உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/உலகனூர் பஞ்சாயத்தில் ஒருமைப்பாட்டு விழா

விக்கிமூலம் இலிருந்து

130. உலகனூர் பஞ்சாயத்தில்
ஒருமைப்பாட்டு விழா

லோகல் அட்மினிஸ்டிரேஷன் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகளுக்காக அரசாங்கம் அனுப்பிய விசேஷ அவசர சர்க்குலர் ஒன்று அன்று பகல் ஒரு மணித் தபாலில் உலகனூர் பஞ்சாயத்து யூனியனுக்கு வந்து சேர்ந்தது.

காலையிலிருந்து கடும் தலைவலியோடு மேஜையின் மேல் கால்களைத் தூக்கிப் போட்டுக் கைக்குட்டையால் முகத்தை மூடியபடி தூங்கிக் கொண்டிருந்த கமிஷனர், அல்லது தூங்க முயன்று கொண்டிருந்த கமிஷனர் கண்ணாயிரம் அவர்களை எழுப்பி, அந்தக் கடிதத்தைக் கொடுத்தான், அட்டெண்டர் ஆரோக்கியசாமி. கண்ணாயிரம் அவன்மேல் ‘வள்’ளென்று எரிந்து விழுந்தார்.

“தூங்கற போது எழுப்பாதேன்னு உனக்கு எத்தினி வாட்டி சொல்றது?”

“ஏதோ சர்க்கார் கடிதாசி வந்திருக்குங்க. அதான் எழுப்பினேன்” என்று கூறிக் கொண்டே தலையைச் சொறிந்தான் ஆரோக்கியசாமி. அவன் ஏன் தலையைச் சொறிந்தான் என்று வாசகர்கள் கேட்டுப் பயனில்லை. பியூன் தலையைச் சொறிவது என்பது உலகத்தில் பியூன்கள் ஏற்பட்ட நாளிலிருந்து மரபாக இருந்து வருகிறது. உலகனூர் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் ஆரோக்கியசாமிக்கு அட்டெண்டர் வேலையென்று பெயர் இருந்தாலும், அவன் செய்து கொண்டிருந்தது என்னவோ பியூன் வேலைதான்.

கடிதத்தைப் பிரித்துப் படித்து விட்டு மீட்டிங் கிளார்க்கைக் கூப்பிட்டு, யூனியன் மெம்பர்களுக்கும் சேர்மனுக்கும் ஸர்க்குலர் அனுப்பச் சொன்னார் கமிஷனர்.

“ஸர்க்குலர் அனுப்பறது சரி. அஜென்டாவிலே என்னன்னு போடறது…?” என்று சந்தேகத்தைக் கிளப்பினார் மீட்டிங் கிளார்க் .

“தேசீய ஒருமைப்பாட்டு விழாவைக் கொண்டாடணுமாம், கவர்மெண்ட் ‘ஸர்க்குலர்’ ஒண்ணு வந்திருக்கு. அதை முதல்லே எழுது. அப்புறம் ‘அஜெண்டா’விலே வழக்கமா உள்ளதெல்லாம் போட்டுக்க, ‘ஸ்டிரீட்லைட்பெஸிலிட்டிஸ்’ - பஞ்சாயத்து லைப்ரரீஸ்னு இன்னும் ரெண்டு மூணு அயிட்டமும் போட்டுக்க”.

“தேதி எல்லாருக்கும் ஒத்து வரணுமே; சேர்மனுக்குத் தேதி ஒத்து வந்தா-வைஸ் சேர்மனுக்கு ஒத்து வராது. இரண்டு பேருக்கும் ஒத்து வந்தா, மெம்பர்ஸுக்கு ஒத்து வராது...?”

“ஏன் நிறுத்திப்பிட்டே…? பாக்கியையும்தான் சொல்லிப்பிடேன் - அத்தினி பேருக்கும் ஒத்து வந்தாக் கமிஷனருக்கு ஒத்து வராதுன்னு.”

மீட்டிங் கிளார்க் சிரித்துக் கொண்டார். ஸ்ர்க்குலர் தயாராயிற்று. அஜென்டா கீழ்க் கண்டவாறு அமைந்திருந்தது:-

1. டு அரேன்ஜ் நேஷனல் இண்டகரேஷன் ஸெமினார்.
2. ஸ்டிரீட் லைட் ஃபெஸிலிட்டீஸ்
3. பஞ்சாயத்து லைப்ரரீஸ்.

ஸ்ர்க்குலரில் கையெழுத்துப் போட்டு. “இன்னிக்கே எல்லாருக்கும் கையெழுத்துக்கு அனுப்பிச்சிடு”- என்று கூறினார் கமிஷனர் கண்ணாயிரம்.

ஸ்ர்க்குலர் கையெழுத்துக்குப் போயிற்று. சேர்மனும் வைஸ் சேர்மனும், மெம்பர்களும் ஒவ்வொரு காரணத்துக்காக ஒவ்வொரு கோபத்தை வைத்து முணு முணுத்துக் கொண்டே கையெழுத்துப்போட்டார்கள்.மீட்டிங் தினத்தன்று எல்லோருக்கும் காபி வழங்குவதா, பாதாம்கீர் வழங்குவதா என்பது பற்றி சேர்மனுக்கும் கமிஷனருக்கும் கூட்டம் தொடங்கும் முன் அரை மணி நேரம் காரசாரமாக விவாதம் நடந்தது. கடைசியில் பாதாம்கீரே வாங்கி வரப்பட்டது. மீட்டிங் தொடங்கியதும் கமிஷனர் சர்க்காரிடமிருந்து வந்திருந்த ஸர்க்குலரைப் படித்துவிட்டு அஜெண்டாவில் முதல் அயிட்டமான தேசிய ஒருமைப்பாட்டு விழாவைப் பற்றிக் கூறினார். உடனே சேர்மன் தமது கனத்த சரீரத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு எழுந்திருந்து.“ஒருமைப் பாட்டு விழாவைக் கொண்டாடணும்கிறதிலே எனக்கோ, உங்களுக்கோ அதிக ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனா, அதை எப்படிக் கொண்டாடனும்கிறதைத் தான் மெம்பர்ஸ் எல்லாம் இப்பச் சொல்லணும்.” என்றார்.

“மாஸ் ஸ்கேல்ல ஒரு பெரிய ஒருமைப்பாட்டு ஊர்வலம் நடத்தனும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு பெரிய பானர் ஒண்ணையும் வள்ளுவர் படத்தையும் ஊர்வலத்தில் முன்னாடிக் கொண்டுபோகணும்”- என்று திமுக உறுப்பினர் திருமாவளவன் உடனே எழுந்திருந்து தமது கருத்தைத் தெரிவித்தார்.

“சமதர்ம சமாதான சமுதாயத்திலே வர்க்கப் போராட்டத்திற்கு இடமே இருக்கக் கூடாது என்று லெனின் கூறியிருக்கிறார். ஊர்வலம் நடத்தும்போது அது நினைவிருக்க வேண்டும்” - என்றார் வலது கம்யூனிஸ்ட் உறுப்பினர் வாழ வந்தான். திடீரென்று சம்பந்தமில்லாமல் லெனினை இழுக்கவே இடது கம்யூனிஸ்ட் உறுப்பினருக்கே கோபம் வந்துவிட்டது. மீசையை அரிவாள் போல் முறுக்கிவிட்டுக் கொண்டு சுத்தியலால் அடிப்பது போல் வார்த்தைகளை விட்டார் அவர். “நண்பர்களுக்கு நானொன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். மாவோ சொன்னார் ஆயிரம் பூக்கள் மலர வேண்டுமென்று. அதிகாரம் துப்பாக்கிக் குழாயிலிருந்து பிறக்கிறது. தோழர் வாழ வந்தான் அநாவசியமாக இங்கு சித்தாந்தப் போராட்டத்தை எழுப்புகிறார். விளைவு விரும்பத் தகாததாக இருக்குமென்பதை மட்டும் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என்று சீறினார் இடது கம்யூனிஸ்ட் தோழர் இடிந்தகரை பாலகிருஷ்ணன். கடுங்கோபம் அடைந்த சுதந்திரா உறுப்பினர், “இப்போது தேசிய ஒருமைப்பாட்டு விழாவைப் பற்றிப் பேசுகிறோமா? அல்லது சித்தாந்தப் போராட்டங்களைப் பற்றிப் பேசுகிறோமா? என்பது எனக்குத் தெரியவேண்டும்” என்று எழுந்திருந்து கூப்பாடு போட்டார். “பிற்போக்குவாதிகளுக்குச் சித்தாந்தப் போராட்டம் பற்றிக் கேட்டாலே பயம் வந்து விடுகிறதே?” என்று வலது, இடது தோழர்கள் இருவருமே ஒன்றாக எழுந்து சுதந்திரா உறுப்பினர்மேல் பாய்ந்தனர். தலைவர் குறுக்கிட்டுச் சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.

“அமைதி அமைதி வீணான அரசியல் சர்ச்சைகள் இங்கு வேண்டாம். நாட்டின் ஒருமைப்பாட்டைப் பற்றிய விழா இது. அதற்கான யோசனைகளை மட்டுமே இங்கு கூற வேண்டும். தி.மு.க. உறுப்பினர் திருமாவளவன் கூறிய அருமையான யோசனை எனக்கும் பிடித்திருக்கிறது. ஒருமைப்பாட்டு ஊர்வலத்தை எங்கிருந்து தொடங்கலாம்?”

“மறவர் தெரு முக்கிலிருந்து ஊர்வலத்தை ஆரம்பிக்கலாம்” - என்றார் முக்குலத்தோர் பிரதிநிதி முருகையாத்தேவர். உடனே முஸ்லிம் லீக் பிரதிநிதி வஹ்ஹாப் சாகிப்தாடியை உருவிக்கொண்டே எழுந்து நின்று,"இந்தப் பஞ்சாயத்தில் எந்த நல்ல காரியத்திலும் முஸ்லீம் பெருமக்கள் புறக்கணிக்கப்படுவதையே நான் தொடர்ந்து காண்கிறேன். ஊர்வலத்தை மறவர் தெரு முக்கிலிருந்து ஏன் தொடங்க வேண்டும்? காஜியார் தெரு பள்ளிவாசல் முன்பிருந்து ஏன் தொடங்கக்கூடாது?” என்பதாக இரைந்தார்.

“இவை எல்லாவற்றையும் விடப் பெருமாள் கோவில் முன்னாலிருந்து தொடங்குவதுதான் பொருத்தம்” - என்றார். ஜனசங்கப் பிரதிநிதி சக்ரபாணி அய்யங்கார்.

"ஏன் இத்தனை வம்பு தாலுக்கா காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் ஊர் நடுத் தெருவிலிருக்கிறதே! அங்கிருந்தே ஊர்வலத்தைத் தொடங்கலாமே?” என்று சேர்மன் மெதுவாக ஆரம்பித்தபோது "கூடாது! கூடவே கூடாது” என்று பல குரல்கள் கடுமையாக எதிர்த்தன.

சேர்மன் குரல் அந்த எதிர்ப்பில் ஒடுங்கியே போய்விட்டது.

“காந்தி சாவடியில் மகாத்மா சிலை அருகிலிருந்து தொடங்கலாமா? அதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாதென்று நினைக்கிறேன்?" என்றார் வைஸ் சேர்மன்.காங்கிரஸ் மெம்பர்கள் இதைக் கரகோஷம் செய்து வரவேற்றனர்.

“அந்த இடம் பஜனை பாடத்தான் லாயக்கு” என்று மெல்ல ஆரம்பித்தார் இடிந்தகரை பாலகிருஷ்ணன்.

“பஜனையைத் தூவிக்காதே! நாக்கு அழுகிவிடும்.” என்று சீறினார் ஜனசங்கப் பிரதிநிதி. உடனே ஜனசங்கப் பிரதிநிதியை நோக்கி மடக்கு நாற்காலியைத் தூக்கி வீசினார், இடிந்தகரை முக்குலத்தோர் பிரதிநிதி முருகையாத் தேவர் குறுக்கே புகுந்து அந்த நாற்காலியைப் பிடித்து மீண்டும் அதை இடிந்தகரையின் மேல் திருப்பிவிட்ட போது வலது கம்யூனிஸ்ட் உறுப்பினர் இ.க.வுக்கு ஃபெல்லோடிராவலராகி மற்றொரு நாற்காலியை எடுத்து வீசினார். அது குறிதவறி முஸ்லீம் லீக்கைச் சேர்ந்த வஹ்ஹாப் சாகிப்பின் மேல் விழுந்துவிடவே, "அரே! பத்மாஷ்” . என்று கத்தியபடியே மேஜைமேல் கிடந்த டேபிள் வெயிட் கண்ணாடிக் குண்டை எடுத்து வாழவந்தானின் மண்டையில் வீசினார் அவர். வாழ வந்தானின் முன் நெற்றியில் விழுந்து காயப்படுத்திற்றுக் கண்ணாடிக்குண்டு. முன் நெற்றியில் இரத்தம் வடிவதைப் பார்த்ததும் வ.க. உறுப்பினருக்குக் கடுங்கோபம் மூண்டது. மேஜையை கருடவாகனம் போல் இரு கைகளாலும் அலக்காகத் துக்கினார் அவர். உடனே அங்கே பிரளயம் மூண்டது. நாற்காலிகள் நொறுங்கின. மேஜைகள் உடைந்தன. ஒரு குட்டி கலாசாரப் புரட்சியே மூண்டு விட்டதுபோல மகிழ்ந்தார் இ.க. உறுப்பினர்.சேர்மன் பயந்துபோய் எழுந்து ஓடிவிட்டார். கமிஷனர் போலீஸுக்கு ஃபோன் செய்ய எழுந்து ஓடினார். அட்டெண்டர், மீட்டிங் கிளார்க், காஷியர் எல்லாம் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் வரவழைத்திருந்த பாதாம்கீர் அண்டாவில் மீதமிருந்ததைச் சுகமாகக் குடித்துக் கொண்டிருந்தனர்.

வைஸ்சேர்மன் வரதராஜனின் முகத்தில் யாரோ சிவப்பு மைப்புட்டியை வீசி அடித்துவிடவே, அவர் தன் முகத்தில் தெறித்துவிட்ட சிவப்புமையையே இரத்தமாகக் கருதிப் பயந்து வீல் என்று கத்தினார். வீசப்பட்ட மை சிவப்பாக இருந்ததனால் அவ்வளவு பதற்றத்திலும் கச்சிதமாகச் சிவப்பு மையையே தேடி எடுத்து வீசியது கம்யூனிஸ்ட் உறுப்பினராகவே இருக்கக் கூடும் என்ற காங்கிரஸ் வைஸ் சேர்மனுக்குத் தோன்றியது. அவர் முகத்தில் - சட்டையில், வேஷ்டியில் எங்கும் சிவப்புக் கரையோடு ஒடியதை அரைகுறையாகக் கவனித்த அட்டெண்டர் ஆரோக்கியசாமி, வைஸ் சேர்மன் ரத்தக் கரையோடு ஒடறார். அவரை யாரோ குத்திட்டாங்க போலிருக்கு - என்று ஒதுங்கி நின்ற ‘தினப் பளீர்’ நிருபரிடம் கூறவும் அந்தப் ‘பளிர்’ நிருபர் உடனே ‘வைஸ் சேர்மனுக்குக் கத்திக்குத்து! இரத்தக் கறையோடு ஓடினார். உலகனூர்ப் பஞ்சாயத்து மீட்டிங்கில் கலகம்’ - என்று அதை நியூஸாகவே எழுதத் தொடங்கி விட்டார். நடக்காத நியூஸுக்குத்தான் அவர் எப்போதும் நிருபர்.

கலகத்தில் கமிஷனரின் மூக்குக் கண்ணாடியை யாரோ உடைத்து விட்டார்கள். போலீஸ் வந்தபோது ஸ்தலத்தில் யாருமே இல்லை. சாயங்காலம் கணக்கெடுத்தபோது உலகனூர் பஞ்சாயத்து ஆபீஸில் பத்து மடக்கு நாற்காலிகள், நாலு மேஜை, மூன்று மைப்புட்டி, ஐந்து டேபிள் வெயிட்கள், இருபது கண்ணாடி கிளாஸ்கள் உடைந்து போயிருப்பது தெரிந்தது. பஞ்சாயத்து கமிஷனருடைய மூக்குக் கண்ணாடியும் வஹ்ஹாப் சாஹிப்பின் மண்டையும் உடைந்துபோன நஷ்டம் தவிர பாக்கி எல்லா நஷ்டங்களும் யூனியன் ஆபீஸின் நஷ்டமாகவே வாய்த்தன.

றுநாள் மீட்டிங்கிளார்க், மீட்டிங் புது ஸர்குலர் விஷயமாகப் பஞ்சாயத்துக் கமிஷனரை அணுகியபோது, "இந்தாப்பா ஸர்குலர்லே இந்தவாட்டி முதல்லே வேறெதையாவது அஜெண்டா நெம்பர் ஒண்ணுன்னு போடு. ஒருமைப்பாட்டை மட்டும் போட்டுடாதே, என்னாலே மறுபடி மூக்குக் கண்ணாடி வாங்க முடியாது” என்றார் அவர், "சரி சார் இந்தத் தெருக் குப்பைத் தொட்டிகள் வைக்கிற விஷயம் ரொம்ப நாளா அஜெண்டாவிலே சேரலே. அதைப் போட்டுடறேன்” என்று உற்சாகமாக மறுமொழி கூறினார் மீட்டிங் கிளார்க். ஒரு வேளை மறுபடியும் பாதாம் கீர் கிடைக்கலாம் என்ற சந்தோஷம் அவருக்கு வந்திருக்கலாம்.

(1978-க்கு முன்)