நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/வீதியில் ஒரு வினா
50. வீதியில் ஒரு வினா!
அந்தக் கலகலப்பான வீதியின் ஒளிமயமான பகுதிகளில் வழக்கமாக நாள் தவறாமல் தென்படுகிற காட்சிதான் அது கிழக்கே வீதி முடிகிற இடத்தில் உயரமான கோவில் கோபுரம், தெற்குப் பக்கம் இன்றைய சமூகத்தின் கோவிலான மாபெரும் சினிமாக் கொட்டகை, இருபுறமும் கலகலப்பான கடைகள். என்னுடைய புத்தகக் கடையும் அந்த வீதியில்தான் இருந்தது. ‘கண்ணகி புத்தக நிலையம் - உயர்தரமான இலக்கிய நூல்கள் யாவும் கிடைக்கும்’ என்று வெளியே எனாமல் போர்டு மாட்டிக் கொண்டு உள்ளே ஈ ஓட்டுகிறேனே! தெரியவில்லையா? தொலைகிறது; விடுங்கள்! அதோ என் கடைக்கு எதிர்த்தாற் போல் ஒரு மிலிடரி ஓட்டல். உள்ளேயும், வெளியேயும் கூட்டம் பொங்கி வழிகிறது. ஊரெல்லாம் கேட்கும்படி இந்தி இசைத் தட்டு முழங்குகிறது. நாள் ஒன்றுக்கு எப்படியும் எழுநூறு, எண்ணுாறு ரூபாய் வியாபாரத்துக்குக் குறையாது. மிலிடரி ஒட்டல் ஐயா, மிலிடரி ஒட்டல்: ஈ ஒட்டுவதற்கு அதுவும் இலக்கியப் புத்தகக் கடையா என்ன? சுதந்தர பாரதத்தில் அறிவை வளர்த்து விட்டோம், கல்வியைக் கரை காணச் செய்து விட்டோம். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்து விட்டோம். வீதி தோறும் கலைக் கோயில், வீடு தோறும் புத்தக சாலை - என்றெல்லாம் மேடையிலே நாக்கு நீட்டிப் பேசுகிற மேதாவிகளை என்னுடைய கண்ணகி புத்தக நிலையத்துக்கு மட்டும் ஒரே ஒரு நாள் வந்து உட்காரச் சொல்லுங்கள். நாலைந்து மணி நேரத்தில் சுதந்திர பாரதத்தில் என்ன வளர்ந்திருக்கிறதென்று பாடம் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறேன். என்ன முறைக்கிறீர்கள்? முறைக்காதீர் ஐயா! நான் உள்ளதைச் சொல்லுகிறவன்.
மிலிட்டரி ஒட்டலும், சலூனும், மூலைக்கு மூலை ஒலி பெருக்கிக் கடையும் தெருவுக்கு நாலு கட்சிகளும் தவிர ஒரு வெங்காயமும் வளர்ந்ததாகத் தெரியவில்லை. முன்னால் ஆண்கள் தாம் பிச்சைக்கு வந்து தெருவில் அலைந்து கொண்டிருந்தார்கள். இப்போது இளம் பெண்கள், குழந்தைகள் எல்லோரும் தெருவில் கந்தல் புடவையும், கிழிசல் துணியும், எண்ணெய் வறண்ட பரட்டைத் தலையுமாகப் பிச்சைக்கு வருகிற அளவு வளர்ந்திருக்கிறது. எந்தெந்தத் தொழிலையோ வளர்த்து விட்டதாக மேடையிலே மார் தட்டுகிறீரே பிச்சைக்காரத் தொழில் நீர் வளர்க்காமலே எத்தனை அமோகமாக வளர்ந்திருக்கிறது பார்த்தீரா? ஏன் ஐயா தலை குனிகிறீர்? குனியாதீர்! நிமிர்ந்து நின்று, ‘பாரத தேசமென்று தோள் கொட்டிப் பூரித்துப் பெருமைப் படுங்கள்!’
'உமக்கு எதற்கு ஐயா இந்த வம்பெல்லாம்? கடையைக் கவனித்துக் கொண்டு பேசாமலிரும்' என்கிறீரா?செய்யலாம்! ஆனால் இந்தக் கடைப் பக்கமாக யாராவது திரும்பிக் கவனித்தால்தானே நான் வியாபாரத்தைக் கவனிக்கலாம். வருகிற பயல்களெல்லாம், முதலில் எதிரே இருக்கிற மிலிட்டரி ஒட்டலில்தான் நுழைகிறான்.அப்புறம் பக்கத்தில் இருக்கிற சுகானந்தா பீடா ஸ்டாலில் போய் ஸ்பெஷல் பீடா வாங்கி வாயில் அடக்கிக் கொண்டு திரும்பிப் பாராமலே நடையைக் கட்டி விடுகிறானே, ஐயா! பேரைப் பார் பேரை, சுகானந்தா பீடாவாம். இன்று இந்த தேசத்திலே சுகமும், ஆனந்தமும் இவன் பீடா ஸ்டாலிலேதான் மீதம் இருக்கிற மாதிரி நினைப்பு. பீடாக்கடை வீராசாமி என்ன இருந்தாலும் கெட்டிக்காரன். பயல் பீடாவுக்கு வெற்றிலை சுருட்டுகிறபோது ஆளையே சுருட்டிக் கைக்குள் போட்டுக் கொள்கிற சாமர்த்தியக்காரன். எப்படியோ இவனும், தினமும் பதினைந்து, இருபது ரூபாய்க்கு வியாபாரம் பண்ணிவிடுகிறான்.
தெருவுக்கே திருஷ்டி பரிகாரம்போல், என் இலக்கியப் புத்தகக்கடைதான் இருக்கிறதே ஈயோட்டுவதற்கு இதோ மேல்வரிசையில் திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை. நூறு பிரதிகளும் அப்படியே இக்கின்றனவே. இணையற்ற இலக்கிய நூல்தான் யாராவது கேட்டு வாங்கிக் கொண்டு போகிறானா?
தப்பித் தவறி எவனாவது படியேறிக் கடைக்குள் வந்தால், “கொக்கோகம் மலிவுப் பதிப்பு இருக்குதுங்களா?” என்று வாய் கூசாமல் கேட்கிறான்.
“அதெல்லாம் இங்கே வைத்து விற்கிறது இல்லை” என்றால் முகத்தைச் சுளித்து ஒரு தினுசாகப் பார்த்துவிட்டுப் போகிறான். போகட்டுமே! கண்ணகி புத்தக நிலையத்தில் நுழைந்து நாக்குமேலே பல்லைப் போட்டு இவன் எப்படிக் கேட்கலாம் இந்தக் கேள்வியை?
ஏண்டா டேய் உன்னைப் போல் வெறும் பயல்களை நம்பியா திரு.வி.க எழுதி வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்? நீ போ! உன் வியாபாரம் வேண்டாம் தெய்வம்டா அவரு மறுபடியும் சிறிது நேரம் ஈயோட்டுகிறேன்.
அதோ, கிழிசல் பாவாடையும் பலாச்சுளைகளைக் கந்தல் துணியால் மூடினாற்போல் நடுநடுவே கந்தலின் வழி முதுகும், தோளும், பொன்னிறந் தெரிய சட்டையுமாக ஏழெட்டு வயதுச் சிறுமி பீடா ஸ்டால் வாசலில் பிச்சைக்கு நிற்கிறாள். அந்தச் சிறுமிக்குப் பக்கத்திலே சிறிது தொலைவில் அதே கந்தல் கோலத்தில் அவளை அத்தொழிலுக்கு அனுப்பியிருக்கும் அவள் தாய் இன்னொரு கைக்குழந்தையோடு ஒதுங்கி நிற்கிறாள். அவளே முன்வந்து கை நீட்டலாம்!. ஆனால் இப்போது அது "ஃபேஷன்' இல்லை. சிறு வயதாக இருந்தால்தான் பார்க்கிறவர்கள் மனம் உடனே உருகும். பிஸினஸ் ஐயா! நேரடியாகக் கவனிப்பதை விட 'சப் ஏஜண்ட்ஸ்' வைத்துக் கவனித்தால் இலாபம் அதிகம். இல்லையா? உமக்குத்தான் தெரியுமே சுகானந்தா பீடா ஸ்டால் பக்கம் வருகிற ஒவ்வொரு ஆளிடமும் அந்தச் சிறுமி பின் தொடர்ந்து ஒடிப்போய்க் கை நீட்டுகிறாள். சிரிக்கிறாள்; கெஞ்சுகிறாள். சிறுமிக்கு எலுமிச்சம்பழ நிறம் களையான முகம்! மூக்கு முழி, பல் வரிசை, எல்லாமே அழகாக வாய்த்துத் தொலைத்திருக்கிறது. சாதாரணமாக இப்படிப் பிச்சைக்கு வருகிற சிறுமிகளிடம் வழக்கமாக இல்லாத அழகாயிருந்தது அது!
அதிகம் வயதானவர்களை 'சார், சார்' என்றும், இளைஞர்களை, 'அண்ணா, அண்ணா' என்றும் உறவு கொண்டாடிப் பிச்சை கேட்கிறாள் சிறுமி. வழக்கமாகத் தினம் பார்க்கிற காட்சிதான். சிலர் காசு கொடுத்துவிட்டுப் போனார்கள். சிலர் பேசாமல் போனார்கள். சிறுமி பூப்பந்தாகத் துள்ளியும் ஒடியும், நடந்தும், காசு சேர்த்துக் கொண்டிருந்தாள்.வீதியில் நல்ல கூட்டநேரம்.கண்ணகி புத்தகநிலையத்தில் எவ்வளவு நேரம்தான் ஈ ஒட்டும் தொழிலைப் பொறுமையாகச் செய்து கொண்டிருக்க முடியும்?
மிலிடரி ஒட்டலில் சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கிறது! சுகானந்தா பீடா ஸ்டாலில் வெற்றியும், காசும், சுருட்டப்படுகிறது. பிச்சைக்காரச் சிறுமி தள்ளி நிற்கும் தாயின் முகம் மலரத் தன் சாமர்த்தியத்தைக் காட்டி 'அண்ணா, அண்ணா' என்று கெஞ்சிக் காசு சேர்த்துக்கொண்டிருக்கிறாள். 'பாரத நாட்டு மாதர் திலகங்கள்' என்று அன்றைக்குத்தான் ஒரு சிறந்த நூல் கடைக்கு வந்திருந்தது. அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.
“என்னைப் பெற்றவள் மட்டும் தாய் அல்லள். இந்தப் புண்ணிய பூமியில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் என் தாய்! என்னோடு பிறந்தவள் மட்டும் சகோதரி அல்லள். இந்தப் புண்ணிய பூமியில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் என் சகோதரி. எந்தப் பெண்ணுக்கு இழிவு நேர்ந்தாலும் அந்த இழிவில் ஒரு பங்கு என் தாய்க்கும், என் சகோதரிக்கும் வருகிறது.” என்று நூலின் முன்னுரையில் உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருந்தார் துறவியாகிய அந் நூலாசிரியர்.
நான் மனம் தோய்ந்து உணர்வுகள் தோய்ந்து கோவிலில் தெய்வச் சிலைக்கு மிக அருகில் நிற்கிறாற் போன்ற மெய்சிலிர்ப்புடன் இந்தப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தேன்.
"அண்ணா! அண்ணா! நான் அனாதை அண்ணா - உதவி செய்யுங்கள்!” - அட்டகாசமாகச் சிரிப்பும், கும்மாளமுமாய் பீடா ஸ்டாலுக்கு வந்த நாலைந்து வாலிபர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் சிறுமி என் கடைவாசலில் யாரோ வந்து ஏதோ கேட்கவே, நான் 'பாரத நாட்டு மாதர் திலகங்களை' மூடி வைத்துவிட்டு நிமிர்ந்தேன்.
"இல்லற இன்ப ரகசியங்கள் இருக்குதா சார்?”
"இல்லை! திரு.வி.க. எழுதிய பெண்ணின் பெருமை இருக்குது. வேணுமா? அருமையாயிருக்கும்.”
“வேண்டாங்க நமக்கு அதெல்லாம் புரியாது” கேட்டு வந்தவர் போய்விட்டார்.
பீடாஸ்டால் வாயிலில் காளையர் சிரிப்பு இன்னும் ஒய்ந்தபாடில்லை. சிறுமியின் 'அண்ணா'க் கூப்பாடும் நிற்கவில்லை; காளையர் குழுவில் மைனர்போல் தோற்றமளித்த ஒரு இளைஞன் உலகத்திலுள்ள ஈனத்தனமெல்லாம் சேர்த்துச் சிரிப்பதுபோல் அசிங்கமாகச் சிரித்துக்கொண்டே அந்தப் பிச்சைக்காரச் சிறுமியைப் பார்த்துக் கேட்கிறான். இப்படியும் கேட்கத் தோன்றுமா ஒரு கேள்வி? தூ மானங் கெட்ட பயல்கள்!
“இதோ பாரு பாப்பா இப்போ உனக்கு வயது பத்தாதும்மா இன்னும் அஞ்சாறு வயது கழிச்சு வா நானே காசு கொடுத்து உன்னைக் கூப்பிடுகிறேன். 'பெர்ஸானாலிட்டி இன்னும் இம்ப்ரூவ்” ஆகணும் பாரு! ஆனப்புறம் வர்ரியா தங்கம்?”
மனம் கூசாமல், வாய் கூசாமல் வீதி நிறைய ஒலிக்கும்படி இப்படிக் கேட்கிறான். சுற்றி நிற்கிறவர்கள் ஆர்ப்பாட்டமாக நகைக்கிறார்கள். பீடாக் கடைக்கார வீராசாமி இது கேட்டுச் சுகானந்தமாக இளநகை பூக்கிறான். சிறுமி விழிக்கிறாள். அவளுக்கு அவன் கேள்வி விளங்கவில்லை. தள்ளி நின்ற தாய்க்காரி வெட்கித் தலைகுனிகிறாள். அவளுக்கு விளங்குகிறது. ஆனால் பேச வாயில்லை. வக்கும் இல்லை. ஓடிவந்து இப்படிக் கேட்டவன் முகத்தில் 'தூ' என்று காறித்துப்பத் திராணியில்லை. தாயாக இருந்தும் கோழையாக நிற்கிறாள் அவள் வயிறு ஐயா! வயிறு இருக்கிறதே சிறுமிக்கு இளைஞர்களை எல்லாம் அண்ணாவாக உறவாட முடிகிறது. ஆனால்...? வீதி நிறைய அசிங்கம் பெய்த மாதிரி இந்தக் கேள்வி ஒலித்தபோதே உலகம் சர்வநாசமாகியிருக்க வேண்டும்போல் எனக்கு மனம் கிடந்து துடிக்கிறது. சிறிது நேரத்துக்கு முன் பாரத நாட்டு மாதர் திலகங்களின் முன்னுரையில் என்ன படித்தேன்? என்ன உணர்ந்தேன்? எதற்காக மெய்சிலிர்த்தேன்?
என்னுடைய புத்தகக் கடையில் மட்டுமில்லை ஐயா! வாழ்க்கையிலேயே 'பெண்ணின் பெருமை' விலை போகவில்லை. இந்த அகன்ற வீதியில் இந்த ஆபாசக் கேள்வி ஒலித்தபோது ஆண்களும் பெண்களுமாக எத்தனை தமிழ்ச் சகோதர சகோதரிகள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்? அத்தனை பேர் உடம்பிலும் இரத்தம் ஒடியதா? ஐஸ்வாட்டர் ஒடியதா? யாரைக் கேட்டால் என்ன? கேள்வி எவ்வளவு ஆபாசமானது? வீதியில் வினாவ வேண்டிய வினாவா இது? நான் ஒடிப்போய் அந்தப் பயலை அறையலாம். அறைய விடுவார்களா?
என்ன வேய்? சிரிக்கிறீர்! சிரியும் ஐயா, நன்றாகச் சிரியும். ‘பாரத தேசமென்று தோள் கொட்டிச் சிரியும் வெட்கங் கெட்டநாட்டில் வேறென்ன செய்ய முடியும்?