நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/தெய்வத்தால் ஆகாதெனினும்
17. தெய்வத்தால் ஆகாதெனினும்
கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக மைத்துனன் சென்னையிலிருந்து வந்திருந்தான். ராஜத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அருமைத் தம்பியை வரச் சொல்லி விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வருந்திக் கடிதம் எழுதினவள். வந்தபின் மகிழ்வதற்குக் கேட்கவா வேண்டும்?
ஆனால் என்னுடைய அந்த அழகான மைத்துனன் பட்டணத்துக் கல்லூரிகளில் பாடத் திட்டத்துக்குள் அடங்காத சில விஷயங்களையும் படித்துக் கொண்டு வந்திருந்தான். வந்து இரண்டு நாட்களுக்குள்ளேயே அவனுடைய மாறுதலை நான் கண்டு பிடித்து விட்டேன். எதையெடுத்தாலும் மூட நம்பிக்கை என்றான். மற்றவர்கள் நம்புவது எதையும் அவன் நம்புவதற்குத் தயாராயில்லை. ஆனால் அவன் நம்புவதை எல்லோரும் நம்ப வேண்டுமென்று ஆசைப்பட்டான். எதற்கெடுத்தாலும் காரணமில்லாமலே காரசாரமாக விவாதித்தான். எங்கும் நிதானம் இழந்து உணர்ச்சியைக் கொட்டிப் பேசக் கற்றுக் கொண்டு வந்திருந்தான்.
“ஐயோ, பாவம்! இந்தப் பிள்ளை இப்படிக் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த மாதிரி அறிவைக் கற்றுக் கொள்ளப் போன இடத்தில் அறியாமையைக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறதே!” என்று என் மனம் உள்ளூர வருந்தியது.
ஆனால் ராஜம் தன் தம்பியின் இந்த மாறுதல்களைப் புரிந்து கொண்டதாக வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை. ‘அம்பி அம்பி’ என்று ஒடியாடி உபசரித்துக் கொண்டிருந்தாள். வாராது வந்த மாமணியைக் கண்டவள் போல் அன்பை அள்ளிச் சொரிந்தாள்.
அன்பும் பாசமுமுள்ள இடத்தில் குறைபாடுகள் இருந்தாலும் தெரிவதில்லை. தவிர பெண்களின் இயற்கை அவர்களைப் பாதிக்காத வரையில் இத்தகைய குறைகளைப் பொருட்படுத்தத் தோன்றாது.
“என்ன ராஜம்! உன் தம்பி ஒரு மாதிரி இருக்கிறானே! பழக்க வழக்கங்கள், பேச்சு, கொள்கை, எல்லாம் மாறியிருக்கின்றனவே! பார்த்தாயா?” என்று நானே ஒரு நாள் அவளைக் கேட்டு விட்டேன்.
“அதற்கென்ன செய்கிறது? இந்தக் காலத்தில் இந்த வயசில் எல்லாப் பிள்ளைகளுமே இப்படித்தான் இருக்கிறார்கள்.”
“எதற்கெடுத்தாலும் அவன் எடுத்தெறிந்து பேசுகிறானே?”
“அது அவனுடைய சுபாவம். ஏதோ நாலு நாளைக்கு இருந்து விட்டுப் போகலாமென்று வந்திருக்கிறான். இந்தச் சிறிய விஷயத்தைப் பெரிசு படுத்தாதீர்கள்:”என் மனைவி என்னைச் சமாதானப்படுத்தும் தோரணையில் பேசத் தொடங்கிவிட்டாள்.
'நாம் இவளுடைய தம்பியைப் பற்றி உண்மையான அனுதாபத்தோடு சொல்கிறோம். இவளோ அதை வேறுவிதமாக எடுத்துக் கொள்கிறாள். இனி நாம் இதைப்பற்றி இவளிடம் பேசாமல் இருப்பதே நல்லது’ என்று அடக்கிக் கொண்டேன்.
அன்று மாலை அக்காவுக்கும் தம்பிக்குமே ஒரு தகராறு ஏற்பட்டுவிட்டது.ராஜம் பூஜையறைக்குள் அந்திவிளக்கு ஏற்றித்தீப வழிபாடுசெய்து கொண்டிருந்தாள். அவள் தம்பி குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுக் கொண்டே பூட்ஸ் கால்களோடு உள்ளே நுழைந்துவிட்டான்.
“என்னடா அம்பி? இப்படிச் செய்யலாமா நீ? குடிப்பதற்குத் தண்ணீர் அங்கேயிருந்தே கேட்டால் நான் கொடுக்கமாட்டேனா?”
"ஏன்? என்ன அக்கா? இப்போ நான் என்ன செய்துவிட்டேன்?” அவன் ஒன்றும் தெரியாத மாதிரி கேட்டான்.
"உனக்கு நம்பிக்கையில்லேன்னா மற்றவர்களைக் கஷ்டப்படுத்தலாமா? பூட்ஸ் காலோடு பூஜையறையில் இங்கே வந்து நிற்கிறாய்”
"இதிலே என்ன தப்பு, அக்கா?”
"போடா போ! எதையெடுத்தாலும் உனக்கு விதண்டாவாதம்தான்!”
“தரையைத்தானே மிதிக்கிறேன்! சாமியையா?”
“போதும் போ! உன் பேச்சும் நீயும் தண்ணீரைக் குடித்துவிட்டுப் போய்ச் சேர்.” கோபத்தோடு அலுத்துக் கொணடாள்.
கடைசிவரை நான் பேசாமல் இருந்துவிட்டேன். ‘இது அக்கா தம்பி சண்டை - நான் போனால் இருவருமே என்னை எதிர்த்துக் கொண்டால் என்ன செய்வது?’ எனக்கு ஒன்றும் தெரியாததுபோல் இருந்துவிட்டேன். தம்பி இப்படிச் செய்துவிட்டான் என்று அவளாக என்னிடம் பிரஸ்தாபிக்கவும் இல்லை. என்ன இருந்தாலும் சொந்தத் தம்பியைக் காட்டிக் கொடுக்க மனசு வருமா?
மறுநாள் வெள்ளிக்கிழமை என்ன தலை போகிற காரியமாக இருந்த போதிலும் வெள்ளிக்கிழமை மாலை மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போகும் வழக்கத்தை நிறுத்தியதில்லை நாங்கள். மீனாட்சியைத் தரிசித்துவிட்டுப் பொற்றாமரைக் குளக்கரையில் சிறிது நேரம் உட்கார்ந்து வருவதில் புனிதமான நிம்மதி ஒன்று கிடைத்தது. தார் ரோட்டில் நடக்கும் போதோ, வீட்டிலிருக்கும்போதோ, நாடகம் சினிமா பார்க்கும்போதோ, கிடைக்காதநிம்மதி அதுகோவிலில் மட்டுமே கிடைத்தது.
வழக்கம்போல அன்று மாலையும் கோவிலுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தோம். கூடத்தில் உட்கார்ந்து எங்கள் குழந்தை குஞ்சுவவுக்கு தலைவாரிப் பின்னிவிட்டு கொண்டிருந்தாள் ராஜம். ‘காமிரா உள்’ளில் மைத்துனன் முகத்துக்கு ஸ்நோ பூசித் தலையைக் ‘கர்லிங்’ விழும்படியாக அக்கறையுடன் வாரி விட்டுக் கொண்டிருந்தான். சினிமாப் பாட்டு ஒன்றை அவன் வாய் சீட்டியடித்துக் கொண்டிருந்தது. அரை மணி நேரமாக அவன் தலை சீவிக் கொள்ளும் இலட்சணத்தைப் பார்த்தபோது, ‘தலையிலுள்ள மயிர் முழுதும் உதிர வேண்டும் அல்லது சீப்பிலுள்ள பல் முழுதும் உதிர வேண்டும்’ என்று போட்டி போடுகிறது போல் தோன்றியது.
‘சரி! பையனுக்குப் புத்தி வந்துவிட்டது. நம்முடன் கோவிலுக்கு வருவதற்காகத்தான் இவ்வளவு அலங்காரங்களும் செய்து கொள்கிறான் போலிருக்கிறது. பயல் அம்னைத் தரிசிக்க வராவிட்டாலும் அம்மனைத் தரிசிக்க வரும் 'அம்மன்’களைத் தரிசிக்கவாவது வருவான்!” என்று எண்ணி உள்ளூர நகைத்துக் கொண்டேன்.
அவன் 'மேக்அப்’பை முடித்துக்கொண்டு அறையிலிருந்து கூடத்துக்கு வந்தான். நேரே என்னிடம் வந்து கேட்டான். “அத்தான்! எல்லாருமாகச் சேர்ந்து ஒரு சினிமாவுக்குப் போகலாம்!” என்றான்.
“நாங்கள் கோவிலுக்குப் போகிறோம். இன்றைக்கு வெள்ளிக்கிழமை. நீ வேண்டுமானால் சினிமாவுக்குப் போய் விட்டு வா!” என்று பதில் சொன்னேன்.
அவன் அக்காவிடம் போனான்."அத்தான் கோவிலுக்குப் போகட்டும். நீவாயேன் அக்கா, குழந்தையை எடுத்துக் கொண்டு நாம் சினிமாவுக்குப் போய்விட்டு வரலாம்.”
“இல்லையடா, அம்பி! மதுரைக்கு வந்து மூன்று வருஷங்கள் ஆயிற்று. ஒரு வெள்ளிக்கிழமைகூடத் தவறினதில்லை. நீ போய்விட்டு வா. நாங்கள் கோவிலுக்குப் போகிறோம்.”ராஜமும் அவன் வேண்டுகோளை மறுத்து விட்டாள். மைத்துனனுக்குப் பெரிய ஏமாற்றம், முகம் தொங்கிவிட்டது. திடீரென்று என்ன நினைத்துக் கொண்டானோ தெரியவில்லை. எனக்கு முன்னால் வந்து விறைப்பாக நின்றுகொண்டான். கேட்க ஆரம்பித்தான்.
"நீங்கள் படித்துப் பட்டம் பெற்றவர்தானே?”
"ஆமாம்!”
"சுயமாகச் சிந்திக்கும் பகுத்தறிவு உள்ளவர்தானே?”
"ஆமாம்!”
“உண்மை எது? போலி எது? என்று அறியத் தெரிந்தவர் தானே?”
“தெரியும்”
"அப்படியானால் கோவிலும், குளமும், சாமியும், பூதமும் இந்தப் போலிப் பாவனைகளில் இருப்பதாக எப்படி நம்புகிறீர்கள்?”
"சீ! இதென்னடா முரட்டுத்தனமாக உளறிக்கொண்டு.” ராஜம் அவனைக் கடிந்து கொண்டாள். குழந்தை குஞ்சு மிரள மிரள எங்கள் இருவரையும் பார்த்து விழித்துக்கொண்டு நின்றாள்.
“நீசும்மா இரு அக்கா! எங்களுக்குள் ஒரு சிறு விவாதம்... இதில் நீ தலையிடாதே..."
“எப்படியாவது போ” என்று அவள் உள்ளே போய் விட்டாள். நான் இன்னும் மைத்துனனுடைய கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. விழிகளை இமையாமல் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். அவனுடைய இளமை கொஞ்சும் முகத்தில் அறிவுக் கலப்பற்ற உணர்ச்சிவெறி தாண்டவமாடியது. முத்து முத்தாக வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன.நமது கேள்விக்கு எதிரியிடம் பதில் இல்லை என்கிற மாதிரி தெம்பும் பலமும் அவன் கண்களில் ஒளியிட்டிருந்தன. நான் பதில் சொல்லாமல் மெளனமாயிருப்பதைத் தனக்குச் சாதகமாக நினைத்துக் கொண்ட அவன் மேலும் மடக்க ஆரம்பித்துவிட்டான்.
"அத்தான்! நீங்கள் மார்க்ஸ், இங்கர்சால், சி.இ.எம். ஜோட் ஆகியவர்கள் எழுதிய அறிவு நூல்களைப் படித்திருக்கிறீர்களா?”
“.....”
“போகட்டும்! நம்முடைய வழிபாடு முழுவதும் ஒரு போலித்தனம். உண்மைக் கலப்பற்ற பொய். தெய்வத்தைப் போல இருப்பதெல்லாம் தெய்வமென்று எண்ணி மயங்குகிறோம் நாம். ரயில்வே ‘கைடு’ ரயிலாகி விடுமா? அதில் ஏறிப் பிரயாணம் செய்வதற்கு முடியுமா?”
“.....”
“இந்தப் போலியான சமயமும் போதை தரும் பாவனைகளும் சமூகத்தை ஏமாற்றுகின்றன என்கிறார் கார்ல் மார்க்ஸ்”
“....”
“என்னுடைய கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியவில்லை.அதனால்தான் மெளனம் சாதிக்கிறீர்கள்.”
நான் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். என்னால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. மேடையில் முழங்கும் அடுக்குமொழிச் சொற்பொழிவாளர்களையெல்லாம் தன்னிடம் பிச்சைவாங்கும்படி செய்துவிட்டான் என் மைத்துனன்.
“நீங்கள் சிரித்து மழுப்புவது நியாயமில்லை.”அவன் மறுபடியும் பலமாகக் கூச்சல் போட்டான்.
“நல்லது! உனக்கு அருமையான மூளை வாய்த்திருக்கிறது, அப்பா. என்னைவிட எவ்வளவோ அதிகமாகத் தெரிந்து கொண்டிருக்கிறாய். நான் மார்க்ஸ், இங்கர்சால், ஜோட் ஆகியவர்களைப் படிக்கவில்லை. சங்கரர், மாணிக்கவாசகர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியவர்களைப் படித்து ஏமாந்து விட்டேன்!”
"அத்தான்! நீங்கள் பதில் சொல்லவில்லை. வேண்டுமென்றே என்னைக் கேலி செய்கிறீர்கள்.”
“இப்போது எங்களுக்குக் கோவிலுக்கு நாழிகையாகிவிட்டது. உனக்குச் சினிமாவுக்கு நாழிகையாகிவிட்டது. நாளைக்கு வைத்துக் கொள்வோம்.” நான் அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பினேன்.
“இதென்ன இவ்வளவு முரட்டுத்தனமும் அசட்டுத்தனமும் இவனுக்கு எங்கிருந்து வந்தன?” அவன் தலை மறைந்ததும் ராஜம் என்னைக் கேட்டாள்.
“அசட்டுத்தனமில்லை, இதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்கிறது. நீ புறப்படு. கோவிலுக்குப் போக நேரமாகிவிட்டது” என்றேன். இதற்குப்பின் அந்தப் பேச்சு எழவில்லை. கோவிலுக்குப் புறப்பட்டோம்.
கோவிலிலிருந்து புதுமண்டபம் வழியாக ராயகோபுரத்தின் வாசலுக்கு வந்தோம். அங்கிருந்த மரப்பொம்மைக் கடை ஒன்று குழந்தை கண்ணில் பட்டுவிட்டது. பொம்மைக் கடையைப் பார்த்தாளோ, இல்லையோ, ஏதாவது ஒரு பொம்மை வாங்கிக் கொடுத்தால்தான் அங்கிருந்து கிளம்புவேன் என்று அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டாள் குஞ்சு. நானும் ராஜமும் குழந்தையின் கவனத்தை வேறுபக்கம் திருப்பிச் சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு போக முயன்றோம். எங்கள் முயற்சி பலிக்கவில்லை.
“பொம்மை! எனக்குப் பொம்மை வேணும்.அதோ அந்த யானைப் பொம்மையை வாங்கிக் கொடு!”குழந்தை அழுது கொண்டே புதுமண்டபத்துக் கல்தரையில் உருண்டு புரளத் தொடங்கிவிட்டாள்.
"சார்! குழந்தை ரொம்ப அழுகிறது. நாலணாத்தானே? ஒரு பொம்மை வாங்கிக் கொடுங்களேன்!” - கடைக்காரன் வேறு சிபாரிசுக்கு வந்தான்.
போனால் போகிறதென்று நாலனா கொடுத்து அந்த யானைப் பொம்மையை வாங்கிக் குழந்தையிடம் அளித்தேன். அழுகை நின்றது. கோடைக் காலத்தில் மழை எப்போது நிற்குமென்றும் தெரியாது. குழந்தைகளுடைய ஆசையும் பிடிவாதமும் கோடை மழைபோல. வீட்டுக்குத் திரும்பியதும் குழந்தை அந்த யானைப் பொம்மையோடு தன் விளையாட்டைத் தொடங்கிவிட்டாள். எங்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ராஜம் இரவுச் சாப்பாட்டுக்காகச் சமையலைக் கவனிக்கப் போனாள். யானைப் பொம்மையைக் கிணற்றடிக்குக் கொண்டு போய்ச் சோப்புப் போட்டுக் குளிப்பாட்டுவது, பவுடர் பூசி விடுவது இந்த மாதிரி குழந்தைத்தனமான காரியங்களைக் குஞ்சு செய்து கொண்டிருந்தாள். ஒரு ரஸிகனின் மனோபாவத்தோடு அதைச் சிறிது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
“பொம்மை வாங்கி முழுசாக ஒரு மணிநேரம்கூட ஆகவில்லை! அதற்குள் இந்தக் குழந்தை மனம் அத்துடன் எவ்வளவு நெருங்கிய ஒட்டுறவு கொண்டாடுகிறது?’ என்று சிந்தித்தேன். ஏதோ காரணகாரியத் தொடர்பற்று சிந்தனைகள் அலைமோதின.
‘என் கையில் இதே யானைப் பொம்மையைக் கொடுத்துச் சோப்புப் போட்டு விடவும், பவுடர் பூசவும் சொன்னால் நான் பொறுமையோடு செய்வேனா?
குழந்தையின் அறியாமை அதற்கு இன்பத்தைக் கொடுக்கிறது. எனக்கு அறிவு தெளிந்துவிட்டதனால் அந்த இன்பத்தை அடைய முடியாது.”
இப்படிச் சிறிதுநேரம் சிந்தித்துவிட்டுப் படிப்பதற்காக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்தேன். அது ‘அலெக்ஸில் காரல்’ எழுதிய அறியப்படாத மனிதன் - ‘மேன் தி அன்னோன்’ என்ற புத்தகம். ஆனால் புத்தகத்தில் மனம் லயிக்கவில்லை.
‘மனிதனுக்கு எல்லாவற்றிலும் கட்டுப்பாடு இருப்பது போல அறிவு வளர்ச்சியிலும் கட்டுப்பாடு வேண்டும். அறிவு மீறி வளருமானால் நல்லது பொல்லாதது எதையுமே நம்பும் சக்தி குறைந்துவிடும்.நாஸ்திகம் தோன்றும் காரணமே அது’. இப்படிச் சில வரிகள் மின்வெட்டுப் போல் என்மனத்தில் ஆழமாகப் பதிந்தன.
மைத்துனன் பார்க்கப் போயிருந்தது ஆங்கில சினிமா. அதனால் ஒன்பதேகால் மணிக்கே படம் விட்டு வந்து சேர்ந்தான். நானும் அவனும் குஞ்சுவும் சாப்பிட உட்கார்ந்தோம். குஞ்சு தன் இலைக்குப் பக்கத்தில் யானைப்பொம்மையை உட்கார்த்தி அதற்கு முன்பும் ஒரு சிறு இலையைப் போட்டிருந்தாள். ராஜம் அந்த இலையில் ஒன்றும் பரிமாறாமல் போகவே அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.
"அது மரப்பொம்மையடீ !சாப்பிடாது.” “மாட்டேன் போ! அதற்குப் போட்டால்தான் நானும் சாப்பிடுவேன்.”
வேறு வழியின்றி அந்த இலையிலும் பரிமாறி விட்டுப் போனாள் ராஜம்.
சாப்பாடு முடிந்தது. படுக்கையில் குழந்தையை விட்டபோது யானைப் பொம்மையையும் பக்கத்தில் விட்டால்தான் தூங்குவேன் என்றாள். அப்படியே செய்தேன்; குழந்தைக்குப் பொம்மையிடம் ஏற்பட்ட பாசம் வேடிக்கையானதாக இருந்தது. மைத்துனன் வந்தான்.
“என்ன அத்தான்? என் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறீர்களா?”
“மணி பத்தரை, தூக்கம் இமைகளை அழுத்துகிறது. காலையில் சொல்கிறேன். நீயும் போய்த் தூங்கு” என்று அவனை அனுப்பினேன்.
பொழுது விடிந்தது.கோயில் யானைநாள்தோறும் அபிஷேகத்திற்கு நீர் கொணர எங்கள் தெரு வழியே போகும். சனிக்கிழமைகளில் மட்டும் அந்த யானைக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்துப் பழக்கப்படுத்தியிருந்தேன். இதனால் யானை மாவுத்தன் ஒவ்வொரு சனிக்கிழமையும் என் வீடு வந்ததும் யானையை நிறுத்திவிட்டு, "சார், வாழைப்பழம்" என்று குரல் கொடுப்பான்.
அன்று சனிக்கிழமை என்பது நினைவிலிருந்தும் பழம் வாங்கி வைக்க மறந்துவிட்டேன். தெருக்கோடியில் யானையைக் கண்டதும் மைத்துனனைக் கடைக்கு விரட்டினேன். அவன் அப்போது குஞ்சுவைத் தோளில் தூக்கி ‘உப்பு மூட்டை’ கொண்டிருந்ததனால் அவளையும் அழைத்துக்கொண்டு கடைக்குப் போனான்.
அவன் பழத்தோடு திரும்பி வருவதற்கும் யானை மாவுத்தன், வீட்டுவாசலில் யானையைக் கொணர்ந்து நிறுத்துவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
ஒரு சீப்புப் பழத்தில் ஒரு பழத்தை மட்டும் குழந்தையிடம் கொடுத்துவிட்டு மற்றவற்றை யானைக்குக் கொடுத்தேன்.
"குஞ்சு! அந்த ஒரு பழத்தை உன் கையாலே யானைக்குக் கொடேன்.”
"ஐயோ பயமாயிருக்கு! நான் மாட்டேன்” என்று குழந்தை அலறிக் கொண்டே உள்ளே ஒடிவிட்டாள். நான் மீண்டும் அவளைப் பிடித்து வந்து யானைக்குப் பழம் கொடுக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடுத்தினேன். குழந்தை பயந்து வீறிட்டுக் கதறினாள். யானையருகே நெருங்கவே அஞ்சினாள்.
“விடுங்க அத்தான்! குழந்தை பயப்படுகிறாள்” என்று மைத்துனன் கூறினான்.நான் குஞ்சுவைக் கீழே இறக்கி விட்டுவிட்டேன். அவள் கையிலிருந்த பழத்துடன் வீட்டுக்குள்ளே ஒடிவிட்டாள். யானைக்காரன் யானையைச் செலுத்திக் கொண்டு போய்விட்டான். நானும் மைத்துனனும் உள்ளே வந்தோம்.
"அத்தான்! என்னை ஏமாற்றிக் கொண்டேபோகிறீர்களே? என் கேள்விக்குப் பதில் சொல்லவே இல்லையே” அவன் முதல் நாளைய விவாதத்தைக் கிளப்பினான்.
“உஷ்! இரையாதே. அதோ மூலையிலே பார்! உன்னுடைய கேள்விக்குப் பதில் அங்கே இருக்கிறது!”
மைத்துனன் ஆச்சரியத்தோடு நான் சுட்டிக்காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தான்.
அங்கே குழந்தை குஞ்சு உயிருள்ள யானைக்குக் கொடுக்க மறுத்த வாழைப்பழத்தை உரித்துத் தன்னுடைய பொம்மை யானையின் வாயில் திணிக்க முயன்று கொண்டிருந்தாள்.
“சாப்பிடு யானை! சாப்பிடு! ஏன் முழுங்கவே மாட்டேங்கிறே?"திருந்தாத மழலை மொழியில் வேண்டினாள்.
“பார்த்தாயா?”
“எதை?”
"அந்தக் காட்சியை”
“பார்த்தேன், அதற்கென்ன?”
“நேற்றுக் கூறினாயே; பாரத நாட்டின் பக்தி மார்க்கம் வெறும் பாவனை, போலித்தனம் என்றெல்லாம். அந்தக் கருத்தை இப்போது தெரிந்து கொள்!”
“விளங்கவில்லையே?”
“சிந்தித்துப் பார் விளங்கும்! உன்னுடைய பகுத்தறிவு எப்படி எல்லாம் நினைக்கிறதோ, அப்படியெல்லாம் உன் முன் தோன்றவும் செயலாற்றவும் தெய்வத்தால் முடியாது! உன் அறிவைக் கொண்டு நீதான் அதைப் பாவிக்க வேண்டும்!”
"அப்படியானால் உண்மையைவிடப் பாவனை உயர்ந்ததா?” என்றான்.
“அல்ல! உண்மை அணுகுவதற்கரியது, உயிருள்ள நிஜ யானையைப் போல. பாவனை பக்திக்குரியது, யானைப் பொம்மையைப் போல” என்றேன்.
மைத்துனன் தலையைச் சொரிந்தான். "அப்பா! ஊழி ஊழியாக வரும் பாரதநாட்டுத் தெய்வப் பண்பாடு மகத்தானது. கோயிலும் குளமும் கட்டியவர்கள் அந்தப் பண்புக்கு வடிவு கொடுத்திருக்கிறார்கள்.”
நான் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை!
(கல்கி, 7.7.1957)