நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/குணம் நாடிக் குற்றமும் நாடி
158. குணம் நாடிக் குற்றமும் நாடி..
காலையிலிருந்து வந்த டெலிபோன் கால்கள் எல்லாம் மணிக்குத் தான். தேடி வந்தவர்களில் பலரும் அவனைத்தான் தேடி வந்து விட்டுப் போயிருந்தார்கள். டாக்டர் சாமிநாதனுக்கு எரிச்சலாக மட்டுமில்லை, பொறாமையாகவும் இருந்தது. அங்கு வந்த சில நாட்களிலேயே மணி எல்லோரையும் கவர்ந்து விட்டான். அவன் ஒரு கால் மணி நேரம் காணவில்லை என்றாலும், மற்றவர்கள் அவனை விசாரிப்பது அதிகமாயிருந்தது. அவனைத் தேடுவது மிகுதியாயிருந்தது.
இந்த அறுபத்தேழு வயதில் தனக்கு ஏற்படாத உறவுகளும், நெருக்கமும், பப்ளிக் ரிலேஷனும் இருபத்து ஏழு வயதில் அவனுக்கு ஏற்பட்டிருப்பது போல் தோன்றியது. வந்து போகிற ஆட்களையும், பழகுகிற மனிதர்களையும் எப்படியோ சொக்குப் பொடி போட்டு மயக்கினாற் போல மயக்கியிருந்தான் அவன்.
இவ்வளவிற்கும் மணி அங்கே வந்து சேர்ந்து முழுமையாக மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. யாரிடமும் இவர் அந்நியர் புதியவர் என்று வித்தியாசமோ, மருட்சியோ இன்றி சகஜமாக உடனே ஒட்டிக் கொள்ள அவனால் எப்படி இயல்பாக முடிகிறது என்று ஆச்சரியமே அடைந்தார் அவர்,
அறிவின் உச்சியிலிருந்து அவர் சாதிக்க முடியாத பல காரியங்களை உணர்வின் கனிவினால் அவன் சுலபமாகச் சாதித்தான்.
‘இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பேரிட்டிவ் ஸ்டடீஸ்’ - வரலாற்றிலேயே இப்படி ஒரு மாணவனை அவர் பார்த்ததில்லை. பயந்தபடியே குனிந்த தலை நிமிராமல் வருவார்கள். முப்பத்தாறு மாதம் எப்பொழுது முடியப் போகிறதென்று எண்ணிக் கொண்டிருந்து விட்டுத் தீஸிஸை ஸப்மிட் செய்து முடிப்பார்கள். கருமமே கண்ணாயினார் என்பது போல் காரியத்தில் மட்டுமே கண்ணாயிருப்பார்கள், சமயங்களில் முடுக்கி விட்ட இயந்திரங்களைப் போல் நடந்து கொள்வார்கள். தப்பித் தவறி ஒரு புன்முறுவல் பூத்தால்கூட ரிஸர்ச்சின் சீரியஸ்நெஸ் கெட்டு விடுமோ என்று பயந்து சிரிப்புக்குப் பஞ்சம் வந்தாற் போல் தோன்றுவார்கள். டாக்டோரல் கமிட்டியின் கேள்விக் கணைகளிலிருந்து தப்பி மெத்தடாலஜி டெஸ்ட் முடித்துக் கொள்ளப் பறப்பார்கள். மணியும் அவற்றுக்காக அநாயாசமாக உழைத்தான். ஆனால், அநாகரிகமாகவும், அருவருப்பாகவும் அவசரம் காட்டவில்லை. டாக்டர் சுவாமிநாதன்தமது பேராசிரிய வாழ்க்கையில் இப்படி ஒரு ரிஸர்ச் மாணவனைச் சந்திக்க நேர்ந்ததே இல்லை. எதைப் பற்றியும், அது நடக்காது என்ற அவநம்பிக்கை அவனுக்கு இராது போலத் தோன்றியது. எதையும் ஒரு தீர்க்கமான நம்பிக்கையோடு அணுகுவதற்குப் பழகியிருந்தான் அவன். நம்பிக்கை உள்ளவர்களால் எதையும் இப்படிச் சுறுசுறுப்பாகச் செய்ய முடியும் போலிருக்கிறது.சுவாமிநாதன் எதையாவது கண்டித்தால் எதிர்த்துப் பதில் சொல்லியோ அல்லது தான் செய்ததுதான் சரி என்று விளக்க முயன்றோ, நேரத்தையும், விவாதத்தையும் வளர்க்காமல் மெளனமாகப் புன்முறுவலோடு சமாளித்தான் மணி. இந்த வயதில் இப்படி ஓர் இங்கிதமும், குறிப்பறிதலும் உள்ளவனைப் பார்க்கவே முடியாதென்று வியப்பாயிருந்தது அவருக்கு.
சோம்பல் மருந்துக்குக் கூட அவனிடம் இல்லை. காலையில் ஐந்து மணிக்கு எழுந்தான். இரவு பதினொரு மணி வரை உழைத்தான். அவனிடம் என்ன குறை கண்டுபிடிப்பதென்று தெரியாமல் தவித்தார் அவர்.
இன்ஸ்டிடியூட் வளாகத்திலேயே ஒரு கோடியில் டைரக்டருக்கு வீடு கொடுத்திருந்தார்கள். எல்லா மாணவர்களையும் போல் ஃபுல் டைம் ரிஸர்ச்சராகப் பதிவு செய்து கொண்டு வந்திருந்த மணி ஹாஸ்டலில் தங்குவதாகத்தான் இருந்தான். அவனுடைய அதிர்ஷ்டம் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் டாக்டர் சுவாமிநாதன் வீட்டில் எல்லோருக்கும் அவனைப் பிடித்துப் போயிற்று. சுவாமிநாதனே தயங்கியும் கேட்காமல், திருமதி. சுவாமிநாதனும் மற்றவர்களும் அவனை அந்த வீட்டிலேயே இருக்கும்படி அனுமதித்து விட்டார்கள்.
‘”ஸர்ச் ஸ்காலராக வந்திருப்பவனை ஹாஸ்டலில் தங்க விடுவதுதான் முறை. எவ்வளவுதான் அனுசரணையாக இருந்தாலும், வீட்டில் வைத்துக் கொள்வது சரிப்பட்டு வராது” என்றார் அவர்.
“உங்களை மாதிரி ஒரு ஆஃப்ஸ்ண்ட் மைண்ட்டட் புரொஃபஸரைக் கட்டிண்டு நான் படற கஷ்டத்தை அவனாவது கொஞ்சம் புரிஞ்சிண்டிருக்கான். அவன் ஒரு நிமிஷம் இல்லேன்னா இந்த வீடு நாறிப் போயிடும்” என்றாள் திருமதி சுவாமிநாதன். அவரால் மறுத்துச் சொல்ல முடியவில்லை.”ரேஷன் கார்டு தொலைஞ்சு போய், நாலு வாரமாகச் சர்க்கரை, ரவை, பாமாயில் இல்லாமத் திண்டாடினேன். ஊரெல்லாம் தெரிஞ்சவா இருந்தும் உங்களாலே மறுபடி கார்டு வாங்கித் தர முடியலே. மணி போனான், என்ன செஞ்சானோ, யாரைப் பார்த்தானோ நிமிஷமாப் புதுக் கார்டு வாங்கிண்டு வந்துட்டான். மிக்ஸி ரிப்பேராயி மூலையிலே கிடந்தது. அவனே ஸ்கூரு டிரைவரைக் கையிலே எடுத்துண்டு உட்கார்ந்தான். அரைமணி நேரத்திலே சரிப்படுத்தி ஓட வச்சுட்டான்.”
என்று அவள் மணியின் பிரதாபங்களை மேலும் அடுக்கிய போது அவரால்
எதிர்த்துப் பேச முடியாமல் போயிற்று. அவருடைய மனைவி மட்டுமின்றிப் பெண்களும் மணியைக் கொண்டாடினார்கள். தினசரி காலையில் இன்ஸ்டிடியூட்டைப்பெருக்கிச் சுத்தம் செய்ய வரும் பதினாலு வயதுப் படிப்பறிவற்ற குப்பாயி முதல் சந்திரஹாசன் ஐ.ஏ.எஸ்.ஸின் மகள் நந்தினி வரை அனைவருமே மணியிடம் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டு நின்றார்கள். நெருங்கிப் பழகினார்கள். அவனைக் கொண்டாடினார்கள்.
சந்திரஹாசன் ஐ.ஏ.எஸ்.ஸின் மகள் இங்கிலிஷ் லிட்டரேச்சர் எம்.ஏ. முதல் வகுப்பில் தேறியவள். இன்ஸ்டிடியூட்டில் ‘இப்ஸனையும் பாஸனையும்’ ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்கிறாள். கல்யாண வயது. நல்ல அழகி. அவளிடமிருந்து தினசரி மணியைக் கேட்டு ஏழெட்டு முறையாவது டெலிபோன் வருகிறது. நேரில் வந்து விட்டாலோ, இன்ஸ்டிடியூட் வாயிற்படியில் புத்தகங்களை மார்போடு அணைத்தபடி, மணியை எதிரே நிறுத்தி வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் அரட்டையடிக்கிறாள். எதிரே தான் இரண்டு நிமிஷம் நிற்கச் சொல்லி ஏதாவது கேட்டால், கூச்சமும் பயமுமாக நடுங்குகிற அதே நந்தினிதான் மணிப்பயலோடு நேரம் போவது தெரியாமல் சிரித்துப் பேசுகிறாள் என்பதை அவரால் நம்பக் கூட முடியவில்லை. பத்து நிமிஷம் ஏதிரே உட்கார்த்தி வைத்துப் பேசிக் கொண்டிருந்தாலே மனம் உல்லாசமும், கிளுகிளுப்பும் அடையும். அவ்வளவு வசீகரமான பெண் நந்தினி. எதையாவது ஒரு சாக்காக வைத்துத் தானே அவளை அழைத்து ரிஸர்ச் ப்ராக்ரஸ் பற்றி எல்லாம் விசாரிப்பது போல் பாசாங்கு செய்திருக்கிறார் அவர். அம்மாதிரி வேளைகளில் ஒரு முறை கூட அவளிடம் சிரிப்பையோ, புன்முறுவலையோ- உல்லாசத்தையோ அவர் பார்க்க முடிந்ததில்லை. ‘மோஸ்ட் ஒபீடியண்ட் ஸ்டூடண்ட்’ என்பது போல் பயபக்தியோடு கேட்ட கேள்விக்கு அளவாகப் பட்டும், படாமலும் பதில் சொல்லி விட்டுப் போய் விடுவாள். கொஞ்சம் சிரித்தால் கூட முத்து உதிர்ந்து விடுமோ என்று பயந்து அதிஜாக்கிரதையாய்ப் பழகுவது போலிருக்கும்.
இதெல்லாம் போதாதென்று இன்ஸ்டிடியூட்டிற்கு வருகிற தபால்களில், எண்ணிக்கையில் முக்கால்வாசி மணியின் பெயருக்குத்தான் இருந்தன. புதுக்கவிதைகள் எழுதுகிறானாம். தபாலில் அவன் பெயருக்கு வந்திருந்த ‘முத்திரை’ என்கிற ஒரு புதுக்கவிதைப் பத்திரிகையைப் பிரித்து அதில் அவன் எழுதியிருந்த புதுக்கவிதை வரிகளைக் கண்டவுடன் டாக்டர் சுவாமிநாதனுக்கு எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது. கவிதையின் தலைப்பு ‘ரோஜா தோட்டத்தில் ஒரு குழப்பம்’ என்பது.
“ஆஜாதுபாகுவாய் நின்றுன்னை
அடிமுதல் முடிவரை பார்த்து மயங்குகின்றேன் அடியே
ரோஜா தோட்டத்தில் பூப்பறிப்பாய்
ரோஜாவும் உன் கைமலரும் இணைகையிலே
ரோஜா எது கைஎது எனத் தெரியாமல்
ஆஜாதுபாகுவாய் நின்றுன்னை
அடிமுதல் முடிவரை பார்த்துக் குழம்புகின்றேன்
அழகுக் குழப்பம் ஆமாம் இது அழகுக் குழப்பம்.”
படித்ததும் தப்புக்கள்தான் முதலில் அவருக்குத் தெரிந்தன. பாடுகிறவன் தன்னைத்தானே ‘ஆஜாதுபாகு’ என்று பெருமையாக வர்ணித்துக் கொள்வது சரியில்லை என்றும் மரபுக்கு ஒத்து வராது என்றும் தோன்றியது. மரபை இலட்சியம் செய்யாமல் பாடப்படுவதுதானே புதுக் கவிதை என்றும் கூடவே எண்ண முடிந்தது. கவிதை ஆஜாதுபாகுவாயிருந்ததோ இல்லையோ, மணி ஆஜாதுபாகுவாயிருந்தான். இப்படி இலக்கணப் பிழைகளோடு கூடிய கவிதையை எழுதியதற்காக அந்த இன்ஸ்டிடியூட்டின் மாணவன் என்ற முறையில் அவனுக்கு ஏன் ஒரு மெமோ கொடுக்கக் கூடாதென்று எண்ணி மெமோவை எழுதக் கடிதத் தாளை எடுத்தார். இன்ஸ்டிடியூட் கடிதத் தாளில் நிறுவனத்தின் முத்திரா வாக்கியமாக அச்சிடப்பட்டிருந்த ‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்ற குறள் கண்ணில் பட்டுத் தொலைத்தது. ஆராய்ச்சியின் இலக்கணமே அந்தக் குறள்தான் என்று இந்த இன்ஸ்டிடியூட்டின் ஸ்தாபகர்கள் அதைக் கொள்கை வாக்கியமாக அமைத்திருந்தார்கள். திடீரென்று மனசு மாறியது. கை மெமோ எழுதுவதற்குத் தயங்கியது.அழகிய சிவந்த கைகளை ரோஜாப் பூக்களோ எனக் குழப்பம் அடைந்தது பற்றிய சிந்தனை மின்னலில் கவிதை வீச்சு இருப்பதை மன்னிக்கலாமென்று தோன்றியது. குணமும் நாடிக் குற்றமும் நாடினால், கவிதையில் குணம்தான் ஒரு மாற்று அதிகமாயிருக்கும் போல் தோன்றியது. சிரிப்பும், மலர்ச்சியும் நிறைந்த மணியின் முகம் நினைவுக்கு வந்து, அவரை மெமோ எழுதுவதிலிருந்து தடுத்து விட்டது. அவனுக்கு ஒரு மெமோ கொடுத்தால், வீட்டில் அவருடைய மனைவியே அதற்காக அவரைக் கோபித்துக் கொள்ளலாம். அவர் மனத்தில் வெறுப்பு ஒரு பக்கமும், அனுதாபம் ஒரு பக்கமுமாக மணியைப் பற்றி அபிப்பிராயம் மாறி, மாறி அலை மோதியது. கடைசியில் போனால்-போகிறதென்று மரபு வழியில் தீவிரப் பற்றுள்ள அவர் அவனுடைய புதுக் கவிதையை மன்னித்துத் தொலைக்க வேண்டியிருந்தது.
ஆனாலும் அவர் மன்னித்தாலும், அந்தப் பாவி தன்னுடைய அதிகப்பிரசங்கித் தனத்தால் தானே வேறு ஒரு வம்பில் மாட்டிக் கொண்டு விட்டான்.
“பிரியமுள்ள நந்தினி! நீ சென்ற மாதம் நம்முடைய இன்ஸ்டிடியூட் தோட்டத்தில் ரோஜாப்பூப் பறித்தபோது என்மனத்தில் தோன்றிய கற்பனையைக் கவிதையாக எழுதி ‘முத்திரை’ இதழுக்கு அனுப்பினேன். பிரசுரமாகியிருக்கிறது. இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். உன்னுடைய ரோஜாக் கைகளினால் பிரித்துப் படிக்கவும்” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டு நந்தினியின் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறான் மணி. அந்தத் தபாலை நந்தினியின் தந்தை சந்திரஹாசன் ஐ.ஏ.எஸ். வாங்கிப் பிரித்துப் படித்து விட்டார். அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதே சமயம் தமிழ் சரியாகத் தெரியாததால், அதிகம் விளங்கவும் இல்லை. -
“டியர் டாக்டர் சுவாமிநாதன்…ப்ளீஸ் லுக் இன்டு த மேட்டர் பெர்ஸனலி அண்ட் டேக்நெஸஸ்ஸரி ஆக்ஷன்…” என்பது போல் ஐ.ஏ.எஸ். பாணியில் ஒரு நோட்டு எழுதி, அந்தக் கடிதத்தையும், கவிதையையும் சுவாமிநாதனுக்கே அனுப்பி வைத்தார் சந்திரஹாசன். சுவாமிநாதன் அவருக்கு மிகவும் வேண்டியவர், நண்பர். அதனால் ஏதாவது தப்பாக இருந்தால், அவரே பார்த்துச் சம்பந்தப்பட்டவன் மேல் உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்ற கருத்தில் கடிதம், கவிதை, நோட் மூன்றையும் அவருக்கு ஓர் உறையில் இட்டு, ‘கான்பிடன்ஷியல்’ என்று எழுதி அனுப்பியிருந்தார் நந்தினியின் தந்தை. சுவாமிநாதனுக்கு இந்தத் தகவல் தெரிந்ததும், முதலில் எரிச்சலாகத்தான் இருந்தது. வகையாக மாட்டிக் கொண்டு விட்டான். இந்த அதிகப்பிரசங்கி மணிக்கு ஒரு பாடம் கற்பித்துத்தான் ஆக வேண்டும் என்று ஆத்திரம் அடைந்திருந்தார் அவர். பெண்களிடம் பல்லிளித்துக் கொண்டு நிற்கும் அவனுக்கு இனி மேலாவது புத்தி வரட்டும் என்று எண்ணியது சுவாமிநாதனின் உள்ளம். ஆனால், அதில் ஒரு சிறிய சந்தேகமும் உள்ளூற இருந்தது. பெண்களிடம் அவன் பல்லை இளித்துக் கொண்டு நிற்கிறான் என்பதைவிடப் பெண்கள்தான் அவனிடம் பல்லை இளித்துக் கொண்டு நிற்கிறார்கள் போலிருந்தது. மணியை இன்ஸ்டிடியூட்டிலிருந்து சஸ்பெண்ட் செய்யலாமா என்று யோசித்தார் டாக்டர் சுவாமிநாதன்.
இதற்குள் நந்தினியே பரபரப்பாக அவரைத் தேடி வந்தாள். பதற்றத்தோடு அவரிடம் மன்றாடினாள் :
“சார்! அப்பாவே என்னிடம் சொன்னார். 'யாரோ கவிதை ரோஜாப்பூ - அது இதுன்னு உன் பெயருக்கு எழுதி இங்கே வீட்டுக்கு ஒரு லெட்டர் அனுப்பியிருந்தான் அம்மா, அந்த லெட்டரை அப்படியே டாக்டர் சுவாமிநாதனுக்கு மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறேன்’ என்றார். நீங்க தயவுசெய்து மணி சார் மேலே - எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவர் ரொம்ப நல்ல மாதிரி சார்! பூப்போல மனசு அவருக்கு. என்னாலே அவருக்குக் கெடுதல் வரக்கூடாது சார்.”
“சரி! நீ சொல்கிறபடியே மணி மேலே நான் எந்த நடவடிக்கையும் எடுக்கல்லேன்னே வச்சுக்கலாம். உங்க அப்பாவுக்கு நான் என்ன பதில் சொல்றது”
"இனிமே இதுமாதிரி எதுவும் நடக்காதுன்னு பொதுவா ஒரு வரி எழுதுங்கோ போதும். அப்பாவை எனக்கு நன்னாத் தெரியும்.மேலே இதுபற்றி உங்களிடம் எதுவும் கேட்கமாட்டார்”
“என்னமோ அம்மா, ரிஸர்ச் ஸ்டுடண்ட்ஸ்னு சேர்ந்துட்டு நீங்கள்ளாம் கவிதை, காதல் கத்திரிக்காய்ன்னு இப்படி அலையறது கொஞ்சங்கூட நல்லா இல்லே.”
“இந்த ஒரு தடவை பெரிய மனசுபண்ணி மன்னிச்சுடுங்கோ சார்.இனிமே இப்பிடி எதுவும் நடக்காது.”
“சரி. பார்க்கலாம். போ!” - பிடி கொடுக்காமல் பதில் சொல்லி அவளை அனுப்பினார் சுவாமிநாதன். அன்றிரவு மணி வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து மனைவியிடம் இந்த விஷயத்தைப் பிரஸ்தாபித்தார் அவர்.
“மணிக்குக் கெடுதல் எதுவும் பண்ணாதீங்கோ. அவனுக்குச்சூது வாது எதுவுமே தெரியாது. பூப்போல வெள்ளை மனசு, கள்ளங்கபடு தெரியாதவன். தப்பா எதுவும் பண்ணியிருக்கமாட்டான்” என்று உடனே மணிக்குப் பரிந்து கொண்டு வந்தாள் அவர் மனைவி.
“ஒரு கலியான வயசுப் பெண்ணைப் பார்த்து உன் கைக்கும், ரோஜாப்பூவுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பறேன்னு ஒரு கலியான வயசுப் பையன் சொன்னால், அது தப்பில்லையோ?”
"அதிலே என்ன தப்பிருக்கு? தினம் பூஜையறையிலே அம்பாளுக்குப் பூஜை பண்றப்போ'சரோஜதளநேத்ரின்னு நீங்ககூடஸ்தோத்திரம் பண்றேள், அது தப்பா'
"நந்தினியோட அப்பா கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்காரே'
'தப்பா ஒண்னும் நடந்துடலேன்னு சமாதானமா அவருக்குப்பதில் எழூதுங்கோ குழந்தை ஒரு பாவமுமறியாதவன். அவனைக் காமிச்சுக் குடுக்காதீங்கோ.”
“’சரோஜதளநேத்ரி’ன்னு நான் ஸ்லோகம் சொல்றதும், இதுவும் ஒண்ணாயிடாது. அதுலே ஒரு ‘பொயடிக் ஜஸ்டிஸ்’ - கவிதா நயம் இருக்கு”
“அதே பொயடிக் ஜஸ்டிஸ் மணியோட கவிதையிலும் இருக்கத்தான் இருக்கும் போங்கோ…”
அவளிடம் என்ன வாதிட்டும் பயனில்லை என்று தோன்றியது அவருக்கு. இரவு முழுவதும் யோசித்தார். மணிசெய்தது சரியா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இதைச் சாக்காக வைத்து அவனைப் போல் ஓர் இளங்குருத்தை வாடச் செய்து விட அவருக்கே தயக்கமாக இருந்தது. குணம் நாடிக் குற்றமும் நாடி ஒப்பிட்டு ஆராய்வது என்பது அந்த இன்ஸ்டிடியூட்டிற்கு மட்டுமில்லாமல், அதை நடத்துபவர்கள், அதில் கற்பவர்கள் எல்லோருக்குமே பொருந்தும் போல் தோன்றியது. தனது சொந்த விருப்பு,வெறுப்புகள், பொறாமைகள், அசூயைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அந்த விஷயத்தைப் பற்றி மிகவும் நடுநிலையோடு சிந்தித்து ஒரு முடிவுக்கு வர முயன்றார் டாக்டர் சுவாமிநாதன். மணியின் கவிதை உணர்ச்சியைச் சராசரிக் கல்லூரி மாணவனின் ஈவ் டீஸிங்காக எடுத்துக் கொள்ள முடியாதென்றே அவருக்கும் தோன்றியது.அவனது கவிதையால் பாதிக்கப்பட வேண்டிய நந்தினியோ, அவனுக்காக உருகி ஏங்குகிறாள். ‘பொயடிக் ஜஸ்டிஸ்’ பற்றித் தன் மனைவியே தன்னைக் கேட்ட கேள்வி அவருக்கு நினைவு வந்தது. கள்ளங்கபடமில்லாத பக்தனும், காதலனும் ஏதோ ஓர் இடத்தில், ஒரே மாதிரியான பொதுத்தன்மையால் இணைவதாக அவர் நம்பித்தானாகவேண்டியிருந்தது.
சந்திரஹாசன் ஐ.ஏ.எஸ்.ஸிற்கு இனி இது மாதிரி எதுவும் நேராமல் பார்த்துக் கொள்வதாகப் பொதுவில் ஒரு கடிதம் எழுதி விட்டு மணியை நேரில் கூப்பிட்டுக் கண்டித்தார் அவர். அவன் அவரை எதிர்த்துப் பேசவில்லை. தான் செய்ததே சரி என்று முரண்டு பிடிக்கவும் இல்லை. தன் கவிதையை அவர் படித்து விட்டதை அறிந்து, நாணினாற் போல் கூசி நின்றான். அவனது இங்கிதமான அடக்கம் அவரைச் சமாதானப்படுத்தியது.
“படிப்பைக் கவனி, பேரைக் கெடுத்துக் கொள்ளாதே... போ...” என்று சொல்லி அவர் அவனை அனுப்பிய சிறிது நேரத்திற்கெல்லாம், நந்தினி அவரைத் தேடி வந்து நன்றி சொல்லி விட்டுப் போனாள். அடுத்த கால் மணி நேரத்தில் மணியையும், அவளையும் ஜோடியாக இன்ஸ்டிடியூட் பூங்காவில் பார்த்தார் அவர்.
முதலில் ஏற்பட்டகோபத்தில் அந்த அதிகப்பிரசங்கிக்கு இதன் மூலம் ஒரு பாடம் கற்பித்துவிடத்தான் துடித்தார் அவர். மணியை மன்னிக்க முதலில் அவர் மனம் தயாராயில்லை.
ஆனால், ஆழமாகச் சிந்தித்த போது அவனுக்குக் கற்பிப்பதை விடப் பல விஷயங்களில் அவனிடமிருந்து தான் கற்க வேண்டியிருக்கும் போல் தோன்றியது அவருக்கு. சின்னஞ்சிறுசுகளின் விஷயத்தில் பெருந்தன்மையாக நடந்து கொண்டோம் என்ற முழுத் திருப்தியோடு, தம் மனைவியிடம் அந்த நல்ல முடிவைத் தெரிவித்து அவளை மகிழ்விக்க வீட்டை நோக்கி விரைந்தார் டாக்டர் சுவாமிநாதன்.
(கல்கி, தீபாவளி மலர் 1984)