நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/நினைவில் நின்றவள்
22. நினைவில் நின்றவள்
நினைத்துப் பார்த்தால் அது ஒரு கனவு போல் எனக்குத் தோன்றுகிறது. ‘நினைக்க வேண்டிய அவசியம்? நினைக்காமலே இருந்துவிட்டால் என்ன?’
இருக்க முடியவில்லையே! நான் என்ன செய்வேன்? உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாகுமோ? உள்ளம் நினைவுகளில் பொங்கும்போதெல்லாம் அந்த அழகிய முகம் திரைச்சீலையில் எழுதித் தொங்கவிட்ட ஒவியம் போல் தென்படுகிறதே? அந்த ஓவியத்தை நான் எப்படி அழிப்பேன்? நினைவில் அரும்பு கட்டி மலரும் அந்த மலரை எப்படிக் கசக்குவேன்? நெஞ்சே பொறு! உனக்கு மறுபடியும் அவள் கதையை நினைவூட்டுகிறேன். எண்ணங்களால் என்னைக் கொல்லாதே! நான் நிரபராதி. எளியவன், பலவீனன், தனியன் என்னை விட்டுவிடு. நீ கேட்பதை நான் ஒளிக்காமல் சொல்லிவிடுகிறேன்.நான் ஏன் எதிலும் பற்றில்லாமல் எதுவும் என்னைப் பற்றவிடாமல், சுவையற்று, சுகமற்று ஏகாங்கியாகத்திரிந்து கொண்டிருக்கிறேனென்று நீ கேட்கிறாய்! கடந்த பதினைந்து ஆண்டுகளாக இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் அந்த நினைவுச் சுமையைச் சற்றே கீழே இறக்கி வைக்கிறேன், சரிதானே? கேள்!
அவளைச் சந்திக்க நேர்ந்தது ஒரு விநோதமான கதை போல் நினைவில் தங்கியிருக்கிறது. நீலாம்பூர் மலைப்பகுதியில் யானைகளைப் பிடித்துப் பழக்கும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கு இருபத்து மூன்று வயது. மலை வாழ்வும் விறுவிறுப்பு நிறைந்த யானை பிடிக்கும் தொழிலும் மனத்துக்குப் பிடித்தவையாய் அமைந்திருந்தன. உடன் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் மலையாளிகள். அளவற்ற அன்புடன் என்னிடம் பழகினார்கள். கம்பெனிக் கட்டடங்களுக்கு அருகில் உள்ள அறையொன்று நான் இருப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. தனி ஆளாக இருந்தாலும், குடும்பங்களோடு வசித்து வந்த மலைநாட்டு நண்பர்களின் உதவி வேண்டிய போதெல்லாம் குறைவின்றிக் கிடைத்து வந்தது. பல நூறு மைல்களுக்கு அப்பால் பொற்றோர்களையும் வீட்டையும், பிறந்த மண்ணையும் விட்டு விட்டுப் பிழைப்பதற்காக இங்கே வந்து இப்படிக் காட்டிலும் மலையிலும் அலைகிறோம் என்ற உணர்ச்சி ஏற்படவே இல்லை.சொந்த ஊரில் சொந்த மனிதர்களுக்கு இடையே வசிப்பதைப் போலவே இருந்தது.
அப்போது கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூர் சிவன் கோவிலுக்கு ஒரு யானை பிடித்துக்கொடுக்க ஒப்புக்கொண்டிருந்தோம். கோவிலுக்கு யானை வாங்கிவிடுவதாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த செல்வச்சீமான் முன்தொகை மூவாயிரம் ரூபாய் கொடுத்து, பிடிக்க வேண்டிய யானையின் வயது, உயரம் முதலிய விவரங்களைச் சொல்லி அனுப்பியிருந்தார். கோவிலுக்காக யானை பிடித்துக் கொள்வதற்குக் காட்டிலாகா அனுமதியும் கிடைத்துவிட்டது. குஞ்சுக்குட்டன், நாராயணன் நம்பியார், முரளீதர குரூப், நான் ஆகிய நால்வரும் வேறு சில ஆட்களும் யானையை ஒரு வாரத்துக்குள் பிடித்துக் கொடுத்து விடுவதென்ற ஏற்பாடுகளைத் தொடங்கினோம். மலையில் யானைகள் அதிகமாகப் பழகும் அடர்ந்த பகுதி ஒன்றில் எப்போதும் வழக்கம்போல் ஒரு பெரிய குழி வெட்டப்பட்டது.ஆழம், அகலம், உயரம் எல்லாம் யானை விழுவதற்கேற்பப் பொருத்தமாக அமைக்கப்பட்ட அந்தக் குழியின் மேல் மெல்லிய மூங்கில் தட்டியால் மூடினோம். மண்ணைப் பரப்பிப் பார்ப்பதற்குத் தரைபோல் தோன்றும்படி செய்தபின் கரும்புக் கழிகளும் உடைந்த தேங்காய்களும், தழைகளும் அதன்மேல் பரப்பப்பட்டன. நாங்கள் குறிப்பிட்டிருந்த ஒரு வார அவகாசத்தில் இந்தப் பூர்வாங்க வேலைகள் முடிவதற்கே இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன.பொய்க் குழியின் வடக்கே மேட்டில் உயர்ந்த மரக்கிளைகளின் நடுவே ஒரு பரண் கட்டியிருந்தோம். எஞ்சியிருக்கும் ஐந்து நாட்கள் தாம் பயங்கரமும், கடுமையும் கவனமும் நிறைந்தவை.நாங்கள் நான்கு பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் இரவு பகல் பாராமல் பரணில் இருந்தாக வேண்டும். கரணம் தப்பினால், மரணம் என்கிற மாதிரி நிலை அது. பகலில் இரண்டு பேர்கள், இரவில் இரண்டு பேர்கள் என்று முறை வைத்துக் கொண்டு நாட்களைக் கழித்தோம். பேரூர்ச் சிவபெருமானுக்கு யானையைச் சீக்கிரமாகத் தருவித்துக் கொள்ள வேண்டுமென்று திருவுள்ளமில்லையோ, அல்லது நாங்கள் பறித்து வைத்திருந்த பொய்க்குழி வழியே யானைகள் வரவில்லை என்பதனாலோ, நான்கு நாட்கள் வரை எதிர்பார்த்தபடி எதுவும் நிகழவில்லை. கரும்புக்குழிகளும் குழிமேல் பரப்பியிருந்த பிற தழைகளும் வாடிக் கொண்டு வந்தன. ஐந்தாம் நாள் பகலிலும் யானை வரவில்லை. 'நாங்கள் திட்டமிட்டிருந்தபடி ஏழு நாட்களில் காரியத்தை முடிக்க இயலாமல் போய்விடுமோ? என்று திகைத்தோம். எதற்கும் அன்று ஐந்தாம் நாள் இரவையும் பார்த்துவிடுவதென்று முடிவாயிற்று. அன்றிரவு பரணிலிருந்து குழியைக் கண்காணிக்கும் பொறுப்பை நானும் முரளிதர குரூப்பும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏழு மணிக்கே இராச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு கம்பளி, டார்ச்லைட் தண்ணீர்க்கூஜா சகிதம்பரணுக்குச் சென்று எங்கள் முறையை ஒப்புக் கொண்டோம் ஏற்கனவே காலையிலிருந்து அங்கே காத்துக் கொண்டிருந்த குஞ்சுக்குட்டனும் நாராயணன் நம்பியாரும் எங்களைக் கண்டதும் பொறுப்பை ஒப்புவித்துவிட்டு வீடு திரும்பிச் சென்றனர். முரளிதர குரூப்புக்குச் சமீபத்தில்தான் திருமணமாகியிருந்தது. இளம் மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு என்னோடு விடிய விடியப் பரணில் இருக்கப் பைத்தியமா என்ன? எட்டரை மணிச் சுமாருக்கு, “சாரோ! நீங்கள் இவ்விடே இருக்கட்டே. ஞான் வீட்டுக்குப் போய் வருன்னு” என்று சொல்லிக் கம்பளியைப் போர்த்திக் கொண்டு கிளம்பிவிட்டான் அவன். நான் பரணில் ஏறிப் படுத்துக் கொள்ளச் சென்றேன்.
தீடீரென்று அந்த ஒசையும் அலறலும் கேட்டன. குழி மேல் மூடியிருந்த மூங்கில் தட்டி முறியும் ஒசைǃ யானைதான் விழுந்துவிட்டதோ என்று நான் பரபரப்பாக எழுந்திருந்தேன்.ஆனால் தட்டி முறிந்ததை அடுத்து ஒரு பெண்ணின் பரிதாபகரமான ஓலக்குரல் எழுந்தது. யானை விழவில்லை. இருட்டில் யாரோ ஒரு பெண் வழி தெரியாமல் போய்க் குழி மேல் நடந்திருக்கிறாள். தட்டி முறிந்து உள்ளே குழிக்குள் விழுந்துவிட்டாள் போலிருக்கிறது. “யாரது?” மரத்தின் மேலிருந்து நான் இரைந்து கத்திய வினா ஆயிரம், பதினாயிரம் வினாக்களாக மாறி எதிரொலித்தது. பதில் இல்லை. குழிக்குள் இருந்து ஒரு பெண் அலறும் சப்தம் மட்டும் பரண் மேலிருந்து எனக்குத் தெளிவாகக் கேட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. திகிலும் பரபரப்பும் ஏற்பட்டன. நான் கீழே இறங்கிப் பார்க்காவிட்டால் குழிக்குள் அக்கப்பட்டுக் கொண்டவள் அங்கேயே கதறிப் பயந்து உயிரை விட்டுவிடுவாளோ என்று திகைத்தேன். ஒரு கையில் டார்ச்லைட்டையும் இன்னொரு கையில் கயிற்றுச் சுருளையும் எடுத்துக் கொண்டு பரணிலிருந்து கீழ் நோக்கித் தொங்கும் கயிற்று ஏணி வழியே இறங்கினேன். மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் குழம்பின. உடலில் சிறிது நடுக்கம் ஏற்பட்டது. அந்த இருளில் அம்மாதிரி மலைப்பகுதியில் கீழே நிற்பதனால் எந்த வினாடியிலும் அபாயம் ஏற்படலாம். மிருகங்கள் பழகுகிற இடம். ஆனால் அதற்காக ஒரு அப்பாவிப் பெண்ணைக் குழிக்குள்ளேயே தவிக்க விடுவதா? நான் வேகமாக நடந்து குழியருகே சென்றேன். வடக்கு ஓரமாகத் தட்டி முறிந்து இடைவெளி தெரிந்தது. கையிலிருந்த டார்ச்சை அமுக்கினேன். அப்பப்பா! அதை அமுக்குவதற்குள் கை நடுங்கிய நடுக்கம் சொல்லி முடியாது. விளக்கு ஒளி குழியின் இருண்ட பகுதியில் வட்டமாகப் படிந்தது.
நான் மங்கலான ஒளியில் அவளை ஓரிரு கணங்கள் உற்றுப் பார்த்தேன். கரிய நெடுங்கண்கள்; புருவங்கள்! அவை மன்மதன் வளைக்கின்ற வில்லோ எனத் தோன்றின. செம்பவள இதழ்! அழகிய நுனியுடன் கூடிய சிறிய நாசி! நெளி நெளியாகச் சுருளோடியிருந்த கருங்கூந்தலுக்கும் அந்த மதிமுகத்துக்கும்தான் எவ்வளவு பொருத்தம்? சந்திரனைக் கருநாகம் கவ்வினதுபோல், கொடியுடலுக்கு ஏற்ற ஒற்றை நாடியான தோற்றம். யானைக்காக வெட்டிய பள்ளத்தில் இப்படி ஒரு அழகியைப் பிடிக்கப்போகிறோம் என்று சொப்பனத்திலாவது எதிர்பார்க்க முடியுமா?
“ஐயோ! இந்தக் குழிக்குள் பயமாக இருக்கிறதே! என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா? நீங்கள் யாராயிருந்தாலும் சரி! உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகிறது”. அவள் மறுபடியும் ஓலமிட ஆரம்பித்துவிட்டாள். “சத்தம் போடாதே உன்னைக் காப்பாற்றத்தான் வந்திருக்கிறேன். இதோ இந்தக் கயிற்றை உள்ளே விடுகிறேன். இரண்டு கைகளாலும் கயிற்று துணியை இறுக்கிப் பிடித்துக் கொள்” என்று மேலிருந்து உரத்த குரலில் பதில் கூறிக் கொண்டே, கயிற்றுச் சுருளை அவிழ்த்துவிட்டேன். அவள் கயிற்றை இறுகப் பிடித்துக் கொண்டாள். எப்படியோ அவளை மேலே தூக்கிவிட்டேன். அப்போது பக்கத்தில் மரங்கள் முறிபடுகிற ஓசை கேட்டது. நான் திடுக்கிட்டேன். “பெண்ணே! நீ யாராக இருந்தாலும் சரி, இனி ஒரு விநாடிகூடத் தரையில் நின்றுகொண்டிருக்கக்கூடாது. யானைகள் மந்தை மந்தையாக வந்து போகிற இடம் இது. அதோ கேட்டாயா ஓசையை? உயிரின் மேல் ஆசையிருந்தால் வந்துதான் ஆக வேண்டும். வேறெங்கும் போக முடியாது” என்று அவளை நோக்கிக் கூறிவிட்டுப் பரணில் ஏறுவதற்கு ஓடினேன். அவளும் என்னைப் பின்பற்றி ஓட்டமும் நடையுமாக வந்தாள். பழக்கத்தின் காரணமாகக் கயிற்று ஏணியில் வேகமாக ஏற முடிந்தது என்னால், அவள் எப்படி ஏறுவதென்று தெரியாமல் தயக்கமும் திகைப்பும் அடைவதைக் கண்டு, “ஆபத்துக்குப் பாபமில்லை! வேறு என்ன செய்வது? உன் வலது கையை இப்படிக் கொடு! நான் பிடித்து மேலே தூக்கி விடுகிறேன்” என்றேன். சொல்லும்போதே என் வார்த்தைகளை அவள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாதே என்ற பயத்துடன் நான் சொன்னேன். அவள் தயங்கி நின்றாள்.
“இப்படி நின்றால் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான். என்னையும் மேலே போகவிடாமல் நீயும் வராமல் இப்படி ஊமையாக நின்றால் என்ன அர்த்தம்?” என்று கண்டிப்பான குரலில் அதட்டினேன். வெண்ணிறத் தந்தத்தில் கடைந்தெடுத்தது போன்ற அந்த வளைக்கை உயர்ந்தது.
அந்த இரவில் நான் ஒரு கனவைக் கண்டுகொண்டிருக்கிறேனோ என்று சந்தேகமாயிருந்தது. ஆனால் கனவல்ல, உண்மையில் ஒரு அழகிய பெண்ணின் கை; என் கையோடு பிணைந்த நிகழ்ச்சி மெய்யாகவே நடந்தது. பொய் இல்லை. கற்பனை இல்லை, புனைவும் இல்லை. அவள் குழியில் விழுந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடாத பயத்துடன் பரணில் என் முன் உட்கார்ந்திருந்தாள். கம்பளியைக் கொடுத்தேன். “இந்தா போர்த்திக்கொள், குளிர் அதிகமாக இருக்கும்” என்றேன். வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டாள். “யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்” என்று கேட்டேன்.
அவளுக்குச் சரியாகத் தமிழ் பேசத் தெரியாததால் மலையாளத்தில் தன்னைப் பற்றிக் கூறினாள். கூறும்போதே துயரம் தாங்காமல் நடுநடுவே விம்மி அழத் தொடங்கிவிட்டாள். முழுவதையும் கேட்டுமுடித்தபோது, அந்தப் பெண்ணின் சோகக் கதை என் உள்ளத்தை உருக்கியது. ‘இப்படியும் ஒரு துயரக் கதை வாழ்வில் புதைந்திருக்குமா?’ என்று ஏங்கினேன்.உடல் முழுவதும் செழித்து நிற்கும் இளமையும், இளமையை எடுத்துக்காட்டும் அற்புத அழகும் பொருந்திய அந்தப் பெண், கேவலம் நாள் ஒன்றுக்கு ஆறணாக் கூலிக்கு மரம் அறுக்கும் கோவிந்த ஈழவனின் மகளாக இருப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. கோவிந்த ஈழவன் எங்கள் கம்பெனியின் மற்றோர் பிரிவாகிய மரக்கடையில் வேலை பார்ப்பவன். ரம்பம் பிடித்து மரம் அறுப்பது அவன் தொழில். சமீபத்தில் சில மாதங்களாக நல்ல மரங்கள் கிடைக்காததனால் எங்கள் கம்பெனியின் மானேஜர் நாலைந்து மரக்கடையை மூடிவிட்டார். கடையில் வேலை பர்த்து வந்தவர்களுக்குத் திடீரென்று வேலை போய்விட்டது. வேலையை இழந்தவர்களில் கோவிந்த ஈழவனும் ஒருவன். மனைவி குழந்தைகளோடு முக்கால் டஜனுக்கு மேல் பாரமுள்ள அவன் குடும்பம் பரிதவிப்புக்கு ஆளாகியது. வறுமைப் பிணி வாட்டி எடுத்தது. ஆணும் பெண்ணுமாக உழைத்தும் வீட்டில் அரை வயிற்றுப் பட்டினி. இப்போதோ ஈழவனுக்கு வேலையே போய்விட்டது. வேலையற்ற நிலையில் குடும்பம் தத்தளித்தது. மலேரியாக் காய்ச்சல் ஈழவனைப் படுத்த படுக்கையாக்கிவிட்டது. அவன் மனைவி ஏற்கனவே நோயாளி. பெண் மாதவி குழந்தைகளில் மூத்தவள். அவள் ஏதாவது செய்தால்தான்
வீட்டிலுள்ளவர்களின் வயிறு நிறையும். விவரம் தெரிந்த வயதுடைய மாதவி வீட்டுக் கொல்லையில் நேந்திர வாழை, மிளகு என்று ஏதோ பயிரிட்டிருந்தாள். அது ஒரு உப வருமானம்தான். தகப்பனாரே வேலையிழந்து வந்துவிட்ட போது, குடும்பத்தைத் தாங்கும் சக்தி முழுதும் அதற்கில்லை. ஒருநாள் இருநாள், கால் வயிறு நிறைந்தது. மூன்றாம் நாள் முழுப்பட்டினி.மாதவி என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்தாள்.
கூலிகளின் குடிசைகள் யானைகளைப் பிடிப்பதற்காகப் பரண் அமைந்திருந்த இடத்துக்கு அருகே ஒரு பெரியமேட்டில் இருந்தது.இரண்டு மூன்று நாட்களுக்கு முன் யானை பிடிப்பதற்காகப் பொய்க் குழி வெட்டி, அதன்மேல் கரும்புக் கழிகள், பெரிய கொப்பரைத் தேங்காய் மூடிகள் ― இவற்றையெல்லாம் பரப்புவதை மாதவி பார்த்திருந்தாள். ‘அந்தத் தடித்த கரும்புக் கழிகளில் ஒன்றாவது சாப்பிடுவதற்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்ற ஏக்கம்கூட அவளுக்கு ஏற்பட்டது. குடிசை வாசலில் நின்றபடியே பரப்பியிருந்த கரும்பு, தேங்காய் மூடிகள் ஆகியவற்றையெல்லாம் வெகுநேரம் நாவில் நீர் ஊறப் பார்த்துக் கொண்டிருப்பது இரண்டொரு நாட்களாக அவள் வழக்கமாகிவிட்டது.
இரவு எட்டு மணிக்குமேல் பரணில் யானைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களும் உறங்கிவிடுவார்களென்பது அவளுக்கு நன்றாகத் தெரியும், அன்றிரவு எப்படியும் அந்தக் கழிகளில் ஒரிரு கழிகளையும், தேங்காய்களில் சிலவற்றையும் எடுத்து, ருசிபார்த்துவிடுவதென்று தீர்மானித்துவிட்டாள் அவள். தாய், தகப்பன் குழந்தைகள் யாவரும் தூங்குகிற வரை அவள் தூங்காமல் காத்திருந்தாள். பசிக்கும், ஆசைக்கும் தூக்கம் ஏது? எட்டரை மணி சுமாருக்கு நெஞ்சில் துணிவை வரவழைத்துக் கொண்டு அடிமேல் அடி வைத்து நடந்தாள். பொய்ப் பள்ளம் இருந்த இடத்துக்கு அவசரமாக வந்தாள். வயிற்றில் பசியும், நாவில் நீருமாக, நடந்து வந்த அவளின் மிகுந்த ஆத்திரத்தினாலும், இருளில் தடம் தெரியாததனாலும் ஒரு பெருந்துன்பத்தில் தானாகவே அகப்பட்டுக் கொண்டுவிட்டாள்.
‘இவ்வளவு அழகான பெண்ணா வயிற்றின் பசிக்கும் நாவின் துறுதுறுப்புக்கும் அடிமைப்பட்டு இந்த வெட்கக் கேடான காரியத்தைச் செய்ய முன்வந்தாள்?’ என்று நினைத்து வியந்தேன். வானுலகிலிருந்து வழிதவறி வந்த மோகினிபோல் இருட்டில் என்னெதிரே பரண்மேல் உட்கார்ந்திருந்தாள் மாதவி.
“மாதவி வெறும் கரும்புக்கும் தேங்காய்க்கும் ஆசைப்பட்டா இதைச் செய்தாய்? என்ன அசட்டுத்தனம்? உயிருக்கு உலை வைக்கும் பிரதேசத்தில் இருட்டில் தனியே வரலாமா?” என்று கேட்டேன். என் கேள்விக்குப்பதில் இல்லை. விம்மி விம்மி அழும் ஒலி கேட்டது.
“அழாதே மாதவி! பரணில் நிறைய இடம் இருக்கிறது. அந்த மூலையில் நீ படுத்துக்கொள். விடிந்ததும் உன்னை வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன்” என்று கூறி அவளைத் தேற்றினேன். அவள் அப்போதே போக வேண்டும் என்றாள். நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். என் வார்த்தையை அவள் மீற முடியவில்லை. பரணின் ஒரு மூலையில் அவளும் இன்னொரு மூலையில் நானுமாகப் படுத்துக் கொண்டோம். அந்த இரவு தூங்குவதுபோல் பாவித்து உண்மையில் தூங்க முடியாமலே இருவரையும் ஏமாற்றிவிட்டது. அது இரவின் குற்றமா? நெஞ்சின் குற்றம்தான்!
மறுநாள் பொழுது விடிந்ததும் மாதவியை அழைத்துக் கொண்டு கோவிந்த ஈழவனின் குடிசைக்குப் போனேன். குழியில் தடுமாறி விழுந்தபோது மாதவிக்கு ஏற்பட்டிருந்த காயங்களுக்கு மருந்து போடச் செய்தேன்.
வேலை கிடைக்கிறவரை செலவுக்கு வைத்துக்கொள்ளுமாறு கொஞ்சம் பணம் கொடுத்தேன். ஈழவனைத் தனியே அழைத்து, “கோவிந்தா! உன் மகளை நான் கலியாணம் செய்துகொள்ளப் போகிறேன், அதற்கு நீ சம்மதித்துத்தானாக வேண்டும்” என்றபோது அவனுக்கு நம்பிக்கையே இல்லை. நான் விளையாட்டுக்காகக் கேலி செய்கிறேனென்று நினைத்துக் கொண்டுவிட்டான். நான் மறுபடியும் வற்புறுத்திச் சொன்னபோதுதான் என்னை அவனால் நம்ப முடிந்தது. “அப்படியானால் அது என் பாக்கியம்தான்” என்று நாக்குழறி நடுங்கும் குரலில் கூறினான் அவன். என் மனம் குளிர்ந்தது.
அந்த அழகி இதழ் விளிம்பு அசைய ஒரு நாணப் புன்னகை புரிந்தாள். ‘அடுத்த வாரம் வைக்கத்தப்பன் கோவிலில் எங்கள் திருமணம் நடக்கும். அதன்பின் இந்தப் புன்னகைக்கும், இதன் பிறப்பிடமான செளந்தரிய உடலுக்கும் நான்தான் சொந்தக்காரன்’ என்று மகிழ்ச்சியால் துள்ளியது என் மனம். “ஐயா! உங்களாலே மூழ்கிக் கொண்டிருந்த என் குடும்பப் படகு சுகமாகக் கரையேறுகிறது!” என்று நன்றிப் பெருக்கோடு எனக்கு வந்தனம் செலுத்தினான் கோவிந்த ஈழவன்.
“ஈழவா! உன் மாதவிக்கு இருக்கிற அழகுக்கு அது மட்டுமா நடக்கும்? இதைவிடப் பெரிதாக நடந்தாலும் வியப்பில்லை” என்றேன். பிரம்மச்சாரிக் கட்டைக்கு அதிகம் செலவு ஏது? வாங்கின சம்பளத்தில் நானூறு, ஐநூறு மிச்சப்படுத்தி வைத்திருந்தேன். கோவிந்தனின் ஏழமையை உத்தேசித்துக் கல்யாணத்துக்கு முன் கொடுக்கும் பரிசப் பணம்போல் இருநூறு ரூபாயை அவனுக்குக் கொடுப்பது என்று தீர்மானித்திருந்தேன். அவன் அப்படி எதுவும் வேண்டுமென்று வாய் திறந்து கேட்கவில்லை. ஆனால் நானாகவே கொடுப்பதென்று முடிவு செய்துவிட்டேன். அதனால், “நாளை சாயங்காலம் கொஞ்சம் பணம் கொண்டு வந்து தருகிறேன். வாங்கி வைத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.
நான் தங்கியிருந்த அறை பாதுகாப்புக் குறைவான இடம்.ஆகையால் சம்பளத்தில் மிச்சப்படுத்தியிருந்த பணத்தை எங்கள் கம்பெனி மானேஜரிடம் கொடுத்து வைத்திருந்தேன். பணம் வேண்டுமானால் இப்போது அவரிடம் போய்த்தான் கேட்க வேண்டும். ஆனால் சந்தர்ப்பம் அவரிடம் போக முடியாதபடி இருந்தது. பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு முன் மலேரியாக் காய்ச்சலில் அவருடைய மனைவி காலமாகிவிட்டாள். ஐம்பத்தேழு வயதில் நாலைந்து குழந்தைகளோடு தனியாக விடப்பட்ட அவர் ஒரே கவலையில் தத்தளித்துக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து வெளிவருவதே இல்லை. துக்கமிகுதியினால் வேளா வேளைக்குச் சாப்பிடாமலும் தூங்காமலும் வீட்டிலே கிடக்கும் அவரிடம் இப்பொழுது போய்ப் பணம் கேட்பது பொருத்தமான காரியமில்லை என்று தயங்கினேன். கடைசியில் சக தொழிலாளி நாராயணன் நம்பியார் இருநூறு ரூபாய் கொடுத்தான். என் கவலையும் பிரச்னையும் தீர்ந்தன. மறுநாள் மாலை பணத்தோடு ஈழவனைப் பார்க்கச் சென்றேன்.
“இந்தா பணம்! ஈழவா… வருகிற ஞாயிற்றுக்கிழமை வைக்கத்தப்பன் கோவிலில் கல்யாணம். வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் நானே செய்துவிடுகிறேன். வாங்கிக்கொள் இதை…”
என் பணத்தை ஈழவன் வாங்கிக் கொள்ளவில்லை. அவன் முகத்தில் மலர்ச்சியைக் காணோம். நான் திகைத்தேன். “ஏன், பணம் வேண்டாமா உனக்கு?”
“அது இல்லை! வந்து…”
“இல்லாவிட்டால், பின் என்ன?”
“மத்தியானம் நம்ம மானேஜர் சார் இங்கே வந்திருந்தார்.”
“மானேஜரா? அவர் எதற்காக இங்கே வர வேண்டும்? என்ன காரியமாக அவர் வந்திருந்தார்?”
“அவர் வந்திருந்தபோது இங்கே குடிசை வாசலில் மாதவி புடவை தோய்த்துக் கொண்டிருந்தது?”
“ஊம்ம்! அப்புறம்?”
“‘இது யார்?’ என்று கேட்டார். ‘என் மூத்த பெண் மாதவி’ என்றேன். கலியாணம் கட்டிக் கொடுத்திட்டியா, இல்லையா என்று கேட்டார்…”
“ஊம்ம்!”
“‘இல்லை! இனிமேல்தான் கட்டிக் கொடுக்கணும்’ என்றேன். அவர் கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். திடீரென்று, ‘நானே கட்டிக்கிறேன், கொடுப்பியா?’ என்றார். நான் அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தயங்கிக் கொண்டிருந்தபோது, ‘கோவிந்தா! எனக்கு இவளை மிகவும் பிடித்திருக்கிறது. இந்தா! இந்தப் பணத்தை வைத்துக் கொள்’ என்று ஐநூறு ரூபாயை என் கையில் திணித்துவிட்டார். நான் பதில் பேசவே முடியலீங்க. ‘சும்மா தயங்காதே! கலியாணமானதும் நீதான் மரக்கடையில் மேஸ்திரி வர வெள்ளிக்கிழமை குருவாயூரில் கல்யாணம் எல்லா ஏற்பாடும் நான் செய்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.”
பூமி, வானம், திசை, திருக்கோணம் எல்லாம் இடிந்து என் தலைமேல் விழுந்து அமுக்குவது போலிருந்தது எனக்கு ஈழவன் என் முன்தான் நின்றுகொண்டிருந்தான். அவனை நான் என்ன செய்ய முடியும்? அவன் என்னைவிட ஏழை. நானோ மானேஜரைவிட ஏழை ஈழவனின் குடிசை வாசலில், நான் முதல்நாள் கொடுத்துவிட்டுப் போயிருந்த கரும்பின் சுவைத்துத் துப்பிய சக்கைகள் சிதறிக் கிடந்தன. அவை என்னைப் பார்த்துச் சிரித்தனவா? அல்லது விதி உன் ஆசையையும் இப்படித்தான் கடித்துத் துப்பிவிட்டது என்று கூறாமல் கூறினவா?
பணமுள்ளவர்களுக்கு ஆசையையும், ஏழைகளுக்கு அழகையும் படைத்த பிரம்மாவின் முகத்தில் கரியைப் பூசத் துடித்தன என் கைகள். ஆனால் முடிகிற காரியமா அது? அன்று குழியிலிருந்து ஒருத்தியைக் காப்பாற்றினேன். இன்று நானே குழியில் விழுந்துவிட்டேன்.
என் அருமை உள்ளமே! இதுதான் அந்தக் கதை. எண்ணமும் நானும் ஓயாமல் எவளைப் பற்றி எண்ணுகிறோமோ, அவள் இப்போது ஒரு கம்பெனியின் மானேஜருக்கு மனைவி! ஆனால் நினைவளவில் பார்க்கும்போது அவள், அந்த மகாசெளந்தர்யவதி இன்னும், இப்போதும், இந்த விநாடி வரை எனது நினைவில் நிலையாக இடம் பெற்றுவிட்டாள். காலம் பதினைந்து வருஷ மலர்களை உதிர்த்துவிட்டது.
என் நினைவை மட்டும் யாராலும் உதிர்க்க முடியவில்லை. காலம் மட்டும் என்ன? காலத்தை ஆட்டி வைக்கும் மூலத்துக்கு மூலமான விதி நினைத்தாலும் என் நினைவை அழிக்க முடியாது! என் நினைவு? அது என்னுடன்தான் அழிய வேண்டும்!
(கல்கி, 13.10.1957)