நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/வலம்புரிச் சங்கு
42. வலம்புரிச் சங்கு.[1].
பூமாலை யோசித்துப் பார்த்தான். அன்றைக்குச் சங்கு குளிக்கப் போவதா? வேண்டாமா? என்று எண்ணினான். குடிசைக்குள் அவன் மனைவி கோமதி வலி பொறுக்க முடியாமல் முனகிக் கொண்டிருந்தாள். எப்படியும் அன்றைக்கு உச்சிப் போதுக்குள் குழந்தை பிறந்து விடும் என்று மருத்துவச்சி சொல்லி விட்டுப் போயிருந்தாள்.
“ஏலே, பூமாலே இன்னிக்கு ஒரு நாளைக்குப் போவாட்டிஎன்னடா குடிமுழுகிப் போச்சு? குழந்தை முகத்தைப் பார்த்திட்டுப் பிறகு போகலாம்டா” வயதானவளாகிய அவன் தாய் கூறினாள்.
“அதுக்கில்லே அம்மா! வருஷம் முழுதுமா சங்கு குளிக்க முடியுது? ஏதோ இந்த இரண்டு மூணு மாசத்திலே நாலு காசு பாத்தால்தானே உண்டு.”
“காசு கிடக்குதடா விடு! தாயும் குழந்தையுமா இவங்களைப் பார்க்கிறதை விடவா காசு பெரிசு?”
“சரி, உன் இஷ்டம் இருக்கேன். கண்டிராக்டர் எசமான் கூப்பிட்டு விடாமல் இருக்கணும்!” - பூமாலை குடிசையிலேயே தங்கிவிட்டான். அன்று அவன் சங்கு குளிக்கப் போகவில்லை.
சங்கு குளிக்க மற்ற ஆட்கள் வந்திருந்தார்கள். ஆனால் கண்டிராக்டர் பரமசிவம் பிள்ளையைப் போல வேகமாகச் சங்கு குளிக்கக் கூடிய ஆட்கள் அந்தப் பிரதேசத்திலேயே வேறொருவரும் இல்லை. சல்லடத்தைக் கட்டிக் கொண்டு கடலில் குதித்தால் பொழுது சாய்வதற்குள் சங்குகளை வாரிக் குவித்து விடுவான். மற்றக் கூலிக்காரர்களோ, பத்து இருபது சங்குகளைக் குளிப்பதற்குள்ளேயே மூச்சுத் திணறிக் கூலியை வாங்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். நான்கு மாதங்கள்தான் அவரது கண்டிராக்டின் ஆயுள். ஆயிரக்கணக்கான பணத்தைக் கொட்டிக் கண்டிராக்டு’ எடுத்திருந்தார். இந்த நான்கு மாதங்களுக்குள் லாபம் பார்த்தால்தான் உண்டு. இல்லையானால் நஷ்டமடைந்து கையைச் சுட்டுக் கொண்டு போக வேண்டியதுதான். “இன்றைக்கு ஏண்டா பூமாலையை இன்னும் காணோம்?” என்று கேட்டார் பரமசிவம்.
“அவன் பொஞ்சாதி பிள்ளைத்தாச்சியா இருக்காங்க. அதுக்கு இன்றைக்கு நாளுங்க. அதனாலே அவன் வரமாட்டானுங்க.”“நான் கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னேன்னு போய்க் கூட்டிக்கிட்டு வாடா!... உடனே திரும்பிடலாம்னு சொல்லு. அப்பொழுதுதான் பயல் வருவான்...”
கண்டிராக்டர் பரமசிவம் பிள்ளையின் கட்டளையைச் சிரமேல் தாங்கிக் கொண்டு பூமாலையைக் கூட்டி வருவதற்குப் புறப்பட்டான் ஒரு கூலியாள்.
காலை எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் முதல் கப்பல் புறப்படுவதற்குத் தயாராக ஒலியை முழக்கிக் கொண்டிருந்தது. துறைமுகத்தில் போவோரும் வருவோருமாக ஒரே கூட்டம். கடல் நீரின் முடை நாற்றத்தை ஏற்றுமதி இறக்குமதிக்காகக் குவிக்கப்பட்டிருந்த சாமான்களின் வாடை அமுக்கிக் கொண்டிருந்தது. பரமசிவம் பிள்ளையும், அவருடைய கூலியாட்களும் பூமாலையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சங்கு குளிக்கச் செல்ல வேண்டிய பகுதி கடலில் சிறிது தொலைவு தள்ளி இருந்தது. அங்கே போவதற்குப் பெரிதும் சிறிதுமாகப் படகுகள் துறைமுகத்தில் தயாராக இருந்தன.
போனவன் அரை நாழிகையில் பூமாலையோடு திரும்பி வந்து சேர்ந்தான்.
“ஏண்டா பூமாலே! குழந்தை பிறந்தால் வீட்டிலேயிருந்து ஆள் அனுப்ப மாட்டாங்களா? அதற்காக நீ வீட்டிலேயே இருக்கணுமோ?” என்று கேட்டார் பரமசிவம்.
"இல்லீங்க. அம்மா சொல்லிச்சுங்க... இன்றைக்கு ஒரு நாளைக்கு மட்டும் போகவேண்டாம்னு.”
“போடா போ! ஒரு நாள் சம்பாத்தியத்தை வீணாக்கனும்கிறாயே, சல்லடத்தைக் கட்டிக்கிட்டு வேலையைப் பாருடா குழந்தை பிறந்த தகவல் வந்த உடனே உன்னை வீட்டுக்கு அனுப்பிச்சுடறேன்.”
“இல்லை எசமான்! இன்றைக்கு வேண்டாமுங்க... என் மனசு சரியாயில்லீங்க. ஞாபகத்தை எல்லாம் வீட்டிலே வைச்சுகிட்டு இங்கே வேலை செய்யறதுன்னா..?”
“அட சரிதான்! பெரிய மனசைக் கண்டவன் கணக்காகப் பேசுகிறாயே? நான் சொல்கிறேன் கேளு பூமாலை' பரமசிவம் பிள்ளை வற்புறுத்தினார்.
பூமாலை துணிந்து மறுக்கும் சக்தியை இழந்தான். வேறு வழியில்லை. சல்லடைத்தைக் கட்டிக் கொண்டு மற்றக் கூலியாட்களோடு படகில் ஏறி உட்கார்ந்து கொண்டான். கண்டிராக்டர் பிள்ளை பூமாலையைச் சம்மதிக்க வைத்த மகிழ்ச்சியோடு தாமும் ஒரு தனிப் படகில் ஏறி உட்கார்ந்து கொண்டார். படகுகள் முத்துக் குளித்தல், சங்கு குளித்தல் முதலியவற்றுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கடல்பகுதியை நோக்கிச் சென்றன.
விநாடிக்கு விநாடி பின்னுக்கு நகர்ந்து மங்கிக் கொண்டிருக்கும் துறைமுகத்தையும், ஊரையும், கரையையும் வெறித்துப் பார்த்தவாறே படகில் போய்க் கொண்டிருந்தான் பூமாலை. அவன் மனதில் நிம்மதி இல்லை. வழக்கம் போல் நிறையச் சங்குகளை வாரிக் குவிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. வேண்டா வெறுப்பான ஒரு மனநிலை.டேய் பூமாலைக்கு என்ன குழந்தை பிறக்கும்டா?”
"ஆம்பளைக் கொழந்தைதாண்டா.”
'இல்லேடா! பொம்பளைக் குழந்தைதான்!
“என்ன பந்தயம்டா கட்டறே?”
"இன்றைக்குச் சங்கு குளிக்கிற கூலி முழுதும்டா..!"
“அட! என்ன குழந்தையானால் என்ன? நல்லதாகப் பிறக்கட்டும். அதுதான் வேணும். நீங்க ஏண்டா பந்தயம் போட்டு மடியறீங்க” கூட இருந்த கூலிக்காரர்கள் வேடிக்கையும், விளையாட்டுமாக ஏதேதோ பேசிக்கொண்டே வந்தனர். பூமாலை அதில் கலந்து கொள்கிறவனைப் போலச் சிரித்துத் தலையைக் குனிந்துகொண்டானே ஒழிய மனமார அவனால் அந்தக் குதுகலத்தில ஈடுபட முடியவில்லை.
படகுகள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தன. உடலின் சூடு குறையாமல் இருப்பதற்காகக் கொழுப்புக் கலந்த ஒரு வகை எண்ணெயைச் சங்கு குளிப்பவர்கள் எல்லோரும் தடவிக் கொண்டிருந்தார்கள். பூமாலை சும்மா உட்கார்ந்திருந்தான்.
"ஏய் பூமாலை! நீ என்ன சும்மாக் குந்திகிட்டிருக்கே? எண்ணெய் பூசிக்கிட்டு இறங்கு, சொல்கிறேன்.வீட்டைநினைச்சுக் கவலைப்படாதே.எல்லாம் நல்லபடியாக முடியும்...!. பரமசிவம் பிள்ளை இரைந்தார்.
பூமாலை கொழுப்பு எண்ணெயைச் சூடு பறக்கத் தேய்த்துத் தடவிக் கொண்டான்.
சங்கு குளிப்பவர்கள் நாலா திசைகளிலும் முங்கி எடுத்துக்கொண்டு வருவதற்கு வசதியாகப் படகோட்டிகள் படகுகளை ஒருவிதமான வியூகத்தில் வளைத்து நிறுத்தினார்கள்.
ஆட்கள் ஒவ்வொருவராகக் கடலில் குதித்தனர். கடைசியாகப் பூமாலை குதித்தான்.ஆவலோடு கடற்பரப்பைப் பார்த்துக் கொண்டு படகில் உட்கார்ந்திருந்தார் கண்டிராக்டர் பரமசிவம் பிள்ளை.
நேரம் ஆக ஆகப் படகுகள் சங்குகளால் நிறைந்து கொண்டிருந்தன. பூமாலை ஒருவன் மட்டும் மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்த அவ்வளவு சங்குகளையும் போல இரண்டு மடங்கு எடுத்துக் குவித்திருந்தான். பரமசிவம் பிள்ளைக்குப் பரம சந்தோஷம். உச்சிப் போது ஆகிவிட்டது. எல்லாக் கூலியாட்களும் அலுத்துப்போய்ப் படகுகளில் ஏறி உட்கார்ந்து கொண்டு சோற்று மூட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்துவிட்டனர்.
பூமாலை இன்னும் சங்கு குளித்துக் கொண்டு தான் இருந்தான்.
“போதும்டா பூமாலை வா! படகில் ஏறு. சாப்பாட்டுக்கு மேலே மறுபடியும் பார்க்கலாம்!” பிள்ளை அவனைக் கூப்பிட்டார்.
"இருங்க எசமான்! கடைசித் தடவையாக ஒரே ஒருமுங்கு போட்டு வந்துடறேன்.” “சரி, செய்து பார்!...” பூமாலை முங்கினான். அவன் தலை தண்ணீருக்குள் மறைந்ததும் கரைப் பக்கமிருந்து படகு ஒன்று வருவதைக் கவனித்தார் பரமசிவம் பிள்ளை. படகு அருகில் வந்தது. பூமாலையின் தம்பி அதைச் செலுத்திக் கொண்டு வருவதைக் கவனித்தார் அவர்.
அவனுடைய தோற்றத்தையும் முகபாவத்தையும் கவனித்ததுமே அவருக்குத் தெரிந்து விட்டது விஷயம்.
“என்னடா இவ்வளவு அவசரமாய்ப் படகிலே வந்திருக்கே?”
"கோமதி மதினி காலமாயிடிச்சுங்க. அண்ணனைக் கூட்டிட்டுப் போக வந்தேன்.”
"ஐயையோ குழந்தை பிறக்கலையாடா?”
“அது பொறக்கும்போதே செத்துப் போய்த்தான் பிறந்திச்சிங்க. மதினி அதுக்கப்புறம் வலி எடுத்து வேதனை தாங்க முடியாமே...”
“அட கண்றாவியே..!” அவர் பூமாலையின் தம்பியை விசாரித்துக் கொண்டிருந்தபோது, கடல் நீர் அலம்பி வடிந்தது. பூமாலை குபுக்கென்று வெளியே வந்தான்.
“எசமான், எசமான்! இதோ பாருங்க, என் கையிலே 'வலம்புரிச் சங்கு!’ அதிர்ஷ்டம்னா இதுல்லே அதிர்ஷ்டம்!” - பூமாலை மூச்சுத் திணறி நீரின் மேல் தத்தளித்துக் கொண்டே வலது கையை அலைக்கு மேல் உயர்த்திக் காட்டினான். எல்லோரும் வியப்புத் தாங்காமல் திரும்பிப் பார்த்தனர்.
“வலம்புரி சங்கு' என்றால் சாதாரணமானதா அது? ஒரு சங்கே லக்ஷக்கணக்கில் விலை போகக்கூடியது. நூறு இருநூறு வருஷங்களுக்கு ஒரு முறை எப்போதாவது அபூர்வமாகக் கடலில் கிடைக்கக்கூடியது. அதை வைத்திருப்பவர்களுக்குச் சகல சித்திகளும் கூடிவரும் என்பதனால் சமஸ்தானாதிபதிகளும் கோடீசுவரர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவதற்கு ஓடி வருவார்கள்.
பரமசிவம் பிள்ளை கண்களை அகல விரித்துப் பார்த்தார். பூமாலையின் கையில் ஒரு நல்ல செவ்விளநீர் அளவுக்கு வலப்புறம் வளைந்து திருகிய அற்புதமான வலம்புரிச் சங்கு ஒன்று இருந்தது. ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். பூமாலை அதைப் படகில் வைக்கக் கையைத் தூக்கினான்.
"அண்ணாச்சி கோமதி மதினி காலமாயிடிச்சு. ...விக்கி அழுது கொண்டே பூமாலையின் தம்பி அவன் அருகில் படகைக் கொண்டு வந்தான்.
விலை மதிக்க முடியாத அந்த வலம்புரிச் சங்கு பரமசிவம் பிள்ளையின் படகில் விழுவதற்குள் பூமாலையின் கையிலிருந்து நழுவிக் கடலில் விழுந்தது.
"ஐயோ! பூமாலை. அது ஆழத்திலே போகுதுடா. எடு! எடு! எடுடா... லக்ஷக்கணக்கில் பெறுண்டா.”- அவர் இரைந்து கத்தினார்.
பூமாலை எடுக்கவில்லை. தம்பியின் படகைப் பிடித்துக் கொண்டு உணர்வுகளைச் சோகத்தில் புதைத்துக் கொண்டிருந்தான் அவன்.பரமசிவம் பிள்ளை துடித்தார்.பூமாலை அசையவில்லை."டேய்! அப்புறம் சோறு தின்னலாம்; நீங்க குதிச்சு எடுங்கடா!” சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றவர்களைத் தூண்டினார். அத்தனை கூலியாட்களும் உடனே சாப்பிடுவதை நிறுத்திவிட்டுத் தண்ணீரில் குதித்தனர். தமக்குத் திடீரென்று கிடைத்த வலம்புரிச் சங்கை இழந்த சோகத்தில் அவன் மனைவியையும் குழந்தையையும் இழந்து நிற்கிறான் என்பதுகூட அவருக்கு மறந்து போய்விட்டது.
“அட நாசமாய்ப் போகிற பயலே! அவன் சங்கைப் படகில் வைத்துவிட்டுக் கரையேறின.பின் உன் சமாசாரத்தைச் சொல்லித் தொலைச்சா என்ன! நல்ல சமயத்தில் கெடுத்து விட்டாயேடா! ’அவர் பூமாலையின் தம்பியைத் திட்டினார். அந்தச் 'சின்னப் பயல்’ அவரை முறைத்துப் பார்த்தான். பூமாலை கேவிக் கேவி அழுது கொண்டிருந்தான். அவன் தம்பி கைகொடுத்துத் துக்கி அவனைப் படகுக்குள் ஏற்றிக்கொண்டு கரையை நோக்கிச் செலுத்தினான்.
பரமசிவம் பிள்ளை உள்ளே முங்கிய மற்றக் கூலிகளை எதிர் பார்த்து ஆவலோடு காத்திருந்தார். ஒவ்வொருவனாக வெளிவந்தான்.
“எசமான்! அது அகப்படலீங்க” அத்தனை கூலிகளும் இதே பதிலைத்தான் கூறினார்கள். திடீரென்ற கண் பெற்றுப் பிறகு உடனேயே பழைய குருடனாக ஆனாற்போல இருந்தது அவர் நிலை. இன்னும் பத்து வருஷங்கள் இதே கண்டிராக்டு எடுத்தாலும் பெற முடியாத லட்சாதிபதிப் பதவியை இந்த ஒரே ஒரு வலம்புரிச் சங்கின் மூலம் அவர் பெற்றிருக்க முடியும். அதைப் பூமாலை கெடுத்து விட்டான்! பூமாலையின் தம்பியையும் அவன் கொண்டுவந்த இழவுச் செய்தியையும் அவர் வாய் ஒயத் தூற்றினார்.
‘எப்படியும் அந்த வலம்புரிச் சங்கை எடுக்காமல் விடுவதில்லை' என்று உறுதி பூண்டுவிட்டார் அவர் கூலிகளைத் திரும்பத் திரும்ப அதே இடத்தில் மூழ்கச் செய்தார். சங்கு குளிப்பதில் பூமாலைக்கு அடுத்தபடி திறமைசாலிகளான வேறு சிலரை வருவித்துக் குளிக்கும்படி ஏவினார். எல்லோரும் சேர்ந்து ஏமாற்றம் ஒன்றையே அவருக்கு அளித்தார்கள்.வலம்புரிச்சங்கு கிடைக்கவே இல்லை.ஏமாற்றத்தின் நடுவே விளைகின்ற ஆத்திரம் பஞ்சுப் பொதியின் இடையே விழுகின்ற நெருப்புத் துண்டு போலப் பயங்கரமானது.
நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு 'போலீஸ் ரிப்போர்ட்' செய்வது என்ற முடிவுக்கு வந்தார் பரமசிவம் பிள்ளை.
“என்னிடம் வெகு நாட்களாகச் சங்கு குளிக்கும் கூலியாக வேலை பார்த்துவரும் பூமாலை என்பவன் நேற்றுக் காலை லக்ஷக்கணக்கான ரூபாய்கள் விலையுள்ளதும் எனக்குச் சேர வேண்டியதுமான ஒரு வலம்புரிச் சங்கைக் கடலில் எறித்துவிட்டான். அவன் எறிந்த இடத்தில் அவனையே மூழ்கச் செய்து அந்தச் சங்கை எடுத்துக் கொடுத்து உதவவேண்டும். அல்லது அவனைத் தகுந்த நடவடிக்கையின்பேரில் சரியானபடி தண்டிக்க வேண்டும்."பெரும்பான்மை பொய்யும் சிறுபான்மை மெய்யும் கலந்த இந்த ரிப்போர்ட்டை, போலீஸுக்கு மறுநாள் காலையில் பரமசிவம் பிள்ளை அனுப்பி வைத்தார். அதோடு நேரில் போய்ப் போலீஸ் இன்ஸ்பெக்டரைச் சந்தித்து "சார், நீங்கள் அந்தப் பயலை மிரட்டி அழைத்துக்கொண்டு வந்தால் எப்படியும் சங்கைப் போட்ட இடத்திலிருந்து எடுத்துக் கொடுத்துவிடுவான்” என்று அவர் கூறியிருந்தார்.
"நீங்கள் சங்கு குளிக்கும் துறையில் தயாராக இருங்கள்! நான் அந்தப் பயலுடைய குடிசைக்குப் போய் ஆளை அதட்டி அங்கே இழுத்துக்கொண்டு வருகிறேன். எப்படியும் அந்த வலம்புரிச் சங்கை எடுத்துவிடச் செய்வோம்” என்று இன்ஸ்பெக்டரும் வாக்களித்தார்.
வலம்புரிச் சங்கு என்றால் அது இலேசான விஷயமா? பரமசிவம் பிள்ளை தலைகீழாக நின்றாவது அதை எடுத்தாக வேண்டும் என்று உறுதியான மனத்தோடு இருந்தார்.
குழந்தையையும், தாயையும் கொண்டுபோய்ப் பொசுக்கி விட்டு வந்த வேதனையோடு குடிசைத் திண்ணையில் சுருண்டு விழுந்துகிடந்தான் பூமாலை. நேற்றும் சரி, இன்றும் சரி, அவன் சாப்பிடவில்லை. எதுவும் தோன்றாமல் அழுது கொண்டேயிருந்தான். உள்ளே பூமாலையின் தாய் இரைந்த குரலில் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள்.
“வலம்புரிச்சங்கு கைநழுவிட்டுதேயின்னு துடிச்சானே தவிர அண்ணாச்சி சம்சாரத்தையும் குழந்தையையும் பறிகொடுத்திட்டு நிற்கிறாரேன்னு அந்தக் கண்டிராக்டர் கொஞ்சமாவது வருத்தப்படவில்லையே? அவனுக்கு என்ன திமிரு?” என்று தமக்குள் பரமசிவம் பிள்ளையைக் கறுவிக் கொண்டிருந்தான் பூமாலையின் தம்பி.
போலீஸ் இன்ஸ்பெக்டரும் இரண்டு மூன்று கான்ஸ்டபிள்களும் அமைதியாகக் குடிசை வாயிலுக்கு வந்தனர். திண்ணையில் சுருண்டு கிடந்த பூமாலையை அவன் துங்குவதாக எண்ணிக் கொண்டு கைத்தடியினால் தட்டினான் ஒரு கான்ஸ்டபிள். முழித்துக்கொண்டிருந்த பூமாலை துள்ளி எழுந்தான். இன்ஸ்பெக்டர் அவனை அருகில் வருமாறு சைகை காட்டி அழைத்துக்கொண்டு போனார். அவனிடம் விஷயத்தைக் கூறினால் அவன் ஏதாவது குழப்பம் விளைவிப்பான் என்று எண்ணியே அவர் இப்படிச் செய்தார்.
“என்னை எங்கே கூட்டிக்கிட்டுப் போறீங்க? நான் ஒண்ணும் தப்புத் தண்டாச் செய்யலிங்களே? குழந்தையையும் மனைவியையும் பறிகொடுத்திட்டுச் சாக மாட்டாமல் இருக்கிறவனை நீங்க வேறே.”
"ஏய் பூமாலைபேசாமல்வரமாட்டே? இப்போ நீ ஜெயிலுக்குப் போகும்படியான நிலை உனக்கு வந்திருக்கு அதிலிருந்து நீ தப்ப வேண்டுமானால் நான் சொல்கிறபடி ஒழுங்காகச் செய்து விடு”“ஐயையோ! அப்படி நான் என்னங்க செய்தேன்? ஒரு பாவமும் தெரியாதுங்களே!” என்று அழுதான் அவன்.
“புளுகாதே, அப்பனே! நேற்று சங்கு குளிக்கிறபோது ஒரு வலம்புரிச் சங்கைக் கடலிலே போட்டுட்டே இல்லே? அதை இன்றைக்கு எடுத்துக் கொடுக்கலேன்னா ஜெயில்தான், அடிதான், உதைதான். ஆமாம், பார்த்துக்க."
“நான் அதை வேணும்னு போடலிங்களே? அதை எடுத்துக்கிட்டு வெளியிலே வந்தப்போ 'என் சம்சராம் பிரசவிச்சக் குழந்தையோடு செத்துப்போயிட்டாளுன்னும் தம்பி வந்து சொன்னாங்க. அந்த அதிர்ச்சியிலே அது தவறி விழுந்திடிச்சுங்க...”
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது! கண்டிராக்டர் பரமசிவம் பிள்ளை ‘ரிப்போர்ட்' பண்ணியிருக்காரு. நீ திரும்பக் குளிச்சு அதை எடுத்தாலொழிய உன்னை இலேசில் விட மாட்டோம்.”
இன்ஸ்பெக்டர் மிரட்டினார். கான்ஸ்டபிள்கள் பூமாலையைப் பிடித்து இழுத்தபடியே, அவன் ஒடிவிடாமல் ஜாக்கிரதையாகக் கொண்டு போனார்கள்.
துறையில் பரமசிவம் பிள்ளை ஆட்களோடும் படகுகளோடும் காத்துக் கொண்டிருந்தார். இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள் பூமாலையோடு வந்து சேர்ந்ததும் படகுகள் சங்கு குளிக்கும் இடத்துப் புறப்பட்டன.
முதல் நாள் வலம்புரிச் சங்கு விழுந்த இடத்துக்கு வந்ததும் படகுகள் அன்று போலவே வியூகமாக நிறுத்தப்பட்டன. இன்ஸ்பெக்டரும் பரமசிவம் பிள்ளையும் பூமாலையைத் தூண்டினர்.
“எசமான்! இப்பொழுது என் மனசு படுகிற சங்கடத்திலே என்னாலே தண்ணீருக்குள்ளே மூச்சு அடக்க முடியாதுங்க. இரண்டு நாளாகப் பட்டினி வேறே. இன்னைக்கு வேண்டாம். இன்னொரு நாள் பார்க்கலாமுங்க”
பூமாலை காலில் விழாத குறையாக அவர்களைக் கெஞ்சினான். ஆனால் அவர்கள் அவனை இறங்கித் தான் ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தனர். சல்லடமில்லை. பூமாலை அரை வேஷ்டியையே சல்லடம் மாதிரி வரிந்து கட்டிக்கொண்டான். எண்ணெய் படகில் இருந்தது. அதைத் தடவிக் கொண்டான். இன்னும் சிறிது நேரம் அவன் தாமதித்தால் அவர்களே பிடித்துத் தள்ளி விடுவார்கள் போல இருந்தது. மூச்சை அடக்கித் 'தம்' பிடித்துக் கொண்டு கடலில் குதித்தான்.
'வலம்புரிச் சங்கு கிடைத்து விடும்' என்று ஆவலோடு அவன் குதித்து மூழ்கிய இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் பரமசிவம் பிள்ளை.
கால் நாழிகை ஆயிற்று! அரை நாழிகை ஆயிற்று! அதற்கு மேலும் ஆயிற்று! பொறுமை இழந்த பிள்ளை வேறொரு ஆளையும் பூமாலையைப் பின்பற்றி அதே இடத்தில் குதிக்கச்சொன்னார். ஆள் குதித்தான். குதித்தவன் சீக்கிரமே எதையோ பற்றி இழுத்துக் கொண்டு மேலே வந்து விட்டான்.எல்லோருடைய கண்களும் ஆவலோடு கடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருள் என்னவென்று தேடின.
அவன் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தது வேறொன்றுமில்லை. பூமாலையின் பிணம் கான்ஸ்டபிள்கள் தண்ணீரில் இருந்தவனுக்கு உதவியாகக் கைகொடுத்துத் தூக்கினார்கள். பூமாலையின் சவம் படகுக்கு வந்தது.
என்ன ஆச்சரியம்! சவத்தின் வலது கையில் அந்த வலம்புரிச் சங்கு இறுகப் பிடித்துக் கொள்ளப்பட்டிருந்தது!
போலீஸ் இன்ஸ்பெக்டரும் பரமசிவம் பிள்ளையும் தங்களையும் மறந்து 'ஆ' வென்று அதிசயத்தால் கூவினர்!
"சங்கை எடுத்துக் கொண்டு வருகிறபோது மூச்சுத் தாங்காமல் இறந்திருக்கணுமுங்க” மற்றவன் முணுமுணுத்தான். பரமசிவம் பிள்ளை பிணத்தின் வலது கையிலிருந்து சிரமப் பட்டு அதைப் பிரித்து எடுத்தார்.
பூமாலை இறந்ததைப்பற்றிய நினைப்பே பரம்சிவம் பிள்ளையின் மனத்தை விட்டு மறைந்தது. சரித்திரப் புகழ் பெற்றதும் பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றக் கூடிய அபூர்வப் பொருளுமான வலம்புரிச் சங்கைப் பார்த்ததும் அவர் மெய் மறந்து போனார். இத்தகைய தெய்வீக மதிப்பு வாய்ந்த வலம்புரிச் சங்கு யாருக்கேனும் எளிதில் கிடைத்துவிடுமா? ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த நல்வினையின் பயனால் கண்டிராக்டர் பரமசிவம் பிள்ளைக்கு அது கிட்டியது. அதுவும் அந்த வலம்புரிச்சங்கு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி இருந்தது. அவருக்கு எதிர்பாராமல் கிடைத்தது ஒன்று; ஒருமுறை கிடைத்துக் கைநழுவிப் போன பொருள் மாண்டவன் மீண்டது போல மீண்டும் அவரது சாகசத்தினால் கிடைத்தது. ஆக இரண்டு. இந்த மகிழ்ச்சி மிகுதியில் அவர் திணறியதில் வியப்பு என்ன இருக்கிறது?
வலம்புரிச் சங்கு அற்புதமாகத்தான் இருந்தது. "லக்ஷக்கணக்கிலென்ன? கோடி ரூபாய் கூடப் பெறும் இது!” என்றார் இன்ஸ்பெக்டர். வலம்புரிச் சங்கை வைத்திருப்பவர்களுக்கு அஷ்டஐசுவரியமும் பெருகுமென்கிறார்களே? அது நிஜம் தானா? நிஜமானால் அந்தப் பாவி பூமாலை ஏன் மூச்சுத் திணறிப் போய் இறந்தான்? அதைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்க யாருக்கும் அவகாசம் இருக்கவில்லை.!
- ↑ கல்கி சிறுகதைப் போட்டிப் பரிசு பெற்றது.