உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/இது பொது வழி அல்ல

விக்கிமூலம் இலிருந்து

128. ‘இது பொது வழி அல்ல’

ண்ணப்ப முதலியார் கார்ப்பரேஷன் தேர்தலுக்கு நிற்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்தத் தொகுதியில் கடந்த இருபது வருஷங்களுக்கும் மேலாக அவர் செல்வாக்கும் புகழும் பெற்றிருந்தும் கூட முந்திய தேர்தல்களில் நின்றதில்லை. தொகுதியிலுள்ள பல காலி மனைகளுக்கும், வீடுகளுக்கும் சொந்தக்காரர் அவர். அவரிடம் குடக்கூலிக்கு இருப்பவர்களும், அவருக்குச் சொந்தமான மனைகளில் குடிசைகள் போட்டுக் குடியிருப்பவர்களும் ஓட்டுப் போட்டாலே போதும். இந்த மாபெரும் வசதி இருந்தும் கடந்த பல ஆண்டுகளில் அவர் ஏன் தேர்தலுக்கு நிற்கவில்லை என்பதும், இந்த ஆண்டில் திடீரென்று ஏன் நிற்கிறார் என்பதும் சேர்ந்தே பலருக்கு வியப்பாயிருந்தது. அதுவும் எந்தக் கட்சிச் சார்பும் அற்ற சுயேச்சை வேட்பாளராக இப்போது அவர் நிற்கிறார். பூட்டுச்சின்னம் வேண்டுமென்று கேட்டுப் பெற்றிருந்தார் அவர்.

அதனால் ‘பூட்டுக்கு வோட்டு’ - என்று எதுகை நயத்தோடு அழகாக கோஷம் போட்டு ஓட்டுக் கேட்க வசதியாயிருந்தது. வேறு தேர்தல் சின்னம் பெற்றிருந்தால், இப்படி எதுகை நயத்தோடு ஓட்டுக் கேட்க முடியுமோ, முடியாதோ? பூட்டுக் கிடைத்ததே நல்லதாய்ப் போயிற்று. ‘பூட்டுக்குவோட்டு’ என்று.அவருடைய ஆட்கள் எதுகை நயத்தோடு கூறியதையே எதிர்த் தரப்பினர் காலை ஒடித்து விட்டு ‘பூட்டுக்கு வேட்டு’ - என்று கிண்டல் செய்து வந்தனர். அவருடைய ஆட்கள் சுவரில் எழுதியவற்றிலும், ஒட்டியவற்றிலும் பூட்டுக்கு வோட்டு - என்பதில் காலை அழித்து. வேட்டு வைப்பதிலும் எதிர்த் தரப்பு அக்கறை காட்டியது. கண்ணப்ப முதலியார் தேர்தலுக்கு நின்றதற்குக் காரணம் கடந்த பல ஆண்டுகளாய் அந்தத் தொகுதியின் கவுன்சிலராய் இருக்கும் முனிவேலனோடு அவருக்கு ஏற்பட்ட ஒரு தகராறுதான் என்று சிலர் சொல்லுகிறார்கள். கவுன்சிலரான சில ஆண்டுகளிலேயே முனிவேலன் பத்து டாக்ஸி, ஒரு பங்களா, செம்பரம்பாக்கத்தில் இருபது ஏக்கர் சவுக்குத் தோப்பு ஆகிவற்றுக்கு அதிபதி ஆகிவிட்டதைப் பார்த்து முதலியாருக்கும் நைப்பாசை தட்டியிருக்க வேண்டும் என்று சிலர் வம்படியாகவும் சொல்லுகிறார்கள். எது காரணமாயிருந்தாலும் அவர் நிற்கிறார் என்பது உறுதியாகி விட்டது. அதில் சந்தேகமில்லை. ஜெயிப்பார் என்பதிலும் சந்தேகமில்லை என்றுதான் கூற வேண்டும்.

போட்டியும், நேரடிப் போட்டிதான். அவருக்கும், முனிவேலனுக்கும் ‘ஸ்டிரெயிட் கண்டெஸ்ட்’. முனிவேலன் தேர்தலுக்குச் செலவு செய்யவில்லை. வரவைப் பற்றித்தான் எப்போதுமே அவனுக்குக் கவலை. செலவு செய்ய அவனுக்குத் தெரியாது. செலவு செய்யவும் பிடிக்காது. அதனால் முதலியார் நிச்சயம் வந்து விட முடியும் என்றே எல்லாரும் நம்பினார்கள். தவிர முனிவேலன் கவுன்சிலர் பதவியை வைத்து நிறைய பணம் பண்ணி விட்டதாக ஒரு கெட்ட பெயர் இருந்ததால், அவனுக்கு இந்தத் தடவை ஓட்டு விழாது என்றும் பேசிக் கொண்டார்கள்.அது ஒரளவு உண்மையாகவும் இருந்தது.

முதலியார் தேர்தலுக்காக நிறையவே செலவு செய்தார். அவருடைய பங்களாவுக்குப் பின்னால் ஒரு பெரிய குடிசைப் பகுதி. அதில் மட்டும் மொத்தம் ஆறாயிரம் ஓட்டு இருந்தது. அவ்வளவும் அவருக்குத்தான் விழும் என்று நம்ப முடிந்த ஓட்டுக்கள். மற்ற இடங்களிலும் நிலைமை சாதகமாகவே இருப்பதாய்த் தெரிந்தது. ஒரு கெட்டவனை எதிர்த்து நல்லவர் ஜெயிக்க வேண்டியது நியாயமாகவும் இருந்தது. முதலியார் தோற்கக் காரணமே இல்லை என்பதும், முதலியாரை எதிர்க்கும் முனிவேலன் ஜெயிக்கக் காரணமே இல்லை என்பதும் தெளிவாகத் தெரியத் தொடங்கி விட்டன. முதலியாருடைய ஒழுக்கமும், தர்ம சிந்தையும் நிச்சயமாக வெற்றி பெறும் என்றாகி விட்டது. இருந்த போதிலும், நம்பிக்கை போய் விடாமல் முனிவேலனும் அலைந்து கொண்டிருந்தான். அதிகம் செலவு செய்யாமல் சும்மா அலைந்து கொண்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன் முதலியாரும், முனிவேலனும் தற்செயலாக ஒரு தெருவில் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது.அவன் அவருக்குப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டான். தோல்வி அடையப் போகிறவனுடைய கும்பிடு மாதிரித் தெரியவில்லை அது. பேச்சும் சிரிப்புமாக இருவரும் எதிரிகள் போல் அன்றி, நண்பர்கள் போலவே சந்தித்துக் கொண்டார்கள். திடீரென்று சிரித்துக் கொண்டே முதலியாருக்கு ஒரு சவால் விடத் தொடங்கினான் முனிவேலன்.

“முதலியாரே! நீங்க ஜெயிக்க மாட்டீங்க... பாவம்! அநாவசியமாப் பணத்தைத் தண்ணியாச் செலவு செய்யறீங்க ரெண்டு கலர்லே ஆயிரக் கணக்கான போஸ்டர் ஒட்டியிருக்கீங்க. நான் போஸ்டரே ஒட்டலை, ஆனா ஒங்களோட ஆயிரக் கணக்கான போஸ்டரினாலே விளையற லாபத்தை, ஒரே ஒரு சின்ன போர்டு எழுதி வச்சு நான் தட்டிக்கிட்டுப் போயிட முடியும்.”

“முடிஞ்சா செய்யேன்! உன்னைப் போலப் பணம் பறிக்கிற ஆள் இனிமே இந்தத் தொகுதியிலே ஜெயிக்கலாம்னு கனவுகூடக் காணமுடியாது.”

“யார் சொன்னாங்க அப்பிடி? என்னைப் போல இருக்கறவங்கதான் வர முடியும். வந்துக்கிட்டும் இருக்காங்க. உம்மைப் போல நல்லவனா இருக்கறவங்க வேணா வர முடியாமப் போகலாம். இப்ப நான் சொல்றதை அப்பிடியே எழுதி வச்சிக்குங்க முதலியாரே! நான்தான் ஜெயிக்கிறேன். நீர் தோற்கிறீரு…”

“பார்க்கலாமே…”

முதலியாருக்குச் சிரிப்புத்தான் வந்தது. முனிவேலனின் ‘மனோபொலி'யை உடைக்கவே அந்தத் தடவை அவர் போட்டியிட்டார். இப்போது அவன் ஜம்பம் பேசியது வேறு, அவர் ஆத்திரத்தை அதிகமாகக் கிளறிவிட்டது.

பங்களாவுக்குப் பின்புறமுள்ள குடிசைப் பகுதி ஓட்டு ஆறாயிரமும் யாருக்குக் கிடைக்குமோ அவர்கள் தான் அந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியும் என்பது ஊரறிந்த உண்மை. அந்த ஆறாயிரம் ஓட்டும் தமக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை முதலியாருக்கு வந்து விட்டது. முனிவேலன், ‘ஒரே ஒரு போர்டு எழுதி வைத்து அவ்வளவு ஓட்டையும் தன் பக்கம் திருப்பி விட முடியும்’ என்று ஏதோ சொல்லி விட்டுப் போனானே, அதுதான் என்னவென்று அவருக்குப் புரியவில்லை. புரியாததற்காக அவர் கவலைப்படவும் இல்லை. அவருடைய பங்களா இருந்த அதே வரிசையில் தென் கோடியில் மெயின் ரோட்டையும் குடிசைப் பகுதியையும் இணைக்கும் காலி மனை ஒன்றிருந்தது. அந்த மனை முதலியாருக்குச் சொந்தமானது. அதன் வழியாகத்தான் குடிசைப் பகுதிக்குள் போகவும், வரவும் பாதை ஏற்பட்டிருந்தது. முதலியார் தம்முடைய அந்தக் காலி மனையை ஒரு முள் வேலி எடுத்துத் தடுத்திருந்தால், குடிசைப் பகுதியினர் இரண்டு பர்லாங் தூரம் சுற்று வழியாக நடந்துதான் மெயின் ரோடுக்கு வரவும், போகவும் நேரிடும். குடிசைப் பகுதியினரின் நன்மையை உத்தேசித்து அவர் அந்த மனைக்கு வேலியெடுக்காமல் விட்டிருந்தார். தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன் அந்தக் காலி மனையில் மாபெரும் பந்தல் போட்டு ஏழைகளுக்கு உணவும், பெண்களுக்கு ரவிக்கைத் துண்டு, மஞ்சள்கிழங்கும், குடிசைப்பகுதிக் குழந்தைகளுக்கு சிலேட்டு பென்ஸிலும் வழங்க ஏற்பாடு செய்த போது கூட ‘ஸ்லம் ஓட்டு முழுவதும் தமக்கே’ என்று உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார் முதலியார். ஜனங்கள் அவரிடம் அவ்வளவு விசுவாசமாயிருந்தார்கள். ‘இந்த விசுவாசத்தை முனிவேலனோ, இன்னொருவரோ அவ்வளவு சுலபமாக மாற்றி விட முடியாதே? ஒரு நல்லவனைத் தோற்கச் செய்வதென்பது அவ்வளவு எளிதாக நடந்து விட முடியாதே? முனிவேலன் கை நிறைய வாங்கி, வாங்கியே பங்களாவும், டாக்ஸிகளுமாகப் பணக்காரனாகி விட்டான். அவனுக்கு ஓட்டுப் போட்டவர்கள் லாபமடையவில்லை. அவன் லாபமடைந்து விட்டான். என்னைப் போல் பரம்பரையாக வசதியுள்ளவன் ஜெயித்தால் ஜனங்களிடம் கை நீட்டி வாங்கும் ஈனத்தனமான காரியத்தைச் செய்து விடப் போவதில்லை. பரம்பரைப் பண்பாடே கையை நீள விடாமல் தடுக்கும்’ என்று பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார் முதலியார். வெற்றியைப் பற்றி அவருக்கு எள்ளளவு சந்தேகமும் கூட இருக்கவில்லை.

ஒரு வழியாகத் தேர்தல் நாள் நெருங்கியது. காலி மனையில் போட்ட பந்தல், சாப்பாடு, இரவிக்கைத் துண்டு - சிலேட் பென்ஸில் வகையிலேயே பதினையாயிரம் ரூபாய்க்கு மேல் முதலியாருக்குச் செலவாகி விட்டது.பந்தலைப் பிரித்து விட்டுச் சற்று முன்புதான் காண்ட்ராக்டர் கணக்குப் பார்த்துப் பணம் வாங்கிக் கொண்டு போனான். அவருடைய சொத்துக்கு இது ஒரு செலவே இல்லை.

முதலியார் பக்திமான். காந்தியடிகள் மேல் அபார நம்பிக்கை கொண்டவர். புத்தரைப் போல், சங்கரரைப் போல் காந்தியடிகளையும் அவதாரமாக மதிக்கிறவர். தேர்தலுக்காகச் செலவு செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், முனிவேலனின் லஞ்ச ஏகாதிபத்தியத்திலிருந்து அப்பாவி ஏழை ஜனங்களை எப்படியும் விடுவிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் செலவும் செய்துவிடத் துணிந்தார். முனிவேலன் ரொம்பவும் சிக்கனமாக இருந்த அதே சமயத்தில், செலவு செய்வதால் தம் சொத்துக் கரைந்து போகுமே என்றும் அவர் வருந்தவில்லை. ‘ஜனங்களைப் பணத்தினால் மருட்டுவது பாவம்’- என்று கருதியே அவர் நாணினார். கஞ்சத்தனம் அவர் குடும்பத்துக்கே தெரியாத வார்த்தை. பல ஊர்க் கோவில்களில் ‘கருணாகர முதலியார் கட்டளை’ என்று அவர் தாத்தா ஏற்படுத்திய கட்டளைகளும், தந்தையார் செய்தளித்த வெள்ளித் தேர்களும் இன்னும் நடை பெற்றுப் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் எல்லாமே கொடுத்துக் கொடுத்து வளர்ந்தவையே தவிரக் கொடுக்காததனால் தேங்கியவையல்ல. முனிவேலனின் புதுப்பணம் வாங்கி வாங்கிச் சேர்த்தது என்றால் முதலியாரின் பரம்பரைப் பணம் கொடுத்துக் கொடுத்து வளர்ந்ததாகும். வாங்கிச் சேர்த்த சொத்துக்கும் கொடுத்துப் பெருகிய சொத்துக்கும் எவ்வளவு வித்தியாசமிருந்தது?

தேர்தல் நாள் வந்தது. முதலியாருக்காக அறுபது கார்கள், இருபது டாக்ஸிகள், பல ரிக்‌ஷாக்கள் எல்லாம் வேலை செய்தன. முதலியார் வெளியே போய்த் தாம் ஓட்டுப் போட்டது தவிர எங்கும் அலையவில்லை. நம்பிக்கையோடு வீட்டிலேயே இருந்து விட்டார். முனிவேலனுக்காக அதிகம் ஆட்களோ, வாகனங்களோ வேலை செய்யவில்லை. முதலியாரின் ஆட்கள் பம்பரமாய் அலைந்தனர்.

மாலை நாலே முக்கால் மணிக்குப் ‘போலிங்’ முடிவதற்கு ஓர் அரை மணியோ, கால் மணியோ, இருக்கும் போது முதலியாருடைய தம்பி மகன் அவசரமாய் ஓடி வந்து பரபரப்பாக ஒரு செய்தியைச் சொன்னான் :

“ஏன் பெரியப்பா இப்படிப் பண்ணினீங்க? அவ்வளவு காரியத்தையும் தலை கீழாக்கிக் கெடுத்துப் புட்டீங்களே? ராத்திரியோட ராத்திரியா அந்த வேலியைப் போட்டு, போர்டு மாட்டாட்டி இப்ப என்ன குடி முழுகிப்பிடும்னு அப்பிடிப் பண்ணினீங்க?”

முதலியாருக்கு அவன் என்ன கேட்கிறான் என்பதே முதலில் புரியவில்லை. திகைத்தார்.

“நீ என்ன சொல்றே! என்ன வேலி? என்ன போர்டு?”

“செய்யறதையும் செஞ்சுப்பிட்டு உடனே மறந்துட்டீங்களா? வாங்க என்னோட புரியும்படியாக் காண்பிக்கிறேன்” என்று அவரைத் தன்னோடு கூப்பிட்டான் தம்பி மகன். அவர் அவனோடு உடனே விரைந்தார்.

தெருவின் தென்கோடியில் இருந்த அவருக்குச் சொந்தமான காலி மனையைச் சுற்றி சவுக்குக் கட்டை நட்ட இரும்புமுள் கம்பியால் முற்றாக அடைத்திருந்தது.

‘ப்ராப்பர்ட்டி ஆஃப் கண்ணப்ப முதலியார். இது பொது வழி அல்ல. மீறி நடப்பவர்கள் போலீசார் வசம் ஒப்புவித்துத் தண்டிக்கப்படுவார்கள்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பெரிதாக ஒரு போர்டும் எல்லார் பார்வையிலும் படும்படியாக அந்த வேலியில் எழுதித் தொங்க விடப்பட்டிருந்தது.

“இது யார் செய்த வேலை?” - என்று கோபமாகத் தம்பி மகனைப் பார்த்து இரைந்தார் கண்ணப்ப முதலியார்.

“என்னைக் கேட்டா எப்பிடி? எனக்கென்ன தெரியும்? நானே இப்பத்தானே பார்த்தேன். நீங்கதான் எழுதி வச்சிருப்பீங்கன்னு நான் நினைச்சேன்”-என்றான் அவன். கோபத்தோடு போர்டைக் கழற்றி எறிந்து விட்டுக் கடிகாரத்தைப் பார்த்தார் முதலியார். மணி மாலை ஐந்து இருபத்தைந்து. போலிங் முடிந்து ஓட்டுப் பெட்டிகளை மூடிச் சீல் வைத்துக் கொண்டிருப்பார்கள். இனி ஒன்றுமே செய்ய முடியாது.

“ஓட்டுச் சாவடிக்குக் கூப்பிட்டப்பவே, ஸ்லம் ஆட்களில் சிலர் நம் தொண்டர்களைக் காரணமின்றி முறைத்தார்கள். காலையிலேருந்தே இப்படி நடந்தது. சிறிது நேரத்திற்கு முன் ஒருத்தனை ஓட்டுச் சாவடிக்குக் கூப்பிட்டப்ப “போய்யா முதல்லே போய் இன்னும் பெரிசா வேலி போட்டு வழியை அடை. நிறைய ஓட்டு விழும்” என்று அவன் பரிகாசமாகச் சொன்ன போதுதான் நானே இங்கே வந்து பார்த்து விட்டு உங்களிடம் ஓடி வந்தேன்” என்றான் முதலியாரின் தம்பி மகன்.

முதலியாருக்குப் புரிந்தது. ‘ஒரே ஒரு போர்டு எழுதி வச்சு உங்களை ஜெயிக்கிறேனா இல்லியா பாருங்க’ என்று முனிவேலன் அன்று தன்னிடம் சவால் விட்டது நினைவுக்கு வந்தது அவருக்கு அவசர அவசரமாக வீடு திரும்பி வக்கீலுக்கு ஃபோன் செய்தார் முதலியார்.

“இப்படி இரவோடு இரவாக ஒரு சதிபண்ணி அத்தனை ஜனங்களும் நான்தான் வேலி போட்டதாக நம்பச் செய்து காரியத்தைக் கெடுத்துவிட்டான். இதற்குக் ‘கேஸ்’ போடணும்.”

“கேஸ் போடறது சரி! முனிவேலன்தான் இதைச் செய்தான்கிறத்துக்குச் சரியான ஃப்ரூப் வேணுமே? அப்படி ஏதாவது இருக்கா? ‘போலிங்’ முடிஞ்சு பெட்டியை சீல் வச்சப்பறம் நீர் இனிமே என்ன பண்ணப் போறீர்? காலையிலேயே பார்த்திருந்தாலும் எலெக்‌ஷன் கமிஷனருக்குப் புகார் பண்ணியிருக்கலாம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி இப்ப என்ன பண்ண முடியும்?” என்றார் வக்கீல்.

அவர் சொல்வதில் தவறில்லை என்று பட்டது முதலியாருக்கு. தன்னிடமிருந்து எவ்வளவோ நன்மைகளை அடைந்திருந்தும், ஒரு சின்னக் குழப்பத்தில் குழம்பி விட்ட ஜனங்களின் அந்தத் திடீர் மாறுதலைதான் அவரால் நம்பவே முடியவில்லை. ப்ளாஸ்டிக் யுகத்தில் மக்களின் விசுவாசம் கூடச் சுலபமாக உடைய முடியும் போலிருந்தது; முப்பது வருஷமாகப் புரிந்து கொண்டிருந்த தம் நல்லெண்ணத்தையும், தர்ம சிந்தனையையும் ஒரே ஒரு போர்டு எழுதி வைத்து இரவோடு இரவாகக் கெடுத்தவனுடைய குறுக்கு வழி சாமர்த்தியம்தான் இன்றைய அரசியலுக்குத் தேவை போலிருக்கிறது. இன்றைய அரசியலில் ஒரு நல்லவன் ஜெயித்தான் என்பதுதான் ஆச்சரியமாக இருக்குமே ஒழியத் தோற்றான் என்பது ஆச்சரியமாக இராதென்றே தோன்றியது. ஒரு நல்லவன் நிச்சயமாகத் தோற்கத்தான் முடியும் என்ற ஆரோக்கியமற்ற அரசியல் களத்தில் அவர் நுழைந்திருக்கக் கூடாதுதான். நுழைந்ததற்குப் பயன் கை மேல் கிடைத்தது.

மறுநாள் மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முனிவேலன் ஐயாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அவரை ஜெயித்தான்.

அந்த வாரக் கடைசியில் தம்பி மகனைக் கூப்பிட்டுக் கீழ்க்கண்ட உத்தரவைக் கண்டிப்பாகப் பிறப்பித்தார் முதலியார்.

“நம்ம காலி மனையைச் சுற்றி நாலு பக்கமும் பெரிசாச் சுவரெடுத்து, நாலு பக்கமுமே ‘பிராபர்ட்டி ஆஃப் கண்ணப்ப முதலியார். இது பொது வழி அல்ல. மீறிப் பிரவேசிப்பவர்கள் கண்டிப்பாகப் போலீசார் வசம் ஒப்புவித்து தண்டிக்கப்படுவார்கள். டிரஸ் பாஸர்ஸ் வில் பீ பிராஸிகியூடட்’ என்று எழுதிடணும்.”

“அதான் வேலியும், போர்டும் ஏற்கனவே இருக்கே?”

“அந்த வேலியும், போர்டும் முனிவேலன் போட்டது. அதைப் பிரிச்சி அவன் வீட்டிலேயே கொண்டு போய்ப் போட்டுடு. ஊர் சொத்து நமக்கு வேணாம். இப்ப நாமே நமக்காகச் சுவரெடுக்கணும்.”

“ஜனங்க மனசு சங்கடப்படுமேன்னுதான் பார்க்கிறேன்?”

“நான் அப்படி முப்பது வருசமாப் பாத்தாச்சு; அதுக்கு எந்த விசுவாசமும் பதிலாகக் கிடைக்கலே, நான் வியாபாரி. லாபம் தராத ‘இன்வெஸ்மென்ட்’ இனிமே எதுக்கு?”

முதலியாரின் தம்பி மகன் பதில் பேசவில்லை. சுவரெடுக்க செங்கல் வருவதற்காக பிரிக் ஒர்க்ஸுக்கு ஃபோன் செய்யப் போனான். கண்ணப்ப முதலியார் புத்தக அலமாரியிலிருந்து தேவாரப் புத்தகத்தை எடுத்தார்.

(1978-க்கு முன்)