உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/தீமிதி

விக்கிமூலம் இலிருந்து

87. தீமிதி

ங்குனி மாதம் கோடை வெய்யில் கொளுத்து கொளுத்தென்று கொளுத்திக் கொண்டிருந்தது. அமாவாசைக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. பங்குனி அமாவாசையன்று துரோபதை அம்மன் கோவில் தீமிதி உற்சவம். தலைமுறை தலைமுறையாகக் கிராமத்தில் நடந்து வரும் திருவிழா அது. ஊராருக்கு அந்தத் திருவிழாவில் பயபக்தி அதிகம். கோடை வெப்பத்தால் உயிர்களைச் சூறையாடும் அம்மை, கொப்புளிப்பான், வைசூரி போன்ற நோய்கள் ஊரில் பரவாமல் தடுக்கும் தெய்வீக முயற்சியாக இந்தத் திருவிழாவைக் கருதி வந்தனர்.

அந்த வருட உற்சவத்தை நடத்துவது பற்றி விவாதிப்பதற்காகக் கோவில் குறட்டில் ஊர்த் தலைக் கட்டுகள் கூடியிருந்தனர். நாட்டாண்மைக்கார மூப்பனார் கூட்டத்திற்கு நடுவில் வசூல் நோட்டும் பென்சிலும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். கணக்குப் பிள்ளை உற்சவத்துக்கு வேண்டிய சாமான்களை லிஸ்ட் எழுதிக் கொண்டிருந்தார். தலைக் கட்டுக்களில் ஒருவர் எழுந்திருந்து கேட்டார்,

“என்னங்க மூப்பனாரே! இந்தப் பெரிய பண்ணையாரு மகன் ராசகோவாலுப் பய ஏதோ நாலு விடலைப் பசங்களோடு சேர்ந்து கட்சி கட்டிக்கிட்டுத் திரியறானே! தீமிதியிலே கலகமில்ல உண்டாகும் போல இருக்குது?”

“அதென்ன விசயம்? எனக்குத் தெரியாதே. இப்பத்தான் கேள்விப்படறேன்...”

“பய பட்டணத்துலே நாலு கோண எழுத்துப் படிக்கிறானில்லே. அதுலே புத்தி தடுமாறித் திரியறான். நாம் தீ மிதித்துக் காட்டறாப் போலவே அம்மன் கோவில் நிபந்தனைகளை மீறி விரதம், கிரதம் இல்லாமே அவங்களும் தீ மிதிச்சுக் காட்டப் போறானுகளாமே?”

“முடிஞ்சாக் காட்டட்டுமே? யாரு வேண்டாமின்னது?” பேச்சு வளர்ந்து கொண்டே போயிற்று. முதலில் பேசியவர் மீண்டும் ஆரம்பித்தார்.

“அது மட்டும் இல்லீங்க! வழக்கம் போலத் துரோபதை அம்மன் கோவிலுக்கு முன்னாலே மிதிச்சாத்தான் சுடாதுங்கறது பொய்! விரதம், அம்மன் அருள் இதுகள்ளாம் சுத்தப் புரட்டு. ஊருலே இந்த மூட நம்பிக்கைங்களை ஒழிச்சிறணும். எங்களுக்குத் துரோபதை அம்மன் மேலே நம்பிக்கை கெடையாது. நாங்க உற்சவத்துலே தீ இறங்கறதுக்காக விரதமிருக்காமே, அம்மனைக் கும்பிடாமே, கோவில் விதியை மீறி, இறங்கிக் காட்டறோம்.அப்பவாவது ஊராருக்கு இந்தப் புரட்டெல்லாம் புரியும் என்று சொல்லிச் சவால் விட்டிருக்கானாம்.”

இரண்டாம் தொகுதி ! தீமிதி : 657 “கிடக்கான் உதவாக்கரை! சவத்துப் பய பேச்சை விட்டுத் தள்ளுங்க.மேலே ஆக வேண்டியதைப் பார்ப்போம்.” “நாட்டாண்மைக்காரரே! இந்த விவகாரத்தைச் சிறிசா நினைச்சு விட்டிடறதுக்கு இல்லே. பெரிய வம்பு வழக்கெல்லாம் கிளம்பும் போலிருக்கு. ஒரு மண்டலத்துக்கு விரதமிருந்து, ஒரு வேளைச் சோறும் மூணு வேளைக் குளியலுமா எச்சத் தீட்டுக் கலக்காமல்,வீட்டிலே கலக்காமல், நோன்பிருந்து,தீ எறங்கிக் காட்டிக்கிட்டிருக்கோம். இன்னிக்கித் தேதிவரை ஒருத்தன் கால்லே ஒரு கொப்பளம் கிளம்பிச்சுங்கிற பேச்சு உண்டா? நேத்து முளைச்ச பய முளைச்சு மூணெலை விடலே ஒரு நேமம், ஒரு நிஷ்டையில்லாம நானும் தீயிலே எறங்குறேன்னு பேசினா, நல்லாவா இருக்குது?” “நல்லா இல்லைதான்! அதுக்கு நாமென்ன செய்யிறது? பெரிய இடத்துப் புள்ளை. அப்பங்காரன் செல்லமா வளர்க்குறான்.அதிகப்படிச்ச மூஞ்சூறு கழுநிப்பானையிலே விழுந்த கணக்காத் திரியுது புள்ளை.' “வீட்டிலே அடங்காததை நாட்டுலேதான் அடக்கனும்!” “இந்தப் பொடிப்பய குறும்புத்தனத்தைப் பெரிசு பண்ணிச் சச்சரவை உண்டாக்குவானேன்னு பார்க்கிறேன்”. “தவிர இதுலே இன்னொரு தொரட்டும் இருக்குதுங்க. இந்தப் பயலுக பேச்சைக் கேட்டுச் சின்னஞ் சிறுசுக கூடக் கெட்டுப்போகுது.வழக்கமாகத் தீமிதிக்க வருகிற வாலிபப் பிள்ளைங்க ஒண்ணொண்ணா வரமாட்டேன்னு ஒதுங்குதுங்க, பாருங்க. எம்மவனைக் கூப்பிட்டு, ஏலே இந்த அமாவாசிக்குத் தீமிதி வருது. விரதமிருக்கே இல்லே? ன்னு கேட்டேன்.‘என்னப்பா தீமிதி? வருசந் தவறாமே வேலையத்த வேலை’அப்படின்னு அலுத்துக்கிட்டான். இதுமாதிரித்தானே எல்லாம் கெடும்?” “நமக்கென்ன? யாரையும் வெத்தெலை பாக்கு வச்சு அழைக்கவேணாம். பய பக்தியா விரதமிருந்து தானா மிதிக்க வர்றவங்க மட்டும் வந்தாப் போதும்” "அதென்ன பேச்சுப் பேசுறிங்க? ஆத்தமாட்டாத பேச்சு? நாளைக்கு வரமுறை இல்லாமே அந்தப் பசங்களும் தீமிதிச்சுக் காட்டிக் கொப்புளம் படாம வெளி வந்துட்டா, ஊர்லே எந்தப் பயலாவது நம்ம திருவிழாவைக் காற்காசுக்கு மதிப்பானா? கேக்கிறேன். பரம்பரை, பரம்பரையா வந்துக்கிட்டிருக்கிற ஊர் வழக்கத்துக்கு மதிப்பில்லாமேயில்ல போயிரும்? அப்படிப் போக விட்டிடலாமா?” “கொப்புளம் படாமல் அவங்க வெளிவர முடியுமா? அதை யோசிச்சுப் பேசுங்க. காலு வெந்துரணமாயிரும். நாம் ஏதோ துரோபதையாத்தாளை நம்பி தாயே! எல்லாம். நீதான். பூவை மிதிக்கிறாப்பிலே நினைச்சுத் தீயை மிதிக்கிறோம். நீ கொடுத்த காலுக, நெருப்புப் படாமக் காப்பாத்து’ன்னு நேர்ந்துக்கிட்டு, உயிர் உடம்பைத் தெரணமா மதிச்சு அவளை நம்பி, எல்லாத்தையும் அவ பாரம்னு ஒப்படைச்சிட்டுத் தீக்குழிலே காலை வைக்கிறோம்.சூரிய,சந்திரங்க சாட்சியா,இன்னிக்கி வரை ஒருதப்பும் இல்லே. 5T.Lm. II — 3 658 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் அந்தப் பயல்களும் இது மாதிரி வந்துட்டா, உலகத்திலே சாமி, பூதம், ஒன்னுமில்லேன்னா அர்த்தம்” “அட வந்திருவாங்கன்னு வச்சிக்கிட்டுப் பேசுவமே? அப்போ நாம் ஊராருக்கு முன்னாலே தலை குனியனுமா இல்லியா? ‘'எதுக்காக அப்பிடி வச்சுக்கிட்டுப் பேசணும்? வர முடியாதுன்னே வச்சிப் பேசுவமே? ஊராரு யாரு? நாம் யாரு? நாமெல்லாம் சேர்ந்தா ஊராருதானே? சத்தியமும் மெய்யும் என்னைக்கும் எதுக்கும் தலைகுனிஞ்சதில்லை. தலைகுனியத்தான் வச்சிருக்கு திருடினமா? பொய் சொன்னமா? புறங் கூறினமா? எதுக்காவத் தலைகுனியனும்? ஏன் தலை குனியனும்? நாம் நம்பறதை நாம் செய்யறோம்.மத்தவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன? அவனுக்குத் தோணினதை அவன் செய்யட்டும். துரோபதையம்மன் யாரு பக்கம் இருக்காங்கிறதையும் தான் பார்த்திடுவமே?” நாட்டாண்மைக்கார மூப்பனார் ஆவேசம் வந்த மாதிரிப் படபடப்பாகப் பேசினார். மண்டபத்தில் அவருடைய குரல் கணிரென்று எதிரொலித்தது. அவரை எதிர்த்து வாதம் புரிந்த தலைக்கட்டுக்காரர் மேலே எதுவும் பேசத் தோன்றாமல் மெளனமானார். மூப்பனாரு சொல்றது நியாயந்தானே? முந்தாநாள் பொறந்த பயராசகோவாலு போட்டித் தீக்குழி எறங்கப் போறாங்கறதுக்காக நாம் ஏன் பயப்படனும்? மனசுலே அழுக்கிருந்தாப் பயப்படனும்; அல்லாட்டா பயப்படறதுனாலே மனசிலே அழுக்கு உண்டாகணும். நமக்கு இரண்டும் இல்லே. அப்பன்,பாட்டன்,முப்பாட்டன் காலத்திலே எதை நம்பி, எதுக்காக எதைச் செஞ்சாங்களோ,அதை நாமும் செய்யிறோம்! அவன் பொய்யின்னா அதுக்கு வேண்டிய பாடத்தை அவன் படிச்சிக்கிடட்டும்.ஆத்தாள் பாடம் கற்பிக்காம விட்டிட மாட்டா.” மூப்பனாருக்காக மற்றொரு தலைக்கட்டு பரிந்து பேசினார். “சரி! பேச்சை விடுங்க. காரியம் நெறைய இருக்கு இன்னும் லிஸ்டு’ எழுதியாகல்லே..மூணு தெருவுக்கு வசூல் பாக்கிகெடக்கு அதுக்கு வேறே போகணும்.” “நல்ல யோசனைங்க! போட்டித் தீமிதியை நாம் தடுக்கவே வேணாம். அதுவும் ஜோரா நடக்கட்டும்.முடிஞ்சா நம்ம தீமிதியைப் போதோடு முடிச்சிட்டு நாமும் போய் வேடிக்கைப் பார்ப்பமே?” "பெரிய பண்ணையாரு மவன் பூப்போலக் காலை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியல்லே. வீணாக் காலை ரணமாக்கி ஒடிச்சிக்கிட்டுப் போகப் போவுது. படிச்சிருக்கானாமில்லே,படிப்பு, புத்தி போற போக்கைப் பாரு” பலவிதமான பேச்சுக்கள் கிளம்பின.இறுதியில் போட்டித் தீக்குழி பற்றிய பேச்சை முற்றிலும் நிறுத்தி விட்டுத் தங்கள் காரியங்களைக் கவனிக்கலாயினர் எல்லோரும். இரண்டாம் தொகுதி ! தீமிதி : 659 விடலைத்தனத்தோடு கூடப் பிறந்த மற்றோர் குணம் முன்யோசனையில்லாமை. எதிலும் உணர்ச்சி மயமாக, ஆழ்ந்த சிந்தனையின்றிப் பலாபலன்களைப்பற்றி எண்ணாமல் இறங்கிவிடும் பருவம் அது. இராஜகோபாலுக்கு அந்தக் காரியத்தை எப்படியும் செய்து காட்டிவிட வேண்டும் என்று ஒரு பிடிவாதம் ஏற்பட்டிருந்தது. அதைச் செய்வதனால் தான் அடையப் போகிற நன்மை என்ன? ஊரில் நான்கு பேரை விரோதித்துக் கொள்கிறோமே? என்றெல்லாம் அவன் தயங்கவே இல்லை. துரோபதை அம்மன் கோவில் வாசலில் இருந்த தீக்குழி போலவே, இராஜகோபால் பொக்கிஷதாராக அங்கம் வகித்து வந்த பகுத்தறிவாளர் படிப்பகத்தின் வாசலில் ஒரு தீக்குழி வெட்டப்பட்டுத் தயாராக இருந்தது. தன்னைப் போலவே "சீர்திருத்த நோக்கமும் பகுத்தறிவும் உள்ள விடலைப் பிள்ளைகளாக ஒரு பத்துப் பன்னிரண்டு வாலிபர்களைத் தீ மிதிப்பதற்கும் தயார் செய்துவிட்டான் இராஜகோபால், “அடே, தம்பிகளா!இதில் அருள், ஆவேசம், ஒரு கழுதையும் கிடையாது. தீக்குழியிலே வேகமாக இறங்கிப் பாதத்தையும் வேகமாகப் பெயர்த்து வைத்துக் கரையேறினால்,எவனுக்கும் தி உறைக்காது,கொப்புளம் உண்டாகாது. அதுதான் இதிலே உள்ள சூrமம்.இந்த இரகசியத்தை அறிந்த பெரியவங்கதுரோபதை அம்மன் பேரைச் சொல்லி ஆடி,ஏமாத்திக் கொண்டிருக்காங்க.அதை நீங்க அம்பலமாக்கி விடனும்” என்று தன் குழுவினருக்கு உபதேசம் செய்திருந்தான் அவன். அந்த உபதேசத்தைக் கேட்டபோது, “ஏண்டா ராசகோவாலு எனக்கு ஒரு சந்தேகம்டா. நம்ப தீக்குழியையும், அம்மன் கோயில் தீக்குழியைப் போலத்தானே வெட்டியிருக்கோம்? அம்மன் தீக்குழி பன்னிரண்டுகெஜ அகலமும் ஆறு கெஜநீளமும் அளவு. இதுவும் அப்படித்தான். என்னதான் 'குடுகுடு'வென்று ஓடினால்கூடப் பாதத்திலே தீ உறைக்குமே? நீ உறைக்காது என்கிறாயே” என்று சந்தேகத்தைக் கிளப்பினான் புத்தி கூர்மையுள்ள ஒரு வாலிபன். "நீ ரொம்ப கண்டவன். போடா பயந்தாங்கொள்ளிப் பயலே துணிஞ்சிடனும் துணிஞ்சாத்தாண்டா இதெல்லாம் நிரூபித்துக் காட்ட முடியும் முன் வச்ச காலைப் பின் வைக்கப்படாது.” . . . . . . “என்னதான் துணிஞ்சாலும் எனக்கென்னமோ பயமாத்தான் இருக்குது' “முட்டாள்! நீ குறள் படிச்சிருக்கியே: 'எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பதிழுக்கு படிச்சு என்னடா பிரயோசனம்” "அதே குறள்தானே அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்றும் கூறியிருக்குது?” கேள்வி கேட்டவன் படீரென்று மற்றோர் குறளைக் கூறினான். . . . . . . "சீ போடா! எதுக்கெடுத்தாலும் எதிர்வாதம் பண்றான். சொன்னால் கேட்கணும். கட்டுத் திட்டமா ஒரு காரியத்திலே இறங்கிட்டா,கடைசிவரை கொண்டு 660 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் செலுத்தணும். உனக்குப் பிடிச்சா இதிலே சேரு. இல்லாட்டா விலகிக்க. எங்களையும் கெடுக்காதே."-இராஜகோபால் இப்படி ஆத்திரமாகப் பேசவே, கேள்வி கேட்டவன் ‘கப்சிப் என்று அடங்கிவிட்டான்.மற்ற வாலிபர்களும் இராஜகோபாலையே ஆதரித்துப் பேசியதால், அவன் மேற்கொண்டு விவாதிக்க முடியாமல் போயிற்று. இராஜகோபால் கோஷ்டியாரின் போட்டித் தீ மிதிப்பு வைபவத்திற்குப் பகுத்தறிவுத் தலைவர் ஒருவர் தலைமை வகிக்க வருவதாக ஒப்புக்கொண்டார். ஏற்பாடுகள் எல்லாம் புதிய முறையில் நடந்தன. ஊரார் விழாவுக்கு முன்னறிவிப்பாக வேப்பிலைத் தோரணமும், கொடிகளும் கட்டினார்கள் என்றால், இவர்கள் அழகான காகிதத்தில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கினார்கள். இன்னார் தலைமையில் கீழ்க் கண்ட முற்போக்கு இளைஞர்கள் பகுத்தறிவுத் தீ மிதிப்பு நிகழ்த்திக் காட்டுவார்கள். அன்பர்கள் தவறாது வருக என்று நோட்டீஸ் கூறியது.இன்னும் துரோபதையம்மன் கோவில் தீ மிதிப்பைக் கேவலப்படுத்தும் அவதூறு நிறைந்த வாக்கியங்களும் அந்த நோட்டீஸிலேயே எழுதப்பட்டிருந்தன. ஊராரோ, கோவில் தலைக்கட்டுக்களோ, இந்தச் சில்லறை விஷமங்களைப் பொருட்படுத்தாமல், தங்கள் ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர். இராஜகோபாலின் பகுத்தறிவு இளைஞர்கள் ஆவேசமாக வேலை செய்தனர்.வெறும் நோட்டிஸோடு நின்றுவிடவில்லை.பெரிய பெரிய சுவரொட்டிகளை விளம்பரமாக ஒட்டி, ஏதோ தேர்தலுக்குப் பிரசாரம் செய்கிற மாதிரிச் செய்தனர். உள்ளூர் டுரிங் சினிமாவில் சிலைடு' கொடுத்து விளம்பரம் காட்டினர். காரில் "பேட்டரி ஸெட் பொருத்தி மைக் வைத்து முழக்கினார்கள். இதன் பயனாக 'நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என்பதுபோல் - போலித் தீ மிதிப்புக்காரர்கள் செய்த இந்த ஏற்பாடுகளால் அசல் தீமிதிப்பும் பிரமாதமான விளம்பரப் பிரக்கியாதியை அடைந்துவிட்டிருந்தது. அன்று பங்குனி அமாவாசை கோயில் தீ மிதிப்பு மாலை ஆறரை மணி சுமாருக்கு மங்கல வேளையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.போட்டித் தீமிதிப்பு எட்டரை மணிக்கு மேல் வைக்கப்பட்டிருந்ததனால் இரண்டு வைபவங்களையும் எல்லோரும் காண்பதற்கு வசதியாக இருந்தது. - குரவை ஒலியுடனும், 'மாரியம்மன் தீ மிதிப்புக்கும்மி என்ற புஸ்தகத்திலுள்ள பாடலைப் பாடிக்கொண்டும் கோவில் தீ மிதிப்பு ஆரம்பமாயிற்று. அதைக் காண நிறைந்த கூட்டம் கூடியிருந்தது. அதெற்கென்று விரதமிருந்து ஒரு மண்டலம் நியம நிஷ்டையோடு வாழ்ந்த பத்துப் பதினைந்து வாலிபர்கள் தீ மிதிக்க வந்தனர். படிப்பில்லாதவர்கள் இவர்கள். கிராமாந்தரத்துப் பிள்ளைகள் பெற்றவர்களுக்கு அடங்கியவர்கள். பெரியவர்கள் சொல்வதில் கெடுதி இருக்காது என்று நம்புகிறவர்கள். வயதுக்கு மதிப்புக் கொடுத்து ,வணங்குகிறவர்கள். இவ்வளவுதான் இவர்களைப் பற்றிச் சொல்ல முடியும். உடம்பில் மஞ்சளும், சந்தனமும் அரைத்துப் பூசி, வேப்பிலை கட்டிக்கொண்டு அம்மனை வணங்கிச் சன்னதம் வந்த நிலையில் ஒவ்வொருவராகத் தீக்குழியில் இறங்கி இரண்டாம் தொகுதி / தீமிதி : 661 மெல்ல நடந்து கரையேறினர். குழி நிறைய, இடைவெளி சிறிதும் இன்றித் தகதகவென்று கனிந்த நெருப்புக் கங்குகள் பரப்பப்பட்டிருந்தன. பூக் குவியலின்மேல் நடக்கிற மாதிரி எப்படித்தான் முகத்தைச் சுளிக்காமல், வேதனையின்றி நடந்தார்களோ? பாதத்தின் அடியில் சிறு தீப்புண், கொப்புளம், ஒன்றும் ஏற்படவில்லை. மண்ணில் நடந்து வந்த பாதம் மாதிரி மாறாமல் இருந்தது. கோவில் தீ மிதிப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு, கோவில் தலைக்கட்டுகள், தீ மிதித்தவர் உட்படக் கூட்டம் முழுவதும் நேரே பகுத்தறிவுப் படிப்பக வாசலுக்கு வேடிக்கை பார்க்கப் போய்ச் சேர்ந்தது. கோவில் தீ மிதிப்புக்குக் கூடியிருந்ததைவிட அதிகமான கூட்டம் படிப்பக வாசலில் கூடியிருந்தது. முந்திய தீமிதிப்பில் பூசாரி மாலை போட்டுப் பரிவட்டம் கட்டிச்சம்பிரதாயப்படி தீ மிதியை ஆரம்பித்து வைத்தது போல், தலைவர் முன்னுரை கூறி, ஆசி மொழிந்து, தீ மிதிப்பை ஆரம்பித்து வைத்தார் இங்கே நோட்டீஸில் வரிசையாகப் பன்னிரண்டு பெயர்களும் அவர்கள் தீக் குழியில் இறங்கிக் கரையேறுவதற்குரிய நேரமும், எல்லாம் நவீன முறையில் நிகழ்ச்சி நிரலாகக் குறிக்கப்பட்டிருந்தன. பெரிய சொற்பொழிவுகளில் பேசுபவர்களுக்கு நேரம் குறித்து நிகழ்ச்சி நிரல் அச்சிடுவார்கள் அல்லவா? அதுபோல ஒவ்வொரு தீ மிதிக்கும் ஆளின் பெயருக்கெதிரே இரண்டரை நிமிஷ அவகாசம் குறித்திருந்தது. மொத்தம் பன்னிரண்டு பேராகையால், ஆளுக்கு இரண்டரை நிமிஷம் வீதம் அரைமணி நேரத்தில் விழாவை முடித்துவிடக் கருதியிருந்தான் இராஜகோபால். இராஜகோபால் தீ மிதிப்பு விழாவுக்கு வந்திருந்த தலைவரை வரவேற்று மாலை அணிவித்தான்.முன் வரிசையில் அமர்ந்திருந்த நாலைந்து பேர் கைகளைப் படபடவென்று தட்டிக் கரகோஷம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அந்தச் சிறிய கரகோஷம் எடுபடவில்லை. தலைவர் பேச ஆரம்பித்தார் : "தோழர்களே! தோழியர்களே! நண்பர் இராசகோபாலனாரின் துணிவை நான் பாராட்டுகின்றேன். உங்கள் ஊர் இளைஞர்களின் சீர்திருத்த நோக்கம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. சமூகத்தின் பழைய கட்டுத் திட்டங்களை உடைத்துத் தகர்த்து எறிய முன் வந்திருக்கும் உங்கள் ஆவேசம் வாழ்க, தெய்வத்திற்கும் தீ மிதிப்புக்கும் சம்பந்தமில்லை என்பதை இன்று இங்கே பன்னிரண்டு பேர் நிரூபிக்கப் போகிறார்கள்.” என்று சுருக்கமான முன்னுரைக்குப் பின் தலைவர் தம் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். - ஏதோ சர்க்கஸ், தெருக் கூத்துப் பார்க்கிற மாதிரிக் கூட்டம் அந்தத் தலைவரையும், ‘மைக்’, மேஜை, நாற்காலி, சோடாபாட்டில், ரோஜாப்பூ மாலை எல்லாவற்றையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தது. இராஜகோபால் நிகழ்ச்சி நிரலைக் கையிலெடுத்துக் கொண்டு, நிமிர்த்திய மார்புடன் ஜிப்பாவின் இரண்டு பக்கத்துப் பையிலும் கைகளை நுழைக்க முயன்று கொண்டே மைக்குக்கு முன் கம்பீரமாக வந்து நின்றான். 662 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் "அன்பர்களே! சற்று முன்பு வேறோர் இடத்தில் கடவுளின் பெயரால் மனிதர்களின் அறிவை ஏமாற்றும் தீமிதிப்பை நீங்கள் கண்டீர்கள். இதோ பகுத்தறிவின் பெயரால், புதுமையின் பெயரால், தன்னம்பிக்கையின் பெயரால், தெய்வத்தை நம்பாமல் ஆண்மையை நம்பி, நாங்கள் நடத்தும் தீ மிதிப்பையும் பார்க்கப் போகிறீர்கள். உண்மை எது என்பதை இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்குப் புரிய வைக்கிறோம். இப்போது தீமிதிப்புக்கு முன்வந்திருக்கும்தோழர்களின் பெயரை நான் வரிசையாகப் படிப்பேன். ஒவ்வொரு பெயரையும் நான் படித்தவுடன் அந்தப் பெயருக்குரிய தோழர் தீக்குழியில் இறங்குவார்.இரண்டரை நிமிஷம் குழியில் நடந்து,அவர் மேலே ஏறினதும் நான் மற்றொருவர் பெயரைப்படிப்பேன்.இப்படியே நிகழ்ச்சி நடைபெறும் அன்பர்கள் கண்டு எங்கள் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.” “முதல் பெயர், கே. ஆறுமுகப்பெருமாள்." இராஜகோபால் பெயரைப் படித்துவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆறுமுகப்பெருமாள் வரவில்லை. “டேய் சம்புலிங்கம் ஆறுமுகப்பெருமாள் எங்கேடா? பார்த்துவரச் சொல்லு, சமயத்துக்கு எங்கேயோ தொலைஞ்சி போயிட்டான்' சம்புலிங்கம் மேடையின் பின்புறம், படிப்பகத்தின் உட்புறம் முதலிய இடங்களில் போய்த் தேடிவிட்டு "அண்ணே! ராசகோவாலு அண்ணே ஆறுமுகப் பெருமாளு சோளக்கொல்லைக் காவலுக்குப் போகணும்னு சொல்லிக்கிட்டிருந்தான், போயிருப்பான்.அவனை விட்டிட்டு அடுத்த பேரைப் படிங்க இனிமே எங்கே வரப் போறான்?' என்று திரும்பிவந்து இராஜகோபாலிடம் கூறினான்.இராஜகோபாலுக்கு முகம் தொங்கிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "முதலில் வாசிக்கப்பட்ட ஆறுமுகப்பெருமாள் எதிர்பாராத அசெளகரியங் களால் வர இயலாமற் போனதால், அடுத்து, ஆர்.எஸ்.சுப்பையா தீக்குழி இறங்குவார்” என்று மைக்கில் கூறினான். கூட்டத்தில் அதைக்கேட்டதும் அலை அலையாக ஏளனச்சிரிப்பொலி எழுந்தது. 'ஆய்-ஊய் என்று கூச்சலும் கிளம்பியது. சீட்டி அடித்தார்கள் சிலர். இராஜகோபாலுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அந்தச் சமயத்தில், “ஆர்.எஸ். சுப்பையாவுக்குத் தலை வலியாம். படிப்பகத்துக்குள்ளே படுத்து முனகிக்கிட்டிருக்காரு. அவராலே முடியாதாம். வேறே யாரையாச்சும் அவருக்குப் பதிலா இறங்கச் சொல்லுவிங்களாம்” என்று சம்புலிங்கம் வந்து சொன்னான். இது இராஜகோபாலுக்கு இரண்டாவது இடியாகத் தலையில் விழுந்தது. "அன்பர்களே! திரு ஆர்எஸ்.சுப்பையா அவர்கள் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதால்." என்று அவன் பேசி முடிப்பதற்குள், இந்த விழா அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது என்று சொல்லிக் கூட்டத்தினிடையேயிருந்து எவனோ ஒரு குறும்புக்காரன் இராஜகோபால் தொடங்கிய வாக்கியத்தைப் பூர்த்தி இரண்டாம் தொகுதி ! தீமிதி * 663 செய்தான். அவ்வளவுதான். கூட்டத்தில் ஆகாயம் இடிந்து விழுகிறாற் போலச் சிரிப்பொலியும் கைதட்டலும் எழுந்தன. இராஜகோபாலுக்கு அங்கேயே அப்போதே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போல்ன்றியது ஆறுமுகப் பெருமாள் மேலும் சுப்பையா மேலும் அவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், அவர்கள் இருவரும் அப்போது அங்கில்லாமற் போகவே அந்த ஆத்திரம் முழுவதும் கூட்டத்தின் மேலே திரும்பியது. “என்னப்பா இராஜகோபால் சிறு பிள்ளைகளை நம்பிப் பெரிய காரியத்திலே இறங்கி, இப்படிச் சந்தி சிரிக்க வச்சுட்டியே” என்று தலைவர் வேறு முகத்தைச் சுளித்தார். அப்போது "அண்ணே தலைவரையும் உங்களையும் லிஸ்டுலே சேர்த்திட்டா அந்த ரெண்டுபேரு இடமும் நிறைஞ்சுபோகும்.அப்படிச் செஞ்சிட்டா என்ன?” என்று சம்புலிங்கம் காதருகில் இரகசியமாக ஒரு போடு போட்டான். அது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிற மாதிரி இருந்தது இராஜகோபாலுக்கு. "சீ கழுதை யோசனையும் நீயும் நாசமாப் போக." என்று சம்புலிங்கத்தை நோக்கிக் கத்தினான். அது மைக் வழியாக ஒலிபெருக்கியில் கேட்டு விடவே, கூட்டத்தில் முன்னைவிடப் பெரிய சிரிப்பொலி உண்டாயிற்று. கை தட்டலும், சீழ்க்கை ஒலிகளும், ஏளனப் பேச்சுக்களும், குத்திக் காட்டும் இடித்துரைகளும் கூட்டத்திலிருந்து கிளம்பின. இராஜகோபாலின் தன்மானமோ, அல்லது கையாலாகாத சமயத்தில் இயல்பாகத் தோன்றுமே ஆத்திரம் அதுவோ, பீறிட்டு எழுந்தது. “சிரிக்காதீர்கள்! ஏன் சிரிக்கிறீர்கள்? எதற்காகக் கை தட்டுகிறீர்கள்? எங்களுக்குத் தன்மானம் உண்டு. சொன்னபடிசெய்து காட்டுவோம். இதோ ஆறுமுகப் பெருமாளுக்குப்பதிலாக நானே தீக்குழி இறங்குகின்றேன். எனக்கு அடுத்தாற்போல சுப்பையாவுக்குப் பதிலாகச் சம்புலிங்கம் இறங்குவார்.அதன்பின் நிகழ்ச்சிநிரலில் கண்டபடிமற்றப்பத்துப்பேரும் வரிசையாக இறங்குவார்கள்.” என்று வெறி கொண்டு மைக்கில் கத்தினான் அவன். அந்தச் சப்தமும் கூட்டத்தில் ஒரளவு அமைதியை உண்டாக்கத்தான் செய்தது. வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு மேடையிலிருந்து கீழே குதித்துத் தீக் குழியை நோக்கி நடந்தான் இராஜகோபால். பேசுவது எதைப் பற்றியும், எப்போதும் சுலபம்! செயலில் இறங்கும்போதுதான் மலைப்புத் தோன்றுகிறது. முதலில் போட்டிருந்த திட்டப்படி போட்டித் தீ மிதிப்பு’க்குக் கன்வீனர் என்ற ஹோதாவில் இராஜகோபாலும் சம்புலிங்கமும் இருந்தார்களே யொழியத் தீயிறங்குகிற பட்டியலில் தங்கள் பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை. .. . . இப்போதோ நிலைமை மாறிவிட்டது. பன்னிரண்டு கெஜ நீளமும், શறு கெஜ அகலமுமாகக் கனிந்து விளங்கும் நெருப்புப் பரப்பில் இரண்டரை நிமிஷ நேரம் நடக்க 664 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் வேண்டும் என்று எண்ணும்போதே, காலடியில் சுடுவது மாதிரி இருந்தது அவனுக்கு. தீக்குழியைப் பார்க்கும்போதே, இதிலா இறங்கி நடக்க வேண்டு’ மென்று மலைப்புத் தட்டியது.உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டியது.வெடவெடவென்று கை கால்கள் நடுங்கி உதறுவதுபோல் ஒரு பிரமை தோன்றியது. மூச்சுத் திணறுவதுபோல இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. தீக்குழியின் நுனியில் இத்தகைய எண்ணங்களுடன் தயங்கி நின்றான் அவன். வந்த வேகத்தில் எவ்வளவு ஆவேசம் இருந்ததோ, அவ்வளவு ஆவேசம் இறங்குவதில் இல்லை. . “ஏனய்யா? நீ தான் பெரிய சூரன் கணக்காப் பேசினாயே? இறங்கேன். எதுக்கு நிக்கிறே? பயமா இருக்குதோ?’ கூட்டத்தில் ஒருவன் குத்திக் காட்டிப் பேசினான்.அந்தச் சொற்கள் சுரீரென்று மனத்தில் தைக்கவே, வந்தது வரட்டும் செத்தாலும் சரி, பிழைத்தாலும் சரி என்று கண்களை இறுக மூடிக்கொண்டு வலது கால் பாதத்தைத் தீக்குழிக்குள் வைத்தான் இராஜகோபால். சித்திரவதை செய்யப்படுகிறவனின் முகத்தில் எவ்வளவு வேதனையைக் காணலாமோ, அவ்வளவு வேதனை அவன் முகத்தில் நிறைந்திருந்தது. மூன்று நான்கு அடி குழிக்குள் நடந்தும் விட்டான். நடந்து கொண்டிருக்கும்போதே, அவன் உடல் துவண்டது. கால்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டன. கண் இருண்டது. "ஐயோ! அம்மா! கால் போச்சே” என்று குரூரமான அலறல் அவன் தொண்டையிலிருந்து கிளம்பியது.பாதங்களை மேலும் கீழுமாகத் தூக்கித்தவித்தான். அடுத்த விநாடி அறுபட்ட கொடி துவண்டு விழுகிற மாதிரித் தீக்குழியின் நடுவில் மடேரென்று விழுந்துவிட்டான். பிரக்ஞை தவறிவிட்டது. 'ஐயையோ ஆ இதென்ன? கூட்டத்தில் குழப்பம் உண்டாயிற்று. கோவிலில் தீ மிதித்துவிட்டு வந்திருந்த இளைஞர்களில் இரண்டு பேர் உடனே குழிக்குள் தாவினர். கண்மூடித் திறக்கும் நேரத்தில் இராஜகோபாலின் உடல் மேலே கொண்டுவந்து சேர்க்கப்பட்டது. உடம்பு முழுதும் பறங்கி மொட்டுப்போல பெரிய பெரிய நெருப்புக் காயங்கள், கொப்புளங்கள், உடம்பைக் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. "அடேய் ஒடுடா ஒடு ஒடிப்போய்ச்ச சுப்பையா வைத்தியரைக் கூட்டிக்கிட்டுவா" நாட்டாண்மைக்கார மூப்பனார் யாரையோ விரட்டினார்.தலைவர் தம்மைக் கவனிக்க ஆளில்லாமல் போகவே,தாமாகவே தம்முடைய காரில் ஏறிக்கொண்டுசொல்லாமலே கிளம்பிவிட்டார். பகுத்தறிவுப் படிப்பகத்து விடலைப் பிள்ளைகள் மூலைக்கொருவராகப் பிய்த்துக்கொண்டு போய்விட்டனர். கடைசியில் அங்கு மிஞ்சியவர்கள் நாட்டாண்மைக்கார மூப்பனாரும், அவரோடு வந்திருந்த துரோபதை அம்மன் கோவில் ஆட்களும்தான். . இரண்டாம் தொகுதி ! தீமிதி * 665 பெரிய பண்ணையாரும், அவர் சம்சாரமும், திருச்செந்துருக்கு ஸ்வாமி தரிசனத்திற்குப் போயிருந்ததால் இராஜகோபாலைத் தம் வீட்டுக்குக் கொண்டு போனார் மூப்பனார். அவன் உடம்பில் நெருப்புக் காயம் உறுத்தாமல் இருப்பதற்காகத் தலை வாழைக் குருத்தை விரித்து விளக்கெண்ணெயைத் தடவி அதில் படுக்கவிட்டிருந்தார்கள். சுப்பையா வைத்தியரைத் தேடிப் போனவன் வாடிய முகத்தோடு திரும்பி வந்தான். “என்னடா: வைத்தியரு எங்கே? வீட்டிலே இல்லையா?” "அவரு வரமாட்டாராம்! முந்தாநாளுச் சிவன் கோவிலுக்குப் போயிட்டிருக்கிறப்போ இராசகோவாலும் அவன் ஆட்களும் அவரை மட்க்கிவிட்டு, ஏதோ எடக்காகப் பேசினாங்களாம்.அதனால், நான் விசயத்தைச் சொன்னதும் அவரு, 'அந்த அதிகப் பிரசங்கிப் பயலுக்கா? போய் எவனாவது ஒரு பகுத்தறிவு” வைத்தியனைப் பார்த்துத் தேடிக்கிட்டுப் போ. நான் சிவன் கோவிலுக்குப் போறவன். சாமி பூதம் உண்டுன்னு நம்பறவன்.என் மருந்து அவன் உடம்பிலே ஏறாது. போ! வழி அதுதான் அப்படின்னு நிர்த்தாட்சண்ணியமாகப் பேசிட்டாருங்க” என்றான். - "அப்படியா சேதி? நானே போறேன்” என்று மூப்பனாரே தெருவில் இறங்கி வைத்தியர் வீட்டை அடைந்தார். ‘சுப்பையா வைத்தியரே! நாய் கடிக்குதுன்னா நாமுமாபதிலுக்குக் கடிக்கிறது? அப்பன், ஆத்தா கூட ஊரிலே இல்லே. எனக்கு மட்டும் தலைப்பொறியா காப்பாத்தணுமினு? ஆயிரமிருந்தாலும் உசிரு பெரிசு பாருங்க. எப்போதோ சொன்ன வார்த்தையை மனசுலே போட்டுக்காதிங்க. வாங்க என் பேச்சைக் கேளுங்க. மூப்பனார் வைத்தியர் கையைப் பிடித்துக் கொண்டு அவரைக் கெஞ்சினார். ஊருக்குப் பெரிய நாட்டாண்மைக்காரர் கெஞ்சவே, மறுக்க முடியாமல் உடன் கிளம்பினார் சுப்பையா வைத்தியர். பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இராஜகோபால் எழுந்து நடமாட முடியவில்லை. புண்! புண்! புண்! - உடம்பில் ஒரே தீப்புண்கள் இரணமாகத் தோற்றமளித்தன. "அப்பா இராஜகோவாலு. உடம்பை அசைச்சுப் புரளாமே படுத்திரு. புண்ணு புரையேறிச் சீழ் வைத்தால் கெடுதல். இன்னும் உங்க ஐயா திருச்செந்துரிலிருந்து வரலே! வேத்துமையா நினைக்காதே. அவங்க வருகிற வரை நம்ப வீட்டிலேயே இருக்கலாம்.”. மூப்பனார் அருகிலமர்ந்து குழைந்த குரலில் கூறினார். திடீரென்று விக்கி விக்கி அழுதான் இராஜகோபால்."சீ இதென்னது? குழந்தைப்புள்ளே மாதிரி அழுவலாமா? வலிக்கத்தான் வலிக்கும். பொறுத்துக்க, என்ன செய்யிறது: " மூப்பனாரு மாமா. உடம்பு வலிக்கலே! புண்ணும் வலிக்கலே மனசுதான் வலிக்குது. நீங்கள்ளாம் எவ்வளவு பெருந்தன்மையா இருக்கீங்க. நான் இப்படிச் சின்னத்தனமா நடந்துக்கிட்டேனே?...என்னை நீங்க மன்னிப்பீங்களா?”... பேச முடியாமல் மீண்டும் கேவிக் கேவி அழுதான் அவன்.

“சரிதான் விட்டுத்தள்ளு இதெல்லாம் வயசுக்கோளாறு தம்பீ! இப்படி வயசுக்கு ஏதாச்சும் திமிர் பிடிச்சது தோணத்தான் தோணும். பொறுப்பு வந்தா எல்லாம் தானாகத் தெரியும். நம்பறதுலேதான் எல்லாம் உண்டு. நம்பாததுலே என்ன இருக்கு? ‘இருக்குன்னு’ ஒப்புக் கொள்ளத்தானே பகுத்தறிவு வேணும்? இல்லை என்று சொல்லப் பகுத்தறிவே தேவையில்லையே?” மூப்பனார் கூறிவிட்டுச் சிரித்தார்.

அந்தச் சிரிப்பு கபகப என்று எரியும் புண்பட்ட உடம்பைக் குளிரவைப்பது போலிருந்தது இராஜகோபாலுக்கு.

- (1963-க்கு முன்)