நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/ஜன்னலை மூடி விடு
47. ஜன்னலை மூடி விடு
விருந்தினர்களெல்லாம் ஊருக்குப் போய் விட்டார்கள். வாயிலில் மணப்பந்தல் பிரித்தாயிற்று. இரண்டு மூன்று நாட்களாக வெயில் தெரியாமல் இருந்த முன்புறத்தில் வெயில் தெரிகிறது. ஒரு பெரிய திருமணம் நடந்து முடிந்த சின்னங்கள் வீடு நிறையத் தோன்றுகின்றன. சந்தனமும், பூவும், பட்சணங்களும் நிறைந்திருக்கிறாற் போல வீடே மணக்கிறது. இன்னும் ஒரு மாதமானாலும் இந்த மணம் வீட்டிலிருந்து போகாது போல் இருக்கிறது. கலியாணத்துக்கு மணம் என்று பேர் வைத்திருக்கிறார்களே அந்தப் பேர்தான் எத்துணைப் பொருத்தமாக இருக்கிறது! கலியாணம் நடக்கிற வீட்டில் அதன் முன்னும் பின்னும், மண நாளிலும், எதுவென்றும், எதிலிருந்தென்றும் தெரியாமல் எல்லாம் கலந்ததாய் எல்லாவற்றிலிருந்தும் மணப்பதாய் வீடு முழுவதும் மங்கலமாகப் பரவி நிற்கிற மணத்தை அநுபவிக்கிற போதுதானே கலியாணத்தை மணம் என்று அழைப்பதன் பொருத்தம் புரிகிறது.
அவர் மணமகளின் தந்தை அந்தச் சில ஆண்டுகளாக அவரும் அவருடைய நோயும் வாசற் புறத்து அறையை விட்டு வெளியேறியதில்லை. அவருக்குப் பக்க வாதம். நடமாட முடியாமல் கிடக்கிறவர். தம் ஒரே பெண்ணுக்கு உறவினர்கள் உதவியுடன் திருமணம் முடித்து விட்டால் கேட்கவா வேண்டும். திருப்திக்கு சுப காரியம் நன்றாக நடந்து விட்டது.
அந்த அறையின் ஜன்னல் வழியாகத்தான் கொட்டு மேளத்தின் ஓசையை அவர் கேட்டார். அந்த ஜன்னல் கம்பிகளின் இடைவெளி வழியேதான் தம்முடைய பெண் மணக் கோலத்தில் அழகுச் சிலையாய் மையிட்டு மலர் சூடிக் கூறையுடுத்திக் குனிந்த தலையோடு வீற்றிருந்ததை அவர் பார்த்தார். அந்த ஜன்னல் வழியாகத்தான் தமது தளர்ந்த கையால் அட்சதையை அள்ளிப் போட்டு மணமக்களை வாழ்த்தினார். நல்ல வேளையாக அவருடைய அறையிலிருந்து மணச் சடங்குகள் நடந்த வீட்டுக் கூடம் தெரியும்படி அந்த ஜன்னல் அமைந்திருந்தது. பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கத் தம்பியையும், தம்பி மனைவியையும் கிராமத்திலிருந்து வரவழைத்திருந்தார். அன்னத்தைத் தம் கையாலேயே தாரை வார்த்துக் கொடுக்க வேண்டுமென்று அவருக்குக் கொள்ளை ஆசை. கால்களும், உடம்பும், நோய்க்குச் சொந்தமாகி, நோயைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட பின் அது எப்படி முடியும்? சபையிலும் அது நன்றாக இராது. அன்னத்தைப் பெண் வளர்ப்பது போலவா வளர்த்தார் அவர்? ஏதோ கிளிக்குஞ்சு வளர்க்கிற மாதிரிப் பொத்திப் பொதிந்து வளர்த்தார். தாயில்லாப் பெண்ணைத் தகப்பன் தனியாக இருந்து வளர்த்துப் பெரிதாக்குவதென்பது எத்தனை கடினமான காரியம் பிடிவாதமாக இரண்டாங் கலியாணம் செய்து கொள்ள மறுத்துவிட்டு வீட்டு வேலைளுக்காகச் சமையற்காரனைப் போட்டுக் கொண்டார். அவருக்கு நெஞ்சு உரம் அதிகம்.
அப்போது அந்த வயதில் இளமையின் இலட்சிய ஆர்வம் அவர் மனத்தில் கணக்கற்று நிறைந்திருந்தது. அவர் நிறையச் சம்பாதித்தார். நிறையச் செலவழித்து வசதியாக வாழ்ந்தார். திரைப்படங்களுக்கும், நாடகங்களுக்கும் பாடல் எழுதிக் கொடுக்கும் பெயர் பெற்ற கவி அவர். ஆயிரம் ஆயிரமாகப் பணம் குவியும்; புகழ் குவியும். அன்னத்தைப் பெற்றவள் இந்தப் புகழில் மோகங்கொண்டுதான் அவரைக் காதலித்து மணந்து கொண்டாள்.அன்னத்தின் தாயார் இறக்கும்போது அன்னத்துக்கு ஏழு வயது. அன்னம் என்பது அவர் அவளுக்குப் பிரியப்பட்டுச் சூட்டின பெயர். சின்ன வயதிலேயே அவளுடைய நடை தனி அழகுடன் இலங்கும். தான் நடந்து செல்கிற இடத்துக்கே தன்னுடைய நடையால் அழகு உண்டாக்கிக் கொண்டு நடக்கிறாற்போல நடப்பாள் அவள்.'கோமு' என்று ஏதோ பழைய கர்நாடகப்பேர் ஒன்றை அவளுக்குச் சூட்டியிருந்தாள் அவள் தாய்.
"உன்னை அழைக்கிற போதெல்லாம் உன்னுடைய அழகிய நடையைப் புகழ்கிற மாதிரி உனக்கு ஒரு பெயர் சூட்டப்போகிறேன், குழந்தாய்' என்று சொல்லி விட்டு ஆசையோடு அன்னம் என்று பெயர் சூட்டினார் அவர். ‘அன்னப் பறவை, தான் அழகாயிருக்கிறதோடு தான் நடந்து செல்கிற இடத்துக்கே தன் நடையால் அழகு உண்டாக்கும்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அவர்.
'கோமு’ என்ற பழைய பெயர் எல்லோருக்குமே மறந்துபோகும்படி செய்துவிட்டார் அவர். ‘அன்னம்' - என்று வாய் நிறைய அழைத்தவுடன் துவளத் துவள அன்ன நடைநடந்து வந்து"என்னப்பா கூப்பிட்டீர்களா? என்று பாசத்தோடு கேட்கிற நிகழ்ச்சி இனி இந்த வீட்டில் நடக்காது. இதோ இன்று இன்னும் சிறிது நேரத்தில் அவள் கணவன் அவளை அழைத்துக் கொண்டு இரயிலேறி விடப் போகிறான்.
கிழவருக்குக் கண்களில் நீர் முட்டிற்று, தன்னை யாரும் பார்த்துவிடாமல் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார். மண வீட்டில் அழலாகாதே!
‘இனி இந்த வீட்டில் என்ன இருக்கிறது? நானும் சமையற்காரனும், தனிமையும், ஏக்கமும்தான் இருக்கின்ற பொருள்கள். இந்த வீட்டில், இதன் முன்புறமுள்ள பூந்தோட்டத்தில், என் அறையில், எங்கும் அன்னம் நடந்து நடந்து ஒர் அற்புத அழகைப் படிய வைத்திருந்தாள்.
'ஊதுவத்தி அணைந்த பின்னும் அந்த மணம் இருக்கிற மாதிரி அந்த அழகு இனி இந்த வீட்டில் இருக்குமா? இந்த வீட்டில் தங்குமா?
'குழந்தாய்! உன்னைப் பெண் வளர்ப்பதுபோலவா வளர்த்தேன்? சக்தி உபாசனை செய்கிறவன்போல் அல்லவா உபாசனை செய்தேன். நீ இப்படி வளர்ந்து பெரியவளாய் வனப்பெல்லாம் பொலிய நின்று கொண்டு யாரோ ஒர் ஆண்பிள்ளையுடன் போவாய் என்று நினைத்தேனா?'"அப்பா! தூங்குகிறீர்களா?"
குயிற்குரல் அவர் செவிகளை நிறைத்துக்கொண்டு கேட்கிறது. வளை ஒலி, மல்லிகை மணம், கூறைப்புடவை மொடமொடப்பு, மணப் பெண்ணின் வாசனை. பின்னால் படுக்கையருகில் அன்னம் வந்து நின்றுகொண்டு கூப்பிடுகிறாள்! அவள் நிற்பதால் அந்த அறையே அழகாயிருக்கும் புக்ககம் புறப்படுகிறபோது அபசகுனம் மாதிரித் தன் கண்ணீரைக் காண வேண்டாமென ஒருக்களித்த படியே கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்பு திரும்புகிறார்.
அவளைத் திரும்பிப் பார்த்தவருக்கு மெய் சிலிர்க்கிறது. இந்தப் பெண்ணுக்கு இன்றைக்கு மட்டும் இத்தனை அழகு எங்கிருந்து புதிதாக வந்தது? புக்ககம் புறப்படுகிற காலத்தில் பெண்ணுக்கு இந்த மலர்ச்சி வருவது இயல்பா? அல்லது பெண்ணைப் பிரிந்து வெகு தூரத்துக்கு அனுப்பப் போகிறோம் என்ற தாபத்தினால் என் கண்களுக்கு மட்டும் அதிகமான அழகுகள் தெரிகின்றனவா? இதென்ன மணம்? இந்த மணம் இன்றைக்கென்று இவளுக்கு எங்கிருந்து வந்தது? இவளுடைய சரீரமே இன்று எல்லாப் பூக்களின் மணமும் கலந்து பூத்திருக்கும் பூவாக மாறியிருக்கிறதா? என்னுடைய இரத்தத்தில் அரும்பி வளர்ந்த உடலிலிருந்து இந்த மணத்தை அநுபவிக்கிறபோது ஒரு தந்தை என்கிற உறவில் எனக்கு இத்தனை பெருமிதமா?
“என்ன அப்பா இப்படிப் பார்க்கிறீர்கள்?"
“கொஞ்சம் அப்படியே நின்று கொண்டிரு, அன்னம்! உன்னை நன்றாகப் பார்த்து எப்போது நினைத்தாலும் உன் முகம் உடனே நினைவில் வருகிறாற் போல் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.”
இதைக் கேட்டு அன்னம் சிரிக்கிறாள்! இல்லை, யாரோ அவளுடைய இதழ்களின்மேல் ஜலதரங்கம் வாசிக்கிறார்கள். அன்னத்தின் கன்னத்தில் நாணம் பூக்கிறது! இல்லை. அவளுடைய கன்னங்களில் கனிகள் கணிகின்றன. வலது இடுப்பில் குடம் ஏந்தி இடை வளைய நெஞ்சும், கண்களும் வேறெங்கோ வளையச் சகுந்தலை நிற்கிற மாதிரி சித்திரச்சக்கரவர்த்தி இரவிவர்மா ஒரு படம் எழுதியிருக்கிறான். அந்தப் படத்தில் சகுந்தலை நிற்கின்ற அழகுதான் உலகத்துப் பெண் அழகின் சிகரநிலை.
அதே அழகோடு அன்னம் இப்போது மணக்கோலத்தில் சற்றே தயங்கி ஒரு பக்கம் சாய்ந்தாற்போல் நிற்கிறாள்! நிமிர்ந்து விறைப்பாக நிற்கிற பழக்கமே அவளுக்கு இல்லை.நடந்தாலும் அழகு நின்றாலும் அழகு அவளே ஒர் அழகு. அழகே அவளுக்கு ஒர் உருவம்.
மை தீட்டிய கண்கள், பூச்சூட்டிய கூந்தல், முதல்நாள் நலங்கிட்டசிவப்பு அழியாத பொன் நிறப் பாதங்கள். அக்கினியே கொழுந்து கொழுந்தாய்ப் படர்ந்து புடைவையாய் மாறி உடம்பைத் தழுவிக் கொண்டிருக்கிற மாதிரி நல்ல சிவப்பில் பட்டுப் புடவை அணிந்து கொண்டிருக்கிறாள். கால்களின் விரல்களில் வெள்ளி மெட்டி நடக்கிறபோதெல்லாம் கிணுங் கிணுங்கென்று பேசுகிற அழகு!.
“அன்னம்!:” கிழவருக்குக் குரல் தழுதழுத்தது. பேசவரவில்லை. அழக்கூடாதென்று தான் அவர் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்துவிட்டது. சிறு குழந்தை போல் பொங்கிப் பொங்கி அழலானார் அவர்.
"இதென்னப்பா பச்சைக் குழந்தை மாதிரி. யாராவது பார்த்தால் சிரிக்கப் போகிறார்கள்? நான் எங்கே ஒடிப்போய்விடப் போகிறேன்? உங்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியுமா, அப்பா? மாதத்துக்கொரு முறை 'அவரை' அழைத்துக்கொண்டு கண்டிப்பாக இங்கு வந்து இரண்டு நாட்கள் இருந்துவிட்டுப் போவேன். எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்ப வேண்டிய நீங்களே இப்படி அழுதால் நான் என்ன செய்வது?”
அவள் குரலும் கம்மிற்று. பாசம் எத்தனை பொல்லாதது? தன்னுடைய புடைவைத் தலைப்பால் அப்பாவின் கண்ணீரைத் துடைக்கிறாள் அன்னம்.
அப்படியே இரண்டு கைகளையும் பற்றிக் கண்களில் ஒத்திக் கொள்கிறார் அவர்.
'இந்தக் கைகள் என்னுடையவை. இன்று இவற்றை நான் இழக்கிறேன்.
இதயமே வீங்கி வெடித்து விடும்போல் துக்கமாக இருந்தது அவருக்கு. இத்தனை துக்கத்தை இதற்கு முன்பு அவர் அடைந்ததில்லை. கல்யாணத்துக்குப் பாணிக்கிரஹணம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பெண்ணின் கையைக் கணவனிடம் பிடித்துக் கொடுக்கும்போதே தகப்பனுடைய கை ஒடியத்தான் வேண்டுமா?
வாசலில் சாமான்களை வண்டியில் ஏற்றுகிற ஓசை கேட்கிறது. இரயிலுக்கு நாழியாயிற்று' என்று மாப்பிள்ளையின் தாயார் கூச்சலிடுகிறாள். அந்த அறைக்கு வெளியே வீடே பிரயாணப் பரபரப்பில் இருக்கிறது. வீடு முழுக்கக் கட்டுச்சோறு மணக்கிறது.
'சாமான்களை வண்டியில் ஏற்றுகிறார்களா? அல்லது அவருடைய மனத்தில் பொங்கிக் கொண்டிருந்த பாசவுணர்வையே வாரி ஏற்றிக்கொண்டு போகிறார்களா?
"உடம்பைப் பார்த்துக்கொள், அன்னம் வெள்ளி, செவ்வாய் எண்ணெய்க்குளி தவறாதே. உனக்கு எப்போது எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எழுது. உன்னுடைய நினைப்பை முதலாக வைத்துக்கொண்டுதான் நான் இந்த வீட்டில் இருக்க வேண்டும். அடிக்கடி வந்து போய்க் கொண்டிரு” - குரல் அடைத்தது. மறுபடியும் அழலானார் அவர்.
அறை வாசலில் பூட்ஸ் ஒலி கேட்கிறது. அன்னத்தின் கணவன் வருகிறான் போலும், அவர் கண்களைத் துடைத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தாற் போல் உட்காருவதற்கு முயல்கிறார்.
"வாருங்கள் மாப்பிள்ளை!”
மாப்பிள்ளையும் அன்னமும் விழுந்து வணங்குகிறார்கள். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.சம்பந்திகள் வருகிறார்கள். விடைபெறுகிற சம்பிரதாயம் முடிகிறது.
“செல்லமாக வளர்ந்த பெண் பார்த்து வைத்துக் கொள்ளவேணும்”-கண்கலங்கச் சொல்லி அனுப்புகிறார். அவர் மனம் கலங்கப் பார்க்கிறார்.
எல்லோரும் வண்டி ஏறி விட்டார்கள். அவர் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்னம் மறுபடியும் ஓடி வருகிறாள். தனியாக அப்பாவிடம் இன்னொரு முறை சொல்லிக் கொள்ள வேண்டுமென்ற ஆசை.
"நான் போய் வரட்டுமா, அப்பா?”
இப்போது அவள் கண்களில் நீர் நிறைகிறது.
“மகராஜியாய்ப் போய்வா, அம்மா' குனிந்து வணங்கிய பெண்ணின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்கிறார். அன்னம் எழுந்து திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்துபோய் வண்டியில் ஏறிக் கொள்கிறாள். வண்டியிலிருந்து வலது கையைத் தாமரைப் பூப்போலத் தூக்கி ஆட்டுகிறாள்.
வண்டிகள் நகர்கின்றன. ஜன்னலின் வழியே தெரிந்தவை இப்போது சாலையில் திரும்பி விடுகின்றன. ஜன்னலில் காட்சிகள் மறைகின்றன.
ஜன்னல் கம்பிகளும் அவற்றினிடையே துண்டு துண்டாய் ஆகாயமும்தான் தெரிந்தன. அவருடைய இதயம் துடித்தது; தவித்தது. எல்லாமே போகிற மாதிரி அடித்துக் கொண்டது.
“மருந்து கொண்டு வரட்டுமா?” - என்று கேட்டுக் கொண்டே சமையற்காரன் அவருடைய அறைக்குள் வந்தான்.
“தவசிப்பிள்ளை இந்த ஜன்னலை மூடி விடு"- என்றார் அவர்.
"இந்த ஒரே ஜன்னல்தானுங்களே, இந்த அறைக்கு! மூடினால் காற்று வராதே!"
“முட்டாள்!. பேசாதே! உடனே மூடிவிடு. இல்லாவிட்டால் நான் செத்துப்போய் விடுவேன். என்னால் தாங்க முடியாது. மூடிவிடு” இரண்டு கைகளாலும் நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார் அவர் சமையற்காரன் அரண்டு போனான்! உடனே ஜன்னலை இழுத்து மூடினான்.
“மருந்து கொண்டு வரட்டுங்களா?”
“எங்கிருந்து கொண்டு வருவாய்? மருந்துதான் வண்டியேறி இரயிலுக்குப் போய்விட்டதே?. அழுது கொண்டே பதிலுக்கு அவனைக் கேட்டார் அவர் அவன் விழித்தான்.
அவர் கேட்டது அவனுக்குப்புரியவில்லை.பருப்பு வெந்துவிட்டதா என்று பதம் பார்க்க உள்ளே போய்விட்டான் அவன். இங்கே இதயம் வெந்து கொண்டிருந்தது அவனுக்குப் புரியவில்லை.