிறேன். இதோ மழை நின்றதும் புறப்பட்டு விடுவேன்” என்று அவளிடம் எனக்குத் தெரிந்த அறைகுறைச் சிங்களத்தில் சிரித்துக் கொண்டே கூறினேன்.
"பரவாயில்லை! இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்!” கதவோரத்தில் மறைந்து நின்று கொண்டிருந்த கிழவியும் வெளியே வந்து என்னை வற்புறுத்தினாள். நான் தாராவின் கைகளிலிருந்து முந்திரிப் பருப்பையும் தேநீரையும் வாங்கிக் கொண்டேன். சற்றே நீண்ட செண்பக மொட்டுக்களைப் போன்ற அந்த விரல்கள். அவை தாம் எவ்வளவு நேர்த்தியாக அமைந்திருந்தன!
"ஒரு இளநீர் சீவித்தரட்டுமா?"கேள்வி- அதே மோகனச் சிரிப்பு: ஏன் இப்படிச் சிரிக்கிறாள்? சிரிக்காமல் பேசவே தெரியாதா இவளுக்கு?
“இந்த மழையில் இளநீர் சாப்பிடவா சொல்கிறாய்? என்னைக் கேலி செய்கிறாய் போலிருக்கிறது:”
மறுபடியும் அதே சிரிப்பு! ஐயோ அவளிடம் அந்தச் சிரிப்பையும் என்னிடம் இந்தக் கண்களையும் ஏன் வைத்தாய்? முந்திரிப் பருப்பு இருந்த காகிதமும், தேநீர்க் கிண்ணமும் காலியாயின. கிழவி வந்தாள். ஏதேதோ விசாரித்தாள். இரவில் அங்கேயே சாப்பிட வேண்டுமென்று வற்புறுத்திவிட்டுக் குடிசைக்குள் சென்று விட்டாள்."உங்களுக்குத் திருமணமாகிவிட்டதா? எத்தனை குழந்தைகள்?" - கேள்வி! சிரிப்பொலி! தூக்கி வாரிப் போட்டது எனக்கு தாராதான் கேட்டாள்.
"இல்லை. இன்னும் எனக்குத் திருமணமே ஆகவில்லை!." பதில் கூறினேன் நான்.
"ஏன் செய்து கொள்ளவில்லை?" கேள்வி அதே கிண்கிணிச் சிரிப்பு! என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திணறிப் போய் மலங்க விழித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன்.
என் மனத்தில் ஒரே வியப்பு! இந்த மலைநாட்டுச் சிங்கள யுவதிக்குச் சூது, வாது எதுவுமே தெரியாதா? இவளைச் சரியானபடி மடக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, “அது சரி! உனக்குத் திருமணமாகிவிட்டதா?’ என்று வேண்டுமென்றே தெரியாதது போலக் கேட்டேன்.
அப்போதாவது அவளுடைய முகத்தில், சிரிப்பில், பார்வையில் நாணம், தயக்கம், பயம், கூச்சம் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாந்தேன். நாணமோ, பயமோ, கூச்சமோ, தயக்கமோ சிறிதும் இல்லாமல் அதே நிமிர்ந்த பார்வையோடு, அதே சிரிப்போடு "இன்னும் ஆகவில்லை” என்று தலையை ஆட்டினாள். ஒய்யாரமாக அந்தத் தலை அசைந்த போது என் இதயமே அசைந்தது. பயங்கரமாகக் கொட்டிய அந்த மழை நிற்கும்போது இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. கிழவியும் தாராவும் விடாப்பிடியாக வற்புறுத்தவே அந்தக் குடிசையில் அவர்கள் அன்போடு அளித்த ரொட்டி, பழங்களைச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டேன். அவர்கள் அன்பு என்னை பிரமிக்க வைத்தது.
"மழை நின்றுவிட்டது! போய் வரட்டுமா?" பையிலிருந்து கார்ச் சாவியை வெளியில் எடுத்துக்கொண்டு விடைபெறுவதற்காக அவர்களை நோக்கிக் கைகூப்பினேன். அவர்கள் திகைத்தனர். பயந்த குரலில் கண்களை அகல விரித்து, "என்ன? இந்த இருட்டிலேயா?" என்றாள் தாரா.
"கார் இருக்கிறது! வசதியான ரோடுகள் இருக்கின்றன. இருட்டு என்னை என்ன செய்யும்?" என்று பதில் சொன்னேன்.
"நீங்கள் எங்கே போக வேண்டும்?"
"ஏன்? இரவு 'பெலிஹூலோயா ரெஸ்ட் ஹவுஸில்' போய்த் தங்கிவிடலாமென்று நினைக்கிறேன்.”
நான் கூறியதைக் கேட்டு இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டே இடி இடியென்று கேலி சிரிப்புச் சிரித்தாள் தாரா.
"என்ன? ஏன் சிரிக்கிறாய்?"
"ஒன்றும் இல்லை! இந்த வழிகளில் இதற்கு முன்பு வந்து பழகியிருக்கிறீர்களோ?"
"ஏன், பலமுறை வந்திருக்கிறேனே!"
"பலமுறை வந்த லட்சணம்தான் இவ்வளவு நன்றாக வழி கண்டுபிடித்து வந்திருக்கிறீர்களோ? பெலிஹூலோயா போவதற்கு யாராவது 'உலப்பனை' வரை வீணாகக் காரை விட்டுக் கொண்டு வருவார்களா? நீங்கள் “எட்டியாந்தொட்டை'யிலாவது, ‘கித்துல்கலை'யிலாவது வழி பிரிந்து போயிருக்கலாமே? மூலைக்கு மூலை ஐந்தாறு ரோடுகளும் வழிகளும் பிரிகின்றன. இங்கெல்லாம் வழி விவரம் தெரியாவிட்டால் இப்படித்தான் இடர்ப்பட வேண்டும்” என்று கூறிச் சிரித்தாள்.
“ஐயையோ! அப்படியானால் இப்போது என்ன செய்வது? நான் எப்படியும் “பெலிஹூலோயா'வுக்குப் போயாக வேண்டுமே!” நான் திடுக்கிட்டுப் போய்ப்பதறிய குரலில் அவளை வினவினேன்..
“கினிகத்தேனா வரை இதே ரோட்டில் திரும்பிப்போய் அங்கிருந்து 'நோர்ட்டன் பிரிட்ஜ்' மார்க்கமாகக் குறுக்கு வழியில் போனால் பெலிஹூலோயா சீக்கிரமாகப் போய்விடலாம்” என்று அவள் கூறினாள்.
"நீ சொல்கிற அந்த வழிகள் எனக்குத் தெரியாதே பகலானால் யாரையாவது கேட்டுக் கொண்டே போகலாம்.இந்த நேரத்தில் எப்படிப்போவது? யாரைக் கேட்டுக் கொண்டு போவது?” என்றேன்.
“நீங்கள் அவசியம் இப்போதே போய்த்தான் ஆகவேண்டுமா?”
“கண்டிப்பாகப் போயாகவேண்டும் நாளைக் காலை அங்கே வந்து சந்திக்கச் சொல்லி இரண்டு நண்பர்களுக்கு முன் கடிதம் வேறு எழுதிவிட்டேன். இரவிலேயே போனால்தான் காலையில் அவர்களைச் சந்திக்க வசதியாயிருக்கும்.”
"அப்படியானால் புறப்படுங்கள். நானும் உங்களுடன் கூட வருகிறேன். எனக்கு எல்லா வழிகளும் தெரியும்!
"நீயா?... நான் இரைந்து கத்துகின்றாற்போன்ற தொனியில் கேட்டு விட்டேன். எனக்குப் பகீரென்றது. நான் கேட்கும் குரலில் எனக்கு நம்பிக்கை விழவில்லை.
"ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நான் உங்களோடு வரக்கூடாதா?’ அவள் களங்கமில்லாத குரலில் மறுபடியும் கேட்டாள். நான் நம்பிக்கையில்லாத மனத்துடன் தாராவினுடைய தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். அந்த வயதான, சுருக்கம் விழுந்த கிழட்டு முகத்தில் களங்கமோ, அவநம்பிக்கையோ, சந்தேகமோ இல்லை.
"தாராவை அழைத்துக்கொண்டு செல்லுங்கள். அவளுக்கு இங்குள்ள வழிகள் எல்லாம் கரதலப்பாடம். நாளைக்கோ, நாளன்றைக்கோ நீங்கள் திரும்பி வரும்போது உங்கள் காரிலேயே அவளை இங்கே கொண்டு வந்து விட்டால் போதும்”- கிழவியின் குரலில் தயக்கமே இல்லை. எனக்கு உடல் முழுதும் சிலிர்த்தது. மறுபடியும் அந்த வாக்கியத்தை நினைத்துக் கொண்டேன்.
அந்நியனை அந்நியனாக எண்ணவே இவளுக்குத் தெரியவில்லை. எதையும் விபரீதமாக எண்ணவே இவர்களுக்குத் தெரியாதா? அமுதத்தில் செய்து நிறுத்திய சிலைபோல் பதினெட்டு வயதுப் பெண்ணை இந்த இரவில் எனக்கு வழிகாட்டத் துணையாக அனுப்புகிறாளே இந்தத் தாய்! உலகில் நன்மைகளைத் தவிர, சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர வேறெவையுமே நடக்க முடியாதென்ற நம்பிக்கையா இவளுக்கு? எல்லோருக்கும் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தால் உலகம் எப்படி இருக்கும்?
"வாருங்கள் போகலாம்!” அவள் என்னையும் முந்திக் கொண்டு கார் நின்ற இடத்தை நோக்கி நடந்தாள். மலைத்துப் போய் நின்று கொண்டிருந்த நானும் நடந்தேன்.
காரில் அவள் முன் ஸீட்டில் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தபோது இன்னும் தூக்கிவாரிப் போட்டது எனக்கு. "நீ பின் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டால் நல்லது”.
"பரவாயில்லை! இங்கேயே இருக்கிறேன். இப்படி இருந்தால்தான் ரோடுகள் இடத்தில் உங்களுக்கு வழிகாட்ட முடியும்” என்று சொல்லிச் சிரித்தாள் அவள், வேற்றுமை, கூச்சம், நாணம் இவற்றில் எதையுமே மருந்துக்குக் கூடப் படைத்தவன் வைக்கவில்லை போலும். முன் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டதற்கு அவள் கூறிய காரணம் பொருத்தமாக இருந்தாலும் என் மனத்தில் வேறுவிதமான சந்தேகங்கள் உண்டாயின. அழகான, இளம்பெண்களைப் பயன்படுத்தி அங்கங்கே நடைபெறும் நூதனக்கொள்ளைகள், வழிப்பறிகளைப் பற்றிப் பத்திரிகைகளில் அவ்வப்போது செய்திகள் வந்த கொண்டிருந்தன. அந்த வகையில் ஏதாவது இருக்குமோ என்றுகூட நினைத்துப் பயந்தேன். கார் குடிசைக்கு அருகிலிருந்து புறப்பட்டது. தாரா பாதைகளை விளக்கிக் கூறினாள்.
இறுதி இதழ்
பெலிஹூலோயா ரெஸ்ட் ஹவுஸை அடையும் போது இரவு இரண்டரை மணி. ரெஸ்ட் ஹவுஸ் காவல்காரனை எழுப்பி இடம் கேட்டோம்.
“எனக்கு ஒரு அறையும், இந்தப் பெண்ணுக்கு ஒரு அறையும் தனித்தனியே வேண்டும்” - என்றேன் நான்.
“ரெஸ்ட்ஹவுஸில் அநேகமாக எல்லா அறைகளிலும் ஆட்கள் தங்கியிருக் கிறார்கள். ஒரே ஒரு அறை வேண்டுமானால் உங்களுக்காக ஒழித்துக் கொடுக்கலாம்.” - காவல்காரன் பதில் கூறினான்.
நான் அவநம்பிக்கையோடு தாராவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். "பரவாயில்லை! ஒரு அறை போதும். இரண்டு பேரும் அங்கேயே தங்கிக் கொள்ளலாம்!” தாரா காவல்காரனிடம் கூறினாள். அவளுக்குத்தான் அந்நியனை அந்நியனாக நினைக்கத் தெரியாதே! காரைப் பூட்டி ரெஸ்ட் ஹவுஸின் ஷெட்டில் கொண்டு போய் நிறுத்தினேன்.
தாராவை அழைத்துக் கொண்டு ரெஸ்ட் ஹவுஸில் எங்களுக்காகக் கொடுத்த அறைக்குள் நுழைந்தேன். அறையில் ஒரே படுக்கைதான் இருந்தது. காவல்காரனைக் கூப்பிட்டு இன்னொரு படுக்கை போடச் சொல்வதற்காக வெளியே வந்தேன். இன்னொரு படுக்கைக்காகக் காவல்காரனிடம் தகராறு செய்து கொண்டிருந்தபோது உள்ளே தாராவின் கூச்சல் கேட்டது. என்னவோ ஏதோ என்று பதறிப்போய் ஒடினேன். கூச்சலிட்டு அலறியவாறே ஜன்னலோரமாகச் சுவரில் முழங்கையின் பின்புறத்தைத் தேய்த்துக் கொண்டிருந்தாள் தாரா.
“என்ன? என்ன?”
“பாழாய்போன அட்டை எப்போது பிடித்துக் கொண்டதென்றே தெரியவில்லை. திடீரென்று முழங்கையில் இரத்தம் வடிகிறது” என்றாள். “அதற்காகப் பூப்போன்ற கையை இப்படியா சுவரில் தேய்ப்பார்கள்! இதோ அட்டையை நான் எடுத்து விடுகிறேன்” என்று சொல்லி அந்தக் கையைப் பற்றிக் காவல்காரனிடம் சிறிது மூக்குப்பொடி வாங்கி அட்டை பற்றியிருந்த இடத்தில் தூவினேன். பொடிவாடையில் பிடி தளர்ந்து அட்டை கீழே சுருண்டு விழுந்தது.
தாரா கையைத் தேய்த்த இடத்தில் சுவரில் இரத்தக் கறையாகிவிட்டது. "இதென்ன இப்படிச் சுவரைப் பாழாக்கி விட்டாயே?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.
“பாழாக்கவில்லையே! சுவருக்கு இரத்ததானம் செய்திருக்கிறேனாக்கும்” என்று சொல்லிக் கொண்டே, என் சட்டைப் பையிலிருந்த காப்பிங் பென்ஸிலை உருவி எடுத்தாள்.
“பென்சிலை என்ன செய்யப் போகிறாய்?”
“இந்தக் கறைக்கு மேல் தாராவின் இரத்தம்! அட்டைகள் ஜாக்கிரதை' என்று எழுதப் போகிறேன்” என்று பதில் கூறிக்கொண்டே, சுவரில் 'தாரா' என்று ஆரம்பித்து எழுதத் தொடங்கி விட்டாள். "இதோ பார்! இது ரெஸ்ட்ஹவுஸ். கண்டதையெல்லாம் சுவரில் கிறுக்கக் கூடாது' என்று அவள் கையைப் பிடித்து மேலே எழுதவிடாமல் தடுத்தேன்.
கண்ணாமூச்சி விளையாடும் சிறு குழந்தையை விளையாடும் போது ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து கண்டு பிடித்து விட்டால் அது கலகலவென்று கைகொட்டிச் சிரிக்குமே அந்த மாதிரி சிரித்தாள் தாரா.
“பலபேர்கள் தங்கியிருக்கும் ரெஸ்ட்ஹவுஸில் இரண்டு மணிக்குமேல் ஒரு பெண் இப்படிச் சிரித்தால் என்ன நினைத்துக் கொள்வார்கள்?”
"ஏன் இரவு இரண்டு மணிக்குச் சிரிக்கக்கூடாதென்று பெலிஹூலோயே ரெஸ்ட்ஹவுஸில் ஏதாவது சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? ”துடுக்குத்தனமாக எதிர்த்துக் கேட்டாள் அவள். அப்போது எங்கள் அறைக்கு வெளியே யாரோ சிரித்துக் கொண்டே மெல்லப் பேசும் குரல் கேட்டது. அந்தச் சிரிப்பும், பேச்சும், அதை அவர்கள் பேசிய விதமும், சிரித்த விதமுமே கேட்கத் துண்டக்கூடிய முறையில் இருந்தன.
தாரா அதை உற்றுக் கேட்டாள். எங்கள் பேச்சு நின்றது. நானும் கேட்டேன்.
“என்ன வாட்ச்மேன்? யார் இந்த அறைக்கு வந்திருக்கிறார்கள்? இந்த நேரத்தில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கிறது” கேட்டவர் சிங்களத்திலேயே பேசினார்.காவல்காரன் அவருக்குப் பதில் சொல்லாமல் ஒரு தினுசாக சிரிக்கும் ஒலி கேட்டது.
“என்னப்பா சிரிக்கிறாய்? என்ன விசேஷம்?”
“சரியான ஜோடிதான்! யாரோ ஒரு பணக்காரத் தமிழ்ப் பையன் ஒரு சிங்களக் குட்டியை இழுத்துகொண்டு.”
அவன் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கவில்லை. பேயறை பட்டவள் போல 'வீல்' என்று அலறினாள் தாரா, ஒடினாள். "தாரா! தாரா! போகாதே. இருட்டு - உலகமென்றால் நாலு விதமாகத்தான் பேசுவார்கள்” என்று கத்திக்கொண்டே பின்னால் ஒடினேன் நான். வெறி பிடித்தவள் போலத் தட்டுத் தடுமாறி விழுந்து ஓடினாள் அவள். கூண்டிலிருந்து விடுதலை அடைந்த பறவையைப் போலப் பறந்தோடிவிட்டாள் அவள்.
இருளில் அவளும் தெரியவில்லை. அவளுடைய பதில் குரலும் கேட்கவில்லை.
“ஆம்! அவள் அந்நியனை அந்நியனாகக் கருதுவதற்குத் தெரிந்து கொண்டு விட்டாள். ஒரே காரில் சேர்ந்து பிரயாணம் செய்த போதும், ஒரே அறையில் உடன் தங்கச் சம்மதித்தபோதும், கையைப் பிடித்துத் தீண்டி அட்டைக் கடியிலிருந்து விடுவித்த போதும், எந்த ஒரு களங்கம் அவள் மனத்தில் ஏற்படவில்லையோ அந்தக் களங்கத்தை இரண்டுமுட்டாள்கள் தங்கள் பேச்சின் மூலம் உண்டாக்கி விட்டார்கள், அந்த முட்டாள்கள்! அவர்கள் உலகில் எதையுமே பாவம் நிறைந்த கெட்ட கண்களோடு மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள். தீமைத் தழும்பேறிய அந்தப் பார்வையின் விளைவு என்ன? தாராவின் புனிதமான மனம் அந்நியனை அந்நியனாக எண்ணிவிட்டது. தீயவை எதையுமே பேச, நினைக்க, செய்யத் தெரியாத அந்தப் பதினெட்டு வயதுப் பெண் குழந்தையின் மென்மையான இதயத்தில் சமூகத்தின் கூரிய முள் ஒன்று தைத்துவிட்டது. அவளுக்கு அன்று வரையில் தெரியாத புதிய பயத்தை உண்டாக்கி விட்டது.
ரவியின் மனத்தில் மலர்ந்த நினைவுப் பூவின் இதழ்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விட்டன. “நீ குளிக்க வேண்டாம். உடை மாற்றிக் கொள்ள வேண்டாம். சாப்பிட மட்டுமாவது வா” என்று கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான் குணசேனா, ரவி அவனுக்குப் பதில் சொல்லாமல் மறுபடியும் பால்கனியைப் பார்த்தான். அதே அறை! அதே கறை!. அதே எழுத்து.
***
"உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? எதைச் சிந்திக்கிறாய்?" குணசேனா உரத்த குரலில் வினவினான். ரவி சாவதானமாக நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக மறுமொழி கூறினான்.
“ஒன்றுமில்லை! அது ஒரு பழைய கனவு."